இலக்கியம்கவிதைகள்

குறவன் பாட்டு – 16

                               சச்சிதானந்தம்

பிற்பகல் உணவு உண்ணுதல்

 சேகரம் செய்த பழங்களில் சிறிய,

பகுதியைப் பிரித்துக் குறத்தியும் கொடுக்க,

தான் கொண்டுவந்த தேனள்ளிக் குறவனும்,

பழங்களில் குழைத்து அமுதம் செய்தான்!                                                                       126

 

வான்கொண்ட தேவரும் காணா அமுதினை,

கோன்கொண்ட மாளிகைக் கொள்ளாக் குளுமையை,

கான்கொண்ட குறவனும் கவின்மிகு குறத்தியும்,

தேன்கொண்ட உணவுண்டு எளிதினை அடைந்தனர்!                                                  127

 

வயிறாரக் கனி யுண்டு, சுடும்

வெயிலாற நிழல் கண்டு, பேசி

மனதார மையல் கொண்டு, வாழும்

இதுதானே வாழ் வென்று வாழ்ந்தனர்!                                                                                 128

 

பருந்தின் சிறகைக் குறத்திக்குப் பரிசளித்தல்

எச்சம் கீழே வீழா உயரத்தில்

உச்சிப் பாறையில் வாழும் பருந்தின்,

ஒச்சச் சிறகைச் சிரமம் இன்றி

மேலே ஏறி எடுத்து வந்தான்!                                                                                                     129

 

எடுத்து வந்த சிறகைத் தந்து

மிடுக்கினோடு குறத்தியைக் கண்டு, பாறை

இடுக்கிலேறிப் பருந்தை மீறிச் சிறகைக்

கடத்தி வந்த கதையைச் சொன்னான்!                                                                                  130

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    தேனும் பழமும் சேர்த்து
    குறவன் அமுதம் செய்தான்..
    கவிஞர்- தீந்தமிழில்…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க