ஆர். எஸ். கலா

வறுமையின் பிடியால்
பெண்கள் எடுக்கும்
திடீர்முடிவு
அயல்நாட்டுப்  பணி!

பலகதை கூறித்
தன் மக்களைப்
பாரப்படுத்துவது
உறவிடம்!

பல ஏக்கங்களையும்
கவலைகளையும்
சுமந்து கலங்கிய
கண்ணுடன் விடை
பெறுகின்றனர்!

அறிமுகம் இல்லா உறவு
அறியாத இடம்
புரியாத மொழி
நடுங்கிய உள்ளத்தோடு
அவர்கள் இல்லம் போய்
சேருகின்றாள்!

தாயான அவள்
ஆயாவாக மாறினாள்
பெற்ற பிள்ளையைவிட்டுப்
பிறர் பிள்ளையைத்
தாங்கினாள்!

உள்ளத்தில் பொங்கிவரும்
வேதனையை விழிநீராலே
அணை கட்டினாள்!

அன்பு காட்ட யாரும் இல்லை
உரிமையும் முழுமையாக
இல்லை,  ஊரார் வீட்டில்
எடுப்பார் கைப்பிள்ளை
ஆனாள்!

தாங்கிய பிள்ளையை
ஆசையாக இறுக்கமாக
அணைக்க முடியவில்லை
கோபத்தில் இரண்டு தட்டு
முதுகில் போட முடியவில்லை
பிள்ளையின் சிவந்த உடல்
பார்த்தால் மறு நொடியே
தனக்கு  மரணம் நிச்சயம்!

பயத்தில் பாதி பணத்துக்காக
மீதி என்று அக்கறை காட்டுகிறாள்
பிள்ளைமேல் தொடருகின்றது
ஆயாப் பணி!

தனி அறையில் என்றும்
கண்ணீர் மழை பொழிகிறாள்
தான் பெற்ற பிள்ளையை
நினைத்து!

தன் பிள்ளை அம்மா
நினைவில் பொம்மையைக்
கட்டி அணைத்துத் தூங்கும்
கதை கேட்டதும் புழுவாகத்
துடிக்கிறாள்!

இறைவன் மட்டும்
அறியும் ரகசியம் இது!

நெஞ்சினிலே குடி
இருக்கும் வறுமை
நினைவு வரவே
அனைத்தையும்
ஒதுக்கிவிட்டு மன
வலியுடன் தொடருவாள்
பணியை!

கடலில் தத்தளிக்கும்
படகாய்  அவள் மனம்
உள்ளத்தில் மகிழ்ச்சி இல்லை
நிறைவான உணவு இல்லை
நிம்மதியான உறக்கம் இல்லை
சதா மனமும் மூளையும் பல
கதைகள் கூறும் தனக்குள்ளே!

உதடு சிரிக்கும் உள்ளம்
உள்ளே அழும் உடலோ
நடிக்கும் புத்தியோ
சிந்தனையில் சிறைப்பட்டுவிட
வாழ்க்கைப் பயணத்தைத்
தொடர்கின்றாள் இரண்டாண்டை
எதிர்பார்த்தவண்ணம் ஆயாவாக!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *