வித்தக இளங்கவி
விவேக்பாரதி 

நீல விசும்பிடையே – மிக
…நீளக் கிடக்கும் வெளியிடையே
கால மறிந்திடவே – அதோ
…கடுகி வந்தது வான்பிறையே !
சீல முடையதுவாய்ப் – பல
…சீவனைக் காத்திட வல்லதுவாய்ச்
சாலங்கள் காட்டிடவே – பிறைச்
…சந்திர னாயிறை தோன்றினனே !

நோன்பிருந்தார் உலகில் – அவர்
…நோவை அகற்றியே நூதனமாய்
வான்வழி வந்தவனே – அருள்
…வாரிச் சொரிந்திருள் மாய்த்திடுவாய் !
ஊன மகற்றிடுவாய் – வழி
…உண்மையி லேயெமைக் கொண்டுசெல்வாய்
ஞான மளித்திடுவாய் – எழில்
…ஞாலத்தைக் காக்கும் இறையருளே !

புனித ரமலானை – புவி
…பூரிப் புடன்கொண் டாடிடவே
மனிதர் வர்க்கத்திலே – துயர்
…மன்னும் மனத்தை அழித்திடுவாய் !
இனியொரு காதல்கொலை – வெறி
…இனக்கொலை காணப் பொறுமையிலை
எனதரும் இறையவனே – கொதிப்
…பேறிக் கிடக்குதெம் நெஞ்சகழி !

தீவினை ஓட்டிடுவாய் – நலம்
…திக்கெட்டும் கொண்டுநீ சேர்த்திடுவாய்
ஆவினைக் காத்திடுவாய் – நிலை
…அழகி இயற்கையைக் காத்திடுவாய் !
காவல் புரிந்தெமக்குப் – பழிக்
…காட்டை எரிக்கும் கனல்கொடுப்பாய் !
நாவி லுனைப்புகழ்ந்தோம் – இறை
…நபியரு ளேவந்து நலமருளே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.