Author: விவேக்பாரதி

  • உமையாள் திருப்புகழ் 5

     

    விவேக்பாரதி

     

    தனனதந்த தத்தத்த தந்த

    …தனனதந்த தத்தத்த தந்த

    ……தனனதந்த தத்தத்த தந்த – தனதானா !

     

    மணமறிந்த தெத்திக்கு மந்த

    …மதுவருந்த தித்தித்த வண்டு

    ……மதிமயங்கி சுற்றித்தி ரிந்த – மலரோடு

     

    மரமுவந்து கொட்டிக்க னிந்த

    …மணியிலிங்கு மொத்திட்ட தென்றல்

    ……மகிழவந்து கட்டிப்பு ரண்ட – கனியோடு

     

    கணமுமிங்கு சுற்றிக்கி டந்த

    …கடுமைகல்லின் செக்குற்ற எண்ணெய்

    ……கமழவந்து பற்றித்தி கழ்ந்த – அகலோடு

     

    கடவுளென்னு மொப்பற்ற வொன்று

    …கவலைதுன்ப மெத்திக்க ளைந்து

    ……கருணைதந்து சித்திக்கு மென்ற – மதியோடு

     

    பணியொடந்த கட்டிச்ச தங்கை

    …பவளதண்டை யிட்டுத்தொ டர்ந்து

    ……பரமதந்தை பக்கத்து றைந்து – நடமாடும்

     

    பருவமங்கை சக்திக்க தம்ப

    …பதமறிந்து துக்கத்தெ ழுந்து

    ……பகருமன்ப ருக்குச்சி றந்த – வுமையாளை

     

    அணிதிரண்டு சுற்றிக்கி டந்து

    …அழகுசங்க மத்தைப்பு கழ்ந்து

    ……அருளவென்று பற்றிப்ப டர்ந்து – தொழுவோமே !

     

    அயிலையந்த யிக்கட்ட ழிந்து

    ….மமரரங்கு சுற்றத்தை வெல்ல

    ……அழகனங்கை வெற்றிக்கு நல்கு – முமையாளே !

     

     

    Share
  • உமையாள் திருப்புகழ் – 4

    வித்தக இளங்கவி
    விவேக்பாரதி 

    தனத்த தந்தன தனதன தனதன
    தனத்த தந்தன தனதன தனதன
    ……
    தனத்த தந்தன தனதன தனதன – தனதானா ! 

    செழித்த மஞ்சளொ டழகுடை நுதலினிற்
    சிவக்க குங்கும மணிபெற அணிபவள்
    ……
    சிவத்தி னங்கமு முடையவ ளுமையவள – ளடிபேணிச்

    சிறக்கு மந்நிலை அடையுக விரையுக
    சிவத்தி னுள்பொரு ளறியுக உயருக
    ……
    சிதைக்கு மின்னலு மவளடி சரணெனின் – கடிதேகும் !

    கொழித்த கொங்கையு மதரமு முடலினில்
    குதிக்கு மங்கியு குழைகளு மிடையினில்
    ……
    குறுக்க ணிந்திடு மணிகளு மதிசயப் – பொருளாகும்

    கொடுக்க நல்வர மிழிவொடு துயரினைக்
    கெடுக்க வென்றவ ளழகினைத் தொழுதிடக்
    …….
    கொதிப்ப டங்கிடு மழிவுக ளழிவதைணர்வோமே !

    வழித்த டந்தனி லுமையவ ளதுபெயர்
    விளிக்க வந்திடு மொருபுது பலமொடு
    ……
    விழிக்கு ளிங்ஙண மரிதெனு மறிவென – உணர்ந்தேதான்

    வளத்தை நல்கிடு முலகதின் கதியெனும்
    வனக்கொ ழுந்தினை மதியினுள் நிறுவுக
    ……
    வருத்த மன்னையி னருளடி தொழுதிட – வுடனோடும்

    சுழித்த கங்கையுஞ் சுடர்விடு மதியொடு
    சுழற்றும் வெஞ்சின விழியது முடையரண்
    …..
    சுவைக்கு மெல்லித ழுடையவ ளுமையவ – ளெனநாடி

    சுகத்தைத் தந்திடு வெனமொழி பகருக !
    சொடுக்கி யின்னலைக் களையுக வெனுந்தினம்
    ……
    சுடர்க்க தம்பவி ழியினருள் பொழியுவ – ளுமையாளே !


     

    Share
  • உமையாள் திருப்புகழ் – 3

    வித்தக இளங்கவி
    விவேக்பாரதி

    தனன தனனனா தத்தன தத்தன
    …தனன தனனனா தத்தன தத்தன
    ……தனன தனனனா தத்தன தத்தன – தனதானா !

    அருளி லடியவ ருற்றிடு மத்துய
    …ரதுவு மழிவுற வைத்திடு மத்தனி
    …..னரசி பதகம லத்தினைப் பற்றுக – தினமோடி !

    அரச மகளெனத் ! தச்சனி னற்புத
    …அழகு மகவென ! இப்புவி மெச்சுற
    ……அரணின் தவமதை முற்றிட வைத்தவ – னுடல்சேரக்

    கருமை நிறமதை யுற்றிட, அத்தனைக்
    …கடலொ டுலகுப டைப்பவ னுக்கொரு
    …..கடுமை தவமதி யற்றிய சக்தியைப் – பணிவோமே !

    கரும வினையதை முற்றுமெ ரிப்பவள்
    …களப விழியருள் முக்திய ளிப்பவள்
    …..கவலை உடையவ ரத்துய ரெத்திடு – முமையாளே !

     

    Share
  • உமையாள் திருப்புகழ் – 2

    வித்தக இளங்கவி. விவேக்பாரதி

    images

    தத்தன தனதன தத்தன தனதன
    தத்தன தனதன – தனதான

    தத்தன தனவென நித்தமு நடமிடு
    …மத்தனி னுடலினில் – சரிபாதி
    முத்தென விடமம ருத்தமி பதகம
    …லத்தினை யடையுக – உலகோரே ! (1)

    மத்தள வயிறனு மத்தனை அழகுக
    …ளெட்டிட வுடலுடைக் – கசடாலே
    மொத்தமு மெழிலென வித்தக மமைவுறப்
    …புத்தருள் பொழிந்தவ – ளுமையாளே ! (2)

    மக்களி னிடறற மிக்கம கிழவவ
    …ரெக்கண மலறினு – முடனேகித்
    தக்கதொர் துணையெனப் பக்கமு மமைபவ
    …ளக்கறை அறியுக – உலகோரே ! (3)

    அக்கொடு மகிசிய ரக்கனு மழிவுறக்
    …கக்கிருள் விலகிட  – வருவோளைச்
    சிக்கெனப் பிடித்தவள் வக்கனை பதமல
    …ருக்கொரு சரணமு – மொழிவோமே ! (4)

     
    Share
  • உமையாள் திருப்புகழ்

    வித்தக இளங்கவி. விவேக்பாரதி

    காப்பு 
    ஆத்தாளை அண்ட மளந்தாளை ஏழுலகம்
    காத்தாளைக் என்றன் கவிதையினைப் – பூத்தாள
    வாவெனக் கூப்பிட்டு வார்க்கின்றேன் வண்ணப்பா !
    காவென்றேன் செந்தமிழே கா !

    பதிகம்
    அரனுடலில் பாதி
    …அமையவுரு வாகி
    …அழகுவடி வான – உமையாளே
    முருகனவ னாள
    …முழுமைமிகு வேலை
    …முறுவலொடு தந்த – உமையாளே
    திருவுடலில் மேவுங்
    …களபமத னாலே
    …திடமகவை யீன்ற – உமையாளே
    அருளினொளி பாய
    …அழிவுணர்வு மாய
    …அமைந்தகதி நீயே – உமையாளே ! (1)

    மனதுரையும் மாய
    …மினியகல நாளும்
    …மதிமொழியும் நாம – முனதேகாண்
    தனமுடைய தாயே
    …தயையருளு வாயே
    …தவறுகளைப் போக்கும் – வழிதேடி
    தினமுனது பாதத்
    …திருவருளை நாடும்
    …திசைவழியி லோர்க்கு – மருள்வாயே !
    கனகபத மாடிக்
    …கவிவனைய நாளும்
    …கடுகிவர மீனு – முமையாளே ! (2)

