(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 29

“N. வெங்கடசுப்ரமணியன் என்ற N. V .S”

amvஅவன் உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்தில் அவனுக்கு ஒன்பதாவது, பத்தாவது, பதினொன்றாவது வகுப்புகளுக்கு ஆங்கில ஆசிரியராக இருந்தவர் N. வெங்கடசுப்ரமணியன் என்ற N. V .S அவர்கள். மிகவும் கண்டிப்பானவர். நன்றாக மனதில் பதியும் படியாகப் பாடம் நடத்துவார். ஆங்கில இலக்கணத்தை அவர் கற்றுத்தரும் முறையே அருமையாக இருக்கும். ஒரு பாடம் நடத்தினால் அதன் உட்பொருள் அனைவருக்கும் புரிந்தால்தான் அடுத்த பாடமே எடுப்பார். ஒவ்வொரு மாணவனாகக் கேள்வி கேட்டுத் தெளிய வைப்பார். அவரது வகுப்பில் அவனையும், சுப்பாமணி என்ற பாலசுப்ரமணியனையும் அவருக்கு நேராகக் கீழேதான் உட்காரச் சொல்லுவார். அவர் பாடம் நடத்தும் பொழுது அவர்களிருவரும் பேசாமல், அவர்களது முழு கவனமும் பாடத்தில் இருக்க வேண்டும் என்றுதான் இந்த ஏற்பாடு. அவனுக்கு விளையாட்டு புத்தி அதிகம் என்றாலும் N. V .S. சார் வகுப்பில் அவன் கவனம் செலுத்துவான். அவரது உச்சரிக்கும் முறையைக் கூர்ந்து கவனித்து அதன்படி பேச அவன் முயர்ச்சி செய்வான். எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும், அது எப்படி இருந்தாலும் அன்போடு சொல்லித்தருவார். சரியாக வரும்வரைச் சொல்லித் திருத்துவார். தேர்வில் மார்க்குக் குறைவாக எடுத்திருந்தால் ,” என்னடா மார்க்கு வாங்கறாய் ஒரே “டென்மார்கா”ன்னா இருக்கு” என்று சத்தம் போடுவார். அப்படி ஒரு சராசரி மாணவனான அவனே S. S. L. C. தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் அறுபது சதவிகிதம் மதிப்பெண் வாங்கினான் என்றால் அவர் கற்றுத்தரும் முறைக்குத்தான் வெற்றி.

அவர் திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து ஒய்வு பெற்ற பின்பு, அவன் சொந்த ஊருக்குச் செல்லும் பொழுதெல்லாம் முதலியப்பபுரம் தெருவில் வசித்து வந்த அவரைச் சென்று பார்த்து வணங்கி வருவான். அவனுக்குத் திருமணத்தன்று அவனையும், மனைவி சீதாலக்ஷ்மியையும் வாழ்த்தும் பொழுது, அவனுக்கு மனைவியிடம்,” இவனுக்கும் நான் ஆசிரியர், ஒன்னோடு அம்மா “சங்கரிக்கும்” நான்தான் ஆசிரியராக இருந்தேன்…” என்று பெருமிதமாகச் சொல்லி ஆசீர்வதித்தார். அவரது சதாபிஷேகத்திற்கு ஒரு வாரம் முன்பு அவனும், அவனுக்கு மனைவியும் அவரது இல்லத்திற்க்குச் சென்று அவரை வணங்கினார்கள். அப்பொழுது அவன் எழுதிய “மனித நேயம்” என்ற கவிதைத் தொகுதியை அவருக்குக் கொடுத்தான். ரொம்பவும் மகிழ்ச்சியோடு அதை வாங்கிக் கொண்டு ,” என்னோடு மாணவன் ஒரு கவிஞன் பாத்தயா ” என்று அவரது வீட்டில் இருந்த உறவினர்களிடம் கூறிப் பெருமைப் பட்டுக் கொண்டார். அவரது மகள் முத்துலட்சுமி அவனுக்கு வகுப்புத் தோழி. மிகச் சிறந்த படிப்பாளி. வகுப்பில் அவள்தான் அனேகமாக முதல் “ராங்கில்” இருப்பாள் இல்லையேல் அவனக்கு நண்பன் வீரமணி முதலாவதாக வருவான். சமீபத்தில்தான் அவரது மகள் முத்துலக்ஷ்மியும் அம்பாசமுத்திரத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் கணக்கு ஆசிரியராக இருந்து ஒய்வு பெற்றிருக்கிறார் என்று சொன்னார்கள்.

“J. பாண்டியராஜ் ஐசக்”

am1அவனுக்கு பாண்டியராஜ் சார் அதிகம் வகுப்பு எடுக்காவிட்டாலும், அவரது அன்பும், கண்டிப்பும் அவனை கவர்ந்திருந்தது. மனித நேயம் மிக்க நல்லாசிரியர் அவர். சில ரேரங்களில் அவனுக்கு “பூகோள” வகுப்பு எடுத்திருக்கிறார். பாடத்தை நடத்தும் பொழுதே, மாணவர்களுக்கு ஒழுக்க நெறியையும் அவர் போதிக்கத் தவறுவதில்லை. அவனுக்கு அப்பாவிடம் பாண்டியராஜ் சாருக்கு நல்ல நட்புண்டு. அவனுக்கு சகோதரி பாலாவுக்கும் அவர் வகுப்பு எடுத்திருக்கிறார். மாணவ, மாணவியர்களைத் தன் குழந்தைகளைப் போல நடத்துவார். பெற்றோர்களின் கண்டிப்பும், குருவின் தெளிவும் அவரைப் போன்ற நல்லாசிரியர்களிடம் அவன் நேரில் கண்டிருக்கிறான். அவரும் தலைமை ஆசிரியராக இருந்துதான் ஒய்வு பெற்றார். சர்மாஜி சாலையில் உள்ள “மேரிஸ்டோர்”ரில் மாலை நேரத்தில் அவரைக் காண முடியும். அவனைப் பார்க்கும் போதெல்லாம்,” அம்பி…நல்ல பையனா இரு…ஒழுக்கம்தான் முக்கியம் அம்பி” என்று கனிவோடு கூறுவார்.

நெல்லை மாவட்டத்தில் ஒருமுறை சாதிக்கலவரம் வந்து, அனாவசியமாகப் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியும், அப்பாவி மனிதர்களை அடித்தும் ரகளை செய்தனர். அந்த நேரம் அவன் ஊருக்கு வந்திருந்தான். சென்னைக்குத் திரும்பிச்செல்ல வேண்டிய “பஸ்” செல்லவில்லை. அதனால் அன்று அவனால் சென்னைக்குத் திரும்ப முடியவில்லை. அந்தக் கலவர நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு “சாதீ” என்றொரு சிறுகதை எழுதினான். அந்தக் கதை “தாமரை” மாத இதழில் வெளியானது. அந்தக் கதையில் ஒரு ஆசிரியர், கலவரக்காரர்களை தடுத்து அமைதிப் படுத்த முயற்சிப்பார். அந்த ஆசிரியரின் பெயரை “பாண்டியராஜ்” என்று வைத்திருந்தேன் . அது ஒரு நன்றிக் கடன்.

“ஓவியர் அப்துல் மஜீத் “

மேல்நிலைப் பள்ளியில் அவனுக்கு ஓவிய ஆசிரியராக “அப்துல் மஜீத்” அவர்கள் இருந்தார்கள். அழகாகப் படங்கள் வரைவார். அதுபோலவே எயளிமையாகக் கற்றும் தருவார். கையில் ஒரு சாக்பீஸ் வைத்தபடியேதான் வருவார். வந்தவுடனே கரும்பலகையில் “சடக்கென” சில கோடுகளை வரைந்து, வண்ணம் தீட்டுவார். ஒரு அழகிய ஓவியம் ரெடி. “ஏலே..இந்தப் படத்த போடுங்க பாக்கலாம்” என்று ஒவ்வொரு மாணவனின் பக்கமும் வந்து அவர்கள் வரையும் முறையைத் தெரிந்து கொண்டு, திருத்த வேண்டிய இடங்களில் திருத்திக் கொடுப்பார். மாணவர்கள் நல்ல ஓவியங்களைப் பார்த்துப் பார்த்துப் பழக வேண்டும் என்று சொல்லுவார். அவன் பார்க்க அவர் வரைந்த முதல் ஓவியம் “தாமரை மலர்”. ஒன்பதாவது வகுப்பிற்குப் பாடம் எடுக்க வந்த முதல் நாளில் கரும்பலகையில் அவர் வரைந்த அந்த தாமரைப்பூவின் ஒவ்வொரு இதழ்களும் அவனுக்கு இன்றும் மஞ்சளும், இளஞ்சிவப்புகாக நினைவில் நிற்கிறது.

அவரது தந்தையார் “ஷேக் பீர் முகமது” அவர்கள் ஒரு தேசபக்தர். தியாகி கோமதி சங்கர தீட்சிதரின் சீடர் . திருவள்ளுவர் ஸ்டோர் என்ற பெயரில் ஜவுளிக்கடை வைத்திருந்தார். அவனுக்கு அப்பவும் மஜீத் சாரும் நல்ல நண்பர்கள். இங்கே ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியைப் பதிவு செய்ய விரும்புகிறேன். அவனுக்கு அப்பாவின் “சதாபிஷேகம்” 20.04.2008 அன்று சென்னையில் வைத்து நடைபெற்றது. அன்று காலையில் பூஜை ஆரம்பிக்கும் முன்பாக அவனுக்கு அப்பாவின் நெருங்கிய நண்பர் எம்.ஆர்.ஆதிவராகன் மாமா எட்டு மணிக்கெல்லாம் தொலைபேசியில் அப்பாவுக்கு வாழ்த்துக் கூறினார். அவர் பேசி முடித்த ஐந்து நிமிடங்களில் “பாண்டியராஜ் சார்” தொடர்புகொண்டு ,” அம்பி..அப்பாட்ட என்னோட வாழ்த்தச் சொல்லணும்” என்று கூறி அவனுக்கு அப்பாவுடன் பேசினார். அவர் வைத்த சில நொடிகளில் ,”விஸ்வநாதா…ஒங்கப்பா ..மீனாட்சிசுந்தரம் பக்கத்துல இருக்காரா…” என்று கேட்டு அவரும் அப்பாவுக்கு வாழ்த்துச் சொன்னார். ஒய்வு பெற்று பலவருடங்கள் ஆனாலும் அந்த நட்பு இன்றும் பலமாகவே இருக்கிறது. எப்பொழுது கல்லிடைகுறிச்சிக்குச் சென்றாலும் அவன் அவனது ஆசிரியர்களைப் பற்றி விசாரிப்பான். நேரிலும் சந்தித்துப் பேசி மகிழ்வான். அதுவும் வாழ்வில் ஒரு பேறு தானே.

10.09.2015

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *