Advertisements
Featuredஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்

துப்புரவு தொழிலாளர் சட்டத்தின் நிழலும், நிஜமும்

ஞா. ஜார்ஜ்,
ஆராய்ச்சியாளர்
அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகத் துறை
காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம்
காந்திகிராமம்
திண்டுக்கல்

இந்தியா பொருளாதார வளர்ச்சி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னோக்கியும் சமூகம் வளர்ச்சி மற்றும் ஒற்றுமையில் பின்னோக்கியும் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு சாதி மற்றும் மதம் சார்ந்த வேற்றுமைகளே காரணம். “மதம் உன்னை மிருகமாக்கும், சாதி உன்னை சாக்கடையாக்கும்” என்ற தந்தை பெரியாரின் வார்த்தைகளின் அர்த்தம் இன்று நமக்கு புரிகிறதா என்பது தெரியவில்லை. ஒரு வேளை புரிந்திருந்தால் அந்த பகுத்தறிவு பகலவனின் கனவு நிஜமாகி இருக்கும். சாதி மத பேதமின்றி அனைவரும் சமம் என்ற உணர்வு நமக்குள் ஏற்பட்டிருக்கும், சமுதாயத்தில் தீண்டாமை வளர்ந்திருக்காது, தலித்துகளும் தீண்டாமையினால் அடிமைப்பட்டிருக்கமாட்டார்கள். சாதியப் பாகுபாடு சார்ந்த தீண்டாமை ஒரு நாட்டின் சமூக வளர்ச்சிக்கும் அதன் முன்னேற்றத்திற்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதற்கு இந்தியாதான் சிறந்த உதாரணமாக இருக்க முடியும். தீண்டாமையினால் நாடும், தீண்டப்படாதாரும், தீண்டத்தக்கவரும் அடைந்துள்ள ஒட்டுமொத்த இழிவையும், பின்னடைவையும், ஏற்றத்தாழ்வையும், சமூக இயலாமைகளையும் படம் பிடித்து காட்டும் வகையில் அமைந்துள்ள பாரதிதாசனின் பாடல் வரிகள் நமக்கு உணர்த்துவது.

“தீண்டாமையென்னுமொரு நோய் இந்தத்
தேசத்தினில் மாத்திரம் திரியக்கண்டோம்-
எனில் ஈண்டு பிற நாட்டில் இருப்போர்
செவிக் கேறியதும் இச்செயலைக் காறியுமிழ்வார்
பல ஆண்டாண்டு தோறுமிதனால்- நாம்
கூண்டோடு மாய்வதறிந்தும்- இந்தக்
கோணலுற்ற செயலுக்கு நா-ணுவதில்லை”.

இப்பாடல் வரிகளில் கூறப்பட்டுள்ளதை உண்மையாக்கும் வகையிலேயே இன்றளவும் சாதியையும் அதனைச் சார்ந்த தீண்டாமையையும் கடைபிடித்துவருவதை என்பதை எண்ணி நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். கடந்த 2007 ல் அமெரிக்க செனட் சபையில் மார்டின் லூதர் கிங்கின் 50-வது ஆண்டு நினைவாக கொண்டுவரப்பட்டதுதான் 110-பில். அதில் இந்தியாவின் வளர்ச்சியையும், சமூக முன்னேற்றத்தையும் பாதித்துக் கொண்டிருப்பதும், இன்றளவும் தீர்வு காண முடியாததாகவும் இருப்பதுதான் தீண்டாமை என்ற சாதியப்பாகுபாடு. (United States should address the ongoing problem of Untouchability in India) என்ற ஆய்வு அறிக்கையை தீர்மானமாக கொண்டுவந்தது. இதில் சிந்திக்க வேண்டியது அமெரிக்க காந்திய சிந்தனையான அகிம்சை என்னும் ஆயுதத்தைக் கொண்டு தானே பல நூறு ஆண்டுகள் அடிமை மற்றும் தீண்டாமைத்தனத்தில் இருந்த கருப்பின மக்களின் விடுதலை பெற வழிகோலியது. ஆனால் இந்தியாவில் முற்போக்கான சிந்தனைவாதிகள் இல்லையா, முற்போக்கு சிந்தனைக்குத்தான் பஞ்சமா, அனைத்தும் இருந்தும் மதம் சார்ந்த சாதியத் தீண்டாமைக்கு விடையில்லையே. 21 ஆம் நூற்றாண்டில் பயணிக்கும் நாம் உணவு, உடை மற்றும் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்கும்போது சாதி என்ற சாக்கடையை உள்மனதில் ஓடவிட்டு சமத்துவம், சகோதரத்துவத்தை வளர்க்க நினைப்பது முட்டாள்தனமான செயலல்லவோ. இவ்வாறு சாதியப் பாகுபாடும், ஏற்றத்தாழ்வும் மிக்க ஒரு நாடு எந்தவிதத்தில் வளர்ச்சியை எட்ட முடியும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மலம் என்ற சொல்லை கூட நாலுபேருக்கு மத்தியில் உச்சரிக்கத் தயங்கும் போது தான் கழித்த மலத்தை கொஞ்சமும் அருவருப்பின்றி சக மனிதனை அள்ளச் சொல்லுவதுதான் தீண்டாமையின் உச்சம். இப்படிப்பட்ட சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை மறுப்பதற்கில்லை. மலத்தை தீண்டுவதில்லை, அதனை தீண்டி சுத்தம் செய்வோரையும் தீண்டுவதில்லை, அப்படி தீண்டினால் தீட்டு என்று கூறும் சாதி இந்துக்களும் மற்ற உயர்வகுப்பினரும் ஒன்றை மறந்துவிடக்கூடாது, ஒவ்வொரு மனிதனும் குறைந்தது இரண்டு முறையாவது தன் மலத்தைத்தானே தொட்டுக் கழுவும் தோட்டியாக உள்ளான். ஆனால் மற்றவர்களின் மலத்தை சமூக நலன் கருதி அப்புறப்படுத்தியவனைச் சமூகத்திலிருந்தே தூர ஒதுக்கி விடுகிறான் தலித் மக்களை தீண்டப்படாதவனென்று. தீட்டு என்று மலத்தைத் தொடா மனிதன் உண்டா? என்று முனைவர் சீனிவாசன் தீண்டாமைக்கு தீயிடு புத்தகத்தில் கூறும் விளக்கம் சரியே.

கையால் மலம் அள்ளுவது ஒரு தேசத்தின் அவமானம் என்று கூறும் பொது நலவாதிகளாகட்டும், அரசியல்வாதிகளாகட்டும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளாகட்டும் தங்களுக்குள்ளாகவே கேட்க வேண்டிய கேள்வி, தேசத்தின் அவமானத்தை அகற்றும் பொறுப்பு அனைவருக்குமே உண்டு, நம்மில் எத்தனை பேர் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் மற்றும் தங்களின் பகுதியில் உள்ள சாக்கடையில் அடைப்பு எற்பட்டு துர்நாற்றம் வீசும்போது அதை சமூக அக்கறையுடன் சுத்தப்படுத்த முன்வருகின்றோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சாக்கடை நீரில் கால் பட்டுவிடக்கூடாது என்பதற்காக பார்த்துப் பார்த்து ஒதுங்கி நடக்கும் நாமும் மனிதர்கள் தான், பல்லாயிரக்கணக்கான மக்களின் மலமும், சிறுநீரும் மற்றும் செத்துப்போன மிருகங்களின் உடல்களும் மிதந்து வரும் சாக்கடையை புனித ஆறாகக் கருதி எந்தவித சலனமும் இல்லாமல் உள்ளே இறங்கி தொழில் தர்மத்தைக் காக்க துன்பத்தை நாளும் அனுபவிக்கும் அவனும் மனிதன்தானே. அசுத்த நீரில் தலை நனைந்து, வாய், காது, மூக்கு வாழியாக நீர் நுழைய சாக்கடைப் புழுவைப் போலத் துடித்து சமூகத்தின் சுத்தத்தைக் காக்க தன்னையே அர்ப்பணிக்கும்போது அவர்களுக்கு நேரும் துன்பத்தை நம்மில் எவரேனும் உணர்ந்ததுண்டா? போற்ற வேண்டிய அவர்களை நம் சமூகம் மனிதனாகக்கூட பார்ப்பதில்லையே!

இன்றைய விளம்பரம் தேடும் உலகில் சுய விளம்பரங்களுக்கு எவரும் விதிவிலக்கல்ல, அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பிரபலங்கள் என அனைத்துத் தரப்பினருமே விளம்பரம் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர் என்பது மிகையான ஒன்று. எடுத்துக்காட்டாக தனிநபர் சுகாதாரம் பேணப்பட வேண்டும் மற்றும் சமூக சுகாதாரம் காக்கப்படவேண்டும் என்று துடைப்பத்துடன் ஊடக விளம்பரத்திற்காக போஸ் கொடுக்கும் தலைவர்கள் சுயநலவாதிகளா அல்லது பொதுநலவாதிகளா என்ற கேள்வி எழுகிறது. கறைகளையே பார்த்திராத வெண்ணிற ஆடை, கையிலோ துடைப்பத்தை எடுத்தாலே போதும் அவர்களை சமூக சுகாதாரத்தை காக்கிற சமூகவாதிகள் என்கிறது ஊடகங்கள் அதுவே நாளை வரப்போகிற காலரா மலேரியா போன்ற எண்ணற்ற நோய்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற நினைத்து சாக்கடையானாலும் சரி, அது கழிவுகளின் தொட்டியானாலும் சரி சமூக அக்கறையுடன் சுத்தம் செய்யும் சமூகவாதிக்கு உடுத்த நல்ல ஆடைகள் இல்லை, சமூகத்தில் மரியாதை இல்லை ஏன் சமூக சுகாதாரத்தை பேணுபவனுக்கே சமூகத்தில் மக்களோடு மக்களாக வசிக்கக்கூட இடமில்லையே. பணம் மற்றும் அதிகாரம் இரண்டிற்காக மக்கள் முன் நடிக்கும் கறைபடியா சட்டைகாரர்களுக்கு பத்திரிக்கைச் செய்தியில் முதல் பக்கமும் எதையும் எதிர்பாராது சமூக நலனுக்காக தீண்டாமைக் கொடுமையை கறைபடிந்த ஆடையாக அணிந்து உழைப்பவனுக்கு பத்திரிக்கைச் செய்தியில் கடைசி பக்கத்தில் கூட இடமில்லையே ஏன்? சமூகவாதிக்கும் பொதுநலவாதிகளுக்கு விளம்பரம் தேவையில்லையோ?

மனித மலத்தை மனிதனே அகற்றும் முறை ஆங்கிலேயர்களின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. நாம் அடிமைப்பட்டு இருந்தபோதே தலித்துகளும் அடிமைப்பட்டிருந்தனர் என்பது ஒன்றும் வியப்பதற்கில்லை. ஆனால் சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் தலித்துகள் மனித மலத்தை அள்ளப் பணிக்கப்படுவதுதான் நாம் பெற்ற உண்மையான சுதந்திரமா என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு தலித்துகளை, இதுதான் நம் பரம்பரைத் தொழில் என்று அவர்களுக்குள்ளாகவே எண்ணம் வரும் அளவுக்கு அடிமைப்படுத்தியுள்ளோமே இதுவா சுதந்திரம்? தலித் மக்களின் ஒட்டுமொத்த சுதந்திரத்தையுமே பரித்துவிடு, இன்று ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம், மற்றும் தனிமனித சுதந்திரம் பற்றிப் பேச நமக்கு என்ன அருகதை இருக்கிறது என்றெண்ணிப் பார்க்க வேண்டும். எல்லோரும் எல்லாத் தொழில்களையும் செய்யலாம் என்று கூறும் அரசியல் சட்டம்கூட, தலித்துகள் என்றாலே துப்புரவு மற்றும் மனித மலத்தை அகற்றுவது என்ற சமூக நடைமுறை ஆதரித்து வருவதாகத்தான் தோன்றுகிறது. எல்லாத் துறைகளிலும் இட ஒதுக்கீடு செய்து பணி அமர்த்தும் மத்திய மாநில அரசுகள் ஏனோ துப்புரவு மற்றும் கடைநிலை தொழிலாளர்களை பணியமர்த்தும்போது மட்டும் இடஒதுக்கீட்டை கடைபிடிப்பதில்லை, அரசே பாரபட்சமாக நடந்து கொள்கிறதுதானே, தீண்டப்படாதவர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டாத துறை துப்புரவுப் பணிதான். இதில் பாரபட்சத்திற்கு இடமில்லை, ஏனென்றால் துப்புரவுப் பணி முழுவதும் தீண்டப்பாடாதவராக கருதப்படும் தலித்துகளின் வசமே என்று சொல்லும் அளவுக்கு சமூக ஏற்றத்தாழ்வை அரசே ஆதரித்து வந்திருக்கிறது என்று தானே அர்த்தம்.

