ஐந்திணை எழுபது – அகப்பொருள் மாண்பும் அமைப்பு முறையும்

–முனைவர் க. துரையரசன்.

 

தோற்றுவாய்:
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியின் தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுக் கொடுத்த 41 நூல்களுள் ஒன்று ஐந்திணை எழுபது. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். நீதி நூல்களின் தொகுப்பாகப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் கருதப்பட்டாலும் அதில் உள்ளவை அனைத்தும் அறநூல்களில்லை. அத்தொகுப்பில் இடம் பெற்ற நூல்களில் 11 நூல்கள் அற இலக்கிய வகையைச் சார்ந்தவை; 6 நூல்கள் அக இலக்கிய வகையைச் சார்ந்தவை ; 1 நூல் புற இலக்கிய வகையைச் சார்ந்தது. ஐந்திணை எழுபது அக இலக்கிய நூலாகும்.

நூலும் ஆசிரியரும்:
இந்நூல் எழுபது அகப்பாடல்களைக் கொண்டுள்ளது. இது திணை தோறும் பதினான்கு பாடல்கள் வீதம் ஐந்து திணைகளுக்கும் எழுபது பாடல்களைக் கொண்டுள்ளமையால் ஐந்திணை எழுபது என்று அழைக்கப்படுகிறது. ஆயினும் 25, 26, 69, 70 ஆகிய நான்கு பாடல்கள் கிடைக்கவில்லை. எஞ்சிய 66 பாடல்களே கிடைக்கப்பெற்றுள்ளன. கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இவற்றுள் 27 செய்யுள்கள் நேரிசை வெண்பாக்களாகவும், 40 செய்யுள்கள் இன்னிசை வெண்பாக்களாகவும் அமைந்துள்ளன. இந்நூலின் தொடக்கத்தில் விநாயகரைப் பற்றி கடவுள் வணக்கப் பாடல் ஒன்று சில பிரதிகளில் காணப்படுகிறது. இக்கடவுள் வாழ்த்து நூலுக்குப் புறம்பாக இருப்பதாலும் இப்பாடலுக்கு பழைய உரைகாரர் உரை எழுதாததாலும் இது நூலாசிரியரான மூவாதியாரால் இயற்றப்பட்டு இருக்காது என அறிஞர்களால் கருதப்படுகிறது.

இந்நூலின் ஆசிரியர் மூவாதியார்; இவர் சமணர் என்பர். இவரைப் பற்றிய வேறு செய்திகள் கிடைக்கவில்லை. நூற்பெயர் ஒற்றுமையாலும், வேறுசில குறிப்புகளாலும் இவர் ஐந்திணை ஐம்பதை அடியொற்றியுள்ளனரோ என்று தோன்றுகிறது. இருநூல்களிலும் சில அடிகளும் கருத்துகளும் ஒன்றுபோலவே அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக ஐந்திணை ஐம்பதில் உள்ள 38 ஆம் பாட்டில், “கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி” என்னும் வரிகள் அப்படியே, ஐந்திணை எழுபதில் உள்ள 36ஆம் பாட்டில் “கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி” என இடம்பெற்று உள்ளன.

திணை – அமைப்பு முறை:

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே
(தொல். அகத். நூ. 5)

நடுவண் ஐந்திணை நடுவனது ஒழியப்
படுதிரை வையம் பாத்தியப் பண்பே
(தொல். அகத். நூ. 2)

என்று தொல்காப்பியர் ஐந்திணைகளை முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்று வரிசைபடக் கூறுவது முன்னோர் வழக்கு என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஆயினும் இவ்வரிசை முறை பிற்காலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல், பாலை என்றும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்,பாலை என்றும் மாறி அமைந்திருப்பதைக் காண முடிகிறது.

இந்நூலிலும் திணை வரிசைமுறை தொல்காப்பிய வரிசையிலிருந்து மாறுபட்டுக் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்று அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. அன்பு இன்பத்திற்கு முதன்மையானதாகும். இதனை, அழகும் இனிமையும் தோன்றக் கூறுவது இந்நூல். இன்பத்தின் தொடக்கமாகிய புணர்ச்சியினையும் அதற்குரிய நிமித்தங்களையும் குறிஞ்சி எனக்கூறி, அப்புணர்ச்சியால் பெற்ற அன்பினை நெகிழவிடாது அகத்திருத்தி அமைதலாகிய முல்லையினை அடுத்துரைத்து அவ்வன்பின் நிலைப்பேற்றினைக் கண்டறிவதற்குப் பிரிவாகிய பாலையினைப் பின்வைத்து, அவற்றின் பயனாகிய ஊடலும் கூடலுமென்ற மருதத்தினை விளக்கி, இவைப் பேரின்பத்தினை அடைவதற்குரிய பெருவழியே அன்றிப் பேறாகா எனத் தெளிய இரங்கலாகிய நெய்தலினை இறுதியிற் கூறிய எழில் போற்றத்தக்கதாகும் என்று இந்நூலுக்கு விளக்க உரை எழுதிய அ. நடராசபிள்ளை இந்நூலின் முகவுரையில் (பக்கம் 5, கழக வெளியீடு, 2007) குறிப்பிட்டுள்ளார்.

நுவலும் பொருள்:
இந்நூல், மக்களின் இன்பத்திற்கு உயிர் நிலையாகிய அன்பினை எழிலும் இனிமையும் தோன்ற எடுத்துரைக்கிறது. இதன்கண் அகப்பொருளின் முப்பொருள்களான முதற்பொருள், உரிப்பொருள், கருப்பொருள் நன்கு அமைந்துள்ளன. உள்ளுறை உவமங்கள் மற்றும் இலக்கியச்சுவை நிறைந்தவையாகப் பாடல்கள் அமைந்துள்ளன. பண்டைத் தமிழகத்தின் பழக்கவழக்கங்கள் பலவற்றை இந்நூலின் வழி அறியமுடிகிறது.

குறிஞ்சி: இத்திணையில் தலைவி தலைவனை இயற்பட மொழியும் திறன் சிறப்பாக அமைந்துள்ளது. அதற்கேற்ப இறைச்சிப் பொருளைக் கையாண்டுள்ளார். குறிஞ்சி நிலப் பண்புகள் நன்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முல்லை: இத்திணைப் பாக்கள் பதினான்கு அமைந்திருத்தல் வேண்டும். இரண்டு பாடல்கள் கிடைக்காமையால் பன்னிரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளன. இவை அனைத்தும் பருவம் கண்டு அழிந்த தலைவியின் கூற்றாகவே அமைந்துள்ளன. கார்கால இயல்பு, மாலை நேரக் காட்சி வருணனை ஆகியவை பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளன.

பாலை: இதற்கெனத் தனிநிலம் இல்லை என்பது இந்நூலின் வழியும் புலனாகிறது. முப்பத்தாறாவது பாடலில் முல்லையையும் பாலையையும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். போரில் இறந்துபட்ட வீரர்களுக்குக் கல் நடுதல், அக்கல்லில் அவ்வீரர் பற்றிய சிறப்பானச் செய்திகளை எழுதி வைத்தல், ஆந்தை ஒலி, பல்லி ஒலி, இடக்கண் துடிப்பு, தும்மல் முதலியவற்றால் நிமித்தம் அறிதல் போன்ற செய்திகள் இத்திணைப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

மருதம்: இத்திணையில் தலைவன் புதல்வனைப் பெற்றெடுத்தல், புதல்வற்குப் பெயரிடுதல், பரத்தையர் தலைவனை மாலையால் பிணைத்துச் செல்லுதல், எருமையினைக் கழுத்தில் தொண்டு கட்டையிடல், உறுதிமொழிகளை எழுதி வைத்துக் கொள்ளுதல், பாணற்குத் தலைமகன் வாயில் மறுத்தல், தோழி தலைமகனத் தன் பேச்சாற்றலால் இணங்குவிக்கும் தன்மை, தோழி தலைமகளிடத்துக் கொண்டுள்ள பேரன்பு ஆகியவை நன்கு அமைக்கப்பட்டுள்ளன.

நெய்தல்: முல்லைத் திணையைப் போலவே இத்திணைப் பாக்களும் பதினான்கு அமைந்திருத்தல் வேண்டும். இரண்டு பாடல்கள் கிடைக்காமையால் பன்னிரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளன. திணையில் தலைமகள் தலைமகனை இயற்பட மொழியும் திறன், தோழி அன்றிலோடு கூறியாறும் அமைதி, தம் காதலுக்குக் குறுகினைச் சான்றாகக் கொள்ளுமாறு கூறுதல் முதலிய செய்திகள் மனம் கவர்கின்ற வகையில் அமைந்துள்ளன.

துறைச் சொற்றொடர் விளக்கம்:
இந்நூல், அகத்திணைக் கூறுகளான முப்பொருள்களையும் கொண்டிலங்குகின்றது. இதன் பாடல்களில் இடம் பெற்றுள்ள அகத்துறைச் சொற்றொடர்களை விளங்கிக் கொண்டால்தான் பாடல்களின் பொருளை நன்கு உணர முடியும். ஆகையால் அவை பற்றிய விளக்கத்தைக் கீழே காணலாம்.

• வரைவு கடாதல் – திருமணம் புரிந்துகொள்ளும்படி தூண்டுதல்.
• வரைவு தலைவரல் – தலைமகனைச் சார்ந்தார் திருமணம் பேசி வரல்.
• வரைவு மலிதல் – திருமணப் பேச்சினை மேற்கொண்டு வரல்.
• தலைமகன் சிறைப்புறத்தானாக – பாங்கியிற் கூட்டத்தினின்றும் பிரிந்த தலைமகன் தினைப்புனஞ் செல்லுந் தோழியினையும், தலைவியையும் சோலையின் வேலிப்புறமாக நின்று நோக்கினனாக.
• இயற்பழித்தல் – தலைவனின் அன்பாகிய இயல்பினைக் குறைத்துக் கூறல்.
• இயற்பட மொழிதல் – அன்பாகிய இயல்பு பொருந்துமாறு கூறல்.
• மெலிவில் நயம் – துன்பங் கலவாத இன்பம்
• புணர்ந்து நீங்கல் – பாங்கியிற் கூட்டத்தால் தலைவியைக் கூடிப் பிரிதல்.
• பகற் குறி – தோழியின் உதவியால் பகல் நேரத்தில் தலைமகனைத் தலைமகள் கண்டு கூடுமிடம். இது தினைப்புனத்தின் அருகிலுள்ள சோலைக்கண்ணதாகும்.
• படைத்து மொழி கிளவி – புதிதாக ஒன்றை அமைத்துக் கூறுதல்.
• மன்றத்து உறுகல் – பலர் கூடும் வெளியில் பலரும் அமர்தற்குரியதாகப் பொருந்திய கற்கள்.
• வெறியாட்டெடுத்தல் – வேலற்குப் பூசையிடல்.
• அறத்தொடு நிற்றல் – உண்மையினை எடுத்துச் சொல்லித் தவறாகக் காரியங்களை நிகழவொட்டாது நடத்தல். பெரிதும் தலைமகன் மீது தலைமகள் கொண்ட அன்பினைத் தோழி செவிலியிடமும், செவிலி நற்றாயிடமும், நற்றாய் தந்தை தமையனிடமும் கூறுதல்.
• செலவு – பொருள்தேடும் பொருட்டுப் பிரிந்து செல்லல்.
• வரைவிடைப் பிரிவு – தலைமகளை மணத்தல் வேண்டிப் பொருள் தேடும் பொருட்டுத் தலைமகன் மேற்கொண்ட பிரிவு.

(காண்க: மூவாதியார் இயற்றிய ஐந்திணை யெழுபது, மூலமும் உரையும், அ. நடராச பிள்ளை, பக்கம் 65, கழக வெளியீடு, 2007)

திணை கண்டறிதல்:
பாடல்களில் பயின்று வரும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றைக் கொண்டு திணைகளைக் கண்டறியலாம். திணைகளைக் கண்டறியும் முறை பற்றி தொல்காப்பியர்,

நிலன் ஒருங்கு மயங்குதல் இல்லென மொழிப (தொல். அகத். நூ. 14)
உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே (தொல். அகத். நூ. 15)

என்று குறிப்பிடுகிறார். தொல்காப்பியரின் கருத்தைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கூறலாம்…

• பாடலில் பயின்று வரும் கருப்பொருள்களை வைத்து திணையை உறுதிப்படுத்த முடியாது.

• நிலம், பொழுது ஆகிய இரண்டு முதற் பொருள்களில் காலத்தை வைத்துத் திணையை உறுதிப்படுத்த முடியாது; ஆனால் நிலத்தை வைத்து உறுதிப்படுத்தலாம்.

• பாடலில் பயின்று வரும் உரிப்பொருளைக் கொண்டு திணையை உறுதிப்படுத்தலாம்

எனவே, உரிப்பொருளையும் நிலத்தையும் அடிப்படையாகக் கொண்டு பாடல்களின் திணையை உறுதிப்பட வரையறை செய்யலாம்.

குறிஞ்சித் திணைப் பாடல்கள்:

“அவரை பொருந்திய பைங்குரல் ஏனல்
கவரி மடமா கதூஉம் படர்சாரல்
கானக நாட! மறவல் வயங்கிழைக்கு
யான்இடை நின்ற புணை”
(ஐந்திணை எழுபது, பா. 1)

இப்பாடலில் கவரிமான், தினை ஆகிய இரண்டு கருப்பொருள்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் கவரிமான் முல்லைத் திணைக்குரியது. ஏனல் என்னும் தினை குறிஞ்சித் திணைக்குரியது. இவற்றின் அடிப்படையில் இப்பாடலின் திணையை வரையறுக்க முயன்றால் இப்பாடல் குறிஞ்சித் திணை என்றும் முல்லைத் திணை என்றும் மயக்கம் ஏற்படும்.

ஆனால் இப்பாடலில் பயின்று வந்துள்ள சாரல் கானக நாட என்பது மலை நாடனைக் குறிக்கிறது. மலை என்பது முதற்பொருளில் நிலத்தின் பாற்படும். தொல்காப்பியரும் நிலத்தைக் கொண்டு திணையை வரையறை செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளமையால் இப்பாடல் குறிஞ்சித் திணைப் பாடல் என்று உறுதிப் படுத்தலாம்.

மேலும் இப்பாடலில் இடம் பெற்றுள்ள ‘யான் இடை நின்ற புணை’ என்ற தொடருக்கு உரையாசிரியர் தோழி தெய்வம் போன்று நின்று புணர்ச்சியை நிகழ்வித்தாள் என்று குறிப்பிடுகிறார். எனவே இப்பாடலில் குறிஞ்சித் திணையின் உரிப்பொருளான புணர்தல் இடம் பெற்றுள்ளமையால் இதன் திணையைக் குறிஞ்சி என்று உறுதிப் படுத்தலாம்.

“பிரைசம் கொளவீழ்ந்த தீம் தேன்இறாஅல்
மரையான் குழவி குளம்பின் துகைக்கும்
வரையக நாட! வரையாய் வரின் எம்
நிரைதொடி வாழ்தல் இலள்”
(ஐந்திணை எழுபது, பா. 9)

மேற்கண்ட பாடலிலும் தேன், மான் ஆகிய கருப்பொருள்கள் இடம் பெற்றுள்ளன. இதனடிப்படையில் திணை கூற முற்பட்டால் குறிஞ்சித் திணை, முல்லைத்திணை என்று மயக்கம் ஏற்படும். ஆனால் மலை என்பதைக் கொண்டு திணை வரையறை செய்தால் மயக்கமில்லாமல் குறிஞ்சித்திணைப் பாடல் என்று அரிதியிட்டுக் கூறலாம்.

“வரையாய் வரின் எம் நிரைதொடி வாழ்தல் இலள்” என்பது நீ தலைவியை வரையாது களவை நீட்டிப்பாயாயின் தலைவி உயிர் வாழாள் என்று தோழி கூறுவதால் இது புணர்தலின் பாற்படும். எனவே இப்பாடல் குறிஞ்சித் திணையாகும்.

முல்லைத் திணைப் பாடல்கள்:

“செங்கதிர்ச் செல்வன் சினம்கரந்த போழ்தினாற்
பைங்கொடி முல்லை மணம்கமழ – வண்டுஇமிரக்
காரோடு அலமரும் கார்வானம் காண்தொறும்
நீரோடு அலமரும் கண்”
(ஐந்திணை எழுபது, பா. 15)

இப்பாடலில் “சினம்கரந்த போழ்து” என்பது மாலைப் பொழுது ஆகும். முல்லைத் திணைக்குரிய கார் காலம் இடம் பெற்றுள்ளது. இவை இரண்டும் முதற் பொருளாகும். முல்லை என்பது கருப்பொருளாகும். எனவே இப்பாடல் முல்லைத்திணைப் பாடல் என்று உறுதிப்படுத்தலாம்.

“தண்நறுங் கோடல் துடுப்புஎடுப்பக் கார்எதிரி
விண்உயர் வானத்து உரும்உரற்றத் – திண்ணிதின்
புல்லுநர் இல்லார் நடுங்கச் சிறுமாலை
கொல்லுநர் போல வரும்.”
(ஐந்திணை எழுபது, பா. 17)

இப்பாடலில் முதற்பொருளான கார், மாலை ஆகியவை இடம் பெற்றுள்ளன. ‘புல்லுநர் இல்லார் நடுங்கச் சிறுமாலை கொல்லுநர் போல வரும்’ என்பதில் உரிப்பொருளான இருத்தல் பயின்று வந்துள்ளது. எனவே இப்பாடல் முல்லைத் திணைப் பாடலாகும்.

பாலைத் திணைப் பாடல்கள்:

“வில்உழுது உண்பார் கடுகி அதர்அலைக்கும்
கல்சூழ் பதுக்கைஆர் அத்தத்து இறப்பார்கொல்
மெல்இயல் கண்ணோட்டம் இன்றிப் பொருட்குஇவர்ந்து
நில்லாத உள்ளத் தவர்”
(ஐந்திணை எழுபது, பா. 30)

இப்பாடலில் “வில் உழுது உண்பார்” என்பது ஆறலைக் கள்வரைக் குறிக்கும். ‘கல்சூழ் பதுக்கை ஆர் அத்தம்’ என்பது பாலை நில சுரத்தைக் குறிக்கும். இங்ஙனம் இப்பாடலில் பாலைத் திணைக்குரிய கருப்பொருள்களே பயின்று வந்துள்ளன. வேறு திணைகளுக்குரியவை இப்பாடலில் இடம் பெறவில்லை. எனவே இப்பாடல் பாலைத் திணைப் பாடல் என்று வரையறை செய்யலாம்.

“பீர்இவர் கூரை மறுமனைச் சேர்ந்து அல்கிக்
கூர்உகிர் எண்கின் இருங்கிளை கண்படுக்கும்
நீர்இல் அருஞ்சுரம் முன்னி அறியார் கொல்
ஈரம்இல் நெஞ்சி னவர்”
(ஐந்திணை எழுபது, பா. 34)

இப்பாடலில் “நீர்இல் அருஞ்சுரம்” என்பது வறண்ட அரிய பாலை நிலத்தைக் குறிக்கும். இங்ஙனம் நிலத்தைக் குறித்து வந்தமையால் இப்பாடல் பாலைத்திணை ஆகும்.

மருதத் திணைப் பாடல்கள்:

“போத்துஇல் கழுத்தின் புதல்வன் உணச்சான்றான்
மூத்தேம் இனியாம் வருமுலையார் சேரியுள்
நீத்துநீர் ஊனவாய்ப் பாண!நீ போய்மொழி
கூத்தாடி உண்ணினும் உண்”
(ஐந்திணை எழுபது, பா. 45)

இப்பாடலில் இடம் பெற்றுள்ள புதல்வன், பரத்தை, வாயில் மறுத்தல் முதலிய செய்திகளின் மூலம் மருதத்திணைப் பாடல் என்று உறுதி செய்ய முடிகிறது.

“வளவயல் ஊரன் மருள்உரைக்கு மாதர்
வளைஇய சக்கரத்து ஆழி – கொளைபிழையாது
ஒன்றுஇடை இட்டு வருமேல்நின் வாழ்நாட்கள்
ஒன்றி அனைத்தும் உளேன். “
(ஐந்திணை எழுபது, பா. 56)

இப்பாடலில் இடம் பெற்றுள்ள வயல், ஊரன், பரத்தை (மருள் உரைக்கு மாதர்) முதலிய கருப்பொருள்களால் இப்பாடல் மருதத்திணைப் பாடல் என்று உறுதிப்படுத்தலாம்.

நெய்தல் திணைப் பாடல்கள்:

“இடுமணல் எக்கர் அகன்கானல் சேர்ப்பன்
கடுமான் மணிஅரவம் என்று – கொடுங்குழை
புள்அரவம் கேட்டுப் பெயர்ந்தாள் சிறுகுடிய
உள்அரவம் நாணுவர் என்று”
(ஐந்திணை எழுபது, பா. 59)

இப்பாடலில் அகன்கானல் என்பது கடற்கரைச் சோலையாகும். எனவே இது முதற்பொருளான நிலத்தைக் குறித்தது. சேர்ப்பன் என்பது கருப்பொருளான நெய்தல் நிலத் தலைவனைக் குறிக்கும். இவற்றின் அடிப்படையில் இப்பாடல் நெய்தல் திணை என்று குறிப்பிடலாம்.