    பவளமணி தண்டை
    …படுவழகி லாரம்
    …பகருமிடைச் சூட்டி – அணிவோளே
    கவலையது போகிக்
    …கரிநெருப்பில் வேகக்
    …கடைவிழியில் பாரிங் – கதுபோதும் !
    தவழுமெழில் மாரில்
    …தமிழினணி பூட்டித்
    …தரணியிது காக்க – உடன்வாராய் !
    சிவனழகி தேவி !
    …சிறுமைகுண மேவி
    …சிதையுமுறை நீக்கி – யருளாயே ! (3)

    Share
  • “கட்டகழ கானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா”


    விவேக்பாரதி

    கவியரசு கண்ணதாசன் அவர்களது “கட்டகழ கானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா” என்கிற வண்ண மெட்டிற்கு திரு. கிரேஸி மோகன் எழுதச் சொல்லி நான் எழுதிய கவிதை.

     

    கன்னங் கரிதெனத் தோன்றும் இரவினில்
    …..கண்கள் விழித்திருப்பேன் – கவிப்
    …..பண்கள் படித்திருப்பேன் ! அடி
    கன்னி அழகினைக் காண அனுதினம்
    …..காற்றில் அலைந்திருப்பேன் – அடர்க்
    …..காட்டில் விழுந்திருப்பேன் !!

    எந்தத் திசையிலும் எங்கெங்கு காணிலும்
    …..உன்றன் திருமுகமே – எழில்
    …..கொஞ்சும் கலைமுகமே ! நிதம்
    சிந்தனை செய்கையில் கத்திக் கதறிடும்
    …..ஆசையில் நெஞ்சமடி – சுகம்
    …..ஆற்றிடப் பஞ்சமடி !

    கண்ணுக்கு முன்னொரு மாயை தெரியுது
    …..கைகளை நீட்டுகிறேன் ! – கனவின்
    …..பொய்களைக் காட்டுகிறாய் ! அடி
    பெண்மை இனத்தவர் காதல் மிகுத்திடும்
    …..பெட்டை மயிலினமே – இசை
    …..பெற்ற குயிலினமே

    எத்தனை நாளின்னும் ஏற்க பிரிவினை ?
    …..சொல்லடி கண்மணியே – எதிர்
    …..நில்லடி பெண்ணழகே ! இதழ்
    முத்தம் கொடுத்துயிர் மோட்சம் அடைந்திட
    …..முல்லை மலர்ச்சரமே – ஒரு
    …..சொல்லை உதிர்த்துவிடே !!!

    Share
  • நொண்டிச் சிந்து

    வித்தக இளங்கவி
    விவேக்பாரதி 

    நீல விசும்பிடையே – மிக
    …நீளக் கிடக்கும் வெளியிடையே
    கால மறிந்திடவே – அதோ
    …கடுகி வந்தது வான்பிறையே !
    சீல முடையதுவாய்ப் – பல
    …சீவனைக் காத்திட வல்லதுவாய்ச்
    சாலங்கள் காட்டிடவே – பிறைச்
    …சந்திர னாயிறை தோன்றினனே !

    நோன்பிருந்தார் உலகில் – அவர்
    …நோவை அகற்றியே நூதனமாய்
    வான்வழி வந்தவனே – அருள்
    …வாரிச் சொரிந்திருள் மாய்த்திடுவாய் !
    ஊன மகற்றிடுவாய் – வழி
    …உண்மையி லேயெமைக் கொண்டுசெல்வாய்
    ஞான மளித்திடுவாய் – எழில்
    …ஞாலத்தைக் காக்கும் இறையருளே !

    புனித ரமலானை – புவி
    …பூரிப் புடன்கொண் டாடிடவே
    மனிதர் வர்க்கத்திலே – துயர்
    …மன்னும் மனத்தை அழித்திடுவாய் !
    இனியொரு காதல்கொலை – வெறி
    …இனக்கொலை காணப் பொறுமையிலை
    எனதரும் இறையவனே – கொதிப்
    …பேறிக் கிடக்குதெம் நெஞ்சகழி !

    தீவினை ஓட்டிடுவாய் – நலம்
    …திக்கெட்டும் கொண்டுநீ சேர்த்திடுவாய்
    ஆவினைக் காத்திடுவாய் – நிலை
    …அழகி இயற்கையைக் காத்திடுவாய் !
    காவல் புரிந்தெமக்குப் – பழிக்
    …காட்டை எரிக்கும் கனல்கொடுப்பாய் !
    நாவி லுனைப்புகழ்ந்தோம் – இறை
    …நபியரு ளேவந்து நலமருளே !

    Share
  • இளைஞர்வாழ்க்கை

    விவேக் பாரதி

     

    உலகத்தார் பல்லோரும் இளைஞர் வாழ்வை
    உருப்படாத வாழ்வென்றே எண்ணு கின்றார்
    கலகந்தான் இவராலே நேரு மென்பார்
    கண்டபடி வாழ்ந்திடுவோ ரிளைஞ ரென்பார்
    விலக்கிடுவார் குடியிருப்பு பகுதி தன்னில்
    வீடுதர மறுத்திடுவார் இளைஞர் சேர்ந்தால்
    தலைகால்தான் புரியாமல் ஆட்டம் போட்டுத்
    தன்குடும்பப் பெயரையுமே கெடுப்ப ரென்பார் !!

    உண்மையிலே இளைஞரென்றால் யார்தான் சொல்வீர்
    உலகத்தை இயக்கவல்ல சக்தி காண்க
    நுண்ணறிவைக் கொண்டவர்கள் சாதி பேதம்
    நுகராத பாரதியின் கூட்டங் காண்க
    மண்முழுதும் மலரினங்கள் பூக்க வைக்க
    மனமிசைக்கும் தேனீக்க ளிளைஞர் காண்க
    கண்ணாறக் காண்பதெல்லாம் கலையே வென்று
    கவலைகளை மறக்கின்ற குலமே காண்க !!

    காதலெனும் தவம்புரியும் இளைஞர் ஞானி !
    கனலாகப் புரட்சிசெய்யு மிளைஞர் வீரர் !
    பூதலத்தி லழகுருவா மிளைஞர் பூக்கள் !
    புரியாத புதுமாற்றம் புதிய தோற்றம்
    மேதினியில் உடல்மற்றும் மனத்துக் குள்ளே
    மேன்மையுறக் காணுமவர் ஆய்வுக் கூடம் !
    வாதித்த லெளிதாமோ விடைக ளற்று
    வாழ்கின்ற கேள்வித்தாள் இளைஞர் வாழ்க்கை !!

    -விவேக்பாரதி
    04/07/16

    Share
  • நங்கநல்லூர் ஆஞ்சநேயர்

    விவேக் பாரதி

    கவிஞர் கிரேஸி மோகன் அவர்கள் எழுதிய வெண்பாக்கள் படித்து அவரது நடையில் நங்கனல்லூர் ஆஞ்சநேயர் மேல் எழுதிய வெண்பாக்கள். கேட்டவுடனே படம் தந்து உதவிய கவிஞர் கிரேஸி மோகன் அவர்களுக்கு என் நன்றி

    anjan

    மருதீ உன்றன் மணிவாசல் நாடிவந்தோம்
    பாருநீ தேடிவந்த பக்தருக்குச் – சீருநீ !
    மேருநீ ! பாருநீ ! தேருநீ ! ஊருணீ
    நீருநீ ! தீருநீ ஊறு !

    நங்கநல் லூருறை நம்பிரான் தோழ!க்கு
    ரங்குநீ ! காவேரி ரங்கனின் – பங்குநீ !
    நுங்குநீ ! தொங்குநீ ! எங்குநீ பொங்குநீ !
    கங்குநீ ! இங்குநீ தங்கு !

    பீமனுக் கண்ணா FIGUREதீண்டா நல்மார்பா !
    ராமனுக்குத் தோழா ! ரவிசீடா ! – ஷேமமே
    வேண்டிநிற் கின்றோம் வெடுக்கென நின்னருளைக்
    காண்டிபன்போ லெங்கட்கும் காட்டு !

    ரிஷ்யமுக பர்வதத்தில் இஷ்ட்டமில்லாச் சுக்கிரீவன்
    கஷ்டமதை மாய்த்தோர்க் கடியாளே ! – புஷ்டியான
    தோளுடையாய் எந்நாளும் தோற்காத கதையுடையாய் !
    ஆளென எம்மையுமேற் றாள் !

    பங்கன பல்லியாய்ப் பார்த்தாய்ப் பகலவனை !
    அங்கதன் போற்றிடும் UNCLEநீ ! – நங்கநல்
    லூருறைத் தேவனே பேருரைக் கின்றோமே
    சீருறநீ வந்தால் சிறப்பு !

    -விவேக்பாரதி

    படம் : கிரேஸி மோகன்

    Share