பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 5
63 நாயன்மார்களின் வரலாறு
4. மெய்ப்பொருள் நாயனார்


மங்கையைப் பாக மாக
வைத்தவர் மன்னுங் கோயில்
எங்கணும் பூசை நீடி
ஏழிசைப் பாட லாடல்
பொங்கிய சிறப்பின் மல்கப்
போற்றுதல் புரிந்து வாழ்வார்
தங்கள்நா யகருக் கன்பர்
தாளலால் சார்பொன் றில்லார்.
சிவஞானம் மட்டுமே மெய்ப்பொருள், ஏனைய மற்ற உலகப் பொருள்கள் அனைத்தும் பொய்ப்பொருள் என்பதை வெளிப்படுத்தும் இந்நாயனாரின் வரலாறு. சிவவேடம் தரித்த யாவரேனும் அவர் எத்தகையவராயினும் பேதம் ஏதும் காணாமல் அச்சிவவேடத்தையும் போற்றிப் பரவும் ஒரு உத்தம எண்ணம் கொண்ட நாயனார் இவர்.
திருக்கோவிலூர் சோழவள நாட்டிற்கும், தொண்டை நாட்டிற்கும் இடையிலே அமைந்துள்ளது நடு நாடு. சேதி நாடு என்றும் இந்நடு நாடு அழைக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு நடுவிலே அமைந்திருப்பதால் நடு நாடு என்றும், சேதியர் என்ற ஒரு வகை மரபினர் வாழ்வதால் சேதி நாடு என்றும் பெயர் பெற்றுள்ளது. இந்நாட்டின் தலைநகரமாக அமைந்த நகரம் திருக்கோவிலூர், அட்டவீரட்டான தலங்களில் ஒன்றாகும்.
அட்டவீரட்டானக் கோயில்கள்
அட்டவீரட்டானம் என்பது இறைவனின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிப்பதாகும். சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர். பகைவர்களின் வீரத்தை அட்டு ஆன இடம் என்ற வகையிலும், தன் வீரத்தால் அட்டு ஆன இடம் என்ற வகையிலும் வீரட்டானம் என்னும் சொல் அமைந்தது. இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது.
1.திருக்கண்டியூர் : சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்
2.திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்
3.திருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம்
4.திருப்பறியலூர் : தக்கன் தலையைத் தடிந்த தலம்
5.திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்
- திருவழுவூர் : கயமுகாசுரனைக் கொன்று தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட தலம்
7.திருக்குறுக்கை : மன்மதனை எரித்த தலம்
8.திருக்கடவூர் (அ) திருக்கடையூர் : மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.
மேற்கண்ட எட்டு திருதலங்களிலும் எம்பெருமான் ஈசன் வீரட்டானேசுவரர் என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறார்.
சம்பந்தரும், அப்பரும் பாடிய தொன்மையான திருக்கோவிலூர் எனும் இத்திருத்தலம் பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்நாட்டினை ஆண்ட அரசர்கள் மலாடர் என்று அழைக்கப்பெற்றனர். இவர்தம் வழியில் தோன்றியவரே மெய்ப்பொருள் நாயனார். இவர் தாம் தேடிய செல்வமனைத்தும் தில்லைக் கூத்தனின் அன்பர்களுக்கேச் சொந்தம் என்று கருதி மன நிறைவுடன் வாரி வழங்கியவர். மெய்ப்பொருள் நாயனார் சிவபெருமானாரின் திருக்கோவிலில் நடைபெற வேண்டிய அனைத்து திருவிழாக்களையும் சிறப்புற நடத்தியவர், சிவனடியார்களுக்கும் வேண்டுவன அனைத்தையும் வழங்கி வாழ்ந்து வந்தார். அனைத்திற்கும் மேலாக அரசியல் நெறி பிறழா அரும் காவலனாகவும், வாள் வலிமையும், தோள் வலிமையும் கொண்ட ஆகச்சிறந்த வீரனாகவும் இருந்தார். அத்தகைய இம்மன்னனின் அண்டை நாட்டு அரசனான முத்தநாதன் என்பவன் பன்முறை மெய்ப்பொருளாருடன் போர் புரிந்து தோற்று புறமுதுகு காட்டி ஓடியவன்! எப்படியாவது ஏதேனும் சூழ்ச்சியாலாவது மெய்ப்பொருளாரைப் பழிவாங்க எண்ணம் கொண்டான். சைவ வேடம் பூண்டு வந்த அந்த வஞ்சக எண்ணம் கொண்ட முத்தநாதன் அவ்வடியாரை வீழ்த்த முடிவெடுத்தான்.
உண்மையான சிவனடியார் போலவே முறைப்படி ஆசாரியன் சொன்ன இடங்களில் அளவு மாறாமல் திருநீறு பூசி பழக்கம் இல்லாதவன் என்பதால் அங்கம் முழுதும் இடம் அளவு காணாது முழு நீறு பூசிய முனிவன் போன்ற தோற்றத்துடன் வந்தான். போலியான சடைமுடியையும் பொருத்திக் கொண்டான். கையிலே ஏட்டுச்சுவடிக் கட்டு ஒன்றை ஏந்திக்கொண்டான். அதற்குள் எவரும் காண முடியாதவாறு கத்தி ஒன்றையும் மறைத்து வைத்துக் கொண்டான். இத்தகைய, போலித் தோற்றத்துடன் முத்தநாதன் திருக்கோவிலூர் நகரத்தில் மெய்ப்பொருள் நாயனார் அரண்மனையைச் சென்று அடைந்தான். அரண்மனைக் காவலர்களும் அவன் மெய்யான சிவனடியார் என்று நினைத்து வணங்கி வழிவிட்டனர். முத்தநாதனும் எந்தத் தடையுமின்றி மன்னன் உறங்கும் சயன அறை வரை வந்துவிட்டான். பள்ளியறை வாயிலிலே மன்னவனின் மெய்க்காப்பாளன் தத்தன் என்பவன் வாளோடு நின்று கொண்டிருந்தவன், மன்னர் உறங்கும் நேரம் என்பதால் அவரைச் சந்திக்க இயலாது என்கிறான்.
முத்தநாதனோ கோபமுற்றவனாக, “என்னையேத் தடுக்கின்றாயா? மன்னவருக்கு இறையவனின் மெய்ப்பொருளைக் கூற வந்த எனக்கே தடையா? என்று கடிந்தவாறு தத்தனையும் மீறி உள்ளே நுழைந்தான். உறங்கிக் கொண்டிருந்த மன்னவனின் கால்பகுதியில் மாதேவி அமர்ந்திருந்தார். முத்தநாதன் உள்ளே நுழைந்ததைக் கண்டவுடன் மாதேவியார் சட்டென்று கட்டிலிலிருந்து கீழே இறங்கினார். கணவரையும் எழுப்பினார் அம்மையார். சிவநாமம் சொல்லிச் சென்ற முத்தநாதனைக் கண்ட மெய்ப்பொருளார் அகமகிழ்ந்து கும்பிட்ட கையோடு எழுந்து நின்றார்.
முத்தநாதனும், “மங்களம் பெருக” என்றான். மெய்ப்பொருளாரும், “இந்நேரத்தில் தாங்கள் இங்கு எழுந்தருளியுள்ள காரணம் யாது?” என்று வினவினார்.
மங்கலம் பெருக மற்றென் வாழ்வுவந் தணைந்த தென்ன
இங்கெழுந் தருளப் பெற்ற தென்கொலோ என்று கூற
உங்கள்நா யகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண்மேல்
எங்குமில் லாத தொன்று கொடுவந்தேன் இயம்ப வென்றான்.
முத்தநாதனும், வஞ்சகப் புன்னகையை உதட்டில் சுமந்தவாறு, “ உங்கள் நாயகர் முற்காலத்தே அருளிச் செய்த சைவ ஆகம நூல்களுள் உலகில் வேறெங்கும் கிடைத்திராத அரியதொரு நூலை உமக்கு உபதேசிக்கும் நோக்கோடு கொண்டு வந்துள்ளேன்” என்றான்.
மெய்ப்பொருளாரும் அவ் ஆகமத்தை வாசித்து தாம் கடைத்தேற விரைந்து அருள் செய்ய வேண்டும் என்று வேண்டினார். உடனே முத்தநாதனும், “நானும் நீயும் தனியிடத்து இருக்கவேண்டும், உன் தேவி இவ்விடத்தை விட்டு அகல வேண்டும்” என்றபோது அதற்கு மன்னனும் இசைந்தான்.
மன்னன் முத்தநாதனை உயர்ந்த ஆசனத்தில் அமரச்செய்து, தாமும் தாழ்ந்து தலைகுனிந்து அமர்ந்து உபதேசித்து அருள வேண்டினார். உடனே முத்தநாதனும் திருவெண்ணீற்றை எடுத்து தாமும் உடம்பிலும் நெற்றியிலும் பூசிக்கொண்டு மன்னனுக்கும் கொடுத்த பின்பு தம் கையிலிருந்த ஏட்டுச்சுவடிக்கட்டை அவிழ்த்தான். நாயனார் பணிந்து சிரம் தாழ்த்தி வணங்கும் நேரத்தில் வஞ்சகன் அவன் தன் சுவடியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மன்னனைக் குத்தினான். அத்தகைய கடினமான நேரத்திலும் நாயனார் அந்த வஞ்சகன் முத்தநாதன் மீது எந்தவித வெறுப்பும், கோபமும் கொள்ளாது மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் என்று கூறி அவனைத் தொழுதார். குருதி வெள்ளத்திலே மிதந்த நாயனார் அக்கொடியவனின் திருநீறு அணிந்த உடம்பைப் பார்த்துச் சிவனையே நினைத்தார்.
ஆனால் உள்ளத்தில் கொண்டிருந்த வஞ்சனையை மறைத்துத் தவவேடம் பூண்ட முத்தநாதன் மன்னனின் சயன அறைக்குள் சென்றபொழுதே, அவனைத் தடுத்து நிறுத்திய மெய்க்காப்பாளன் தத்தன், நொடிப் பொழுதில் சென்று வாட்படையால் அவனைத் தாக்கத் தொடங்கினான். தம் திருமேனியில் இரத்தம் சோர நிலத்தில் வீழ்கின்ற அந்நாயனார், ‘தத்தா நமர்’` என்று கூறித் தம் வீரம் பொருந்திய நீண்ட கையினால் தடுத்து வீழ்ந்தார்.
நிலத்தில் சாய்ந்த மன்னனின் அன்பின் ஆழத்திற்கும், பக்தியின் உயர்விற்கும் அடிபணிந்த தத்தன், தலை வணங்கினான். தமது உள்ளம் கோபத்தால் துடி துடித்த போதும், உள்ளம் உருக, கண்கள் நீரைச் சொரிய, கைகள் தளர, உடைவாளை உறையில் போட்டபடியே அரசரைத் தாங்கிப் பிடித்தான் தத்தன்.
அப்போது மெய்ப்பொருளார் தாங்க முடியாத வேதனையையும் தாங்கிக் கொண்டு தத்தனிடம், “தத்தா, எனக்கொரு உதவி செய்வாயா? இவ்வடியார்க்கு எவ்வித இடரும் நேராவண்ணம் நம் எல்லைவரை அழைத்துச் சென்று விட்டு வா!” என்று ஆணையிட்டார்.
தத்தனும் தாளாத வேதனையுடன் மன்னனின் கட்டளைக்கு அடிபணிந்து, அரக்க மனம் படைத்த அந்த முத்தநாதனை ஊர் எல்லையில் கொண்டு விட்டுவிட்டுத் திரும்பினான். தத்தன் திரும்பி வரும்வரை தம் இன்னுயிரைப் பிடித்து வைத்துக்கொண்டிருந்த நாயனார் தத்தனைக் கண்டு, “இன்றெனக் கையன் செய்தது யார் செய்ய வல்லாரென்று”, நின்றவன் தன்னை நோக்கி நிறைபெருங் கருணை கூர்ந்தார்.
தம் இளவரசர், அமைச்சர் முதலியவர்க்கும், தம் பிரிவால் வருந்தி நிற்கும் அரசமா தேவியார், ஏனைய சுற்றத்தார் என அனைவருக்கும் தம் உள்ளத்தில் உறைந்து கிடக்கும் கொள்கையைக் கூறும்முகமாக, “முறையாகப் போற்றிக் காக்கத் தக்க திருநீற்றினிடத்து வைத்து வாழும் அன்பில் சோர்வு வாராது அதனை என்றும் பாதுகாத்து, இவ்வுலகில் வாழ்வீர்” எனும் கட்டளையை மொழிந்தபின் நாயனார் பெருமானின் அழகிய வீரக்கழலினை அணிந்த திருவடியை மனத்தகத்து எண்ணியிருந்தார்.
அப்போது உமையம்மையாரின் கணவராகிய சிவபெருமான், மெய்ப்பொருளார் தம்மை மனத்தகத்து எண்ணியிருந்த வடிவே வடிவாக, அவர் முன்னிலையில் தோன்றியருளி, அவரை விண்ணுலகின்கண் வாழும் தேவர்களுக்கும் எட்டாத அருள் வடிவான தம் திருவடி நிழலில் கலந்து இன்புறுமாறு அருள் செய்ததோடு அவர் தம்மை இடைவிடாது வணங்கி வாழும் பேற்றினையும் வழங்கியருளினார்.
மெய்ப்பொருள் நாயனார் புராணம் சொல்லும் கருத்து
மெய்ப்பொருள் நாயனார் அழிகின்ற பொய்ப்பொருளை பொருளாகக் கருதாமல், சிவஞானமும், திருநீறும் கண்மணியுமே மெய்ப்பொருள் எனக்கொண்டு வாழ்ந்தவர். சிவவேடம் அணிந்தவரேயாயினும் அவர்தம் குற்றம் குறை காணாது அச்சிவ வேடத்தையும் பணிந்து, அன்புடன் போற்றிவரும் சீலத்தார்.
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே
எனும் சிவஞான போதரின் அடியொற்றி வாழ்பவராகிறார். வள்ளலார் ‘அகத்தே கருத்து புறத்தே வெளுத்த உலகர்’ என்பார் வேதனை பொங்க.
இப்புராணத்தின் முக்கியமான ஒன்றாகக் கருத வேண்டிய ஒன்று என்றால் அது கவிஞர் சேக்கிழார் பெருமானாரின் இரட்டை அர்த்தப் பாடல்களின் வல்லமை மிக்க கருத்துக்களே!
மெய்யெலாம் நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினிற் படைக ரந்த
புத்தகக் கவளி யேந்தி
மைபொதி விளக்கே யென்ன
மனத்தினுட் கறுப்பு வைத்துப்
பொய்தவ வேடங் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்.
என்றவாறு முத்தநாதன் பொய்த்தவ வேடத்தை உவகை பெறத்தக்க ஓர் அருமை உவமையோடு விளக்குகின்றார். அதாவது கருமையான நிறத்தைத் தன்னுள் வைத்திருக்கும் ஒளி விளக்குப் போலத் தன் மனத்தில் சினத்தை வைத்துக் கொண்டு பொய்யாகிய ஒரு தவவேடத்தைக் கொண்டு முத்த நாதன் என்னும் பெயரில் சென்றான், என்கிறார்.
மங்கலம் பெருக மற்றென் வாழ்வுவந் தணைந்த தென்ன
இங்கெழுந் தருளப் பெற்ற தென்கொலோ என்று கூற
உங்கள்நா யகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண்மேல்
எங்குமில் லாத தொன்று கொடுவந்தேன் இயம்ப வென்றான்.
இப்பாடலில் நாயனாரைப் பார்த்து, ‘மங்கலம் பெருக’ என்று வாழ்த்துவது போல் முத்தநாதன் தம் தீய எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறான். மங்கலம் பெருக என்றால் நன்மை பெருக என்று ஒரு பொருள் மேலோட்டமாகத் தெரிந்தாலும், மங்கலம் பெருக என்றால் அமங்கலம் என்ற பொருளும் உண்டு. கணவனை இழந்த பெண்கள் தாலி நீக்கும் வழமை உண்டு. அந்த நிகழ்வுக்கு தாலி பெருகியது என்று கூறுவது மரபு.
‘மற்று என் வாழ்வு வந்தணைந்தது’. என் வாழ்வு எந்த முயற்சியும் இன்றி இன்று வாய்ப்பு வந்தது என்பது ஒரு பொருள். என் வாழ்வு அணைந்தது என்றால் என் வாழ்க்கை இகழத்தக்கது என்றும் மற்றொரு பொருள் உள்ளது. இங்கு கவிஞரின் சொல்வன்மையைக் காண முடிகின்றது.
அதே போன்று மெய்ப்பொருளார் முத்தநாதனிடம் வந்த காரியம் குறித்து கேட்டபோது, அவன் உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண்மேல் எங்குமில்லாத தொன்று கொடுவந்தேன், என்கிறான்.
முத்தநாதன் பொய்வேடமணிந்த வஞ்சகன் என்பதை சூசகமாக வெளிப்படுத்துகிறார். முத்தநாதன் நம் நாயகனார் என்றோ அல்லது என் நாயகனார் என்றோ கூறாமல் அதுவரை சிவபெருமானைப் பற்றிய எண்ணமே ஏதுமின்றி பொய்த்தவ வேடம் பூண்டவன், ‘உங்கள் நாயகர்’ என்கிறான். அதுபோல் மண் உலகில் இதுவரை இல்லாத புது நூல் என்று அவன் சொன்னதையும் இது போன்ற நூல் இதுவரை மண் உலகில் இல்லை என்றும் பொருள் தொனிக்கப் பாடியுள்ளார் சேக்கிழார் பெருமான்.
தெய்வச் சேக்கிழார், மெய்ப்பொருளாரை தாம் திட்டமிட்டபடி கொன்றுவிட்ட முத்தநாதனின் நிலை மட்டுமே வென்றது. ஆனால் மெய்ப்பொருளாரைக் குத்தியதால் அவன் தோல்வியே கண்டான். ஆக நாயனார் தம் கொள்கை வழி வென்றார். சேக்கிழார் முத்தநாதனைத் தொழுது நாயனார் கொள்கைவழி வென்றார் என்கிறார்.
பகைவர்க்கும் அருள்வாய் நெஞ்சே என்று, தன்னைக் குத்திக் கொன்ற முத்தநாதனைக்கூட தன் மெய்க்காப்பாளர் மூலமாக பாதுகாப்பாக ஊர் எல்லைவரை கொண்டுவிடச் சொல்கிறார். தத்தனும் அரசரின் கட்டளையை ஏற்று அப்படியே செய்துவிட்டு திரும்பியபோது, இன்றெனக் கையன் செய்த தியார்செய வல்லா ரென்று நின்றவன் தன்னை நோக்கி நிறைபெருங் கருணை கூர்ந்தார், என்று மெய்ப்பொருளாரின் பெருந்தன்மையான நிலையை விளக்குகிறார் சேக்கிழார் பெருமான்.
மெய்ப்பொருள் நாயனார் தாம் உயிர் துறக்கும் தருணத்திலும், ஈசன் மீது கொண்ட அன்பு சற்றும் குறையாததையும் அடுத்து தாம் விளக்கப்போகும் நாயன்மார் குறித்தும் சேக்கிழார்,
இன்னுயிர் செகுக்கக் கண்டும்
எம்பிரான் அன்ப ரென்றே
நன்னெறி காத்த சேதி
நாதனார் பெருமை தன்னில்
என்னுரை செய்தே னாக
இகல்விறன் மிண்டர் பொற்றாள்
சென்னிவைத் தவர்முன்
செய்த திருத்தொண்டு செப்ப லுற்றேன்.
என்று சொல்லி விளங்கச் செய்கிறார்.
திருச்சிற்றம்பலம்
தொடரும்
