கற்பதரு எனும் அற்புதம் – (அங்கம் – 3)

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா

பனையென்பது செல்வமாகும் என்று கருதியே வந்திருக்கிறார்கள்.  பனையினைப் புலவர்கள் பல நிலைகளில் பார்த்திருக்கிறார்கள். பனையின் பயனைப் பாடி இருக்கிறார்கள். பனையினை காதலிலும் கண்டு பாடியும் இருக்கிறார்கள். காதலில் சிக்கித்தவிக்கும் நிலையில் பிரிவுத் துயரினை வெளிப்படுத்தும் பாங்கில் பனையினைக் காட்டுவதும் நோக்கத்தக்கது.

திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப்
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே;
ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற்
பல் பூங் கானல் முள் இலைத் தாழை
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ
வளி பரந்து ஊட்டும் விரிவு இல் நாற்றமொடு
மை இரும் பனைமிசைப் பைதல உயவும்
அன்றிலும் என்புறு நாலும்; அன்றி,
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
யாமம் உய்யாமை நின்றன்று;
காமம் பெரிதே; களைஞரே இலரே!

என்ன….. பாடலைப் பார்த்ததும் தலை சுற்றுகிறதா? பயப்படாதீர்கள் இதுதான் எங்களின் சங்கத்தமிழ். சங்கத் தமிழனும் பனையினைக் கொன்டாடுகிறான். தலைவனைப் பிரிந்த தலைவியானவள் கலங்குவதாய் இப்பாடல் அமைகிறது. “ஆற்றில் அலை மோதிக் கொண்டிருக்கிறது. ஆற்று நீர் பாயும் கானலில் முள்ளிருக்கும். தாழம்பூ குழியிலைக் கூடையில் போட்ட சோறு போல் மொட்டு விருந்து பூத்திருக்கும் காட்சி தென்படுகிறது. காற்று அடிக்கிறது. தாழம்பூவின் மணம்  அடிக்கும் காற்றையும் அடக்கி மணம் வீசி நிற்கிறது.

அங்கு இருக்கும் பனைமரத்தில் அன்றில் பறவை ஒன்று தன்னுடைய துணையைத் தேடு அழைக்கிறது. அந்த அன்றில் பறவையின் குரல் எனது எலும்பையே உருக்கும்படி செய்து நிற்கிறது. என் காம உணர்வு பெருகிக் கொண்டே  போகிறது. மனமாற்றத் துக்காக யாழை மீட்டி என் விரல்கள் ஓய்ந்தனவே அன்றி நள்ளிரவுப் பொழுது போகவில்லை ” என்று விரக தாபத்தைத் தலைவி வெளிப்படுத்துவதாய் இப்பாடல் அமைகிறது. இங்கே அவளின் விரக தாபத்துக்குக் காரணமான அன்றில் பறவையின் இருப்பிடம் “எங்கள் பனை” என்பதுதான் முக்கிய கருத்தாகும்.

பரதவர்கள் வீடுகளைப் பனையோலையால் வேய்ந்தார்கள். அவர்களின் வேலியையும் பனை ஓலை கொண்டு அமைத் தார்கள் என்று நற்றிணை தெரிவிக்கிறது

கழி சூழ் படப்பைக் காண்டவாயில்
ஒலி காவோலை முள்மிடை வேலி

பனை ஓலையுடன் முட்களையும் சேர்த்து வேலி அமைத்த செய்தியை நற்றிணையின் இப்பாடல் காட்டி நிற்கிறது. இவ்வாறு அமைக்கப்பட்ட  வேலியை அடுத்து பனைமரங்கள் உயர்ந்து வளர்ந்து இருந்தன. மணல் மேடும் அங்கு இருந்தது என்று நற்றிணை காட்டி நிற்கிறது.

தலைவியின் வருத்தத்தைக் காட்டுவதற்கு குறுந்தொகை வருகிறது. இங்கும்  பனையினத் தொட்டே பாடல் அமைகிறது.

பனைத்தலைக்
கருக்குடை நெடுமடல் குருத்தொடு
கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பைக்
கணங்கொள் சிமைய வணங்குங் கானல்
ஆழிதலை வீசிய வயிர்ச்சேற் றருவிக்
கூழைபெய் எக்கர் குழீஇய  பதுக்கை
புலர்பதங் கொள்ளா வளவை
அலரெழுந் தன்றிவ் வழுங்க லூரே

பனையின் உச்சியிலுள்ள கருக்கினையுடைய நீண்ட மட்டையானது குருத்தோடு மறையும்படி, கடுமையான காற்றினால் குவிக்கப்பட்ட, உயர்ந்த வெண்மையான மணற்குவியல்கள், சிகரங்களாக நிறைந்திருக்கின்றன. கடற்கரையில் இத்தகைய சூழலில் தனித்து இருக்கின்ற தலைவியின் விரகதாபம் இங்கே காட்டப்படுகிறது. விரகதாபத்தை அறிவது முக்கியமல்ல. அந்த நிலையில் எங்கள் பனை காட்டப்படுவதுதான் கருத்திருத்த வேண்டியதாகும்.

பாரியின்  பிள்ளைகளான அங்கவை, சங்கவை, திருமணத்துக்கு மூவேந்தர்களும் வந்திருந்தார்கள். வந்திருந்த மூவேந்தர்களும் தங்களுக்குப் பனம் பழம் வேண்டும் என்று கேட்டார்கள். அங்கு ஒளவையார் இருந்தார். பாரியின் பிள்ளைகளின் திருமணத்துக்கு அவரே காரணமாய் இருந்ததால் வந்த விருந்தினர் விருப்பத்தை எப்படியும் நிறைவேற்ற எண்ணங்கொண்டார். அப்பொழுது பனம் பழக் காலம் இல்லாமல் இருந்தது. ஒளவையார் பந்தலை விட்டு வெளியே  வந்தார். வெட்டப்பட்ட பனையின் துண்டங்களைக் கண்டார்.

“திங்கட் குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்
மங்கைக் கறுகிட வந்து நின்றார் மணப்பந்தலிலே
சங்கொக்க வெண்குருத்து ஈன்று பச்சோலை சல சலத்து
நுங்குக்கண் முற்றி அடிக்கண் கறுத்து நுனி சிவந்து
பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே”

கண்டதும் இவாறு பாடினார். பாடியவுடன், பனந்துண்டம் வளர்ந்து பனையாகிப் பனம்பழத்தைத் தந்ததாம் என்று இப்பாடல் எமக்குச் சொல்லி நிற்கிறது. ஒளவையும் எங்கள் பனையினைப் பாடலால் காட்டுகிறார் என்பதும் நோக்கத்தக்கதேயாகும்.

“கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றையராவார் பகர்வர் பனையின் மேல்
வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும்
பச்சோலைக்கு இல்லை ஒலி”

பனையினை மையமாக வைத்து அறிவுரை பகர்வதையும் புலவர்கள் விட்டு விடாரில்லை என்பதற்கு இப்பாடல் சான்றாகி நிற்கிறது.

பனையினைப் பாடிப் பல புலவர்கள் புளக்காங்கிதம் அடைந்தார்கள் என்று தான் எண்ணலாம் அல்லவா! பாடப்படும் அளவுக்கு எங்கள் கற்பகதருவும் இருந்திருக்கிறது என்பதுதான் முக்கிய செய்தியாகும்.

தாலவிலாசம் என்னும் நூல் மிகவும் பழமையானது. பனைமரம் பரம் பற்றிய நூல் என்னும் நிலையில் 18 ஆம் நூற்றாண்டில் வந்த இந்த நூல்தான் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. இந்த நூலினை அடியொற்றியே எங்கள் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவர் பின்னர் “தாலவிலாசத்தை” படைத்தார். பனைபற்றி நாட்டார் பாடல்கள் பலவும் இருக்கின்றன. வடலி என்று சொல்லுவது யாழ்மண்ணுக்கு உரியதேயாகும். அந்தச் சொல் வரும் வகையில் பனை பற்றிய ஒரு நாட்டுப்பாடலைப் பார்ப்போம் வாருங்கள்.

வழிக்கரையே நிற்கு மந்த
வடலி மரப் பெண் பனையே
வாறவர்க்கும் போறவர்க்கும்
என் செய்வாய் பெண்பனையே
இருக்கத் தடுக்காவேன்
இட்டிருக்கப் பாயாவேன்
கொழிக்க நல்ல தங்கையர்க்கு
கொழி சுளகு நானாவேன்
புடைக்க நல் தங்கையர்க்கு
புடை சுளகு நானாவேன்
படிக்க நல் தம்பியர்க்கு
பட்டோலை நானாவேன்
எழுத நல் தம்பியர்க்கு
எழுத்தோலை நானாவேன்
தூரத்து வன்னிமைக்கு
தூதோலை நானாவேன்
வாசலிலே வன்னிமைக்கு
வழக்கோலை நானாவேன்

என்று அந்த நாட்டுப்பாடல் எங்கள் கற்பகதருவை கண்டுகளிக்கிறது.  கற்பகதருவாம் பனையினைப் பாடல்களில் பார்த்தோம். பழமொழிகளும் பனையினை விட்டு வைக்கவில்லை. அவற்றையும் பார்ப்பதும் நல்ல தல்லவா!

“பனை நிழலும் நிழலோ பகைவர் உறவும் உறவோ”

“பனைமரத்துக்குக் கீழே நின்று பாலைக் குடித்தாலும் கள் என்பார்”

“பட்டணத்து நரியை பனங்காட்டு நரி ஏய்த்துவிடும்”

“பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்ததாம்”

“காவோலை விழக் குருத்தோலை சிரித்ததாம்”

(வளரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.