சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
— கவிஞர் காவிரிமைந்தன்.
“நீலமலைத் திருடன்” திரைப்படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் அ. மருதகாசி இயற்றிய பாடலிது. ரஞ்சன் என்கிற நடிகர் கதாநாயகன் (பலருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் இவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை). டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் கம்பீரக் குரலில் உச்சஸ்தாயில் ஒலிக்கும் பாடல். திரையில் கூட ஒரு குதிரைப் பயணத்தோடு நாயகன், அந்த குளம்படிச் சத்தம் இன்றும் நம் செவிகளில் கேட்டுக்கொண்டே இருக்கும்.
தேவர் பிலிம்சாரின் தயாரிப்பில் கருப்பு வெள்ளை வண்ணத்திலேயே ஒவ்வொரு திரைப்படமும் நீதியைச் சொல்லவும், அது நம் நெஞ்சினில் தங்கவும், பொற்காலமது … மீண்டும் வருமா? எண்ணவும் ஏங்கவும் வைக்கிற அக்காலம். குறைந்த பட்சம் தொலைக்காட்சிகளிலும், வானொலியிலும் ஒளி-ஒலித்த வண்ணம் உள்ளது ஓரளவு ஆறுதல் தருகிறது.
கவிஞர் மருதகாசி, மண்ணின் மனம் கமழ பாடல்கள் தந்த திருமகன். கொள்கை முழக்கமிடும் இதுபோன்ற பாடல்களும் தந்துள்ளார். கே.வி.மகாதேவன் இசை இன்னும் மெருகேற்ற, டி.எம்.சௌந்தரராஜன் முன்னணியில் நினைவுக்கு வருகிறார்.
வளரும் தலைமுறைகளுக்கு இதுபோன்ற நீதிகளைச் சொல்லித் தர பாடல்கள் இன்று அதிகம் இல்லையே. பொற்காலப் பாடல்களென விளங்கும் இப்பாடல்களே அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் போதுமானவை என்று சொல்லத்தக்க அளவு எழுதிக்குவித்திருக்கிறார்கள்.
நம்பிக்கையும் தைரியமும் ஒருசேர உருவாக்கும் பாடலை நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தருவோமா?
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
இடர வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
இடர வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா- நீ
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
குள்ள நரி கூட்டம் வந்து குறுக்கிடும்
நல்லவர்க்கு தொல்லை தந்து மடக்கிடும்
குள்ள நரி கூட்டம் வந்து குறுக்கிடும்
நல்லவர்க்கு தொல்லை தந்து மடக்கிடும் – நீ
எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா
எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா – அவற்றை
எமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா….. செல்லடா…..
காணொளி: https://youtu.be/nKnO5xuiId4