Category: ஆய்வுக் கட்டுரைகள்

ஆய்வுக் கட்டுரைகள்

  • மாண்டூக்கிய உபநிஷத்து — எளிய விளக்கம் — 4

    ஒரு அரிசோனன்

    நமது விருப்பத்தை அடைய, அதற்கான வழிகளை என்னவேண்டும்;  எண்ணத்தை வெளியிட, அதை மற்றவர்கள் மூலமோ, இணைந்தோ செயல்படுத்த மொழி வேண்டும்.  மொழிதான் ஒரு குமுகத்தின் இணைப்புப் பாலம்.  குமுகம் மட்டுமல்ல, செயல்படும் அனைத்தின் இணைப்புப் பாலமும் கூட.  மொழி ஒளியாகத்தானே வெளிவருகிறது!

    அந்த ஒலியின் முதல் ‘அ’தானே!

    அந்த ‘அ’காரமே மிகச் சுருக்கமாக ‘அ’காரத்தை அறிந்தவன், விஸ்வாநரன் என்று சொல்லப்படும், விழித்திருக்கும் நிலையில் உள்ள ஆத்மனின் முதல் பகுதியை அறிந்தவன், அதற்கேற்பச் செயல்பட்டால் [நனவு நிலையில்] விருப்பப்பட்டதை அடையலாம் என்று பூடகமாகச் சொல்லுகிறது உபநிஷத்து…

    mu10

    ஸ்வப்னஸ்தா2னஸ்தைஜஸ உகாரோ த்3விதீயா மாத்ரோத்கர்ஷாது3ப4யத்வாத்3வோத்கர்ஷதி ஹ வை ஞானஸந்ததிம் ஸமானஸ்ச ப4வதி நாஸ்யாப்3ரஹ்மவித்குலே ப4வதி ய ஏவம் வேத3||                                                          —  10

    கனவு நிலையில் இருக்கும் தைஜஸன் இரண்டாம் ஒலியான [எழுத்தான] ‘உ’காரமாக உயர்ந்த நிலையிலும், இடைநிலையிலுமே இருக்கிறான்.  யார் இவ்வாறு அறிகிறானோ அவன் ஞான வழிமரபை உயர்த்துகிறான்.  சமமானவனாகவும் ஆகிறான்.   அவனது வழித்தோன்றல்களில் பரம்பொருளை [பிரம்மத்தை] அறியாதவர் இருக்கமாட்டார்.        – 10

     பதவுரை: ஸ்வப்னஸ்தான: – கனவுநிலையில் இருக்கும்; தைஜஸ: – தைஜஸன்; த்விதீயா மாத்ரா – இரண்டாம் ஒலியான [எழுத்தான];  உகார: – உகாரமாக [அ என்னும் ஒலியாக]; உத்கர்ஷாது – உயர்ந்தவனாகவும்; உபயத்வாது ஹ வை  – இடையில் இருப்பவனாக்கவுமே இருக்கிறான்; ய:: – எவன்;  ஏவம் வேத – இவ்வாறு அறிகிறானோ; ஞான சந்ததிம் – ஞானவழி மரபை; உத்கர்ஷதி – உயர்த்துகிறான்; ஸமான: ’ச – சமமானவனாகவும்; ப4வதி –  ஆகிறான்;  அஸ்ய குலே – அவனது வழித்தோன்றல்களில்; அ ப்ரஹ்மவித் – பரம்பொருளை [பிரம்மத்தை] அறியாதவர் ; ந ப4வதி –  இருப்பதில்லை..

    விளக்கம்:  இரண்டாம் ஒலியான ‘உ’காரமானது உயர்ந்தவனும்,, இடைப்பட்டவனுமான ஆத்மனின் இரண்டாம் பகுதியான தைஜஸன் என்று உபநிஷத் உரைக்கிறது.

    அத்துடன் இவ்வுண்மையை உணர்ந்து அறிபவன் ஞானவழி மரபை உயர்த்துவதோடு மட்டுமல்லாது, அனைவருக்கும் சமமானவன், என்றும் சொல்கிறது.

    சமமானவர் என்றால் யார் என்று பார்ப்போம்.

    சமம் என்றால் உயரத்திலா, எடையிலா, நிறத்திலா, அறிவிலா, திறமையிலா, செல்வத்திலா, மற்ற  எதில் சமம்?

    ஆத்மனே பரம்பொருள் என்றும், இருந்தது, இருப்பது, இருக்கப்போவது எல்லாமே ஓங்காரம்தான், ஓங்காரமே பரம்பொருள் என்றால் ஆத்மனின் பகுதிகளும் சமமாகத்தானே இருக்கவேண்டும்!  அதுமட்டுமா? வெளியுலகில் அறிந்த அனைத்தும் கனவுநிலையில் நுண்ணறிவாகத்தானே புலப்படுகின்றன!  அந்த ஒளிமயமான எண்ணப் பதிவுகளில் அனைத்தும் சமமே!  எல்லா அறிவுகளும் அங்கு ஒன்றன்மேல் ஒன்றாக வந்து பதிகின்றன.  கனவுலகமே ஒரு ஒளிமயமான நூலகம்.அங்கு எல்லா அறிவுகளும் உள்ளன.  அறிவின் முன்னர் அனைத்தும் சமமே.  ஏழை-பணக்காரன், ஆண்-பெண், பலசாலி-வலிமையற்றவன் என்ற வேறுபாடே கிடையாது.இவர்கள் அனைவரின் அறிவும் அங்கு நிறைந்துள்ளது.  நினைவுகளின் முன்பு அனைவரும் சமமே.  இந்த அறிவின் கருவூலமான தைஜஸன் அனைத்துக்கும் சமமானவன்.

    ஞானவழி மரபை உயர்த்துபவன் என்றால்…

    சந்ததி என்றால் ஒருவனுக்குப் பிறக்கும் குழந்தைகள் என்றுதானே பொருள், ஞானசந்ததி என்றால் அறிவுள்ள குழந்தைகள் என்றுதானே புரிந்துகொள்ளவேண்டும், ஞானவழி மரபு என்ற புதுப் பொருள் கொடுத்தால் எப்படி என்று கேள்வி எழலாம்.

    teacher and studentsஒருவர் தன்னிடம் இருக்கும் அறிவை இன்னொருவருக்குப் புகட்டினால் புகட்டுபவர் புகடப்படுபவருக்குத் தந்தை ஆகிறார்.  எனவேதான் ஆசானைத் தந்தை என்றும் சொல்லப்படுகிறது.

    இதெல்லாம் பத்தாம்பசலித்தனம், ஆசானாவது, தந்தையாவாது, இதெல்லாம் பேத்தல், அறிவுக்கு ஒவ்வாதது என்றுதான் இன்றைய அறிவியல் வாதிக்கும்.  நாம் ஒன்றைக் கற்றுக்கொள்ள விரும்புகிறோம்.  கல்விக்கூடங்களுக்கு கட்டணம் செலுத்துகிறோம்;  அதில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டு நமக்கு கல்வி கற்பிக்கிறார்கள்.  அதற்காக அவர்களை நமது பெற்றோருக்கு இணையாகக் கருதமுடியுமா என்றுதான் கேள்வி வரும்.

    இந்தக் கேள்வியெல்லாம் நான் காசு கொடுக்கிறேன், எனக்குக் கல்வி போதிக்கப்படுகிறது;  எனவே, எனக்குக் கல்வி கற்பிப்பவர்கள் எனது வேலைக்காரர்கள் என்ற மனநிலையால் ஏற்படும் மயக்கமேயன்றி வேறொன்றுமில்லை. எவ்வளவு செல்வம் கொடுத்தாலும் கல்வி தானாக வந்துவிடாது. ஆசான், மாணவர் இருவருமே ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அக்கறையோடு செயல்பட்டால்தான் அது கல்வியாகும்.  அதனால்தான் கல்விக்கூடத்தை ஊட்டி வளர்க்கும் அன்னை [Alma-mater] என்றழைக்கும் பழக்கம் இருக்கிறது.  கல்விக்கூடத்தை அன்னை என்றால், கற்பிப்பவர்கள் தந்தையாகவும், தாயாகவும்தானே ஆகமுடியும்.

    அதனால்தான் இங்கு சந்ததி என்பதற்கு மரபு என்ற பொருள் பகரப்படுகிறது.  ஆத்மனின் அறிவின் கருவூலம் என்று அறிபவர் அனைவரையும் சமமாகத்தான் கருதுவார் அறிவை, ஞானத்தை அனைவருக்கும் சமமாக வழங்குவார்; ஞானவழி மரபை உயர்நிலைக்குக் கொண்டுவருவார்.  அதுவே இந்தச் சொற்றொடர் மூலம் விளங்குகிறது.

     அவனது வழித்தோன்றல்களில் பரம்பொருளை [பிரம்மத்தை] அறியாதவர் இருக்கமாட்டார் என்று பதவுரை தருகிறீர்களே, குலம் என்றுதானே போட்டிருக்கிறது, குலம் என்றால் சாதிதானே, இந்த உபநிஷத்து மறைமுகமாக சாதி உணர்வைத்தானே வளர்க்கிறது, அதை மறைக்க வழித்தோன்றல் என்று பொருள் கொடுத்து அதை மறைக்கலாமா என்று ஒரு கேள்வியும் எழலாம்.

    அதற்கும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.mother and child

    தாய்க்குலம் என்று சொல்கிறோமே, அப்படியென்றால் தாய் என்பது ஒரு சாதியா, இல்லையே!  பெண்கள் அனைவரும் தாய் ஆகிறார்கள், எனவே அவர்கள் அனைவரையும் ஒருமைப்படுத்தி, தாய்க்குலம் என்று வழங்கப்படுகிறது.  அதுபோலத்தான் ஒரே மாதிரியானவர்களைக் குலம் என்று சொல்லப்படுகிறது.

    இங்கும் அதேமாதிரியான கருத்துடன்தான் குலம் என்று கூறப்படுகிறது.

    மெய்ஞானத்தால் பரம்பொருளை அறிய இயலும் என்னும்போது, அப்படிப்பட்ட அறிவை, ஞானத்தைக் கற்பிப்பவர்கள் அந்த அறிவை வாழையடி வாழையாகத் தனது சீடர்களுக்குக் கற்பிக்கிறார்கள.  எனவே அந்த மெய்ஞானத்தை அறிபவர்களின் குமுகம், கூட்டம், குழு, வழித்தோன்றல்கள் [வழிவழியாக மெய்ஞானத்தைக் கற்பவர்கள்] பரம்பொருளின் ஞானத்தைப் பெற்றிருப்பார்கள் என்று உபநிஷத்து உரைக்கிறது…

    இங்கு ஆதி சங்கரரின் விளக்கத்தையும் அறிந்துகொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இரண்டாம் எழுத்தான ‘உ’காரத்திற்கும், தைஜஸனுக்கும் என்ன ஒற்றுமை?  ஒரு பொதுவான சிறப்பியல்பாக உயர்வைச் சொல்லலாம்.  ‘உ’ என்ற ஒலி ‘அ’வைவிடச் உயர்ந்தது[1].  அதைப்போலவே தைஜஸன் வைஸ்வாநரனைவிட உயர்ந்தவன்[2].  இன்னொரு பொதுவான சிறப்பியல்பாகச் சொல்லக் கூடியது – ‘உ’, ‘அ’வுக்கும், ‘ம்’க்கும் இடையில் இருக்கிறது;  அதுபோல, தைஜஸனும், வைஸ்வாநரனுக்கும், ப்ராக்ஞனுக்கும் இடையில் இருக்கிறான். 

    இப்பொழுது இந்த அறிவின் [ஞானத்தின்] விளைவு, பயன் விளக்கப்படுகிறது.  அறிவு – ‘உ’காரத்தை இனம் கண்டுகொண்டதனால் ஏற்படும் அறிவு – எப்பொழுதுமே அதிகமாகிறது.  அதாவது, அவனது அறியும் திறன் மிகவும் அதிகமாகிறது.  இவ்வறிவு பெற்றவன் அனைவராலும் அவ்வாறே [அறிவாளி என்றே] அறியப்படுகிறான் அவனது நண்பர்களைப் போல அவனது எதிரிகளும் அவனைக்கண்டு [அவனது அறிவைக்கண்டு] பொறாமைப் படுவதில்லை. மேலும், இவனது மரபில் [இவனிடம் அறிவைப் பெற்றவர்கள்] பரம்பொருளை அறியாதவராக இருக்கமாட்டார்கள்.

    [1] ‘அ’ என்னும் ஒலி முதலில் வருவதால் அது அனைத்து ஒலிகளைக் காட்டிலும் உயர்ந்ததானாலும், ‘அ’வுக்குப் பின்னால் வருவதால் ‘உ’ உயர்ந்தது என்று மறைமுகமாக எண்ண வாய்ப்பிருக்கிறது.

    [2] விஸ்வாநரன் தூலப் பொருள்களையே [ஐம்புலன்களால் உள்ளி உணர்வதையே] விரும்புவதாலும், அவனது அறிவு தூலப் பொருள்களையே நம்பி இருப்பதாலும், நுண்ணுணர்வு மூலம் அனைத்தையும் அறியும் தைஜஸன் விஸ்வாநரனைவிட உயர்வாக அறியப்படுகிறான்.

    mu11

    ஸுஷுப்தஸ்தா2ன: பராக்ஞோ மகாரஸ்த்ருதீயா மாத்ரா மிதேரபீதேர்வா மிநோதி ஹ வா இதஹும் ஸர்வமபீதிஸ்ச ப4வதி ய ஏவம் வேத3 ||                                                            —  11

    அளப்பதினாலும், ஒன்றியதாலும், ஆழ்உறக்க நிலையினான  அறிவாளி [ப்ராக்ஞன்] உண்மையில் ‘மூன்றாம் ஒலி[எழுத்து]யான ம’காரமே [‘ம்’ என்ற ஒலியே]. எவன் இவ்வாறு அறிகிறானோ [அவன்] இவை எல்லாவற்றையும் அறிந்துகொண்டு தன்னுள் ஒடுங்குகிறான்.                                                                                                                                     – 11

    பதவுரை: ஸுஷுப்தஸ்தான: – ஆழ்உறக்கநிலையில் இருக்கும்; ப்ராக்ஞ: – பிராக்ஞன் [அறிவாளி]; மிதே: அபி – அளப்பதினாலும்; அபீதே: வா – உள்ளே ஒடுங்குவதலுமே த்ருதீயா மாத்ரா – மூன்றாம் ஒலியான [எழுத்தான];  மகார: – ‘ம’காரமே [ம் என்னும் ஒலியே]: ய:: – எவன்;  ஏவம் வேத – இவ்வாறு அறிகிறானோ; இதஹும் சர்வம் – இவை எல்லாவற்றையுமே; அபீதி: ச – உள்ஒடுங்குபவனாகவும் பவதி – ஆகிறான்; மினோதி ஹ வா  – நிச்சயமாக உள் அளப்பவனாகவும் [ஆகிறான்].

    விளக்கம்:  நாம் எதிர்பார்த்தபடி மூன்றாம் ஒலியான ‘ம்’ ஆத்மனின் மூன்றாவது பகுதியான பிராக்ஞன் என்று உபநிஷத்தின் பதினொன்றாவது சொற்றொடர் செப்புகிறது.  முந்தைய சொற்றொடர்களைப் போலவே, பிராக்ஞனுக்கும் இரண்டு குணங்களைக் குறிப்பிடுகிறது – அளப்பவன், உள்ளே ஒடுங்குபவன் அல்லது ஒன்றுபவன்.

    அளப்பவன் என்றால் எதை அளக்கிறான்?  எங்கு ஒன்றுகிறான்?

    ஆழ்உறக்க நிலையில் உள்ளே இறையுடன் ஒன்றுகிறான் என்றான் ஒருவகையில் ஒப்புக்கொள்ளலாம்.  ஆனால் எண்ணங்களின் குவியல்களாக இருக்கும் பிராக்ஞன் எதை அளக்கிறான்?

    ஆதி சங்கரர் இதைப்பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.sankaracharya

    ஒரு பயிர் வளரும்போது அது பலவிதமாக அளக்கப்படுகிறது.  முதலில் விதையாக இருக்கும் அது, தூவப்பட்ட இடத்தில் முளைவிட்டு நிலத்தைவிட்டு வெளிக்கிளம்புகிறது.  பிறகு நாற்றாக இருக்கும்போது அது இருக்கும் இடத்தைவிட்டு பெயர்த்தெடுக்கப்பட்டு சரியான இடைவெளிவிட்டு, நன்கு வளரும்படி நடப்படுகிறது.  அப்படி நடப்பட்ட பயிர் நன்கு வளர்ந்து, பூத்துக் கதிர்விடுகிறது.  இவை அனைத்தையும் குடியானவன் கவனித்து, பயிரின் வளர்ச்சியை அளந்து, அதற்கு நீர்பாய்ச்சுகிறான். அவன் ஆதிக்கமாகவும் நீர் பாய்ச்சுவதில்லை, குறைத்தும் விடுவதில்லை.  சரியான அளவுக்கே நீர் பாய்ச்சுகிறான்.  நாற்றைப் பிடுங்கி நடும் முன்னரும், அது சரியான அளவுக்கு வரந்திருக்கிறதா என்று அளவிட்டபின்னே அதைச் செய்கிறான்.

    கதிர் முற்றியபின்னரும், அது அறுவடை செய்யத்தக்க நிலையை அடைந்துவிட்டதா என்று அளந்தபின்னரே அதை மேற்கொள்கிறான்.farmer

    அதைப்போலவே வைஸ்வாநரனும், தைஜஸனும் அவர்களது பரிணாம வளர்ச்சியின்போதும், உள்ஒடுங்கி, ஆழ்உறக்கத்தில் ஒன்றி பிராக்ஞனாக பரிணாம மாற்றமடையும்போதும் பிராக்ஞநால் அளக்கப்படுகிறார்கள்.

    அதேமாதிரி ஓம் என்னும் சொல்லில் உள்ள அகாரமும், உகாரமும் ஒன்றி ஓகாரமாகி ‘ம்’முடன் ஒன்றுவதையே இச் சொற்றொடர் குறிக்கிறது.  மீண்டும் ஓங்காரத்தை ஒலிக்க, மகாரத்திலிருந்தான் – ‘’ம்’ என்னும் ஒலி நின்றபின்னரே, அகாரமும், உகாரமும் வெளிக்கிளம்புகின்றன.

    இன்னொருவிதமாக விளக்கினால், விழித்திருக்கும்போது ஆத்மனாகிய நாம் வெளியுலகிலிருந்து பெரும் அத்துணை உணர்வுகளும், அறிவுகளும், கனவுறக்க நிலையில் அதே ஆத்மனாகிய நாம் காணும் ஒளிமயமயமான நுண்ணுணர்வுகளும், தோற்றமற மறைந்து, ஆழ்உறக்க நிலையில் இருக்கும் ஆத்மனாகிய நம்மிடம் ஒடுங்கிவிடகின்றன —  மீண்டும் நாம் நனவு, கனவு நிலைக்குத் திரும்பும் வரையும்.

    எனவே பிராக்ஞன் வைஸ்வாநரன், தைஜஸன் இவர்களின் எண்ணங்கள், உணர்வுகள், அறிவுகள் இவையெல்லாம் வைக்கப்படும் ஒரு கொள்கலமாக ஆழ்உறக்கநிலையில் இருக்கும் பிராக்ஞன் ஆகிறான்.

    அதாவது வைஸ்வாநரனும், தைஜஸனும் ஆழ்உறக்க நிலையில் பிராக்ஞனுடன் ஒன்றி விடுகிறார்கள் —  ஒடுங்கிவிடுகிரார்கள் – ஒன்றாக ஆகிவிடுகிறார்கள்…merging atmans

    இப்படி எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றாக ஒடுங்குகிறது என்றால் என்ன, ஓங்காரத்தின் ஒவ்வொரு ஒலியையும் அறிந்தவர் இப்படிப்பட்ட பலன்களை அடைவார்கள் என்று உபநிஷத்து சொல்கிறதே,  ஒலியை ஆத்மனின் ஒவ்வொரு பகுதி என்று அறிவதா, புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறதே என்ற கேள்வி பிறக்கிறது.

    இதற்கு பதிலாகச் சொல்லபடுவதுதான் தியானம் [meditation].

    ஒரு மந்திரம் என்பது மனதிற்குள் சொல்லப்படுவது.

    ஓம் என்பது ஒரு மந்திரம்.  இந்த மந்திரத்தை மனதில் சொல்லும்போது, மனதை ஒருநிலைப்படுத்தும் பொது – ‘அ’ என்ற ஒலியிலோ, ‘உ’ என்ற ஒலியிலோ, ‘ம்’ என்ற ஒலியிலோ மனதை ஒருநிலைப்படுத்தித் தியானிக்கும்போது, தியானிப்பவர்கள், அவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தும் ஒலிக்குத் தகுந்தாவாறு வைஸ்வாநரனையோ, தைஜஸநியோ, பிராக்ஞனையோ உணருகிறார்கள்/ஒன்றுகிரார்கள்/அறிகிறார்கள். அப்படி நடக்கும்போது தன்னுள் இருக்கும் ஆத்மனை அறிகிறார்கள்

    அந்தந்த ஆத்மனின் பிரிவுக்குள்ள குணங்கள் அனைத்தும் கைவரப்பெறுகிறார்கள்.

    அதுசரி, ஏன் வைஸ்வாநரன் தைஜஸனுடன் ஒன்றவேண்டும், அப்படி ஒன்றியபின், தைஜஸன் ஏன் பிராக்ஞனுடன் ஒன்றவேண்டும்?  இவர்கள் ஆத்மனின் மூன்று பிரிவுகள் தானே, ஏன் ஒவ்வொன்றாக ஒன்றுகிரார்கள் என்ற நியாயமான கேள்வியும் நம்முள் எழுகிறது.

    உதாரணமாக நாம் ஒரு பாத்திரத்தில் பாலை வைத்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்;  அதை நான்காகப் பிரித்து, வெவேறு நிறங்களுடைய கண்ணாடிப் பாத்திரங்களில் ஊற்றிவைக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.  பாலின் நிறம் அது ஊற்றிவைக்கப்படும் கண்ணாடிப் பாத்திரத்தின் நிறமாகத்தானே தெரியும்?

    முதல் பாத்திரம் மஞ்சள் நிறம் – அதனுள் இருக்கும் பால் [ஆத்மனின் பிரிவாகிய வைஸ்வாநரன் – நமது வெளிஅறிவால் உணரக்கூடிய அண்டம்]

    இரண்டாம் நீல நிறப் பாத்திரத்தில் இருக்கும் பால் தைஜஸன் – அண்ட மனம்.

    மூன்றாவது சிவப்புப் பாத்திரத்தில் பிராக்ஞன் இருக்கிறது.  அதுதான் குணமுள்ள ஈஸ்வரன் [சகுணப் பிரம்மம்]  ஈஸ்வரனே அனைத்தின் தோற்றமாகவும், அதன் முடிவாகவும் இருக்கிறான்.  அவனே விழிப்புநிலையில் நாம் ஐம்புலன்களாலும் உணரும் அண்டங்களையும், கனவுநிலையில் காணும் உணர்வுகளையும், காட்சிகளையும், ஆழ் உறக்க நிலையில் ஒன்றுமில்லா நிலைக்கும் ஒன்று சேர்க்கிறான்.  நனவும், கனவும் ஒன்றுமில்லா நிலையில் [ஆழ்உறக்க நிலையில்] ஒன்றிவிடுகின்றன.

    water in colored utensilsமுதலில் மஞ்சள் நிறமாக இருக்கும் பாத்திரத்தில் இருக்கும் பகுதி வைஸ்வாநரன் என்று வைத்துகொண்டு, அந்தப் பாத்திரத்தில் இருக்கும் பாலை, நீல நிறத்தில் இருக்கும் பாத்திரத்தில் இருக்கும் பாலில் [தைஜஸன்] சேர்த்தால் பால் நீலமும், மஞ்சளும் சேர்ந்த பச்சை நிறமாகத் தெரியாது, நீல நிறமாத்தான் தெரியும். இப்பொழுது இரண்டும் இணைந்தாலும் ஒரே நிறமாகத்தானே நமக்குத் தோன்றுகிறது!

    இப்படிச் சேர்த்த பாலை முன்பு இருந்ததுபோல மீண்டும் பிரிக்க முடியுமா?  இரண்டறக் கலந்ததுவிட்டபின் அவற்றை தனித்தனியாக எப்படிப் பிரித்தெடுக்கமுடியும்?  தண்ணீரும், எண்ணையும் என்றால் – மணலும் சர்க்கரையும் என்றால் முடியும்.  ஏனென்றால் அவை தனித்தனியான பொருள்கள்.  ஆத்மன் தனித்தனி அல்லவே!  ஒன்றாக இருந்த ஒன்றை இரண்டாகப் பிரித்து, ஒன்றுசேர்த்தபின், முதலில் இருக்கும் பிரிவுக்கு எப்படிக் கொண்டுசெல்ல இயலும்?

    அடுத்தபடியாக நீலப் பாத்திரத்தில் இருக்கும் பாலை [இரண்டறக் கலந்த வைஸ்வாநரன் + தைஜஸன்] சிவப்புப் பாத்திரத்தில் இருக்கும் பாலுடன் [பிராக்ஞன்] ஊற்றினால், பால் கலவை ஊதா நிறமாகத் தெரியாது.  சிவப்பாகத்தான் தெரியும். ஒன்றிய பால் பிராக்ஞன்தான்.  இக்கலவையையும் பழையபடி பிரிக்க இயலாது.

    இதற்கடுத்த நிலைதான் துரிய நிலை.  ஓங்காரத்தின் இறுதி விளக்கம்.

     mu12

    அமாத்ரஸ்சதுர்த்தோ2 அவ்யவஹார்ய: ப்ரபஞ்சோபஸ’ம: சி’வோஅத்3வைத ஏவமோங்கார ஆத்மைவ ஸம்விஸ’த்யாத்மநாத்மானம் ய ஏவம் வேத3 ய ஏவம் வேத3 ||                     –  12

    செயல் ஒன்றுமில்லாத, ஒலியற்றவனுமான, நான்காமவன் [துரியன்] அண்டத்தைத் முடிவுறச்செய்பவன், மங்கலமானவன், இருமையற்றவன், இப்படிப்பட்ட ஓங்காரம் ஆத்மன்தான்.  எவன் இப்படி அறிகிறானோ, அவன் தானாகவே தன்னுள் [ஆத்மனுள்] ஒன்றுகிறான்.                                                                                                                                                – 12

    பதவுரை: அவ்வியவஹார்ய: – செயல்களற்றவன்; மிதே அமாத்ர: ச – ஒலி இல்லாமல் இருப்பதாலும்; சதுர்த்த2:: – நான்காமவன் [துரியன் ஆகிறான்]; பிரபஞ்ச உபச’ம: – அண்டத்தை [அனைத்து நிகழ்வையும்] முடிவுறச் செய்பவன்;  சி’வ: – ‘மங்கலமானவன்; அத்3வைத:: – இருமையற்றவன்;  ஏவம் ஓங்கார: – இப்படிப்பட்ட ஓங்காரம்; ஆத்ம: ஏவ – ஆத்மனே; ய: – எவன்; ஏவம் வேத3 – இவ்வாறு அறிகிறானோ; ஆத்மனா  – தன்னால் [தானாகவே]; ஆத்மானம் – தன்னை [தன்னுள் இருக்கும் ஆத்மனுடன்]]; ஸம்விஸ’தி – ஒன்றுகிறான்.

    விளக்கம்:  இந்த சொற்றொடரில் பரம்பொருளுடன் ஒன்றுவது எப்படி என்று சொல்லப்படுகிறது.  அத்துடன் மட்டுமல்ல, ‘ஓம்’ என்ற சொல் மூன்று ஒலிகளால் ஆனது மட்டுமல்ல, நான்காவதாக ஒலியற்ற நிலைமையும் ஓங்காரத்திற்கு இருக்கிறது, அதுவே ஆத்மனின் ‘துரிய’ நிலை என்றும் எடுத்துரைக்கிறது.

    paramaathamaஅந்நிலையில் ஆத்மன் செயல் எதுவும் ஆற்றுவதில்லை.  அந்நிலையில் – ஆத்மனின் செயலற்ற நிலையில் – அண்டமே —  நனவில் திடப்போருளாகக் காணப்படும், கனவுநிலையில் ஒளிமயமான உணர்வுகளாகத் தோன்றும், ஆழ்உறக்க நிலையில் எண்ணங்களின் குவியலாக உருவமற்று இருக்கும் – அந்த அண்டமே முடிந்துபோகிறது.  ஈஸ்வரன் என்று அழைக்கப்படும்  காரிய, காரணங்கள் உள்ள பரம்பொருள், சிவமாக, மங்கலமான ஒன்றாக, தான் வேறு, மற்ற உயிர்கள் – ஜீவாத்மாக்கள் வேறு என்ற மாயத்தோற்றம் இல்லாது – இருமையில்லாது ஒன்றாகி நிற்கிறான்/நிற்கிறாள்/நிற்கிறது.

    முதலீட்டியம் / ஒருமை
    முதலீட்டியம் / ஒருமை

    இதையே அறிவியல் ஒருமை, முதலீட்டியம் [singularity] என்று சொல்லுகிறதோ என்னவோ!  பெருவெடிப்பு நிகழ்ந்து அண்டம் உருவாகும் தருணத்தில் அவ்வண்டமே ஒரு முதலீட்டியமாக/ஒருமையாக – இனம் பிரித்து அறியாதவண்ணம் ஒன்றாக இருந்தது என்று பொதுச் சார்பியல் [ஜெனரல் ரிலேட்டிவிட்டி] கூறுகிறது[1] துரியன் இருமையற்றவன் என்றால் அவனை ஒரு முதலீட்டியம்/ஒருமையானவன் [singularity] என்று சொல்வதில் பிழை இருக்கிறதா என்ன?

    அது மட்டுமல்ல, பால்வழி மண்டலங்கள் [galaxies] உருவாகக் காரணமான கரும் துளைகள் [black holes] உள்ளே முதலீட்டியம் உள்ளது என்றும் அறிவியல் ஆராய்ந்து உரைக்கிறது.[1]

    எதுவும் உருவாகாமல் ஒன்றி இருந்த ஒன்று, இருமை இல்லாமல் இருந்த ஒன்று — பால்வழி மண்டலங்கள், மற்றும் பெரும்வெடிப்பு தோன்றி அண்டமே உருவாக வழிவகுத்தது என்று — அறிவியலே சொல்லும்போது, அந்த முதலீடியமே பரம்பொருள், ஆத்மன் என்று பொருள்கொள்வதில் தவறென்ன!

    இந்த வழியிலேயே தொடர்ந்தால் —

    1. இங்கு நாம் காணும் அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒரு முதலீட்டியத்திலிருந்துதான் –பெருவெடிப்பின் மூலம் தோன்றின.
    2. அப்படித் தோன்றியவை அனைத்தும் அந்த முதலீட்டியத்தில்தான் இருந்தன.
    3. உயிரும் அந்த முதலீட்டியத்திலிருந்துதான் தோன்றியிருக்கவேண்டும்.
    4. நாம் கண்ட, காணும் அனைத்தும் அந்த முதலீட்டியத்திலிருந்துதான் வந்தன.
    5. இவ்வண்டத்தில் நாம் காணும் சக்தி அனைத்தும் அந்த முதலீட்டியத்திலிருந்துதான் வந்தன.
    6. இவ்வண்டம் தோன்றுமுன்னே முதலீட்டியம்தான் இருந்தது. எனவே அந்த முதலீட்டியத்தினுள்தான் அண்டமே ஒடுங்கி இருந்த்திருக்கவேண்டும்.
    7. இந்த அண்டம் தோன்றும் முன்னர் முதலீட்டியம் செயலற்றே இருந்திருக்கவேண்டும்.
    8. எனவே இந்த முதலீட்டியத்தையே — ஆத்மனின் நான்காம் பகுதியான — வைஸ்வாநாரன், தைஜஸன், பிராக்ஞன் இவற்றை உள்ளடக்கிய – ஓங்காரத்தின் நான்காவது ஒலியற்ற ஒன்றாக – துரியனாக அறியலாமே.

    நாம் வெளியில் இருந்து, நனவுலகிலோ, கனவுலகிலோ, ஆழ்உறக்க நிலையிலோ, துரிய நிலையை எய்த இயலுமா?

    இயலவே இயலாது!

    ஏனெனில், வெளியில் இருந்து நோகும்போது இருமைதான் இருக்கும், ஒருமை இருக்காது.  எனவே, அந்த ஒருமையான பரம்பொருளினபால் சித்தத்தைச் செலுத்தி ஒன்றி, நிர்விகல்ப சமாதி நிலையை அடையும்போதுதான், அப்பரம்பொருளுடன் நாம் ஒன்ற இயலும்.

    ‘அ’விலிருந்து ‘உ’’வுக்கும், ‘ம்’க்கும் வருவோம்.

    ஆதி சங்கரர் என்ன சொல்கிறார், துரியனைப் பற்றி?

    அவர் பரம்பொருளையே இரண்டுவிதமாகப் பிரிக்கிறார், சகுணப் பிரம்மம், நிர்குணப் பிரம்மம் என்று.

    இந்த சகுணப் பிரம்மமே —  குணங்களுடன் கூடிய ஈஸ்வரனே – இவ்வண்டத்தின் தோற்றத்திற்கு காரணமாக இருக்கிறார்.  அவரை [சகுண பிரம்மத்தை] அறிய, கௌடபாதரின் காரிகையில் (விளக்கம்) உள்ள சுலோகத்தின் 26ம் சுலோகத்தின் முதல் வரிப்படி மனதை ஒருநிலைப்படுத்தவேண்டும் என்கிறார்.

    அந்த முதல் வரி எது?

    ப்ரணவோ ஹ்யபரம் [ப்ரணவ: ஹி அபரம்] ப்ரஹ்ம ப்ரணவஸ்’ச பர: ஸ்ம்ருத:  |

    ஓங்காரமோ எனில் மற்றொரு பிரம்மமே!  ஓங்காரமும் பரப்பிரம்மமாகவே எண்ணப்படுகிறது.

    கூர்ந்து கவனித்தால் மற்றொரு பிரம்மம், அப்படியே எண்ணப்படுகிறது என்று சொல்லப்படுவதைக் காணலாம். மற்றொரு பிரம்மம் என்பதுதான் சகுணப்பிரம்மம் [பரம்பொருள்/ஈஸ்வரன்].  பரம்பொருளை முதலில் அறிய விரும்புபவர்கள் —  அதாவது, முதல் முயற்சி எடுப்பவர்கள் —  ஓங்காரத்தைப் பரம்பொருளாக [ஈசனாக] எண்ணித் தியானிக்கவேண்டும் என்று சொல்வது புரியும்.

    தியானம் செய்யப் புகுபவர்கள் — அனைத்தையும் வெளியுலகின் வாயிலாக அறிபவர்கள் – அம்மாதிரித்தான் தியானம் செய்ய – மனதை ஒருநிலைப்படுத்த இயலும்.  எனவேதான் அகர, உகர், மகரமாக, ஒலியாக நிற்கும் ஈசனை, பரம்பொருளை, ஓங்காரத்தை தியானம் செய்யவேண்டும்.  இது கைகூடினால் ‘சகுண சமாதி’ நிலை கிட்டும்.  இந்நிலையை அடைந்தவர்கள் மீண்டும் கார, காரியம் உள்ள இவ்வண்டத்திற்குத் திரும்பி வருவார்கள்.

    அதன்பின் ஒலியற்ற ஓங்காரமான துரியனை, நிர்குணப் பிரம்மத்தின்பால் ஒருநிலைப்படுத்த வேண்டும்.

    இப்பொழுது இரண்டாம் வரிக்குச் செல்லுவோம்.

    அபூர்வோஅனந்தரோஅபா3ஹ்யோஅனபர: ப்ரணவோஅவ்யய:  ||

    முன்தோற்றமற்றதும், முடிவற்றதும், வெளியில் இல்லாததும், தனித்தன்மை வாய்ந்ததுமான ஓங்காரம் மாற்றமில்லாதது.

    முன்தோற்றமற்றது என்றால் என்ன?  இதற்குமுன் எதுவும் தோன்றவில்லை, இதுவேதான் இருந்துவருகிறது, இதை யாரும் படைக்கவில்லை, உருவாக்கவில்லை, இதுவும் தோன்றவில்லை.

    தோன்றவில்லையா, அப்பொழுது இது எப்படி இருக்கமுடியும் என்ற கேள்வி எழுகிறது.  நமது வெளியுல உணர்வுப்படி நோக்கினால் —  ஒன்று தோன்றியது என்றாலே, அதற்குத் துவக்கம் இருக்கவேண்டும், அதை யாராவது உருவாக்கி இருக்கவேண்டும் என்றுதானே பொருள்?  அப்பொழுது அது பரம்பொருளாக இருக்கமுடியுமா?  முடியாதே!  அதனால் அப்பரம்பொருள் தோற்றமற்றது, துவக்கமற்றது.  அது எப்பொழுதும் இருக்கிறது.

    இது முடிவும் அடையாதது: முடிவு என்று ஒன்று இருந்தால் அதற்குத் துவக்கம் என்றும் ஒன்றும் இருக்கவேண்டும் அல்லவா!  எனவே, துவங்காத ஒன்று முடிவும் அடையாது.

    அது வெளியிலும் இல்லை என்றால் என்ன?  எல்லாமே அதுதான், அப்பரம்பொருள்தான்!  எனவே எதுவும் அதற்கு வெளியில் இருக்கமுடியாது.

    அறிவியல்படி நோக்கினால், பெருவெடிப்புக்குமுன் அண்டமே இல்லை, அண்டத்தில் இருக்கும் எதுவுமே இல்லை.  அண்டமே அண்டத்தில், பரம்பொருளுள் அடங்கி இருந்தது.  அந்நிலையில்தான் நிர்குணப் பிரம்மமும் இருக்கிறது.

    தனித்தன்மை வாய்ந்தது: இப்படிப்பட்டது எதுவும் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  அப்படிப்பட்டது தனித்தன்மை வாய்ந்த ஒன்றுதானே!

    அப்படி தோற்றமும் இல்லாமல், முடிவும் இல்லாமல், வெளியிலும் இல்லாத, தனித்தன்மை வாய்ந்த அது மாற்றமின்றித்தான் இருக்கும்.  அங்கு காரணமும் இல்லை, காரியமும் இல்லை.  ஒரே அமைதிதான்.  படைப்பும் இல்லை, காப்பும் இல்லை, அழிப்பும் இல்லை, மறைப்பும் இல்லை, அருளும் இல்லை. எல்லாம் ஓய்ந்துபோன நிலையில் எதுவுமில்லாமல் “சிவனே” என்றிருக்கும் நிலை.

    அந்த நிலையில் இருக்கும் – ஒலியற்ற ஓங்காரமாக இருக்கும் இறைவன்/வி ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அதுவுமல்ல.  ஏனெனில் அதை வெளியில் இருக்கும் எதுவும் பார்க்கமுடியாது, அளவிடமுடியாது – ஏனென்றால் அந்த அமைதியான நிலையில் வெளியில்தான் எதுவுமே இல்லையே!

    இப்படிப்பட்ட பரம்பொருளை அடைய, அதுவேறல்ல, நான் வேறல்ல என்று உணர்ந்து அதனுடன் ஒன்றிப் பரம்பொருளாகவே ஆக, ஒலியற்ற ஓங்காரத்தை தியானம் செய்து மனத்தை ஒருநிலைப்படுத்தவேண்டும்.

    இப்படித் தன்னுள் இருக்கும் பரம்பொருளுடன் ஒன்றுவதே நிர்விகல்ப [வேறுபாடற்ற/பிரித்தறியாத] சமாதி நிலை. இந்நிலையை அடைந்தோருக்கு இவ்வுலகமில்லை, பிறப்பு இறப்பு என்னும் காரிய, காரணம் இல்லை. ஆணவம், கர்ம வினைகள், மாயையினால் கட்டப்படாது — அவை நீங்கி — தான், தனது, எனது, மற்றவை, என்ற எண்ணம் இல்லாமல் — பிறித்தறியாமல் — எல்லாமே ஒன்று என்று இருமையற்ற நிலையில், ஒருமையாகி — ஒலியற்ற ஓங்காரத்துடன், பரம்பொருளுடன் இரண்டறக்கலந்து ஒன்றிய அவர்கள் — பரம்பொருளாகவே ஆகிவிடுகிறார்கள் [நிர்விகல்ப சமாதி அடைந்து விடுகிறார்கள்]!  பேரின்பநிலையை எய்துகிறார்கள்.

    நிர்விகல்ப சமாதி
    நிர்விகல்ப சமாதி

    thuriyan

    இத்துடன் எனது மாண்டூக்கிய உபநிஷத்தின் எளிய விளக்கம் நிறைவு பெறுகிறது.  இராமனுக்கு கடலின் மேல் பாலமமைக்க ஒரு அணில் தனது முன்னங்கால்களால் ஒரு சிறுகல்லை உருட்டிப்போட்டதுபோல என்னால் இயன்றதை எழுதியுள்ளேன்.  நான் எழுதியதில் தவறு இருந்தால், பெரியோர்கள் சுட்டிக்காட்டினால் என் தவறைத் திருத்திக்கொள்வேன்.

    அமைதி மந்திரம்:sankaara and students

    எந்த ஒரு உபநிஷத்துவிற்கும் துவக்கத்தில் ஒரு அமைதி மந்திரம் [சாந்தி ஸ்லோகம்] உண்டு.  எதையும் கற்பதற்குமுன் ஆசிரியரும், மாணவர்களும் அமைதியுடன் இருந்து கற்பிக்க/கற்கவேண்டும் என்பது அதன் காரணமாகும்.  இந்த உபநிஷத்துவுக்கான அமைதி மந்திரத்தை முதலில் எழுதாததற்கு ஒரு காரணம் உண்டு.  இங்கு நான் கற்பிப்பவனும் அல்லன்.  இதைப்படிப்பவர்கள் எனது மாணவர்களும் அல்லர்.

    எனவே, முதலில் சொல்லவேண்டிய அமைதி மந்திரத்தைக் முடிவில் கொடுத்து முடிக்கிறேன்.

    mu santhi

    ப4த்3ரம் கர்ணேபி4: ஸ்ருணுயாம தே3வா: | ப4த்3ரம் பஸ்’யேமாக்ஷபி4ர்யஜத்ரா: | ஸ்த்தி2ரைரங்கை3ஸ்துஷ்டுவாஹும்ஸஸ்தநூபி4:  வ்யசே’ம தேவஹிதம் யதா3யு: | ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஸ்ரவா: |  ஸ்வஸ்தி ந: பூஷா விஸ்’வவேதா3:  |  ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: | ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து | ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||

    தேவர்களே [தெய்வங்களே]!  காதுகளால் நல்லதையே கேட்போமாக.  போற்றுதலுக்கு உரியவர்களே, கண்களால் நல்லதையே பார்ப்போமாக.  உறுதியான புலன்களுடன் [திட அறிவுடன்] நுணுக்கமாக [உங்களைப்] புகழ்ந்து, எவ்வளவு ஆயுள் இறைவனால் கொடுக்கப்பட்டதோ [அதை] அனுபவிப்போமாக.  நிகரற்ற புகழுள்ள இந்திரனே எங்களுக்கு [கல்வி கற்பதில்] வெற்றி [உண்டாகட்டும்]!  அனைத்தையும் அறிந்த ஆதவனே, எங்களுக்கு வெற்றி!   தடையின்றிச் செல்லும் [பறக்கும்] கருடனே, எங்களுக்கு வெற்றி!  பிரஹஸ்பதியே, எங்களுக்கு வெற்றி!  ஓம்1  அமைதி! அமைதி!! அமைதி!!!

    [நிறைவு பெறுகிறது]

    [1] Curiel, Erik & Peter Bokulich. “Singularities and Black Holes”. Stanford Encyclopedia of Philosophy. Center for the Study of Language and Information, Stanford University. Retrieved 26 December 2012.

    Share
  • வள்ளுவர் கூறும் ​நேர ​மேலாண்​மை

    — மு​னைவர் சி.​சேதுராமன்.

     

    வள்ளுவர் கூறும் ​நேர ​மேலாண்​மை
    (Time Management)

     

     

    காலம், ​பொழுது என்று ​நேரத்​தைக் குறிப்பிடுவர். ​நேரம், காலம், ​பொழுது எல்லாம் ஒரு​பொருட் பன்​மொழிகளாகும். சிலருக்கு ​நேரம் ​போதவில்​லை என்பர்; சில​ரோ ​பொழு​தே ​போகவில்​லை என்று கூறுவர். காலத்​தை மு​றையாக ஆளக் கற்றுக் ​கொண்டால் நாம் உயர்நி​லை​யை அ​டையலாம். கால ஆளு​மை என்பது நம்மில் பலருக்கும் இயலாத ஒன்றாக உள்ளது, இன்னும் கூறப்​போனால் காலத்​தை ஆளு​மை ​செய்ய அவர்களுக்குத் ​தெரியவில்​லை என்று அறுதியிட்டுக் கூறலாம்.

    காலத்​தை ஆளக் கற்றுக் ​கொண்டவன் ​வெற்றிக​ளைக் குவிக்கிறான். காலத்​தைப் ​போக்கி வாழ்க்​கை​யை ​வெறு​மையாக்கிக் ​கொண்டவர் பலர். அவர்கள் காலத்​தை வி​ரையமாக்கியதால் ​வெறு​மையாகிப் ​போனவர்கள். அன்றிலிருந்து இன்றுவ​ரை காலத்​தைப் ​போற்றிப் பாதுகாக்க ​வேண்டும் என்று நம் முன்​னோர்கள் கூறிப்​போந்துள்ளனர். இலக்கியங்களிலும் கால ​மேலாண்​மை என்பது பரவலாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழர்களின் ​பெரு​மை​யைப் ப​றைசாற்றும் திரும​றை நூலாக விளங்கும் திருக்குறள் கால ​மேலாண்​மை​யைக் குறித்து மிகத் ​தெளிவாக எடுத்து​ரைக்கின்றது.

    திருக்குறளில் ​பொருட்பாலில் அரசியலில் அரசனுக்கு இருக்க ​வேண்டிய​வை குறித்து வள்ளுவர் குறிப்பிடும்​போது காலம் அறிதல் என்ப​தையும் மன்னர் அறிந்து ​செயற்படுதல் ​வேண்டும். காலத்​தை ஆளும் திறன் மன்னர்களுக்கு இருத்தல் ​வேண்டும். அப்​போதுதான் மன்னர்கள் நாட்​டை நன்கு திறம்பட ஆள முடியும் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

    காலம் அறிதல்:
    காலம் அறிதல் என்ற அதிகாரத்தி​னை விளக்கும் பரி​மேலழகர், “வலியான் மிகுதியுடையனாய்ப் பகைமேல் சேறலுற்ற அரசன், அச்செலவிற்கு ஏற்ற காலத்தினை அறிதல், அதிகார முறைமையும் இதனானே விளங்கும்” என்று உ​ரை வகுக்கின்றார். இத​னை​யே அதன் பின்னர் வந்த அ​னைத்து  உ​ரையாசிரியர்களும் வழி​​மொழிந்துள்ளனர்.

    வள்ளுவர் மன்னர்களுக்கு மட்டும் கால ஆளு​மை​யைப் பற்றிக் கூறியிருக்க மாட்டார்.   ஏ​னெனில் இது  அ​னைவருக்கும் வாழ்விய​லை எடுத்து​ரைக்கும் நூலாக விளங்குகின்றது. கால ஆளு​மை என்பது சிறப்பாக அரசனுக்குப் ​பொருந்துவதாக இருந்தாலும் இன்று வாழும் சாதரணக் குடிமகனுக்கும் ​பொருந்தும். அரசன் முதல் க​டைநி​லையில் உள்ள மனிதர் வ​ரை இந்​நேர ஆளு​மை என்பத​னை அறிந்திருத்தல் ​வேண்டும்.

    காலத்​தை நிர்வகிப்பது என்பது அ​னைவருக்கும் ​கைவந்துவிடாது. அத​னை ஒரு சிலர் தான் நன்கு பின்பற்றுவர். மனிதனுக்குத் ​தெரியாமல் மனிதனிடம் இருக்கும் ​பொக்கிஷம் தான் காலமாகும். இத​னை அறியாது மனிதன் காலத்​தை வீணாக்கிக் ​கொண்டிருக்கிறான். காலம் மனிதனிடத்தில் எந்தவிதமான  ஓ​சையுமின்றி ​பெரிய மாற்றத்​தைச் ​செய்து வருகிறது. இத​னை அ​னைவரும் அறிவர். காலம் வய​தைக் காட்டி வாழ்நா​ளைக் கு​றைக்கிறது.

    காலம் என்பது இருபுறமும் கூர்​மை ​கொண்ட கத்தி ​போன்றது என​வே காலத்​தைச் சரிவரப் பயன்படுத்தாவிட்டால் அக்கால​மே நம்மு​டைய முதல் ப​கைவனாக மாறி விடுகிறது. அ​னைவரும் அறிந்து ​கொண்ட பல ​செயல்க​ளைவிடக் காலவிரயம்   ​என்பது மிகவும் ​மோசமானது என்ப​தை அ​னைவரும் உணர்தல் ​வேண்டும்.

    ஒருவன் இழந்துவிட்ட எ​தையும் ​பெறமுடியும் ஆனால் கடந்த காலத்​தை மீண்டும் ​பெறமுடியாது. நாம் இழந்த பல வாய்ப்புகளுக்குக் காரணம் நம்​மைவிட்டுக் கடந்து ​போன காலம்தான் என்ப​தை நாம் சிந்தித்துப் பார்த்தால் புரியும். நாம் ஒரு நாளில் எத்த​னை மு​றை ​நேரதின்​மை​யைக் காரணம் காட்டுகி​றோம் என்பது ஒவ்​வொருவரும் நி​னைத்துப் பார்க்க ​வேண்டிய ஒன்றாகும். சரியான ​நேரத்திற்கு வந்துவிடு என்பது வீடுகளிலும் கல்வி நி​லையங்களிலும் அலுவலகங்களிலும் அடிக்கடி ​சொல்லப்படுகின்ற, அ​னைவ​ரையும் எச்சரிக்கின்ற வார்த்​தைகளாகும். காலங்கடந்து ​போனால் பிரச்ச​னைகளும் ​தே​வையற்ற இ​டையூறுகளும் ஏற்படும். காலதாமதமாக வரும் ​பேருந்திற்காக யாரும் காத்திருப்பதில்​லை. காலதாமதமாக வரும் நாளிதழுக்கு ஒரு​போதும் மதிப்பு கி​டையாது. அ​னைத்து இடங்களிலும்  அ​னைவராலும் காலந்தவறா​மை​யே எதிர்பார்க்கப்படுகிறது.

    ​கையில் இருக்கும் தங்க நாணயத்​தைப் ​போன்று ஒவ்​வொரு விநாடி ​நேரத்திற்கும் மதிப்பு உண்டு. காலத்​தை நாம் எவ்வாறு தங்கமாக, ​வைரமாக, ​வைடூரியமாக மாற்றப் ​போகி​றோம் என்பதில்தான் நம் வாழ்வின் ​வெற்றியின் இரகசியம் அடங்கி இருக்கிறது.

    நாம் ​சேமிக்கும் ஒவ்​வொரு விநாடியும் நம் வாழ்க்​கையின் ஒவ்​வொரு ​வெற்றிப் படிக்கட்டுக்களாகும். நமது ​நேரத்​தை நம்வசப்படுத்தினால் முன்​னேற்றம் என்பது உறுதியாகிவிடும். காலமறிதல் அதிகாரத்திற்கு விளக்கம் கூறவந்த மணக்குடவர், “காலம் அறிதலாவது வினை செய்தற்கு ஆம்காலம் அறிதல். வலியறிந்தாலும் வினை செய்யும் காலமும் அறிந்து செய்ய வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது” என்று குறிப்பிடுகின்றார். காலம் அறிதல் என்பது நாட்​டை ஆளும் அரசனுக்கு மட்டுமல்லாது அ​னைவருக்கும் ​உரிய ஒன்றாகும்.

    காலம் அறிந்து ​செயல்படுதல்:
    நாட்​டை ஆளும் மன்னன் காலம் அறிந்து ​செயல்பட ​வேண்டும். அவ்வாறு ​செயல்படவில்​லை எனில் அழிவு ​நேரும். எந்தச் ​செய​லை எந்தக் காலத்தில் ​செய்ய ​வேண்டு​மோ அந்தக் காலத்தி​லே​யே ​செய்தல் ​வேண்டும். அ​தைவிடுத்துக் காலமல்லாத காலத்தில் ​செய்தால் அதனால் இன்ன​லே ​நேரும். வலி​மையாக இருப்பினும் காலமறிந்து ​செயல்படாது ​போனால் ​தோல்வி​யே ஏற்படும். இத​னை,

    “பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
    வேந்தர்க்கு வேண்டும் பொழுது” (481)

    “பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத்
    தீராமை யார்க்குங் கயிறு” (482)

    காகம் தன்னினும் வலிய கோட்டானை அதற்குக் கண்தெரியாத பகல் வேளையில் வென்று விடும். அது போலப் பகைவரைப் போரில் வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கேற்ற காலம் வேண்டும். காலத்தொடு பொருந்த அரசன் வினைசெய்தொழுகுதல்; நிலையில்லாத செல்வத்தைத் தன்னிடத்தினின்று நீங்காவண்ணங் கட்டிவைக்கும் கயிறாம். காலத்​தை அறிந்து நடந்து ​கொள்ளாததால்தான் ​நெப்​போலியன், ஹிட்லர் இருவரும் அழி​வைத் ​தேடிக் ​கொண்டனர். ரஷ்யா மீது காலமல்லாக் காலத்தில்   ப​டை​யெடுத்துச் ​சென்று இருவரும் தங்களுக்குத் தாங்க​ளே அழி​வைத் ​தேடிக் ​கொண்டனர். காலத்தின் அரு​மை​யை இக்குறட்பாக்கள் நமக்குத் ​தெளிவுறுத்துவது ​நோக்கத்தக்கதாகும்.
    ​
    நேர ஆளு​மை:
    காலத்​தை அறிந்து ஒரு ​செய​லைச் ​செய்தால் அது எளிதில் முடியும். காலம் அறிந்து ​​செயல்படும் எவருக்கும் ​செய்ய முடியாத ​செயல் என்று எதுவும் இல்​லை. அவர்கள் மிகவும் சரியாகச் ​செய்து எந்தச் ​செய​லையும் ​தெளிவாக முடித்துவிடுவர். ​நேர ஆளு​மை​யைப் பற்றி,

    “அருவினை யென்ப வுளவோ கருவியாற்
    கால மறிந்து செயின்”(483)

    என்று வள்ளுவர் குறிப்பிடுவது உன்னற்பாலதாகும். இக்குறட்பாவிற்கு உ​ரை​யெழுதிய பாவாணர், “சிறந்த கருவியொடு தகுந்த காலமறிந்து செய்வாராயின்; அரசர்க்கு முடித்தற்கரிய வினைகளென்று சொல்லப்படுவன உளவோ? இல்லை” என்று விளக்கிச் ​செல்கின்றார். இன்றுள்ள நி​லையில் அ​னைவரும் உணர்ந்து ​செயல்படுத்த ​வேண்டிய வாழ்க்​கை ​நெறியாக இந்​நேர ஆளு​மை​யை இக்குறளில் வள்ளுவர் கூறியிருப்பது மிகவும் ​பொருத்தமான ஒன்றாகும்.

    உல​கையும் ​வெல்லலாம்:
    காலத்​தை ஆளு​மை ​செய்து தக்க இடம்பார்த்து எந்தச் ​செய​லையும் ​செய்தல் ​வேண்டும். அவ்வாறு ​செய்வார் உலகத்​தை​யே ​வென்றுவிடலாம். காலமும் இடமும் சரியாக அ​மைந்து விட்டால் ​வெற்றி என்பது எளிதில் கி​டைக்கும். இத​னை​யே,

    “ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங்
    கருதி யிடத்தாற் செயின்”(484)

    என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். ஒருவன் தகுந்த கால மறிந்து ஒரு ​செய​லை இடத்தொடு பொருந்தச் செய்தால் அவன் உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும். ​நேர ஆளு​மையின் முக்கியத்துவத்​தை இத்திருக்குறள் நமக்குத் ​தெளிவுறுத்துகிறது.

    காத்திருத்தல்:
    வாய்ப்புகளுக்காக நாம் காத்திருத்தல் ​வேண்டும். மண்ணில் விழுந்து மண்மூடிக் கிடக்கும் வி​தையானது எவ்வாறு ம​ழைத்துளிக்காகக் காத்திருக்கிற​தோ அ​தைப் ​போன்று நல்ல வாய்ப்புகள் எப்​போது வரும் என்று ஒருவன் காத்திருத்தல் ​வேண்டும். வாய்ப்புகள் வந்தவுடன் அத​னைப் பயன்படுத்திக் ​கொள்ளுதல் ​வேண்டும். உல​கை ​​வெற்றி ​கொள்ள ​வேண்டும் என்று நி​னைப்பவர் தகுந்த காலத்திற்காகக் காத்திருப்பர். காத்திருக்கி​றோ​மே என்று அவர் கலங்கமாட்டார். ​பொறு​மையாக ஒருவர் காத்திருந்து ​செயல்பட​வேண்டும். இத​னை,

    “காலங் கருதி யிருப்பர் கலங்காது
    ஞாலங் கருது பவர்”(485)

    என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். காலத்​தை ஆளுவதற்கு காத்திருப்பும் ​தே​வை என்பது இக்குறள் எடுத்து​ரைக்கும் ​நேர ஆளு​மை குறித்த கருத்தாகும்.

    இத்திருக்குறளுக்கு உ​ரை எழுதும் பாவாணர், “உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதும் அரசர்; மனக்கலக்கமின்றி; தமக்கு வலிமிக்கிருப்பினும் தம் வினைக்கேற்ற காலத்தையே சிறப்பாகக் கருதி, அது வருமட்டும் அமைதியாகவும் பொறுமையுடனும் காத்திருப்பர்.

    ‘கலங்காது’ என்பது வலிமிகுதியையும் அதனால் ஏற்படும் நம்பிக்கையையும் உணர்த்தும். நட்பாக்கல், பகையாக்கல், பிரித்தல், கூட்டல், மேற் செல்லல், இருத்தல் என்னும் அரசர் அறுவகைச் செயல்களுள், இருத்தல் என்பது மேற்செல்லலின் மறுதலை, ‘காலஞ்செய்வது ஞாலஞ் செய்யாது’, என்பராதலின், ‘காலங் கருதியிருப்பர் ‘என்றார்” என்று உ​ரை வகுக்கின்றார்.

    தெளிந்த அறிவுடைய அரசர் தம் பகைவர் அவர் பகைமையைக் காட்டின வுடனேயே அவரறிய வெளிப்படையாகச் சினங்கொள்ளார்; அவரை வெல்லு தற்கேற்ற காலம் வரும் வரை தம் சினத்தை உள்ளே அடக்கி வைப்பர் என்பத​னை,

    “பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
    துள்வேர்ப்ப ரொள்ளி யவர்.”(487)

    என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். இங்கு அரசருக்கு மட்டு​மே ​நேர ஆளு​மை குறித்து வள்ளுவர் குறிப்பிடுகின்றார் என்று எடுத்துக் ​கொள்ளக் கூடாது. வள்ளுவர் குறிப்பிடும் ​நேர ஆளு​மை குறித்த இக்கருத்து மாந்தர் யாவருக்கும் ​பொருந்தும் ஒன்றாகும். இது அரசர்க்குரிய கருத்து என்று புறந்தள்ளிவிடுதல் கூடாது. ஏ​னெனில் மக்களாட்சி மு​றை ​செயற்படுத்தப்படும்   இந்நாளில் அ​னைவருக்கும் வள்ளுவர் கூறும் இக்கருத்துப் ​பொருந்தும்.

    எந்த ​​​நேரத்திலும் நாம் ​பொறு​மை இழக்கக் கூடாது. நமக்கான ​நேரம் வரும் வ​ரை நாம் ​பொறு​மையுடன் காத்திருத்தல் ​வேண்டும். ​கொக்கு எவ்வாறு காத்திருந்து தனக்கான மீன் வரும்​போது அத​னைக் ​கொத்தித் தின்று தனது பசி​யைப் ​போக்கிக் ​கொள்கிற​தோ அ​தைப் ​போன்று நாம் தகுந்த காலம் வரும்வ​ரை காத்திருந்து ​செயலாற்ற ​வேண்டும். இத​னை,

    “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த விடத்து”(490)

    என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். ​நேரத்தின் அரு​மை அறிந்து அ​னைவரும் அத​னைத் திட்டமிட்டு ஆளக் கற்றுக் ​கொள்ள ​வேண்டும். இந்​நேர ஆளு​மை​யை​யே வள்ளுவர் காலம் அறிதல் என்று குறிப்பிடுகின்றார். ​நேரம் ​பொன்​போன்றது எனபர்; ஆனால் அது உயிர் ​போன்றது.

    தவறவிட்ட காலமும் தவறிய உயிரும் மீளப் ​பெற முடியாது. இத​னை உணர்ந்​தே வள்ளுவர் காலம் அறிதல் என்று அந்த அதிகாரத்திற்குப் ​பெயரிட்டுள்ளார். காலத்​தை அறிந்தால் மட்டு​மே ​செயற்படுத்தி வாழ்வில் அத​னைப் பயன்படுத்திக் ​கொள்ள இயலும். ​நேரத்​தைச் சரியாகப் பயன்படுத்தினால் மட்டு​மே வாழ்வில் உயர முடியும். வள்ளுவர் கூறுகின்ற மு​றையில் ​நேரத்​தை ஆளக் கற்றுக் ​கொண்டு வாழ்வில் வளம் ​பெறு​வோம்.

     

     

    மு​னைவர் சி.​சேதுராமன்,
    தமிழாய்வுத்து​றைத் த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி),
    புதுக்​கோட்​டை-1
    E-mail: Malar.sethu@gmail.com

     

    Share
  • ஆயுதமேந்திய ‘தம்பிகள்’: ‘மெட்ராஸ் ஸாப்பர்’கள்

    ஆங்கில மூலம்:  கே.ஆர்.ஏ. நரசய்யா, டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஜூன் 8, 2015

    தமிழாக்கம்:  ஒரு அரிசோனன்

    நன்றி:  தாரகை இணையதளம்  http://wp.me/P4Uvka-s4  

    மெட்ராஸ் ஸாப்பர்ஸ் -  தம்பிகள்

    மெட்ராஸ் ஸாப்பர்ஸ் – தம்பிகள்

    அவர்கள் ஒத்துழைப்புக்கான கூட்டம்தானே — போரிடாதவர்க்கு ஆயுதங்கள் ஒரு கேடா என்று பிரிட்டிஷார் முதலில் எண்ணியிருக்கலாம். ஆனால், காலம் செல்லச் செல்ல மெட்ராஸ் ஸாப்பர்கள் என்ற – இந்திய ராணுவத்தின் முந்தைய பொறியியல் குழு —  பல போர்களைச் சந்தித்தார்கள்.

    1947ல், இந்திய விடுதலை கிடைத்த கையுடன், மெட்ராஸ் ஸாப்பர்கள் ஜம்முவில் நடந்த போரில் கலந்துகொள்ள நேர்ந்தது.  அதில் பெரும்பாலானோர் கடுங்குளிரைக் காணாத தென்னிந்தியர்களே!  இருப்பினும், பனியையும், எலும்பைத் தாக்கும் குளிரையும் பொருட்படுத்தாது, ராணுவம் முன்னேறிச் செல்வதற்காக, அடைத்துக் கிடந்த சாலைகளைச் சீர்படுத்தினார்கள்.  இந்தப் பணியில் ஸாப்பர்களின் ஒரு பிரிவே தங்கள் இன்னுயிரை இழக்கவேண்டியிருந்தது.  ஹைதராபாத் மாகாணம் இந்தியாவுடன் இணைக்கப்படும்போது, இந்தக் குழு மீண்டும் “ஆபரேஷன் போலோ”வில் [ராணுவ நடவடிக்கை] களம் கண்டார்கள்.

    Displaying

    மெட்ராஸ் ஸாப்பர்கள் தமிழில் “தம்பிகள்” என்று அழைக்கப்பட்டார்கள்.  அவர்களின் குழுப் பாடல், “வெற்றி, வெற்றி, எதிலும் வெற்றி, தம்பி!” என்று துவங்குகிறது.

    ஃபிரெடெரிக் ராபர்ட்ஸ்

    அவர்களின் திறமை மிகவும் பிரபலம் ஆனதால் சென்னை இராணுவத்தின் தலைவரான ஃபிரடெரிக் ராபர்ட்ஸ்1883ல், “படையைக் களத்திற்கு அனுப்பிவைக்கும்படி எப்பொழுதெல்லாம் இந்தியாவுக்கு அழைப்பு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் ராணியாரின் ஸாப்பர்களும் [மெட்ராஸ் ஸாப்பர்கள்] மைனர்[Miners]களும் [கண்ணிவெடி அகற்றுவோர்] கட்டாயம் களம் இறங்குவார்கள்.  எங்கெல்லாம் மெட்ராஸ் ஸாப்பர்கள் செல்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் தங்கள் புகழை நிலைநிறுத்தி, [சென்னை] ராஜதானிக்கும் பெருமை சேர்க்கிறார்கள்…”

    பிரிட்டிஷ் ராணுவம் தனிச்சிறப்பு வாய்ந்த வீரமிக்க செயல்களைச் செய்தவர்களைக் கௌரவிக்க ஆரம்பித்தபோது, முதன்முதலாகச் சிறப்பிக்கப்பட்டவர் மெட்ராஸ் ஸாப்பர்களைச் சேர்ந்த ஹவில்தார் சொக்கலிங்கம்தான்.  அவர் 1834ல் குடகில் நடந்த கர்நாடகப் போரில் அவர் காட்டிய வீரத்திற்காக அக்கௌரவம் வழங்கப்பட்டது.  அம்மாதிரி வழங்கப்படும் சிறப்புப் பதக்கங்களே “சொக்கலிங்கம் பதக்கம்” என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டதுதான் அதன் தனிச் சிறப்பாகும்.

    Displaying

    பின்னால் அக்குழுவுக்கு அரசியார் விக்டோரியாவின் ஸாப்பர்கள் [சுருக்கமாக “க்வீன்ஸாப்ஸ்”] என்று பெயரிடப்பட்டது.  அக்குழுவினர் தங்கள் சாதி, சமய வேறுபாடுகளைப் புறந்தள்ளி ஒன்றாகவே உண்டு, உழைத்துப் பணி செய்தனர்.  செல்லுமிடமெல்லாம் அவர்களது “தம்பி” பாட்டைப் பாடினர்.

    ஒருமுறை அவர்களைப் பார்வையிடும் ஒரு மேலதிகாரி ஒரு தம்பியையைப் பார்த்து அவனது சாதி என்ன என்று கேட்டபோது, அவன் நெஞ்சை நிமிர்த்தி “ஸாப்பர் சாதி, ஐயா!” என்று பதிலளித்த உண்மை ஆவணங்களில் பதிவாகியுள்ளது

    . Image result for madras sappers

    அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகள்: பாலங்கள் கட்டுதல், சாலைகள் அமைத்தல், கண்ணிவெடிகளை அகற்றுதல், மறைகுழிகள் தோண்டுதல் ஆவன.  அவர்களது “ஸாப்பர்கள்” என்ற பெயரே “ஸாப்” என்ற ஒருவித மறைகுழியின் பெயராகும்.  இராணுவம் முன்னேறுவதற்காக வேலிகளை அகற்றுவது இன்னுமொரு முக்கியமான வேலை.

    பங்களூர் டார்ப்பிடோ வைத்து வேலியைத் தகர்த்தல்

    முதல் உலகப் போரின்பொது, ஒரு வேலியைத் தகர்த்தெடுக்க தம்பிகள் மேஜர் ஆர்.எல். மக்க்ளிண்டாக்கின் உதவியுடன் செய்த குழாய் வெடிகுண்டு பங்களூர் டார்பிடோ என்று அழைக்கப்பட்டது.

    பங்களூர் டார்ப்பிடோ

    முள்கம்பி வேலிகளை விரைவில் தகர்த்துச் செல்ல இந்த பங்களூர் டார்பிடோ போர்க்கள முன்னணியில் உள்ள வீரர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது என்றும், அதன் பல முன்னேற்றங்கள் இன்றும் உபயோகப்படுத்தப் படுகின்றன என்றும், கார்டன் எல். ராட்மன் தனது “த பிக் புக் ஆஃப் கன் ட்ரிவியா” [துப்பாக்கித் துணுக்குகளின் பெரும் புத்தகம்] என்ற புத்தகத்தில் பதிந்துள்ளார்.

    மூன்று மீட்டர்கள் தள்ளி நின்று பங்களூர் டார்பிடோவை ஒரு வெடிக்கச் செய்ய முடியும்.  அதன் தற்கால மாற்றுபட்ட வடிவம் ஐக்கிய அரசு நாட்டில் [இங்கிலாந்து] அதனது இரானுவத்திற்காகத் தயாரிக்கப்படுகிறது.  அது சமீபத்தில் இராணுவக் குப்பைகளைத் தகர்க்க உபயோகப்படுத்தப்பட்டது.  முதல் உலகப் போரில் முள்கம்பி வேலிகளைத் தூரத்தில் இருந்து தகர்க்க பங்களூர் டார்பிடோ குண்டுகள் உதவின.  பிற்காலத்தில் அந்தப் போர்க்கருவியின் அளவு முறைமைப்படுத்தப்பட்டது.

    Inline image 2
    மெட்ராஸ் ஸாப்பர்களின் சின்னம்

    மெட்ராஸ் ஸாப்பர்களின் மேற்கோள் உரை [motto] “ஸர்வத்ர” [எங்கும்] என்ற வடமொழிச் சொல் ராயல் எஞ்சினீயர்களின் “யுபீக்” என்ற லத்தின் சொல்லின் மொழிபெயர்ப்பே.  பணியாற்றும், மற்றும் ஓய்வுபெற்ற “தம்பி ஸாப்பர்கள்” ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் மாதம் அவர்கள் குடும்பத்துடன் இராணுவ பொறியியல் கல்லூரியில்[College of Military Engineering – CME] ஒன்றுகூடுகிறார்கள்.

    Displaying
    ராயல் என்ஜினீயர்களின் சின்னம்

    அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில், “முடிவில்லாத வீரம், துணிவு நிரம்பிய நிகழ்ச்சிகள் தம்பிகள் சிறந்த போர்வீரர்கள் என்னும் அடைமொழியை உறுதி செய்கிறது!” என்று CMEயின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் எஸ். சென்குப்தா தம்பிகளின் தோழமைப் பண்பைப் புகழ்ந்து பாராட்டினார்.

    மெட்ராஸ் ஸாப்பர் அசோசியேஷன் 1947ல் இக்குழுவுக்குப் பிரியாவிடை கொடுத்த பிரிட்டிஷ் ஆஃபீசர்களால் துவங்கப்பட்டது.அப்பொழுதான் ஒவ்வொரு ஆண்டிலும் செப்டெம்பர் மாதம் 30ம் தேதி இக்குழுவின் உயர்வு நாளாகக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது.

    —  இக்கட்டுரை ஆசிரியர் KRA நரசய்யா, 1881ல் வெளியிடப்பட்ட  “த ஹிஸ்டரி ஆஃப் மெட்ராஸ் எஞ்சினீர்ஸ் அண்ட் பயனீயர்ஸ், ஃப்ரம் 1743 டு பிரசன்ட் டைம்” என்ற புத்தகத்திற்காக மேஜர் ஹென்றி மெரிடித் வைபார்ட் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறார்.

    டி.பி. இராமச்சந்திரன் எழுதிய “பேரரசின் முதல் வீரர்கள்” [Empire’s First Soldiers] என்ற புத்தகம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மெட்ராஸ் ஸாப்பர்கள் கலந்துகொண்ட போர்களைப் பற்றி முழு விவரங்களும் கொடுக்கிறது. 

    ***

    Share
  • தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்

    — மு​னைவர் சி.​சேதுராமன்.

    தொல்காப்பியம் காலப் பழமையும் கருத்தின் கனிவும் சாலச்சிறந்தது. தமிழரின் கலைக்களஞ்சிமாகத் திகழ்வது. தொல்காப்பியம் பரந்துபட்ட ஓர் இலக்கணக்கடல். விரிந்த நூலாயினும் செறிந்த கருத்துகளைத் தன்னகத்தே கொண்டது. தமிழகத்தின் பண்டைக்கால வரலாற்றைச் சான்றுகளுடன் அறிய உதவும் பேரேடு இது எனக் கூறலாம். ஒரு மொழியில்முதலில் தோன்றியது இலக்கியம் அதனை அடியொற்றி அமைவது இலக்கணம்.

    ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்’ என்ற பவணந்தியாரின் கூற்று இதனைப் புலப்படுத்தும். தொல்காப்பியர் ஒரு பெரும் இலக்கண நூலை இயற்றி விதிகள் வகுக்க வேண்டுமெனின் தமிழ்கூறு நல்லுலகத்தில் அதற்குமுன்னரே எண்ணற்ற தமிழ் நூல்கள் இருந்திருக்க வேண்டும். அன்றியும் அவ்விலக்கியங்கட்குப் பலர் இலக்கண நூல்கள்எழுதியிருந்தனர் என்பதைத் தொல்காப்பியர் என்ப, ​மொழிப, என்மனார், புலவர் என்பன போன்ற ​சொற்களால் சுட்டுவதுகொண்டு அறியலாம். எல்லாவற்றிற்கும் மேலாகப் பாயிரம் எழுதிய பனம்பாரனாரே.

    “முந்து நூல்கண்டு மறைப்பட எண்ணிப்
    புலந்தொகுத்தோன்”
    என்று கூறிவிட்டதால் இது ஐயத்திற்கிடமின்றித் தெளிவாதலறியலாம். தொல்காப்பியர் மரபியலில் உயிர் மரபுக​ளைப் பற்றித் ​தெளிவாக அறிவியல் அறிஞர்களும் வியக்கும் வண்ணம் பல ​செய்திக​ளை எடுத்து​ரைத்துள்ளார்.

    மரபு – விளக்கம்:
    த​லைமு​றை த​லைமு​றையாக (பரம்ப​ரை பரம்ப​ரையாக) வழி வழியாக வரும் மு​றை​மை பற்றிக் கூறும் பகுதி​யை எடுத்து​ரைப்ப​தே மரபியலாகும். உயர்ந்​தோர் கூறும் வழக்கால் மரபு ​தோன்றுகிறது. உயர்ந்தவர்க​ளே வழக்கத்​தை உருவாக்குகின்றனர். அத​னைச் ​செயற்படுத்துகின்றனர். அதனால்தான் ​தொல்காப்பியர்

    “வழக்​கெனப் படுவது உயர்ந்​தோர் ​மேற்​றே
    நிகழ்ச்சி அவர் கட்டுஆகலான”(592)
    என்று குறிப்பிடுகின்றார்.

    மரபியல்:
    ஒல்காப் புகழ்பெற்ற தொல்காப்பியத்தில் பொருள் இலக்கணத்தினை அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல்,பொருளியல், மரபியல் என ஒன்பது இயல்களாகப் பகுத்துள்ளார். ஒன்பது இயல்களுள் ஒன்றான மரபியல் உணர்த்தும் செய்திகள் தொகுத்துத்தரப்பட்டுள்ளன.

    மரபு என்பது ஒவ்வொரு பொருளுக்கும் ஆன்றோர் வழங்கிய சொற்களை அவர்கள் வழங்கிய முறைப்படியே கூறுவது ஆகும். இத்தகையமரபினைப் பற்றி கிளவியாக்கத்தில் கூறப்பட்டுள்ளது. யானை மேய்ப்பவனை பாகன் என்றும், ஆடு மேய்ப்பவனை இடையன் என்றும் கூறுவதேமரபு ஆகும். இவற்றை மாற்றிக் கூறினால் அது மரபு வழுவாகக் கருதப்படுகிறது.

    செய்யுளிலும் செய்யுளுக்கு உறுப்பாகக் கூறப்பட்டவற்றுள்ளும் (​செய்யுளுக்கு யாப்பியல் வ​கையால் அ​மைந்த உறுப்புகள் இருபத்தாறு. அம்​மை, அழகு, என வரும் எட்டும் ​சேர்த்து ​செய்யுளுக்கும் ​செய்யுள் ​தொகுதிகளுக்கும் உறுப்பாகும்) ஒரு வகை மரபுஇவ்வியலில் கூறப்பட்டுள்ளது. ​மேலும் செய்யுள் வழக்கிற்குப் பொதுவாகிய வேறு சில மரபுகளும் மரபியலில் கூறப்பட்டுள்ளன. உயர்திணை, அஃறிணை என்னும் இருவகைத் திணைகளைச் சார்ந்த பொருள்களின் இளமை, ஆண்மை, பெண்மை ஆகியவை பற்றிய மரபும், அஃறிணைப்பொருள்களாகிய புல், மரம் ஆகியவை பற்றிய மரபும் கூறப்பட்டுள்ளன.

    மரபியல் சூத்திரங்களை இளம்பூரணர் 112 ஆகவும், பேராசிரியர் 110 ஆகவும் மேற்கொண்டுள்ளனர். மக்கள் தாமேஆறறிவுயிரே (1532) எனத் தொடங்கும் நூற்பாவையடுத்து ஒருசார் விலங்கும் உளவெளன மொழிப என்ற நூற்பா இளம்பூரணர் உரையில் காணப்படுகிறது. இந்நூற்பாவுடன் ஒத்த கருத்துடைய நூற்பா போராசிரியர் உரையில் காணப்படவில்லை.

    நூற்பாவின் அடிகளைப் பிரித்தும் சேர்த்தும் பொருள் கொள்வதனால் எண்ணிக்கையில் வேறுபாடு காணப்படுகிறதே ஒழியப் புது நூற்பாக்கள் உரைகளில் கிடையாது. உலகில் உள்ள உயிர்க​ளின் மரபுக​ளை அறுவ​கை உயிர்ப்பாகுபாடுகளில் உள்ளடக்கித் ​தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். தாவர இனம், விலங்கினம், மக்கள் இனம் உள்ளிட்டவற்றிற்குரிய மரபுக​ளையும் ​தொல்காப்பியர் மரபியலில் ​தெளிவுறுத்தியுள்ளார்.

    அறுவகை உயிர்ப்பாகுபாடு:
    தொல்காப்பியர் இளமைப் பெயரில் உயிர்பாகுபாடுப் பற்றி கூறுகையில், ஓரறிவுயிர் என்னும் உயிர்ப் பாகுபாடுஅதிகாரப்பட்டமையால் அதனொடு பொருந்த உலகத்துப் பல்லுயிர்களையும் ​ அறுவகையாக 8 நூற்பாக்களில் வகைப்படுத்திக்கூறியுள்ளார்.

    மரபியலில் மெய், வாய், மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளால் பற்றப்படும் ஊறு, சுவை, நாற்றம், ஒளி, ஒலிஆகிய புலன்களுடன் மன உணர்வினையும் சேர்த்து, உயிரினங்களைத் தொல்காப்பியனார் ஆறுவகையினாற் பிரித்துள்ளார்.

    அறுவ​கை உயிர்க​ளைத் ​தொல்காப்பியர்,

    “ஒன்ற றிவதுவே உற்ற றிவதுவே,
    இரண்டறிவதுவே அதனொடு நாவே
    மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
    நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
    ஐந்தறிவதுவே அவற்றோடு செவியே
    ஆறறிவதுவே அவற்றொடு மனனே!
    நேரிதின் உயர்ந்தோர் நெறிப்படுத்தினரே”
    என்று கூறியுள்ளார்.

    உடம்பால் மட்டும் அறிவன ஓரறிவு உயிர்கள் ஆகும். உடம்பாலும் நாவாலும் அறிவன இரண்டு அறிவு உயிர்கள் ஆகும். உடம்பு, நா, மூக்கு மூன்றாலும் அறிவன மூ அறிவு உயிர்கள் ஆகும். உடம்பு, நா, மூக்கு, கண் இ​வை நான்காலும் அறிவன நாலறிவு உயிர்கள் ஆகும். உடம்பு, நாக்கு, மூக்கு, கண், காது இ​வை ஐந்தால் அறிவன ஐந்தறிவு உயிர்கள் ஆகும். இவ்​வைந்​தோடு மனத்தாலும் அறியும் அறிவு​டையன ஆறறிவு உயிர்கள் ஆகும் என்று ​தெளிவாக அறிந்​தோர் ​நெறிமு​றையாக உணர்த்தியுள்ளனர் என்று ​தொல்காப்பியர் ​மொழிகின்றார்.

    உணர்வுகள் படிப்படியே தோன்றும் வளர்ச்சி நிலை​க​ளை அடிப்ப​டையாக ​வைத்துக் ​கொண்டு உயிர்களை இவ்வாறு ஆறு பிரிவுகளாகத் தொல்காப்பியர் பகுத்துள்ளார். இம்மரபியலில் உயர்தி​ணைச் சாதிகள் நான்கனைப் பற்றியும் உத்திமுதலியன பற்றியும் கூறப்பட்டுள்ளன. இவ்வியலில் தொல்காப்பியனார் சில பெயர்களுக்கு மட்டும் மரபு வரையறைகூறியுள்ளார். தொல்காப்பியர் சுருக்கமாக வரையறுத்துக் கூறுவதற்குத் தகுந்தவாறு அமைந்த பெயர் மரபுகளை மட்டும்எடுத்துக்கூறி. விரிந்த நிலையில் வரும் மரபுடையவற்றைப் பொது விதிகளால் கொள்ள வைத்தார் என்பது தெரிகிறது.

    தாவர மரபு:
    இறைவன் படைப்பின் விந்தையைச் சிந்திந்தால் சிந்தனைக்கோர் அளவில்லை. ஓரறிவு உடைய மரஞ்செடி கொடிகள் முதல் ஆறறிவுபடைத்த மனிதன் வரை தொல்காப்பியத் திருநூலில் உலாவரக் காண்கிறோம். ஏன்? தேவர்களும், அசுரர்களும், இயக்கர்களும், கந்தர்வர்களுங்கூட இந்நூலில் இடம் பிடித்துள்ளனர். தேவர்களினும் மனிதனும் உயர்ந்த நிலையில் ஒளிர்வதாக ஆன்மிகச் செல்வர்கள் இயம்புவர். காரணம்தேவர்கள் நல்வினைப் பயன்களை மட்டுமே துய்ப்பவர். அழியா நிதியாகிய வீடுபேறு மனிதப் பிறவி ஒன்றால் மட்டுமே அடையமுடியும். இருவினை அகற்றி, மும்மலமறுத்து, நாற்பேறும் பெற்றுய்ய இடம் தருவது மானிடப்பிறவியே. தொடு உணர்ச்சி ஒன்றே கொண்ட இயற்கையின்இரகசியமாகத் தாவரங்கள் திகழ்கின்றன.

    ஓரறிவு உயிர்:
    உடம்பால் மட்டும் அறிவன ஓர் அறிவு உயிர்கள். புல், மரம், ​செடி, ​கொடிகள், தாவர இனங்கள் அ​னைத்தும் இதில் அடங்கும். இத​னைத் ​தொல்காப்பியர்,

    “புல்லும்மரனும் ஓர் அறிவின​வே
    பிறவும் உள​வே அக்கி​ளைப் பிறப்​பே” (1527)
    என்று குறிப்பிடுகின்றார்.

    புல்லும் மரமும்:
    புல் என்றவுடன் அறுகம்புல், கோரைப்புல் என்பன நம் மனக் கண்ணில் தோன்றும். தென்னையோ, பனையோ மரம் என்று மயங்குவோம். தொல்காப்பியர் கருத்துப்படி தென்னை, பனை, பாக்கு, மூங்கில், வாழை, போல்வன மரங்கள் ஆகா. அவை புல் இன வகையைச்சேர்ந்தனவே, புல்லுக்கும், மரத்திற்கும் வேற்றுமையை புலப்படுத்தும் தொல்காப்பியனார் கருத்துகளை சிந்திக்க வேண்டாமா?

    “புறக் காழனவே புல்லெனப் படுமே
    அகக் காழனவே மரமெனப் படுமே”

    என்பவை தொல்காப்பியர் நூற்பாக்கள், உள்ளே வைரம்பாய்ந்த உள்வயிர்ப்புடையவற்றையே மரம் எனக் கருதுகிறார் ஒல்காப்புமை தொல்காப்பியனார். புல்லின் தன்மையும்சற்றே விரிவாக இயம்பியுள்ளார் தொல்காப்பியனார்.

    “தோடே மடலே ஓலை என்றா
    ஏடே இதலே பாளை என்றா
    ஈர்க்கு குலையே நேர்ந்தன பிறவும்
    புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்”

    தோடு, மடல், ஓ​லை, ஏடு, இதழ், பாளை, ஈர்க்கு, குலைகளை உடையவை புல் இனத்தில் பாற்படும். இதனால் வாழை, தென்னை, ஈச்சை, பனைமரங்கள் மட்டுமின்றி தாமரை, கழுநீர் போன்ற நீர்வாழ் தாவரங்களும் புல் இன வகையைச் சாரும் என உணரலாம். புறவயிர்ப்பும், உள்வயிர்ப்பும் இல்லாதனவற்றுள் ஒரு சாரன. இவ்வகைப்பட்ட உறுப்பு பெயருடையதாகி இவையும் புல்லெனப்படும்எனப்பகர்ந்து வாழை, ஈந்து, தாமரை, கழுநீர் என்பனவற்றை எடுத்துக்காட்டாக இயம்புகிறார் இளம்பூரணர்.

    மரத்தின் உறுப்புகளைத் தொல்காப்பியர் நூலின் வழிக் காண்பதும் சாலச் சிறந்தது. ​தொல்காப்பியர்,

    “இலையே முறிவே தளிரே தோடே
    சினையே குழையே பூவே அரும்பே
    நனையே உள்ளுறுத் தனையவை யெல்லாம்
    மரனொடு வரூ உம் கிளவி என்ப.”

    மரவ​கை உறுப்புகளாகக் குறிப்பிடுகிறார். இ​லை, முறி, தளிர், ​கோடு, சி​னை, கு​ழை, பூ, அரும்பு, ந​னை இ​வை ​போன்றன மரங்களின் உறுப்புகளாகும்.

    புல்லுக்கும் மரத்திற்கும் ​பொதுவாக உள்ள உறுப்புக​ளை,

    “காயே பழமே தோலே செதிளே
    வீழோ டென்றாங் கவையும் அன்ன”

    என்று ​தொல்காப்பியர் எடுத்து​ரைக்கின்றார். காய், பழம், ​தோல், ​செதில், விழுது ​போன்ற​வை புல்லுக்கும், மரத்திற்கும் ​பொதுவான​வையாகும்.
    இதற்கு உரையாசிரியர் தரும் சில விளக்கங்களை ஈண்டு நம் சிந்தனைக்கு கொணர்வது மிகப் ​பொருத்தமு​டையதாக இருக்கும்.

    புறவயிர்ப்பும், உள்வயிர்ப்பும் இல்லாதனவற்றுள் ஒரு சாரன இவ்வுறுப்புப் பெயர் உடையதாகி மரமெனப்படும் என்று கூறி முருக்குதணக்கு என்பனவற்றை உதாரணங் காட்டுகிறார். தாழை பூ உடைத்தாகலானும், கோடுடைத் தாகலானும், புறவயிர்ப்பின்மையானும்மரமெனப்படுமாயினும் புல் என்றல் பெரும்பான்மை என்று கூறுவதும் நம் சிந்தனைக்குரியது.

    “புறக்காழன எனவே அவ்வழி வெளிறென்பது அறியப்படும். அவை பனையும், தெங்கும், கமுகும் முதலாயின புல் எனப்படும். இங்ஙனம்வரையறை கூறிப்பயந்த தென்னை? புறத்தும், அகத்தும் கொடி முதலாயின காழ்ப்பின்றியும், அதில் மரம் போல்வன இடையிடை பொய்பட்டும்புல்லும் மரமும் வருவன உள” என்று பேராசிரியர் பகர்கின்றார்.

    திணைப் பாகுபாட்டில் தாவரங்கள்:
    தொல்காப்பியர் நிலம் வகுத்த பாங்கே (முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தல், பாலை) தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவாழ்வைக் காட்டுகிறது. மரம், செடி, கொடிகளால் திணைப்பெயர் வகுத்த ஆசிரியர் கருப்பொருளில் உணவு (உணா) மரம் போல்வனவற்றையும்இயம்புகிறார் பூ முதலியவற்றையு சிந்திக்கச் செய்கிறார்.

    “தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
    செய்த யாழின் பகுதியோடு தொகை இ
    அவ்வகைப் பிறவும் கருயெவன மொழிப”

    புறத்திணையில்,
    “வெட்சி தானே குறஞ்சியது புறனே
    காஞ்சி தானே பெருந்திணைப் புறனே”

    “வாகை தானே பாலையது புறனே
    காஞ்சி தானே பெருந்திணைப் புறனே”

    வெட்சி, தும்மை, வாகை, காஞ்சி போன்ற மலர்களின் சிறப்பினைச் சிந்தனையில் தேக்குகிறார். இவை மட்டுமா?

    போரிடை மலர்கள்:
    மன்னர்கள் அடையாளம் கருதித் தம்முள் அறம் நிறை அரும்போர் புரிந்த வரலாற்றை இன்றைய அறிவியல் உலக அழிவுப் போரோடுஒப்பிட்டால் நெஞ்சங்குமுறும்,

    “வேந்திடை உறுபகை தெரிதல் வேண்டி
    ஏந்துபுகழ்ப் போந்தை வேம்பே ஆரென வரூஉம்
    மாபெரும் தானையர் மலைந்த பூவும்”

    என்ற நூற்பாவின் தொடரால் போந்தை, வேம்பு, ஆத்தி மலர்களின் அரும்புகழையும், அவற்றைப் புனையும் வேந்தரையும் புனைவதற்கான காரணத்தையும் இயம்புவது நம் சிந்தனைக்கு உரியது.

    ஓரறிவு உயிர்க்கு மனம் உண்டா?
    ஒன்று முதல் ஐந்து ஈறாகிய பொறியுணர்வு மனமின்றியும் பிறப்பனபோல வேறு கூறியது என்னை யெனின் ஓரறி உயிர்க்கு மனம்இன்மையின் அங்ஙனம் கூறுனார் என்பார் போராசிரியர். இக்கருத்து அறிவியறிஞர்கள் மேலும் சிந்திக்க இடம் கொடுக்கிறது. ஊனமும், செவிடும், குருடும் என அவயவத்தான் குறைவுபட்டாரை குறைந்த வகை அறிந்து அவ்வப்பிறப்பினுள் சேர்த்துக் கொள்க என்ற போராசிரியர் உரைஆய்வுக்கு உரியது.

    அறிவியல் அறிஞர் J.C போஸ் போன்றவர்கள் ஆய்வும், சித்தர்கள் சிந்தனையும், தொட்டால் சிணுங்கி போன்ற தாவரங்களின்செயல்பாடும் சிந்தித்தால் ஒரறிவு உயிர்க்கும் மனம் உண்டென உறுதியாக நம்பலாம். தொல்காப்பியர் ஆறாம் உயிரே பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே” என்ற நூற்பா வழங்கியுள்ளது ஒன்று முதல் ஐயறிவு உடைய உயிர்களுக்கு மனம் இல்ல என்று உறுதிப்படுத்துவதாகத்தோன்றலாம்.

    மனம் இருப்பது வேறு, மனம் செயல்படுவது வேறு. சிந்திக்கும் மனப்பாங்கு, நல்லது கெட்டது ஆயும் திறன், எதிர்கால விளைவை அறியும்பாங்கு மனிதர்க்கு உரியது என்று மட்டுமே கொள்ளல் தரும். ஆறாம் அறிவாகிய மன அறிவு படைத்த நாம் சிந்தித்துத் தெளிந்து உண்மைப்பொருளை உள்ளத்தால் பற்றிப்பிடித்து அதனில் கரைந்தது போதலே வாழ்வின் முழுப்பயன் என்று உணர்தல் ​வேண்டும். தொல்காப்பியத்துள்கோட்டுப் பூ, கொடிப்பூ, நிலப்பூ, நீர்ப்பூ நான்கும் இடம் பெற்றுள்ளன.

    செயற்கை வாழ்வில் முற்றும் திழைத்து இயற்கையை வேர் அறுக்க முயலும் இக்காலத்தில் தொல்காப்பிய முனிவர் வாழ்ந்தபழங்காலத்தில் மக்கள் யாவரும் இயற்கை வாழ்வில் ஒன்றி நுண்மாண்நுழைபுலமும், சிந்தனைச் செல்வமும், சீரிய வாழ்வும் கொண்டுசிறப்புற்று விளங்கினர் என்றால் மிகையாகாது.

    சொல் வேறு, செயல் வேறாய் வாழும் நாம் எல்லா உயிர்க்கும் பசிப்பிணியும், உடற்பணியும் உளப்பிணியும் தீர்த்து ஆன்ம தாகத்தைத்தணிக்கும் மரம், செடி, கொடி, வகைகளைப் போற்றிப் காப்பது நமது கட​மையாகும்.

    ஊர்வன, பூச்சியினங்கள்:
    “நந்தும் முரளும் ஈர்அறிவின​வே
    பிறவும் உள​வே அக்கி​ளைப் பிறப்​பே”(1528)

    என்று ​தொல்காப்பியர் ஈரறிவு உயிர்க​ளைப் பற்றி குறிப்பிடுகிறார். இ​வை ஊர்வனவாகும். நத்​தைடூ முரள் என்ற மீன் வ​கை, சிப்பி, கடல்வாழ் உயிரினங்களில் சில இரண்டறிவு உயிரினங்களாகும். இ​வை கடலில் ஊர்ந்து வாழ்வன.

    மூவறிவு ​கொண்ட​வை:
    மூவறிவு ​கொண்ட உயிரினங்க​ளை,

    “சிதலும் எறும்பும் மூவறிவின​வே
    பிறவும் உள​வே அக்கி​ளைப் பிறப்​பே” (1529)

    என்று ​தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். க​றையான், எறும்பு இ​வை ​போன்ற இனங்கள் தொடு உணர்ச்சி, நா உணர்ச்சி, மூக்குணர்ச்சி மூன்றும் கொண்டன.

    நாலறிவு ​கொண்ட​வை:
    “வண்டும் தும்பியும் நான்கறிவின​வே
    பிறவும் உள​வே அக்கி​ளைப் பிறப்​பே”(1530)

    என்று நாலறிவு உயிர்க​ளைப் பற்றித் ​தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். வண்டு, தும்பி, இவற்றின் இனங்கள், ​தொடு உணர்வு, நா உணர்வு, மூக்குணர்வு, இவற்றொடு கட்புலன் உணர்வும் பெற்றுத் திகழ்வன.

    ஐந்தறிவு ​கொண்ட​வை:
    விலங்கினங்கள் அ​னைத்தும், மனிதர்களில் விலங்குளாய் இருப்​போரும் மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்தறிவு உ​டைய உயிர்களாவர். இத​னை,

    “மாவும் மாக்களும் ஐயறிவின​வே
    பிறவும் உள​வே அக்கி​ளைப் பிறப்​பே” (1531)

    என்று ​தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

    மக்களினம்:
    “மக்கள் தாமே ஆறறிவினவே” என்று அறுதியிட்டுப் பேசும் தொல்காப்பியனார் “பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே “எனத் தேவர், அசுரர், இயக்கர் முதலான பிறவிகளையும் தழுவிக்கொள்கிறார்.

    இவர்கள் மட்டுமோ ஆறறிவு படைத்தவர்கள். மனிதனின் ஆணவத்திற்கு முற்றுப் புள்ளி ​வைக்கிறார் தொல்காப்பியனார் “ஒரு சார்விலங்கும் உளவென மொழிப,” கிளியும், குரங்கும் யானையுங் கூட ஆறறிவு கொண்டவை” என்கிறார் உரையாசிரியர். இந்தியத் திருநாட்டின்அறிவியல் அறிஞர் நோபல் பரிசு பெற்ற பெருந்தகை ​ஜெகதீஸ்சந்திர​போஸ் இத்தகு ஒரறிவு படைத்த உயிர்களை ஆராய்ந்து அவற்றின்பெருமையை உலகிற்கு உணர்த்தியவர், இசை கேட்டு உருகும் தன்மையும் கொண்டவை தாவரங்கள் என்று இன்றைய அறிவியல் உலகம்ஏற்றுக்கொண்டுள்ளது.

    தொல்காப்பியர் குறிப்பிடும் உயிர் மரபுகள் குறித்த ​செய்திகள் இன்றுள்ள அறிவியல் அறிஞர்க​ளும் வியப்புறு வண்ணம் அ​மைந்திருப்பது ​நோக்கத்தக்கதாகும். ​தொல்காப்பியரின் மரபியல் உயிர்களின் பரிணாம வளர்ச்சி​யை எடுத்து​ரைக்கும் இயலாகவும் அ​மைந்துள்ளது. பல்லுயிரின வளர்ச்சி​யையும் அவற்​றை அழிக்காது பாதுகாக்கும் சமுதாயப் ​பொறுப்புணர்​வையும் ​தொல்காப்பியர் மரபியல் வழி நமக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    மு​னைவர் சி.​சேதுராமன்,
    தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி (தன்.,), புதுக்​கோட்​டை.
    E.mail: Malar.sethu@gmail.com

     

    Share
  • கோட்பாடுகளின் அடிப்படையில் செவ்விலக்கியங்களை ஆராயத் துணை செய்யும் இணையத் தரவுகள்

    — முனைவர் மு.பழனியப்பன்.

     

    செவ்வியல் இலக்கியங்களில் இலக்கிய நயம் காணுதல், உவமை, உருவக அழகு காணுதல் என்ற மரபு சார்ந்த இலக்கியத் திறனாய்வில் இருந்து வேறுபட்டு, மேலை நாட்டுச் சார்பால் கோட்பாட்டு அடிப்படையிலான திறனாய்வுகள் தற்காலத்தில் பெருகி வளரத் தொடங்கியுள்ளன. பல்வேறு வகையானத் திறனாய்வு முறைகளின் வழியாகச் சங்க இலக்கியங்களில் புதைந்து கிடக்கும் அரிய கருத்துகள் இத்திறனாய்வாளர்களால் வெளிவரச்செய்யப்பெற்றுள்ளன. இதன் காரணமாக தமிழ்த் திறனாய்வுலகில் புத்தொளி வீசத் தொடங்கியுள்ளது. இவ்வாய்வுகளுக்கும், ஆய்வு அணுகுமுறைகளுக்கும் உதவும் இணைய தளங்கள் பல உள்ளன. அவற்றினைப் பற்றிய அறிமுகத்தையும் அவ்விணைய தளங்களின் தரம் பற்றியும் மதிப்பிடுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

    கோட்பாடு – சொல் விளக்கம்:
    கோட்பாடு என்பதை ஒரு கருத்தாக்கம் என்று பொருள் கொள்ளலாம். கோட்பாடு என்பதனைப் புரிந்து கொள்ள பின்வரும் எடுத்துக்காட்டு உதவும்.
    கற்பு என்பது ஒரு கோட்பாடு. நடைமுறை வாழ்வில் நாம் ஏற்றுக் கொண்டுள்ள கோட்பாடு. இதன் வாழ்வியல் நெறிமுறை என்னவென்றால், ஒருவனுக்கு ஒருத்தி என்பதாகும். எனவே ஓர் ஆணும், ஒரு பெண்ணும் மட்டுமே, சமுதாய நிகழ்வாகிய திருமணச் சடங்கின் மூலம் இணைந்து வாழும் வாழ்க்கையே கற்புக் கோட்பாட்டினைக் கொண்டது என்று கூறப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு கொள்கையின் சிந்தனைத் தெளிவினாலும் – ஏற்றுக் கொள்ளல் என்பதாலும் – சமுதாய நிலைப்பாட்டினாலும் கோட்பாடுகள் உருவாகின்றன.

    இவ்விரு மேற்கோள்களும் தமிழ் இணையப் கல்விக்கழகத்தின் இணையதளத்தின் நாட்டுப்புறவியல் பாடப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். தமிழ் ஆய்வுகளின் அடிப்படைகளைத், தமிழ்க்கல்வியின் அடிப்படை நிலைகளை அறிந்து கொள்ளத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையதளம் பயன்படுகின்றது. இத்தளம் தனக்கென ஒரு விரிந்த நூலகத்தையும், தமிழ்ப் பட்டப்படிப்பின் தரத்திற்கான பாடங்களையும் கொண்டு விளங்குகின்றது

    கோட்பாடு வகைகள்:
    கோட்பாட்டின் வகைகளைப் பின்வருமாறுப் பட்டியலிடுகின்றது விக்கிப்பீடியா தளம்.
    அறவியல் திறனாய்வு
    பெண்ணியத் திறனாய்வு
    அமைப்பியல் திறனாய்வு
    பின் அமைப்பியத் திறனாய்வு
    பின்நவீனத்துவத் திறனாய்வு
    நவீனத்துவத் திறனாய்வு
    வடிவவியத் திறனாய்வு
    மார்க்சியத் திறனாய்வு
    கட்டுடைப்பியத் திறனாய்வு
    யதார்த்தவியத் திறனாய்வு
    வரலாற்றியல் திறனாய்வு
    புது வரலாற்றியல் திறனாய்வு
    சமூகவியல் திறனாய்வு
    மொழியியல் திறனாய்வு
    ஒப்பீட்டுத் திறனாய்வு
    உளப்பகுப்பாய்வுத் திறனாய்வு
    தொல்படிமவியல் திறனாய்வு
    எடுத்துரைப்பியல் திறனாய்வு
    அறிவுறுத்தல் திறனாய்வு
    பின்காலனித்துவத் திறனாய்வு
    புனைவியல் திறனாய்வு
    சூழலியல் திறனாய்வு
    புதுத் திறனாய்வு
    இப்பட்டியலில் உள்ள திறனாய்வுகளை, அவற்றின் செல்நெறிகளை, கோட்பாடுகளின் முந்தையதான நிலையை இத்தளம் எடுத்துரைத்து அதற்கான தொடுப்புகளைப் பெற்றிருப்பது சிறப்பிற்குரியதாகும்.

    இவை ஒவ்வொன்றுக்கும் விரிவுதேடி இணையத்தில் நுழைந்தால் அவற்றுக்கான தரவுகள் ஓரளவிற்குக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இக்கட்டுரையின் அளவு கருதிச் சிற்சில கோட்பாடுகளுக்குக் கிடைக்கும் இணையத் தரவுகள் இங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.

    குறிப்பாக தமிழுக்கே உரித்தான தனித்துவ மிக்கக் கோட்பாடுகளாக வளர்ந்துள்ள திணைக் கோட்பாடு போன்ற கோட்பாடுகள் ஒரு வகையாகவும், மேலைநாட்டுச் சிந்தனைக்கு இடமளித்த அவை தந்த வெளிச்சம் கொண்டு சங்க இலக்கியத்தைப் பார்த்த கோட்பாடுகள் மற்றொரு வகையாகவும் ஆக்கிக் கொள்வது என்பது இக்கட்டுரையின் வகைப்பாட்டிற்கு பொருத்தமுடையதாகும் என்பதில் அப்பிரிவே கொள்ளப்படுகின்றது.

    தமிழின் தனித்த கோட்பாடுகள்:
    தமிழின் தனித்த கோட்பாடுகளாக அறியத்தக்கனவற்றுள்
    1. திணைக்கோட்பாடு
    2. ஈகைக் கோட்பாடு
    3. கூற்றுக் கோட்பாடு
    4. அறிவுத் தோற்றவியல்
    ஆகிய நான்கு அமைப்புகளை இணைய நிலையில் காணமுடிகின்றது.

    திணைக் கோட்பாடு:
    திணைக்கோட்பாடு என்ற நிலையில் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியின் முன்னைப் பேராசிரியர் க.பூரணச்சந்திரனின் இணையதளம் சிறப்பிடம் பெறுகின்றது. இவரின் இத்தளத்தில் இவரது பல் திறப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப் பெற்றுள்ளன. அவற்றைச் சொடுக்கி நமக்குத் தேவையான கட்டுரைகளைப் பெறலாம். திணைக்கோட்பாட்டின் அடிப்படையில் அவர் சங்க இலக்கியங்களைக் கண்டுச் சில முடிவுகளுக்கு வருகின்றார். அவற்றில் பின்வரும் சில குறிக்கத்தக்கன.

    முதல், கரு, உரி என்ற இம்மூன்றனுள் உரிப்பொருளே சிறப்பானது. ஏனெனில் முதற்பொருள் பயின்றுவராத, கருப் பொருள் காணப்படாத பாக்களைக் கூட காணலாம். ஆனால் உரிப் பொருளற்ற கவிதை ஒன்றையும் காண இயலாது. உரிப்பொருள் மானிட வாழ்க்கைஅனுபவமே ஆதலின் சங்க இலக்கியமே மனிதமையவாத அடிப்படையில் அமைந்தது என்பதில் ஐயமில்லை. எனவே சங்கப்பாக்களை உரிப்பொருள் மட்டும் பெற்ற பாக்கள், உரிப்பொருள், முதற்பொருள், கருப்பொருள் பெற்ற பாக்கள் என்றுதான் பகுக்க முடியும்.

    1. குறிஞ்சி-வேட்டைச் சமூகம், சுரண்டல் உருவாகா நிலை,இயற்கைக் காதல், பெருமளவு தாய்வழிச் சமூகம்.வெட்சி-வேட்டைச்சமூகம், சிறிய தலைவர்கள், ஆநிரை கவர்தல்
    2.முல்லை-ஆடுமாடுகள் சொந்தமாதல், தனியுடைமையின் தொடக்கம், மேய்த்தல் சமூகம், தந்தைவழிச் சமூகமாதல், கற்புக் கோட்பாடு, வஞ்சி-சிறிய தலைவர்கள், நேருக்கு நேர் போரிடல்
    3. மருதம்-பெருமளவில் நிலத்தைச் சொந்தமாக்குதல், இயற்கை யழிவு, சுரண்டல்- நிலவுடைமைச் சமூகம், பெண்ணுடைமைச் சமூகம், ஆண்கள் நெறிதவறுதல்-நொச்சி-அரணமைத்துக் காத்தல், பெரும் அரசர்கள் தோற்றம்
    4. நெய்தல்-இயற்கைக்குத் திரும்புதல், சுரண்டலற்றநிலை, கலப்புக்காதல், சிரமம், துன்பம்,இரங்கல்,புலம்பல், நிச்சயமற்ற பிரிவு, காஞ்சி-நிலையாமை, நிலையின்மை, புலவர்கள் பேரரசை விட்டு சிறிய புரவலர்களை அணுகுதல்பாலை-களவுசெய்யும் சமூகம்இ மனிதனை மனிதன் அழித்தல், தற்காலிகப் பிரிவு, வெம்மை, பிரிவும் பிரிவின்மையும், வாகை-பெருவேந்தர் குறுநில மன்னர்களை வெற்றிகொண்ட தன்மை இரக்கம்
    5. பாலை-களவுசெய்யும் சமூகம், மனிதனை மனிதன் அழித்தல், தற்காலிகப் பிரிவு, வெம்மை, பிரிவும் பிரிவின்மையும்,வாகை-பெருவேந்தர் குறுநில மன்னர்களை வெற்றிகொண்ட தன்மை, இரக்கம்
    என்பன அவர் காட்டும் திணைக் கோட்பாடு சார்ந்த கருத்துகள் ஆகும்.

    ஈகைக் கோட்பாடு:
    தமிழர்களின் அறம் சார்ந்த செயல்பாடுகளுள் ஒன்று ஈகை ஆகும். இதனைத் தமிழர்களின் தனித்த கோட்பாடாக முனைவர் ந. இளங்கோ காண்கிறார். அவரின் ஈகைக் கோட்பாடு பற்றிய கட்டுரையானது தமிழ்த்தொகுப்புகள் என்ற தளத்தில் காணப்படுகின்றது. இத்தளமும் சங்க இலக்கியக் கோட்பாட்டு ஆய்வுகளுக்கு இடமளித்து வரும் தளமாகும். இதன் பொறுப்பாளராக சென்னையைச் சார்ந்த சிங்கமணி விளங்கி வருகின்றார். காலத்தால் அழியாத பல செய்திகளைத் தாங்கி இத்தளம் வருவதால் இதற்குத் தமிழ்த் தொகுப்புகள் என்றே பெயரிட்டுள்ளனர். இத்தளத்தில் இடம்பெற்றுள்ள ஆக்கங்களின் ஆசிரியர்கள் பெயர்கள் தரப்பெற்றுள்ளன. அதன் வழியாக அவ்வாசிரியர்களின் ஆக்கங்களைக் காணலாம். இதுதவிர கட்டுரையின் பொருள் வகைமையும் தரப்பெற்றுள்ளது. இதன் வழியாகவும் சங்க இலக்கிய ஆய்வுகளைப் பெறலாம்.

    சங்க இலக்கியங்களில் பகிர்ந்துண்ணல், கொடை, பரிசில்,உணவிடல் என்ற பல நிலைகளில் சமூக வழக்கிலிருந்த ஈகை, திருக்குறள் முதலான நீதி நூல்களில் சமண, பௌத்தமதச் சொல்லாடல்களுக்கு ஒப்பப் பசி தீர்த்தல் என்ற பொருளில் இறுக்கம் பெற்றது. அற்றார்அழி பசி தீர்த்தல் (குறள்226) ஈகை, வறியார்க்கு ஒன்று ஈவதே-ஈகை (குறள்221) என்றெல்லாம், ஈகை அறம் பசி தீர்த்தல்; அதுவும்வறியவனின் பசியைத் தீர்த்தல் என்றபொருளில் வலியுறுத்தப்பட்டது. ளளுபுகழ் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் ஈதலால் இசைபெறலாம் என்று ஈகையைப் புகழோடு இணைக்கின்றார். விருந்தோம்பல் என்ற சங்க இலக்கியத்து ஈகையைத் திருவள்ளுவர் இல்லறத்தான் கடமைகளில் ஒன்றாகத் தனித்துவலியுறுத்துகின்றார் என்ற இந்தக் கருத்துச் செவ்வியலக்கியங்களில் காணப்படும் ஈகைக் கோட்பாட்டை விளக்குவதாக உள்ளது.

    கூற்றுக் கோட்பாடு:
    செவ்விலக்கியங்களில் கூற்று முறை அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. தலைவி, தோழி, தலைவன் போன்றோர் கூற்று நிகழ்த்தும் முறைகளுக்கு ஒரு வரையறை உண்டு. திருக்குறள் கூற்று அடிப்படையில் அமைந்திருப்பதை மையமாக வைத்துக் கூற்றுக் கோட்பாடு என்ற ஒரு கொள்கையை முன்நிறுத்துகிறார் கே. பழனிவேலு. இவரின் கட்டுரை பனுவல் என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது. இத்தளம் பல ஆய்வுக்கட்டுரைகளின் அரங்கமாகத் திகழ்கின்றது (puthiyapanuval blogspot.in). இவ்விதழ் சென்னை அம்பத்தூரில் இருந்து டாக்டர் சீனிவாசன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் உலகு தழுவிய அளவில் வெளிவருகின்றது. இதன் ஆர்க்கைவ்ஸ் என்ற சேமிப்புக்களத்தில் ஒவ்வொரு இதழும் சேமிக்கப்பெற்றுள்ளன. அவற்றில் பல தரமான சங்க இலக்கியக் கோட்பாடு; ஆய்வுகள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. இதனுள் ஆய்வாளர்கள் அனைவரும் தங்களின் ஆய்வுரைகளை வழங்க உள்நுழைந்து பதிவு பெற வேண்டும்.

    திருக்குறளைக் கூற்றுக் கொள்கை அடிப்படையில் கண்டு அவர் பின்வரும் முடிவிற்கு வருகின்றார்.
    திருக்குறள் சுட்டும் அறங்கள், தமிழ்ச் சமூகத்தில் புழங்கிக் கொண்டிருந்த அறங்களே ஆகும். இந்த அறங்கள் எதையும் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்தாகக் கருதமுடியாது. ஆசிரியர்,கூற்றுகளைத் தொடர்நிலையில் மொழிப்படுத்தும் பணியையே செய்துள்ளார். இவ்வாறான மொழிப்படுத்தலின் நுட்பமே அறத்தை உரைக்கும் பனுவலைப் புனைவுப் பனுவலாக இயங்கச் செய்கிறது. கூற்றுகளின் பொருண்மைத் தொகுதிகளைப் புரிந்துகொண்டு பிற கூற்றுகளுடன் இணைக்கின்ற திருவள்ளுவருடைய மொழித்தொழில்நுட்பம் பிற அற இலக்கியங்களில் காணக் கிடைக்காததாகும். இதனாலேயே அறம் உரைக்கின்ற நோக்கத்திற்கு இடையிலும் திருக்குறளால் ஒரு புனைவுப் பனுவலாகவும் இயங்க முடிகிறது என்ற இந்தக் கருத்து திருக்குறளில் கையாண்டுள்ள மொழித் தொழில் நுட்;பத்தை எடுத்துரைப்பதாக உள்ளது.

    அறிவுத் தோற்றவியல்:
    அறிவுத் தோற்றவியல் என்ற கோட்பாட்டை எம்.டி முத்துக்குமாரசாமி அறிமுகப் படுத்திச் சங்க இலக்கியங்களை அதன் வழியில் ஆராய்ந்துள்ளார். இவரின் பெயரிலேயே ஒரு தளம் அமைந்துள்ளது. இதனுள் பல்வகைக் கட்டுரைகள் கிடைக்கின்றன. சங்க இலக்கியக் கோட்பாட்டுக் கட்டுரைகளும் உள்ளன. இதன் முகவரி http://mdmuthukumaraswamy.blogspot என்பதாகும். அறிவுத்தோற்றவியில் என்பதை அவர் பின்வருமாறு விளக்குகின்றார். அறிவறிவு அல்லது அறிவுத்தோற்றவியல் என்று தமிழில் குறிக்கப்படுகின்ற Epistemology என்பதை இலக்கியத்தில் காண விழைந்த முதல் தமிழ் நூலாக க.நாராயணனின் “தமிழர் அறிவுக்கோட்பாடு” என்ற நூலினைச் சொல்லலாம். ஆனால் நாரயணனின் நூல் அறிவுத்தோற்றவியலை விளக்கிய அளவுக்கு பழந்தமிழ் இலக்கியத்தின் அறிவுத்தோற்றவியலை விளக்கவில்லை. இதற்கு அடிப்படையான காரணம் நெறிமுறையில் ஏற்பட்ட கோளாறே ஆகும்.

    நாராயணனின் நூல் “அறிவு” என்ற சொல் பதினென்கீழ்க் கணக்கு நூல்களிலும் பிற சங்க இலக்கியங்களிலும் குறிப்பாக திருக்குறளிலும் எங்கெல்லாம் வருகிறது என்று பார்த்து, அவற்றை “அறிவு” பற்றிச் சொல்லப்படுகின்ற கருத்துக்களோடு இணைத்து தமிழரின் அறிவுக்கோட்பாடு என தனக்கு வேண்டியதை மட்டும் உருவி எடுத்து தொகுப்பதாக உள்ளது. ஆகவே அடிப்படை நிலைப்பாடுகளை தொகுக்கின்ற பிரச்சினை எழவே இல்லை. இதற்கு மாறாக எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்களின் அமைப்பாக்கத்தின் அடிப்படை நிலைப்பாடுகளிலிருந்து அவற்றின் அறிவுத்தோற்றவியலை விளக்குவது என் நெறிமுறையாகிறது. இதற்கு சங்க இலக்கியத்தின் மையப்புள்ளியை நான் அடையாளம் காணவேண்டும் என்ற விளக்கம் மிக்க முன்னுரையோடு இவர் இந்தக் கட்டுரையைத் தொடங்குகின்றார்.

    இக்கட்டுரையின் முக்கியமான முடிவாகக் கருதத் தக்கது பின்வரும் கருத்தாகும். உணர்ச்சியை மையமாகக் கொண்டு சகமனிதன், இயற்கை, புற உலகு, ஆகியவற்றோடு மொழி செயல்பாட்டின் மூலம் மனிதன் கொள்கிற இயங்கியல் உறவினை அடிப்படை அறிவுத்தோற்றவியல் நிலைப்பாடாக அறியவரும்போது சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் நவீன வாழ்க்கையின் சிக்கல்களிலிருந்து தமிழனை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளை சொல்லக்கூடும். அப்படிப்பார்க்கையில் அக புற ஒழுங்குகளை ஒரே சமயத்தில் எதிர்கொள்கிற நெடுநெல்வாடை போன்ற பாடல்கள் இக்காலத்திற்கு மிகவும் தேவையான, தமிழனின் உணர்வுகளை உயிர்ப்பிக்கின்ற நவீன கவிதைகளாக விளங்குகின்றன. என்னைப் பொறுத்தவரை நெடுநெல்வாடையே பத்துப்பாட்டில் மிகச் சிறந்த கவிதையாகும் இவ்வகையில் சங்க இலக்கியங்கள் முழுவதற்குமான அறிவுத் தோற்றவியல் ஆய்வுகளைத் தொடங்கலாம்.

    பல் துறை ஆய்வுகள்:
    சங்க இலக்கியப் பல்துறை ஆய்வுகளை இலங்கை நாட்டு அறிஞர்கள் பலரும் செய்துள்ளனர். இலங்கை நாட்டாரின் ஆய்வுகளை இணையப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் தளம் நூலகம் என்ற தளமாகும். இத்தளத்தில் இலங்கையிலிருந்து வெளிவந்துள்ள அத்தனை நூல்களும், சிற்றிதழ்களும், சிறுஅறிக்கைகளும் சேமிக்கப்பெற்றுள்ளன. இத்தளம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தால் நிறுவப்பட்டு, கொழும்புவில் இருந்து இயங்கி வருகின்றது.
    தமிழ் இலக்கிய ஆய்வுகள் என்ற பெயரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்திய பேராசிரியர் க.கைலாசபதி நினைவுக் கருத்தரங்கிற் படிக்கப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஒன்று இத்தளத்தில் கிடைக்கின்றது.

    இக்கருத்தரங்கு அமரர் கைலாசபதியின் பதினோராவது நினைவு ஆண்டான 1993இல் இடம்பெற்றது. இதனுள் அமைந்துள்ள கட்டுரைகள் பின்வருமாறு.
    • சங்க இலக்கியத்தில் நோக்கு என்னும் செய்யுளுறுப்பு (பண்டிதர் க.சச்சிதானந்தன்),
    • சங்க இலக்கியங்களிலே ஒழுக்கவியற் கோட்பாடுகள் (வித்துவான் க.சொக்கலிங்கம்),
    • சங்க இலக்கியங்களில் தோழி (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்),
    • பழந்தமிழர் வழிபாட்டு மரபுகளும் நம்பிக்கைகளும் (கி.விசாகரூபன்),
    • சங்கச் செய்யுள் வடிவங்களும் மொழியும் (பேராசிரியர் அ.சண்முகதாஸ்),
    • யப்பானிய அகப்பாடல் மொழிபெயர்ப்புக்குச் சங்கப்பாடல் மரபு பற்றிய அறிவின் இன்றியமையாமை (மனோன்மணி சண்முகதாஸ்),
    • ஈழத்திற் காணப்படும் சங்ககால முதுமக்கட் தாழிகள் (பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்),
    • வழுக்கையாற்றுப் பிராந்தியத்திற் சங்ககாலப் படிமங்கள் (செ.கிருஷ்ணராஜா)
    என்ற எட்டுக் கட்டுரைகள் இதனுள் அடங்கியுள்ளன. இக்கட்டுரைகளில் இலங்கையில் நடைபெற்று வந்த சங்க இலக்கியக் கோட்பாட்டு ஆய்வுகளை எடுத்துரைப்பதாக உள்ளது.

    இத்தளத்தை அறிமுகம் செய்வதாக அமையும் வலைப்பூ “வேர்களைத் தேடி” என்ற வலைப்பூவாகும். இவ்வலைப்பூவில் பல சங்க இலக்கியக் கட்டுரைகள் காணப்பெறுகின்றன. இதன் பொறுப்பாளர் முனைவர் இரா. குணசீலன் ஆவார். திருச்செங்கோடு கே. எஸ்.ஆர் மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் சங்க இலக்கியங்கள் குறித்த பல தகவல்களை, கட்டுரைகளை அளித்து வருகின்றார் (http://www.gunathamizh.com)

    மேலைநாட்டுக் கோட்பாடுகளும், சங்க இலக்கிய ஆய்வுகளும்:
    மேலைநாட்டுத் தாக்கத்தால் தமிழ்த் திறனாய்வு உலகிற்குப் பல கோட்பாடுகள் அறிமுகமாகின. குறிப்பாக நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்று இவற்றை இருவகையாகப் பகுக்ககுலாம். அழகியல், மார்க்சியம், மொழியியல், அமைப்பியல் போன்ற கோட்பாடுகள் நவீனத்துவக் கோட்பாடுகள் ஆகும். பின்னை நவீனத்துவக் கோட்பாடுகள் என்ற அடிப்படையில், பெண்ணியம், உளவியல், பின்னை நவீனத்துவம் போன்றன அமைகின்றன. இவற்றிற்கான நோக்குகளும் கட்டுரைகளும் இணையத்தில் கிடைக்கின்றன. அவை பற்றிய செய்திகள் பின்வருமாறு.

    நவீனத்துவ ஆய்வுகள்:
    மொழியியல் ஆய்வுகள்
    நவீனத்துவ ஆய்வுகளில் மொழியியல் சார்ந்த ஆய்வுகள் குறிக்கத்தக்கன. மொழியியல் பின்வரும் பல்துறைகளைக் கொண்டது.
    • ஒலிப்பியல் ஒரு மொழியில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு ஒலிகள் பற்றிய துறை;
    • ஒலியியல், ஒரு மொழியின் அடிப்படை ஒலிகளின் வடிவுரு பற்றி ஆராயும் துறை;
    • உருபனியல், சொற்களின் உள் அமைப்புப் பற்றி ஆராயும் துறை;
    • சொற்றொடரியல், எவ்வாறு சொற்கள் சேர்ந்து இலக்கணத்துக்குட்பட்ட வசனங்களை உருவாக்குகின்றன என்பதை ஆராயும் துறை;
    • சொற்பொருளியல், சொற்களின் நேரடியான பொருளை ஆராய்தலுக்கும்,(சொல் குறிக்கும் பொருள்), அவை சேர்ந்து உருவாக்கும் வசனங்களின் நேரடியான பொருள்களையும் ஆராயும் துறை;
    • மொழிநடை, மொழியின் பாணிகளை ஆராயும் துறை;
    • சூழ்பொருளியல் தொடர்புச் செயற்பாடுகளில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றிய ஆய்வு;
    • தொடரியல் ஆய்வு

    இவற்றின் அடிப்படையில் சங்க இலக்கியங்களை ஆராயும் தன்மை நவீனத்துவ ஆய்வாகின்றது. மொழியியல் சார்பான கட்டுரைகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தளத்தில் பெரிதும் கிடைக்கின்றன. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இதழான ஆய்வியில் என்ற இதழில் வெளிவந்துள்ள பல்வேறு துறைசார்ந்த கட்டுரைகளின் பிடிஎப் வடிவம் கிடைக்கின்றது. இவற்றின் வழியாக மொழியியல் சார்ந்த பலகட்டுரைகளை வாசிக்கமுடிகின்றது. இதன் முகவரி: http://www.ulakaththamizh.org/ என்பதாகும். இத்தளத்தில் 1972 முதல் வெளிவந்த கட்டுரைகள் கிடைக்கின்றன. மேலும் முன்னூறுக்கும் மேற்பட்டக் கட்டுரையாளர்களின் பெயரடைவு உள்ளது. இவ்விரண்டின் வழியாகவும் தேடிக் கட்டுரைகளைப் பெற முடியும். செ.வை. சண்முகம், ஆதித்தன், ச. அகத்தியலிங்கம் போன்ற மொழியியல் அறிஞர்களின் கட்டுரைகள் இங்குச் சேமிப்பாக உள்ளன.

    அழகியல்:
    அழகியல் என்பதும் நவீனத்துவச் சிந்தனை ஆகும். வருணனை, உவமை, கற்பனை போன்றனவற்றைத் தமிழ் மரபில் அழகியல் எனக்கொள்வோம் இதனைத்தாண்டி மேலைநாட்டு அழகியலின் அடிப்படையில் சங்க இலக்கியங்களை அணுகும் முறைக்கான வாய்ப்புகளும் இணையத்தில் கிடைக்கின்றன. நவீன இலக்கியத் திறனாய்வில் குறிக்கத்தக்கத் திறனாய்வாளர் தி.சு நடராசன் ஆவார். இவரின் கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அழகியல் சார்ந்த இவரின் ஒரு கட்டுரைத் தமிழ்க் கூடல் என்ற தளத்தில் கிடைக்கின்றது. மகிழம் இன்ஃபோடெக், மதுரை என்ற முகவரியில் இருந்து வெளிவரும் இணையப் பத்திரிக்கை தமிழ்க்கூடல் என்பதாகும். இதன் முகவரி http://www.koodal.com/ என்பதாகும்.

    மார்க்சியத் திறனாய்வு:
    இணையதள அளவில் அதிகமாகத் தமிழில் கிடைக்கும் அயலக் கோட்பாடுகளில் தலையாயது மார்க்சிய திறனாய்வாகும். மார்க்சிய கொள்கைகளை முன்வைத்துப் பல இணையதளங்கள் இயங்கிவருகின்றன.
    இதில் குறிக்கத்தக்க இணையதளம் மார்க்சிஸ்ட். ஆர்க் என்பதாகும். இதன் முகவரி https://www.marxists.org/ மார்க்சியக் கொள்கைகளை அறிந்து கொள்ள மிக உதவும் தமிழ்க்களஞ்சியம் இத்தளமாகும். மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் போன்ற பலரின் கட்டுரைகள் இத்தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

    சிவலிங்கம் என்பவர் இத்தளத்தின் தமிழ்ப்பகுதிக்கு இணைய வடிவமைப்பாளராக விளங்குகின்றார். இவரே பல ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்து அளித்துள்ளார். பொருளியல் ஆய்வுகளுக்கு இத்தளம் மிகப் பயன்படும்.
    மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ் என்ற பெயரில் இதழொன்றும் வெளிவருகின்றது. இதில் சங்க இலக்கியம் பற்றியச் சிந்தனைகள் அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன. இது மதுரையில் இருந்து வெளிவருகின்றது. கம்யுனிஸ்ட் பார்டி ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் சார்பில் இது வெளிவருகிறது. இதன் முகவரி https://www.marxists.org/. பண்டைய பண்பாடும் ஆய்வுகளும் என்ற கட்டுரையில் மார்க்சிஸ்ட் சிந்தனை வயப்பட்டு சங்க இலக்கியத்தின் மேல் எழுதப் பெற்றக் கட்டுரைகள் மதிப்பிடப்பெற்றுள்ளன. இக்கட்டுரையின் பல கருத்துகள் சங்க இலக்கியத்தைப் புரட்டிப்போடுகின்றன.

    இனியொரு என்ற தலைப்பிலான ஒரு தளமும் மார்க்சிய முறையில் இயங்கும் கோட்பாடுகளுக்கு இடமளிக்கும் ஆக்கங்களுக்கு இடம் தரும் தளமாக உள்ளது. இதன் முகவரி iniyoru.com என்பதாகும்.

    உளவியல்:
    உளவியல் அடிப்படையிலான கோட்பாடுகளுடன் சங்க இலக்கியங்களை ஒருங்கிணைத்துப் பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. மோகனா என்ற சென்னைப்பல்கலைக்கழக ஆய்வாளர் தனக்கென ஒரு வலைப்பூவை நிறுவி அதனுள் தன்னுடைய பல கட்டுரை ஆக்கங்களை வெளியிட்டுள்ளார். உளவியல் அடிப்படையில் ஐந்துச் சங்கப் பெண்பாற் புலவர்களின் ஆக்கங்களை அவர் ஆராய்ந்துள்ளார். இத்தளத்தின் முகவரி mohanawritings.blogspot.in என்பதாகும்.

    உளவியில் அணுகுமுறை பற்றிய தகவல்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இலக்கியத்திறனாய்வுப் பாடத்தின் வழியாக வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. அதனடிப்படையில் ஆய்வாளர்கள் உளவயில் ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.

    பின்னை நவீனத்துவம்:
    பெண்ணியம்:
    பின்னை நவீனத்துவக் கோட்பாடுகளில் பெண்ணிய நோக்கில் பல ஆய்வர்ளர்கள் சங்க இலக்கியத்தை ஆராய்ந்துள்ளனர். அ.ராமசாமி, பஞ்சாங்கம், மு.பழனியப்பன் போன்றோர் இதனுள் குறிக்கத்தக்கவர்கள். அ. ராமசாமி பக்கங்கள், பெண்ணியம் (இணைய இதழ்), பதிவுகள் (இணைய இதழ்) ஆகியவற்றில் பெண்ணியக் கட்டுரைகள் பல இடம்பெற்றுள்ளன.

    பின்னை நவீனத்துவம்:
    பின்னை நவீனத்துவம் என்ற கோட்பாட்டிலும் பல இணையப் பக்கங்கள் கிடைக்கின்றன. பின்னை நவீன அலை என்ற இணையப் பக்கம் பின்னை நவீனத்துவக் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தி அவற்றின் வழியாக சங்க இலக்கியங்களை நோக்குகின்றது. அ.ராமசாமி, முத்துமோகன், தமிழவன் போன்ற பலரின் ஆக்கங்கள் இணையவழிப் படுத்தப்பெற்றுள்ளன. இவர்கள் பின்னை நவீனத்துவம் சார்ந்து இயங்குபவர்கள் ஆவர்.

    இவ்வாறு பல்வேறு கோட்பாடுகளை அறிமுகப்படுத்தி அக்கோட்பாடுகளின் வழி சங்க இலக்கியங்களைக் காண பெரும் வாய்ப்புகள் இணையத்தில் கிடைத்துவருகின்றன. இவற்றைத் துணை கொண்டு இளைய ஆய்வாளர்கள் பயன் கொள்வது என்பது அவர்களின் தரத்தை உயர்த்தி நிற்கும்.

    முனைவர் மு.பழனியப்பன்
    தமிழ்த்துறைத் தலைவர்,
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    திருவாடானை
    9442913985
    M.Palaniappan
    muppalam2006@gmail.com
    manidal.blogspot.com
    9442913985

     

     

    Share
  • தமிழில் கணினி எழுத்துருக்கள்: வளர்ச்சியும் வகைகளும்

    – கி. கண்ணன்.

    முன்னுரை:
    தமிழ் மொழியை கணிப்பொறிக்கும் இணையத்திற்கும் கொண்டு செல்வதில் எழுத்துக்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சைகைளாலும் மெய்ப்பாடுகளாலும் வளர்ந்த தமிழ்மொழி இன்று இணையத்தில் பலவாறு பயன்படும்படி உயர்ந்துள்ளது. கணினியில் ஆங்கிலத்தில் மட்டுமே தட்டச்சு செய்யமுடியும், ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே கணினியைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை முற்றிலுமாக மாறி இன்று தாய்மொழியான தமிழிலேயே தட்டச்சு செய்யலாம் என்ற நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டு வளர்ந்து கொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட உயர்தனிச் செம்மொழியை கணினியிலும் இணையத்திலும் பதிவேற்றம் செய்யும்பொழுது தமிழ் எழுத்துருக்களின் வரலாற்றினையும் வகைகளையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

    மொழியும் எழுத்தும்:
    மனிதன் தோன்றி மொழி தோன்றாத பொழுது தன் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை மெய்ப்பாடு, சைகைகள், ஒலிகள், ஓவியங்கள் ஆகியவற்றின் முலமாக பிறருக்குத் தெரிவித்தான். அதுவரை ஊமை மொழிகள் (Dumb Language) என்றனர் என்று முதல் மொழிக்கு விளக்கமளிக்கிறார் தோ. பரமசிவம். இம்முதல் மொழியினைத் தொடர்ந்து பேச்சு மொழியாக மாறியதும் எழுத்துக்கள் உருவாகி வளர்ச்சியடைந்தன. கல்லெழுத்து, பிராமி எழுத்து, வட்டெழுத்து, நாகரி எழுத்து, தமிழி எழுத்து என்று உருமாறி தற்போதுள்ள தமிழ் எழுத்து என பலவாறு மாறிவந்திருப்பதை தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியில் காண முடிகிறது.

    கணினி குறியீட்டு முறை:
    கணினியில் அச்சேற்றப்படும் எழுத்துக்கள் எம்மொழி எழுத்துக்களாயினும் அவை 0,1 என்ற எண்களைக் கொண்டே கணினி இயங்குகின்றது. “கணிப்பொறி என்பது கணிப்பானாக மட்டுமே பயன்படும் போது எவ்வித சிக்கல்களும் தோன்றுவது இல்லை. மாறாக, அவற்றை எழுத்து வடிவங்களுக்குச் சேமிக்கும் பொழுது ஒவ்வொரு எழுத்துக்கும் எண்களை நிர்ணயிக்க வேண்டியிருக்கும். இம்முறையே குறியீட்டு முறை (Coding) எனப்படும்.”[1] இவற்றை திரையில் எழுத்துக்களாக காண்பதற்கு எழுத்துருக்கள் (Font) தேவைப்படுகின்றது. இத்தகைய எழுத்துருக்களை பெற குறியீடுகள் அவசியமாகின்றது. ஒரே குறியீட்டைக் கொண்டு ஒரு எழுத்தைத்தான் உருவாக்க முடியும் என்பதாலும் தமிழில் அதிக எழுத்துக்கள் இருப்பதாலும் முழுமையாக எழுத்துக்களைப் பயன்படுத்துவது சிரமமாகவும் இருந்தது.

    தமிழில் எழுத்துரு தொடர்பான மென்பொருள்களின் வளர்ச்சியினால் இன்று இத்தகைய சிரமங்கள் சரிசெய்யப்பட்டாலும் சில தவிர்க்க முடியாத சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. வடமொழி எழுத்துக்களையும் தமிழ் எழுத்துக்களைச் சேர்த்து தட்டச்சு செய்யும் நிலையில் இதனை உணரலாம்.

    எழுத்துருக்களின் வளர்ச்சி:
    கணினியில் இடும் கட்டளைகளை எழுத்துக்களாக மாற்றிக்காட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை 7 பிட்டு(எ.கா.1000001), 8 பிட்டு (00001111) என்ற இரும எண் குறியீட்டு முறையில் உள்வாங்கிக் கொள்ளப்பட்ட கணினி மொழிகளாகக் கொள்ளப்பட்டன.

    கணினி மொழியில் ஒவ்வொரு எழுத்தும் ஒரு பைட்டாகக் கணக்கிடப்படுகிறது. ஆங்கில எழுத்திற்கான எழுத்துரு வடிவத்தினை ஆஸ்கி ASCII (American Standard Code for Information Interchange) என்று அழைக்கப்பட்டது. இது 7 பிட்டு அளவுள்ளதாகக் இருந்தது. இதனைத் தொடர்ந்து 8 பிட்டு அளவிற்கு விரி ஆஸ்கி அமைப்பு உருவாக்கப்பட்டது. அட்டவணையில், ஆங்கில எழுத்துக்கள் போக மீதமுள்ள 128 – 255 வரையிலான இடங்களில் இந்திய மொழிகளின் எழுத்துக்களை ஒன்றிணைத்து பொதுவான முறை உருவாக்கப்பட்டது. இதற்கு இஸ்கி (ISCII – Indian Standard Code for Information Interchange) எழுத்துரு எனப் பெயரிட்டனர். இத தமிழ் விசைப்பலகையில் எழுத்துருக்களைக் கொண்டு வருவதற்கு முதன்மையாக அமைந்தது. இதில் மென்பொருள் பொறியாளர்களின் உதவியுடன் உலக தமிழறிஞர்கள் வடிவமைக்கப்பட்ட தமிழ் வடிவ எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன.

    தமிழ் லெசர், அணங்கு, ஆதமி, ஆதவின், திருவின், மயிலை, அஞ்சல், சரஸ்வதி, கணியன், வானவில் போன்ற எழுத்துருக்களைப் வல்லுனர்கள் பலரும் உருவாக்கினர். இதனால் ஒருவர் தட்டச்சு செய்த தகவல் அந்த எழுத்துரு படிப்பவரிடம் இருந்தால் மட்டுமே அவ்வெழுத்து திரையில் தோன்றும் நிலை உருவானது. இது பெரும் குழப்பத்தினையே உருவாக்கியது. ஆகவே, தமிழ் எழுத்துருக்களை முறைபடுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் டிஸ்கி (TSCII – Tamil Standard Code for Information Interchange) என்ற முறை உருவாக்கப்பட்டது. இது தமிழ்மொழியில் ஏற்பட்ட அடுத்தகட்ட வளர்ச்சியைக் குறிக்கும்படி அமைந்தது. தற்போது நடைமுறையில் யுனிக்கோடு முறை அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.

    “உலக அமைப்பாகிய UNICODE குழுமத்தின் முயற்சியால் 16 பிட்டு அமைப்பில் பன்மொழிக்குறியீட்டு முறையும் தோன்றியது. அந்த யுனிக்கோடு அமைப்பில் இந்திய மொழிகளுடன் தமிழும் இருந்தது…. 128 இடங்களில் தமிழ் உயிர்எழுத்துக்கள், அகரமேறிய உயிர்மெய் எழுத்துக்கள், ஆய்த எழுத்து பிற உயிர் மெய் எழுத்துக்களின் துணைக் குறியீடுகள் ஆகியன இடம்பெற்றன.”[2] இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட எழுத்துருக்கள் மேற்கூறிய பல பெயர்களுடன் வெளியாயின.

    ஆங்கிலத்தில் உள்ளது போன்று தமிழிலும் ஒரே எழுத்துரு குறியீட்டு முறை பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், “இரண்டு உருக்குறியீட்டு முறைகளைத் தமிழக அரசு அங்கீகாரம் செய்து தரப்படுத்தியது. இந்திய மொழிகளில் தமிழில் மட்டுமே மாநில அரசின் எழுத்துத் தரப்பாடு செய்யப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.”[4] இவை, 1. டாம் (TAM – Tamil Monolingual Encoding) என்னும் எழுத்துரு தமிழ் எழுத்துக்களுக்காவும் 2. டாப் (TAB – Tamil Bilingual Encoding) என்னும் எழுத்துரு தமிழ் – ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டது. யுனிக்கோடு முறையில் TAM, TAB போன்ற எழுத்துக்கள் பயன்படுத்தக்கூடியவை.

    தமிழ் எழுத்துரு வகைகள்:

    charactemap.tam1
    தமிழில் டிஸ்கி, யுனிக்கோடு, டாம், டாப் போன்ற எழுத்துருக்கள் அரசின் பங்களிப்புடன் வெளியாயின. தனி நபர்களாலும் குழுக்களாலும் பல வடிவங்களில் எழுத்துருக்கள் இன்றளவும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை விசைப்பலகையின் அமைப்பிற்கேற்ப விண்டோஸ், லினக்ஸ், மேக்கின்தோஸ் போன்ற இயங்கு தளங்களில் பயன்படும்படி அமைக்கப்பட்டிரு்கின்றன.

    மயிலை
    1985 ஆம் ஆண்டில் கு. கல்யாண சுந்தரம் அவர்களால் “மயிலை” எழுத்துரு உருவாக்கப்பட்டது. இதில், தமிழ்க் குறியீடு இல்லாமல் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்களைப் பெற முடியும். உ.ம். a என்பது அ என்றும், aa/A என்பது ஆ என்பதையும் குறிப்பதாக அமைந்துள்ளது.

    முரசு அஞ்சல்
    1986 இல் முத்து நெடுமாறன் என்பவரால் உருவாக்கப்பட்டது அஞ்சல் எழுத்துரு. இது எழுத்துருவை மட்டுமே கொண்டிராமல் எழுதி, மின்னஞ்சல், செயலி, விசைப்பலகை போன்ற வகைகளும் இடம்பெற்றுள்ளன. இன்றும் ஆண்ட்ராய்டு பேசிகளில் பயன்படும்படி Application ஆக பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதில், கு என்ற எழுத்துருவிற்கு க+உ என்றும், சோ என்பதற்கு ச+ஓ என்றும் எழுத்து முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

    கீ மேன்
    செந்தமிழ் எழுத்துரு என அழைக்கப்படும் கீமேன் எழுத்து வடிவம் பெரும்பாலும் அச்சக பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. டாவ்லெட் சாப்ட் அமைப்பினரால் உருவாக்கப்பட்ட இது 285 விதமான எழுத்துரு வடிவங்களைக் கொண்ட பன்முக வடிவமாகும். பெரும்பான்மை யுனிக்கோடு வடிவத்துடன் ஒத்திருந்தாலும் இதில் சில எழுத்துருக்கள் விசைப்பலகையின் அமைப்பில் மாற்றம் பெற்றுள்ளன. கீமேன், விதவிதமான எழுத்துருக்கள் வடிவத்தில் புத்தகம் உருவாக்கம் போன்ற அச்சுப் பணிக்கு இது உகந்ததாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஏ.கலப்பை
    தமிழ் இணையதளத்தில் பலராலும் பயன்படுத்தப்பட்ட எழுத்துருக்களைக் கொண்டது இ. கலப்பை எனப்படும் எ.கலப்பை. இதில் ஐந்து விதமான எழுத்துருக்கள் காணப்படுகின்றன.
    1. ஆங்கில ஒலியியல் முறை 2. பாமினி, 3. தமிழ் 99, 4. தட்டச்சு முறை, 5. இன்ஸ்கிரிப்ட் என்ற ஐந்து வகையான எழுத்துரு வடிவங்களைக் கொண்டது.

    NHM எழுதி
    தமிழ் எழுத்துருக்களில் இன்று பலரிடமும் பயன்படுத்தப்படுவதாக இவ்வெழுத்துரு அமைந்துள்ளது. கூகுள் குரோம், நெருப்புநரி (Firefox), ஒபேரா போன்ற எல்லாவிதமான இயங்குதளத்திலும் இவ்வமைப்பு பயன்படுகின்றது. தமிழிலிருந்து கீழே குறிப்பிட்ட இந்திய மொழிகளுக்கு எழுத்துக்களை மாற்றும் வசதி இதில் உள்ளது. இதனை இணையத்திலிருந்து இலவச மென்பொருளாகப் தரவிறக்கம் செய்து,
    1. Alt + 0 – சாதாரண விசைப்பலகை எழுத்துருவையும்
    2. Alt + 1 – ஒருங்குறி தமிழ் 99 எழுத்துருவையும்
    3. Alt + 2 – ஒருங்குறி தமிழ் ஒலியியல் முறையையும்
    4. Alt + 3 – ஒருங்குறி பழைய தட்டச்சு எழுத்துருவையும்
    5. Alt + 4 – ஒருங்குறி தமிழ் பாமினி எழுத்துருவையும்
    6.Alt + 5 – ஒருங்குறி தமிழ் இன்ஸ்கிரிப்ட் முறையினையும் கொண்டு காணப்படுகிறது. ஒருங்குறி முறையில் அமைந்திருப்பதால் அனைவராலும் பயன்படுத்தும்படி உள்ளது. இந்த எழுத்துருவில் தமிழ், அசாம், பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம் போன்ற பத்து இந்திய மொழிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

    பொன்மடல், பொன்மொழி எழுத்துரு
    ஆண்ட்ராய்டு, விண்டோஸ் என்ற இருவேறு இயங்கு தளங்களில் தட்டச்சு செய்யும் வசதி. காலத்திற்கேற்ப புதுமை என்ற விதத்தில் பல புதிய வசதிகள் இந்த எழுத்துருவில் காணப்படுகின்றன.
    1. தவறாக எழுதினால் ல, ர, ன ஒலிமாற்றச் சொற்களையும் சந்திப்பிழை திருத்தப்பட்ட சொற்களையும் இரு சொல் இணைந்ததையும் உடனுக்குடன் காட்டும்.
    2. சொற்பிழைகளை உடனுக்குடன் திருத்துவதுடன் திருத்துவதற்கு பல நிறங்களைக் காட்டுகின்றன.
    3. தமிழ்99, தட்டச்சு, பாமினி, ஒலிமாற்றம் போன்ற தட்டல் அமைப்புகளுடன் கே12 என்னும் T9 போன்ற ஒரு மிக எளிய புதிய முறை இதன் சிறப்பு. 9 விசைகளில் செயல்படும் இதைக்கற்க 10 நிமிடங்கள் போதும்.
    4. ஆங்கிலத் தட்டச்சு இருப்பதால் இருமொழிகளுக்கும் பொன்மடல் ஒன்றேபோதும்.
    5. யூனிக்கோடு, டேம், டேப் குறியீடுகளில் உள்ளிடலாம்.
    6. புதிய பெயர்ச்சொற்களை அகராதியில் சேர்க்கலாம்.
    7. சுயதிருத்த வசதியால் ஒன்றிரண்டு எழுத்துக்களை எழுதியே பல சொற்களைச் சேர்க்கலாம். [3]
    இது போன்ற பல சிறப்பியல்புகளைக் கொண்டதாய் பொன்மடல், பொன்மொழி எழுத்துருக்கள் அமைந்துள்ளது.

    மென்தமிழ்
    சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்து ஓய்வு பெற்ற தெய்வசுந்தரம் அவர்களால் உருவாக்கப்பட்ட மென்தமிழ் எழுத்துரு கணினியில் தமிழ் மொழியியல் தொடர்பாகக் கொண்டுவரப்பட்டது. இம்மென்பொருள், ”தமிழ் ஆவணங்களை உருவாக்கி, அவற்றின் மொழி அமைப்பைச் சீரமைத்துப் பதிப்பிக்கும் அனைத்துக் கருவிகளையும் இது உள்ளடக்கியுள்ளது. கணினித்தமிழின் வளர்ச்சியையொட்டி தமிழ்மொழிக் கருவிகள் (சந்திப்பிழை திருத்தி, சொற்பிழை திருத்தி, அகராதிகள்) தொடர்ந்து மென்மேலும் செழுமைப்படுத்தப்படும்.”[4] என்ற உயரிய நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் சில…
    அழகி – ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழில் எழுத்துருவை காணலாம்.
    ஸ்ரீலிபி – தமிழ் ஒருங்கறி, தமிழ் 99, தட்டச்சு முறை போன்ற எழுத்துருக்களில் பயன்படுத்தலாம்.
    கம்பன் – விசைப்பலகையுடன் கூடிய ஒருங்குறி, தமிழ் 99, தட்டச்சு முறை டேம், டேப் போன்றவற்றிற்கு உரு மாற்றி போற்ற எழுத்துருக்களில் பயன்படுத்தப்படுகிறது.
    வாணி – எழுத்துப்பிழை திருத்தி.
    நாவி – சந்திப்பிழை திருத்தி
    சுரதா – வலைக்கு உகந்த எழுத்துரு
    கண்டுபிடி – வலை எழுத்திற்கு உரியது
    போன்றவனவற்றையும் குறிப்பிடலாம்.

    முடிவுரை:
    தமிழ் எழுத்துரு, கணினி பயன்பாட்டிற்கு என தினந்தோறும் புதுப்புது மாற்றங்களுடனும் வடிவங்களுடனும் இன்றளவும் மென்பொருள்களை உருவாக்கி வருகின்றனர். ஒருங்குறி, தமிழ் 99, தட்டச்சு முறை, பாமினி, இன்ஸ்கிரிப்ட் முறைகளிலிருந்து இன்று அழகி, வாணி, நாவி, பொன்மடல், மென்தமிழ், சுரதா, கண்டுபிடி போன்ற மென்பொருள்களாலும் கணினியில் மட்டுமல்லாது இணையத்திலும் தமிழினை எழுத்து வடிவம் மாறாமலும் பிழையில்லாமலும் காணக்கிடைக்கின்றது. அகராதிகளைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யும் முறையும் தற்போது வழக்கத்தில் உள்ளது. இத்தகைய எழுத்துருக்கள் தமிழ் மொழியினை அடுத்தத் தலைமுறைக்கு எவ்வித சேதமுமின்றி முழுமையாகக் கொண்டுபோய் சேர்க்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

    சான்றெண் விளக்கம்:

    1. www.pathivugal.com, கணத்தமிழ், தமிழ் எழுத்துருக்கள் வடிவமைப்பும் சிக்கல்களும்
    2. முனைவர் மு. பொன்னவைக்கோ, இணையத் தமிழ் வரலாறு, ப. 10
    3. www.Learnfunsystems.com./Products. பொன்மடல்
    4. www.lingsoftsolutions.co

     

     

    கி. கண்ணன்,
    முனைவர் பட்ட ஆய்வாளர், (ப/நே.)
    அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம்,
    தஞ்சாவூர்.

    Share
  • நூல் மதிப்புரை – அம்ருதா

    நூல் மதிப்புரை

    அம்ருதா (வரலாற்றுப் புதினம்)

    ஆசிரியர்: திரு. வெ. திவாகர்

     -மேகலா இராமமூர்த்தி

    சிறந்த எழுத்தாளர், பத்திரிகையாளர், வல்லமை மின்னிதழின் ஆசிரியர்குழு ஆலோசகர் என்ற பன்முகங்கள் கொண்டவர் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த திரு. வெ. திவாகர். அவருடைய சமீபத்திய வெளியீடாக வந்திருக்கின்றது வரலாற்றுப் புதினம் ‘அம்ருதா.’

    வம்சதாரா, திருமலைத்திருடன், எஸ்எம்எஸ் எம்டன் 22/09/1914 ஆகிய அருமையான வரலாற்றுப் புதினங்களை ஏற்கனவே எழுதி வாசகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் திரு. திவாகர். இவருடைய திருமலைத்திருடன் புதினத்தைப் படித்து அக்கதையில் உள்ளத்தைப் பறிகொடுத்த வாசகர்கள், ’அபயன்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட முதற்குலோத்துங்கன், சோழ அரசனான வரலாற்றையும் ஆசிரியர் விரிவாக எழுதவேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுக்க, அதனைப் பூர்த்தி செய்யுமுகத்தான் இப்புதினத்தை எழுதியுள்ளார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

    ’அம்ருதா’ புதினம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்குவதற்குமுன் இக்கதையின் பின்னணியைச் சுருக்கமாய்க் கூறிவிடுவது பொருத்தமாயிருக்கும் என எண்ணுகின்றேன்.

    விஜயாலயச் சோழரால் கி.பி. 850-இல் நிர்மாணிக்கப்பட்ட பிற்காலச்amrutha 1 சோழவம்சம் அதன்பின்னர் ஆல்போல் செழித்து அறுகுபோல் வேரூன்றி வளர்ந்தது. முதலாம் இராசராசனின் காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியும், பெருமையும் பெற்ற சோழராட்சி, அடுத்துப் பட்டமேறிய அவருடைய திருமகனான முதலாம் இராசேந்திரன் காலத்தில் தென்னகம் மட்டுமல்லாது கிழக்காசிய நாடுகளிலும் பல்கிப் பரவிற்று. இவ்வாறு மீப்பெரு வளர்ச்சி கண்டுவந்த சோழர் தொல்குடி, முதலாம் இராசேந்திரனின் மூன்றாவது மைந்தனான வீரராசேந்திரன் அரியணை ஏறி ஆட்சிசெலுத்தியவரைத் தந்தைவழி மரபிலேயே நீடித்தபோதிலும், அடுத்த பட்டத்துக்குரியவனாக மாமன்னர் முதலாம் இராசேந்திரன் தேர்வு செய்திருந்தது, தன்னருமை மகளான அம்மங்காதேவியின் புதல்வன் அபயனென்னும் முதற் குலோத்துங்கனையே!

    ஆனால் விதியாலும், உள்நாட்டுச் சதியாலும் ஆட்சி வீரராசேந்திரனின் மகன் அதிராசேந்திரனுக்குச் சென்றுவிடுகின்றது. இந்நிலையில் பாட்டனாரின் அபிமானத்துக்குரியவனும், சோழநாட்டு மக்களின் அன்புக்குரியவனுமான அபயனின் நிலை என்ன? அவனால் அதிராசேந்திரனை வென்று ஆட்சியைக் கைப்பற்றமுடிந்ததா? என்பவற்றையெல்லாம் வெகுசிறப்பாக அம்ருதாவில் விவரித்துள்ளார் புதின ஆசிரியர்.

    நண்பர்களே! ஒரு கதையின் வெற்றியில் ஐம்பது விழுக்காடு கதைக்களத்தைச் சரியாய்த் தேர்வு செய்வதில்தான் இருக்கின்றது எனக் கூறலாம். அவ்வடிப்படையில் பார்த்தால், மகோன்னதமான நிலையிலிருந்த சோழசாம்ராஜ்யம் ஒரு பலத்த சரிவைச் சந்திக்கும் வேளையில், வீரமும் விவேகமும் வாய்ந்த அக்குலத்தோன்றலொருவன் அதனை எப்படிச் சீர்செய்து ஆட்சியை நேர்செய்கின்றான் எனும் வரலாறு மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. அத்தகைய சிக்கலான காலகட்டத்தைக் கதைக்கருவாகத் தெரிவுசெய்த ஆசிரியரின் திறமையை எண்ணி வியக்கின்றேன். கதைக்களத்தைப் போலவே கதையையும் சிறப்பாகவும், வெகுநேர்த்தியாகவும் அவர் நகர்த்திச் செல்லும் பாங்கு அவரை ஓர் தேர்ந்த கதாசிரியராய் முத்திரை குத்த வைக்கின்றது.

    இனி அம்ருதாவைச் சற்று ஆராய்வோம்.

    சோழமன்னன் அதிராசேந்திரனை மணப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காம்போய நாட்டு இளவரசியும், கண்டோர் மயங்கும் கட்டழகியுமான கதாநாயகி அம்ருதா, வேங்கி நாட்டின் விஜயவாடிகைக்குக் (இன்றைய விஜயவாடா) கப்பலில் வந்திறங்குவதிலிருந்து கதை தொடங்கி வாசகர்களின் இரசனைக்கு விருந்தாய் ஒன்பான் சுவைகளையும் (நவரசம்) அள்ளி வழங்கியபடி வளர்ந்து செல்கின்றது. கதையில் இடம்பெற்றுள்ள மாந்தர்கள் அனைவருமே ஒவ்வொரு வகையில் நம் உள்ளத்தைக் கொள்ளையிடுகின்றனர்.

    கதாநாயகனும் வேங்கிநாட்டுக்கு அரசனாக முடிசூட்டப்பட்டவனுமான அபயன் தன் நேர்மை, குறும்புத்தனம், வீரம் முதலியவற்றால் நம்மைக் கவர்கிறானென்றால், அவனுடைய அத்யந்த நண்பனும், வேங்கியின் காவற்படைத் தலைவனுமான நாராயணன் தன்னுடைய அசகாயச் சூரத்தனத்தாலும், சமயோசிதத்தாலும் நம்மைக் காந்தம்போல் ஈர்க்கிறான். சோழர்குலத்தின் குருவாக வருகின்ற அகோரசிவாசாரியார் தன்னுடைய புத்திக்கூர்மை, சோழகுலத்தின் நலனில் காட்டும் அளவற்ற அக்கறை, தெய்வபக்தி முதலியவற்றால் நம்மை வசீகரிக்கின்றார்.

    நற்குணங்களால் இவர்கள் நம் நெஞ்சில் இடம்பிடிக்கின்றார்கள் என்றால், துர்க்குணங்களாலும் நம் கவனத்தைப் பெறுகின்றனர் வேறு சிலர். சாளுக்கிய அரசனான விக்கிலன் (எனும் ஆறாம் விக்கிரமாதித்தன்), வேங்கியின் அரசைக் கைப்பற்ற நினைக்கும் விஜயாதித்தன், போத்தராஜு, ஜனநாதன், மணவாளன் போன்றோர் இவ்வகையினர்.

    ஆண்களின் பாத்திரப்படைப்புக்களை விஞ்சும் வகையில் பெண்பாத்திரங்கள் கதையில் மிளிர்வது பாராட்டத்தக்கது. சான்றாக, சோழ மக்களின் பெருமதிப்புக்குரியவராக விளங்கும் அபயனின் தாய் அம்மங்காதேவி, இளகிய மனமும் இளமை நலமும் வாய்க்கப்பெற்ற சேரஇளவரசி இளவழகி, மருத்துவத்துறையில் ஆழ்ந்த அறிவும், ’மக்கள் சேவையே மகேசன் சேவை’ எனும் உயர்ந்த குறிக்கோளும் கொண்ட இனியபெண் மலையவாசினி, தில்லையம்பலவனிடம் தீராத காதல்கொண்டு அவன் திருப்பதியங்களைப் பாடுவதில் பெருமகிழ்வுகாணும் விக்கிலனின் மனைவியும், சோழநாட்டு இளவரசியுமான யாமினி, அத்தை அம்மங்கைக்குச் சேவை செய்வதிலேயே இன்பமெய்தும் அபயனின் மனைவி மதுரா(ந்தகி) எனப் பெண்களின் பங்களிப்பைக் கணிசமான அளவில் இப்புதினத்தில் காணமுடிகின்றது.

    வெறும் அலங்காரப் பதுமைகளாகப் பெண்களைக் காட்டாமல், தங்கள் உரிமைக்குக் குரல்கொடுக்கும் துணிச்சலும், சுயமரியாதையும் கொண்டோராய் அவர்களை ஆசிரியர் படைத்திருப்பது அவருடைய பெண்ணியச் சிந்தனைகளின் வெளிப்பாடாய்த் திகழ்கின்றது. இதற்கே ஆசிரியரைத் தனியாய்ப் பாராட்டலாம்!

    கதைக்குள் மற்றொரு கதையாய் நாயன்மார்களில் முதன்மையானவராய்க் கருதப்படும் ’தம்பிரான் தோழரான’ சுந்தரமூர்த்தி நாயனார், திருவொற்றியூர் திருத்தலத்தில் சங்கிலி நாச்சியாரை மணந்த வரலாறு சுவையாகப் பேசப்பட்டுள்ளது. இவ்வரலாற்றை மிகச்சரியான இடத்தில் பொருத்தியிருக்கும் ஆசிரியரின் நுண்மாண்நுழைபுலம் போற்றத்தக்கது.

    இவையேயன்றி, திடுக்கிட வைக்கும் திருப்பங்கள், திகைக்க வைக்கும் மர்மங்கள், மகிழவைக்கும் நகைச்சுவைகள், நெகிழவைக்கும் தியாகச் செயல்கள் என்று பல்வகைச் சம்பவங்களும் கதையில் இடம்பெற்றுக் கதைக்கு வலுவூட்டுகின்றன.

    இறுதியாகச் சில வரிகள்….வரலாற்றுப் புதினங்கள் படைப்போர் மிகவும் அருகிவரும் காலமிது. காரணம்…மற்ற கதைகளைப்போல் நினைத்ததையெல்லாம் வரலாற்றுப் புதினங்களில் எழுதிவிட முடியாது. யாருடைய வரலாற்றை எழுதுகின்றோமோ அவர்களைக் குறித்த வரலாற்று ஆவணங்கள், பதிவுகள் அனைத்தையும் முதலில் திரட்டவேண்டும். கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள் போன்றவையும் இதில் அடக்கம். இதற்கு அசாதாரண உழைப்பும் தளராத ஊக்கமும் தேவை.

    வரலாற்று ஆதாரங்களை மட்டும் வைத்துக்கொண்டு கதையெழுதிவிட முடியுமா? நிச்சயம் முடியாது! நிகழ்ந்த வரலாற்றை, ’வரலாற்றுப் புதினமாக்க’ நகாசு வேலைகள் நிறையச் செய்தாக வேண்டும். அதற்குக் கற்பனைப் பாத்திரங்களின் துணை மிக அவசியம். கதையின் நம்பகத்தன்மையும், ஓட்டமும் கெடாதவகையில் கற்பனைப் பாத்திரங்களையும், அவர்கள் சார்ந்த நிகழ்வுகளையும் உண்மைச் சம்பவங்களோடு அழகாகவும் அளவாகவும் இணைக்கவேண்டும். எத்துணைக் கடினமான செயலிது? இதனைத் திறம்படச் செய்வதற்கு வறட்சியற்ற கற்பனை வளமும், மதியூகமும் வேண்டும் ஓர் எழுத்தாளனுக்கு! அப்போதுதான் வரலாற்றுப் புதினத்தை வகையாகச் சமைக்க முடியும். இப்பண்புகள் அனைத்தும் இறையருளால் ஒருங்கே வாய்க்கப்பெற்றுள்ள புதின ஆசிரியர் திரு. திவாகர், தெவிட்டாத அமுதவிருந்தாய் அம்ருதாவைப் படைத்துள்ளதில் வியப்பேது! ஆசிரியரின் இவ்வரிய முயற்சியை வரவேற்பதும், இப்புதினத்தை வாங்கிப் படிப்பதுமே நாம் அவருக்குச் செய்யவேண்டிய கைம்மாறாகும்.

    வாசக அன்பர்களே! தமிழர்களின் பொற்காலமாய் மின்னிய சோழர்களின் காலத்தை, அவர்களின் வரலாற்றை நம்கண்முன்னே காவியமாய் நிறுத்தியிருக்கும் அம்ருதாவை அவசியம் வாங்கிப் படியுங்கள்! ஆனந்தம் அடையுங்கள்!

    நான்கு வரலாற்றுப் புதினங்களை வரிசையாய் எழுதி ’வரலாறு’ படைத்திருக்கும் திரு. திவாகர் மேலும் பல அருமையான நூல்களை யாத்து அன்னைத் தமிழுக்கு அணிசெய்வாராக!

    அம்ருதாவைப் பெற:
    பழனியப்பா பிரதர்ஸ்
    கோனார் மாளிகை
    25, பீட்டர்ஸ் சாலை, சென்னை – 600014
    தொலைபேசி: 04428132863/43408000
    புத்தகத்தின் விலை: ரூ. 335/

    மேலதிகத் தகவல்களுக்கு ஆசிரியர் திரு. வெ. திவாகரைத் தொடர்பு கொள்ளவும்.
    ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரி: vdhivakar@rediffmail.com

     

    Share
  • தமிழ் இணைய இதழ்கள்: ஓர் இலக்கியப் பார்வை

    –கி. கண்ணன்.

     

    முன்னுரை:

    தமிழை வளர்ச்சிப் பாதையில் இணையத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு. இணையத்தைப் பொறுத்தமட்டில் இணையதளங்கள், இணைய இதழ்கள், வலைப்பூக்கள், திரட்டிகள், சமூகக் குழுக்கள் என்று அனைத்திற்கும் அத்தகைய பொறுப்பு உள்ளது. அவ்வகையில் இணையத்தில் மட்டுமே வெளியாகின்ற இதழ்களின் மூலம் தமிழ் வளர்ச்சியானது எவ்வகையில் மேன்மையடைந்துள்ளது என்பதை விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

    இணைய இதழ்கள்:

    அச்சேற்றப்பட்டு தனி இதழ்களாக வெளிவருபவை, நாளிதழ், வாரஇதழ், மாதமிருமுறை, மாதஇதழ் என்று காலமுறையினைக் கொண்டு வகைப்படுத்தலாம். இணைய இதழ்கள் கீழ்க்கண்ட மூன்று பெரும் பிரிவின் கீழ் கொண்டு வரலாம்.
    1. அச்சில் மட்டுமே வெளிவரும் இதழ்கள் (உ.ம்). தனிச்சுற்றுக்கு உரியவை.
    2. அச்சு இதழாகவும் இணைய இதழாகவும் வெளிவருபவை. (உ.ம்) தினதந்தி, தினமலர், நக்கீரன் போன்றவை.
    3. இணையத்தில் மட்டுமே வெளி வருபவை. (உ.ம்) திண்ணை, பதிவு, முத்துக்கமலம் போன்றவை. “இணையத்தில் மட்டுமே செய்திகளைத் தருகின்ற இதழ்களே இணைய இதழ்கள் எனப்படும்.” [1] என்ற விக்கிபீடியாவின் கருத்தினைக் கொண்டு இணையத்தில் வரும் இதழ்களை மட்டுமே இதில் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

    இணைய இதழ்களின் வகைகள்:

    இணைய இதழ்கள் அவற்றின் உள்ளடக்கத்திற்குத்தக்கவாறு அவை எவ்வகையான இதழ் என்று அடையாளம் காட்டப்படுகின்றது. அவ்வகையில்,

    1. அரசியல்,
    2. அறிவியல்,
    3. ஆய்வு,
    4. ஆன்மீகம்,
    5. இலக்கியம்,
    6. குழந்தைகள்,
    7. பல்சுவை,
    8. பெண்கள்,
    9. பொழுதுபோக்கு,
    10. மதம்,
    11. மருத்துவம்,
    12. வணிகம்

    என்று இன்னும் வகைப்படுத்திக்கொண்டு செல்லலாம்.

    இலக்கிய இதழ்கள்:

    இலக்கியம் தொடர்பான தகவல்களைத் தரும் இதழ்கள் இலக்கிய இதழ்கள் எனப்படும். உலகிலுள்ள எவரும் தமிழ் இலக்கியம் தொடர்பான தகவல்களைப் பெற தமிழில் இணைய இதழ்கள் பெரிதும் உதவி புரிகின்றன. இவ்வகையில் இலக்கியத்தரத்துடனும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணை நிற்கும் இதழ்கள் குறிப்பிடத்தக்க சிலவையே ஆகும்.

    திண்ணை இதழ் (http://puthu.thinnai.com/):

    thinnaiதமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை என்ற வாசகத்துடன் வெளிவரும் இப்பத்திரிகை. திண்ணை, புதிய திண்ணை என இரு வடிவங்களில் வருகின்றது. இதில், அரசியல், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியக் கட்டுரைகள், கடிதங்கள், அறிவிப்புகள், கதைகள், கலைகள், சமையல், கவிதைகள், நகைச்சுவை, வித்தியாசமானவை போன்ற தலைப்புகளின் கீழ் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.
    “மழை பொழியாத காலத்தும், கோடை காலத்தும் ஓர் அரசு முன்கூட்டியே நீர் சேமிப்பைச் செய்ய வேண்டுமெனவும் அவ்வாறு செய்யாத அரசை மக்கள் செறுப்பர் என்பதும் விரித்துரைக்கப்பட்டுள்ளது. ஆறு, குளம், வாய்க்கால் போன்ற நீர் நிலைகள் பாதுகாப்பதும் புதிதுபுதிதாக ஏற்படுத்துவதும் ஓர் அரசனின் இம்மை மறுமைக்கான நிலைத்தப் புகழுக்குக் காரணமாகும். போர்பெருக்கத்தை விட நீர்ப் பெருக்கம் செய்யும் அரசையே வரலாறு பதிவு செய்து கொள்ளும் என்பதும் உணர்த்தப்பட்டுள்ளது.” [2] என்று இப்பதிவின் மூலம் சங்க இலக்கியப் பாடலுக்கான விளக்கத்தினை நடைமுறை காலத்துடன் ஒப்பிட்டு விளக்கியுள்ளார் முனைவர். ந. பாஸ்கரன்.

    முத்துக்கமலம் இதழ் (http://www.muthukamalam.com/):

    muthukkamalam2006 முதல் இணையத்தில் பதிவேற்றம் பெற்று இன்றளவும் வெளிவரும் ஒர் இலக்கிய இதழ் முத்துக்கமலம் ஆகும். இதன் ஆசிரியர் தேனி. எம். சுப்பிரமணி ஆவார். உலக அளவில், 26.05.2015 வரை 3,05,904 பார்வையாளர்களைக் கொண்டு மிகப்பெரிய இணைய இதழாக இருக்கின்றது. மாதம் இருமுறை புதிய பதிவேற்றங்கள் செய்யப்படுகிறது. மேலும், ஆன்மிகம், ஜோதிடம், பொன்மொழிகள், பகுத்தறிவு. அடையாளம், நேர்காணல், கல்வி, கதை, கட்டுரை, கவிதை, குட்டிக்கதை, குறுந்தகவல், சிரிக்க சிரிக்க, சிறுவர் பகுதி, மகளிர் மட்டும், சமையல், மருத்துவம், புத்தகப் பார்வை, சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள், மின் புத்தகங்கள், தமிழ் வலைப்பூக்கள், படைப்பாளர்கள், தினம் ஒரு தளம் போன்ற தலைப்புகளின் கீழ் இலக்கியம் தொடர்பான பல தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், மணிமேகலையில் சமுதாயச் சிந்தனைகள் என்னும் தலைப்பில் முனைவர் போ. சத்தியமூர்த்தி அவர்களின் படைப்பில், “பூம்புகார் நகரத்தில் பலவிதமான தொழிலை நடத்துகின்ற தொழிலாளர் சமுதாயம் அமைந்திருக்கிறது. ஓவியத்தொழில் சிறந்திருந்தமையை மணிமேகலைக் காப்பியம் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது.

    வம்ப மாக்கல் கம்பலை மூதூர்
    கடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்
    மைஅறு படிவத்து வானவர் முதலா
    எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி
    வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
    கண்கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்

    என்ற இப்பாடலில் ஓவியக்கலை கற்றுத் துறை போகிய வித்தகப் புலமையோர் குறிக்கப்பெறுகின்றனர். எனவே பூம்புகார் நகரில் ஓவியம் தீட்டும் தொழிலாளர்கள் சிறந்து விளங்கியிருக்கின்றனர் என்பது பெறப்படுகிறது.” [3] என்ற விளக்கம் இலக்கிய நயத்துடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    வல்லமை (http://www.vallamai.com/):

    vallamaiஅண்ணாகண்ணன் அவர்களால் உருவாக்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக இணையத்தில் மட்டுமே வெளிவந்துகொண்டிருக்கும் இதழ். பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்னும் பொருண்மையில், இணையத்தில் தமிழை வளர்க்கும் முனைப்பில் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றது. இதழ்களுக்குரிய குறியீட்டு எண்ணுடன் வெளிவரும் இதழாக இது உள்ளது.

    முகப்பு, நிர்வாகக்குழு, பத்திகள், நேர்காணல்கள், கேள்வி-பதில், திரை, பொது, தலையங்கம், இலக்கியம், நுண்கலைகள் போன்ற தலைப்புகளுடனும் அதன்கீழ் பலதரப்பட்ட பகுப்புகளையும் கொண்டு இது வெளிவருகின்றது.

    ஆய்வுக்கட்டுரை என்ற பகுப்பில் தமிழிலக்கியம் தொடர்பான பல கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதில் பலரும் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். இதில் “ஐந்திணை ஐம்பது – அகப்பொருள் மாண்பும் அமைப்பு முறையும்” [4] என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் க. துரையரசன் எழுதிய ஆய்வுக் கட்டுரை இலக்கிய நோக்குடன் எழுதப்பட்டுள்ளது என்பதை உணர முடிகிறது.

    ஊடறு (http://www.oodaru.com/):

    oodaruபெண்மையை மையப்படுத்தி இலங்கையிலிருந்து வெளிவரும் இணைய இதழ். அதிகார வெளியினை ஊடறுக்கும் பெண்குரல் என்று பெண் சுதந்திரம் பற்றிப் பேசுகிறது. உள்ளீடு, ஓவியம், புகைப்படம், கவிதைகள், குறும்படங்கள், நூல்கள் என்ற தலைப்பின் கீ்ழ் பெண்ணியம் தொடர்பான பதிவுகள் காணப்படுகின்றன. 2010 முதல் இவ்விதழ் இயங்கிவருகின்றது.

    வரலாறு (http://www.varalaaru.com/):

    varalaaru2004 ஆம் ஆண்டிலிருந்து ஆன்மிகம் தொடர்பான ஆராய்ச்சிகளில் பயணிக்கும் இவ்விதழ் மாத இதழாக வெளிவருகின்றது. ஆய்வுப் பாதையில் ஆங்காங்கே – என்ற தலைப்பின் கீழ் கோயில்களில் காணப்படும் சிலைகளுக்கும் இதர குறிப்பிற்கும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பிற்குரியது. சேரசோழ பாண்டியர் காலத்து கோயில்களில் காணப்படும் தொன்மங்களின் அடிப்படையில் அமைந்த நீண்ட நெடிய ஆராய்ச்சித் தொடர் இந்த இதழில் காணப்படுகிறது. இவ்விதழில், கோயில் கட்டடக்கலையில் பயன்படுத்தப்படும் சில கலைச்சொற்களை விளக்கியுள்ளார் மா. நளினி அவர்கள்,

    • அங்கணம் – தூணிடை வழி,
    • சந்திரசீலா – நிலாப்படி,
    • கண்டம் – கழுத்து,
    • அதபத்மம் – கீழ்நோக்குத் தாமரை,
    • ஊர்த்வ பத்மம் – மேனோக்கு தாமரை,
    • பிரதி – மேற்கம்பு,
    • ஸ்தம்பம் – தூண,
    • கலசம் – பானை,
    • லலாய பிம்பம் – நெற்றி வடிவம்
    • விமானம் – இறையகம் [5]
    என்று சமஸ்கிருத கட்டடக்கலை சொற்களை தமிழ்படுத்தியதன் தன்மை உணரமுடிகிறது.

    கீற்று (http://keetru.com/):

    keetru“மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு. நினைவுபடுத்தித் தூண்டிக்கொண்டே இருப்பது எம் கடமை”6 என்ற வாசகத்துடன் கீற்று இணைய இதழ் வெளிவருகின்றது. இதில், இலக்கியம் என்னும் தலைப்பில், குறுந்தொகை காட்டும் வாழ்வியல் சிந்தனைகள் என்னும் தலைப்பில்,

    “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
    கழுவுறு கலிங்கம் கழாஅது உடீ
    குவளை உன்கண் குய்ப்புகை கமழக்
    தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
    இனிதெனக் கணவன் உண்டலின்
    நுண்ணிதன் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே” [7]

    என்று இல்லற மாண்பில் உணவு சமைத்த முறையினை விளக்கிக் கூறுகின்றார் இப்பதிவின் ஆசிரியர் ப.மணிகண்டன். மேலும், இவ்விதழில்,
    திரைவிருந்து, சிற்றிதழ்கள், மருத்துவம், அடுக்களை, அறிவியல், வரலாறு, சிரிப்பூ, சட்டம், தகவல் களம், சுற்றுலா, திசைகாட்டிகள் என்ற தலைப்பின் கீழ் மனித வாழ்க்கைக்குத் தேவையான தகவல்கள் பதிந்துக் கிடக்கின்றன. இதில், பகுத்தறிவினைப் போற்றியும் சாதிய ரீதியான வன்கொடுமைகளுக்கு எதிர்த்தும் குரல் கொடுக்கிறது.

    சிற்றிதழ்கள் பகுப்பில், பெருமாள் முருகன் எழுத்து படைப்புரிமைப் பறிப்பும் திறனாய்வு உரிமையும் என்ற தலைப்பில் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன், அர்த்தநாரி ஆகிய புதினங்களைப் பற்றிய திறனாய்வு பதியப்பட்டுள்ளது உற்றுநோக்கப்பட வேண்டியதாக உள்ளது.

    வெப்துனியா இணைய இதழ் (http://tamil.webdunia.com/):

    webduniaதினமும் பதிவேற்றம் செய்யப்படும் இதழ்களில் வெப்துனியாவும் ஒன்று. பல துறை தொடர்புடைய செய்திகளை தரும் இதழாக இது வெளிவருகின்றது. இதில், செய்திகள், தமிழகம், சினிமா, விளையாட்டு, ஜோதிடம், படங்கள், காணொலி, கருத்துக்களம், பல்சுவை, படத்தொகுப்பு போன்ற தலைப்புகளின் கீழ் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.

    பல்சுவை பகுதியில் மருத்தவம், சுதந்திரதினம், அறுசுவை, மங்கையர், காதல், இலக்கியம், குழந்தைகள் உலகம் ஆகிய பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. இலக்கியம் பகுதியில் கவிதைப் பிரிவில் சீன மொழிபெயரப்புக் கவிதையாக,

    “ஒருநாள் காலை குடையிடம் கேட்டேன்.
    நீ விரும்புவது மழையில் நனைவதையா?
    வெயிலில் காய்வதையா? என்று…
    குடை மெதுவாகச் சிரித்தது, பின்னர் சொன்னது
    என் கவலை இதைப் பற்றியது அல்ல… என்று
    பின் எதைப் பற்றியது என்று கேட்டேன்.
    குடை சொன்னது…
    எனது கவலையெல்லாம்
    எப்படிபட்ட அடைமழையானாலும்
    என் மக்களை நனையவிடக் கூடாது
    எப்பேர்பட்ட கொடிய வெயிலானாலும்
    என் மக்களை காயவிடக்கூடாது. [8]

    என்ற கவிதையினை நயத்துடன் பதிவு செய்துள்ளது.

    இவை போன்ற இணைய இதழ்களும் இன்னும் பல இணைய இதழ்களும் இணையத்தில் அன்றாடம் தகவல்களைத் தரும் இதழ்களாக வலம் வருகின்றன. இலங்கை, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேயா, கனடா போன்ற அயல்நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களாலும் இதழ்கள் உருவாக்கப்பட்டு இன்றைக்கும் இணையத்தையும் தமிழையும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, அப்பால் தமிழ், தமிழம், தமிழமுதம், நெய்தல், புகலி போன்ற இதழ்கள் இன்றைக்கும் புதிய புதிய செய்திகளுடன் வெளிவருகின்றன.

    முடிவுரை:

    இணைய இதழ்கள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பேருதவி புரிகின்றன என்பதை மேற்கண்ட ஒருசில இதழ்களின் இலக்கியப் பகுதி விளக்கத்தின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து வெளி நாடுகளில் வாழும் தமிழ் சான்றோர்களாலும் தமிழ்மொழியானது போற்றிப் பாதுகாத்து வளர்க்கப்பட்டு வருகின்றது. அன்றாடம் நிகழும் சம்பவங்களின் இணைய ஆவணம் என்று சொல்லுமளவிற்கு இத்தகைய இணைய இதழ்கள் உலகளவில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்வதுடன் இலக்கிய வளர்ச்சிக்கும் துணை புரிகின்றன.

    சான்றெண் விளக்கம்:

    1. ta.m.wikipedia.org., தமிழ் இணைய இதழ்கள்., நாள் 26.04.2015
    2. puthu.thinnai.com., சூழலியல் நோக்கில் புறநானூற்றில் நீர் மேலாண்மை, நாள்.26.04.2015
    3. www.muthukamalam.com/essay/literature
    4. www.vallamai.com. ஆய்வுக் கட்டுரைகள், நாள். 26.05.2015
    5. www.varalaaru.com/design/ மு. நளினி, தமிழ்மொழி வளர்ச்சியில் மா. இராமமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பங்களிப்பு, நாள். 26.04.2015
    6. www.keetru.com
    7. www.keetru.com, இலக்கியம், குறுந்தொகை காட்டும் வாழ்வியல் சிந்தனைகள், நாள்.26.05.2015
    8. www.tamil.webdunia.com

     

     


    கி. கண்ணன்,
    முனைவர் பட்ட ஆய்வாளர், (ப/நே.)
    அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம்,
    தஞ்சாவூர்.


    Share
  • வலைப்பூக்களில் தமிழ் ஆளுமைகள்

    –கி. கண்ணன்.

     

     

    முன்னுரை
    தமிழ் மொழியின் எதிர்காலம் இணையத்தின் கையில் உள்ளது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், சங்க இலக்கியத் தமிழ், காப்பிய இலக்கியத் தமிழ், பக்தி இலக்கியத்தமிழ், இக்கால இலக்கியத் தமிழ் என்ற நிலைகளிலிருந்து மீட்டுருவாக்கம் பெற்று இன்று இணைய இலக்கியத் தமிழ் என்ற உயரிய நிலையில் தமிழ் இலக்கியம் வளர்ந்து வருகின்றது. இணையத்தின் வாயிலாக இன்றைக்கு தமிழ் மொழியின் பரவலை அதிகரிக்க முடியும் என்று நிருபித்திருக்கின்றன வலைப்பூக்கள். இவ்வலைப்பூக்கள், வலைப்பதிவு, வலைக்குறிப்பு, வலைக்குடில் [1] என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன. வலைப்பூக்களின் வளர்ச்சி அவற்றைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கொண்டு வலைப்பூக்களின் முக்கியத்துவத்தினை நன்குணரமுடிகிறது. அப்படிப்பட்ட வலைப்பூக்களின் வாயிலாக தமிழ் மொழி பெற்றுள்ள வளர்ச்சியினை வெளிக்கொணருவதாக இக்கட்டுரை அமைகிறது.

    வலைப்பூக்கள் அறிமுகம்
    ”வலைப்பூ என்பது எழுத்துக்கள், ஒலி, ஒளி வடிவக்கோப்புகள், ஓவியம், படங்கள், என்பனவற்றை நாமே இணையம் வழி வெளியுலகிற்குத தெரிவிக்கும் இணைய சேவையாகும்.”[2] என்பார் முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள். ஆங்கிலத்தில் Blog என்று அழைக்கப்படும் இது இரு இணைய சொற்களின் கூட்டுச் சொல்லாகும். Web – log என்று வழங்கிய வலைப்பூ Blog என்ற பெயரில் இன்று வழங்கப்பட்டு வருகின்றது. தமிழில் முதல் வலைப்பதிவு 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்றும் முதல் பதிவை கார்த்திகேயன் இராமசுவாமி என்பவர் பதிவு செய்தார் [3] என்றும் தமிழ் விக்கிபீடியா விளக்கியுள்ளது..

    வலைப்பூ அமைப்பு
    Blog என்பது பெயர்ச்சொல்லாக இருந்து வலைப்பதிவு என்றும் வினைச்சொல்லாக இருந்து வலைப்பதிவு எழுது என்றும் பொருள் தருகிறது. Blogger என்பது பெயர்ச்சொல்லாக இருந்து வலைப்பதிவு எழுதுபவர் அல்லது வலைப்பதிவு ஆசிரியரைக் குறிக்கின்றது. Blogging என்பது வினைச்சொல்லாக இருந்து வலைப்பதிவில் எழுதுதல் என்றும் பொருள் தருகின்றது. மேலும்,
    ஒவ்வொரு வலைப்பூவும் கீழ்க்கண்ட சில அடிப்படை அமைப்புகளைப் பெற்றுத் திகழ்கின்றன.
    • வலைப்பூவின் பெயர் – வலைப்பூ ஆசிரியர் தன்னுடைய வலைப்பூவிற்கு வைக்கும் பெயர் தன் விருப்பத்திற்கேற்ற விதத்தில் இருக்கும்.
    • வலைப்பூவின் முகப்பு – வலைப்பதிவர் தம்மைப் பற்றியும் தன் வலைப்பூவின் நோக்கம் பற்றியும் விளக்கும் பகுதி.
    • வலைப்பூவின் தலைப்பு – புதியதாக பதிவு செய்யும் படைப்பிற்கு இடும் பெயர் ஆகும்.
    • பூவின் உள்ளமைப்பு – தலைப்பைத் தொடர்ந்த கட்டுரைப் பகுதி.
    • வலைப்பூ பதிப்பித்த நாள், நேரம், பதித்தவர் பெயர் முத்திரைகள் – வலைப்பூ ஆசிரியர் தான் பதிப்பிக்கும் பதிப்பின் விவரம் தெரிவிக்கும் பகுதி.
    • பின்னூட்டங்கள் – தான் வெளியிட்ட பதிப்பினைப் படித்த வாசகர்கள் தரும் விமர்சனம்.
    • சேமிப்பகம் – பதிவுகளை சேமிக்கும் பகுதி.
    • இணைப்புகள் – தன்னுடைய வலைப்பூவிலிருந்து வேறொரு தளத்திற்கு செல்லும் பகுதி.
    • வலைப்பதிவுகளில் பக்கக் கூறுகள் – வலைப்பூவின் இருபுறமும் அமைந்திருக்கும் இணைக்கப்படும் பக்கக்கூறுகள் போன்றனவாகும்.

    தமிழ் வலைப்பூக்கள்
    இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கணினியில் தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டு வந்தாலும் தமிழில் மென்பொருள்களும் எழுத்துருக்களும் முறையாக வெளிவந்த பிறகுதான் இணையத்தை அனைவராலும் பயன்படுத்த முடிகிறது. அதன் வெளிப்பாடாக, தற்போது தமிழ்மொழியில் நிறைய வலைப்பூக்கள் வெளிவந்து கொண்டிருப்பதைக் கொண்டு அறிய முடிகிறது.

    வலைப்பூக்கள், அவற்றில் பதிப்பிக்கும் ஆசிரியரைப் பொறுத்து அதனைத் தோற்றுவித்த நோக்கத்தினைப் பொறுத்து தமிழின் ஆளுமைகள் மாறுபடுகின்றன. பொழுதுபோக்கிற்காக மட்டுமே என்றால் அதில் தமிழின் வெளிப்பாடு தரமானதாக இருக்குமா என்பது சந்தேகமானதாகவே உள்ளது. மாறாக, இலக்கிய நோக்குடன் தோற்றுவிக்கப்பட்ட வலைப்பூக்களில் தமிழின் பயன்பாடும் இலக்கியத்தரமும் மிகுந்து காணப்படும். அவற்றில் சில…

    மு.இளங்கோவன் வலைப்பூ

    muelangovan.blogspot.in
    பாண்டிச்சேரியைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் அவர்களால் muelangovan.blogspot.in [3] என்ற பெயரில் 2007 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு இன்று வரை இலக்கியம், நாட்டுப்புறம், இலக்கியவாதிகள் பற்றிய விமர்சனம் ஆகியன பற்றி பல அரிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

    இவரது அச்சக ஆற்றுப்படை என்னும் நூலினை வலைப்பூவில் பதிவு செய்து வைத்துள்ளதில் தமிழ் மரபுக் கவிதைகளின்பால் இவருக்கு இருக்கும் ஆர்வத்தை பறைச்சாற்றுவதாய் அமைந்துள்ளது. இவரது வலைப்பூவில் இணைய பயிலரங்கம், கருத்தரங்கம் போன்ற இணையத்தில் தமிழ்மொழி, தமிழிலக்கியம் சார்ந்ததாக உள்ளது.

    manikandanvanathi.blogspot.inமணிவானதி வலைப்பூ
    பேராசிரியர் முனைவர் து. மணிகண்டன் அவர்களால் 2009 ஆம் ஆண்டு முதல் manikandanvanathi.blogspot.in [4] என்னும் பெயரில் வலைப்பூ மணிவானதி என்ற தலைப்புடன் துவங்கப்பட்டு பல இலக்கியம், தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளையும் தமிழ்மொழி சார்ந்த இணைய பயிலரங்கப் பதிவுகளையும் காணமுடிகிறது. இவரது இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் போன்ற நூல்கள் இணையத்திலும் வலைப்பூக்களிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டு வரும் சிறப்பினை விளக்குவதாக அமைந்துள்ளது.

    Arivumathi.blogspot.inஅறிவுமதி வலைப்பூ
    கவிஞர் அறிவுமதியின் வலைப்பூ. Arivumathi.blogspot.in [5]  என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இவரது படைப்புகள் பெரும்பான்மை கவிதை நடையையே பின்பற்றி இருக்கின்றன. சமூகச் சாடல்கள் அதிகம் காணப்படும் இவரது கவிதைப் பதிவுகளில் எதார்த்தமும் இயல்பான நடைமுறை அவலங்களும் அதிகம் காணப்படுகிறது.

    duraiarasan-blogதுரையரசன் வலைப்பூ
    அழகு தமிழில் இலக்கியம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை பதிவு செய்வதில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் பேராசிரியர் முனைவர் க. துரையரசன் அவர்கள். இவரது வலைப்பூ duraiarasan.blogspot.com [6 ]என்பதாகும். 2007 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பதிவுகளை செய்து வரும் இவர் புறநானூற்றில் நிர்வாகவியல் சிந்தனைகள், அகநானூறு 99 மலர்கள், திருக்குறளில் அணி இலக்கணக் கூறுகள் போன்ற தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் திணை நிலை நோக்கில் ஐந்திணை ஐம்பது என்ற தலைப்பில் பயிலரங்கமும் இணையத்தில் தமிழ்த் தரவுகள் என்ற இணையதள கருத்தரங்கமும் இவரால் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை விளக்கியுள்ளமை வலைப்பூவில் இவரது தமிழ் ஆளுமையைப் பறைச்சாற்றுகின்றது.

    gunathamizhகுணசீலன் வலைப்பூ
    வேர்களைத் தேடி என்ற தலைப்பினைக் கொண்ட www.gunathamizh.com [7] வலைப்பூ பேராசிரியர் முனைவர் இரா. குணசீலன் அவர்களால் இன்று வரை தரவுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கலை, இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள் என தமிழ் சார்ந்த பல்வேறு தகவல்களை பதிவு செய்துள்ளார். வலைத்தளத்திலும் வலைப்பூவிலும் தமிழ் தரவுகளைப் பதிவு செய்வது இவரது தலையாயப் பணியாக உள்ளது என்பதை அறிய முடிகிறது. தமிழ் வலைப்பூக்களைப் பற்றிய தொகுப்பு இவரது பதிவில் தொடர்பாய் உள்ளது நோக்குதற்குரியது.

    இவ்வலைப்பூக்கள் மட்டுமே அல்லாமல் பக்தி இலக்கியம், நவீன இலக்கியம் குழந்தைகள் பாட்டு, கவிதை, கட்டுரை என அனைத்து விதமான தகவல்களையும் பதிவு செய்து எண்ணற்ற பல வலைப்பூக்கள் இணையத்தில் வலம் வருகின்றன.

    வலைப்பூக்களின் இலக்கியப் பணி
    இலக்கியம் சார்ந்த வலைப்பூக்கள் தமிழ் வலைத்தளத்தில் அதிகமாக வெளிவரத்தொடங்கியுள்ள இந்த இணைய இலக்கிய காலத்தில் வலைப்பூக்களினால் சங்க இ.லக்கிய நூல்களும் அதற்குப் பிறகு தோன்றிய எல்லா வகையான இலக்கண இலக்கிய நூல்களையும் பதிவு செய்து கொள்ள முடிகிறது. அடுத்த தலைமுறையினரிடையே தமிழ் இலக்கியம் பற்றிய முழுமையன புரிதலை ஏற்படுத்த இத்தகைய வலைப்பூக்கள் பெரிதும் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. காகிதங்களில் கரையான்களுக்கு இரையாக்கிய காலம் மாறி இன்று எவ்விதத்திலும் அழியாத நிலையில் தொழில் நுட்பத்தின் துணை கொண்டு பன்னெடுங்காலமும் மக்கள் படிக்கவும் பயனுறவும் இத்தகைய இணைய பதிவுகள் துணை நிற்கின்றன.

    தமிழ் வலைப்பூக்கள் மொழி, இலக்கியம், இலக்கணம், சமயம், பண்பாடு உள்ளிட்ட கருத்தோட்டங்களைத் தாங்கி வருகின்றன. இவற்றின் வருகையால் தமிழ் ஆய்வுப் பரப்பில் புத்தெழுச்சித் தோன்றியுள்ளது.8 என்கின்றார் முனைவர் க. துரையரசன். இலக்கியத் தரம் வாய்ந்த வலைப்பூக்கள் மட்டுமே இங்கு விளக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பல பூக்கள் இணையத்தையும் தமிழ்மொழியினையும் இன்றும் அலங்கரித்து வருகின்றன.

    முடிவுரை
    கல்வெட்டுகளிலிருந்து ஓலைக்கும் ஓலைகளிலிருந்து காகிதத்திற்கும் மாறிய தமிழ் மொழி இன்று கணினி தமிழாக மாறியிருப்பது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை பதிவின் மூலம் வெளியிடுவதனால் பிற நாடுகளில் வாழும் தமிழ்ச் சான்றோர்களாலும் விமர்சிக்கக் கூடியதாக அமைகிறது. இலக்கிய – இலக்கண வளர்ச்சிக்கும் தமிழின் தொன்மையும் பழமையும் வெளி உலகிற்கு தெரியப்படுத்திட இன்றைக்குக் கட்டாயமான தேவையாக வலைப்பதிவுகள் எனப்படும் வலைப்பூக்கள் உள்ளன.

    துணை நூற்பட்டியல்
    1. http://ta.m.wikipedia.org/wiki/
    2. முனைவர் துரை. மணிகண்டன், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், ப. 11
    3. muelangovan.blogspot.in
    4. manikandanvanathi.blogspot.in
    5. Arivumathi.blogspot.in
    6. duraiarasan.blogspot.com
    7. Gunathamih.blogspot.com
    8. முனைவர் க. துரையரசன், இணையமும் இனிய தமிழும், ப. 100

     

     

    கி. கண்ணன்,
    முனைவர் பட்ட ஆய்வாளர், (ப/நே.)
    அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம்,
    தஞ்சாவூர்.

    Share
  • தொல்காப்பியர் கூறும் நூல் பூணூலா?

    முனைவர் ஜ.பிரேமலதா,

    தமிழ்இணைப்பேராசிரியர்,

    அரசு கலைக்கல்லூரி,சேலம்-7

    தொல்காப்பியர் கூறும் நூல் பூணூலா?

    முன்னுரை

    தொல்காப்பியர், பொருளதிகார மரபியலில்  நான்கு வருணத்தாருக்குரியப் பொருட்களைப் பற்றிக் கூறுமிடத்து, நூல் என்ற சொல்லையும் குறிப்பிட்டிருக்கிறார். இச்சொல் தொடர்பாக உரையாசிரியர்கள் பலரும் பலவித கருத்துக்களைக் கூறியுள்ளனர். இக்கருத்துக்களிலுள்ள சாதியச் சார்புத் தனைமையைக் கண்டறிந்து உண்மையை வெளிப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

    நூற்பா நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய ( 3: 615)

    இந்நூற்பாவிற்குரிய பொருள் அந்தணர்களுக்குரிவை நூல்,கரகம்,முக்கோல்,மணை என்ற நான்கு பொருட்கள் என்பதாகும்.

    1.நூல் – நூல் என்பதற்குப் பூணூல் என உரையாசிரியர்கள் பலரும் பொருள் கொண்டுள்ளனர்.(இதைப் பற்றியே இக்கட்டுரை ஆராய்கிறது.)

    2.கரகம் – சிறிய பானை

    3.முக்கோல் -உயிர் மூலப்பொருளின் விகாரமாகிய உடம்பைக் கொண்டிருத்தல் போல் இறைவன் உடம்பு, உயிர் இவையிரண்டையும் தனது உடம்பாகக் கொண்டுள்ளான். இறைவன்,உடல்,உடம்பு என்ற  இம்மூன்று தத்துவங்களும் ஒன்றை விட்டொன்று பிரியாமல் எக்காலத்தும், தத்தம் இயல்பை விடாமல் ஒன்று சேர்ந்துள்ளன என்பதை விளக்கவே இறைவனை வழிபடுபவர்கள், துறவிகள் மூன்று கோல்களை ஒன்றாகப் பிணைத்து கையில் வைத்திருப்பர். இதை “முக்கோல்” என்பர். துறவிகள் இவ்வாறு முக்கோல் ஏந்தும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்திருப்பதை தொல்காப்பிய செய்யுள் வரிகளால் அறியலாம்.

    4.மனை – அமருவதற்குரிய சிறிய பலகை.

    உரையாசிரியர்கள் கருத்து

     இதில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நூல் என்னும் சொல்லுக்குத்தான் உரையாசிரியர்கள் பலரும் பலவாறாகப் பொருள் கொண்டுள்ளனர்.

    இங்கு குறிப்பிடப்படும் நூல் என்பது எது?

    உரையாசிரியர்களின் கருத்துகளை முதலில் பார்ப்போம்.

    1.தொல்காப்பிய முழுமைக்கும் உரை வகுத்த இளம்பூரணர், ‘நூலும் கரகமும் முக்கோலும் மணையும் ஆராயுங் காலத்து அந்தணர்க்கு உரிய‘ என்கிறார்.

    2.உரையாசிரியர் பேராசிரியர் அவர்கள், (இ.சுந்தரமூர்த்தி பதிப்பு)”நூலினை முற்கூறினான் பிறப்பு முறையானுமென்பது .இனிக் குடுமியுங் குசையம் (தருப்பை) போல்வன…குண்டிகை-நீர் முகந்து வைத்திருக்கும் கலம். யாமை மனை-யாமை வடிவால் செய்த இருக்கைப்பலகை….பிறப்புமுறை-அருபிறப்பாளன் என்னும் பிறப்பு முறை. சிறப்பு முறை – நூல் தாங்கிய பின்னரே கரகம் முதலிய தாங்குதல் பற்றிய சிறப்பு முறை”(ப.636-637) என்கிறார். இங்கு, பேராசிரியர் பிறப்பு முறையால் பெறப்படுவது நூல் என்பதினால் அது பூணூலையேக் குறிக்கிறது எனலாம்.

    3.உரையாசிரியர் வ.த.இராமசுப்பிரமணியம் அவர்கள்,”முப்புரிநூல் அணிவது ஏழு வயதுப்பருவத்தில் அந்தணச்சிறுவர்களுக்குச் செய்யும் சடங்குமுறை. இருபிறப்பாளர் எனலும்ஆம்.” (ப.482)என்கிறார்.இங்கு வெளிப்படையாகவே பூணூல் எனக் குறிப்பிடப்படுகிறது.

    4.தமிழண்ணல் அவர்கள், அந்தணர்க்குரியவை முப்புரிநூல், கமண்டலம்(கரகம்), முக்கோல் தண்டு, மனை இருக்கை ஆகியன. நூல்-முப்புரிநூல் கரகம்-கமண்டலம்.”என்கிறார்.

    5.ஞா.மாணிக்கவாசகன் என்பார்,“நூல்-சுவடி (முப்புரிநூல் என்பாரும் உண்டு.)”என்று நூல் என்பதற்கு சுவடியாக இருக்கலாம் என ஊகித்துள்ளார். அந்தணர், துறவிகளாய் இடம் விட்டு இடம் செல்லும் துறவோராவர். இங்கு நூலெனக் கூறப்பட்டது பொத்தகக் கட்டை இது:

    ” பூதியு மண்ணும் பொத்தகக் கட்டும்

    மானுரி மடியு மந்திரக் கலப்பையும்

    கானெடு மணையுங் கட்டுறுத் தியாத்த

    கூறை வெள்ளுறிக் குண்டிகைக் காவினர்” (பெருங்கதை – 7  ம் நூ  )

    6.பாவலரேறு ச.பாலசுந்தரம் அவர்கள்,“முந்நூலும்(முப்புரிநூல்) கமண்டலமும்,முக்கோலும்,இருக்கை மனையும் அந்தணர்க்குரிய உடைமையாகும்” என்பதோடு முப்புரிநூல் அந்தணர்,அரசர் தவிர்ந்த ஏனையோர் நூல் பூணுதல் ஆரியர் வழக்கமாகும்….முந்நூலும் மனையும் பொது. கரகமும் முக்கோலும் துறவு பூண்டோர்க்குரியவாகும் என்கிறார்.(ப.211-212).இங்கு பாலசுந்தரம் அவர்கள், ஆரிய மரபில் அந்தணர்,அரசர் தவிர்த்தவர்களுக்கும் பூணூல் அணியும் வழக்கம் இருந்தது என்கிறார்.

    நால்வகை வருணத்தாருக்கும் உரியது பூணூல்

    தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் பூணூல் என்றால், தமிழகத்தில் அந்தணர் எனப்படும் (ஆரியர்கள்) பார்ப்பனர்கள் மட்டும் பூணூல் அணிபவர்கள் அல்லர். தொல்காப்பியம் சொல்லுகின்ற அனைத்து வர்ணத்தவருமே பூணூல் அணிபவர்கள்தான்.

    1.இன்றைக்குத் தாழ்த்தப்பட்டவர்களாகச் சொல்லப்படும் பறையர் சமூகத்தவர், தாங்கள் பூணூல் அணிவது குறித்து இன்றுவரையிலும் பாடிவரும் பாடல்களை வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள்.

    “முந்திப் பிறந்தவன் நான்

    முதல் பூணூல் தரித்தவன் நான்

    சங்குப் பறையன் நான்

    சாதியில் மூத்தவன் நான்”- என்கிறது அப்பாடல்.

    ஞானவெட்டியார் பாடல்கள்,

    “… … பூணூலந்

    தரணிமுத லென்பறையில் தழைத்த தாண்டே”

    “பூணூல் தரித்துக் கொள்ளுவோம் – சிவ சிவ

    பொறியுமைம் புலனையுந் தொழுது கொள்ளுவோம்

    வேண விருதுகளும் விகிதமாய்

    வெண்குடை, வெண்சாமரமும் பிடித்துக் கொள்வோம்”

    “பூணூல் பிறந்ததெங்கே -சிவசிவ” http://saanron.webs.com/katuraikal.htm  என்று சான்று காட்டுகிறார்.

    2.விஸ்வபிராமணர்கள் எனப்படும் கம்மாளர்கள் தாங்களே உண்மையான பார்ப்பனர்கள் என்று நீதிமன்றம் சென்று வாதாடிய வரலாறுதான் ‘சித்தூர் ஜில்லா அதாலத்’ என்று புகழ் பெற்றது. அந்தக் கம்மாளர்கள் கிருஷ்ண யஜூர் வேதத்தின் தைத்ரிய சம்ஹிதையைப் பின்பற்றி வேத கர்மாக்களுடன், உபநயனம் எனப்படும் பூணூல் அணியும் சடங்கைச் செய்து கொள்பவர்கள் என்பதற்கு ஆதாரமாக ஆந்திர மாநிலத்தில் பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

    3.நாட்டுக் கோட்டை நகரத்தார் என்று சொல்லப்படும் செட்டியார்கள் பூணூல் அணிபவர்கள். வன்னியர்களில் ஒரு பிரிவினர் முத்திரை போட்டுக் கொள்வது என்கிற பெயரில் பூணூல் அணிகின்ற சடங்கைச் செய்து கொள்கின்றனர்.

    1. ஆப்பிரிக்காவின் எகிப்பது நாட்டிற்கு ஆரியர்கள் செல்வதற்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. அதில் உள்ள உருவங்கள் சிலவற்றில் பூணூல் போன்று மார்புக்குக் குறுக்கே வரையப்பட்டுள்ளது. அது பூசாரிகளின் ஓவியங்களாக இருக்கலாம் என அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பூணூல் அணிதல் என்பது சூரிய வழிபாடு தொடர்புடைய ஒரு மதச் சின்னம். இஸ்லாமியர்கள் தலையில் குல்லாய் அணிவது போல இது ஒரு மதச் சின்னம் அவ்வளவே.

    புலையன் என்ற சொல்லுக்கு தமிழ் லெக்சிகனில் (Tamil Lexicon) “கீழ்மகன்” (கீழ்ச்சாதியான்) என்று பொருள் தரப்பட்டுள்ளது. அதே சொல்லுக்குப் “புரோகிதன்” என்று வேறொரு பொருளும் தரப்பட்டுள்ளது.

    புரோகிதர் என்றால் மதகுரு (Priest); சமயத் துறையின் தலைமகன். சமயச் சடங்குகளை நிகழ்த்துவது இவரது சிறப்புரிமை. இந்தத் தலைமகன் எப்படிக் கீழ்மகனாகவும் கருதப்படமுடியும்? இது ஆழ்ந்து ஆய்வு செய்வதற்குரியதாகிறது.

    சமயச் சடங்குகளில் கடவுள்வழிபாட்டுச் சடங்குதான் முதலிடம் வகிப்பது. இதற்கு அடுத்து புராதன சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது ஈமச்சடங்காகும். திருமணச் சடங்கு முதலியவெல்லாம் காலத்தால் மிகவும் பிற்பட்டவை. எனவே கடவுள் வழிபாட்டைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இறுதிச்சடங்குதான் முதல்இடத்தில் இருப்பது.

    பழந்தமிழகத்தில் இத்தகைய பெருமைவாய்ந்த இறுதிச் சடங்கை நடத்திவைக்கும் மரியாதைக்குரிய மதகுருவாகப் “புலையர்” இருந்தனர். குடிமக்களுக்கு மட்டுமல்லாது மன்னர்களின் இறுதிச் சடங்குகளையும் இவர்களே செய்துள்ளனர்.

    சுடுகாட்டில், இறந்தமன்னனின் உடல் கிடத்தப்பட்ட பிறகு, புலையன் சோறும்,கள்ளும் படைக்க, இறந்தவன் அதை வாங்கி உண்பான் என்று நம்பப் பட்டது. அதன்பின் உடலுக்கு எரியூட்டப்படும்.

    இதைக் குறிப்பிடும் பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.

    “புல்லகத்திட்ட சில்அவிழ் வல்சி

    புலையன் ஏவப் புல்மேல் அமர்ந்து உண்டு

    அழல்வாய்ப் புக்க…

    இப்பாடலை (எண்: 360) மேற்கோள் காட்டிப் புலையர் புரோகிதராயிருந்தனர் என்று பொருள் தந்துள்ளது லெக்சிகன்.

    ஆனால் இதே புறநானூற்றில் இன்னொரு பாடலும் உள்ளது. இதில் இறுதிக்கடன் தீர்க்கும் தகுதி புதல்வனுக்கு மட்டுமே உண்டு என்று வலியுறுத்தப் படுகிறது.

    இப்பாடலில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இவ்வாறு கூறுகிறான்:

    “இதோ அம்பு செலுத்த ஆயத்தமாகிவிட்டேன். அதற்குமுன் பசுக்களும், பார்ப்பனரும், பெண்களும், இறந்தோர் கடன்முடிக்கப் பிள்ளை பெறாதவர்களும் விலகியோடிப் பாதுகாப்பு தேடிக்கொள்ளுங்கள்!” (புறம்: 9).

    “ஆவும், ஆனியல் பார்ப்பன மாக்களும்

    …………………………………………….

    தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

    பொன்போல் புதல்வரைப் பெறாதீரும்

    ……… நும் அரண் சேர்மின்”.

    பல யாகசாலைகள் நிறுவி வேள்விகள் நடத்த உதவிய அந்த மன்னனைப் புகழும் புலவர் வைதிகச் சார்பினர் என்று கொள்ளலாம். இவர் இறுதிச் சடங்கில் புலையனின் முக்கிய இடத்தை மறுத்துவிடுகிறார்.

    செத்தவனுக்குக் கொடுக்கப் படும் உணவுதான் அவனது எதிர்கால வாழ்வைப் பாதுகாக்கும். இந்த மிக முக்கியமான சடங்குதான் இப்புறப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார் உ.வே.சா. ஆனால் புறநானூற்றில் இரண்டு பாடல்களில் (360, 363) பிண்டம் கொடுக்கும் சடங்கைப் புலையன் செய்ததாக வந்துள்ளது. அன்று தமிழகத்தில் வந்து குடியேறியிருந்த வைதிகர் பார்வையில் இது படுபயங்கரமான பாவமாகும். இருந்தாலும் எதிர்ப்புக்குரல் மிக பலவீனமாகவும், மறைமுகமாகவும்தான்

    ஒலிக்கிறது. புலையன் பிண்டம் தரலாகாது என்று நேரடியாகத் தடை செய்வதற்குப் பதில் புதல்வனைப் பெறாதோர்க்குக் கதிமோட்சமில்லை என்று நுட்பமாக உரைக்கிறது; புலையனின் இடத்தில் புதல்வனை வைக்கிறது.

    புலையர்குடியினர் இறந்தோரை வைத்துப் புதைக்கும் முதுமக்கள்தாழியையும் செய்பவர்களாக இருந்தனர். எனவே சுடுகாட்டில் புரோகிதம் செய்வது மட்டுமன்றி இடுகாட்டிலும் இவர்கள் பணி இன்றியமையாததாக இருந்தது. இறுதியடக்கம் செய்ய உதவுவதை இழிவானது என்று நாகரிகம் படைத்தவர்கள் நினைக்கமாட்டார்கள்.

    சுடுகாடு மற்றும் இடுகாடு குறித்துப் பார்ப்பனியத்தில் உள்ளதுபோல் அருவருப்பு அடைவது அர்த்தமற்றதாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இத்தகைய நல்ல நாகரிகம் இருந்தது. பார்ப்பனியப் பண்பாட்டால் இந்நாகரிகத்தை நாம் இழந்தோம்.

    “கலம்செய் கோவே, கலம்செய் கோவே! வண்டிச் சக்கரத்தில் ஒட்டிக்கொண்டு வந்த பல்லி போல, என் கணவனோடு பல ஆபத்தான பாதைகளைக் கடந்து வந்தேன். ஆனால் அவனோ இன்று இறந்துபோனான். அவனைப் புதைக்க ஒரு ஈமத்தாழி செய்து எனக்குத் தந்தருள். அதையும் சற்றுப் பெரியதாகச் செய்துவிடு– எனக்கும் அதில் இடம் இருக்குமாறு.” இப்படி ஒரு புலையரை இறைஞ்சுகிறாள் ஒரு புறநானூற்றுப் பெண்.

    இது ஓர் அற்புதமான புறப்பாடல் செய்தி (எண்: 256). இதைவிட அற்புதம் ஒரு கைவினைஞன் போற்றப்பட்டு “கோ” என அழைக்கப் பட்டிருப்பது. “அருள்கூர்ந்து தாழியைச் செய்துதா,” என்று புலையனான அவன் தயவு கோரப்படுகிறது.

    இவையனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்பொழுது பழந்தமிழகத்தில் புலையர் போற்றப்பட்டிருந்தமை புலனாகும் .இவர்கள் பொதுவாகப் பறையர் ,பாணர் முதலிய குடிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.குடிமக்களும் ,மன்னர்களும் தமக்குள்ள எத்தனையோ மாறுபாடுகள் இருந்தாலும் இப்புரோகிதரைப் பெரிதும் மதித்தார்கள்.

    மெகஸ்தின் என்னும் கிரேக்கர் சந்திரகுத்த மயூரனின் அரண்மணையில் கி. மு. 302-முதல் சிலகாலம் தங்கியிருந்தார். இவர் இந்தியாவைப்பற்றிய ஒரு நூல் எழுதியிருந்தார். அதிற் காணப்படும் சில பகுதிகள் அக்கால இந்திய மக்களின் வாழ்க்கை முறைகளை நன்கு விளக்குவன. அவர் கூறுவன :

      இந்தியர் ஏழுவகையாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். தத்துவசாத்திரத்தில் தேர்ந்த ஒரு கூட்டத்தினர் முதற் குலத்தினராகக் கொள்ளப்பட்டனர். மற்றைக் கூட்டத்தினரைவிட இவர்களின் தொகை குறைவாயிருந்தது. இவர்கள் எசமானராகவோ வேலைக்காரராகவோ இருக்கவில்லை. மறு உலகத்திற்குரிய பொருள்களை எல்லாம் இவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என மக்கள் நம்பினார்கள். ஆகவே, அவர்கள் இவர்களைப் பிணச்சடங்குகள் புரிவதற்கும் உரிய காலங்களிற் கடவுட்பலியைச் செலுத்துவதற்கும் அழைத்தார்கள். இவ்வகைக் கிரியைகள் புரிவதற்குக் கைம்மாறாக இவர்கள் மிகுந்த பொருளைப் பெற்றனர்.(தமிழ் இந்தியா – யாழ்ப்பாணத்து நவாலியூர்திரு.ந.சி.கந்தையா பிள்ளை, ப -89)

    அப்படியெனில் தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் என்பது எப்படி பூணூல் எனக் கருதப்பட்டது?

    தொல்காப்பியர் குறிப்பிடும் அந்தணர் என்பவர் யார்?

    அப்படியெனில் தொல்காப்பியத்தில் பிற்காலத்தில் வருணம் தொடர்பான பாடல்கள் இடைச்செருகல்கள் செய்யப்பட்டனவா?

    எனில் தொல்காப்பியத்தில் இடைச்செருகல் – எவை

     தொல்காப்பியத்தின் ஒவ்வொரு இயலிலும் நூற்பாக்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டுள்ளன.

     இந்த ஒழுங்கடுக்கில் தொடர்பில்லாத சில நூற்பாக்கள் இடையில் வருகின்றன.

     அவற்றை அறிஞர்கள் இடைச்செருகல் எனக் குறிப்பிடுகின்றனர்.

    அகத்திணையியலில்,

    ‘மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே’ என்றும்,

    புறத்திணையியலில்,

    ‘அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்

    ஐவகை மரபின் அரசர் பக்கமும்

    இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்’  என்றும்

    கற்பியலில்,

    ‘மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்

    கீழோர்க்காகிய காலமும் உண்டே’ என்றும்

    பொருளியலில்,

    ‘பரத்தை வாயில் நால்வர்க்கு முரித்தே’ என்றும்,

    எழுத்ததிகாரத்தில் எழுத்தை உச்சரிக்கும் ஒலியளவுக்கு இலக்கணமாக,

    ‘அளபின் கோடல் அந்தணர் மறைத்தே’ என்றும் சொல்லப்பட்டுள்ளது.

    இவ்வாறாக, மரபியல் தவிர வேறுபல இயல்களிலும் நால் வர்ணம் தொடர்பான, பிராம்மணரின் மறை தொடர்பான சுட்டுகள் உள்ளன..இவற்றை குறித்த தமிழாய்வாளர்களின் கருத்துக்கள்

    1.முனைவர் சி இலக்குவனார் தம் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொல்காப்பிய நூலில், மரபியல் பகுதியில் 24 நூற்பாக்களை உடுக்குறி(*)யால் இடைச்செருகல் எனப் பாகுபடுத்தியுள்ளார்.

    மக்களில் பிறப்பால் வரும் நான்கு வருண உடைமைகளைக் கூறும் நூற்பாக்கள் 15 (71-85)

    செய்யுளியலில் கூறாமல் மரபியலின் இறுதியில் தொடர்பில்லாமல் சேர்க்கப்பட்டிருக்கும் 9 நூற்பாக்கள்ஆக  24 நூற்பாக்கள் இடைச்செருகல் என்கிறார். மேலும், அகத்திணையியலில் பிரிவைப் பற்றிச் சொல்லும்போது, 13 நூற்பாக்களில் (24 முதல் 36) குலப் பிரிவு சேர்க்கப்பட்டுக் குழப்பம் செய்யப்பட்டுள்ளது. இவையும் இடைச்செருகல்கள் என்பது தெளிவு என்றும்இவை இடைச்செருகல்களேஎன்பதை உரையாசிரியர்களின் மேற்கோள்களால் அறியலாம்.சங்கநூல் பாடல்களில் இவற்றிற்கான மேற்கோள் பாடல்கள் இல்லாமல் பண்டைய உரையாசிரியர்களே புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கல விருத்திமுதலான பிற்கால நூல் தரும் பாடல்களைத் தருகின்றனர்என்றும் விளக்கம் தருகிறார்.

    2.அகத்திணையியலில் மக்களை ஆயர், வேட்டுவர் எனப் பகுத்துக் காட்டும் பகுதி தொல்காப்பியருடையது. சங்கப்பாடல்களில் இத்தகைய பாகுபாடுகளே உள்ளன. நால்வர், உயர்ந்தோர், பின்னோர் எனக் கூறும் 6 நூற்பாக்கள் இடைச்செருகல்.

    மரபியலில் ஆண், பெண் விலங்கினங்களின் பெயரைக் கூறிய பின்னர், புல் மர வகைகளின் இலை, பூ, காய் வகைகளை விளக்குவதற்கு முன்னர் இடையில் அந்தணர், அரசர், வைசியர், வேளாண்-மாந்தர் ஆகியோரைப் பற்றிப் பேசும் 15 நூற்பாக்கள் இடைச்செருகல்கள்.

    மேலும் ஆங்காங்கே சங்க காலத்துக்குப் பிற்பட்டபழக்க வழக்கங்களைக் கூறும் சிறுசிறு மாற்றங்கள் தெளிவாகத் தெரிக்ன்றன.வைசிகன் என்னும் சொல் சங்கநூல்களில் இல்லை. வணிகன் என்னும் சொல்கூடப் பிற்காலத்தில் சங்கநூல்களைத் தொகுத்தவர் சூட்டிய புலவர் பெயர்களில் மட்டும் வருகின்றன.வேளாண்-தர் ன்னும்    ர““தந்மா ல்லாட்சியும்சொ

      .சங்கநூல்களில் இல்லை.. வேளாண்-சிறுபதம் வேளாண்-வாயில்  போன்ற ஒருசில சொற்களும் வேளாண்மைத் தொழிலைக் குறிப்பன அல்ல.வேளாண்மை  என வரும் சொல்கூட உதவி செய்தல் என்னும் பொருளில் மட்டுமே வருகிறது.இந்த நான்கு-சாதிப் பாகுபாட்டைக் காட்டும் குறிப்புகள்கூடச் சங்கநூல்களில் இல்லை. •  INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE (1970) (சங்கநூல் சொல்லடைவு) முயற்சி இல்லாமல் பெற்ற சிற்றுணவு-நீர் -புறம் 74,கொடை வழங்கும் வாயில் பொருநராற்றுப்படை அடி 75 , கலித்தொகை (101-44) (திருக்குறள் 212) எனவே இந்த சான்கு-சாதிப் பாகுபாட்டு முறைகளைக் காட்டும் நூற்பாக்கள் தொல்காப்பியத்தில் செருகப்பட்டவை.செருகப்பட்டுள்ள இடமும் மேலும் கீழும் உள்ள நூற்பாக்களைப் பார்க்கும்போது மரபியல் சொற்களுக்குத் தொடர்பில்லாதவை என்பது விளங்கும். நன்றி.விக்கிப்பீடியா.

    3.மின்தமிழ் என்னும் இணையக்குழு விவாதத்தில் சேசாத்திரி ஸ்ரீதரன் என்பவர், “மரபியலில் நால்வகை வருணம் இடம் பெற்றிருப்பது இடைச்செருகல் ஆகும். தொல்காப்பியர் எழுதியதில்லை அது. அச் செய்திகளில் கூறப்படும் இடம், சூழல் ஆகியவற்றை காணும் போது அது இடைச் செருகல் எனத் தெற்றெனத் தெரியும்.தொல்காப்பியம் பொருளதிகார மரபியலில் உயிரினங்களை, அவற்றின் பெயர்களை விளக்கிக் கொண்டு வரும் போது 71 ஆவது நூற்பாவாக  வருணம்  பற்றிய செய்தி வருகிறது. அதிலிருந்து 85 ஆவது நூற்பா வரையிலும் அது தொடர்பான செய்திகளே கூறப்படுகின்றன. 86 ஆவது  நூற்பா, விடுபட்டுப் போன மரபியலின் தொடர்ச்சியாக ‘புறக் காழனவே புல்லெனப்படுமே’  என விளங்குகிறது. அறிவியல் செய்திகளுக்கு ஊடாக சமூகவியல் கொள்கை இடம் பெற்றிருப்பது முற்றிலும் பொருத்தமாக இல்லை. எனவே, வருணம் பற்றிய தொல்காப்பியர் காலத்தில் ஆரியப் பார்ப்பனர்கள் சமூகச் செல்வாக்கு பெற்ற ஒரு பிரிவாக இல்லவே இல்லை. எனவே தொல்காப்பியர் நால் வருணம் பற்றி பேச வாய்ப்பில்லை. இடைச்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. அதில் உள்ள உருவங்கள் சிலவற்றில் பூணூல் போன்று மார்புக்குக் குறுக்கே வரையப்பட்டுள்ளது. அது பூசாரிகளின் ஓவியங்களாக இருக்கலாம் என அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பூணூல் அணிதல் என்பது சூரிய வழிபாடு தொடர்புடைய ஒரு மதச் சின்னம். இஸ்லாமியர்கள் தலையில் குல்லாய் அணிவது போல இது ஒரு மதச் சின்னம் அவ்வளவே.

    பிரவாஹன் என்பவர்,தொல்காப்பியம் புறத்திணை-இயல்  பார்ப்பன பக்கம், அரசர் பக்கம், ஏனோர் பக்கம் – என்னும் பாகுபாடுகள் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலேயே பார்ப்பனரின் முதுகில் பூணூல் மாட்டப்பட்டு விடுகிறது.” என்கிறார். http://www.sooddram.com/Articles/otherbooks/Mar2013/Mar252013_Tamilenthi.htm.

    உண்மையில் தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் பூணூல்தானா? என்றால் இல்லவே இல்லை என்பதே ஆய்ந்தபின் கிடைத்த பதில்.

    தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் பூணூலே அல்ல

    தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் என்பதை பூணூலாகக் கருதியதன் விளைவே இச்சர்ச்சைகளுக்குக் காரணம்.பெரும்பாலும் உரையாசிரியர்கள் அனைவரும் நூல் என்பதற்குத் தோளில் அணியும் பூணூலையேக் குறிப்பதாகக் கருதி உரை வகுத்துள்ளனர். அதை அடிப்படையாகக் கொண்டே விவாதங்களும் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஆனால், பூணூலைத்தான் நூல் என்ற சொல் குறிக்கிறதா எனபதை சங்கப் பாடல்களைக் கொண்டு ஆராய்ந்தால், நூல் என்னும் சொல் பூணுலைக் குறிக்கவேயில்லை என்பது தெளிவாகப் புலப்படும்.

    நூற்பாவினை ஊன்றிக் கவனமாகப் படித்துப் பார்த்தால் ஒரு செய்தி புலப்படும். தொல்காப்பியர் கையில் எடுத்துச்செல்லும் பொருட்களைத்தான் பட்டியலிடுகிறார்.

    நூலே கரகம் முக்கோல் மணையே

    ஆயுங் காலை அந்தணர்க் குரிய (தொல்.3: 615)

    அந்தணராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி பூணூலைக் கையில் எடுத்துச் செல்ல மாட்டார்கள். தோளில்தான் அணிவார்கள்.ஆனால்,தொல்காப்பியர்,அந்தணர் கையில் எடுத்துச் செல்லும் பொருட்களாக நூல், கரகம், முக்கோல், மணை முதலானவற்றைக் குறிப்பிடுகிறார்.

    கையில் நூலை எதற்காக எடுத்துச் செல்ல வேண்டும்?

    நூலை அடுத்து கரகம் இடம் பெற்றிருப்பதால், அது கரகத்தை எடுத்துச் செல்வதற்குரிய நூலையேக் குறிக்கிறது.சங்க இலக்கியப் பாடல்களில் இதற்கு சிறப்பான உதாரணம் உள்ளது. பல மெல்லிய நூல்களைக் கொண்டு முறுக்கப்பட்ட கயிறு ‘புரிநூல்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. இப்புரிநூல் சிறிய பொருட்களைக் கட்டி எடுத்துச் செல்வதற்கு உறியாகப் பயன்பட்டுள்ளது

    முனிவர்கள் ‘கரண்டை’ எனப்படும் சிறிய பானையை நீர் எடுத்துச் செல்லப் பயன்படுத்தியுள்ளனர். இக்கரண்டையானது கல்லில் பொத்தல் ஏற்படுத்தினாற் போன்ற சிறிய வாயினை உடையது. கரண்டை கீழே சாய்ந்தாலும் சிறிய அளவு நீரே வீணாகும். இக்கரண்டை எனப்படும் சிறிய பானையைப் பல வடங்களுடையப் புரி நூலால் செய்யப்பட்ட உறியில் வைத்துக் கையில் எடுத்துச் சென்றுள்ளனர். பல வடமுடையப் புரிநூலால் ஆன உறியானது ‘சிமிலி’ என அழைக்கப்பட்டுள்ளது.

    “”””கல்பொறிந்தன்ன இட்டு வாய்க் கரண்டைப்

    பல்புரிச் சிமிலி நாற்ற நல்கி வர”” (மதுரைக் காஞ்சி. 483-484)

    கல்லினால் பொத்தல் ஏற்படுத்தினாற் போன்ற சிறிய வாயினையுடைய கரண்டை எனப்படும் சிறிய பானையைப், பல புரிகளுடைய நூலைக்கொண்டு கட்டி, அந்நூலை கையால் பற்றிய படி எடுத்துச்சென்றனர் என்பது இதன் பொருளாகும். இந்நூல் சிமிலி என்றழைக்கப்பட்டுள்ளது. (கையில் எடுத்துச் செல்லும் விளக்கையும் சிமிலி என அழைத்திருக்கலாம். அதுவே, ஆங்கிலத்தில் சிம்னி என வழங்கியிருக்கலாம்.)

    மணிமேகலை ‘சிமிலியில்’ கரண்டை எனப்படும் பானையை வைத்து எடுத்துச் செல்லும் முனிவர்களைச் ‘சிமிலிக் கரண்டையான்’ (மணி. 3: 86) எனக் கூறுகிறது.

    கலித்தொகை ‘உறித் தாழ்ந்த கரகம்’(கலி.9) என இதைப் பதிவு செய்துள்ளது. கரகம் என்பது கரண்டையாகும் (சிறிய பானை).

    “எறித்தரு கதிர்தாங்கி   ஏந்திய குடைநீழல்

     உறித்தாழ்ந்த கரகமும்   உரைசான்ற முக்கோலும்

     நெறிப்படச் சுவல்அசைஇ  வேறோரா நெஞ்சத்துக்

     குறிப்பேவல் செயல்மாலைக்    கொளைநடை அந்தணீர்” (பாலைக்கலி.9)

    என்ற வரிகளால் இதைஅறியலாம்.

    தொல்காப்பியர் எங்குமே தோளில் அணியக்கூடிய நூலைப் பற்றிக் குறிப்பிடவில்லை. கையில் எடுத்துச்செல்லும் நூலையே குறிப்பிடுகிறார் என்பதை இதிலிருந்து அறியலாம்.

    தொல்காப்பியரின் ” வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

    முனைவன் (640.641.தொ.பொருள்) என்ற நூற்பாவின் மூலம் பிறப்பாலல்லாமல் தகுதியாலும், புலமையாலும், துறவுத் தன்மையாலும், கற்றறிந்தஅறிஞரையே அந்தணர் என்று கருதியுள்ளார் எனலாம். எவ்வருணத்தாராக இருந்தாலும்,துறவு மேற்கொண்டுள்ளவர்கள் அந்தணர்கள் என அழைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் கையில் எடுத்துச்செல்லும் பொருட்களாக உறிநூல், சிறிய பானை, முக்கோல்,மனை போன்ற பொருட்கள் இருந்துள்ளன.பிற்காலத்தில் மண்பானையை விடுத்து, பித்தளை மற்றும் செம்பு போன்ற பொருட்கள் புழக்கத்தில் வந்த காலத்து அவ்வுலோகங்களினால் ஆன கைப்பிடிகள் தூக்கிச்செல்வதற்கேற்ற வகையில் கரகத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    முடிவுரை

    தொல்காப்பிய மரபியல் நூற்பாவில் காணலாகும் ஒரு சொல்லிற்கு உரையாசிரியர்கள், சாதி மற்றும் வருணச்சாயம் பூசி,அதில் தங்கள் கருத்தை ஏற்றிப் பலவாறாகப் பொருள் கொண்டுள்ளனர். இது தொடர்பாக இன்னும் விவாதங்கள் நடந்தபடியே இருப்பதுதான் பெரு வியப்பு. நடுநிலைமையோடு அணுகியிருந்தால் தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் என்பது கரகம் எடுத்துச்செல்ல உதவும் உறிநூலே என்பது தெற்றன விளங்கும்.

    காந்தியார் தன் சுயசரிதையில் “சூத்திரர்கள் பூணூல் அணிந்து கொள்ளக்கூடாது என்றால், மற்ற வருணத் தாருக்கு மட்டும் அதை அணிந்து கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று அவர்களுடன் வாதாடினேன். பூணூல் அணிந்து கொள்வது தேவையற்ற பழக்கம் என்பது என் கருத்து. சமயங்கள் பல இருந்து வரும் வரையில், ஒவ்வொரு சமயத்திற்கும் வெளிப்படையான சின்னம் ஏதாவது அவசியமாக இருக்கலாம். ஆனால், அந்தச் சின்னமே பிரமாதமாக்கப்பட்டு, இன்னொரு மதத்தை விட தன் மதமே உயர்வானது என்று காட்டுவதற்கு அது பயன் படுத்தப்படுமாயின் அப்பொழுது அச்சின்னம் புறக்கணிக்கப்படுவதற்கே ஏற்றதாகும்.ஹிந்து சமயத்தை மேன்மைப் படுத்துவதற்கான சாதனமாக பூணூல் உள்ளது என்று எனக்குத் தோன்றவில்லை. ஆகையால், அதில் எனக்குக் கவலையும் இல்லை”என்கிறார். தொல்காப்பியர் “வினையின் நீங்கி விளங்கிய அறிவு”(தொல். மரபு. 95)  எனக் குறிப்பாக உணர்த்துவதில் இருந்து யாரும் முனைவனாக வரலாம் என்பது தெரிகிறது. இது பிறப்பில் அல்லாமல் அறிவாற்றலில் உள்ளது என்கிறார். எனவே, தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் என்பது பூணூல் அல்ல என்பது தெளிவு. நூல் என்று மரபியலில் குறிப்பிடும் சொல் கையில் எடுத்துச் செல்லும் நூலையேக் குறிப்பதால் அது கரண்டையைத் தாங்கும் நூலாக இருக்கலாம் அல்லது ஓலைச் சுவடியாக இருக்கலாம்.

    Share
  • பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் ஆடை அணிகலன்கள்

    முனைவர் ஜ.பிரேமலதா,
    தமிழ் இணைப் பேராசிரியர்,
    அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி),
    சேலம் -7

    முன்னுரை

    மனிதன் நிலைத்த ஒரு வாழ்க்கையைத் தேடிக் கொண்ட நிலையில், ஆடை அணிகலன்களையணிந்து தன்னை அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினான். இருபாலருக்கும் தன்னை அலங்கரித்துக் கொள்வது பொதுவான இயல்பாகும்.

    வேட்டைச் சமூகத்தில் குழுவாக வாழ்ந்த காலத்தில் காலத்தில் மனிதன் இலை, தழைகளை ஆடையாக உடுத்திக் கொண்டான். பூக்களை அணிகலன்களாக அணிந்து கொண்டான். இயற்கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு கழுத்திலும், தலையிலும், கைகளிலும், கால்களிலும் சூடி விதவிதமாக அலங்கரித்து மகிழ்ந்தான். பின்னர் விலங்கின் தோலையும், பஞ்சு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் பருத்தி ஆடையும் அணிந்தான். சங்கிலான அணிகலன்களை அணிந்தான். உலோகங்களின் கண்டுபிடிப்பு அணிகலன்களிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இரும்பு, வெள்ளி, பொன் உலோக அணிகலன்கள் பொருளாதார ஏற்றத்திற்கு ஏற்ப அணியப்பட்டன. ஆடைகளிலும் இலை, தழையாடை, பருத்தி, பட்டு ஆடை என பொருளாதார ஏற்றத்தாழ்விற்கு ஏற்ப உடுத்தப்பட்டன.

    புறநானூறு மன்னர்கள் அணிந்திருந்த ஆடை அணிகலன்கள் பற்றியும், ஏழையர் அணிந்திருந்த ஆடை அணிகலன்கள் பற்றியும் இவ்வாறு கூறுகிறது.

    வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
    விரவுமணி யொளிர் வரும் அரவு றாழாரமொடு
    புரையோன் மேனிப் பூந்துகிற் கலிங்கம் (புறம்.398)

    மலை போன்ற தோள்களில், விலை மதிப்புடைய பல மணி கோர்க்கப்பட்ட பாம்பு போன்று வளைந்திருக்கும் ஆரத்தை பூ வேலைப்பாடுடைய கலிங்கம் என்ற ஆடையை மன்னன் அணிந்திருந்ததாக இப்பாடல் கூறுகிறது.

    செல்வ மகளிர் பல வகை மணிக்கள் கோத்த பொன் வடங்கள், பொன்னால் செய்யப்பட்ட சிலம்பு, மேகலை பொன் வளையல் போன்றவற்றை அணிந்திருந்ததாக காரிக் கண்ணனார் (புறம்.253) குறிப்பிடுகிறார். செல்வ மகளிர் ‘மாணிழை மகளிர்’, ‘வாலிழை மகளிர்’ என அணிந்திருக்கும் அணிகலன்களை முன்னிறுத்திக் கூறப்பட்டுள்ளனர். பெரும்பாணாற்றுப்படையும் (327-335) பல்வகை மகளிர் அணிகலன்களைப் பற்றிக் கூறுகிறது.

    ஆனால் ஏழைப் பெண்களோ, பொன், வெள்ளி, இரும்பு அணிகலன்கள் அணியும் வாய்ப்பற்ற வறுமை நிலையில் வாடினர். எனவே வயலில் களையாகப் பறித்துப் போடப்பட்டிருந்த குவளை, ஆம்பல் ஆகியவற்றின் தண்டகளைக் கொண்டு வளையல் செய்து அணிந்து கொண்டனர். இதை, ‘கழனி ஆம்பல் வள்ளி தொடிக்கை மகளிர்’ எனப் புறநானூறு (352) கூறுகிறது. பவள வளையல் கிடைக்காத இவர்கள் களையாக தூக்கி எறியப்பட்ட தண்டுகளை அணிந்த காட்சியை
    ‘பவள வளை செறிந்தாட் கண்டு அணிந்தாள் பச்சைக் குவளை பசுந்தண்டு கொண்டு’ பரிபாடல் பரிவோடு பதிவு செய்துள்ளது. ஏழை ஆண்கள் இலை, தழைகளாலும் பூக்களாலும் மடலை, கண்ணி செய்து அணிந்து கொண்டதை

    ‘உவலைக் கண்ணி வன்சொல் இளைஞன்’
    ‘பாசிலை தொடுத்த உவைலக் கண்ணியன்’ (புறம்.54)
    ‘கோட்டவும் கொடியவும் விரை இக்காட்ட
    பல்பூமி டைந்த படலைக் கண்ணியன்’ (பெரும்.173) போன்ற சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.

    பிற்காலத்தில் தாம் அனுபவிக்கும் சுகவாழ்வு கடவுள் தங்களுக்குக் கொடுத்த வரம் என்ற எண்ணத்தில் கடவுளுக்கும் ஆடை அணிகலன்களை அவரவர் பொருளாதார சூழலுக்கேற்ப அணிவித்து மகிழ்ந்தனர். இதை பிற்கால பக்தி இலக்கியங்களிலும், சிற்றிலக்கியங்களிலும் காணலாம். குறிப்பாக பிள்ளைத்தமிழ் நூல்களில் கடவுளைக் குழந்தையாகப் பாவிக்கும் நிலையில் பல்வேறு ஆடை அணிகலன்கள் அணிவித்து புலவர்கள் மகிழ்ந்து கொண்டாடுவதைக் காண முடிகிறது.

    320970_469624646406535_1624382656_n
    தெய்வம், வள்ளல், அரசனைப் பாடுவதற்கான வரையறைகளில் பிள்ளைத்தமிழ் நூல்களில் பிற்காலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இறைவன், இறைவி இறையடியவர்கள், வள்ளல்கள், தலைவர்கள், ஆசிரியர்கள் எனப் பாடுபொருள்( பாடப்படுவோர் )எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும் நிலையைக் காண முடிகிறது. பிள்ளைத்தமிழ் பாடும் முறையில் பருவங்களிலும், பாடல் எண்ணிக்கையிலும் கூட பல மாற்றங்கள் ஏற்பட்டன. பிள்ளைத்தமிழுக்கு மாற்றாக ‘முதுமைத் தமிழ்’ என்ற ஒரு சிற்றிலக்கியமும் உருவாகியுள்ளது.சிற்றிலக்கிய பெருக்கத்திற்கு இதுவும் ஒரு சான்று.

    பாடலமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் போல, பிள்ளைத்தமிழ் நூல்களில் ஆடை, அணிகலன்களிலும் கூட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு இறைவன், இறைவி, இறையடியவர், தலைவர்கள் என்ற அடிப்படையில் பத்து பிள்ளைத்தமிழ் நூல்கள் ஆராயப்பட்டுள்ளன.

    1.பகழிக் கூத்தர் – திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
    2.குமரகுருபர அடிகள் – முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்
    3. கவி வீரராகவர் – கீழ்வேளுர்முருகன் பிள்ளைத்தமிழ்
    4. சிவசூரிய நாராயணன் – சிங்கபுரக் கண்ணன் பிள்ளைத்தமிழ்
    5. குமரகுருபர அடிகள் -மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
    6. காழி ஞானதேசிகர் – அழகிய மாமுலையம்மை பிள்ளைத்தமிழ்
    7.சிவஞான முனிவர் – அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
    8.த. கோவேந்தன் – திருவில்லபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்
    9. இரா. தேவா – அன்னை தெரசா பிள்ளைத்தமிழ்
    10. புலவர் இராமமூர்த்தி -மணிவேலனார் பிள்ளைத்தமிழ்

    வருணனை

    சங்க கால மாந்தர் குறித்த ஆடை,அணிகலன்கள் பற்றிய வருணனை பிற்கால இலக்கியங்களிலும் தொடர்ந்து வளர்ச்சி பெற்றன. பாட்டியல் நூல்கள் கேசாதி பாதம், பாதாதி கேசம் ஆகிய இரு சிற்றிலக்கிய வகைகளைப் பற்றிக் கூறுகின்றன. இவை மனிதர்களை வருணிக்கும் முறை, கடவுளரை வருணிக்கும் முறை குறித்து இலக்கணம் கூறுகின்றன. இவ்வாறு வருணிக்கும்பொழுது, பெரிதும் ஆடை அணிகலன்கள் பற்றிய வருணனைகளே இடம் பிடிக்கின்றன. தனித்த இலக்கியங்களாக இவை மாற்றம் பெற்றாலும் இன்று வரை அனைத்து வகை இலக்கியங்களிலும் ஒரு மனிதரையோ, கடவுளையோ அறிமுகப்படுத்தும் பொழுது அவர்கள் அணிந்திருக்கிற ஆடை அணிவகைகளைப் பற்றிய வருணனை இடம் பெறுவது தவிர்க்க இயலாததாகியுள்ளது.

    ‘‘பாதாதிகேசம், கேசாதிபாதம், அங்கமாலை 
    கடிதல் இல்லாக் கலிவெண்பா பகரும் அவயவங்கள் 
    முடிவது கேசம் அக்கேசம் முதலடி ஈறும் வந்தால் 
    படி திகழ் பாதாதி கேசமும் கேசாதி பாதமும் ஆம் 
    மடிதல் இல் வெண்பா விருத்தம் பல அங்கமாலை என்னே’’

    என்று நவநீதப்பாட்டியல் இரு சிற்றிலக்கியங்களுக்கும் இலக்கணத்தை வகுக்கின்றது.

    பொதுவாக மனிதர்களை கேசாதி பாத முறையிலும், தெய்வங்களை பாதாதிகேச முறையிலும் வர்ணிக்கிற மரபு தமிழிலக்கியத்தில் உண்டு. ஆனால் பிள்ளைத்தமிழ் தெய்வங்களை, குழந்தையாகப் பாவித்துப் பாடும் மரபுடையது ஆதலால், கவிஞர்கள் கடவுளாகிய குழந்தைகளை வர்ணிக்கும் முறையில் தலையிலிருந்தே வர்ணிக்கின்றனர். குமரகுருபரரின் ஆண்பாற் பிள்ளைத்தமிழில் மட்டும் முருகன் பாதாதிகேச முறையில் வருணிக்கப்படுகிறான். அவரே மதுரை மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழில் அம்மையை கேசாதிபாதமாகவே வருணிக்கிறார்.

    ஆண்பாற் பிள்ளைத்தமிழ்

    கீழ்வேளுர்முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் செங்கீரைப் பருவத்தில்,
    மணிகிளர் குஞ்சி முடித்திடு முச்சியின் வச்சிர வொளியாட
    மாசறு தேசுறு முத்தியல் சுட்டிறன் மதியுடு வென வாடக்
    கணிதம் லொளிதரு குண்டல மாறிரு கதிரவன் போலாடக்
    கண்ட சரத்தொடு மண்டிய வெழில்வளர் கண்டிகை சூளுமாடப்
    பணிதரு மரதனம் விரவிய கரவளை பலபல விதமாடப்
    பயில்மர கதமிடை யுறுமரை வடமிசை பகர்கிண் கிணியாட
    அணிகிளர் பரிபுர மாட வசைந்தினி தாடுக செங்கீரை (செங்.7)

    என்ற இந்தப் பகுதி முருகனின் கேசாதி பாத அழகைப் பாடுகின்றது. திருமுடிகள், ஆறு முகங்கள், கண்களின் திருவருள், மகரக்குண்டலம், தோள், திருக்கரம், உறைவாள், சிலம்பு, பாதங்கள் என்று கேசாதி பாத வருணனையில் முருகன் அணிந்துள்ள அணிகலன்களும் சுட்டப்படுகின்றன.

    ujiladevi.blogpost.com (3)

    தலை உச்சி – நெத்திச்சுட்டி (முத்தியல் சுட்டி)
    காது – ஒளிதரு குண்டலம்
    கண்டம் – கண்ட சரம் + கண்டிகை
    கை – வளையல்
    இடை – கிண்கிணி
    கேசாதிபாத வருணனை இடம்பெற்றுள்ளது.

    இதுபோல மற்றொரு பாடலில் சப்பாணிப்பருவத்தில் குழந்தை முருகனுக்கு தாய் அலங்காரம் செய்கின்றாள்.

    காதிலிடு வச்சிரக் குண்டலமு நெற்றியிற் கவினொழுகு பொற்சுட்டியுங்
    கரியகவூ சியின்வாய்ந்த முச்சியிற் சுற்றிவிடு கதிர் முத்த மிளிர்தொங்கலுஞ்
    சோதிமய மானதிரு மார்பிற் கிசைந்திலகு தூமணிப் பொன்னரமும்
    தோளிலண் பன்மணிக் கேயூர முஞ்சிறிய தொந்திசரி யரை நாணுடன்
    சீதுமுறு நாதமுரல் கிண்கித் தொகுதியுஞ் செந்தளி ரினுஞ்சிவந்த
    சீறடித் துணையிலணி செம்பொற் சதங்கையும் செய்யநூ புரமு மசையத்
    தாதுகமழ் பதரிவன நீதசிற் பரகுமர சப்பாணி கொட்டியருளே (சப்.5)

    காது – வச்சிரக் குண்டலம்
    நெற்றி – பொற்சுட்டி
    மார்பு – தூமணிப் பொன்னாரம்
    தோள் – பன்மணிக் கேடழரம்
    இடை – அரைஞாண்
    கால் – பொன் சதங்கை

    இதுவும் கேசாதி பாத வருணனையில் அணிகலன்களாக சொல்லப்பட்டுள்ளன.
    முருகன் அணிந்திருப்பதாகச் சொல்லப்படும் அணிவகைகளில் மற்றவை. ‘கடம்பிணி புயத்தன்’ (காப்பு-10) என முருகன் அணிகலனையொட்டிப் புகழப்படுகிறான்.

    ‘மலர்த்தொடை மைக்குழலிற் சூடி’ (சப்பாணி-9, ப.21)

    என குழந்தையின் உச்சியில் இடப்பட்ட கொண்டையிற் பூக்கசாக் கட்டி சூடியுள்ள அழகு சுட்டப்படுகிறது. சிற்றில் சிதைக்கும் பருவத்தில் கால்களில் அணிந்திருக்கும் ‘புனைசெய் சதங்கை’ (சிற்றில்-7) சுட்டப்படுகிறது. கழுத்தணி மாலைகளாக ‘தொடலை’ (சிற்றில்-4), ‘சங்குமணி’ (வருகை- 7),

    ‘நறுந்தெறியல்’ (சிறுதேர் – 6), ‘கண்டசரம்’ (செங்கீரை-18) போன்றவை குறிப்பிடப்படுகின்றன.

    தலையில் சூடுபவையாக ‘கொக்கின் இறகு’ (வருகை-3)
    ‘மலர்த்தொடை மைக்குழலிற்சூடி’ (சப்பாணி-9) போன்றவை குறிப்பிடப்படுகின்றன.
    பகழிக் கூத்தரின் திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழில்

    “தேட அரிய மணியரைஞாண்
    சேர்க்க வருக விரற்காழி
    செறிக்க வருக திலகநுதல்
    தீட்ட வருக மறுகில் விளை
    யாட வருக. . . “(வாராணை-3)

    பொன் அரைஞாணும், விரலுக்கு மோதிரமும் பூட்டிக்கொள்ள வருமாறு குழந்தை முருகன் அழைக்கப்படுகிறான்.

    “குடுமி திருத்தி மலர்சொருகிக்
    கோலம் புனைந்து கொண்டாடி” (சிற்றில் – 9)
    “பூட்டுங் கலன்கள் வகை வகையே” (சிற்றில்-10)

    பாதாதிகேச வருணனையில் முருகன் அழகினை குமரகுருபர அடிகள் முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் வாராணைப் பருவத்தில் படம் பிடிக்கிறார். முருகன் அழகு நடை பயில நின்ற காலத்தை அவன் அணிந்திருக்கும் அணிகலன்கள் அசைந்து அசைந்து ஒலி எழுப்புவதை இப்பாடல் அழகுற எடுத்துரைக்கிறது.

    செம்பொற் கருங்கழல் அரிக்குரற் கிண்கிணி
    சிலம்பொடு கலின்கலினெனத்
    திருவரையில் அரைமணி கிணின்கிணின் எனப் பொலந்
    திண்தோளின் வளை கவிப்ப
    அம்பொற் பகட்டு பார் பிற்சன்ன வீரமும்
    ஆரமும் திருவில் வீச (வென்றிமாலை)
    அணி மகர குண்டலம் பரிதி மண் மரமென்ன
    அலர்கதிர்க் கற்றை சுற்றப்
    பைம்பொற் சுடர்ச்சுட்டி கட்டுசூ ழியமுடன்
    பட்டமொளி விட்டெறியப்பப் (வருகை – 1)

    இங்கு
    காலில் – சிலம்பு
    இடையில் – அரைமணி (உடைமணி)
    கைகளில் – வளையல்
    மார்பில் – சன்னவீரமும், ஆரமும்
    காதில் – மகர மீன் வடிவிற் செய்யப்பட்ட குண்டலம்

    போன்றவற்றை முருகன் அணிந்திருந்த செய்திகள் பதிவாகியுள்ளன. மேற்கூறப்பட்ட பாடல்களினால் முருகன் சிலம்பு, அரைமணி, வளையல், சின்ன வீரம், ஆரம், மகர குண்டலம், பண்மணிக் கேயூரம், பொன் சதங்கை, நெற்றிச் சுட்டி, பொன்னாகரம், கண்ட சரம் போன்ற ஆபரணங்களை அண¨ந்திருந்ததாகக் கவிஞர்கள் பாடியுள்ளனர்.

    சிங்கப்பூரில் உள்ள கண்ணபிரான் மீது பிள்ளைத்தமிழ் சிங்கபுரக் கண்ணன் பிள்ளை இயற்றியர் சிவசூரிய நாராயணன். இயற்றியுள்ளார்.

    “பொன்னுலாவும் பட்டுலாவும் பூவுலாவும் மேனியா” (முத்தம்-9) பொன்னும் பட்டும் பூவும் திருமாலின் மேனியில் உலவுகின்ற அளவிற்கு நிறைந்திருந்தைதையே கவிஞர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

    “தண்டுலாவும் கடலுலாவும் சங்குலாவும் கரத்திலே
    தனுவுலாவும் சுழலுலாவும் பொருளுலாவும்
    மெழிலினம்” (முத்.8) என்று கண்ணன் உடலில் பொன் அணி, பூ மாலை இவற்றோடு பட்டாடை அணிந்திருப்பதாக வருணிக்கிறார்.

    சங்க கால இலக்கியங்களில் விறலியரை வருணிக்கப்படும் பாடல்கள் கேசாதிபாதமாக வருணித்தன. பின்னர் இறைவனைப் பாடும் முறையில் இறைவனை அவன் உருவத்தை வருணிப்பது என்ற நிலையில் இச்சிற்றிலக்கியம் கண்டு பாதாதிகேசமாக ஆகியது. பெண்களைப் பாடும் முறையான கேசாதிபாதம் பக்தி இலக்கிய சிற்றிலக்கியங்களில் கடவுளரைப் பாடும் நிலையில், காலிலிருந்துப் பாடும் முறையாக மாற்றம் பெற்றது.

    சிற்றிலக்கிய வளரச்சிக் காலத்தில் ஆண், பெண் தெய்வங்களைப் பாடும் இலக்கியமாக இது நிறை நிலைபெற்றது. என்றாலும் உருவ நலன் என்பது தெய்வீக அழகாக மாற்றம் பெற்ற நிலை என்பது கருதத்தக்கது.

    ஆடை வகைகள்

    கீழ்வேளுர்முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் முத்தப்பருவத்தில் குழந்தை முருகனை நீராட்டி அழகு படுத்தும் அலங்கார நிலை சுட்டப்படுகிறது.

    தொடுகை மனக்கு . . .பூசித்
    தூதுவரிட் டிள வெந் நீராட்டித்
    துகிலால் ஈரம் புலர்த்தி மஞ்சள்
    தோய்வேப் பிலநீர் சுற்றியபின்
    குடுமி திருத்தி நீறணிந்து
    குலவு நிலக்கப் பணிந்து முத்தங்
    கொள்ளக் கனிவாய் முத்தமரன்
    கொள்வான் குனியு மமையத்தின்(முத்தம்-4)

    இந்தப் பாடல் குழந்தையை, மணப் பொருட்களை இட்ட வாசனை வெந்நீரில் நீராட்டித் துகிலால் ஈரம் நீங்க உலர்த்தியதைக் குறிப்பிடுகிறது. பின் மஞ்சள் நீரில் வேப்பிலை இட்டு திருஷ்டி கழிக்கின்றனராம். பின் குடுமியைத் திருத்தி, நெற்றியில் திருநீறு அணிவித்து அலங்காரம் செய்ததைக் குறிப்பிடுகிறது. நிலத்திலுள்ள மண்ணை எடுத்து நெற்றியில் பூசியதை (முத்தம்-4) மற்றொரு பாடல் குறிப்பிடுகிறது.

    முத்து அனைவரையும் கவரும் ஒரு அணிகலனாகும். அந்த முத்துக்கள் பிறக்குமிடம் பற்றி ஒவ்வொரு பிள்ளைத்தமிழ் நூலும் குறிப்பிடுகின்றன.

    “உழுவை கருமா மருப்பு முத்தும்
    வனைக்கார் கமுகு கழை முத்தும்
    வன சங்கரும்பு மதிமுத்து
    மாதர் மிடற்றின் வருமுத்தும்”(முத்தம்-3)
    என பத்து வகையான முத்துக்களைப் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.

    பெண்பாற் பிள்ளைத் தமிழ் நூல்கள்

    பெண்பாற் பிள்ளைத் தமிழ் நூல்களை எடுத்து ஆராய்ந்தபோது குமரகுரபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் முத்தப்பருவத்தில் தேவர்கள் அணியும் அணிகலன்களைப் பற்றிய குறிப்பு உள்ளது.

    இந்திரன், குபேரன், திருமால் முதலியோர் பெருஞ்செல்வர்கள் இவர்களில் சிந்தாமணி என்னும் அரியமணி இந்திரப் பதவிக்குரியது. அது இந்திரனிடம் உள்ளது. குபேர பதவிக்கு உரியது வான்மணி. அதை உடையவன் குபேரன். திருமால் பதவிக்கு உரியது கௌந்துப மணி. அது திருமாலுக்குரியது.

    வானத் தரசு கோயில் வலர்

    சிந்தாமணி, அலகையோர் கோன் நகரில் வளரும் வான்மணி, பதுமநாடன் மார்பில் வளர் பருதி மணி (முத்தம்-2)
    முதலான பதிவுகள் ஒவ்வொரு பதவிக்கும் உரியதாக ஒரு மணி இருந்ததைச் சுட்டுகிறது. குமரகுருபரரின் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில்அம்மையை பெற்றெடுத்த தாயாக பாண்டிமாதேவி சுட்டப்படுகிறாள்.

    அப்பாண்டிமாதேவி மயிர்ச்சாந்து பூசப்பட்டுக் குழைந்திருக்கும் கூந்தல் உடையவராகவும், (சிவபெருமான் காப்பு-3)

    நெற்றியில் திருநீறு மூன்று கோடுகளாக அமைந்திருக்க, முத்துச்சுட்டி, தலையில் உச்சிக் கொண்டை,
    தலையணி, காதில் குதம்பை அணி, பொன் கொப்பும் அணிந்தவளாக விளங்குகின்ற பாண்டிமா
    தேவியின் தோற்றம் கேசாதிபதமாக வருணிக்கப்படுகிறது.

    ‘நீராட்டி ஆட்டு பொற் சுண்ணந் திமிர்ந்தள்ளி’ (ம.மீ.அ.பி. செங்கீரை-1)

    மதுரை மீனாட்சியின் தோற்றமும் கேசாதி பாகமாகவே வருணிக்கப்படுகிறது. தலைமுடியில் அணிந்திருக்கும் உச்சிக் கொண்டை, நெற்றியில் அணிந்திருக்கும் நெற்றிச் சுட்டி, காதில் அணிந்திருக்கும் மகரக் குழைகள், திருவடிகளில் அணிந்திருக்கும் சிலம்புகள், மற்றும் கிண்கிணி இவற்றை அணிந்து செங்கீரை ஆட வருக என கவிஞர் அழைக்கிறார். (மு.மீ.அ.பி. செங்கீரை-6) பிற பாடல்களில் அம்மை, குதம்பை என்னும் காதணி (செங்-8) இடையில் மணிமேகலை என்னும் இடைஅணி (வருகை -1) கையில் வெண்மை நிறமான சங்கு வளையல்கள் (நீராடல்-2) அணிந்தவளாகக் காட்டப்படுகிறாள்.

    ஆடை-பொன் சரிகையால் செய்து உடுத்தப்பட்ட
    இடை ஆடை, மற்றும் முத்து அழுத்திச் செய்யப்பட்ட மேலாடை, ஒட்டியாணமாகிய
    இடை அணியும் அணிந்தவளாக (ஊசல்.10)

    அழகிய மாமுலையம்மை, சிந்தூரப் பொட்டை நெற்றியலிட்டு பொற்பட்டமும், திகழ்சுட்டியும் சூட்டி, அழகிய கொண்டையில் சிவாளி முத்தும், சூரியப் பிறையும், சந்திரப் பிறையும் சூடி, தங்க வளையல்களும், அமுதாரியும், சன்னவீரமும், மணிமேகலையும் அணிந்து நடந்து வர வேண்டுமென்று புலவர் (வருகை-1)

    கணித நூல் புலமை வல்லோர், கணக்கினுக்கும்
    அகப்படாததாகிய ஒப்பனை செய்பவளே

    “கணித இவர் புலமை வல்லோர்
    கணக்கினு மகப்படா ததாகியே ஒப்பனை செய்” (அம்மானை-4)

    அமுதாம்பிகை பிள்ளைத்தமிழில் ஊசல் பருவத்தில் அமுதாம்பிகை ஊசலாடும் பொழுது, ‘மகரக் குழைகளும ஊசலாட’ என மகரமீன் போன்ற குண்டலங்களும் ஆடியதாக பாடுகிறார். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் மீனாட்சியம்மை, அம்மானை ஆடுவதற்கு மரகதக் கல்லும், நீல மணிக் கல்லும், முத்து போன்றவற்றைப் பதித்த அம்மானைக் காய்களைக் கொண்டு நேர்த்தியாக அம்மானை ஆடிய சிறப்பு பாடப்பட்டுள்ளது. (அம்மானை – 10)

    “வள்ளொளி மரகதமும் முழுநீலமும்
    ஒண்தரளத் திரளும்
    ஒருகொளி பொங்க இழைத்திடும் அம்மானை”

    த. கோவேந்தன் பாடிய ஆண்டாள் பிள்ளைத்தமிழில் பலவகை அணிவகைகள் சொல்லப்பட்டுள்ளன.

    ஆண்டாள் ‘பூட்டிய சித்திரப் புரிவளையும், (சப்பாணி-57)’, மேலாடை அணிந்தவளாகவும், (சப்பாணி-64), மகிழ மலர் மாலை அணிந்தவளாகவும் (வாராணை 71) வெண்பட்டுடை, (காமநோன்பு-116) அணிந்தவளாகவும் காணப்படுகிறாள். நெற்றியில் திருமண் இட்டுக் கொள்ள முகம்பார்க்க கண்ணாடி உடையவள் (அம்புலி-83) இந்திர நீலத்தின் அருமணியை, பசுந் தகட்டில் பதித்த ஊசல் உயைவள் (ஊசல் 100) ஒளி சொரிகின்ற முத்துமணியும் முழு மணிகளில் ஆன மாலையையும் தோளில் அந்தவள் (ஊசல்-104), என்று ஆண்டாளின் ஆடை அணிகலனை ஆண்டாள் பிள்ளைத்தமிழ் எடுத்தியம்புகிறது.

    காழி ஞானதேசிகர் இயற்றிய அழகிய மாமுலையம்மை பிள்ளைத்தமிழில், மாமுலையம்மை முத்துச்சரமணிகளும், சங்கிலியும், விரலில் கணையாழியும், காதில் மகரக் குழைகளும் இருப்பில் பட்டினகப் பட்டங்களும் அணிந்து செங்கீரை ஆடியதாகக் குறிப்பிடப்படுகிறது. (அ.மா. செங்கீரை-6)

    பிள்ளைத்தமிழில் பிற தெய்வங்கள்

    சிவன் தோற்றம்

    1. வேழாடை (கி.வே.மு. சப்பாணி.2)
    2. இடையில் புலி அதள் உடையர் (ஆ.பி. தாலம்-47)
    3. கரி உரி உடுத்தவன் (ஆ.பி. சப்பாணி-48)
    4. அரவு அணி (ஆ.பி. தால்-47)
    5. முதுகெலும்பு மாலையை கோர்த்து கழுத்தில் அணிந்தவனாக (கி.வே.மு. செங்-8)
    6. சடைமுடியும் வளரும் இளம்பிறை, கங்கை நதி,
    7.வெள்ளெருகம்பூ சூடியவன் (அ.மா.பி. காப்பு-2)

    சிவன் திசை ஆடை அணிந்தவன் (ம.மீ.அ.பி. நீராடல்-4) இவ்வாறு சிவன் அணிந்திருக்கும் ஆடை அணிகலன்கள் சுட்டப்படுகிறது. இடையில் புலித்தோலையும், தோளில் யானைத் தோலையும் போர்த்துக்கொண்டு, சிவன் கழுத்தில் பாம்பு மாலையையும், முதுகெலும்பு மாலையையும் அணிந்தபடி சடைமுடியில் பிறை நிலவும் கங்கை நதியும் அணிந்திருக்கும் சிவனது தோற்றம் இவ்வாறு பிள்ளைத்தமிழ் நூல்களில் சுட்டப்படுகிறது.

    திருமாலின் தோற்றம்

    TM-7

    திருமாலின் தோற்றம் பற்றிய வருணனையில் அவதாரத்திற்கேற்ப ஆடை அணிகலன்கள் சுட்டப்படுகின்றன. இராமர் அவதாரத் தோற்றத்தில் ‘மரவுரி’ (ஆ.பி.தால-47) அணிந்தவராகவும், கண்ணன் அவதாரத் தோற்றத்தில் இடையில் சங்கு சக்கரம், வில், வாள், தண்டு இணைந்த பொன்மணி வடத்தை (ஆ.பி.வாராணை 71)யும், குண்டலங்கள் (காமநோன்பு-112) கௌத்துவ மாலை காமநோன்பு-114) பட்டாடை (ஆ.பி. வாராணை-68) அணிந்தவராகவும் சுட்டப்படுகிறார்.

    திருமால் தோற்றத்தில் துளசி மாலையும், காதில் மகர குண்டலங்களும் (அ.மா.பி. காப்புப்-1) அணிந்து பாம்பணையில் படுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

    கடவுளர் பற்றிய பிள்ளைத் தமிழ் நூல்களில் இடம்பெறும் பிற மகளிர் அணிந்த ஆடை அணிவகைகளும் குறிப்பிடப்படுகின்றன.

    மாமுலையம்மை பிள்ளைத்தமிழில், ஆய்ச்சியர் அணிந்துள்ள அணிகலன்களாக எளிய மலர்மாலைகளே சுட்டப்படுகின்றன.

    கொன்றை நறுங் குழலையும், முல்லையின் அரும்பையும், செழித்த மலர்களையும் கூந்தலில் கட்டி முடித்தவர்களாக ஆய்ச்சியர் குறிப்பிடப்படுகின்றனர். (அ.மா.செங்கீரை-5)

    ஆண்டாள் பிள்ளைத்தமிழில் கற்களை பொன்னில் பதிக்கும் முறை பற்றி ஒரு பாடல் குறிப்பிடுகிறது. ஒருமணியானது பேராற்றினுள்ளே சேறிடத்தே அணு அளவினதாகத் தோன்றி, சிவப்பு நிறமுற்றுப் பதினாறு ஊழிக்காலம் கடந்த பின்னரே முழுமை பெறும் தன்மையுடையது. ஆந்த மணி மிகப் பருத்தது. அதனைச் சாணை தீட்டுவோர் சாணை தீட்டி, தக்க அளவு செய்து, அணிகலன்ற குழி செய்து பதித்து நகை செய்வர் (வருகை 76) என மணி மண்ணில் உருவாகும் முறை குறிப்பிடப்படுகிறது.

    அடியவர் தோற்றத்தில் ஆடை அணிகலன்கள்

    அழகிய மாமுலையம்மை பிள்ளைத்தமிழில், திருநாவுக்கரசரின் எளிய தோற்றம் காட்டப்படுகிறது. காதில் குழையும், மேனி முழுதும் திருவெண்ணீரும் அணிந்தவராகச் சுட்டப்படுகிறார் (சப்பாணி-7)

    சேக்கிழார் பெரியபுராணத்தில் திருஞான சம்பந்தர் புராணத்தில் பிள்ளைத்தமிழ் சார்ந்த காப்புப் பருவத்தில் திருஞானசம்பந்தரின் பெற்றோர் அவருக்கு திருநீற்றுக் காப்போ உண்மையான அணிகலன் என அவருக்கு திருநீற்றை மட்டும் நெற்றியில் அணிவித்ததாகப் பாடுகிறார்.

    “வேறுபல காப்பும் மிகை என்றவை விரும்பார்
    திருநீறு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார்”

    பொதுவாக குழந்தைக்கு மந்திரித்த காப்பு கட்டுதல், ஏடெழுதிக் கட்டுதல், ஐம்படைத்தாலி கட்டுதல் முதலான காப்புகளை அணிவிப்பார். ஆனால் சேக்கிழார் திருநீறே சிறந்த காப்பு எனக் கருதியதை இங்கு ஞான சம்பந்தர் வாழ்க்கைமூலம் காட்டுகிறார்.

    தலைவர்கள் பற்றிய பிள்ளைத்தமிழ் நூல்கள்

    கவிஞர் இராதே எனப்படுகின்ற இரா. தேவா, அன்னை தெரசா பிள்ளைத்தமிழ், இயற்றியுள்ளார். இதில் அன்னை தெரசாவை பாட்டுடைத் தலைவியாக்கி இப்பிள்ளைத் தமிழ் இயற்றப்பட்டிருந்தாலும், குழந்தை தெரசாவிற்கு ‘வெள்ளுடை’ மட்டும் அணிவித்து ‘வெள்ளுடையம்மை’ (பாடல்-14) என்று வெள்ளையாடை அணிந்த தோற்றத்தையே தருகிறார். ஆடை அணிகலன்களை வருணிப்பதற்குப் பதில்,

    “வெள்ளுடை யம்மை குமிழ் சிரிப்பின்
    விளைவில் வறியோர் வாழ்வுயரும்
    வெற்றிச் செல்வி சிரிப்பழகி”” (பாடல்-14)

    அன்னை தெரசாவின் பொன் நகை அவளுடைய புன்னகையே என்று பாடுகின்றார். தருமபுரி மாவட்டதைச் சார்ந்த கவிஞர் மணிவேலனார். இவர் மீது பாடப்பட்ட நூலே பாவலர்மணிவேலனார் பிள்ளைத்தமிழ். மணிவேலனார் காலில் அணிந்ததாகச் சிலம்பு(வருகை-4) மட்டுமே கூறப்பட்டுள்ளது.

    முடிவுரை

    சங்க நூல்களில் பாடினி, விறலி பாத்திரங்கள் ( பதிற்றுப் பத்து, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை) கேசம் முதல் பாதம் வரை வருணனை செய்யப்பட்டுள்ளன. சங்ககால செல்வந்தர்,ஏழையர் குறித்த பதிவுகளிலும் நிலைக்கேற்ப ஆடை அணிகலன்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வருணனை பிற்காலத்தில் சிற்றிலக்கியங்களிலும் தொடர்ந்துள்ள திறத்தை பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் காணமுடிகிறது. கடவுளர் பற்றிய வருணனையில் அதிகமாக இடம் பெறும் ஆடை அணிவகைகள், காலம் செல்லச் செல்லச் செல்ல அருகி பக்தி இலக்கியக் காலத்தில் அடியவருக்கு எளிய தோற்றமும் திருநீறுமே அணிகலன் என்று கருதப்பட்டுள்ளது. தலைவர்கள் குறித்த இலக்கியங்களில் அவையும் அருகி காலத்திற்கேற்ப நகையணிதல் தவிர்க்கபட்டுள்ளதைக் காண முடிகிறது.

    துணைநின்ற நூல்கள்

    1. இராமமூர்த்தி மா. கவிஞர், பாவலர் மணிவேலனார் பிள்ளைத்தமிழ்,கோதை பதிப்பகம்,பாப்பிரெட்டிப்பட்டி,தருமபுரி மாவட்டம்,636 905. முதற்பதிப்பு 2009
    2. கவிவீரராகவர் – கீழ்வேளுர்முருகன் பிள்ளைத்தமிழ், உ.வே.சா நூல்நிலையம் -600 090 . முதற்பதிப்பு 1985
    3.காழி ஞானதேசிகர், அழகியமாமுலையம்மை பிள்ளைத்தமிழ்,தஞ்சைபெரியகோயில் வார வழிகாட்டு மன்றம்,தஞ்சாவூர் 613 009. முதற்பதிப்பு 2013
    4.குமரகுருபரர்,முத்துக்குதாரசுவாமி பிள்ளைத்தமிழ்,கழக வெளியீடு,சென்னை -1972.
    5.குமரகுருபரர்,மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், சாரதா பதிப்பகம்,சென்னை600 014 5ம்பதிப்பு 2013.
    6. கோவேந்தன். த. – திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்,ராஸ்வரி புத்தக நிலையம், சென்னை -600 017. பதிப்பு 2000
    7. சிவஞான முனிவர் – அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் பதிப்பு, கழக வெளியீடு,சென்னை – பதிப்பு 1972.
    8. சிவசூரிய நாராயணன் – சிங்கபுரக் கண்ணன் பிள்ளைத்தமிழ், இணையதளம்
    9.பகழிக் கூத்தர் – திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்,கழக வெளியீடு,சென்னை – 2ம்பதிப்பு 1972

    படங்களுக்கு நன்றி

    https://www.facebook.com/saivaneri

    Share
  • துப்புரவு தொழிலாளர் சட்டத்தின் நிழலும், நிஜமும்

    ஞா. ஜார்ஜ்,
    ஆராய்ச்சியாளர்
    அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகத் துறை
    காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம்
    காந்திகிராமம்
    திண்டுக்கல்

    இந்தியா பொருளாதார வளர்ச்சி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னோக்கியும் சமூகம் வளர்ச்சி மற்றும் ஒற்றுமையில் பின்னோக்கியும் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு சாதி மற்றும் மதம் சார்ந்த வேற்றுமைகளே காரணம். “மதம் உன்னை மிருகமாக்கும், சாதி உன்னை சாக்கடையாக்கும்” என்ற தந்தை பெரியாரின் வார்த்தைகளின் அர்த்தம் இன்று நமக்கு புரிகிறதா என்பது தெரியவில்லை. ஒரு வேளை புரிந்திருந்தால் அந்த பகுத்தறிவு பகலவனின் கனவு நிஜமாகி இருக்கும். சாதி மத பேதமின்றி அனைவரும் சமம் என்ற உணர்வு நமக்குள் ஏற்பட்டிருக்கும், சமுதாயத்தில் தீண்டாமை வளர்ந்திருக்காது, தலித்துகளும் தீண்டாமையினால் அடிமைப்பட்டிருக்கமாட்டார்கள். சாதியப் பாகுபாடு சார்ந்த தீண்டாமை ஒரு நாட்டின் சமூக வளர்ச்சிக்கும் அதன் முன்னேற்றத்திற்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதற்கு இந்தியாதான் சிறந்த உதாரணமாக இருக்க முடியும். தீண்டாமையினால் நாடும், தீண்டப்படாதாரும், தீண்டத்தக்கவரும் அடைந்துள்ள ஒட்டுமொத்த இழிவையும், பின்னடைவையும், ஏற்றத்தாழ்வையும், சமூக இயலாமைகளையும் படம் பிடித்து காட்டும் வகையில் அமைந்துள்ள பாரதிதாசனின் பாடல் வரிகள் நமக்கு உணர்த்துவது.

    “தீண்டாமையென்னுமொரு நோய் இந்தத்
    தேசத்தினில் மாத்திரம் திரியக்கண்டோம்-
    எனில் ஈண்டு பிற நாட்டில் இருப்போர்
    செவிக் கேறியதும் இச்செயலைக் காறியுமிழ்வார்
    பல ஆண்டாண்டு தோறுமிதனால்- நாம்
    கூண்டோடு மாய்வதறிந்தும்- இந்தக்
    கோணலுற்ற செயலுக்கு நா-ணுவதில்லை”.

    இப்பாடல் வரிகளில் கூறப்பட்டுள்ளதை உண்மையாக்கும் வகையிலேயே இன்றளவும் சாதியையும் அதனைச் சார்ந்த தீண்டாமையையும் கடைபிடித்துவருவதை என்பதை எண்ணி நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். கடந்த 2007 ல் அமெரிக்க செனட் சபையில் மார்டின் லூதர் கிங்கின் 50-வது ஆண்டு நினைவாக கொண்டுவரப்பட்டதுதான் 110-பில். அதில் இந்தியாவின் வளர்ச்சியையும், சமூக முன்னேற்றத்தையும் பாதித்துக் கொண்டிருப்பதும், இன்றளவும் தீர்வு காண முடியாததாகவும் இருப்பதுதான் தீண்டாமை என்ற சாதியப்பாகுபாடு. (United States should address the ongoing problem of Untouchability in India) என்ற ஆய்வு அறிக்கையை தீர்மானமாக கொண்டுவந்தது. இதில் சிந்திக்க வேண்டியது அமெரிக்க காந்திய சிந்தனையான அகிம்சை என்னும் ஆயுதத்தைக் கொண்டு தானே பல நூறு ஆண்டுகள் அடிமை மற்றும் தீண்டாமைத்தனத்தில் இருந்த கருப்பின மக்களின் விடுதலை பெற வழிகோலியது. ஆனால் இந்தியாவில் முற்போக்கான சிந்தனைவாதிகள் இல்லையா, முற்போக்கு சிந்தனைக்குத்தான் பஞ்சமா, அனைத்தும் இருந்தும் மதம் சார்ந்த சாதியத் தீண்டாமைக்கு விடையில்லையே. 21 ஆம் நூற்றாண்டில் பயணிக்கும் நாம் உணவு, உடை மற்றும் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்கும்போது சாதி என்ற சாக்கடையை உள்மனதில் ஓடவிட்டு சமத்துவம், சகோதரத்துவத்தை வளர்க்க நினைப்பது முட்டாள்தனமான செயலல்லவோ. இவ்வாறு சாதியப் பாகுபாடும், ஏற்றத்தாழ்வும் மிக்க ஒரு நாடு எந்தவிதத்தில் வளர்ச்சியை எட்ட முடியும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    மலம் என்ற சொல்லை கூட நாலுபேருக்கு மத்தியில் உச்சரிக்கத் தயங்கும் போது தான் கழித்த மலத்தை கொஞ்சமும் அருவருப்பின்றி சக மனிதனை அள்ளச் சொல்லுவதுதான் தீண்டாமையின் உச்சம். இப்படிப்பட்ட சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை மறுப்பதற்கில்லை. மலத்தை தீண்டுவதில்லை, அதனை தீண்டி சுத்தம் செய்வோரையும் தீண்டுவதில்லை, அப்படி தீண்டினால் தீட்டு என்று கூறும் சாதி இந்துக்களும் மற்ற உயர்வகுப்பினரும் ஒன்றை மறந்துவிடக்கூடாது, ஒவ்வொரு மனிதனும் குறைந்தது இரண்டு முறையாவது தன் மலத்தைத்தானே தொட்டுக் கழுவும் தோட்டியாக உள்ளான். ஆனால் மற்றவர்களின் மலத்தை சமூக நலன் கருதி அப்புறப்படுத்தியவனைச் சமூகத்திலிருந்தே தூர ஒதுக்கி விடுகிறான் தலித் மக்களை தீண்டப்படாதவனென்று. தீட்டு என்று மலத்தைத் தொடா மனிதன் உண்டா? என்று முனைவர் சீனிவாசன் தீண்டாமைக்கு தீயிடு புத்தகத்தில் கூறும் விளக்கம் சரியே.

    கையால் மலம் அள்ளுவது ஒரு தேசத்தின் அவமானம் என்று கூறும் பொது நலவாதிகளாகட்டும், அரசியல்வாதிகளாகட்டும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளாகட்டும் தங்களுக்குள்ளாகவே கேட்க வேண்டிய கேள்வி, தேசத்தின் அவமானத்தை அகற்றும் பொறுப்பு அனைவருக்குமே உண்டு, நம்மில் எத்தனை பேர் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் மற்றும் தங்களின் பகுதியில் உள்ள சாக்கடையில் அடைப்பு எற்பட்டு துர்நாற்றம் வீசும்போது அதை சமூக அக்கறையுடன் சுத்தப்படுத்த முன்வருகின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சாக்கடை நீரில் கால் பட்டுவிடக்கூடாது என்பதற்காக பார்த்துப் பார்த்து ஒதுங்கி நடக்கும் நாமும் மனிதர்கள் தான், பல்லாயிரக்கணக்கான மக்களின் மலமும், சிறுநீரும் மற்றும் செத்துப்போன மிருகங்களின் உடல்களும் மிதந்து வரும் சாக்கடையை புனித ஆறாகக் கருதி எந்தவித சலனமும் இல்லாமல் உள்ளே இறங்கி தொழில் தர்மத்தைக் காக்க துன்பத்தை நாளும் அனுபவிக்கும் அவனும் மனிதன்தானே. அசுத்த நீரில் தலை நனைந்து, வாய், காது, மூக்கு வாழியாக நீர் நுழைய சாக்கடைப் புழுவைப் போலத் துடித்து சமூகத்தின் சுத்தத்தைக் காக்க தன்னையே அர்ப்பணிக்கும்போது அவர்களுக்கு நேரும் துன்பத்தை நம்மில் எவரேனும் உணர்ந்ததுண்டா? போற்ற வேண்டிய அவர்களை நம் சமூகம் மனிதனாகக்கூட பார்ப்பதில்லையே!

    இன்றைய விளம்பரம் தேடும் உலகில் சுய விளம்பரங்களுக்கு எவரும் விதிவிலக்கல்ல, அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பிரபலங்கள் என அனைத்துத் தரப்பினருமே விளம்பரம் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர் என்பது மிகையான ஒன்று. எடுத்துக்காட்டாக தனிநபர் சுகாதாரம் பேணப்பட வேண்டும் மற்றும் சமூக சுகாதாரம் காக்கப்படவேண்டும் என்று துடைப்பத்துடன் ஊடக விளம்பரத்திற்காக போஸ் கொடுக்கும் தலைவர்கள் சுயநலவாதிகளா அல்லது பொதுநலவாதிகளா என்ற கேள்வி எழுகிறது. கறைகளையே பார்த்திராத வெண்ணிற ஆடை, கையிலோ துடைப்பத்தை எடுத்தாலே போதும் அவர்களை சமூக சுகாதாரத்தை காக்கிற சமூகவாதிகள் என்கிறது ஊடகங்கள் அதுவே நாளை வரப்போகிற காலரா மலேரியா போன்ற எண்ணற்ற நோய்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற நினைத்து சாக்கடையானாலும் சரி, அது கழிவுகளின் தொட்டியானாலும் சரி சமூக அக்கறையுடன் சுத்தம் செய்யும் சமூகவாதிக்கு உடுத்த நல்ல ஆடைகள் இல்லை, சமூகத்தில் மரியாதை இல்லை ஏன் சமூக சுகாதாரத்தை பேணுபவனுக்கே சமூகத்தில் மக்களோடு மக்களாக வசிக்கக்கூட இடமில்லையே. பணம் மற்றும் அதிகாரம் இரண்டிற்காக மக்கள் முன் நடிக்கும் கறைபடியா சட்டைகாரர்களுக்கு பத்திரிக்கைச் செய்தியில் முதல் பக்கமும் எதையும் எதிர்பாராது சமூக நலனுக்காக தீண்டாமைக் கொடுமையை கறைபடிந்த ஆடையாக அணிந்து உழைப்பவனுக்கு பத்திரிக்கைச் செய்தியில் கடைசி பக்கத்தில் கூட இடமில்லையே ஏன்? சமூகவாதிக்கும் பொதுநலவாதிகளுக்கு விளம்பரம் தேவையில்லையோ?

    மனித மலத்தை மனிதனே அகற்றும் முறை ஆங்கிலேயர்களின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. நாம் அடிமைப்பட்டு இருந்தபோதே தலித்துகளும் அடிமைப்பட்டிருந்தனர் என்பது ஒன்றும் வியப்பதற்கில்லை. ஆனால் சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் தலித்துகள் மனித மலத்தை அள்ளப் பணிக்கப்படுவதுதான் நாம் பெற்ற உண்மையான சுதந்திரமா என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு தலித்துகளை, இதுதான் நம் பரம்பரைத் தொழில் என்று அவர்களுக்குள்ளாகவே எண்ணம் வரும் அளவுக்கு அடிமைப்படுத்தியுள்ளோமே இதுவா சுதந்திரம்? தலித் மக்களின் ஒட்டுமொத்த சுதந்திரத்தையுமே பரித்துவிடு, இன்று ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம், மற்றும் தனிமனித சுதந்திரம் பற்றிப் பேச நமக்கு என்ன அருகதை இருக்கிறது என்றெண்ணிப் பார்க்க வேண்டும். எல்லோரும் எல்லாத் தொழில்களையும் செய்யலாம் என்று கூறும் அரசியல் சட்டம்கூட, தலித்துகள் என்றாலே துப்புரவு மற்றும் மனித மலத்தை அகற்றுவது என்ற சமூக நடைமுறை ஆதரித்து வருவதாகத்தான் தோன்றுகிறது. எல்லாத் துறைகளிலும் இட ஒதுக்கீடு செய்து பணி அமர்த்தும் மத்திய மாநில அரசுகள் ஏனோ துப்புரவு மற்றும் கடைநிலை தொழிலாளர்களை பணியமர்த்தும்போது மட்டும் இடஒதுக்கீட்டை கடைபிடிப்பதில்லை, அரசே பாரபட்சமாக நடந்து கொள்கிறதுதானே, தீண்டப்படாதவர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டாத துறை துப்புரவுப் பணிதான். இதில் பாரபட்சத்திற்கு இடமில்லை, ஏனென்றால் துப்புரவுப் பணி முழுவதும் தீண்டப்பாடாதவராக கருதப்படும் தலித்துகளின் வசமே என்று சொல்லும் அளவுக்கு சமூக ஏற்றத்தாழ்வை அரசே ஆதரித்து வந்திருக்கிறது என்று தானே அர்த்தம்.

    தலித் மக்கள் தீண்டாமையின் உச்சமான மனிதக்கழிவை அகற்ற பணிக்கப்படுவது இந்திய அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமை சரத்துக்களான 14, 17, 21 மற்றும் 23 க்கு எதிரானது. தலித் மக்கள் தங்களுக்கான ஒட்டுமொத்த மனித உரிமையையே இழந்து சமூகத்தில் அடிமட்டத்தில் இருக்கின்றனர். இந்தியாவில் தலித் சமுதாய மக்கள் அடிமைப்பட்டு இருப்பது மேம்பட்ட சமுதாய வளர்ச்சிக்கும் வித்திடமுடியும் என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி  நாட்டில் 2.6 மில்லியன் உலர் கழிப்பறைகள் உள்ளன. இவற்றில் 13,14,652 கழிப்பறைகள் சாக்கடையில் நேரடியாகவே கலந்துவிடுவதாகவும், 7,94,390 உலர் கழிப்பறைக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதாகவும் ஆய்வு கூறுகிறது. உலர் கழிப்பறைகளில் உள்ள மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறையில் 73% உலர் கழிப்பறைகள் கிராமப்புறங்களிலும் மீதமுள்ள 27% உலர் கழிப்பறைகள் நகர்ப்புறங்களிலும் செயல்படுவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 1.3 மில்லியன் மக்கள் மனிதக் கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் அதிகப்படியானவர்கள் பெண்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று நம் நாட்டில் கிராமங்களே அதிக அளவில் உள்ளதால்தான் காந்தி கூட கிராமப்புறங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நம் நாட்டின் வளர்ச்சி அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனாலேயே, கிராமம் உயர நாடு உயரும் என்று குறிப்பிட்டார். கிராமப்புறங்களின் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டி எண்ணற்ற திட்டங்களை வகுத்துள்ள மத்திய மாநில அரசுகள் அதை முறையாகச் செயல்படுத்த தவறிவிட்டது. துப்புரவு தொழிலாளர் நலனுக்காகவும், கிராமப்புற சுகாதாரத்துக்காகவும் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் மலம் நீக்குவதற்கு மனிதனை பயன்படுத்துதல் மற்றும் உலர் கழிப்பறைகளைக் கட்டுதல் (தடுப்புச்) சட்டம் 1993.  இச்சட்டத்தின் மூலம் உலர் கழிப்பறைகளை நவீன கழிப்பறைகளாக மாற்றுவதற்கு அரசு மானியம் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் கட்டுவதற்கான் திட்டம் கொண்டுவரப்பட்டது. மனிதக் கழிவை மனிதனே அகற்றும் இழிநிலையை சமூகத்தில் இருந்து முற்றிலும் அகற்றிவிடுவோம், அத்துடன் திறந்தவெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் ஒழித்துவிடுவோம் என்று கூறி அதிகப்படியான கிராமங்களில் தண்ணீர் வசதிக்கோ, பராமரிப்பு வசதிக்கோ முறையான ஏற்பாடுளைச் செய்யாமல் பொதுக் கழிப்பிடம் மற்றும் சுகாதார வளாகம் என்று கட்டிடங்கள் கட்டப்பட்டு மக்கள் பணம் வீணடிக்கப்பட்டது, கிராமப்புறங்களில் 90% மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலை உள்ளதை அறிந்தாவது மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த அரசுகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை கூட பல பொதுக் கழிப்பிடங்கள் கட்டியது முதலே பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதை நாம் காணமுடியும். இப்படி பல செயல்பாடுகள் சிறப்பாக இல்லாத காரணத்தால், சில மாற்றங்களுடன் 2013-ல் புதிய சட்டதிருத்தத்தை உருவாகியது மத்திய அரசு.

    மனித கழிவு அகற்றும் தொழிலாளர் தடை மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வுச் சட்டம் 2013-ன் முக்கிய அம்சங்கள்:

    · மலம் அள்ளுதல், செப்டிக் தொட்டிகளை வாருதல், சாக்கடைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை இனியும் எவரும் தொடரக்கூடாது என்பதுதான் சட்டத்தின் முதற்நோக்கம்.

    · மலம் அள்ளுதல், செப்டிக் தொட்டிகளை வாருதல், சாக்கடைகளைச் சுத்தம் செய்யப் பணிப்பதும், செய்வதும் சட்டப்படி குற்றம் என்றும் மீறினால் இரண்டு வருடம் சிறைத் தண்டணை மற்றும் இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மறுபடியும் இதே குற்றத்தைச் செய்தால் ஐந்து வருடம் சிறை, ஐந்து லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    · இச்சட்டம் நடைமுறைக்கு வந்து ஒன்பது மாதங்களுக்குள் நாடு முழுவதும் மனிதர்கள் மலம் அள்ளும் வடிவிலான உலர் கழிப்பறைகளை கண்டறிந்து முற்றிலும் அகற்றிவிட வேண்டும், அல்லது நிதியுதவி பெற்று தண்ணீர் வசதியுடன் கூடிய நவீன கழிப்பறைகளாக மாற்ற வேண்டும்.

    · சட்டத்தின் கீழ்தண்டனை பெற்றவர் அதை எதிர்த்து எந்த நீதிமன்றங்களுக்கும் செல்லமுடியாது (non-bailable)

    · மனித கழிவு அகற்றும் தொழிலாளர்களின் கணக்கெடுப்புப் பணியை துறை வாரியாக தயாரித்து சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் கண்காணித்து மத்திய வேலைவாய்ப்பு மற்றும் சமூக நீதித் துறைக்கு சமர்பிக்கவேண்டும்.

    · மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளாக
    o அடையாள அட்டை வழங்க வேண்டும்
    o முதற்கட்ட நிவாரணத்தொகை வழங்க வேண்டும்
    o மனித கழிவு அகற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்
    o மனித கழிவு அகற்றும் தொழிலாளர்களுக்கு நிலம் மற்றும் வீடு கட்ட உதவித் தொகை வழங்க வேண்டும் அல்லது உதவித்தொகையுடன் வீடு வழங்க வேண்டும்.
    o மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தில் குறைந்தது ஒருவருக்காவது உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி அளிக்க வேண்டும்
    o மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தில் குறைந்தது ஒருவருக்காவது மாற்றுத் தொழில் செய்வதற்கான மானியம் மற்றும் வங்கியின் மூலம் கடன் வழங்க வேண்டும்.

    · கண்காணிப்பு அமைப்புகள்:

    நிலைகள்
    நிர்வாக தலைமை
    வட்டம்
    வட்டாட்சியர்
    மாவட்டம்
    மாவட்ட ஆட்சியர்
    மாநிலம்
    மாநில முதல்வர்
    மத்தியில்
    மத்திய வேலைவாய்ப்பு மற்றும் சமூக நீதித் துறை

    கடந்த மார்ச் 27, 2014-ல் உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்தது, அதில் அனைத்து மாநில அரசுகளும் உடனடியாக மனிதக் கழிவு மனிதர்களால் அகற்றப்படுவதை தடை செய்ய வேண்டும், அவர்களின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அதே போல மத்திய வேலைவாய்ப்பு மற்றும் சமூக நீதித் துறையின் உத்தரவுப்படி மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் உள்ள மனிதக்கழிவு அகற்றும் பணியாளர்களை கணக்கெடுத்து அதன் முடிவை சமர்பிக்க வேண்டும். அந்த பட்டியலின் மூலம் பயனாளிகளுக்கு முதற்கட்ட நிவாரணத்தொகை மற்றும் மறுவாழ்விற்கான பணிகள் தொடரப்படும் என்று அறிவித்திருக்கிறது.

    2013 சட்டப்படி துறைவாரியாக கணக்கெடுக்கப்படும் போது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் துப்புரவுத் தொழிலாளர்களே மனிதக் கழிவை அகற்றும் வேலையையும் சேர்த்து செய்கின்றனர் அப்படிப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்ட நகராட்சியே கணக்கெடுப்பின் போது இந்த பணியாளர்களை பயனாளிகளின் பட்டியலில் சேர்க்காமல் விட்டிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் அவர்கள் துப்புரவு மற்றும் மனிதக்கழிவுகள் ஆகியவற்றை சேர்த்து செய்வதனால் அவர்களை துப்புரவாளர் பட்டியலிலேயே வைத்துவிட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி கழிவு அகற்றும் தொழிலாளர்கள் அதிகமாக படித்தவர்கள் அல்ல அதனால் அரசு விளம்பரங்களை படித்து புரிந்து கொள்வது கடினம். இப்படி இருக்கும் சூழ்நிலையில் அந்தந்த ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் கணக்கெடுப்பின் போது எப்படி செயல்பட்டன என்பது தெரியவில்லை, அதற்கான விழிப்புணர்வையும், அவர்களுக்கு உதவ அரசு எப்படிப்பட்ட நடவடிக்கைளை எடுத்தது என்பது தெரியவில்லை.

    சட்டப் பிரிவு 2 (1) (e)-ன் படி உலர் கழிப்பறையை அதிகமாக பயன்படுத்துவது இரயில்வே துறைதான் ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு கழிவறை என்று கணக்கிட்டால் 2013 திருத்தச் சட்டத்தை முதலில் மீறுவது இரயில்வே துறைதான். அதிகப்படியான மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் இன்றுவரையும் இரயில் பாதைகளில் மனிதமலத்தை சுத்தம் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். உச்ச நீதிமன்றம் கூட இரயில்வே துறை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் இந்தப் பிரச்சனைக்கு முடிவுகட்டவும். இரயில் பாதையில் உள்ள மனிதக்கழிவுகளை கையால் சுத்தம் செய்யக்கூடாது மாறாக அதிகப்படியான வேகத்தில் தண்ணீரை உந்தித்தள்ளும் high speed water jet ஐ பயன்படுத்த வேண்டும் என ஆணை பிறப்பித்தது. மற்ற மேலை நாடுகளில் பயன்படுத்தப்படும் இரயில் வண்டிகளில் உள்ள கழிப்பறைக் கழிவுகள் இரயில் வண்டிகளிலேயே சேமிக்கப்பட்டு மனிதனின் கைபடாமலேயே சுத்தம் செய்யப்படுகிறது. இந்த செயல் திட்டத்தை ஏன் இரயில்வேத் துறை செயல் படுத்தக்கூடாது.

    சட்டப் பிரிவு 4(1) –ன் படி உலர் கழிப்பறைகளை கணக்கெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரி பட்டியல் இட இரண்டு மாதங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது, உலர் கழிப்பறை என்பதற்கு விளக்கமும் தரப்பட்டுள்ளது. அதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மக்கள் பொது இடங்களிலும் ஊரின் ஒதுக்குப்புறங்களிலும்தான் மலம் கழிக்கும் நிலையில், வெரும் உலர் கழிப்பறைகளை மட்டுமே சட்டத்தில் குறிப்பிட்டுவிட்டு, திறந்தவெளியில் மலம் கழிக்கும் இடங்களை சேர்க்காமல் விடுபட்டுள்ளது. உலர் கழிப்பறை என்று கூறும் சட்டம் ஏன் திறந்தவெளி கழிப்பிடங்களை கணக்கில் கொள்ளவில்லை.

    நகப்ர்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள உலர் கழிவறைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறது அரசு, இன்றும் பல நகரங்களில் உள்ள வீடுகளின் கழிப்பறைகள் தெருச்சாக்கடையுடனும், பாதாளச் சாக்கடையுடனும் இணைக்கப்பட்டுள்ளதை நம்மால் காணமுடியும். இப்படி மனிதக்கழிவுகளை தனியாக சேமிக்க தொட்டி அமைக்காமல் சாக்கடை கால்வாயில் கலக்கும்படி அமைக்கப்படுவதால் சாக்கடை முழுவதும் மனித மலம் அதை சுத்தம் செய்ய இறங்க வேண்டியதென்னவோ சாதியால் அடக்கப்பட்ட மனிதன். வீட்டு கழிப்பறை என்ற போர்வையில் பயன்படுத்தப்படும் இந்த உலர் கழிப்பறையைத் தடுக்க நகராட்சிகளும் மாநகராட்சிகளும் என்ன திட்டம் வைத்துள்ளன, இதை செயல்படுத்த அரசு என்ன மாதிரியான திட்டத்தை கையில் எடுக்கப் போகிறது.

    2013 சட்டத்தில் மனிதக்கழிவு அகற்றுபவர் என்பதற்கு ஓர் விளக்கவுரை தந்துள்ளது, அதில் எந்த விதமான உபகரணங்களும் இன்றி மனிதக் கழிவை சுத்தம் செய்கிறவன் தான் உண்மையான மனிதக்கழிவு அகற்றும் தொழிலாளி என்று, இதுதான் இந்த சட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஓட்டை, காரணம் ஆரம்பக்காலத்தில் இருந்தே சில உபகரணங்களை கையாண்டு வந்துள்ளனர் ஆனால் தற்போது அதனுடன் கையுறை, முகவுறை, மற்றும் சிலவற்றை தந்துவிட்டு அவர்களை மனிதக்கழிவு அகற்றும் தொழிலாளர்கள் இல்லை என்று கூறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. கையுறை மற்றும் முகவுறை அணிவதால் மட்டும் அவர்களின் இழிநிலை மாற்றம் பெற்றுவிடுமா? அல்லது முழுமனதுடன் கழிவை அகற்ற முன்வருவான் என்று எவ்வாறு எண்ண முடியும்?

    மனித கழிவு அகற்றும் தொழிலாளர் தடை மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வுச் சட்டம் 2013 சரியாக செயல்படுத்தப்படுமா பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பலன் கிட்டுமா என்று பாதிக்கப்பட்ட மக்கள் ஒருபுறமும் சமூக ஆர்வலர்கள் மறுபுறமும் எண்ணும் வேளையில், முழுக்க முழுக்க அரசு இதற்கான செயல் வடிவத்தைத் தான் நல்குமே தவிர சட்டம் முறையாக நடைமுறைப்படுத்துவது அதிகாரிகளின் கையிலும், மக்கள் பிரதிநிதிகளின் கையிலும் கடைசியாக மக்களின் கையிலும் தான் உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் எவ்வாறு மக்களை நல்வழிபடுத்தியும் சமூக சுகாதாரத்தையு எப்படி அதற்கான மாற்றத்தை மக்களிடமிருந்தே உருவாக்க வேண்டும். இதற்கு உதாரணமாக, கர்நாடக மாநிலத்தில், பெக்கினாகேரி என்ற கிராமத்தினர், பொது இடம் ஒன்றில் மலம் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனராம். அவ்வாறு செய்ய வேண்டாம் என கிராம கவுன்சில் கேட்டுக் கொண்டும், அதற்கு யாரும் செவிசாய்க்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த கிராம கவுன்சில் உறுப்பினர்கள், ஒவ்வொரு நாளும், கிராமத்தின் மலம் கழிக்கும் அந்த பொது இடத்தில், அதிகாலையிலேயே போய் நின்று கொள்வார்களாம். மலம் கழிக்க வரும் ஒவ்வொருவரையும் பார்த்து, குட் மார்னிங் சொல்வார்களாம். தர்ம சங்கடத்திற்கு ஆளாகும் மக்கள், மலம் கழிக்காமல் வீட்டிற்கு சென்று விடுவார்காளாம். இதனால் கிராம பொது இடத்தில் மலம் கழிப்பது படிப்படியாக நின்று, தற்போது கிராமமே மாறிவிட்டதாம். இப்போது, கிராம கவுன்சில் உறுப்பினர்கள் குட் மார்னிங்கிற்கு குட்பை சொல்லிவிட்டார்கள் அத்தோடு மக்கள் பனியை செய்த திருப்தியும் ஏற்பட்டுவிட்டதாம் (தினமலர், குட் மார்னிங் மூலம் மலம் கழிப்புக்கு குட்பை, நவம்பர் 21, 2014). ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் பிரதிநிதிகள் இதே போன்று செய்ய வேண்டியதில்லை, மாறாக தங்கள் பகுதியில் செயல்படாமல் உள்ள பொது கழிப்பறைகளை சரி செய்து அதை முறைப்படுத்த வேண்டும், பொது இடத்தை அசுத்தம் செய்யாமல் முழுச் சுகாதாரம் உள்ள பகுதியாக மாற்ற மக்கள் பிரதிநிதிகள் தங்களால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு தனிநபர் மற்றும் பொது சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வை தர முன்வரவேண்டும் அத்தோடு அதற்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்.

    மக்களும் தங்களுக்கான சுகாதாரத்தை எப்படிப் பேணுவது அவசியமோ அதுபோல சமூக சுகாதாரத்திலும் அக்கறை உள்ளவராக மாற்ற வேண்டும். முடிந்தவரையில் கழிவறையை வீடுகளில் கட்டியும் பொது கழிப்பறைகளை பயன் படுத்தியும் வாழ்வது மிகவும் முக்கியம் என்பதை உணர வேண்டும். எதற்கெடுத்தாலும் அரசையும் அரசு அதிகாரிகளையும் குறை கூறுவதை விடுத்து தங்களுக்கான மாற்று சிந்தனையை தாங்களே உருவாக்க முன்வரவேண்டும். அரசுதான் கழிவறையை கட்டித்தர வேண்டும் என்று எண்ணாமல் தாங்களே முன்வந்து அரசுதிட்டத்தின் உதவியுடன் தங்கள் சுகாதாரத்தையும் சமூக சுகாதாரத்தையும் காக்கும் பொருட்டு கழிவறைகளை வீடுதோரும் கட்டி பயன்படுத்த வேண்டும். மனித நேயம் மற்றும் மனித உரிமை காக்கப்பட வேண்டும் என்று வாய்வார்த்தையாகக் கூறிவிட்டால் மட்டும் போதாது மாறாக அதை உணர்வுப்பூர்வமாக உணர வேண்டும். திறந்தவெளியில் மலம் கழித்துவிட்டுச் செல்பவன் ஒருவன் அதேமலத்தை கைகளால் அள்ளி சுத்தம் செய்வது என்பதுதான் நம் சமூகத்தில் மனித நேயமா? மனித மாண்பா? அல்லது மனித உரிமையா? தனி மனித உரிமை கூட மற்றவரின் உரிமையை பறிப்பதற்கு உரிமையில்லாத போது ஒருவன் செய்த தவறுக்காக மற்றொருவனை சாதியின் பெயரால் தண்டிப்பதா என்ற எண்ணம் மனதில் உருவாகியுள்ளாது. அப்படி என்றால் நமது சட்டப் புத்தகத்தில் முகப்புரையில் கூறப்பட்டுள்ள சுதந்திரம், தனிமனித சுதந்திரம், சமூக நீதி மற்றும் சகோதரத்துவம் என்பது எல்லாம் வெறும் எழுதப்பட்ட வார்த்தைகள் மட்டும் தானா என்றெண்ணத் தோன்றுகிறது. திறந்தவெளியில் மலம் கழிப்பது மற்றும் மனித கழிவு அகற்ற தொழிலாளர்களை பணிப்பது என்பது இரண்டுமே சட்டத்திற்கு புறம்பானது. இதைத்தடுக்க கடுமையான சட்டங்கள் இருந்தாலும் சமூக கட்டமைப்பை மாற்ற சட்டத்தினால் முடிவதில்லை, சமூக கட்டமைப்பை மாற்ற வேண்டுமானால் மக்களின் மனங்கள் மாறவேண்டும். இது மட்டுமே சாத்தியம், சமூகம் முன்னேற்றப் பாதையில் பயணிக்க வைக்க……………

    Share
  • மாற்றம் மக்களிடமே தேவை

    ஞா.ஜார்ஜ்
    ஆராய்ச்சியாளர்
    அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகத் துறை
    காந்திகிராம பல்கழைக் கழகம்
    காந்திகிராமம்
    திண்டுக்கல்

    images (1)

    இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் பொருளாதாரம் கலாச்சாரம் மற்றும் அறிவியல் துறையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. உலக அரங்கில் இந்தியா ஓர் தனிப்பெரும் நாடாகவும் மக்கள் ஆட்சிக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. பல சாதனைகள் ஒருபுறம் இருக்க மக்கள் சாதி மதம் இனம் மற்றும் மொழி ஆகிய காரணங்களால் வேறுபட்டும் இருக்கின்றனர். பலதரப்பட்ட மக்களைக் கொண்டு உருவாகும் அரசு மக்களை முதன்மைப்படுத்துவதாகவும் மக்களை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச்செல்வதாகவும் இருப்பது அவசியம். மக்களால் உருவாக்கப்படும் அரசுக்கும் அதன் செயல்பாட்டிற்கும் எப்படி மக்கள் பங்கேற்பை அளிக்கின்றனர் என்பதுதான் நாம் இன்று சிந்திக்க வேண்டியது. அதுவல்லாது வெறும் வாக்கை அளித்துவிட்டதன் மூலம் தங்கள் ஜனநாயக கடமை முடிந்து விட்டது என்று எண்ணாமல் அரசுக்கும் அதன் செயல்பாட்டிற்கும் ஆதரவாக தங்களுடைய பங்கேற்பை அளிப்பதுதான் நமது முதற்கடமை. இது அனைத்துதரப்பு மக்களுக்கும் பொருந்தும். வெறுமனே அரசு சரியில்லை அரசு செயல்பாடு சாமானியமக்களை சென்றடையவில்லை அரசு அதிகாரிகள் சரியில்லை அரசியல்வாதிகள் சுயநலவாதிகள் என்று குறைகூறுவது முட்டாள் தனமான ஒன்று. அரசு அரசியல்வாதி மற்றும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளிலும் திட்டமிடுதலிலும் சுயநலம் கலந்து இருப்பதாக கூறும் மக்கள் தங்களின் பங்கேற்பும் செயல்பாடுகளும் எப்படி சமூக முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கிறது என்பதை சற்றே சிந்தித்துப்பார்க்க வேண்டும். சமூக வளர்ச்சிக்கும் அதன் முன்னேற்றத்திற்கும் மக்களின் பங்களிப்பு என்பது அவசியமான ஒன்று. ஆனால் இன்றைய சூழலில் மக்களின் பங்களிப்பு மற்றும் பங்கேற்பு என்பது மிகவும் குறைவாக காணப்படுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதற்கு என்னுடைய இரயில் பயணத்தில் நான் கண்ட சில உதாரணங்கள் நான் மதுரையில் இருந்து இராமேசுவரம் வரையில் பயணித்த போது என்னுடன் பயணித்த சில நூறு பயணிகளை நான் நன்கு கவனித்தேன். அவர்களில் அதிகமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இரயில்வேத் துறை சார்பில் ஓர் அறிவிப்பு பலகை இருந்தது அதில் இரயில்வண்டி நிற்கும் போது கழிவறை பயன்படுத்துவதை தவிர்கவும் என்று. ஆனால் அதிகப்படியான மக்கள் இரயில் வண்டி நிறுத்தத்தில் கழிவறையைப் பயன்படுத்துவதைக் காணமுடிந்தது. இப்படி படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரையிலும் அனைத்துத் தரப்புமக்களும் இரயில் வண்டி நிறுத்தத்தில் கழிவறையைப் பயன்படுத்துவது என்பது சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கரையின்மையை காட்டுவதாக இருப்பதுடன் அரசு செயல்பாட்டில் குறுக்கிடுவதாகவும் உள்ளது. சமூக அக்கரையின்மையின் காரணமாக இவர்கள் செய்யும் செயல் தாழ்த்தப்பட்ட சமூகத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அடிமை வேலை செய்யப் பணிக்கிறது. அடிமைத் தனமான வேலையை தலித் மக்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மக்கள் தங்களின் அவசரத்திற்காகச் செய்யும் இந்த இழிவான செயலால் வரும் விளைவை மலத்தை அகற்றுபவர் என்ற முறையில் தலித்துக்கள் இந்த கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான சட்டத்திருத்தம் 2013-ன் படி மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்கள் வேறுதொழிலில் ஈடுபட கடனுதவி அவர்களுடைய குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது முதலியன இந்தச் சட்டத்திருத்தத்தின் பிரதான நோக்கமாக உள்ளது. அத்துடன் மனிதக் கழிவகற்றும் தொழிலாளர்களை பணி அமர்த்துவதும் அவர்களை மனிதக் கழிவகற்ற பணிப்பதும் சட்டப்படி குற்றம் அதைமீறினால் அபதாரம் மற்றும் சிறை தண்டனை என்பன இச்சட்டத்தின் சிறப்பு. ஆனால் இன்றைக்கும் மனிதக்கழிவு அகற்றும் பணியாளர்கள் அனைவரும் தலித்துக்களாக இருந்து வருகின்றனர். இந்தப் பணி பலரையும் முகம் சுழிக்கவைக்கக்கூடிய மற்றும் அருவறுக்கத்தக்க செயலாக இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் மக்களிடம் இருக்கும் சுயநலம் தான் காரணமே தவிர அரசு இதற்கு பொறுப்பு என்று கூறுவது தவறு. மக்களுக்கான அரசு மக்களின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையான சட்டங்களை இயற்றுவது திட்டங்கள் தீட்டுவது ஓர் அரசின் கடமை. அதுபோல் மக்களும் அரசின் திட்டங்களுக்கும் சட்டங்களுக்கும் அதன் செயல்பாட்டிற்கு உறுதுணையாகவும் அதில் பங்கேற்பையும் அளிப்பது மக்களின் கடமை. ஆதலால் தான் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை களைய அரசு கொண்டுவரும் திட்டங்கள் சரியாகவே இருந்தாலும் அதை நடைமுறையில் மக்கள் ஏற்காதவரை அது இந்திய அரசியல் அமைப்பு புத்தகத்தில் எழுதப்பட்ட திட்டமாகவே தான் இருக்குமே தவிர நடைமுறையில் அதன் செயல்பாடுகள் மக்கள் மத்தியிலும்சரி சமூகத்திலும்சரி எந்த வளர்ச்சியையும் மாற்றத்தையும் கொண்டுவர இயலாது. எனவே பொது இடங்களில் மலம் கழிப்பது இரயில் நிலையங்களில் நிற்கும் இரயில் வண்டிகளில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்துவது ஆகிய சமூகச் சீர்கேடுகளைக் குறைப்பதும் அதைச் சமூகத்தில் முற்றிலும் அகற்றுவதும் என்பது அரசு மற்றும் மக்களின் ஒருமித்த செயல்பாட்டில்தான் உள்ளது. இதற்கான முயற்சியாக அரசு தனிமனித சுகாதாரம் எவ்வளவு முக்கியமோ அது போல சமூகத்தின் சுகாதாரமும் முக்கியம் என்பதை உணர்த்தும் விதமாக சமூக விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். இது போன்ற சமூக விழிப்புணர்வின் மூலம் மக்களின் மனங்களில் ஏற்படும் உள்ளார்ந்த மாற்றம்தான் ஒரு மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்க வழிகோலிடும்.

    மற்றொரு நிகழ்வு என்னவென்றால் இராமேசுவரம் என்பது இந்துக்களின் புண்ணியத் தலங்களில் ஒன்று. அதுமட்டுமல்லாமல் பிற மதத்தவரும் வந்து செல்லும் சுற்றுலாத்தலமாகவும் திகழ்கிறது. இப்படிப்பட்ட இராமேசுவரத்தில் இந்துக்களின் கலாச்சாரப்படி இறந்தவர்களுக்கு அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கர்மகாரியங்கள் நடத்துவது பின்பு கடலில் புனித நீராடுவதும் வழக்கம், அத்துடன் நின்றுவிடாமல் அவர்கள் உடுத்திவந்த உடைகளை கடலில்விடுவதும் வழக்கம். ஆனால் இந்தச் செயலால் கடலில் துணிகள் மிதப்பதுடன் புனிதநீர் என்று கருதப்படும் கடல்நீர் மாசுபடுகிறது. கடல் நீர் மாசுபடுவதால் மீன் வளத்தைகுறைவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இச்செயலால் கடற்கரை ஓரத்தில் மீன் உற்பத்தி குறைகிறது. இதனால் கரைஓர மீன்பிடிதொழில் செய்யும் மீனவர்கள் பாதிப்படைகின்றனர். கரையில் இருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவுவரை துணிகள் கடலுக்கடியில் படிந்தும் மிதந்தும் காணப்படுகின்றது. கோயில் நிர்வாகம் அறிவிப்பு பலகைகள் வைத்தும் துணிகளை போடுவதற்கான தொட்டிகள் அமைத்து இருந்தாலும் மக்கள் அதை பின்பற்றுவது இல்லை. இதைப்பற்றி சில சமூக ஆர்வலர்கள் மற்றும் மீனவர்களிடம் கேட்டபோது என்னதான் அறிவிப்பு பலகை மற்றும் துணியைப் போடுவதற்கு தொட்டிகள் அமைத்துத்தந்தாலும் வரும் பக்தர்கள் துணிகளை விடுவதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறுகின்றனர். இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் செயலற்ற நிலையில் இருப்பதை நம்மால் காணமுடிகிறது. உள்ளாட்சி அமைப்பும்சரி கோயில் நிர்வாகமும் சரி வெறும் அறிவிப்புப் பலகையுடன் நில்லாமல் அதற்கான விழிப்புணர்வை கொடுக்கவும் முன்வரவில்லை அதற்கான செயல்பாட்டை எடுத்ததாகவும் தெரியவில்லை. இது போன்ற நிகழ்வு உள்ளாட்சி அமைப்புகளின் சமூக அக்கறையின்மையை காட்டுவதாக உள்ளது. சுற்றுலாத் துறையும் அதன் துறைசார்ந்த செயல்பாட்டில் ஒரு குறைபாட்டுடன் தான் செயல்படுகிறது. இது போன்று அரசுத்துறைகளில் உள்ள குறைபாடுகளைப் பற்றி மக்கள் பேசுவதை விடுத்து முதலில் தங்களிடம் உள்ள குறைபாடுகளைக் களைய முயற்சிக்க வேண்டும். இதற்கானத் தீர்வாக கலாச்சாரம் என்ற பெயரில் பாவங்களில் இருந்து தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு பொதுஇடம் அதிலும் புண்ணியத்தலத்தை அசுத்தம் செய்வதை ஒவ்வொரு மக்களும் சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்து அவர்களுக்குள்ளாக வரும் மாற்றம் தான் இப்போது தேவை.

    சமூக வளர்ச்சியையும் அதன் முன்னேற்றத்தையும் பாதிக்கும் பிரச்சனைகளான சாதியப் பாகுபாடு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை சமூகத்தில் இருந்து களைய, படித்தவர் படிக்காதவர் மற்றும் பணக்காரன் ஏழை என்ற பாகுபாடுகள் இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்குள்ளும் வரும் ஓர் சீரிய மாற்றம் தான் சமூகப் பிரச்சனைகளைக் குறைத்து ஒரு மேம்பட்ட சமூகம் உருவாக வழிவகுக்குமே தவிர சட்டங்களைக் கடுமையாக்குவது புதிய திட்டங்கள் தீட்டுவதினால் ஒருமாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஆகவே முதலில் மக்கள் மனங்களில் தான் மாற்றம் தேவை என்பது தான் என் கருத்தாக முன்வைக்க விரும்புகிறேன்.

    Share
  • ஐந்திணை எழுபது – அகப்பொருள் மாண்பும் அமைப்பு முறையும்

    –முனைவர் க. துரையரசன்.

     

    தோற்றுவாய்:
    கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியின் தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுக் கொடுத்த 41 நூல்களுள் ஒன்று ஐந்திணை எழுபது. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். நீதி நூல்களின் தொகுப்பாகப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் கருதப்பட்டாலும் அதில் உள்ளவை அனைத்தும் அறநூல்களில்லை. அத்தொகுப்பில் இடம் பெற்ற நூல்களில் 11 நூல்கள் அற இலக்கிய வகையைச் சார்ந்தவை; 6 நூல்கள் அக இலக்கிய வகையைச் சார்ந்தவை ; 1 நூல் புற இலக்கிய வகையைச் சார்ந்தது. ஐந்திணை எழுபது அக இலக்கிய நூலாகும்.

    நூலும் ஆசிரியரும்:
    இந்நூல் எழுபது அகப்பாடல்களைக் கொண்டுள்ளது. இது திணை தோறும் பதினான்கு பாடல்கள் வீதம் ஐந்து திணைகளுக்கும் எழுபது பாடல்களைக் கொண்டுள்ளமையால் ஐந்திணை எழுபது என்று அழைக்கப்படுகிறது. ஆயினும் 25, 26, 69, 70 ஆகிய நான்கு பாடல்கள் கிடைக்கவில்லை. எஞ்சிய 66 பாடல்களே கிடைக்கப்பெற்றுள்ளன. கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இவற்றுள் 27 செய்யுள்கள் நேரிசை வெண்பாக்களாகவும், 40 செய்யுள்கள் இன்னிசை வெண்பாக்களாகவும் அமைந்துள்ளன. இந்நூலின் தொடக்கத்தில் விநாயகரைப் பற்றி கடவுள் வணக்கப் பாடல் ஒன்று சில பிரதிகளில் காணப்படுகிறது. இக்கடவுள் வாழ்த்து நூலுக்குப் புறம்பாக இருப்பதாலும் இப்பாடலுக்கு பழைய உரைகாரர் உரை எழுதாததாலும் இது நூலாசிரியரான மூவாதியாரால் இயற்றப்பட்டு இருக்காது என அறிஞர்களால் கருதப்படுகிறது.

    இந்நூலின் ஆசிரியர் மூவாதியார்; இவர் சமணர் என்பர். இவரைப் பற்றிய வேறு செய்திகள் கிடைக்கவில்லை. நூற்பெயர் ஒற்றுமையாலும், வேறுசில குறிப்புகளாலும் இவர் ஐந்திணை ஐம்பதை அடியொற்றியுள்ளனரோ என்று தோன்றுகிறது. இருநூல்களிலும் சில அடிகளும் கருத்துகளும் ஒன்றுபோலவே அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக ஐந்திணை ஐம்பதில் உள்ள 38 ஆம் பாட்டில், “கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி” என்னும் வரிகள் அப்படியே, ஐந்திணை எழுபதில் உள்ள 36ஆம் பாட்டில் “கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி” என இடம்பெற்று உள்ளன.

