என்ஜினியர்
-மீ.விசுவநாதன்
முப்பது மாடிக் கட்டிடம்!
இரண்டாவது ஐந்தாவது மாடிகளிலும்
வெளிச்சுவர் ஓரமாகவும்
“கார்பார்க்கிங்” வசதிகள்,
நீச்சல்குளம், உடற்பயிற்சிக் கூடம்,
அழகிய பிள்ளையார் கோவில்,
வரிசையாக நிற்கும்
பன்னீர்ப்பூ, குல்மோகர் மரங்கள்,
“கிளப்ஹவுஸ்” வாசலில் மல்லிச் செடி…
குழந்தைகள் விளையாட,
முதியோர் அமர்ந்து பேச இடங்கள்…
எல்லாமே கொள்ளை அழகு…!
இன்று பெய்தது ஒரு பெரு மழை!
மாடிவாசிகளின் வீட்டுச் சுவரெல்லாம்
தண்ணீர்க் கசிவு…
நடுக்கூடத்து “காங்க்ரீட்” விரிசலில் ஒழுகல்…
வீடு கட்டிக் கொடுத்த
மெத்தப் படித்த “என்ஜினியரை”க் கூப்பிட்டுக்
காட்டிக் கத்தியதில்
மௌனமாக நின்று கொண்டிருந்த
“என்ஜினியர்” கண்ணில் பட்டது
பன்னீர்ப்பூ மரமும், அதில் தொங்கும்
“தூக்கணாங் குருவிக்” கூடும்…
அந்தச் சின்ன அழகான
“குரங்குத் தொப்பி” போன்ற
மெத்து மெத்தென்ற கூட்டில்
மூன்று குஞ்சுகளுடன் அதன்
அம்மாக் குருவியும், அப்பாக் குருவியும்
கூட்டில் இருந்தே இன்னும்
பெய்துகொண்டிருந்த
அந்தப் பெருமழையைப்
பார்த்து மகிழ்ச்சியில்
“க்ரீச்..கிரீச்” என்கிறது…!