பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 2
பவள சங்கரி

தில்லைவாழ் அந்தணர்
தில்லைவாழ் அந்தணர் என்பது தனி நபர் எவரையும் குறிப்பதல்ல. தில்லையில் கூத்தப் பெருமானை வழிபடுகிற அத்தனைப் பேரையும் சேர்த்து தில்லைவாழ் அந்தணர் என்று நம்பியாரூரர் குறிப்பிடுகிறார். ஒரு சாதியில் பிறந்தவர் அந்தணர் அல்லர். அப்படியானால் அந்தணர் என்பவர் யார்?
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அந்தணத் தன்மை என்பது பிறப்பால் வருவது அன்று. வாழ்வு நெறியால் வருவது என்பர் பெரியோர். அதனாலேயே தமது திருப்பள்ளி எழுச்சியில் மணிவாசகப் பெருமான்,
அந்தணன் ஆவது காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே
என்று பாடியருளுகிறார். எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும் சத்திய வாழ்வுடன், தன்னலம் பாராமல் பிறர் நலம் பேணித் தியாகச் சீலர்களாக, கொண்ட கொள்கைக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிப்பவர்களே அந்தணர் என்பது தமிழர்தம் நெறியாகும்.
ஆரூரர் திருவாரூரில் புற்றிடம் கொண்ட பெருமானை வணங்கும் பொருட்டு ஆராத காதலொடு திருக்கோவிலின் வாயிலில் நுழைந்தவர் அங்கு முன்புறம் அமைந்துள்ள தேவாசிரிய மண்டபத்தில் அடியார் பெருமக்கள் அனைவரும் கூடி இறைவனின் புகழ் பாடி மகிழ்ந்திருந்ததைப் பார்த்து பரவசம் எய்தியவர் இந்த அடியார்களுக்குத் தொண்டு செய்யும் அந்நாள் எந்நாளோ என்ற ஏக்கத்துடனேயே உள்ளே சென்றார். அடியவர்களின் பெருமையை, ‘ஆரூரா நான் சொல்கிறேன் நீ கேட்பாயாக’ என்கிறார் இறைவன். அடியவர்களின் பெருமையைப் புகழும் இறைவன், அவர்கள் உள்ளத்து ஒருமையால் உலகையே ஆள்பவர்கள் என்றும், இம்மை, மறுமை எனும் இரண்டையும் கடந்த இவர்கள் வீடு பேற்றைக்கூட வேண்டாம் என ஒதுக்கும் அளவிற்கு பலன் கருதாது பக்தி செலுத்தும், குறையேதுமிலாத உன்னதத் தொண்டர்கள். அத்தகைய அடியவர்களின் முன்னர் என் பெருமையும் சற்றுக் குறைவுதான். அந்த குற்றமற்ற அடியவர்களைச் சென்றடைந்து அவர்தம் பெருமையைப் பாடு என்று பணிக்கிறார். ஆண்டவனே அடியவர் பெருமையை,
பெருமையால் தம்மை ஒப்பார்; பேணலாம் எம்மைப் பெற்றார்;
ஒருமையால் உலகை வெல்வார்; ஊனமேல் ஒன்றும் இல்லார்;
அருமையாம் நிலையில் நின்றார்; அன்பினால் இன்பம் ஆர்வார்;
இருமையுங் கடந்து நின்றார்; இவரை நீ அடைவாய்
என்று புகழ்கிறார்.
இவ்வாறு இறைவனாரே புகழ்கின்ற அந்த ஒப்பிலாத அடியவர்தம் புகழைப் பாடும் வல்லமையை இறைவனே தந்தருள வேண்டும் என்று உளமார வேண்டுகிறார். அப்போது புற்றிடம் கொண்ட பெருமானார், ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என்ற முதல் அடியை எடுத்துக் கொடுக்க நம்பியாரூரரும்,
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
என்ற பாடலில் தொடங்கி பதினொரு பாடல்களில் குறிக்கப்பெற்ற 60 அடியார்களைப் பற்றியும், மூன்று தொகையடியார்கள் பற்றியும் பாடி அருள்கிறார். இதற்குத் திருத்தொண்டத் தொகை என்ற பெயராகும். அடுத்து நம்பி ஆரூரர் பாடிய முதல் அடி, முதல் அடியார் திருநீலகண்ட நாயனார் ஆவார். இறைவன் தில்லைவாழ் அந்தணர் என்று முதல் அடி எடுத்துக் கொடுத்தமையால் தில்லையில் தோன்றிய அடியவர் திருநீலகண்டரை முதலில் கூறுகிறார்.
2. திருநீலகண்ட நாயனார் புராணம்

தில்லைநகர் லேட்கோவர் தூர்த்த ராகி
தீண்டிலெமைத் திருநீல கண்ட மென்று
சொல்லுமனை யாடனையே யன்றி மற்றுந்
துடியிடையா ரிடையின்பந் துறந்து மூத்தங
கெல்லையிலோ டிறைவைத்து மாற்றி நாங்க
ளெடுத்திலமென் றியம்புமென விழிந்து பொய்கை
மெல்லியலா ளுடன்மூழ்கி யிளமை யெய்தி
விளங்குபுலீச் சரத்தானை மேவினாரே.
அடிக்கடி ‘திருநீலகண்டம், திருநீலகண்டம்’ என்று கூறிக்கொண்டிருந்ததால் மக்கள் இந்த நாயனார் பெருமானாரை திருநீலகண்டர் என்றே அழைத்தனர். திருநீலகண்டம் எதைக்குறிக்கிறது என்றால், அனைவரும் திருப்பாற்கடலினின்றும் எழுந்த ஆலகால விடத்தைக் கண்டு அஞ்சி ஓடியபோது அதனைத் தான் உண்ட சிவபெருமானாரின் கண்டம் கறுத்ததால் அன்பர்கள் திருநீலகண்டம் என்று போற்றினர். பிறர் துன்பத்தை ஏற்றுக்கொண்டு இன்பத்தைப் பிறர்க்குக் கொடு என்பதே இதன் குறியீடு.
எதையும் துறத்தல் எளிது என்றாலும் இளமையிலேயே கொண்ட கொள்கைக்காகத் தியாகம் செய்த திருநீலகண்டர் புராணம் பற்றி முதலில் கூறப்பட்டுள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். சிதம்பரத்தில் குயவர் குலத்தில் தோன்றிய இவர் தம் வாழ்க்கையில் பொய் சொல்லல் என்பதே சிறிதுமின்றித் தரும நெறியில் வாழ்கின்றவர். இல்லறமே நல்லறமாகவும், சிவ பக்தியில் சிறந்தவருமாக வாழ்ந்து வந்த தொண்டர் இவர். தம் மரபுத்தொழிலான மட்கலங்களை வனைந்து விற்றுப் பிழைத்தும், திருவோடுகளைச் சிவனடியார்களுக்குக் கொடுத்தும் வாழ்ந்து வந்தாலும் விதிவசத்தால் அவர் வாழ்க்கையில் நடந்த அந்தச் சம்பவம் அவரை பக்குவப்படுத்தி மேன்மை நிலைக்கு உயர்த்தியுள்ளது.
ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பார் புத்தர் பெருமான். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என மக்கள் ஆசையால் துன்பக் கடலில் வீழ்கின்றனர். ஆசையால் வரும் துன்பங்கள் யாவும் ஆசை அறுக்க ஆனந்தமாகும் என்கிறார் திருமூலர். பெண்ணாசையைப் போன்றல்லாது மற்ற ஆசைகள் அறிஞர் பெருமக்களின் அறவுரைகளால் கட்டுக்குள் இருந்தாலும், சில நேரங்களில் பெண்ணாசையோ, துறவு நிலையில் இருப்பவர்களுக்கும்கூட எளிதாக நீங்கி விடுவதில்லை. உயிர்க்குலம் தோன்றியபோதே தோன்றியது இப்பெண்ணாசை. அதனைத் துறத்தல் எளிதன்று என்றாலும் அந்த ஆசையையே திருநீலகண்டம் என்ற இறைவனின் திருநாமத்திற்காக தம் இளமையையும் துறந்தவர் இந்நாயனார். தெய்வ நலமே ஆகச்சிறந்த நலம் என்று கருதி வாழ்ந்தவர். இல்லறத்தையும் செம்மையாகவே நடத்தி வாழ்ந்தார். அச்சமயத்தில்தான் நாயனார் வாழ்வில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அச்சம்பவத்தால் அமைதியான அவர் வாழ்வில் புயல் வீச ஆரம்பித்தது.
ஒருநாள் அவர் அவ்வூரில் ஒரு பரத்தையிடம் மையல் கொண்டு அவளிடம் சென்று வீட்டுக்குத் திரும்ப, கற்பிலே சிறந்த அவர் மனைவியார் அதை அறிந்து கடுங்கோபமுற்றார். சேக்கிழார் பெருமான் அந்த அம்மையாரைப் பற்றி குறிப்பிடும்போது, ‘அவர் தம் கண் மனைவியாரும் அருந்ததிக் கற்பின் மிக்கார்’ என்றும், திருமகளைப் போன்று பேரழகுப் பெட்டகம் என்றும் குறிக்கும் வகையில்,
ஆன தம் கேள்வர் அங்கு ஓர் பரத்தை பால் அணைந்து நண்ண
மானமும் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை
ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்;
தேன் அலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார்.
என்று பாடுகிறார். இத்துணை அழகும், சிறந்த பண்பும் இருக்கும் மனைவியை விடுத்து ஒரு பரத்தை வீட்டிற்குச் சென்று திரும்பும் ஒருவர் எங்கனம் நாயன்மார்களின் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார் என்ற ஐயம் நம்மைப்போன்ற எளியோருக்குத் தோன்றுவது இயல்புதானே?
அவமானத்திற்குரிய இச்செயலை செய்துவிட்டு வந்து நிற்கும் கணவனின் மீது மாளாதக் கோபம் கொண்டார் அம்மையார். நாளுக்கு நாள் பிரச்சனை நீண்டு கொண்டு வருகிறது. ஆனாலும் இல்வாழ்க்கைக்குரிய தன்னுடைய அத்தனைக் கடமைகளையும் தடையற நிறைவேற்றிக் கொண்டிருந்தார். ஆனாலும் கணவனை மன்னிக்கவோ, அவரைத் தம்மை நெருங்கவோ அனுமதிக்கவோ தயாராக இல்லை அவர். இப்பிரச்சனையை எப்படியும் முடிவுக்குக் கொண்டுவர முயன்றார் திருநீலகண்டர். ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் தாங்கள் இருவர் மட்டும் இருக்கும் ஒரு தனிமையானப் பொழுதில் தம் மனைவியாரைப் பல வகையிலும் சமாதானம் செய்ய முயன்றார். அம்மையாரின் கோபம் சற்றேனும் தணிந்தபாடில்லை. ஆனாலும் அவர் கட்டிய மனைவிதானே என்ற உரிமையை எடுத்துக்கொண்டு அவர் அருகில் சென்று அவரை அணைக்க முற்படுகிறார். அதுவரை அமைதி காத்த அம்மையார் கோபத்தின் உச்சம் சென்று, ‘தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம்’ என்றார். சேக்கிழார் பெருமானின் கவிதையில்,
மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று
பூண் தயங்கு இளமென் சாயல் பொன் கொடி அனையார் தம்மை
வேண்டுவ இரந்து கூறி மெய் உற அணையும் போதில்,
‘தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம்’ என்றார்.
தம்முயிரினும் மேலாகக் கருதித் தாம் போற்றும் திருநீலகண்டத்தின் மீது ஆணை என்ற தம் மனைவியாரின் வார்த்தைகளைக் கேட்டவர் அதிர்ச்சியில் உறைந்து நின்றார். அதனை விளக்கும் சேக்கிழார் பெருமான்,
ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி்
ஏதிலார் போல நோக்கி, ‘எம்மை என்றதனால் மற்றை
மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன்’ என்றார்.
பரமசிவனுடைய திருநீலகண்டத்தில் தாம் வைத்த அந்த அதீத பக்தி குன்றாவண்ணம் மனைவியாரைத் தொடாமல் நீங்கி விலகி நிற்கிறார். அதற்கும் மேலாக அவர் ‘எம்மை’ என்று பன்மையாகச் சொன்னதனால் திரு நீலகண்டர் தம் மனைவியை மட்டுமில்லாமல் ஏனைய மற்றப் பெண்களையும் தான் மனத்தினாலும் நினைத்தலும் செய்வேனல்லேன் எனும் உறுதி பூண்டார். அதனைச் சிரமேற்கொண்டு காக்கவும் செய்தார். இதன் காரணம்கொண்டே சேக்கிழார் பெருமான் அதுகாறும் இல்லாத வகையில் அவரை, ‘பெரியவர்’ என்று விளித்துப் போற்றுகிறார்.
இளமைப்பருவத்திலும் இருவரும் அவ்வாணையைப் பேணிக் கொண்டு தனித்தனியே வாழ்ந்துகொண்டு பல ஆண்டுகள் கடந்து அவர்களின் யெளவனம் நீங்கி, முதுமையும் நெருங்கியபோதும் அவர்கள் சத்திய வாழ்வையே மேற்கொண்டிருந்தனர். தளர்வொடு சாய்ந்தும் உற்றும் சிவபக்தி சிறிதும் குறையாதவர்களாகி இருந்தார்கள். இப்பெருமக்களின் சத்திய வாழ்வினை உலகறிய முடிவு செய்த கூத்தபிரான் தில்லையில் கூத்தாடுபவன் என்றாலும் அடியவர்களின் இல்லந்தோறும் சென்று அவர்தம் செவ்விய வாழ்வின் திறத்தை எடுத்துக்காட்ட அடியவர் உருவில் இல்லம் நோக்கி வருபவர் அன்றோ. வந்தவரை வணங்கி எதிர்கொண்டு வீட்டினுள்ளே அழைத்துச் சென்று ஆசனத்தில் இருத்தி, ஆகம விதிப்படி அன்பினோடு பூசைசெய்து, தாம் செய்ய வேண்டிய பணி யாது என்று பணிவன்புடன் கேட்க, அவரும் “தனக்கு வேறொப்பில்லாததும், தன்னிடத்திலே சேர்ந்த பொருள்களெல்லாவற்றையும் சுத்தி செய்வதும், பொன்னிலும் இரத்தினத்திலும் செய்தவொன்றைக் காட்டிலும் சிறப்பாகக் காப்பாற்றப்படத்தக்கதுமாகிய ஒன்று என்று கூறி ஒரு திருவோட்டை அளித்து, அதைப் பாதுகாப்பாக வைத்திருந்து தாம் கேட்கும்போது தர வேண்டும் என்கிறார். அதைக் கேட்ட அடியவர் அவரை வணங்கிவிட்டு அவ்வோட்டை வாங்கிக்கொண்டு, வீட்டினுள் ஒரு பக்கத்தில் சேமித்து வைத்துவிட்டு திரும்பி வந்து அவரிடத்தில் விடைபெற்றுத் திரும்பினார்.
நெடுநாட்கள் கழிந்தபின், ஒருநாள் மீண்டும் திரும்பி வந்த அந்த சிவனடியார் நீலகண்டரிடம் கொடுத்த அந்த திருவோட்டைக் கேட்டு உடனே அதை எடுத்து வந்து கொடுக்கும்படியும் பணித்தார். நீலகண்டரும் அதை வைத்த இடத்திற்குச் சென்று தேடியவர் அதைக் காணாமல் திரும்ப வந்து சிவனடியாருக்கு என்ன விடையளிப்பது என்று தெரியாமல் தடுமாறி நிற்கின்றார்.
சிவனடியாரோ உள்ளே நின்ற அடியார் கேட்கும்படி, “நொடிப் பொழுதில் வருவேன் என்று போன நீ ஏன் இவ்வளவு நேரம் கடந்தும் வாராமல் நிற்கின்றாய்” என்று கேட்கிறார். நீலகண்டர் வந்து சிவனடியாரை வணங்கி, அடியார் பெருமகனார் அளித்த அந்தத் திருவோட்டை வைத்த இடத்திலும் பிறவிடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை. பழையதாகிய அந்தத் திருவோட்டை விட புதிதாக வேறொரு திருவோடு தருவேன், அதை ஏற்றுக்கொண்டு அடியேன் செய்த பிழையைப் பொறுத்தருளல் வேண்டும் என்றும் பணிந்து வணங்கி சொல்லிப் பிரார்த்தித்து நின்றார். உடனே சிவனடியாரும் அவரைக் கோபத்துடன் பார்த்து, தனது மண்ணோட்டையேயன்றிப் பொன்னோட்டைத் தந்தாலும் வாங்க மாட்டேன் என்றும் தான் முன்னர் அவரிடத்தில் தந்த அந்த மண் ஓட்டையே கொண்டுவந்து தரவேண்டும் என்று திருவாய் மலர்ந்தருளினார்.
நீலகண்டரும் அடியவரிடம், அவர் அளித்த அந்த மண்ணோட்டை எங்கு தேடியும் காணவில்லை, வேறு நல்ல ஓடு தருகிறேன் என்று மன்றாடிக் கேட்டும் உடன்பட மறுத்தால் தான் என்ன செய்ய இயலும் என்று கலங்கி நிற்கிறார்.
ஆனால் அந்த சிவனடியாரோ சட்டென்று, அவரிடத்தில் கொடுத்த அந்த அடைக்கலப் பொருளைத் தாம் கவர்ந்துகொண்டு பாவத்துக்குச் சிறிதும் அஞ்சாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவும், தன்னுடைய ஓட்டை திரும்பப் பெறாமல் அந்த இடத்தை விட்டு அகலமாட்டேன் என்றும் உறுதியாக நிற்கிறார்.
நீலகண்டரும் அடியவரின் பாதம் பணிந்து, எத்தனை முறை சொன்னாலும் நம்ப மறுத்தால் தன்னால் என்ன செய்ய முடியும். வேறு எப்படி தான் களவாடவில்லை என்பதை அவருக்குப் புரியவைப்பது என்று தெரியவில்லையே என்று நொந்து போனார்.
அப்போது அந்த சிவனடியாரும், நீலகண்டரிடம் அவருடைய அருமைப் புதல்வனை வைத்து குளத்தில் மூழ்கி தான் களவாடவில்லை என்று சத்தியம் செய்தால் ஒப்புக்கொள்கிறேன் என்கிறார். அதற்கும் நீலகண்டர் தனக்கு புத்திரன் எவரும் இல்லையே என்று கூறி வருந்துகிறார். அப்படியானால் தன் மனைவியைக் கைப்பிடித்து முழுகிச் சத்தியம் பண்ணித்தரச் சொல்லிக் கேட்கிறார் அந்த சிவனடியார். அப்போது நீலகண்டர், தானும் தன் மனைவியும் தங்களுக்குள்ளிருக்கும் ஓர் சபதத்தினாலே ஒருங்கு முழுகுதல் கூடாது என்பதால் தான் மட்டும் குளத்தில் முழுகிச் சத்தியம் பண்ணித் தருவதாகக் கூறுகிறார். அதற்குச் சிவனடியாரும், தான் முன்னே தந்த ஓட்டைத் தராமலும், அதைக் கவர்ந்துகொள்ளவில்லையெனின் தன் மனைவியைக் கைப்பிடித்துச் சத்தியம் செய்து தராமலும், மனம் வேதனைப்படச் செய்திருப்பதால் தில்லைவாழந்தணர்கள் கூடியிருக்கும் பெரிய சபையில் இவ்விசயத்தைக் குறித்துப் பேசப் போவதாகச் சொல்லி அவரையும் உடன் வரப்பணிக்கிறார். அந்தச் சபைக்குச் செல்ல ஒப்புக்கொண்டு திருநீலகண்ட நாயனாரும் அவருக்குப் பின்னே செல்கிறார்.
சிவனடியார் அந்தப் பிராமணர்களைப் பார்த்து, “இந்தக் குயவன் தன்னிடத்திலே நான் வைத்திருக்கும்படி கொடுத்த ஓட்டைத் தரவும் இல்லை. அதனை இழந்திருப்பின், தன் மனைவியைக் கைப்பிடித்துக் குளத்திலே முழுகிச் சத்தியம் பண்ணித் தரவுமில்லை” என்றார். உடனே பிராமணர்கள் திருநீலகண்டரிடம் நடந்த சமாசாரத்தை சொல்லச் சொல்லிக் கேட்கிறார்கள். அவரும் சிவனடியார் தந்த திருவோடு தான் வைத்த இடத்தினின்றும் மறைந்து போய்விட்டது என்றும் தான் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை என்றார். அதற்குப் பிராமணர்கள், “ஒரு வேளை இவர் தந்த ஓட்டை நீர் இழந்தீராகில், இவர் கேள்விப்படி உம்முடைய மனைவியைக் கைப்பிடித்துக் குளத்தில் முழுகிச் சத்தியம் செய்து கொடுத்தலே நீதி” என்றார்கள்.
நீலகண்டரும் அதைக்கேட்டு, தாம் தம் மனைவியாரைத் தீண்டாதிருத்தலைக் குறித்துப் பேச முடியாதவராகி, அவர் கேட்பதற்குத் தகுந்தபடி குளத்தில் முழுகிச் சத்தியம் செய்து தரும்படிச் சொல்லி, சிவனடியாரோடு தம்முடைய வீட்டுக்குச் சென்று, மனைவியாரையும் அழைத்துக்கொண்டு, திருப்புலீச்சரத்துக்கு முன்னிருக்கிற திருக்குளத்திற்குச் சென்றவர், ஒரு மூங்கிற்தண்டை எடுத்து ஒருபுறத்தில் மனைவியார் பிடிக்க, மறுப்புறத்தில் தாம் பிடித்துக்கொண்டு இறங்கினார். அதைக் கண்ட சிவனடியாரும், “உன் மனைவியைக் கைப்பிடித்துக்கொண்டு மூழ்கு” என்று பணிக்க, திருநீலகண்ட நாயனார் அப்படிச் செய்யக் கூடாமையை உலகத்தார் அறியும்படி, முன்னாளில் தாம் தவறான பரத்தையிடம் சென்றதையும், அதனால் உண்டாகிய சபதமும் அதன்படி தவறாமல் நடந்து வருதலும் தெளிவாகச் சொல்லி முழுகினார்.
‘மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லேன்’ என்பார் பட்டினத்தார். அடியவர் மனத்திலிருந்த மாசினை நீக்க இறைவன் அதனை உலகறியச் செய்ய அனைத்தையும் சொல்ல வைத்து ஆட்கொண்டருளினார்.
அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. முழுகிக் கரையிலேறிய திருநீலகண்ட நாயனாரும் அவருடைய மனைவியாரும் மூப்புப்பருவம் முற்றாக நீங்கி இளைமைப் பொலிவோடும், அழகோடும் எழுந்தார்கள். தேவர்களும் முனிவர்களும் அவர்கள்மீது ஆகாயத்தினின்றும் பூமாரிப் பொழிந்து அவரது பெருமையை உணரச் செய்தார்கள். எம்பெருமான் பிராட்டியாரோடு விடையின்மேல் தோன்றி என்றும் இவ்விளமை நீங்காது எம்மோடு சிவலோகத்தில் இனிது இருப்பீராக என்று கூறியருளினர். பக்தி வலிமையையுடைய திருநீலகண்ட நாயனாரும் மனைவியாரும் யாவராலும் செய்தற்கரிய பெருஞ்செய்கையைச் செய்து சிவலோகத்தை அடைந்து பேரின்பத்தை அனுபவித்து வாழ்ந்திருந்தார்கள்.
திருச்சிற்றம்பலம்
திருநீலகண்ட நாயனார் புராணம் சொல்லும் கருத்து
கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரிதானதொன்று அல்ல. அது ஆண், பெண் என இரு பாலருக்கும் சமமான ஒன்று என்பதை தெளிவுற விளக்கும் புராணம் என்றே கொள்ள முடிகிறது. அந்தக் கற்பை கேள்விக்குறியாக்குவதே காமம் என்பதாம். அதாவது காமம் என்பது பிறவிப் பிணியைத் தீர்த்து இறைவனை அடைவதற்குத் தடையாக உள்ள ஒன்று. அக்காமமே கொலை, களவு, கள்ளுண்ணல் முதலிய பல்வேறு பாவங்களுக்கெல்லாம் அடித்தளமாக அமைவதோடு, எத்துணை நுண்ணறிவாளருடைய அறிவையும் கெடுக்கும் இயல்புடையது. அக்காமமே ஆன்மாக்களை நரகங்களில் எண்ணிறந்த காலம் வீழ்த்தி, வருத்தும் பெருங்கொடுமையை உடையது. மேலிடம், பொழுது, குணம், குலம், ஒழுக்கம் போன்றனைத்தும் குன்றுதலையும், பழியும் பாவமும் விளைதலையும் சிறிதும் சிந்திக்க விடாது. பல நேரங்களில் கல்வியறிவொழுக்கங்களால் ஆன்ற பெரியோர்களுடைய உள்ளத்தினில் தலைப்படினும், அவ்வுள்ளம் இடம், பொருள், ஏவல் என எதையும் ஆராய விடாமல் செய்துவிடுகிறது. அந்த வகையில் தெய்வ நலமே சிறந்த நலம் என்றும் இல்லறத்தில் இனிதே வாழும் இயல்புடைய இத்திருநீலகண்ட நாயனார், அழகிற் சிறந்த தம்முடைய மனைவி இருப்பவும் தம் மனத்தினில் தலைப்பட்ட காம மிகுதியினால் பரத்தையைச் சேர்ந்தார். மனைவியார் கொண்ட ஊடலைத் தீர்க்கும் பொருட்டு, அவரைச் சமாதானம் செய்ய முயன்றபொழுது அவர், “நீர் எம்மைத் தீண்டுவீராயில் திருநீலகண்டம்” என்று சிவனைச் சுட்டி ஆணையிட்டதைக் கேட்ட உடனே அவரைத் தீண்டாமல் நீங்கி விடுகிறார். அதுமட்டுமின்றி அம்மையார் தன்னை மற்றும் ஒருமையில் சொல்லாமல், ‘எம்மை’ என்று பன்மையாகச் சொன்னதனால் தம் மனைவியாகிய இவரை மட்டுமல்லாமல் மற்றைய பெண்களையும் மனத்தினாலும் நினைத்தலும் செய்யேன் என்று உறுதி கொள்கிறார். அந்த வகையில் நீலகண்டருடைய மனதில் காமம் தலைப்பட்டபோதும் சிவபக்தி அதனினும் அதிகமாகத் தலைப்பட்டிருந்த காரணத்தால் அவருடைய சிவபக்தியானது பின் ஒருபோதும் இவர் மனதில் காமம் சிறிதாயினும் எழவொட்டாமல் தடுத்தாண்டுகொண்டதும் ஈண்டு உணரத்தக்கது.
இந்திரன் அகலிகை மீதும், சந்திரன் தாரையைக் கண்டும் மையல் கொண்டனர். மாபெரும் முனிவர் விசுவாமித்திரர் மேனகையிடம் மோகம் கொண்டார். ஆனால் திருநீலகண்டரோ கட்டிய மனைவியை உடன் வைத்தும் பெண்ணாசையைத் துறந்தார்.
காமம் என்ற ஒன்று மனதில் சிறிதளவேனும் எழவிடாமல் அடக்கல் வேண்டும் என்பர் பெரியோர். அங்கனம் சிறிது எழுந்தாலும் சிவனடியாரோடு கலத்தல், சிவசாத்திரம் பற்றிச் சிந்தித்தல், சிவநாமம் கேட்டல் போன்ற நற்செய்கைகளால் அதுபற்றிய சிந்தையே எழாவண்ணம் மனத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்தல் சாத்தியமாகும் என்பது உணரத்தக்கது.
அம்பு மழலு மவிர்கதிர் ஞாயிறும்
வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்-வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலாற் காம
மவற்றினு மஞ்சப் படும்.
என்கிறது நாலடியார்.
திருச்சிற்றம்பலம்.
தொடருவோம்
