Author: ஜெயராமசர்மா

  • பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்!

    பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    “தைபிறந்தால் வழிபிறக்கும்” என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். அந்த வழக்கம் மனத்தில் புத்துணர்வையும் , உத்வேகத்தையும் , உவந்தளிக்கும்.

    “தை பொறந்தால் (பிறந்தால்) வழி பிறக்கும் தங்கமே தங்கம்
    தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
    முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
    முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
    குத்து விளக்கேத்தி வச்சு (வைத்து) தங்கமே தங்கம்

    கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்”  – என்னும் இந்தப் பாடல் மனமகிழ்ந்த பொங்கலை, மலர்ந்த பொங்கலை, மண்வாசனை தரும் பொங்கலை, உயிர்த்துடிப்பான பொங்கலை, கலாசாரம் பண்பாடு கலந்த பொங்கலை நினைவூட்டிகிறதல்லவா?  இப்படி ஒரு காலம் இருந்தது. ஆனால் அப்படி ஒரு காலம் வரவேண்டும் என்பதுதான் எல்லோரினதும்  பேராவலும் ஆகும்.

    “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில்
    உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்”

    “உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லைக் கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு”

    “சேற்றில் கால் வைக்காவிட்டால் சோற்றில் கைவைக்க முடியாது” இவையெல்லாம் பொங்கலை மன மிருத்தும் அமுத வாக்குகள்.

    பொங்கல் என்றாலே உற்சாகம் பிறந்துவிடும். புத்தாடை வாங்குவது! புதுப்பானை வாங்குவது! சர்க்க ரையும், தேனும், நெய்யும், பருப்பும், பாலுந்தான் முன்னால் வந்து நிற்கும். கூடவே பழங்களும், கரும்பும் சேர்ந்து விடும்! இவை அனைத்தும் ஒன்றாய் இணையும் விழாவினைப் பற்றி அறிவது அவசியம் அல்லவா? அந்த விழாவின் உட்கருத்தை அறிவோமா ? வாருங்கள் !

    தைமாதத்தின் தொடக்கத்தில் இந்த விழா ஏன் கொண்டாடப்படுகிறது ? இந்த விழாவினை யாரை மையப்படுத்திக் கொண்டாடுகிறோம் ? இந்த விழாவின் அடிப்படை எதனை உணர்த்துகிறது ? இந்த விழாவில் தமிழரின் எத்தகைய பண்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன?  பொங்கல் என்றால் புது உடைகள் வாங்குவோம். பொங்குவோம். தொலைக்காட்சியில் நடக்கும் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்போம். அத்துடன் பொங்கல் விழா நின்றுவிடும். இதுவல்ல பொங்கல் !

    உழைப்பு என்பதுதான் சமுதாயத்தின் அடிப்படை. அந்த உழைப்பில் பங்கு கொள்ளும் அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. உழைப்புக்கு உதவும் மனிதர்கள், உழைப்புக்கு உதவிடும் விலங்குகள்,உழைப்புக்கு உதவிடும் கரு விகள் கவனத்தில் கொள்ளப்படுவதுதான் சமூதாய அறமாகும். அப்படியான ஒரு அறத்தினை வலியுறுத்தத்தான்  தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம் என்பதை மனமிருத்தல் வேண்டும்

    உலகிலே  உயிர்வாழ்வதற்கு வெப்பம் முக்கியமானது. காற்று முக்கியமானது நீர் முக்கியமானது. உணவு  முக்கியமானது. இவற்றுக்கெல்லாம் இறை அம்சம் கொடுத்து அவற்றை சமூகத்தின் உயர் நிலையில் வைக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. இவையாவும் தைப்பொங்கலுடன் இணைவதால்த்தான் பொங்கல் சிறப்பான விழாவாக அமைகிறது எனலாம்.

    விவசாயம் என்பதுதான் சமூக வாழ்வுக்கு முதுகெலும்பாகும். விவசாயம்  கொண்டு வருகின்ற பொருட் களால்த்தான் சமூகத்தில் மக்களின் அன்றாட வாழ்வே சிறப்பாகிறது. அந்த விவசாயத்தைச் செய்பவன் இந்தப் பொங்கலில் போற்றப்படுகின்றான். அந்த விவசாயிக்கு உதவும் மாடுகள் பூசிக்கப் படுகின்றன. விவசாயத்தை செழிப்பாக்கும் சூரியன் வணங்கப்படுகிறது. விவசாயத்துக்கு உதவும் கருவிகள் மதிக்கப்படுகின்றன. இதனால் தைப்பொங்கல் என்பது நன்றியினை நவில்கின்ற பெருவிழா அமைகிறது என்பது முக்கிய கருப்பொருள் எனலாம்.

    தையில் அறுவடை செய்த புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து மண்பானையில் பொங்கி மகிழும்பொழுது பொங்கி வரும் பாலினைப் பார்த்து குடும்பத்தில் உள்ளார்கள் “பொங்கலோ பொங்கல்”  என்று மகிழ்ந்து நிற்கும் நிலையினை எங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் இருக்கச் செய்வது மிக இன்றியமையாததாகும்.

    கலப்படம் இல்லாமல்யாவுமே உழைப்பின் பயனாக வந்த அரிசி, பால், சர்கரை, கரும்பு, இஞ்சி, மஞ்சள், வாழை, மாவிலை, இவையெல்லாம் மகிழ்ச்சியின் அடையாளங்கள். மனித சமூகத்தின் மாண்பின் அடையாளங்கள் எங்களின் பண்பாட்டின் அடையாளங்கள். இவைகள் தைப்பொங்கலில் பயன்படுத்தும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு ஈடு இல்லை எனலாம்.

    கூட்டுறவின் மகத்துவம் தைப்பொங்கலின் சிறப்பாகும். மனிதனும் விலங்குகளும் கூடி உழைத்து அதன் பயனாக வெளிப்படும் ஒரு கூட்டுறவுத் திருநாள் என்றுகூட தைப்பொங்கலை எடுத்துக் கொள்ளலாம். வருடத்தின் தொடக்க மாய்வரும் தையினை மங்களகரமாக வரவேற்க வேண்டு மென்று எண்ணி பொங்கல் திருநாளினை ஏற்படுத்திய எங்களின் முன்னோர்களை நாங்கள் வாழ்த்தாமல் இருந்திட முடியுமா? வருடத் தொடக்கத்தில் மனதில் ஏற்படும் எண்ணங்கள்தான் அந்த வருடம் முழுவதையும் மகிழ்வுடன் வாழவைக்கும் என்று எண்ணிய உளவியல் சிந்தனையை உவந்தேற்ற வேண்டாமா ?

    பொங்கலின் முதலில் மார்கழியின் நிறைவில் போகி என்றொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி என்றால் பழைய விஷயங்களை பழைய பொருட்களைக் களைந்து விடுவதாகும். அடுத்து பொங்கல் வருகிறது. பழைய பொருட்களை எரித்து விடுவதைத்தான் போகியில் காண்கிறோம், உண்மையில் இதன் அர்த்தம் அதுவன்று. எங்கள் மனதிலுள்ள பொறாமை வஞ்சகம். பொய், கபடு, சூது, வாது, இவற்றை யெல்லாம் ஞானம் என்னு. தீயில் பொசுக்கி மனதைத் தூய்மை ஆக்கி புத்தாடை உடுத்து புதுப்பொங்கலை சுவையாக உண்டு புத்துணர்வு பெற்று நிற்கவேண்டும் என்பதுதான் இதன் தாற்பரியம் எனலாம்.

    பொங்கலுக்கு அடுத்து மாட்டுப் பொங்கல் வருகிறது. விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கும், பால் தந்து எம்மை வாழ்வித்த பசுக்களுக்கும் நன்றி நவிலும் நாளாக இது அமைகிறது. அடுத்த நாள் காணும் பொங்கல் அமைகிறது. உற்றார் உறவினரை, பெரியவர்களைக் கண்டு அவர்களின் வாழ்த்தினை ஆசியினைப் பெற்றுக் கொள்ளும் நாளாக இந்த நாளை அமைத்து மகிழ்கின்றார்கள்.

    மாட்டுப்பொங்கல், போகித்திருநாள், காணும்பொங்கல் இவைபற்றி எல்லாம் நகரித்தில் வாழ்கின்றவர்களுக்கோ.  புலம்பெயர் பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கோ தெரியவருவது குறைவாகும். பொங்கலைக் கூட குக்கரில் பொங்கி தாங்கள் இருக்கும் வீட்டின் அடுப்படியில் வைத்து கரண்டியால் இரண்டு கரண்டி அவசர அவசரமாக வாயில் போட்டுவிட்டு வேலைக்கு ஓடும் நிலையினைதான் பொங்கல் நன்னாளில் காண்கின்றோம். மாடிக் குடி இருப்புகளில் வாழ்கின்றவர்களின் பொங்கலை நினைத்துப் பார்க்கவே பரி தாபமாகவே இருக்கும்.

    சமயம் கடந்த விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் விளங்குகிறது என்பதுதான் இந்த விழாவின் மிகச் சிறப்பு எனலாம். உலகில் வாழுகின்ற தமிழர்கள் – கிறீஸ்தவராயினும், இந்துக்களாயினும் , தைப் பொங்கலை மகிழ்வுடன் “பொங்கலோ பொங்கல்” என்று பொங்கும் மனத்துடன் கொண்டாடி மகிழ்கி றார்கள். சமயச்சாயம் பூசப்படாத தமிழர் திருநாளாய்  தைப்பொங்கல் திகழ்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமையான விஷயம் அல்லவா !  நன்றி நவிலும் விழா ! உழைப்பாளரின் உன்னத விழா ! கூட்டுறவின் விழா ! மதபேதமற்ற மகோன்னத விழா ! எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் நிறை என்னும் விழா ! எனவே பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்.

    Share
  • கற்பக​த்தரு என்னும் அ​ற்புதம் – ஏடு​ தந்திட்ட எங்க​ள் பனை (அங்கம் – 7)

    கற்பக​த்தரு என்னும் அ​ற்புதம் – ஏடு​ தந்திட்ட எங்க​ள் பனை (அங்கம் – 7)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    “பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும்
    பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும்”

    “வருடம் முழுதும் வற்றாத வளம்
    வாங்கி வந்த வரமே பனை”

    வானோங்கி நிற்பதுதான் எங்கள் கற்பகதருவாம் பனை மரம். வாழ்வில் தோள் கொடுத்துத் தோழமையுடன் நிற்பதுதான் எங்கள் பனை மரம். இருந்தாலும் பயன் கொடுக்கும். இருப்பை விட்டு மறைந்தாலும் பயன் கொடுக்கும். பனை என்பது  மரம் அல்ல. அது நல் வரம் என்பதை மனமிருத்தல் வேண்டும். பனையின் நிலையினை  நாங்கள் ஒவ்வொருவருமே மனத்தில் இருத்திட வேண்டியது அவசியமாகும். இருக்கும் வரை எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்கிறது என்பதே எங்களுக்கெல்லாம் நல்லதொரு பாடமாய் இருக்கிறதல்லவா! மற்ற மரங்களைப் போல பனையினை நாங்கள் பார்த்துவிடக் கூடாது. தலை நிமிர்ந்து,  தளர்வின்றி.   கொடை வழங்கும் கர்ணனாய் கற்பகதருவாம் பனை காட்சி தருகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.

    பனையின் ஓலைகளை சாதாரணமாகப் பார்த்தே பழகிவிட்டோம். ஆனால் அந்த ஓலைக்குள் எவ்வளவு பொக்கிஷங்கள் பொதிந்திருக்கின்றன என்பதை ஏட்டுச் சுவடிகள் வரலாற்றுக்குள் பார்த்தோம். அந்த வரலாற் றுக்குள் சற்று உள்ளே போய் இன்னும் என்ன இருக்கிறது என்பதையும் பார்ப்பது அவசியம் அல்லவா !

    இலக்கியம் வளர்த்த பனை என்று கூறுவதில் எள்ளளவும் ஐயம் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது, எமது முன்னோர்களின்  சிந்தனைச் செல்வங்களை இன்று நாம் பயனாக்கி நிற்கிறோம் என்றால் அதற்குதக்க துணையாக அமைந்தது பனை தானே! பனைமரத்தின் ஓலைச் சுவடிகள் இல்லை என்றால் பழந்தமிழ்ச் செல்வங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். பனை இல்லையேல் நமக்கு  மொழியில்லை. வரலாறு இல்லை. ஏன் பாரம்பரியமே இல்லை என்பதை உணரும் பொழுது மெய்சிலிர்க்கிறதல்லவா!  “பயன்மரம்” என்று வள்ளுவமே போற்றும் தகைமையினைப் பெற்ற ஒரே மரமாய் கற்பகதருவாம் பனையே விளங்குகிறது என்பது மனமிருத்த வேண்டிய கருத்தல்லவா.

    “ஆறங்க வேதநூ லாகமநூல் வேறுமுள மெய்க்கலைகள்
    போதமிகுந்த புராணநூல் – ஓதுகின்ற
    மந்திரநூல் சிற்பநூல் வாகடநூல் வாய்மைமிகு
    செந்தமிழ்நூல் பற்பலவும் தீட்டலாம் – சுந்தரஞ்சேர்
    மங்கல நாளோலை மஙகையர்க்குக் காதோலை
    துங்கமிகு நண்பருக்குத் தூதோலை – தங்குபல
    பற்று வரவு பதியுங் கணக்கோலை
    மற்று முறுதி வரையோலை – கற்றவர்கள்
    எந்திரங்கள் கீறி எழுத்தடைத்துக் கட்டுகின்ற
    மந்திர வோலைகட்கு வாய்ப்பாகும் “

    என்று “தாலவிலாசம்” நாடகநூலும்

    “படிக்க நல்ல தம்பியர்க்கு
    பட்டோலை நானாவேண்
    எழுத நல்ல தம்பியர்க்கு
    எழுத்தோலை நானாவேன்
    தூரத்து வன்னைமைக்கு
    தூதோலை நானாவேன்
    வாசலில் வன்னிமைக்கு
    வழக்கோலை நானாவேன்”

    என்று நாட்டுப் புறப்பாடலும் பனை ஓலையின் பயன் பாட்டினை வியந்து நிற்பதைக் காண்கிறோம். பனை ஓலையென்று நாங்கள் சாதாரணமாய் எண்ணி விடும் அந்த ஓலைக்குள் இத்தனையும் இருக்கிறதா என்று எண்ணுகையில் பனையென்பது நல்வரம் என்றுதானே சொல்ல வேண்டும்.

    ஏடுதந்த பனையின் ஓலை பற்றிய எண்ணப் பதிவினை “பனை மர சோபனம்” என்னும் நூல் எப்படிப் பார்க்கிறது என்பதையும் பார்ப்போம்.

       ” வருடத்திற் கோர்தினத்தில் சரஸ்வதியம்மன் பூசைசெய்து
    மஞ்சள் படிந்துவர மங்கலங்கள் பாடிவர
    அட்சதையும் மலரெடுத்து அர்ச்சிப்பார் உலகமெலாம்
    என்னைத் திருத்தியவர் எழுத்தாணி கைப்பிடித்து
    ஆசிரியரும் வேதியரும் ஹரிநமோ என்றெழுதி
    ஹரிஹரி என்றெழுதி அர்ச்சிப்பார் என்னையவர்
    அரிச்சுவடி என்னாலே வரிக்காய்ப் பாடம்என்னாலே
    தர்க்கங்கள் என்னாலே சாஸ்திரங்கள் என்னாலே
    இராமாயணம் என்னாலே பாரதமும் என்னாலே
    பாகவதம் என்னாலே பலசாத்திரங்கள் என்னாலே
    திருவாய்மொழி என்னாலே திருமுறைகள் என்னாலே
    நாலுவேதம் என்னாலே ஆறங்கம் என்னாலே
    மங்கையர்க்கும் மன்னவர்க்கும் மணவறிவ தென்னாலே
    வர்த்தகருஞ் செட்டிகளும் கணக்கறிவ தென்னாலே
    பட்சமுள்ள வாசலுக்குப் பட்டோலை நானாவேன்
    காதத்துப் பெண்களுக்குக் காதோலை நானாவேன்
    தூரத்துப் பெண்களுக்குத் தூதோலை நானாவேன்
    கலியாண வாசலுக்குக் கட்டோலை நானாவேன்
    சீமந்து வாசலுக்குச் சீருடனே நான்போவேன்
    பிள்ளை பிறந்ததென்றால் பெருமையுடன் நான்போவேன்
    மைந்தன் பிறந்ததென்றால் மகிழ்ச்சியுடன் நான்போவேன்
    அரண்மனையில் நானிருப்பேன் ஆஸ்தானத்தில் நானிருப்பேன்
    மச்சுக்குள் நானிருப்பேன் மாளிகையில் நானிருப்பேன்
    எமலோகம் போனாலௌம் எல்லோர்க்கும் தெரியவைப்பேன்
    சிவலோகம் போனவர்க்குச் சீட்டோலை யாயிருப்பேன் “

    என்று பனை ஓலையின் ஒவ்வொரு நிலையினையும் இப்பாடல் காட்டு வதைக் கருத்திருத்துவது முக்கியம் அல்லவா!

    பனையின் ஓலை பலவிதங்களில் எங்கள் வாழ்வியலில் எப்படியெல்லாம் இணைந்திருந்தது என்பதை இங்கு பல பாடல்களால் கண்டோம். பனையின் ஒலையினால்  ஆகிய ஏடுகள் பற்றிய பல விஷயங்களையும் பார்க்கப் பார்க்க பெருமையாகவும் வியப்பாகவுமே இருக்கும். எழுதும் நிலை ஏற்பட்டவுடன் எழுதுவதற்கு உரியதாய் பனையின் ஓலைதான் பொருத்தமாய் அமைந்திருக்கிறது. இலகுவாய் கிடைத்தது. அதுவும் வாழும் அயலிலேயே கிடைத்தது. பனையின் ஓலையில் எழு துவதைக் கண்டறிந்த தன்மையினைச் சாதாரணமாகப் பார்த்துவிட முடியாது. மிகச் சிறந்த தெரிவு என்றுதான் எண்ண வேண்டும். கல்லில், மரத்தில், களிமண் தகட்டில், தோலில், செப்புத்தகட்டில் எழுதுவது என்பது இலகுவான செயலன்று. அதுமட்டுமல்ல அவற்றில் விரைவாகவும் எழுதிட முடியாது. எனவேதான் பனையின் ஓலையினை எழுதுவ தற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பனை ஓலையில் எழுதினால் அவற்றை போகும் இடமெல்லாம் எடுத்துச் செல்வது இலகுவாக இருக்கும் என்னும் காரணத்தாலும் – பனை ஓலை ஏடாய் மலர்ந்தது என்றும் எடு த்துக் கொள்ளலாம் அல்லவா !

