எங்க ஊரு விவசாயி

-முகமட் இப்ராஹீம் ஷபீனா

கதிரவனை எழுப்பிவிட்டுக்
காடுமலை கடந்து சென்று
கானகத்திலே பயிர் வளர்ப்பான்
வானத்து மழையிலும்
வாய்க்கால் நீரிலும்
தான் வைத்த நம்பிக்கை
தளராது நிலை நிற்பான்
பனியில் சிலிர்த்து
மழையில் குளித்து,
சுட்டெரிக்கும் வெயிலிலும்
சுகத்தை உணர்வான்!

நெஞ்சு கனத்தாலும்
நெல்லோடும் புல்லோடும்
நெருங்கி விளையாடுவான்
மனம் நெருடும் நேரத்தில்
தன் சோகம் சொல்லிட
வயற்காட்டு பொம்மையைத்
துணைக்கு அழைப்பான்!

தான் சுமந்த கனவுகளைப்
பொன் விளையும் பூமியதில்
நெல்லோடு நெல்லாக விதைப்பான்
கரும்பாறை என்றாலும்
கடினமென்று ஒதுங்காது
கரைகாண ஏர்பிடித்து உழைப்பான்!

வறுமையை உருமாற்றி
வாழ்வுக்கு உரமூட்ட
வரப்புக்கு உயிரூட்டி மகிழ்வான்
தம் வருங்கால வாழ்வையெண்ணி
வளமான கற்பனையில்
வயல் தழுவும் தென்றலிலே மிதப்பான்!

சோற்றில் நாம் கை வைக்க
சேற்றிலவன் கால் வைக்கப்
பிணியென்று வந்தாலும்
பின்னிற்க மாட்டான்!

ஆயினும்,
மக்கள் பசிபோக்கப் பாடுபடும்
பாட்டாளி அவன் வாழ்வோ
நெல்லில் பதராகப்
பயிரில் களையாக
மழையின்றி நிலம் காய்ந்தும்
வாழும் வாடிய பயிராக
புலராத பொழுதாக…!

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *