விவேக் பாரதி

 

உலகத்தார் பல்லோரும் இளைஞர் வாழ்வை
உருப்படாத வாழ்வென்றே எண்ணு கின்றார்
கலகந்தான் இவராலே நேரு மென்பார்
கண்டபடி வாழ்ந்திடுவோ ரிளைஞ ரென்பார்
விலக்கிடுவார் குடியிருப்பு பகுதி தன்னில்
வீடுதர மறுத்திடுவார் இளைஞர் சேர்ந்தால்
தலைகால்தான் புரியாமல் ஆட்டம் போட்டுத்
தன்குடும்பப் பெயரையுமே கெடுப்ப ரென்பார் !!

உண்மையிலே இளைஞரென்றால் யார்தான் சொல்வீர்
உலகத்தை இயக்கவல்ல சக்தி காண்க
நுண்ணறிவைக் கொண்டவர்கள் சாதி பேதம்
நுகராத பாரதியின் கூட்டங் காண்க
மண்முழுதும் மலரினங்கள் பூக்க வைக்க
மனமிசைக்கும் தேனீக்க ளிளைஞர் காண்க
கண்ணாறக் காண்பதெல்லாம் கலையே வென்று
கவலைகளை மறக்கின்ற குலமே காண்க !!

காதலெனும் தவம்புரியும் இளைஞர் ஞானி !
கனலாகப் புரட்சிசெய்யு மிளைஞர் வீரர் !
பூதலத்தி லழகுருவா மிளைஞர் பூக்கள் !
புரியாத புதுமாற்றம் புதிய தோற்றம்
மேதினியில் உடல்மற்றும் மனத்துக் குள்ளே
மேன்மையுறக் காணுமவர் ஆய்வுக் கூடம் !
வாதித்த லெளிதாமோ விடைக ளற்று
வாழ்கின்ற கேள்வித்தாள் இளைஞர் வாழ்க்கை !!

-விவேக்பாரதி
04/07/16

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.