Category: சமயம்

  • மூவுல கேத்திடும் மூஷிக வாகனா!

    மூவுல கேத்திடும் மூஷிக வாகனா!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    முத்திக்கு வித்தான முக்கண்ணன் மகனே
    எத்திக்கு பார்த்தாலும் இருந்திடு கணபதி
    சந்திக்குச் சந்தி சன்னதி ஆகியே
    கொண்டிடும் கணபதி குழந்தைக் கடவுளே

    கைத்தலம் நிறைகனி அப்பமொ டவல்பொரி
    எப்பவும்  ஏற்றிடும் எம் கணநாதா
    முத்தமிழ் நிறைந்திட வைத்திடும் அரன்மகன்
    மூவுல கேத்திடும் மூஷிக வாகனா

    மோதகம் விரும்பிடும் மூஷிக வாகனா
    காதலால் அடியார் கற்கண்டு படைப்பார்
    இனிப்பே உனக்குப் பிடிக்கும் என்று
    எண்ணிடும் அடியவர் இனிப்பாய் படைப்பார்

    ஆனை முகத்துடன் இருப்பாய் நீயும்
    ஆனால் குழந்தையாய் தெரிவாய் அப்பா
    பானகம் பல்பழம் தேனெலாம் உனக்குப்
    படைத்துமே அடியார் பரவசம் அடைவார்

    மஞ்சளில் புல்லில்  சாணத்தில் அமர்வாய்
    மக்கள் விரும்பும் இடமெலாம் அமர்வாய்
    விதிமுறை பாராய் மேலாய் இருப்பாய்
    பரவிடும் அடியவர் பக்கமே நிற்பாய்

    உன்னைத் தொட்டே அனைத்தும் தொடங்கும்
    தொடங்கும் அனைத்தும் துலங்கிட வைப்பாய்
    வெவ்வினை வேரற வைத்திடும் வல்லமை
    கொண்டவன் நீயே விக்ன விநாயகா

    மனிதனும் மிருகமும் இணைந்திடு உருவம்
    மருளை அகற்றிட வந்தநல் வடிவம்
    மனிதனைப் புனிதனாய் ஆக்கிடும் வகையில்
    மிருக இயல்பினைக் களைந்திடும் உருவம்

    நெற்றியில் குட்டிக் குனிந்து எழுந்து
    உன்னைக் கும்பிட வைத்தவன்  நீயே
    அத்தனை மாந்தர்க்கு அது மருந்தாகும்
    அகத்தில் அமர்த்திட வைத்தவன் நீயே

    மருந்தாய் இருக்கிறாய் விருந்தாய் இருக்கிறாய்
    மாபெரும் சக்தியாய் விளங்கிறாய் நீயும்
    அணுகிட அடியார் அருகினில் அணையும்
    ஆனந்த சொரூபமாய் அமைகிறாய் விநாயகா

    ஆவணிச் சதுர்த்தி ஆனை முகவனை
    அடியவர் ஏத்திப் பிடித்திடு விரதம்
    நலமுடன் வாழ வேண்டியே அடியவர்
    விநாயகன் திருவடி தொழுதிடு விரதம்

    ஆலயம் அனைத்தும் ஆவணிச் சதுர்த்தி
    ஆன்மீக ஒளியை பரப்பியே நிற்கும்
    ஆனை முகத்தான் அருளைப் பெற்றிட
    ஆவணிச் சதிர்த்தி அருந்துணை ஆகும்

    Share
  • கீதையைப் படிப்போம் பாதையை அறிவோம் !

    கீதையைப் படிப்போம் பாதையை அறிவோம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    எண்ணாய் இருப்பான் எழுத்தாய் இருப்பான்
    கண்ணாய் இருப்பான் மணியாய் இருப்பான்
    உண்ணும் உணவாய் பருகும் நீராய்
    எல்லாம் ஆகி இருப்பான் கண்ணன்

    கடலாய் இருப்பான் அலையாய் எழுவான்
    முகிலாய் இருப்பான் மழையாய் பொழிவான்
    வயலாய் இருப்பான் பயிராய் இருப்பான்
    வளமாய்க் கண்ணன் நிறைந்தே இருப்பான்

    ஆக்கும் சக்தியாய் அழிக்கும் சக்தியாய்
    காக்கும் சக்தியாய் கண்ணன் இருப்பான்
    நோக்கும் இடமெலாம் இருப்பான் கண்ணன்
    வாக்கும் கண்ணனே வரமும் கண்ணனே

    எல்லாச் சுவையிலும் இருப்பான் கண்ணன்
    கண்ணன் இல்லாச் சுவையே இல்லை
    பாலும் அவனே தேனும் அவனே
    பழத்தின் சுவையாய் இருப்பவன் அவனே

    பிறப்பைக் கொடுப்பான் இறப்பைக் கொடுப்பான்
    பிறவிப் பிணியை நீக்கவும் செய்வான்
    அறத்தை மறந்தால் அழிக்கவும் செய்வான்
    அன்பைக் காட்டி அணைத்துமே நிற்பான்

    அன்பாய் அழைத்தால் அருகில் வருவான்
    அமைதி தருவான் ஆறுதல் அளிப்பான்
    ஆணவம் கொண்டால் ஆத்திரம் அடைவான்
    அவனே ஆசான் அவனே அரசன்

    நல்வழி காட்டும் நண்பனும் ஆவான்
    நயமுடன் உரைக்கும் நாயகன் அவனே
    தொல்லை கொடுத்தால் புகட்டுவான் பாடம்
    தூய்மையாம் மனத்தில் துயிலுவான் கண்ணன்

    இசையும் அவனே இலக்கியம் அவனே
    இங்கிதம் அவனே சங்கீதம் அவனே
    அசையும் பொருளும் அசையாப் பொருளும்
    அனைத்தும் கண்ணன் இருப்பிடம் ஆகும்

    கண்ணனே பரம்பொருள் கண்ணனே அனைத்தும்
    கண்ணனே அனைத்துமாய் ஆகியே இருக்கிறான்
    பூதல மாந்தர் புனிதமாய் இருக்க
    கீதையை ஈந்ததும் கண்ணனே ஆவான்

    கீதை என்பது வேதமே ஆகும்
    கீதையைப் படித்தால் கீழ்க்குணம் அகலும்
    கீதையில் இல்லா வழிமுறை இல்லை
    கீதையைப் படிப்போம் பாதையை அறிவோம்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 5

     

    63 நாயன்மார்களின் வரலாறு 

    4. மெய்ப்பொருள் நாயனார்

     

    மங்கையைப் பாக மாக
    வைத்தவர் மன்னுங் கோயில்
    எங்கணும் பூசை நீடி
    ஏழிசைப் பாட லாடல்
    பொங்கிய சிறப்பின் மல்கப்
    போற்றுதல் புரிந்து வாழ்வார்
    தங்கள்நா யகருக் கன்பர்
    தாளலால் சார்பொன் றில்லார்.

    சிவஞானம் மட்டுமே மெய்ப்பொருள், ஏனைய மற்ற உலகப் பொருள்கள் அனைத்தும் பொய்ப்பொருள் என்பதை வெளிப்படுத்தும் இந்நாயனாரின் வரலாறு. சிவவேடம் தரித்த யாவரேனும் அவர் எத்தகையவராயினும் பேதம் ஏதும் காணாமல் அச்சிவவேடத்தையும் போற்றிப் பரவும் ஒரு உத்தம எண்ணம் கொண்ட நாயனார் இவர்.

    திருக்கோவிலூர் சோழவள நாட்டிற்கும், தொண்டை நாட்டிற்கும் இடையிலே அமைந்துள்ளது நடு நாடு. சேதி நாடு என்றும் இந்நடு நாடு அழைக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு நடுவிலே அமைந்திருப்பதால் நடு நாடு என்றும், சேதியர் என்ற ஒரு வகை மரபினர் வாழ்வதால் சேதி நாடு என்றும் பெயர் பெற்றுள்ளது. இந்நாட்டின் தலைநகரமாக அமைந்த நகரம் திருக்கோவிலூர், அட்டவீரட்டான தலங்களில் ஒன்றாகும்.

    அட்டவீரட்டானக் கோயில்கள்

    அட்டவீரட்டானம் என்பது இறைவனின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிப்பதாகும். சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர். பகைவர்களின் வீரத்தை அட்டு ஆன இடம் என்ற வகையிலும், தன் வீரத்தால் அட்டு ஆன இடம் என்ற வகையிலும் வீரட்டானம் என்னும் சொல் அமைந்தது. இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.

    1.திருக்கண்டியூர் : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்

    2.திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்

    3.திருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம்

    4.திருப்பறியலூர் : தக்கன் தலையைத் தடிந்த தலம்

    5.திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்

    1. திருவழுவூர் : கயமுகாசுரனைக் கொன்று தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட தலம்

    7.திருக்குறுக்கை : மன்மதனை எரித்த தலம்

    8.திருக்கடவூர் (அ) திருக்கடையூர் : மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.

    மேற்கண்ட எட்டு திருதலங்களிலும் எம்பெருமான் ஈசன் வீரட்டானேசுவரர் என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறார்.

    சம்பந்தரும், அப்பரும் பாடிய தொன்மையான திருக்கோவிலூர் எனும் இத்திருத்தலம் பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்நாட்டினை ஆண்ட அரசர்கள் மலாடர் என்று அழைக்கப்பெற்றனர். இவர்தம் வழியில் தோன்றியவரே மெய்ப்பொருள் நாயனார். இவர் தாம் தேடிய செல்வமனைத்தும் தில்லைக் கூத்தனின் அன்பர்களுக்கேச் சொந்தம் என்று கருதி மன நிறைவுடன் வாரி வழங்கியவர். மெய்ப்பொருள் நாயனார் சிவபெருமானாரின் திருக்கோவிலில் நடைபெற வேண்டிய அனைத்து திருவிழாக்களையும் சிறப்புற நடத்தியவர், சிவனடியார்களுக்கும் வேண்டுவன அனைத்தையும் வழங்கி வாழ்ந்து வந்தார். அனைத்திற்கும் மேலாக அரசியல் நெறி பிறழா அரும் காவலனாகவும், வாள் வலிமையும், தோள் வலிமையும் கொண்ட ஆகச்சிறந்த வீரனாகவும் இருந்தார். அத்தகைய இம்மன்னனின் அண்டை நாட்டு அரசனான முத்தநாதன் என்பவன் பன்முறை மெய்ப்பொருளாருடன் போர் புரிந்து தோற்று புறமுதுகு காட்டி ஓடியவன்! எப்படியாவது ஏதேனும் சூழ்ச்சியாலாவது மெய்ப்பொருளாரைப் பழிவாங்க எண்ணம் கொண்டான். சைவ வேடம் பூண்டு வந்த அந்த வஞ்சக எண்ணம் கொண்ட முத்தநாதன் அவ்வடியாரை வீழ்த்த முடிவெடுத்தான்.

    உண்மையான சிவனடியார் போலவே முறைப்படி ஆசாரியன் சொன்ன இடங்களில் அளவு மாறாமல் திருநீறு  பூசி பழக்கம் இல்லாதவன் என்பதால் அங்கம் முழுதும் இடம் அளவு காணாது முழு நீறு பூசிய முனிவன் போன்ற தோற்றத்துடன் வந்தான். போலியான சடைமுடியையும் பொருத்திக் கொண்டான். கையிலே ஏட்டுச்சுவடிக் கட்டு ஒன்றை ஏந்திக்கொண்டான். அதற்குள் எவரும் காண முடியாதவாறு கத்தி ஒன்றையும் மறைத்து வைத்துக் கொண்டான். இத்தகைய, போலித் தோற்றத்துடன் முத்தநாதன் திருக்கோவிலூர் நகரத்தில் மெய்ப்பொருள் நாயனார் அரண்மனையைச் சென்று அடைந்தான். அரண்மனைக் காவலர்களும் அவன் மெய்யான சிவனடியார் என்று நினைத்து வணங்கி வழிவிட்டனர். முத்தநாதனும் எந்தத் தடையுமின்றி மன்னன் உறங்கும் சயன அறை வரை வந்துவிட்டான். பள்ளியறை வாயிலிலே மன்னவனின் மெய்க்காப்பாளன் தத்தன் என்பவன் வாளோடு நின்று கொண்டிருந்தவன், மன்னர் உறங்கும் நேரம் என்பதால் அவரைச் சந்திக்க இயலாது என்கிறான்.

    முத்தநாதனோ கோபமுற்றவனாக, “என்னையேத் தடுக்கின்றாயா? மன்னவருக்கு இறையவனின் மெய்ப்பொருளைக் கூற வந்த எனக்கே தடையா? என்று கடிந்தவாறு தத்தனையும் மீறி உள்ளே நுழைந்தான். உறங்கிக் கொண்டிருந்த மன்னவனின் கால்பகுதியில் மாதேவி அமர்ந்திருந்தார். முத்தநாதன் உள்ளே நுழைந்ததைக் கண்டவுடன் மாதேவியார் சட்டென்று கட்டிலிலிருந்து கீழே இறங்கினார். கணவரையும் எழுப்பினார் அம்மையார். சிவநாமம் சொல்லிச் சென்ற முத்தநாதனைக் கண்ட மெய்ப்பொருளார் அகமகிழ்ந்து கும்பிட்ட கையோடு எழுந்து நின்றார்.
    முத்தநாதனும், “மங்களம் பெருக” என்றான். மெய்ப்பொருளாரும், “இந்நேரத்தில் தாங்கள் இங்கு எழுந்தருளியுள்ள காரணம் யாது?” என்று வினவினார்.

    மங்கலம் பெருக மற்றென் வாழ்வுவந் தணைந்த தென்ன

    இங்கெழுந் தருளப் பெற்ற தென்கொலோ என்று கூற

    உங்கள்நா யகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண்மேல்

    எங்குமில் லாத தொன்று கொடுவந்தேன் இயம்ப வென்றான்.

    முத்தநாதனும், வஞ்சகப் புன்னகையை உதட்டில் சுமந்தவாறு, “ உங்கள் நாயகர் முற்காலத்தே அருளிச் செய்த சைவ ஆகம நூல்களுள் உலகில் வேறெங்கும் கிடைத்திராத அரியதொரு நூலை உமக்கு உபதேசிக்கும் நோக்கோடு கொண்டு வந்துள்ளேன்” என்றான்.

    மெய்ப்பொருளாரும் அவ் ஆகமத்தை வாசித்து தாம் கடைத்தேற விரைந்து அருள் செய்ய வேண்டும் என்று வேண்டினார். உடனே முத்தநாதனும், “நானும் நீயும் தனியிடத்து இருக்கவேண்டும், உன் தேவி இவ்விடத்தை விட்டு அகல வேண்டும்” என்றபோது அதற்கு மன்னனும் இசைந்தான்.

    மன்னன் முத்தநாதனை உயர்ந்த ஆசனத்தில் அமரச்செய்து, தாமும் தாழ்ந்து தலைகுனிந்து அமர்ந்து உபதேசித்து அருள வேண்டினார். உடனே முத்தநாதனும் திருவெண்ணீற்றை எடுத்து தாமும் உடம்பிலும் நெற்றியிலும் பூசிக்கொண்டு மன்னனுக்கும் கொடுத்த பின்பு தம் கையிலிருந்த ஏட்டுச்சுவடிக்கட்டை அவிழ்த்தான். நாயனார் பணிந்து சிரம் தாழ்த்தி வணங்கும் நேரத்தில் வஞ்சகன் அவன் தன் சுவடியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மன்னனைக் குத்தினான். அத்தகைய கடினமான நேரத்திலும் நாயனார் அந்த வஞ்சகன் முத்தநாதன் மீது எந்தவித வெறுப்பும், கோபமும் கொள்ளாது மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் என்று கூறி அவனைத் தொழுதார். குருதி வெள்ளத்திலே மிதந்த நாயனார் அக்கொடியவனின் திருநீறு அணிந்த உடம்பைப் பார்த்துச் சிவனையே நினைத்தார்.

    ஆனால் உள்ளத்தில் கொண்டிருந்த வஞ்சனையை மறைத்துத் தவவேடம் பூண்ட முத்தநாதன் மன்னனின் சயன அறைக்குள் சென்றபொழுதே, அவனைத் தடுத்து நிறுத்திய மெய்க்காப்பாளன் தத்தன், நொடிப் பொழுதில் சென்று வாட்படையால் அவனைத் தாக்கத் தொடங்கினான். தம் திருமேனியில் இரத்தம் சோர நிலத்தில் வீழ்கின்ற அந்நாயனார், ‘தத்தா நமர்’` என்று கூறித் தம் வீரம் பொருந்திய நீண்ட கையினால் தடுத்து வீழ்ந்தார்.
    நிலத்தில் சாய்ந்த மன்னனின் அன்பின் ஆழத்திற்கும், பக்தியின் உயர்விற்கும் அடிபணிந்த தத்தன், தலை வணங்கினான். தமது உள்ளம் கோபத்தால் துடி துடித்த போதும், உள்ளம் உருக, கண்கள் நீரைச் சொரிய, கைகள் தளர, உடைவாளை உறையில் போட்டபடியே அரசரைத் தாங்கிப் பிடித்தான் தத்தன்.

    அப்போது மெய்ப்பொருளார் தாங்க முடியாத வேதனையையும் தாங்கிக் கொண்டு தத்தனிடம், “தத்தா, எனக்கொரு உதவி செய்வாயா?  இவ்வடியார்க்கு எவ்வித இடரும் நேராவண்ணம் நம் எல்லைவரை அழைத்துச் சென்று விட்டு வா!” என்று ஆணையிட்டார்.

    தத்தனும் தாளாத வேதனையுடன் மன்னனின் கட்டளைக்கு அடிபணிந்து, அரக்க மனம் படைத்த அந்த முத்தநாதனை ஊர் எல்லையில் கொண்டு விட்டுவிட்டுத் திரும்பினான். தத்தன் திரும்பி வரும்வரை தம் இன்னுயிரைப் பிடித்து வைத்துக்கொண்டிருந்த நாயனார் தத்தனைக் கண்டு, “இன்றெனக் கையன் செய்தது யார் செய்ய வல்லாரென்று”, நின்றவன் தன்னை நோக்கி நிறைபெருங் கருணை கூர்ந்தார்.

    தம் இளவரசர், அமைச்சர் முதலியவர்க்கும், தம் பிரிவால் வருந்தி நிற்கும் அரசமா தேவியார், ஏனைய சுற்றத்தார் என அனைவருக்கும் தம் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் கொள்கையைக் கூறும்முகமாக, “முறையாகப் போற்றிக் காக்கத் தக்க திருநீற்றினிடத்து வைத்து வாழும் அன்பில் சோர்வு வாராது அதனை என்றும் பாதுகாத்து, இவ்வுலகில் வாழ்வீர்” எனும் கட்டளையை மொழிந்தபின் நாயனார் பெருமானின் அழகிய வீரக்கழலினை அணிந்த திருவடியை மனத்தகத்து எண்ணியிருந்தார்.

    அப்போது உமையம்மையாரின் கணவராகிய சிவபெருமான், மெய்ப்பொருளார் தம்மை மனத்தகத்து எண்ணியிருந்த வடிவே வடிவாக, அவர் முன்னிலையில் தோன்றியருளி, அவரை விண்ணுலகின்கண் வாழும் தேவர்களுக்கும் எட்டாத அருள் வடிவான தம் திருவடி நிழலில் கலந்து இன்புறுமாறு அருள் செய்ததோடு அவர் தம்மை இடைவிடாது வணங்கி வாழும் பேற்றினையும் வழங்கியருளினார்.

    மெய்ப்பொருள் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    மெய்ப்பொருள் நாயனார் அழிகின்ற பொய்ப்பொருளை பொருளாகக் கருதாமல், சிவஞானமும், திருநீறும் கண்மணியுமே  மெய்ப்பொருள் எனக்கொண்டு வாழ்ந்தவர். சிவவேடம் அணிந்தவரேயாயினும் அவர்தம் குற்றம் குறை காணாது அச்சிவ வேடத்தையும் பணிந்து, அன்புடன் போற்றிவரும் சீலத்தார்.

    மாலற நேயம் மலிந்தவர் வேடமும்

    ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே

       எனும் சிவஞான போதரின் அடியொற்றி வாழ்பவராகிறார். வள்ளலார் ‘அகத்தே கருத்து புறத்தே வெளுத்த உலகர்’ என்பார் வேதனை பொங்க.

    இப்புராணத்தின் முக்கியமான ஒன்றாகக் கருத வேண்டிய ஒன்று என்றால் அது கவிஞர் சேக்கிழார் பெருமானாரின் இரட்டை அர்த்தப் பாடல்களின் வல்லமை மிக்க கருத்துக்களே!

    மெய்யெலாம் நீறு பூசி
    வேணிகள் முடித்துக் கட்டிக்
    கையினிற் படைக ரந்த
    புத்தகக் கவளி யேந்தி
    மைபொதி விளக்கே யென்ன
    மனத்தினுட் கறுப்பு வைத்துப்
    பொய்தவ வேடங் கொண்டு
    புகுந்தனன் முத்த நாதன்.

