வாழ்வு தந்த தெய்வங்கள்!

 –ஆர். எஸ். கலா

இடை பெருக்க
நடை  குறைய
உடல் தளர
வயிறு உப்ப
பல உணவுக்குத்
தடை போட்டுக்
கருவில் எனைச்
சுமந்தாள் தாய்!

வாந்தியால்
வதைக்கப்பட்டு
மசக்கைக்குள்
சிக்குண்டு மருந்தை
விருந்தாக்கி
மாதங்கள் பல
என்னை உடலிலே
தாங்கியவள் தாய்!

கருவான நான்
உருவெடுத்து
உலகத்துக்கு வருகை
தரும் வேளை அம்மா
பட்ட வலியை நான்
உணரவே பல ஆண்டு
காத்திருக்கவேண்டியதாயிற்று
அன்று உணர்ந்தேன் தாயின்
வலியையும் பெருமையையும்
தியாகத்தையும்!

என் வருகையால்
நெகழ்ந்து மெதுவாக
முத்தமிட்டுத் தொட்டு
மகிழ்ந்த தந்தை என்
தேவைகளைப் பார்த்துப்
பார்த்து பூர்த்தி செய்தார்!

ஓடாகத் தேய்ந்து கூலி
வேலை செய்தார்
தோள் வலிக்கச் சுமப்பார்
சுகமெனச் சிரிப்பார்
கை வலிக்க உழைப்பார்
கை சிவக்க அள்ளிக்
கொடுத்து என் ஆசைகளை
நிறைவு  செய்வார்!

கடல்கடந்து சென்று
பல ரணங்கள் சுமந்து
சுகமான வாழ்வு இழந்து
சுமை என்று எனை
நினையாது அன்புச்
செல்லமென நினைத்துச்
சொத்தாகக் குவித்தார்!

ஈருடலுக்கும் நான்
ஓர் உயிரானேன்
அன்பு விழியானேன்
என்றும் எங்கள் உயிர்
மகளே என்று புலம்பும்
பாசமான பெற்றோருக்கு
அடங்கிய மகளானேன்!

தாய் தந்தை காட்டிய
பாதைக்குத் தடம் மாறாப்
பிள்ளையானேன்
பார்ப்போர் போற்ற
கேட்போர் வியக்க
நானும் நல்ல
நிலையிலானேன்!

முதியோர் இல்லம்
தேடமாட்டேன்
’சீ’ என்று விரட்ட
மாட்டேன்
சுமை என்று
புலம்பமாட்டேன்
சுகமாக  நானும்
சுமப்பேன் தடி கொடுத்துப்
பிடி கொடுத்து உறவு என்று!

என்  பேசும்  தெய்வங்கள் இவர்கள்
என்று போற்றிப் பராமரிப்பேன்
பெற்றவர் உள்ளத்தை அன்பால்
வெள்ளமாக்க நான் உழைப்பேன்
இது சாத்தியமோ நான் அறியேன்…
சத்தியமாகக் கைவிடேன்!

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க