Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • ஜாலியன்வாலா பாக்: இங்கிலாந்தே, மன்னிப்பு கேள்!

    இன்னம்பூரான்

    திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [5]

    டி.எம். கிருஷ்ணமாச்சாரியார் என்ற வரலாற்றுப் பேராசிரியர், என்னுடைய மாமனார். மணிக் கணக்காக நாங்கள் அளவளாவுவோம். அவர் ஜாலியன்வாலா பாக் குருதிப் புனல் காலத்துச் செய்திகளை அப்போதே அறிந்தவர். அவர் அது பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது, என் மனத்தில் எழுந்த பிரவாஹத்தை, பல நாட்களுக்கு முன் பகிர்ந்துகொண்டேன். அது மனத்தில் உதித்தது, இன்றும்.

    “குமரு! வரலாறே ஒரு அகண்ட நதிப்பிரவாஹம் அன்றோ! ஊற்றுகளும் உப நதிகளும் கிளை நதிகளும் காட்டாறுகளும் நீரோடைகளும் நீர் வீழ்ச்சிகளும் கால்வாய்களும் வாய்க்கால்களும் புடை சூழத்தானே, கங்கா மாதா கங்கோத்ரியில் ஜனித்து, தேவ ப்ரயாக், ருத்ர ப்ரயாக் என்றெல்லாம், பேதையாக விளையாடி, பெதும்பையாக குதூகலித்து, மடந்தையாக மகிழ்ந்து, அரிவையாக மகிழ்வித்து, தெரிவையாக தேறி, பேரிளம்பெண்ணாக உம்மையெல்லாம் இன்ப சாகரத்தில் குளிப்பாட்டி, ரிஷிகேசத்தின் உள்ளே புகுந்து, ஹரித்துவாரத்தில் தலையெடுத்து, காசி க்ஷேத்ரத்தில், உமது அழுக்கையும் சுமந்து, பிரயாகையில் யமுனையின் நீலநிற நீரில் அதைக் கழுவி, சரஸ்வதியின் பவித்ரத்தை அணிந்துகொண்டு, ஹூக்ளியாற்றின் நீரால் கொல்கத்தா வீதிகளை அலம்பி, சாகரத்தில் ஐக்கியமானதை மறந்தாயோ? அல்லது, காவேரி வழி நடந்ததை மறந்தாயோ? அதற்குத்தானே, உன்னை அங்கெல்லாம் அனுப்பிவைத்தேன்…”

    நூற்றாண்டின் சில தினங்கள், சோக தினங்களாக அமையும். எந்த வரலாறும் அவற்றைப் புறக்கணிக்க முடியாது. திரு.வி.க. அவர்கள் தேசபக்தர். காந்தீயவாதி. காந்திஜி சத்யாக்ரஹம் தொடங்கியதை அடுத்து, நன்நிமித்தங்களும் நடந்தன. சம்பந்தமில்லாத தீநிமித்தங்களும் பேயாட்டம் ஆடின. அதைத்தான் ‘ஒரு பேய்ப்பழம்’ என்று இரண்டாவது பகுதியில் கூறினேன். கலோனிய அரசின் அகம்பாவ ஆதிக்கத்தால் கண கண என்றிருந்த கனல், வேள்வித் தீயாகப் பரிமளித்து, குருதிப் புனலாக அமைந்துவிட்ட தினத்தின் நூற்றாண்டு தினம் இன்று.

    நீதி மன்றத்தைப் புறக்கணித்து, மக்களில் சிலரைச் சிறையில் அடைக்க வசதியாக, வெள்ளைய அரசு ரெளலட் சட்டம் 1919 என்பதை, மார்ச் 10, 1919 அன்று இயற்றியது. மக்கள் கொதித்தெழுந்தாலும், பஞ்சாபின் ‘அமுதக்கேணி’ எனப்படும் அமிருதசரசில் டாக்டர் ஸைஃபுதீன் கிச்சலு, டாகடர் சத்யபால் என்ற இருவரையும் அரசு உளவுத்துறை கண்காணித்து வந்தனர். ஏப்ரல் 6, 1919 அன்றிலிருந்தே, அமிருதசரஸ், கொந்தளிப்பில், மார்ச் மாதம் அந்தச் சட்டத்தை அமலில் கொண்டு வர முஸ்தீபுகள் நடந்த போது. அன்று ஒரு ஹர்த்தால். சில வன்முறைச் சம்பவங்கள். வஞ்சகமாக, முனைவர் சைஃபுதீன் கிச்லூவும், டாக்டர் சத்யபாலும் கைது செய்யப்பட்டு தர்மசாலாவுக்குக் கடத்தப்பட்டனர்.

    [டாக்டர் சைஃபுதீன் கிச்லூ 65 வருடங்களுக்கு முன்னால் சென்னை வந்திருந்தார். வரலாற்றில் பதிவு பெற்ற மனிதரென அவரைப் பார்க்க சென்றிருந்தோம். அவர் பேசியது எல்லாம் நினைவில் இல்லை. ஆனால், தள்ளாத வயதில், மேஜையை ஓங்கிக் குத்திய வண்ணம், அவர் ஆவேசமாகப் பேசியது மட்டும் மறக்கவில்லை. 1947இல் இந்தியாவின் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்த ஒரே காங்கிரஸ்காரர், இவர் தான். அந்தக் கட்சியின் வரலாற்றுக்கிணங்க வெளியேறிய சான்றோர்களில், அவரும் ஒருவர். பிற்காலம், கம்யூனிஸ்ட் ஆகிவிட்டார்]

    போலீஸார் கெடிபிடி ஓங்கியது. கவர்னர் போர்க்கால கட்டுப்பாடுகளை பிரகடனம் செய்தார். பக்கத்திலிருந்த ஜலந்தரிலிருந்து வந்து சேர்ந்த பிரிகேடியர்- ஜெனரல் டையர் தடியெடுத்தான், ஏப்ரல் 12ஆம் தேதி. கூட்டம் சேர்ந்தால், சுடுவேன் என்றான். சொல்லப் போனால், கலோனிய அரசு அன்று ஆளுமையை இழந்துவிட்டதாக அஞ்சியது. அதனால் அவசர நடவடிக்கை. போர்க்கோலம். தொடை நடுக்கம். தாரதம்யம் இல்லாத தடை உத்தரவுகள். இது எல்லாம், ‘விநாச காலே விபரீத புத்தியின்’ முதல் பகுதி.

    ஏப்ரல் 13, பைஷாகி பண்டிகை. வருஷப் பிறப்பு, குரு கோவிந்த் சிங் அவர்களின் ஞாபகார்த்தமாக ஆயிரக்கணக்கான மக்கள், ஜாலியன்வாலா பாக்கில், தடையுத்தரவை மீறி. ஆதவன் அஸ்தமிக்கும் வேளை. மாலை ஐந்து மணி. அந்த கடங்காரன், கூர்க்கா கூலிப் பட்டாளத்துடன், அந்த நந்தவனத்தின் ஒரே குறுகலான நுழைவாயிலை அடைத்துக்கொண்டு, மாலை 5.50-இலிருந்து ஆறு நிமிடங்களுக்கு பீரங்கிகளிலிருந்து, மக்கள் அடர்த்தியாக இருந்தவிடமெல்லாம் சுட்டுத் தள்ளினான். தாங்க முடியாமல், அங்கிருந்த கிணற்றில் குதித்து மாண்டவர்கள், 120 பேர். சிலகாலம் முன்பு பாபு சிங்காரா சிங், 87 அந்த குருதிப்புனலை நினைவு கூர்ந்தார். கூட்டத்தை நோக்கி, ராணுவத்தை அணி வகுத்து டையர் என்ற பேய்பிடித்த ராணுவ அதிகாரி, குறி வைத்துச் சுட்டதில் சாம்பலானவர்கள்: ஒரு கைக்குழந்தை, 41 சிறார்கள், 337 மனிதர்கள். இது அரசின் கணிப்பு. ஆயிரம் மக்கள் மாண்டதாக, மற்ற ஆய்வுகள் மூலம் அறிகிறோம்.

    இந்த ஆங்கிலேயர்களுக்கு சொல் மாற்றம், கைப்பழக்கம். சில நாட்கள் முன்னால் இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே, இந்தக் குருதிப் புனலுக்கு வருத்தம் தெரிவித்தார். ஆனால் மன்னிப்பு கேட்கத் தயாரில்லை. இத்தனைக்கும் எதிர்க்கட்சி தலைவர், மன்னிப்பு கேட்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். 2019ஆம் வருடம், ஆங்கிலேய அரசின் விந்தையான அணுகுமுறை இது.

    நூறு வருடங்களுக்கு முன் சர்ச்சில் என்ன சொன்னார் என்பதை அடுத்த தொடரில் பார்த்து விட்டு, திரு.வி.க. பக்கம் திரும்புவோமாக.

    Pic Courtesy: Wikipedia

    Share
  • குடும்பம் என்றாலே குழப்பம்தான்!

    – நிர்மலா ராகவன்

    (நலம், நலமறிய ஆவல் – 155)     

    ஒவ்வொரு குடும்பத்திலும் செய்யக்கூடியவை, கூடாதவை என்று எழுதப்படாத சில விதிமுறைகள் இருக்கும். தாய், தந்தை இருவருமே அவைகளை ஏற்காதபோது குழப்பம் வருகிறது.

    கதை

    வனமாலா விளையாட்டுகளில் விருப்பமும் திறமையும் கொண்டவள். அவளுடைய தந்தையோ, மகளின் நேரம் அதனால் விரயமாகிறது, அந்த ஆர்வத்தையும், பொழுதையும் படிப்பில் செலுத்தினால் வாழ்வில் நன்றாக முன்னேறலாமே என்று எண்ணினார். அதன் விளைவாக, பள்ளிக்கூடத்தில் அவள் எந்த விளையாட்டுப்போட்டியிலும் கலந்துகொள்ளக்கூடாது என்று தடை விதித்தார். அவளோ பள்ளியின் பிரதிநிதி!

    மகளுடைய மனம் தாய்க்குப் புரிந்தது. அவள் சிறுமியாக இருந்தபோது எத்தனை இடர்களைச் சமாளிக்கமுடியாது திணறியிருப்பாள்!

    “நீ சேர்ந்துகொள்! அப்பாவிடம் நான் சொல்லிக்கொள்கிறேன்!” என்று மகளுக்கு பச்சைக்கொடி காட்டினாள்.

    அவர்கள் எதிர்பார்த்தபடி தந்தை அதை யதார்த்தமாக எடுத்துக்கொள்ளவில்லை. தன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தன்னையே எதிர்த்து ஒரு காரியம் செய்வதாவது!

    “உனக்கு நான் சொல்வதற்கு நேர்மாறாக ஏதாவது செய்தாகவேண்டும்!” என்று அவர் கத்த, “யாராவது மகிழ்ச்சியாக இருந்தால் உங்களுக்குப் பிடிக்காதே!” என்று பதிலுக்கு அவளும் குற்றம் சாட்டினாள்.

    கணவனுக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் முற்றியது.

    “நீ சொல்வதுதான் சரியென்று சாதிக்கிறாயே! அதுமட்டும் ஏன் சரியாக இருக்கவேண்டும்?”

    வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்திருக்கும் பெற்றோர் ஒத்துப்போகாது, தமது விருப்பு வெறுப்பை குழந்தைகள்மீது திணித்தால் அனைவருக்குமே சிரமம்தான்.

    நன்கு படித்து, நிறைய பட்டங்கள் வாங்கினால் பெரிய உத்தியோகத்திற்குப் போகலாம் என்று நம்பினார் வனமாலாவின் தந்தை. அதனால் தானும் பெருமைப்பட்டுக்கொள்ள முடியுமே!

    நல்லதாகவே இருந்தாலும், பிடித்ததைச் செய்யக்கூடாது என்று தடை விதித்தால் வருத்தமும் மனக்குழப்பமும் உண்டாகும் என்று தாய்க்குப் புரிந்திருந்தது. அதனால், `அப்பா சொல்வதைக் கேட்டு நட!’ என்று தன் பொறுப்பைத் தட்டிக்கழித்து, மகளுக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை.

    வனமாலாவின் பாடுதான் திண்டாட்டமாக ஆயிற்று. இறுதியில், அப்பாவை எதிர்க்கலாம், அம்மா தனக்கு உறுதுணையாக இருப்பாள் என்று தோன்றிப்போயிற்று.

    தாய் ரகசியமாக மகளிடம் சொன்னாள்: “விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி, படிப்பில் கோட்டைவிட்டுவிடாதே! அப்புறம் நான்தான் அப்பாவுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்!”

    மகளுக்குப் பொறுப்பு வந்தது.

    விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்றாள். ஆனால், தன் மகிழ்ச்சியைத் தந்தையுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றவில்லை. அவர் ஊக்குவித்தாரா, என்ன!

    “என்னிடம் யாரும், எதுவும் சொல்வதில்லை!” என்று முணுமுணுப்பாக வருந்தத்தான் முடிந்தது தந்தைக்கு.

    இந்த மனக்கசப்பை எப்படித் தவிர்த்திருக்கலாம்?

    கணவன் மனைவி இருவரும் தனித்திருக்கும்போது, தம் குழந்தைகளை எப்படி வளர்க்கலாம் என்று கலந்துபேசி, ஒரு முடிவுக்கு வருவது நல்லது. குழந்தைகளின் எதிரில் அவர்கள் வாக்குவாதம் செய்தால், தமக்கு ஏற்ற ஒருவர்புறம் சாய்ந்து, மற்றவரை அலட்சியப்படுத்தத் துணிவார்கள் குழந்தைகள். ஒரு கட்சி ஓங்கியிருக்கும்.

    எதற்காக வளர்ப்பது?

    குழந்தைகளை வளர்ப்பது என்பது அவர்கள் பெரியவர்களானதும் நிறையச் சம்பாதித்து, வயது முதிர்ந்த காலத்தில் நம்மையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்கல்ல. பிறருடன் நன்கு பழகி, தமக்கும் பிறருக்கும் உபயோகமாக இருக்க அவர்களைப் பழக்கவேண்டும்.

    `நீ செய்யும் தவறுகளுக்கு நீதான் பொறுப்பு!’ என்று இரண்டு வயதிலிருந்தே பழக்க இயலும்.

    வயதுக்கேற்ற பொறுப்பு

    குழந்தை காகிதக்குப்பையை குப்பைத்தொட்டிக்குள் போடாமல், அலட்சியமாக எடுத்து வீசுகிறதா?

    “எடுத்து, சரியா உள்ளே போடு!”

    இது அதிகாரமில்லை. எதையும் சரியாகச் செய்யவேண்டும் என்ற பொறுப்புணர்வைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுப்பது.

    வீட்டில் அழ அழச் சொல்லிக்கொடுத்தால், பிறகு நான்கு பேர் அவனைப் பார்த்துச் சிரிக்க மாட்டார்கள். பாராட்டைப் பெறுவான்.

    குழந்தைகளோ, பெற்றோரால் தடை செய்யப்பட்டவைகளை எப்படி மீறலாம் என்பதில்தான் குறியாக இருப்பார்கள்.

    என் மகளுக்கு மூன்று வயதாக இருந்தபோது, எதற்கோ கோபித்தேன்.

    உடனே, “சுபீரா இப்படிச் செஞ்சா பக்கத்தாத்து ஆன்ட்டி திட்டமாட்டா!” என்று எகிறினாள்.

    சுபீராவின் தாயுடைய எதிர்பார்ப்பு வேறு விதமாக இருந்திருக்கலாம்.

    அலட்டிக்கொள்ளாது ,“அப்போ, நீ அங்கேயே போயிடேன்!” என்றேன்.

    பயந்துவிட்டாள். “சும்மா ஜோக் பண்ணினேன்!”

    “ஏன் சும்மாச் சும்மா திட்டறே? ஒனக்கு என்னைப் பிடிக்காது?” இது நான்கு வயதில்.

    “தப்பு பண்ணினா திட்டணும். (அதாவது, கண்டிக்க வேண்டும்). இல்லேன்னா, நீ அசடாப் போயிடுவே!” என்று விளக்கினேன்.

    ஒரு முறை, உறவினர் வீட்டில் சில தினங்கள் கழித்துவிட்டு, “என்னை இனிமே அங்கே அனுப்பாதே. அசடாப்போயிடுவேன். தப்பு பண்ணினா திட்ட மாட்டேங்கறா!” என்றாள்!

    இதுதான் மனித குணம். தவறு செய்கிறோம் என்று தெரிந்தே செய்துவிட்டு, மாட்டிக்கொண்டால் முழிப்பது!

    ஆத்திரமும் குற்ற உணர்ச்சியும்

    என்னுடன் வேலைபார்த்த மஞ்சித் கௌர், “நேற்று எனக்கு ஒரே ஆத்திரம். Go to hell! என்று என் மகளைப் பார்த்துக் கத்திவிட்டேன்!” என்று தெரிவித்தாள்.

    உற்றவரைப் பார்த்து, `நரகத்துக்குப் போ!’ என்று ஆத்திரத்தில் கத்தும்போது, உண்மையில் அப்படி நடந்தால் எப்படித் துடித்துப்போய்விடுவோம் என்று யாரும் நினைத்துப்பார்ப்பதில்லை.

    குற்ற உணர்ச்சி மெதுவாக வருகிறது.

    இதை தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது. பொறுமையை இழக்காமலேயே இருக்க முனிவர்களாலேயே முடியவில்லையே, நாமெல்லாம் எம்மாத்திரம்!

    சற்று நிதானம் பிறந்ததும், `நான் களைப்பாக இருக்கும்போது தொந்தரவு செய்தாய். அதான் அப்படிப் பேசிவிட்டேன்!’ என்று மன்னிப்பு கேட்கும் தோரணையில் பேசினால், நிம்மதியுடன் புன்னகைப்பாள் மகள்.

    மன்னிப்பு கேட்கும் நல்ல பழக்கத்தை இப்படித்தான், நம்மையறியாது, புகுத்திவிட முடிகிறது.

    குழந்தைகளின் எதிர்ப்பு

    தம் மனக்குழப்பத்தை பெற்றோர்தாம் குழந்தைகளிடம் ஏதோ வழியில் காட்டுவார்கள் என்பதில்லை.

    கதை

    தகுந்த பணிப்பெண்கள் கிடைக்காததால், என் மகன் சசி இரண்டு வயதிலேயே பாலர் பள்ளிக்குப் போனான்.

    ஒரு நாள், என்னை முறைத்தபடி, “You so proud!” என்றான். விம்மலில் பிஞ்சு உதடுகள் துடித்தன.

    அதன் அர்த்தம் அவனுக்குத் தெரியுமா என்பதே சந்தேகம். யாரோ அவன் மனதை நோகடித்திருக்கிறார்கள். அதை இப்படி வெளிப்படுத்துகிறான்!

    நான் என் குழந்தைகளை நிறையப் புகழ்ந்து, அதன்மூலம் தன்னம்பிக்கையுடன் செயல்படுமாறு வளர்த்திருந்தேன்.

    அவன்மேல் எந்தத் தவறும் இல்லை என்று எப்படி விளக்குவது?

    “சசியை டீச்சர் நான்சி அப்படிச் சொன்னாளா? டீச்சர் Stupid!“ என்றேன், உறுதியான குரலில். தன் பொறுப்பில் இருக்கும் சிறு குழந்தையின் போக்கைப் புரிந்துகொள்ளாதிருந்த ஆசிரியை முட்டாள்தான்.

    (ஆனால், ஏழு வயதான என் குழந்தைகள் தம் ஆசிரியையை தரக்குறைவாகப் பேசினால் கண்டிப்பேன்: `அம்மாவை யாராவது அப்படிப் பேசினால், ஒங்களுக்கு எப்படி இருக்கும்?’)

    வித்தியாசமான வளர்ப்புமுறை

    சீனர்களின் வளர்ப்புமுறை வித்தியாசமானது. குழந்தைகளை ஓயாது மட்டம் தட்டினால்தான் அடக்கம் வரும் என்று கருதி, திட்டியும், காரணமின்றி பிரம்பால் அடித்தும் வளர்ப்பார்கள்.

    சீனப்பெண் ஆலிஸிடம் அவளுடைய தாய் கேலியாகக் கூறினது: `உன் வகுப்பில் நீ முதலாவதாக வந்தாயா! மற்ற மாணவிகள் எவ்வளவு முட்டாளாக இருக்கவேண்டும்!’

    பெண்ணுக்கு அடக்கம் வரவில்லை. தாயின்மீது வெறுப்புதான் பிறந்தது. பாராட்டவேண்டிய தருணத்தில் குத்தலாகப் பேசினால்?

    `எனக்குக் குழந்தைகளே வேண்டாம். நானும் என் அம்மாவைப்போல்தானே இருப்பேன்!’ என்று உறுதியுடன் இருக்கிறாள்.

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 8.2

    முனைவர் மீனாட்சி பாலகணேஷ்

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 8.2

    (அம்மானைப் பருவம்)

    உலகவியல் தத்துவக் கருத்து ஒன்றை மீனாட்சியம்மை, அம்மானையாடும் போது உண்டாகும்  அதிசயமான குறிப்புகளுக்கு ஏற்றிக் காட்டுவதும் புலவனாரின் கவிதைச் சிறப்பின் உயர்வைப் புலப்படுத்துகின்றது.

    அம்மானையாடும்போது மீனாட்சியம்மை கையில் பிடித்திருப்பது முத்துக்கள் பதித்த அல்லது பெருமுத்துக்களால் ஆன அம்மானைக் காய்களாகும். அவளுடைய தாமரை மலர் போன்ற சிவந்த கையில் பொருந்தும் போது அவை தாமும் சிவந்த நிறத்தைப் பெறுகின்றன. அன்னையின்  கருணை வெள்ளம் பெருகும் கடைக்கண் பார்வையால் கறுப்பு நிறம் பெற்றும் அவை விளங்குகின்றன. அவளுடைய நிலவு முகத்தில் தோன்றும் வெண்மையான பற்களின் நகைப்பினால் வெண்ணிறத்தையும் அடைகின்றன.

    சாத்வீகம் எனும் சத்துவம் வெண்மை நிறத்தினையும், இராட்சதம் என்னும் இராசதம் சிவப்பு நிறத்தினையும் தாமஸம் எனும் தாமதம் கறுப்பு நிறத்தினையும் குறிக்கும். சத்துவம், இராசதம், தாமதம் ஆகிய குணநலன்கள் ஒவ்வோர் உயிரின் அறிவிலும் வெவ்வேறு விகிதங்களில் கலந்திருக்கும். இக்குணங்களின் அடிப்படையிலேயே உயிர்களிடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. முக்குணங்களின் சேர்க்கையினால் உலகம் உருவானது என ஒரு கருத்தும் நிலவுகின்றது.

    சத்துவ குணமானது, அறத்தோடு பொருந்திய சிந்தனை, தன் செயல்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பது, எளிமையாக இருத்தல் முதலியனவாம்;

    இராசத குணமாவது, ஊக்கம், வீரம், தான தருமம், கல்வி, ஆசை, வேட்கை, தற்பெருமை, இறுமாப்பு இவற்றுடன் மற்றவர்களை இகழ்வது, பராக்கிரமம், இன்பப் பற்று  ஆகிய செயல்களைச் செய்ய வைக்கும்.

    தாமத குணமென்பது காமம், வெகுளி, மயக்கம், பேராசை, வரித்தம், மோகம், கவலை, அச்சம், சோம்பல் ஆகியவை பொருந்தி, பகட்டுக்காகச் செயல்கள் செய்தலையும், தாழ்வான எண்ணங்களையும் அதிகப்படுத்துகின்றது.

                                          ‘நல் தரள அம்மனையொர் சிற்குணத்தினை மூன்று

                                         நற்குணம் கதுவல் காட்ட…‘

    என்பன பாடல் அடிகள். இவை அம்மானையாடுதலுடன் எவ்வாறு பொருந்தும்?

    உயிர்களின் ஒப்பற்றதோர் அறிவினை மூன்று வகையாகிய இக்குணங்கள் பற்றியுள்ளன என்பதனையே ஒரே விதமான முத்து அம்மானைக் காய்கள் பல நிறங்களை அடைவது என்பது உணர்த்துகிறது எனக் குறிப்பிடுகிறார் புலவர்!  பிள்ளைத்தமிழ்ப் புலவர்கள் மேலும் பலரும் இக்கருத்தினை நயம்பட எடுத்தாண்டுள்ளனர்.

    அம்மை மீனாட்சியும் ஐயன் சிவபெருமானும் அடியார்க்கு எளியர் என்கிறார் குமரகுருபரர். அம்மை அப்பர் (உமையும் சிவனும்) ஆகிய இருவரும் ‘துவாதசாந்தம்’ என்னும் ஒப்பற்ற உயர்ந்த பெருவெளியில் பொருந்தி இருக்கின்றனர். உறங்காமல் உறங்கும் நிலையிலுள்ள உயர்ந்த தவஞானியர் ஆகிய மெய்யடியார்களே இதை உணர்ந்தவர்கள்; அவர்கள் இறைவன்-இறைவியிடம் தாம் கொண்ட பேரன்பினால் ஊன் மட்டுமின்றி எலும்பும் உருகுமாறு நெகிழ்ச்சி அடைகின்றனர்; நமக்கு மிகவும் விருப்பமான ஒரு பொருளை நினைத்த மாத்திரத்தில் வாயில் நீர் ஊறும் அல்லவா? அது போல, அவர்களுடைய எண்ணத்தில் உறைவதனால், உள்ளத்தில் கசிந்து பெருகுகின்ற தேன் மீனாட்சி அன்னை! அவளை,

                                                    ‘ஒருபெரு வெளிக்கே விழித்துறங் கும்தொண்டர்

                                                    உழுவலன்பு என்புருகநெக்கு

                                          அள்ளூற உள்ளே கசிந்தூறு பைந்தேறல்

                                                    அம்மானை ஆடியருளே,’

    எனப் பெருமிதம் பொங்கப் பாடுகிறார் புலவர் பெருமான். இத்தகைய பல வேதாந்த, சித்தாந்தத் தத்துவங்களை ஆங்காங்கே பாடல்களில் பதித்து வைத்துள்ளார்.

                                                    ஆகம் கலந்தொருவர் பாகம் பகிர்ந்தபெண்

                                                    அம்மானை ஆடியருளே!’

    என்ற சொற்களால் உமையொரு பாகனின் அர்த்தநாரீசுவர வடிவத்தையும் அழகுறப் போற்றுகிறார்.

    பராசக்தி எனும் அன்னை மூன்றுவித ஆன்மாக்களை இவ்வுலகபந்தம் நீங்குமாறு எடுத்தெடுத்து மேலே விடுவிக்கிறாள்; ஆயினும் அவை தத்தம் உலகப் பாசக் கட்டினால் திரும்பத் திரும்பக் கீழே உலகிற்கே வருகின்றன. அவளும் சளைக்காமல் அவற்றைப் பின்னும் எடுத்து மேலே விடுக்கிறாள். அன்னை அம்மானை ஆடுவதும் இது போன்றே உள்ளதாம். அவள் அவற்றை மேலே விடுவிக்க, அவை உலகத்தின் புவியீர்ப்பு விசையால் இழுபட்டுக் கீழே வருகின்றன. அவளும் சலியாது அவற்றைத் திரும்ப மேலே விடுப்பது மூவகை ஆன்மாக்களுக்கு அருள்வது போன்றதே என்கிறார் திருப்புக்கொளியூர் பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழின் ஆசிரியர்.

                                          ‘புவனமெங்குந் தங்கி நிலவுமூ வுயிர்களைப்

                                          போந்தபந் தத்தினின்றுன்

                                   பொற்கமல நற்கரத் தான்மீ துயர்த்திடும்

                                          போதுமவை புக்கவுலகின்

                                   கவனவெம் மாயையிற் கட்டுண்டு வீழ்ந்திடும்

                                          காலமெல் லாமவற்றைக்

                                   கையினாற் றாங்கிநீ மீளவும் உயர்த்தும்

                                                    கருணையின் செய்கைபோலாம்

                                   நவமணி குயிற்றியொளிர் அம்மனை எடுத்துநீ

                                          நன்குபெற மேல்விடுதலும்,’

    என்பன பாடல் அடிகளாம்.

    (மூவகை ஆன்மாக்கள்:

    பிரளயாகலர்- இவர்கள் மாயயை நீத்தவர்கள்; பிரளய காலத்தில் வீடுபேற்றையடைவார்கள்.

    விஞ்ஞானகலர்- இவர்கள் ஆணவ மலம் மட்டுமே உள்ள ஆன்மாக்கள்.

    சகலர்- மற்ற அனைவரும் இதில் அடங்குவர்; மும்மலமும் உடைய உயிர்கள் இவை.)

    சோணாசல பாரதியார் இயற்றியுள்ள திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ், நயம் வாய்ந்ததும் அணியழகு ததும்புவதுமான பாடல்கள் பலவற்றைக் கொண்டிலங்குவது. காணப் போகும் பாடலில், மான் எனும் சொல், பின்வரு நிலையணியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இப்பிள்ளைத்தமிழ் நூல் முழுவதும் இத்தகைய அருமையான பாடல்களைக் கண்டு களிக்கலாம்.

    ‘பிட்சாடனராக வந்து நமது மனைவியரைத் தம்மீது ஆசைகொண்டு அலையச் செய்தும், திருமாலை அழகான மோகினியாக்கி நம்முன் அனுப்பி நம்மையும் காமத்தில் ஆழ்த்திவைத்த இவனை (இச்சிவபெருமானை) நாம் அழித்திட வேண்டும்’ எனத் தாருகாவனத்து முனிவர்கள் சினம்கொண்டு அபிசார வேள்வி செய்து புலி முதலியவற்றை வரவழைத்துப் பெருமான் மீது ஏவினர் என்பது வரலாறு. அந்தப் பெருமானை- அவன் எப்படிப்பட்டவன்?- கொடிய மானை, யானையை உரித்துக் கையில் பிடித்துக் கொண்டவன்- அவனுடைய பிறையும் கொன்றையும் சூடிய சடையில் நீர்வடிவாகிய பெண் (கங்கை) அமர்ந்துள்ளாள்; அவள், “உங்கள் கண்மானை (மனையாளான உமையை) நீங்கள் மகிழச் செய்யுங்கள்; என்னை ஒருவராலும் அசைக்க இயலாது,” என்று செருக்குடன் இருக்கிறாள். இதனை அந்த உண்ணாமுலையம்மையாகிய பார்வதி தன் தோழியரிடம் கூறி, “அந்த கங்கையின் செருக்கை நீக்கி அவளைத் தானே அசைந்து ஒழுகும்படிச் செய்கிறேன் பாருங்கள்,” என்று மலர்மான் (மலர்மகள்), கலைமான் (மகள்) ஆகிய தோழிகளிடம் கண்சாடையாகக் கூறுகிறாளாம். அதாவது உமையான இவள் பொற்காய்களை வீசி அம்மானையாடினால் சிவபிரான் உவந்து தலையசைப்பாராம். அப்போது அவர் சடையிலுள்ள கங்கை தானே அசைந்து ஒழுகுவாளல்லவா?

                                          நம்மானை அனையாரை ஆசைநீ ரோடையில்

                                          நலித்துமான் மானைஏவி

                                   நம்மையும் அழித்தவனை நாம்அழித் திடுதும்என

                                          நல்தரு வனத்தர்ஓட்டும்

                                   …………………………………………………………

                                   கலைமானை மலர்மானை விழிமானி னால்சொல்லிக்

                                          கனகஅம் மனைவீசிஅவ்

                                   அம்மானை முடிஅசைப் பிக்கும் வித மெனஎம்அன்னை

                                          அம்மானை ஆடியருளே

                                   ………………………………………

    இசையுடன் பாடினால் இன்னுமே இனிக்கும் சந்தநயம் மிகுந்த பாடலிதுவாகும்.

    பிள்ளைத்தமிழின் அம்மானைப் பாடல்களின்படி பெண்மகவு விளையாடும் அம்மானைக் காய்கள் ஏதேனும் ஒரு சமயக் கருத்தினையோ, தத்துவத்தையோ, தொன்மத்தையோ, புலவரின் கற்பனையையோ தமிழின் அழகும் சேர விளக்கும் நயத்தைக் கண்டோம். அன்னை தெய்வம் அடியாருக்கு அருள்செய்த திறத்தையும் சில அம்மானைப் பாடல்கள் விளக்குகின்றன.

    அன்னையின் திருவுருவின் அழகிலாழ்ந்து, நாள்பொழுது அனைத்தையும் மறந்துவிட்ட அடியாராகிய அபிராமி பட்டர் அரசனிடம், “நாளை பௌர்ணமி” என்று கூறிவிடுகிறார். ஆனால் அதுவோ அமாவாசை தினம். தன் அடியாரின் சொல்லைக் காப்பாற்றித்தர வேண்டி அபிராமியம்மை தனது காதணிகளில் ஒன்றினை எடுத்து ஆகாயத்தில் வீசி அதனை நிலவுபோல் ஒளிரச் செய்கிறாள். இந்த அதியற்புதச் செயலை அம்மை அம்மானை ஆடியதாகக் கூறி மகிழ்கிறார் புலவர் நடேச கவுண்டர். ‘அபிராமிபட்டருக்கு அருளியது போன்று எம்மடியார் அனைவருக்கும் என்றும் எப்போதும் அருளுவோம்’ எனவும் அன்னை கூறுவதாகப் பாடியுள்ளமை உள்ளத்தை உருக்குவது.

                                    ‘விண்டதண் டாமரையின் மதுவுண்ட வண்டென

                                          விளங்குநின் பாத மலரின்

                                       விம்முபர மானந்த மதுநுகர்ந் தமுதகவி

                                          விள்ளுமபி ராமபட்டன்

                                   தண்டலை உறாமலம் மாசைநாள் விண்மீது

                                          தண்மதி உதிக்கு மாறு

                                       தழைசெவிக் குழைவீசு கருணைநாயகிநுன்

                                          சரணமடை புலவருய்யக்

                                   கொண்டுமதி வீசுவேம் எம்மிட மதிக்கென்ன

                                          குறைவென்று தேற்றல்போல….’

                                          (சீர்காழி திருநிலை நாயகி பிள்ளைத்தமிழ்- அம்மானைப் பருவம்)

    திரு உத்தரகோச மங்கை பிள்ளைத் தமிழின் அம்மானைப் பாடலொன்று இன்னும் சில அரிய கருத்துகளை நயம்பட உரைக்கின்றது. நயமான கருத்துகள் சிந்தனைக்கு விருந்தாகின்றன.

    ‘அன்னையே! மும்மாரியாய்ப் பொழியும் மழைபோன்று தேவர் மலர்மாரி, பொன்மாரி, சவ்வாது புழுகு இவற்றாலான நன்மாரி மூன்றனையும் சொரிய, புலவர் பெருமக்கள் சொல்மாரியான (சல்லாபம்) பாடல்களைச் சொரிந்து உன்னை வணங்குகின்றனர். நீ அணிந்துள்ள சிவந்த மலர்மாலைகளும் பொன்மாலைகளும்  உடுத்தியுள்ள சரிகைப்பட்டும் புரண்டாடுகின்றது அம்மையே! செவ்வானும் சிவந்த பவளமும் இணையாகாது எனும்படி உன் திருச்செவ்வாய் மலர்ந்து பாடல் பிறக்கின்றது. அனைத்து மாதரும் துதிசெய்து வணங்கும் பொன்மான் எனும் திருமகளும், கலைகளை எடுத்தியம்பும் மானாகிய சரசுவதியும் வந்து உன்னுடன் அம்மானை ஆடுகின்றனர். எம்மானாகிய சிவபிரானும், அவன் கையிலேந்திய அந்தவொரு மானும் உடன் நின்றாடுகின்றனர். இந்த மாநிலம் போற்றும் குகவேளாகிய முருகன் ‘அம்மா’ என அழைக்கும் நீ உனது இருகையாலும் எடுத்து அம்மானையாடுக,’ என வேண்டுவதாக அமைந்ததொரு பாடல்.

                                      தம்மாலி யன்றபடி மும்மாரி யென்றுமலர்

                                          தன்மாரி பொன்மாரியும்

                                       சவ்வா துடன்புழுகு நன்மாரி யும்புலவர்

                                          சல்லாப மென்றுசொரிய

                                   ………………………………………………..

                                   எம்மாத ரும்துதிசெய் பொன்மானு டன்கலைசொல்

                                          இம்மானும் வந்தாடவே

                                       எம்மானும் நின்றொருகை அம்மானும் நின்றாட

                                          இம்மாநி லம்சொல்குகவேள்

                                   அம்மாஎன அம்மாநீ சும்மா எடுத்திருகை

                                          அம்மானை ஆடியருளே

                                       ……………………………………………

    இதில் மாரி, மான், அம்மா ஆகிய சொற்களைப் பலமுறை வெவ்வேறு பொருட்களில் சிறப்புறக் கையாண்டு பாடலை நயமுற அமைத்துள்ளார் புலவர். சிறந்த இலக்கிய விருந்து படைக்கும் பாடல்.

    திருப்பெருந்துறை சிவயோக நாயகி பிள்ளைத் தமிழின் அம்மானைப் பருவப் பாடல் ஒன்றும் அன்னை தெய்வத்தின் எங்கும் நிறைந்த இயல்பை அழகுற விளக்குகிறது.

    ‘அன்னை பராசக்தியாகிய சிவயோக நாயகியே, ஆயிரம் ஊர், நாமம், வடிவுகள், ஆயிர விதமான ஆடல் புரிபவர், ஆயிரம் தோள்கள், ஈராயிரம் காதுகள், ஓராயிர முகங்களும் நாவுகளும் கொண்டவர், ஆயிரம் நீள்முடி, ஆயிரம் தாள், மாலயன் ஆயிர நாட்களாகத் தேடியும் அறியவொண்ணாதவர் ஆகிய விடையேறும் பெருமானாகிய சிவனாரின் இரு கண்களும் குளிர நீ அம்மானை ஆடுக! அவன் வடிவாகிய சிவசத்தியே! ஆளுடைய நாயகியே, அம்மானையாடுக!’ என வேண்டுகிறார்.

                                  ஆயிரமூ ருடையார் ஆயிர நாமமுள்ளார் ஆயிர மேனியனார்

                                              ஆயிர மாடலினார்

                                ஆயிர மாகியதோள் ஆயிர மாயிருகா தாயிர மானனமோ(டு)

                                                                                                                                                 (ஆனனம் – முகம்).

                                             ஆயிர நாவுடையார்

                               ஆயிர நீள்முடிதாள் ஆயிர மாலயனார் ஆயிர நாளளியர்

                                           ஆவிடையா ரிருகண்

                              ஆயிர முங்குளிர் ஆடுக வம்மானை

                                          ஆளுடைய நாயகியே ஆடுக வம்மானை.

