ஹிட்லர் பாணியில் உறுதிமொழியா?
அண்ணாகண்ணன்
வலது கையை முன்னே நீட்டி உறுதிமொழி எடுப்பது, ஹிட்லரின் பாணி. நாஜிக்கள், வாழ்க ஹிட்லர் என்று கூறியபடி, இதே போல் வலது கையை நீட்டி வணங்கினார்கள். ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவேகியா போன்ற நாடுகளில் இவ்வாறு வணங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகளில் இது வெறுப்புணர்வைத் தூண்டும் செயலாகக் கருதப்படுகிறது.
தமிழ்கூறு நல்லுலகில் ஹிட்லரின் தாக்கம் ஆழமானது. துரை வைகோவின் முட்டிப் பட்டை, மிக அண்மைக் காலச் சான்று. ஹிட்லர் பாணியில் சீமானும் நாம் தமிழர்களும் உறுதிமொழி எடுப்பது, ஹிட்லரின் தாக்கத்தை உறுதிப்படுத்துகிறது. ஹிட்லர் பேசுவது போலவே வீராவேசமாகச் சீமான் பேசுவதும் தற்செயலானது இல்லை. வைகோவும் இவ்வாறு உறுதிமொழி ஏற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட எல்லா நிலைகளிலும் இவ்வாறு உறுதிமொழி எடுக்கின்றனர். பள்ளி நிகழ்ச்சிகளிலும் இதைச் சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது.
இவ்வாறு கைநீட்டி உறுதி ஏற்பதன் வரலாற்றுப் பின்னணி, பலருக்கும் தெரியாது. இலட்சக்கணக்கான நாஜிக்கள், இவ்வாறு ஹிட்லரை வணங்கினார்கள். தங்கள் பகைவர்களை ஈவு இரக்கமின்றிக் கொன்றார்கள். 60 லட்சம் யூதர்களையும் யூதர் அல்லாத மேலும் 60 லட்சம் பேரையும் நாஜிக்கள் கொன்றுள்ளார்கள். சுமார் ஒன்றே கால் கோடிப் பேரைக் கொன்ற கொடுங்கோல் ஆட்சித் தலைவரைப் போற்றும் ஒரு குறியீடு இது.
இந்தப் பின்னணி குறித்து இன்று பலரும் மறந்துவிட்டார்கள். உறுதிமொழி என்றாலே இப்படித்தான் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு இது வந்துவிட்டது. நமது மரபுக்கு ஏற்ற வகையிலான சைகையை, உடல்மொழியை நாம் பின்பற்ற வேண்டும். நாம் சத்தியம் செய்யும்போது, கையடித்துச் சத்தியம் செய்வோம். ஆனால், இவ்வாறு கைநீட்டிச் செய்வதில்லை. ஒரு கையை நெஞ்சருகில் வைத்து, இன்னொரு கையை அதன் மேல் வைத்து, சத்தியம் செய்வது போன்று உறுதிமொழி ஏற்பது நம் மரபுக்கு, வழக்கத்திற்கும் ஏற்றது. அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் கல்வியாளர்களும் இதைப் பரிசீலித்துத் தகுந்த வழிகாட்ட வேண்டும்.
