Author: ஆர்.எஸ். கலா

  • காத்திருக்கேன்

    -ஆர். எஸ். கலா

    கைபேசியைக் கையாளும் ஆண்மகனே…
    கொஞ்சம் காதல்மொழி பேசு கண்ணா!
    புது உறவாய் வரவுதந்த சின்னவனே
    மறுப்புமொழி போடலாமோ மன்னவனே?

    காதலின் நிறம் காட்டவந்தாய்
    இருண்ட இதயவாசல் திறந்து வைத்தாய்
    இறந்த காதலுக்கு உயிர்கொடுத்தாய்
    இதயம் இடம்மாற தடை போடுகிறாய்

    இமயம் போல் உனை நினைத்தேன்
    இமைபோல் காப்பாய் என்று மதித்தேன்
    உன்னால் உலகத்தை மறந்தேன்
    ஊட்டிக் குளிர்போல் உள்ளம்  மகிழ்ந்தேன்

    அன்பே நீ அருகில் இருந்தால்
    ஆவாரம் பூவாய் நான் மகிழ்வேன்
    சிட்டாய்ச் சிறகு விரிப்பேன்
    வட்டமிட்டு நான் பறப்பேன்

    ஆனால் இன்று…
    சோகத்தில் ஆழ்ந்துவிட்டேன்
    இந்துக்கோயில் எல்லாம் வரம் கேட்டேன்
    வங்கக்கடல் போல் கண்ணீர் அள்ளுகின்றேன்
    இறுதியில் இறப்புக்கும் நாள் குறித்துவிட்டேன்!

     

    Share
  • உழைப்பே உயர்ந்தது!

    -ஆர். எஸ். கலா

    ஏழை என்பதைக் கைவிடு
    ஏழ்மையைக் குறித்து
    அடிமையாவதைத் தவிர்த்திடு
    உழைப்புக்குத்  தகுந்த ஊதியம்
    கொடுப்போருக்குக் கைநாட்டு வைத்திடு

    உறவானாலும் உரிய சம்பளம் பெற்றிடு
    அன்றாடம் வாழ்கையிலே விஷநாகம்
    வந்து முட்டும் தட்டிவிடு
    உன்னைக் கொத்தாமல் தவிர்த்துவிடு

    அதிகாரத்தோரணையில்
    பேசுவதை மறந்துவிடு
    அன்றாட வாழ்வை
    அன்பாகக் கழித்துவிடு

    உள்ளம் குமுறவைக்கும்
    கள்ளச் செயல்களை விட்டுவிடு
    உயர்தர மனிதனாக
    வரம் பெற்றுவிடு

    பரிதாப நிலைகண்டு பதறிவிடு
    பாராமுகமாக இருப்போரை விரட்டிவிடு
    அச்சு வெல்லமானாலும்
    நஞ்சு உண்டு என்று கற்றுவிடு
    அஞ்சா நெஞ்சம் கொண்டவன் என்று
    பெயர் பெற்றுவிடு

    உழைக்கும் கரங்கள் வல்லமை பெற்றவை
    நீயும் உன் கரங்களால் உழைத்துவிடு
    உப்புநீர்க் கண் சிந்துவதை நிறுத்திவிடு
    உப்புநீர் உடலில் சுரக்கும்வரை
    உழைத்துவிடு

    மண்ணுலகில் சிறக்க…பறக்க…இனிக்க
    இன்ப வாழ்வோடு நடைபோடு!

     

     

    Share
  • சரித்திரம்!

    -ஆர். எஸ். கலா

    இன்றைய பெண்கள்
    படைத்து வரும் சரித்திரம்
    அதைப் புகழ்வதா இகழ்வதா
    என்று புரியாமலே
    நகருகின்றது நாட்கள் தினம்!

    அன்றைய பெண்கள் வாழ்க்கை
    கட்டியவனுக்குப் பணிவிடை
    பெற்றபிள்ளையைப் பராமரிப்பு
    வீட்டு வேலை ரோட்டுக்குத்தடை!

    கொசுவம் வைத்த சேலை
    அள்ளி முடிஞ்ச கொண்டை
    உச்சிமேல வைச்ச குங்குமம்
    வட்ட நிலாவாட்டம் நெற்றியில்
    பொட்டு மாற்றம் கண்டு வருகிறது
    இன்று புதிய சரித்திரம்!

    வீட்டுப் பணிக்குத் தடைபோட்டு
    ரோட்டுப் பணியைக் கையில்எடுத்துக்
    கொண்டைக்கு விடை கொடுத்துக்
    கெண்டைக்கால் உடை போட்டு
    வெட்டிப் பேச்சுக்கு இடம் இல்லாது
    கட்டுப் பணம் தேடி நடை போட்டது
    புதிய சரித்திரம்!

    கட்டி அணைக்க மட்டும்
    பெண்கள் கரம் நீளும்
    என்ற காலம் மாறிக்
    கட்டி உதைக்கவும் பெண்களால்
    முடியும் என்று கூறாமல்
    பல படையிலும் இணைந்து
    பெண்கள் சமுதாயம்
    படைத்து வரும் சரித்திரம்!

    பெருவிரல் ஊன்றிக் கால்
    கடுக்கநின்று மண்ணெண்ணெய்
    எடுத்த பெண் பெற்ற பெண்பிள்ளை
    இன்று கால்மேல் கால்போட்டுக்
    குளிர் அறையில் அமர்ந்து கணினியைத்
    தட்டி விடை கூறுவது
    படிப்பால் பெண்கள்
    படைத்த சரித்திரமே!

    ஆணுக்குப் பெண் நிகர்
    என்று கூறும் பெண்கள்
    நன்மையிலும் சரிபாதி
    தீமையிலும் சரிபாதியாய்
    நடப்பதும் இது நாகரிக உச்சத்தில்
    வந்த சரித்திரம்!

    புகழ்ந்து பேசச் சில பெண்கள்
    சரித்திரம் படைக்கிறார்கள்
    இகழ்ந்து பேசச் சில பெண்கள்
    சரித்திரம் படைக்கிறார்கள்
    தலைக்கனம் கொண்டும் நடக்கிறாள்
    தன்னடக்கத்துடனும் நடக்கிறாள்
    வரலாறு காணாத சரித்திரத்தை
    வழிவழியே படைக்கத்
    துடிக்கிறாள்!

    பெண் முன்னேற்றம்
    பொறுக்கமுடியா ஆண்
    குறுக்கு வழியில்
    மடக்கப் பாக்கிறான்
    பெருமைப்படும் ஆண்
    கூடவே துணைநிற்கிறான்
    படைக்கட்டும் பெண்கள் சரித்திரம்
    என்று எடுத்து உரைக்கிறான்!

    பெண்களால் என்ன முடியும்
    என்ற காலம் மாறிப்
    பெண்களால் எல்லாம் முடியும்
    என்றாகி விட்டது
    தடை போடாதீர்கள்
    சாதிக்கத் துடிக்கும் பெண்களை
    வளர விடாதீர்கள் வழிதவறும் பெண்களை
    நாளைய சரித்திரம்  நன்மையாய் இருக்கச்
    செதுக்குங்கள் சிற்பத்தைச்  செம்மையாய்!

     

    Share
  • வாழ்வு தந்த தெய்வங்கள்!

     –ஆர். எஸ். கலா

    இடை பெருக்க
    நடை  குறைய
    உடல் தளர
    வயிறு உப்ப
    பல உணவுக்குத்
    தடை போட்டுக்
    கருவில் எனைச்
    சுமந்தாள் தாய்!

    வாந்தியால்
    வதைக்கப்பட்டு
    மசக்கைக்குள்
    சிக்குண்டு மருந்தை
    விருந்தாக்கி
    மாதங்கள் பல
    என்னை உடலிலே
    தாங்கியவள் தாய்!

    கருவான நான்
    உருவெடுத்து
    உலகத்துக்கு வருகை
    தரும் வேளை அம்மா
    பட்ட வலியை நான்
    உணரவே பல ஆண்டு
    காத்திருக்கவேண்டியதாயிற்று
    அன்று உணர்ந்தேன் தாயின்
    வலியையும் பெருமையையும்
    தியாகத்தையும்!

    என் வருகையால்
    நெகழ்ந்து மெதுவாக
    முத்தமிட்டுத் தொட்டு
    மகிழ்ந்த தந்தை என்
    தேவைகளைப் பார்த்துப்
    பார்த்து பூர்த்தி செய்தார்!

    ஓடாகத் தேய்ந்து கூலி
    வேலை செய்தார்
    தோள் வலிக்கச் சுமப்பார்
    சுகமெனச் சிரிப்பார்
    கை வலிக்க உழைப்பார்
    கை சிவக்க அள்ளிக்
    கொடுத்து என் ஆசைகளை
    நிறைவு  செய்வார்!

    கடல்கடந்து சென்று
    பல ரணங்கள் சுமந்து
    சுகமான வாழ்வு இழந்து
    சுமை என்று எனை
    நினையாது அன்புச்
    செல்லமென நினைத்துச்
    சொத்தாகக் குவித்தார்!

    ஈருடலுக்கும் நான்
    ஓர் உயிரானேன்
    அன்பு விழியானேன்
    என்றும் எங்கள் உயிர்
    மகளே என்று புலம்பும்
    பாசமான பெற்றோருக்கு
    அடங்கிய மகளானேன்!

    தாய் தந்தை காட்டிய
    பாதைக்குத் தடம் மாறாப்
    பிள்ளையானேன்
    பார்ப்போர் போற்ற
    கேட்போர் வியக்க
    நானும் நல்ல
    நிலையிலானேன்!

    முதியோர் இல்லம்
    தேடமாட்டேன்
    ’சீ’ என்று விரட்ட
    மாட்டேன்
    சுமை என்று
    புலம்பமாட்டேன்
    சுகமாக  நானும்
    சுமப்பேன் தடி கொடுத்துப்
    பிடி கொடுத்து உறவு என்று!

    என்  பேசும்  தெய்வங்கள் இவர்கள்
    என்று போற்றிப் பராமரிப்பேன்
    பெற்றவர் உள்ளத்தை அன்பால்
    வெள்ளமாக்க நான் உழைப்பேன்
    இது சாத்தியமோ நான் அறியேன்…
    சத்தியமாகக் கைவிடேன்!

     

    Share
  • வெளிநாட்டுப் பணி

    ஆர். எஸ். கலா

    வறுமையின் பிடியால்
    பெண்கள் எடுக்கும்
    திடீர்முடிவு
    அயல்நாட்டுப்  பணி!

    பலகதை கூறித்
    தன் மக்களைப்
    பாரப்படுத்துவது
    உறவிடம்!

    பல ஏக்கங்களையும்
    கவலைகளையும்
    சுமந்து கலங்கிய
    கண்ணுடன் விடை
    பெறுகின்றனர்!

    அறிமுகம் இல்லா உறவு
    அறியாத இடம்
    புரியாத மொழி
    நடுங்கிய உள்ளத்தோடு
    அவர்கள் இல்லம் போய்
    சேருகின்றாள்!

    தாயான அவள்
    ஆயாவாக மாறினாள்
    பெற்ற பிள்ளையைவிட்டுப்
    பிறர் பிள்ளையைத்
    தாங்கினாள்!

    உள்ளத்தில் பொங்கிவரும்
    வேதனையை விழிநீராலே
    அணை கட்டினாள்!

    அன்பு காட்ட யாரும் இல்லை
    உரிமையும் முழுமையாக
    இல்லை,  ஊரார் வீட்டில்
    எடுப்பார் கைப்பிள்ளை
    ஆனாள்!

    தாங்கிய பிள்ளையை
    ஆசையாக இறுக்கமாக
    அணைக்க முடியவில்லை
    கோபத்தில் இரண்டு தட்டு
    முதுகில் போட முடியவில்லை
    பிள்ளையின் சிவந்த உடல்
    பார்த்தால் மறு நொடியே
    தனக்கு  மரணம் நிச்சயம்!

    பயத்தில் பாதி பணத்துக்காக
    மீதி என்று அக்கறை காட்டுகிறாள்
    பிள்ளைமேல் தொடருகின்றது
    ஆயாப் பணி!

    தனி அறையில் என்றும்
    கண்ணீர் மழை பொழிகிறாள்
    தான் பெற்ற பிள்ளையை
    நினைத்து!

    தன் பிள்ளை அம்மா
    நினைவில் பொம்மையைக்
    கட்டி அணைத்துத் தூங்கும்
    கதை கேட்டதும் புழுவாகத்
    துடிக்கிறாள்!

    இறைவன் மட்டும்
    அறியும் ரகசியம் இது!

    நெஞ்சினிலே குடி
    இருக்கும் வறுமை
    நினைவு வரவே
    அனைத்தையும்
    ஒதுக்கிவிட்டு மன
    வலியுடன் தொடருவாள்
    பணியை!

    கடலில் தத்தளிக்கும்
    படகாய்  அவள் மனம்
    உள்ளத்தில் மகிழ்ச்சி இல்லை
    நிறைவான உணவு இல்லை
    நிம்மதியான உறக்கம் இல்லை
    சதா மனமும் மூளையும் பல
    கதைகள் கூறும் தனக்குள்ளே!

    உதடு சிரிக்கும் உள்ளம்
    உள்ளே அழும் உடலோ
    நடிக்கும் புத்தியோ
    சிந்தனையில் சிறைப்பட்டுவிட
    வாழ்க்கைப் பயணத்தைத்
    தொடர்கின்றாள் இரண்டாண்டை
    எதிர்பார்த்தவண்ணம் ஆயாவாக!

     

    Share
  • பொறாமை

    -ஆர். எஸ். கலா

    மனிதன் மனதிலே
    மறைத்து வைத்து
    வளர்க்கும்  மரம்
    பொறாமை

    இரத்தத்தை நீராக
    ஊற்றி எலும்பை
    வேலியாகக் கட்டி
    பாதுகாத்து வைக்கும் மரம்
    பொறாமை

    பிறர் வாழ்க்கைமேல்
    கல் எறிந்து
    அவர்கள் சந்தோசத்தை
    உரமாகப் போட்டு
    வளர்க்கும் மரம்
    பொறாமை

    மனம் என்னும்
    மண்ணிலே வளர்ந்து
    முகத்திரையைக் கிழித்து
    ஒரு நாள் வெளியாகும் மரம்
    பொறாமை

    சிறுகச் சிறுகச் சேர்ப்பவனையும்
    சிதைத்துத் துவைக்க
    வரும் மரம்
    பொறாமை

    உறவாடிக் கெடுக்கப்
    பாலம் போட
    முன்வரும் மரம்
    பொறாமை

    உள்ளே ஒன்று
    வெளியே  ஒன்று
    வைத்து மறைக்கக்
    காரணமாகும் மரம்
    பொறாமை

    ஒருவன் வளர்ச்சியைப்
    பார்த்ததும் கெட்டவனின்
    உள்ளத்தில்
    முளையிடும் மரம்
    பொறாமை

    மனிதன் மனிதனாக
    வாழ விடாமல்
    தடுக்கும் மரம்
    பொறாமை

    எத்தனைப் போட்டியிலும்
    திட்டம் போட்டு
    நுழைகின்ற மரம்
    பொறாமை

    பொதுவாகப் பொறாமை
    விதையிடுவது
    எல்லோரிடமும்
    உண்மை…
    முளையிலே
    கிள்ளினால்   நன்மை!

     

    Share
  • மமதை கொண்டான்!

    -ஆர். எஸ். கலா

    இறைவன் படைப்பில்
    ஒவ்வொன்றும் உலகிற்கு
    நன்மை தீமை புரிகின்றது
    என்பதில் ஐயம் இல்லை!
    ஆனால் மனிதனைப் போல்
    தீமை புரிகின்றவை எவையும்
    இல்லை என்பதிலும்
    ஐயம் இல்லை!

    சுய நலத்திலும் சுய நலம்
    சுரங்கமாக அவன் மனதில்!
    தான் மட்டும் நலமாக
    வாழ அடுத்தவன் தலையை
    எடுத்தால்தான் முடியும்
    என்றால் தயங்காமல்
    தூக்குவான் அருவாளை!

    ஒன்றை ஒன்று அழித்து
    உயிர் வாழ்வதில் முதல்
    இடத்தில் இருப்பது
    மனித இனமே!

    கூட்டைக் கட்டும்
    பறவையின் மரத்தை
    வெட்டி வீட்டைக் கட்டுகிறான்
    கூடி அழும் பறவையைத் தூக்கி
    குப்பையிலே போடுகிறான்!
    துடித்து இறக்கும்போது
    வேடிக்கையாகப் பிடித்து
    விளையாடுகிறான்
    குருவிக் குடும்பத்தை
    அழித்துத் தன் குடும்பத்தைப்
    பெருக்க மறைவிடம்
    உருவாக்கின்றான்!

    அனைத்துமே உயிர்தான்
    என்று வசனம் பேசுகிறான்
    அதற்கான மதிப்பைக் கொடுக்க
    மறுக்கின்றான்!
    வேர்விட்டு நிலம் காத்துக்
    கிளைவிட்டு நிழல் கொடுத்து
    முகம் மலரப் பூத்து நிற்கும்
    மரத்தை அடியோடு வெட்டிச்
    சாய்க்கின்றான்!
    அடுத்த சில தினங்களிலே
    மழை கேட்டு அழுகின்றான்!

    விண்ணுக்கும் மண்ணுக்கும்
    இடையிலே தான் சிறைப்பட்ட
    வாழ்க்கை வாழ்வதை மறந்து
    தலைக்கனம் கொண்டு
    நடக்கின்றான்!
    நடக்கும் போதே பூமி நடுங்கினால் பாதியில்
    முடிகின்றது மனிதன் நாடகம்!

    உயர்ந்த வானம் உக்கிரம்
    கொண்டால் வாரிச் சுருட்டி
    அழித்துவிடும் மரம் அழித்த
    நிலத்தில் எழுந்த மனைகளை!
    ஆழ்கடலையே எல்லைபோட்டுப்
    பிரிக்கின்றான் அமைதியான அலை
    ஆவேசமானால் அனைத்தையும்
    தன் வசமாக்கிவிடும்!

    இவை அத்தனையும் அறிந்தும்
    புரிந்தும் தெரிந்தும் மனிதன்
    தொடர்ந்து கொடுக்கின்றான் பிற
    உயிருக்குத் தொல்லையை!

    இறுதியில் அவன் ஒருபிடி சாம்பல்
    இல்லை…ஆறடி மண் இவைதான்
    அவன் நிலை என்பதை மறந்து
    வாழ்கின்றான் மனம் மரத்துப் போன
    மானிட ஜென்மம்!

     

    Share
  • பசுமைபடர் உலகம்!

    -ஆர். எஸ். கலா

    வான் மழை பூமியை நனைக்க
    நீர்பட்ட நிலத்துக்கு ஈரப்பசை கிடைக்க
    தண்ணீர் தேங்கிய மண்ணில்
    புதையுண்ட விதை முளையிட்டுத்
    தளிரிட்டுக் கொழுந்து
    வளர்ந்து இலையாகிச் செடியாகி
    கொடியாகும்!

    வளர்ந்த செடியோ
    கட்டு வளர்ந்து
    பல வேர் விட்டுக்
    கிளைகள் நிறைந்து
    அதிகக் குச்சியைச் சுமர்ந்து
    விருட்சமாகும்!

    சாலை ஓரமாக நட்ட செடி
    தெருவோரம் நிழல் கொடுக்கப்
    பாதையெல்லாம் பூக்கள் கிடக்க
    வழிப்போக்கனும் அதைப் பார்த்து
    ரசிக்க…
    அடடா பசுமையான நாடு உன் நாடு
    ஐயோடா குளுமையான ஊர் உன்னுடையது
    ஆமான்டா குளுகுளுப்பாக உள்ளது உன் தேசம்
    ஜாலி டா குளிர்ச்சியாய் இருக்கு  நீ இருக்கும்
    இடம்…
    தயக்கத்தோடு வந்தவளும்
    மயங்கி நிற்க மயக்கத்தோடு
    கூட்டி வந்தவனும் தயங்கித்
    தவிக்கும் சோலை வனமாக
    மாறவேண்டும் பசுமை படர்
    நிலமாக ஆகவேண்டும்!

    கதிரவன் வருகையில் பச்சை மரமாக
    அதைத் தாங்க வேண்டும்
    பகலவன் அதனுடன் உறவாட வேண்டும்
    சூரியனின் கதிர்கள் கரத்தின்  கிளைகளான
    இடையால் பூமியைத் தொட வேண்டும்
    மாலையானதும் ஞாயிறு மெல்ல மறைந்து
    செல்கையில் இத்தனை அழகு கொண்ட
    பசுமை படர் உலகம்  அல்லவா என்னும்
    எதிர்காலம் வ(ள)ரவேண்டும்!

     

    Share
  • ஆசிரியரைப் போற்றுவோம்!

     -ஆர். எஸ். கலா

    அன்பாகப் பேசி
    அதட்டிப் பேசி
    தட்டிக்கொடுத்து
    திட்டிச் சொல்லி
    அடித்துச் சொல்லி
    குட்டிச் சொல்லி
    முட்டிபோட வைத்து
    மேசை மேல் ஏற்றி வைத்து
    முறைப்பாகப் பார்த்து
    விறைப்பாகப் பழகி
    சிரித்துப் பேசி
    கோபமாகப் பேசி
    கேலியாகப் பேசி
    நடித்துக் காட்டி
    நண்பன் போல் நெருங்கி
    தாயைப் போல் அணைத்து
    தந்தை போல்  அதட்டி
    பாட்டி போல் கதை கூறி
    மழலை போல் கூடி விளையாடி
    குரங்குபோல் குதித்துக்காட்டி
    நாய்போல் குரைத்துக் காட்டி
    ஒரு முறைக்குப் பலமுறை திருத்தி
    எழுதிக் காட்டி
    உறவுக்கான மரியாதையை
    எடுத்துரைத்து
    உலகவரைபடத்தை விவரித்து
    கரி போன்ற மூளை உடைய
    மக்கு மழலையையும் ஊதி ஊதி
    எரியூட்டுவது போல் பாடம்
    புகட்டிப் புகட்டியே ஒரு திறமையான
    மாணவனாகச் செதிக்கி எடுக்கும்
    ஆசானே உயர்வான ஆசான்!
    பெற்றோருக்கும் மேல் மதிக்கப்பட
    வேண்டிய ஆசிரியர்!

    தன் பிள்ளையுடன்  இருக்கும்
    நேரத்தைவிடப் பிறர் பெற்ற
    பிள்ளையுடன்  கழிக்கும் நேரமே
    அவர்கள் இந்தப் பணிக்கான அர்ப்பணிப்பு
    இவர்கள் சேவையைப் போற்ற வேண்டும்
    என்பதே என் கணிப்பு!

    கூடி வாழும்  பண்பைக் காட்டிக்
    கூட்டமாகச் சேர்ந்து உண்ணும்
    நெறியையை விளக்கிக்
    குற்றம் புரிதல் தப்பு என்னும்
    விதிமுறையைக் கூறி
    மெய்மைக்கும் பொய்மைக்கும்
    உள்ள வேறுபாட்டையும் அதன்
    சிறுமை பெருமைகளை எடுத்துரைத்தும்
    வறுமையான மாணவன் வசதி படைத்த
    மாணவன் என்ற வேற்றுமையை விலக்கி
    கல்விக் கண்ணை சமமாகக் கொடுக்கும்
    ஆசானுக்கு  ஆயிரம் கோடி நன்றிகள்
    கூறவேண்டும் எந்நாளும்!

     

    Share
  • கற்பு

     -ஆர். எஸ். கலா

    கற்பு என்பது கரும்பு இல்லை
    செங்கறையான்கள் சுவைத்து
    விட்டு அழித்து விட…
    கற்பு ஆணுக்கும் உண்டு
    அதை நிலைநாட்ட நீயும்
    விரும்பு!

    கற்பு என்பது உடலில்இல்லை
    உள்ளத்தின் உள்ளே உள்ள
    ஒரு இரும்பு!

    ஓநாய் உடலைச் சுவைத்தால்
    உலகின் பார்வைக்குத் தெரிவது
    கற்பு கலைந்ததாகவே…
    உண்மையில் கசங்கியது புழு பூச்சிஉண்ணும்
    ஊன உடல் என்பதை ஏற்க
    மறுக்கின்றதுதான் உலக வெறுப்பு!

    கலக்கம் இல்லா உள்ளம்
    கலங்கரை விளக்காகும்
    கற்பைக் களவு கொடுப்பவள் மட்டும்
    கற்பு இழப்பதில்லை  அதைத்
    திருடும் கயவனும் இழக்கிறான்
    இதை ஏனோ மறக்கிறான்!

    பேச்சில் உண்டு கற்பு
    மூச்சில் உண்டு கற்பு
    நாக்கில் உண்டு கற்பு
    நடந்து கொள்ளும்
    கொள்கையிலும் உண்டு கற்பு

    கற்பு என்பது கற்பூரம்
    போன்றது, சிறு தீப்பொறி
    பட்டால் எரிவது கற்பூரம்
    கூடிக் கும்மி அடிக்கும் சிலர்
    நாக்கால் அழிவது கற்பு!

    மாற்றான் மனைவியைத்
    தன் கண்ணாலே ஒருவன்
    மேய்ந்து வந்தால் அந்த நொடியே
    அவன் இழக்கிறான் கற்பு!
    இது உண்மை என்று ஏற்றுக் கொள்ள
    எவரும் இல்லை இன்று!

    கட்டிய மனைவியானாலும்
    விருப்பம் இன்றிக் கணவன்
    தொட்டால் அவையும் இழுக்கு
    கற்பு இழந்தவைக்குச் சமமே

    அவளுக்குக் கற்பு உண்டா?
    என்று கேள்வி தொடுத்தால்
    இங்கும் பதில் தடுமாறும்

    பத்து ஆணுக்கு மத்தியிலும்
    தூங்கி எழுவாள் பத்தினி
    ஆனால்  பார்ப்போர் கண்ணோ
    கரித்துக் கொட்டும் இரட்டை
    நாக்குப் பாம்பு விஷத்தால்!

    கற்பு என்பது என்ன?
    கற்பு இழப்பது என்ன?
    என்று என்னைக் கேட்டால்
    கெட்ட பழக்கவழக்கங்கள்
    அனைத்திலும் ஒரு நற்பண்பு
    உள்ளவன் நெருங்காமல்
    இருப்பின் அவைதான் கற்பு

    இதில் ஒன்றுக்காவது அடிமையாகித்
    தன்னை இழந்தால் அவனே கற்பு
    இழந்த மனிதன்!

    இவை ஆண் பெண் இருவருக்கும் சமமான
    ஒரு நீதியாகவேண்டும்!

    Share
  • இவையும் இன்பமே!

    -ஆர். எஸ். கலா

    கணங்கள்
    ரணமாகிப்
    பெருகுகின்றது
    இரத்த ஆறு!

    தினமும் உப்பு
    நீரிலே குளிக்க
    விரும்புகின்றது
    விழிகள்!

    சொந்த வரிகளைப்
    போட்டுச் சுரங்கள்
    இல்லாமலே
    சோக கீதம்
    இசைக்கின்றது
    இதயச் சுரங்கம்!

    பிம்பம் இழந்து
    துன்பம் சுமக்கின்றது
    உடல்!

    அங்கம் எங்கும்
    ஓடாமலே உறைந்து
    விட்டது குருதி!

    அன்ன நடை
    இன்றி அமைதி
    கொண்டது பாதம்!

    பஞ்சு மெத்தையும்
    கண்ணில் படாதவாறு
    விரித்துள்ளது முள்
    விரிப்பு!

    உறக்கம் இன்றி
    எனக்கும்  தவிப்பு!

    மூன்று மாதங்களாக
    நீ  வெறுத்த மறைப்பு
    மதில் தடுத்துவிட்டது
    குறுஞ்செய்தி  வரவை!

    கனவையும் கொடுத்துக்
    கவலையையும்
    கொடுத்துவிட்டுக்
    கல்லாக  நீ  இருக்க…
    இரண்டையும்
    சுமந்து பறக்க
    முடியாப் பறவையாக
    இறக்கை இன்றி நான்
    தவிக்கின்றேன்!

    இறகும் இல்லை
    காலும்  இல்லை
    உன் வீட்டு விலாசமும்
    அறியாமலே  என்
    எண்ணம்  மட்டும்
    சென்று வருகின்றதே
    உன் இல்லம் வரை
    அவைதான்  எனக்கும்
    கொஞ்சம்  இன்பமடா!!

     

    Share
  • ஹைக்கூ

     ஆர். எஸ். கலா

    1. செழுமையான ஆட்சியில்
        எளிமையாய் வாழ்ந்தவர்
        பார் புகழும் அண்ணா!

    2. குயவனுக்கு மகிழ்ச்சி
        தை மாத வருகை
        பானை விற்பனை

    3. தமிழர்தின விழாவில்
        வரவேற்பு வாசகம்
        வெல்கம்!

    4. வேற்றுமையைப்  பாராது
       ஒருதாய் மக்களாய்
       மதுக்கடையில்!

    ***

    லிமரைக்கூ

    1. மேகத்தின்  அழுகையோ மோகம்
        பூமியிலே  நிறைந்து  விட்டது வெள்ளம்
       என்னுள்ளே  ஒரு சோகம்

    2. ஓயாமல்  ஆடியது  அலை
        உதவி இன்றிப்   படகில் மீனவன்
        கடலோடு ஆடியது வலை

    3. வெட்டிய மரம்  சாய்ந்தது
        தங்கிய  பறவைும்  பயந்தே பறக்க
        முட்டையும்  விழுந்து உடைந்தது

    4. மழையில் நிரம்பியது ஆறு
        சந்தோசமாக ஓடி  நீந்தியது  மீன்
        நீரில்  மறைந்தது சேறு

    5. தள்ளாடும் குடிகாரன்  கால்கள்
        வறுமையின்  பிடியில்  அவன் குடும்பம்
        பசியில் மனைவி மக்கள்

    6. வீதிக்கு வீதி கடை
        வரிசை  கட்டி  வாலிபர் கூட்டம்
        நாளை  மதுத் தடை!

     

    Share
  • பேச்சிலும் நேர்மை வேண்டும்!

    -ஆர். எஸ். கலா

    கதை கதையாக
    அளந்து காலத்தையும்
    நேரத்தையும் கழிக்கும்
    மனிதர்களே…!

    பேசும்போது உம்
    பேச்சு மற்றோரைத்
    திருத்தும் மருந்தாக
    இருக்கின்றதா…இல்லை
    விருந்தாகச் சுவைக்கின்றார்களா
    என்று  உணர்ந்து உரைக்கின்றீரோ…?

    தெருவிலும்  கூட்டம்
    போட்டுப் பேச்சு வீட்டிலும்
    அதே நிலமையாச்சு…!

    சினிமா பற்றியும்
    அதில் வரும் தேவதைகள்
    பற்றியும் பேச்சு, இறுதியில்
    நாசமாகப் போச்சு
    பொன்னான  நேரம்!

    உருப்படியாக ஒரு
    காரியம் பற்றிப்
    பேசுவது உண்டா?
    அதைச் செய்ய முயன்றது
    உண்டா?

    கொலை கொள்ளை
    பற்றியே எப்போதும் பேச்சு
    கஞ்சிக்காவது வழி தேடவே
    புத்தி இல்லாது போச்சு…!

    அதிர்ஷ்டம் தேடியே நீ
    துரதிர்ஷ்டசாலி என்று
    பெயர் பெறுகிறாய்
    அதையும் பொருட்படுத்தாது
    சோம்பேறியாகவே வலம்
    வருகிறாய்!

    கூடிப் பேசு கூட்டம்
    போட்டுப் பேசு
    நல்லதில் நாட்டம்
    கொள்! நாள் முழுக்கப் பேசு
    சமுதாய நிலமையைப்  பார்த்துப் பேசு
    பிறரைத் திருத்த வழி தேடிப் பேசு!

    சலிப்பு இன்றிப் பேசு
    துடிப்போடு பேசு
    வடிகால் கொண்டு கெட்டதை
    வடித்துத் தூக்கிப் போட
    இடம் தேடிப் பேசு
    தவறை அழித்துத்  தலை
    நிமிர்ந்து வாழ நல்லநெறி
    முறைகளைத்தேடிப்பிடித்துப் பேசு!

     

    Share
  • எதைநோக்கிப் போகிறது சுதந்திரம்?

    -ஆர். எஸ். கலா

    நெஞ்சி பொறுக்கலயே
    பஞ்சமா பாதகர்கள் செயல்
    கண்டு!
    உள்ளம்  ஊனம்  ஆன
    கள்வர்களோ இல்லை
    கடமையைக் கண்ணும்
    கருத்துமாகப் பார்க்கும்
    காவலர்களோ…
    பாதம் பதித்து நடக்க
    வழியில்லா வாலிபனைத்
    தன் பாதத்தாலே
    கொட்டுகிறான்
    சட்டமோ போடுகிறது
    பல விதத்தில் ஆட்டம்
    இது என்ன புதுக் கூட்டம்?
    மட்டம் தட்டுகிறது
    காவலர்களை ப்பல
    மாவட்டம்!

    நல்ல சில  அதிகாரி
    தன்னுள்ளே குமுறுகிறான்
    இது என்ன பிழைப்பு என்று!
    இதில் எங்கே சுதந்திரம் ?
    மதுவுக்குத் தடை விபசாரத்துக்குத் தடை
    மழலைக் கொலைத் தடை கற்பழிப்புத் தடை
    லஞ்சம் தடை இத்தனையும் தடைஇன்றிப்
    போடுகிறது நடை!
    அங்கே அதிகாரம் நுழையத்தான் தடை!

    உடலால் வருந்தி உள்ளத்தால் துடிக்கும்
    ஒருவனுக்கு ஒத்தடம் கொடுக்கிறதா?
    சட்டம் உபத்திரவம் கொடுக்கிறதா?
    அரசாங்கத்தின் அராஜகம்
    அரங்கேறுகின்றது நடு வீதியிலே
    எங்கு இல்லை எதில் இல்லை
    சுதந்திரம் என்னும் வார்த்தை?
    அவை சோர்ந்து போகின்றது
    அரச தந்திரங்களால்
    ரத்தத்தின் ரத்தமென மேடைக்கு
    மேடைப் பேச்சு
    மொத்தத்தில் மொழியால் பிரித்துத்
    தமிழனுக்கு  எதிலும் வழி
    இல்லாது போச்சு!

    முன்னேற்றுவேன் முன்னேற்றுவேன் நாட்டை
    என்பது அரசியலின் தாரக மந்திரம்
    விலை ஏற்றி விலை ஏற்றியே
    வீணாகப் போகிறது கூலிகளின்
    அன்றாட வாழ்வு  மாத்திரம்!
    சுதந்திரம் இல்லை அதை நாடி
    ஓடுவோருக்குச் சோறும் இல்லை
    எதை நாடிப் போகின்றதோ இந்தச்
    சுதந்திரம் என்னும் சொல்?

    எங்கும் ஊழல்  அரச காரியாலயத்தில்
    நுழைந்ததுமே தேடல் உருப்படியாக
    ஒரு காரியம் துட்டு இன்றிச் செய்ய
    வழி  உண்டா?
    பக்கத்துக்குப்  பக்கம் பொதுச் சேவை
    என்று அறிவிப்புப் பலகை
    அங்கே பொத்திய வண்ணம் அபகரிக்கான்
    ஏழையின் கை இருப்பை!
    இதில் மனிதனுக்கு எங்கே சுதந்திரம்?

    பாதைக்குப் பாதை மதுக்கடை நடை பாதையிலே
    நடக்கவே மாதுக்குத் தடை!
    போதையில் தள்ளாடும் கயவன்
    தாவணி தொட்டு இழுப்பான் என
    அச்சம்  இதில் பெண்ணுக்கு எங்கே
    சுதந்திரம்?

    நினைத்த நேரத்தில் பாதையில் நடக்கத் தடை
    நினைத்தபடி வாழச் சமுதாயத்தில் தடை
    சுதந்திரம் என்னும்  வார்த்தை சொல் அளவுதான்
    அது பறந்து விட்டது பல விதத்திலும்
    சில மதத்திலும்!

     

    Share
  • வயசு வந்து போச்சு!

    -ஆர். எஸ். கலா

    எடுப்பான உடை அணிந்தேன்
    மிடுக்கான நடை போட்டேன்
    கடுகடுப்பாகக் கோபம் காட்டி வந்தேன்
    உறவைத் தண்டித்தேன் உரிமைக்குக்
    குரல் கொடுத்தேன்!

    வியர்வை சிந்தி உழைத்தேன்
    வாழ்வில் பல இன்பங்களை
    அனுபவித்தேன்!

    பல அறுசுவை உணவைச் சுவைத்தேன்
    மனைவியை நேசித்தேன்  பிள்ளையைச்
    சுவாசித்தேன் நல்லதோர் குடும்பம்
    பல்கலைக்கழகமாக வாழ்ந்து வந்தேன்!

    அது ஒரு காலம் ஓடிப்போனது வெகு தூரம்
    வயசு வந்து போச்சு அத்தனை நாடகமும்
    முடிஞ்சுபோச்சு!

    எத்தனையோ கோபங்கள் நான் காட்ட
    அத்தனையும்  தாங்கி நின்று என்னை மடி
    சாத்தியவள் என்னவள்!

    சோகத்தில் பங்கு எடுக்க அன்னை,
    தோள்கொடுக்கச் சில நண்பர்கள்
    அது அப்போ…இளமைக் காலம்!

    இன்று என் உயிர் மட்டுமே தஞ்சம்
    விக்கல் எடுக்கின்றது நீர் கொடுக்க
    ஒரு கை இல்லை!

    என் உயிர் பிரியும் முன் என்னவள் உயிர்
    நீத்தாள்; நிராகரிக்கப்பட்டேன் நான்
    என் துணையாக ஒரு வெத்தலைப் பையும்
    என் இளமை நினைவுமே  மிச்சம்!

    பழைய வாழ்வையும் வெத்தலையையும்
    மனசும்  வாயும் அசைபோட வாழ்வின்
    இறுதியை நோக்கி இல்லத்தில் நான்!!

     

    Share