இவையும் இன்பமே!
-ஆர். எஸ். கலா
கணங்கள்
ரணமாகிப்
பெருகுகின்றது
இரத்த ஆறு!
தினமும் உப்பு
நீரிலே குளிக்க
விரும்புகின்றது
விழிகள்!
சொந்த வரிகளைப்
போட்டுச் சுரங்கள்
இல்லாமலே
சோக கீதம்
இசைக்கின்றது
இதயச் சுரங்கம்!
பிம்பம் இழந்து
துன்பம் சுமக்கின்றது
உடல்!
அங்கம் எங்கும்
ஓடாமலே உறைந்து
விட்டது குருதி!
அன்ன நடை
இன்றி அமைதி
கொண்டது பாதம்!
பஞ்சு மெத்தையும்
கண்ணில் படாதவாறு
விரித்துள்ளது முள்
விரிப்பு!
உறக்கம் இன்றி
எனக்கும் தவிப்பு!
மூன்று மாதங்களாக
நீ வெறுத்த மறைப்பு
மதில் தடுத்துவிட்டது
குறுஞ்செய்தி வரவை!
கனவையும் கொடுத்துக்
கவலையையும்
கொடுத்துவிட்டுக்
கல்லாக நீ இருக்க…
இரண்டையும்
சுமந்து பறக்க
முடியாப் பறவையாக
இறக்கை இன்றி நான்
தவிக்கின்றேன்!
இறகும் இல்லை
காலும் இல்லை
உன் வீட்டு விலாசமும்
அறியாமலே என்
எண்ணம் மட்டும்
சென்று வருகின்றதே
உன் இல்லம் வரை
அவைதான் எனக்கும்
கொஞ்சம் இன்பமடா!!