    இப்பாடலுக்குப் பேராசிரியர் முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு:

    இப்பாடலில் ஆயிரம் என்ற எண்ணுப் பெயர் வருமிடங்களில் ‘எண்ணற்ற’ என்று பொருள் கொண்டு நோக்கினால் பொருள் எளிதாகும். புருஷ சூக்தத்தின் தொடக்கமாகிய “ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ ஸஹஸ்ரபாத்” எனும் வேத மந்திரத்தில் உள்ள ஆயிரத்தை அம்மைக்கு ஏற்றி ஆயிரம் ஊருடையார், பேருடையார், மேனியுடையார் என்று பாடியுள்ளார்.  இறைவனுக்கு இருவகைச் சத்தி கூறப்படும். ஒன்று சிவசத்தி. இது சிவனை விட்டுப் பிரியாத சத்தி. தாதான்மிய சத்தி எனப்படுமிது சித்து, சைதன்யம் என அறியப்படும். மற்றொன்று வேண்டும்போது பயன்படுத்திக்கொள்ளும் சத்தி. இது பரிக்கிரக சத்தி எனப்படும். இதுவே மாயை. பானைக்கு முதற்காரணம் அதன் அடிப்படை (material cause) மண். அதுபோல பிரபஞ்சத்துக்கு முதற்காரணம் மாயை. இறைவன் தன் சிவசத்தியினால் பிரபஞ்சத்தைப் படைத்து, அதில் சிவசத்தியினால் கலந்து நின்று சித்துப் பொருள்களுக்கு அறிவையும் சடப் பொருள்களுக்கு இயக்கத்தையும் தருகிறான். இவையனைத்தும் அம்மையின் செயல்களே. அதனால் அவளுக்கு மேனி ஆயிரம் என்றார். உருவுடைப் பொருள்களெல்லாம் சத்தியே; அம்மையே.   கூத்தன் பராசத்தியிடமாக  சுத்த மாயையாகிய ஞானாகாசத்தில் ஆடுகிறான். அம்மை வடிவாக அவன் செய்யும் ஐந்தொழில்  கூத்து, அவளுடைய கூத்தாகவே கூறப்படும். அன்னை ஆட்டத்திற்கு இந்தப் பிரபஞ்சக் கூத்து, உயிர்க்கூத்து மிகப் பொருத்தமாக உள்ளது.

    அனைத்துமே அழகான பாடல்கள். அன்னை தெய்வம் மயக்குறு மழலையாக இருப்பினும், அவளுடைய தெய்வத் தன்மையைப் பெருமையுற விளக்கும் இலக்கியச் சித்திரங்கள் இவை எனலாம்.

                                                    _______________________

    பார்வை நூல்கள்: 

    1. மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    2. திருப்புக்கொளியூர் பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழ்- சி. சுப்பிரமணிய முதலியார்.
    3. திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- சோணாசல பாரதியார்
    4. சீர்காழி திருநிலை நாயகி பிள்ளைத்தமிழ்- கவியரசு கு. நடேச கவுண்டர்
    5. திரு உத்தரகோச மங்கை பிள்ளைத்தமிழ்
    6. சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ்- தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 32

    நாங்குநேரி  வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 32

    32. இன்னா செய்யாமை

    குறள் 311:

    சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
    செய்யாமை மாசற்றார் கோள்

    பெரிய சொத்து கெடைக்கும்னாலும் மத்தவங்களுக்கு கெடுதல் செய்ய நெனைய மாட்டாங்க சுத்த மனசுக்காரங்க.

    குறள் 312:

    கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
    செய்யாமை மாசற்றார் கோள்

    கோவப்பட்டு தீம செஞ்சவங்களுக்கும் பதிலுக்குக் கெடுதல் செய்யாம பொறுத்துக்கிடதுதான் குத்தமில்லாத மனசுக்காரங்களோட கொள்க.

    குறள் 313:

    செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
    உய்யா விழுமந் தரும்

    நாம சும்மா இருக்கையில வம்புக்கு இழுத்து தொந்தரவு செய்யுதவனுக்கு நாம கெடுதல் செஞ்சோம்னா , செஞ்ச பொறவு அது தப்ப முடியாத அளவு துன்பத்த குடுக்கும்.

    குறள் 314:

    இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயஞ் செய்து விடல்

    நமக்கு கெடுதல் செஞ்சவங்கள தண்டிக்கணும்னு நெனச்சா பதிலுக்கு அவங்க கூசுத அளவு நல்லத செய்யணும். பொறவு அவுங்க செஞ்ச கெடுதலயும் நாம செஞ்ச நல்லதயும் மறந்து போடணும்.

    குறள் 315:

    அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
    தந்நோய்போற் போற்றாக் கடை

    மத்த உசிரு படுத துன்பத்த தன் துன்பம் போல நெனயாதவனுக்கு புத்தி இருந்து என்ன பிரயோசனம்?

    குறள் 316:

    இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை
    வேண்டும் பிறன்கட் செயல்

    ஒருத்தன் இது கெடுதல செய்யும் னு வாழ்க்கைல அனுபவிச்சு அறிஞ்சத  மத்தவனுக்கு செய்யாம இருக்கணும்.

    குறள் 317:

    எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
    மாணாசெய் யாமை தலை

    எவ்வளவு சிறிசுன்னாலும்,  யாருக்குன்னாலும்,  எப்பம்னாலும் மனசார கெடுதல் செய்யாம இருக்குதது நல்லது.

    குறள் 318:

    தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
    மன்னுயிர்க் கின்னா செயல்

    இது தான் உசிருக்குத் துன்பத்த கொடுக்குததுனு புரிஞ்சுக்கிட்ட பொறவு அத மத்த உசிருக்கு செய்ய நெனக்குதது என்ன காரணத்தாலோ?

    குறள் 319:

    பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
    பிற்பகல் தாமே வரும்

    காலையில ஒருத்தருக்கு கெடுதல் செஞ்சாம்னா, அவனுக்கு கருக்கல் ல கேடு தானா வந்து சேந்துக்கிடும்.

    குறள் 320:

    நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
    நோயின்மை வேண்டு பவர்

    செய்யுத எல்லா கெடுதலும் அத செஞ்சவன தான் வந்து சேரும். அதனால துன்பம் இல்லாம வாழ நெனக்கவன் மத்தவங்களுக்கு கெடுதல் செய்யக் கூடாது.

    (அடுத்தாப்லயும் வரும்….

    Share
  • (Peer reviewed) கருந்துளைக்குப் பின்னால் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு

    (Peer reviewed) கருந்துளைக்குப் பின்னால் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு

    நடராஜன் ஸ்ரீதர்                 &         பேராசிரியர் சந்திரமோகன் ரெத்தினம்

    முதுஅறிவியல் மற்றும் இயற்பியல் ஆய்வுத் துறை
    ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி
    தேவகோட்டை, தமிழ்நாடு

    natarajangravity@gmail.com      |          rathinam.chandramohan@gmail.com

    ========================================================================================

    கருந்துளைக்குப் பின்னால் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு

    முன்னுரை

    இங்கு ஒரு கற்பனையான சூழ்நிலையை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளலாம். ராம் மற்றும் அவனுடைய நண்பர் முகில் இருவரும் தனித் தனி விண்வெளிக் கப்பல்களில் ஏறித் தொலைதூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்திற்குச் செல்வதற்காகப் பயணிக்கின்றனர். அவ்வாறு செல்லும்போது ராம், அவன் நண்பன் முகிலுக்குச் சிறிது கண்ணாமூச்சி விளையாட்டு காட்ட நினைக்கிறார். அதாவது அவர்கள் சென்று கொண்டிருக்கும் போது, சிறிது நேரம் முகிலை விட்டு தள்ளி மாயமாக மறைந்து நிற்க திட்டமிடுகிறார் ராம். இதற்காகத் தேர்ந்தெடுத்தது ஒரு கருந்துளையை.

    ராமின் மனத்தில் உதித்த திட்டம் என்னவென்றால், கருந்துளையானது அதை நோக்கி வரும் அனைத்துப் பொருட்களையும் உள்ளிழுத்துக் கொள்வது போல், அதிலிருந்து எந்த ஒளியையும் வெளியிடாதது போல், தாமும் கருந்துளையின் பின்னால் ஒளிந்து கொண்டால் தன்னில் இருந்து வரும் ஒளியைக் கருந்துளையானது வெளிவிடாது என்பதை ஒரு கணக்கீடாகக் கொண்டு கருந்துளைக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறான். ஆயினும் முகில், ராமின் இருப்பிடத்தை வெகு தொலைவிலிருந்து மிகச் சரியாகக் கணித்து அவனை அடைந்துவிடுகிறான். இதற்கு என்ன காரணம்? எவ்வாறு இது சாத்தியம்? என்பதை இக்கட்டுரை வாயிலாகக் காணலாம். மேலும்

    SageMath என்ற கணினி மென்பொருள் மூலம் வரையப்பட்ட படத்தினையும் மற்றும் சமீபத்தில் படம் பிடிக்கப்பட்ட கருந்துளையின் படத்தினையும்  இக்கட்டுரையின் விளக்கப் பகுதிகளில் காணலாம்.

    கருந்துளைகள்

    கருந்துளைகள் என்பவை சார்பியல் தத்துவத்தின் சமன்பாடுகளின் ஆய்வுக் கூடம் என்றே சொல்லலாம். கருந்துளையானது மிக அதிகமான ஈர்ப்பு வலிமையுடன் இருப்பதாலும், பிரபஞ்சத்தில் மற்றெந்தப் பொருட்களை விடவும் மிக அதிகமாகக் காலவெளியை வளைப்பதாலும், கருந்துளையானது ஆய்வாளர்களுக்கு எப்போதும் புதிராகவும் மற்றும் பல புதிய ஆய்வு முடிவுகளுக்கு வித்தாகவும் அமைகிறது. நியூட்டன் அவரது ஆய்வு முடிவுகளின்படி ஈர்ப்பு விசை என்பது, இரு பொருள்களுக்கு இடையே உள்ள விசை என்று தெரிவித்திருந்தார். பின்னாட்களில் இத்தத்துவத்தை ஐன்ஸ்டைன் தனது மாறுபட்ட ஈர்ப்பு விதிகளால் மாறுதல் செய்தார்.   ஒரு பொருளின் ஈர்ப்பு என்பது, அப்பொருள் அதைச் சுற்றியுள்ள காலவெளியை எவ்வளவு தூரம் வளைக்கும் என்பதைப் பொறுத்து முடிவு செய்யப்படுகிறது. அதிக நிறையுள்ள பொருள் அதைச் சுற்றிய காலவெளியை மிக அதிகமாகவும்,  குறைவான நிறையுள்ள பொருள் அதைச் சுற்றியுள்ள காலவெளியைக் குறைவாகவும் வளைக்கிறது. பொதுவாகக் காலவெளியின் வளைவே ஈர்ப்பின் தத்துவம் என்று புரிந்துகொள்ள முடியும்.

    கருந்துளைகளும் சுவார்ட்ஸ்சைல்டு ஆரமும்

    கருந்துளைகள் பொதுவாக மிகவும் அதிகமான ஈர்ப்பின் வலிமையைக் கொண்டதாக இருக்கும். எரிந்து முடிந்த ஒரு நட்சத்திரத்தின் ஆரமானது சுவார்ட்ஸ்சைல்டு ஆரம் அளவிற்குச் சுருங்கும் போது, அந்நட்சத்திரமானது கருந்துளையாக மாறிவிடுகிறது[1]. சுவார்ட்ஸ்சைல்டு ஆரம் என்பது அந்த நட்சத்திரத்தில் நிறைக்கு நேர்த்தகவில் இருக்கும். இதைக் கீழ்வரும் சமன்பாட்டின் மூலம் பெறலாம்.

            R= 2MG/c²

    சமன்பாட்டில் கண்ட ஆரத்தின் அளவு, வெவ்வேறு நிறை கொண்ட பொருட்களுக்கு வெவ்வேறு அளவில் மாறுபடும். உதாரணமாக [5],

    1. சூரியன்  – 3 கிலோமீட்டர்
    2. பூமி – 8.7 மில்லி மீட்டர்
    3. சந்திரன் – 0.11 மில்லி மீட்டர்
    4. வியாழன் – 2.2  மீட்டர்
    5. நியூட்ரான் நட்சத்திரம் – 4.2 கிலோமீட்டர்

    இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளவை, வெவ்வேறு வானியல் பொருட்களுக்கான சுவார்ட்ஸ்சைல்டு ஆரம் ஆகும். அதாவது இந்த ஆரத்தின் அளவிற்கு அப்பொருட்கள் சுருங்கும் போது அவை கருந்துளைகளாக மாறிவிடும். சுவார்ட்ஸ்சைல்டு ஆரத்திற்குக் கீழ் உருவாகும் கருந்துளை மிக அதிகமான ஈர்ப்பின் வலிமையுடனும், அதில் விழும் எந்த ஒரு பொருளையும் அதிலிருந்து தப்ப விடாத அளவுக்கு ஈர்ப்பின் வலிமையுடன் காணப்படும். மிக வேகமாகச் செல்லும் ஒளி கூட இக்கருந்துளையின் ஈர்ப்பு எல்லைக்குள் சென்று விட்ட பிறகு மறுபடி வெளியே தப்பிச் செல்ல முடியாது.

    ஈர்ப்பு – காலவெளியின் வளைவு

    கருந்துளைகள் அதிகமான நிறையினைக் கொண்டிருப்பதனால் இவை காலவெளியை மிக அதிகமாக வளைக்கின்றன. இதைச் சுற்றி வரும் எப்பொருளும் அதிக முடுக்கத்துடன் இருந்தால் மட்டுமே இதன் ஈர்ப்பு விசைக்குள் விழுந்துவிடாமல் தப்பியோட முடியும். நமக்குத் தெரிந்த மிக அதிகமான வேகமுள்ள இயக்கமான ஒளியானது  கருந்துளையைச் சுற்றி வளைந்து செல்கிறது. இவ்வாறு ஒளியானது கருந்துளையைச் சுற்றி வளைந்து செல்வது ஈர்ப்பு ஆடி விளைவு (Gravitational Lensing Effect) என வரையறுக்கப்படுகிறது [2].

    மேலும் ஒளியானது கருந்துளையைச் சுற்றி வரும்போது ஒரு வளையம் போன்ற அமைப்பினை அங்கு உருவாக்குகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் அமைப்பு ஐன்ஸ்டைன் வளையம் எனவும் அழைக்கப்படுகிறது. சுவார்ட்ஸ்சைல்டு ஆரத்திலிருந்து மும்மடங்கு தொலைவு வரையான தொலைவை (3 R_s) மிகக் குறைந்த தொலைவாகக் கொண்டு, கருந்துளையின் அருகில் ஒரு பொருளானது அதன்  ஈர்ப்பினால் பிடிக்கப்படாமல் தப்பிச் செல்ல முடியும். இத்தொலைவுக்குக் குறைவாகச் செல்லும் பொருளானது கருந்துளையின் ஈர்ப்பு விசையினால் பாதிக்கப்பட்டுக் கருந்துளைக்குள் செல்லத் தொடங்கி விடும். ஒளிக்கு  இந்த மிகக் குறைந்த தொலைவானது சுவார்ட்ஸ்சைல்டு ஆரத்தில் ஒன்றரை மடங்குத் (1.5 R_s) தொலைவாக அமையும். ஒன்றுக்கொன்று இணையாகச் செல்லும் ஒளிக்கற்றைகள்  2.6 மடங்கு சுவார்ட்ஸ்சைல்டு ஆரத் தொலைவை (2.6 R_s) அடையும்போது அவை ஐன்ஸ்டீன் வளையங்களை உருவாக்குகின்றன [4].

    படம் : 1 SageMath  என்ற கணினி மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்ட, கருந்துளையைச் சுற்றி காலை வெளியானது அமைந்திருக்கும் படம்

    இப்படத்தில் கருந்துளையானது ஒளியினை வளைப்பதைக் காட்டுகிறது. அதாவது கருந்துளையை நோக்கி வரும் போட்டான்களானவை கருந்துளையைச்  சுற்றி ஒரு வளைவான பாதையில் பயணிக்கிறது. இவ்வாறாக ஒளி வளைந்து செல்வது கருந்துளையைச் சுற்றி ஒரு வளையம் போன்ற அமைப்பாகக் காணப்படுகிறது. இப்படமானது SageMath[3] என்ற கணினி மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்டது. இப்படம் உருவாக்குவதற்கு, பின்னணியில் மென்பொருளில் கணக்கீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    சமீபத்தில் வெளியான கருந்துளையின் புகைப்படம்

    சமீபத்தில் வெளியான கருந்துளையில் முதல் புகைப்படமும் இதே போன்றவொரு அமைப்பை வெளிப்படுத்துகிறது. விளம்பி ஆண்டு பங்குனி மாதம் 27ஆம் தேதி (10-4-2019) இந்த அரிய சாதனையானது சாத்தியமானது. இப்படமானது கருந்துளையின் நிழலை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு உருவாக்கியுள்ள  நிழலானது கிட்டத்தட்ட நமது சூரியக் குடும்பத்தை விட மிகப் பெரியதாக இருப்பதாகவும் இப்படம் காட்டுகிறது. M87 நட்சத்திரத் தொகுப்பில் இக்கருந்துளையானது படம் பிடிக்கப்பட்டுள்ளது. கருந்துளை Event Horizon Telescope என்ற தொலைநோக்கி அமைப்பின் கூட்டு முயற்சியால் படம் பிடிக்கப்பட்டுள்ளது. பூமியின் வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 8 பெரிய தொலைநோக்கிகளின் உதவியுடன் இத்தரவுகள் பெறப்பட்டு ஆராய்ச்சியின் முடிவு உருவாக்கப்பட்டுள்ளது.

    உண்மையில் இந்த படமானது கருந்துளையின் நிகழ்வு எல்லையினை வெளிப்படுத்துகிறது. M87 நட்சத்திரக் கூட்டமானது மிகப் பெரியதாக இருப்பதால் அதைத் தொலைநோக்கியில் படம்பிடிப்பது எளிதாக இருக்கும். ஆனால் அதன் மையத்தில் அமைந்துள்ள கருந்துளையானது ஆய்வு செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும். காரணம் M87 நட்சத்திரக் கூட்டத்துடன் ஒப்பிடுகையில் கருந்துளையின் பருமனானது மிகவும் சிறியதாக உள்ளது. பொதுவாகக் கருந்துளைக்கு வெகு தொலைவில் இருந்து அதன் நிகழ் வெல்லையை அடையும் ஒரு  பொருள், அக்கருந்துளையை விட்டுத் தப்பிச் செல்ல முடியாத அளவுக்கு அதன் ஈர்ப்பு விசைக்குள் சிக்கிக் கொள்ளும்.

    படம் 2: M87 என்ற நட்சத்திரத் தொகுதியில் நடுவே உள்ள கருந்துளை. இது கருந்துளையின் அமைப்பைப் பற்றிக் கிடைத்துள்ள முதல் புகைப்படம் ஆகும்.

    இக்கருந்துளையானது பூமியிலிருந்து 55 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது கிட்டத்தட்ட 100 மில்லியன் கிலோமீட்டர்கள் குறுக்கும் நெடுக்குமாகப் பரந்து விரிந்துள்ளது. நமது சூரியக் குடும்பத்தின் மொத்த குறுக்களவினை விடவும் இக்கருந்துளை மிகப் பெரியது. 6.5 பில்லியன் மடங்கு சூரியனை விட மிக அதிக நிறை கொண்டதாக இக்கருந்துளை உள்ளது. இவ்வாறு தொலைவுகளைக் கணக்கிடும்போது கருந்துளையைச் சுற்றி வரும் ஒளியானது சார்பியல் தத்துவ விதிகளின்படி சில நுணுக்கமான இயக்க அமைப்புகளுக்குள் சென்றுவிடுகிறது. சுவார்ட்ஸ்சைல்டு ஆரத் தொலைவின்  ஒன்றரை மடங்கு ஆரத்தினை விடச் சற்று அதிகமான தொலைவில் செல்லும்போது, ஒளியானது கருந்துளையை எப்போதும் சுற்றி வர ஆரம்பிக்கிறது.

    கருந்துளைக்குப் பின்னால் – கற்பனைச் சூழல்

    இந்தத் தத்துவங்களை நாம் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்த  கற்பனையான  சூழலுக்குப் பயன்படுத்திப் பார்ப்போம். அதாவது வெகு தூரம் காலவெளியில் மேற்கொள்ளும் ஒரு பயணத்தில்,  கருந்துளை ஒன்றினருகில் வரும் இரு நண்பர்களில் ஒருவர் கருந்துளைக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளத் திட்டமிடுகிறார்.  கருந்துளையின் ஈர்ப்பு விசைக்குள் அகப்படாத ஒரு பாதுகாப்பான தொலைவில்  ராம் தனது விண்கலத்தை மாறாத முடுக்கத்துடன் செலுத்துகிறார். இக்கருந்துளையின் எதிர்ப்பக்கத்தில் முகில் மாறாத முடுக்கத்துடன் தனது விண்கலத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறார். இப்போது கேள்வி என்னவெனில் முகிலின் பார்வையிலிருந்து ராம் முற்றிலுமாக மறைக்கப்பட்டு விடுவாரா என்பதே. ஏனெனில் கருந்துளையானது ஒளியை முற்றிலுமாக உள்வாங்கி கொள்ளும். ஆனால் இக்கேள்விக்கு மாறுபட்ட பதில்களைச் சார்பியல் தத்துவம் முன்வைக்கிறது.

    ராம், முகிலின் பார்வையில் இருந்து மறைய, முகிலுக்கு எதிர்ப்பக்கத்தில் கருந்துளைக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார். ராமின் விண்கலத்திலிருந்து வரும் ஒளியானது கருந்துளையின் நிகழ்வெல்லையின் அருகில் குறுகிய தொலைவில் வளைந்து, கருந்துளையின் மறுபக்கத்தை வந்து சேரும். இவ்வாறு வரும் ஒளியானது ராமிற்குக் கிடைத்துவிடும். எனவே கருந்துளையின் பின்னால் ஒளிந்துள்ள முகிலை ராம் எளிதாக அடையாளம் கண்டுகொள்வார். எனவே கருந்துளைக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் திட்டமானது தோல்வியினையே தழுவும்.

    முடிவுரை

    இந்த நிகழ்விற்குக் காரணம் கருந்துளையானது அதைச் சுற்றியுள்ள காலவெளியை மிக அதிகமாக வளைப்பதேயாகும். அதிக நிறை கொண்ட கருந்துளையானது மிக அதிகமாகக் காலவெளியை வளைக்கிறது. இதன் காரணமாக ஒளியானது அக்கருந்துளையைச் சுற்றிச் செல்லும். சமீபத்தில் கிடைத்த கருந்துளையின் முதல் படமும் இவ்வகையான நிகழ்வை உறுதி செய்கிறது. இவற்றின் மூலம் கருந்துளைக்குப் பின்னால் ஒரு கற்பனையான கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் போது விளையாட்டில் உள்ளவர்களுக்குத் தோல்வியே கிடைக்கும் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

    மேற்கோள்கள்

    1. Chandrasekhar, S., & Thorne, K. S. (1985). The mathematical theory of black holes.
    2. Weinberg, S. (1972). Gravitation and cosmology: principles and applications of the general theory of relativity.
    3. Stein, W. A., Abbott, T., & Abshoff, M. (2016). SageMath
    4. Hartle, J. B. (2003). Gravity: An introduction to Einstein’s general relativity.
    5. http://astronomy.swin.edu.au/cosmos/S/Schwarzschild+Radius Accecced 14-04-19
    ——————————————————————————————————————————————————————————
    ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

    ஆய்வாளர்கள் “விஞ்ஞானப் புனைவு” [Science Fiction] முறையில் தொடங்கி, சமீபத்தில் உலக வானியல் விஞ்ஞானிகள் எட்டு ரேடியோ விண்ணோக்கிகள் மூலம், வெகு தூரத்தில் உள்ள M87 ஒளிமந்தையை நோக்கி, அந்தக் காட்சிகளைச் சேமித்து, முதன்முதல்  வெளியிட்ட பூதப்பெரும் “கருந்துளைப்” படப்பிடிப்பைப் பற்றி எழுதி, “விஞ்ஞானப் புனைவு” போல் முடிக்கின்றனர்.

    இதில் புனைந்துள்ள கற்பனைக் காட்சி, மிகச் சவாலானதும் சாகசமானதும் ஆகும். கருந்துளையின் அளவுடன் ஒப்பிட, அதில் சிக்காமல் அதனைச் சுற்றிப் பயணிக்க முடியும் என்ற பார்வை மிகத் துணிச்சலானது. ஆனால், கருந்துளைக்கு முன் எது, பின் எது? நாம் பார்க்கும் கோணம் முன் என்றால், அதற்கு நேர் எதிர்ப் புறத்தில் பின் இருக்க வேண்டும். அப்படி, கருந்துளையின் ஆதி முனையைப் பற்றி இன்னும் மனிதன் கண்டறியவில்லை. உண்மையில் இங்கே கருந்துளையின் பக்கவாட்டில் இருவரும் பயணிக்கின்றனர். இருவருக்கும் இடையில் கருந்துளை இருக்கிறது. இதனைக் கருந்துளைக்குப் பின் எனச் சொல்வதை விட, கருந்துளையின் மற்றொரு புறத்தில் எனலாம். எனினும் இந்த முயற்சிக்குப் பாராட்டுகள்.

    ——————————————————————————————————————————————————————————
    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 31

    -நாங்குநேரி வாசஸ்ரீ 

    31.வெகுளாமை

    குறள் 301:

    செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
    காக்கினென் காவாக்கா லென்

    எங்க தன் கோவம் பலிக்குமோ அங்க கோவப்படாம இருக்கவன் தான் கோவத்த கட்டுப்படுத்துதவன்.  எங்க பலிக்காதோ அங்க கோவத்த தடுத்தா என்ன? தடுக்காம விட்டாதான் என்ன?

    குறள் 302:

    செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
    இல்லதனின் தீய பிற

    நம்மள விட எளச்சவங்க கிட்ட கோவப்படுதது கெடுதல குடுக்கும். நம்மள விட பலசாலிகிட்ட கோவப்படுதது மாதிரி கேடும்  வேற இல்ல.

    குறள் 303:

    மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
    பிறத்தல் அதனான் வரும்

    யார் கிட்டயும் கோவப்படாம அத மறந்து விட்டுப்போடணும். ஏம்னா அதனால தீம தான் வெளையும்.

    குறள் 304:

    நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
    பகையும் உளவோ பிற

    மொகத்துல சிரிப்பாணியையும் மனசுக்குள்ளார சந்தோசத்தையும் கொல்லுத கோவத்த போல பகையாளி வேற உண்டா?

    குறள் 305:

    தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
    தன்னையே கொல்லுஞ் சினம்

    ஒருத்தன் தன்னயத்தானே காக்க நெனச்சாம்னா அவன் கோவம் வராம பாத்துக்கிடணும். இல்லன்னா கோவம் அவன கொன்னு போடும்.

    குறள் 306:

    சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
    ஏமப் புணையைச் சுடும்

    கோவம் அது இருக்கவன அழிக்குததோட அவனோட சொந்த பந்தத்தையும் சேத்து அழிச்சுப்போடும்.

    குறள் 307:

    சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
    நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

    கையால ஓங்கி தரையில அடிச்சவனுக்கு அவன் கை தான் வலிக்கும் அப்டிதான் கோவப்படுதவங்களோட நெலமயும்.

    குறள் 308:

    இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
    புணரின் வெகுளாமை நன்று

    கொழுந்து விட்டு எரியுத தீ நம்ம மேல படுதது மாதிரி பெருந் தீமய ஒருத்தன் செஞ்சாலும்  கோவப்படாம இருக்க முடியும்னா அது நமக்கு நல்லது.

    குறள் 309:

    உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
    உள்ளான் வெகுளி யெனின்

    மனசுக்குள்ள கோவப்படாம இருக்கணும்னு நெனக்கவனுக்கு அவன் நெனச்சது எல்லாம் கெடச்சு போடும்.

    குறள் 310:

    இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
    துறந்தார் துறந்தார் துணை

    பெருங்கோவக்காரன் செத்தவனுக்கு சமானம்.  கோவமே படாதவங்க துறவிக்கு சமானம்.

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 8.1

    முனைவர் மீனாட்சி பாலகணேஷ்  

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 8.1

    (அம்மானைப் பருவம்)

    வரிசைப்படுத்தப்பட்ட பிள்ளைத் தமிழின் பருவங்களின்படி, பெண்பால் பிள்ளைத் தமிழில் அம்மானைப் பருவம் எட்டவதாகச் சுட்டப்பட்டுள்ளது. இனி இத்தொடரில் நாம் காணப் போகும் அடுத்த சில பருவங்கள் பெண்மக்கள் அல்லது ஆண்மக்களுக்கே உரித்தானவையாகும். நயம்படப் பாடப்பட்ட இனிமையான பல பிள்ளைப் பருவங்களைக் காணப் போகிறோம்.

    மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் உரையாசிரியர், ‘பிள்ளையை நோக்கி மாதர்கள் முத்தம்மானை முதலிய அம்மானையை எடுத்தாடிட வேண்டும் எனக் கூறும் பருவமிது என அமைத்தனர்’ என்பார்.

    பெண்குழந்தைகளின் அம்மானை விளையாட்டென்பது ஒரு சிறப்பான விளையாட்டு. இது அவர்களுடைய நுண்ணறிவு எனும் புத்தி சாதுரியத்தினையும், வாக்கு வன்மையையும், பாடல்களைப் புனைந்து, இசையோடு பாடும் ஆற்றலையும், விரைந்து நொடிப்பொழுதினில் கண், கைகள், உடலசைவு ஆகியன ஒருமித்துச் செயல்படுதலையும் வளர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது என அறியலாம்.

    விறுவிறுப்பான அம்மானை விளையாட்டு, ‘துறு துறு’வென மூளைக்கும் வேலை கொடுப்பது! தமிழுக்கும் ஓர் அழகான இலக்கியம்!! மூன்று பெண்கள் அமர்ந்து பாடி, மூன்று அம்மானைகளைக் கொண்டு ஆடுவதால் இந்த விளையாட்டு ‘மூவர் அம்மானை’ எனவும் பெயர் பெற்றது. மூன்று பெண்கள் ஏதேனும் ஒரு செய்தியை அல்லது இறைவன்/ அரசன் பற்றிய கதையை அல்லது அவன் புகழை, வினா- விடையாக, அங்கதமாக, தூற்றுமறைத் துதியாக அல்லது விடுகதை போலப் பாடல்கள் புனைந்து பாடியவாறு அம்மானைக் காய்களை உயர வீசிப் பிடித்து விளையாடும் விளையாட்டே அம்மானை ஆகும்.

    பல சந்தர்ப்பங்களில் அம்மானை எனும் விளையாட்டினை விளையாடிய பெண்களால் புனைந்து பாடப்பட்டு வந்த பாடல்கள், ‘மூவர் அம்மானை’ எனும் பெயரில் தொகுக்கப்பட்டு 1861ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட ஒரு நூலில் காணப்படுகின்றன. இவை பெண்கள் அம்மானை ஆடுவதாகக் கருதியோ, அம்மானை ஆடுவதற்காகவோ புலவர்களால் புனையப்பட்டனவாகவும் இருக்கலாம்.

    பண்டைக் காலம் தொட்டு, மனிதர்கள் வாழ்க்கையை ஒழுங்கான நாகரிகமான நெறியாகக் கடைப்பிடித்து வாழத் துவங்கிய காலத்திலிருந்து, உயர்ந்த சிந்தனைகளும் அதன் தொடர்பான சீரிய எண்ணங்களும் தோன்றி வளர்ந்தன. தமிழ்நாட்டில் ஒரு காலக்கட்டத்தில் சைவ, வைணவ சமயங்கள் வேகம் பெற்று வளர்ந்து உயர்ந்து உன்னத நிலையை அடைந்தபோது மாந்தர்களின் வாழ்வில்  பிறப்பு, இறப்பு, ஆடல், பாடல், விளையாடல், கல்வி, கேள்வி என்ற எல்லா நிகழ்வுகளிலும் இறைவனின் புகழ் ஒரு அங்கமாகவே இசைக்கப்பட்டது.  அங்கதமாக, விடுகதையாக, புராணங்களாக, பக்தி இலக்கியங்களாக இவை தழைத்து வளர்ந்து தனிச் சிறப்புப் பெற்றன. சிறப்பாக, மகளிர் தம்முடைய தினசரி நடவடிக்கைகளான நீராடல், பலவிதமான விளையாட்டுகளைப் பொழுது போக்காக விளையாடுதல் ஆகிய எல்லாவற்றிலும் இறைவன் தொடர்பான பாடல்களைப் பலவிதமாகப் பாடி மகிழ்ந்தனர்.

    இவற்றுள்  பாவை நோன்பு, அம்மானை ஆகிய பெண்களின் விளையாட்டுகள் தொடர்பான நயம் மிகுந்த வாய்மொழி இலக்கியங்கள் என்னும் பாடல்கள் பின்பு சமய இலக்கியங்களிலும் இடம் பெற்றன. அவற்றுள் ஒன்று தான் அம்மானை எனப்படுவது.

    அம்மானை என்பது சிறு பெண்கள் முதல் எல்லா வயதுப் பெண்களும் விரும்பி ஆடும் ஒரு விளையாட்டாகும். இதற்காகவே செல்வந்தர் வீடுகளில் அம்மானைக் காய்கள், பெருமுத்துக்கள், பவளம், மரகதம் முதலியவற்றாலும், பொன்னாலும் செய்யப்படும். மற்றபடி, வழுவழுப்பான மர உருண்டைகளும், உலர்ந்த உருண்டைக் காய்களும் இன்ன பிறவும் கூடப் பயன்படுத்தப்பட்டன.

    பாடலைப் பாடி ஆடுவதனால் இதுவொரு அழகான இலக்கியமாகவும், உலா, கலம்பகம், பிள்ளைத் தமிழ் ஆகிய இலக்கியங்களில் ஓர் உறுப்பாகவும் அமைந்துள்ளது. மணிவாசகப் பெருந்தகையும் அம்மானைப் பாடல்களைப் பாடியாடும் பெண்கள் ஈசன் புகழை அழகுறப் பாடுவதாகப் பாடல்களை அமைத்துள்ளார்.

    அழகான, பொருள் நிறைந்த, இத்தகைய மூவர் அம்மானைப் பாடல்கள், கலம்பகம் எனும் நூல்களின் ஒரு அங்கமாக விளங்குகின்றன.  கலம்பகம் என்பதற்குக் கதம்பம் என்று பொருள் என்பார் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர். பலவகைப் பாக்களால் இயற்றப் பெறுவதும் பலவகைப் பொருள்களைக் கொண்டதுமான ஒருவகைச் சிற்றிலக்கியமே கலம்பகம் எனப்படும். கலம்பகம் என்னும் சொல்லில் கலம் என்பது பன்னிரண்டையும் பகம் என்பது அதில் பாதியான ஆறினையும் குறிக்கும். ஆகவே பதினெட்டு உறுப்புகள் அமையப் பாடப் படுவது கலம்பகம் எனப்படும். அம்மானை என்பதும் இதில் ஒரு உறுப்பாக இடம் பெறும்.

    மூன்று பெண்களில் முதலாமவள் ஒரு பாட்டுடைத் தலைவனை மனத்தில் கொண்டு அவன் பற்றிய பொதுவான ஒரு செய்தியைக் கூறி அம்மானைக் காயை உயர வீசி ‘அம்மானை’ என்பாள்; இரண்டாவது பெண் அந்தச் செய்தியுடன் பொருந்திய ஒரு கேள்வியைக் கேட்டுக் காயை வீசி ‘அம்மானை’ என்பாள்; மூன்றாமவள் அதற்கு இரு பொருள் படும்படியான ஒரு சாமர்த்தியமான விடையைக் கூறிக் கொண்டே அம்மானையை வீசிப் பிடித்து ‘அம்மானை’ என்பாள். இதுவே அம்மானை விளையாடும் முறையாகும். காலம் செல்லச் செல்ல சில வேறுபாடுகளும் கொண்டு அம்மானை விளையாட்டு காணப்படுகிறது.

    திருப்பேரூர்க் கலம்பகத்தில் காணும் ஒரு அழகிய பாடல்:

    முதல் பெண் அம்மானை ஆட்டத்தை ஆரம்பித்து வைக்கிறாள்: புதிர் போடுவது போல ஒரு சேதியைக் கூறுகிறாள்: “பட்டிநாதன் எனப்படும் பேரூர் ஈசன், காட்டில் வேடனாக அலைகின்றவன்; கடலில் வலைவீசி மீன்பிடிப்பவன்; வயலில் பள்ளனாக இறங்கி வேலையும் செய்பவன், பார்த்தாயோ அம்மானே!” என அவனது திருவிளையாடல்களை (!) செய்தியாகக் கூறுகிறாள். தாள லயத்துடன் அம்மானையையும் உயரே வீசிப் பிடிக்கிறாள்.

                ‘காட்டிலே வேட்டுவன்பைங் கடலில் வலைவாணன்

                நாட்டிற்பள் ளன்பட்டி நாதன்கா ணம்மானை’

    அடுத்தவள் வேண்டுமென்றே குதர்க்கமாக, “அப்படியென்றால்  வேதம் ஓதும் அந்தணர்கள் அவனைத்  தம்வீட்டில் சேர்த்துக்கொள்ளும் பெருமை எப்படி ஆயிற்றோ அம்மா?” என வினவுகிறாள்.

                ‘நாட்டிலே பள்ளனெனில் நான்மறையோர் ஈங்கிவனை

              வீட்டிலே சேர்த்துகின்ற மேன்மையென்ன அம்மானை’

    அதற்கு மூன்றாமவள், “அந்தப் பெருமான் உலகியலுக்கு அப்பாற்பட்டவனடி அம்மானே! வீட்டுக்கும் உரியவனானவன் பார்!” என சாமர்த்தியமாக விடை கூறுகிறாள். “ஆமாம்! வீட்டின் உரிமையாளனைச் சேர்க்காமல் இருக்க இயலுமா?”எனும் பொருள் மறைந்து நிற்கிறதல்லவா?

                ‘வீட்டுக் குரிய விகிர்தன்கா ணம்மானை.’

    ‘பேரூரின் பட்டிநாதன் ஆகிய சிவபிரான் வேட்டுவனாகவும் (அருச்சுனனுக்கு வரமருளக் கொண்ட வேடம்), வலைவாணனாகவும் (திருவிளையாடல்), பள்ளனாகவும் (பேரூர்ப் புராணம்) எல்லாம் வந்தாலும், அவர்களிலிருந்து வேறுபட்டு வீடுபேற்றை (முத்தியை) அளிக்கவல்லவனாகவும் அல்லவோ திகழ்கிறான்,’ என்பது உட்பொருள்! பேரூர் முத்தித்தலம் ஆகும்! அப்பொருள் இதில் தொக்கிநிற்பது மிகுந்த அழகாக உள்ளது!

    ‘மானே! அம்மானே!’ எனும் பாடலுக்கேற்ற விளி அடுத்தடுத்த வரிகளில் வருவதனால் இவ்விளையாட்டு அம்மானை எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்று எண்ணவும் இடமுள்ளது.

