பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 3
பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்
63 நாயன்மார்கள் வரலாறு – 2. இயற்பகை நாயனார்
இயற்பகை நாயனார் புராணம்


வானவர் பூவின் மாரி பொழிய மாமறைகள் ஆர்ப்ப
ஞானமா முனிவர் போற்ற நல மிகு சிவலோகத்தில்
ஊனமில் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார்
ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார்.
எழிலாருங் காவிரிப்பூம் பட்டி னத்து
ளியல்வணிக ரியற்பகையா ரிருவர் தேட
வழலாய பிரான்றூர்த்த மறையோ னாகி
யாயிழையைத் தரவேண்டி யணைய வையன்
கழலாரப் பணிந்துமனைக் கற்பின் மேன்மைக்
காதலியைக் கொடுத்தமர் செய் கருத்தால் வந்த
பிழையாருஞ் சுற்றமெலாந் துணித்து மீளப்
பிஞ்ஞகனா ரழைத்தருளப் பெற்று ளாரே.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் என்பார் சிவபெருமான் மீது மாளாத பற்றும், சிவனடியார்கள் விரும்பிக் கேட்பது மட்டுமன்றி அவர்கள் மனதால் நினைப்பதும் ஏதாயினும் இல்லை என்று கூறாமல் மனமுவந்து வழங்கும் வள்ளற்தன்மையும் கொண்டவர். சிவனடியார்கள்பால் நேசமும், அன்பும் கொண்டு அவர்களை மகிழ்வித்தால் சிவபெருமானாரின் அருள் பெறலாம் என்ற அளவில் சிறந்த பக்தி உடையவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் என்ன என்று தெரியவில்லை. உலக இயலுக்குப் பகையானவர் என்பதால் இவர் இயற்பகையார் என்று அழைக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார் சேக்கிழார் பெருமானார். இவரை முதலில் அறிமுகம் செய்பவரான நம்பி ஆரூரர், “இல்லையே எனாத இயற்பகைக்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் போற்றுகின்றார்.
‘பொன்னொடு வந்து கரியொடு ஏகும்’ என்று சங்க காலத்தில் சிறப்பான வணிக நகரமாகத் திகழ்ந்த, சோழநாட்டில் உள்ள காவிரிப்பூம்பட்டினத்தை பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது. புகார் எனும் அழகிய துறைமுகப்பட்டினமான காவிரிப்பூம்பட்டினத்தில் வணிக மரபில் பிறந்தவர் இயற்பகை நாயனார். அவர் தம் வணிகத் திறமையால் பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார். சிறுவயது முதலே சிவபெருமான் மீதும், சிவனடியார்கள் மீதும் அளவுகடந்த அன்பு கொண்டிருந்ததால் சிவனடியார்களுக்கு வேண்டுவதனைத்தையும் வழங்குவதே தலைசிறந்த அறமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஐயனின் திருவிளையாடலுக்கு ஆட்பட்டார் இந்நாயனார். சிவனடியார் கோலத்தில் வந்து இயற்பகையாரின் மாறுபட்ட பக்தியின் திறத்தை உலகறிய வெளிப்படுத்த இறைவனின் திருவிளையாடல்தான் இது.
அன்றே என்றன் ஆவியும் உடலும் உடமையும் எல்லாமும்
குன்றே அனையாய் எனை ஆண்கொண்டபோதே கொண்டிலையோ
என்ற மணிவாசகப் பெருமானின் கூற்றுக்கிணங்க வாழ்ந்த இயற்பகையாருக்கு என்னே வந்த சோதனை பாருங்கள்.
சிவபெருமானின் திருவிளையாடல்:
சிவபெருமான் ஒரு திருநாளில் சிவனடியார் வேடம் பூண்டு இயற்பகையாரின் வீட்டின் முன்பாக வந்து நின்றார். தம் இல்லம் தேடி வந்திருப்பவர் தாம் எந்நேரமும் பூசித்துக் கொண்டிருக்கும் சிவபெருமானார் என்பதை அறியாத இயற்பகையார், அவரை சிவனடியார் என்று நினைத்து ஆனந்தம் கொண்டு, அவ்வடியார் தன் வாசல் தேடி வந்தது தான் செய்த பெருந்தவப் பயனென்று பணிவுடன் வழிபட்டு வரவேற்றார். சிவனடியாராய் வந்த பெருமானாரும் இயற்பகையாரைப் பார்த்து,
“நீர் அம்பலவர் அடியார்கள் யாது கேட்பினும் இல்லை என்று கூறாது அள்ளி வழங்கும் உம் வள்ளன்மையைப் பற்றித் தெரிந்துதான் உம்பால் ஒன்றை வேண்டி வந்தோம்” என்கிறார்.
இயற்பகையாரும், “அடியவரே ஏன் தயக்கம்? எம்மிடமுள்ளதனைத்தும் என் உடமையல்ல. அவை அடியவர்களுக்குரியது என்பதே உண்மை. உரியவர் கேட்டால் பாதுகாவலனாகிய நான் கொடுப்பதில் தயக்கம் என்ன இருக்க முடியும்? என்னிடம் உள்ளது எதுவாகினும் தாராளமாகக் கேட்கலாம். ஐயம் ஏதும் தேவையில்லை” என்றார்.
அந்த சிவனடியாரும் சற்றே தயங்கியவாறு, ‘‘இயற்பகையாரே, எமக்குப் பணிவிடை செய்ய காதல் உம் மனைவியைத் தாரும்’’ என்றார். அதற்கு இயற்பகை நாயனார் முன்னைவிட மகிழ்ச்சியடைந்து, “தாங்கள் என்னிடம் இல்லாத ஒன்றைக் கேட்காமல் என் முன்னால் உள்ளதையே வேண்டியது எனது பெரும்பேறு” எனக் கூறுவதாக சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார்.
ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே
அம்பலத்து உள் நின்று ஆடுவார் உம்பர்
நாயகிக்கும் அஃது அறியவோ? பிரியா
நங்கைதான் அறியாமையோ? அறியோம்;
தூய நீறு பொன் மேனியில் விளங்கத்
தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய்
மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர்
மாறாத வண்ணமும் காட்டுவான் வந்தார்.
இப்பாடலில் சேக்கிழார் பெருமானின் கவிக்கூற்றை உணர முடிகின்றது. இங்கு இறைவன் திருமேனி தாங்கிவரும் சிவனடியாரின் இயல்பினைப் பற்றி ஆராய்கின்றார். இவரிடம் இரண்டு மாறுபட்ட இயல்புகள் காணப் பெறுகின்றன. தூர்த்த வேடமுடைய பொன்மேனியில் தூய நீறுடன் இப்படி வருங்கால் தமது இணையரான உமையம்மையார் அறிய வந்திருப்பாரோ அல்லது அறியாமல் வந்திருப்பாரோ? ஒருவேளை அவர் அறிய வந்திருப்பாராயின், இவர் இங்குப் பிறர் மனைவியாரை வேண்டிச் செல்வதற்கு அவர் உடன்பட்டிருக்கமாட்டார். அதேபோல் அவர் அறியாது வந்தாரெனின் உடன் பிரியாது இருப்பாராதலின் அதுவும் இயலாத காரியம். ஆதலின் இதனை இன்னவாறெனத் துணிய அறியோம் என்கிறார் சேக்கிழார்.
இயற்பகையார் தம் மனைவியின் முன் சென்றவர், “இன்று உன்னை இம்மெய்த்தவர்க்கு நான் கொடுத்தனம்” என்கிறார். அம்மையாரை ஒரு உயிரற்ற பொருளாக எண்ணி அந்த அடியாருக்குக் கொடுப்பதாகக் கூறியது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கலங்கி நிற்கிறார். எந்தக் கணவனும் செய்யத் துணியாத ஒரு காரியத்தைச் செய்யத் துணிந்த கணவரின் இந்நிலை கண்டு ஊர் மக்கள் என்ன சொல்லப்போகிறார்களோ என்றும் கலங்கினார். ஆனாலும் தன் கணவனின் மனநிலையைப் புரிந்து கொண்டபின் மனம் தெளிந்ததாக சேக்கிழார் குறிப்பிடுகிறார். அம்மையார் தம் கணவனைப் பார்த்து, “இன்று நீர் எனக்கு அருள் செய்தது இதுவேல் என்னுயிர்க்கொரு நாத நீர் உரைத்ததொன்றை நான் செய்யும் அத்தனையல்லாமல் உரிமை வேறுளதோ” என்று வணங்கித் தாழ்ந்து தொண்டனார் தாமெதிர் வணங்கச் சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள், திருவினும் பெரியாள்.
கணவன் சொல்லைக் காக்க முனைந்த மனைவியைத் தாழ்ந்து வணங்கினார் என்ற சொற்களால் சேக்கிழார் பெருமான் நாயனாரின் மனநிலையை நமக்கு விளங்கச் செய்கிறார். திருமகள் உலகில் நல்லவர், தீயவர், பெரியோர், சீலர், சீலமில்லார் என்றெல்லாம் பாரபட்சம் பாராமல் எல்லோரிடமும் சென்று சேர்வாள், என்பதனால் அம்மையாரையும் திருமகளுக்கு ஒப்பாகக் கூறுகின்றார் போலும்.
கணவனின் வாக்கிற்கிணங்க அடியவரை வணங்கி நின்றார் நாயனாரின் மனைவியார். நாயனாரும் அடியவரைப் பார்த்து, அடுத்து தான் செய்ய வேண்டியது யாது என்று கேட்கிறார். அதற்கு அடியவர், “இந்த ஊரில் உனது உறவினர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். நான் உன் மனைவியை அழைத்துச் செல்லும்போது அவர்களுடன் சேர்ந்து ஊர் பொதுமக்களும் எனக்கு இடையூறு செய்யக்கூடும். எனக்கு அச்சமாக இருப்பதால் இவ்வூர் எல்லையைக் கடக்கும் வரை நீயும் எனக்குத் துணையாக வரவேண்டும்’’ என்றார்.
உடனே மனைவியையும், சிவனடியாரையும் முன்னே போகவிட்டு நாயனாரும் பின் தொடர்கிறார். அந்த வேளையில் வாளொடு வந்து இவர்களைத் தடுத்து நிறுத்திய அவரது உறவினர்களையும் ஊர்க்காரர்களையும் சீற்றம் கொண்டு வெட்டி வீழ்த்தியவர், சிவனடியாருக்குக் காவலாக ஊரின் எல்லையிலுள்ள சாய்க்காடு என்ற இடத்தை அடைந்தனர். அத்தருணத்தில்தான் இறைவனே இயற்பகை நாயனாரின் பற்றற்ற செயலைக் கண்டு வியக்கிறார். ‘பொய் திகழ் உள்ளம் இல்லான்’ எனும் நற்சான்றை இறையருள் பெற்றுத்தர மெய்யான அடியாராகிறார் இயற்பகை நாயனார்! சேக்கிழார் பெருமானின் கவிமொழி இதனை அழகாக வெளிப்படுத்துகிறது.
இயற் பகை முனிவா ஓலம்! ஈண்டு நீ வருவாய் ஓலம்!
அயர்ப்பு இலாதானே ஓலம்! அன்பனே ஓலம்! ஓலம்!
செயற்கு அரும் செய்கை செய்த தீரனே ஓலம்! என்றான்
மயக்கு அறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான்.
அழைத்த பேர் ஓசை கேளா ‘அடியனேன் வந்தேன்! வந்தேன்!
பிழைத்தவர் உளரேல் இன்னும் பெரு வலித் தடக்கை வாளின்
இழைத்தவர் ஆகின்றார்’ என்று இயற்பகையார் வந்து எய்தக்
குழைப் பொலி காதினானும் மறைந்தனன்; கோலம் கொள்வான்.
சென்றவர் முனியைக் காணார்; சேயிழை தன்னைக் கண்டார்;
பொன் திகழ் குன்று வெள்ளிப் பொருப்பின் மேல் பொலிந்தது என்னத்
தன் துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார்;
நின்று இலர்; தொழுது வீழ்ந்தார்; நிலத்தின்நின்று எழுந்தார்; நேர்ந்தார்.
திருவிளையாடலை முடித்துக்கொண்ட எம்பெருமான் தமது அடியார் வேடத்தை விடுவித்து வான்மீது வெள்விடை மீது உமையம்மையுடன் தோன்றியவர், இயற்பகை நாயனாரையும் அவர்தம் மனைவியாரையும் தங்களுடன் வரப்பணித்தார். இருவரும் சிவபெருமானுடன் விண்ணுலகம் சென்றனர். இயற்பகையாரின் வாளுக்குப் பலியான அவர்தம் சுற்றத்தார்களும் பொன்னுலகம் சென்றனர்.
இயற்பகை நாயனார் புராணம் சொல்லும் கருத்து
சிவபெருமானார் தம்மிடம் இடையறாத அன்பு பாராட்டும் மெய்யடியார்கள் மீது தாமும் இடையறாத அருள் பாலிக்கும் வள்ளன்மை மிக்க இனியர்.
கனியினும் கட்டி பட்ட கரும்பினும்
பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும்
தனிமுடி கவித்து ஆளும் அரசினும்
இனியன் தன் அடைந்தார்க்கு இடைமருதனே.
எனும் திருநாவுக்கரசு நாயனாரின் கூற்று இதனை விளங்கச் செய்யும்.
இறைவன் மீது உண்மையான அன்பு கொண்ட மெய்யுணர்வுடையவர்கள் தம்மிடம் உள்ள சொத்து, சுகம் மட்டுமின்றி பந்தம் கொண்டோரும் கூட அந்த இறையனாருக்கேச் சொந்தம் என்று எண்ணுவதால் அனைத்தின் மீதும் தாமரையிலை தண்ணீர் போன்று ஒரு பற்றற்ற நிலையிலேயே இருக்கின்றனர். முற்பிறவியின் பயனாக இயற்பகை நாயனார் சிவனடியார்களையும் சிவலிங்கமாக எண்ணியே வழிபடும் வழமை கொண்டவராகிறார். அந்த வகையில் இந்நாயனார், தமக்கு உரிய எப்பொருள்களையும் தன்னை விடவும், அவ்வடியார்கள் அனுபவித்தலில் பெரிதும் விருப்பம் கொண்டவராதலின் அவற்றை மகிழ்ச்சியோடு அவர்களுக்குக் கொடுக்கும் பெருந்தகைமையிற் சிறந்து விளங்கினார். இயற்கைக்குப் புறம்பாக நடந்து கொள்ளும் இத்தன்மையாலேயே அவர் இயற்பகை நாயனார் என்றும் அழைக்கப் பெற்றுள்ளார்.
இவரிடத்துள்ள இவ்வரிய இம்மெய்யன்பை, சர்வ ஆன்மாக்களும் உணர்ந்து உய்யும்படி எடுத்துரைக்கும் திருவுளங்கொண்ட சிவபெருமான், மனைவியினும் இனிய பொருள் பிறிதொன்றும் இல்லை என்பதால் சிவனடியார் வேடம் தரித்து வந்து அவர் மனைவியையே கேட்கிறார். கற்பினிற் சிறந்து விளங்கும் தம் மனைவியையும் பெருமகிழ்ச்சியோடு கொடுக்க உறுதி கொள்கிறார். இதனால் உலகத்தோரின் பழிப்புரைக்கு ஆளாக நேரிடும் என்பதறிந்தும் அதைச் செய்யத் துணிந்தார். பிறர்மனை நயத்தல் சிவாகமங்களில் விலக்கப்பட்ட மிகப்பெரிய பாவம் என்பதைக்கூட கருதாமல் தமது மனைவியைத் தரும்படி கேட்டவரை, சிவனடியார் என்று கொண்டமை குற்றமாகாதோ என்று தோன்றுவதே இயல்பு.
இவ்வடியாரின் இத்தகைய இயல்பினை உலகறியச் செய்யும் நோக்கொடு இறைவன், அம்பலத்தாடும் பெருமானார் அத்தகைய வேடம் பூண்டு புறப்பட்டார். மனமுவந்து மனைவியை அனுப்பத் தயாரான நாயனார் மீது கடுங்கோபம் கொண்ட அந்த அம்மையாரின் சுற்றத்தார் வாளுடன் வந்து தடுத்து நிறுத்தப் பார்த்தனர். சமுதாயத்தில் தங்கள் கண் முன்னால் நடக்கும் அதீத கொடுமையான ஒரு நிகழ்வைப் பார்த்து கண்டுங்காணாமல் இருப்பது நியாயமன்று, தங்கள் உயிரைப் பணயம் வைத்தேனும் அதைத் தடுக்க வேண்டும் என்பதைப் புரிய வைக்க முனைந்தார் இறைவன் என்பதை விளக்குகிறார் சேக்கிழார் பெருமான். பாரதி தம் பாஞ்சாலி சபதத்தில், திரௌபதியைக் குழல் பற்றிப் பாதையில் இழுத்துச் சென்ற துச்சாதனனைக் கூடி நின்று வேடிக்கைப் பார்த்த மக்களை,
நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி இழுக்கையிலே
நெட்டை மரங்களென நின்று புலம்பினர்
பெட்டைப் புலம்பல் பிறர்க்காமோ?
என்று கடிந்து கொள்கிறார். அதுபோல் கண்முன்னால் அநீதி நடக்கும் போது தடுத்து நிறுத்தாமல் இருப்பது ஆண்மைக்கே அழகன்று என்பதையும் விளங்கச் செய்கிறார் சேக்கிழார் பெருமான். அந்த வகையில் சிவபெருமானாராலேயே “செயற்கருஞ் செய்கை செய்ததீரனே” என்று வியக்கப்பட்ட இந்நாயனாரின் அற்புத பக்தியினை விளங்கச் செய்கிறார்.
திருச்சிற்றம்பலம்
தொடரும்