    என்றவாறு முத்தநாதன் பொய்த்தவ வேடத்தை உவகை பெறத்தக்க ஓர் அருமை உவமையோடு விளக்குகின்றார். அதாவது கருமையான நிறத்தைத் தன்னுள் வைத்திருக்கும் ஒளி விளக்குப் போலத் தன் மனத்தில் சினத்தை வைத்துக் கொண்டு பொய்யாகிய ஒரு தவவேடத்தைக் கொண்டு முத்த நாதன் என்னும் பெயரில் சென்றான், என்கிறார்.

    மங்கலம் பெருக மற்றென் வாழ்வுவந் தணைந்த தென்ன

    இங்கெழுந் தருளப் பெற்ற தென்கொலோ என்று கூற

    உங்கள்நா யகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண்மேல்

    எங்குமில் லாத தொன்று கொடுவந்தேன் இயம்ப வென்றான்.

    இப்பாடலில் நாயனாரைப் பார்த்து, ‘மங்கலம் பெருக’ என்று வாழ்த்துவது போல் முத்தநாதன் தம் தீய எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறான். மங்கலம் பெருக என்றால் நன்மை பெருக என்று ஒரு பொருள் மேலோட்டமாகத் தெரிந்தாலும், மங்கலம் பெருக என்றால் அமங்கலம் என்ற பொருளும் உண்டு. கணவனை இழந்த பெண்கள் தாலி நீக்கும் வழமை உண்டு. அந்த நிகழ்வுக்கு தாலி பெருகியது என்று கூறுவது மரபு.

    ‘மற்று என் வாழ்வு வந்தணைந்தது’. என் வாழ்வு எந்த முயற்சியும் இன்றி இன்று வாய்ப்பு வந்தது என்பது ஒரு பொருள். என் வாழ்வு அணைந்தது என்றால் என் வாழ்க்கை இகழத்தக்கது என்றும் மற்றொரு பொருள் உள்ளது. இங்கு கவிஞரின் சொல்வன்மையைக் காண முடிகின்றது.

    அதே போன்று மெய்ப்பொருளார் முத்தநாதனிடம் வந்த காரியம் குறித்து கேட்டபோது, அவன் உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண்மேல் எங்குமில்லாத தொன்று கொடுவந்தேன், என்கிறான்.

    முத்தநாதன் பொய்வேடமணிந்த வஞ்சகன் என்பதை சூசகமாக வெளிப்படுத்துகிறார். முத்தநாதன் நம் நாயகனார் என்றோ அல்லது என் நாயகனார் என்றோ கூறாமல் அதுவரை சிவபெருமானைப் பற்றிய எண்ணமே ஏதுமின்றி பொய்த்தவ வேடம் பூண்டவன், ‘உங்கள் நாயகர்’ என்கிறான். அதுபோல் மண் உலகில் இதுவரை இல்லாத புது நூல் என்று அவன் சொன்னதையும் இது போன்ற நூல் இதுவரை மண் உலகில் இல்லை என்றும் பொருள் தொனிக்கப் பாடியுள்ளார் சேக்கிழார் பெருமான்.

    தெய்வச் சேக்கிழார், மெய்ப்பொருளாரை தாம் திட்டமிட்டபடி கொன்றுவிட்ட முத்தநாதனின் நிலை மட்டுமே வென்றது. ஆனால் மெய்ப்பொருளாரைக் குத்தியதால் அவன் தோல்வியே கண்டான். ஆக நாயனார் தம் கொள்கை வழி வென்றார். சேக்கிழார் முத்தநாதனைத் தொழுது நாயனார் கொள்கைவழி வென்றார் என்கிறார்.

    பகைவர்க்கும் அருள்வாய் நெஞ்சே என்று, தன்னைக் குத்திக் கொன்ற முத்தநாதனைக்கூட தன் மெய்க்காப்பாளர் மூலமாக பாதுகாப்பாக ஊர் எல்லைவரை கொண்டுவிடச் சொல்கிறார். தத்தனும் அரசரின் கட்டளையை ஏற்று அப்படியே செய்துவிட்டு திரும்பியபோது, இன்றெனக் கையன் செய்த தியார்செய வல்லா ரென்று நின்றவன் தன்னை நோக்கி நிறைபெருங் கருணை கூர்ந்தார், என்று மெய்ப்பொருளாரின் பெருந்தன்மையான நிலையை விளக்குகிறார் சேக்கிழார் பெருமான்.

    மெய்ப்பொருள் நாயனார் தாம் உயிர் துறக்கும் தருணத்திலும், ஈசன் மீது கொண்ட அன்பு சற்றும் குறையாததையும் அடுத்து தாம் விளக்கப்போகும் நாயன்மார் குறித்தும் சேக்கிழார்,

    இன்னுயிர் செகுக்கக் கண்டும்
    எம்பிரான் அன்ப ரென்றே
    நன்னெறி காத்த சேதி
    நாதனார் பெருமை தன்னில்
    என்னுரை செய்தே னாக
    இகல்விறன் மிண்டர் பொற்றாள்
    சென்னிவைத் தவர்முன்
    செய்த திருத்தொண்டு செப்ப லுற்றேன்.

    என்று சொல்லி விளங்கச் செய்கிறார்.

    திருச்சிற்றம்பலம்

    தொடரும்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 4

     

           பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

    63 நாயன்மார்கள் வரலாறு

                                                                      3. இளையான்குடிமாற நாயனார்

     

    இயலா விடைச்சென்ற மாதவர்க் கின்னமு தாவிதைத்த

    வயலார் முளைவித்து வாரி மனையலக் கால்வறுத்துச்

    செயலார் பயிர்விழுத் தீங்கறி யாக்கு மவன்செழுநீர்க்

    கயலா ரிளையான் குடியுடை மாறனெங் கற்பகமே

     

    இளையான்குடிமாற நாயனார், இளையான்குடி என்னும் நகரில், வேளாண் குடியில் பிறந்தவர். இன்றைய இராமநாதபுர மாவட்டத்தில், பரமக்குடிக்கு ஏழு மைல் தொலைவில் அமைந்துள்ளது இவ்வூர். உலகின் தலைசிறந்த தொழிலான வேளாண்மைத் தொழிலை மிக ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்து அதன் மூலம்  அளவிறந்த செல்வத்தைப் பெறும் இறையருளால் குபேரனைப் போல வாழ்ந்தார். பிறையணிந்த சிவனடியார்கள்பால் அளவற்ற அன்பும் மரியாதையும் கொண்டவர் மாறனார்.

    அம்பொன் நீடிய அம்பலத்தினில் ஆடு வார்அடி சூடுவார்
    தம்பி ரானடி மைத்தி றத்துயர் சால்பின் மேன்மைத ரித்துளார்
    நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற்குலஞ்செய்த வத்தினால்
    இம்பர் ஞாலம் விளக்கி னார்இளையான்கு டிப்பதி மாறனார்.

    அவர் தம்முடைய இல்லம் நாடி வரும் அடியவர்களுக்கு அன்னம் பாலிப்பதை தம் தலையாயக் கடமையாகக் கொண்டு வாழ்ந்துவந்தார்.

    அடியவர் யார், அவர் எத்தகையவர், எப்படியிருக்க வேண்டும் என்ற இலக்கணமெல்லாம் அறிந்துகொண்டு பின்னர் அவர்களுக்கு அன்னம் பாலிக்கும் வழமையறியாதவர் மாறனார். வாசலில் இறங்கி நடக்கும்போது எதிர்படும் எவரையும் அடியாராகக் கருதி அவரை வழிபட்டு அவருக்கு அமுது படைக்க தம் இல்லம் அழைத்து வந்துவிடுவார். சேக்கிழார் பெருமானார் இதனை, “நேரே வந்தவர் யாவராயினும்” என்று குறிப்பிடுகிறார். அதாவது இதன் ஆழ்ந்த பொருள் நோக்குங்கால், ஆண், பெண், ஆண்டான், அடிமை, மேல்குலம், கீழ்குலம், கற்றவன், கல்லாதவன், ஏழை, பணக்காரன் போன்று எந்த பாகுபாடும் காணாமல் அவர் யாவராயினும் ஆரம் என்பு புனைந்த அன்பர் எனும் தன்மையால் அடியவர் எனப்போற்றி வணங்கினார். அடியவர்களை எங்கனம் வழிபட வேண்டும் என்று சேக்கிழார் பெருமான் விளக்குகிறார்.

    கொண்டு வந்து மனைப்பு குந்துகு
    குலாவு பாதம்வி ளக்கியே
    மண்டு காதலினாதனத்திடை
    வைத்த ருச்சனை செய்தபின்
    உண்டி நாலுவி தத்தி லாறு
    சுவைத்தி றத்தினில் ஒப்பிலா
    அண்டர் நாயகர் தொண்டரிச்சையில்
    அமுது செய்யஅ ளித்துளார்.

    அந்த வகையில் அடியவர் எவராயினும் மெய்யன்போடு முகமன் கூறி அவர்களை வரவேற்று,  பாத வழிபாடு செய்து, இருக்கையில் அமர வைத்து மலர் தூவி வழிபாடு செய்தபின், அவர் வயிறார உண்ணும் வகையில், கைப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையையுடன் கூடிய, உணவு உண்ணல், தின்னல், நக்கல், பருகல் என நான்கு வகையாக்கியும் சமைத்து வழங்கினாராம் மாறனார். அவரவருக்கு விருப்பமான அற்புதமான உணவை மகிழ்ந்து திருவமுது செய்விப்பார். அன்றாடம் இவ்வாறு மகேசுர வழிபாடு செய்து சிவபுண்ணியத்தில் திளைத்திருந்தார். அதனால் வற்றாத செல்வமும் பெற்று பெரும் செல்வந்தராக வாழ்ந்திருந்தார். அப்படிப்பட்ட சூழலில் ஒருநாள் சிவபெருமான், அவ்விளையான்குடிமாற நாயனாரை சோதிக்கக் கிளம்பிவிட்டார்.

    பொன்னம்பலக் கூத்தன் தம் அடியார்களின் பெருமையை உலகறியச் செய்பவர். அளவிடற்கரிய செல்வம் இருக்கும்போது அடியார்களுக்கு அமுது படைப்பது எவர்க்கும் எளிதாம். ஆனால் செல்வம் வற்றி வறுமை வந்த காலத்தினும் தான் உண்ணாது இருப்பினும் மனம் தளராது தமது கொள்கையைக் காக்க வல்லவர் என்பதையும், தாம் நல்லோர்களுக்கு வறுமையைக் கொடுத்தல் அவர்கள் நயத்தின் பொருட்டே என்பதையும் உலகறியச் செய்யவே வந்தார். இதன் காரணமாகவே சிவபெருமானார் நாயனாருக்கு வறுமை வர எண்ணியதால் அவருக்கு வறுமையும் உண்டாயிற்று. அடியவருக்கு அன்னம் பாலித்து வறுமையை ஏற்கவில்லை, அடியவர்தம் பெருமையை உலகறியச் செய்யவே கூத்தபிரானின் இவ்விளையாட்டு நிகழ்ந்தது என்பதை விளக்குகிறார் சேக்கிழார் பெருமான். நாயனாரின் செல்வ வளம் சுருங்கியபோதும், அவர்தம் மனம் சுருங்குதல் இன்றித் திருத்தொண்டில் முன்னைவிடச் சிறப்பாக ஈடுபட்டிருந்தார் என்கிறார் சேக்கிழார் பெருமான். கடன் பெற்றும், தம் சொத்துகளை அடமானம் செய்தும் திருத்தொண்டு ஆற்றுகிறார் மாறனார்.

    தில்லையிலிருந்து புறப்பட்ட எம்பெருமான் அந்த மாரிக்காலத்து இரவில் அந்தணர் வடிவு தாங்கி இளையான்குடிமாற நாயனார் இல்லம் நோக்கி வந்தார். மாறனாரும், அவர்தம் மனைவியாரும் தாங்கள் உண்ணவே உணவின்றி உறங்கக் காத்திருந்தனர். அந்நேரத்தில் மழையில் நனைந்தபடி வந்து நின்ற அடியாரை வரவேற்று அவருடைய ஈரமேனியைப் போக்க துவாலையோடு துணை நின்றவரின் நெஞ்சில் ஈரம் கசிந்தது.

    அடுத்து வந்த விருந்தினரான அடியவருக்கு எங்கனம் உணவளிப்பது என்ற வினா எழுந்தது. தங்களுக்கு உண்ண உணவு இல்லாத நேரத்தில் எப்படி நல்ல உணவை பரிமாறப் போகிறோம் என்று நாயனார் கவலைப்பட்டார். இரவு நேரமாகிவிட்டதால், அவர்களால் சமைக்க ஏதாவது கடன் வாங்க கிராமத்திற்குச் செல்லவும் முடியவில்லை. நாயனார் தம் மனைவியை தெய்வீகத் தன்மை பெற்ற பெண் எனும் பொருள்படும்படி, ‘அணங்கே’ என்று அழைத்து அதற்கானத் தீர்வைக் கேட்கிறார். தங்களுக்கு இத்தகையதோர் நிலைமை வந்ததற்கு தான் செய்த தீவினைதான் காரணம் போலும் என்று அந்த அம்மையார் நொந்து போனாலும், அன்று நண்பகலில் தங்கள் சிறு வயலில் விதைத்த செந்நெல் விதைகளைக்  கொண்டு வந்தால் அடியாருக்கு அமுது படைக்கலாம் என்றார். நாயனாரும் வயல்வெளிக்குச் சென்று விதைத்த நெல்லை எடுத்து வரச் சென்றார்.

    இருள் சூழ்ந்த அந்த இரவில் மழை பெருக்கெடுத்தோடியது. ஆயினும் தம் மன உறுதி சற்றும் குறையாமல் தம் பாதங்களால் பாதையைத் துளவி உணர்ந்து தம் வயலினுள் நுழைந்தார். மழையால் வயலின் மூலைகளில் தள்ளப்பட்ட விதைகளை சேற்றுடன் சேர்த்து சேகரித்தார். தாம் கொண்டு வந்த கூடையை நிரப்பிவிட்டு விரைந்து சென்றார். அவரது மனைவியும் விதைகளிலிருந்து சேற்றைக் கழுவினார். ஆனால் தழல் மூட்ட விறகில்லை என்றதால் நாயனாரும் வீட்டின் விட்டத்தை அறுத்தளித்தார். நெல்லின் உமியை நீக்கி அரிசியாக்கி சமைத்துவிட்டாலும், சோற்றோடு பரிமாற கறிக்கு என் செய்வோம் என வருந்தி நின்றவரிடம், வீட்டின் பின்புறம் உள்ள குழி நிரம்பாதக் குறும்பயிரான கீரையைக் கொணர்ந்தார். அவரது மனைவியும் அந்தக் கீரையிலிருந்து பல்வேறு உணவுகளைச் சமைத்துக் காட்டினார். உணவு தயாராயிற்று. தங்கள் அன்பினால் சமைத்த அந்த எளிய உணவை ஏற்றருள வேண்டி அந்த அடியாரின் பாதம் பணிந்து வணங்கி நின்றனர்.

    ஆனால் அவர்கள் இருவரும் திகைத்து நிற்க, உறங்கிக் கொண்டிருந்த அடியவர் மறைந்து ஆங்கு ஓர் சோதியாய் தோன்றிய இறைவன், “நீயும் நின் துணைவியும் என் பெரும் பதத்தை எய்திக் குபேரன் உம் ஏவல் வழிச் செயல்பட ஆணை பிறப்பித்தோம்” என்று அருள் புரிந்தார்.

    இளையான்குடிமாற நாயனார் புராணம் சொல்லும் கருத்து!

    ஆண்டவன் வழிபாட்டை ஆராதனை என்றும், அடியவர் வழிபாட்டை சமாராதனை என்றும் அழைப்பர். ஆண்டவனுக்கு அமுது படைப்பதைக்காட்டிலும் அடியார்களுக்கு அமுது படைப்பதே சாலச்சிறந்தது என்பார் திருமூல நாயனார். கோவிலில் குடிகொண்டுள்ள இறைவனுக்கு உணவு கொடுத்தால் அது அடியவரைச் சாராது. அதே சமயம் நடமாடும் கோயிலான அடியவர்களுக்கு அன்னம் பாலித்தால் அது அவ்வடியார் வாயிலாக இறைவனையும் சென்றடையும் என்பதால் அடியவர்களுக்கு அன்னம் பாலிப்பதே சிறந்த தொண்டு என்கிறார் திருமூலர்.

    படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
    நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
    நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
    படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே”, என்பார்.

    இவையனைத்தும் நன்குணர்ந்த இளையான்குடிமாற நாயனார் சிவனடியார்களுக்கு திருவமுது படைத்தலையே தம் முழுநேரத் திருத்தொண்டாக மேற்கொண்டார்.  அடியவருக்குச் செய்யும் தொண்டு ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டு என்பதை திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அடியவர் என்ற தபால் பெட்டியில் போடும் தபால் ஆண்டவன் என்ற தலைமைத் தபால் அகத்தைச் சென்றடையும் என்று அழகான உவமையுடன் விளக்குவார்.

    உலகியல் வாழ்வில் இன்பமோ, துன்பமோ எது நேர்ந்தாலும் இறைவன் மீது மாறாத அன்பு கொண்டவர்களே அடியார்கள். எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் இறையருள் தம்மை மீட்டுக் கொண்டுவரும் என்ற அதீத நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.

    இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
    படரும் நெறி பணியாரேனும் – சுடர் உருவில்
    என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)
    அன்பறா தென்நெஞ் சவர்க்கு⁠      

    இறைவன் எனக்கு நேருகின்ற இடர்களைக் களையவில்லை என்றாலும், மனம் இரங்கி எனக்கு அருள் செய்யவில்லை என்றாலும், நான் செல்ல வேண்டிய நல்வழிகளைக் காட்டவில்லை என்றாலும், நெருப்பின் வடிவில் எலும்பு அணிந்து ஆடுகின்ற சிவனிடம் நான் கொண்டுள்ள அன்பு ஒருபோதும் குறையாது என்பார் காரைக்கால் அம்மையார்.

    “அதிக நல்லற நிற்பதென் றறிந்தனை மறத்து

    ளதிக மாஞ்சிவ புண்ணியஞ் சிவார்ச்சனை யவற்று

    ளதிக மாஞ்சிவ பூசையு ளடியவர் பூசை

    யதிக மென்றறிந் தன்பரை யருச்சனை செய்வாய்.”

    என்கிறது திருவிளையாடற்புராணம். அடியார்கள் வழிபாட்டைவிட சிறந்த புண்ணியம் பிறிது இல்லை.

    ‘சிவனே சிவஞானி யாதலாற் சுத்த

    சிவனே யெனவடி சேரவல் லார்க்கு
    நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
    பவமான தின்றிப் பரலோக மாமே.”

    என்று திருமந்திரத்தின் 6-ம் தந்திரம் சிவகுரு தரிசனம் குறித்து விளக்குவதைக் காணலாம்.

    அறியாமை யறிவகற்றி யறிவி னுள்ளே
    யறிவுதனை யருளினா னறியாதே யறிந்து
    குறியாதே குறித்தந்தக் காரணங்க ளோடுங்

    கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயின்.”

    என்று சிவஞானசித்தியார் கூறுகின்றது.

    அடியார்கள் மீது கொள்ளும் இவ்வன்பானது ஒருவர்க்கு அத்துணை எளிதாக வாய்த்துவிடுவதில்லை. அவர் பல பிறவிகளிலே பயன் கருதாது செய்த புண்ணிய மிகுதியினாலே சிவபெருமானார் அருளிச் செய்யக் கிடைக்கும் வரம். அவனருளின்றி இவ்வன்பு ஒருவாற்றானும் நிகழாது. இடையறாது வளரும் அம்முதிர்ச்சியில் சிவம் விளங்கும் என்பதால் அன்பும் சிவமும் இரண்டற ஒன்றாய் நிற்கும்.

    “மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் –

    கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தா – னொட்டிட்ட பண்பினுருத்திர பல்கணத்தார்க் – கட்டிட்டல்

    காணாதே போதியோ பூம்பாவாய்”

    என்னும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரத்தில் சேக்கிழார் பெருமான் விளக்கியருளியதை அறியலாம்.

    இத்துணைப் பெருஞ்சிறப்பினதாகிய அடியார்களுக்கு திருவமுது படைத்தாற்றும் தொண்டு எந்நாளும் சிறிதாயினும் தவறாது சைவாகம விதிப்படி மெய்யன்போடு செய்தமையால் மிகச் சிறப்புற்றவர் இவ்விளையான்குடிமாற நாயனார். அடியவர்கள் அன்னம் பாலிப்பு செய்வதனை இவர் செல்வம் உள்ள பொழுது செய்தமையினும், மிக்க வறுமை வந்தபொழுதும் மனம் சிறிதும் சுருங்குதலின்றி முன் போலவே சிறிதும் தவறாது செய்தமை போற்றுதலுக்குரியதாக்குகிறது.

    மன்னியலே ளாண்டொன்மை யிளைசை மாறர்

        வறுமையா லுணவுமிக மறந்து வைகி

    யுன்னருநள் ளிருண்மழையி லுண்டி வேண்டி

        யும்பர்பிரா னணையவய லுழுது வித்துஞ்

    செந்நென்முளை யமுதுமனை யலக்கா லாக்கிச்

        சிறுபயிரின் கறியமுது திருந்தச் செய்து

    பன்னலரு முணவருத்தற் கெழுந்த சோதிப்

        பரலோக முழுதாண்ட பான்மை யாரே.

    என்பார் சேக்கிழார் பெருமான்.

    திருச்சிற்றம்பலம்

    தொடரும்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 3

    பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

    63 நாயன்மார்கள் வரலாறு – 2. இயற்பகை நாயனார்

    இயற்பகை நாயனார் புராணம்

     

    வானவர் பூவின் மாரி பொழிய மாமறைகள் ஆர்ப்ப

    ஞானமா முனிவர் போற்ற நல மிகு சிவலோகத்தில்

    ஊனமில் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார்

    ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார்.

     

    எழிலாருங் காவிரிப்பூம் பட்டி னத்து

        ளியல்வணிக ரியற்பகையா ரிருவர் தேட

    வழலாய பிரான்றூர்த்த மறையோ னாகி

        யாயிழையைத் தரவேண்டி யணைய வையன்

    கழலாரப் பணிந்துமனைக் கற்பின் மேன்மைக்

        காதலியைக் கொடுத்தமர் செய் கருத்தால் வந்த

    பிழையாருஞ் சுற்றமெலாந் துணித்து மீளப்

        பிஞ்ஞகனா ரழைத்தருளப் பெற்று ளாரே.

    அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் என்பார் சிவபெருமான் மீது மாளாத பற்றும், சிவனடியார்கள் விரும்பிக் கேட்பது மட்டுமன்றி அவர்கள் மனதால் நினைப்பதும் ஏதாயினும் இல்லை என்று கூறாமல் மனமுவந்து வழங்கும் வள்ளற்தன்மையும் கொண்டவர். சிவனடியார்கள்பால் நேசமும், அன்பும் கொண்டு அவர்களை மகிழ்வித்தால் சிவபெருமானாரின் அருள் பெறலாம் என்ற அளவில் சிறந்த பக்தி உடையவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் என்ன என்று தெரியவில்லை. உலக இயலுக்குப் பகையானவர் என்பதால் இவர் இயற்பகையார் என்று அழைக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார் சேக்கிழார் பெருமானார். இவரை முதலில் அறிமுகம் செய்பவரான நம்பி ஆரூரர், “இல்லையே எனாத இயற்பகைக்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் போற்றுகின்றார்.

    ‘பொன்னொடு வந்து கரியொடு ஏகும்’ என்று சங்க காலத்தில் சிறப்பான வணிக நகரமாகத் திகழ்ந்த, சோழநாட்டில் உள்ள காவிரிப்பூம்பட்டினத்தை பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது. புகார் எனும் அழகிய துறைமுகப்பட்டினமான காவிரிப்பூம்பட்டினத்தில் வணிக மரபில் பிறந்தவர் இயற்பகை நாயனார். அவர் தம் வணிகத் திறமையால் பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார். சிறுவயது முதலே சிவபெருமான் மீதும், சிவனடியார்கள் மீதும் அளவுகடந்த அன்பு கொண்டிருந்ததால் சிவனடியார்களுக்கு வேண்டுவதனைத்தையும் வழங்குவதே தலைசிறந்த அறமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஐயனின் திருவிளையாடலுக்கு ஆட்பட்டார் இந்நாயனார். சிவனடியார் கோலத்தில் வந்து  இயற்பகையாரின் மாறுபட்ட பக்தியின் திறத்தை உலகறிய வெளிப்படுத்த இறைவனின் திருவிளையாடல்தான் இது.

    அன்றே என்றன் ஆவியும் உடலும் உடமையும் எல்லாமும்

    குன்றே அனையாய் எனை ஆண்கொண்டபோதே கொண்டிலையோ

    என்ற மணிவாசகப் பெருமானின் கூற்றுக்கிணங்க வாழ்ந்த இயற்பகையாருக்கு என்னே வந்த சோதனை பாருங்கள்.

    சிவபெருமானின் திருவிளையாடல்:

    சிவபெருமான் ஒரு திருநாளில் சிவனடியார் வேடம் பூண்டு இயற்பகையாரின் வீட்டின் முன்பாக வந்து நின்றார். தம் இல்லம் தேடி வந்திருப்பவர் தாம் எந்நேரமும் பூசித்துக் கொண்டிருக்கும் சிவபெருமானார் என்பதை அறியாத இயற்பகையார், அவரை சிவனடியார் என்று நினைத்து ஆனந்தம் கொண்டு, அவ்வடியார் தன் வாசல் தேடி வந்தது தான் செய்த பெருந்தவப் பயனென்று பணிவுடன் வழிபட்டு வரவேற்றார். சிவனடியாராய் வந்த பெருமானாரும் இயற்பகையாரைப் பார்த்து,

    “நீர் அம்பலவர் அடியார்கள் யாது கேட்பினும் இல்லை என்று கூறாது அள்ளி வழங்கும் உம் வள்ளன்மையைப் பற்றித் தெரிந்துதான் உம்பால் ஒன்றை வேண்டி வந்தோம்” என்கிறார்.

    இயற்பகையாரும், “அடியவரே ஏன் தயக்கம்? எம்மிடமுள்ளதனைத்தும் என் உடமையல்ல. அவை அடியவர்களுக்குரியது என்பதே உண்மை. உரியவர் கேட்டால் பாதுகாவலனாகிய நான் கொடுப்பதில் தயக்கம் என்ன இருக்க முடியும்? என்னிடம் உள்ளது எதுவாகினும் தாராளமாகக் கேட்கலாம். ஐயம் ஏதும் தேவையில்லை” என்றார்.

    அந்த சிவனடியாரும் சற்றே தயங்கியவாறு, ‘‘இயற்பகையாரே, எமக்குப் பணிவிடை செய்ய காதல் உம் மனைவியைத் தாரும்’’ என்றார். அதற்கு இயற்பகை நாயனார் முன்னைவிட மகிழ்ச்சியடைந்து, “தாங்கள் என்னிடம் இல்லாத ஒன்றைக் கேட்காமல் என் முன்னால் உள்ளதையே வேண்டியது எனது பெரும்பேறு” எனக் கூறுவதாக சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார்.

    ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே

    அம்பலத்து உள் நின்று ஆடுவார் உம்பர்
    நாயகிக்கும் அஃது அறியவோ? பிரியா

    நங்கைதான் அறியாமையோ? அறியோம்;
    தூய நீறு பொன் மேனியில் விளங்கத்

    தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய்
    மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர்

    மாறாத வண்ணமும் காட்டுவான் வந்தார்.

    இப்பாடலில் சேக்கிழார் பெருமானின் கவிக்கூற்றை உணர முடிகின்றது. இங்கு இறைவன் திருமேனி தாங்கிவரும் சிவனடியாரின்  இயல்பினைப் பற்றி ஆராய்கின்றார். இவரிடம் இரண்டு மாறுபட்ட இயல்புகள் காணப் பெறுகின்றன. தூர்த்த வேடமுடைய பொன்மேனியில் தூய நீறுடன் இப்படி வருங்கால் தமது இணையரான உமையம்மையார் அறிய வந்திருப்பாரோ அல்லது அறியாமல் வந்திருப்பாரோ? ஒருவேளை அவர் அறிய வந்திருப்பாராயின், இவர் இங்குப் பிறர் மனைவியாரை வேண்டிச் செல்வதற்கு அவர் உடன்பட்டிருக்கமாட்டார். அதேபோல் அவர் அறியாது வந்தாரெனின் உடன் பிரியாது இருப்பாராதலின் அதுவும் இயலாத காரியம். ஆதலின் இதனை இன்னவாறெனத் துணிய அறியோம் என்கிறார் சேக்கிழார்.

    இயற்பகையார் தம் மனைவியின் முன் சென்றவர், “இன்று உன்னை இம்மெய்த்தவர்க்கு நான் கொடுத்தனம்” என்கிறார். அம்மையாரை ஒரு உயிரற்ற பொருளாக எண்ணி அந்த அடியாருக்குக் கொடுப்பதாகக் கூறியது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கலங்கி நிற்கிறார். எந்தக் கணவனும் செய்யத் துணியாத ஒரு காரியத்தைச் செய்யத் துணிந்த கணவரின் இந்நிலை கண்டு ஊர் மக்கள் என்ன சொல்லப்போகிறார்களோ என்றும் கலங்கினார். ஆனாலும் தன் கணவனின் மனநிலையைப் புரிந்து கொண்டபின் மனம் தெளிந்ததாக சேக்கிழார் குறிப்பிடுகிறார். அம்மையார் தம் கணவனைப் பார்த்து, “இன்று நீர் எனக்கு அருள் செய்தது இதுவேல் என்னுயிர்க்கொரு நாத நீர் உரைத்ததொன்றை நான் செய்யும் அத்தனையல்லாமல் உரிமை வேறுளதோ” என்று வணங்கித் தாழ்ந்து தொண்டனார் தாமெதிர் வணங்கச் சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள், திருவினும் பெரியாள்.

    கணவன் சொல்லைக் காக்க முனைந்த மனைவியைத் தாழ்ந்து வணங்கினார் என்ற சொற்களால் சேக்கிழார் பெருமான் நாயனாரின் மனநிலையை நமக்கு விளங்கச் செய்கிறார். திருமகள் உலகில் நல்லவர், தீயவர், பெரியோர், சீலர், சீலமில்லார் என்றெல்லாம் பாரபட்சம் பாராமல் எல்லோரிடமும் சென்று சேர்வாள், என்பதனால் அம்மையாரையும் திருமகளுக்கு ஒப்பாகக் கூறுகின்றார் போலும்.

    கணவனின் வாக்கிற்கிணங்க அடியவரை வணங்கி நின்றார் நாயனாரின் மனைவியார். நாயனாரும் அடியவரைப் பார்த்து, அடுத்து தான் செய்ய வேண்டியது யாது என்று கேட்கிறார். அதற்கு அடியவர், “இந்த ஊரில் உனது உறவினர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். நான் உன் மனைவியை அழைத்துச் செல்லும்போது அவர்களுடன் சேர்ந்து ஊர் பொதுமக்களும் எனக்கு இடையூறு செய்யக்கூடும். எனக்கு அச்சமாக இருப்பதால் இவ்வூர் எல்லையைக் கடக்கும் வரை நீயும் எனக்குத் துணையாக வரவேண்டும்’’ என்றார்.
    உடனே மனைவியையும், சிவனடியாரையும் முன்னே போகவிட்டு நாயனாரும் பின் தொடர்கிறார். அந்த வேளையில் வாளொடு வந்து இவர்களைத் தடுத்து நிறுத்திய அவரது உறவினர்களையும் ஊர்க்காரர்களையும் சீற்றம் கொண்டு வெட்டி வீழ்த்தியவர், சிவனடியாருக்குக் காவலாக ஊரின் எல்லையிலுள்ள சாய்க்காடு என்ற இடத்தை அடைந்தனர். அத்தருணத்தில்தான் இறைவனே இயற்பகை நாயனாரின் பற்றற்ற செயலைக் கண்டு வியக்கிறார். ‘பொய் திகழ் உள்ளம் இல்லான்’ எனும் நற்சான்றை இறையருள் பெற்றுத்தர மெய்யான அடியாராகிறார் இயற்பகை நாயனார்! சேக்கிழார் பெருமானின் கவிமொழி இதனை அழகாக வெளிப்படுத்துகிறது.

    இயற் பகை முனிவா ஓலம்! ஈண்டு நீ வருவாய் ஓலம்!
    அயர்ப்பு இலாதானே ஓலம்! அன்பனே ஓலம்! ஓலம்!
    செயற்கு அரும் செய்கை செய்த தீரனே ஓலம்! என்றான்
    மயக்கு அறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான்.

    அழைத்த பேர் ஓசை கேளா ‘அடியனேன் வந்தேன்! வந்தேன்!
    பிழைத்தவர் உளரேல் இன்னும் பெரு வலித் தடக்கை வாளின்
    இழைத்தவர் ஆகின்றார்’ என்று இயற்பகையார் வந்து எய்தக்
    குழைப் பொலி காதினானும் மறைந்தனன்; கோலம் கொள்வான்.

    சென்றவர் முனியைக் காணார்; சேயிழை தன்னைக் கண்டார்;
    பொன் திகழ் குன்று வெள்ளிப் பொருப்பின் மேல் பொலிந்தது என்னத்
    தன் துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார்;
    நின்று இலர்; தொழுது வீழ்ந்தார்; நிலத்தின்நின்று எழுந்தார்; நேர்ந்தார்.

    திருவிளையாடலை முடித்துக்கொண்ட எம்பெருமான் தமது அடியார் வேடத்தை விடுவித்து வான்மீது வெள்விடை மீது உமையம்மையுடன்  தோன்றியவர், இயற்பகை நாயனாரையும் அவர்தம் மனைவியாரையும் தங்களுடன் வரப்பணித்தார். இருவரும் சிவபெருமானுடன் விண்ணுலகம் சென்றனர்.  இயற்பகையாரின் வாளுக்குப் பலியான அவர்தம் சுற்றத்தார்களும் பொன்னுலகம் சென்றனர்.

     

     இயற்பகை நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    சிவபெருமானார் தம்மிடம் இடையறாத அன்பு பாராட்டும் மெய்யடியார்கள் மீது தாமும் இடையறாத அருள் பாலிக்கும் வள்ளன்மை மிக்க இனியர்.

    கனியினும் கட்டி பட்ட கரும்பினும்

    பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்

    தனிமுடி கவித்து ஆளும் அரசினும்

    இனியன் தன் அடைந்தார்க்கு இடைமருதனே.

    எனும் திருநாவுக்கரசு நாயனாரின்  கூற்று இதனை விளங்கச் செய்யும்.

    இறைவன் மீது உண்மையான அன்பு கொண்ட மெய்யுணர்வுடையவர்கள் தம்மிடம் உள்ள சொத்து, சுகம் மட்டுமின்றி பந்தம் கொண்டோரும் கூட அந்த இறையனாருக்கேச் சொந்தம் என்று எண்ணுவதால் அனைத்தின் மீதும் தாமரையிலை தண்ணீர் போன்று ஒரு பற்றற்ற நிலையிலேயே இருக்கின்றனர். முற்பிறவியின் பயனாக இயற்பகை நாயனார் சிவனடியார்களையும் சிவலிங்கமாக எண்ணியே வழிபடும் வழமை கொண்டவராகிறார். அந்த வகையில் இந்நாயனார், தமக்கு உரிய எப்பொருள்களையும் தன்னை விடவும், அவ்வடியார்கள் அனுபவித்தலில் பெரிதும் விருப்பம் கொண்டவராதலின்  அவற்றை மகிழ்ச்சியோடு அவர்களுக்குக் கொடுக்கும் பெருந்தகைமையிற் சிறந்து விளங்கினார். இயற்கைக்குப் புறம்பாக நடந்து கொள்ளும் இத்தன்மையாலேயே அவர் இயற்பகை நாயனார் என்றும் அழைக்கப் பெற்றுள்ளார்.

    இவரிடத்துள்ள இவ்வரிய இம்மெய்யன்பை, சர்வ ஆன்மாக்களும் உணர்ந்து உய்யும்படி எடுத்துரைக்கும் திருவுளங்கொண்ட சிவபெருமான், மனைவியினும் இனிய பொருள் பிறிதொன்றும் இல்லை என்பதால்  சிவனடியார் வேடம் தரித்து வந்து அவர் மனைவியையே கேட்கிறார். கற்பினிற் சிறந்து விளங்கும் தம் மனைவியையும் பெருமகிழ்ச்சியோடு கொடுக்க உறுதி கொள்கிறார். இதனால் உலகத்தோரின் பழிப்புரைக்கு ஆளாக நேரிடும் என்பதறிந்தும் அதைச் செய்யத் துணிந்தார். பிறர்மனை நயத்தல் சிவாகமங்களில் விலக்கப்பட்ட மிகப்பெரிய பாவம் என்பதைக்கூட கருதாமல் தமது மனைவியைத் தரும்படி கேட்டவரை, சிவனடியார் என்று கொண்டமை குற்றமாகாதோ என்று தோன்றுவதே இயல்பு.

    இவ்வடியாரின் இத்தகைய இயல்பினை உலகறியச் செய்யும் நோக்கொடு இறைவன், அம்பலத்தாடும் பெருமானார் அத்தகைய வேடம் பூண்டு புறப்பட்டார். மனமுவந்து மனைவியை அனுப்பத் தயாரான நாயனார் மீது கடுங்கோபம் கொண்ட அந்த அம்மையாரின் சுற்றத்தார் வாளுடன் வந்து தடுத்து நிறுத்தப் பார்த்தனர். சமுதாயத்தில் தங்கள் கண் முன்னால் நடக்கும் அதீத கொடுமையான ஒரு நிகழ்வைப் பார்த்து கண்டுங்காணாமல் இருப்பது நியாயமன்று, தங்கள் உயிரைப் பணயம் வைத்தேனும் அதைத் தடுக்க வேண்டும் என்பதைப் புரிய வைக்க முனைந்தார் இறைவன் என்பதை விளக்குகிறார் சேக்கிழார் பெருமான். பாரதி தம் பாஞ்சாலி சபதத்தில், திரௌபதியைக் குழல் பற்றிப் பாதையில் இழுத்துச் சென்ற துச்சாதனனைக் கூடி நின்று வேடிக்கைப் பார்த்த மக்களை,

    நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி இழுக்கையிலே

    நெட்டை மரங்களென நின்று புலம்பினர்

    பெட்டைப் புலம்பல் பிறர்க்காமோ?

    என்று கடிந்து கொள்கிறார். அதுபோல் கண்முன்னால் அநீதி நடக்கும் போது தடுத்து நிறுத்தாமல் இருப்பது ஆண்மைக்கே அழகன்று என்பதையும் விளங்கச் செய்கிறார் சேக்கிழார் பெருமான்.  அந்த வகையில் சிவபெருமானாராலேயே “செயற்கருஞ் செய்கை செய்ததீரனே” என்று வியக்கப்பட்ட இந்நாயனாரின் அற்புத பக்தியினை விளங்கச் செய்கிறார்.

    திருச்சிற்றம்பலம்

    தொடரும்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 2

    பவள சங்கரி

    தில்லைவாழ் அந்தணர்

    தில்லைவாழ் அந்தணர் என்பது தனி நபர் எவரையும் குறிப்பதல்ல. தில்லையில் கூத்தப் பெருமானை வழிபடுகிற அத்தனைப் பேரையும் சேர்த்து தில்லைவாழ் அந்தணர் என்று நம்பியாரூரர் குறிப்பிடுகிறார். ஒரு சாதியில் பிறந்தவர் அந்தணர் அல்லர். அப்படியானால் அந்தணர் என்பவர் யார்?

    அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்.

    என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அந்தணத் தன்மை என்பது பிறப்பால் வருவது அன்று. வாழ்வு நெறியால் வருவது என்பர் பெரியோர். அதனாலேயே தமது திருப்பள்ளி எழுச்சியில் மணிவாசகப் பெருமான்,

    அந்தணன் ஆவது காட்டி வந்தாண்டாய்

    ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே

    என்று பாடியருளுகிறார். எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும் சத்திய வாழ்வுடன், தன்னலம் பாராமல் பிறர் நலம் பேணித் தியாகச் சீலர்களாக, கொண்ட கொள்கைக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிப்பவர்களே அந்தணர் என்பது தமிழர்தம் நெறியாகும்.

    ஆரூரர் திருவாரூரில் புற்றிடம் கொண்ட பெருமானை வணங்கும் பொருட்டு ஆராத காதலொடு திருக்கோவிலின் வாயிலில் நுழைந்தவர் அங்கு முன்புறம் அமைந்துள்ள தேவாசிரிய மண்டபத்தில் அடியார் பெருமக்கள் அனைவரும் கூடி இறைவனின் புகழ் பாடி மகிழ்ந்திருந்ததைப் பார்த்து பரவசம் எய்தியவர் இந்த அடியார்களுக்குத் தொண்டு செய்யும் அந்நாள் எந்நாளோ என்ற ஏக்கத்துடனேயே உள்ளே சென்றார். அடியவர்களின் பெருமையை, ‘ஆரூரா நான் சொல்கிறேன் நீ கேட்பாயாக’ என்கிறார் இறைவன். அடியவர்களின் பெருமையைப் புகழும் இறைவன், அவர்கள் உள்ளத்து ஒருமையால் உலகையே ஆள்பவர்கள் என்றும், இம்மை, மறுமை எனும் இரண்டையும் கடந்த இவர்கள் வீடு பேற்றைக்கூட வேண்டாம் என ஒதுக்கும் அளவிற்கு பலன் கருதாது பக்தி செலுத்தும், குறையேதுமிலாத உன்னதத் தொண்டர்கள். அத்தகைய அடியவர்களின் முன்னர் என் பெருமையும் சற்றுக் குறைவுதான். அந்த குற்றமற்ற அடியவர்களைச் சென்றடைந்து அவர்தம் பெருமையைப் பாடு என்று பணிக்கிறார். ஆண்டவனே அடியவர் பெருமையை,

    பெருமையால் தம்மை ஒப்பார்; பேணலாம் எம்மைப் பெற்றார்;

    ஒருமையால் உலகை வெல்வார்; ஊனமேல் ஒன்றும் இல்லார்;

    அருமையாம் நிலையில் நின்றார்; அன்பினால் இன்பம் ஆர்வார்;

    இருமையுங் கடந்து நின்றார்; இவரை நீ அடைவாய்

    என்று புகழ்கிறார்.

    இவ்வாறு இறைவனாரே புகழ்கின்ற அந்த ஒப்பிலாத அடியவர்தம் புகழைப் பாடும் வல்லமையை இறைவனே தந்தருள வேண்டும் என்று உளமார வேண்டுகிறார். அப்போது புற்றிடம் கொண்ட பெருமானார், ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என்ற முதல் அடியை எடுத்துக் கொடுக்க நம்பியாரூரரும்,

    தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

      திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்

    இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்

      இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

    வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்

      விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்

    அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்

      ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

    என்ற பாடலில் தொடங்கி பதினொரு பாடல்களில் குறிக்கப்பெற்ற 60 அடியார்களைப் பற்றியும், மூன்று தொகையடியார்கள் பற்றியும் பாடி அருள்கிறார். இதற்குத் திருத்தொண்டத் தொகை என்ற பெயராகும். அடுத்து நம்பி ஆரூரர் பாடிய முதல் அடி, முதல் அடியார் திருநீலகண்ட நாயனார் ஆவார். இறைவன் தில்லைவாழ் அந்தணர் என்று முதல் அடி எடுத்துக் கொடுத்தமையால் தில்லையில் தோன்றிய அடியவர் திருநீலகண்டரை முதலில் கூறுகிறார்.

     

    2. திருநீலகண்ட நாயனார் புராணம்

    திருநீலகண்ட நாயனார் - சாய் ...

    தில்லைநகர் லேட்கோவர் தூர்த்த ராகி

    தீண்டிலெமைத் திருநீல கண்ட மென்று

    சொல்லுமனை யாடனையே யன்றி மற்றுந்

    துடியிடையா ரிடையின்பந் துறந்து மூத்தங

     

    கெல்லையிலோ டிறைவைத்து மாற்றி நாங்க

    ளெடுத்திலமென் றியம்புமென விழிந்து பொய்கை

    மெல்லியலா ளுடன்மூழ்கி யிளமை யெய்தி

    விளங்குபுலீச் சரத்தானை மேவினாரே.

    அடிக்கடி ‘திருநீலகண்டம், திருநீலகண்டம்’ என்று கூறிக்கொண்டிருந்ததால் மக்கள் இந்த நாயனார் பெருமானாரை திருநீலகண்டர் என்றே அழைத்தனர். திருநீலகண்டம் எதைக்குறிக்கிறது என்றால், அனைவரும் திருப்பாற்கடலினின்றும் எழுந்த ஆலகால விடத்தைக் கண்டு அஞ்சி ஓடியபோது அதனைத் தான் உண்ட சிவபெருமானாரின் கண்டம் கறுத்ததால் அன்பர்கள் திருநீலகண்டம் என்று போற்றினர். பிறர் துன்பத்தை ஏற்றுக்கொண்டு இன்பத்தைப் பிறர்க்குக் கொடு என்பதே இதன் குறியீடு.

    எதையும் துறத்தல் எளிது என்றாலும் இளமையிலேயே கொண்ட கொள்கைக்காகத் தியாகம் செய்த திருநீலகண்டர் புராணம் பற்றி முதலில் கூறப்பட்டுள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். சிதம்பரத்தில் குயவர் குலத்தில் தோன்றிய இவர் தம் வாழ்க்கையில் பொய் சொல்லல் என்பதே சிறிதுமின்றித் தரும நெறியில் வாழ்கின்றவர். இல்லறமே நல்லறமாகவும், சிவ பக்தியில் சிறந்தவருமாக வாழ்ந்து வந்த தொண்டர் இவர். தம் மரபுத்தொழிலான மட்கலங்களை வனைந்து விற்றுப் பிழைத்தும், திருவோடுகளைச் சிவனடியார்களுக்குக் கொடுத்தும் வாழ்ந்து வந்தாலும் விதிவசத்தால் அவர் வாழ்க்கையில் நடந்த அந்தச் சம்பவம் அவரை பக்குவப்படுத்தி மேன்மை நிலைக்கு உயர்த்தியுள்ளது.

    ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பார் புத்தர் பெருமான். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என மக்கள் ஆசையால் துன்பக் கடலில் வீழ்கின்றனர். ஆசையால் வரும் துன்பங்கள் யாவும் ஆசை அறுக்க ஆனந்தமாகும் என்கிறார் திருமூலர். பெண்ணாசையைப் போன்றல்லாது மற்ற ஆசைகள் அறிஞர் பெருமக்களின் அறவுரைகளால் கட்டுக்குள் இருந்தாலும், சில நேரங்களில் பெண்ணாசையோ, துறவு நிலையில் இருப்பவர்களுக்கும்கூட எளிதாக நீங்கி விடுவதில்லை. உயிர்க்குலம் தோன்றியபோதே தோன்றியது இப்பெண்ணாசை. அதனைத் துறத்தல் எளிதன்று என்றாலும் அந்த ஆசையையே திருநீலகண்டம் என்ற இறைவனின் திருநாமத்திற்காக தம் இளமையையும் துறந்தவர் இந்நாயனார். தெய்வ நலமே ஆகச்சிறந்த நலம் என்று கருதி வாழ்ந்தவர். இல்லறத்தையும் செம்மையாகவே நடத்தி வாழ்ந்தார். அச்சமயத்தில்தான் நாயனார் வாழ்வில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அச்சம்பவத்தால் அமைதியான அவர் வாழ்வில் புயல் வீச ஆரம்பித்தது.

    ஒருநாள் அவர் அவ்வூரில் ஒரு பரத்தையிடம் மையல் கொண்டு அவளிடம் சென்று வீட்டுக்குத் திரும்ப, கற்பிலே சிறந்த அவர் மனைவியார் அதை அறிந்து கடுங்கோபமுற்றார். சேக்கிழார் பெருமான் அந்த அம்மையாரைப் பற்றி குறிப்பிடும்போது, ‘அவர் தம் கண் மனைவியாரும் அருந்ததிக் கற்பின் மிக்கார்’ என்றும், திருமகளைப் போன்று பேரழகுப் பெட்டகம் என்றும் குறிக்கும் வகையில்,

    ஆன தம் கேள்வர் அங்கு ஓர் பரத்தை பால் அணைந்து நண்ண
    மானமும் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை
    ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்;
    தேன் அலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார்.

    என்று பாடுகிறார். இத்துணை அழகும், சிறந்த பண்பும் இருக்கும் மனைவியை விடுத்து ஒரு பரத்தை வீட்டிற்குச் சென்று திரும்பும் ஒருவர் எங்கனம் நாயன்மார்களின் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார் என்ற ஐயம் நம்மைப்போன்ற எளியோருக்குத் தோன்றுவது இயல்புதானே?

    அவமானத்திற்குரிய இச்செயலை செய்துவிட்டு வந்து நிற்கும் கணவனின் மீது மாளாதக் கோபம் கொண்டார் அம்மையார். நாளுக்கு நாள் பிரச்சனை நீண்டு கொண்டு வருகிறது. ஆனாலும் இல்வாழ்க்கைக்குரிய தன்னுடைய அத்தனைக் கடமைகளையும் தடையற நிறைவேற்றிக் கொண்டிருந்தார். ஆனாலும் கணவனை மன்னிக்கவோ, அவரைத் தம்மை நெருங்கவோ அனுமதிக்கவோ தயாராக இல்லை அவர். இப்பிரச்சனையை எப்படியும் முடிவுக்குக் கொண்டுவர முயன்றார் திருநீலகண்டர். ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் தாங்கள் இருவர் மட்டும் இருக்கும் ஒரு தனிமையானப் பொழுதில் தம் மனைவியாரைப் பல வகையிலும் சமாதானம் செய்ய முயன்றார். அம்மையாரின் கோபம் சற்றேனும் தணிந்தபாடில்லை. ஆனாலும் அவர் கட்டிய மனைவிதானே என்ற உரிமையை எடுத்துக்கொண்டு அவர் அருகில் சென்று அவரை அணைக்க முற்படுகிறார். அதுவரை அமைதி காத்த அம்மையார் கோபத்தின் உச்சம் சென்று, ‘தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம்’ என்றார். சேக்கிழார் பெருமானின் கவிதையில்,

    மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று
    பூண் தயங்கு இளமென் சாயல் பொன் கொடி அனையார் தம்மை
    வேண்டுவ இரந்து கூறி மெய் உற அணையும் போதில்,
    ‘
    தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம்’ என்றார்.

    தம்முயிரினும் மேலாகக் கருதித் தாம் போற்றும் திருநீலகண்டத்தின் மீது ஆணை என்ற தம் மனைவியாரின் வார்த்தைகளைக் கேட்டவர் அதிர்ச்சியில் உறைந்து நின்றார். அதனை விளக்கும் சேக்கிழார் பெருமான்,

    ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
    பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி்
    ஏதிலார் போல நோக்கி, ‘எம்மை என்றதனால் மற்றை
    மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன்’ என்றார்.

    பரமசிவனுடைய திருநீலகண்டத்தில் தாம் வைத்த அந்த அதீத பக்தி குன்றாவண்ணம் மனைவியாரைத் தொடாமல் நீங்கி விலகி நிற்கிறார். அதற்கும் மேலாக அவர் ‘எம்மை’ என்று பன்மையாகச் சொன்னதனால் திரு நீலகண்டர் தம் மனைவியை மட்டுமில்லாமல்  ஏனைய மற்றப் பெண்களையும் தான் மனத்தினாலும் நினைத்தலும் செய்வேனல்லேன் எனும் உறுதி பூண்டார். அதனைச் சிரமேற்கொண்டு காக்கவும் செய்தார்.    இதன் காரணம்கொண்டே சேக்கிழார் பெருமான் அதுகாறும் இல்லாத வகையில் அவரை, ‘பெரியவர்’ என்று விளித்துப் போற்றுகிறார்.

    இளமைப்பருவத்திலும் இருவரும் அவ்வாணையைப் பேணிக் கொண்டு தனித்தனியே வாழ்ந்துகொண்டு பல ஆண்டுகள் கடந்து அவர்களின் யெளவனம் நீங்கி, முதுமையும் நெருங்கியபோதும் அவர்கள் சத்திய வாழ்வையே மேற்கொண்டிருந்தனர். தளர்வொடு சாய்ந்தும் உற்றும் சிவபக்தி சிறிதும் குறையாதவர்களாகி இருந்தார்கள். இப்பெருமக்களின் சத்திய வாழ்வினை உலகறிய முடிவு செய்த கூத்தபிரான் தில்லையில் கூத்தாடுபவன் என்றாலும் அடியவர்களின் இல்லந்தோறும் சென்று அவர்தம் செவ்விய வாழ்வின் திறத்தை எடுத்துக்காட்ட அடியவர் உருவில் இல்லம் நோக்கி வருபவர் அன்றோ. வந்தவரை வணங்கி எதிர்கொண்டு வீட்டினுள்ளே அழைத்துச் சென்று ஆசனத்தில் இருத்தி, ஆகம விதிப்படி அன்பினோடு பூசைசெய்து, தாம் செய்ய வேண்டிய பணி யாது என்று பணிவன்புடன் கேட்க, அவரும் “தனக்கு வேறொப்பில்லாததும், தன்னிடத்திலே சேர்ந்த பொருள்களெல்லாவற்றையும் சுத்தி செய்வதும், பொன்னிலும் இரத்தினத்திலும் செய்தவொன்றைக் காட்டிலும் சிறப்பாகக் காப்பாற்றப்படத்தக்கதுமாகிய ஒன்று என்று கூறி ஒரு திருவோட்டை அளித்து, அதைப் பாதுகாப்பாக வைத்திருந்து தாம் கேட்கும்போது தர வேண்டும் என்கிறார். அதைக் கேட்ட அடியவர் அவரை வணங்கிவிட்டு அவ்வோட்டை வாங்கிக்கொண்டு, வீட்டினுள் ஒரு பக்கத்தில் சேமித்து வைத்துவிட்டு திரும்பி வந்து அவரிடத்தில் விடைபெற்றுத் திரும்பினார்.

    நெடுநாட்கள் கழிந்தபின், ஒருநாள் மீண்டும் திரும்பி வந்த அந்த சிவனடியார் நீலகண்டரிடம் கொடுத்த அந்த திருவோட்டைக் கேட்டு உடனே அதை எடுத்து வந்து கொடுக்கும்படியும் பணித்தார். நீலகண்டரும் அதை வைத்த இடத்திற்குச் சென்று தேடியவர் அதைக் காணாமல் திரும்ப வந்து சிவனடியாருக்கு என்ன விடையளிப்பது என்று தெரியாமல் தடுமாறி நிற்கின்றார்.

    சிவனடியாரோ உள்ளே நின்ற அடியார் கேட்கும்படி, “நொடிப் பொழுதில் வருவேன் என்று போன நீ ஏன் இவ்வளவு நேரம் கடந்தும் வாராமல் நிற்கின்றாய்” என்று கேட்கிறார். நீலகண்டர் வந்து சிவனடியாரை வணங்கி, அடியார் பெருமகனார் அளித்த அந்தத் திருவோட்டை வைத்த இடத்திலும் பிறவிடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை. பழையதாகிய அந்தத் திருவோட்டை விட புதிதாக வேறொரு திருவோடு தருவேன், அதை ஏற்றுக்கொண்டு அடியேன் செய்த பிழையைப் பொறுத்தருளல் வேண்டும் என்றும் பணிந்து வணங்கி சொல்லிப் பிரார்த்தித்து நின்றார். உடனே சிவனடியாரும் அவரைக் கோபத்துடன் பார்த்து, தனது மண்ணோட்டையேயன்றிப் பொன்னோட்டைத் தந்தாலும் வாங்க மாட்டேன் என்றும் தான் முன்னர் அவரிடத்தில் தந்த அந்த மண் ஓட்டையே கொண்டுவந்து தரவேண்டும் என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    நீலகண்டரும் அடியவரிடம், அவர் அளித்த அந்த மண்ணோட்டை எங்கு தேடியும் காணவில்லை, வேறு நல்ல ஓடு தருகிறேன் என்று  மன்றாடிக் கேட்டும் உடன்பட மறுத்தால் தான் என்ன செய்ய இயலும் என்று கலங்கி நிற்கிறார்.

    ஆனால் அந்த சிவனடியாரோ சட்டென்று, அவரிடத்தில் கொடுத்த அந்த அடைக்கலப் பொருளைத் தாம் கவர்ந்துகொண்டு பாவத்துக்குச் சிறிதும் அஞ்சாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவும், தன்னுடைய ஓட்டை திரும்பப் பெறாமல் அந்த இடத்தை விட்டு அகலமாட்டேன் என்றும் உறுதியாக நிற்கிறார்.

    நீலகண்டரும் அடியவரின் பாதம் பணிந்து, எத்தனை முறை சொன்னாலும் நம்ப மறுத்தால் தன்னால் என்ன செய்ய முடியும். வேறு எப்படி தான் களவாடவில்லை என்பதை அவருக்குப் புரியவைப்பது என்று தெரியவில்லையே என்று நொந்து போனார்.

    அப்போது அந்த சிவனடியாரும், நீலகண்டரிடம் அவருடைய அருமைப் புதல்வனை வைத்து குளத்தில் மூழ்கி தான் களவாடவில்லை என்று சத்தியம் செய்தால் ஒப்புக்கொள்கிறேன் என்கிறார். அதற்கும் நீலகண்டர் தனக்கு புத்திரன் எவரும் இல்லையே என்று கூறி வருந்துகிறார். அப்படியானால்  தன் மனைவியைக் கைப்பிடித்து முழுகிச் சத்தியம் பண்ணித்தரச் சொல்லிக் கேட்கிறார் அந்த சிவனடியார். அப்போது நீலகண்டர், தானும் தன் மனைவியும் தங்களுக்குள்ளிருக்கும் ஓர் சபதத்தினாலே ஒருங்கு முழுகுதல் கூடாது என்பதால் தான் மட்டும் குளத்தில் முழுகிச் சத்தியம் பண்ணித் தருவதாகக் கூறுகிறார். அதற்குச் சிவனடியாரும், தான் முன்னே தந்த ஓட்டைத் தராமலும், அதைக் கவர்ந்துகொள்ளவில்லையெனின் தன் மனைவியைக் கைப்பிடித்துச் சத்தியம் செய்து தராமலும், மனம் வேதனைப்படச் செய்திருப்பதால் தில்லைவாழந்தணர்கள் கூடியிருக்கும் பெரிய சபையில் இவ்விசயத்தைக் குறித்துப் பேசப் போவதாகச் சொல்லி அவரையும் உடன் வரப்பணிக்கிறார். அந்தச் சபைக்குச் செல்ல ஒப்புக்கொண்டு திருநீலகண்ட நாயனாரும் அவருக்குப் பின்னே செல்கிறார்.

    சிவனடியார் அந்தப் பிராமணர்களைப் பார்த்து, “இந்தக் குயவன் தன்னிடத்திலே நான் வைத்திருக்கும்படி கொடுத்த ஓட்டைத் தரவும் இல்லை. அதனை இழந்திருப்பின், தன் மனைவியைக் கைப்பிடித்துக் குளத்திலே முழுகிச் சத்தியம் பண்ணித் தரவுமில்லை” என்றார். உடனே பிராமணர்கள் திருநீலகண்டரிடம் நடந்த சமாசாரத்தை சொல்லச் சொல்லிக் கேட்கிறார்கள். அவரும் சிவனடியார் தந்த திருவோடு தான் வைத்த இடத்தினின்றும் மறைந்து போய்விட்டது என்றும் தான் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை என்றார். அதற்குப் பிராமணர்கள், “ஒரு வேளை இவர் தந்த ஓட்டை நீர் இழந்தீராகில், இவர் கேள்விப்படி உம்முடைய மனைவியைக் கைப்பிடித்துக் குளத்தில் முழுகிச் சத்தியம் செய்து கொடுத்தலே நீதி” என்றார்கள்.

    நீலகண்டரும் அதைக்கேட்டு, தாம் தம் மனைவியாரைத் தீண்டாதிருத்தலைக் குறித்துப் பேச முடியாதவராகி,  அவர் கேட்பதற்குத் தகுந்தபடி குளத்தில் முழுகிச் சத்தியம் செய்து தரும்படிச் சொல்லி, சிவனடியாரோடு தம்முடைய வீட்டுக்குச் சென்று, மனைவியாரையும் அழைத்துக்கொண்டு, திருப்புலீச்சரத்துக்கு முன்னிருக்கிற திருக்குளத்திற்குச்  சென்றவர், ஒரு மூங்கிற்தண்டை எடுத்து ஒருபுறத்தில் மனைவியார் பிடிக்க, மறுப்புறத்தில் தாம் பிடித்துக்கொண்டு இறங்கினார். அதைக் கண்ட சிவனடியாரும், “உன் மனைவியைக் கைப்பிடித்துக்கொண்டு மூழ்கு” என்று பணிக்க, திருநீலகண்ட நாயனார் அப்படிச் செய்யக் கூடாமையை உலகத்தார் அறியும்படி, முன்னாளில் தாம் தவறான பரத்தையிடம் சென்றதையும், அதனால் உண்டாகிய சபதமும் அதன்படி தவறாமல் நடந்து வருதலும் தெளிவாகச் சொல்லி முழுகினார்.

    ‘மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லேன்’ என்பார் பட்டினத்தார். அடியவர் மனத்திலிருந்த மாசினை நீக்க இறைவன் அதனை உலகறியச் செய்ய அனைத்தையும் சொல்ல வைத்து ஆட்கொண்டருளினார்.

    அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. முழுகிக் கரையிலேறிய திருநீலகண்ட நாயனாரும் அவருடைய மனைவியாரும் மூப்புப்பருவம் முற்றாக நீங்கி இளைமைப் பொலிவோடும், அழகோடும் எழுந்தார்கள்.  தேவர்களும் முனிவர்களும் அவர்கள்மீது ஆகாயத்தினின்றும் பூமாரிப் பொழிந்து அவரது பெருமையை உணரச் செய்தார்கள். எம்பெருமான் பிராட்டியாரோடு விடையின்மேல் தோன்றி என்றும் இவ்விளமை நீங்காது எம்மோடு சிவலோகத்தில் இனிது இருப்பீராக என்று கூறியருளினர். பக்தி வலிமையையுடைய திருநீலகண்ட நாயனாரும் மனைவியாரும் யாவராலும் செய்தற்கரிய பெருஞ்செய்கையைச் செய்து சிவலோகத்தை அடைந்து பேரின்பத்தை அனுபவித்து வாழ்ந்திருந்தார்கள்.

    திருச்சிற்றம்பலம்

     

    திருநீலகண்ட நாயனார் புராணம் சொல்லும் கருத்து

     

    கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரிதானதொன்று அல்ல. அது ஆண், பெண் என இரு பாலருக்கும் சமமான ஒன்று என்பதை தெளிவுற விளக்கும் புராணம் என்றே கொள்ள முடிகிறது. அந்தக் கற்பை கேள்விக்குறியாக்குவதே காமம் என்பதாம். அதாவது காமம் என்பது பிறவிப் பிணியைத் தீர்த்து இறைவனை அடைவதற்குத் தடையாக உள்ள ஒன்று. அக்காமமே கொலை, களவு, கள்ளுண்ணல் முதலிய பல்வேறு பாவங்களுக்கெல்லாம் அடித்தளமாக அமைவதோடு, எத்துணை நுண்ணறிவாளருடைய அறிவையும் கெடுக்கும் இயல்புடையது. அக்காமமே ஆன்மாக்களை நரகங்களில் எண்ணிறந்த காலம் வீழ்த்தி, வருத்தும் பெருங்கொடுமையை உடையது. மேலிடம், பொழுது, குணம், குலம், ஒழுக்கம் போன்றனைத்தும் குன்றுதலையும், பழியும் பாவமும் விளைதலையும் சிறிதும் சிந்திக்க விடாது. பல நேரங்களில் கல்வியறிவொழுக்கங்களால் ஆன்ற பெரியோர்களுடைய உள்ளத்தினில் தலைப்படினும், அவ்வுள்ளம் இடம், பொருள், ஏவல் என எதையும் ஆராய விடாமல் செய்துவிடுகிறது. அந்த வகையில் தெய்வ நலமே சிறந்த நலம் என்றும் இல்லறத்தில் இனிதே வாழும் இயல்புடைய இத்திருநீலகண்ட நாயனார், அழகிற் சிறந்த தம்முடைய மனைவி இருப்பவும் தம் மனத்தினில் தலைப்பட்ட காம மிகுதியினால் பரத்தையைச் சேர்ந்தார். மனைவியார் கொண்ட ஊடலைத் தீர்க்கும் பொருட்டு, அவரைச் சமாதானம் செய்ய முயன்றபொழுது அவர், “நீர் எம்மைத் தீண்டுவீராயில் திருநீலகண்டம்” என்று சிவனைச் சுட்டி ஆணையிட்டதைக் கேட்ட உடனே அவரைத் தீண்டாமல் நீங்கி விடுகிறார். அதுமட்டுமின்றி அம்மையார் தன்னை மற்றும் ஒருமையில் சொல்லாமல், ‘எம்மை’ என்று பன்மையாகச் சொன்னதனால் தம் மனைவியாகிய இவரை மட்டுமல்லாமல் மற்றைய பெண்களையும் மனத்தினாலும் நினைத்தலும் செய்யேன் என்று உறுதி கொள்கிறார். அந்த வகையில் நீலகண்டருடைய மனதில் காமம் தலைப்பட்டபோதும் சிவபக்தி அதனினும் அதிகமாகத் தலைப்பட்டிருந்த  காரணத்தால் அவருடைய சிவபக்தியானது பின் ஒருபோதும் இவர் மனதில் காமம் சிறிதாயினும் எழவொட்டாமல் தடுத்தாண்டுகொண்டதும் ஈண்டு உணரத்தக்கது.

    இந்திரன் அகலிகை மீதும், சந்திரன் தாரையைக் கண்டும் மையல் கொண்டனர். மாபெரும் முனிவர் விசுவாமித்திரர் மேனகையிடம் மோகம் கொண்டார். ஆனால் திருநீலகண்டரோ கட்டிய மனைவியை உடன் வைத்தும் பெண்ணாசையைத் துறந்தார்.

    காமம் என்ற ஒன்று மனதில் சிறிதளவேனும் எழவிடாமல் அடக்கல் வேண்டும் என்பர் பெரியோர். அங்கனம் சிறிது எழுந்தாலும் சிவனடியாரோடு கலத்தல், சிவசாத்திரம் பற்றிச் சிந்தித்தல், சிவநாமம் கேட்டல் போன்ற நற்செய்கைகளால் அதுபற்றிய சிந்தையே எழாவண்ணம்  மனத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்தல் சாத்தியமாகும் என்பது உணரத்தக்கது.

    அம்பு மழலு மவிர்கதிர் ஞாயிறும்

    வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்-வெம்பிக்

    கவற்றி மனத்தைச் சுடுதலாற் காம

    மவற்றினு மஞ்சப் படும்.

    என்கிறது நாலடியார்.

     

    திருச்சிற்றம்பலம்.

    தொடருவோம்

    Share
  • சிவனார் நண்பர் செந்தமிழ் சுந்தரர்!

    சிவனார் நண்பர் செந்தமிழ் சுந்தரர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    அரனார்  தொண்டராய் அருகி லிருந்தார்
    அவரின் மனத்தில் காமம் எழுந்தது
    காமனை எரித்தவர் சாபம் கொடுத்தார்
    அரனின் தொண்டர் அவனியில் பிறந்தார்

    புவனியில் பிறவென அரனார் மொழிந்தார்
    தொண்டர் திகைத்து தாழினை பணிந்தார்
    கவலை விட்டிடு காப்பேன் என்றார்
    புவனியில் தொண்டர் பயணந் தொடர்ந்தார்

    அந்தண குலத்தில் பிறந்தார் அடியார்
    அழகாய் இருந்ததால் சுந்தரர் ஆனார்
    அழகுக் குழந்தையை அரசன் கண்டான்
    ஆசைப் பட்டுக் குழந்தையைக் கேட்டான்

    அரசன் மனையில் சுந்தரர் வளர்ந்தார்
    அணிமணி புனைந்து அவரும் இருந்தார்
    ஆலால சுந்தரர் அரண்மனை வாழ்வு
    ஆனந்தக் கடலாய் ஆகியே விரிந்தது

    திருமண வயதினை எட்டினார் சுந்தரர்
    மணவினை ஆற்றிட பெற்றோர் விரும்பினர்
    மங்கல நாளினில் மணமகன் மணமகள்
    வந்திடும் வேளை சங்கடம் வந்தது

    எந்தையாம் ஈசன் சுந்தரர் தமிழை
    தந்திரம் செய்து கேட்டிட  வந்தார்
    கிழவனாய் வந்தார் யாவரும் கேட்டிடச்
    மணமகன் சுந்தரன் அடிமையே என்றார்

    அடிமை என்றதும் அனைவரும் திகைத்தனர்
    மணமகன் சுந்தரர் வெகுண்டுமே எழுந்தார்
    பித்தா என்று கிழவனைத் திட்டினார்
    வந்தவர் யாவரும் கிழவரைப் பார்த்தனர்

    அடிமை இவனே ஆதாரம் உண்டு
    கிழவர் ஓலையைக் காட்டினார் சபையிலே
    யாவரும் மெளனம் ஆகியே நின்றனர்
    கிழவர் பின்னே மணமகன் சென்றனன்

    ஆலயம் ஒன்றனுள் கிழவர் புகுந்தார்
    அனைவரும் காணவே அரனார் தோன்றினார்
    சுந்தரர் அழுதார் தொழுதார் அரனை
    பாடிடு என்று பரமன் பணித்தார்

    எப்படிப் பாடுவேன் என்றார் சுந்தரர்
    திட்டிய வார்த்தையை முதலாய் கொள்ளு
    பித்தா பிறைசூடி  பெருமானே அருளாளா
    முத்தாய் தமிழில் முகிழ்த்துமே வந்தது

    சிவனார் மகிழ்ந்தார் சேவித்தார் சுந்தரர்
    தலமெலாம் சென்றார் தமிழமு தீந்தார்
    சைவம் தளைக்க தத்துவம் சிறக்க
    சுந்தர் செந்தமிழ் சுவையுடன் எழுந்தது

    சுந்தரர் பக்தி தோழமைப் பக்தி
    செந்தமிழ் அடியார் போற்றிடும் பக்தி
    அந்தமில் அன்பில் விளைந்த நல்பக்தி
    ஆண்டவன் அருகினில் அணைந்திடும் பக்தி

    பூதலம் பிறந்த காதல் பெண்களை
    கைத்தலம் பற்றிட வைத்த நல்பக்தி
    காதல் தூதாய் கறைக்கண்டன் சென்றிட
    கட்டளை இட்ட கனிவுடைப் பக்தி

    பக்திச் சுவையினைப் பருகப் பருக
    சேக்கிழார் காப்பியம் ஆக்கியே அளித்தார்
    காப்பியப் பொருளைக் கொடுத்தவர் சுந்தரர்
    காலம் முழுதும் நினைக்கிறார் யாவரும்

    சுந்தரர் பாடல்கள் சுவையுடைப் பாடல்கள்
    செந்துருப் பண்ணில் சிறந்திடும் பாடல்கள்
    சம்பந்தர் அப்பர் தொட்டிடாப் பண்ணே
    தமிழுக்கு வாய்த்திட்ட வரமான பண்ணே

    ஏழாந் திருமுறை ஆகியே நின்று
    எங்கள் சைவம் காத்திட வந்தது
    ஆழமாங் கருத்தை அடக்கியே வைத்து
    ஆலால சுந்தரர் அருந்தமிழ் ஈந்தது

    வன்தொண்டர் பெயரினைப் பெற்றிட்ட போதும்
    வன்மமே இல்லா மென் தொண்டராகினார்
    கயிலை நாதனே கயிலை அழைத்தார்
    காமம் கலைந்தது கலந்தார் சுந்தரர்

    அரச வாழ்வில் வாழ்ந்தார் சுந்தரர்
    ஆனால் அகத்தில் அரனே நிறைந்தார்
    மண்ணக வாழ்வினைப் புண்ணிய மாக்கினார்
    மாசிலா மனத்துடன் வையகம் இருந்தார்

    பக்தியில் நட்பினை புகுத்திய அடியார்
    பரமனைப் பற்றியே வாழ்ந்த நல்லடியார்
    முத்தியைக் கூட நட்புக்கும் பகிர
    சுத்தமாம் மனத்துடன் கேட்ட நல்லடியார்

    மனத்தை அடக்கு மாசுகள் அகலும்
    கணத்தில் கூடக் காமம் வேண்டாம்
    சிவத்தை ஒதுக்கில் சிறப்பை இழப்பாய்
    அகத்தில் இருத்து அரனும் அருள்வான்

    உயரிய இடத்தில் இருப்பவர் யாவரும்
    உறுதியை இழந்தால் தகுதியை இழப்பார்
    வேண்டா வினைகள் தொடரும் என்பதை
    விளக்கிடச் சுந்தரர் பிறப்பே பாடம்

    Share
  • பெண்ணாகப் பிறந்தாலும் மண்சிறக்க வாழ்ந்தார்!

    பெண்ணாகப் பிறந்தாலும் மண்சிறக்க வாழ்ந்தார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பன்மொழிகள் பாரெங்கும் பரவியே இருக்கு
    பசுந்தமிழோ தனித்துவமாய் எழுந்துமே இருக்கு
    பக்தியை இலக்கியமாய் கண்டதும் தமிழே
    பாருக்குப் பண்ணிசையைக் கொடுத்ததும் தமிழே

    கடவுளையே மொழியாக்கிக் கண்டதும் தமிழே
    கடவுளே தமிழ்கேட்க விரும்பியதும் உயர்வே
    அடியார்கள் தமிழ்கேட்டு ஆண்டவனே மகிழ்ந்தான்
    அகிலத்தில் தமிழ் மொழியே அமுதமாயிருக்கு

    எம்மொழியும் பக்தியினைத் தொட்டதும் இல்லை
    பக்தியெனும் பெரு வெளியில் பயணிக்கவில்லை
    எம்மொழியாம் தமிழொன்றே பக்தியினைப் பற்றியதே
    இதனாலே தமிழுமே தனித்துவமாய் மிளிர்கிறது

    பக்தியை இலக்கியமாய் பாருமே பார்ப்பதற்கு
    படைத்திட்ட எங்கள்மொழி பாருக்குள் உயர்வாகும்
    பக்திக்குள் மூழ்கிவிட்டால் பரவசமே உருவாகும்
    பரவசத்தை அளிப்பது பாங்குடைய தமிழாகும்

    பக்தி இலக்கியத்தை தொடக்கிய முன்னோடி
    காரைக்கால் ஈன்றெடுத்த கனிவான பெண்ணாவார்
    மாதரில் மாணிக்கமாய் மாசில்லா மங்கையாய்
    மாதவத்தின் உருவமாய் வந்துமே பிறந்திட்டார்

    நல்லறமாம் இல்லறத்தில் நங்கையும் இணைந்திட்டாள்
    நற்கணவன் கைபிடித்து நலமுடனே வாழ்ந்திட்டாள்
    தெய்வமது சித்தத்தால் சீரான குடும்பமதில்
    தித்திக்கும் மாங்கனி திசைமாறச் செய்ததுவே

    கைபிடித்த கணவன் கண்ணான மனைவியை
    சந்தேக மனத்துடனே சஞ்சலத்துள் ஆழ்த்தினான்
    மாங்கனியின் மாயத்தை மனமேற்க மறுத்ததால்
    மாதரசி மங்கையினை மனமொதுக்கி அகன்றிட்டான்

    பதிறித் துடித்தாள்  பரமனையே பற்றினாள்
    அழகுடைக் கோலத்தை அருவருப்பாய் எண்ணினாள்
    யாருமே விரும்பாத கோலத்தை மனங்கொண்டாள்
    பேயுருவை பெருவிருப்பாய்  பெற்றிட்டாள் இறைவனிடம்

    காரைக்கால் அம்மை பேயுருவாய் மாறினார்
    கணக்கில்லாப் பேரன்பை கடவுளிடம் காட்டினார்
    பக்திப் பெருவெளியில் பயணிக்கத் தொடங்கினார்
    பரமனைப் பாடினார் பக்திக்கும் வித்திட்டார்

    அன்னைத் தமிழுக்கு அம்மையார் பெருஞ்சொத்தே
    முன்னவராய் இருந்து இணைத்திட்டார் பக்தியினை
    பக்தி இலக்கியமாய் மலர்வதற்கு வித்திட்டார்
    பசுந்தமிழும் அதையேற்று பார்போற்ற எழுந்ததுவே

    இசையாலே தமிழ்பாடி இறைதுதிக்க வழிசெய்த
    எங்கள்தமிழ் முன்னோடி காரைக்கால் அம்மையே
    அவர்வகுத்த அடியொற்றி அவர்பின்னே வந்தடியார்
    ஆண்டவனைப் பண்ணோடு அன்புருகப் பாடினரே

    அந்தாதி தந்தார் பதிகமும் தந்தார்
    திருவிரட்டை மணிமாலை சிறப்பாகத் தந்தார்
    பதிகத்தைத் தொடக்கி பக்தியைக் காட்டி
    அந்தாதிக் கருத்திருத்தி ஆண்டவனைப் பாடினார்

    பக்திப் பாமரபில் முன்னோடி  அம்மையார்
    பதிகத்தைத் தொடக்கியவரும் காரைக்கால் அம்மையார்
    வெண்பாவைத் தொட்டார் விருத்தத்தை காட்டினார்
    பண்பாடிப் பக்தியிலே பலர்தொடர வழிவகுத்தார்

    இசைத் தமிழால் பாடுதற்கு வித்தானாரிவரே
    பண்பாடி பக்தியினைப் பரப்புதற்கும் முன்னோடி
    நாயன்மார்  பண்ணோடு  நற்றதமில் பாட
    காரைக் காலம்மையே தனிப்பாதை வகுத்தார்

    சைவத்தை மேலாகத் தன்னகத்தில் கொண்டார்
    தமிழ்ப் பக்தியியக்கத்தின் முன்னோடி ஆனார்
    பேயுருவை உவந்தேற்ற பெரும்பெண்ணும் ஆனார்
    பெம்மானே அம்மையென அழைத்த பெண்ணுமாவர்

    இறையுணர்வை இலக்கியத்தில் இணைத்த பெண்ணாவார்
    இறையடியில் இருப்பதை இன்பமாய் ஏற்றார்
    பேயுருவில் கைலாயம் சென்ற பெண்ணாவர்
    பெம்மானின் கோவிலில் இருப்பிடமும் பெற்றார்

    காரைக்கால் அம்மையை கருத்தினிலே வைப்போம்
    காலத்தால் அழியாத கவிமரபை அளித்திட்டார்
    திருமுறைகள் வருவதற்குத் திறவுகோல் அவராவார்
    அவர் நினைவை அனவருமே அகமிருத்துவோமே

    பெண்ணாகப் பிறந்தாலும் மண்சிறக்க வாழ்ந்தார்
    பெருமானின் திருவடியை பெரும்பேறாய் கொண்டார்
    பக்திப் பெருவெளியில் முத்தாக ஒளிர்ந்தார்
    பாடினார் பாடினார் பரமனுமே மகிழ்ந்திட்டார்

    Share
  • ஆன்மீக அலைகள் நெஞ்சிலடித்த வேளை

    ஆன்மீக அலைகள் நெஞ்சிலடித்த வேளை

    சக்தி சக்திதாசன்

    வேல்ஸ் காமாத்தனின் மலைகளில் ஒரு ஆன்மிக நாளும், நினைவுகளும்

    2025 ஜூலை 13ஆம் தேதியான ஒரு ஞாயிறு காலை, எமது உள்ளங்களைக் கவர்ந்த ஒரு வழிபாட்டுப் பயணம் மீண்டும் தொடங்கியது.

    ஐக்கிய இராச்சியத்தின் தெற்கு வேல்ஸ் பகுதியில், காமாத்தன் அருகே உள்ள Llanpumsaint எனும் சிறிய கிராமத்தில், இயற்கையின் மடியில் அமைந்துள்ளது ஸ்கந்தவேல் ஆசிரமம்.

    அருமையான மலைக்குன்றின் நீர்வெளிக்கருகே அமைந்திருக்கிறது.

    இயற்கையின் மடியிலும் ஆன்மிக ஒளியிலும் மிளிரும் இந்த ஆலயம், ஒரு ஆச்சிரமத்தின் பகுதியாகவும் அமைந்துள்ளது.

    ஸ்கந்தவேல் ஆலயம் என்பது வெறும் ஒரு கோவில் அல்ல.

    அது பல்லின ஒற்றுமையின் உயிரோட்டம். இங்கு பூஜைகளை நடத்தும் அர்ச்சகர்கள் வெவ்வேறு இனங்களையும் மதங்களையும் சேர்ந்தவர்கள்.

    அவர்களின் பக்தி, முருகனின் மீது கொண்ட அன்பு, அவர்களது பஜனை பாடல்களில் வெளிப்படுகிறது.

    முருகனின் அனுகிரகத்தையே நேராக உணரச் செய்கின்றன.

    தூய்மையான வள்ளி-தேவயானி சமேத சண்முகப் பெருமான் சந்நிதியில் நாங்கள் நின்ற அந்தக் கணம், மரபுக்கும் பக்திக்கும் இடையே ஒரு பாலமாக இருந்தது.

    நாங்கள் இங்கு வந்து போய்க் கொண்டிருப்பது கடந்த 40 ஆண்டுகளாகும்.

    இந்த ஆலயம் எங்களுக்குப் புதிதல்ல. கடந்த நான்கு தசாப்தங்களாக நாங்கள் இதன் பக்தர்களாக இருந்து வருகிறோம்.

    இறந்துபோன என் பெற்றோர் இப்பக்தி பாதையில் என்னுடன் பயணம் செய்த நாட்களும் மறக்க முடியாதவை.

    அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் பலமுறை அழைத்துச் சென்ற இந்தத் தரிசனங்கள், எங்கள் குடும்பத் தழுவல்களை ஆழப்படுத்தின.

    நண்பர்கள், உறவுகள் எம்மோடு இணைந்து அங்கு வந்தது வாழ்வின் பல பரிமாணங்கள்

    வேறு நண்பர்களுடனும், உறவினர்களுடனும் சேர்ந்து இந்த ஆழமான ஆன்மிக அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறேன்.

    ஒவ்வொரு பயணமும் வெவ்வேறு உருமங்களைக் கொண்டாலும், அந்த கோவிலின் அமைதி,

    ஆலய ரீதிகள் மற்றும் வாசல் தாண்டியதும் ஏற்படும் சாந்த உணர்வுகள் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருந்தன.

    இந்த ஆலயத்தின் குருவாக இருந்து இறைபதமடைந்தவரைப் பற்றி சிறிது பார்ப்போம்.

    1929ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த குரு ஸ்ரீ சுப்ரமணியம், ஒரு சிங்கள பௌத்த தந்தையும் தமிழ் இந்து தாயும் கொண்ட குடும்பத்தில் வளர்ந்தார்.

    அவரது தாயார், ஆசரப்பா, ஒரு புகழ்பெற்ற தெய்வீகத் தரிசனவாளி.

    சிறு வயதிலேயே, குரு தமது ஆன்மீக வழியை உணர்ந்தார்.
    ஏழு வயதில் “சுப்ரமணியம்” என்ற பெயரைத் தாமாகவே ஏற்றுக்கொண்டார், இது முருகனின் அருளின் அடையாளமாக அமைந்தது.

    இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, குரு ஐரோப்பாவைச் சுற்றிப் பயணித்து லண்டனில் ஒரு மலர் கடையை நடத்தினார்.

    ஆனால், இரவுகளில் அவர் தியானம், யோகா, மற்றும் பஜனை கற்றுத்தந்தார்.

    இதுவே அவரது ஆலயம் “Community of the Many Names of God” எனும் ஆன்மீகக் குழுவாக வளர உதவியது.

    1962ஆம் ஆண்டு, இலங்கையில் உள்ள பதுளை முருகன் கோவிலில் தியானம் செய்தபோது, மூன்று தலை கொண்ட நாகம் வடிவில் முருகன் தோன்றினார்.

    குருவிடம் “எதை வேண்டுகிறாய்?” எனக் கேட்டபோது, அவர் பணமில்லாத, மத எல்லையற்ற ஒரு வழிபாட்டுத் தலம் மேற்கத்திய உலகில் உருவாக வேண்டும் என்ற ஆசையைத் தெரிவித்தார்.

    அந்த தரிசனத்தின் பின், ஒரு புனித வேல் மற்றும் முருகன் முர்த்தி அவருக்கு வழங்கப்பட்டது.

    இவை ஆன்மீக சக்தியின் களஞ்சியமாக அமைந்தன, பின்னர் உருவான ஆசிரமத்திற்கு ஆதாரமாக இருந்தன.

    1973ஆம் ஆண்டு, குரு ஸ்ரீ சுப்ரமணியம், லண்டனில் இருந்த சிறிய கோவிலை வேல்ஸ் நாட்டின் Carmarthen அருகே உள்ள Llanpumsaint கிராமத்திற்கு மாற்றினார்.

    இங்கு 22 ஏக்கர் நிலத்தில் அமைந்த ஒரு பழைய பண்ணை வீட்டை வாங்கி, அதனை “ஸ்கந்தவேல்” எனப் பெயரிட்டார்.

    அங்கு முதலில் முருகன் ஆலயம் உருவாக்கப்பட்டது. பி

    இவை அனைத்தும் பல்லின ஒற்றுமையை, தியானத்தை, மற்றும் சாத்வீக சேவையை மையமாகக் கொண்டவை.

    இவரின் தத்ஜ்துவங்களாக

    மத எல்லைகள் இல்லாமல், தெய்வீக அனுபவத்தை நேரடியாக உணர வேண்டும்
    பணமில்லாத சேவை, தியானம், மற்றும் பக்தி
    அனைத்து உயிர்களும் தெய்வீகத்தின் பிரதிபலிப்புகள்
    பசுமை, பரிவு, மற்றும் கருணை

    என்பன அமைந்தன.

    ஸ்கந்தவேல் ஆசிரமம் இன்று 100,000க்கும் மேற்பட்ட பக்தர்களை ஆண்டுதோறும் வரவேற்கிறது.

    இது மதம் கடந்த ஆன்மீக மார்க்கத்தின் ஒரு புனிதக் கதவாக விளங்குகிறது.

    13.07.2025 அன்று, என் மனைவியுடன் மீண்டும் அந்த ஆலய வாசலை அடைந்த போது, கடந்த காலங்கள் புறப்பட்டு வந்தன.

    பூஜையின் ரீதிகள், பக்தர்களின் ஒத்த ஒலி, குரல்களில் நின்ற மந்திரங்கள்—இவை அனைத்தும் ஆவி தொடும் அனுபவமாக அமைந்தன.

    அந்த நாள் ஒரு சாதாரண ஞாயிறு இல்லை, அது ஆன்மாவின் கொண்டாட்டம்.

    பழமையான தமிழ் பஜனைகள், வேத மந்திரங்கள், மற்றும் மேற்கத்திய இசைத் தொனிகளுடன் கலந்த பஜனைகள்—இவை அனைத்தும் ஒரு ஆன்மிக இசைத் திருவிழாவாகவே உணரப்படுகின்றன.

    முருகன் பூஜையின் போது, அர்ச்சகர்கள் பாடும் பஜனைகள் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.

    வார இறுதிகளில், முருகன் பூஜை நேரடி ஒலிபரப்பாக நடைபெறுகிறது,

    இதில் பஜனை, மந்திரங்கள், ஆரத்தி அனைத்தும் மனதைக் கவர்ந்திழுக்கும் மந்திரங்கள்.

    இந்த பல்லின பஜனை அனுபவம், முருகனின் “அறம் வளர்த்த நாயகன்” என்ற தன்மையை உலகமெங்கும் பரப்பும் ஒரு பாலமாக உள்ளது.

    பூஜைக்குப் பின் வழங்கப்படும் உணவு, சாத்வீக முறையில் தயாரிக்கப்பட்ட எளிமையான உணவாக அமைகிறது.

    சாதம், பருப்பு, காய்கறிகள், பழங்கள்—இவை அனைத்தும் பசுமை உணவாக, பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

    உணவின் எளிமை, அதன் தூய்மை, மற்றும் பக்தி உணர்வுடன் கூடிய பரிமாற்றம், அந்த நாள் முழுவதும் ஆன்மிகத் தூய்மையை நிலைநிறுத்துகிறது.

    இங்கு அமைந்துள்ள மகா சக்தி ஆலயம், பக்தர்களின் உள்ளங்களை ஆழமாகத் தொட்டும் ஒரு புனிதத் தலம்.

    ஸ்கந்தவேல் ஆசிரமம், மலையெழுச்சிகளும், பசுமை வனங்களும் சூழ்ந்த ஒரு தனிமையான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

    நகரக் களத்திலிருந்து விலகி, இயற்கையின் அமைதியை உணரச் செய்யும் இந்த இடம், ஆன்மிகத் தேடலுக்கும், மன அமைதிக்கும் ஏற்ற ஒரு சூழலை வழங்குகிறது.

    அலங்காரமில்லாத இயற்கை பாதைகள், பறவைகளின் இசை, மழைநீரின் வாசனை
    இவை அனைத்தும் தெய்வீக சக்தியின் நெருக்கத்தை உணரச் செய்கின்றன.

    சக்தி ஆலயத்திற்கு செல்ல, 15 நிமிடங்கள் உயரமான நடைபாதை கடக்க வேண்டும். இது ஒரு பயணத்தின் பக்தி வடிவம் போலவே உணரப்படுகிறது.

    1991ஆம் ஆண்டு, குரு ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், தெய்வீக தாயின் நேரடி அருளால் இந்த ஆலயம் உருவாக்கப்பட்டது.

    ஆலயத்தின் மையத்தில், ஆறு அடி உயரமுள்ள மகா காளி மூர்த்தி பக்தர்களை ஆழமான ஆன்மிக அனுபவத்திற்கு அழைக்கின்றார்.

    இங்கு லட்சுமி, சரஸ்வதி, பட்டினி, மற்றும் மேரி மாதா போன்ற பல தெய்வங்களுக்கான சன்னதிகள் உள்ளன, இது பல்லின ஒற்றுமையின் பிரதிபலிப்பாகவும் அமைந்துள்ளது.

    ஆலயத்தில் தினமும் நடைபெறும் பூஜைகள், ஆரத்திகள், மற்றும் பஜனைகள், பக்தர்களின் உள்ளங்களை தூய்மைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

    பூஜைக்குப் பின் வழங்கப்படும் சாத்வீக உணவு, பக்தி உணர்வுடன் கூடிய பரிமாற்றமாக அமைகிறது.

    இங்கு 1999ஆம் ஆண்டு, குரு ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களின் தெய்வீகக் காட்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம்.

    நீர்நிலையின் மத்தியில் விஷ்ணுவின் தரிசனம் போன்றே அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆலயத்தின் மையத்தில், ஒரு பெரிய நீர்நிலையின் மத்தியில் ஸ்ரீ ரங்கநாதர் (விஷ்ணு) பெருமான் படுத்திருக்கும் நிலையில் அமைந்துள்ள மூர்த்தி பக்தர்களை ஆழமான தியான அனுபவத்திற்கு அழைக்கின்றது.

    அவரைச் சுற்றி ஹனுமான், பிரம்மா, மகாலட்சுமி ஆகிய தெய்வங்களின் சன்னதிகள் அமைந்துள்ளன.

    அதே நீர்நிலையின் அருகில், மஹிஷாசுர மர்தினி, நாகராஜா, மற்றும் தத்தாத்திரேயர் ஆகிய தெய்வங்களுக்கான சிறப்பு சன்னதிகளும் உள்ளன.

    மேலும், ஈசன் (சிவன்) ஒரு சிறிய நீர்வீழ்ச்சியின் கீழ் அமர்ந்திருக்கும் அழகிய வடிவத்தில் காணப்படுகிறார்.

    இந்த ஆலயம், இஸ்லாம், கிறித்துவம், புத்தம், மற்றும் ஹிந்து மதம் ஆகியவற்றின் தெய்வங்களையும் உள்ளடக்கியது.

    யேசு, புத்தர், மற்றும் பிற தெய்வங்களின் சின்னங்கள் இங்கு காணப்படுகின்றன. இது “அனைத்து மதங்களும் ஒரே தெய்வத்தை நோக்குகின்றன” என்ற ஸ்கந்தவேல் ஆசிரமத்தின் தத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

    இந்த ஆலயத்தின் கட்டமைப்பு, குரு ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களுக்கு விஷ்ணு பெருமான் நேரடியாகக் காட்டிய வடிவமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

    அதற்கேற்ப, மூர்த்தி இந்தியாவில் சிற்பமாக்கப்பட்டு, தானமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் தெய்வீகத் திட்டத்தின் அற்புதத்தைக் காட்டுகின்றன.

    தினமும் காலை 9:30 மணிக்கு பூஜை நடைபெறுகிறது.
    செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு மஹாபிஷேகம் நடைபெறுகிறது.
    ஆலயம் தினமும் காலை 4:30 முதல் இரவு 10:30 வரை திறந்திருக்கும்.

    ஸ்கந்தவேல் ஆசிரமத்தின் மையத்தில், ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது சாய்பாபா ஆலயம்.

    இது ஷிர்டி சாய்பாபாவின் தெய்வீக வடிவத்தை பிரதிபலிக்கும் ஒரு தியானக் கோவில், பக்தர்களின் உள்ளங்களை ஆழமாகத் தொட்டும் இடமாக அமைந்துள்ளது.

    சாய்பாபாவின் தத்துவம் எல்லா மதங்களுக்கும் ஒரே தெய்வம்

    ஷிர்டி சாய்பாபா, இஸ்லாம் மற்றும் இந்து மதத்தின் ஒற்றுமையை எடுத்துரைத்த ஒரு துறவி. அவர் கூறிய முக்கியமான வரிகள்:

    “மதம் என்பது உடம்பின் ஆடையல்ல; ஆன்மா ஒன்றே.”

    அவர் மசூதியில் வாழ்ந்தும், ஹிந்து வழிபாடுகளை மேற்கொண்டும், எல்லா மதங்களையும் ஒரே தெய்வீக ஒளியாகக் கண்டார்.

    ஸ்கந்தவேல் ஆசிரமத்தின் பல்லின தத்துவத்துடன் இது முழுமையாக ஒத்துப்போகிறது.

    ஆலயத்தின் அமைப்பு இயற்கையின் மடியில் அமைந்த அமைதி

    மரச்சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆலயம், ஆசிரமத்தின் மரங்களிலிருந்து பெறப்பட்ட மரங்களால் கட்டப்பட்டது.

    மசூதி வடிவ வளைவுகள், சுவரோவியங்கள், மற்றும் தியானத்திற்கு ஏற்ற அமைதி சூழல்.

    – தினசரி ஆரத்தி காலை 9:30 மணிக்கு நடைபெறுகிறது, பக்தர்களுக்கு நேரடி தரிசன அனுபவம் கிடைக்கிறது.

    ஆலயத்தின் மகிமை தியானம், சேவை, மற்றும் பக்தியை முன்னிலைப் படுத்துகிறது.

    பக்தர்கள் சாய்பாபாவின் முர்த்தியை சுற்றி தியானம் செய்கிறார்கள்.

    அவரின் தத்துவங்களை மனதில் பதிக்கிறார்கள்.

    ஆலயத்தின் திறப்பு விழா, 2023 ஜூன் 9–12 வரை நடைபெற்றது.

    இதில் ஷிர்டி ஆலயத்திலிருந்து வந்த அர்ச்சகர்கள் புனிதக் கும்பாபிஷேகம் செய்தனர்.

    ஆலயம், பழமையான ஆன்மிகத் தலமாக உணரப்படுகின்றது, அதில் நிலவும் அமைதி, பக்தியின் ஆழமாகத் திகழ்கிறது.

    ஸ்கந்தவேல் ஆசிரமம், மத வேறுபாடுகளை நீக்கிய ஒரு ஆன்மீகக் கதவாக விளங்குகிறது.

    இங்கு ஒவ்வொருவரும் தத்தம் உள்ளத்தின் உண்மையைச் சந்திக்கும் பயணத்தில் தடையற்ற வெளியில் மெதுவாக நடக்கிறார்கள்.

    தியானத்தின் அமைதியில், பிரபஞ்ச சக்தி துலங்கும்.

    அந்த மௌனத்துக்குள் தோன்றும் ஒளி, மனதில் பரந்த அருளோவியத்தை வரைந்து, “நான்” என்ற எல்லையை ஒழிக்கும் தருணமாகிறது.

    ஒரு நாளின் பயணம் ஒரு ஜீவனின் புரிதலின் ஆரம்பம்.

    ஸ்கந்தவேல் ஆசிரமத்தில் பிறந்த சுயவிமர்சனக் கனங்கள் என்னை அழுத்தின.

    அருமையான மலைநெடுகளியில் அமைந்த ஸ்கந்தவேல் ஆசிரமம், என் மனதில் நீண்ட காலமாக பசுமையாக இருந்த ஆன்மீக இடம்.

    என் மனைவியுடன் மேற்கொண்ட அந்த ஒருநாள் பயணம், பழக்க வழக்கங்களுக்கு ஓர் நினைவெச்சம் மட்டுமல்ல, என் அந்தரங்கப் பிரபஞ்சத்தின் கதவுகளைத் திறந்த ஒரு விசையான அனுபவமாக மாறியது.

    ஒளியிலிருந்து ஊக்கம்தேடல் எனும் நிலைப்பாட்டை புரிய வைத்தது.

    ஆலயத்தின் அமைதியை மையமாகக் கொண்டு, பூஜைகளின் ஒலியில், பஜனைகளின் இசையில், சாமியார்களின் சிந்தனைகளில்… என் உள்ளம் தன்னைத் தேடத் தொடங்கியது.

    சங்கடங்களை மீறிய ஓர் “நான்” யார்? என்பதற்கான மௌனப் புதிர்கள், தியானத்தின் பசுமை அமைதியில் விழக்க ஆரம்பித்தன.

    நீண்ட காலமாக நான் தவிர்த்து வந்த பக்கங்களை அந்த ஒரு நாள் புரட்டியபோது, அதன் ஓரங்களில் பழைய சிந்தனைகள், மறந்துவிட்ட விழிப்புகள், சிற்றுணர்வுகள், எல்லாம் கோவில் வாசல் போல காத்திருந்தன.

    தியானத்தில் தேடல்  எனது நிஜம் எனும் உண்மையை உணர வைத்தது.

    ஆலயத்தின் மரச்சாயத்தில் அமைந்த சாய்பாபா கோவில் வாசலில் அமைதியாக அமர்ந்த தியானத் தருணங்கள், “சொற்கள் இல்லாமல் சொல்லும் உள் உரையாடல்களை” தூண்டின.

    மதம் மீறும் பரந்த உணர்வுகள்,
    நீளும் பசுமை,
    சுத்தமான அமைதி
    இவை அனைத்தும் என் உள் பாதைகளை ஒளியுற வழிகாட்டின.

    அந்த சுடுகாடான மௌனம், என் மனக் கோபங்களை பசுமையாக்கியது.

    நான் யாராக இருந்தாலும், அதுவும் ஒரு நிலை, ஆனால் நான் யாராக மாற வேண்டும் என்பதற்கான அந்த விசை, ஸ்கந்தவேல் தரிசனம் அன்றே தொடங்கியது.

    வழித்தடம் மாற்றிய ஓர் நாள் அமைதியான உணர்வுகளின் நாள்

    பயணங்களும் பூஜைகளும் நமக்குள் ஓர் பாதையை உருவாக்கும்.

    ஆனால் இந்தப் பயணம், அந்த பாதையை துடைத்து, புதியதொன்றை வரையியது.

    இது ஒரு நாளில் நிகழ்ந்த ஆன்மீக எழுச்சி. என் பெற்றோர், என் மனைவி, என் நண்பர்கள் எல்லோரும் ஒவ்வொரு காலகட்டத்தில் என்னோடு இங்கு இணைந்திருந்தார்கள் எனும் அனுபவம் என் ஆன்மாவோடு இணைந்திருக்கும்

    Share
  • மங்களச் செம்பொருள் சிவனார் விரதம் !

    மங்களச் செம்பொருள் சிவனார் விரதம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஆதியும் அந்தமும் காணா ஒளியாய்
    பேரொளி ஒன்று தோன்றியே நின்றது
    அடிமுடி காணென அசரீரி ஒலித்தது
    அயனும் மாலும் ஓடினார் தேடினார்

    ஆணவ நிலையில் தேடிய அவர்கள்
    அடிமுடி காணா அலமந்தி நின்றனர்
    தேவ தேவனாம் சிவனும் தோன்றி
    தெளிவினைக் கொடுத்து தரிசனம் காட்டினர்

    சிவனின் தரிசனம் தெளிவினைக் கொடுக்க
    அயனும் மாலும் ஆணவம் அகன்றனர்
    ஆணவம் அகன்றிட அமைந்த நன்னாளே
    மாநிலம் போற்றிடும் மகத்துவம் பெற்றது

    மகத்துவம் பெற்ற மகா சிவராத்திரி
    மக்கள் மனத்தினைப் பக்குவம் ஆக்கிடும்
    பசித்திரு என்றும் தனித்திரு என்றும்
    விழித்திரு என்றும் விளம்பிடும்  ராத்திரி

    சிவமே செம்பொருள் சிவமே இன்பம்
    சிவமே அன்பு சிவமே கருணை
    அனைத்தும் ஆகியே இருப்பது சிவமே
    அகத்தில் அமர்த்தினால் அது பேரின்பம்

    பற்பல கதைகள் பரவியே இருக்குது
    நற்கரு உணர்த்தவே அக்கதை வந்தது
    கதைகளை விமர்சனம் செய்வதை விட்டு
    கருவினைத் தேடுவார் கண்களைத் திறப்பார்

    சமயக் கதைகள் தத்துவம் பொதிந்தன
    உள்ளே நுழைந்தால் உண்மை விளங்கும்
    அறிவியல் இருக்கும் ஆன்மீகம் இருக்கும்
    அகத்தில் அமர்த்தினால் வெளிச்சம் கிடைக்கும்

    மாசி மாதம் மகத்தான மாதம்
    மாபெரும் விரதம் அமைந்த நல்மாதம்
    பூதலம் சக்தி பொலிந்திடு மாதம்
    ஆதலால் விரதமாய் ஆக்கிய மாதம்

    ஈதர் என்பது இயக்கிடும் சக்தி
    எங்கும் நிறைந்து இருக்கும் சக்தி
    பூதல மாந்தர் உள்ளே நுழைந்தால்
    ஆதாரம் ஆகிடும் அனைத்தும் சிறக்கும்

    மாசி மாத சிவராத்திரி வேளை
    ஈதர் சக்தியின் ஈர்ப்பு பெருகிடும்
    பெருகிடும் சக்தியை உடலுனுள் செலுத்திட
    அமைந்த நல்லொழுங்கே விரதமாய் மலர்ந்தது

    மெய்ஞ்ஞானத் துடனே விஞ்ஞானம் இணையுது
    அஞ்ஞானம் அகன்றிட மெய்ஞ்ஞானம் விரியுது
    அஞ்ஞானம் அகலவே ஆண்டவன் தெரிவான்
    ஆண்டவன் தெரிந்திட ஆணவம் அழிந்திடும்

    சிவராத்திரி என்பது சிறப்புடை விரதம்
    உயர்வுடை யாவும் அளித்திடும் விரதம்
    மனத்தைச் செம்மை ஆக்கிடும் விரதம்
    மங்களச் செம்பொருள் சிவனார் விரதம்

    Share
  • திருவாசக முற்றோதல்

    திருவாசக முற்றோதல்

    முனைவர் மு. பழனியப்பன்,
    தமிழ்த்துறைத் தலைவர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    திருவாடானை

    மாணிக்கவாசகர் இறை அனுபவத்தில்  எழுதிய திருப்பனுவல் திருவாசகம். உலகப் பற்றுகளின் ஈர்ப்பில் சுவைத்து மகிழ்ந்து கிடக்கும் ஆன்மாக்களை, அப்பற்றில் இருந்து விடுவித்து,  சிவனைப் போற்றிட, எண்ணிட, துதித்திட, நெஞ்சமதில் ஏத்திட, அவனையே அடைந்திடச் செய்யும் அருள்வாசகம் திருவாசகம் ஆகும். திருவாசகம் மனிதர் ஒவ்வொருவரும் பாடத்தகுந்த அருள் நூல்.  குழுவாக முற்றோதல் செய்வதற்கும் உரிய நூல். ஒரே நாளில் இறைவன் கழலை இறைஞ்சிடக் கிடைத்த நன்னூல். படிப்பவரும், கேட்பவரும் பொருளோடு உணர்பவரும் முக்தி என்னும் நிறைநிலையை அடையச் செய்யும் பெருவழியைக் காட்டுவது திருவாசகம் ஆகும்.

    திருவாசக முற்றோதலை முதலில் நிகழ்த்தியவர் மாணிக்கவாசகரே!

    மாணிக்கவாசகர் தாம் இருந்த இடங்களின் சூழுலுக்கு ஏற்ப, பற்பல பாடல்களை அவ்வப்போது பாடி உருகுகிறார்.  அவர் பாடிய பாடல்கள் அனைத்தையும் ஒருசேர சொல்ல, கேட்க ஒரு வாய்ப்பும் அமைகிறது. மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் இருந்தபோது, அந்தணர் ஒருவர் அவரிடத்தில் வந்து அவர் பாடிய அத்தனைப் பாடல்களையும் பாடச் சொல்லிக் கேட்கிறார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க மாணிக்கவாசகர் தாம் பாடிய பாடல்களைப் பாடுகிறார். அவற்றைக் கேட்டு அவ்வந்தணர் ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறார்.

    திருவாசகத்தை மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல எழுதிக்  கொண்ட அந்த அந்தணர் ”பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று  கேட்கிறார்   மாணிக்கவாசகர் அப்போது புதிதாக திருக்கோவையார் பாடுகிறார். அதனையும் அந்தணர் எழுதிக் கொண்டார். பின்பு அவர் மறைந்து போனார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அடுத்த நாள், அந்த ஓலைச் சுவடிகள் அனைத்தும் தில்லைச் சிற்றம்பலத்தில்  நடராசப் பெருமான் சன்னதியின் திருப்படியில் இருப்பதை  தில்லை வாழ் அந்தணர்கள் கண்டனர்.  சிற்றம்பலமுடையான் திருவடியில் ஒரு சுவடி உள்ளது என்று அனைவருக்கும் அவ்வதிசயத்தைச் சொல்லினர். அனைவரும் பார்த்திருக்க ஓலைகள் பிரித்துப் படிக்கப்பெற்றன.  அவ்வோலையின் நிறைவில் ”திருவாதவூரார் சொற்படி திருச்சிற்றம்பலமுடையான்” என்று  ஒப்பம் இடப்பெற்று ஓலைச்சுவடிகள் நிறைவு செய்யப்பெற்றிருந்தன.

    திருவாதவூரரைக் கண்டடைந்து, இச்செய்தியைத் தில்லை வாழ் அந்தணர்கள் தெரிவித்தனர். அவரும் கோயில் வர இச்சுவடிப் பாடல்கள் உணர்த்தும் பொருள் யாது என்று கேட்டனர். அதற்கு மாணிக்கவாசக சுவாமிகள்  இப்பாடல்கள் அனைத்திற்கும் பொருள் ஆடல் கூத்த பிரானாகிய நடராசப் பெருமானே” எனக் காட்டினார்.  திருவாசகத்தின் பொருள் நடராசப் பெருமான் என்பது அறியத்தக்கது.

    மேலும் சில நாள்களில் இவ்வோலைச் சுவடிகள் யாது காரணத்தாலோ தில்லையில் உள்ள நீர்நிலை ஒன்றில் இடப்பெற்று அவை அம்பலத்தாடியார் மடத்து அன்பர்களிடத்தில் கிடைத்தது. அவர்கள் அங்கு வைத்து அச்சுவடிகளைப் பாராயணம் செய்து வந்தனர். அவர்களை அங்கிருக்க விடாது காலச் சூழல் விரட்ட  புதுச்சேரிக்கு அவ்வோலைகட்டுடன் அவர்கள் வந்து சேர்கிறார்கள். புதுச்சேரியின் செட்டித் தெருவில் அம்பத்தடையார் மடத்தில்  திருச்சிற்றம்பலமுடையான் எழுதிய திருவாசகச் சுவடிகள் உள்ளன. இது ஒரு வரலாறு.

    இவ்வரலாற்றின் வழியாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி திருவாசகம் முதன் முதலாக முற்றோதுதலாக மாணிக்கவாசகராலேயே செய்யப் பெற்றது என்பதுதான். எனவே முதல் திருவாசக முற்றோதலைத் தொடங்கியவர் மாணிக்கவாசகரே ஆகின்றார். மாணிக்க வாசகர்  சொல்லச் சொல்ல இறைவன் எழுதிய நிலையில்  அதுவே முதல் முற்றோதல் ஆகின்றது.

    திருவாசகம் ஓதும் முறை

    பன்னிரு திருமுறைகளையும் பண் அடிப்படைடியில் ஓதுவார்களே தமிழகத்தில் பாடி  வந்துள்ளனர். குறிப்பாக இராசராசன் காலத்தில்  பெருமளவில் ஓதுவார்கள் நியமிக்கப்பெற்று பன்னிரு திருமுறை ஓதும் முறைமை இருந்துள்ளது. தற்காலத்திலும் ஓதுவார்கள் உரிய பண்ணிசைப்படி திருமுறைகளை ஓதி வருகின்றனர். பஞ்ச புராணம் பாடும் நடைமுறையும் உள்ளது. பஞ்சபுராணம் என்பது  ஐந்து பாடல்களைப் பாடுதல் ஆகும். தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகியவற்றில் இருந்து ஏதேனும் ஒரு பாடலை பாடும் முறைமை பஞ்ச புராணம் பாடுதல் என்றழைக்கப்படுகிறது,

    திருமுறைகளை ஓதுவார்கள் ஓதுவதில் பல நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.  திருமுறைகளைப் பாடுபவர்கள் நீராடி , தூய ஆடை உடுத்தி, திருநீறு அணிந்து  பண் அடைவுடன் இறைவன் முன் ஓதுதல் வேண்டும். சிவ தீட்சை பெற்றிருக்க வேண்டும் என்பதும் இதில் அடங்கும்.  திருமுறை ஓதத் தொடங்கும்போதும் நிறைவு செய்யும்போதும் திருச்சிற்றம்பலம் என்று  சொல்லுதல் வேண்டும். திருமுறை நூல்களுக்கு பட்டு சாத்தி அர்ச்சனை வழிபாடு முதலியன செய்து பாடுதல் வேண்டும். திருமுறை நூல்களை ஆண்டவனாகவே எண்ணுதல் வேண்டும்.

    திருவாசகத்தைப் பாடுவதற்கு பண் உறுதி செய்யப்படவில்லை.  திருவெம்பாவைப் பாடல்களை மார்கழி மாதத்தில் நாள்தோறும் பாடும் முறைமை ஓதுவார்களிடத்திலும், மக்களிடத்திலும் ஏற்பட்டன. இதுவே திருவாசக முற்றோதல் மக்களைச் சென்றடைந்ததற்கான முதல்படியாகும் மார்கழி மாதத்தில் மட்டுமே பாவை நோன்பாக திருவெம்பாவை அதிகாலையில் பாடப்படவேண்டும். மற்ற நாள்களில் திருவெம்பாவையைப் பாடும் போது  அதில் இடம்பெறும்  எம்பாவாய்   மேலும்  சைவ அமைப்புகள் குறிப்பாக  என்ற சொல்லை வெளிப்பட பாடுதல் கூடாது என்பது மரபு.

    பன்னிரு திருமுறை மன்றங்கள் போன்ற அமைப்பின திருமுறை முற்றோதலைச் செய்விக்கத் தொடங்கின.  தேவாரப் பாடல்களை எளிமையாக மக்கள் பண்ணில் பாடி வழக்கிற்குக் கொண்டுவந்தவர்  தருமபுரம் சுவாமிநாதன். இவர் பன்னிரு திருமுறைகள் அனைத்தையும்  பாடி நிலைத்தவர் ஆவார். இவர் வழியில் பன்னிரு திருமுறைகள் எளிய மக்களைச் சென்றடைந்தன. எளிய மக்களும் திருமுறைகளைப் பாராயணம் செய்ய வந்தனர்.

    மனன முறை என்றொரு முறையும் திருமுறைகளுக்கு உண்டு. மனப்பாடம் செய்தல் போல பாடல்களைப் படிக்கும் முறை. முற்றோதலில் படிக்கவும் செய்யலாம். பண்ணுடன் பாடவும் செய்யலாம். அவரவர் ராகத்திற்கு ஏற்ப இசைவித்தும் கொள்ளலாம் என்ற நடைமுறை மக்களிடத்தில் தற்போது நிகழ்ந்து வருகின்றது.

    முற்றோதல் செய்யும் முறை

    திருவாசகத்தை முற்றோதல் செய்கின்ற போது திருவாசகத்தை மட்டும் படிக்காமல் திருவாசகத்திற்கு முன்னும் பின்னுமான திருமுறைகளை இணைத்துப் பாடுதல் வேண்டும். கடவுளைத் துதிக்கும் நடைமுறைகளைச் செவ்வனே செய்து, கணபதி வணக்கம், திருவிளக்கு வணக்கம், நால்வர் துதி, சந்தானாச்சாரியர்கள் துதி, பொது விண்ணப்பம், அடியார் விண்ணப்பம்,  ஏழு திருமுறைகளில் இருந்து  ஒவ்வொரு பதிகத்திற்கும் உரிய முதல், நிறைவுப் பாடல்கள் ஆகியன பாடப்பட வேண்டும்.  இதன்பின் திருவாசகப் பகுதிகள் முழுவதும் பாடப்பட வேண்டும். அதன்பின் திருக்கோவையார், ஒன்பதாம் திருமுறை , பத்தாம் திருமுறை, பதினோராம் திருமுறை, பன்னிரண்டாம் திருமுறை ஆகியவற்றில் இருந்து  ஒரு ஒரு பாடல்கள் பாடப்பட வேண்டும். இதன்பின் இறைவிக்கான பாடல் அபிராமி அந்தாதி போன்றவற்றில் இருந்து பாடலாம். இதன்பின் திருப்புகழ் இசைக்கப்பட வேண்டும். பின் வான்முகில் வழாது பெய்க என்ற  வாழ்த்துப் பாடல் பாடப்பெற்று   அன்னம் பாலித்து, அதற்கான தேவாரம் பாடி, தீபமேற்றித் துதித்து வழிபட்டு முற்றோதலை நிறைவு செய்யவேண்டும்.

    முற்றோதலில் பங்கு பெறும் அன்பர்கள் முற்றோதலிலேயே முழுக் கவனத்துடன் செயல்பட வேண்டும். பசி, தூக்கம், ஆசை , அலைப்புறுதல் மறந்து  ஒரே நினைவாய்ப் பாட வேண்டும். கொடுப்பனவற்றை வாங்கவதற்காகவும், உண்பதற்காகவும் நேரம் கழிகையில் திருவாசகத்தின் முழுமையைப் பாட முடியாதவர்களாக ஆகிவிடுகின்றோம். எனவே அதிகாலை தொடங்கி  விரதமாக இருந்து திருவாசகம் முற்றோதலை நடத்துவது சிறப்பு.

    திருவாசகம் முற்றோதல் செய்தவர்கள்

    வள்ளல் பெருமான் திருவாசகம் முற்றோதலை தன் மணநாளில் மனைவிக்கு முன்னர் நிகழ்த்தினார் என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டிய முக்கியமான முற்றோதல் நிகழ்ச்சியாகும்.

    வான்கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை
    நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
    தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
    ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

    என்று வள்ளல்பெருமான் தான் கலந்து திருவாசகத்தைப் பாடி மகிழ்ந்துள்ளார். கரும்புச் சாறு, தேன், பால், செழுங்கனிகள்  எல்லாவற்றின் சுவையை ஒன்றாக்கினால் எவ்வகை இனிப்பு கிடைக்குமோ அத்தகயை இனிப்பினைச் சுவைக்கத் தருவது திருவாசகம் என்கிறார் வள்ளல் பெருமான்.

    ரமண மகரிஷி தன் தாயின் நிறைவுப் பகுதியில் திருவாசகத்தைப் பாடிக் கொண்டிருந்தார். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் நிறைவுக் காலத்தில் உ.வே.சாமிநாதர் திருவாசகம் பாடிக்கொண்டிருந்தார். உ.வே.சாவின் நிறைவுக் காலத்தும் திருவாசகம் பாடப்பெற்றது. ஆன்மாவைக் கடைத்தேற்றும் வண்ணமாக அதன் நிறைவுக் கட்டத்தில் திருவாசகம் பாடப்படுவது மறுமை கொள்ள வைக்காது என்பதே இதன் உட்பொருளாகும். எனினும்  வாழ்வின் நிறைவில் பாடப்படுவது திருவாசகம் என்ற எண்ணம் தமிழகத்தில் ஒருகாலத்தில் இருந்தது. தற்போது மணிவிழா,மணவிழா, திருவிழாக்களில் திருவாசகம் முற்றோதல் இசைக்கப்படுவது அது மங்கலம் நிறைந்த நன்னூல் என்பதைக் காட்டுவதாக உள்ளது.

    தூண்டல்கள்

    திருவாசகத்தை முற்றோதல் செய்யவேண்டும் என்று மாணிக்கவாசகரே கருதியுள்ளார்.

    பாடவேண்டும் நான் போற்றி! நின்னையே
    பாடி,நைந்து நைந்து, உருகி, நெக்கு நெக்கு,
    ஆட வேண்டும், நான் போற்றி! அம்பலத்து
    ஆடும் நின் கழல், போது நாயினேன்
    கூட வேண்டும் நான், போற்றி! இப்புழுக்
    கூடு நீக்க எனைப் போற்றி! பொய்யெலாம்
    வீட வேண்டும் நான் போற்றி! வீடு தந்து
    அருளு போற்றி! நின் மெய்யர் மெய்யனே! (திருச்சதகம்  பா. எ 100)

    என்று மாணிக்கவாசகர் சிவபிரான் புகழைப் பாடி ஆடிக் கூடி வீடு பெற  விரும்புகிறார். இதனைப் படிப்போரும் கேட்போரும் பாடி ஆடி சிவனை நாடி நிற்கின்றனர்.

    திருவா சகம் இங்கு ஒருகால் ஓதிற்
    கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்
    தொடுமணற் கேணியிற் சுரந்துநீர்ப் பாய
    மெய்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
    அன்பர் ஆகுநர் அன்றி
    மன்பதை உலகில் மற்றையர் இலரே

    என்று நால்வர் நான்மணி மாலையில் சிவப்பிரகாச சுவாமிகள்  திருவாசகம் படிக்கும்போது ஏற்படும் மன, உடல் மாற்றங்களைக் குறிப்பிட்டுத் திருவாசகத்தை முற்றோதல் செய்யத் தூண்டுகிறார்.  கருங்கல் மனமும் திருவாசகம் படித்தால் கேட்டால் அதன் கடினத் தன்மையில் இருந்து கரைய ஆரம்பிக்கும். மேலும்  உடலில் மயிற்கூச்சரிப்பு ஏற்பட்டு விதிர் விதிர்ப்படையும்.  இவையெல்லாம் திருவாசகத்தினால் உடலும் மனமும் பெறும் மாற்றங்களாகும்.

    திருவா சகமெனும் பெருநீர் ஒழுகி
    ஓதுவார் மனமெனும் ஒண்குளம் புகுந்து
    நாவெனு மதகில் நடந்து கேட்போர்
    செவியெனு மடையின் செவ்விதின் செல்லா
    உளமெனு நிலம்புக ஊன்றிய அன்பாம்
    வித்திற் சிவமெனு மென்முளை தோன்றி 10
    வளர்ந்து கருணை மலர்ந்து
    விளங்குறு முத்தி மெய்ப்பயன் தருமே

    என்பதும் நால்வர் நான்மணி மாலையில் இடம்பெறும் மற்றொரு பாடல் ஆகும்.  திருவாசகம் என்னும் பெரு நீர்  பாடுபவர்தம் மனம் என்னும் குளம் புகுந்து நிறைவிக்கும்.  மேலும் பாடுபவர்தம் நாக்கு என்னும் மதகில்நடந்து கேட்போர் செவிகள் எனும் மடைகளில் தேங்கி  அவர்களின் உள்ளம் என்னும் நிலத்தைச் சென்று சேரும். அதன்பின் அன்பு என்னும்  சிவ வித்தினை விதைத்து, மென் முறை வரச் செய்து கருணை என்னும் மலர் தந்து முக்தி என்னும் பயன் கனியைத் தந்து நிற்கும் என்றும் பாடுகிறார் சிவப்பிரகாசர்.

    திருவார் பெருந்துறைச் செழுமலர்க் குருந்தின்
    நிழல்வாய் உண்ட நிகரில்லா னந்தத்
    தேன்தேக் கெறியுஞ் செய்யமா ணிக்க
    வாசகன் புகன்ற மதுர வாசகம்
    யாவரும் ஓதும் இயற்கைக் காதலிற்
    பொற்கலம் நிகர்க்கும் பூசுரர் நான்மறை
    மட்கல நிகர்க்கும் மதுர வாசகம்
    ஓதின் முத்தி உறுபயன்
    வேதம் ஓதின் மெய்பயன் அறமே.

    என்ற சிவப்பிரகாசர் பாடல் யாவரும் ஓதும் இயல்பினை உடையது திருவாசகம்  என்று குறிப்பிடுகிறது. மேலும் அது மதுர வாசகம், பொன் கலம் போன்றது என்று அதன் உயர்வை அளக்கின்றது. மற்ற வாசகங்கள்  வேதம் உட்பட அனைத்தும் மண்கலம் போன்றன.  ஓதினால் முக்தி உறுதி என்றும் உரைக்கின்றது.

    இவ்வகையில் திருவாசகம் முற்றோதல் பால் பாகுபாடு இல்லாமல், தூய்மைச் சைவ நெறி உடைய அனைவரும் பாடலாம் என்று மக்கள் மையமாக திருவாசக முற்றோதல் விளங்குகிறது.  பாடுவது கடினம். படிப்பது எளிது. இனிது என்ற அடிப்படையில்  மக்கள் சங்கம் அனைத்தும் பாடும் படியான அருள் கருணை இக்காலத்தில் நமக்குத் திருவாசக முற்றோதல் மூலம் கிடைக்கின்றது. அதனை சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து, நன்முறையில் செய்து முக்தி பெறுவோம்.

    Share
  • கருணையாய் நிற்கும் தெய்வம்  !

    கருணையாய் நிற்கும் தெய்வம்  !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    வேலினைக் கையில் ஏந்தி
    வெற்றியைத் தந்த கந்தன்
    மூலமாய் நின்ற மூர்த்தி
    பொறியிலே வந்த கந்தன்
    கார்த்திகைப் பெண்கள் ஏந்த
    கந்தனாய் ஆன தெய்வம்
    கலியுகம் காக்க என்றும்
    கருணையாய் நிற்கும் தெய்வம்  !

    ஆணவம் அழித்த கந்தன்
    அகவிருள் அகற்றும் கந்தன்
    பேணிடும் அடியார்க் கெல்லாம்
    பேரருள் ஈயும் கந்தன்
    நாமெலாம் விரும்பி நிற்கும்
    நல்லையில் உறையும் கந்தன்
    சேவடி தொழுது நின்றால்
    தெரிசனம் தருவான் கந்தன் !

    சூரரை வதைத்த கந்தன்
    சூழ்ச்சியை அறுக்கும் கந்தன்
    மாயிருள் மாயை போக
    வந்தனன் ஒளியாய் கந்தன்
    ஆழமாம் பிறவி நோயை
    அகற்றிட மருந்தாய் நிற்கும்
    வேலுடை கந்தன் பாதம்
    பற்றுவார் வீடு காண்பார் !

    Share
  • அம்மா  இலக்குமி அணைப்பாய்  தாயே!

    அம்மா இலக்குமி அணைப்பாய் தாயே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் .. ஆஸ்திரேலியா

    நீள் செல்வம் நிலபுலங்கள் வேண்டாம்
    மாடி மனை கோடிசெல்வம் வேண்டாம்
    ஆழ் மனதில் அமைதிவர எனக்கு
    அருள் தருவாய் இலக்குமித் தாயே

    வையத்துள் வறுமை இன்றி வாழ
    மற்றவர்க்கு மனம் விரும்பி ஈய
    பொய் இல்லா வழியினிலே உழைக்க
    உய்யும் வழி காட்டிடுவாய் தாயே

    இல்லை என்று சொல்லாமல் இருந்து
    இல் அறத்தை நல்லறமாய் ஆக்க
    நல்ல பாதை காட்டிடுவாய் தாயே
    நா நிலத்தில் துணையாவாய் நீயே

    அளவற்ற ஆசை எனக் கில்லை
    அளவான பொருள் இருந்தால் போதும்
    நிலையற்ற தங்கம் வைரம் வேண்டாம்
    நினதருளே எனக் கிருந்தால் போதும்

    செல்லும் செல்வம் வேண்டாம் தாயே
    செல்லா அருளைத் தந்திடு தாயே
    அல்லும் பகலும் உந்தன் நினைப்பே
    அம்மா இலக்குமி அணைப்பாய் தாயே

    Share
  • ஆடி மாதம் அமங்கலம் அல்ல; அம்மனின் மாதம்

    ஆடி மாதம் அமங்கலம் அல்ல; அம்மனின் மாதம்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா                            
    மெல்பேண். ஆஸ்திரேலியா

    நம்பிக்கையின் அடிப்படையில்தான் நாம் நாளும் பொழுதும் யாவற்றையும் செய்து வருகின்றோம். சமயத்தில் நம்பிக்கை. தத்துவத்தில் நம்பிக்கை. புராண , இதிகாசங்களில் நம்பிக்கை. முன்னோர் மொழிந்த மொழிகளில் நம்பிக்கை. கற்றறிந்தவர் எழுதும் நூல்களில் நம்பிக்கை. அவர்கள் ஆற்றுகின்ற உரைகளில் நம்பிக்கை . இவற்றை எல்லாம் விட சமுகத்தில் நிலவுகின்ற நம்பிக்கை. இப்படியாக நமது வாழ்வில் நம்பி க்கை எனும் பொழுது பல பரிமாணங்களில் அமைந்திருப்பதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இதன் அடிப்படையில் பன்னிரண்டு மாதங்கள் பற்றிய நம்பிக்கை எப்படி இருக்கிறது என்பதை நோக்குவதும் மிகவும் முக்கியமானதாய் இருக்கிறது. 

    பன்னிரண்டு மாதங்களும் வருகின்றன. போகின்றன. சில மாதங்களைச் சிறப்பென்றும் சிலவற்றை ஒதுக்கிப் பார்ப்பதும் இயல்பாகிவிட்டது. ஆனால் அப்படி ஒதுக்க வேண்டியது  – மனத்தில் எழுகின்ற ஒரு வித மயக்கம் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. எல்லா மாதங்களும் ஏதோ ஒரு விதத்தில் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு தான் வருகின்றன. மார்கழியைப் பீடை பிடித்த மாதம் என்கிறோம். புரட்டாசியையும் ஒரு பக்கம் தள்ளியே வைக்கிறோம். ஆடியை மங்கலம் அற்ற மாதம் என்கிறோம். பங்குனியை, சித்திரையை, தையை, ஆவணியைக் கொண்டாடி வரவேற்கிறோம். இப்படி நோக்குவது எங்களிடம் இயல்பாகிவிட்ட நிலையில், மங்கலம் இல்லா மாதமாக எடுத்துக்கொள்ளும் ஆடி எங்களை நாடி வருகிறது!

    ஆடி என்றவுடன் – ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடிக்கார்த்திகை, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி பெளர்ணமி என்று இறை வழிபாட்டுடன் இணைந்ததாக ஆடி மாதம் முழுவதும் அமைந்திருப்பதை நாமனைவரும் மனமிருத்த வேண்டியது அவசியம். ஆடி மாதத்தை அம்மனின் மாதம் என்பதையும் அகமிருத்தல் மிகவும் அவசியமேயாகும். அப்படி இருக்க ஆடியை நாடாமல் ஒதுக்கிப் பார்ப்பது முறையா?

    மார்கழியில் திருவெம்பாவை வருகிறது. திருப்பாவையும் மணிவாசகரின் திருவெம்பாவையும் மார்கழியில் கோவில்களில் பக்தி சிரத்தையுடன் பாடப்படுகின்றன. வைணவர்களும் சைவர்களும் கொண்டாடும் மாதமாய் மார்கழி இருக்கிறது. மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணனே சொல்லுவதையும்  கருத்திருத்த வேண்டும். புரட்டாசியில் நவராத்திரி வருகிறது. கலைகளைப் போற்றும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சமயமும் கலைகளும் சங்கமிக்கும் மாதமாய்ப் புரட்டாசி விளங்குகிறது. ஆடி, புரட்டாசி, மார்கழி இறை வழிபாட்டுக்கு உரிய மாதங்களாகும். அப்படி என்றால் மற்றைய மாதங்கள் இறை வழிபாட்டுக்கு ஏற்றவை அல்லவா என்று வினா எழுகிறதல்லவா? ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் மங்கலமான நிகழ்வுகளான – வீடு குடிபுகுதல், திருமணம், திருமண நிச்சயார்த்தம், காது குத்தல், எதையும் செய்வதில்லை. காரணம் – இம்மாதங்கள் தேவர்களுக்கு உரிய மாதங்கள். மனிதர்களுக்கும் அவர்களின் இன்பங்களுக்கும் உரிய மாதங்கள் அல்ல என்பதுதான் காரணம்.

    சூரியனை அடிப்படையாகக் கொண்ட மாதங்கள்தான் நம்முடைய தமிழ் மாதங்கள். கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம்தான் ஆடி மாதம். ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரையான ஆறு மாதங்களும் சூரியன் – தன்னுடைய வடக்கு நோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு தெற்கு நோக்கிப் பயணிக்கிறார்.தெற்கு என்பது பித்ருக்களுக்கு உரிய திசையாகும். இதனால் இம்மாதத்தைப் பித்ருக்களுக்கு வழிபாடாற்றும் மாதமாயும் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

    மனிதர்களுக்கு ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஆடி தொடங்கி மார்கழி வரையான ஆறு மாதங்களும் சூரியனின் தெற்கு நோக்கிய பயணமாகும். தை தொடக்கம் ஆடி வரையான ஆறு மாதங்களும் சூரியனின் வடக்கு நோக்கிய பயணமாகும். வடக்கு நோக்கிய பயணக் காலத்தில் வெப்பம் அதிகமாய் இருக்கும். தெற்கு நோக்கிச் சூரியன் பயணிக்கும் பொழுது வெப்பம் தணிந்து – காற்று, மழை, பனி என்னும் காலநிலை வந்து நிற்கும். தெற்கு நோக்கிய சூரியனின் பயணக் காலம் தேவர்களுக்கு இராக் காலமாகும். அதாவது ஆடி என்பது தேவர்களின் இராக்காலத் தொடக்கமாகும். மார்கழி என்பது தேவர்களுக்கு விடியல் காலமாகக் கருதப்படுகிறது. ஆடி, இரவின் தொடக்கம். மார்கழி, விடியலின் தொடக்கம்.

    ஆடியில் சூரியன் கடகராசியில் சஞ்சரிக்கிறார் என்று பார்த்தோம்.கடகராசி என்பது சந்திரனின் ஆட்சி வீடாகும்.சூரியன் சிவனின் அம்சமாகும். அந்தச் சூரியன் சக்தியின் அம்சமான சந்திரனில் சஞ்சாரம் செய்யும் நிலை இக்காலத்தில் அமைகிறது. இதனால் சந்திரனின் ஆளுமை அதிகரிக்கிறது.இப்படி ஆவதால் ஆடி மாதம் என்பது சக்தியின் மாதமாய் விளங்குகின்றது. அக்காரணத்தால்தான் அம்மனின் மாதம் – ஆடி என்று ஆகிவிட்டது. அம்மனுக்கு உகந்த விழாக்கள் இம்மாதத்தில் முக்கியத்துவம் பெறுவது இதனால் தானோ  என்று எண்ணிட  வைக்கிறது.

    அறிவியல் வழியில் சிந்திப்பதும் உகந்ததாகும். ஆடி மாதம் காற்றுக் காலமாகும். காற்றினால்  பரவும் நோய்கள்  அதிகரிக்கும் காலமாகவும் இக்காலம் அமைகிறது. இதனால், வேப்பிலை, மஞ்சள் என்பவற்றை வழிபாடு என்ற வகையில் அம்மனுக்கு உரியதாக்கி நிற்பதும் நோக்கத்தக்கது. அத்துடன் கூழ் காய்ச்சுவதும், அம்மனுக்கு வைத்து வழிபடுவதும் கூட அறிவியலை ஆன்மீகத்துடன் இணைக்கும் நிலையினையே காட்டுகிறது அல்லவா !

    ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கமே அமைகிறது என்பதும் நோக்கத்தக்கது. கிராமங்கள் தோறும் அம்மனுக்குரிய விழாக்கள் நடைபெறுவதும் மனமிருத்த வேண்டியதே.அம்மனைப் பல நிலைகளில் வழிபடுவதும் நோக்கத்தக்கது. காவல் தெய்வமாய்க் கருதி, போற்றி வழிபாடுகளில் ஈடுபடுவதையும் ஆடியில் காணக்கூடியதாய் இருக்கிறது.

    ஆடியில் ஆறுகளில் நீர்ப்பெருக்கு வருவதை அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றார்கள். இதனையே ஆடிப்பெருக்கு என்று அகமகிழ அழைக்கின்றார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்களின் தாலிக் கயிற்றை மாற்றுவதும், அம்மனுக்கு படையில் வைத்து ஆராதிப்பதும் இவ்வேளை இடம் பெறுகிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    பெண்கள் விரும்பி அனுட்டிக்கும் விரதமான வரலட்சுமி விரதம் ஆவணி மாதத்துக்கு உரியதாய் இருந்தாலும், பெரும்பாலான சமயங்களில் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. ஆடி வெள்ளியில் மாரியம்மனுக்கு தேர்த் திருவிழா, தெப்பத் திருவிழா, தீமிதிப்பு எல்லாம் நடக்கும். அருள் மாரியாய்  கருமாரி விளங்கிறாள் அல்லவா?  சின்னக் கோவில்கள், பெரிய கோவில்கள் எல்லாம் இந்த விழாக்கள் நடைபெறுவதும் நோக்கத்தக்கது.

    ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசையும் தையில் வருகின்ற அமாவாசையும் கடலில் நீராட உகந்த தினங்களாகும். தஷிணாயன புண்ணிய காலம், உத்தராயண புண்ணிய காலம் என்று இக்காலங்களைச் சிறப்பித்துச் சொல்லுவார்கள்.

    இறைவனை அடைவதற்கு அன்னை பராசக்தி தவம் செய்ததும் ஆடி மாதத்தில்தான். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் நாச்சியார் ஆடியில்தான் அவதரிக்கின்றார். சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் அழைத்துக் கொண்டதும் ஆடியில்தான் என்பதும் அகமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    தையினைப் பொங்கல் திருநாளாய், அறுவடைத் திருநாளாய் கொண்டாடுவதற்கு வித்திடப்படுவதே ஆடியில்தான். “ஆடிப்பட்டம் தேடி விதை” என்னும் பழமொழியே ஆடியில் விதைத்தால்தான் தையில் அறுவடை செய்ய முடியும் என்பதைக் காட்டி நிற்கிறதல்லவா ?

    ஆடிச் செவ்வாயினை மையமாய் கொண்டு “ஆடிச்செவ்வாய் தேடிக் குளி – அரைச்ச மஞ்சளைப் பூசிக் குளி” என்னும் முதுமொழி பழக்கத்தில் இருக்கிறது.

    ஆடி தெய்வீக மாதம். அம்மனின் மாதம், என்றெல்லாம் போற்றப்பட்டாலும் புதுமணத் தம்பதிகளுக்கு மட்டும் வெறுப்பான மாதமாய் இருக்கிறது. அவர்களுக்கு மட்டும் ஏன் வெறுப்பாய் இருக்கிறது என்பதையும் அறிவதும் அவசியம் அல்லவா ! மணமான தம்பதிகளைப் பிரித்து விடுவார்கள்.அதாவது பெண்ணைப் பிறந்த வீட்டு அனுப்பி விடுவார்களாம். சாஸ்திரம் என்று சொன்னாலும் – இங்கே எங்களின் முன்னோர்களின் நல்ல சிந்தனையும் கலந்தே இருக்கிறது. ஆடியில் கருவுற்றால் – பத்தாவது மாதமான சித்திரையில் பிரசவம் நடக்கும். சித்திரையில் புத்திரன் பிறந்தால் தந்தைக்கு நல்லதல்ல என்னும் கருத்து சாதாரணமாகச் சமூகத்தில் நிலவுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. சித்திரையில் கத்தரி வெயில் என்பதை அனைவரும் அறிவோம் .வெப்பம் கூடிய காலத்தில் பிரசவம் நடந்தால் கால நிலை காரணமாக, பிரசவிக்கும் பெண் பெரும் வேதனைக்கு ஆளாவாள். பிரசவ வேதனையுடன் வெயிலின் கொடுமையும் பெருவேதனையைத் தந்துவிடும் என்பதால் மணப்பெண்ணை, பிறந்த வீட்டுக்கு ஆடியில் அனுப்பிய எங்களின் முன்னோர்களின் சிந்தனையினைப் பாராட்டாமல் இருக்கத்தான் முடியுமா?

    ஆடி என்றவுடன் எங்கள் தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர் கட்டாயம் வந்து நிற்பார். தாத்தாவின் வரவையும் , அவரின் ஆடிப்பிறப்பு ஆனந்தமான பாடலையும் நினைவுக்குக் கொண்டு வருவதும் நாடிவரும் ஆடி அல்லவா ! 

    ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
    ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே!
    கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
    கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

    பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
    பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
    வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
    மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

    வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
    வேலூரில் சக்கரையுங்கலந்து,
    தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
    சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

    வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
    வெல்லக் கலவையை உள்ளே இட்டு
    பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
    பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

    பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
    போட்டு மாவுருண்டை பயறுமிட்டு
    மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவாள்
    மணக்க மணக்க வாயூறிடுமே

    குங்குமப் பொட்டிட்டு, பூமாலை சூடியே
    குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
    அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
    ஆடிப் படைப்பும் படைப்போமே

    வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
    வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
    அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
    ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

    வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
    மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
    கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
    கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

    நாடிவரும் ஆடி அமங்கலமான மாதம் அல்ல! அது தெய்வீக மாதம் ! கொழுக்கட்டையும் சாப்பிட்டு கூழும் குடித்து மகிழும் காலம். ஆடிப்பட்டம் விட்டு அம்மனைப் போற்றிக் கொண்டாடி, தோழர்களுடன் பாடி மகிழும் காலமாகும். 

    மெய்ஞ்ஞானமும், விஞ்ஞானமும் இணைந்து மேதினியில் சிறந்து விளங்குவதுதான் ஆடி மாதத்தின் சிறப்பு எனலாம். எங்கள் முன்னோர்கள் எதையும் தக்க காரண காரியத்தோடுதான் வகுத்தார்கள். அவர்களின் கணிப்பில் தவறுகளைக் கண்டுபிடிப்பது முறையானதல்ல. தற்காலத்தில் எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் பேசுவது என்பது பெரும் மேதாவித்தனம் ஆகியே விட்டது. ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது. சிறப்புகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதுதான் மிகவும் உகந்த பண்பாடாகும்.

    நம்பிக்கைகள்தான் வாழ்வின் ஆணிவேராகும். எமது முன்னோர் கொண்ட நம்பிக்கைகள், அதற்காக அவர்கள் வகுத்த அற வழிகள், ஆன்மீக வழிகள், அத்தனையும் எம்மை என்றுமே வழிநடத்திச் செல்வதற்கு அருந்துணையாக அமைகின்றன என்பதை அகமிருத்துவது அவசியம் அல்லவா!  

    Share
  • அடியார்க்கு எளியனாய் மிளிர்ந்தார் அப்பர்!

    அடியார்க்கு எளியனாய் மிளிர்ந்தார் அப்பர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சைவத்தை, சிவனைப் போற்றிடும் குடும்பம்
    சன்மார்க்க வழியிலே நடந்திடும் குடும்பம்
    பெண்ணும் ஆணும் பிள்ளையாய் வாய்த்தனர்
    பெற்றோர் சிவனைப் பரவியே வாழ்ந்தனர்

    சிவனை, சைவத்தைச் சிந்தையில் இருத்திட
    பெற்றோர் நாளும் எண்ணியே வளர்த்தனர்
    பெற்றோர் வழியில் பிள்ளைகள் நடந்தனர்
    நற்றவச் செல்வமாய்  நன்றாய் வளர்ந்தனர்

    இல்லற வாழ்வில் இணைத்தனர் பெண்ணை
    நல்லதோர் துணையும் வந்தே அமைந்திட
    பெற்றவர் மகிழ்ந்தார் உற்றவர் மகிழ்ந்தார்
    காலனோ மகிழா கண்ணீரைக் கொடுத்தான்

    காலம் ஓடின பெற்றோர் பிரிந்தார்
    கணவனை இழந்தாள் தம்பியை அணைத்தாள்
    தம்பிக்குத் தாயாய் ஆகியே நின்று
    தம்பியைக் காத்திட சாமியை வேண்டினாள்

    தம்பி பெயரோ மருள் நீக்கியார்
    மருளது அகன்றிட வழிவகை செய்தாள்
    படித்தான் படித்தான் பலதும் படித்தான்
    சஞ்சலப் பட்டதால் சமணத்தில் கலந்தான்

    தம்பியின் போக்கால் தமக்கை நொந்தாள்
    எம்பிரான் திருவடி பற்றியே நின்றாள்
    சமணத் தலைமை ஏற்றிட்ட தம்பி
    தன்னுள் மாற்றம் வருவதை உணர்ந்தான்

    சகோதரி வேண்டுதல் சங்கரன் ஏற்றான்
    தம்பியை மாற்றிடச் சங்கரன் விரும்பினான்
    சூலை வந்தது சூழ்நிலை கலைந்தது
    மீளவும் தம்பி சைவம் பற்றினான்

    பற்றிய தம்பி பாடினான் பாடினான்
    நற்றமிழ் நாவில் ஊற்றென வந்தது
    நெற்றிக் கண்ணனும் பற்றினான் பாடலை
    நாவுக் கரசனாய் வாழ்ந்திட அருளினான்

    தரும சேனராய் சமணத் தலைவராய்
    இருந்தவர் மாற்றம் எரிச்சலைத் தந்திட
    சமணர் எதிர்த்தார் தண்டனை கொடுத்திட
    ஆண்ட அரசனை அணுகினார் அனைவரும்

    அரசனும் சமணன் ஆட்சியும் சமணமே
    அதிகாரம் அனைத்தும் சமணத்தின் வசமே
    கைது செய்திடக் கட்டளை பிறந்தது
    காவலர் விரைந்தனர் கைதினை மேற்கொள

    அரசன் ஆணையை அறைந்தனர் காவலர்
    அரனின் அடியார் ஆத்திரம் கொண்டார்
    நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
    துணிவுடன் சொல்லிப் பணியவே மறுத்தார்

    வெகுண்டான் அரசன் வில்லங்கம் விளைந்தது
    சமணக் கூட்டம் சந்தோஷம் கொண்டது
    நீற்றறை பூட்டினார் நஞ்சினை ஊட்டினார்
    யானையை ஏவியே கொன்றிட முயன்றார்

    கல்லுடன் கட்டிக் கடலினுள் வீசினார்
    நற்றுணை நாமமாய் நமச் சிவாயவே
    உற்றிடு துணையாய் ஆகியே நின்றது
    கற்றுணை அங்கே தெப்பமாய் மிதந்தது

    நாதனின் அருளால் அனைத்தும் அகன்றன
    நாட்டினை ஆண்டவன் பணிந்துமே நின்றான்
    சைவம் தழைக்க வழியும் பிறந்தது
    சங்கரன் நாமம் தமிழெலாம் நிறைந்தது

    நாவுக் கரசரை நற்றமிழ் பெற்றது
    நம்சைவம் நல்லதோர் அடியாரைக் கண்டது
    திருமுறை புதியதோர் கருவினைப் பெற்றது
    தத்துவம் வித்துவம் தமிழினை நிறைத்தது

    புதுமையைப் புகுத்தினார் புரட்சியைக் காட்டினார்
    சமுதாயம் தழைக்கச் சைவத்தை வளர்த்தார்
    திருவருள் நம்பினார் செப்பினார் திருமுறை
    குருவென இறையின் திருவடி பற்றினார்

    அரனைத் தொழுவார் அனைவரும் சமமென
    அரிய தத்துவம் அப்பர் மொழிந்தார்
    ஈசன் நாமத்தை இதயம் இருத்துவார்
    இன்னல் அகன்று இருப்பார் என்றார்

    நிலைபெற இருக்க எண்ணிடும் யாவரும்
    நித்தம் கோவில் செல்லுக என்றார்
    படி முறையாகப் பலபல செய்திடப்
    பலரும் உணர்ந்திடப்  பாடமும் நடத்தினார்

    வணங்கத் தலையும் வாழ்த்த வாயும்
    கும்பிடக் கையும் பூக்கொய்திட விரல்களும்
    நற்பணி செய்ய நடந்திடக் கால்களும்
    தந்தவன் இறைவன் என்றுமே மொழிந்தார்

    தொண்டினை முதலாய்க் கொண்டவர் அப்பர்
    என்றுமே உழவாரம் ஏந்தியே நின்றார்
    உழைத்திடல் உயர்வெனக் கண்டவர் அப்பர்
    உழைப்பவர்க்கு இறைவனும் உதவுவான் என்றார்

    பக்தி உலகினில் முத்தாய் ஒளிர்கிறார்
    பக்குவம் பெற்றிட்ட பரமனின் அடியார்
    ஓடும் செம்பொனும் ஒன்றென நோக்குவார்
    ஓரிறை சிவனென உலகிடை வாழ்ந்தவர்

    எண்பத் தொன்றில் இறைவன் அழைத்தான்
    இன்தமிழ், இசைத்தமிழ் கேட்டிட  அழைத்தான்
    துன்பப் பட்டார் துயரிடை உழன்றார்
    என்பும் தோலுமாய் இறையடி  அடைந்தார்

    ஆளுடைப் பிள்ளையார் அப்பரே என்றார்
    ஆண்டவன் நாவுக்கு அரசரே என்றார்
    அன்னையும் தந்தையும் மருணீக்கியார் என்றார்
    ஆளுமைச் சேக்கிழார் வாகீசர் ஆக்கினார்

    தாண்டக வேந்தராய் தமிழன்னை கண்டாள்
    தமிழிசை மறவாப் பாடல்கள் தந்தார்
    ஆண்டவன் விரும்பிட அருந்தமிழ் கொடுத்தார்
    அடியார்க்கு எளியனாய் அப்பர் மிளிர்ந்தார்

    Share