Author: மீ. விசுவநாதன்

  • காலம் – 22

    மீ. விசுவநாதன்

    vallamai-300x150

    அத்தா னழித்தஅத் தானைத் தலைவனே
    அத்தா னகத்தி(ல்) அமர்ந்தானே – அத்தானின்
    சித்தாலே சித்தமெலாம் சித்தன் நினைவாகி
    சித்தாகி னானே சிவன். (221) 08.08.2015

    (“தான்” எனும் அகந்தையை அழித்த குருநாதனே
    எங்கு அந்தத் “தான்” அகந்தை இருந்ததோ அங்குவந்தமர்ந்தார்.
    அந்த குருவின் திறத்தாலே சித்தம் என்ற அடிமனது சிவனையே
    நினைத்திருந்து சிவமானது)

    நீண்ட மலைத்தொடரும், நீலவானத் தாரகையும்,
    தீண்டுகிற பாம்பினது தீவிடமும் ஆண்டவனின்
    அற்புதந்தான் ! ஆனாலும் அம்மாவைத் தந்ததற்குக்
    கற்பூரம் காட்டுகிறேன் காண். (222) 09.08.2015

    விருப்பமே இல்லாத வீட்டில் நுழைந்து
    வெறுப்பைச் சுமக்கவும் வேண்டாம் – நெருங்கி
    விளையாடி ஓர்நாள் விலகியோட வேண்டாம் ;
    முளையிலே கண்டு முடி. (223) 10.08.2015

    மேகம்போல் துன்பம் மிகுந்து வரும்போது
    வேகமாய் தெய்வம் விரைந்துவந் தேந்துமே !
    சோதனை வந்தாலும் சுத்த மனிதமனம்
    வேதனைக் காணும் விளக்கு.. (224) 11.08.2015

    (வேதனை – வேதமான இறைவனை)

    இசையில் கரைந்தே இதயம் தொலைத்தே(ன்);
    அசைவை மறந்தே அமைதித் திசையி(ல்)
    அழகை ரசித்தேன் ; அடடா அடடா
    விழைவே(ன்) அதுபோல் வினை.. (225) 12.08.2015

    அவரைக் கொடிபோ(ல்) அழகாய்ப் படர
    அவரை மணந்தா(ள்); அதனால் சுகமா(ய்)
    இருந்தாள் ; கலந்த இருவர் மனத்தி(ல்)
    இருந்தாள் அருளா(ய்) இறை. (226) 13.08.2015

    பாணதீர்த்தப் பேரருவி பார்த்தாலே போதுமே
    ஆணவம் தீர்ந்து அகத்திலே பூணுமே
    ஆனந்தம் ; அந்த அருமைக்கே நாம்பிறக்கத்
    தானந்தத் தீர்த்தமே தாய். (227) 14.08.2015

    (இன்று ஆடி அமாவாசை. பாபநாசம் தாமிரபரணி
    பாணதீர்த்தத்தில் நீராடுவதும், நினைப்பதும் புண்ணியம்)

    சுதந்திரம் என்பது சுத்த மனத்தின்
    இதமான எண்ணம்; பிறரின் இதயத்தைக்
    குத்திக் கிளராத கொள்கை உணர்வாலே
    உத்தமமாய் வாழும் உறவு. (228) 15.08.2015

    ஆண்டாளின் பாட்டில் அமுதுண்டு வந்தோர்க்கு
    வேண்டாம லுள்ளே வெளிச்சமு(ம்) ஆண்டவனின்
    நட்பும் அதுவாய் நலமா(ய்) அமையுமே ;
    உட்புறம் பார்த்தே உணர். (229) 16.08.2015

    (இன்று ஆடிப்பூரம். ஆண்டாளின் பிறந்ததினம்)

    சாம்பார் வடைதோசை சாப்பாட்டில் காலத்தை
    நாம்வாழ்ந்து தேகத்தை நன்றாக வீம்புடன்
    ஓங்கி வளர்க்கின்றோம் ; உத்தமனாம் ஈசனைத்
    தாங்காத நெஞ்சோ தவிடு. (230) 17.08.2015

    Share
  • ஆனை முகனைக் கேட்டேன்

    மீ.விசுவநாதன்

    Aneguddi-Ganesh
    ஆனை முகனைக் கேட்டேன் -மன
    ஆழம் காட்டு என்று !
    தானை விட்டு வந்தால் – அது
    தானே தெரியும் என்றான் ! (1)

    நாளில் ஒன்று பேசும் – என்
    நாவைக் கட்டு என்றேன் !
    தாளின் பற்று வைத்தால் – அது
    தனியே போகும் என்றான் ! (2)

    உன்னை எனக்குக் காட்டு-என்
    உயிரே நீதான் என்றேன் !
    என்னை உலகாய்ப் பார்க்க -குரு
    இருபைத் தேடு என்றான் ! (3)

    நீயே குருதா னென்று – மனம்
    நெகிழ்ந்து வீழ்ந்து கேட்டேன் !
    வாயை மூடிக் கொண்டு – என்
    வாக்கில் அமர்ந்து கொண்டான் ! (4)
    (17.09.2015)

    Share
  • பாரதி என்று மிருப்பான்!

    -மீ.விசுவநாதன்

    ஒருசொல்லில் எழவைப்பான்
    ஒருசொல்லில் அழவைப்பான் – அவன்   subramanya_bharathi
    ஒருகவி ராஜ சிங்கம்!            

    தமிழ்நாட்டில் பிறந்தோர்கள்
    தமிழ்ப்பேச்சில் சிறந்தோர்கள் – எனும்
    தரம்வர வேண்டு மென்பான்!    

    தன்நாட்டு மக்களுக்காய்த்
    தன்மான வாழ்வினுக்காய் – வரும்
    தவகவி வாக்குச் சொன்னான்!

    ஆவேசம் வந்தாலும்
    ஆனந்தம் என்றாலும் – நல்
    அழகிய கவிதை தந்தான்!

    உண்மைக்கே உடன்நின்றான்
    பெண்மைக்கோ உயிரானான் – ஒரு
    பெரும்பழ மைக்கவன் பாலம்!    

    நியாயத்தின் தராசினிலே
    நிமிர்த்தேதன் கருத்ததனை – சுய
    நினைவுடன் நிறுத்த மனிதன்!    

    பாரதத்தாய்த் திருமகளின்
    பரம்பரையை உருவாக்க – ஒளி
    பாரதி என்று மிருப்பான்!        

    (11.09.2015 மகாகவி பாரதியார் நினைவுதினம்)

     

    Share
  • அவன், அது , ஆத்மா (29)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 29

    “N. வெங்கடசுப்ரமணியன் என்ற N. V .S”

    amvஅவன் உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்தில் அவனுக்கு ஒன்பதாவது, பத்தாவது, பதினொன்றாவது வகுப்புகளுக்கு ஆங்கில ஆசிரியராக இருந்தவர் N. வெங்கடசுப்ரமணியன் என்ற N. V .S அவர்கள். மிகவும் கண்டிப்பானவர். நன்றாக மனதில் பதியும் படியாகப் பாடம் நடத்துவார். ஆங்கில இலக்கணத்தை அவர் கற்றுத்தரும் முறையே அருமையாக இருக்கும். ஒரு பாடம் நடத்தினால் அதன் உட்பொருள் அனைவருக்கும் புரிந்தால்தான் அடுத்த பாடமே எடுப்பார். ஒவ்வொரு மாணவனாகக் கேள்வி கேட்டுத் தெளிய வைப்பார். அவரது வகுப்பில் அவனையும், சுப்பாமணி என்ற பாலசுப்ரமணியனையும் அவருக்கு நேராகக் கீழேதான் உட்காரச் சொல்லுவார். அவர் பாடம் நடத்தும் பொழுது அவர்களிருவரும் பேசாமல், அவர்களது முழு கவனமும் பாடத்தில் இருக்க வேண்டும் என்றுதான் இந்த ஏற்பாடு. அவனுக்கு விளையாட்டு புத்தி அதிகம் என்றாலும் N. V .S. சார் வகுப்பில் அவன் கவனம் செலுத்துவான். அவரது உச்சரிக்கும் முறையைக் கூர்ந்து கவனித்து அதன்படி பேச அவன் முயர்ச்சி செய்வான். எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும், அது எப்படி இருந்தாலும் அன்போடு சொல்லித்தருவார். சரியாக வரும்வரைச் சொல்லித் திருத்துவார். தேர்வில் மார்க்குக் குறைவாக எடுத்திருந்தால் ,” என்னடா மார்க்கு வாங்கறாய் ஒரே “டென்மார்கா”ன்னா இருக்கு” என்று சத்தம் போடுவார். அப்படி ஒரு சராசரி மாணவனான அவனே S. S. L. C. தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் அறுபது சதவிகிதம் மதிப்பெண் வாங்கினான் என்றால் அவர் கற்றுத்தரும் முறைக்குத்தான் வெற்றி.

    அவர் திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து ஒய்வு பெற்ற பின்பு, அவன் சொந்த ஊருக்குச் செல்லும் பொழுதெல்லாம் முதலியப்பபுரம் தெருவில் வசித்து வந்த அவரைச் சென்று பார்த்து வணங்கி வருவான். அவனுக்குத் திருமணத்தன்று அவனையும், மனைவி சீதாலக்ஷ்மியையும் வாழ்த்தும் பொழுது, அவனுக்கு மனைவியிடம்,” இவனுக்கும் நான் ஆசிரியர், ஒன்னோடு அம்மா “சங்கரிக்கும்” நான்தான் ஆசிரியராக இருந்தேன்…” என்று பெருமிதமாகச் சொல்லி ஆசீர்வதித்தார். அவரது சதாபிஷேகத்திற்கு ஒரு வாரம் முன்பு அவனும், அவனுக்கு மனைவியும் அவரது இல்லத்திற்க்குச் சென்று அவரை வணங்கினார்கள். அப்பொழுது அவன் எழுதிய “மனித நேயம்” என்ற கவிதைத் தொகுதியை அவருக்குக் கொடுத்தான். ரொம்பவும் மகிழ்ச்சியோடு அதை வாங்கிக் கொண்டு ,” என்னோடு மாணவன் ஒரு கவிஞன் பாத்தயா ” என்று அவரது வீட்டில் இருந்த உறவினர்களிடம் கூறிப் பெருமைப் பட்டுக் கொண்டார். அவரது மகள் முத்துலட்சுமி அவனுக்கு வகுப்புத் தோழி. மிகச் சிறந்த படிப்பாளி. வகுப்பில் அவள்தான் அனேகமாக முதல் “ராங்கில்” இருப்பாள் இல்லையேல் அவனக்கு நண்பன் வீரமணி முதலாவதாக வருவான். சமீபத்தில்தான் அவரது மகள் முத்துலக்ஷ்மியும் அம்பாசமுத்திரத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் கணக்கு ஆசிரியராக இருந்து ஒய்வு பெற்றிருக்கிறார் என்று சொன்னார்கள்.

    “J. பாண்டியராஜ் ஐசக்”

    am1அவனுக்கு பாண்டியராஜ் சார் அதிகம் வகுப்பு எடுக்காவிட்டாலும், அவரது அன்பும், கண்டிப்பும் அவனை கவர்ந்திருந்தது. மனித நேயம் மிக்க நல்லாசிரியர் அவர். சில ரேரங்களில் அவனுக்கு “பூகோள” வகுப்பு எடுத்திருக்கிறார். பாடத்தை நடத்தும் பொழுதே, மாணவர்களுக்கு ஒழுக்க நெறியையும் அவர் போதிக்கத் தவறுவதில்லை. அவனுக்கு அப்பாவிடம் பாண்டியராஜ் சாருக்கு நல்ல நட்புண்டு. அவனுக்கு சகோதரி பாலாவுக்கும் அவர் வகுப்பு எடுத்திருக்கிறார். மாணவ, மாணவியர்களைத் தன் குழந்தைகளைப் போல நடத்துவார். பெற்றோர்களின் கண்டிப்பும், குருவின் தெளிவும் அவரைப் போன்ற நல்லாசிரியர்களிடம் அவன் நேரில் கண்டிருக்கிறான். அவரும் தலைமை ஆசிரியராக இருந்துதான் ஒய்வு பெற்றார். சர்மாஜி சாலையில் உள்ள “மேரிஸ்டோர்”ரில் மாலை நேரத்தில் அவரைக் காண முடியும். அவனைப் பார்க்கும் போதெல்லாம்,” அம்பி…நல்ல பையனா இரு…ஒழுக்கம்தான் முக்கியம் அம்பி” என்று கனிவோடு கூறுவார்.

    நெல்லை மாவட்டத்தில் ஒருமுறை சாதிக்கலவரம் வந்து, அனாவசியமாகப் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியும், அப்பாவி மனிதர்களை அடித்தும் ரகளை செய்தனர். அந்த நேரம் அவன் ஊருக்கு வந்திருந்தான். சென்னைக்குத் திரும்பிச்செல்ல வேண்டிய “பஸ்” செல்லவில்லை. அதனால் அன்று அவனால் சென்னைக்குத் திரும்ப முடியவில்லை. அந்தக் கலவர நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு “சாதீ” என்றொரு சிறுகதை எழுதினான். அந்தக் கதை “தாமரை” மாத இதழில் வெளியானது. அந்தக் கதையில் ஒரு ஆசிரியர், கலவரக்காரர்களை தடுத்து அமைதிப் படுத்த முயற்சிப்பார். அந்த ஆசிரியரின் பெயரை “பாண்டியராஜ்” என்று வைத்திருந்தேன் . அது ஒரு நன்றிக் கடன்.

    “ஓவியர் அப்துல் மஜீத் “

    மேல்நிலைப் பள்ளியில் அவனுக்கு ஓவிய ஆசிரியராக “அப்துல் மஜீத்” அவர்கள் இருந்தார்கள். அழகாகப் படங்கள் வரைவார். அதுபோலவே எயளிமையாகக் கற்றும் தருவார். கையில் ஒரு சாக்பீஸ் வைத்தபடியேதான் வருவார். வந்தவுடனே கரும்பலகையில் “சடக்கென” சில கோடுகளை வரைந்து, வண்ணம் தீட்டுவார். ஒரு அழகிய ஓவியம் ரெடி. “ஏலே..இந்தப் படத்த போடுங்க பாக்கலாம்” என்று ஒவ்வொரு மாணவனின் பக்கமும் வந்து அவர்கள் வரையும் முறையைத் தெரிந்து கொண்டு, திருத்த வேண்டிய இடங்களில் திருத்திக் கொடுப்பார். மாணவர்கள் நல்ல ஓவியங்களைப் பார்த்துப் பார்த்துப் பழக வேண்டும் என்று சொல்லுவார். அவன் பார்க்க அவர் வரைந்த முதல் ஓவியம் “தாமரை மலர்”. ஒன்பதாவது வகுப்பிற்குப் பாடம் எடுக்க வந்த முதல் நாளில் கரும்பலகையில் அவர் வரைந்த அந்த தாமரைப்பூவின் ஒவ்வொரு இதழ்களும் அவனுக்கு இன்றும் மஞ்சளும், இளஞ்சிவப்புகாக நினைவில் நிற்கிறது.

    அவரது தந்தையார் “ஷேக் பீர் முகமது” அவர்கள் ஒரு தேசபக்தர். தியாகி கோமதி சங்கர தீட்சிதரின் சீடர் . திருவள்ளுவர் ஸ்டோர் என்ற பெயரில் ஜவுளிக்கடை வைத்திருந்தார். அவனுக்கு அப்பவும் மஜீத் சாரும் நல்ல நண்பர்கள். இங்கே ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியைப் பதிவு செய்ய விரும்புகிறேன். அவனுக்கு அப்பாவின் “சதாபிஷேகம்” 20.04.2008 அன்று சென்னையில் வைத்து நடைபெற்றது. அன்று காலையில் பூஜை ஆரம்பிக்கும் முன்பாக அவனுக்கு அப்பாவின் நெருங்கிய நண்பர் எம்.ஆர்.ஆதிவராகன் மாமா எட்டு மணிக்கெல்லாம் தொலைபேசியில் அப்பாவுக்கு வாழ்த்துக் கூறினார். அவர் பேசி முடித்த ஐந்து நிமிடங்களில் “பாண்டியராஜ் சார்” தொடர்புகொண்டு ,” அம்பி..அப்பாட்ட என்னோட வாழ்த்தச் சொல்லணும்” என்று கூறி அவனுக்கு அப்பாவுடன் பேசினார். அவர் வைத்த சில நொடிகளில் ,”விஸ்வநாதா…ஒங்கப்பா ..மீனாட்சிசுந்தரம் பக்கத்துல இருக்காரா…” என்று கேட்டு அவரும் அப்பாவுக்கு வாழ்த்துச் சொன்னார். ஒய்வு பெற்று பலவருடங்கள் ஆனாலும் அந்த நட்பு இன்றும் பலமாகவே இருக்கிறது. எப்பொழுது கல்லிடைகுறிச்சிக்குச் சென்றாலும் அவன் அவனது ஆசிரியர்களைப் பற்றி விசாரிப்பான். நேரிலும் சந்தித்துப் பேசி மகிழ்வான். அதுவும் வாழ்வில் ஒரு பேறு தானே.

    10.09.2015

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • இரவில் கற்ற பாடம்

    -மீ.விசுவநாதன்

    இரவில் ஆந்தைகள்
    காக்கையின் கூட்டைக் கலைத்தன…
    குஞ்சுகளைக் கொன்று தின்றன…

    விடிந்தது…

    காக்கைகள் ஆந்தையை
    கொத்திக்கொதிக் கொன்றன…

    இரவைப் பார்த்துப்
    பாடம் கற்றவன்
    அஸ்வத்தாமன்…!

    தூங்கிக்கொண்டிருந்த
    பாண்டவக் குழந்தைகளைக் கொன்றான்…
    தர்மத்திற்காக
    அதில் ஒன்று தப்பியது…!

    பகலில்…
    அவனைக் கொல்லப்
    பார்த்தன் துடித்தான்…
    விழிப்போடிருந்த கண்ணன்
    ”அஸ்வத்தாமா நீ சிரஞ்சீவியாக
    என்றுமே இருப்பாய்
    துன்பத்தோடு” என்று சபித்தான்!

    இன்றும் தெருக்களில்
    பலர் அஸ்வத்தாமனாக
    அலைகின்றனர் துன்பத்தில்…
    தப்பிய தர்மவானின் கைகள்தான்
    பகைமறந்து அவர்களை அணைக்கிறது!

     

    Share
  • சிவபிரதோஷம்

    -மீ.விசுவநாதன்

    மானேந்தி யப்பரே, மயிலேறும்
    –மகனுடைச் சீடரே, பெருந்தீத்                            lord-shiva
    தானேந்தும் கையரே, ஒருகாலைத்
    –தவநிலை யோகியே, உள்ளத்
    தேனேந்தும் பூவரே, மறுகாலைத்
    –திறனுடன் மாற்றிய கலையே!
    ஊனேந்து(ம்) ஆசையை விழியாலே
    –பொசுக்கிட வந்தருள் சிவனே!

    (அறுசீர் விருத்தம் வாய்பாடு: காய், விளம், காய், விளம், விளம், மா)

     

    Share
  • காலம் – 21

    மீ. விசுவநாதன்

     

    vallamai-300x150

    நல்லோர்கள் வாழ்க்கை நமக்கொரு பாடத்தைச்
    சொல்லாமல் கண்முன்னே சூக்குமமாய்ச் சொல்லுவதை
    நல்லபடி நாம்கொண்டால் நன்றாகும் காலந்தான் !
    வில்லங்க மில்லா விதி. (211) 29.07.2015

    உணவில் விருப்பம் ; உயிரில் நெருக்கம் ;
    பண”வில்” லெழுத பலநாள் சுணக்கம் !
    அடடேய் மனிதா அரைநொடி அன்பில்
    கிடடேய் அதுவே சிறப்பு. (212) 30.07.2015

    பிறந்து சிறந்தோர் பிரிந்து மிருப்பர் !
    இரந்து பிழைப்போர் இருந்தும் இறப்பர் !
    துறந்து நடப்போர் துயரைத் துடைப்பர் !
    பரந்த மனத்தோர் பசு. (213) 31.07.2015

    பிறரை மனத்தால் பிரியமுடன் வாழ்த்தக்
    குறையே வராது ; குணமே நிறையும் !
    அதனால் சிரித்தும் அணைத்து மிருப்போ(ம்)
    மதனால் மலரும் மனம். (214) 01.08.2015

    படியளக்கும் தெய்வம் பதறாமல் என்னுள்
    அடியளக்க வைத்தான் ; அதனால் முடிவெடுத்தேன்
    எப்போதும் நன்மையே எல்லோர்க்கும் செய்வதாக !
    முப்போதும் சாந்தி முகம். (215) 02.08.2015

    கூடிப் பெருக்கு குலத்தை ; தினமும்நீ
    றாடிப் பெருக்குன் அழகையே -பாடினால்
    நாடி நரம்பெலாம் ஞானக் குளியலிலே
    ஆடிப் பெருக்குமே அன்பு. (216) 03.08.2015

    நன்றாய் உழைத்து நடுவீட்டில் எல்லோரும்
    ஒன்றாய் இருந்தே உணவுதனை அன்றாடம்
    சாப்பிடும் ஆனந்தம் சம்சாரப் பேரின்பம் !
    கூப்பிடு தூரம் குஷி. (217) 04.08.2015

    உயிர்வளர் நெல்லிக் கனியைத் தமிழின்
    பயிர்வளர் “அவ்வை”யைப் பார்த்து வயிர்நிறை
    கொள்ளென்றே தந்தான் கொடையில் உயர்ந்தவன் !
    கொள்ளத் தகுந்த குணம். (218) 05.08.2015

    புதிது புதிதாய்ப் புலர்கின்ற நாட்கள்
    முதிய உருவில் முடிய, இளைய
    நிலவும் மலரும் ; நினைக்க நினைக்க
    மலரும் நினைவே மணம். (219) 06.08.2015

    செடிகொடிக்கு நீரிடுதல், சித்தப் பிரமை
    பிடித்தோர்க்கும், யாருமிலாப் பேதை படிப்பிற்கும்
    ஓடிப்போய் அன்புடனே ஒர்கைகொடுப் போருக்கு
    நாடி வருமே நலம். (220) 07.08.2015

    Share
  • சிவபிரதோஷம்

     

     
    மீ.விசுவநாதன்

    images (1)

    மானேந்தி யப்பரே, மயிலேறும்
    மகனுடைச் சீடரே, பெருந்தீத்
    தானேந்தும் கையரே, ஒருகாலைத்
    தவநிலை யோகியே, உள்ளத்
    தேனேந்தும் பூவரே, மறுகாலைத்
    திறனுடன் மாற்றிய கலையே !
    ஊனேந்து(ம்) ஆசையை விழியாலே
    பொசுக்கிட வந்தருள் சிவனே !

    (அறுசீர் விருத்தம் வாய்பாடு:
    காய், விளம், காய், விளம், விளம், மா)
    (பிரதோஷ தினம் 10.09.2015)

    Share
  • நல்ல மனுஷா!

    -மீ.விசுவநாதன்

    எவ்வளவு நாளாச்சு
    ஒன்னப்பாத்து என்றார்
    எதிரில் வந்தவர்
    ஆமாம்…
    …நீங்க சௌக்கியமா?
    ரொம்ப சௌக்கியம்…
    வா நம்மாத்துக்கு…
    ஒரு காப்பி குடிச்சுண்டே பேசலாம்…
    நல்ல மனுஷா நீங்க…!
    ஆத்துக்காரி கொழந்தைகள
    அழைச்சுண்டு அவசியம் வா…
    விலாசம் சொல்லி நடந்தார்…
    போனேன்…
    விலாசம் இருந்தது அவரில்லை!

    அந்த வீட்டு வெளிச்சுவரில்
    ஒரு சுவரொட்டி விளம்பரம்…
    “செய்கூலி இல்லை
    சேதாரம் இல்லை
    வாங்க தங்கம் வாங்க”

    வாங்கிய நகையில்
    தங்கமே இல்லை!

     

    Share
  • ஆசானும் நதியும்!

     -மீ.விசுவநாதன்

    நதியைப் பார்த்தேன்
    கரையில் நின்று
    முதலில் பயமாக இருந்தது…
    குனிந்து தொட்டுத் தலையில்
    தெளித்துக் கொண்டேன்…
    மெல்ல வலது காலை
    நனைத்து
    இடது கால் விரல்களை
    ஈரமாக்கி உடனே
    நீருக்குள் நடந்தேன்…

    மேலே குளிர்
    மெல்லிய சூடு
    கழுத்துக்குக் கீழே…
    மூன்று முங்கு போட்டேன்!

    இன்று…
    மண்டபத்தின் மேலிருந்து
    நீரில் குதித்து நீந்தினேன்
    சுகம் பரம சுகம்…!

    கற்றுத்தரும் குருவிடமும்
    முதல் பயம் பாசமாகிப்
    பக்தியாகி வித்தை முழுதும்
    நன்றாகக் கசடற
    உள்ளே இறங்க வைக்கிறார்!

    அப்புறம்…
    அப்புறம் என்ன அப்புறம்
    எப்போதும் என் நினைவில்
    அவர்
    ஒரு நதியைப் போல!

     

    Share
  • அவன், அது, ஆத்மா (28)

    அவன், அது, ஆத்மா (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    — மீ.விசுவநாதன்.

    குருவாயூர்

    கோகுலாஷ்டமி

     

    அவன் சிறுவயதுமுதலே பார்த்து மகிழ்ந்த உற்சவம் என்றால் அது வடக்கு மாடத்தெருவில் உள்ள பஜனை மடத்தில் நடக்கும் “கோகுலாஷ்டமி”தான். ஆவணி மாதத்தில் கிருஷ்ணபக்ஷ அஷ்டமி அன்று, அதாவது பௌர்ணமி கழிந்த அஷ்டமி திதியில் “கிருஷ்ண ஜயந்தி” உற்சவத்தைக் கொண்டாடுவார்கள். அதாவது ரிக், யஜுர் வேத ஆவணி அவிட்டம் முடிந்து வரும் அஷ்டமியில் “கோகுலாஷ்டமி”யைக் கொண்டாடுவார்கள். அதை கிராமிய வழக்கில் “விட்டம் கழிஞ்ச எட்டாம்நாள்” கிருஷ்ண ஜயந்தி என்பார்கள்.

