கனம் கோர்ட்டார் அவர்களே! – 19

இன்னம்பூரான்

auto-stik1மக்கள் நலத்தை நீண்டகாலமாக அசட்டை செய்வது போதாது என்று உச்சநீதி மன்றத்தின் ஆணைகளையே துச்சமாக மதித்து, சாக்குப்போக்குச்சொல்லி, சால்ஜாப்பு ராச்சியம் நடத்திய தமிழக அரசுக்கு, கொதித்தெழுந்த உச்சநீதி மன்றத்திலிருந்து ஒரு ‘சுளீர்’ அடி ஒன்று இன்று. சுரணையுடன், உரிய நடவடிக்கைகளை எடுத்து சீரிய ஆணைகளை அரசு பிறப்பிக்குமா என்ற ஐயம் நம்மை ஆட்டிப்படைத்தால், அது வியப்புக்குரியது அல்ல. ஏனெனில், எந்தக்கட்சி அரசாண்டாலும், ஏழை, எளியவர்கள் பிள்ளையார் கோயிலாண்டிகள் தான். ஊருக்கு இளைத்தவர்கள். தீண்டாமைச்சுவர்களும், இரட்டை டம்ளர் அவலமும், கந்து வட்டி கந்தரகோளமும், கல்வி தந்தைகளின் அசுரகதி திரவியம் தேடுதலும், சுண்ணாம்பு காளவாய் கொத்தடிமைகளும், சிறார்களை வறுத்தெடுத்து முறுக்கு சுடுவதும், தோட்டி மலம் சுமக்கும் அபாண்டமும் சட்டமீறல்களே. அவை சமுதாயத்தின் சுமுகத்தைக் குலைப்பதை பொது சமுதாயம் கண்டு கொள்வது இல்லை; அரசு கண்டும் காணாதது போல் பாசாங்கு செய்கிறது. கடமை தவறுகிறது.

சரி. விஷயத்துக்கு வருவோம். தருமமிகு சென்னை மாநகரத்தில் நடுத்தர மக்கள் ஆட்டோரிக்க்ஷா சவாரி செய்ய அஞ்சுகிறார்கள்; ஆனால், தவிர்க்கமுடியவில்லையே.

“பள்ளிக்கு செல்ல ரொம்பி வழியும் ஆட்டோரிக்க்ஷா!

கொள்ளைப்பணம் கேட்டாலும் கொடுத்தாகவேண்டும்.”

“ரயிலை பிடிக்கணுமா, செல்லக்கண்ணு.

மயிலிறகு இறக்கி வை, செல்லக்கண்ணு.”

அவசரமா ஆஸ்பத்திரி போகணுமா, ராசா?

பரவசமா காசு கேட்பான், ஆட்டோ சங்கரு.”

பாட்டு என்ன வேண்டிக்கிடக்கு? பாட்டு! இது ஷோக்கு சமாச்சாரம் இல்லை, சுவாமி. பூஜை வேளையிலே கரடி புகுந்தமாதிரி தமாசு என்ன வேண்டிக்கிடக்கு? பாயிண்டுக்கு வருவோம். எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து, இந்த ஆட்டோரிக்க்ஷா அனாச்சாரம் சென்னை வாழ் மக்களை எரி தணலில் வீழ்ந்த புழுவைப்போல துடிக்க வைத்துள்ளது. ‘ஆட்டோரிக்க்ஷா’ என்ற பேச்சு எழுந்தவுடனேயே மன உளைச்சல், ரத்த அழுத்தம், அபரிமித கவலை, அவமானம், அனாவசிய வாக்குவாதம், விட்டால் போதும் என்ற மனோபாவம் பெரும்பான்மையான மக்களைப் பாடாய் படுத்துகிறது என்பதும், அவரவர்கள், தவிர்க்க முடியாத கட்டாயங்களால், ஆட்டோரிக்க்ஷா ஓட்டுனரின் பேராசைக்கு உட்பட்டு நடப்பதும், ஆட்டோரிக்க்ஷா அட்டூழியம் தமிழகம் முழுதும் ஆக்கிரமித்து விட்டது என்பதும், ஊரறிந்த உண்மை.

பழங்கதை பேசினால், ஆளுக்கொரு சரடு அவிழ்த்து விடுவார்கள், அதிகார மையங்கள். இந்த விவகாரத்தில், முதல் அதிகாரமையம்: ஆட்டோரிக்க்ஷா சொந்தக்காரர்கள். அவர்களில் பெரும்பாலோர் லேவாதேவிக்காரர்கள். பசை இருப்பதால், நிதி நிறுவனங்களும், வங்கிகளும் அவர்கள் பக்கம். காவல்துறை அதிகாரிகளும் பெருமளவில், பினாமியாக, ஆட்டோரிக்க்ஷா சொந்தக்காரர்கள் என்ற தகவல், பல வருடங்களாக, யாதொரு மறுப்பும் இல்லாமல், உலா வருகிறது. இது முதல் அதிகார மையத்தை விட வலிமை வாய்ந்தது. பயிரை மேயும் வேலிக்கு ஆதிக்கம் அதிகம். ஆட்டோரிக்க்ஷா ஓட்டுனர்கள், மனித இனத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும், ஒரு சிலரை தவிர, பெரும்பாலோர் ஈவு இரக்கமற்றவர்கள்; மனசாட்சியை தொலைத்தவர்கள். காசு பறிப்பவர்கள்.

இந்த சூழ்நிலையில், கனம் கோர்ட்டாரிடம் அரசு இடக்கு செய்யும் டைம்-லைனை பாருங்கள்.

டைம்-லைன்:

டிசம்பர் 3, 2012:

விண்ணப்பதாரர் எஸ்.வி.க்ருஷ்ணமூர்த்தி அவர்களின் மனுவை பரிசீலித்த உச்சநீதி மன்றம், இரண்டு வாரங்களுக்குள் ஆட்டோரிக்க்ஷாவுக்கான கட்டணங்களை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. வழக்கை ஜனவரி 28, 2013 அன்று விசாரிக்கப்போவதாக உத்தரவிட்டது.

ஜனவரி 28, 2013:

தமிழக அரசு வக்கீல் திரு. குரு கிருஷ்ணகுமார் நான்கு வாரங்களுக்கு வாய்தா கேட்டார். அது அளிக்கப்பட்டது.

மார்ச் 4, 2013

‘மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி’ என்று செம்பை பாடியது போல, விண்ணப்பதாரரின் கோரிக்கைகளை அரசு ஆராய்கிறது எனக்கூறி, திரு. குரு கிருஷ்ணகுமார், மறுபடியும் எட்டு வாரங்களுக்கு வாய்தா கேட்டார். அதுவும் பொறுமையுடன் அளிக்கப்பட்டது.

மே 6, 2013.

திரு. குரு கிருஷ்ணகுமார் மறுபடியும் வாய்தா கேட்டார்! விண்ணப்பதாரர் ஆக்ஷேபித்த போதிலும், பொறுமையையே பூஷணமாகக்கொண்ட கனம் கோர்ட்டார் மனமுவந்து கேட்டபடி இரண்டு மாத வாய்தா அளித்தனர். இனி தாமதிக்காமல் கட்டணங்களை அரசு நிர்ணயித்து ஆக வேண்டும் என்ற வற்புறுத்தல், அந்த வாய்தாவின் உள்ளுறை. ஜூலை 22க்குள் அவ்வாறு செய்யப்படும் என்ற வாக்குறுதி அரசியல் தரப்பில் அளிக்கப்பட்டது.

26 07 2013

அரசு வக்கீல் திரு.எல்.என்.ராவ் அவர்கள், பல முனைகளில் இது விஷயமாக முன்னேற்றம் இருந்தாலும்,மேலும் அவகாசம் வேண்டும் என்று சொல்லி, மறுபடியும் வாய்தா விண்ணப்பம்!

பொறுமையிழந்த கனம் கோர்ட்டார் ( நீதிபதிகள் ஆர்.எம்.லோடா அவர்களும், இப்ராஹீம் கலிஃபுல்லா அவர்களும்) வாய்தா கொடுத்தாலும், அரசை கண்டித்தனர். ரூபாய் 10,000/- அபராதம் விதித்தனர். அதை விண்ணப்பதாரருக்கு கொடுக்கவேண்டும் என்று ஆணையிட்டனர். ஆதியோடந்தமாக, இந்த வாய்தா அவலத்தை விவரித்த பின்னர், இறுதியாக நான்கு வார வாய்தா கொடுத்துள்ளனர். இத்தகைய அபராதம், வற்புறுத்தல் எல்லாம் அரசுக்கு ஒரு தலை குனிவு தான்.

