தெருநாய்களை என்ன செய்யலாம்?
அண்ணாகண்ணன்
நாடு முழுவதும் நாய்களைக் காப்பகங்களில் வைத்துப் பராமரிப்பது, மிகப் பெரிய வேலை. இது நிதிச் சுமையுடன் வேறு பல சிக்கல்களையும் கொண்டுள்ளது.
நாய் பொதுவாகத் தனக்கென எல்லை வகுக்கக் கூடியது. வேறு நாய் தன் எல்லையில் நுழைந்தால், பயங்கரமாகச் சண்டையிட்டு விரட்டும். இப்போது எல்லா நாய்களும் ஒரே இடத்தில் இருப்பது, மிகப் பெரிய அதிகாரப் போட்டியை உருவாக்கும். இது, நாய்களுக்கு இடையே அடிக்கடி சண்டையை உருவாக்கும். இவற்றைத் தவிர்க்க, தனித் தனிக் கூண்டுகளில் அடைக்க வேண்டும்.
நாய்களுக்கு உணவு அளிப்பது ஒரு நிலை. அதன் உடலுறவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வது அடுத்த சவால். எந்த நாயை எதனுடன் எந்தச் சுழற்சியில் சேர்ப்பது? இவற்றைக் கண்காணித்து, கணக்கெடுப்பது அடுத்த வேலை. பெண் நாயின் பிள்ளைப் பேறு சமயத்தில் அரசே கவனிக்க வேண்டும். குட்டிகளையும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
நாய்களைக் குளிப்பாட்டி, உணவு கொடுத்து, தடுப்பூசி போட்டு, அதன் கழிவுகளை அகற்றுவது, பெரும் பணி. இவற்றில் ஒரு பகுதியைத் தானியக்கமாகச் செய்ய முயலலாம்.
நாய்களை எந்த வகையில் பயன்படுத்தலாம் என்பதற்கான என் யோசனைகள்
1. நாய்கள், அதன் குட்டிகள் ஆகியவற்றின் விவரங்களை நிழற்படம், நிகழ்படங்களுடன் இணையத்தளத்தில் பட்டியலிடலாம். வேண்டுவோர், வந்து தத்து எடுக்க வழி வகை செய்யலாம்.
2. நாய்களைச் செல்லப் பிராணிகளாக மட்டும் கருதாமல், காவல் பணியில் ஈடுபடுத்தலாம். அவரவர் மதிலுக்குள் நாய்களை வைத்துக்கொள்ள, காவல் பணியில் ஈடுபடுத்த, அவற்றை வளர்ப்போருக்கு உரிய பயிற்சிகள் வழங்க வேண்டும்.
3. மோப்பத் திறன் கொண்ட நாய்களைக் காவல் துறை, தனியார் துப்பறியும் நிறுவனங்களுக்கு விற்கலாம்.
4. குறிப்பிட்ட வேலைகளைச் செய்யவும் வித்தைகள் காட்டவும் நாய்களைப் பயிற்றுவிக்கலாம்.
5. நாய்களின் கழிவுகள், மாடுகளின் கழிவுகள் போல் உரம் ஆகாது. ஆனால், நாய்களின் கழிவுகளிலிருந்து மீத்தேன் வாயுவைப் பிரித்தெடுத்து, அதை எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.
6. நாய்க்கறி, மனிதர்கள் உண்ண ஏற்றது இல்லை என்கிறார்கள். ஆயினும், சீனம், வியட்னாம் உள்ளிட்ட சில நாடுகளில் நாய்க்கறி உண்ணுகிறார்கள். எனவே, நாய்க்கறியை விரும்பும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். நாய்களை உயிருடனோ, மாமிசமாகவோ அனுப்பலாம். மாமிசமாக அனுப்பும் தேவை இருந்தால், நாய்க்கறிக் கூடங்களை அமைக்கலாம்.
7. உயிரியல் பூங்காக்களிலும் தேசியப் பூங்காக்களிலும் உள்ள சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு நாய்களை உணவாக அனுப்பலாம்.
8. நாய்கள் காப்பகங்களை உயிரியல் பூங்காக்களைப் போல் வளர்த்தெடுக்கலாம். இங்கே விதவிதமான நாய்களை ஒரே இடத்தில் காணலாம். எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்களை இங்கே சுற்றுலா அழைத்து வரலாம்.
9. பிறந்தநாள் உள்ளிட்ட சிறப்பு தினங்களில் மக்கள், நாய்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யலாம். தங்கள் வீட்டு உணவுகளைச் சமைத்தும் கொண்டு வரலாம். அல்லது 100 நாய்களுக்கு ஆகும் உணவுச் செலவை நன்கொடையாகவும் வழங்கலாம். இதற்குச் சான்றிதழ் கொடுக்கவும் ஏற்பாடு செய்யலாம். இதன் மூலம், நாயுணவு நன்கொடை வளரும்.
10. உணவகங்கள், மாணவர் விடுதிகள், திருமண மண்டபங்கள், வீடுகள் ஆகியவற்றில் மீதமாகும் உணவை இங்கே கொண்டு வந்து வழங்க ஏற்பாடு செய்யலாம். இதன் மூலம் உணவு வீணாவதையும் தடுக்கலாம். நாய்களுக்கும் உரிய உணவு கிடைக்கும். ஆனால், நாய்க் காப்பகங்களில் ஏற்கெனவே உணவு சமைத்துவிடுவார்கள். எனவே, மிச்சமாகும் உணவைச் சேமித்து வைத்து அடுத்த நாள் வழங்க, குளிர்ப்பதனிகளையும் அறை வெப்பநிலையில் உணவைச் சூடாக்கித் தரும் கருவிகளையும் ஏற்படுத்த வேண்டும்.
11. நல்ல உணவு கிடைத்த பிறகு சும்மா இருப்பது, நாய்களின் உடல்நலனுக்கு நல்லதில்லை. அவை உடல் பெருத்து, சோம்பேறியாகும் வாய்ப்பு அதிகம். எனவே, நாள் முழுதும் அதற்கு வேலை தர வேண்டும். நாய்களுக்கு ஓட்டப் பந்தயம், பந்து விளையாட்டு, கூட்டமாகக் குளிப்பது, குழி தோண்டுவது, நீளம் தாண்டுவது, பல குரலில் பேசுவது, கண்களைக் கட்டிவிட்டுப் பொருளைக் கண்டுபிடிக்கச் சொல்வது.. எனப் பல போட்டிகளை நடத்தலாம். இவற்றைக் காண மக்களையும் அனுமதிக்கலாம். இதற்கெனக் கட்டணமும் விதிக்கலாம். இந்த வகையில், இந்தச் செலவுகளை ஈடுகட்டலாம்.
12. நாய்கள் வரம்பு மீறிக் குழந்தைகளையும் அப்பாவிகளையும் விரட்டிக் கடித்து, தங்களுக்குத் தாங்களே ஆப்பு வைத்துக்கொண்டுள்ளன. பூனைகள் அமைதியாக, சுதந்திரமாகச் சுற்றித் திரிகையில், திமிரெடுத்துத் திரிந்த நாய்களுக்கு இதன் மூலம் நல்ல பாடம் கிடைக்கும். நாய்கள் தங்கள் எல்லையை உணர்ந்துகொள்ள வேண்டும். அதை மீறினால், இதுதான் கதி. இது தொடர்பாக, ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்.
