பெண்மைகள், ஆண்மைகள் – சில பிழைகள்
அண்ணாகண்ணன்
யாரிடமும் தோன்றவில்லை இதுபோல் என்ற பாடலை இன்று வானொலியில் கேட்டேன். சிம்பு நடித்த தொட்டி ஜெயா திரைப்படத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், தாமரை எழுதிய பாடலை ஹரிணியும் ரமேஷ் விநாயகமும் இணைந்து பாடியுள்ளனர். இதயத்தை வருடும் இனிய இசையும் வரிகளும் கொண்ட பாடல். இதில் இடம்பெற்ற இந்தச் சொல்லும் இந்தக் கனவும் நிற்கட்டும், நம்மை வானம் வந்து ஈரக் கையால் வாழ்த்தட்டும் என்ற வரியை நான் மிகவும் ரசித்தேன்.
இதில் இந்த வரிகளும் இடம் பெற்றுள்ளன
உன்னைக் கண்டபின்னே எந்தன்
பெண்மைகளும் உயிர் பெறுதே
கண்ணாமூச்சி ஆட்டம் போட்ட
வெட்கங்களும் வெளிவருதே
பெண்மை என்றும் பெண்கள் என்றும் சொல்லலாம். பெண்மைகள் என எங்கும் சொல்வதில்லை. அதுபோல் வெட்கம் எனச் சொல்வோம். வெட்கங்கள் எனச் சொல்வதில்லை. மெட்டுக்காக எழுத வேண்டும் எனில், பெண்மைமிக உயிர் பெறுதே என்றும் வெட்கம்அது வெளிவருதே என்றும் எழுதியிருக்கலாம். தாமரை இப்படி எழுதியது வியப்பளிக்கிறது.
இதுபோல் இன்னொரு பாடலும் நினைவுக்கு வருகிறது. தேநீர் விடுதி என்ற படத்தில் எஸ்.எஸ்.குமரன் இசையமைப்பில் முருகன் மந்திரம் வரிகளில் உயிரோடு உறவாடி என்ற பாடலில் ஒரு வரி.
உன் பெண்மைகள் ஏங்கிடுதே
என் ஆண்மைகள் தூண்டிடுதே
இவ்வாறு பெண்மைகள், ஆண்மைகள் என நாம் சொல்வதில்லை. பெண்மை, ஆண்மை மட்டுமே உண்டு. மெட்டுக்கு ஏற்றவாறு அமையவேண்டும் எனில், உன் பெண்மையது ஏங்கிடுதே, என் ஆண்மையது தூண்டிடுதே என எழுதியிருக்கலாம்.
பிழைகளைத் தவிர்த்தால், பாடல்கள் இன்னும் சிறக்கும்.
