-பாவலர் கருமலைத் தமிழாழன்

முன்னோர்கள்   தூய்மையாக   வைத்தி   ருந்த
   மூச்சிழுக்கும்   காற்றினிலே   நஞ்சைச்   சேர்த்தோம்
முன்நின்று   காற்றிலுள்ள   அசுத்தம்   நீக்கும்
   முதலுதவி   மரங்களினை   வெட்டிச்   சாய்த்தோம்   Tamizhazhan
பொன்கதிரை   வடிகட்டி ஒளிய   னுப்பும்
   பொற்கவச   ஓசோனை   ஓட்டை   செய்தோம்
என்னவைத்தோம்   சந்ததிக்கே   தன்ன லத்தால்
   எல்லாமும்   கலப்படத்தால் கெடுத்து   வைத்தோம்!

ஆயிரமாம்   ஆண்டுகளாய்   சேர்த்து   வைத்த
   அடிநீரைக்   குழாய்வழியே   காலி   செய்தோம்
பாய்மரம்போய்   கடல்நீரில்   எண்ணெய்   குண்டால்
   பரிதவிக்க   மீன்களினைச்   சாக   டித்தோம்
தாய்மண்ணில்   உரங்களினைப்   போட்டுப்   போட்டுத்
   தரும்விளைச்சல்   எனஉறிஞ்சிச்   சக்கை   செய்தோம்
சேய்களுக்கே   என்னவைத்தோம்   தன்ன   லத்தால்
   செழித்திருந்த   இயற்கையினைக்  கெடுத்த   வைத்தோம்!

அரணாக   நமைக்காத்த   காட்டை   வெற்பை
   அறுத்துடைத்தே   மழைவளத்தை   மலடு   செய்தோம்
வரமாகப்   பெற்றவயல்   தோப்பை   வீடாய்
   வடிவமைத்து   விளைச்சலுக்கு   முடிவு   செய்தோம்
கரமாக   உதவிவந்த   ஆற்று   நீரில்
   கழிவுசேர்த்து   நோய்பெருக்கி   முடமாய்ச்   செய்தோம்
சிரமிழந்த   உடலாகச்   சந்த திக்கே
   சீர்இயற்கை   தனைமாய்த்தே   அழிவை   வைத்தோம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.