தன்மானக் காமராசர்!
-பாவலர் கருமலைத்தமிழாழன்
பெருந்தலைவர் காமராசர் நாகர் கோயில்
–பெருந்தொகுதி உறுப்பினராய் நாட்டை ஆளும்
அருமன்றில் இருந்தபோது தில்லி வந்த
–அமெரிக்க அதிபராக இருந்த நிக்சன்
அருந்தலைவர் காமராசர் எளிமை நேர்மை
–அருந்தொண்டு தியாகத்தைக் கேள்வி யுற்றுப்
பெருமகனார் தமைக்கண்டு பேசு தற்கே
–பேரார்வ விருப்பத்தை எடுத்து ரைத்தார் !
உலகத்தின் மிகஉயர்ந்த பதவி தன்னில்
–உள்ளநிக்சன் ஆசையினைத் தமிழ கத்தின்
குலக்கொழுந்தாம் காமராச ரிடத்தே கூறிக்
–குறித்துரைப்பீர் நேரத்தை என்றே கேட்க
நிலமாளும் பிரதமரைத் தேர்ந்தெ டுக்கும்
–நிறைந்தாற்றல் செல்வாக்கைப் பெற்றி ருந்த
நிலத்தமிழன் எனக்குந்தான் ஆசை ஆனால்
–நிறைவேற்ற நேரமில்லை உரைப்பீர் என்றார் !
உடனிருந்த தலைவரெல்லாம் அதிர்ச்சி யாகி
–உறைந்திட்ட காட்சிகண்டே காம ராசர்
நடமாடும் பேரறிஞர் அண்ணா தம்மை
–நல்நிக்சன் சந்திக்க மறுத்தார் அங்கே !
இடம்தேடிச் சென்றவரை மதிக்கா தவரை
–இன்றிங்கே சந்திக்க மறுத்தேன் என்றே
திடமாக உரைத்திட்ட தன்மா னத்தின்
–திருமகன்தான் பெருந்தலைவர் காம ராசர் !