    ஓலையில் எழுதுவது என்பது இலகுவான காரியம் அல்ல. ஓலையில் எழுதுவது என்பது ஒருவித கலை எனலாம். எழுத்தாணியைக் கொண்டு மிருதுவான ஓலையில் எழுதும் பொழுது மிகவும் கவனமாகவே எழுத வேண்டும். ஓலையில் எழுதும் எழுத்துக்கள் – நாங்கள் தற் பொழுது காகிதத்திலோ அல்லது கணிப்பொறியிலோ அல்லது தட்ட ச்சிலோ எழுதுவதுபோல் இலகுவாக எழுதிவிடல் முடியாது. பிழை யினை திருத்தவோ அழிக்கவோ முடியாது. எழுதினால் எழுதியதுதான். எழுதும் ஓலையில் பிழை வந்தால் அந்த ஓலையினைத் தவிர்த்து விட்டு புது ஓலையில்த்தான் எழுதல் வேண்டும். மெய் எழுத்துக்களை எழுத முடியாது. குற்றுப் போட்டால் ஓலை கிழிந்து விடும். ஓலையில் எழுதும் எழுத்துக்களை எழுதுவது என்பதற்கு நல்ல பழக்கம் வேண்டியதாய் இருந்தது. தற்காலத்தில் விரித்து எழுதுவதுபோல் எழுதிவிடவும் இயலாது, சுருக்கமாய் அதேவேளை செறிவாய் எழுதும் நிலையே காணப்பட்டது எனலாம். இதனாலேயே எழுதப்பட்ட எல்லாமே பாட்டின் வடிவத்தைக் கொண்டு அமையும் கட்டாயம் இருந்தது என்பது கருத்திருத்த வேண்டியதே.

    ஓலையில் பாட்டெழுதும் முறையிலும் வரையறைகள்  காணப்பட்டன என்பதற்கு ஆதாரங்களும் இருந்திருக்கின்றன.

    அந்தணர்க்கு நாலா றரசர்க் கிருபதாம்
    இந்த விரல் வணிகர்க் கெண்ணிரண்டாம் – முந்துவிரல்
    வேளாரக்க் கீராறாய் வெள்ளோலை வேயவனை
    தோளாய் அறிந் தொகுத்து

    என்று கல்லாடனார் வெண்பா காட்டுகிறது. இதன்படி நான்மறையாளர்கள் இருபத்து நான்கு விரற்கடை அளவும், அரசர்கள் இருபது விரற் கடை அளவும்,  வணிகர்கள் பதினெட்டு விரற்கடை அளவும், வேளார்கள் பனிரெண்டு விரற் கடை அளவு எடுத்தே ஓலையில் எழுத வேண்டும் என்னும் நிலை காணப்பட்டது என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது. இதனை மேலும் உறுதிப் படுத்தும் வகையில் பொய்கையார் பாடலும் வந்து அமைகிறது.

    “ஓலைய திலைக்கணம் உரைக்குங் காலை
    நாலாறு விரலாம் நான்மறை யோர்க்கே
    பாருடை யோர்க்கும் பதிற்றிரண் டாகும்
    வணிகர்க் கீரெண் விரலாகும்மே
    காணென மொழிய சூத்திரக் களவே “

    புத்தகம் சரியா பொத்தகம் சரியா என்று குழம்புகின்றோம். பொத்தகம் என்னும் சொல் பல ஏடுகளை இணைத்த இணைப்பினைக் குறித்தது என்பதற்கும் பழையபாடல்கள் சான்றாய் வந்து அமைகின்றன. வெற்றிலைகளை அடிக்கி வைத்திருக்கும் அடுக்கினைக் குறிக்க “கவளி” என்னும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சொல்லை பலரும் மறந்து விட்டாலும் இன்னும் இந்தச் சொல் பழக்கத்தில் இருக்கிறது. வெற்றிலை அடுக்கினைக் குறிக்க வழங்கப்பட்ட இச்சொல் ஏடுகளின் அடுக்கினுக்கும் வழங்கப் பட்டிருக்கிறது.

    பொத்தகம் படிகமாலை குண்டிகை பொருள் சேர் ஞான
    வித்தகம் தரித்த செங்கை விமலையை அமலை தன்னை
    மொய்த்த கொந்து அளக பாரா முகில் முலைத் தவள மேனி
    மைத்தகு கருங்கண் செவ்வாய் அணங்கினை வணங்கல் செய்வோம்

    கம்பராமாயணத்தில் சரஸ்வதியை வணங்கும் வகையில் அமைந்த இப்பாடலில் – சரஸ்வதி ” பொத்தகம் ” கையில் வைத்திருப்பதாய் காட்டுவது நோக்கத்தது.

      “மெய்யெலாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டி
    கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி
    மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து
      பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன் “

    முத்திநாதன் என்பவன் உடம்பெலாம் திருநீறு பூசிக்கொண்டு சடை முடிந்த கோலத்தில் கையில் “பொத்தகச் சுவடி” வைத்துக் கொண்டு வந்தான் என்று பெரிய புராணத்தில் வரும் இப்பாடல் குறிப்பிடுகிறது. இங்கே “பொத்தகச் சுவடி” என்பதுதான் முக்கியம். அக்காலத்தில் ஏட்டுச் சுவடிகளை அடுக்காய் கொண்டுவரும் நிலையும் இருந்திருக்கிறது என்பதும் அதற்காக வழங்கப்பட்ட பெயர்களையும் கருத்திருத்துவது நலமல்லவா !

    ஏடுதந்த பனையின் ஓலைகளை எடுத்த எடுப்பில் ஓலை என்று அழைத்திடவும் முடியாது. ஓலை என்பது பொதுவான பெயராக இருந்தாலும் அது பனையின் மேல் முளைத்து எழுந்து வரும் பொழுது அதனை “குருத்தோலை ” என்கிறோம். பசுமையாய் வந்தபின்பு “சாரோலை” என்கிறோம். காய்ந்த பின்னர் “காவோலை” என்கிறோம். குருத்தோலை என் னும் பெயர் கிறீத்தவர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயராகும். குருத்தோலை பற்றி விவிலியத்திலும் வருகிறது. குருத்தோலை ஞாயிறு என்று ஒரு திருநாள் வருவதும் நோக்கத்தக்கது.

    குருத்தோலை என்று கூறியவுடன் அதனுள் நல்லதொரு தத்துவம் பொதிந்து இருக்கிறது என்பதை நம்மில் எத்தனைபேர் அறிந்திருப்போம் குருத்தோலைக்கு ஒரு மென்மைத் தனமையும் நெகிழும் தனமையும் உண்டு. மற்ற ஓலைகளைப் போல் குருத்தோலையானது கைகளை விரித்தபடி இருப்பதில்லை. பணிவு கொண்டு இருப்பவர்கள் போல – அக்குருத்தோலைகள் கூப்பியபடியே இருக்கின்றன. அதுமட்டுமல்ல அதன் நுனிகள் வானத்தை நோக்கியபடியே நிமிர்ந்தே நிற்கின்றன. இப்படிக் குருத்தோலைகள் இருப்பது – வாழ்வில் நம்பிக்கையினை யும், பணிவையும் எமக்குப் புகட்டுவதாக இருக்கிறது என்பதும் மனங் கொள்ளத்தக்கதாகும்

     (வளரும்)

    Share
  • புது வெளிச்சம் காட்டப் புதுவருடம் வரட்டும்

    புது வெளிச்சம் காட்டப் புதுவருடம் வரட்டும்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நல்லன நடக்க வேண்டும்
    நாடெலாம் சிறக்க வேண்டும்
    வல்லமை பெருக வேண்டும்
    வாழ்வது உயர வேண்டும்

    தொல்லைகள் தொலைய வேண்டும்
    தோல்விகள் அகல வேண்டும்
    இல்லது என்னும் வார்த்தை
    இன்மையாய் ஆதல் வேண்டும்

    போரெனும் வார்த்தை மண்ணில்
    பொசுங்கியே போதல் வேண்டும்
    மாசுடை  ஆட்சி மண்ணில்
    மடிந்துமே ஆக வேண்டும்

    ஊழலும் ஒழிய வேண்டும்
    உண்மையே நிலைக்க வேண்டும்
    வாய்மையின் வழியில் மக்கள்
    மண்ணிலே நடக்க வேண்டும்

    உழைபவர் உயர வேண்டும்
    நல்லூதியம் கிடைக்க வேண்டும்
    கொடுப்பவர் பெருக வேண்டும்
    குவலயம் சிறக்க வேண்டும்

    கல்வியில் உயர்வு வேண்டும்
    கசடுகள் அகல வேண்டும்
    கண்ணியம் என்றும் வாழ்வில்
    கட்டாயம் அமர வேண்டும்

    அறவழி என்னும் எண்ணம்
    அகத்தினில் அமர வேண்டும்
    அன்புதான் உயர்வு என்று
    அனைவரும் உணர வேண்டும்

    இரப்பது அகல வேண்டும்
    கொடுப்பது உயர வேண்டும்
    பொறுப்பது சிறப்பு என்று
    விருப்புடன் ஏற்க வேண்டும்

    வேற்றுமை அகல வேண்டும்
    வெறுப்புகள் ஒழிய வேண்டும்
    சமத்துவம் நிலைக்க வேண்டும்
    சன்மார்க்கம் தளைக்க வேண்டும்

    பண்பது உயரவேண்டும்
    பக்குவம் நிறைதல் வேண்டும்
    அன்பினைப் பகிர்ந்து மாந்தர்
    அனைவரும் இணைதல் வேண்டும்

    புது வருடம் அத்தனையும்
    சுமந்து கொண்டே வரட்டும்
    வரும் அனைத்தும் எங்களுக்கு
    வளங் கொடுக்க வரட்டும்

    புது வெளிச்சம் காட்டப்
    புது வருடம் வரட்டும்
    வரு வருடம் நமக்கு
    வரங் கொண்டு வரட்டும்

    Share
  • மாணிக்க வாசகர் மாசிலா மாணிக்கம்

    மாணிக்க வாசகர் மாசிலா மாணிக்கம்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
    இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
    மன்னவன் பாண்டியன் மாபெரும் மண்டபம்
    விண்ணவர் வியக்கவே மண்ணகம் மிளிர்ந்தது

    பாண்டியன் அவையினைப் பார்ப்பவர் வியந்தனர்
    பசுந்தமிழ் புலவர்கள் பாங்குடன் நின்றனர்
    ஆக்கிய பாடலை அவையேந்தி வந்தனர்
    அதற்குரை பகர்ந்தனர் அனைவரும் மகிழ்ந்தனர்

    பண்ணொடு பாடினார் பலவுரை பகர்ந்தனர்
    மன்னவன் வதனமோ மலர்ந்துமே நின்றது
    எண்ணிலா பொருள்களை மன்னவன் ஈந்தனன்
    பாடிய புலவர்கள் பரவசம் எய்தினார்

    கற்றவர் பலரையும் பாண்டியன் அணைத்தான்
    கடவுளை நம்பினான் கண்ணியங் காத்தான்
    மற்றவர் துயருறா வழியிலே நடந்தான்
    வாழ்விலே அறத்தை மாண்புடன் காத்தான்

    நல்லமைச்சர் நாளும் நற்றுணையே என்று
    வல்லவரை நாடி நல்லசபை அமைத்தான்
    முதலமைச்சர் நாட்டின் முதுகெலும்பாய் அமைய
    வாதவூர் வந்தாரை மனங்கொண்டான் மன்னன்

    வாதவூர் பிறந்தாரை மன்னவன் மதித்து
    தென்னவன் பிரம்மராயன் பட்டத்தைக் கொடுத்தான்
    பற்றற்ற மனத்துடனே பதவியிலே அமர்ந்தார்
    பாண்டிய நாட்டின் கண்ணியம் காத்தார்

    பாண்டிய மன்னன் குதிரைப் படையினை
    பெருக்கிட மனத்திலே விருப்பங் கொண்டான்
    திருப் பெருந்துறையிலே சிறந்த குதிரைகள்
    இருப்பதாய் அறிந்தான் வாங்கிட விரும்பினான்

    அமைச்சர்க்கு அமைச்சரை அழைத்தான் அரசன்
    அள்ளிக் கொடுத்தான் பொன்னும் பொருளும்
    குதிரை வாங்கிடப் பணித்தான் பாண்டியன்
    மதுரையை விட்டு மந்திரி அகன்றார்

    திருப் பெருந்துறையில் தெரிசனம் கண்டார்
    பொன்னை மறந்தார் தன்னை மறந்தார்
    குருவடி வீழ்ந்தார் குதிரையை மறந்தார்
    பவவினை அகலப் பற்றினார் குருவடி

    பொன்னைப் பொருளைத் தானம் செய்தார்
    புனிதமாம் கோவில் பணிகளைச் செய்தார்
    அல்லும் பகலும் குருவை நினைந்தார்
    அனைத்தும் துறந்தார் அமர்ந்தார் குருநிழல்

    குதிரை வாரா கவலை கொண்டான்
    சேதியை அறிந்து சினமதில் ஏறினான்
    அழைத்தான் அமைச்சரை வினவினான் பாண்டியன்
    அமைச்சர் பகர்ந்தார் வந்திடுங்குதிரை ஆவணிமூலம்

    பார்த்தான் பார்த்தான் பாண்டியன் பார்த்தான்
    ஏய்த்தார் அமைச்சர் என்றுமே எண்ணினான்
    குதிரைகள் எதனையும் காணா வரசன்
    கொண்டான் கோபம் கொடுஞ்சிறை அடைத்தான்

    அடியார் உள்ளம் அறிந்தவன் ஆண்டவன்
    குதிரைப் பாகனாய் கொணர்ந்தார் குதிரையை
    அரசன் மகிழ்ந்தான் அமைச்சரை மீட்டான்
    அன்றிர வதிர்ச்சி அங்கே நடந்தது

    பரிகள் அனைத்தும் நரியாய் மாறின
    கடித்தன குதறின கலக்கமே எழுந்தது
    மன்னன் கோவம் எல்லையைக் கடந்தது
    வாதவூர் பிறந்தார் வதையினில் சுருண்டார்

    அடியார் துயரைக் கண்டான் ஆண்டவன்
    ஆறாம் வைகையைப் பெருகிடச் செய்தான்
    பாண்டியன் பதறினான் வெள்ளம் பரந்தது
    பாண்டிய மக்களை படர்ந்தது துயருமே

    வெள்ளம் பரவா தடுத்திட அனைவரும்
    அவரவர் பகுதியை அடைத்திடப் பணித்தான்
    செம்மனச் செல்வி திகைத்தாள் அடைத்திட
    இரங்கிய எம்பிரான் உதவிட வந்தனர்

    பிட்டை விற்றுப் பிழைக்கும் கிழவி
    பிட்டைக் கூலியாய் தருவேன் என்றாள்
    பிட்டைச் சுவைத்தார் வேலையை மறந்தார்
    கிழவியின் வேலை கிடப்பிலே கிடந்தது

    அதிகாரி வந்தார் கிழவியை மிரட்டினார்
    உறங்கிடும் வேலை யாளினைக்  காட்டினாள்
    எடுத்தார் பிரம்பை அடித்தார் முதுகினில்
    விண்ணும் அதிர்ந்தது மண்ணும் அதிர்ந்தது

    அண்ட சராசரம் அனைத்திலும் விழுந்தது
    அரசன் பயந்தான் அனைவரும் வெருண்டனர்
    வாதவூர் பிறந்தாரை நாடினான் மன்னவன்
    மன்னிக்க மன்னிக்க என்றுமே வேண்டினான்

    வாதவூர் பிறந்தார் மதுரைவிட் டேகினார்
    மணி மணியாகப் பாடினார் இறையினை
    திருவினைப் பற்றியே மலர்ந்திட்ட யாவுமே
    தேனாய் தித்திக்கும் திருவாசக மானது

    மாணிக்க வாசகர் மாசிலா மாணிக்கம்
    வாழ்வெலாம் சிவனை வாழ்த்திய மாமணி
    தேசுடைத் தமிழினைச் சிந்தையில் ஏற்றி
    வாசகம் கோவையை வழங்கிய வள்ளல்

     

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் (அங்கம் – 6)

    கற்பகதரு என்னும் அற்புதம் (அங்கம் – 6)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    இரண்டு தாத்தாக்களை நாங்கள் மறந்துவிட முடியாது. ஒருவர் எங்கள் ஈழத்தவரான தங்கத் தாத்தா சோமசுந்தரப்புலவர். மற்றவர் தமிழ் நாட்டினைச் சேர்ந்த உ.வே.சா என்று அழைக்கப்படும் உத்தமதா னபுரம்  வேங்கட  சுப்பையர் சாமிநாத ஐயர் அவர்கள். ஈழத்துத் தாத்தா கற்பகதருவாம் பனைக் கென்றே “தாலவிலாசம்“  பாடிப் பனையினை வியந்து நின்றார். பனையின் ஓலையினை எங்கள் தங்கத் தாத்தா………

         ஐந்து வயதினிற் கையி லெடுக்கின்ற
                    வரிவரி யேடு முதலாக
         முந்து பலகலை யாகம மோலையில்
                 முன்ன மெழுதினார் ஞானப்பெண்ணே

    என்று பனை ஓலையின் பிறப்பாகிய எங்களின் ஓலைச் சுவடிகளை மனமிருத்தும் வகையில் பாடிப் பதித் ருக்கிறார். இந்தியத் தாத்தாவோ பனையின் கொடையான பனை ஓலையால் அமைந்த ஏடுகளை ஊரூராய்ச் தேடிச் சென்று எமக்களித்து உயர்ந்து நிற்கிறார்.

    எங்கள் முன்னோர்கள் மெஞ்ஞானத்திலும் உயர்ந்து நின்றார்கள். விஞ்ஞானத்திலும் உயர்ந்தே இருந்தி ருக்கிறார்கள். அவர்களின் அருமையான ஒரு தெரிவுதான் கற்பகதருவாய் பனையினை எடுத்தது எனலாம். பனையின் சாதாரண ஓலையினை உற்று நோக்கி அதனை சிந்தனைகளைப் பதிவிடும் ஒன்றாக மாற்றிட நினைந்தமையை வியக்காமல் இருந்திட முடியுமா! அவர்களிடம் தோன்றிய அந்தச் சிந்தனை அறிவியலின் விளைவு என்றுதானே கொள்ள முடிகிறது. குறைந்த செலவில் நிறைந்த பயனையுடைய அவர்களின் தேடலும் , அதற்காக அவர்களின் நாடலுமாகிய நிலையினை எண்ணி எண்ணி வியந்து நிற்கிறோம் அல்லவா!எத்தனையோ வகை இருக்க, எத்தனையோ மரமும் இலைகளும் இருக்க பனையின் இலையை அதாவது அதன் ஓலையினை எப்படித்தான் தேர்ந்தெடுத்தார்களோ தெரியவில்லை. அந்தத் தெரிவினால் எங்களுக்கு சிந்தனைச் செல்வங்களும் கிடைத்தன. கற்பகதருவாம் பனையும் எங்கள் வாழ்வியலுடன் இணைந்து போயும் விட்டது என்பதைக் கருத்திருத்துதல் கட்டாயமாகும்.

    பனை மரங்களில் நிறைய வகைகள் உண்டு.  எல்லாப் பனைகளது ஓலைகளும் ஏட்டுக்குப் பொருத்தமாய் அமைந்திருப்பதில்லை. தாளப்பனை  கூந்தல்பனை, லாந்தர்பனை  போன்ற பனை மரங்களினது ஓலை களே  ஓலைச்  சுவடிகள் செய்ய ஏற்றனவாக அமைந்தன என்று அறிய முடிகிறது. பழுப்பு நிறம் கொண்ட ஓலைகளையே ஓலைச்சுவடிகள் தயாரிக்கத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பொருத்தமான பனை ஓலைகளைத் தேர்ந்தெடுத்த பின்னர் – சுவடிகள் தயாரிப்பதற்கு – முதலில் பனை ஓலைகளைத் தேவையான அளவில் கத்தரித்துக் கொள்வர். இவ்வாறு கத்தரிக்கப்பட்ட ஓலைகள் மிக நன்றாக உலர்த்தப்படும். ஈரமின்றி நன்றாகக் காய்ந்த பிறகு இவ்வோலைகள் தண்ணீரில் இட்டு வேகவைக்கப்படும். இவ்வாறு இவை கொதிக்க வைக்கப்படுவதால் ஓலைகளில் ஒரு இலகுத்தன்மை ஏற்படுகிறதாம். பிறகு ஓலைகள் மறுபடியும் நன்கு காயவைக்கப்படும், காய்ந்த பிறகு கனமான சங்கு அல்லது மழுமழுப்பான கல்கொண்டு ஓலைகளை நன்றாகத் தேய்ப்பார்கள். இப்படிச் செய்வதால் எழுதுவதற்குத் தயாரான ஓலைகள் அதாவது ஏட்டுக்கு ஒரு பளபளப்பு ஏற்படும். மேலும் நேராகத் தகடுபோலவும் ஆகிவிடும். இவ்வாறு பதப்படுத்தப் படுவதனால்  ஏடு எழுதுவதற்கு ஏற்ற நிலையை அடைந்து விடுமாம். வேறு ஒரு முறையும் இதில் இருக்கிறது என்றும் அறிய முடிகிறது. அதாவது  ஓலையின்மீது  நல்லெண்ணெய் பூசி ஊற வைப்பார்களாம். இவ்வாறு செய்வதை “ஓலை வாருதல்” என்று அழைத்தார்கள். குறிப்பிட்ட பனை ஓலைகளைப்  அதாவது பதப்படுத்திய ஓலைச் சுவடிகளை ஒரே அளவில் வெட்டிய பிறகு அவற்றை ஓன்று சேர்த்து இடது பக்கம் கயிறு கட்டுவதற்காக ஓட்டை போடுவார்கள். அதில் மஞ்சள் தடவிய கயிறாய் கோர்த்து ஏடுகள் விழாமல் கட்டுவார்கள். கயிற்றின்  மேல்முனையில் துளையிட்ட   செப்புக்காசினை  வைத்து விடுவார்கள். ஓலைச் சுவடியின் நீளம் அதிகமாக இருந்தால், வலது பக்கமும் ஒரு துளையிட்டு அந்த  துளையில் இரும்பினால் ஆகிய கம்பியால் சேர்த்துக் கட்டுவார்கள். இதனை ‘நாராசம்’ என் று பெயர் சொல்லி அழைத்தார்கள். 

    பனை ஓலைகளால் ஆகிய சுவடிகளை ஒன்றாக இணைக்கும் பொழுது அவற்றின் ஆரம்பத்திலும் முடிவிலும் அதாவது ஓலைச்சுவடிகளின் இருபக்கமும் தேக்கு மரத்தால் ஆன பலகையை சேர்த்து கட்டுவார்கள். ஓலைகள் பாதுகாப்பாய் இருப்பதற்கும் குலைந்து போகாமல் ஒழுங்காய் இருப்பதற்கும் இவ்வாறு எமது முன்னோர்கள் செய் திருக்கிறார்கள். நூல்களை அச்சடிக்கும் இக்காலத்தில் முன்னட்டை பின்னட்டை நூலுக்குப் பாதுகாப்பாய் இருப்பது போல் பலகையினைக் கட்டுவது இருந்திருக்கிறது. அக்காலத்தில் ஏட்டின் முன்னும் பின்னும் பலைகையினைக் கட்டியதுதான் இக்காலத்தில் நூல்களின் பின்னும் முன்னும் அட்டைகளை கட்டுவதற்கு வழி சமைத்திருக்கலாம் என்றும் எண்ண முடிகிறதல்லவா! முன்னோர்களின் சிந்தனை அறிவியல் மயமாய் இருந்தே இருந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு செயல்களாலும் நாம் கண்டு பெருமைப்படவைக்கிறது ! 

    பனை ஓலையினால் ஆகிய ஓலைச்சுவடிகளில் எழுதுவது என்பது இலகுவான காரியம் அல்ல. ஓலையில் எழுதுவதற்கு ஏற்றது எது என்று எண்ணி அதற்கான ஒரு கருவியையும் கண்ட எங்கள் முன்னோரை வியக்காமல் இருக்கவே இயலாது.   ஓலையில் எழுதுவதற்கென்று வடிவமைக்கப்பட்ட கருவியே எழுத்தாணி ஆகும். இதனைக் கொண்டே பனை ஓலைகளினால் தயாரிக்கப்பட்ட சுவடிகளில் எழுதினார்கள். எழுதிக் குவித்தார்கள் எனலாம். பொதுவாக இது இரும்பினால் செய்யப்பட்டதாக இருக்கும்.  ஆனால்  அரசர்களும் வசதி படைத்தவர்களும் தங் கம், வெள்ளி, தந்தம்  போன்றவற்றில் செய்த எழுத்தாணிகளை வைத்திருந்தார்கள் என்றும் அறிய முடிகிறது. தந்தம் என்றவுடன் எங்களுக்கு விநாயகப் பெருமானே வந்து நிற்பார். பனை ஓலை ஏட்டுக்கும் விநாயகப் பெருமானுக்கும் ஒரு இணைப்பு இருக்கிறது. கிறித்துவுக்கு முன் எழுந்ததுதான் வியாசரது மகாபாரதம். அந்தப் பாரததத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகப் பெருமானே எழுத்தாணி கொண்டு எழுதினார் என்பது வழங்கிவரும்  ஒரு செய்தியாகவே இருக்கிறது. வியாசர் வேகமாக கதையினைச் சொல்லி வரும்போது – எழுதிய எழுத்தாணி முறிந்து விட – விநாயகப் பெருமான் கதை இடையில் நின்று விடக்கூடாது என்று எண்ணி – தன்னுடைய ஒரு கொம்பினை அதாவது தந்தத்தை ஒடித்து பாரதக் கதையினை எழுதினார் என்பது மரபாய் நீண்ட காலம் இருந்து வருகிறது. இங்கு முக்கியமாய் மனமிருத்த வேண்டியது தந்தினாலும் எழுத்தாணி கொண்டு பனை ஓலைச் சுவடிகள் எழுதப்பட்டிருக்கின்றன என்பதே ஆகும். அத்துடன் மிகவும் தொன்மையான அதாவது பாரதக் கதையினை எழுதுவதற்கும் எங்கள் கற்பகதருவாம் பனையின் ஓலைகள் துணையாக இருந்திருக்கின்றன என்னும் செய்தியும் எனலாம். எழுத்தாணி மூலம் எழுதப்பட்ட ஓலைகளில்,  மஞ்சள்,  விளக்குக்கரி, கோவை  இலைச்சாறு, ஊமத்தை இலைச் சாறு –போன்ற வற்றில் ஏதாவது ஒன்றை பூசியிருக்கிறார்கள்.ஏனென்றால்  சுவடியில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக தெரியவருவதற்காகவாம்.எங்களின் முன்னோர்களின் அறிவியல் முறைமையினை இங்கு கண்டு தெளிகிறோம் அல்லவா !

    தற்காலத்தில் காகிதத்தில் அச்சடிக்கும் முறை வந்துவிட்டது. ஆயிரக்கணக்கில் பல நூல்கள் குறிப்பிட்ட மணி நேரத்தில் அல்லது நாளில் எங்களின் கைகளுக்கு வந்துவிடும். அதே வேளை அந்த நூல்களுக்கான நகல்களையும் இலகுவாகப் பெற்றிடவுமான வாய்ப்பும் இன்று எமக்குக் கிடைத்துள்ளது. ஓலைகளில் எழுத் தாணி கொண்டு எழுதப்பட்ட பல நூல்களையும் அக்காலத்தில் பிரதிபண்னும் நிலையும் காணப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. சுந்தரமூர்த்தி நாயனாரைத் திருமணம் செய்யவிடாமல் எம்பெருமான் கிழப்பிராமண வடிவத்தில் வந்து வாதங்கள் செய்துதடுத்தாட் கொண்டார் என்பதைப்  புராணத்தால் அறிகிறோம். சுந்தரரும் அவர் வழி வந்தவர்களும் தனக்கு அடிமை என்று சபையில் கூறி அதற்கான ஆதாரமாக தன் மடியில் இருந்த ஓலையினைக் காட்டுகிறார். கிழப்பிராமணர். அந்த ஓலையினை எட்டிப்பறித்து சுந்தரர் கிழித்து விடுகிறார். அப்பொழுது அந்தக் கிழப்பிராமணர் “நீ எப்படியும் இந்த மூல ஓலையைக் கிழிப்பாய் என்று தெரிந்தே நான் இதன் நகல் ஓலையினையும் கொண்டு வந்திருக்கிறேன்” என்று சபையில் நகலினைக் காட்டி சுந்தரரை ஆட் கொண்டார் என்று புராணத்தால் அறிகிறோம். இங்கு முக்கியமான செய்தி என்ன வென்றால் மூல ஓலைக்குப் படி ஓலை எடுக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது என்பதேயேயாகும். நூல்களைப் பல பிரதிகள் அச்சடிப்பது போல அன்று மூல ஓலைச் சுவடிகளில் இருந்து அதை பிரதி எடுத்து எழுதும் முறையும் இருந்திருக்கிறது. அவ்வாறு எழுதுவதற் கென்றே தனியாக  எழுத்தாளர்களும் இருந்திருக்கிறார்கள். 

    அப்படியான –  அவர்கள் வாழ்ந்த தெருவுக்கு எழுத்துக்காரத் தெரு என்று பெயரும் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி நகல் எடுப்பவர்கள் அந்தச் சுவடிகளின் கடைசி வரியின் கீழ் கையெழுத்திட்டு தமது பெயரையும், ஊரையும் எழுதி இருந்தார்கள் என்பதையும் அறிகின்றோம். நகல் எடுப்பவர்கள் பலர் இருந்த படியால்த்தான் முன்னோர்களின் பல ஏட்டுச் சுவடிகளை அச்சடித்த நூலாக்கி நாங்கள் எங்களின் அறிவினை அகலமும் ஆளமும் ஆக்கிட முடிகிறது என்பதையும் கருத்திருத்தல் அவசியமேயாகும். இன்னு மொரு செய்தியையும் இங்கு நாம் பார்த்திட வேண்டும். அதாவது-ஓலை எழுதுவதையே தொழிலாகக் கொண்டோர் தமிழ் மண்ணில் வாழ்ந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு முறையாக ஊதியமும் வழங்கப் பட்டும் இருக்கிறது. இவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தைக் குறிக்க ஓலைக்காசு, ஓலை எழுத்துப் போறு, போன்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக பிற்காலச் சோழர் காலத்திய கல்வெட்டுகள் வாயிலாக அறியக்கிடக்கிறது. பழம் பெரும் சொத்துக்களாய் அமைந்திருக்கும் பனை ஓலையினால் ஆன ஏடுகளைப் பக்குவமாய் பேணிக் காத்திட எங்கள் முன்னோர்கள் கோவில்களையும்,   அரண்மனை களையும்,   மடங்களையும், அருங்காட்சி அகங்களையுமே தேர்ந்தெடுத்தார்கள் என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    தமிழர்களின் எழுத்து மரபுக்குத் தனித்துவமான குணமுண்டு. அது பனை தந்த விழுதுகளால் வேர்விடத் தொடங்கியது. பனை ஓலைகள் தமிழர்  வரலாற்றைத்  தாங்கி நின்ற அரண்களாகி இருக்கின்றன அல்லவா ! ஆதித் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஏடுகள் பனை மர ஓலைகளே என்பதும் கற்பதருவுக் கான பெருமை அல்லவா !  மன்ன ராட்சி கால நிகழ்வுகளை விளிக்குமிடத்து மன்னர்களுக்கும் அமைச்சர்களுக்குமிடையே நடைபெறும் உரையாடல்களின் போது ஓலை என்கின்ற சொல்லாட்சி இடம் பெற்றி ருப்பதையும் அறிய முடிகிறது. சங்க இலக்கியங்களான அகத்திணை,  கலித்தொகை, அகநானூறு,  நவ நீதிப்பாட்டியல் போன்றவைகளில் “ஓலை‘யைக் குறிக்கும் சிறப்புப் பெயர்கள் இடம் பெற்றிருப்பதும் நோக்கத்தக்கதாகும்.

    சங்க கால மக்களின் மரபார்ந்த அறிவுச் செழுமையைச் சமகாலத் திற்கு கைமாற்றிய ஊடகமாக கற்பக தருவாம் பனை விளங்குகின்றது என்பதும் கருத்திருத்த வேண்டியதே!. பனை ஓலைகள் இல்லாதிருந்தால் தொடக்க காலத்தில் புழக்கத்தில் இருந்த தமிழ் இலக்கண, இலக்கியங்கள் யாவும் புலவர்களின் நாவிலே தவழ்ந்து காற்றோடு கலந்தே போயிருக்கும்.

    பனை மரத்திலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட ஓலைக் கீற்றில் எடுத்த எடுப்பிலேயே எழுத்தாணி கொண்டு எழுத்தை எழுதிவிட முடியாது. எழுதுவதற்கு ஏற்ப ஓலைகளைப் பதப்படுத்தும் தொழில் நுட்பத்  தினைத் தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள். அருங்காட்சியகத்தில் ஓலைச் சுவடிகள் இன்றும் காட்சிப் படுத்தப்படுவதற்கு பதப்படுத்தல் சார்ந்த நுட்பமும் காரணமாகும். ஓலைகளை எழுத்தாணி கொண்டு எழுதுவதற்கு ஏற்றாற்போன்று தயார்ப்படுத்துவதற்கு “ஏடு பதப்படுத்துதல்‘ என்கின்ற தொழில் நுட்பத்தினைக் கையாண்டிருக்கின்றார்கள் எங்களது முன் னோர்கள் என்பது வியப்பாய் இருக்கிறதல்லவா ! அரேபிய நாட்டைச் சேர்ந்த பயணி அல்புருணி என்பவர் 1030இல் தென் இந்தியாவுக்கு வருகை தந்தபோது எழுதிய பயணக்குறிப்பில் பனைமரம் குறித்தும் பனை ஓலையில் எழுதும் முறை குறித்தும் வியந்து எழுதியுள்ளார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் இந்தியாவில் தரங்கம்பாடி என்னும் இடத்துக்கு கி.பி 1706 இல் வந்தவர்தான் சீகன்பால்கு என்னும் மத போதகராவர். இவர் தமிழை நன்கு கற்றார். ஜேர்மனியிலுந்து அச்சு யந்திரங்களை வரவழைத்து  ஏட்டில் இருந்த பல தமிழ் நூல்களை அச்சில் கொண்டுவந்து சேர்த்தார். அச்சிலே ஏற்றுவதற்கு இவர் பல தமிழ் ஏட்டுச்சுவடிகளைத் தனது கைகளால் தொட்டுப் பெருமிதம் அடைந் திருக்கிறார். தமிழர்கள் பனை ஓலையினைத் தேர்ந்தெடுத்து அதனை ஏடுகள் என்னும் முறையில் ஒழுங் கமைத்து அதில் எழுதியதையும், பராமரித் ததையும் கண்டு வியந்து மிகவும் பெருமைப்படக் கூறினார் என்றும் அறியமுடிகிறது. இப்பொழுது செய்திகளை அனுப்பிடப் பலவழிகளும், பல நிறுவனங்களும் இருப்பதுபோன்று – அக்காலத்திலும் இருந்திருக்கின்றன. அதாவது செய்தியினைத் தூதாக அறிவிப்பதில் பனையின் ஓலைகள் எந்தளவு முக்கியத்துவம் உடையனவாக விளங்கி இருந்திருக்கின்றன என்பதற்கு அக்கால நாட்டார் பாடல்கள் சான்றாகி இருக்கின்றன. இந்த வகையில் கி.பி நான்காம் நூற்றாண்டினைச் சேர்ந்த கல் வெட்டு ஒன்றினால் “ஓலைதூது” முறை இருந்ததாய் அறிய முடிகிறது.  

    (வளரும்) 

    Share
  • மார்கழி என்பது மனநிறை மாதம் !

    மார்கழி என்பது மனநிறை மாதம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மார்கழி என்பது மனநிறை மாதம்
    மாதவன் மலரடி போற்றிடும் மாதம்
    கோதையும் தமிழைக் கொட்டிய மாதம்
    குவலயம் குளிர்மையாய் ஆகிடும் மாதம்

    வாசகர் ஈசனைப் பாடிய மாதம்
    மகேசனை மங்கையர் போற்றிடும் மாதம்
    பூவெலாம் பனித்துகள் அமர்ந்திடு மாதம்
    புவியினைத் தேவரும் விரும்பிடு மாதம்

    வைகறை யாவரும் விழித்திடும் காலம்
    மனமெலாம் இறையினை இருத்திடு காலம்
    பொய்யெனும் மாயைப் போக்கிட இறையினை
    மெய்யடியார்கள் வேண்டிய காலம்

    உணர்வுடன் இறையினை உளமதில் இருத்தியே
    துயிலினைக் களைந்திடத் தொடக்குவார் மங்கைகள்
    பரமனைப் பாடியே தெருவெலாம் வருவதால்
    பக்தியின் பேரொளி பரவிடும் காலமே

    ஆலயம் எங்கணும் தீபங்கள் ஒளிர்விடும்
    அடியவர் அனைவரும் ஆலயம் ஏகுவார்
    காலையில் கதிரவன் எழுந்திடு முன்னரே
    கனிவுடன் இசைத்தமிழ் காற்றிலே கலந்திடும்

    மாதவன் கோவிலில் பாசுரம் ஒலிக்கும்
    மகேசன் கோவிலில் வாசகம் ஒலிக்கும்
    சைவம் வைணவம் சங்கமம் ஆகும்
    சன்மார்க்க வழியை  மார்கழி வழங்கும்

    பீடை என்பது பொருத்தமே அல்ல
    பீடுடை என்பதே பெரிதும் பொருத்தம்
    மார்கழி தேவர்க்கு உகந்த நல்மாதம்
    மனமதில் இருத்தியே பரவுவோம் இறையினை

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் – 5)

    கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் – 5)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    உருக்கு வாளேந்திப் பகைசெற் றுலகினை
    ஓம்பும் மணிமுடி மன்னவன் போல்
    கருக்கு வாளேந்திக் கலியை அழித்திந்தக்
    காசினியைக் காக்கும் ஞானப் பெண்ணே

    “பெண்பிளையும் தண்பனையும் பேணி வளர்த்தால்
    வருடம் பண்ணிலொரு பத்தில்  பயன் கொடுக்கும்”

    “நட்டாயிரம் வருடம் நாநிலத்தில் காய்த்து நிற்கும்
    பட்டாயிரம் வருடம் பாழ்போகா”

    “திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும்
    தென்னவனும் ஓளவை சொற்படியே
    மங்கல மாயுண்ட தெய்வப் பனம்பழம்”

    “முப்பாசந் தீர்த்த முனிவர்மொழி வாய்மைபோல்
    எப்போதும் நின்று பயனீயும்”

    கறுத்து, நிமிர்ந்து, உரமேறி, உயர்ந்து வான்பார்த்து, நிமிர்ந்து நிற்கின்ற கற்பக தருவாம் பனை பற்றித்தான் இப்பாடல்கள் வியந்து நிற்கின்றன. கூரையாய்,  வேலியாய், படலையாய், மனித உணவாய், கால்நடைத் தீனியாய், பாயாய்,  படுக்கையாய், அலங்காரப் பொருட்களாய்,  ஏடாய், காவலாய்,  மருந்தாய்,  விருந்தாய், பண்பாட்டின் அடையாளமாய், என்று பல நிலைகளில் தன்னைப் பயனாக்கி; முடியாத கட்டத்தில் விறகாக நின்று பெருங்கொடையினை நல்கிடும் “நவீன கர்ணனாய்” எங்களின் கற்பகதருவான பனை விளங்குகிறது என்பதைக் கருத்திருத்தல் அவசியமாகும்.

    கற்பகதருவாம் பனையின் வரலாறு மிகவும் தொன்மையானது எனலாம். திவாகர நிகண்டில் பனை பற்றிய பெயர்கள் தொகுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. தமிழின் முதுபெரும் சொத்தான தொல்காப்பியத்தில் – மடல், ஓலை, ஏடு, பாளை, ஈர்க்கு, குலை, போன்ற சொல்லாடல்களைக் காணமுடிகிறது. தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள் கிறித்துவுக்கு முற்பட்ட தாகும். அக்கல்வெட்டிலும் பனை என்னும் சொல் இடம் பெற்றிருக்கிறது என்றும் அறிய முடிகிறது.

    தமிழ் மன்னர்கள் பனையினைப் பேணி வந்திருக்கிறார்கள் என்றும் வரலாற்றால் அறிய முடிகிறது. பொருளாதார மேம்பாட்டுக்குப் பனை பேருதவியாக அமைந்திருக்கிறது. சோழ மன்னர்கள் பனையினை எல்லைப் புறங்களில் வளர்க்கவும் “பலாவும் கமுகும் பனையுங் கொடியும் உள்ளிட்ட பல்லுருவில் பயன் மரம் இடவும் நடவும்” என்று சோழர் காலத்துச் செப்பேட்டில் காணப்படுகிறது. “பயன் மரம்” என்னும் நிலையில் பனை இடம் பெற்றிருப்பது கருத்திருத்த வேண்டிய விடயம் அல்லவா!

    பனையின் கொடையாக அமைவது நுங்கு. அதன் சுவையினை அருந்தியவர்கள் உணருவார்கள். அறியாதார் சுவைத்தால் அதன் அருமை அகம் அமரும். நுங்கினைச் சுவைத்த பின்னர் வெட்டப்பட்ட இரண்டு நுங்கின் பாதிகளை ஒரு குச்சியால் இணைத்து அதன் நடுவில் கவரான நீளமான குச்சியைப் பயன்படுத்தி வண்டிலாய் ஓட்டிச் சிறுவர்கள் மகிழ்ந்தார்கள், தெருத்தெருவாய் இதனை உருட்டி மகிழ்வது ஒரு விளையாட்டாக இருந்திருக்கிறது. இதனை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்திருக்க மாட்டார்கள். பெரியவர்களில் எத்தனை பேருக்கு இந்த விளையாட்டு நினைவில் இருக்கிறதோ தெரியாது! ஆனால் இந்த விளையாட்டு பழைய காலத்தில்  விளையாடப் பட்டிருக்கிறது என்பதனை –

    ” பெருமடல் பெண்ணைப் பிணர்ந்தோட்டு குடவாய்க்
    கோடிப் பின்னல் வாங்கித் தளரும் பைங்குரும்பை”

    என்று கலித்தொகை காட்டுவதும் நோக்கத்ததாகும்.

    வேரிலிருந்து பனையின் பயன்கள் பல்கிப் பெருகியே இருக்கின்றன. இதனால்த்தான் கற்பகதரு என்னும் அடைமொழியே ஏற்பட்டது எனலாம். பழைய காலத்தில் ஊர்கள்தோறும் பல குளங்களை வெட்டினார்கள். குளங்களை வெட்டினால் மட்டும் நீர் மட்டம் உயர்ந்து விடாது. நீர் மட்டம் உயர்வதற்குச் சில மரங்கள் உதவியாய் அமைந்தன. அப்படி யான மரங்களுள் ஒன்றுதான் எங்கள் கற்பகதருவாம் பனை ஆகும். குளங்களைச் சுற்றி ஆயிரக் கணக்கில் அக்காலத்தில் பனை மரங்களை வளர்த்தார்கள். பொதுவாக எல்லா மரங்களுமே வேர்களைப் பக்கவாட்டில் மட்டுமே பரப்பக் கூடியன. ஆனால் பனைமரம் மட்டுமே வேரினை செங்குத்தாக நிலத்தின் உள்ளே செலுத்தி வளரும். பனையின் வேர் செங்குத்தாக நிலத்தடியில் காணப்படும் நீரினை நோக்கியே செல்லும். நீரை நோக்கி நேராகச் செல்லும் குழாய் போல பனையின் வேர்கள் அமைந்திருப்பதால் – நிலத்தடியில் உள்ள நீரை தரைப் பகுதிக்கு கொண்டு வரும் நீர்ப்பாசனப் பொறியாளராக பனையின் வேர் விளங்கி நின்றது. பனையின் வேரின் இந்தப் பெருஞ் செயலினால் நீரானது குளங்களில் நிரம்பவும், நிலத்தில் வழிந்தோடவும், ஆறுகளில் நீர் நிறையவும் வழிவகுத்து நிற்கிறது எனலாம். பனையால் ஏற்படும் நீர் முகாமைத்துவத்தை அறிவது அவசியம் அல்லவா! புயலினின்றும் பாதுகா ப்பினை அளிக்கவும் பனைகள் உதவியாய் இருக்கின்றன. வெள்ளப் பெருக்கைத் தடுக்கும் நிலையிலும் பனைகள் கைகொடுத்திருக்கின்றன. நாட்டின் பாதுகாப்பு அரணாய் அக்காலத்தில் பனை மரங்களை எல் லைகளில் நட்டு வைத்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

    பத்துப்பாட்டு என்கிறோம். எட்டுத்தொகை என்கிறோம். மேற்கணக்கு கீழ்க் கணக்கு என்றெல்லாம் சொல்லுகிறோம். காவியங்கள் என்கிறோம். இதிகாச புராணங்கள் என்கிறோம். ஐம்பெரும் காப்பியங்கள் என்று பெருமையுடன் அழைகின்றோம். இவை அத்தனையும் எங்களுக்கு இன்று கிடைத்திருக்கிறது என்றால் அதற்குக் காரணமாய் அமைந்தது கற்பகதருவாம் பனை என்பதை மட்டும் மறந்துவிடக் கூடாது. ஆழ்வார் பாடல்களோ, நாயன்மார் பாடல்களே,  சோதிடம், வைத்தியம் தொடர்பான விஷயங்களோ எங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு அருந்துணையாய் அமைந்தது பனைதான் என்பதை எவருமே மறுத்துரைத்து விட முடியாது. பனைக்கும் இலக்கியத்துக்கும் என்ன தான் இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? பனை இல்லாவிட்டால் நாங்கள் பெருமைப்படுத்திக் காட்டிக் கொண்டிருக்கும் அத்தனையும் எப்பவோ மறைந்திருக்கும். ஆனால் அவற்றை எல்லாம் எங்கள் பரம்பரைக்கே அளித்த பெருமை பனையின் கொடையான “பனை ஓலைக்கே” உரித்தாகும். ஏட்டில் எழுதப்படா விட்டால் நாங்கள் எல்லாவற்றையும் இழந்திருப்போம். பனை என்பது மரம் அல்ல ! அது வரமாகும் ! பனை ஓலையினை நாம் சாதாரணமாக எடை போட்டு விடக் கூடாது. செய்திகளைப் பறிமாறப் பயன்பட்டது பனை ஓலைதான். இதலனால்த்தான் ஓலை எழுதுதல், திருமணப் பட்டோலை எழுதுதுதல், என்னும் வழக்கும் வந்தது எனலாம். இன்று பல இடங்களில் “பட்டோலை” எழுதுதல் என்பது நடைமுறையில் இருப்பதும் நோக்கத்தது.

    ஏட்டில் எழுதப்பட்ட வேளையில் – அவ்வோலைகளுக்குக் கென்று தனித்த விசேடமான பெயர்களும் இருந்திருக்கின்றன. திருமணத்துக்கு அனுப்பப்படும் ஓலை, இறப்பினைத் தெரிவிப்பதற்கான ஓலைக்கு “நீட்டோலை” என்னும் பெயரும் – படி அதாவது நகல் எடுத்து நிற்கும் ஓலைக்கு “மூல ஓலை” என்றும், ஆவணங்கள் இடம் பெற்ற ஓலைக்கு “சுருள் ஓலை” என்றும், எந்தவித பழுதுமில்லா ஓலைக்கு “குற்றமற்ற ஓலை” என்றும், செய்திகளைக் குறிக்கும் ஓலைகளுக்கு “நாளோலை” என்றும், அரச ஆணையினைத் தாங்கிவரும் ஓலைகளுக்கு “திருமந் திர ஓலை” என்றும், அக்காலத்தில் அழைக்கப்பட்டது. திருமணம்,   இறப்புக்கு “நீட்டோலை” என்னும் பெயர் பயன்படுத்துப்பட்டாலும் அவற்றுக்குக் கென்று தனி ஓலைகளும் இருந்திருக்கின்றன. “மணவினை ஓலை” திருமணத்தையும் – “சாவோலை” இறப்பையும் காட்டிடஅமைந்திருந்தது என்பதை அறிகிறோம்.

    “நீட்டோலை வாசியான் நின்றான் குறிப்பறியான்
    மாட்டாதவன் மரம்”

    “ஆவீன மழை பொழிய இல்லம் வீழ …… என்னும் பாட்டில் ….. “சாவோலை கொண்டொருவன் முன்னேவர” என்று வருவது – ஓலை பற்றிய நிலைக்கு எடுத்துக்காட்டுகளாய் இருக்கிறது அல்லவா.

    எங்களின் முன்னோர் தங்களின் மனத்தெழுந்த பல அறிவுக் கருவூலங்களை எல்லாம் – தமக்குப் பின்னால் வருகின்ற பரம்பரையும் அறிய வேண்டும் என்பதற்காக – எடுத்துக்கொண்ட அளப்பரும் பணிதான் ஏட்டில் யாவற்றையும் எழுதி வைத்தமை எனலாம். அவர்கள் அகத்தில் மட்டும் இவ்வரிய சிந்தனை ஏற்பட்டிருக்கா விட்டால் நாம் பலவற்றை இழக்கும் நிலைக்கு ஆளாகியிருப்போம் என்பதை மனமிருத்தல் அவசியமாகும். களி மண்ணில் எழுதினால் காலத்துக்கும் நிற்காது. கற்களில் எழுதுவது பெருங்கடினமாகும். மரப்பட்டைகளும் நின்று நிலைக்காது. விலங்குகளின் தோல்களில் எழுதுவது அறத்துக்கு ஒவ்வாததது, எனவே இலகுவாய் கிடைப்பதும், பெருஞ் சிரமம் இல்லாததுமான பனை ஓலையினைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களின் அந்த அறிவு பூர்வமான செயலினை எவ்வளவு பாராட்டினாலும் தகும் எனலாம். காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட நூல்கள் வந்தாலும் இன்றும் பழைய ஏட்டுச் சுவடிகள் காலத்தையும் கடந்து நிற்கின்றன என்றால் எங்களின் முன்னோர்களைக் கட்டாயம் கருத்திருத்த வேண்டியது அவசியம் அல்லவா !

    ஓலைச் சுவடிகளைத் தயாரிப்பது சற்றுக் கடினமானதுதான். மிகவும் கவனமாய் அதனைக் கையாழுதல் வேண்டும். எல்லாப் பனையின் ஓலைகளையும் ஏட்டுக்குப் பயன்படுத்திட முடியாது. “கூந்தல் பனை” என்னும் பனையின் ஓலையே ஏட்டுக்கு ஏற்றதாக அமைந்திருந்தது. இதனை “தாழிப்பனை” என்றும் அழைத்தனர். இந்தவகையான பனை மரங்கள் சற்று வித்தியாசமானவை. ஏனைய பனை மரங்கள் போல் இவைகள் இருக்க மாட்டா. இந்த வகையான பனைகள் வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் பூக்கும் தன்மை வாய்ந்தனவாம். இந்தப் பனைகள் அறுபத்து ஐந்து அல்லது எழுபது ஆண்டுகள் சென்ற பின் தான் பூக்கும். ஒரு முறை பூத்த பின்னர் இவ்வகைப் பனைகள் காய்ந்து விடுமாம். ஏடுகள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன! ஏடுகளில் எவ்வாறு எழுதினார்கள்! ஏடுகளை எவ்வாறு பேணினார்கள் என்பதையெல்லாம் அறியும் ஆவல் எழுகிறதா? விரைவில் ஏடுகளைத் தேடுவோம்!

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் – 4)

    கற்பகதரு என்னும் அற்புதம் – இலக்கியத்தில் இணைந்த பனை (அங்கம் – 4)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா    

    பனையின் மீது தமிழர் பெருங் காதல் கொண்டிருந்திருக்கிறார்கள். பனை என்பது தமிழர்களின் மரம் என்றே எண்ணி வந்திருக்கிறார்கள். அந்த நினைப்பு அவர்களின் உள்ளத்தில் ஆழப்பதிந்த காரணத்தால் தாங்கள் வசிக்கும் ஊர்களுக்கும் தங்களின் விருப்பத்துக்குரிய பனையினை இணைத்து பெயர் வைத்து மகிழ்ந்திருக்கிறார்கள். அந்தவகையில்த்தான் இங்கு சில ஊர்களின் பெயர்களைப்பார்க்கின்றோம். பனையின்குளம், பனகுடி, பனஞ் சாவடி, பனங்குளம், பனையூர், பனையப்பட்டி,  வடக்குப்பனைவடலி, தீய்ந்தபனைப்பட்டி, கலந்தபனை, பனங்காட்டூர், திருப்ப னையூர், பனங்காடு, பொற்பனைக் கோட்டை.

    இலக்கியங்களில் காட்டினாலும் தாங்கள் வாழுகின்ற இடங்களிலும் பனையினை விட்டுவிடத் தமிழர்கள் விரும்பவில்லை என்பதையே இந்நிலை காட்டுகிறதல்லவா!

    வெய்யில் என்று பாராமல், மழை என்று பாராமல்; ஒற்றைக் காலில் நின்று தவம் செய்து மக்களுக்கு – அவர்களின் வாழ்வில் பல நிலைகளிலும் பனையானது பயனை நல்கியே வந்திருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதே.

    கிறீத்தவ வேதமான பைபிளும் பனையினை வியந்து நிற்கிறது. “நீதிமான் பனையைப் போல் செழித்து வளருவான்” என்பதும் நோக்கத்தக்கது.

    பதநீரைப் பற்றியும், சுவையான நுங்கு பற்றியும். பனம்பழம் பற்றியும், கள் பற்றியும் இலக்கியங்கள் காட்டி நிற்பதையும் காணமுடிகிறது. பனை மாறன் என்று பெயரைக் கொண்ட மன்னர்கள் ஈழத்தை ஆண்டார்கள் என்பதையும் அறிய முடிகிறது. நுங்கின் நீரும்,  கரும்பின் சாறும், இளநீரும் அருந்தி ஆனந்தம் அடைந்தார்கள் பெண்கள் என்று ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் பாடுகிறார். நலங்கிள்ளை என்னும் அரசனின் படை மிகவும் பாரியது. அப்படையின் முன்னணியினர் பனையின் நுங்கினைச் சுவைத்து மகிழ்கிறார்கள். நடுவில் செல்லும் படையணியினர் பனம் பழத்தை உண்டு மகிழ்கிறார்கள். படையணியின் கடைசிப் பகுதியினர் பனங் கிழங்கினை உண்டு பசியாறுகிறார்களாம். அந்த அளவுக்கு படையின் பெருக்கமும், கடந்து செல்லும் காலத்தின் நீட்டமும் காணப்பட்டது என்றும்  பனையின் பருவத்தினையும் அதனால் வருகின்ற பயனையும் புறப்பாடல் வாயிலாக ஆலத்தூர்கிழார் காட்டி நிற்பது கருத்திருத்த வேண்டியதே!

    வீட்டுக்கு வருகின்ற விருந்தினருக்கு நாம் இப்போது தேனீர் கொடுப்போம். கோப்பி கொடுப்போம். இன்னும் எத்தனையோ வகையான பானங்களைக் கொடுப்போம். அவை அனைத்தும் உடல் நலத்துக்கு உகந்தனவா என்பதை கொடுக்கின்ற நாங்களும் உணர்வதில்லை. பருகுகின்ற விருந்தினரும் உணருவதில்லை. ஆனால் வீட்டுக்கு வருகின்றவர்களுக்கு நுங்கினைக் கொடுத்து அக்காலத்தில் எம்மக்கள் மகிழ்ந்தார்கள் என்பதை சிறு பாணாற்றுப் படை மூலம் அறிகின்றோம்.

    பனையினைப் பலவிதங்களில் பயன்படுத்திய செய்தியினையும் இலக்கியங்கள் புலப்படுத்தி நிற்பதும் நோக்கத்தக்கது. பனையின் ஓலையினால் ஆகிய உண் கலங்கள் பயன்பட்ட விதத்தினை நற்றிணை காட்டுகிறது. தட்டுவம் என்பது பனை ஓலையால் ஆன உண் கலமாகும். பனை ஓலையால் ஆன தட்டுவம் தூய்மையான கலமாகும். இன்று எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறதோ தெரியாது! கள்ளினை அருந்துவதற்கு பனை ஓலையிலான கலம் பயன்பட்டிருக்கிறது. இன்றும் அது நடைமுறையில் கிராமங்களில் இருப்பதையும் காணலாம். பனையின் பன்னாடை கள்ளை வடிப்பதற்கும், பத நீரை வடிப்பதற்கும் துணையாக இருந்தது என்பதை புறப்பாடல் காட்டி நிற்கிறது.

    தென்னம் பிள்ளை என்று செல்லமாய் அழைக்கும் தென்னை யானது வீடுகள் தோறும் இருக்கும். தென்னையைப் பிள்ளையாக்கி செல்லமாய் வளர்ப்போம். நித்தமும் நீர் ஊற்றுவோம்.கிட்டத்தட்ட பிள்ளையைப் பேணுவது போலவே தான்  தென்னையைப் பேணுவோம். ஆனால் பனையினை அப்படிப் பேணுவதும் இல்லை. அதனை வளர்த்திட நினைப்பதும் இல்லை. வளர்ந்த பனைகளைப் பார்த்துப் பாராமலும் நிற்போம். யாராவது நல்ல உயரமாய், நல்ல கறுப்பாய், நல்ல முறுக் கேறிய உடல் தோற்றத்துடன் காணப்பட்டால் – அவர்களை விபரிப்பதற்கு பனையினை எடுத்துக்காட்டி  நிற்போம். பனையோ இதனை எதையுமே கண்டு கொள்ளாமல் தனது ஒத்துழைப்பினை வழங்கியபடி தலை கவிழாமல் தலை நிமிர்ந்தபடியே தளராது நிற்கும். அடியிருந்து நுனிவரை அனைத்தையுமே எங்களுக்கு அளித்து கற்பகதருவாய், கர்ணனாய் களிப்புற்று நிற்கும். தென்னையும் இவ்வாறு தந்தாலும் பனையின் பக்குவம் வேறு ! பனையின் பயன்பாடும் வேறாகும்! பனையின் வாழும் காலமும் வேறாகும்!

    பிள்ளையென நாமழைக்கும் தென்னையில் ஆண், பெண் என்று வகை இல்லை. ஆனால் பனையில் ஆண், பெண் என்று காணப்படுகிறது. ஆண் பனையினை ‘அழகுப் பனை’ என்றும் , பெண் பனையினை ‘பருவப்பனை’  என்றும் அழைக்கின்றனர். பாளையினை மட்டும் நீட்டிக் கொள்ளுவதுடன் ஆண்பனை நின்றுவிடும். நுங்கினை வழங்கிடும் நிலை ஆண்பனைக்கு இல்லை. ஆனால் காய்ய்ப்பதும் கனிதருவதும் பெண்பனைதான். பதநீர் கூட ஆண்பனையைவிடப் பெண்பனையே தந்து நிற்கும்.

    பயிரிடப் படாமல் தானாகவே வளர்ந்து பயனளிக்கும் பனையினை மனமிருத்துவது அவசியமாகும். இளம் பனையினை ‘வடலி’ என்று அழைக்கின்றோம். பனையானது வளர்வதற்கு பதினைந்து ஆண்டுகள் எடுக்கும் என்று அறியமுடிகிறது. பனையின் வயதானது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். வளைவுகள் இன்று நேராக வளர்வது பனையின் சிறப்பு எனலாம்.

    கற்பகதருவான பனையினைக் கருத்திற்கொண்டு நாட்டுப்புற மக்களின் நாயகனான ஒருவர் தன்னுள்ளத்து உதித்தவற்றை தனது மொழியிலே கவிதையாக்கி வழங்கி இருக்கிறார். பனையின் வரலாற்றையே எப்படிக் காட்டுகிறார் பாருங்கள்.

    பனைமரமே! பனைமரமே! ஏன் வளர்ந்தாய் பனைமரமே?
    நான் வளர்ந்த காரியத்தை நாட்டாரே! சொல்கிறேன் கேட்பீர்.
    அறியாவிட்டால் சொல்லுகிறேன் அச்சோடி பெண்களா சோபனமே!
    தெரியாவிட்டால் சொல்லுகிறேன் தேசமெங்கும் சோபனமே!
    பராமரியா யிருக்காமல்  பட்சமுடன் கேட்டிருங்கள்.
    படுக்கப்பாய் நானாவேன், பாய்முடையத் தோப்பாவேன்,
    வெட்டநல்ல விறகாவேன், வீடுகட்ட வாரையாவேன்,
    பட்டுப்போற பயிர்களுக்குப் பலத்தநல்ல ஏற்றமாவேன்,
    அட்டடுக்குப் பெண்களுக்கு அடுப்பெரிய மட்டையாவேன்,
    கட்டநல்ல கயிறாவேன், கன்றுகட்டத் தும்பாவேன்,
    மட்டமுள்ள உறியாவேன், மாடுகட்டத் தும்பாவேன்,
    பசுவணைக்குங் கயிறாவேன்,  பால்தயிருக்கு உறியாவேன்,
    வாரமட்டை நானாவேன், வலிச்சல்களுந் தானாவேன்,
    தொட்டிலுக்குக் கயிறாவேன், துள்ளியாட ஊஞ்சலாவேன்,
    கிணத்துசலம்  மொண்டுவரக் கைத்தாம்புக் கயிறாவேன்,
    பலத்தசுமை பாண்டங்கட்குப் புரிமணையுந் தானாவேன்,
    ஏழைநல்ல மங்கலிக்கு ஏற்றகா தோலையாவேன்,
    மங்கலியப் பெண்களுக்கு மஞ்சள்பெட்டி நானாவேன்,
    பாக்கியமுள்ள பெண்களுக்குப் பாக்குப்பெட்டி நானாவேன்,
    விர்த்தாப்பியப் பெண்களுக்கு வெற்றிலைப்பெட்டி  நானாவேன்,
    குணமுள்ள பெண்களுக்குக் குங்குமப்பெட்டி நானாவேன்,
    பெரியோர்கள் தோள்மேலே திருப்பக்குடை நானாவேன்,
    திருப்புக்கூடைக் குள்ளிருக்குந் திருமண்பெட்டி நானாவேன்,
    திருப்பாவை சேவிப்போர்க்குத் திருத்துழாய்ப் பெட்டியாவேன்,
    எழுதுகின்ற பிள்ளைகட்கு வண்ணநல்ல தடுக்காவேன்,
    ஓதுகின்ற பிள்ளைகட்கு ஓலைத்  தடுக்காவேன்,
    நனைந்து வருவார்க்கு டம்பக்குடை நானாவேன்,
    பசித்து வருவார்க்குப் பனம்பழமும்  நானாவேன்,
    பாலர் பெரியோர்க்குப் பனம்பதநீர் நானாவேன்,
    சித்திரைக் கோடையிலே சிறந்தநல்ல நுங்காவேன்,
    காளையர்க்கும் கன்னியர்க்கும் களைதீர்க்கும் விசிறியாவேன்,
    கைப்பிள்ளைத் தாய்மார்க்குக் கருப்புக்கட்டி நான்தருவேன்,
    வேலிகட்டக் கயிறாவேன் விறகுகட்ட நாராவேன்,
    வருடத்துக் கோர்தினத்தில் சரசுவதி பூசைசெய்து
    ஆமெழுகிக் கோலமிட்டு  அச்சோடி பெண்களா சோபனமே!
    மணையலம்பிக் கோலமிட்டு மணைநிறைய புராணம்வைத்து
    பூவும் புதுமலரும் பொன்னாகும் அட்சதையும்
    அட்சதையு மலரெடுத்து அர்ச்சிப்பார் உலகமெல்லாம்,
    வித்தாரமாய் இரண்டாநாள் விசயதசமி என்றுசொல்லி,
    நாட்டிலுள்ள பிள்ளைகட்கு நாள்பார்த்து முகூர்த்தமிட்டு,
    எண்ணெய் தேய்த்து நீராட்டி இயல்புடனே அலங்கரித்து,
    மாலைபோட்டு சந்தனம்பூசி மடிநிறைய புத்தகம் வைத்துப்
    பசங்கள் படித்துவர மங்களங்கள் பாடிவரக்
    காம்பு நறுக்கியவர் கணுக்காம்பு வேரறுத்துப்
    பக்கமிரு புறம்வாரிப் பல்வரிசைக் காம்பரிந்து
    என்னைத் திருத்தியவர் எழுத்தாணி கைபிடித்து,
    வெள்ளிநெட் டெழுத்தாணி வேடிக்கை யாய்ப்பிடித்து,
    ஆரியரும் வேதியரும் அரிநமோ வென்றெழுதி,
    அரிஅரி என்றெழுதி அர்ச்சிப்பார் என்னையவர்,
    அரிச்சுவடி என்னாலே, அடுக்காய்ப் பாடம் என்னாலே,
    எண்சுவடி என்னாலே, குழிமாற்றும் என்னாலே,
    தர்க்கங்கள் என்னாலே, சாத்திரங்கள் என்னாலே,
    இராமாயணம் என்னாலே, பாரதமும் என்னாலே,
    பாகவதம் என்னாலே, பல்சாத்திரங்கள் என்னாலே,
    திருவாய்மொழி என்னாலே, திவ்வியப்பிரபந்தம் என்னாலே,
    நாலுவேதம் என்னாலே, ஆறுசாத்திரம் என்னாலே,
    கங்கைக்கும் இலங்கைக்கும் கீர்த்திமிகப் பெற்றிருப்பேன்,
    மங்கையர்க்கும் மன்னவர்க்கும் மனமறிவதும் என்னாலே,
    வர்த்தகரும் செட்டிகளும் வழியறிவதும் என்னாலே,
    கணக்கர்களும் முதலிகளும் கணக்கறிவதும் என்னாலே,
    பலசரக்கு மண்டிகளில் பத்திரமாய் நானிருப்பேன்,
    காசுக்கடை சவுளிக்கடையில் கருத்துடனே நானிருப்பேன்,
    கொடுக்கல் வாங்கல் உள்ளவர்க்குக் குறிப்புச் சொல்லி வாங்கி வைப்பேன்,
    கார்த்திகை மாதத்திலே கருத்தறிந்த பிள்ளைகட்குத்
    திருத்தமுள்ள மாபலியாய்த் தெருவெங்குஞ் சுற்றிடுவேன்,
    பட்சமுள்ள வாசலுக்குப் பட்டோலை நானாவேன்,
    காதத்துப் பெண்களுக்குக் காதோலை நானாவேன்,
    தூரத்துப் பெண்களுக்குத் தூதோலை நானாவேன்,
    கலியாண வாசலுக்குக் கட்டோலை நானாவேன்,
    சீமந்த வாசலுக்குச் சீருடனே நான்போவேன்,
    பிள்ளை பிறந்ததென்றால் பெருமையுடன் நான்போவேன்,
    மைந்தன் பிறந்ததென்றால் மகிழ்ச்சியுடன் நான்போவேன்,
    அரண்மனையில் நானிருப்பேன், ஆஸ்தானத்தில் நானிருப்பேன்,
    மச்சுள்ளே  நானிருப்பேன்,  மாளிகையில் நானிருப்பேன்,
    குச்சுள்ளே நானிருப்பேன், குடிசைக்குள் நானிருப்பேன்,
    எருமுட்டை குதிரையெல்லாம் ஏந்திக்கொண்டு நானிருப்பேன்,
    ஏரிக்கரை மேலேநான் எந்நாளும் வீற்றிருப்பேன்,
    எமலோகம் போனாலும் எல்லவர்க்குந் தெரியவைப்பேன்,
    சிவலோகம் போனவர்க்குச் சீட்டோலை யாயிருப்பேன்,
    சகலமான காரியத்துக்கும் சாக்கிரதை யாயிருப்பேன்,
    இத்தனைக்கும் உதவியென்று என்னைஅயன் சிருட்டித்தான்,
    கற்பக விருட்சமெனக்கு எல்லையுந்தான் மறந்தேன்,
    திருப்பாளை ஊர்தன்னிற் சிவன்புனைந்தான் என்நாமம்,
    நான்வளர்ந்த சேதிதனை நலமுடனே கேட்டவரும்,
    பாடிப் படித்தவரும் பட்சமுடன் கேட்டவரும்,
    சொல்லிப் படித்தவரும் சுகிர்தமுடன் கேட்டவரும்,
    எல்லை உலகளந்த எம்பெருமான் கோத்திரம்போல்,
    ஆல்போலே தழைத்து ஆதிசிவன் போல்வாழ்வார்,
    ஊழியூழி காலமட்டும் உலகுதனி லேயிருந்து,
    வாழிவாழி என்றுசொல்லி வரமளித்தார் ஈஸ்வரனும்.

    Share
  • நல்லைநகர் நாவலர் பெருமான்!

    நல்லைநகர் நாவலர் பெருமான்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா         

    நல்லைநகர் என்றாலே எல்லையில்லா இன்பம் வரும்.வல் வினைகள் போக்குகின்ற வடிவேலன் உறையும் இடம். அந்தவிடம் அமைந்த விதம் அனைத்துக்கும் பெருமைதான். சொல்ல வல்ல ஒருவர் பிறக்கின்றார். அவர் பெயருடன் நல்லைநகரும் இணைந்து விடுகிறது. நல்லை நகர் சேர்ந்ததனால் அவர் புகழ் பெற்றாரா அல்லது அந்தக் கந்தப் பெருமான் அருள் கிடைத்ததால் அவர் புகழ் பெற்றாரா என்று எண்ணி நிற்கும் அளவுக்கு அவர் சிறந்தோங்கி விளங்கினார். அப்படி விளங்கியவர்தான் நல்லைநகர் ஆறுமுக நாவலர் பெருமான்.

    கந்தப்  பெருமானைத் தன் சிந்தையில் இருத்தி – தன் வாழ்க்கைப் பாதையினை அவர் அமைத்து அதன் வழியில் நடந்தார் எனலாம். கந்தப் பெருமானை மனம்முழுக்க எண்ணிய இருந்த காரணத்தால் கந்த புராணத்தை உயிராக நாவலர் பெருமான் கருதினார். “கந்த புராண கலாசாரம்” என்னும் வகையில் ஒரு புதுமையான கலாசாரம் தோன்றி இன்றளவும் ஈழத்தில் யாழ்மண்ணில்  இருப்பதற்கு மூலகாரணமாய் நாவலர் பெருமானே அமைந்தார் என்பதை அனைவரும் அகத்தில் இருத்துவது அவசியமாகும்.

    நாவலர் பெருமானை ஐந்தாங் குரவர் என்று ஏற்றிப் போற்றும் ஒரு நிலையும் காணப்படுகிறது. சமய குரவர் என்னும் பொழுது சம்பந்தர், அப்பர், சுந்தரர் , மணிவாசகர் வந்து அமைகிறார்கள். யாவருக்கும் இது தெரிந்த விடயந்தான். ஆனால் ஐந்தாம் நிலையில் ஒருவரை இவர்களுடன் எப்படி இணைப்பது? எவ்வாறு இப்படி ஒரு சிந்தனை எழுந்தது? என்றெல்லாம் எண்ண வைக்கிறதல்லவா! இங்குதான் நாவலர் தேர்ந்தெடுத்து நடந்த பாதையினைப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சமய குரவர்கள் என்ன செய்தார்கள்? அவர்களைக் கோவிலில்களில் வைத்து அவர்களுக்குக் குருபூசை செய்வதற்குக் காரணந்தான் என்ன? பூசிக்கப்படுகிறார்கள், கொண்டாடப்படுகிறார்கள், உயர்நிலையில் வைக்கப்படுகிறார்கள் – என்றால் அவர்கள் நிச்சயம் சமூதாயத்துக்கு மிகவும் உவப்பான, அவசியமான, செயல்களைச் செய்திருப்பவர்களாகத்தான் இருப்பார்கள் என்பது புலனாகி நிற்கிறதல்லவா!

    சமயகுரவர்களில் முன்னிற்பவர் சம்பந்தப்பெருமான். அவரின் சம காலத்தவர் அப்பர் பெருமான். இவர்கள் இருவரும் எங்கள் இன் தமிழை இதயத்தில் வைத்து ஏந்தினார்கள். அது போல் சைவவத்தையும் இதயத்தில் இருத்தி வைத்தார்கள். சைவம் ஒரு கண்ணாயும் தமிழ் மற்றக் கண்ணாயும் இவர்கள் கொண்டார்கள் என்றால் அது மிகையாகாது. மாற்று மதமும், வேற்றுக் கலாசாரமும், தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும், சைவத்தையும், அடக்கி ஒடுக்கி அழிக்கின்ற வகையிலே வந்த பொழுது – அவற்றை அகற்றிட “நாமார்க்கும் குடியல்லோம்” என்னும் துணிவுடன் வந்தவர்கள்தான் சம்பந்தரும் அப்பரும். சம்பந்தர் இளையவர். அப்பர் முதிர்ந்தவர். இளமையும் அனுபவமும் இணைந்து ஒரு பெரிய போராட்டமே தமிழகத்தில் நடந்தது. அந்தப் போராட்டாத்தின் முதல் படைத் தளபதிகளாய் ஆண்டவனைத் துணையாக்கி நின்றவர்கள்தான் சம்பந்தரும் அப்பரும் ஆவர்.

    எதனை ஏற்பது? எதனை விடுவது? எது பயனானது? என்று மயக்குற்று நின்ற மக்களுக்குத் தலைமை தாங்கி அவர்களை நல்வழியில் நடத்திச் சென்றவர்கள் சம்பந்தரும் அப்பருமே என்பதை மறுத்துரைத்து விடல் இயலாது. சம்பந்தரும் அப்பரும் அக்காலத்தில் பிறந்திருக்கா விட்டால் எங்கள் சைவமும், தமிழுமே காணாமலே போயிருக்கும். செய்யெனச் சொல்லாமல் தாமே முன்னின்று செயலாக்கி நின்றார்கள். கோவில்கள் எழுந்தன. சைவம் தளைத்தது, பிழைத்தது. அவர்களின் பின்னால் சுந்தரர் வருகிறார். மணிவாசகர் வருகிறார். இவர்களும் தங்காலத்துக்கு எது ஏற்றதோ அதனைச் செவ்வனவே செய்து சைவத்தையும், தமிழையும் நிலைபெற வைக்கிறார்கள்.

    சமய குரவர்கள் நால்வரின்பின் ஐந்தாம் குரவராக நாவலரைக் கொள்வதற்கு உரிய காரணங்களை அறிவது மிகவும் அவசியமாகும். அதற்கு நாவலர் பெருமானைப் பற்றித் தெரிந்து கொள்ளுவது முக்கியமாகும்.

    சைவத்தைத் தலைமேற் கொண்ட குடும்பம் நாவலர் பெருமான் குடும்பம். ஆசார அனுட்டானங்களைக் கடைப்பிடித்த குடும்பம்  எம்பெருமானை  நீளநினைந்த குடும்பம். சைவம், தமிழ் இரண்டையும் கண்ணாய்க் கருதிய குடும்பம் அவர் குடும்பம். அந்தக் குடும்பத்தில் பிறந்ததே திருவருள் என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. பிறப்பும், குடும்பச் சூழலும் வளரும் பருவத்திலேயே நாவலரை நல்ல வழியில் பயணப்படுவதற்கு உரிய கருவை இதயத்தில் பதித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தமிழ் இலக்கியங்களை, இலக்கணத்தை, சைவத்தை  எல்லாம் கற்றிட நாவலரின் தந்தையார் உறுதுணையாக விளங்கினானர். இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பது போல – நாவலரின் இளமையில் போடப்பட்ட நல்ல உரமானது அவரின் வருங்கால வாழ்வினுக்கு, செயற்பாடுகளுக்கு நற்பாதையாய் அமைந்திருந்தது என்பது உண்மையாகும்.

    நாவலர் அவர்கள் வாழ்ந்த காலம் அன்னியர் ஆட்சியின் காலமாகும். அவர்களின் மதம், கலாசாராம், மொழி செல்வாக்கினைச் செலுத்துவதற்கு முன்வந்த காலமாகும். அன்னியரை அடிபணிந்தால் அனைத்துமே கிடைக்கும் என்னும் நிலை காணப்பட்ட காலமுமாகும். அன்னிய அரசுக்கு யார் விசுவாசமாகச் செய ற்படுகிறார்களோ அவர்களே நல்ல வசதிகளை, வாய்ப்புகளைப் பெற்று வாழும் வாழ்க்கை நிலவியது என்பதும் மனங்கொள்ளத்தக்கது. இந்தச் சூழலில் நாவலர் பெருமான் ஆங்கிலப் பாடாசாலையில் கல்வி கற்கவேண்டி ஏற்படுகிறது. தற்பொழுது யாழ் மத்திய கல்லூரியாய் விளங்கும் கல்லூரியில்த்தான் நாவலரின் ஆங்கிலக் கல்வி தொடங்கியது. நாவலர் எதையுமே நினையாமல் கற்பதைக் கருத்தாய் எண்ணிக் கற்று யாவரும் மதிக்கும் மாணவனாய் நிமிர்ந்து நின்றார். அன்னிய மொழியான ஆங்கிலத்தில் நல்ல புலமையினையும் பெற்றுக் கொண்டார். கற்ற பாடசாலையிலேயே கற்பிக்கும் ஆசானாக ஆகும் வாய்ப்பும் அவருக்கு வாய்த்தது. ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் என்று கற்று தன்னுடைய மொழி ஆற்றலை நாவலர் பெருமான் வளர்த்துக் கொண்டார். கிறீத்தவ பாடசாலை. கிறீத்தவ பாதிரிமார் ஆசிரியர். கிறீத்தவமே அங்கு முழுவதுமாய் இருந்தது. ஆனால் அவை எவையுமே தன்னைத் தொடாதவாறு நாவலர் தம்மைக் காத்து சிறந்த சைவமகனாய் ஆகியே நின்றார். இப்படி அமைந்ததற்கு அடிப்படை காரணம் நாவலர் மனதில் உதித்த நற்பாதை என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது.

    சமய குரவர்கள் வரவில்லையேல் எங்கள் சைவம் இல்லாமலே போயிருக்கும். சமயகுரவர்களின் வருகை அக்காலத்துக்கு அவசிய மானதாகவே அமைந்தது. ஐந்தாம் குரவராய் போற்றப்படும் நாவலர் வந்திருக்காவிட்டால் எங்கள் சைவமும் இல்லாமல் போயிருக்கும். அன்னியர் ஆளுகையினால் அவர்களின் மதமான கிறீத்தவம் மேலோங்கும் நிலை காணப்பட்டது. அந்த மேலோங்கலால் எங்கள் சைவம் தன்னிலை இழந்து போகாமல் – நிலைபெறச் செய்தவர் நாவலர் பெருமானே ஆவர். இதனால் ஐந்தாம் குரவராய் சைவத்தைக் காத்திட நாவலர் அன்னியர் ஆட்சிக் காலத்தில் வந்து அமைகிறார் என்பதுதான் உண்மையாகும்.

    சைவமும் தமிழும் இணைபிரியாதன. சமயகுரவர்கள் தமிழையே மூச்சாக்கி அதன் வாயிலாகவே சைவத்தின் மேன்மைகளை உணர்ந்திடச் செய்தார்கள். அத்தனையும் திருமுறைகளாக மலர்ந்தன. பண்ணமைந்ததமிழ்ப் பாடல்களாய் மக்கள் மனங்களில் பதிந்து மாற்றத்தை ஏற்படுத்தின. இவையனைத்தும் நாவலர் பெருமான் உள்ளத்தில் நிறைந்தே இருந்தது. சமயகுரவர் காலத்தில் பாடல்கள் மூலமாகவே கருத்துக்களை வெளிப்படுத்துவது வழமையாய் இருந்தது. ஆனால் நாவலர் காலம் அதற்கு உவப்பானதாக இருக்கவில்லை. அதனை நன்கு மனதிற் கொண்ட காரணத்தால் புதுப்பாதை வகுத்து அதன் வழியில் நாவலர் பெருமான் நடக்கத் தொடங்கினார். அந்தப் பாதைதான் வசன நடையாகும். சைவத்தின் மேன்மைகளை மக்கள் மனத்தில் பதியவைக்க நாவலரின் சிறப்பான வசனநடை கைகொடுத்தது மட்டுமல்லாமல் வெற்றியினையும் அளித்தது எனலாம். அவர் தமிழில் வசனத்தைக் கையாண்ட விதத்தைக் கண்ட பரிதிமாற் கலைஞரான தமிழறிஞர் அவரை “வசனநடை கைவந்த வல்லாளர்” என்று வியந்து போற்றினர்.

    கோவில்கள் தோறும்  அடியார்கள் பின் தொடர சமயகுரவர்கள் திருமுறைகளைப் பாடினார்கள். அது அக்காலத் தேவையாய் ஆகியது. ஆனால் நாவலர் தன்காலத்துக்கு எது ஏற்றதோ அதனைக் கையிலெடுத்து – கோவில்களில் தொடர் விரிவுரைகளை அறிமுகமாக்கி நின்றார். நாவலரைத்தான் முதல் மேடைப் பேச்சாளர் என்றும் கொள்ளலாம். தற்போதைய மேடைப் பேச்சுக்கு வித்திட்டவராகவும் நாவலர் பெருமான் வந்தமைகிறார் என்பது கருத்திருத்த வேண்டியதேயாகும். சைவசமயக் கருத்துக்களைப் புலப்படுத்த புராணங்களைக் கையிலெடுக்கிறார் நாவலர் பெருமான். புராணங்களை விரிவுரையாக மக்களுக்கு எடுத்து விளக்குகிறார். அவரின் சொல்லாற்றலும், பேச்சாற்றலும் மக்களை அவர் வசமாக்கி நிற்கிறது. அவர் எடுத்த முயற்சி வெற்றியாய் அமைகிறது. பேச்சுடன் நின்றுவிடாமல் மிகவும் எளிமையான் வசன நடையில் புராணங்களுக்கு விளக்கங்கள் எழுதி அவற்றை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கிறார். அச்சுக்கூடத்தை நிறுவி அதில் சைவ, தமிழ் நூல்களைப் பதிப்பித்து ஒரு புரட்சியினையே செய்து விடுகிறார். இது அவர் தேர்ந்தெடுத்த நல்ல பாதையாய் அமைகிறது எனலாம்.

    இலவசமாய் கல்வியினை அளிக்கும் புதுப்பாதையினை நாவலர் பெருமான் தொடங்கி வைக்கிறார். படிக்கும் மாணவர்களுக்கான பாட நூல்களைத் தாமே எழுதி அவற்றை அச்சடித்தும் கொடுக்கின்றார். மாணவர்களின் கல்வி உளவியலை மனதிற் கொண்டு நாவலர் பெருமானின் பாடநூல்கள் அமைந்திருந்தன என்பதுதான் மிகவும் முக்கியமாகும். தமிழகத்தில் தமிழ்ப்பாட நூல்கள் அக்காலத்தில் வந்தாலும் – அவையெல்லாவற்றையும் விட நாவலர் பெருமானின் பாடநூல்களே சிறந்தது என்று தமிழ் நாட்டவராலேயே ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும். இலக்கியத்தை, இலக்கணத்தை, இலகுவாக்கிடும் வகையில் நாவலரின் செயற்பாடுகள் அமைந்திருந்தன என்பதை மறுத்துரைத்துவிடல் முடியாது. செய்யுளாய் அமைந்திருந்த இலக்கணத்தை யாவரும் விளங்கும் வகையில் அவர் காலத்தில் வசனநடையில் கொண்டுவந்து கொடுத்தமை நாவலரின் புதுப்பாதைதானே!

    ஐந்தாம் குரவராக விளங்கும் நாவலர் அஞ்ஞா நெஞ்சனாகவும் விளங்கியிருக்கிறார். தம்மை எதிர்கொள்ள வந்த அரசின் ஆணையினையே துச்சமாக எண்ணி “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று வீரமாய் எதிர்து நின்றவர் சமயகுரவரான அப்பர் பெருமான். அப்பர் வழியிலே நமது ஐந்தாம் குரவரும் நடை பயில்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். தன் கருத்துக்கு ஒவ்வாதவற்றை, நீதிக்குப் பாதிப்பான வற்றை, சமூகத்துக்குப் பொருந்தாவற்றை, சைவத்தைத் தூஷிப்பவற்றை: அஞ்ஞாமல் எதிர்க்கின்ற போராளியாக அதாவது கண்டனக் கதாநாயகனாக நாவலர் பெருமான் விளங்கினார் என்பது உண்மையாகும். சைவத்தைத் தாழ்த்தியவர்களை எதிர்த்தார். வால்பிடிப்பாரை எதிர்த்தார். உண்மையினை உணராமல் ஊதுகுழலாய் ஆகி நிற்பாரை எதிர்த்தார். போலிச் சைவர்களை, போலிக் கிறீத்தவர்களை, எதிர்த்தார். அதுமட்டுமல்ல சமயம் அறியாத குருமாரையும் சாடினார். கண்டனங்களை சிறு துண்டுப் பிரசுரமாக வெளியிட்டார். அத்தனையும் அவரின் தர்ம ஆவேசத்தையே வெளிச்சமாக்கி நின்றது. கண்டனக் கணைகளை வீறுடன் விடுபவராய் ஐந்தாம் குரவரான நாவலர் பெருமான் இருந்தார் என்பதை யாவருமே ஒத்துக் கொள்ளுவார்கள்.

    குருவினைப் பேணுவதில் பெரும் அக்கறை மிக்கவர் நாவலர் பெருமான். குரு சொல்லினைத் தட்டாமல் விவிலியத்தை மொழி பெயர்த்துக் கொடுத்து – மிகச்சிறந்த மொழி பெயர்ப்பு என்னும் அங்கீகாரத் தையும் வாங்கிக் கொடுத்தார். அத்துடன் அவர் நின்றுவிடுகிறார். விவிலியத்தை மொழிபெயர்க்கும் வகையில் அவர் அந்தக் கிறீத்தவ வேத நூலினை மனத்தில் நன்கு பதித்தவராகவே ஆகியிருக்கிறார். அதனால் சைவத்தை எதிர்க்கும் கிறீத்தவ பிரசாரகருக்கு ஏற்ற மறுமொழியினை அளித்திடும் அறிவாற்றல் நாவலர் பெருமானிடம் நிரம்பியே இருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. தனது சமயத்தையும், மற்றைச் சமயத்தையும் நன்றாய் அறிந்து உணர்ந்த காரணத்தால் நாவலர் பெருமான் தன் காலத்தில் கதாநாயகனாகவே ஆகி நின்றார் என்பதை மறுத்துரைத்துவிடல் முடியாது அல்லவா!

    ஆறுமுகம் என்னும் பெயருடன் தமிழகம் சென்றவர் யாழ்ப்பாணம் திரும்பிடும் வேளை “நாவலர்” என்னும் பட்டத்தினைத் தனதாக்கி  ஆறுமுக நாவலர் என்னும் புதுப் பெயருடன் வருகிறார். நாவன்மையினை மெச்சி திருவாவடுதுறை ஆதீனம் இப்பட்டத்தை ஈழத்துத் தமிழ்ப் பெரியாரான ஆறுமுகத்துக்கு வழங்கியிருக்கிறது. பட்டம் என்னவோ அவருடன் இணைந்து கொண்டுவிட்டது. அது அவருக்கு மிகவும் பொருத்தமான பட்டமாகவும் அமைந்தது என்பதும் உண்மையாகும். ஆனால் நாவலர் பெருமான் அதனால் தன்னிலையில் மாற்றமுறவில்லை. தன்பாதை எதுவோ அதன்வழியிலேதான் பயணப்பட்டார். அவர் விரும்பி இருந்தால் ஏதாவது ஒரு ஆதீனத்துக்குக் தலைவராய் ஆகி இருக்கலாம். ஆளணியுடன் வாழ்ந்திருக்கலாம். அப்படியான எண்ணம் நாவலர் பெருமானிடம் தோன்றவே இல்லை என்பதைக் கருத்திருத்தல் வேண்டும். யாழ்ப்பாணத்தில் கூட தனியனாகவே நின்று செயற்பட்டார். தன் பெயரிலே சபையோ, ஆதீனமோ நிறுவிடவும் அவர் நாட்டங் கொள்ளவில்லை. “என்கடன் பணி செய்து கிடப்பதே” என்பதே அவர் வகுத்து நட ந்த பாதையாகி அமைந்தது எனலாம்.

    தேடிச் சோறுநிதந் தின்று – பல
    சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
    வாடித் துன்பமிக உழன்று – பிறர்
    வாடப் பலசெயல்கள் செய்து – நரை
    கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
    கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
    வேடிக்கை மனிதரைப் போலே – நான்
    வீழ்வே னென்று நினைத் தாயோ

    என்று பாரதி முழங்கியதற்கு ஒப்பாய் நாவலர் பெருமானின் செயற்பாடுகள் அனைத்துமே அமைந்திருந்தன என்பதை நாமனைவருமே மனத்தில் பதித்திடல் அவசியாமாகும். தனக்குச் சரியெனப் பட்டதை யாருக்குமே அஞ்சாமல் செய்து நின்றவர்தான் எங்கள் வரலாற்று நாயகனாகிய ஐந்தாம் குரவர் நாவலர் பெருமான். பழமைக்குள் மூழ்கிடாமல் தன்காலத்துக்கு எது உகந்ததோ அதனை மனமிருத்தி செயற்பட்டவர் தான் நாவலர் பெருமான். அதேவேளை மரபினையும் மறந்தாரில்லை என்பதும் நோக்கத்தக்கதாகும். நாவலர் காலத்து நிலைமைக்கு ஏற்ப அவரின் சமயச் சிந்தனை, தமிழ் பற்றிய சிந்தனை, கல்வி பற்றிய சிந்தனை, ஒழுக்கம் பற்றிய சிந்தனை யாவுமே  அமைந்திருந்தது.

    இலக்கணம், சமயம், காப்பியங்கள் என்னும் வகையில் நாற்பத்து நான்கு நூற்களைப் பதிப்பித்திருக்கிறார். இலக்கணம் தொடர்பாகவும் சைவசமயம் தொடர்பாகவும் இருபத்து நான்கு நூல்களை ஆக்கி இருக்கிறார். அத்துடன் அமையாது பதினாறு நூல்களுக்கு உரையும் எழுதியிருக்கின்றார். வியப்பாக இருக்கிறதல்லவா? இவ்வளவும் யாருக்காகச் செய்தார்? யாவுமே மண்ணும் மக்களும் பயனுற வேண்டும் என்னும் உயரிய சிந்தனையால் செய்தார் என்பதுதுதான் உண்மையாகும். இல்லறத்தினுள் புகுந்து விடாமல் பிரம்சாரியத்தைக் கடைப்பிடித்து நல்லறமாய் நாவலர் பெருமான் செய்திருக்கிறார் என்பதால் அவர் ஒரு யுகபுரு ஷராகவே விளங்குகிறார் எனலாம்.

    தமிழ் உரைநடையின் தந்தையாய், தமிழ் மறுமலர்ச்சியின் முன்னோடியாய், சுவடிகளை பதிப்பிப்பதிலும் முன்னோடியாய், மிகவும் சிறந்த தமிழ் வசனநடை வல்லாளராய், சைவசமயத்தின் பெருங்காவலராய், நல்லைநகர் ஒளிவிளக்காய் நவலர் பெருமான் திகழ்ந்திருக்கிறார். சைவத்தையும், தமிழையும், காத்த தோடு சைவத்துக்கு எவையெவை இன்றியமைதானவோ அவற்றையும் காத்திட வைக்கும் வகையில் நல்லை நகர் நாவலர் பெருமான் தன்னுடைய பாதையினை வகுத்து அதன் வழியில் பயணப்பட்டிருக்கிறார் என்பதை மறுத்துரைத்து விடல் இயலாது. ஐந்தாம் குரவராய் அவரை ஏற்றுவதும், போற்றுவதும், குரு பூசை நடத்தி அவரை உயர்வாகப் பார்ப்பதும் மிகவும் உகந்த செயலேயாகும். அவர் தேர்ந்தெடுத்து நடந்த பாதை காரணமாக அவரை இன்று இலங்கையின் தேசியவீரனாக, தேசியப் பெருமகனாக, அரசாங்கமே அங்கீகரித்து நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. முத்திரையில் நாவலர் பெருமான் திருமுகத்தை யாவரும் பார்த்திட வைத்திடும் கைங்கரியமும் இலங்கை அரசினால் ஆகியிருக்கிறது. அனைத்துக்கும் அடிப்படை நாவலர் பெருமான் “நல்வழியைத் தேர்ந்தெடுத்து அதன் வழியில் நடந்ததுதான்”  என்பதே உண்மையாகும்.

    நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்
    சொல்லு தமிழெங்கே சுருதியெங்கே – எல்லவரும்
    ஏத்து புராண ஆகமங்கள் எங்கே ப்ரசங்கம் எங்கே
    ஆத்தன் அறிவு எங்கே அறை.

    Share
  • கற்பதரு எனும் அற்புதம் – (அங்கம் – 3)

    கற்பதரு எனும் அற்புதம் – (அங்கம் – 3)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பனையென்பது செல்வமாகும் என்று கருதியே வந்திருக்கிறார்கள்.  பனையினைப் புலவர்கள் பல நிலைகளில் பார்த்திருக்கிறார்கள். பனையின் பயனைப் பாடி இருக்கிறார்கள். பனையினை காதலிலும் கண்டு பாடியும் இருக்கிறார்கள். காதலில் சிக்கித்தவிக்கும் நிலையில் பிரிவுத் துயரினை வெளிப்படுத்தும் பாங்கில் பனையினைக் காட்டுவதும் நோக்கத்தக்கது.

    திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப்
    பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே;
    ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற்
    பல் பூங் கானல் முள் இலைத் தாழை
    சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ
    வளி பரந்து ஊட்டும் விரிவு இல் நாற்றமொடு
    மை இரும் பனைமிசைப் பைதல உயவும்
    அன்றிலும் என்புறு நாலும்; அன்றி,
    விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
    யாமம் உய்யாமை நின்றன்று;
    காமம் பெரிதே; களைஞரே இலரே!

    என்ன….. பாடலைப் பார்த்ததும் தலை சுற்றுகிறதா? பயப்படாதீர்கள் இதுதான் எங்களின் சங்கத்தமிழ். சங்கத் தமிழனும் பனையினைக் கொன்டாடுகிறான். தலைவனைப் பிரிந்த தலைவியானவள் கலங்குவதாய் இப்பாடல் அமைகிறது. “ஆற்றில் அலை மோதிக் கொண்டிருக்கிறது. ஆற்று நீர் பாயும் கானலில் முள்ளிருக்கும். தாழம்பூ குழியிலைக் கூடையில் போட்ட சோறு போல் மொட்டு விருந்து பூத்திருக்கும் காட்சி தென்படுகிறது. காற்று அடிக்கிறது. தாழம்பூவின் மணம்  அடிக்கும் காற்றையும் அடக்கி மணம் வீசி நிற்கிறது.

    அங்கு இருக்கும் பனைமரத்தில் அன்றில் பறவை ஒன்று தன்னுடைய துணையைத் தேடு அழைக்கிறது. அந்த அன்றில் பறவையின் குரல் எனது எலும்பையே உருக்கும்படி செய்து நிற்கிறது. என் காம உணர்வு பெருகிக் கொண்டே  போகிறது. மனமாற்றத் துக்காக யாழை மீட்டி என் விரல்கள் ஓய்ந்தனவே அன்றி நள்ளிரவுப் பொழுது போகவில்லை ” என்று விரக தாபத்தைத் தலைவி வெளிப்படுத்துவதாய் இப்பாடல் அமைகிறது. இங்கே அவளின் விரக தாபத்துக்குக் காரணமான அன்றில் பறவையின் இருப்பிடம் “எங்கள் பனை” என்பதுதான் முக்கிய கருத்தாகும்.

    பரதவர்கள் வீடுகளைப் பனையோலையால் வேய்ந்தார்கள். அவர்களின் வேலியையும் பனை ஓலை கொண்டு அமைத் தார்கள் என்று நற்றிணை தெரிவிக்கிறது

    கழி சூழ் படப்பைக் காண்டவாயில்
    ஒலி காவோலை முள்மிடை வேலி

    பனை ஓலையுடன் முட்களையும் சேர்த்து வேலி அமைத்த செய்தியை நற்றிணையின் இப்பாடல் காட்டி நிற்கிறது. இவ்வாறு அமைக்கப்பட்ட  வேலியை அடுத்து பனைமரங்கள் உயர்ந்து வளர்ந்து இருந்தன. மணல் மேடும் அங்கு இருந்தது என்று நற்றிணை காட்டி நிற்கிறது.

    தலைவியின் வருத்தத்தைக் காட்டுவதற்கு குறுந்தொகை வருகிறது. இங்கும்  பனையினத் தொட்டே பாடல் அமைகிறது.

    பனைத்தலைக்
    கருக்குடை நெடுமடல் குருத்தொடு
    கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக்
    கணங்கொள் சிமைய வணங்குங் கானல்
    ஆழிதலை வீசிய வயிர்ச்சேற் றருவிக்
    கூழைபெய் எக்கர் குழீஇய  பதுக்கை
    புலர்பதங் கொள்ளா வளவை
    அலரெழுந் தன்றிவ் வழுங்க லூரே

    பனையின் உச்சியிலுள்ள கருக்கினையுடைய நீண்ட மட்டையானது குருத்தோடு மறையும்படி, கடுமையான காற்றினால் குவிக்கப்பட்ட, உயர்ந்த வெண்மையான மணற்குவியல்கள், சிகரங்களாக நிறைந்திருக்கின்றன. கடற்கரையில் இத்தகைய சூழலில் தனித்து இருக்கின்ற தலைவியின் விரகதாபம் இங்கே காட்டப்படுகிறது. விரகதாபத்தை அறிவது முக்கியமல்ல. அந்த நிலையில் எங்கள் பனை காட்டப்படுவதுதான் கருத்திருத்த வேண்டியதாகும்.

    பாரியின்  பிள்ளைகளான அங்கவை, சங்கவை, திருமணத்துக்கு மூவேந்தர்களும் வந்திருந்தார்கள். வந்திருந்த மூவேந்தர்களும் தங்களுக்குப் பனம் பழம் வேண்டும் என்று கேட்டார்கள். அங்கு ஒளவையார் இருந்தார். பாரியின் பிள்ளைகளின் திருமணத்துக்கு அவரே காரணமாய் இருந்ததால் வந்த விருந்தினர் விருப்பத்தை எப்படியும் நிறைவேற்ற எண்ணங்கொண்டார். அப்பொழுது பனம் பழக் காலம் இல்லாமல் இருந்தது. ஒளவையார் பந்தலை விட்டு வெளியே  வந்தார். வெட்டப்பட்ட பனையின் துண்டங்களைக் கண்டார்.

    “திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்
    மங்கைக் கறுகிட வந்து நின்றார் மணப்பந்தலிலே
    சங்கொக்க வெண்குருத்து ஈன்று பச்சோலை சல சலத்து
    நுங்குக்கண் முற்றி அடிக்கண் கறுத்து நுனி சிவந்து
    பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே”

    கண்டதும் இவாறு பாடினார். பாடியவுடன், பனந்துண்டம் வளர்ந்து பனையாகிப் பனம்பழத்தைத் தந்ததாம் என்று இப்பாடல் எமக்குச் சொல்லி நிற்கிறது. ஒளவையும் எங்கள் பனையினைப் பாடலால் காட்டுகிறார் என்பதும் நோக்கத்தக்கதேயாகும்.

    “கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
    மற்றையராவார் பகர்வர் பனையின் மேல்
    வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும்
    பச்சோலைக்கு இல்லை ஒலி”

    பனையினை மையமாக வைத்து அறிவுரை பகர்வதையும் புலவர்கள் விட்டு விடாரில்லை என்பதற்கு இப்பாடல் சான்றாகி நிற்கிறது.

    பனையினைப் பாடிப் பல புலவர்கள் புளக்காங்கிதம் அடைந்தார்கள் என்று தான் எண்ணலாம் அல்லவா! பாடப்படும் அளவுக்கு எங்கள் கற்பகதருவும் இருந்திருக்கிறது என்பதுதான் முக்கிய செய்தியாகும்.

    தாலவிலாசம் என்னும் நூல் மிகவும் பழமையானது. பனைமரம் பரம் பற்றிய நூல் என்னும் நிலையில் 18 ஆம் நூற்றாண்டில் வந்த இந்த நூல்தான் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. இந்த நூலினை அடியொற்றியே எங்கள் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவர் பின்னர் “தாலவிலாசத்தை” படைத்தார். பனைபற்றி நாட்டார் பாடல்கள் பலவும் இருக்கின்றன. வடலி என்று சொல்லுவது யாழ்மண்ணுக்கு உரியதேயாகும். அந்தச் சொல் வரும் வகையில் பனை பற்றிய ஒரு நாட்டுப்பாடலைப் பார்ப்போம் வாருங்கள்.

    வழிக்கரையே நிற்கு மந்த
    வடலி மரப் பெண் பனையே
    வாறவர்க்கும் போறவர்க்கும்
    என் செய்வாய் பெண்பனையே
    இருக்கத் தடுக்காவேன்
    இட்டிருக்கப் பாயாவேன்
    கொழிக்க நல்ல தங்கையர்க்கு
    கொழி சுளகு நானாவேன்
    புடைக்க நல் தங்கையர்க்கு
    புடை சுளகு நானாவேன்
    படிக்க நல் தம்பியர்க்கு
    பட்டோலை நானாவேன்
    எழுத நல் தம்பியர்க்கு
    எழுத்தோலை நானாவேன்
    தூரத்து வன்னிமைக்கு
    தூதோலை நானாவேன்
    வாசலிலே வன்னிமைக்கு
    வழக்கோலை நானாவேன்

    என்று அந்த நாட்டுப்பாடல் எங்கள் கற்பகதருவை கண்டுகளிக்கிறது.  கற்பகதருவாம் பனையினைப் பாடல்களில் பார்த்தோம். பழமொழிகளும் பனையினை விட்டு வைக்கவில்லை. அவற்றையும் பார்ப்பதும் நல்ல தல்லவா!

    “பனை நிழலும் நிழலோ பகைவர் உறவும் உறவோ”

    “பனைமரத்துக்குக் கீழே நின்று பாலைக் குடித்தாலும் கள் என்பார்”

    “பட்டணத்து நரியை பனங்காட்டு நரி ஏய்த்துவிடும்”

    “பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்ததாம்”

    “காவோலை விழக் குருத்தோலை சிரித்ததாம்”

    (வளரும்)

    Share
  • கற்பகதரு என்னும் அற்புதம் (அங்கம் – 2)

    கற்பகதரு என்னும் அற்புதம் (அங்கம் – 2)

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    “படையை வெல்லும் பனை” என்று எங்கள் இலக்கியங்கள் வியந்து நிற்கின்றன. என்ன! …. படையை வெல்லும் பனையா அப்படி  இந்த பனையில் என்னதான் இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா?  பனையை புசித்தோர் படையை வெல்லும் ஆற்றல் பெற்றவராவார் என்று சங்கப்பாடல் காட்டி நிற்கிறது. பழம்பெரும் காவியங்கள் பனைதான் கற்பகதரு என்கிறது. அதாவது அமிர்தம். அமிர்தத்தை உண்டவர்களுக்கு இறப்பே இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்பூவுலகில் இறப்பே இல்லை என்பதன் பொருள் மரணத்தை காலம் தாழ்த்தி தருவிப்பதையே குறிக்கும். பனையின் அணைப்பில் வாழ்ந்த காரணத்தால் மரணம் கூட சற்று தள்ளியே நிற்கும். இதனால் படையினையே வெல்லும் நிலை வரும் என்பதைக் குறியீடாக உணர்த்தவே “படையை வெல்லும் பனை” என்னும் மொழி உருவாகியது எனலாம்.  பனைக்கு அணை (அணைமரம்) என்ற பெயரும் உண்டு. பல கன எடையுள்ள தண்ணீரை அணை தடுத்து நிறுத்தும் ஆற்றல் பெற்றது. அதே போல் பனையை தன் வாழ்வில் துணையாக கொண்டு வாழும் மனிதனும் உறுதியானவனாக திகழ்வான் என்பதுதான் பனையால் படை வெல்லும் என்பதற்கு சான்றாய் தெரிகிறது எனலாம்.

    பனைக்கு பெண்ணை, கூந்தல், காமம், உபதாகம், ஐந்தார், ஐந்தாலம்,  கரும்புரம் ,கரும்புல், பகற்பலி,  புற்றாலி  புற்பதி, போந்து, திருணராசன், துராரோகம், திருவிராசன், குவீரம், தாளம், தருவிராசன், புல்லூதிகம்,  புற்பதி, என பல பெயர்கள் இருக்கின்றன. பனைக்கு இவ்வாறு பல பெயர்கள் இருப்பதுபோல் – பனையில்;   ஆண்பனை, பெண்பனை, கூந்தப்பனை, தாளிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈச்சம்பனை, ஈழப்பனை   சீமைப்பனை, ஆதம்பனை திப்பிலிப்பனை, உடலற்பனை, கிச்சிலிப்பனை குடைப்பனை, இளம்பனை, கூறைப்பனை, இடுக்குப்பனை, தாதம்பனை, காந்தம்பனை, பாக்குப்பனை, ஈரம்பனை, சீனப்பனை, குண்டுப்பனை, அலாம் பனை, கொண்டைப்பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை, காட்டுப்பனை, கதலிப்பனை,  வலியப்பனை வாதப்பனை, அலகுப்பனை, நிலப்பனை,  சனம்பனை – எனப் பல வகைகள் இருக்கின்றன என்பதையும் கருத்திருத்தல் அவசியமாகும்.

    பூமியிலே கற்பகதரு என்று வியந்து நிற்கும் பனைபற்றி எண்ணுகின்ற வேளை பனையுடன் எங்களின் இலக்கியங்கள், புராணங்கள், திருமுறைகள், தொடர்புபட்டிருப்பதும் அவைகளினால் குறிப்பிடப்படுவதும் கருத்திருத்த வேண்டியதே. பஞ்சத்தைத் தாங்கக் கூடியதான மரமாகவே பனையினைச் சிவன் படைத்தார் என்று தலபுராணங்கள் வியந்து நிற்பதும் நோக்கத்தக்கதே. ஞானிகளாலும் அறிஞர்களாலும் போற்றப்படும் வகையில் எங்களின் கற்பகதருவான பனை விளங்கியிருக்கிறது என்பது மகிழ்வான செய்தியாக இருக்கிறது அல்லவா!

    சூரபதுமன் பனைக்கொடியினைத் தாங்கி வந்தான் என்று கந்தபு ராணம் காட்டுகிறது. கம்பனது இராமாயணமும் பனையினைப் பற்றி பாலகாண்டப் பகுதியில் காட்டுகிறது. பலராமர், வீஷ்மர் ஆகியோர் பனைக் கொடியினை வைத்திருந்தார்கள் என்றும் அறியமுடிகிறது. திருமுருகாற்றுப்படையும் பனையினைக் காட்டுகிறது. நற்றிணையில் பனையினைப் பரதவர் தெய்வமாக வழிபட்டார்கள் என்று காட்டுவதும் கருத்திருத்த வேண்டியதே! “தேம்படு பனையின் திரள் பழத் தொரு விதை” என்று ஒளவையாரும் பனையினைக் காட்டி நிற்கிறார். திருஞானசம்பந்தப் பெருமான் ஆண் பனைகளைப் பெண்பனை ஆக்கினார் என்பதை திருமுறைகள் வாயிலாக அறிகின்றோம். சம்பந்தப் பெருமானது காலத்தில் பனந்தோப்புகள் தனித் தோட்டங்களாக இருந்திருக்கின்றன. சிவன் அடியார்கள் பனைவளம் பெருக்குவதிலும் பெருதும் ஈடுபட்டிருந்தார்கள் என்றும் அறியமுடிகிறது.  தத்துவத்தையும் உலகியலையும் ஞானத்தால் பார்த்தவர் திருமூலர் என்னும் ஞானி. அவரும் பனையினைக் குறிப்பிட்டு தத்துவம் உரைப்பதும் கருத்திருத்த வேண்டியதே !

    “ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியிற்
    சாறு படுவன நான்கு பனையுள
    ஏறற் கரியதோர் ஏணியிட்  டப்பனை
    ஏறலுற் றேன்கடல் ஏழுங்கண் டேனே”

    இப்பாடலில் பனையின் பெயர் இடம் பெறுகிறது. ஆனால் அதனைத் தத்துவம் உரைப்பதற்கு திருமூலர் என்னும் ஞானி கையாழுவதுதான் குறிப்பிடத்தக்க தாகும். பாடலின் கருத்தை அறிய ஆவலுடன் இருப்பீர்கள்! கருத்தையும் காண்போம் பனையையும் காண்போம்! ‘ ஆறு ஆதாரங்களாகிய தெருவின் கீழுள்ள மூலாதாரமாகிய சந்தியில், பக்குவமடையாதபோது இருள் முகமாகத் தொழிற்படுவன ஆகிய நான்கு இதழ்களாகிய பனைகள் உள்ளன. ஏறுவதற்கு அருமையான சுழு முனையாகிய ஏணியை வைத்து அப்பனை மரத்தின் மேலேறி  சகஸ்ரதளஞ் சென்றேன். ஆதாரமாகிய ஏழுகடலும் ஒன்றாகி ஒளிமயமாகக் பொங்குவதைக் கண்டேன். (பனை – பனைமரம் போன்ற முதுகத் தண்டு) காஞ்சிபுரத்திலிருந்து தென்மேற்கே இருபத்தெட்டு கிலோ மீற்றர் தொலைவில் வந்தவாசி செல்லுகின்ற வழியில் திருவோத்தூர் என்னும் தலம் இருக்கிறது. இத்தலத்தின் தலவிருட்சமாய் இருப்பது கற்பகதரு வான பனையாகும். சம்பந்தப் பெருமானால் பாடப்பட்ட தலமாகும். இத்தலத்தைவிட – திருப்பனந்தாள்,  திருப்பனையூர், திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு),  புறவர் பனங்காட்டூர் ஆகியவையும் பனையினைத் தலவிருட் சமாய் கொண்டிருக்கின்றன என்று அறியக்கிடக்கிறது.

    திருவோத்தூர் தலத்தை வலம் வருகின்ற வேளை வடக்குப் பகுதியில் தலமாரமாகிய பனை ஓங்கி வளர்ந்திருப்பதைக் காணலாம். இந்தத் திருவோத்தூரில் இருந்த சிவன் அடியார் ஒருவர் – சிவனுக்காகவே பனைகளை வளர்த்து வந்தார். அப்பனைகளோ ஆண்பனைகளாகி காய்க்காது இருந்தன. இந்த அன்பர் காலம் சமணம் சைவத்தை எதிர்த்து நின்ற காலப் பகுதியாகும். சைவரான சிவனடியாரைச்  “உமது ஆண் பனை யினை உங்கள் சிவன் பெண் பனை ஆக்குவாரா” என்று சமணர்கள் கேலி செய்தபடியே இருந்தனர். அடியாரும் கவலையில் மூழ்கியே இருந்தார். சம்பந்தப் பெருமான் இத்தலத்துக்கு வருகைதந்த வேளை அடியார் தமது மனக்கவலையினை வெளியிடுகிறார். சம்பந்தப் பெருமான் இறைவனைப் பிரார்த்தித்து

    “பூத்தேர்ந்து ஆயன கொண்டு நின் பொன்னடி” என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி – நிறைவில்

    “குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்
    அரும்பு கொன்றை அடிகளை
    பெரும்பு கலியுள் ஞானசம்பந் தன்சொல்
    விரும்பு வார்வினை வீடே”

    என்று பாடியவுடன் “நெருங்கும் ஏற்றப் பனையெல்லாம் நிறைந்த குலைகளாய்க் குரும்பை அரும்பு பெண்ணை ஆகின” என்று சேக்கிழார் வாக்கால் அறியக் கிடக்கின்றது. “அரும்பு பெண்ணை ஆகி இடக் கண்டோர் எல்லாம் அதிசயித்தார்” என்னும் சேக்கிழார் வார்த்தை மனமிருத்த வேண்டியதே!

    மணிவாசகப் பெருமானும் பனையின் அழகினை “கண்ணார்ந்த பெண்ணை” என்று திருக்கோவையாரில் தொட்டுக் காட்டுகிறார்.

    “தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
    பனையளவு காட்டும் படித்தால் – மனையழகு
    வள்ளைக் குறங்கும் வளநாட  வள்ளுவனார்
    வெள்ளைக் குறட்பா”

    என்னும் பாடலில் திருக்குறள் பனைபற்றிக் கூறும் செய்தி காட்டப்படுகிறது.

    “பெண்ணை தாலம் புல் தாளி போந்தை என்று எண்ணிய நாமம் பனையென இசைப்பர்” என்று திவா கரம் காட்டுவதும் நோக்கத்தக்கது.

    சைவநாயன்மார் பனைபற்றிப் பாடியதுபோல் வைணவ அடியார்களான ஆழ்வார்களும் பாடியிருக்கும் செய்தியையும் காணக்கூடியதாய் இருக்கிறது.

    திருமழிசைப் பிரான் திருச்சந்த விருத்தமாய்

    “கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
    புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்
    திரண்ட தோள் இரணியன் சினங்கொளாகம் ஒன்றையும் இரண்டு கூறு
    செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே”

    இப்பாடல் அமைகிறது. இப்பாடலில் பனைபற்றிய செய்தியும் இடம் பெறுவது நோக்கத்தக்கதே. ‘நீர்க் காக்கைகள் உலாவும் பொய்கையில் கரிய பனம் பழங்கள் விழவும், வாளைமீன்கள் அவற்றை நீர்க்காக்கையாகக் கருதி விழுங்கப் பாயும் – திருக்குறுங்கடியில் எழுந்த பெரியோனே! ஆளரியாய்த் தோன்றி இர ணியனை இரு கூறாக்கியதும் நீ தானே! என்று இப்பாடல் கருத்து அமைகிறது. இங்கு பனையின் பழம் காட்டப்படுவது பனையினை உட்புகுத்தி நிற்கிறது அல்லவா!

    நம்மாழ்வார்  திருமொழியில்  பனைமரம் பற்றி “பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ”  என்கின்றார். திருமங்கை ஆழ்வார் – “ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலைவேல் எங்கள் இராவணனார் ஓடிப் போனார்” என்று குறிப்பிடுகிறார்.

    பனைபற்றி பல செய்திகளை இலக்கிய வழியில் பயணப்பட்டால் காணக் கூடியதாக இருக்கிறது. தோடு என்றால் அது பெண்கள் காதில் அணிவதுதான். சிவனின் ஒரு காதில் தோடு இருக்கிறது. இதனைச் சம்பந்தர் “தோடு டைய செவியன்” என்று காட்டுகிறார். சிவனின் இடது செவியில் தோடு இருக்கிறது. வெண்தோடானது பனம்பூவின் புறவிதழ் போலிருக்கிறதாம் –

    “பெருமடற் பெண்ணைப் பிணர்ந்தோட்டுப் பைங்குரும்பை” என்று கலித் தொகையும், “இனமடற் பெண்ணை ஈர்ந்தோடு திருத்தி” என்று பெருங்கதையும், “இரும்பனை வெண்தோடு மலைந்தோன்” என்று புறநாநாறும்,

    “தோடே  மடலே ஓலை என்றா
    ஏடே  இதழே பாளை என்றா
    ஈர்க்கே குலை என நேர்தான பிறவும்” என்று தொல்காப்பியம் தொட்டுக் காட்டுவதும் கற்பகதருவாம் பனை பற்றியதே என்பதை கருத்துவது அவசியம் அல்லவா!

    தங்கத்தாத்தா என்று வியந்து போற்றப்படும் எங்கள் நவாலியூர் தந்த புலவர் பெருமான் கற்பகதருவாம் பனைபற்றி “தாலவிலாசம்” என்று காவியமே பாடிப் பெருமகிழ்வு அடைகின்றார். அவரின் உள்ளத்திலிருந்து எழுந்த எண்ணங்களை அவரின் தாலவிலாசத்தின் வாயிலாக கண்டு களிப்படையலாம். கற்பகதருவாம் பனையினை எங்கள் தங்கத்தாத்த அணுவணுவாய் இரசிக்கிறார்! அணுவணுவாய் ஆராய்கிறார்! பனைபற்றி சிறந்த நூலொன்றினை அவரின் அகத்தினின்று எழுந்த அரிய வார்த்தைகளால் கவிதை வடிவில் தந்திருக்கிறார்! அவரின் அந்த வண்ணத்தமிழ் கவிதைகளைப் படிப்பவர்கள் கற்பக தருவாம் பனையினை நிச்சயம் கருத்திருத்தாமல் விடவே மாட்டார்கள். அந்த அளவுக்கு எங்கள் தங்கத்தாத்தாவின் மந்திரச் சொற்கள் கற்பகதருவை காட்டி நிற்கிறது எனலாம்.

    “மன்னுயிர் ஞாலத்து வான்பனையின் மேன்மையெலாம்
    பன்னுகலி வெண்பாவாற் பாடவே – முன்னவர்வரு
    போதனே விக்கினங்கள் போக்குகின்ற பூதகண
    நாதனே முன்னே நட”

    என்று தாலவிலாசத்துக்குக் காப்புச் சொல்லி – பின்னர் நூல் நிலை பற்றி சொல்லி ……

    “ஓங்கார மூலத் தொருவனிரு தாடொழுது
    பாங்கார் தமிழ்க்கலிவெண்பா பாட்டினால் – வீங்குபுகத்
    தால விலாசந் தனையுரைப்பேன் தெண்டிரைசூழ்
    ஞால முணர்க நயந்து”

    நிறைவாக கற்பகதருவை வியந்து வாழ்த்தி மகிழுகின்றார்.

    “பொன்னின் மழைவாழி பூமி நலம்வாழி
    மன்னுயிர்கள் வாழி யறம்வாழி – எந்நாளும்
    கற்பகம்போ லீயுங் கடவுட் பனைவாழி
    நற்றமிழும் வாழி நயந்து”

    தங்கத்தாத்தா நினைவுக்கு வருகிறார். கூடவே சின்னத்தம்பிப் புலவரும் வந்து நிற்கிறார். அவரும் கற்பகதருவை விட்டுவிடவில்லை…….

    “கோள்நிலைகள் மாறி மாரிமழை வாரி வறண்டாலும்
    கொடிய மிடி வந்து மிகவே வருந்தினாலும்
    தான் நிழலளிதுயர் கலாநிலையமே போல்
    தந்து பல வேறு பொருள் தாங்கு பனையே”

    என்று சின்னத்தம்பிப் புலவரும் கற்பகதருவை வியந்து நிற்கிறார் என்பதற்கு இக்கவியே சான்று.

    பனை நூறு என்னும் நூலும் கற்பகதருவினை எப்படிச் சொல்லுகிறது பாருங்கள்…….

    “நீண்ட வுடலும் நேரிய கோடும் கார்நிறமும்
    பூண்டா யன்ன பூவுலகத்தில் நின்னைப்போல்
    யாண்டு மிலாதால் வைரமுடைநற் றாருவெனில்
    தூண்டும் மன்பே தூயதலாது தோற்றம்மே”

    “நீற்றைப்பூசும் வானம் பரவும் நிறையும்நூல்
    ஏற்றுக் கொள்ளும் யாண்டு முவக்கு மெவர்க்கும்
    சாற்றும் ஞானந் தந்திடு மன்பிற் றலைநிற்கும்
    போற்றந் தணர்கள் போலப் பனையும் பொலியுமே”

    “வேண்டிய யாவு மீயும் வியன்றரு மியல்புகண்டே
    ஆண்டுபல் லாயி ரம்முன் நறிவுடை யெமது முன்னோர்
    காண்டரு தாலந் தன்னைக் கற்பகத்தாரு வென்றார்
    நீண்டநா ளோம்பி இஃதை நீவிரின் புற்று வாழ்வீர்”

    பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராய் இருந்தவர் கணபதிப்பிள்ளை அவர்கள். சுவாமி விபுலானந்தரின் நேரடி மாணவராக விளங்கியவர். மொழி ஆராய்ச்சி வல்லுனர். அதே வேளை நாட்டர் வழக்கியலிலும் ஆற்றல் மிக்கவர். இவரின் கவிகள் படிக்கப் படிக்கச் சுவையினை நல்கும். அவரின் எண்ணத்தில் கற்பகதரு வருகிறது பார்ப்போமா ……..

    “அழகுறு வன்னம் அமைவுறப் போட்டுத்
    தொழிலமை வனிதையர் திறமையாலிழைத்த
    பெட்டியாய் குட்டான் பெயர் பெறு கதிர் பாய்
    அடுக்குப் பெட்டியும் சுடும்
    பிட்டவி நீத்துப் பெட்டியும் சுண்டும்
    பனையின் குருத்தை பதனமாய் வார்த்து
    பன்னிறம் தீட்டிய பன்னோலை கொண்டு
    கைவல் இளையர் கருதி இளைத்த
    ஆனைப் பெட்டியும் அழகிய தேரும்
    கொட்டைப் பெட்டியும் கிலுக்குப் பெட்டியும்
    எனவாங்கு,
    இன்னணம் நெருங்கிடு பன்னங் கடைகளும்”

    என்று சொல்லியதோடு அமையாமல், கற்பகதருவில் மனத்தை இருத்தி

    “நரைதோல் இயனம் அரையில் கட்டி
    அதன் கீழ் முட்டி அசைதர விட்டு
    மார்போடணையத் தோளது தூக்கி
    உரனுரு தளை நார் காலினை மாட்டிக்
    கால் மடித்து உன்னிக் கரு நெடும் பனைமிசை
    பாளை தட்டி பார்த்துச் சீவி
    ஏர் தரும் ஊசலோடு இயனத்தசையும்
    இன் கள் முட்டியொடு இறங்கும் போதில்
    அடி மரத்திருந்து நுனி வரை நோக்கி
    நாநீர் ஊற உதடு வருடி
    பெரு மகிழ்வோடு பிளாவை ஏந்தி
    அருவிலை கொடுத்து நறவினை மாந்திக்
    களிப்புறு மாக்கள் விளிப்புறு கும்பலும்”

    என்று பேராசிரியர் மனமெழுந்த காட்சி இப்படிக் கவியாய் விரிகிறது.

    நாட்டார் பாடல்களிலும் பனைபற்றி வருவருகிறது. அப்பாடல்தான் என்ன சொல்லுகிறது எப்படிப் பனையைக் காட்டுகிறது என்று பார்ப்போமா….

    “பட்டாங் கத்தி பள பளென
    பாலையன் கோட்டை நறறென
    பனையும் கருத்திருக்கும்
    பனை வட்டும் சிவந்திருக்கும் – அதிலே
    இறக்கிய பதநீரைப் பருகினால்
    தலை கிறு கிறுக்கும்”

    “தேடுதற்கும் வகையறியேன் – உன்
    திருக்கோயில் தவறணையைத் தோடிக்கொண்டு
    ஓடுவரும் பக்தர்க்கு குறைவே இல்லை
    உன்னுடைய கிருபையினைச் சொல்லி சொல்லிப்
    பாடுதற்கு வகையறியேன் – பாளை வேந்தா
    பாவிகளை மகிழ்விக்கும் பான தேவா
    நீடுலகில் என் போன்ற ஏழைகட்கு
    நீயின்றி யாருதவி சொல்லுமையா”

    “சண்டையிலே பிறப்பாய் போற்றி
    சல்லியைப் பறிப்பாய் போற்றி
    மண்டையை உடைப்பாய் போற்றி
    மகளிரை அடிப்பாய் போற்றி
    பாளையில் பிறப்பாய் போற்றி
    பனைதரும் கொடையே போற்றி”

    என்று நாட்டுப்பாடலிலும் பனைபற்றி வருவதும் – பனையின் நிலையினை பாமரர் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை காட்டி நிற்கிறதல்லவா!

    “நாராய் நாராய் செங்கால் நாராய்
    பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவளக் கூர்வாய் செங்கால் நாராய்”

    இந்தப்பாடல் யாரால் எழுதப்பட்டது என்பது தெரியாத நிலையில் கவிதையில் வருகின்ற (முழுக்கவிதையைப் பார்க்க) சத்திமுத்த வாவி என்பதை எண்ணி அப்புலவரை சத்திமுத்துப் புலவர் என்று அடையாளப்படுத்தி விட்டார்கள். அப்பெயரே நிலையாகியும்விட்டது, “பழம்படு பனையின் கிழங்கு பிழந்தன்ன பவளக் கூர்வாய்” என்னும் வரிகள் புலவரின் அழகான படிமமாய் இங்கே அமைகிறது. எங்களின் கற்பகதருவாம் பனையினை – பெயர் தெரியா ஒரு புலவரும் தன்னுடைய மனத்தில் இருத்தி நல்லதொரு கவிதையாய் வடித்திருக்கிறார். சிறிய வயதில் படித்துப் பாடமாக்கிய இக்கவிதையும் கற்பகதருவாம் பனையினைக் காட்டியே நிற்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியது அல்லா!

    (வளரும்)

    Share
  • கார்த்திகை தீபம் ஏற்றுவோம் வாரீர்!

    கார்த்திகை தீபம் ஏற்றுவோம் வாரீர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மாலயன் மருளது போக்கிய காலம்
    மலரடி திருமுடி உணர்த்திய காலம்
    தேவரும் தெரிசனம் கண்டநற் காலம்
    திருவிளக்கு ஏற்றிடும் கார்த்திகைக் காலம்

    கந்தனை வந்தனை செய்திடு காலம்
    கனற்பொறி குழந்தையாய் ஆகிய காலம்
    நொந்திடு அடியவர் பவவினை போக்கிட
    செந்திரு விளக்கதை ஏற்றிடும் காலம்

    ஒளிர்வளர் விளக்காய் ஒளிர்ந்திடும் காலம்
    தெளிவதைக் கருத்தில் அமர்த்திடும் காலம்
    பொலிவுடன் பேரொளி தோன்றிய காலம்
    போற்றியே தீபத்தை ஏற்றுவோம் வாரீர்

    ஆண்டவன் நினைப்பை அகற்றிய ஆணவம்
    தாண்டவம் தகர்ந்த தகைவுடைக் காலம்
    நீண்டிடும் மாயையை நிர்மலம் ஆக்கிய
    நிலைபெறு சக்தியை உணர்த்திய காலம்

    நெறிபிறழ் நினைப்பினை நீக்கிய காலம்
    அறிவெனும் உண்மையை அமர்த்திய காலம்
    பொறிபுலன் சிவனருள் புகுத்திய காலம்
    போற்றிடும் கார்த்திகை பொன்னிகர் காலம்

    ஆலயம் எங்கணும் தீபங்கள் ஒளிரும்
    அனைவரும் தீபத்தை நாடியே நிற்பார்
    வீதிகள் வீடுகள் ஒளியினை நல்கும்
    விளக்குகள் ஏற்றிடும் சிறப்புடைக் காலம்

    ஒளியிலே இறையினை இருத்திடும் காலம்
    உவப்புடன் தீபத்தை ஏற்றிடும் காலம்
    மனவிருள் போக்கிட வந்திட்ட காலம்
    மண்ணிலே மலர்ந்திட்ட மாண்புடைக் காலம்

    அண்ணா மலையினை அகத்தில் அமர்த்திட
    உண்ணா முலையாள் ஒளிர்ந்திட்ட காலம்
    அருட் பெரும்ஜோதி தனிப்பெருங் கருணை
    அளவிலா ஆற்றலை அருளிய காலம்

    மரத்தில் மறைந்த மாமத யானையை
    பரத்தில் மறைந்த பார்முதல் பூதத்தை
    இருத்தி மனத்தில் ஏற்றுவார் தீபத்தை
    கொளுத்துவார் சொக்கப் பனையைக் கோவிலில்

    மாதொரு பாகனை மனமதில் இருத்தி
    மங்கலம் பொங்கிட, தீபத்தை யேற்றி
    தீமைகள் அகல கார்த்திகை விளக்கைச்
    சிறப்புடன் ஏற்றிடச் சேருவோம் வாரீர்

    விஞ்ஞான உண்மை விளக்கினில் இருக்கு
    மெஞ்ஞானம் அதனுள் வியாபித்தே இருக்கு
    ஒளியினை அறிவாய்க் கொண்டிடும் வேளை
    ஒளியினை உணர்வாய் ஆக்கிடும் சமயம்

    இருளது சூழின் எதுவுமே தெரியா
    இருளது இருப்பு மருளவே வைக்கும்
    ஒளியது வந்தால் தெளிவது பிறக்கும்
    தெளிவது சிவமாய் ஒளியென ஒளிரும்

    அகமதில் இருளை அகற்றிட வேண்டும்
    அருளெனும் ஒளியை இருத்திட வேண்டும்
    அருளெனும் ஒளியை அளிப்பது இறையே
    இறையினை எண்ணி ஏற்றுவோம் விளக்கினை

    கார்த்திகை தீபம் ஏற்றுவோம் வாரீர்
    கந்தனைச் சிந்தையில் இருத்துவோம் நாளும்
    ஊற்றிடும் எண்ணெயாய் ஆகுவோம் நாங்கள்
    உணர்விலே பக்தியை இருத்தியே வாழ்வோம்

    Share
  • மனதார வேண்டுகிறோம் துணையே நீகந்தா

    மனதார வேண்டுகிறோம் துணையே நீகந்தா

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    போரொழிய வேண்டும் பேரமைதி வேண்டும்
    தீராத பேயாசை தீவிழுங்க வேண்டும்
    யாவருமே உறவென்னும் நல்லுணர்வு மலர
    நல்லுரான் கந்தா நீயருள வேண்டும்

    நல்லாட்சி வேண்டும் நற்றலைமை வேண்டும்
    பொல்லாத சிந்தனைகள் பொசுங்கவே வேண்டும்
    நல்வழியில் நாளும் எல்லாரும் நடக்க
    நல்லை நகர்கந்தா நீயருள வேண்டும்

    அறமோங்க வேண்டும் மறமழிய வேண்டும்
    புறங்கூறும் எண்ணம் புதையுண்ண வேண்டும்
    நலமான எண்ணம் உளமமர வேண்டும்
    நல்லையின் கந்தா வழிகாட்டு நாளும்

    அருளுடை ஆறுமுகம் அமைந்த பெருமாளே
    அபயகரம் பன்னிரண்டு கொண்ட பெருமாளே
    வள்ளி தேவயானையுடன் மயிலேறி வந்து
    மாவருளைத் தந்தெம்மைக் காத்திடுவாய் கந்தா

    கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் நீகந்தா
    கருணையே உருவான கடவுளே கந்தா
    வைதாரை மனமேற்கும் மால்மருகா கந்தா
    மனதார வேண்டுகிறோம் துணையே  நீகந்தா

    ஆறுபடை வீடமர்ந்த அரனாரின் மைந்தா
    அரக்க மனமகற்றி ஆட்கொள்வாய் ஐயா
    காதலுடன் மனமுருகி வேண்டுகிறோம் கந்தா
    கையணைத்து இவ்வுலகில் காத்துவிடு ஐயா

    Share
  • திருவருள் சுரந்து காத்திடு முருகா!

    திருவருள் சுரந்து காத்திடு முருகா!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பெற்ற வரத்தைப் பேணிடா நின்று
    குற்றம் இழைத்தார் கொடிய அசுரர்
    அசுரர் மாற அவதாரம் செய்தாய்
    ஆறு முகவா அடிதொழு கின்றோம்

    மாறாச் சூரர் மாறிட வைத்தாய்
    சேவலாய் மயிலாய் உன்வசம் ஆக்கினாய்
    அருளைக் கொடுத்தாய் ஆணவம் போக்கினாய்
    அரனின் மைந்தா அழகுடைக் குமரா

    வேலை ஏந்தினாய் வெற்றியைக் காட்டினாய்
    மூலப் பொருளாய் ஆகியும் நின்றாய்
    வேதம் விளக்கினாய் விண்ணவர்க்கு உதவினாய்
    பாதம் பணிகிறோம் பார்த்திடு முருகையா

    ஓடி ஓடி உன்னடி தொழுகிறோம்
    பாடிப் பாடிப் பரவசம் அடைகிறோம்
    தேடித் தேடி உன்னிடம் வருகிறோம்
    திருவருள் சுரந்து காத்திடு முருகா

    Share
  • கந்தா கடம்பா காத்திடு எம்மை!

    கந்தா கடம்பா காத்திடு எம்மை!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    உருகிடும் அடியார் உளமுறை வோனே
    மருள் நிலையகல வரமருள் வோனே
    கருணையின் உருவாய்த் திகழ்ந்திடு வோனே
    கந்தா கடம்பா காத்திடு எம்மை

    ஆசா னாகியே அப்பனுக்கு உரைத்தாய்
    அறு படையேகி அமர்ந்தே கொண்டாய்
    அவ்வைப் பாட்டியின் அருந்தமிழ் சுவைத்தாய்
    ஐயா கந்தா அடைக்கலம் நீயே

    மாறா மனத்தை மாற்றிட வல்லாய்
    ஆறா சினத்தை அடக்கியே வைப்பாய்
    பாறாங் கல்லென இருப்பார் தம்மைப்
    பக்குவம் ஆக்குவாய் பரமனின் மைந்தா

    தாகம் தீர்ப்பாய் வேகந் தடுப்பாய்
    மோகம் கலைப்பாய் முறுவல் கொடுப்பாய்
    நாளும் ஆவாய் கோளும் ஆவாய்
    நம்பிடும் அடியார் நற்றுணை நீயே

    Share