நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா?
— கவிஞர் காவிரிமைந்தன்.
நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா?
திரைக்கதை வசனங்களில் புதிய யுக்தி வகுத்து, தனக்கென ஒரு பாதை சமைத்து பயணம் மேற்கொண்ட பல்துறை வித்தகர் டி.ராஜேந்தரின் இரண்டாவது படம் இது என்று நினைக்கிறேன். இரயில் பயணங்களில்… வழக்கம்போல் பாடல்களின் பவனியில் இவர் முன்னணியில்! இசையும் தானே அமைத்திடுவதால் வார்த்தைகள் மாற்றம்செய்வதோ மலரச்செய்வதோ எளிதான பணி!
உற்றதோழி காதலியாக வேண்டும்! உயிர்ப்பறவை அவள் சுமக்க வேண்டும்! வாழும்வரையில் அவளின் துணைவேண்டும். கடவுள் இந்தக் கருணை வரம்தர வேண்டும்! மாறாக, இதோ காதலித்த ஒருத்தி இன்னொருவனை கரம்பிடிக்க நேர்ந்து, அவளின் வாழ்க்கையில் புயல்வந்து சேர்ந்து அலைபாயும்போது, அங்கு ராகங்கள் எல்லாம் ஸ்வரபேதம் காட்டி மனதிலே மோதுகின்றன.
கதையின் நாயகன் இந்தச் சூழ்நிலையில் தன்னுணர்வைப் பாடலிலே பதிக்கிறான். இசையை அதற்கேற்ப வடிக்கிறான். இரயில் பயணங்களில் படத்தில் நான்கு தலைமுறைகளுக்கு மேலாக பாடிக் கொண்டிருந்த டி.எம்.செளந்திரராஜன் குரலில் இந்தப் பாடல் பாவங்களை அழுத்தந்திருத்தமாக சொல்லுகிறது! அரிதாரம் பூசாத காதலின் அவஸ்தைகள் நிச்சயம் இப்படித்தான் இருக்கும் என்று காதல் கதை சொல்ல அவதாரம் எடுத்துவந்த டி.ராஜேந்தர் படைத்த படைப்பு!
படம்: இரயில் பயணங்களில்
உணர்வு: வேதனை
ஆக்கம்: டி. ராஜேந்தர்
வசந்த ஊஞ்சலிலே
அசைந்த பூங்கொடியே
உதிர்ந்த மாயமென்ன
உன் இதய சோகமென்ன
உன் இதய சோகமென்ன
நூலுமில்லை வாலுமில்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதியில்லை தேவியில்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
நினைவு வெள்ளம் பெருகி வர
நெருப்பெனவே சுடுகிறது
படுக்கை விரித்துப் போட்டேன்
அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாழும் உலகை வெறுத்தேன்
அதில் ஏனோ இன்னும் உயிரு
மண்ணுலகில் ஜென்மம் என
என்னை ஏனோ இன்று விட்டு வைத்தாய்
கண்ணிரண்டில் திராட்சை கொடி
எண்ணம் வைத்து கண்ணீரை பிழிந்தெடுத்தாய்
இறைவா… கண்ணீரைப் பிழிந்தெடுத்தாய்
(நூலுமில்லை வாலுமில்லை …)
நிழலுருவில் இணைந்திருக்க
நிஜம்வடிவில் பிரிந்திருக்க
பூத்தால் மலரும் உதிரும்
நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும்
அவள் நினைவோ தேய்வதில்லை
காடுதன்னில் பாவி உயிர் வேகும் வரை
பாவை உன்னை நினைத்திடுவேன்
பாடையிலே போகையிலும்
தேவி உன்னைத் தேடி உயிர் பறந்திடுமே
உறவை… தேடி உயிர் பறந்திடுமே
(நூலுமில்லை வாலுமில்லை …)
காணொளி: https://youtu.be/2t9e2JJZ1RU