-ஆர். எஸ். கலா

கற்பு என்பது கரும்பு இல்லை
செங்கறையான்கள் சுவைத்து
விட்டு அழித்து விட…
கற்பு ஆணுக்கும் உண்டு
அதை நிலைநாட்ட நீயும்
விரும்பு!

கற்பு என்பது உடலில்இல்லை
உள்ளத்தின் உள்ளே உள்ள
ஒரு இரும்பு!

ஓநாய் உடலைச் சுவைத்தால்
உலகின் பார்வைக்குத் தெரிவது
கற்பு கலைந்ததாகவே…
உண்மையில் கசங்கியது புழு பூச்சிஉண்ணும்
ஊன உடல் என்பதை ஏற்க
மறுக்கின்றதுதான் உலக வெறுப்பு!

கலக்கம் இல்லா உள்ளம்
கலங்கரை விளக்காகும்
கற்பைக் களவு கொடுப்பவள் மட்டும்
கற்பு இழப்பதில்லை  அதைத்
திருடும் கயவனும் இழக்கிறான்
இதை ஏனோ மறக்கிறான்!

பேச்சில் உண்டு கற்பு
மூச்சில் உண்டு கற்பு
நாக்கில் உண்டு கற்பு
நடந்து கொள்ளும்
கொள்கையிலும் உண்டு கற்பு

கற்பு என்பது கற்பூரம்
போன்றது, சிறு தீப்பொறி
பட்டால் எரிவது கற்பூரம்
கூடிக் கும்மி அடிக்கும் சிலர்
நாக்கால் அழிவது கற்பு!

மாற்றான் மனைவியைத்
தன் கண்ணாலே ஒருவன்
மேய்ந்து வந்தால் அந்த நொடியே
அவன் இழக்கிறான் கற்பு!
இது உண்மை என்று ஏற்றுக் கொள்ள
எவரும் இல்லை இன்று!

கட்டிய மனைவியானாலும்
விருப்பம் இன்றிக் கணவன்
தொட்டால் அவையும் இழுக்கு
கற்பு இழந்தவைக்குச் சமமே

அவளுக்குக் கற்பு உண்டா?
என்று கேள்வி தொடுத்தால்
இங்கும் பதில் தடுமாறும்

பத்து ஆணுக்கு மத்தியிலும்
தூங்கி எழுவாள் பத்தினி
ஆனால்  பார்ப்போர் கண்ணோ
கரித்துக் கொட்டும் இரட்டை
நாக்குப் பாம்பு விஷத்தால்!

கற்பு என்பது என்ன?
கற்பு இழப்பது என்ன?
என்று என்னைக் கேட்டால்
கெட்ட பழக்கவழக்கங்கள்
அனைத்திலும் ஒரு நற்பண்பு
உள்ளவன் நெருங்காமல்
இருப்பின் அவைதான் கற்பு

இதில் ஒன்றுக்காவது அடிமையாகித்
தன்னை இழந்தால் அவனே கற்பு
இழந்த மனிதன்!

இவை ஆண் பெண் இருவருக்கும் சமமான
ஒரு நீதியாகவேண்டும்!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கற்பு

Leave a Reply

Your email address will not be published.