இந்த அழகில், மற்ற இடங்களைப் பற்றி, சற்றே கவனிப்போம்.

ஹிந்து இதழ் ஆங்கில பதிப்பில் (ஜூலை 28, 2013) திரு. ஜே. வெங்கடேசன் குறிப்பிட்டது:

புது டில்லி: முதல் கட்டணம் ரூ.25 /- + ரூ.8 /- கி.மீட்டருக்கு;

மும்பாய்: முதல் கட்டணம் ரூ.15 /- + ரூ.9.87/- கி.மீட்டருக்கு;

பெங்களூரு: முதல் கட்டணம் ரூ.20 /- + ரூ.11 /- கி.மீட்டருக்கு;

ஹைதராபாத்: முதல் கட்டணம் ரூ.16 /- + ரூ.9/- கி.மீட்டருக்கு.

முதல் கட்டணத்தொலைவில் சற்று வித்தியாசங்கள் இருந்தாலும், இரவு நேரத்தில் 25% அதிகப்படி கட்டணம் என்றாலும், மேற்படி நகரங்களில் இருப்பதை விட சென்னையில் பலமடங்கு அதிகம்; அடாவடி. கேள்வி முறை இல்லை.

கொசுறு: இந்த 2ஜி விவகாரத்தில் ஜாயிண்ட் பார்லிமெண்டரி கமிட்டியின் தலைவர் திரு.பி.சி.சாக்கோ அவர்கள் ஆடிட்டர் ஜெனெரல் வரம்பு மீறி அரசின் கொள்கைகளை விமரிசித்தார் என்று கண்டனம் தெரிவித்து இருக்கிறார். ஒருவன் நாள்தோறும் பீடி பிடித்ததால் அவனை நுரையீரல் புற்று நோய் பீடித்தது. டாக்டர் அது பற்றி எழுதியதை ஆக்ஷேபித்து அவரின் நண்பர், ‘டாக்டர் புற்று நோயை பற்றி மட்டும் சொல்லவேண்டும். பீடி பிடித்தது பற்றி பேசுவது, கொள்கை விமரிசனம் என்று கண்டித்தாராம். அது நினைவுக்கு வந்தது.

இன்னம்பூரான்

28 07 2013

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “கனம் கோர்ட்டார் அவர்களே! – 19

 1. நீதிமன்றங்களை அரசுகளும் அரசியல் வியாதிகளும் எவ்வாறு மதிக்கிறார்கள் என்று உணர்ந்தால் இரத்தம் உண்மையிலேயே கொதிக்கும் ஐயா.

  சமீபத்திய வழக்கு ஒன்றில் குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்று இன்று நடை பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டு உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

 2. நீதிமன்றங்களை அரசுகளும் அரசியல் வியாதிகளும் மதிக்காவிடின், அவற்றை மக்கள் மதித்து வாக்களிப்பது ஜனநாயகத்தை அவமதிப்பது ஆகும். நான் சொன்ன கேஸ் வேறு. நீங்கள் சொல்லும் விஷயம் பற்றி எழுதத்தயார். படிக்க வாசகர்கள் தயாரில்லை. அதனால் மற்ற ஜோலிகளைக் கவனிக்கிறேன்.
  நன்றி, ஐயா.
  இன்னம்பூரான்

 3. நான் படிக்கக் காத்திருக்கிறேன் இன்னம்பூரான் ஐயா. நேரம் கிடைத்தவுடன் எழுதுங்கள்.

  அன்புடன்
  ….. தேமொழி

 4. இது போன்ற சமகால அரசியல்/சமூக நிகழ்வுகளை தங்களைப் போன்றவர்களின் பார்வையில் எழுதப்படுவதைப் படிக்க ஆவலுடன் இருக்கிறேன் ஐயா.

Leave a Reply

Your email address will not be published.