    திணை – அமைப்பு முறை:

    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே
    (தொல். அகத். நூ. 5)

    நடுவண் ஐந்திணை நடுவனது ஒழியப்
    படுதிரை வையம் பாத்தியப் பண்பே
    (தொல். அகத். நூ. 2)

    என்று தொல்காப்பியர் ஐந்திணைகளை முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்று வரிசைபடக் கூறுவது முன்னோர் வழக்கு என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஆயினும் இவ்வரிசை முறை பிற்காலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல், பாலை என்றும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்,பாலை என்றும் மாறி அமைந்திருப்பதைக் காண முடிகிறது.

    இந்நூலிலும் திணை வரிசைமுறை தொல்காப்பிய வரிசையிலிருந்து மாறுபட்டுக் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்று அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. அன்பு இன்பத்திற்கு முதன்மையானதாகும். இதனை, அழகும் இனிமையும் தோன்றக் கூறுவது இந்நூல். இன்பத்தின் தொடக்கமாகிய புணர்ச்சியினையும் அதற்குரிய நிமித்தங்களையும் குறிஞ்சி எனக்கூறி, அப்புணர்ச்சியால் பெற்ற அன்பினை நெகிழவிடாது அகத்திருத்தி அமைதலாகிய முல்லையினை அடுத்துரைத்து அவ்வன்பின் நிலைப்பேற்றினைக் கண்டறிவதற்குப் பிரிவாகிய பாலையினைப் பின்வைத்து, அவற்றின் பயனாகிய ஊடலும் கூடலுமென்ற மருதத்தினை விளக்கி, இவைப் பேரின்பத்தினை அடைவதற்குரிய பெருவழியே அன்றிப் பேறாகா எனத் தெளிய இரங்கலாகிய நெய்தலினை இறுதியிற் கூறிய எழில் போற்றத்தக்கதாகும் என்று இந்நூலுக்கு விளக்க உரை எழுதிய அ. நடராசபிள்ளை இந்நூலின் முகவுரையில் (பக்கம் 5, கழக வெளியீடு, 2007) குறிப்பிட்டுள்ளார்.

    நுவலும் பொருள்:
    இந்நூல், மக்களின் இன்பத்திற்கு உயிர் நிலையாகிய அன்பினை எழிலும் இனிமையும் தோன்ற எடுத்துரைக்கிறது. இதன்கண் அகப்பொருளின் முப்பொருள்களான முதற்பொருள், உரிப்பொருள், கருப்பொருள் நன்கு அமைந்துள்ளன. உள்ளுறை உவமங்கள் மற்றும் இலக்கியச்சுவை நிறைந்தவையாகப் பாடல்கள் அமைந்துள்ளன. பண்டைத் தமிழகத்தின் பழக்கவழக்கங்கள் பலவற்றை இந்நூலின் வழி அறியமுடிகிறது.

    • குறிஞ்சி: இத்திணையில் தலைவி தலைவனை இயற்பட மொழியும் திறன் சிறப்பாக அமைந்துள்ளது. அதற்கேற்ப இறைச்சிப் பொருளைக் கையாண்டுள்ளார். குறிஞ்சி நிலப் பண்புகள் நன்கு விவரிக்கப்பட்டுள்ளன.

    • முல்லை: இத்திணைப் பாக்கள் பதினான்கு அமைந்திருத்தல் வேண்டும். இரண்டு பாடல்கள் கிடைக்காமையால் பன்னிரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளன. இவை அனைத்தும் பருவம் கண்டு அழிந்த தலைவியின் கூற்றாகவே அமைந்துள்ளன. கார்கால இயல்பு, மாலை நேரக் காட்சி வருணனை ஆகியவை பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளன.

    • பாலை: இதற்கெனத் தனிநிலம் இல்லை என்பது இந்நூலின் வழியும் புலனாகிறது. முப்பத்தாறாவது பாடலில் முல்லையையும் பாலையையும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். போரில் இறந்துபட்ட வீரர்களுக்குக் கல் நடுதல், அக்கல்லில் அவ்வீரர் பற்றிய சிறப்பானச் செய்திகளை எழுதி வைத்தல், ஆந்தை ஒலி, பல்லி ஒலி, இடக்கண் துடிப்பு, தும்மல் முதலியவற்றால் நிமித்தம் அறிதல் போன்ற செய்திகள் இத்திணைப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

    • மருதம்: இத்திணையில் தலைவன் புதல்வனைப் பெற்றெடுத்தல், புதல்வற்குப் பெயரிடுதல், பரத்தையர் தலைவனை மாலையால் பிணைத்துச் செல்லுதல், எருமையினைக் கழுத்தில் தொண்டு கட்டையிடல், உறுதிமொழிகளை எழுதி வைத்துக் கொள்ளுதல், பாணற்குத் தலைமகன் வாயில் மறுத்தல், தோழி தலைமகனத் தன் பேச்சாற்றலால் இணங்குவிக்கும் தன்மை, தோழி தலைமகளிடத்துக் கொண்டுள்ள பேரன்பு ஆகியவை நன்கு அமைக்கப்பட்டுள்ளன.

    • நெய்தல்: முல்லைத் திணையைப் போலவே இத்திணைப் பாக்களும் பதினான்கு அமைந்திருத்தல் வேண்டும். இரண்டு பாடல்கள் கிடைக்காமையால் பன்னிரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளன. திணையில் தலைமகள் தலைமகனை இயற்பட மொழியும் திறன், தோழி அன்றிலோடு கூறியாறும் அமைதி, தம் காதலுக்குக் குறுகினைச் சான்றாகக் கொள்ளுமாறு கூறுதல் முதலிய செய்திகள் மனம் கவர்கின்ற வகையில் அமைந்துள்ளன.

    துறைச் சொற்றொடர் விளக்கம்:
    இந்நூல், அகத்திணைக் கூறுகளான முப்பொருள்களையும் கொண்டிலங்குகின்றது. இதன் பாடல்களில் இடம் பெற்றுள்ள அகத்துறைச் சொற்றொடர்களை விளங்கிக் கொண்டால்தான் பாடல்களின் பொருளை நன்கு உணர முடியும். ஆகையால் அவை பற்றிய விளக்கத்தைக் கீழே காணலாம்.

    • வரைவு கடாதல் – திருமணம் புரிந்துகொள்ளும்படி தூண்டுதல்.
    • வரைவு தலைவரல் – தலைமகனைச் சார்ந்தார் திருமணம் பேசி வரல்.
    • வரைவு மலிதல் – திருமணப் பேச்சினை மேற்கொண்டு வரல்.
    • தலைமகன் சிறைப்புறத்தானாக – பாங்கியிற் கூட்டத்தினின்றும் பிரிந்த தலைமகன் தினைப்புனஞ் செல்லுந் தோழியினையும், தலைவியையும் சோலையின் வேலிப்புறமாக நின்று நோக்கினனாக.
    • இயற்பழித்தல் – தலைவனின் அன்பாகிய இயல்பினைக் குறைத்துக் கூறல்.
    • இயற்பட மொழிதல் – அன்பாகிய இயல்பு பொருந்துமாறு கூறல்.
    • மெலிவில் நயம் – துன்பங் கலவாத இன்பம்
    • புணர்ந்து நீங்கல் – பாங்கியிற் கூட்டத்தால் தலைவியைக் கூடிப் பிரிதல்.
    • பகற் குறி – தோழியின் உதவியால் பகல் நேரத்தில் தலைமகனைத் தலைமகள் கண்டு கூடுமிடம். இது தினைப்புனத்தின் அருகிலுள்ள சோலைக்கண்ணதாகும்.
    • படைத்து மொழி கிளவி – புதிதாக ஒன்றை அமைத்துக் கூறுதல்.
    • மன்றத்து உறுகல் – பலர் கூடும் வெளியில் பலரும் அமர்தற்குரியதாகப் பொருந்திய கற்கள்.
    • வெறியாட்டெடுத்தல் – வேலற்குப் பூசையிடல்.
    • அறத்தொடு நிற்றல் – உண்மையினை எடுத்துச் சொல்லித் தவறாகக் காரியங்களை நிகழவொட்டாது நடத்தல். பெரிதும் தலைமகன் மீது தலைமகள் கொண்ட அன்பினைத் தோழி செவிலியிடமும், செவிலி நற்றாயிடமும், நற்றாய் தந்தை தமையனிடமும் கூறுதல்.
    • செலவு – பொருள்தேடும் பொருட்டுப் பிரிந்து செல்லல்.
    • வரைவிடைப் பிரிவு – தலைமகளை மணத்தல் வேண்டிப் பொருள் தேடும் பொருட்டுத் தலைமகன் மேற்கொண்ட பிரிவு.

    (காண்க: மூவாதியார் இயற்றிய ஐந்திணை யெழுபது, மூலமும் உரையும், அ. நடராச பிள்ளை, பக்கம் 65, கழக வெளியீடு, 2007)

    திணை கண்டறிதல்:
    பாடல்களில் பயின்று வரும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றைக் கொண்டு திணைகளைக் கண்டறியலாம். திணைகளைக் கண்டறியும் முறை பற்றி தொல்காப்பியர்,

    நிலன் ஒருங்கு மயங்குதல் இல்லென மொழிப (தொல். அகத். நூ. 14)
    உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே (தொல். அகத். நூ. 15)

    என்று குறிப்பிடுகிறார். தொல்காப்பியரின் கருத்தைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கூறலாம்…

    • பாடலில் பயின்று வரும் கருப்பொருள்களை வைத்து திணையை உறுதிப்படுத்த முடியாது.

    • நிலம், பொழுது ஆகிய இரண்டு முதற் பொருள்களில் காலத்தை வைத்துத் திணையை உறுதிப்படுத்த முடியாது; ஆனால் நிலத்தை வைத்து உறுதிப்படுத்தலாம்.

    • பாடலில் பயின்று வரும் உரிப்பொருளைக் கொண்டு திணையை உறுதிப்படுத்தலாம்

    எனவே, உரிப்பொருளையும் நிலத்தையும் அடிப்படையாகக் கொண்டு பாடல்களின் திணையை உறுதிப்பட வரையறை செய்யலாம்.

    குறிஞ்சித் திணைப் பாடல்கள்:

    “அவரை பொருந்திய பைங்குரல் ஏனல்
    கவரி மடமா கதூஉம் படர்சாரல்
    கானக நாட! மறவல் வயங்கிழைக்கு
    யான்இடை நின்ற புணை”
    (ஐந்திணை எழுபது, பா. 1)

    இப்பாடலில் கவரிமான், தினை ஆகிய இரண்டு கருப்பொருள்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் கவரிமான் முல்லைத் திணைக்குரியது. ஏனல் என்னும் தினை குறிஞ்சித் திணைக்குரியது. இவற்றின் அடிப்படையில் இப்பாடலின் திணையை வரையறுக்க முயன்றால் இப்பாடல் குறிஞ்சித் திணை என்றும் முல்லைத் திணை என்றும் மயக்கம் ஏற்படும்.

    ஆனால் இப்பாடலில் பயின்று வந்துள்ள சாரல் கானக நாட என்பது மலை நாடனைக் குறிக்கிறது. மலை என்பது முதற்பொருளில் நிலத்தின் பாற்படும். தொல்காப்பியரும் நிலத்தைக் கொண்டு திணையை வரையறை செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளமையால் இப்பாடல் குறிஞ்சித் திணைப் பாடல் என்று உறுதிப் படுத்தலாம்.

    மேலும் இப்பாடலில் இடம் பெற்றுள்ள ‘யான் இடை நின்ற புணை’ என்ற தொடருக்கு உரையாசிரியர் தோழி தெய்வம் போன்று நின்று புணர்ச்சியை நிகழ்வித்தாள் என்று குறிப்பிடுகிறார். எனவே இப்பாடலில் குறிஞ்சித் திணையின் உரிப்பொருளான புணர்தல் இடம் பெற்றுள்ளமையால் இதன் திணையைக் குறிஞ்சி என்று உறுதிப் படுத்தலாம்.

    “பிரைசம் கொளவீழ்ந்த தீம் தேன்இறாஅல்
    மரையான் குழவி குளம்பின் துகைக்கும்
    வரையக நாட! வரையாய் வரின் எம்
    நிரைதொடி வாழ்தல் இலள்”
    (ஐந்திணை எழுபது, பா. 9)

    மேற்கண்ட பாடலிலும் தேன், மான் ஆகிய கருப்பொருள்கள் இடம் பெற்றுள்ளன. இதனடிப்படையில் திணை கூற முற்பட்டால் குறிஞ்சித் திணை, முல்லைத்திணை என்று மயக்கம் ஏற்படும். ஆனால் மலை என்பதைக் கொண்டு திணை வரையறை செய்தால் மயக்கமில்லாமல் குறிஞ்சித்திணைப் பாடல் என்று அரிதியிட்டுக் கூறலாம்.

    “வரையாய் வரின் எம் நிரைதொடி வாழ்தல் இலள்” என்பது நீ தலைவியை வரையாது களவை நீட்டிப்பாயாயின் தலைவி உயிர் வாழாள் என்று தோழி கூறுவதால் இது புணர்தலின் பாற்படும். எனவே இப்பாடல் குறிஞ்சித் திணையாகும்.

    முல்லைத் திணைப் பாடல்கள்:

    “செங்கதிர்ச் செல்வன் சினம்கரந்த போழ்தினாற்
    பைங்கொடி முல்லை மணம்கமழ – வண்டுஇமிரக்
    காரோடு அலமரும் கார்வானம் காண்தொறும்
    நீரோடு அலமரும் கண்”
    (ஐந்திணை எழுபது, பா. 15)

    இப்பாடலில் “சினம்கரந்த போழ்து” என்பது மாலைப் பொழுது ஆகும். முல்லைத் திணைக்குரிய கார் காலம் இடம் பெற்றுள்ளது. இவை இரண்டும் முதற் பொருளாகும். முல்லை என்பது கருப்பொருளாகும். எனவே இப்பாடல் முல்லைத்திணைப் பாடல் என்று உறுதிப்படுத்தலாம்.

    “தண்நறுங் கோடல் துடுப்புஎடுப்பக் கார்எதிரி
    விண்உயர் வானத்து உரும்உரற்றத் – திண்ணிதின்
    புல்லுநர் இல்லார் நடுங்கச் சிறுமாலை
    கொல்லுநர் போல வரும்.”
    (ஐந்திணை எழுபது, பா. 17)

    இப்பாடலில் முதற்பொருளான கார், மாலை ஆகியவை இடம் பெற்றுள்ளன. ‘புல்லுநர் இல்லார் நடுங்கச் சிறுமாலை கொல்லுநர் போல வரும்’ என்பதில் உரிப்பொருளான இருத்தல் பயின்று வந்துள்ளது. எனவே இப்பாடல் முல்லைத் திணைப் பாடலாகும்.

    பாலைத் திணைப் பாடல்கள்:

    “வில்உழுது உண்பார் கடுகி அதர்அலைக்கும்
    கல்சூழ் பதுக்கைஆர் அத்தத்து இறப்பார்கொல்
    மெல்இயல் கண்ணோட்டம் இன்றிப் பொருட்குஇவர்ந்து
    நில்லாத உள்ளத் தவர்”
    (ஐந்திணை எழுபது, பா. 30)

    இப்பாடலில் “வில் உழுது உண்பார்” என்பது ஆறலைக் கள்வரைக் குறிக்கும். ‘கல்சூழ் பதுக்கை ஆர் அத்தம்’ என்பது பாலை நில சுரத்தைக் குறிக்கும். இங்ஙனம் இப்பாடலில் பாலைத் திணைக்குரிய கருப்பொருள்களே பயின்று வந்துள்ளன. வேறு திணைகளுக்குரியவை இப்பாடலில் இடம் பெறவில்லை. எனவே இப்பாடல் பாலைத் திணைப் பாடல் என்று வரையறை செய்யலாம்.

    “பீர்இவர் கூரை மறுமனைச் சேர்ந்து அல்கிக்
    கூர்உகிர் எண்கின் இருங்கிளை கண்படுக்கும்
    நீர்இல் அருஞ்சுரம் முன்னி அறியார் கொல்
    ஈரம்இல் நெஞ்சி னவர்”
    (ஐந்திணை எழுபது, பா. 34)

    இப்பாடலில் “நீர்இல் அருஞ்சுரம்” என்பது வறண்ட அரிய பாலை நிலத்தைக் குறிக்கும். இங்ஙனம் நிலத்தைக் குறித்து வந்தமையால் இப்பாடல் பாலைத்திணை ஆகும்.

    மருதத் திணைப் பாடல்கள்:

    “போத்துஇல் கழுத்தின் புதல்வன் உணச்சான்றான்
    மூத்தேம் இனியாம் வருமுலையார் சேரியுள்
    நீத்துநீர் ஊனவாய்ப் பாண!நீ போய்மொழி
    கூத்தாடி உண்ணினும் உண்”
    (ஐந்திணை எழுபது, பா. 45)

    இப்பாடலில் இடம் பெற்றுள்ள புதல்வன், பரத்தை, வாயில் மறுத்தல் முதலிய செய்திகளின் மூலம் மருதத்திணைப் பாடல் என்று உறுதி செய்ய முடிகிறது.

    “வளவயல் ஊரன் மருள்உரைக்கு மாதர்
    வளைஇய சக்கரத்து ஆழி – கொளைபிழையாது
    ஒன்றுஇடை இட்டு வருமேல்நின் வாழ்நாட்கள்
    ஒன்றி அனைத்தும் உளேன். “
    (ஐந்திணை எழுபது, பா. 56)

    இப்பாடலில் இடம் பெற்றுள்ள வயல், ஊரன், பரத்தை (மருள் உரைக்கு மாதர்) முதலிய கருப்பொருள்களால் இப்பாடல் மருதத்திணைப் பாடல் என்று உறுதிப்படுத்தலாம்.

    நெய்தல் திணைப் பாடல்கள்:

    “இடுமணல் எக்கர் அகன்கானல் சேர்ப்பன்
    கடுமான் மணிஅரவம் என்று – கொடுங்குழை
    புள்அரவம் கேட்டுப் பெயர்ந்தாள் சிறுகுடிய
    உள்அரவம் நாணுவர் என்று”
    (ஐந்திணை எழுபது, பா. 59)

    இப்பாடலில் அகன்கானல் என்பது கடற்கரைச் சோலையாகும். எனவே இது முதற்பொருளான நிலத்தைக் குறித்தது. சேர்ப்பன் என்பது கருப்பொருளான நெய்தல் நிலத் தலைவனைக் குறிக்கும். இவற்றின் அடிப்படையில் இப்பாடல் நெய்தல் திணை என்று குறிப்பிடலாம்.

    “மணிநிற நெய்தல் இருங்கழிச் சேர்ப்பன்
    அணிநலம் உண்டுஅகன்றான் என்கொல் எம்போல்
    தணிமணல் எக்கர்மேல்ஓதம் பெயரத்
    துணிமுந்நீர் துஞ்சா தது “
    (ஐந்திணை எழுபது, பா. 60)

    இப்பாடலில் நெய்தல் என்ற திணைப்பெயரே வந்துள்ளது. இருங்கழி என்பது உப்பங்கழியைக் குறிக்கும். சேர்ப்பன் என்பது நெய்தல் நிலத் தலைவனைக் குறிக்கும். ஓதம் என்பது அலையைக் குறிக்கும். முந்நீர் என்பது கடலைக் குறிக்கும். இவற்றின் அடிப்படையில் இப்பாடல் நெய்தல் திணை என்று துணியலாம்.

    முப்பொருள்கள் இடம் பெற்றுள்ளமை:

    • முல்லைத் திணைப் பாடல்களில் கார் (15, 17, 19, 20, 21, 23), கார் (17, 20-24, 27), முல்லை (15, 20, 21, 24) ஆகியவை பயின்று வந்துள்ளன.

    • குறிஞ்சித் திணைப் பாடல்களில் வரை (3, 10), மலை (4, 5, 6, 9, 12), அருவி (7, 11) ஆகியவை பயின்று வந்துள்ளன.

    • பாலைத் திணைப் பாடல்களில் சுரம் (29, 32-34, 36, 39), அதர் (30), ஆறலைப்போர் (30, 36) ஆகியவை பயின்று வந்துள்ளன.

    • மருதத் திணைப் பாடல்களில் புதல்வன் (43, 45, 47, 48, 55), பரத்தை (44, 46-48, 54), பாணன் (45, 46, 48, 49), எருமை (46), வயல் (46, 47, 53, 56) ஆகியவை பயின்று வந்துள்ளன.

    • நெய்தல் திணைப் பாடல்களில் நெய்தல் (60, 67), புன்னை (58), சேர்ப்பன் (58-60, 62, 65, 68), துறைவன் (57, 61, 63, 64), ஓதம் (60), முந்நீர் (60, 61), நாவாய் (61), இருங்கழி (64, 67, 68), கொடுங்கழி (63), சுறா (65), அலவன் (67), மீன் (68) ஆகியவை பயின்று வந்துள்ளன.

    தொகுப்புரை:
    பதினெண் கீழ்க்கணக்குத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அகப்பொருள் நூல்கள் ஆறு ஆகும். இதில் திணை என்னும் பெயரில் ஐந்து நூல்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று ஐந்திணை எழுபது. இந்நூல் திணையடிப்படையில் ஒவ்வொரு திணைக்கும் பதினான்கு பாடல்கள் வீதம் எழுபது பாடல்கள் இருத்தல் வேண்டும். முல்லை மற்றும் நெய்தல் திணைகளில் தலா இரண்டு பாடல்கள் வீதம்நான்கு பாடல்கள் கிடைக்கவில்லை.எனவே அறுபத்தாறு பாடல்கள் மட்டுமே உள்ளன. திணைக்குரிய முப்பொருள் அமைப்பு முறையில் நெய்தல் திணைப் பாடல்கள் மிகச் சிறப்பான முறையில் அமைக்கப் பெற்றுள்ளன. தொல்காப்பியர் கூறிய வழிமுறையில் இப்பாடல்களின் திணைப் பொருத்தும் குறித்து ஆய்கின்றபொழுது திணைமயக்கமுள்ள பாடல்கள் மிகக்குறைவாகவே உள்ளன. இந்நூல் மாணவர்களுக்குப் பாட அளவிலும் ஆராய்ச்சி அளவிலும் மிகுதியாகச் சென்று சேரவில்லை என்றே கூற வேண்டும். எனவே இந்நூல் மாணவர் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் மிகுதியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.

    பயன்பட்ட நூல்களும் இணைய தளங்களும்:
    1. தொல்காப்பியம், ச.வே.சுப்பிரமணியம் பதிப்பு.
    2. பதினெண் கீழ்க்கணக்கு, அ.நடராச பிள்ளை விளக்கவுரை, கழக வெளியீடு, 2007.
    3. ஐந்திணை எழுபதில் அகத்திணைக் கூறுகள் என்னும் கட்டுரை – சி. ஜெபஸ்டெல்லா, thoguppukal.wordpress.com/2011/01/29
    4. www.tamilvu.org
    5. www.projectmadurai.org

     

     

     

     

     

     

    முனைவர் க. துரையரசன்
    தமிழ் இணைப்பேராசிரியர் &
    தேர்வு நெறியாளர்
    அரசினர் கலைக் கல்லூரி (தன்.)
    கும்பகோணம் – 612 001
    தமிழ்நாடு

    Share
  • மலையமான் திருமுடிக்காரியும் முள்ளூர் நாட்டு வளமும்

    –முனைவர் மு.  பழனியப்பன்.

     

    கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகக் கொள்ளப்பெறுபவன் மலையமான் திருமுடிக்காரி ஆவான். சிறுபாணாற்றுப்படை இவனின் கொடைச்சிறப்பினை …

                                           கறங்குமணி
    வாலுளைப் புரவியொடு வையகம் மருள
    ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த
    அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
    கழல்தொடித் தடக்கை காரி
    (சிறுபாணாற்றுப்படை 91-95)

    என்று எடுத்துக்காட்டுகின்றது ஒலிக்கின்ற மணிகளை உடைய வெண்மையான பிடரி மயிரினையுமுடைய தன் குதிரையுடன் தன் நாட்டையும் இரவலர்க்கும் வழங்கும் வள்ளலாக மலையமான் திருமுடிக்காரி இருந்துள்ளான்.

    மலையமான திருமுடிக்காரியின் மலைநாடு ஆகும். இது மருவி மலாடு என்று வழங்கப்பெற்றிருந்திருக்கிறது. நடுநாடு எனச்சொல்லப்பெறும் பகுதி சங்ககாலத்தில் மலைநாடு, ஓவியர் மாநாடு என்று இருநிலைப்பட்டதாக இருந்துள்ளது. மலாடுக்கு பெண்ணையம் படப்பை நாடு என்ற பெயரும் உண்டு. இம்மலைநாடு கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர்ப்பேட்டை ஆகிய ஊர்களையம், கல்வராயன் மலைகளையும் உள்ளடக்கியப் பகுதி என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். (தமிழநம்பி வலைப்பூ) இந்நாட்டினைச் கடைச் சங்க காலத்தில் ஆண்டவன் மலையமான் திருமுடிக்காரியாவான்.

    இவனின் மலை முள்ளூர் மலையாகும். இவனின் தலைநகரம் திருக்கோவலூர் ஆகும். இவன் வீரம் செறிந்தவன். கொடைநலம் உடையவன். இவனைப் பற்றிய குறிப்புகள் அகநானூறு, நற்றிணை, கலித்தொகை, குறுந்தொகை, புறநானூறு போன்ற பல சங்கப் பனுவல்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இருந்து இவனின் வரலாற்றை ஓரளவிற்கு அறிந்து கொள்ள முடிகின்றது.

    “துஞ்சா முழவின் கோவல் கோமான்
    நெடுந்தேர்க் காரி கொடுங்கால் முன்துறை
    பெண்ணையம் பேரியாற்று நுண்அறல்கடுக்கும்
    நெறிஇருங் கதுப்பின்”
    ( அகநானூறு 35)

    என்ற அகநானூற்றுப் பாடல் குறிப்பு காரியின் அரசியல் சிறப்பை விளக்குவதாக உள்ளது. முழவுகள் ஒலித்துக்கொண்டே இருக்கும் நாட்டினை உடையவன் திருக்கோவலூரைத தலைமையிடமாகக் கொண்டு ஆளும் கோமான் காரி. இவன் நெடிய தேர்களை உடையவன். இவனின் சிறப்பு மிக்க நகரங்களுள் ஒன்று கொடுங்கால். இது பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இவ்வாற்றின் நுண்ணிய கருமணலைப் போன்ற கூந்தலை உடையவள் தலைவி என்று தலைவியின் அழகு சிறப்பிக்கப்பெறும் இடத்தில் காரியின் பெருமை பேசப்பெருகின்றது.

    இப்பாடலின்வழி தென் பெண்ணையாற்றின் கரை சார்ந்த பகுதிகளை ஆண்டவன் காரி என்பது உறுதியாகின்றது. மேலும் அவனின் தலைநகரம் கோவல் எனப்பட்ட திருக்கோவலூர் என்பதும், அவனின் சிறப்பு மிக்க நகர்களுள் ஒன்று கொடுங்கால் என்பதும், அவன் எல்லைக்குட்பட்டு ஓடிய ஆறுகளில் ஒன்று தென்பெண்ணையாறு என்பதும் தெரியவருகின்றது.

    மலையமான் திருமுடிக்காரியின் வீரச்சிறப்பு:
    மலையமான திருமுடிக்காரி வீரஞ் செறிந்தவன். இவன் பல மன்னர்களுக்குப் போர் உதவி செய்துள்ளான்.

    ஆரியரை வென்றவன்:

    “ஆரியர் துவன்றிய பேர்இசை முள்ளூர்ப்
    பலர் உடன் கழிந்த ஒள்வாள் மலையனது
    ஒருவேற்கு ஓடி யாங்குதம்
    பன்மையது எவனோஇவன் நன்மைதலைப் படினே”
    (நற்றிணை- 170)

    என்ற நற்றிணைப் பாடலில் ஆரியரை வென்றவன் மலையமான் என்ற குறிப்பு காணப்படுகிறது.

    இப்பாடலில் தலைவி தன் பக்கத்து உள்ள அனைத்துத் தலைவியரையும் அழைத்து, அழகுடன் விளங்கும் விறலியிடமிருந்துத் தலைவனைக் காக்க எழுங்கள் என்று உரைக்கிறாள். அவ்வாறு செய்யவில்லை என்றால் ஆரியர்கள் நெருங்கிப் போர் செய்ய வந்தபோது ஒப்பற்ற தன் வாளை எடுத்துப் போர்புரிந்து ஆரியப்படையை விரட்டிய மலையமானின் திறம்போல நாமும் ஒழிய வேண்டியதுதான் என்பது தலைவி கூற்றாகும்.

    இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரலாற்றுக்குறிப்பின்படி மலையமான ஆரியரை வென்றச் சிறப்பினை உடையவன் என்பது தெரியவருகிறது.

    சேர மன்னனுக்குப் போர் உதவி புரிந்தவன்:
    முள்ளூர் மன்னனாகிய மலையமான் சிவந்த வேலினை உடையவன். இவன் வீரவளையை அணிந்தவன். இவன் கொல்லிப்பாவையைக் கைப்பற்றுவதற்காகச் சேரமன்னனுடன் முரண்பட்ட கடையெழுவள்ளல்களில் ஒருவனான ஓரியைக் கொன்று அப்பாவையைச் சேரனுக்கு உடைமையாக்கித் தந்தான் என்ற வரலாற்றுக் குறிப்பு அகநானூற்றுப் பாடல் ஒன்றில் பதிவாகியுள்ளது.

    “முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
    செல்லா நல்இசை நிறுத்த வல்வில்
    ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈந்த
    செவ்வேர்ப் பலவின் பயம்கெழு கொல்லி
    நிலைபெறு கடவுள் ஆக்கிய
    பலர்புகழ் பாவை அன்ன நின் நலனே”
    (அகநானூறு, 209)

    ஓரியை வென்றுச் சேரனுக்கு மலையமான அளித்த கொல்லிப்பாவை போன்ற அழகுடையவள் தலைவி என்பதைக் கல்லாடனார் இப்பாடலடிகளில் காட்டியுள்ளார்.

    சோழ மன்னனுக்கும் போர் உதவி புரிந்தவன்:
    மலையமான் திருமுடிக்காரி மற்றொரு சமயத்தில் சோழனுக்குப் போர் உதவி புரிந்திருக்கிறான். ஒருமுறை சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவனும், சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் போர் புரிந்தனர். இவர்கள் இருவரில் சோழனுக்குச் சார்பாய் காரி நின்று வெற்றியைப் பெற்றுத் தந்தான். இவ்விருவரும் காரியைப் போர் கருதி எந்நாளும் நினைவு கூர்ந்தனர்.

    “குன்றத்து அன்ன களிறு பெயரக்
    கடந்துஅட்டு வென்றோனும் நிற்கூ றும்மே
    வெலீஇயோன் இவன் எனக்
    கழல்அணிப் பொலிந்த சேவடி நிலம்கவர்பு
    விரைந்துவந்து சமம் தாங்கிய
    வல்வேல் மலையன் அல்லன் ஆயின்
    நல்அமர் கடத்தல் எளிதுமன் நமக்குஎனத்
    தோற்றோன் தானும் நிற்கூ றும்மே”
    (புறநானூறு, 125)

    என்ற பாடலில் திருமுடிக்காரி வெற்றிக்கும் காரணமாகின்றான். தோல்விக்கும் காரணமாகின்றான் என்று காட்டப்பெற்றுள்ளது.

    வென்றவர்கள் மலைபோன்ற யானைப்படை அழிந்துபோனாலும் அதன் அழிவைக் கருதாது வெற்றியைப் பெற்றுத்தந்தவன் காரி என்று வென்ற மன்னன் காரியைப் பாராட்டுகிறான்.

    வெற்றிவேல் உடைய காரி வாராது இருந்திருந்தால் இத்தோல்வி கிடைத்திருக்காது என்று தோல்வி பெற்றவனும் காரியை எண்ணுகிறான். இவ்வளவில் பகைவர்க்கும், நண்பர்க்கும் முருகவேள் போலக் காட்சி தருகிறான் காரி என்று இந்தப்பாடலைப் பாடியுள்ளார் வடம வண்ணக்கண் பெருஞ்சாத்தன்.

    கொடைச்சிறப்பு:
    காரி கொடைச்சிறப்பு மிக்கவன். இதன் காரணமாகவே இவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாக ஆக்கப்பெற்றுள்ளான். மற்றவர்கள்போல் இவன் கொடைமடம் மிக்கவன் அல்லன். உண்மையான கொடைத்திறம் மிக்கவன். தன்னைப் பாடியவர்களுக்குப் பொன்னும் பொருளும் அளித்தவன். ‘மாரி ஈகை மறப்போர் மலையன்’ என்று கடையெழு வள்ளல்களில் இவன் குறிக்கப்பெறுகிறான். (புறநானூறு 158) மாரி போன்ற ஈகையன் காரி. மறப்போர் வல்லவன் மலையன் என்பது இப்பாடலடிகளின் பொருளாகும்.

    கபிலரால் பாடப்பெற்றவன் என்ற பெருமைக்குரியவனாக இவன் போற்றப்பெறுகிறான். இதனை மற்றொரு புலவரான மாறோகத்து நப்பசலையார் இதனைப் பின்வரும் பாடலில் பதிவு செய்கின்றார்.

    “ஒன்னார் யானை ஓடைப்பொன் கொண்டு
    பாணர் சென்னி பொலியத் தலைஇ
    வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்
    ஓடாப் பூட்கை உரவொன் மருக
    வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே
    நினவயிற் கிளக்குவம் ஆயின் கங்குல்
    துயில் மடிந்தன தூங்கிருள் இறும்பின்
    பறைஇசை அருவி முள்ளூர்ப் பொருந
    தெறலரு மரபின்நின் கிளையொடும் பொலிய
    நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம்
    புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்
    இரந்து சென்மாக்கட்கு இனிஇடன் இன்றிப்
    பரந்து இசை நிற்கப் பாடினான்”
    (புறநானூறு 126)

    என்ற பாடலில் மலையமான் திருமுடிக்காரியின் புகழ் கபிலரால் பாடப்பெற்று நிலைநிறுத்தப்பெற்றுள்ளது என்பது தெரியவருகிறது. இதன்வழி கபிலரின் புகழும், காரியின் பெருமையும் ஒருசேர வெளிப்படுகின்றன.

    காரியின் முன்னோர் புறமுதுகு காட்டாத மன்னர் பரம்பரையினர், அவர்கள் பாணர்க்குப் பொன் பூ சூட்டியவர்கள். இப்பரம்பரையில் வந்த மலையமான் போரில் வல்லவன். அவன் புகழ் நிற்கக் கபிலர் பாடியுள்ளார் என்பது இப்பாடலின் பொருள்.

    மலையமான் திருமுடிக்காரியின் இயல்புகளைக் கபிலர் பாடிய வகை பின்வருமாறு.

    “நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப்
    பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
    வறிது பெயர்குவர் அல்லர் நெறிகொளப்
    பாடு ஆன்று இரங்கும் அருவிப்
    பீடுகெழு மலையற் பாடியோரே”
    (புறநானூறு 124)

    என்ற இந்தப்பாடலில் கபிலர் நாள், நேரம் பார்த்துக் கொடை பெறவேண்டிய அவசியம் காரியின் அவைக்கு இல்லை என்று குறிப்பிடுகிறார். இது கொடை பெறுவதற்கான, அல்லது தருவதற்கான நாள் இல்லை என்றாலும், பறவையின் குறிப்பும் நல்லமுறையில் இல்லை என்றாலும், சென்று காணக்கூடிய சமயம் இது இல்லை என்றாலும் காரியிடம் சென்றுத் திறனற்ற சொற்களைச் சொன்னாலும் சென்றவர்கள் பரிசின்றித் திரும்பாத கொடைத்தன்மை பெற்றவன் காரி என்று கபிலர் புகழ்கின்றார்.

    காரி தேர் தருபவன் என்பதை மற்றொரு கபிலரின் பாடல் காட்டுகின்றது.

    “நாட்கள் உண்டு நாள் மகிழ்மகிழின்
    யாரக்கும் எளிதே தேர்ஈதல்லே
    தொலையா நல்லிசை விளங்கு மலையன்
    மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
    பயன்கெழு முள்ளூர் மீமிசைப்
    பட்ட மாரி உறையினும் பலவே”
    (புறநானூறு, 123)

    என்ற இப்பாடலில் பெரும்பாலும் மன்னர்கள் மதுவுண்டு மயக்கத்தில் இருக்கையில் புவலர்கள் பாடச் செல்வது அல்லது அவர்களை பாட அழைப்பது என்ற வழக்கம் சங்க காலத்தில் இருந்ததைக் காட்டுகின்றது. அக்காலத்தில் தேர்கள் பல தருவது என்பது கள்ளின் மயக்கம், புகழின் போதை. ஆனால் கள்ளுண்ணாத காலத்திலும் பற்பல செல்வங்களை, தேர்களை அளிக்கும் வள்ளல் தன்மை பெற்றவன் காரியாவான் என்பது இப்பாடலின் பொருளாகின்றது.

    மற்றொரு பாடலில் மூவேந்தருக்கு உதவியவன் காரி என்ற குறிப்பினை இடம்பெறச் செய்கிறார் கபிலர்.

    “கடல்கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
    கழல்புனை திருந்து அடி்க்காரி நின்நாடே
    அழல்புறம் தரூஉம் அந்தணர் அதுவே
    வீயாத் திருவின் விறல் கெழுதானை
    மூவருள் ஒருவன் துப்பாகியர் என
    ஏத்தினர் தரூஉங் கூழே நும்குடி
    வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே
    வடமீன் புரையும் கற்பின் மடமொழி
    அரிவை தோள் அளவு அல்லதை
    நினது என இலை நீ பெருமிதத்தையே”
    (புறநானூறு 122)

    என்ற இப்பாடலில் அந்தணர்க்கு வரையாது வழங்கியவன் காரி என்ற கருத்து உரைக்கப்பெற்றுள்ளது. இப்பாடலில் காரி மூவேந்தருள் ஒருவர்க்கு உதவியவன் என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. காரி மூவேந்தருள் சேரருக்கு ஒருமுறையும், சோழர்க்கு ஒருமுறையும் போர்உதவி செய்துள்ளான். இதனைக் கபிலரின் நயமாக மூவேந்தரில் இருவருக்கும் பொருந்துமாறு வெளிப்படுத்தியுள்ளது. காரிக்கு அவனின் மனைவியின் தோளே சொந்தம். மற்ற எதுவும் சொந்தமில்லை என்ற நிலையில் வரையாது வழங்கும் வள்ளல் காரி எனக்குறிக்கின்றார் கபிலர்.

    இவ்வாறு காரியின் வீரமும் கொடையும் இணைத்துச் சங்கப்பாடல்களில் பாடப்பெற்றுள்ளன.

    மலையமான் பரம்பரை:

    காரி இறந்தபின் அவனின் மகன்களுள் ஒருவனான மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்பவன் பட்டமேற்கிறான். அவனைப் பற்றிய குறிப்பு ஒன்றும் புறநானூற்றுத் தொகுப்பில் கிடைக்கின்றது. இப்பாடலைப் பாடியவர் மாறோகத்து நப்பசலையார். தந்தையையும் பாடியவர், மகனையும் பாடியவர் என்ற பெருமைக்கு உரியவராக இப்புலவர் விளங்குகின்றார்.

    “அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென,
    சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,
    இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து
    இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல்
    5
    அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு,
    அரசு இழந்திருந்த அல்லல் காலை,
    முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது
    இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி
    மல்லல் நல் நாட்டு அல்லல் தீர,
    பொய்யா நாவின் கபிலன் பாடிய,
    மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச்
    செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட
    எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,
    அரு வழி இருந்த பெரு விறல் வளவன்
    மதி மருள் வெண்குடை காட்டி, அக் குடை
    புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந!
    விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண்,
    சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன்
    ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர்,
    உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்,
    ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும்
    கவலை நெஞ்சத்து அவலம் தீர,
    நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!
    கல் கண் பொடிய, கானம் வெம்ப,
    மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க,
    கோடை நீடிய பைது அறு காலை,
    இரு நிலம் நெளிய ஈண்டி,
    உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே.”
    (புறநானூறு, 1740)

    என்ற இப்பாடலில் மலையமானின் மகன் பற்றி புகழ் பதிவு செய்யப்பெற்றுள்ளது. திருமால் ஒளிந்த ஞாயிற்றைக் கொண்டு வந்து உலகை மீளவும் காப்பாற்றியது போல சோழ மண்டலத்தின் அரசன் தோற்று ஓடியபோது, அவரைப் பாதுகாத்து முள்ளுர்ப் பகுதியில் தங்கவைத்துத் தேவையான நேரத்தில் வெளிப்படுத்தியவன் திருக்கண்ணன். இவனின் தந்தையான மலையமான் திருமுடிக்காரி இவ்வுலகில் அறம் செய்து அதன் பயனை அனுபவிக்க மேலுலகம் சென்றுள்ளார். அப்பெருமான் கபிலர் வாயினால் புகழப்பெற்றவன். அவன் வழியில் வந்த நீ தேவையான நேரத்தில் பெய்யும் மழையை ஒத்தவன் ஆவாய் என்று பாடல் புகழ்கின்றது.

    இப்பாடலின் வாயிலாக மலையமான் திருமுடிக்காரியின் சந்ததியை அடையாளம் காணமுடிகின்றது.

    மலையமானும் அவன் மகன் திருக்கண்ணனும் பேரரசுகளுக்குப் போர்உதவி புரியும் படைக்குழுவின் தலைவனாக இருந்துள்ளனர் என்பது இப்பாடல்கள் வழியாகத் தெரியவருகின்றது,

    இவ்வகையில் மலையமான் திருமுடிக்காரி பற்றிய செய்திகளைச் சங்கப்பாடல்கள் வழியாக அறிந்து கொள்ளமுடிகின்றது.

    இவன் மலையான முள்ளூர் சிறப்பானது ஆகும் . இதன் வளத்தையும் புலவர்கள் பாடியுள்ளனர். அவை பற்றிய செய்திகள் பின்வருமாறு.

    முள்ளூரின் இயற்கை வளம்:
    திருக்கோவிலூர் வட்டத்தில் முள்ளூர் மலைக்காடு என்ற பகுதி உள்ளது. இதுவே மலையமான் திருமுடிக்காரி வாழ்ந்த இடமாக இருக்கவேண்டும்.இவ்விடத்தின் இயற்கைவளம் பற்றிச் சங்க இலக்கியங்களில் எடுத்து மொழியப்பெற்றுள்ளது.

    முள்ளூர்க்காடு என்றழைக்கப்படும் தற்காலப் பெயர் அக்காலத்தில் முள்ளூர்கானம் எனப்பட்டுள்ளது. குறுந்தொகையில் ஒரு தலைவி இப்பெயரை அப்படியே பயன்படுத்துவதாகக் கபிலர் பாடுகின்றார். “முள்ளூர்க் கானம் நாற வந்து” (குறுந்தொகை 3120 என்ற கபிலரின் குறிப்பு மணம் மிக்க மலர்களைத் தரும் காடாக முள்ளூர் திகழ்ந்துள்ளது என்பதை உணரமுடிகின்றது.

    புறுநானூற்றில் இடம்பெற்ற கபிலரின் பாடலொன்றில் முள்ளூர் மலை உயரமானது என்ற குறிப்பும், அம்மலையில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும் என்பதும் பெறப்படுகின்றது. “பயன்கெழு முள்ளூர் மீமிசைப் பட்ட மாரி உறையினும் பல” (புறநானூறு, 123) என்ற பாடலடியில் முள்ளூர் மழைப்பொழிவு மிக்கது என்பது தெரியவருகிறது.

    முள்ளூர்க் கானம் அடர்ந்து இருள் சூழ்ந்து இருந்தது என்பதை மற்றொரு புறநானூற்றுப்பாடல் விளக்குகின்றது. “துயில்மடித்தன்ன தூங்கு இருள் இறும்பின் பறை இசை அருவி முள்ளூர்பொருந ” (புறநானூறு 126) என்ற பாடலில் ஓரிடத்தில் துயில் உறங்குவதுபோல அடர்ந்த இருளை உடையது முள்ளூர் என்றும், மேலும் இம்மலையில் இருந்து அருவி ஒன்று விழுந்தது என்பதும் இப்பாடலடிகள் வழியாகத் தெரியவருகின்றது.

    இவ்வாறு முள்ளூர்கானம் சிறப்புடையதாக விளங்கியுள்ளது. இவற்றின் வழி நடுநாட்டில் இருந்த அரசுநிலைபற்றியும்,இயற்கைநிலை பற்றியும் அறிந்து கொள்ள முடிகின்றது.

     

    முனைவர் மு.பழனியப்பன்
    இணைப்பேராசிரியர்,
    தமிழ்த்துறைத் தலைவர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    திருவாடானை

    Share