மீ. விசுவநாதன்

vallamai-300x150

அத்தா னழித்தஅத் தானைத் தலைவனே
அத்தா னகத்தி(ல்) அமர்ந்தானே – அத்தானின்
சித்தாலே சித்தமெலாம் சித்தன் நினைவாகி
சித்தாகி னானே சிவன். (221) 08.08.2015

(“தான்” எனும் அகந்தையை அழித்த குருநாதனே
எங்கு அந்தத் “தான்” அகந்தை இருந்ததோ அங்குவந்தமர்ந்தார்.
அந்த குருவின் திறத்தாலே சித்தம் என்ற அடிமனது சிவனையே
நினைத்திருந்து சிவமானது)

நீண்ட மலைத்தொடரும், நீலவானத் தாரகையும்,
தீண்டுகிற பாம்பினது தீவிடமும் ஆண்டவனின்
அற்புதந்தான் ! ஆனாலும் அம்மாவைத் தந்ததற்குக்
கற்பூரம் காட்டுகிறேன் காண். (222) 09.08.2015

விருப்பமே இல்லாத வீட்டில் நுழைந்து
வெறுப்பைச் சுமக்கவும் வேண்டாம் – நெருங்கி
விளையாடி ஓர்நாள் விலகியோட வேண்டாம் ;
முளையிலே கண்டு முடி. (223) 10.08.2015

மேகம்போல் துன்பம் மிகுந்து வரும்போது
வேகமாய் தெய்வம் விரைந்துவந் தேந்துமே !
சோதனை வந்தாலும் சுத்த மனிதமனம்
வேதனைக் காணும் விளக்கு.. (224) 11.08.2015

(வேதனை – வேதமான இறைவனை)

இசையில் கரைந்தே இதயம் தொலைத்தே(ன்);
அசைவை மறந்தே அமைதித் திசையி(ல்)
அழகை ரசித்தேன் ; அடடா அடடா
விழைவே(ன்) அதுபோல் வினை.. (225) 12.08.2015

அவரைக் கொடிபோ(ல்) அழகாய்ப் படர
அவரை மணந்தா(ள்); அதனால் சுகமா(ய்)
இருந்தாள் ; கலந்த இருவர் மனத்தி(ல்)
இருந்தாள் அருளா(ய்) இறை. (226) 13.08.2015

பாணதீர்த்தப் பேரருவி பார்த்தாலே போதுமே
ஆணவம் தீர்ந்து அகத்திலே பூணுமே
ஆனந்தம் ; அந்த அருமைக்கே நாம்பிறக்கத்
தானந்தத் தீர்த்தமே தாய். (227) 14.08.2015

(இன்று ஆடி அமாவாசை. பாபநாசம் தாமிரபரணி
பாணதீர்த்தத்தில் நீராடுவதும், நினைப்பதும் புண்ணியம்)

சுதந்திரம் என்பது சுத்த மனத்தின்
இதமான எண்ணம்; பிறரின் இதயத்தைக்
குத்திக் கிளராத கொள்கை உணர்வாலே
உத்தமமாய் வாழும் உறவு. (228) 15.08.2015

ஆண்டாளின் பாட்டில் அமுதுண்டு வந்தோர்க்கு
வேண்டாம லுள்ளே வெளிச்சமு(ம்) ஆண்டவனின்
நட்பும் அதுவாய் நலமா(ய்) அமையுமே ;
உட்புறம் பார்த்தே உணர். (229) 16.08.2015

(இன்று ஆடிப்பூரம். ஆண்டாளின் பிறந்ததினம்)

சாம்பார் வடைதோசை சாப்பாட்டில் காலத்தை
நாம்வாழ்ந்து தேகத்தை நன்றாக வீம்புடன்
ஓங்கி வளர்க்கின்றோம் ; உத்தமனாம் ஈசனைத்
தாங்காத நெஞ்சோ தவிடு. (230) 17.08.2015

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *