ஆளுநரை அவமதிப்பது, தவறான முன்னுதாரணம்
அண்ணாகண்ணன்
ஆளுநர் கையால் பட்டம் பெற மறுத்த மாணவியின் மீது ஊடக வெளிச்சம் பாய்கிறது. ஒட்டுமொத்த பட்டமளிப்பு நிகழ்வையும் திசைதிருப்பி, அவர் புகழப்படுகிறார். ஆளுநரை அவமதித்து விட்டதாகக் கொண்டாடுகிறார்கள். முந்தைய துணைவேந்தர்கள் மாநாட்டில், கலந்துகொள்ளக் கூடாது எனத் துணைவேந்தர்களைத் தடுத்துவிட்டதாக ஆளுநரே கூறியிருந்தார். ஆளுநர் பல்கலைக்கழக வேந்தர் இல்லை. முதலமைச்சரே வேந்தர் என்ற சட்டத் திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக் கெடு விதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாகக் குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் இன்னும் பதில் அளிக்க வேண்டும். ஆளுநருக்கு எதிராக முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் இதர அமைச்சர்களும் கூட வெளிப்படையாக அறிக்கை வெளியிடுகிறார்கள். பொதுக் கூட்டங்களில், ஊடகங்களில் பேசுகிறார்கள்.
ஆளுநர் தேவையா? என்பது குறித்தும் ஆளுநரின் நடவடிக்கைகள், பேச்சுகள் குறித்தும் பேசலாம், விமர்சிக்கலாம். ஆனால், இவை அனைத்தையும் ஆளுநருக்கு உரிய மதிப்பு அளித்து, கருத்தியல் ரீதியாக, சட்டப்பூர்வமாக மட்டுமே நிகழ்த்த வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று, பதவிப் பிரமாணம் செய்து, பதவி வகிக்கின்றவர்கள், அந்தச் சட்டத்துக்கு மாறாக, ஆளுநரை அவமதிப்பது, அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதாகவே பொருள். சட்டமன்றத்திலேயே ஆளுநருக்கு எதிராகக் கோஷம் எழுப்புவதும் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா மேடையிலேயே ஆளுநரைப் புறக்கணிப்பதும் தவறான முன்னுதாரணங்கள்.
நாளை இத்தகைய அவமதிப்புகள், முதலமைச்சருக்கு எதிராக அல்லது அரசுப் பதவியில் இருக்கும் எவருக்கு எதிராகவும் நிகழலாம். அப்போதும் இப்படியே இவர்கள் கொண்டாடுவார்களா?
ஆளுநரின் கருத்துகளை விமர்சிப்பது எனில், எந்தப் புள்ளிகளில், எந்தச் சான்றுகளின் அடிப்படையில் வேறுபடுகிறோம் என எடுத்துப் பேச வேண்டுமே தவிர, தனிப்பட்ட தாக்குதலாக அது மாறக் கூடாது. இத்தகைய நிகழ்வுகளைத் தரமான சம்பவமாகவும் சாகசமாகவும் வீரப் பிரதாபமாகவும் முன்வைக்கக் கூடாது. முக்கியப் பொறுப்புகளில் இருப்போர், வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். அவர்களே எல்லை மீறிப் பேசக் கூடாது. அவர்கள் கீழே பணியாற்றுவோர் இவ்வாறு ஏதும் செய்தால், கண்டிக்க வேண்டுமே தவிர, பாராட்டக் கூடாது. சட்டத்தை மீறுவோருக்கு இது ஊக்கம் அளிப்பதாக அமைந்துவிடும்.
ஆளுநருக்குக் கடிதம் எழுதலாம். அவருக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றலாம். அவர் மீதான புகாரைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். சட்டப்பூர்வமான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றலாம். ஆனால், அவரைக் கேலி செய்வது, பட்டப் பெயர் வைப்பது (ரம்மி ரவி), ஒருமையில் அழைப்பது போன்றவை, உண்மையில் அவரைத் தூற்றவில்லை. இப்படிச் சொல்பவர்களின் / செய்பவர்களின் தரத்தையே காட்டுகின்றன. இவை தமிழ்நாட்டின் மாண்பையும் பண்பாட்டு விழுமியங்களையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. இந்த மண்ணின் மதிப்பைத் தாழ்த்துகின்றன. வள்ளுவருக்கும் கம்பருக்கும் பாரதிக்கும் விழா எடுக்கும் ஆளுநர், கம்ப ராமாயணத்தை மலையாளத்தில் மொழிபெயர்க்க முன்பணம் கொடுக்கும் ஆளுநர், தமிழ்நாட்டு அறிஞர்களுக்கும் ஆளுமைகளுக்கும் விருது அளித்துப் பாராட்டும் ஆளுநர், இந்த மண்ணில் எத்தகைய பண்புகளை எதிர்பார்ப்பார்?
I Disapprove of What You Say, But I Will Defend to the Death Your Right to Say It என்ற புகழ்பெற்ற வாசகம் நினைவுக்கு வருகிறது. நீ சொல்வதை நான் ஏற்கவில்லை. ஆனால், அதைச் சொல்வதற்கான உன் உரிமையை என் உயிரைக் கொடுத்தேனும் காப்பேன் என்பது இன்றைய ஜனநாயகச் சூழலில் மிக முக்கியமானது. ஆளுநரின் கருத்தை நீங்கள் ஏற்காமல் போனாலும், அதைச் சொல்ல அவரை முழுமையாக அனுமதிக்க வேண்டும்.
ஆளுநர் சட்டமன்றத்தில் பேசும்போதும் இதர நிகழ்வுகளில் பங்கேற்கும்போதும் அவமதிப்பது, எள்ளி நகையாடுவது, கண்டனத்திற்கு உரியது. இதில் அரசியல் சாகசம் செய்வது, தமிழ்நாட்டின் மதிப்பைக் குறைக்கும். இன்றைய நிலையில் ஆளுநர் என்பது சட்டப்பூர்வமான, அரசியலமைப்புச் சட்டத்தின் படியான பதவி. அவருக்கு உரிய மதிப்பை அளிக்க வேண்டியது, அனைவரின் கடமை. இதை மீறுவோர் மீது மாநில அரசு, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, மாநில அரசே அந்தப் பிழையைச் செய்யக் கூடாது.