தலித் மக்கள் தீண்டாமையின் உச்சமான மனிதக்கழிவை அகற்ற பணிக்கப்படுவது இந்திய அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமை சரத்துக்களான 14, 17, 21 மற்றும் 23 க்கு எதிரானது. தலித் மக்கள் தங்களுக்கான ஒட்டுமொத்த மனித உரிமையையே இழந்து சமூகத்தில் அடிமட்டத்தில் இருக்கின்றனர். இந்தியாவில் தலித் சமுதாய மக்கள் அடிமைப்பட்டு இருப்பது மேம்பட்ட சமுதாய வளர்ச்சிக்கும் வித்திடமுடியும் என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி  நாட்டில் 2.6 மில்லியன் உலர் கழிப்பறைகள் உள்ளன. இவற்றில் 13,14,652 கழிப்பறைகள் சாக்கடையில் நேரடியாகவே கலந்துவிடுவதாகவும், 7,94,390 உலர் கழிப்பறைக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதாகவும் ஆய்வு கூறுகிறது. உலர் கழிப்பறைகளில் உள்ள மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறையில் 73% உலர் கழிப்பறைகள் கிராமப்புறங்களிலும் மீதமுள்ள 27% உலர் கழிப்பறைகள் நகர்ப்புறங்களிலும் செயல்படுவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 1.3 மில்லியன் மக்கள் மனிதக் கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் அதிகப்படியானவர்கள் பெண்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று நம் நாட்டில் கிராமங்களே அதிக அளவில் உள்ளதால்தான் காந்தி கூட கிராமப்புறங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நம் நாட்டின் வளர்ச்சி அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனாலேயே, கிராமம் உயர நாடு உயரும் என்று குறிப்பிட்டார். கிராமப்புறங்களின் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டி எண்ணற்ற திட்டங்களை வகுத்துள்ள மத்திய மாநில அரசுகள் அதை முறையாகச் செயல்படுத்த தவறிவிட்டது. துப்புரவு தொழிலாளர் நலனுக்காகவும், கிராமப்புற சுகாதாரத்துக்காகவும் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் மலம் நீக்குவதற்கு மனிதனை பயன்படுத்துதல் மற்றும் உலர் கழிப்பறைகளைக் கட்டுதல் (தடுப்புச்) சட்டம் 1993.  இச்சட்டத்தின் மூலம் உலர் கழிப்பறைகளை நவீன கழிப்பறைகளாக மாற்றுவதற்கு அரசு மானியம் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் கட்டுவதற்கான் திட்டம் கொண்டுவரப்பட்டது. மனிதக் கழிவை மனிதனே அகற்றும் இழிநிலையை சமூகத்தில் இருந்து முற்றிலும் அகற்றிவிடுவோம், அத்துடன் திறந்தவெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் ஒழித்துவிடுவோம் என்று கூறி அதிகப்படியான கிராமங்களில் தண்ணீர் வசதிக்கோ, பராமரிப்பு வசதிக்கோ முறையான ஏற்பாடுளைச் செய்யாமல் பொதுக் கழிப்பிடம் மற்றும் சுகாதார வளாகம் என்று கட்டிடங்கள் கட்டப்பட்டு மக்கள் பணம் வீணடிக்கப்பட்டது, கிராமப்புறங்களில் 90% மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலை உள்ளதை அறிந்தாவது மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த அரசுகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை கூட பல பொதுக் கழிப்பிடங்கள் கட்டியது முதலே பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதை நாம் காணமுடியும். இப்படி பல செயல்பாடுகள் சிறப்பாக இல்லாத காரணத்தால், சில மாற்றங்களுடன் 2013-ல் புதிய சட்டதிருத்தத்தை உருவாகியது மத்திய அரசு.

மனித கழிவு அகற்றும் தொழிலாளர் தடை மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வுச் சட்டம் 2013-ன் முக்கிய அம்சங்கள்:

· மலம் அள்ளுதல், செப்டிக் தொட்டிகளை வாருதல், சாக்கடைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை இனியும் எவரும் தொடரக்கூடாது என்பதுதான் சட்டத்தின் முதற்நோக்கம்.

· மலம் அள்ளுதல், செப்டிக் தொட்டிகளை வாருதல், சாக்கடைகளைச் சுத்தம் செய்யப் பணிப்பதும், செய்வதும் சட்டப்படி குற்றம் என்றும் மீறினால் இரண்டு வருடம் சிறைத் தண்டணை மற்றும் இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மறுபடியும் இதே குற்றத்தைச் செய்தால் ஐந்து வருடம் சிறை, ஐந்து லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

· இச்சட்டம் நடைமுறைக்கு வந்து ஒன்பது மாதங்களுக்குள் நாடு முழுவதும் மனிதர்கள் மலம் அள்ளும் வடிவிலான உலர் கழிப்பறைகளை கண்டறிந்து முற்றிலும் அகற்றிவிட வேண்டும், அல்லது நிதியுதவி பெற்று தண்ணீர் வசதியுடன் கூடிய நவீன கழிப்பறைகளாக மாற்ற வேண்டும்.

· சட்டத்தின் கீழ்தண்டனை பெற்றவர் அதை எதிர்த்து எந்த நீதிமன்றங்களுக்கும் செல்லமுடியாது (non-bailable)

· மனித கழிவு அகற்றும் தொழிலாளர்களின் கணக்கெடுப்புப் பணியை துறை வாரியாக தயாரித்து சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் கண்காணித்து மத்திய வேலைவாய்ப்பு மற்றும் சமூக நீதித் துறைக்கு சமர்பிக்கவேண்டும்.

· மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளாக
o அடையாள அட்டை வழங்க வேண்டும்
o முதற்கட்ட நிவாரணத்தொகை வழங்க வேண்டும்
o மனித கழிவு அகற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்
o மனித கழிவு அகற்றும் தொழிலாளர்களுக்கு நிலம் மற்றும் வீடு கட்ட உதவித் தொகை வழங்க வேண்டும் அல்லது உதவித்தொகையுடன் வீடு வழங்க வேண்டும்.
o மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தில் குறைந்தது ஒருவருக்காவது உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி அளிக்க வேண்டும்
o மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தில் குறைந்தது ஒருவருக்காவது மாற்றுத் தொழில் செய்வதற்கான மானியம் மற்றும் வங்கியின் மூலம் கடன் வழங்க வேண்டும்.

· கண்காணிப்பு அமைப்புகள்:

நிலைகள்
நிர்வாக தலைமை
வட்டம்
வட்டாட்சியர்
மாவட்டம்
மாவட்ட ஆட்சியர்
மாநிலம்
மாநில முதல்வர்
மத்தியில்
மத்திய வேலைவாய்ப்பு மற்றும் சமூக நீதித் துறை

கடந்த மார்ச் 27, 2014-ல் உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்தது, அதில் அனைத்து மாநில அரசுகளும் உடனடியாக மனிதக் கழிவு மனிதர்களால் அகற்றப்படுவதை தடை செய்ய வேண்டும், அவர்களின் மறுவாழ்விற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அதே போல மத்திய வேலைவாய்ப்பு மற்றும் சமூக நீதித் துறையின் உத்தரவுப்படி மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் உள்ள மனிதக்கழிவு அகற்றும் பணியாளர்களை கணக்கெடுத்து அதன் முடிவை சமர்பிக்க வேண்டும். அந்த பட்டியலின் மூலம் பயனாளிகளுக்கு முதற்கட்ட நிவாரணத்தொகை மற்றும் மறுவாழ்விற்கான பணிகள் தொடரப்படும் என்று அறிவித்திருக்கிறது.

2013 சட்டப்படி துறைவாரியாக கணக்கெடுக்கப்படும் போது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் துப்புரவுத் தொழிலாளர்களே மனிதக் கழிவை அகற்றும் வேலையையும் சேர்த்து செய்கின்றனர் அப்படிப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்ட நகராட்சியே கணக்கெடுப்பின் போது இந்த பணியாளர்களை பயனாளிகளின் பட்டியலில் சேர்க்காமல் விட்டிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் அவர்கள் துப்புரவு மற்றும் மனிதக்கழிவுகள் ஆகியவற்றை சேர்த்து செய்வதனால் அவர்களை துப்புரவாளர் பட்டியலிலேயே வைத்துவிட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி கழிவு அகற்றும் தொழிலாளர்கள் அதிகமாக படித்தவர்கள் அல்ல அதனால் அரசு விளம்பரங்களை படித்து புரிந்து கொள்வது கடினம். இப்படி இருக்கும் சூழ்நிலையில் அந்தந்த ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் கணக்கெடுப்பின் போது எப்படி செயல்பட்டன என்பது தெரியவில்லை, அதற்கான விழிப்புணர்வையும், அவர்களுக்கு உதவ அரசு எப்படிப்பட்ட நடவடிக்கைளை எடுத்தது என்பது தெரியவில்லை.

சட்டப் பிரிவு 2 (1) (e)-ன் படி உலர் கழிப்பறையை அதிகமாக பயன்படுத்துவது இரயில்வே துறைதான் ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு கழிவறை என்று கணக்கிட்டால் 2013 திருத்தச் சட்டத்தை முதலில் மீறுவது இரயில்வே துறைதான். அதிகப்படியான மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் இன்றுவரையும் இரயில் பாதைகளில் மனிதமலத்தை சுத்தம் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். உச்ச நீதிமன்றம் கூட இரயில்வே துறை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் இந்தப் பிரச்சனைக்கு முடிவுகட்டவும். இரயில் பாதையில் உள்ள மனிதக்கழிவுகளை கையால் சுத்தம் செய்யக்கூடாது மாறாக அதிகப்படியான வேகத்தில் தண்ணீரை உந்தித்தள்ளும் high speed water jet ஐ பயன்படுத்த வேண்டும் என ஆணை பிறப்பித்தது. மற்ற மேலை நாடுகளில் பயன்படுத்தப்படும் இரயில் வண்டிகளில் உள்ள கழிப்பறைக் கழிவுகள் இரயில் வண்டிகளிலேயே சேமிக்கப்பட்டு மனிதனின் கைபடாமலேயே சுத்தம் செய்யப்படுகிறது. இந்த செயல் திட்டத்தை ஏன் இரயில்வேத் துறை செயல் படுத்தக்கூடாது.

சட்டப் பிரிவு 4(1) –ன் படி உலர் கழிப்பறைகளை கணக்கெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரி பட்டியல் இட இரண்டு மாதங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது, உலர் கழிப்பறை என்பதற்கு விளக்கமும் தரப்பட்டுள்ளது. அதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மக்கள் பொது இடங்களிலும் ஊரின் ஒதுக்குப்புறங்களிலும்தான் மலம் கழிக்கும் நிலையில், வெரும் உலர் கழிப்பறைகளை மட்டுமே சட்டத்தில் குறிப்பிட்டுவிட்டு, திறந்தவெளியில் மலம் கழிக்கும் இடங்களை சேர்க்காமல் விடுபட்டுள்ளது. உலர் கழிப்பறை என்று கூறும் சட்டம் ஏன் திறந்தவெளி கழிப்பிடங்களை கணக்கில் கொள்ளவில்லை.

