ஜடாமுனியும் சிவப்புக்கத்தியும் – 1

0

— கவிஜி.

அத்தியாயம் 1:

கவுண்டம் பாளையம் சிக்னல் …

புற்றீசல் போல சாய்பாபா கோயிலில் இருந்து வாகனங்கள் மேட்டுப்பாளைய சாலையை கடத்திக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. இதோ… இதோ… இதோ… பச்சை விளக்கு மறைந்து மஞ்சள் விளக்கு விழ, அதை ஓடிக் கொண்டிருக்கும் சிக்னலின் எண்ணை வைத்து முடிவெடுத்து விட்ட ஜடாமுனி கண்டிப்பாக சிக்னலைத் தாண்டி விட முடியாது என்பது உணர்ந்தபடி தன் இரு சக்கர வாகனத்தை சிக்னல் கோட்டுக்கு முன்னாலேயே நிறுத்தினான். தலையில் ஹெல்மெட்டோடு வண்டியில் அமர்ந்திருந்தான். ஜடாமுனியின் கண்களில் சிவப்பு விளக்கின் எண் ஓடிக் கொண்டிருந்தது.

“மஞ்ச மாக்கான். இவுனுங்களும் போக மாட்டாங்க. போறவனையும் விட மாட்டாங்க,” என்று பின்னால் கிட்டத்தட்ட ஜடாமுனியின் பைக்கில் முட்டி விட்ட ஒரு பைக்கில் கிருதாவை மீசையாக்கி அமர்ந்திருந்த கல்லூரி மாணவன் ஒருவன் பேசுவது பைக்கோடு சற்று குலுங்கிய ஜடாமுனிக்கு நன்றாகவே கேட்டது.

சட்டென பைக்கை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தி, வண்டியை விட்டு இறங்கினான். ஹெல்மட்டைக் கழற்றி பைக்கின் சீட்டில் வைத்து விட்டு. ஒரு அடி பின்னால் சென்று… பளார் என்று ஒரு அறை வைத்தான் அந்த கிருதாக் கோமாளியை.

“முட்டாக் கிறுக்கனாடா நீ, மஞ்ச லைட் விழுந்தா எப்டிடா போக முடியும்? போக கூடாதுங்கறக்குதாண்டா மஞ்ச லைட்டு, “என்று கூறியவன் அவனையே உற்றுப் பார்த்து விட்டு மீண்டும் தொடர்ந்தான், “மரியாதை இல்லாம பேசற புண்ணாக்கு மண்டையா, “என்று இன்னொரு அறை விட்டான்.

காற்றில் முன்னால் வந்து விழுந்த கூந்தலை பின்னால் தூக்கி போட்டான் ஜடாமுனி.

“ஏம்பா, இப்போ என்ன ஆச்சுனு அடிக்கற? கை நீட்ற வேலையெல்லாம் தப்பு. ஏதோ அவசரம். எல்லாரும் அப்டி இப்டி தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிட்டே இருக்கணும்,” என்று கூறிய சொட்டைத் தலையன் ஒருவனிடம் சென்றான் ஜடாமுனி.

அருகில் நின்றவர்கள் எல்லாரும் ஜடாமுனியையே பார்த்தார்கள், பேசலாமா வேண்டாமா என்பது போல ஒரு உடல்மொழியுடன்.

தீர்க்கமாகப் பார்த்த ஜடாமுனி பின் பேசத் தொடங்கினான்.

“என்ன அட்ஜஸ்ட்மெண்ட், எனக்கு உன் பைக்க இன்னைக்கு மட்டும் குடேன், பாக்கலாம், ஒரு சின்ன அட்ஜஸ்ட்மெண்ட்தான?” என்றவன் கண்களில் தீப் பார்வை.

சொட்டை கண்கள் சுருக்கி யோசிக்க… சொட்டை மண்டை மேல் ஒரு குட்டை நங்கென்று போட்டபடியே பேசத் தொடங்கினான் ஜடாமுனி.

“கிழட்டுப் புண்ணாக்கு, உன்ன மாதிரி க்ரௌண்டுக்கு அலையற ஆளுங்கனாலதாண்டா இந்த மாதிரி கோமாளிங்க நிறைய பேர் இருக்கானுங்க” என்றபடியே பார்வையை சற்று இடது பக்கவாட்டில் விட்டான்.

இப்போது நின்றிருந்தவர்கள் கண்களில் கொஞ்சம் கலக்கம் அனைவருமே காற்றினில் தன் தலையை இழுத்துக் கொள்ள முயற்சித்தார்கள்.

3, 4, 5, 6, 7 ம்ம்ம்… 10 பேர், தண்டாக் கூடாது என்பதற்காக போட்ட கோட்டை தாண்டி வண்டிகளை நிறுத்தி இருந்தார்கள். சட்டென முன்னால் போய் கோட்டைத் தாண்டி நின்றவர்களை ஒரு சேரப் பார்த்தான். ஏதோ முடிவெடுத்த உடல்மொழியோடு, ஒவ்வொருவனுக்கும் பளார், பளார்னு அறை விட்டான்.

“போடா பின்னால. டேய். மண்வெட்டி தலையா. போடா. என்னடா முறைக்கற? கோட்டைத் தாண்டக் கூடாதுன்னுதாண்டா கோடு போடறாங்க, அதை மதிக்க மாட்டியா? அவரசம் கிவசரம்னு எவனாது பேசுனீங்க,” என்றபடியே முகம் முழுக்க துணியால் சுற்றிக் கொண்டு டூ வீலரில் இருவரை உட்கார வைத்துக் கொண்டு பின்னால் நகர தடுமாறிக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு பத்து முறை தலையில் நங்கு நங்கென்று குட்டினான். குட்டி முடித்த அவளையே பார்த்தான். முகம் முழுக்க சுற்றி இருந்த துணியைத் தாண்டி கண்களில் நீர் ஓடியது. பின்னால் அமர்ந்திருந்த இருவரும் கையை அவரவர் தலைக்கு வைத்து நடுங்கிக்கொண்டிருந்தார்கள். கண்கள் உருண்டு விழுந்து விடும் போல.

“வாட்ஸ் அப், ஃபேஸ் புக், ட்விட்டர்ன்னு அப்டேட் ஆக்கத் தெரியுதுல்ல, பைக்ல மூணு பேர் போக கூடாதுன்னும், ஹெல்மெட் இல்லாம ஓட்டக் கூடாதுன்னும், ரியர் மிர்ரர் இல்லாம வண்டிய எடுக்க கூடாதுன்னும் தெரியாதா? சுண்ணாம்பு… வெண்ணை…போடி பின்னால” என்று விரட்டினான்.

ஜடாமுனி செய்யும் செயல்கள் அங்கு இருந்தவர்களை நடுங்க செய்தது. ஒவ்வொருவரும் அடுத்தவரைப் பார்த்துக் கொண்டே பின்னால் நகர்ந்து நகர்ந்தபடியே இருக், ஒரு வித சலசலப்பும் குழப்பமும் அங்கு படரத் தொடங்கின. முன்னால். சிக்னல் போட்டும் வண்டி நகராததைக் கண்ட பின்னால் நின்ற ஒருவன் “யோவ் மூவ் பண்ணுங்கையா” என்று அங்கு நடக்கும் எதுவும் தெரியாமல் கத்த.

“டே, கத்தறவனே, மூடுடா. என் டுங்குறு, அவுங்க வாராங்க இவுங்க வராங்கன்னு மணிக்கணக்கா வாய பொளந்துகிட்டு ரோட்ல நிக்கும் போது தெரியலையா? மூடிட்டு கொஞ்ச நேரம் நில்லு” என்று கத்தினான் ஜடாமுனி

“யார்டா அது கலாட்டா பண்றது?” என்று பின்னால் வந்து நின்றது ட்ராபிக் போலீஸ். மெல்ல திரும்பினான் ஜடாமுனி.

அதற்குள் ஆளாளுக்கு, “சார், இந்த ஆள் ஓவரா ரவுஸ் விடறான், அடிக்கறான், குட்டறான், என்னன்னு கேளுங்க, முன்னால நின்னுட்டு நகராம வம்பிழுக்கறான்” என்று ஒருவன் கூற. அவனைப் பார்த்து “இன்னைக்கு நீ செத்த” என்று நாக்கை துருத்தி சொல்லியபடியே பார்வையை அவனிடம் இருந்து திருப்பி போலீசைப் பார்த்தான்.

நிற்கும் போலீசைப் பார்த்த ஜடாமுனி, “நீ யார்டா?” என்றான் தலையை கோதியபடி, அவன் கண்களில் சிறு சலனம் கூட இல்லை.

இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பாக்காத போலிஸ், “என்ன! நான் யாரா? அதும் “டா” வேறயா” என்றபடியெ ஓங்கி ஒரு அறை விட கையைத் தூக்க, வயிற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டான் முந்திக் கொண்ட ஜடாமுனி.

“அடிங் … என் தொப்ப மவனே. அவன் வயித்த பாரு. எத்தன மாசம்டா நீ? டேய்… பத்து ரூபா லஞ்சம் வாங்கறவனே, நீ யார்டா? உன் பேர் என்ன? நீ மட்டும் “டா” போடலாம் நான் போடக் கூடாதா? சொல்டா? நீ யாரு?” என்று மாற்றி மாற்றி நாலு அறை விட்டான் ஜடாமு.

அடி வாங்கிய தொப்பை போலிஸ் பயந்து ஒடுங்கி ஒரு ஓரமாய் உட்கார, “இந்த முடி வேற மூஞ்ச மறைக்குது” என்ற முணங்கியபடியே, “மகா ஜனங்களே, எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கறேன். மரியாதையா, பச்சை விளக்கு, மஞ்சள் விளக்கு, சிவப்பு விளக்குன்னு பார்த்து பார்த்து போகணும். மீறி போறத பார்த்தேன்” என்றபடியே தன்னை போட்டுக் கொடுத்த அந்த ஒருவனைப் பார்த்தபடியே “என்ன பண்ணுவேன்னு பாக்கறியா?” என்று சற்று யோசித்தவன், “டே… டுபுக்கு மண்டயா, நீ செத்தனு சொன்னேன்ல இப்போ பாரு…” என்றபடியே உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ‘பட்’ என்று சுட்டான். அவ்ளோதான் காக்கா கூட்டம் போல சிதறியது கூட்டம். என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாத கூட்டம் மிரண்டு கத்திக் கொண்டு சிதறியது.

“என்னடா ஒருத்தன சுட்டதும் எதுத்து நிப்பீங்கன்னு பார்த்தா இப்டி ஓடறீங்க? உங்க புரட்சி எல்லாம் முகப்புத்தகத்துல மட்டும்தானா? முகமே இல்லாத மண்டுகளா நில்லுங்கடா” என்று சுற்றும் முற்றும் பார்த்தவன், ஆங்காங்கே சிதறிய ஓடிக் கொண்டிருந்தவர்களில் ‘லொள்ளு’ பேசிய சிலரைப் பார்த்து பார்த்து சுட்டான். சிக்னலே ஸ்தம்பித்தது கூட்டம் ஒன்றும் விவரம் புரியாமல் அங்கும் இங்கும் அலைமோதியது.

“இதாண்டா உங்ககிட்ட இருக்கற பிரச்சனை. சுயநலவாதி கூட்டங்களா. எவனாது உப்பு போட்டு சாப்டற மனுசனா இருந்தா என்னைய எதுத்து நில்லுங்கடா பாக்கலாம். பயந்தாங்கொல்லி பசங்களா, ஒற்றுமைய கிரிக்கெட்டுல மட்டும், அதும் ஒரே ஒரு நாடு கூட விளையாடற அன்னிக்கு மட்டும் வாய தொறந்துகிட்டு கத்திட்டு கிடக்கற கூட்டம் தான. பொறம்போக்குகளா, நான் செத்தாலும் பரவாயில்ல இனி ஒருத்தன சாக விட மாட்டேன்னு எவனாது சொல்றீங்களா? பொருளாதாரமும் தெரியாது, உலக மயமாக்கலும் புரியாது. மாடு மாதிரி உழைக்க வேண்டியது. வாரக் கடைசியல நல்லா குடிக்க வேண்டியது” என்று கத்திக் கொண்டே ஒரு பெண் பின்னால் ஓடி ஒளிந்தவனை எட்டி பார்த்து குறி வைத்து சுட்டான் ஜடாமுனி.

அப்படியே திரும்பியவன், “டேய் கிருதா, இங்க வா” என்று அந்தக் கல்லூரி மாணவனிடம் செல்ல, அவன், நடுங்கிக் கொண்டே நின்றான். கை மட்டும் செல்லில் ஏதோ டைப் பண்ணிக் கொண்டே இருந்தது.

அவனையும் செல்லையும் மாறி மாறிப் பார்த்த ஜடாமுனி. இந்தியன் கமல் ஸ்டைலில், துப்பாக்கியை தலையில் அடித்த படியே”நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்கடா” என்றபடியே, “சட்டையத் தூக்குடா தறுதலை” என்றான்.

அவன் நடுங்கிக் கொண்டே தூக்கினான் பேண்ட், பாதி டிக்கியில் இதோ விழப்போறேன் என்பது போல நிற்க, ஜட்டி தெரிந்தது.

“கருமம்டா” என்று யோசிக்கும் அளவுக்கு நேரம் எடுத்துக் கொண்டு, பின் “இந்த கம்பெனிக்கு நீ விளம்பர தூதுவனா? சொல்லுடா? இடுப்புல பேண்ட் நிக்காதவனே, சொல்லுடா?” என்று டிக்கியிலேயே சுட்டான் ஜடாமுனி”இப்போ செல்பி எடுத்து போடு, ஆளும்… அவன் மண்டையும். இதுல தாவாங்கட்டை வரை கிருதா வேற” என்று குப்புற விழுந்து வலியில் துடித்துக் கொண்டிருந்த கிருதாவை ஓங்கி ஒரு மிதி வைத்து விட்டு, “எல்லாரும் திருந்திக்கோ… அந்நியன் மாதிரி தனியா கூட்டிட்டு போய் எண்ணையில போட்டு வறுக்கவெல்லாம் மாட்டேன். எண்ணை விலை வெண்ணை விலை விக்குது. சுட்டுட்டு போயிட்டே இருப்பேன்” என்றபடியே பைக்கில் ஏறிப் பறக்கத் தொடங்கினான் ஜடாமுனி.

எத்தனை முறை ஓட்டிப் பார்த்தாலும். சிக்னலில் இருந்த கேமராவில் அவன் உருவம் மட்டும் பதியவே இல்லை.

“சார், இது எதோ அமானுஷ்யம் போல இருக்கு. சார் இன்னோர் விஷயம். சுடப்பட்ட எல்லாருமே அடுத்த 2 மணி நேரத்துல பிழைச்சுகிட்டாங்க. ஆனா குண்டு பட்ட இடத்துல காயம் இருக்கு. எல்லாமே போலியான குண்டுகள். ஆனா வலி உயிர் போகுதாமா. ஒன்னும் புரியலயே சார். யார் என்ன ஒன்னும் தெரிலையே ஒரு க்ளூவும் கிடைக்கல”

போலிஸ் சங்கம் எப்போதும் போல மீசை முறுக்கி பேசிக் கொண்டிருக்க; ஜடாமுனி அவன் அறையில் பப்பரபான்னு தூங்கிக் கொண்டு இருந்தான். ஜடாமுனி போன வரம் வரை ஒரு சாராசரி மனிதன்தான். நடக்கும் தவறுகளைக் கண்டு வெகுண்டு எழுந்து, கவிதை எழுதி, அவனே படித்து, சுவற்றில் முட்டி மோதி, வாழ்க்கையை, தத்துவம் பேசி வீணடித்துக் கொண்டு இருந்தவன்தான்.

அவனுக்கு ஒரு கத்தி கிடைத்தது. அது எங்கிருந்து கிடைத்தது, ஏன் கிடைத்தது என்று இனிதான் நான் யோசிக்க வேண்டும்.