    பழங்காலந்தொட்டு வாய்மொழி இலக்கியமாகவே இருந்த இந்தப் பழமையான அம்மானை விளையாட்டை கி. பி. 2ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக எழுத்தில்- சிலப்பதிகாரத்தில் பதிவு செய்தவர் இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்தின் வாழ்த்துக் காதையில் இளங்கோவடிகள் ‘அம்மானை வரி’ என நான்கு பாடல்களைப் பாடியுள்ளார். இவை சோழ வம்சாவளி வழிவந்த மன்னர்களின் பெருமையை விளக்கிக் கூறி, அத்தகையதொரு சோழ மன்னனை அடைய விழையும் பெண்களின்  விருப்பமாகப் பாடப்படுகின்றன.

    இவற்றை இங்கு விளக்கியதன் காரணம், ஒரு மிகத் தொன்மையான தமிழ் மகளிர் விளையாட்டு, இலக்கியத்தின் மூலமாக எவ்வாறு பழந்தமிழர் வரலாற்றுச் செய்திகளையும், புராணங்களின் சிறப்பையும், அவற்றின் கவிதை நயத்தையும் படம் பிடித்துக் காட்டுகின்றது எனப் புரிந்து கொண்டு ரசிப்பதற்காகத்தான்!

    இவையும் மூவர் அம்மானை வகையைச் சேர்ந்தவை: மூன்று பெண்கள் கூடிப் புராணங்கள் புகழும் சோழ மன்னர்களின் பெருமையைப் பாடி வாழ்த்துகின்றனர்.

    முதல் பெண்: “மிக்க நீரைக் கொண்ட கடலால் சூழப்பட்ட இவ்வுலகினை ஆட்சி செய்து  விண்ணவர் கோனாகிய இந்திரனின் உயர்ந்த அரணைக் காத்தவன் யார் சொல்? அம்மானை!”

                வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்

               ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை!

    இரண்டாமவள்: “இந்திரனின் உயர்ந்த மதிலினைக் காத்த வலியோன், விண்ணில் அசைந்து கொண்டிருந்த மூன்று ஊர்களையும் அழித்த சோழ மன்னன் பாரடி, அம்மானை!”

                ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில்

               தூங்கு எயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை!

    மூன்றாமவள் முத்தாய்ப்பாகக் கூறுகிறாள்: “அவ்வாறாயின், நாம் அந்தச் சோழனின் புகார் நகரத்தின் பெருமையைப் பாடுவோம் அம்மானை!”

                சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை!

               (வாழ்த்துக்காதை- வஞ்சிக் காண்டம்-16)

    இவர்கள் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியனையும், மனுநீதிச் சோழனையும், சிபிச் சக்கரவர்த்தியையும், கரிகால் சோழனையும்,  வடவரை மேல் வேங்கைக் கொடியினைப் பொறித்த  சோழ மன்னனையும் பாடி, இவ்வாறெல்லாம் மங்கையர் அம்மானையைக் கையிலெடுத்துப் பாடுவதும் ஆடுவதும், அந்த ஆத்திமாலை சூடிய வேந்தனைத் தழுவிக் கூடிக் கொள்ளத்தான் எனக் கூறி மகிழ்கின்றனர்.

    இது தமிழ் மன்னர் புகழ் கூறும் அம்மானை!

    அம்மானை ஆடுவதுடன் அதற்கியைய இறைவன் பெருமையைப் பாடுவதையும் விரும்புகின்றனர் மாணிக்கவாசகர் காலத்துப் பெண்டிர்! தத்துவப் பொருள் செறிந்த இப்பாடல்கள், இறையனுபவத்தை உணர்ந்து விளக்கிக் களிக்கும் தொண்டர் கூற்றாக அமைகின்றன. இருபது இனிமையான பாடல்கள் உள்ளன- மூவர் அம்மானை எனக் கருத இயலவில்லை; மூன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளையாட இடமுண்டு எனப் பாடல்களைப் பயின்றாலே புரிந்து விடும். அம்மானை விளையாடும் பெண்களில் ஒவ்வொருத்தியும், ‘இவ்வாறு எனக்கு ஈசன் அருள் புரிந்தான்,’ எனக் கூறி அம்மானையை வீசி ஆடுகின்றாளாம். பக்தி ரசம் கசிந்துருகும் அமுதப் பாடல்கள்.

    அம்மானையாடும்போது காய்களை மேலே வீசி எறிந்து, ஒரு கையால் விரைந்து பிடித்து ஆட வேண்டும்; அப்பொழுது கையில் அணிந்துள்ள அழகிய வளையல்கள் ‘கல கல’ என ஒலி செய்கின்றனவாம்; பெண்களின் கண்களும் அம்மானை போகும் போக்கில் சென்று நோக்க வேண்டும் அல்லவோ? அப்போது தலையை உயர்த்துவதும் தாழ்த்துவதுமாய் இருப்பதால் காதில் அணிந்துள்ள மகரக் குழைகள் தாமும் சேர்ந்தாடுகின்றனவாம். இத்தனை வேகத்தில் தலை அசைவதால் மையை ஒத்த கருங்குழல் அவிழ்ந்து தோளிலும் கழுத்திலும் புரளுகின்றதாம்; கூந்தலில் சூடிய மலர்களில் இருந்து தேன் வழிந்து ஓடுகின்றது; அதனை உண்ண வரும் வண்டுகள் ரீங்காரமிட்டு ஒலிக்கின்றன.

                ‘கையார் வளைசிலம்பக் காதார் குழையாட

                மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்ப’

    இவ்வாறெல்லாம் ஆகும்படி தன்னை மறந்து இவள் யாரைப் பாடி ஆடுகிறாள்? எதனில் ஆழ்ந்து தன் நிலை மறந்தாள்?

    சிவந்த நிறத்து அண்ணல் அவன்- செய்யான்! வெண்மையான திருநீறு அணிந்தவன்; எல்லாத் தேவர்களும் அவனை வந்து கைகுவித்து (சேர்த்து) வணங்க, அவன் மட்டும் கைகளைக் குவிக்காமல் விரித்து, அபய வரத முத்திரை காட்டி அவர்களை அரவணைக்கிறான். ஆகவே சேர்ந்தறியாக் கையான்! எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன்; அன்பர்கட்கு மெய்ப்பொருளாய் இருப்பவன்; அவன்பால் அன்பு கொள்ளாதவர்களுக்கு இருந்தும் இல்லாதவனாக இருக்கும் அறிவுப் பொருளை அவள் பாடுகிறாள்; மெய்மறக்கிறாள். ஆடுகிறாள்; தன் நிலையையும் மறந்தாள். அவன் தாளில் தலைப்பட்டாள்!

                ‘செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக்

                கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு

                மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை’

    அவன் யார்? எங்கு உள்ளான்? அவன் திரு ஐயாறு எனும் தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமான்; நாம் அவனைப் பாடி அம்மானை ஆடுதும்; அவனைப் பாடி ஆடுவோம் காணாய் பெண்ணே!

                ‘ஐயாறு அமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்!‘ (திரு அம்மானை-13)

    இறைவனிடத்தில் உள்ளம் சென்று விட்டதால் தன் நிலை, சுற்றுப்புறம் எல்லாம் மறந்து விடும் நிலையை அம்மானை ஆடும் பெண்ணின் கூற்றின் மூலம் நயம்பட உரைக்கிறார் மணிவாசகப் பெருந்தகை!

    இது நம்மை இறைவனோடு இணைக்கும் அம்மானை!

                _______________________________

    பிள்ளைத் தமிழின் அம்மானைப் பருவப் பாடல்களைக் காணலாம்.

    முதலாக, அம்மானை விளையாட்டைப் பெண்குழந்தை விளையாடுவதனை ஒரு பருவமாக்கிப் பாடியது எதனால் எனச் சிந்திக்கலாம். எவ்வாறு இது விளையாடப்படுகிறது என மேலே கண்டோம். ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில் இவ்விளையாட்டுகள் அதன் உடலையும் உள்ளத்தையும் வலுப்படுத்தி, பொறிகளை ஒருமுகப்படுத்தச் செய்விக்கின்றன. ஆகவே அம்மானை, கழங்கு, பந்தாடுதல் ஆகிய விளையாட்டுகள் சிறுமியரின் வளர்ச்சிக்கு இன்றியமையாதனவாகும்.

    பிள்ளைத்தமிழ் எனும் சிற்றிலக்கியத்தில் இவை வகிக்கும் பங்கு இன்னும் அதிகப்படியான ஒரு பரிமாணம் கொண்டதாகும். அன்னை தெய்வமான பராசக்தி மீதே வெகுவான பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடப்பட்டுள்ளன. அவளோ அகிலாண்ட கோடியீன்று அன்னையாகிப் பின்னும் கன்னியென மறைபேசும் ஆனந்தரூப மயிலாவாள். அவளுடைய பெருமைகளை எல்லாம் பகர்ந்திட இது இன்னுமொரு பரிசாகும். அவற்றில் சிலவற்றைக் காணலாம்.

    அரசிளங்குமரி தடாதகை, தோழியருடன் அரண்மனை நந்தவனத்தில் அம்மானை ஆடிக்கொண்டிருக்கிறாள். விறுவிறுப்பாக உடனாடும் தோழியர் அவள் கையால் பிடித்து ஆடுகின்ற  முத்தம்மானையைப் பற்றிப் பிடித்துத் திரும்ப வீசி இடமும் வலமுமாக அலைந்து நிமிர்வதற்குள் மீனாட்சியோ ஓராயிரம் அம்மானைகளை எடுத்து வீசுகிறாள். அவை வரிசைப்பட வானில் அணிவகுத்து நிற்கின்றனவாம். இதனை நாம் ‘காட்சி உறைந்துள்ளது’ (Frozen picture) எனக் கூறுவோம் அல்லவா? அதுபோன்று அவை நிற்பது எவ்வாறு உள்ளதெனக் குமரகுருபரனார் கற்பனை செய்கின்றார்: ‘அன்னையே! நீ பெற்றெடுத்த எல்லா அண்டங்களையும் எடுத்து வரிசையாக வானில் நிறுத்திவைத்து உலகத்தோருக்குக் காண்பிப்பது போல உள்ளது,’ என்கிறார். மேலும் மீனாட்சி ‘விறுவிறு’வென்று அம்மானை ஆடியபோழ்தில் நந்தவனத்து மலர்களில் மதுவுண்ணும் வண்டுகள் அலைபட்டு ஆர்த்து எழுகின்றன; அவ்வமயம்  பசிய மகரந்தப் பொடியானது பெரும் தூசியாகப் பரந்து உலகை இருளடையச் செய்கின்றது. அதனைக் கண்டு அமராவதியில் வாழும் தேவர்களும் அளகாபுரியில் வாழும் கின்னரர்களும் அம்மையின் சேனை திரும்பவும் ஒரு போருக்குப் புறப்பட்டு விட்டதோ என்று கலக்கம் கொள்கின்றனராம். இவ்வாறு அவர்களைக் கலக்கம் கொள்ளச் செய்யும் மதுராபுரித் தலைவியே! அம்மானை ஆடியருளுக! என வேண்டுபவர் அருமையான ஒரு கருத்தை அனாயாசமாகக் கூறிப் பாடலை நிறைவும் செய்துள்ளார்.

    மனமொத்த தம்பதியரை ‘ஈருடல் ஓருயிர்’ என்பார்கள். இங்கு அம்மை ஒருத்தியே ‘ஓருடல், ஓருயிர்’ ஆகிய புகழ் பெற்றவள். அத்தனின் உடலிலும் சரிபாதியை அவள் பெற்றதனால் அவளை ‘ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண்’ என்று சித்தரிக்கிறார் குமரகுருபரனார்.

                   தமரான நின்துணைச் சேடியரில் ஒருசிலர்

                                 தடக்கையின் எடுத்தாடுநின்

                  தரளஅம்மனைபிடித்து எதிர்வீசிவீசி இட

                                 சாரிவல சாரிதிரியா

              நிமிராமுன் அம்மனையொர்ஆயிரம் எடுத்தெறிய

                                 நிரைநிரைய வாய்க்ககனமேல்

                  நிற்கின்றது அம்மைநீ பெற்ற அகிலாண்டமும்

                                 நிரைத்துவைத் ததுகடுப்ப

              இமிரா வரிச்சுரும்பு ஆர்த்தெழப்பொழிலூடு

                                 எழுந்தபைந் தாதுலகெலாம்

                  இருள்செயச் செய்துநின்சேனாபராக மெனும்

                                 ஏக்கமள காபுரிக்கும்

              அமரா வதிக்கும்செய் மதுராபுரித்தலைவி

                                 அம்மானை ஆடியருளே

                  ஆகம் கலந்தொருவர் பாகம்பகிர்ந்தபெண்

                                 அம்மானை ஆடியருளே!

    முத்து, பவளம், மாணிக்கக் கற்களால் செய்த அம்மானைகளைக் கொண்டு அம்மை விளையாடுவது எப்படிப்பட்ட திருக்காட்சியாக உள்ளது! முத்தால் செய்த அம்மானையானது அம்மையின் தாமரை மலர் போன்ற கையில் பிடிக்கப்பட்டதால், அம்மலர்க்கையின் இனிய நறுமணத்தைக் கொண்டுள்ளது. செறிந்த கூந்தலில் சூடியுள்ள மலர்களை நாடும் வண்டுகள், அவளுடைய மைதீட்டப் பெற்ற கண்களாகிய வண்டுகளுடன் கூடி முயங்கி மயங்குகின்றன. தடாதகைப் பிராட்டி அம்மானையை மேல் வீசி எறிந்து பிடித்து ஆடும்போது மலர்களின் நறுமணம் கமழும் அவளுடைய கூந்தலில் அமர்ந்துள்ள வண்டுகளும் உடன் எழும்பிச் சென்று அந்த அம்மானையின் மேல் கருத்தாகச் சென்று மீளும் அவளுடைய விழிகளாகிய கருவண்டுகளுடன் கூடி முயங்கி மயங்குகின்றனவாம்!

    கொத்தான மாணிக்கத் திரளினால் செய்யப்பட்ட அம்மானையானது குயிலினது குரல் போன்றதும், குழலின் இனிய இசை போன்றதுமான அவளது குரலினிமைக்கு உருகி, குளிர்ச்சி பொருந்திய சிறிய துளிகளைச் சிந்துகின்றன.

    அம்மானையாடும் பெண்மக்கள், பாடலையும் பாடியவண்ணம் ஆடுவர் என்பதனைக் கண்டோம் அல்லவா? மீனாட்சியும் அதற்கு விதிவிலக்கல்ல; தனது குயிலைப் பழிக்கும் குரலில் பாடியபடி அம்மானையாடுகிறாள். அக்குரலின் இனிமைக்குருகி மாணிக்கத்தாலாகிய அந்த அம்மானைக் காய்கள் குளிர்ச்சி பொருந்திய பனித்துளிகளைச் சிந்துகின்றனவாம்.

                முத்தம் அழுத்திய அம்மனை கைம்மலர்

                                 முளரி மணங்கமழ

                       மொய்குழல் வண்டுநின் மைவிழி வண்டின்

                                 முயங்கி மயங்கியிடக்

              கொத்து மணித்திரளிற் செயும் அம்மனை

                                 குயிலின் மிழற்றியநின்

                       குழலினிசைக் குருகிப் பனி தூங்கு

                                 குறுந்துளி சிந்தியிட……..

    பவளத்தாற் செய்யப்பட்ட அம்மானைகளோ, அவள் கையிலெடுத்து ஆடுவதால், அவளுடைய விரல்களாகிய பவளத் தளிரில் உருவாகின்ற சிறந்த செந்நிற ஒளியைக் கவர்ந்து வரப் போவதும் வருவதுமாகத் திரிகின்றனவாம்.

                வித்துரு மத்தில் இழைத்தவி நின்கை

                                 விரற்பவ ளத்தளிரின்

                       விளைதரும் ஒள்ளொளி திருடப் போவதும்

                                 மீள்வது மாய்த்திரிய….

    அன்னையின் அம்மானையாடலை மனக்கண்ணில் கண்டு இன்புற்றதனால் எழுந்த அரிய கருத்துகள் செறிந்த பாடல்கள் இவை எனலாம்.

                  ___________________________________________________________

    பார்வை நூல்கள்: 

    1. திருப்பேரூர்க் கலம்பகம்-  கவியரசு கு. நடேச கவுண்டர்
    2. சிலப்பதிகாரம்- இளங்கோவடிகள்
    3. திருவம்மானை- மாணிக்கவாசகர்
    4. மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    Share
  • சேக்கிழார்  பா நயம் – 33 (அயலோர்)

     திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

    சேக்கிழார்  பா நயம் – 33 (அயலோர்)

    சேக்கிழார்  அருளிய திருத்தொண்டர் புராணத்தைக்  கற்போருக்கு  ஐயங்கள் ஓரிரண்டு தோன்றலாம். அவ்வையங்கள் எல்லாருக்கும் தோன்றுவனவே! கயிலையிலிருந்து  தென்திசையில்  தோன்றி வளர்ந்த சுந்தரரும், அங்கு  மலர்த்தொண்டு புரிந்த  கமலினியாரும்  அநிந்ததையாரும், தமிழகத்தில் பரவையாரும்  சங்கிலியாருமாய்த் தோன்றி, சிவத்தொண்டு  புரிந்து மீண்டும் சிவலோகம்   எய்தினர்.   இறைவனால்  தடுத்தாட்கொள்ளப்பெற்ற சுந்தரரோ, சடங்கவியார் மகளை விட்டு  நீங்கித்  தலந்தோறும்    பதிகப்  பாடல்கள் பாடியவாறே  சென்றார்! ‘‘அந்தச்   சுந்தரர் வாழ்க்கையின்  இடையில், அவரைத் திருமணம்  புரிந்து கொள்ளவிருந்த  சடங்கவி சிவாச்சாரியார் திருமகள் வாழ்க்கை  என்னவாயிற்று?’’  என்ற ஐயம் எல்லாருக்கும் உண்டாகும்!

    அவ்வாறு  கதைப்போக்கில் ஐயம் நிகழும்போது, உடனுக்குடன்  அதனைத் தீர்த்து வைத்து, நூலை  எழுதிச் செல்வது சிறந்த அறிஞர் பெருமக்களுக்கே  உரிய இலக்கியக் கடமை ஆகும். அவ்வகையில்  தமிழ் இலக்கியங்களில் நம்முன்  தோன்றிப் பின் மறைந்த கதை மாந்தர்கள் சிலரைப்  பற்றி விரிவாகவே எழுதலாம். அத்தகைய  கதை மாந்தர்களின்  நிலையை வேறெங்கேனும்  தேடிக் கண்டு பிடிக்கலாம்.

    இங்கே சுந்தரர், சடங்கவி பேதையைத் திருமணம் புரிந்துகொள்ள வந்த சிறப்பை அருகில்  நின்ற மகளிர்  புகழ்ந்தார்கள்.  வலிமை  மிக்க காளையைப் போன்று  விளங்கிய சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அழகைப்  புகழ்ந்த போது, ‘’கண்கள் எண்ணிலாத வேண்டும்  காளையைக் காண!’’ என்றனர். மேலும் “பெண்களில்   உயர  நோன்றாள் சடங்கவி  பேதை’’ என்றனர். “சிவவேதியர்   குலப் பெண்களுள்  இவளே, பெரிதும்  உயர்வைப் பெறத்  தவம்  செய்தாள்!’’ என்று சற்று வேறுபட்ட வகையில் புகழ்ந்தனர்.