நகப்ர்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள உலர் கழிவறைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறது அரசு, இன்றும் பல நகரங்களில் உள்ள வீடுகளின் கழிப்பறைகள் தெருச்சாக்கடையுடனும், பாதாளச் சாக்கடையுடனும் இணைக்கப்பட்டுள்ளதை நம்மால் காணமுடியும். இப்படி மனிதக்கழிவுகளை தனியாக சேமிக்க தொட்டி அமைக்காமல் சாக்கடை கால்வாயில் கலக்கும்படி அமைக்கப்படுவதால் சாக்கடை முழுவதும் மனித மலம் அதை சுத்தம் செய்ய இறங்க வேண்டியதென்னவோ சாதியால் அடக்கப்பட்ட மனிதன். வீட்டு கழிப்பறை என்ற போர்வையில் பயன்படுத்தப்படும் இந்த உலர் கழிப்பறையைத் தடுக்க நகராட்சிகளும் மாநகராட்சிகளும் என்ன திட்டம் வைத்துள்ளன, இதை செயல்படுத்த அரசு என்ன மாதிரியான திட்டத்தை கையில் எடுக்கப் போகிறது.

2013 சட்டத்தில் மனிதக்கழிவு அகற்றுபவர் என்பதற்கு ஓர் விளக்கவுரை தந்துள்ளது, அதில் எந்த விதமான உபகரணங்களும் இன்றி மனிதக் கழிவை சுத்தம் செய்கிறவன் தான் உண்மையான மனிதக்கழிவு அகற்றும் தொழிலாளி என்று, இதுதான் இந்த சட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஓட்டை, காரணம் ஆரம்பக்காலத்தில் இருந்தே சில உபகரணங்களை கையாண்டு வந்துள்ளனர் ஆனால் தற்போது அதனுடன் கையுறை, முகவுறை, மற்றும் சிலவற்றை தந்துவிட்டு அவர்களை மனிதக்கழிவு அகற்றும் தொழிலாளர்கள் இல்லை என்று கூறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. கையுறை மற்றும் முகவுறை அணிவதால் மட்டும் அவர்களின் இழிநிலை மாற்றம் பெற்றுவிடுமா? அல்லது முழுமனதுடன் கழிவை அகற்ற முன்வருவான் என்று எவ்வாறு எண்ண முடியும்?

மனித கழிவு அகற்றும் தொழிலாளர் தடை மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வுச் சட்டம் 2013 சரியாக செயல்படுத்தப்படுமா பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பலன் கிட்டுமா என்று பாதிக்கப்பட்ட மக்கள் ஒருபுறமும் சமூக ஆர்வலர்கள் மறுபுறமும் எண்ணும் வேளையில், முழுக்க முழுக்க அரசு இதற்கான செயல் வடிவத்தைத் தான் நல்குமே தவிர சட்டம் முறையாக நடைமுறைப்படுத்துவது அதிகாரிகளின் கையிலும், மக்கள் பிரதிநிதிகளின் கையிலும் கடைசியாக மக்களின் கையிலும் தான் உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் எவ்வாறு மக்களை நல்வழிபடுத்தியும் சமூக சுகாதாரத்தையு எப்படி அதற்கான மாற்றத்தை மக்களிடமிருந்தே உருவாக்க வேண்டும். இதற்கு உதாரணமாக, கர்நாடக மாநிலத்தில், பெக்கினாகேரி என்ற கிராமத்தினர், பொது இடம் ஒன்றில் மலம் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனராம். அவ்வாறு செய்ய வேண்டாம் என கிராம கவுன்சில் கேட்டுக் கொண்டும், அதற்கு யாரும் செவிசாய்க்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த கிராம கவுன்சில் உறுப்பினர்கள், ஒவ்வொரு நாளும், கிராமத்தின் மலம் கழிக்கும் அந்த பொது இடத்தில், அதிகாலையிலேயே போய் நின்று கொள்வார்களாம். மலம் கழிக்க வரும் ஒவ்வொருவரையும் பார்த்து, குட் மார்னிங் சொல்வார்களாம். தர்ம சங்கடத்திற்கு ஆளாகும் மக்கள், மலம் கழிக்காமல் வீட்டிற்கு சென்று விடுவார்காளாம். இதனால் கிராம பொது இடத்தில் மலம் கழிப்பது படிப்படியாக நின்று, தற்போது கிராமமே மாறிவிட்டதாம். இப்போது, கிராம கவுன்சில் உறுப்பினர்கள் குட் மார்னிங்கிற்கு குட்பை சொல்லிவிட்டார்கள் அத்தோடு மக்கள் பனியை செய்த திருப்தியும் ஏற்பட்டுவிட்டதாம் (தினமலர், குட் மார்னிங் மூலம் மலம் கழிப்புக்கு குட்பை, நவம்பர் 21, 2014). ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் பிரதிநிதிகள் இதே போன்று செய்ய வேண்டியதில்லை, மாறாக தங்கள் பகுதியில் செயல்படாமல் உள்ள பொது கழிப்பறைகளை சரி செய்து அதை முறைப்படுத்த வேண்டும், பொது இடத்தை அசுத்தம் செய்யாமல் முழுச் சுகாதாரம் உள்ள பகுதியாக மாற்ற மக்கள் பிரதிநிதிகள் தங்களால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு தனிநபர் மற்றும் பொது சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வை தர முன்வரவேண்டும் அத்தோடு அதற்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்.

