கனம் கோர்ட்டார் அவர்களே ! : 21
இன்னம்பூரான்
18 02 2014
தருமமிகு சென்னைக்கு அருகே உள்ள வைணவ தலமாகிய ஶ்ரீபெரும்புதூர் என்ற ஊருக்கு அருகில் மாஜி இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி சுட்டுக் கொலையுண்டார். அந்தக் கொலையை யாரும் நியாயப்படுத்தாவிடினும், அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தண்டனை ஆயுள் தண்டனையாக, இன்று [18 02 2014] உச்சநீதி மன்றத்தால், Transferred Cases (Criminal) no.2 & 3 0f 2012 என்ற தீர்ப்பில் குறைக்கப்பட்டது. இது நான் எதிர்பார்த்தது தான். சொல்லப்போனால், சில நாட்களுக்கு முன் அளிக்கப்பட்ட ‘சத்ருக்ன செளஹான்‘ என்ற வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, இதற்கு பச்சைக் கொடி காட்டியது. ‘அறம் வென்றது’ ,‘நீதி கெலித்தது’, ‘தமிழகம் போற்றும் தீர்வு’ என்றெல்லாம், இதற்கு அரசியல் அரிதாரம் பூசாமல், சட்ட நுட்பங்கள், இந்திய அரசியல் சாஸனத்தின் தீர்க்கதரிசனம் ஆகிய நோக்கில், சற்று முன் பிரசுரமான அந்த தீர்ப்பு [இங்கே] அலசப்படுகிறது.
முதற்கண்ணாக கொலையுண்டது யார் என்பது ஒரு பொருட்டு அல்ல, தண்டனை அளிக்க. பிச்சைக்காரனுக்கும் பிரதமருக்கும் ஒரே நீதி தான். அடுத்தபடியாக, இந்தியாவில் தூக்குத்தண்டனை சட்டப்படி செல்லும். ஆகவே ஒரு கொலையாளிக்கு அதை அளித்து விட்டு, மற்றவருக்கு அதில் இருந்து விடுதலை அளிப்பது நியாயம் இல்லை. எனினும், மிகவும் அரிதாகவே, பல பின்னணிகளை மனதில் கொண்டு தான் அந்த மீளமுடியாத தண்டனை அளிக்கவேண்டும் என்ற சட்ட மரபு நடைமுறையில் உள்ளது. இந்த பின்னணியில் நோக்கினால், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது உயிர் தப்பியதற்கு காரணம் குற்றத்தின் தீவிரத்தைக் குறைத்து நீதி வழங்கப்பட்டது இல்லை. சட்டமும், நீதி மன்றமும் அவர்களுக்கு மரண தண்டனை தான் விதித்தது. சட்டரீதியான விண்ணப்பங்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் பின் அவர்களுக்கு ஜனாதிபதியிடம் கருணை மனு செய்ய வழி ஒன்று இருக்கிறது. அப்படி செய்யப்பட்ட மனுக்கள் 11 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுக் கிடந்தன. Justice Delayed is Justice Denied. மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பது வரையப்பட்ட சட்டத்தில் இடம் பெறவில்லை. ஆனால், சட்டப் புத்தகம் என்பது வரையப்பட்ட சட்டம் + அதற்குட்பட்ட ஆணைகள் + நீதி மன்ற தீர்ப்புகளின் அறிவுரைகள். அந்த வகையில் போனால், இந்த முடிவு என்றோ எடுக்கப்பட்டது எனலாம்.
திரு.ராம்.ஜேத்மலானி என்ற பிரபல வக்கீல் மனுதாரர்களுக்காக தாக்கல் செய்த ஆவணங்களும், வாதமும் இனி நம் சட்ட வரலாற்றில் இடம் பிடிக்கும் என்பதில் ஐயம் இல்லை. மரணதண்டனை விதித்து விட்டு, வருடக்கணக்காக அந்தக் கைதிகளை இற்செறிப்பது வன்முறை, டார்ச்சர் என்பதை குழந்தை கூட புரிந்து கொள்ளும். ஆனால் 11 வருடங்கள் அவற்றை கிடப்பில் போட்டிருந்த ஜனாதிபதிகள் குழந்தைகள் இல்லையே !
இப்படி அவர்களை தவிக்க விட்ட நிர்வாகத்தின் போக்கு இந்திய அரசியல் சாஸனத்தின் 21வது ஷரத்தை மீறுகின்றது, இந்தியா கையொப்பமிட்ட சர்வதேச நியதிகளை மீறுகின்றது என்ற வாதம், அவருடையது. அந்த வாதம் கெலித்தது.
எதிர்வாதம் புரிந்த (புரியாமல் புரிந்த !) அரசு வக்கீலின் வாதம் விந்தையானது. கேலிக்குரியது. அது:
அரசு தரப்பில் (ஜனாதிபதி உள்பட) தாமதம் அதிகம் இல்லை ! அப்படியே வைத்துக்கொண்டாலும் மனுதாரர்கள், ‘சத்ருக்ன செளஹான்‘ என்ற வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு. இங்கு செல்லுபடியாகும் என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. 11 வருடங்கள் தாமதத்தில், கரீக்டாக முன்பாதி உள்நாட்டு அமைச்சரகத்தில். ஒரு அதிகாரியின் கோப்புப் பையில் இந்த கருணைமனு கும்பகர்ண உறக்கத்தில் கிடந்தது !
அடுத்த 5 1/2 வருட தாமதத்தை நியாயபடுத்த வழி ஒன்றுமில்லை !
1974ல் எடிகா அன்னம்மா என்ற வழக்கில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள் ‘ மரண தண்டனை கைதிகள் காத்திருக்கும் வேளையில் நடைபிணம் போல’ என்ற எச்சரிக்கை மேற்படி அதிகாரிகளுக்கும், அரசு தலைமைக்கும், மாஜி ஜனாதிபதிகளுக்கும் தெரியவில்லை போலும் !
ஈற்றடி 1: இந்த தீர்ப்பு வரவேற்கப்படவேண்டிய மைல்கல் தீர்ப்பு.
ஈற்றடி 2: உண்மையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது உயிர்களைக் காப்பாற்றியது
மேற்படி அதிகாரிகளும், அரசு தலைமையும், மாஜி ஜனாதிபதிகளும்.
ஈற்றடி 3: முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்கள் கருணை மனுக்களில் திரும்பத், திரும்ப, அவரவர்கள் நடை பிணமாக வாழ்வதை பரிதாபமாகக் குறிப்பிட்டு உள்ளார்கள். அந்த நிலையிலிருந்து அவர்களை, மனுவை நிராகரித்து, அதன் அடுத்தக் கட்டத்தில், அவர்களை உய்வித்த தற்கால ஜனாதிபதி திரு. பிரணாப் முகர்ஜி அவர்களை பாராட்டத்தான் வேண்டும்.
ஈற்றடி 4: இனி செக்ஷ்ஷன் 432 & 433A : Criminal Procedure 1973 க்கு உட்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கலாம்.
சித்திரத்துக்கு நன்றி: http://photos1.blogger.com/blogger/3211/208/1600/john_abraham_bird_free.jpg
ராஜீவ் காந்தி கொலை வழக்கைப் பற்றிய பல்வேறு கோணங்கள் அலசப்பட்டாலும் திரு கார்த்திகேயன் தலைமையிலான சி.பி.ஐ. விசாரித்து இறந்து போன சில குற்றவாளிகளைத் தவிர குற்றத்தில் தொடர்புடையவர்கள் சிலரைக் கூண்டில் ஏற்றி நீண்ட கால விசாரணைக்குப் பிறகு தண்டனையும் கொடுக்கப்பட்டு அவர்களும் பல ஆண்டுகள் சிறையில் இருந்தபின் தூக்கு தண்டனை இப்போது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இப்போது இந்த கொலை வழக்கைப் பற்றியது என பல புதிய செய்திகளை திருச்சியைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஒரு அரசியல் ஆன்மிக குரு உட்பட பிரபல அரசியல் தலைவரையும் வேறு சிலரையும் இதிம் சம்பந்தப்படுத்தி ஒரு நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். அது குறித்தும் சி.பி.ஐ.விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்திருக்கிறது. உண்மையில் ராஜிவ் கொலையின் பின்னணி திரு கார்த்திகேயன் அவர்கள் விசாரித்து வெளிக்கொண்டு வந்த உண்மைகள் மட்டும்தானா அல்லது திருச்சிக்காரர் குற்றச்சாட்டில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்பது தெரியாமல் மக்கள் குழப்பத்தில்தான் இருக்கிறார்கள். ஆனால் ராஜீவ் அவர்கள் வெடிவைத்துக் கொல்லப்பட்டார் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. சில நேரங்களில் இதுபோன்ற வழக்குகள் பல கோணங்களில் பார்க்கப்படுகின்றன, கென்னடி கொலை உட்பட. இத்தனை முன்னேற்றம் ஏற்பட்டுவிட்ட இந்த நவீன யுகத்தில் உண்மைகளை அப்படியே மக்கள் தெரிந்து கொள்ள முடியாமல் போவதன் இரகசியம் என்ன? ஒரு செயலுக்குப் பல கோணங்களைக் காட்டவேண்டிய அவசியம் என்ன? அப்படியானால் நிர்வாகம் நெளிவு சுளிவுக்கு உட்பட்டு நடந்து கொள்கிறதா? தலை சுற்றுகிறது.
உடனடி கேள்விக்கு நன்றி. உடனடி பதில் இங்கே.
‘..இந்த நவீன யுகத்தில் உண்மைகளை அப்படியே மக்கள் தெரிந்து கொள்ள முடியாமல் போவதன் இரகசியம் …’
~ கொலை செய்பவர்கள் பல உத்திகளை ரகசியாமாக கையாளுவார்கள். உண்மைக்கு சமாதி எழுப்ப முயற்சி செய்வார்கள். சான்றாக லக்ஷ்மிகாந்தன் கொலை வழுக்கு, ஆளவந்தார் கொலை வழக்கை சொல்லலாம்.
~ அரசியல் தகிடுதத்தங்களும் சாமார்த்தியமாக இயங்கி மணலை கயிறாகத் திரிக்கும்.
இரண்டு கோணங்கள் சொல்லியாச்சு. மேற்படி கட்டுரை சட்டரீதியானது. அந்த கோணத்தில் நோக்கினால், உண்மையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது உயிர்களைக் காப்பாற்றியது மேற்படி அதிகாரிகளும், அரசு தலைமையும், மாஜி ஜனாதிபதிகளும். நுட்பம் நோக்கினால் , மனுவை நிராகரித்து, அதன் அடுத்தக் கட்டத்தில், அவர்களை உய்வித்த தற்கால ஜனாதிபதி திரு. பிரணாப் முகர்ஜி அவர்களும் இவர்களின் உயிரை காப்பாற்றினார்.