திவாகர்

 2 (1)

என்னன்புக் கண்மணியே பதில்சொல்வாயே

இன்னமும்ஏன் தயக்கமும் தாமதமும்

உனக்கொரு மணாளனென ஒருவனை

உனக்களித்த உரிமையில் தேர்ந்தெடுப்பாய்

இந்திரனென ஒருவன் வந்தானேகண்டாயோ

சந்திரனென இன்னொருவனும் வந்தான்

இருவருமே அழகில்அறிவில் வல்லவர்தாம்

ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்லர்தாம்

ஆனாலும் உனைப்பெற்ற தாயாம்நான்

எனக்குள் தோன்றியதைச் சொல்வேன்கேள்

கொடைவழங்குவதில் சிறந்தவனாம் இந்திரன்

மடைதிறந்து ஓடிவரும்நீர்போல செல்வத்தை

அனைவருக்கும் மகிழ்வோடு வழங்குபனாம்

பனைமரம்போல பலரும் பயன்பெறுவாராம்

ஊருலகத்தில் போற்றுகிறார் அனைவரும்

பாரிமன்னன் போனபிறகு பாரிலுள்ளோர்

வாடாதிருக்க வறுமைதீர வந்தவனாம்

கொடுத்துக்கொடுத்து சிவந்த கைகொண்ட

மாபாரதக் கர்ணன்போல சீரும்சிறப்பாக

மாபெரும் பெயர்பெற்றவனே இந்திரன்

ஊருக்குதவுவார் ஒருவர் இவன்போல்

இருந்தால் ஒவ்வொருஊரும் செழிக்குமே

வள்ளல்வள்ளல் இவனென பார்போற்ற

வள்ளல்தம்மனைவி எனஉனை ஊர்போற்றும்

பாழும்பூமியிலே பஞ்சமும் பாதகமும்

வாழும்காலம்முதலாய் பார்த்தவள் நான்

பசித்தவர்க்கு ஈயாதோர் பலரிருக்கும்பூமியிலே

கசிந்தஉள்ளம் கொண்டிருப்போர் ஒருசிலரே

நல்லோர்களெல்லாம் நலிந்துவரும் காலமிது

நல்லார்க்கு நல்லானாகவந்தவனடி இந்திரனே

தாயாகநானொருத்தி என்னதான் எடுத்துரைத்தும்

வாயும்வயிறும் வேறுவேறுபோல தனக்கென்ற

ஓர்கருத்து எனக்குமுண்டு உனக்குமுண்டு

சீர்தூக்கிப் பார்த்துச் சொல்லடிஎன்கண்மணி!

என்னவென சொல்வேன் எனதருமைத்தாயே

என்னவராய் யார்தான் வரவேண்டுமென்பதை

உன்னைவிட யாரறிவார் யார்சொல்வார்

உன்வார்த்தையே என்வேதமென நீயறிவாய்

இந்திரனைக் கண்டாய் இனியவைசொன்னாய்

சிந்தையிலேபட்டதை சிறப்பாகச் சொன்னாய்

கவுரவரின்தோழன் கர்ணனோடு ஒப்பிட்டாய்

சிவந்தகைகள்தான் கர்ணனுக்கு ஆனாலம்மா

அவைகொடுத்துச் சிவந்தன என்றாநினைத்தாய்

அவையிலன்று பாஞ்சாலி துடித்துக்கதறும்போது

கைக்கொட்டி கொட்டிவலித்துச் சிவந்தகரங்களம்மா

கைநிறையக் கொடுத்தான்கர்ணன் உண்மை

கொடையில் நிகரிலாதவன் அதுவும்உண்மை

கொடைஒன்று போதுமோ குணத்துக்குஅம்மா?

கெடுவார்பக்கம் நின்று கெடுதல்நினைத்தவன்

சுடும்வார்த்தைகளால் பஞ்சவரை நிந்தித்தான்

கர்வம்கொண்டவனாய் பழிதீர்க்கும் பகைவனாய்

கர்ணன்போல கணவன் உன்மகளுக்குவேண்டுமா

உயர்ந்தகுணம்தான் கொடையென்றகுணம் உண்மை

உயர்வான வாழ்க்கைக்கு அதுவொன்றேபோதுமோ

சந்திரனும்வந்தானம்மா வானத்தின் முழுநிலவுபோல

சிந்தையிலே நின்றானம்மா சிந்தித்துப்பார்த்தேன்

ஒளியிழந்த என்நெஞ்சத்தில் ஒளிபாய்ச்சினான்

வளமைகொண்ட வாக்கினால் தேனூட்டினான்

உள்ளொன்று வைத்து புறமொன்றுபேசாமல்

உள்ளத்தின்நல் ஒளியைமுகத்தில் காண்பித்தான்

கள்ளங்கபடமில்லா அவன்போக்கும் பேச்சுமென்

உள்ளத்துள் புகுந்ததம்மா உள்ளதெலாம்புரிந்ததம்மா

உண்மையே பேசுகிறான் நன்மையாய்பேசுகிறான்

பண்போடுபழகுகிறான் பார்வைக்கும் இனியவனே

சொல்லில் இனிமைஇருந்தால் வாழ்வுஇனிதாகும்

நல்வார்த்தை அவன்பேச்சு நற்குணமேஅவன்மூச்சு

வள்ளல்தம்மனைவி எனயென்மனம் ஏற்கவில்லை

உள்ளத்துஇனிமையை தன்முகத்தில் காட்டியவனே

உள்ளத்துக்குள்ளே வள்ளலாய் வாழ்கின்றானம்மா

உள்ளம் ஒன்றிவிட்டால் இனியேதுதேர்தல்?

இந்திரனைநான் தூற்றவில்லை தாயேஆனால்

சந்திரனைப் போற்றுகிறேன் நல்லதுணைஅவனே!!

******************************************

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து 
இன்சொலன் ஆகப் பெறின் (திருக்குறள் – 92)

முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க