மக்களும் தங்களுக்கான சுகாதாரத்தை எப்படிப் பேணுவது அவசியமோ அதுபோல சமூக சுகாதாரத்திலும் அக்கறை உள்ளவராக மாற்ற வேண்டும். முடிந்தவரையில் கழிவறையை வீடுகளில் கட்டியும் பொது கழிப்பறைகளை பயன் படுத்தியும் வாழ்வது மிகவும் முக்கியம் என்பதை உணர வேண்டும். எதற்கெடுத்தாலும் அரசையும் அரசு அதிகாரிகளையும் குறை கூறுவதை விடுத்து தங்களுக்கான மாற்று சிந்தனையை தாங்களே உருவாக்க முன்வரவேண்டும். அரசுதான் கழிவறையை கட்டித்தர வேண்டும் என்று எண்ணாமல் தாங்களே முன்வந்து அரசுதிட்டத்தின் உதவியுடன் தங்கள் சுகாதாரத்தையும் சமூக சுகாதாரத்தையும் காக்கும் பொருட்டு கழிவறைகளை வீடுதோரும் கட்டி பயன்படுத்த வேண்டும். மனித நேயம் மற்றும் மனித உரிமை காக்கப்பட வேண்டும் என்று வாய்வார்த்தையாகக் கூறிவிட்டால் மட்டும் போதாது மாறாக அதை உணர்வுப்பூர்வமாக உணர வேண்டும். திறந்தவெளியில் மலம் கழித்துவிட்டுச் செல்பவன் ஒருவன் அதேமலத்தை கைகளால் அள்ளி சுத்தம் செய்வது என்பதுதான் நம் சமூகத்தில் மனித நேயமா? மனித மாண்பா? அல்லது மனித உரிமையா? தனி மனித உரிமை கூட மற்றவரின் உரிமையை பறிப்பதற்கு உரிமையில்லாத போது ஒருவன் செய்த தவறுக்காக மற்றொருவனை சாதியின் பெயரால் தண்டிப்பதா என்ற எண்ணம் மனதில் உருவாகியுள்ளாது. அப்படி என்றால் நமது சட்டப் புத்தகத்தில் முகப்புரையில் கூறப்பட்டுள்ள சுதந்திரம், தனிமனித சுதந்திரம், சமூக நீதி மற்றும் சகோதரத்துவம் என்பது எல்லாம் வெறும் எழுதப்பட்ட வார்த்தைகள் மட்டும் தானா என்றெண்ணத் தோன்றுகிறது. திறந்தவெளியில் மலம் கழிப்பது மற்றும் மனித கழிவு அகற்ற தொழிலாளர்களை பணிப்பது என்பது இரண்டுமே சட்டத்திற்கு புறம்பானது. இதைத்தடுக்க கடுமையான சட்டங்கள் இருந்தாலும் சமூக கட்டமைப்பை மாற்ற சட்டத்தினால் முடிவதில்லை, சமூக கட்டமைப்பை மாற்ற வேண்டுமானால் மக்களின் மனங்கள் மாறவேண்டும். இது மட்டுமே சாத்தியம், சமூகம் முன்னேற்றப் பாதையில் பயணிக்க வைக்க……………

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க