கனம் கோர்ட்டார் அவர்களே! – 20

இன்னம்பூரான்

page1

நானோ! ஒரு அப்பாவி!

மகா கனம் பொருந்திய கோர்ட்டார் சமூகத்தின் முன்னிலையில் நடை பெற்றதாக ஒரு கற்பனை உரையாடலை செவி சாய்த்து கேட்பீர்களாக. இரட்டை ஜீயும், நிலத்தடி எண்ணை வளமும் உங்களது கற்பனையில் மேய்ந்தால், யான் அதற்குப் பொறுப்பல்ல. ‘நானோ! ஒரு அப்பாவி!’ அது கூட இரவல்.

இனி உரையாடல்.

சாக்ஷி (சா), கோர்ட்டார் (கோ), அரசு வழக்கறிஞர். (அ.வ.) கோர்ட்டு குமாஸ்தா (கோ.கு.), டவாலி (ட).

ட: பராக்! பராக்!! பராக்!!! கோர்ட்டார் வருகிறார்! வந்துகொண்டே இருக்கிறார்! டட்! டட்! டட்!

எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். ‘சல சல’ வென்று கோர்ட்டாடை, மடிசாரு மாமியின் பட்டுப்புடவையைப் போல, சர சரக்க, ஐயா வருகிறார்கள்; அமர்கிறார்கள். எல்லாரும் ‘சர் புர்’ அமைதியுடன் (கோர்ட்டு நாற்காலிகள் கலோனிய காலத்தவை; முதுகு வலிக்கும்.) அமர்கிறார்கள். சற்றே மெளனம். கோர்ட்டார் தலையசைக்க, அன்றைய நீதி தேவதை அரூபமாகக் காட்சியளிக்கிறாள்.

சாவதானமாக, அலம்பல் யாதும் செய்யாமல், குறித்த நேரத்துக்கு முன்பே, ‘கூஜாக்கள்’ உடனில்லாமல், சமத்தாக வந்து கூண்டேறினார், சாக்ஷி பெருமகனார்.

கோ.கு: உமது பெயர் என்ன?

சா: ரிஷ்ய சிருங்கர், மாமுனி மைந்தன், மாமுனி (ஜூனியர்) தம்பி.

கோ.கு: ‘யான் பேசுவது உண்மையே. பேசுவது முற்றிலும் உண்மையே. உள்ளுறையாகக்கூட பொய் பேசமாட்டேன். இது சத்யம். சத்யம். சத்யம் என்று அடித்துக்கூறும். கடவுளைக்கூப்பிடுவீர்களா? அல்லது உம் நாணயத்தை நம்புவீர்களா?. உடனே பதில் சொல்லும். ஹூம்!

சா: கடவுளே என் சாக்ஷி. (தனிமொழி: அவர் குரலெடுக்கமாட்டார்.)

(கோ.கு. பகவத் கீதை நூலை சாக்ஷியின் கையில் கொடுத்தார். அவரும் அதை பவ்யமாக வாங்கி, அதன் மேல் ஒரு ஷொட்டு கொடுத்து, நடுநடுங்கும் குரலில் சத்தியப்பிரமாணம் செய்தார்.)

கோ:உமக்கு அன்னலக்ஷ்மியை தெரியுமா?

சா: என் பெயரே ரிஷ்ய சிருங்கர், வணக்குத்துக்கு உரிய என் தந்தையோ மாமுனி. மரியாதைக்கு உரிய என் மூத்த உடன்பிறப்போ மாமுனி (ஜூனியர்). எனக்கு பெண்பால் பரிச்சயமில்லை. In fact…

அ.வ.: கனம் கோர்ட்டார் அவர்களே! சாக்ஷி வினவிய வினாவுக்கு விடை அளித்தால் போதும். அவர் கேட்டக்கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. I object…

கோ: Objection sustained. உமக்கு அன்னலக்ஷ்மியை தெரியுமா? கேட்ட கேள்விக்கு பதில்.