    இங்கே சுந்தரரின்  அழகும், ஒப்பனையும் மிக விரிவாகக் கூறப்பட்டன.   ஆனால், சடங்கவி சிவாச்சாரியாரின் மகள், பேதை என்பன  தவிர வேறு  வர்ணனைகள்  இல்லை. அவர் நோற்றார் என்பதே அவரது  சிறப்பாகக் கூறப்பெறுகிறது. அவள் சுந்தரரை அடைய  நோன்பு செய்திருக்கிறார். சிறந்த  சிவனடியாரை அடைதல்  மட்டுமே சைவப்  பெண்டிரின் நோக்கம் என்பதை,

    “எம்கொங்கை  நின்  அன்பர் அல்லார் தோள்  சேரற்க
     கங்குல் பகல்  எம்கண்   மற்றொன்றும்  காணற்க
     இங்கு இப்பரிசே  எமக்கு  எங்கோன்  நல்குதியேல்
     எங்கு எழின்  எஞ்ஞாயிறு  எமக்கு”

    என்று மணிவாசகர் கூறுகிறார்.  எந்தச் சூரியன் எந்தத் திசையில் உதித்தாலும் எமக்கு அதில் நாட்டமில்லை. அதாவது அடியார் உறவே சிவலோகம், மற்ற நிகழ்ச்சிகள் எம் தியானத்தைக் கலைக்க மாட்டா என்பது அதன் பொருள்.   அந்தப் பெருவாழ்வை  அடைவதையே, ‘பெண்களில் உயர’ என்ற தொடர் குறிக்கிறது. சுந்தரரைத் தம் வாழ்முதலாக  ஏற்றுக்கொண்ட சடங்கவி பேதை,  அவரைப் புறத்தார் பார்வையிலும், தம் அகத்திலும்  என்றும் நீங்காத நிலையைப்  பெற்றாள். திருமண நாளிலேயே , அதற்குரிய  சடங்குகள் நிகழாத  நிலை.  ‘‘சடங்கு அவி’’ நிலை. இதனையே சிவ வேதியன் மகளும் அடைந்தாள். அதனால்  உலகில் சிவநெறியை  உயர்த்தும் நாவலூரரை, தம் தனி நாதனாக ஏற்றுக்கொண்ட அவர், உள்ளும் புறமும் அவரையே நீங்காது நினைந்து, இணைந்து உணரும்  நெறியிலிருந்து வழுவாது  வாழ்ந்தார். இதனைச் சேக்கிழார்,

    “அன்றே  மணம்  அழியும் 
     செயலால்  நிகழ் புத்தூர் வரும்   சிவவேதியன்  மகளும்     
     உயர் நாவலர்  தனி நாதனை  ஒழியாது  உணர்  வழியில்
     பெயராது”

    எனப் பாடினார். ஆகவே சுந்தரர் வாக்குப் படியும்,

    “இம்மையே தரும்சோறும்கூறையும் ஏத்தலாம் இடர்  கெடலும்ஆம்
     அம்மையே  சிவ லோகம் ஆள்வதற்கு யாதும்  ஐயுறவு  இல்லையே!’’

    என்ற நிலையில் ’’உயர்சிவலோகமும் எளிதாம்வகை பெற்றாள்’’ என்று சேக்கிழார் பாடியதன் பொருளை நாம்  புரிந்துகொள்ளலாம். மற்றையோர் திருமணத் தடையோ, வாழ்க்கையில்  இடையூறோ  அடைந்தால் வெவ்வேறு வகையில் நோன்பு நோற்றுச்  சுவர்க்கம்    புகுவர்.   இதனைச்  சேக்கிழார்,

    “அயலார்  தவம்  முயல்வார்’’ என்று  குறிக்கிறார்.  ஆகவே சிவவேதியன் மகளான  சடங்கவி பேதை, பெண்களில்  உயர நோற்றாள்;  அதனால்  சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள் என்ற சேக்கிழாரின்  வாக்கு, நமக்கு மனநிறைவு  அளிக்கிறது.  இனி முழுப் பாடலையும்  பயில்வோம்.

    “அயலார்தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும்
      செயலால் நிகழ் புத்தூர் வரு சிவவேதியன் மகளும்
      உயர்நாவலர்  தனிநாதனை  ஒழியாதுஉணர் வழியில்
      பொறாது உயர் சிவலோகமும் எளிதாம்வகை பெற்றார்”

    ‘இப்பாடலால் ஆசிரியர் இவ்வம்மையாரது பிற்சரிதங் கூறி முடித்துக் கொண்டதுமன்றி, ஏனையோரைப் போல, இவ்வம்மையார் தம் நாயகனை உடம்பு நாயகனாகக் கொள்ளாது தியானப் பொருளாகிய உயிர்நாதனாகக் கொண்டு ஒழுகினமையால் அவரையும் பிரியாது, பெறற்கரிய சிவலோக வழியும் பெற்றார் என்று இவரது வாழ்க்கையின் உயர்வையும் காட்டினார். இவ்வாழ்வு பெற உபகரித்து நின்றமையால் அம்மையாரை விட்டு நீங்கினார் என்ற சொல், நம்பிஆரூராரிடத்துச் சாராமையுங் காட்டியவாறு. திலகவதியம்மையார் சரிதமும் இங்கு வைத்து உணர்தற்பாலதாம். இவ்வுண்மைகளை உணராது, ஒரு கணவனிறப்பவும், அல்லது இருக்கவும், ஒன்றன்பின் ஒன்றாகப் பல மணங்களையும் நிகழ்த்தலாம் என்று கூவும் நவீன உணர்ச்சிக்காரர்கள் இச்சரிதங்களை உய்த்து ஓர்ந்து ஒழுகுவார்களாக.’

    என்ற  சிவக்கவிமணியார்  உரையையும்  இங்கே நாம் சிந்திப்போம். இவ்வகையில்  நம் மனத்துள் எழும் ஐயத்தை நீக்கி உரிய விளக்கத்தையும் அளித்த  சேக்கிழார் பெருமானின்  பா நயம்  போற்றுதற்கு  உரியது.

    ============= சே. பா ந. 33 === ========

    Share
  • பட்லூர் வாகீசுவரர் கோயில் – அனுலோம பாரசிவர் பற்றிய கல்வெட்டு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    பட்லூர் வாகீசுவரர் கோயில்

    அனுலோமர், பிரதிலோமர் எனக் கலப்பினச் சாதி மக்கள் இரண்டு பெரும் பிரிவினராக முறைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்கு மனு தர்மம் சான்றாகக் காட்டப்படுகின்றது. அனுலோமர், உயர்சாதி தந்தைக்கும் தாழ்ந்த சாதி அன்னைக்கும் பிறந்தவர். இதாவது சத்திரிய உயர்சாதி ஆணுக்கும் வைசிய குல தாழ்ந்த சாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர், அனுலோமர் எனப்பட்டனர்.  கராணி என்போர் வைசிய தந்தைக்கும் சூத்திரத் தாய்க்கும் பிறந்தவர். இது தந்தை வழிமுறை பிறங்கடையை அடையாளப்படுத்தி சொல்லப்படுகின்றது. தமிழ்க் கல்வெட்டுகளில் அனுலோமர் பாரசிவர், பஞ்ச கம்மாளர்கள், பதினெண் விஷயத்தார்கள் என்ற வாணிகக் குழுவில் உள்ள பலர், வணிகர்களாக அறியப்படுகின்றனர். பொற்கொல்லர் என்பாரும் இதில் ஒருவர்.

    அனுலோமர், பிரதிலோமர் என்ற வரைவிலக்கணப்படி தான் (definition) இச்சாதிகளில் உள்ள எல்லா ஆடவருடைய பெண்டிருடைய தாயும் தந்தையும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்களா? என்றால் தெளிவான விடை இல்லை. இதாவது, ஒரு சாதியின் கலப்பு முன்னோர் என்றோ, எப்போதோ, ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு நாட்டின் ஒரு மூலையில், ஏதோ ஒரு காரணத்திற்காக அவ்வாறு சேர்ந்த கலப்புச் சாதியர் தானே ஒழிய, ஒவ்வொரு தலைமுறையின் தாயும் தந்தையும் கலப்புச் சாதியர் அல்லர் என்ற புரிதல் ஏற்பட்ட மாத்திரத்திலேயே இதன் பொருள் குளறுபடி எல்லோராலும் உணர முடிகின்றது. அவ்வகையில் அனுலோமர் பிரதிலோமர் என்போர் கலப்புச் சாதியார் அல்லர் என்பதே உண்மை.

    இதை எல்லாம் சாஸ்திரத்தில் மட்டுமே படித்து அறிந்திருந்த ஒரு சில முட்டாள் பிராமணர்கள், கல்வெட்டுகளில் சிற்சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறித்துவிட்டனர். இவ்வாறு கல்வெட்டில் அனுலோமராக, பிரதிலோமராகக் குறிக்கப்பட்ட இச்சாதி மக்களுக்கு தாம் அவ்வாறான கலப்புச் சாதியர் என்பதே தெரியாது. தெரிந்திருந்தால் அதை ஏற்றிருக்க மாட்டார்கள், எதிர்த்திருப்பார்கள் என்பது தான் உண்மைக்கும் உண்மை. ஏனென்றால் அவர் தம் பெற்றோர் எல்லோரது பெற்றோரையும் போல ஒரே தொழிலைச் செய்கின்ற ஒரே சாதி மக்கள் தாம், கலப்புச் சாதியர் அல்லர்.

    ஆனால் இக்காலத்தே வரலாறு எழுதும் தொல்லியல் வல்லுநர்கள் பலர்,  இந்த உண்மையைச் சற்றும் எண்ணிப் பாராமல், கல்வெட்டில் தவறாகக் குறித்த பிராமணர்களைப் போல, இவர்களும் இதற்கு மதிப்பு (weightage) கொடுத்து சோழர் ஆட்சிக் காலத்தே வர்ண ஏற்றத் தாழ்வு, சாதி வேறுபாட்டுக் கொடுமை தலைவிரித்தாடியது, ஆதலால் சோழ ஆட்சி கேடுகெட்ட ஆட்சி என்று மதிப்பளிக்கின்றனர். இது இவர்கள் எந்த அளவிற்கு முட்டாள் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டிவிடுகின்றது.

    உண்மையில், ஊருக்கு ஊர் இடம் பெயருகின்ற ஆண்களில், குறிப்பாக, சத்திரியர், வணிகர் என்போர், மனக்கட்டுப்பாடு இல்லாமல் வேற்று சாதிப் பெண்கள் மூலம் கலப்புப் பிள்ளைகளுக்கு வழிகோலினர். அப்பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும் பிழைப்பிற்கு ஏதோ ஒரு தொழிலை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகின்றது. அந்நாளில் இந்நாளைப் போல் விரும்பிய தொழிலை ஒருவர் ஏற்றுச் செய்ய முடியாது. அத்தொழிலை ஏற்கெனவே செய்துகொண்டிருக்கும் சாதி மக்கள் அதை எதிர்ப்பார்கள். இதைக் குற்றம் என்று மன்னனிடம் முறையிடுவார்கள். அப்படி ஒரு சூழல் வரும் போது மன்னன் புதிய கலப்பு சாதிக்கு ஒரு பெயரை வழங்கி ஏற்பிசைவு (recognize) தந்து பிழைப்பதற்கு இன்னின்ன தொழிலை மேற்கொள்ளலாம் என்ற உரிமையையும் தந்து பிணக்கைத் தீர்த்து வைக்கிறான்.

    இப்படித் தான் சாதிகளை மக்கள் உருவாக்கி விடுகிறார்கள் அதற்கு மன்னன் ஏற்பிசைவு மட்டும்தான் தருகிறான்.  மன்னன் வேண்டும் என்று எந்த ஒரு சாதியையும் உருவாக்குவதில்லை. ஆனால் வரலாறு எழுதுவோர், பழிபோடுவது என்னவோ மன்னன் மீது அல்லது பிராமணர் மீது தான். தமிழ்நாட்டில் தமிழ்ச் சமூகத்தில் வர்ணக் கோட்பாடு, மனு தர்மக் கோட்பாடு கல்வெட்டளவில் தான் இருந்தது. பலரும் உரைப்பது போல அது சமூகப் பிரச்சனையாக தலைவிரித்தாடியது இல்லை.

    பாரசிவர் என்பவர் பிராமணத் தந்தைக்கும் சூத்திரத் தாய்க்கும் பிறந்தவர் என்ற சாஸ்திரக் கூற்றின் படி அனுலோமப் பிரிவில் வைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டுக் கோவில்களில் அம்மனுக்குப் பூசனை ஆற்றிய உவச்சர் மரபினர் ஆவர். இவர்கள் பல கோவில்களில் பிராமணருடன் பிராமணரல்லாத பூசகராக, காணி உரிமையோடு பணி புரிந்தது கல்வெட்டுகளில் பதிவாகி உள்ளது. ஈங்கு  நாலு கல்வெட்டில் அவர் பற்றிய குறிப்பு கீழே. 

    ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பட்லூர் அமைந்த வாகீசுவரர் கோயில் கருவறை தென்மேற்கு ஜகதி கல்வெட்டு:

    1. ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலஞ் சிறக்க ஸ்ரீ வீரராசேந்திர தேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவதற்கெதிர் ஒன்பதாவது வ
    2. டகரை நாட்டு பட்டில் ஊரும் ஊராளிகளோம் எங்களூர் இந்நாயனார் வாகீஸ்வரமுடையாற்கு னாங்கள் ஏரி இட்டுக் குடத்தபடியாவ
    3. து பசுங்கண்ணித் தாழையோமுற்று இதில் நீர் பாஞ்ச நிலங்கண்டிட மெல்லாம் இறையின்றி ஏகபோகமாக இட்டு
    4. குடுத்தோம் வாகீசுரமுடையாற்கு. இக்கோயில் காணியுடைய பிராமணரில் பாலாசிரிய கோத்திரத்து பொ[ல்]லாத பிள்ளை ம
    5. கன் மாதேவ பட்டனும் இக்கோயிற் காணி உடைய உகச்சரில் பாரேசிவரில் பூமந்வந்நியான வீரபத்திர சக்கரவத்திய் இக்குளம்
    6. உழுது மூன்றிலொன்று னாயநாற்கு குடுப்பார்களாகவும் இவ்வேரியைக் கோயிற்றமந்னாதல் ஊராராதல் மாற்றுவாந் யாதொ
    7. ருவன் வழியேச்சமறுவாந். இது பன்மாஹேஸ்வர ரட்சை.

    ஊரும் – ஊரில் வாழ்வோர்; ஊராளிகளும் – ஊரைச் சேர்ந்த வெளியிடத்தில் வாழ்பவர்; ஏகபோகமாக – முழுஉரிமையாக; கோயில்காணி உடைய பிராமணர் – official priest; உவச்சர் – காளி, துர்க்கை பூசகர்; ஏரி – குளம்; கோயிற்றமன் – கோயில் பணி நிகழ்த்தும் பூசகர் மேற்பார்வை; ஊராராதல் – ஊரார் மேற்பார்வை; மாற்றுவான் – தனக்கு உரிமை மாற்றுவான்; ஏழு அச்சம் அறுவான் – ஏழுதலைமுறை இல்லாது ஒழிவான்; மாகேசுவரரர் – சிவனடியார்.

    விளக்கம்: கொங்கு சோழன் வீர ராசேந்திரனின் 29+9 =38ஆம் ஆண்டு ஆட்சியின் (கி.பி. 1244) போது வடகரைநாட்டில் அடங்கிய பட்டில் ஊரான இன்றைய பட்லூர் ஊரைச் சேர்ந்தவர்களும் அதில் வாழ்வோரும் சேர்ந்து தமது ஊர் இறைவரான வாகீசுவரருக்கு ஏரி ஒன்றைக் கட்டிக் கொடுத்தனர். அதற்குப் பசுங் கண்ணித்தாழை முற்று எனப் பெயரிட்டனர். இந்த ஏரியையும் அதன் நீர் பாயும் நிலத்தையும் வரியின்றி முழு உரிமையாக வாகீசுவர கோயில் இறைவர்க்கு கொடுத்தனர். இக்கோயில் காணியுடைய பிராமணர் பாலாசிரிய கோத்திரத்தில் பிறந்த பொல்லாப்பிள்ளையின் மகன் மாதேவ பட்டன், அதேபோல இக்கோயில் காணி கொண்ட அம்மன் கோயில் உவச்சன் ஆன பாரசிவரில் பூமன் வந்நியான வீரபத்திர சக்கரவர்த்தி ஆகிய இருவரும் இக்குளத்தின் நீரைக் கொண்டு உழுவித்து அதில் விளையும் பயிரில் மூன்றில் ஒன்றை இக் கோயில் இறைவனுக்கு கொடுக்க வேண்டும். இவ் ஏரி கோயில் மேறபார்வையில், ஊரார் மேற்பார்வையில்  இருப்பதைத் தடுத்துத் தம் சொந்த நலனுக்கு மாற்றிக் கொள்பவன் குலம் ஏழு தலைமுறைக்கு இல்லாததாகிப் போகும். சிவனடியார் இதை முறைமையைக் காக்க வேண்டும்.

    பொதுவாக, கோயிலுக்கு நிலம், விலங்கு, பொன் ஆகிவற்றைத் தான் கொடையாகத் தருவார்கள். அதைத் தவிர்த்து இந்த ஊர் மக்கள் நீர்ப் பாசனத்திற்கு வேண்டி ஏரி அமைத்துக் கொடுத்து உள்ளனர். நீரை எந்த நிலத்தில் பாய்ச்சிப் பயிர் செய்வது என்பதைக் குறிக்காமல் 3இல் 1 பங்கு விளைச்சலை மட்டும் இறைவனுக்குத் தப்பாமல் கொடுக்க வேண்டும் என்பது கேள்விக்கு இடம் அளிக்கின்றது.

    பார்வை நூல்:  ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொ.து, சென்னை. பக்.192

    ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பட்லூர் அமைந்த வாகீசுவரர் கோயில் தெற்கு கிழக்கு  பட்டிகைக் கல்வெட்டு:

    1. ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலம் சிறக்க கோவிராஜகேசரி பந்மராநத் திரிபுவனச் சக்கரவர்த்திகள் வீர ராசேந்திர தேவர்க்கு திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற திருநல்லியாண்டு 201 (21) எதிர் பத்தாவது ஆநிமாஸ முதலாக வடகரை பட்டில்லூராளிகளும் நடுவில் நித்யகண்ட சக்கரவத்திகளும் தேவர்க்கும் எம்மிலி _ _ _
    2. _ _ _ யாவது மேக்கடுக்கு கல்லுக்கு மறைக்கும் கிழக்கு  பிடாரியார் தேவதானத்துக்கு மேற்கும் தெற்கு இட்டேறிக்கு வடக்கும் இவ்வெல்லைக்குட்பட்ட நிலமும் இந்நாயனாற்கு பூசிக்கும் நம்பிமார் பட்டில் காணியாளருக்கும் மாணபோகத்துக்கும் பட்டில் காணியாள உவச்சரில் பாரேசிவர் பூமந் வந்நியாந வீரபத்திர சக்கரவத்திக்கு மாணபோகம் _ _ _ மேற்கு பிடாரியார் தேவதானத்துக்கு கிழக்கும் கிழக்கு இட்ட கல்லுக்கு மேற்கும் தெற்கு ஒழுகு கல்லிச்சிறு பொழிக்கு வடக்கும் _ _ _

    திருவெழுத்திட்டு – முடிசூடி; செல்லா நின்ற – நடப்பாண்டு, current year; திருநல்லி யாண்டு – ஆட்சி ஆண்டு; எதிர் – வருகின்ற, வந்த; நடுவில் – சூழ அமர்ந்து; பிடாரி – காளி, துர்க்கை போன்ற அம்மன்; இட்டேறி – வயல்கள் நடுவே செல்லும் வரப்புப் பாதை; நம்பிமார் – பிராமணர்; மாணபோகம் – மழைநம்பி பயிரிடுதல் அல்லது சாய்நிலத்தில் பயிரிடுதல் ; ஒழுகு – பாயும்

    விளக்கம்: கொங்கு சோழன் வீர ராசேந்திரனின் 21+10 = 31 ஆம் ஆண்டு ஆட்சியின் போது (கி.பி. 1237) ஆனி மாதம் முதலே பட்டில் ஊரைச் சேர்ந்தவர்களும் அவர்க்கு நடுவே நித்யகண்ட சக்கரவர்த்தியும் கொலுவிருக்க, தம்மால் இயன்ற கொடையான மேற்கில் அடுக்கிய கல்லுக்கு மறையிலும் கிழக்கில் பிடாரி  கோயில் தேவதானமும் தென்மேற்கில் இட்டேறிக்கு வடக்கும் என உள்ள நிலத்தை இக்கோயில் இறைவர்க்கு பூசனை ஆற்றும் பிராமணர்க்கு பட்டில் நிலமாகவும், மாணபோகமுள்ள பட்டில் நிலம் உள்ள இடத்தில் பாரசிவரான பூமன் வந்நியான  வீரபத்திர சக்கரவத்திக்கு மாணபோக நிலமும் தந்தனர். அந்நிலம் பிடாரி கோயிலுக்கு கிழக்கும், தெற்கே ஓடும் கல்லிச்சிறு குளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது என்று நில எல்லைகளை குறித்து உள்ளனர். மேலே உள்ள முதல் கல்வெட்டில் குறிக்கப்பட்ட பாரசிவ உவச்சரும் இவரே.

    பண்டு பரவலாக கோயில்களில் பிராமணப் பூசகரோடு பிராமணரல்லா பாரசிவ பூசகரும் பணியாற்றி உள்ளனர் எனத் தெரிகின்றது.

    பார்வை நூல்:  ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொ.து, சென்னை. பக்.190.

    கோயம்பத்தூர் மாவட்டம் அவினாசி வட்டம் அன்னூர் எனும் இடத்தில் அமைந்த மன்னீசர் கோவில் கல்வெட்டு:

    1. _ _ _ _ ம
    2. ண்டல முதலி துறையூரில் உவச்சக்காணியுடைய பராசிவன்
    3. வாச்சிய மாராயனுக்கு அந்நாள் வதிமுகம் கொடுத்து இவன் ஆளுடையார்
    4. திருமுருகன் பூண்டி நாயனார் கோயிலுக்கும் ஆளுடையார் _ _ _ _
    5. களில் உள்ள உவச்சக் காணிகளுக்கும் இக்கோயில்களில்
    6. கோயிற் காணிகளும் இவர்களுக்கு காணியாக கொடுத்தோம் சோழகுல மாணிக்க _ _ _

    வதிமுகம் – தங்க இடம் கொடுத்து உவச்சர் காணி – அம்மன்கோயில் பூசகருக்கு ஒதுக்கிய நிலம்

    விளக்கம்: 13 ஆம் நூற்றாண்டின் இக்கல்வெட்டில் வேந்தன் பெயரும், ஆட்சி ஆண்டும் குறிக்கப்படவில்லை. மண்டலமுதலி துறையூரில் உவச்சருக்கான காணியை உடைய பாரசிவன் வாச்சிய மாராயனுக்கு முன்னாளிலே தங்கு இடம் கொடுத்து இவன் தெய்வமான திருமுருகன் பூண்டி இறைவர் கோயிலுக்கும் கல்வெட்டில் சிதைந்துள்ள கோயில்களில் உள்ள உவச்சருக்கான காணிகளுக்கும் மற்றும் இக்கோயில்களின் காணிகளுக்கும் (வரிவிலக்கு தந்து) அவற்றை இவனுக்குக் காணியாக கொடுத்தேன் என்று சோழகுல மாணிக்கம் என்ற அரையன் தெரிவிக்கிறான்.

    பார்வை நூல்:  கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொ.து, சென்னை. பக். 82

    எளவானரைசூர் கோவில் கல்வெட்டு , திருக்கோவிலூர் வட்டம்:

    1. ஸ்வஸ்த்திசிரி கோச்சடைய பன்மாரான திரிபுவனச் சக்கரவத்திகள் சிரிசுந்தர பாண்டிய தேவற்கு
    2. யாண்டு 13- ஆவது எதிர் மூன்றாவது உடையார் ஊர்பாகங்கொண்டருளிய நாயனார்
    3. கோயில் தானத்தாரோம் இக்கோயில் பாரசிவற்கு விவாஸ்தாபத்திரம் பண்ணிக் குடுத்த பரிசாவது
    4. நலங்கிங்குகளுக்கு அனுதரிக்கும் இடத்து பாண்டி மண்டலம்,
    5. சோழ மண்டலம், மகத மண்டலம் இம்மண்டல்களிலும் பலதிருப்பதிகளில் செய்தபடியும் நடுவில்மண்டலத்தில் திருமுதுகுன்றமும்
    6. திருவாமாத்தூரும் திருவதிகை திருவெண்ணைநல்லூர் செய்த மரியாதை செய்யக்கடவராகவும்
    7. இப்படி செய்தோமாகில் சிவத்துரோகிகளும் இராசத்துரோகிகளுமாக கடவதாகவும்
    8. இப்படி சம்மதித்து விவஷ்த்தாபத்திரம் பண்ணிக் குடுத்தோம் பாரசிவற்கு தானத்தாரோம்.

    விவஸ்தா பத்திரம் – தீர்மான ஆவணம்; அனுதரிக்கும் – பின்பற்றும்; திருப்பதிகளில் – கோவில்களில்

    விளக்கம்: மதுரை சுந்தர பாண்டியனின் 13 + 3 =16 ஆவது ஆட்சி ஆண்டில் எளவனூர் இறைவர் கோயில் பொறுப்பாளர்களாகிய நாங்கள் இக்கோயிலில் திருப்பணி செய்யும் பாரசிவற்கு தீர்மான ஆவணம் செய்து கொடுத்ததாவது நலங்கிங்குகள் கடைபிடிக்கும் போது பாண்டி மண்டலம், சோழ மண்டலம், மகத மண்டலம் ஆகிய மண்டலங்களில் உள்ள பல கோவில்களில் செய்தபடியே நடுவில் மண்டலம் திருமுதுகுன்றமான விருத்தாசலம், திருவாமாத்தூர், திருவதிகை, திருவெண்ணை நல்லூர் ஆகிய ஊர்களில் செய்த மரியாதையை இந்த பாரசிவருக்கும் செய்யக்கடவராக அல்லாக்கால் சிவதுரோகிகள், இராசதுரோகிகள் போல்வார் ஆகுவராக. இப்படியாக கோவில் பொறுப்பாளர்கள் நாங்கள் இசைந்து பாரசிவருக்கு தீர்மான ஆவணம் செய்து கொடுத்தோம்.

    கோயில் பெயர்கள் சமஸ்கிருதம் ஆனது என்னவோதெலுங்கு நாயக்கர் ஆட்சியில் தான் என்பதை கல்வெட்டுகள் தெளிவுபடுத்துகின்றன.

    பார்வை நூல்:  தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள் (C.Era 300 – 1800), க.பன்னீர்செல்வம், 2018.  ARIEp 1938 B. No 492

    https://www.facebook.com/pg/ஶ்ரீ-வாகீஸ்வரர்-திருக்கோவில்-பட்லூர்-245845535884081/posts/

    Share
  • ‘இன்று திரு.வி.க. இருந்தால்?’

    இன்னம்பூரான்

    திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [4]

    திரு.வி.க. அவர்களின் தன்னடக்கம், புலனடக்கம், ஒழுங்கு, சிந்தனை ஒழுக்கம், வாய்மை, நாட்டுப்பற்று, திறந்த மனம், சமுதாய சீர்திருத்த மனப்பான்மை, பெண்மைக்கு மதிப்பு ஆகிய நற்பண்புகளின் மேன்மை அவருடைய படைப்புகளிலும் சொற்பொழிவுகளிலும் புலப்படுகிறது. 

    தற்காலம் எல்லாம் தேர்தல் மயம். கொள்கை, கோட்பாடு, கருத்து அடிக்களம் ஆகியவை தகர்க்கப்பட்டு, சுய முன்னேற்றம், ‘கெலித்தால் காசு; இல்லாவிடின் நீயே தூசு’ என்ற பேராசை, வாரிசு வரிசை கட்ட, கட்சி கேலிக் காட்சியானாலும்’ என்ற உள்குத்து, துட்டு விநியோகம், கூடா நட்பு ஆகியவை பொது மக்களை வாட்டும் தருணத்தில்,  ‘இன்று திரு.வி.க. இருந்தால்?’ என்ற ஆதங்கம் வருவது இயல்பே.

    துறையூரில் ஆகஸ்ட் 6, 1932 அன்று தமிழ் மாணாக்கர் மகாநாட்டில் அவரது சொற்பொழிவு அருமையாக, பொருத்தமாக  அமைந்து இருந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. 

    சோழநாடு, உடலோம்பல், கல்வி, தமிழர் யார்?, சீர்திருத்தம் ஆகியவற்றை பற்றி அவர் அங்கு பகர்ந்த சிந்தனைகள் தற்கால சங்கடமான நிலைமையில் நாட்டுப்பற்று உள்ளவர்களின் மனத்தைத் தொடும். ஒருகால் அவர்கள் வாக்களிக்கும்போது அவரது நற்பண்புகள் கண் முன் தோன்றி, மனசாட்சிப்படி வாக்களிக்கத் தூண்டலாம். அவரது உரை நீண்டது. பொது மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து, சில சிந்தனைத் துளிர்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். உடனுக்குடன், தற்கால அவல நிலை பற்றி அவருடைய சிந்தனை எவ்வாறு அமையும் என்பதையும் எண்ணிப் பார்ப்போமாக.

    சோழநாடு: “…சோழ நாடு தொன்மை வாய்ந்தது. மாண்புடையது. நாகரிகத்தில் முதிர்ந்தது…சோழ நாட்டுப் பழம்பெரும் கோயில்கள் ஓவியக் காட்சிகள் வழங்குதல் வெள்ளிடை மலை…”. 

    – நாம் அன்றாடம் கோயில் கொள்ளைகளைப் பற்றிப் படிக்கிறோம். அயல்நாட்டுக்கு நமது புராதன கலைப் பொருட்கள் திருட்டுத்தனமாக அனுப்பப்படுகின்றன. ஒரு காலகட்டத்தில் திரு. உத்தாண்டராமபிள்ளை அவர்கள் கோயில் துறைத் தலைவராக இருந்தார். அவர் ஆத்திகர். இசகு பிசகாகக்கூட தவறுகள் நடக்காது. நாத்திகப் பிரசாரம் செய்து கொண்டு மறைவில் ஆத்திக வாழ்க்கை நடந்தி வந்தவர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, நாத்திகர்கள் கோயில் அறங்காவலர்களாக ஆன பின், கோயில் சொத்துகள் சூறையாடப்பட்டன. கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது. சிலைகள் திருடப்பட்டன. இந்த இழிசெயலில் ஆத்திக வேடம் போட்டவர்களும் ஈடுபட்டனர். சோழநாட்டு நாகரிகம் அழிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தான் திரு.வி.க. அவர்களின் வ்யாகூலம் அமையலாம்.

    உடலோம்பல்: “…உடல் நலன் வேண்டற்பாலது. கிளர் ஈரலும், தடைபடாக் குருதியோட்டமும், எஃகு நரம்பும், ஏக்கழுத்தும், பீடு நடையும் உடையவர்களாக மாணவர்கள் திகழ்தல் வேண்டும்…மாணாக்கர் பார்வைக்கு இனியவராயிருத்தல் வேண்டும்.

    – தற்காலம், அதுவும் கல்வித் தந்தைகள், திரை கடல் ஓடாமலே. திரவியம் தேடியதாலும், அரசுப் பள்ளிகள் பட்ஜெட் போதாமலும், அக்கறையின்மையாலும் தவிப்பதாலும், மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் கூட கிடைப்பதில்லை. உடலோம்பல் எட்டாக் கனியாகவிடும் என்ற தோற்றம் எங்கும் தென்படுகிறது.

    கல்வி: “…‘இளமையில் கல்’… எம்மொழியிலும் கல்வி பயிலவேண்டும்… முதல்முதல் தாய்மொழி வாயிலாகவே கல்வி பயிலவேண்டும்… கலைகள் யாவும் தாய்மொழி வழி அறிவுறுத்தப் பெறுங்காலமே, தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறுங்காலமாகும்…”.

    தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறுவதற்குப் பல்லாண்டுகள் பிடிக்கலாம். மற்றொரு தொடரில் [கஷ்டோபனிஷத்] தமிழ் படும்பாட்டைச் சான்றுகளுடன் எழுதியிருக்கிறேன். கலோனிய அரசுக்குப் பிறகு தமிழுக்கு இறங்குமுகம் தான். ஐயா முன்சீப் வேதநாயகம் பிள்ளை அவர்களின் கச்சேரியில் தமிழ் வலம் வந்தது. கலெக்டருக்குத் தாசில்தார் தமிழில்தான் கடுதாசி எழுதினார். ஐ.சி.எஸ். அதிகாரிகள் தமிழின் தொன்மை குறித்து ஆராய்ச்சி செய்தார்கள். திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு மதிப்பு இருந்தது. பள்ளி நிலை தமிழ்ப் பாடப் புத்தகங்கள், தற்கால முதுநிலைப் பாடம் அளவுக்கு உயர் நிலை. தற்காலம் எங்கும் ஆங்கிலம் தான் பீடுநடை போடுகிறது. திராவிடக் கட்சிகள் தமிழின் வளர்ச்சியின் பொருட்டு இட்ட சட்டங்கள், கட்டத்திற்குள் உறங்குகின்றன. எல்லாம் உதட்டளவு தமிழன்பு. அவ்வளவு தான்.

    இது கண்டு திரு.வி.க. அவர்களின் மனம் வெம்பி இருந்திருக்கும். 

    தமிழர் யார்?: “…தமிழர் தொன்மை வாய்ந்தவர்… பழந்தூய தமிழர் வழி வந்த தமிழரும், இடையே குடி புகுந்து சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும். கலப்பு என்பது இயற்கை… கலப்பால் வளர்ச்சியே உண்டு… இவருள் சைவரிருக்கலாம். வைணவரிருக்கலாம். அருகரிருக்கலாம். புத்தரிருக்கலாம். கிறிஸ்தவரிருக்கலாம். இஸ்லாமியரிருக்கலாம். ஆத்திகரிருக்கலாம். நாத்திகரிருக்கலாம். இவரனைவரும் தமிழர் என்பதை மறக்கலாகாது… தூய ஆரியராதல், தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்… பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப் பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது… வடமொழி பாரத நாட்டுக்குரிய பொது மொழி.. தமிழ்நாட்டிலுள்ள பார்ப்பனர் தமிழைப் பயிலாமலும், தமிழ்த்தாய்க்கு சேவை செய்யாமலும் இருக்கின்றாரில்லை. முன்னாள்தொட்டு அவரும் தமிழ்த்தாயின் சேய்களாக நின்றே தமிழ்த்தொண்டாற்றி வருகிறார்… தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் தமிழராகப் பார்க்கும் நெஞ்சம் மாணாக்கர்கள் பால் அரும்பி மலர்வதாக.”

    = இதை படிக்கும்போதே மனம் கலங்குகிறது. நெஞ்சம் பதைபதைக்கிறது. காங்கிரஸ் அரசும் சரி, திராவிடக் கட்சிகளும் சரி, மற்ற சாதிக் கட்சிகளும் சரி, அரசும் சரி, தேர்தலுக்குச் சாதி மத பேதம் அடித்தளம். பிரசாரத்தில் சாதி ஒழிப்போம் என்று சொல்லும்போதே, சாதிப் பேயின் உலா அதில் உள்ளடங்கி இருக்கிறது. எறும்பை நசுக்கப் பாறாங்கல் எடுப்பது போல், சிறுபான்மையாராகிய பிராமணர் மீது எய்யப்பட்ட துவேஷத்தில், வன்முறையும் தீய செயல்களும் வளர்ந்தன, ஒற்றுமை குலைந்தது. கல்வி அளிப்பதில் ஆற்றலுக்கு இடமில்லை. ‘வாலும் போச்சு; கத்தியும் வரவில்லை..‘ என்ற படி தமிழ் தள்ளுபடி; இந்தி ஒழிக; ஆங்கிலம் அண்டலாகாது என்றால், அடி வாங்குவது மாணாக்கர்கள்தாம்; அவர்களின் பெற்றோர்களும்தாம். ஒரு வேண்டுகோள் எல்லாரும் திரு.வி.க. அவர்களின் ஆழ்ந்த சிந்தனையைப் புரிந்துகொள்ள முயலுங்கள். நல்லது பிறக்கலாம்.

    சீர்திருத்தம்: “…அஃறிணை உலகம் பெரிதும் சீர்திருத்தத்தை விரும்புவதில்லை… தீண்டாமை மனத்தைத் துறந்து வாழ்வு நடாத்துங்கள்…தியானம் வேண்டற்பாலது…”.

    என்னத்தைச் சொல்ல? திரு.வி.க. அவர்களின் பொன்வாக்கு [1932] ஒன்று” 

    “ ‘ஒழுங்கு ஊராகும் என்பது பழமொழி. ஐரோப்போயரது வாழ்வில் ஒழுங்கு என்பது ஊடுருவிப் பாய்ந்து நிற்கிறது. அவர்தம் ஒழுங்கு ஊரையும் ஆள்கிறது. உலகத்தையும் ஆள்கிறது.”

    பின்குறிப்பு 1: திரு.வி.க., சிந்தனை மனிதருள் ஒருவர். அவரின் சொந்த வாழ்வின் அடித்தளத்தில் உள்ள ஆழ்மனத்தைப் புரிந்துகொண்ட ஒரே மனிதர், திரு. ஈ.வே.ரா. அவர்கள். அந்த உருக்கமான நிகழ்வு உரிய காலத்தில் பகிர்ந்து கொள்ளப்படும்.

    பின்குறிப்பு 2: மற்றவற்றை பார்க்கும் முன், அடுத்த பதிவில் அந்த 

    “பேய்ப்பழம்” பழுத்த அட்டூழியத்தையும் பார்த்து விடுவோம்.

                                                  (தொடரும்…….

    Share
  • அடித்தால்தான் ஆசிரியை!

    நிர்மலா ராகவன்

    (நலம், நலமறிய ஆவல் – 154)

    ஆண்கள் மட்டும் பயிலும் பள்ளிக்கூடத்தில் அவ்வருடம்தான் புதிதாகச் சேர்ந்திருந்தேன்.

    `ஐயோ! அந்தப் பள்ளிக்கூடமா?’ என்று என்னைப் பார்த்துப் பிறர் பரிதாபப்பட்டது ஏனென்று பிறகுதான் புரியத் தொடங்கியது.

    “டீச்சர் எங்களை அடிப்பதே கிடையாது. நாங்கள் எதற்கு நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்?” பதினான்கு வயதான அந்த மாணவர்கள் என்னிடம் சவால் விட்டார்கள்.

    வேறு வழியின்றி, மளிகைக் கடையில் ஒரு பிரம்பை வாங்கிக்கொண்டு போனேன்.

    “உங்களுக்கு அடிதானே வேண்டும்? இதோ பாருங்கள்!” என்று பிரம்பை மேலும் கீழும் ஆட்டியபடி, நிமிர்ந்த நடையுடன். (ஆங்கிலப் படம் ஒன்றில், குண்டர் கும்பல் தலைவன் செய்ததைப் பார்த்துத்தான்!)

    “வாவ்! டீச்சர் terror, lah! (பயங்கரமானவள்!)” என்ற பாராட்டும்(?) பெற்றேன்!

    எவராலும் அவர்களை அடக்கவே முடியாதிருந்தது. வகுப்பில் கண்டபடி ஓடுவார்கள், கூச்சலிடுவார்கள்.

