அம்மாவின் கரங்கள்!

-ச.துரை

கனத்த போர்வைக்குள்ளே
நடுங்கிக் கொண்டிருக்கிறேன்
இந்தக் கருப்புப் போர்வையின்
மேல்புறம் முழுக்கப் பனிப்பிரதேசம்
உருவாகி இருப்பதை என்னால் உணரமுடிகிறது

போர்வைக்குள்
உலாவும் வெப்பக்காற்றைப்
பிடிக்க இருகால்களுக்கு
இடையே ஒரு கையும்
கழுத்துப் பரப்பில் மற்றொரு
கையுமாய் என் நெற்றியைச்
சுருக்கி நானே என்னைப்
பொருத்தியிருக்கிறேன்!

உளறல்களை எனக்குள்ளே
பரப்பி உறங்கும் இந்தக்
காய்ச்சலுக்கு  இப்போது
அம்மாவின் விரல்கள்
தேவையாய் இருக்கிறது
அம்மாவை  அழைக்கும்
வார்த்தைகளை அவ்வளவு
எளிதே வெளியிட வைப்பதில்லை
இந்தக் காய்ச்சல்கள்!

இந்தக் காய்ச்சல்களுக்குத் தெரியும்
அம்மாவின் கைபட நெற்றி
வைக்கும் ஈரத்துணியும் கழுத்தைத்
தொட்டுக் காய்ச்சலின் அளவைச்
சொல்லும் அம்மாவின்
கணிப்புக்களும் தங்களைப்
பாதி முடக்கிவிடுவது!

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க