    கிருஷ்ண ஜயந்தி அன்று அவனது கிராமத்துச் சிறுவர்கள் எல்லாம் காலையில் ஒவ்வொரு வீடாகச் சென்று ஒரு பாட்டுப் பாடி, எண்ணையும், காசும் வாங்கி வருவார்கள். பிறகு  அந்த எண்ணையையும், காசையும்  கோவிலுக்குக் கொண்டுக் கொடுப்பார்கள். சரி அது என்ன பாட்டுத் தெரியுமா? அவனுக்கு நண்பர் ராமன் வாத்தியார் அதை நினைவுப் படுத்தினார்.

                     “ஸ்ரீ ஜயந்தி அம்பாலம்,

                      சிவராத்ரி அம்பாலம்

                       ஸ்ரீ கிருஷ்ண ராயருக்குத்

                       திருவிளக்கு எண்ணை..

                       அவலிடிக்கற பொரிபரக்கற

                       அத்தைய கண்டா புஸ்….

                       அம்மையக்கண்டா டஸ்..

                       ஆனைக்காரன் பொண்டாட்டி

                      ஆட்டுக்குட்டி பெத்தாளாம்”

    என்று அந்தப் பாடல் போகும். அவனும், நண்பர்களும் சேர்ந்து பாடும் மகிழ்ச்சியை அவன் இன்றும் நினைத்து அனுபவிக்க முடிகிறது.

    அவனுக்கு அம்மா ஸ்ரீ கிருஷ்ணனுக்கு வெல்லச் சீடை, முறுக்கு, தட்டை, தேன்குழல், அப்பம், வெண்ணெய், நெய், பால், அவல், நாவல்பழம், கொய்யாப்பழம், இவற்றுடன் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் எல்லாம் தாயாராக வைத்திருப்பாள். மாலை ஐந்து மணிக்கு வாசலில் மாக்கோலம் போட்டு , மாவினால் எட்டு போல எழுதி அதன் மீது ஐந்து விரல்களையும் அழகாகப் போட்டு “குழந்தையின் கால்களை” வாசலில் இருந்து வீட்டிற்குள் வருவது போலப் போடுவாள். அதை அவனுக்கு அக்காவுக்கும் சொல்லித் தந்து போடச் சொல்லுவாள். அவனிடம் மாவிலையைத் தந்து வாசல் முகப்பில் ஒரு கயிற்றில் அழகாகத் தொங்கவிடச் சொல்வாள். ஆறு மணிக்கு விளக்கேற்றி, பூஜையில் உள்ள தவழ்ந்த கிருஷ்ணனுக்குச் சந்தனம், கும்குமமிட்டும்,

    பூச்சூட்டுவாள். ரேழியில் உள்ள பூஜை இடத்தில் உள்ள எல்லாப் படங்களுக்கும் அவனையும், அவனுக்கு அக்காவையும் “பூ” வைக்கச் சொல்லுவாள். ஊதுபத்தி, தசாங்கம் எல்லாம் மணக்க வீடே மங்களகரமாக இருக்கும். பூக்களின் வாசனையும், ஊதுபத்தி, தசாங்க வாசனையும், அதுகூட பக்ஷண வாசனையும் அவனுக்குச் சொல்ல முடியாத ஆனந்தத்தைக் கொடுக்கும். “அம்மா..எப்ப வாத்தியார் வந்து பூஜைய ஆரம்பிப்பார்…” என்று அவன் மாலை ஆறரை மணிக்கே அவனுக்கு அம்மாவை நச்சரிக்கத் துவங்கிவிடுவான்.

    முன்பெல்லாம் கிருஷ்ண ஜயந்தி, விநாயகர் சதுர்த்தி, மகர சங்கராந்தி போன்ற பூஜைகளுக்கெல்லாம் அவரவர்கள் வீட்டிற்கென்றிருக்கும் வாத்தியார்தான் (சாஸ்த்ரிகள்) வந்து பூஜை செய்வார். எல்லோரும் பொறுமையாகவும் இருப்பார்கள். கிராமத்தில் நிறைய சாஸ்த்ரிகளும் இருந்தார்கள். இப்பொழுதெல்லாம் அவரவர்களே புத்தகம் பார்த்துப் பூஜை செய்கிறார்கள்.

    வாத்தியார் வந்து பூஜை செய்த பிறகு பிரசாதங்களை ஒவ்வொரு தட்டிலும் வைத்து அவனுக்கு அக்காவிடமும், அவனிடமும் தந்து அவனுக்கு தாத்தாவுக்கும், அப்பா, சித்தப்பா போன்ற வீட்டுப் பெரியவர்களுக்கும்  தரச்சொல்லுவாள். அதன் பிறகு அவனுக்கு அக்காவுக்கும், அவனுக்கும் தருவாள். ஒவ்வொரு பக்ஷணமும் (பலகாரமும்) அத்தனை சுவையாக இருக்கும். அவை ஒவ்வொன்றிலும் அவனுக்கு அம்மாவின் அன்பு அதில் தெரியும். ஒரு சில முறுக்குகள் நன்றாக வேகாமல் இருந்தாலும் சுவையோடும், வெல்லச் சீடைகள் தாங்களே “ராஜா” என்று சொல்வதுபோலவும் சுவையாக இருக்கும். அவன் வெண்ணையை விரும்பித் தின்பான். அம்மாவும் அவனுக்குத் தருவாள். அவனுக்கு அம்மா வழித் தாத்தாவும், பாட்டியும்  பக்கத்துத் தெருவான “தொந்திவிளாகம் தெருவில்” இருந்தனர். அவர்களுக்கும் “பக்ஷணத்தை”க் கொண்டுக் கொடுத்துவிட்டு வரும்படி அம்மா சொல்லுவாள். அவனும், அவனுக்கு அக்காவும் கொண்டுக் கொடுப்பார்கள். அவர்களுக்கு தாத்தாவும், பாட்டியும் பக்ஷணம் தருவார்கள். அவனுக்குப் பாட்டி செய்யும் பக்ஷணம் ரொம்பவும் பிடிக்கும். பக்கத்தில் உள்ள   நண்பர்கள் வீட்டிற்கும் அம்மா பலகாரம் தந்து கொடுக்கச் சொல்லுவாள்.  அதிலிருந்து வெல்லச் சீடையை எடுத்து அவன் தின்னப் போகும் போது,” கண்ணா…அம்மா இன்னோர்த்தராத்துக்குத் தந்ததை எடுக்காதே..ஒனக்கு வேண்ணும்னா…அம்மா தருவாளே” என்று அவனுக்கு அக்கா பாலா அவனைத் திருத்துவாள். அதே போல மற்ற நண்பர்கள் வீட்டில் இருந்தும் பக்ஷணங்கள் தருவார்கள். கிராமத்தில்தான் அந்தப் பழக்கத்தை அவன் பார்த்திருக்கிறான். பட்டணத்தில் அது தேய்ந்து கட்டெறும்பாகப் போய்விட்டது.

    இரவில் வடக்கு மாடத்தெருவில் இருக்கும் பஜனை மடத்துக்குக் கதை கேட்கச் செல்வான். அநேகமாக அம்பாசமுத்திரம் கிருஷ்ணபாகவதர்தான் கதை சொல்லுவார். அவர் கதை சொல்லும் பாணி அவனுக்குப் பிடித்திருந்தது. நல்ல நல்ல கச்சேரிகளும் நடக்கும். ஒரு முறை தூத்துக்குடியில் இருந்து பேராசிரியர் அ.சீனிவாசராகவன் வந்திருந்தார். அவர் தலைமையில் “இராமாணத்தில் சிறந்த தம்பியர்” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. திலகர் வித்யாலய உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியர் கே.ஏ.நீலகண்டையர் ஒரு அணிக்கும், தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியர் குஞ்சிதபாதம் ஒரு அணிக்கும் தலைவராக இருந்து மிகச் சிறப்பாக வாதங்களை எடுத்து வைத்தனர். பேராசிரியர் அ.சி.ரா.வின் உரை அமிர்தமாக இருந்தது. அவரது உரையை அவன் அப்பொழுதுதான் முதல் முதலில் கேட்கிறான். இரண்டு அணித்தலைவர்களின் கருத்துக்களை மிக அழகாகக் கூறி, கம்பனின் பாடல்களின் அழகை, கருத்துச் செறிவை அவரது பரந்துபட்ட அறிவால் எளிமையாக அவர் விளக்கிய விதத்தில் அவன் சொக்கித்தான் போனான். அதுமுதல் அவன் அவரது தமிழுக்கும், ஆங்கிலப் புலமைக்கும் அடிமையாகிப் போனான். பிற்காலத்தில் அ.சீ.ரா.வின் மாணவர் கவிமாமணி இலந்தை சு.ராமசாமி எழுதிய நூலின் மூலமும், கல்கத்தா பாரதி சங்கத் தலைவராக இருந்த மு. ஸ்ரீநிவாசன் தொகுத்த நூலின் மூலமும் பேராசிரியரின் இலக்கிய ஆளுமையை அவன் கொஞ்சம் அறிந்து கொண்டான். இது போன்ற சிறந்த இலக்கிய வாதிகளை அவனுக்கு அறிமுகம் செய்தது அந்த “கோகுலாஷ்டமி” உற்சவ நிகழ்ச்சிகள்தான்.

    கோகுலாஷ்டமி உற்சவத்தின் கடேசிநாளில் தீபப் பிரதக்ஷிணம் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெறும். முடிவில் ஒருவர் ஸ்ரீ ஆஞ்சநேயர் போன்ற முகமணிந்து, உடையுமணிந்து ஊர்வலம் நடைபெறும். வடைமாலைப் பிரசாதமும் உண்டு. அப்பொழுதெல்லாம் அனேகமாக H.கிருஷ்ணனோ, லெஷ்மண வாத்தியாராது விஸ்வமோதான் “ஸ்ரீ ஆஞ்சநேயர்” வேடம் அணிந்து வருவார்கள். ஒரு முறை அப்படி வரும்பொழுது மேலமாடத் தெருவில் தங்கள் வீட்டு வாசலில் கட்டிலைப் போட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தவர்களை தட்டி எழுப்பி அவர்களது முகத்தை நோக்கி,” ஹோ” என்று ஆஞ்சநேயர் வேடமிட்ட “விஸ்வம்” கத்த, கட்டிலில் இருந்தவர்கள் மிரண்டு போனது முகவும் சுவாரஸ்யமாக இருந்தது. எல்லோருமே அதை ரசிப்பார்கள்.

     

    நவராத்திரி

    kolu

    நவராத்திரி விழாவும் அவனுக்குக் கொண்டாட்டம் தரும் நிகழ்ச்சிதான். காலாண்டுத்தேர்வு முடிந்து பத்து நாட்கள் விடுமுறை இந்த நவராத்திரி விழாவுக்குத்தான் கிடைக்கும். இந்த விடுமுறையில் தேர்வு வினாத்தாள்களில் உள்ள வினாக்களுக்குச் சரியாக விடை எழுதி, பள்ளிக்கூடம் திறந்ததும் அதை ஆசிரியர்களிடம் காண்பிக்கவேண்டும். அதற்காக அவனுக்கு அம்மா அவனைக் காலை வேளையில் எழுதி முடிக்க வைப்பாள். அவனுக்கு சரஸ்வதி பூஜை அன்று குஷிதான். காரணம் அன்று எல்லாப் புத்தகங்களையும் பூஜையில் வைத்து விடுவார்கள். அதனால் அன்று அவன் நன்றாக நண்பர்களுடன் விளையாடுவான்.

    ஒவ்வொரு நாளும் மாலை ஆறு மணிக்குத் துவங்கி எட்டு மணிவரை அவனும், அவனுக்கு நண்பர்களும் அந்த கிராமத்துத் தெருக்களில் (ரோட்டிற்கு மேற்கே) உள்ள வீடுகளுக்குக் கொலுப் பார்க்கச் சென்று விடுவான். கையில் ஒரு “ஐயனார் காப்பிப் பொடி” கவரை எடுத்துக் கொள்வான். ஒவ்வொரு வீட்டிலும் தருகிற சுண்டல்களை எல்லாம் அந்தக் கவரின் போட்டுக் கொண்டு, அவனும் அவனுக்கு நண்பர்களும் அதைக் கலந்து உண்பார்கள். உப்பும், உரப்பும், திதிப்புமாக ஒரு வித்யாசமான சுவையைத் தரும். அவன் அதை அவனுக்கு அக்காவுக்கும் தருவான். அவளும் அவனுக்குத் தருவாள். சுண்டல் தாராத வீடுகளில் அவனும், நண்பர்களும் விளக்குகளை அணைத்தும், கத்தியும் கலாட்டா செய்வார்கள். உயிருள்ள தவளையை எடுத்து வந்து அந்த வீட்டிற்குள் விட்டு விட்டு ஓடி விடுவார்கள். அதற்கெல்லாம் அவனுக்கு அம்மா நல்ல “பிரசாதம்” முதுகிலே பதியும்படித் தரவும் செய்வாள்.