கத்தியைக் கொண்டு ஒரு நாள் முதுகு சொரியும் போது அதிலிருந்து ஒரு வகையான புகை கிளம்பியது. மிரண்டு, என்ன ஏது என்று யோசித்து தடுமாறிக் கொண்டிருக்கும் போதே அந்த புகையில் இருந்து ஒரு குட்டி மனிதன் உருவம் வெளியே வந்தது.

ஜடாமுனி இன்னும் மிரண்டு போனான். கத்தி கூச்சலிட்டு கட்டிலில் ஏறி நின்று அதகளம் பண்ணிக் கொண்டிருக்கும் போது. “ஆலம்பனார், நான் உங்கள் அடிமை என் பெயர் சிவப்பு, நீங்கள் இந்தக் கத்தியை எப்போது தேய்த்தாலும் நான் உங்கள் முன் தோன்றுவேன்,” என்றது அந்த குட்டி மனிதன் உருவம்.

ஜடாமுனி அங்கும் இங்கும் தேடி, பயந்து, கடைசியில் தனக்கு கீழே குட்டியாக நின்ற மனிதனைப் பார்த்து முதலில் நம்ப மறுத்து, மிரட்சியில் வேர்த்து பூத்து, பின் ஒருவழியாக நம்பி, அருகில் சென்று அமர்ந்தான்.

சிவப்பு அவனைப் பார்த்து கண்ணடித்து, “நீங்கள் என்ன சொன்னாலும் செய்வேன்” என்றது.

சற்று அதையே உற்றுப் பார்த்தவன், சற்று தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, இந்த காட்சியை எங்கோ பார்த்தது போல இருக்கிறதே என்று யோசித்த படியே ஒரு முடிவுக்கு வந்தவனாய், “ஓ… அப்டியா எங்க, எனக்கு நூறு ரூபாய், சில் பீர் ஒன்னு, நூறு ரூபாய்க்கே வாங்கிட்டு வா பாக்கலாம்” என்றான்.

அடுத்த கணம் முகத்தை தொங்க போட்டுக் கொண்டு வந்தது சிவப்பு.

“என்ன சிவப்பு?” என்றான்

“அஞ்சு ரூபாய் அதிகம் வாங்கி விட்டார்கள் ஆலம்பனார். மன்னிக்கவும். ஆனால் வாங்கியவன் கையை பிய்த்து எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்” என்றது.

ஜடாமுனி சிரித்துக் கொண்டே, “ஆமா சிவப்பு நீங்க பொதுவா ரெம்ப பெருசாத்தானே இருப்பீங்க?” சந்தேகத்தோடு கேட்டான். அவன் மனக் கண்ணில் பெரிய பூதம் தெரிந்தது.

“ஆலம்பானார், அது எங்க தாத்தா காலம். இது கணிப்பொறி உலகம் அதுதான் நானும் சுருங்கி விட்டேன்” என்று சொல்லி சிரித்தது ஜடாமுனியும் சிரித்தான்.

“சரி சிவப்பு. உன்னையும் இந்த கத்தியையும் வைத்து எனக்கு நிறைய வேலை இருக்கிறது. இந்த பூமியை சரி செய்ய வேண்டும் திட்டம் போடுகிறேன். நீ இப்போது போ” என்றான்.

சிவப்பு, தலையை சொரிந்து கொண்டு நின்றது.

“என்ன சிவப்பு?” என்றான்.

“இல்லை. வேறு ஏதாவது வேண்டுமா ஆலம்பனார்?”

“வேண்டும் என்றால் கூப்டுகிறேன், சிவப்பு.”

“இல்லை… பிசின், பின்ஷிகா, குருஷ்கா என்று நடிகைகள் யாராவது?”

“எதற்கு? நான் ஒன்றும் கட்சி ஆரம்பிக்க போவதில்லையே?”

“ஐயோ… ஆலம்பனார் நீங்கள் சிறு பிள்ளையாகவே இருக்கிறீர்கள்” என்று கண்ணைக் காட்டியது சிவப்பு.

“அடிங்… கொய்யால” என்று ஜடாமுனி கத்த கணத்தில் காணாமல் போனது சிவப்பு.

இனி சிவப்பு தான் எங்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *