சச்சிதானந்தம்


முள்ளம்பன்றி வேட்டை ஆடுதல்

 

முள்ளம் பன்றிகள் இரண்டு கண்டு,

உள்ளம் துள்ளிக் குதித்துக் குறவன்,

துரத்திப் புலிபோல் பின்னே தொடர,

பன்றிகள் பயந்து வங்கில் மறைந்தன!                                                                                       52

 

கங்குல் படரும் மங்கிய பொழுதில்தீக்,

கங்கின் துணையுடன் பொங்கிய புகையை,

வங்கின் உள்ளே செலுத்திக் குறவன்,

அங்கம் தாழ்த்திக் காத்திருந் தானே!                                53

சீரான தம்சுவாசம் புகையாலே தடுமாற,

கூரான முள்கொண்ட பன்றிகளும் தடுமாறி,

நேராக வெளிவந்து குறவனெனும் கூற்றுவனோடு

போராடிப் பயனின்று இன்னுயிரைத் துறந்தனவே!                    54

 

மயிரை வேருடன் களையும் சமணத்,

துறவியைப் போல முட்களைப் பிடுங்கிச்சிறு,

மூட்டை சுமக்கும் மனிதனைப் போல,

முதுகில் பன்றியைச் சுமந்து நடந்தான்!                                                              55

 

பாம்புக் கறி உண்ணுதல்

அரவம் ஒன்று அருகில் வந்து,

குறவன் காலைத் தீண்டத் துணிந்து

வருமுன் வருமோர் ஒசை செய்து

பரவும் படமெடுத் தருகில் வந்தது!                               56

 

இரவின் வரவை எதிர்பார்த் திருந்த,

குறவன் பாம்பின் வரவைக் கண்டு,

ஒருகண் கொண்டு தலையைப் பார்க்க,

மறுகண் கொண்டு வாலைப் பார்த்தான்!                                                                       57

 

நொடியில் நகர்ந்து கடியைத் தவிர்த்துக்கா

லடியில் கிடந்த பாம்பின் வாலைப்,

பிடித்துக் கையில் சுருட்டிப் பிடித்து,

அடித்துத் தரையில் உயிரை எடுத்தான்!                                                                        58

 

உரித்துத் தோலை எடுத்துப் பிரித்து,

விரித்து உடலின் கொழுப்பை எடுத்து,

மரித்த பாம்பை நறுத்துத் தறித்து,

வறுத்துத் தின்று குறவன் கொழுத்தான்!                                                                     59

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “குறவன் பாட்டு – 7

 1. இரவின் வரவை எதிர்பார்த் திருந்த,
  குறவன் பாம்பின் வரவைக் கண்டு,

  என்பதற்கு பதில் …
  இரவின் வரவை எதிர்பார்த் திருந்த,
  குறவன் “அரவின்” வரவைக் கண்டு,

  என்று மாற்றினாலும் சுவை குறையாது இல்லையா?
  [நான் பாம்புக் கறியைப் பற்றிக் குறிப்பிடவில்லை கவிஞரே 🙂 ]
  குறவரின் வேட்டையாடும் வல்லமையை அருமையாகக் கவிதை வடிவில் கொடுத்து வருகிறீர்கள்.
  பாராட்டுக்கள்.

  அன்புடன்
  ….. தேமொழி

 2. தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி திருமதி.தேமொழி அவர்களே.

  தங்களது பரிந்துரை மிகச் சரியாக உள்ளது. “குறவன் பாம்பின் வரவை” என்பதை விட “குறவன் அரவின் வரவை” என்று படிப்பதிலேயே ஓசை நயம் மிகுந்து உள்ளது. அவ்வாறே மாற்றிக் கொள்கிறேன். நன்றி!

 3. எப்போது  வெளியாகும்.. என்று ஆர்வமாக எதிர்பார்த்துப் படிக்க வைக்கிறது ஒவ்வொரு பகுதியும். அவ்வளவு தகவல்கள். இம்முறையும் அப்படியே…
  குறவனின் வேட்டையாடும் திறன் குறித்த மிக நுணுக்கமான தகவல்கள்.