“மணிநிற நெய்தல் இருங்கழிச் சேர்ப்பன்
அணிநலம் உண்டுஅகன்றான் என்கொல் எம்போல்
தணிமணல் எக்கர்மேல்ஓதம் பெயரத்
துணிமுந்நீர் துஞ்சா தது “
(ஐந்திணை எழுபது, பா. 60)

இப்பாடலில் நெய்தல் என்ற திணைப்பெயரே வந்துள்ளது. இருங்கழி என்பது உப்பங்கழியைக் குறிக்கும். சேர்ப்பன் என்பது நெய்தல் நிலத் தலைவனைக் குறிக்கும். ஓதம் என்பது அலையைக் குறிக்கும். முந்நீர் என்பது கடலைக் குறிக்கும். இவற்றின் அடிப்படையில் இப்பாடல் நெய்தல் திணை என்று துணியலாம்.

முப்பொருள்கள் இடம் பெற்றுள்ளமை:

• முல்லைத் திணைப் பாடல்களில் கார் (15, 17, 19, 20, 21, 23), கார் (17, 20-24, 27), முல்லை (15, 20, 21, 24) ஆகியவை பயின்று வந்துள்ளன.

• குறிஞ்சித் திணைப் பாடல்களில் வரை (3, 10), மலை (4, 5, 6, 9, 12), அருவி (7, 11) ஆகியவை பயின்று வந்துள்ளன.

• பாலைத் திணைப் பாடல்களில் சுரம் (29, 32-34, 36, 39), அதர் (30), ஆறலைப்போர் (30, 36) ஆகியவை பயின்று வந்துள்ளன.

• மருதத் திணைப் பாடல்களில் புதல்வன் (43, 45, 47, 48, 55), பரத்தை (44, 46-48, 54), பாணன் (45, 46, 48, 49), எருமை (46), வயல் (46, 47, 53, 56) ஆகியவை பயின்று வந்துள்ளன.

• நெய்தல் திணைப் பாடல்களில் நெய்தல் (60, 67), புன்னை (58), சேர்ப்பன் (58-60, 62, 65, 68), துறைவன் (57, 61, 63, 64), ஓதம் (60), முந்நீர் (60, 61), நாவாய் (61), இருங்கழி (64, 67, 68), கொடுங்கழி (63), சுறா (65), அலவன் (67), மீன் (68) ஆகியவை பயின்று வந்துள்ளன.

தொகுப்புரை:
பதினெண் கீழ்க்கணக்குத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அகப்பொருள் நூல்கள் ஆறு ஆகும். இதில் திணை என்னும் பெயரில் ஐந்து நூல்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று ஐந்திணை எழுபது. இந்நூல் திணையடிப்படையில் ஒவ்வொரு திணைக்கும் பதினான்கு பாடல்கள் வீதம் எழுபது பாடல்கள் இருத்தல் வேண்டும். முல்லை மற்றும் நெய்தல் திணைகளில் தலா இரண்டு பாடல்கள் வீதம்நான்கு பாடல்கள் கிடைக்கவில்லை.எனவே அறுபத்தாறு பாடல்கள் மட்டுமே உள்ளன. திணைக்குரிய முப்பொருள் அமைப்பு முறையில் நெய்தல் திணைப் பாடல்கள் மிகச் சிறப்பான முறையில் அமைக்கப் பெற்றுள்ளன. தொல்காப்பியர் கூறிய வழிமுறையில் இப்பாடல்களின் திணைப் பொருத்தும் குறித்து ஆய்கின்றபொழுது திணைமயக்கமுள்ள பாடல்கள் மிகக்குறைவாகவே உள்ளன. இந்நூல் மாணவர்களுக்குப் பாட அளவிலும் ஆராய்ச்சி அளவிலும் மிகுதியாகச் சென்று சேரவில்லை என்றே கூற வேண்டும். எனவே இந்நூல் மாணவர் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் மிகுதியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.

பயன்பட்ட நூல்களும் இணைய தளங்களும்:
1. தொல்காப்பியம், ச.வே.சுப்பிரமணியம் பதிப்பு.
2. பதினெண் கீழ்க்கணக்கு, அ.நடராச பிள்ளை விளக்கவுரை, கழக வெளியீடு, 2007.
3. ஐந்திணை எழுபதில் அகத்திணைக் கூறுகள் என்னும் கட்டுரை – சி. ஜெபஸ்டெல்லா, thoguppukal.wordpress.com/2011/01/29
4. www.tamilvu.org
5. www.projectmadurai.org

 

 

 

 

 

 

முனைவர் க. துரையரசன்
தமிழ் இணைப்பேராசிரியர் &
தேர்வு நெறியாளர்
அரசினர் கலைக் கல்லூரி (தன்.)
கும்பகோணம் – 612 001
தமிழ்நாடு

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.