பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 4
பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்
63 நாயன்மார்கள் வரலாறு
3. இளையான்குடிமாற நாயனார்


இயலா விடைச்சென்ற மாதவர்க் கின்னமு தாவிதைத்த
வயலார் முளைவித்து வாரி மனையலக் கால்வறுத்துச்
செயலார் பயிர்விழுத் தீங்கறி யாக்கு மவன்செழுநீர்க்
கயலா ரிளையான் குடியுடை மாறனெங் கற்பகமே
இளையான்குடிமாற நாயனார், இளையான்குடி என்னும் நகரில், வேளாண் குடியில் பிறந்தவர். இன்றைய இராமநாதபுர மாவட்டத்தில், பரமக்குடிக்கு ஏழு மைல் தொலைவில் அமைந்துள்ளது இவ்வூர். உலகின் தலைசிறந்த தொழிலான வேளாண்மைத் தொழிலை மிக ஈடுபாட்டுடன் சிறப்பாகச் செய்து அதன் மூலம் அளவிறந்த செல்வத்தைப் பெறும் இறையருளால் குபேரனைப் போல வாழ்ந்தார். பிறையணிந்த சிவனடியார்கள்பால் அளவற்ற அன்பும் மரியாதையும் கொண்டவர் மாறனார்.
அம்பொன் நீடிய அம்பலத்தினில் ஆடு வார்அடி சூடுவார்
தம்பி ரானடி மைத்தி றத்துயர் சால்பின் மேன்மைத ரித்துளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற்குலஞ்செய்த வத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கி னார்இளையான்கு டிப்பதி மாறனார்.
அவர் தம்முடைய இல்லம் நாடி வரும் அடியவர்களுக்கு அன்னம் பாலிப்பதை தம் தலையாயக் கடமையாகக் கொண்டு வாழ்ந்துவந்தார்.
அடியவர் யார், அவர் எத்தகையவர், எப்படியிருக்க வேண்டும் என்ற இலக்கணமெல்லாம் அறிந்துகொண்டு பின்னர் அவர்களுக்கு அன்னம் பாலிக்கும் வழமையறியாதவர் மாறனார். வாசலில் இறங்கி நடக்கும்போது எதிர்படும் எவரையும் அடியாராகக் கருதி அவரை வழிபட்டு அவருக்கு அமுது படைக்க தம் இல்லம் அழைத்து வந்துவிடுவார். சேக்கிழார் பெருமானார் இதனை, “நேரே வந்தவர் யாவராயினும்” என்று குறிப்பிடுகிறார். அதாவது இதன் ஆழ்ந்த பொருள் நோக்குங்கால், ஆண், பெண், ஆண்டான், அடிமை, மேல்குலம், கீழ்குலம், கற்றவன், கல்லாதவன், ஏழை, பணக்காரன் போன்று எந்த பாகுபாடும் காணாமல் அவர் யாவராயினும் ஆரம் என்பு புனைந்த அன்பர் எனும் தன்மையால் அடியவர் எனப்போற்றி வணங்கினார். அடியவர்களை எங்கனம் வழிபட வேண்டும் என்று சேக்கிழார் பெருமான் விளக்குகிறார்.
கொண்டு வந்து மனைப்பு குந்துகு
குலாவு பாதம்வி ளக்கியே
மண்டு காதலினாதனத்திடை
வைத்த ருச்சனை செய்தபின்
உண்டி நாலுவி தத்தி லாறு
சுவைத்தி றத்தினில் ஒப்பிலா
அண்டர் நாயகர் தொண்டரிச்சையில்
அமுது செய்யஅ ளித்துளார்.
அந்த வகையில் அடியவர் எவராயினும் மெய்யன்போடு முகமன் கூறி அவர்களை வரவேற்று, பாத வழிபாடு செய்து, இருக்கையில் அமர வைத்து மலர் தூவி வழிபாடு செய்தபின், அவர் வயிறார உண்ணும் வகையில், கைப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையையுடன் கூடிய, உணவு உண்ணல், தின்னல், நக்கல், பருகல் என நான்கு வகையாக்கியும் சமைத்து வழங்கினாராம் மாறனார். அவரவருக்கு விருப்பமான அற்புதமான உணவை மகிழ்ந்து திருவமுது செய்விப்பார். அன்றாடம் இவ்வாறு மகேசுர வழிபாடு செய்து சிவபுண்ணியத்தில் திளைத்திருந்தார். அதனால் வற்றாத செல்வமும் பெற்று பெரும் செல்வந்தராக வாழ்ந்திருந்தார். அப்படிப்பட்ட சூழலில் ஒருநாள் சிவபெருமான், அவ்விளையான்குடிமாற நாயனாரை சோதிக்கக் கிளம்பிவிட்டார்.
பொன்னம்பலக் கூத்தன் தம் அடியார்களின் பெருமையை உலகறியச் செய்பவர். அளவிடற்கரிய செல்வம் இருக்கும்போது அடியார்களுக்கு அமுது படைப்பது எவர்க்கும் எளிதாம். ஆனால் செல்வம் வற்றி வறுமை வந்த காலத்தினும் தான் உண்ணாது இருப்பினும் மனம் தளராது தமது கொள்கையைக் காக்க வல்லவர் என்பதையும், தாம் நல்லோர்களுக்கு வறுமையைக் கொடுத்தல் அவர்கள் நயத்தின் பொருட்டே என்பதையும் உலகறியச் செய்யவே வந்தார். இதன் காரணமாகவே சிவபெருமானார் நாயனாருக்கு வறுமை வர எண்ணியதால் அவருக்கு வறுமையும் உண்டாயிற்று. அடியவருக்கு அன்னம் பாலித்து வறுமையை ஏற்கவில்லை, அடியவர்தம் பெருமையை உலகறியச் செய்யவே கூத்தபிரானின் இவ்விளையாட்டு நிகழ்ந்தது என்பதை விளக்குகிறார் சேக்கிழார் பெருமான். நாயனாரின் செல்வ வளம் சுருங்கியபோதும், அவர்தம் மனம் சுருங்குதல் இன்றித் திருத்தொண்டில் முன்னைவிடச் சிறப்பாக ஈடுபட்டிருந்தார் என்கிறார் சேக்கிழார் பெருமான். கடன் பெற்றும், தம் சொத்துகளை அடமானம் செய்தும் திருத்தொண்டு ஆற்றுகிறார் மாறனார்.
தில்லையிலிருந்து புறப்பட்ட எம்பெருமான் அந்த மாரிக்காலத்து இரவில் அந்தணர் வடிவு தாங்கி இளையான்குடிமாற நாயனார் இல்லம் நோக்கி வந்தார். மாறனாரும், அவர்தம் மனைவியாரும் தாங்கள் உண்ணவே உணவின்றி உறங்கக் காத்திருந்தனர். அந்நேரத்தில் மழையில் நனைந்தபடி வந்து நின்ற அடியாரை வரவேற்று அவருடைய ஈரமேனியைப் போக்க துவாலையோடு துணை நின்றவரின் நெஞ்சில் ஈரம் கசிந்தது.
அடுத்து வந்த விருந்தினரான அடியவருக்கு எங்கனம் உணவளிப்பது என்ற வினா எழுந்தது. தங்களுக்கு உண்ண உணவு இல்லாத நேரத்தில் எப்படி நல்ல உணவை பரிமாறப் போகிறோம் என்று நாயனார் கவலைப்பட்டார். இரவு நேரமாகிவிட்டதால், அவர்களால் சமைக்க ஏதாவது கடன் வாங்க கிராமத்திற்குச் செல்லவும் முடியவில்லை. நாயனார் தம் மனைவியை தெய்வீகத் தன்மை பெற்ற பெண் எனும் பொருள்படும்படி, ‘அணங்கே’ என்று அழைத்து அதற்கானத் தீர்வைக் கேட்கிறார். தங்களுக்கு இத்தகையதோர் நிலைமை வந்ததற்கு தான் செய்த தீவினைதான் காரணம் போலும் என்று அந்த அம்மையார் நொந்து போனாலும், அன்று நண்பகலில் தங்கள் சிறு வயலில் விதைத்த செந்நெல் விதைகளைக் கொண்டு வந்தால் அடியாருக்கு அமுது படைக்கலாம் என்றார். நாயனாரும் வயல்வெளிக்குச் சென்று விதைத்த நெல்லை எடுத்து வரச் சென்றார்.
இருள் சூழ்ந்த அந்த இரவில் மழை பெருக்கெடுத்தோடியது. ஆயினும் தம் மன உறுதி சற்றும் குறையாமல் தம் பாதங்களால் பாதையைத் துளவி உணர்ந்து தம் வயலினுள் நுழைந்தார். மழையால் வயலின் மூலைகளில் தள்ளப்பட்ட விதைகளை சேற்றுடன் சேர்த்து சேகரித்தார். தாம் கொண்டு வந்த கூடையை நிரப்பிவிட்டு விரைந்து சென்றார். அவரது மனைவியும் விதைகளிலிருந்து சேற்றைக் கழுவினார். ஆனால் தழல் மூட்ட விறகில்லை என்றதால் நாயனாரும் வீட்டின் விட்டத்தை அறுத்தளித்தார். நெல்லின் உமியை நீக்கி அரிசியாக்கி சமைத்துவிட்டாலும், சோற்றோடு பரிமாற கறிக்கு என் செய்வோம் என வருந்தி நின்றவரிடம், வீட்டின் பின்புறம் உள்ள குழி நிரம்பாதக் குறும்பயிரான கீரையைக் கொணர்ந்தார். அவரது மனைவியும் அந்தக் கீரையிலிருந்து பல்வேறு உணவுகளைச் சமைத்துக் காட்டினார். உணவு தயாராயிற்று. தங்கள் அன்பினால் சமைத்த அந்த எளிய உணவை ஏற்றருள வேண்டி அந்த அடியாரின் பாதம் பணிந்து வணங்கி நின்றனர்.
ஆனால் அவர்கள் இருவரும் திகைத்து நிற்க, உறங்கிக் கொண்டிருந்த அடியவர் மறைந்து ஆங்கு ஓர் சோதியாய் தோன்றிய இறைவன், “நீயும் நின் துணைவியும் என் பெரும் பதத்தை எய்திக் குபேரன் உம் ஏவல் வழிச் செயல்பட ஆணை பிறப்பித்தோம்” என்று அருள் புரிந்தார்.
இளையான்குடிமாற நாயனார் புராணம் சொல்லும் கருத்து!
ஆண்டவன் வழிபாட்டை ஆராதனை என்றும், அடியவர் வழிபாட்டை சமாராதனை என்றும் அழைப்பர். ஆண்டவனுக்கு அமுது படைப்பதைக்காட்டிலும் அடியார்களுக்கு அமுது படைப்பதே சாலச்சிறந்தது என்பார் திருமூல நாயனார். கோவிலில் குடிகொண்டுள்ள இறைவனுக்கு உணவு கொடுத்தால் அது அடியவரைச் சாராது. அதே சமயம் நடமாடும் கோயிலான அடியவர்களுக்கு அன்னம் பாலித்தால் அது அவ்வடியார் வாயிலாக இறைவனையும் சென்றடையும் என்பதால் அடியவர்களுக்கு அன்னம் பாலிப்பதே சிறந்த தொண்டு என்கிறார் திருமூலர்.
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே”, என்பார்.
இவையனைத்தும் நன்குணர்ந்த இளையான்குடிமாற நாயனார் சிவனடியார்களுக்கு திருவமுது படைத்தலையே தம் முழுநேரத் திருத்தொண்டாக மேற்கொண்டார். அடியவருக்குச் செய்யும் தொண்டு ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டு என்பதை திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அடியவர் என்ற தபால் பெட்டியில் போடும் தபால் ஆண்டவன் என்ற தலைமைத் தபால் அகத்தைச் சென்றடையும் என்று அழகான உவமையுடன் விளக்குவார்.
உலகியல் வாழ்வில் இன்பமோ, துன்பமோ எது நேர்ந்தாலும் இறைவன் மீது மாறாத அன்பு கொண்டவர்களே அடியார்கள். எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் இறையருள் தம்மை மீட்டுக் கொண்டுவரும் என்ற அதீத நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
படரும் நெறி பணியாரேனும் – சுடர் உருவில்
என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா தென்நெஞ் சவர்க்கு
இறைவன் எனக்கு நேருகின்ற இடர்களைக் களையவில்லை என்றாலும், மனம் இரங்கி எனக்கு அருள் செய்யவில்லை என்றாலும், நான் செல்ல வேண்டிய நல்வழிகளைக் காட்டவில்லை என்றாலும், நெருப்பின் வடிவில் எலும்பு அணிந்து ஆடுகின்ற சிவனிடம் நான் கொண்டுள்ள அன்பு ஒருபோதும் குறையாது என்பார் காரைக்கால் அம்மையார்.
“அதிக நல்லற நிற்பதென் றறிந்தனை மறத்து
ளதிக மாஞ்சிவ புண்ணியஞ் சிவார்ச்சனை யவற்று
ளதிக மாஞ்சிவ பூசையு ளடியவர் பூசை
யதிக மென்றறிந் தன்பரை யருச்சனை செய்வாய்.”
என்கிறது திருவிளையாடற்புராணம். அடியார்கள் வழிபாட்டைவிட சிறந்த புண்ணியம் பிறிது இல்லை.
‘சிவனே சிவஞானி யாதலாற் சுத்த
சிவனே யெனவடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே.”
என்று திருமந்திரத்தின் 6-ம் தந்திரம் சிவகுரு தரிசனம் குறித்து விளக்குவதைக் காணலாம்.
அறியாமை யறிவகற்றி யறிவி னுள்ளே
யறிவுதனை யருளினா னறியாதே யறிந்து
குறியாதே குறித்தந்தக் காரணங்க ளோடுங்
கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயின்.”
என்று சிவஞானசித்தியார் கூறுகின்றது.
அடியார்கள் மீது கொள்ளும் இவ்வன்பானது ஒருவர்க்கு அத்துணை எளிதாக வாய்த்துவிடுவதில்லை. அவர் பல பிறவிகளிலே பயன் கருதாது செய்த புண்ணிய மிகுதியினாலே சிவபெருமானார் அருளிச் செய்யக் கிடைக்கும் வரம். அவனருளின்றி இவ்வன்பு ஒருவாற்றானும் நிகழாது. இடையறாது வளரும் அம்முதிர்ச்சியில் சிவம் விளங்கும் என்பதால் அன்பும் சிவமும் இரண்டற ஒன்றாய் நிற்கும்.
“மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் –
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தா – னொட்டிட்ட பண்பினுருத்திர பல்கணத்தார்க் – கட்டிட்டல்
காணாதே போதியோ பூம்பாவாய்”
என்னும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரத்தில் சேக்கிழார் பெருமான் விளக்கியருளியதை அறியலாம்.
இத்துணைப் பெருஞ்சிறப்பினதாகிய அடியார்களுக்கு திருவமுது படைத்தாற்றும் தொண்டு எந்நாளும் சிறிதாயினும் தவறாது சைவாகம விதிப்படி மெய்யன்போடு செய்தமையால் மிகச் சிறப்புற்றவர் இவ்விளையான்குடிமாற நாயனார். அடியவர்கள் அன்னம் பாலிப்பு செய்வதனை இவர் செல்வம் உள்ள பொழுது செய்தமையினும், மிக்க வறுமை வந்தபொழுதும் மனம் சிறிதும் சுருங்குதலின்றி முன் போலவே சிறிதும் தவறாது செய்தமை போற்றுதலுக்குரியதாக்குகிறது.
மன்னியலே ளாண்டொன்மை யிளைசை மாறர்
வறுமையா லுணவுமிக மறந்து வைகி
யுன்னருநள் ளிருண்மழையி லுண்டி வேண்டி
யும்பர்பிரா னணையவய லுழுது வித்துஞ்
செந்நென்முளை யமுதுமனை யலக்கா லாக்கிச்
சிறுபயிரின் கறியமுது திருந்தச் செய்து
பன்னலரு முணவருத்தற் கெழுந்த சோதிப்
பரலோக முழுதாண்ட பான்மை யாரே.
என்பார் சேக்கிழார் பெருமான்.
திருச்சிற்றம்பலம்
தொடரும்