  ////துறவியைப் போல முட்களைப் பிடுங்கிச்சிறு,

  மூட்டை சுமக்கும் மனிதனைப் போல,/////

  என்றிருக்கும் வரிகள் குறித்த ஒரு சிறு விளக்கம். புலி நகம், புலித் தோல் போல, முள்ளம் பன்றியின் முட்களும் உபயோகிக்கப்படுகின்றன. எடுத்துக்காடாக, முள்ளம் பன்றியின் முட்களில் வெண்ணிறமாயுள்ளதை எடுத்து, எட்டுமாத கர்ப்பிணிப் பெண்ணின் தலை வகிட்டில் இருந்து பின்னோக்கி இழுப்பதால் பெண்ணின் மனதில் இருக்கும் வேண்டாத பயங்கள் அகலும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது. அப்போது ஏற்படும் சிலிர்ப்புணர்வு குழந்தைக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கும். முட்களைச் சுட்டு மருந்தாகவும் பயன்படுத்துவதுண்டு. இவை தங்களுக்குத் தெரிந்திருக்கும். இருப்பினும் ஒரு மேலதிகத் தகவலாகவே இங்கு அளிக்கிறேன் சகோதரரே!!.
  தொடர்ந்து படிக்க மிக அதிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

 4. இன்று தான் குறவன் பாட்டுத் தொடர் முழுவதையும் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. அழகு தமிழில் எளிமையாகக் குறவர்களைப் பாட்டுடைத் தலைவராக ஆக்கியுள்ளீர்கள். ஏதோ ஊசி, பாசி மணி விற்பவர்கள், திருமண விருந்துகளில் எச்சில் இலை பொறுக்க வருபவர்கள் என்ற அளவில் தான் அவர்களைப் பற்றி அறிந்திருக்கிறேன். அவர்கள் வாழ்வில் எத்தனை போராட்டங்கள், எத்தனை துணிச்சலுடன் அதை எதிர்கொள்கிறார்கள், இயற்கையோடு இணைந்து வாழ்ந்தாலும் மிருகமாக வாழாமல் மனித சாமர்த்தியத்தோடு, மனிதப்பண்போடு வாழ்பவர்கள் என்ற முறையில் அவர்கள் பால் ஒரு மரியாதையைத் தோற்றுவித்துள்ளீர்கள். பாராட்டுகள். 

  ஒரு சந்தேகம். புனுகுப் பூனையிலிருந்தே எடுக்கப்படுவது தான் புனுகு என்னும் வாசனைத் திரவியம் என்பதை அறிவேன். ஒரு கோயிலில் அந்த மிருகம் ஒரு கூட்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தததையும், அருகில் ஒரு மூங்கில் செங்குத்தாக வைக்கப்பட்டிருந்ததையும் – அதில் தான் புனுகு சொரியப்படும் என்று சொன்னார்கள்- பல முறை பார்த்திருக்கிறேன். எந்தக் கோவில் என்பது நினைவில்லை. 

  இது தவிர, புனுகுக் காய் என்று ஒன்று இருப்பதாகவும் அதிலிருந்து எடுக்கப்படும் பொருள் தான் சீர்காழி சட்டநாதருக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. 

 5. எளிய தமிழில் நல்லதொரு தொடர். நான் மிகவும் விரும்பி படித்தேன். அத்துடன் அந்த பாம்புக்கறி.. பாம்பு சூப் சாப்பிடும் என் சீன நன்பர்கள் இருக்கிறார்கள். சீங்கப்பூர், வியட்னாம் இங்கு பணி நிமித்தம் செல்லும் போது இதை சாப்பிடுபவர்களை பார்ப்பதற்காகவே சீன உணவகம் சென்று இருக்கிறேன்.

 6. ஒவ்வொரு முறையும் உற்சாகமூட்டும் வார்த்தைகளால் பாராட்டி வரும் சகோதரி பார்வதி.இராமச்சந்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  முள்ளம் பன்றியின் முட்களின் பயன்பாடு குறித்த தங்களின் செய்தி பற்றி இதற்கு முன் நான் அறிந்திருக்கவில்லை. தங்களின் பயனுள்ள தகவலுக்கும் என் நன்றிகள்.

 7. நேரம் ஒதுக்கிப் படித்துப் பாராட்டியுள்ள திரு.கோதண்டராமன் ஐயா அவர்களுக்கு என் பணிவான நன்றிகள்.

  நான் படித்த/கேள்விப்பட்ட வரையில் புனுகு என்பது ஒருவகைப் பூனையின் உடலில் இருந்து சுரப்பதே ஆகும். புனுகுக் காய் ஒன்று இருப்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. அதற்கான தகவலையும் சேகரிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.

 8. நண்பர் திரு.தனுசு அவர்களின் கருத்துரைக்கு என் அன்பான நன்றிகள்.

 9. வலையில் கிடைத்த தகவல் இது.
  http://www.arusuvai.com/tamil/node/10316
  புனுகு என்பது பேஸ்ட் போல இருக்கும். புனுகு பட்டை காய் போல இருக்கும்.

 10. நொடியில் நகர்ந்து
  கடியைத் தவிர்த்து- பாம்பைப்
  பிடிக்கும் க(வி)தை,
  நன்று…!

 11. தொடர்ந்து கவிதைகளைப் படித்துப் பின்னூட்டமிட்டு கருத்துக்களைப் தெரிவித்து வரும் திரு.செண்பக ஜெகதீசன் அவர்களுக்கு என் அன்பு நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *