இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (80)

0

சக்திசக்திதாசன்

அன்பினியவர்களே !

இனிமையான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களோடு கலப்பதில் மகிழ்கிறேன்.

இன்றைய உலகம் அவசரமான வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சமூக விஞ்ஞான முன்னேற்றங்கள் கன வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன.

இவைகளில் எத்தனை மனித வாழ்க்கையை மேம்படச் செய்வதற்கு உதவுகின்றன என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

பேருந்திலே பிரயாணம் செய்து கொண்டிருப்பவர்கள், புகையிரதங்களில் பயணித்துக் கொண்டிருப்பவர்கள், ஆகாயவிமானத்திலே மிதந்து கொண்டிருப்பவர்கள் ஏன் சாலையோரமாக நடந்து கொண்டு பயணிப்பவர்கள் என பலவகையான பிரயாணிகளின் கைகளில் பெரும்பான்மையாக நாம் காண்பது கைத்தொலைபேசிகளோ அன்றி சிறிய அளவிலான “ஜ பாட்(I Pad)” அன்றி “டாப்லெட்(Tablet)” எனப்படும் கையளவிலான கனிணிகளேயாகும்.

இன்றைய தொடர்பு சாதனங்களில் முன்னணியில் இருப்பவை இவைகளாகும். இதன் மூலம் இன்றைய இளைய தலைமுறை ஏன் முதிய தலைமுறை கூட சமூகத்தில் மற்றையோர்களுடனான தொடர்புகளைப் பேணி வருவது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

இச்சமூகத்துடனான தொடர்பு சாதனங்கள் இளைய தலைமுறையின் அபிப்பிராயங்களில் , கருத்துக்களில் பல மாற்றங்களுக்குக் காரணமாகின்றன என்பதுவும் மறுக்கப்பட முடியாத உண்மையே

இவற்றில் சில நன்மைகளை நோக்கியும், சில தீமைகளை நோக்கியும் இத்தலைமுறையை வழிநடத்துவதற்குக் காரணங்களாகின்றன என்பதுவும் உண்மையே.

ஆனால் இவைகளின் இயக்கத்தை அதற்காக முற்று முழுவதுமாக ஒதுக்கி வைத்து விட்டு வாழ்ந்து விட முடியுமா?

இம்முன்னேற்றங்கள் பலரின் வாழ்வில் பலரது முன்னேற்றங்களுக்கு வழிகோலியுள்ளது என்பதை மறுத்து விட முடியாது.

இத்தொடர்பு சாதனங்கள் வழங்கும் இருபத்திநாலு மணிநேர சேவையினால் இன்று அரசியல் உலகில் கூட பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அரசியல்வாதிகள் மக்களின் முன்னே நிறுத்தி அலசப்படுவதற்கு மிகக் குறைந்த நேரமே தேவைப்படுகிறது.

பல முன்னனி நாடுகளின் அரசியல் தலைவர்கள் இன்று சமூக வலைத்தளங்களின் மூலமாகவே தமது கொள்கைப் பிரகடனங்களைச் செய்வதைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கிறது.

அது மட்டுமின்றி என்னையே ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது எழுத்துலகில் நான் காலூன்றி நிற்பதற்கு மூலகாரணமே இணையத்தளங்களும், இணையமுமே காரணம்.

அது தவிர இளம் படைப்பாளிகள் பலர் பெயர் பெற்ற எழுத்தாளர்களோடு ஒரே தளத்தில் எழுதுவதன் மூலம் தமது கலையை வளர்த்துக் கொள்கிறார்கள்.

இதை நான் பகிர்ந்து கொள்வதன் பிரதான நோக்கம் சமீபத்தில் முகநூல் வலையத்தளத்தின் மீது எழுந்துள்ள ஒரு சர்ச்சைக்குரிய செய்தியே.

சிறிது காலத்தின் முன்னால் முகநூல் தம்முடைய இணைய தளத்தில் ” பயங்கரவாதிகளாலும், மத்திய கிழக்கு நாடுகளின் சில அரசுகளினாலும் நடத்தப்படும் கழுத்து வெட்டி நிறைவேற்றப்படும் மரணதண்டனைகளின் வீடியோக் காட்சிகளைப் பகிர்ந்து கொள்வதைத் தடை செய்திருந்தது.

ஆனால் சமீபத்தில் சில நாட்களின் முன்னால் இக்காட்சிகள் அதைப்பற்றிப் பீற்றிக் கொள்வதற்கல்லாமல் அதன் கொடூரத்தைச் சித்தரிக்கும் நோக்கத்திற்காகப் பகிரப் படுமானால் அதைத் தடைசெய்யப் போவதில்லை என்று அறிவித்தது.

இது சமூகத்தில் பலவிதமான சர்சைகளைக் கிளப்பி விட்டிருக்கிறது .

முகநூல் வலைத்தளம் இளையோர் மத்தியிலும், முதியோர் மத்தியிலும் மிகவும் பரவலாக தொடர்புகளைக் கொண்டிருக்கும் ஒரு இன்றியமையாத தொடர்பு சாதனம். இதிலே இத்தகைய விளம்பரங்களுக்கு இடம் கொடுப்பது ஒரு பொறுப்பற்ற தன்மை என்று சமூகத் தலைவர்கள் பலர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.

எது எக்காரணத்திற்காக நடத்தப்பட்டாலும் இவை மனிதக் கொலைகளே இவைகளைப் பகிரங்கமாக இணைய தளங்களிலே பகிர்ந்து கொள்வது மனித தர்மத்திற்குப் புறம்பானது என்கிறார்கள்.

fb3

மார்புப் புற்றுநோய் காரணமாக மார்பகங்களைச் சத்திர சிகிச்சைக்குள்ளாக்கி அப்புற்று நோயிலிருந்து பூரண குணமடைந்த பெண்கள் தமது அறுவை சிகிச்சையின் ரணங்களின் படங்களை தமது இணைய தளத்தில் முகநூல் தடை செய்திருக்கிறது.

மக்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டும் படங்களைத் தடை செய்து விட்டு இப்படியான மனிதக் கொலைகளின் வீடியோக்களை அனுமதித்திருப்பது எப்படி நியாயமாகலாம் எனச் சில பெண்ணுரிமை வாதிகள் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.

இது மிகவும் விவாதிக்கப்பட வேண்டிய விடயமே ! முகநூல் வலைத்தளம் ஒரு பிரத்தியேகமான வலைத்தளம். தமது வலைத்தளத்தில் எவற்றை அனுமதிப்பது, எவர்றை அனுமதிப்பதில்லை என்று தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு.

ஆனால் சமுதாயத்தில் பல இளவயதினரின் மனதில் தீவிரமான் கருத்தோட்டங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு முன்னனி சமூகத் தொடர்பு இணைய தளம் தாம் தமக்கு சமுதாயத்தில் உள்ள பொறுப்பை உணர்ந்து தமது கொள்கைகளை வகுத்துக் கொள்ள வேண்டியது அவர்களது தார்மீகக் கடமையாகும் .

சமுதாயம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல பல வேறுபட்ட கருத்துகள் கொண்டவர்கள் மனித நலனை முன்வைத்து இணைந்து உருவாக்கும் ஒரு கட்டமைப்பே சமுதாயமாகும்.

இங்கு நாம் ஒவ்வொருவரும் எமது கடமையை உணர்ந்து செயலாற்றத் தவறினால் ? . . . . . .

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *