-ஆர். எஸ். கலா

இன்றைய பெண்கள்
படைத்து வரும் சரித்திரம்
அதைப் புகழ்வதா இகழ்வதா
என்று புரியாமலே
நகருகின்றது நாட்கள் தினம்!

அன்றைய பெண்கள் வாழ்க்கை
கட்டியவனுக்குப் பணிவிடை
பெற்றபிள்ளையைப் பராமரிப்பு
வீட்டு வேலை ரோட்டுக்குத்தடை!

கொசுவம் வைத்த சேலை
அள்ளி முடிஞ்ச கொண்டை
உச்சிமேல வைச்ச குங்குமம்
வட்ட நிலாவாட்டம் நெற்றியில்
பொட்டு மாற்றம் கண்டு வருகிறது
இன்று புதிய சரித்திரம்!

வீட்டுப் பணிக்குத் தடைபோட்டு
ரோட்டுப் பணியைக் கையில்எடுத்துக்
கொண்டைக்கு விடை கொடுத்துக்
கெண்டைக்கால் உடை போட்டு
வெட்டிப் பேச்சுக்கு இடம் இல்லாது
கட்டுப் பணம் தேடி நடை போட்டது
புதிய சரித்திரம்!

கட்டி அணைக்க மட்டும்
பெண்கள் கரம் நீளும்
என்ற காலம் மாறிக்
கட்டி உதைக்கவும் பெண்களால்
முடியும் என்று கூறாமல்
பல படையிலும் இணைந்து
பெண்கள் சமுதாயம்
படைத்து வரும் சரித்திரம்!

பெருவிரல் ஊன்றிக் கால்
கடுக்கநின்று மண்ணெண்ணெய்
எடுத்த பெண் பெற்ற பெண்பிள்ளை
இன்று கால்மேல் கால்போட்டுக்
குளிர் அறையில் அமர்ந்து கணினியைத்
தட்டி விடை கூறுவது
படிப்பால் பெண்கள்
படைத்த சரித்திரமே!

ஆணுக்குப் பெண் நிகர்
என்று கூறும் பெண்கள்
நன்மையிலும் சரிபாதி
தீமையிலும் சரிபாதியாய்
நடப்பதும் இது நாகரிக உச்சத்தில்
வந்த சரித்திரம்!

புகழ்ந்து பேசச் சில பெண்கள்
சரித்திரம் படைக்கிறார்கள்
இகழ்ந்து பேசச் சில பெண்கள்
சரித்திரம் படைக்கிறார்கள்
தலைக்கனம் கொண்டும் நடக்கிறாள்
தன்னடக்கத்துடனும் நடக்கிறாள்
வரலாறு காணாத சரித்திரத்தை
வழிவழியே படைக்கத்
துடிக்கிறாள்!

பெண் முன்னேற்றம்
பொறுக்கமுடியா ஆண்
குறுக்கு வழியில்
மடக்கப் பாக்கிறான்
பெருமைப்படும் ஆண்
கூடவே துணைநிற்கிறான்
படைக்கட்டும் பெண்கள் சரித்திரம்
என்று எடுத்து உரைக்கிறான்!

பெண்களால் என்ன முடியும்
என்ற காலம் மாறிப்
பெண்களால் எல்லாம் முடியும்
என்றாகி விட்டது
தடை போடாதீர்கள்
சாதிக்கத் துடிக்கும் பெண்களை
வளர விடாதீர்கள் வழிதவறும் பெண்களை
நாளைய சரித்திரம்  நன்மையாய் இருக்கச்
செதுக்குங்கள் சிற்பத்தைச்  செம்மையாய்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.