    அவனுக்கு ஆசிரியர் ஆர்.சங்கர ஐயர் (ஆர்.எஸ்.சார்) வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் “கொலு” வித்யாசமாக இருக்கும். மகான்களின் உருவ பொம்மைகளை அவரே அழகாகக் கைபடச் செய்து வைத்திருப்பார். அந்தக் கொலுவை பார்க்கப் போகும் குழந்தைகளுக்கு அவர் அந்த மகான்களின் கதைகளைச் சொல்லுவார். சுண்டலும் தருவார். அவன் அவரது வீட்டில் ரசித்து இரண்டு மூன்று முறை “கொலு” பார்த்திருக்கிறான்.

    அவனுக்கு நண்பன் ரகுவின் வீட்டுக் கொலு மிகவும் பெரியதாக இருக்கும். தனியாகப்  பூங்கா வைப்பார்கள். அதற்கு அவனும், நண்பர்கள் ரகு, சங்கர், கபாலி, பிரபு, நீலகண்டன், H.கிருஷ்ணன், குட்டிச் சங்கர், சுரேஷ் போன்றவர்களும் வயல் காட்டிற்குச் சென்று “வரப்புகளில் உள்ள புற்களை” மண்ணோடு வெட்டிக் கொண்டு வருவார்கள். ரயில்வே நிலையம், பூங்கா, கோவில், தெருக்கள் என்று அந்த இடத்தில் வைப்பார்கள். வீட்டுப் பெரியவர்கள் அந்த குழந்தைகளுக்கு மிகவும் உற்சாகம் தரும் வகையில் உதவுவார்கள். நன்னி சங்கரராமையர், வெங்கட்ராமையர், அப்புத் தாத்தா, Glad கிருஷ்ணையர் போன்றவர்களின் வீட்டுக் “கொலு” மிகவும் பெரிதாகவும், அழகாகவும் இருக்கும்.

    அவனது வீட்டிலும் அம்மா கொலு வைப்பாள். கொஞ்சம் பொம்மைகள்தான் உண்டு. அந்த பொம்மைகளை அவளுக்கு அப்பாவும், அம்மாவும் அவனுக்கு அம்மாவின் கல்யாணமான சமயத்தில் வாங்கித் தந்தது என்று பெருமையாகச் சொல்லுவாள். அந்த பொம்மைகளின் முகம் நல்ல திருத்தமாக அழகாக இருக்கும். பிள்ளையார் பொம்மை இன்றும் இருக்கிறது. நிறம் போகாமல் அப்படியே. அதில் அவனுக்கு அம்மாவின் “கை”ப் பரிச்சயம் தெரியும். அதனால் அந்த பிள்ளையார் பொம்மையிடம் ஒரு தனி சிநேகம் இருக்கிறது. நிறைய பொம்மைகளை அவன் சிறுவயதில் உடைத்து விட்டதாகச் சொல்லுவாள். அதில் அவளுக்குக் கோவம் இல்லை. தன் குழந்தை உடைத்த பெருமைதான் தெரியும். விஜயதசமி அன்று பூஜையில் இருந்து புத்தகத்தை எடுத்துக் கொடுத்து அவனுக்கு அம்மா அவனைப் படிக்கச் சொல்லுவாள். அன்று அவன் எல்லாப் பாடங்களையும் படிப்பான்.

    நவராத்திரி படம்

    அவனது தெருவில் குடியிருக்கும் நண்பன் H. கிருஷ்ணன் வீட்டில் நவராத்திரி நாட்களில் லக்ஷார்ச்சனையும், ஸ்ரீசூக்த, ஸ்ரீதுர்க்கா சூக்த ஹோமங்களும், நவமி திதியன்று  ஸ்ரீ சண்டிஹோமமும், தேவி மகாத்மிய பாராயணமும் நடைபெறும். அன்று மதியம் அன்னதானமும் செய்வார்கள். அவனுக்கு அக்காவும், அம்மாவும் அந்த பூஜைகளைப் பார்த்து வருவார்கள். கிருஷ்ணனின் மூத்த சகோதரி “யக்யலக்ஷ்மி” அக்கா நன்றாகப் பாடுவாள். இராமலிங்க பாகவதரின் சிஷ்யை. நவராத்திரி காலத்தில் அவள் பாடும் பாட்டைக் கேட்டு,”யக்யலக்ஷ்மி” அக்கா எப்படிப் பாடறா பாரு” என்று அவனுக்கு அக்காவிடம் அம்மா சொல்லுவாளாம். அவனும் சென்று பார்த்திருக்கிறான்.  நண்பன் H. கிருஷ்ணனின் தகப்பனார் ப்ரும்மஸ்ரீ ஹரிஹர ஞான சாஸ்த்ரிகள் அந்த ஹோமங்களைச் செய்வார். அவரும், அவரது முன்னோர்களும் ஸ்ரீவித்யா உபாசகர்கள்.

    ஹரிஹர ஞானம் சாஸ்த்ரிகள் ஸ்ரீ அபினவவித்யாதீர்த்தரும் சீடரும்

    1964ம் வருடம் நவராத்திரிக்கு சிருங்கேரி ஸ்ரீ சங்கராச்சார்யாள் ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள் கல்லிடைக்குறிச்சிக்கு வந்திருந்தார்கள். அப்பொழுது தினமும் காலையில் பூஜை முடிந்து தீர்த்தப் பிரசாதமும், இரவில் தர்பார் நிகழ்ச்சியும் நடைபெறும். அது சமயம் தேவி மகாத்மிய பாராயணம் செய்வார்கள். அந்த தர்பார் காட்சி இன்றும் அவனுக்கு நினைவிருக்கிறது. ஒன்பது வயதுச் சிறுவனான அவனை அவனுக்கு அப்பாவும், தாத்தாவும் குருவைதரிசனம் செய்யக் கூட்டிப் போவார்கள். சாஸ்வதி பூஜை அன்று நவமி திதி. அன்று சண்டிஹோமம் பூர்ணாஹுதி நடைபெறும். அதற்காக ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள் வீரப்பபுரம் தெருவில் இருந்து குத்துக்கல்தெரு (வடக்கு ரத வீதி) வழியாக இராமச்சந்திரபுரம் தெருவுக்கு நடந்தே வந்தார்கள். வேத கோஷத்துடன் ஜகத்குரு நடந்து வந்ததை அவன் அவனுடைய வீட்டு வாசலில் இருந்தபடி தரிசனம் செய்தான். அப்பொழுது, “ஆச்சார்யாள் சாரதாம்பாள் கோந்தே. அவரை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் பண்ணு” என்று வணங்க வைத்தாள் அவனுக்கு அம்மா. வீட்டு வாசலில் அவன் விழுந்து வணங்கினான். அந்த மகான் மெல்லிய புன்சிரிப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டே நடந்து சென்றார். அந்தப் பார்வையில்தான் அவன் வாழ்க்கையே பாதுகாப்பாக நடந்து செல்கிறது என்று இன்றும் அவன் நம்புகிறான்.

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • என்ஜினியர்

    -மீ.விசுவநாதன்

    முப்பது மாடிக் கட்டிடம்!
    இரண்டாவது ஐந்தாவது மாடிகளிலும்
    வெளிச்சுவர் ஓரமாகவும்
    “கார்பார்க்கிங்” வசதிகள்,
    நீச்சல்குளம், உடற்பயிற்சிக் கூடம்,
    அழகிய பிள்ளையார் கோவில்,
    வரிசையாக நிற்கும்
    பன்னீர்ப்பூ,  குல்மோகர் மரங்கள்,
    “கிளப்ஹவுஸ்” வாசலில் மல்லிச் செடி…
    குழந்தைகள் விளையாட,
    முதியோர் அமர்ந்து பேச இடங்கள்…
    எல்லாமே கொள்ளை அழகு…!

    இன்று பெய்தது ஒரு பெரு மழை!
    மாடிவாசிகளின் வீட்டுச் சுவரெல்லாம்
    தண்ணீர்க் கசிவு…
    நடுக்கூடத்து “காங்க்ரீட்” விரிசலில் ஒழுகல்…
    வீடு கட்டிக் கொடுத்த
    மெத்தப் படித்த “என்ஜினியரை”க் கூப்பிட்டுக்
    காட்டிக் கத்தியதில்
    மௌனமாக நின்று கொண்டிருந்த
    “என்ஜினியர்” கண்ணில் பட்டது
    பன்னீர்ப்பூ மரமும், அதில் தொங்கும்
    “தூக்கணாங் குருவிக்” கூடும்…

    அந்தச் சின்ன அழகான
    “குரங்குத் தொப்பி” போன்ற
    மெத்து மெத்தென்ற கூட்டில்
    மூன்று குஞ்சுகளுடன் அதன்
    அம்மாக் குருவியும், அப்பாக் குருவியும்
    கூட்டில் இருந்தே இன்னும்
    பெய்துகொண்டிருந்த
    அந்தப் பெருமழையைப்
    பார்த்து மகிழ்ச்சியில்
    “க்ரீச்..கிரீச்” என்கிறது…!

     

    Share
  • குழந்தையும் பூவும்!

    -மீ.விசுவநாதன்

    காலையில் சோலையில்
    தள்ளுவண்டிக்குள்
    குழந்தையை வைத்துத்
    தள்ளியபடி நான்…

    மரக்கிளையில்
    குருவி , குயில், புறா,
    காக்கை , மைனா…இன்னும்
    மரத்தடியில்
    இரண்டு இளசுகள்…
    கொஞ்சம் தள்ளி
    நல்ல கிழடுகள்…

    ஓடியும், நடந்தும் வரும்
    நடுவயது ஆணும், பெண்ணும்…
    பேசியும், காதலித்தும்,
    சண்டைக்குரலுடனும்…
    பசுவின் பின்னால்
    காளை…பசு முறைக்கிறது!

    பன்னீர்ப் பூக்களும், சாமந்தியும்,
    செம்பருத்தியும், பலவண்ண
    ரோஜாவும், அரளிகளும்
    குல்லென மலர்ந்து சிரிக்கிறது…

    தள்ளுவண்டிக்குள்
    குழந்தையும் கள்ளமின்றிச்
    சிரிக்கிறது…

    இயற்கையில்
    பூவுக்கும், குழந்தைக்கும்
    மட்டுமே
    கவலையின்றிச்
    சிரிக்க முடிகிறது…!

     

    Share
  • எங்கோ கால்கள் போகிறது!

    –மீ.விசுவநாதன்

    எங்கோ கால்கள் போகிறது – நன்மை
    ஏதோ செய்ய நடக்கிறது!
    எங்கும் யாரும் ஒன்றாக – அன்பில்
    இசைந்து மகிழக் கடக்கிறது!     (எங்கோ கால்கள்)

    ரயிலில் பயணம் செய்கின்றேன் – மனித
    ரசனை அறிய முயல்கின்றேன்!
    வெயிலில் களைத்து நிற்கின்றேன் – ஒரு
    வேம்பு நிழலைக் கற்கின்றேன்!  (எங்கோ கால்கள்)

    பிச்சை எடுப்போன் வீதியிலே – கைப்
    பிள்ளைப் பசியை விற்கின்றான்!
    கொச்சை மொழியில் அவனையுமே – பணக்
    கொழுப்பில் பேசுவோன் இருக்கின்றான்! (எங்கோ கால்கள்)

    ஏட்டுக் கல்வி இளைஞரென – பள்ளி
    ஏலம் விடுவதில் வருந்துகிறேன்!
    நாட்டுச் செல்வம் அவர்களென – அவர்
    நன்றாய் அறிந்தால் திருந்துகிறேன்!  (எங்கோ கால்கள்)

    காவிரி, பொருநை நதிகளெலாம் – மனிதக்
    கழிவால் அழிவதில் அழுகின்றேன்!
    ஊர்வரி போடும் அரசாங்கம் – ஊழல்
    ஊற்றாய்ப் போனதில் கொதிக்கின்றேன்!  (எங்கோ கால்கள்)

    கடவுள், மதத்தின் பெயராலே – மக்கள்
    கவலை கொள்வதில் துடிக்கின்றேன்!
    திடமாய்த் தேசம் முன்னேற – வரும்
    தெளிந்த தலைவனை மதிக்கின்றேன்!  (எங்கோ கால்கள்)

     

    Share
  • ஒரு கல் ஒரு சொல்

    -மீ.விசுவநாதன்

    குளத்தில் ஒரு கல் வீச…
    சிறிய வட்டம், பெரிய வட்டம்,
    மிகப்பெரிய வட்டமாய்
    அலைகள்
    என்காலை வந்து தொட்டன.

    மனத்தில் ஒரு சொல் எறிய…
    சிறிய காயம், பெரிய காயம்,
    மிகப் பெரிய
    காயமாய்க் கவலைகள்
    அன்பை நோகச் சுட்டன.

    ஆனால்
    அந்தக்
    குளமும், அன்பும்
    அப்படியே இன்றும்
    ஒரு
    துளிகூடக்
    குறையாமல் நிறைவாக.

     

    Share