( ஒரு விசிட்டர்: ‘என்ன இது பெர்ரி மேஸன் கதை போல் போகிறது!’ டெல்லா ஸ்ட் ரீட் வருவாளா அல்லது ‘தரகு’ மாமியா?) நல்ல வேளை அவர் முணுமுணுத்ததால் அது யார் காதிலும் விழவில்லை.)

சா: யான் அன்னலக்ஷ்மியை அறியேன். அறிந்ததுமில்லை, அறியப்போவதுமில்லை.

கோ: உமக்கு அன்னலக்ஷ்மியை தெரியுமா? கேட்ட கேள்விக்கு பதில்.

சா: (சுளித்த முகத்துடன்) அறியேன். அறியேன். அறியேன்.

கோ: உமக்கு எத்தனை தடவை சொல்வது? ஒரு வினா.ஒரு விடை. போதும்.

சா: என்னுடைய வக்கீல் ஐயா பாரீஸ்டராக்கும். லண்டனில் படித்தவர் அவர் சொன்னபடி கக்குவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டுகிறேன், கனம் கோர்ட்டார் அவர்களே. சத்தியம் ஜெயிக்க வேண்டுமல்லவா, பாரதநாட்டின் இலச்சினையில் கூறிய மாதிரி.

(அரசு வக்கீல் ஏதோ சொல்ல வாயெடுக்கிறார். சாக்ஷியின் வக்கீல் கோர்ட்டார் பார்க்கும் மாதிரி தன் கைகளை விரித்து, முணுமுணுக்கிறார்.

கோ: அரசு வக்கீலைப் பார்த்து: Go ahead.

அ.வ.: சரி. விருந்தாந்தத்தை சொல்லவும்.

சா: அன்னலக்ஷ்மியை லவலேசமும் அறியேன். ‘நம்பிக்கை -1’ கம்பெனி ‘நம்பிக்கை -2’ கம்பெனியில் அடக்கம். நான் ‘நம்பிக்கை -2‘கம்பெனியின் நிர்வாகப்பொறுப்பேற்காதத் தலைவன். ‘நம்பிக்கை -1’ கம்பெனியின் தலைமைக்குழுவில் இருந்தேன். எப்போது? என்ன? என்பதை மறந்து விட்டேன். வெகுதான்ய ௵ அந்த பதவியில் இருந்தேனா என்று சொல்ல இயலாது.

(இதெல்லாம் ஆவணங்களிலிருக்கும். அந்த கதையை அவிழ்த்து விட்டால், இந்த கதை எங்கெல்லாம் செல்லுமோ!)

(அரசு வக்கீல் அவரிடம் ஒரு தஸ்தாவேஜை காண்பித்தார். அன்னலக்ஷ்மி பெயரில் ஒரு வங்கிக்கணக்கைத் துவக்க, சாக்ஷியும், சாக்ஷிணியும் (ஆஹா! அவர் பெண்பால் அறிந்தவர் என்பது தெளிவாயிற்று. அது ஒரு புறமிருக்க…அந்த தஸ்தாவேஜில் சாக்ஷியும், சாக்ஷிணியும் கையொப்பமிட்டு இருந்தனர். அன்னலக்ஷ்மியின் சித்திரம் வேறே பதிவாகி இருந்தது.)

சா: அவை எங்கள் கையொப்பம் என்று உறுதி செய்கிறேன். எங்கள் இருவரின் வருமான வரி ஆவணங்கள் அங்கு பதிவு ஆகியுள்ளன. ஸத்யமேவ ஜயதே! ஸத்ய ஸத்யமேவ ஜயதே! மேவ ஜயதே!

(அரசு வக்கீல் அவரிடம் மற்றொரு தஸ்தாவேஜை காண்பித்தார். அன்னலக்ஷ்மி பெயரில் இவரது கம்பேனி ‘அன்னதானம்’ செய்வதை பற்றியது, அது.)

சா: அது பற்றி யான் ஒன்றும் அறியேன் பராபரமே. (ஒரு கூஜா ஓடி வந்து கொடுத்த திருநீரை அணிந்துகொள்கிறார்.)

சா: (தென்பு திரும்ப) அந்த தஸ்தாவேஜில் என் பெயரும், சாக்ஷிணியின் பெயரும் இருந்தாலும், அது வங்கியின் தஸ்தாவேஜு. அதை பற்றியும், அதன் பொருளடக்கத்தைப் பற்றியும் யான் லவலேசமும் அறியேன் என்பது கண்கூடு, வெட்ட வெளிச்சம், உள்ளங்கை நெல்லிக்கனி, வெள்ளிடை மலை.

(கோ: சாக்ஷியின் வக்கீலிடம் ‘உமது கட்சிக்காரர் சொல்லாட்டம் ஆடுகிறார். அதை கட்டுப்படுத்தி வைக்கவும். இது என் ஆணை.)

(அரசு வக்கீல் சாக்ஷியிடம் அன்னலக்ஷ்மியின் ஊழியர்களான, சித்தார்த், இந்திரன், விஷ்ணு என்ற மூவரின் சித்திரங்களை காண்பித்தார்.)

சா: ஓ! இவர்களை தெரியுமே. இவர்கள் குழுவினர் ஆச்சே. ஆனால் அவர்களின் பதவி, கையொப்பம் பற்றி யாதும் அறியேன்.

அ.வ.: கனம் கோர்ட்டார் அவர்களே! சாக்ஷியை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோருகிறேன்

கோ: Granted.

குறுக்கு விசாரணையின் போது, தான் வேவுத்துறை அதிபதியிடம், இவ்வழக்கு சம்பந்தமாக போனதை ஒப்புக்கொண்ட சாக்ஷி, தான் எழுத்தில் கொடுத்து மாட்டிக்கொள்ளவில்லை என்று கம்பீரமாக பதிலினார். கோர்ட்டார் கேட்ட வினாவுக்கு பதில் அளிக்கும்போது தனக்கு அச்சுறுத்தல், இற்செறிப்பு ஒன்றும் வரவில்லை என்று திண்ணமாகக் கூறினார். பொய் சொன்னால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அறிவேன் என்று அடித்துக்கூறினார்.

(இதெல்லாம் ஆவணங்களிலிருக்கும். அந்த கதையை அவிழ்த்து விட்டால், இந்த கதை எங்கெல்லாம் செல்லுமோ!)

மறுபடியும் குறுக்கு விசாரணை:

சா: அன்னலக்ஷ்மியை எங்களுடன் உறவாட யாம் அழைக்கவில்லை. அவளது வானள்ளும் சாகசங்களை பற்றி கொஞ்சம் கூட எனக்குத் தெரியாது. அவளுக்கு ‘நம்பிக்கை -1’ கம்பெனி எக்கச்சக்கமாகக் கொடுத்த பொன் மோஹராக்கள் பற்றி எனக்கு எப்படித்தெரியும்?நீங்களே சொல்லுங்கள். நானோ! ஒரு அப்பாவி!

அன்றைய கோர்ட்டுக் கலைந்தது.

மறுநாள் சாக்ஷிணியும் கிருகலக்ஷ்மி என்ற பீடத்திலமர்ந்து, கம்பெனிகளுக்கு தான் கம்பெனி கொடுக்கவில்லை என்ற தோரணையில் விடையளித்தார். (கம்பெனி ஆவணங்கள் சொலவு வேறானால் என்பது வேறு ஒரு கேள்வியோ என்ற ஐயம்.

ஹூம்!

 

சித்திரத்துக்கு நன்றி
மெட்ராஸ் (சென்னை) ஹை கோர்ட்+வ.உ.சி.+வாலேஸ்வரன்
POSTED ON 5:39 PM BY SANKARA RAMASAMY WITH NO COMMENTS

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.