    யாராவது ஒருவன் தப்பித் தவறி, “ஏய்! டீச்சர் பேசுவது காதில் விழவில்லை. வாயை மூடுங்கள்!” என்று கண்டிக்கப் பார்த்தாலும், “டீச்சர் உரக்கப் பேசட்டுமே! சம்பளம் வாங்கறாங்க, இல்லே?” என்று பதில் வரும்.

    இவர்களைப் பொறுக்க முடியாது, மற்ற ஆசிரியைகள் அந்த வகுப்பிற்குப் போகுமுன் என் பிரம்பை கடன் வாங்கிக்கொண்டு போவது வழக்கமாயிற்று.

    அவர்களைப் புரிந்துகொள்ள, “உங்களுக்கு எந்த ஆசிரியையிடமாவது பயமா?” என்று கேட்டேன். பெரிய குரலுடன் எப்போதும் கத்தும், குண்டாக இருந்த ஒருத்தியைக் குறிப்பிட்டார்கள்.

    அடித்தாலும், கண்டபடி வைதாலும்தான் சொன்னால் கேட்பார்களா? குண்டாக இருந்தால் என்ன, அவர்களை அப்படியே நசுக்கிவிடுவாளா?

    (இப்படிப்பட்ட மாணவர்கள் உணர்ச்சி ரீதியில் குறைபாடு உள்ளவர்கள். சில நாடுகளில் பள்ளிக்கூடத்திலேயே உளவியலாளர்கள், இவர்களுக்கு அனுதினமும் மாத்திரையோ, ஊசிமூலம் மருந்தோ கொடுத்தால்தான் இவர்களை அமைதியாக ஒரே இடத்தில் உட்கார வைக்க முடியும் என்று சில கால ஆராய்ச்சிக்குப் பிறகு அறிந்தேன்).

    எங்கள் பள்ளியின் எதிரிலேயே இருந்த பெண்கள் பள்ளியில் பயின்ற மாணவிகள் – இவர்களின் சகோதரிகள் – அம்மாதிரி இருக்கவில்லை. பையன்கள் மட்டும் ஏன் இப்படி ஆனார்கள் என்ற கேள்வி எழுந்தது. அவர்களிடமே கேட்டேன்.

    கதை

    பேச்சோ, அன்போ எதுவுமில்லாது, வாரம் ஒருமுறை ஒரு பெரிய தடியை எடுத்துக்கொண்டு வீடு முழுவதிலும் மகனைத் துரத்துவாராம் ஒரு தந்தை. சிரித்தபடி இதைப் பகிர்ந்துகொண்டான் ஒரு மாணவன்.

    “அப்பா என்ற ஸ்தானத்தால், அவருக்குத்தான் என்னைவிட அதிக அதிகாரம் இருக்கிறது என்று காட்டுகிறாராம்!” என்றவன் குரலில் ஏளனம்.

    “நீ என்னடா செய்வே?” என்று அதிர்ச்சியுடன் அவன் நண்பர்கள் கேட்க, “கழிப்பறையில் போய் ஒளிந்துகொள்வேன். அரை மணி நேரம் கழித்து வெளியே வரும்போது, அப்பா என்னை மறந்திருப்பார்!” என்று மேலும் சிரித்தான்.

    இளவயதினர் அதிகமாக உணர்ச்சிவசப்படுவர். அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பெற்றோரும் ஆசிரியர்களும் அவர்களைப் போலவே நடந்தால் எப்படி! நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும்.

    (அடக்கவே முடியாத மாணவர்களுடன் பழக நேரிடும்போது, நம் குழந்தைகளும் எங்கே அப்படிக் கெட்டுவிடுவார்களோ என்று ஆசிரியப் பெருமக்கள், தம் செல்வங்களிடம் சற்று அளவுக்கு மீறியே கண்டிப்பைக் காட்டுவார்கள். உரிய காலம் வந்தபின், அதைத் தளர்த்திக்கொண்டால் உறவு பலப்படும்).

    முன்பெல்லாம், வீட்டுக்கு வந்து பயிற்சி அளித்த ஆசிரியர்கூட கையில் பிரம்பை எடுத்து வருவார். பெற்றோரும் மகிழ்வார்கள், மகன் உருப்பட்டுவிடுவான் என்ற தவறான நம்பிக்கையில்.

    கதை

    தாய்வழிப் பாட்டி வீட்டில் சிறு பிராயத்தைக் கழித்திருந்த மகனுக்குச் செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டார்கள் என்று கருதி, அதற்கு நேர்மாறான வளர்ப்பு முறையைக் கையாண்டார் தந்தை. பலரும் கூடியிருக்கையில், இடுப்பு பெல்டைக் கழற்றி, அந்த பத்து வயதுப் பையன் கதறக் கதற அடிப்பார்.

    நன்கு படித்து, அயல்நாட்டுக்குப் போன மகன், தாய்நாட்டுக்குத் திரும்ப வரவேயில்லை. அப்பா அடித்தபோது அம்மா தடுக்காததால், அவள் மீதும் வெறுப்பு!

    வசதியான குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும், `பிறர் அன்பு செலுத்த தகுதி இல்லாதவன் நான்!’ என்ற எண்ணம் மனத்தில் படிந்துவிட, அவனுக்கு எவரையும் நம்பி உறவுகொள்ள முடியாது போயிற்று.

    “மரியாதையின்றி பழகவும், பொய்யுரைக்கவும், முறையாகக் கல்வி பயிலாதிருக்கவும் சிறு வயதிலிருந்தே தண்டிக்க வேண்டும்!” என்று வேடிக்கையாகக் கூறுகிறார் ஒருவர்.

    அதிகார வர்க்கத்தினர் சொல்வதெல்லாம் சரியல்ல என்று தோன்றினால் என்ன செய்வது? தட்டிக் கேட்டால், `எதிர்த்துப் பேசாதே!’ என்று இன்னும் திட்டு விழுமே!

    சில சமயம் மரண தண்டனைகூட உண்டு.

    கதை

    இரண்டாம் உலகப் போரின்போது வார்ஸா சிறையில் (Warsaw ghetto) அடைக்கப்பட்டிருந்தாள் ஹெலன். அவளைப் போன்ற பெண்கள் நாள் முழுவதும் தையல் வேலையில்தான் ஈடுபட வேண்டும் என்பது சட்டம். ஏதாவது புத்தகத்தை கையில் எடுத்தால் உடனே மரண தண்டனை!

    ஹெலனுக்கு Gone with the Wind என்ற புத்தகம் எப்படியோ கிடைத்தது. சரித்திரமும் காதலும் கலந்த அருமையான நவீனம். தூங்கும் நேரத்தில் மூன்று, நான்கு மணியைச் செலவழித்து அதைப் படித்தாள் ஹெலன்.

    மறுநாள், தையல் வேலையில் ஈடுபட்டபடி ஓரிரு மணிக்குள் அக்கதையை சிநேகிதிகளிடம் சொல்வாள். அவ்வளவு சுவாரசியமாக இருக்கும்.

    பிடிபட்டிருந்தால், அனைவருக்குமே மரண தண்டனை! அக்கதையை முழுவதும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவா அந்த அச்சத்தையும் மீறியிருந்தது.

    `ஏதாவது புத்தகம் படித்தீர்களா?’ என்று சிறையில் அடைபட்டிருந்த அப்பெண்களைக் கேட்டால், மறுத்திருப்பார்கள். எப்போது உண்மை பேசினாலும் நம்பாதபோது பொய் சொல்வதே மேல் என்று தோன்றிப் போகிறது.

    அடிப்பது அலுப்பைத் தரும்

    “புத்தகத்திலே போட்டிருக்கிற மாதிரியெல்லாம் வளக்கணும்னு பாத்தா முடியுமா?” என்று என்னைக் கேட்டாள், என் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள நான் அமர்த்தியிருந்த பணிப்பெண். “எத்தனை சொன்னாலும் பிள்ளைங்களை அடிக்க மாட்டறீங்க!”

    இப்போது என் மகள் கேட்கிறாள்: “நீ ஏம்மா எங்களை அடிக்கவே மாட்டே?”

    பள்ளிக்கூடத்தில் ஆசிரியைகள் அடித்தார்கள், வீட்டில் பணிப்பெண்கள் அடித்தார்கள், அம்மா மட்டும் ஏன் அடிக்கவில்லை என்ற குழப்பம், வளர்ந்த பின்னரும்!

    “அடிக்கிறது சுலபம். ஆனா, அதுக்கப்புறம் அழற குழந்தையைச் சமாதானப்படுத்தறது கஷ்டம். அதைக் கட்டியணைத்துக்கொண்டு, `எனக்கு உன்னைப் பிடிக்கும். தெரியாம அடிச்சுட்டேன்!’ என்றெல்லாம் ஆயிரம் சமாதானம் சொல்ல வேண்டும். போர்! எனக்கு அலுப்பான விஷயம் அது!”

    அதிகாரத்தால் பெறும் மரியாதை

    அதிகாரம் செலுத்திப் பிறரைப் பணிய வைக்கலாம். ஆனால், அப்படிப் பெறும் மரியாதை நிலைக்காது.

    சிறு வயதினரைத் தண்டித்தாலும், `ஏன் அப்படிச் செய்யக் கூடாது?’ என்று அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

    `நான் படுத்தினேன். அதான் அம்மா திட்டறா!’ என்னும் மூன்று வயதுக் குழந்தைக்கு `படுத்தல்’ என்றால் என்னவென்று புரியுமா?

    `சும்மா படுத்தாதே!’ என்று எரிந்து விழுவதற்குப் பதில், `நான் வேலையாக இருக்கும்போது தொணதொணக்காதே! போய் விளையாடு! சமர்த்து!’ என்று நிதானம் தவறாது பேசினால் உடனே கேட்பான்.

    அதற்கான பொறுமை இல்லாமல் போகும்போது, எரிச்சலும் கோபமும் எழுகிறது. அதைக் குழந்தையிடம் திருப்புகிறார்கள்.

    பல வருடங்களுக்குமுன் கணவரிடம் அடியும் உதையும் வாங்கியிருந்த ஒரு முதியவள், தான் வளர்த்த பேரனிடம் அப்படியே நடந்துகொண்டாள். கண்டபடி அடிப்பதற்குக் காரணமே வேண்டியிருக்கவில்லை.

    “அவனை அடிச்சுட்டு, நானும் அழுவேன்!” என்பாள்.

    அநாவசியமாகத் திட்டியோ, அடித்தோ செய்துவிட்டு, குற்ற உணர்ச்சியால் மேலும் அவதிப்படுவானேன்!

    Share
  • (Peer Reviewed) செவ்வாய் கிரகப் பயணம் – தொலைநோக்குப் பார்வை

    முனைவர் தி.தெய்வசாந்தி,
    சர்வதேச ஆராய்ச்சி மையம்,
    கலசலிங்கம் பல்கலைக்கழகம்,
    கிருஷ்ணன்கோயில், தமிழ்நாடு – 626126.
    மின்னஞ்சல்: ttheivasanthi@gmail.com
    இணையத்தளம்: www.theivasanthi.weebly.com

     செவ்வாய்க் கிரகப் பயணம் – தொலைநோக்குப் பார்வை

    முக்கியக் குறிப்புகள்

    1) பஞ்சபூத சக்திகளின் அடிப்படையில் செவ்வாயில் உயிர் வாழ்க்கைச் சாத்தியம்

    2) இந்திய வானியல் அறிவு – ஹோஹ்மான் ட்ரான்ஸ்ஃபர் ஆர்பிட் – தொடர்பு

    3) விண்கலங்கள் / ஏவுகணைகள் அனுப்ப, புதிய முறை

    செவ்வாய் கிரகத்தின் ஆங்கிலப் பெயரான “மார்ஸ்” என்பது, ரோமன் போர்க் கடவுளைக் குறிக்கிறது. சூரியக் குடும்பத்தில் இரண்டாவது மிகச் சிறிய இக்கிரகம், சூரியனிலிருந்து நான்காவது வட்டத்தில் உள்ளது. இதன் மேற்பரப்பிலுள்ள, இரும்பு ஆக்சைடு (ஹெமட்டைட்), இக்கிரகத்திற்குச் சிவந்த நிறத் தோற்றத்தை அளிப்பதால், “சிவப்பு கிரகம்” எனவும் அழைக்கப்படுகிறது. இக்கிரகமானது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமிக்கு அருகில் வருகிறது. அப்பொழுது, இக்கிரகத்தை வெறுங்கண்ணால் காண முடியும். தெய்மோஸ் (விட்டம் சுமார் 8 மைல்) மற்றும் போபோஸ் (விட்டம் சுமார் 14 மைல்கள்) என்ற சிறிய, ஒழுங்கற்ற வடிவிலான, இரண்டு இயற்கை துணைக்கோள்கள் இதனைச் சுற்றி வருகின்றன. இவற்றின் பெயர்களான போபோஸ் என்றால் பீதி / பயம் மற்றும் தெய்மோஸ் என்றால் பயங்கரவாதம் என்பதும் பொருள். போபோஸ் ஆனது, மேற்கில் உதித்து, கிழக்கில் மறைகிறது.

                  மங்கள்யான் அனுப்பிய செவ்வாயின் படம். நன்றி: இஸ்ரோ. 

    செவ்வாய் கிரகத்தில் மெல்லிய வளிமண்டலம், எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள் மற்றும் பனிப் படலங்கள் உள்ளன. அங்குள்ள, “ஒலிம்பஸ் மோன்ஸ்” என்ற மலை, சூரிய குடும்பத்திலுள்ள இரண்டாவது மிக உயர்ந்த மலை ஆகும். “வாலீஸ் மரிநேரிஸ்” என்பது, அங்கே, காணப்படுகின்ற ஒரு பெரிய பள்ளத்தாக்கு ஆகும். வட துருவத்தின், 40% பரப்பினை, உள்ளடக்கிய, “ஸ்மூத் பொரியலிஸ்” என்ற பெரிய வடிகால் உள்ளது. அக்கிரகத்தின் பாறைகளை ஆரய்ந்ததில், 3.5 – 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று தெரிகிறது. அக்கிரகத்தில், காந்தப் பரப்புகள் / துருவங்கள், சமுத்திரங்கள் மற்றும் கடல் மட்டங்கள் இல்லை.

    செவ்வாயின், வெப்பநிலை குறைந்தபட்சம் -143 °C லிருந்து அதிகபட்சம் 35 °C என்ற அளவில் உள்ளது. அக்கிரகத்தின், பருவ காலநிலைகள் பெரும்பாலும் பூமியைப் போன்று இருந்தாலும், பூமியின் பருவங்களை விட இருமடங்கு என்ற அளவில் உள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தூரத்தை விட, சூரியனுக்கும் செவ்வாய்க்கும் உள்ள தூரம் அதிகம் என்பதுதான், அதற்குக் காரணம். சூரியனில் இருந்து அதன் சராசரி தூரம், சுமார் 230 மில்லியன் கி.மீ., அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை விட 1.52 மடங்கு அதிகம். அது, ஒருமுறை, சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் 687 (பூமி) நாட்கள் ஆகும். அதன் ஒரு நாள், ஒரு புவி நாளை விட சிறிதளவு அதிகம்: 24 மணி நேரம், 39 நிமிடங்கள், மற்றும் 35.244 வினாடிகள். அதன் ஒரு ஆண்டு 1.8809 பூமியின் ஆண்டுக்குச் சமமாகும்.

    செவ்வாய் கிரகத்தின் விட்டமானது,  பூமியின் விட்டத்தில் சுமார் பாதியாகும். அதன் அடர்த்தி, பூமியை விடக் குறைவாகும். அங்கு, சிலிக்கான், ஆக்சிஜன், உலோகங்கள், மற்றும் தாதுக்கள் போன்றவை காணப்படுகின்றன. குறைந்த கொதிநிலை உடைய குளோரின், பாஸ்பரஸ், சல்பர் போன்றவை, பூமியை விட அதிக அளவில் காணப்படுகின்றன; தவிர, இரும்பு, மக்னீசியம், அலுமினியம், கால்சியம், பொட்டாசியம் மிக அதிகமாக உள்ளன. அதன், இரு துருவங்களிலும் பனியடுக்குகள் உள்ளன. அவற்றின் மீது கார்பன்-டை-ஆக்சைடு, ஒரு மெல்லிய படலமாக, உறைந்துள்ளது.

    செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதாக, 1965ஆம் ஆண்டு வரை, நம்பப்பட்டு வந்தது. அண்மையில், அதன் துருவங்களில் பனிக்கட்டிகள் அதிக அளவில் இருப்பது ராடார்கள் மூலம் தெரிய வந்துள்ளது. வெப்பமான மாதங்களில் பாயும் நீர் சாத்தியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மண்ணில் 1.5% முதல் 3% வரை நீர் உள்ளதாக 2013ஆம் ஆண்டில், நாசாவின் ரோவர் கண்டறிந்துள்ளது.

    செவ்வாயைச் சுற்றும் செயற்கைக் கோள்கள், அங்கு 96% கார்பன் டை ஆக்சைடு, சிறிய அளவில் ஆர்கான், நைட்ரஜன், ஆக்ஸிஜன், நீர், அம்மோனியா, மீத்தேன் மற்றும் ஃபார்மல்டிஹைடு இருப்பதாகத் தெரிவித்துள்ளன. இதன் மூலம், உயிரின வாழ்க்கை, அங்கு சாத்தியம் என்பதற்கு உரிய ஆதாரங்கள் தென்படுகின்றன. ஜெர்மன் விண்வெளி மையம், செவ்வாயின் தட்ப வெப்பச் சூழ்நிலை, வளிமண்டல அழுத்தம், கனிமங்கள், ஒளி ஆகியவற்றைக் கணக்கிட்டு, பாசிப் பூஞ்சையானது, அங்கு வாழ முடியும் என்று தெரிவித்துள்ளது.

    மீத்தேன் வாயுவானது, உயிரினக் கழிவுகள் மட்கும் பொழுதும் அல்லது செர்பென்டினைசேஷன் (serpentinization) எனப்படும் உயிரியல் அல்லாத செயல்முறை, (அதாவது, நீர், கார்பன் டை ஆக்சைடு, மற்றும் ஒலிவைன் சம்பந்தப்பட்ட பொருள்களில் நடைபெறும் வேதிவினைகள்) மூலமும் உற்பத்தி செய்யப்படும். எனவே, மீத்தேன் வாயுவை மட்டும் வைத்து, உயிரினங்களின் வாழ்க்கை, அங்கு சாத்தியம் என்று உறுதிபடத் தெரிவிக்க இயலாது.

    பீனிக்ஸ் செயற்கைக் கோளிலிருந்து, பெறப்பட்ட தகவல்களின் மூலம், அக்கிரக மண்ணில் காரத் தன்மையும் (pH 8.3), தாவரங்கள் வளர்ச்சிக்குத் தேவையான மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் மற்றும் குளோரின் போன்ற தனிமங்கள் இருப்பதும் அறியப்பட்டுள்ளது. பஞ்சபூதங்கள் எனப்படும், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி (நிலம்) என்ற ஐந்து அடிப்படை / ஆதாரச் சக்திகள் செவ்வாய் கிரகத்தில் காணப்படுவது, அங்கு உயிரினங்களின் வாழ்க்கை சாத்தியம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

    நான்காவது நூற்றாண்டு சீன வானியல் அறிஞர்கள், செவ்வாய் பற்றி அறிந்து இருந்தார்கள் என்பதைச் சீனாவின் பண்டைய நூல்கள் உறுதிப்படுத்துகின்றன. “சூரிய சித்தாந்தம்” என்ற இந்திய வானியல் நூல், செவ்வாய் கிரகத்தின் விட்டம் மதிப்பிடப்பட்டிருப்பதாக, ஐந்தாவது நூற்றாண்டிலேயே தெரிவிக்கின்றது. கிழக்கு ஆசிய கலாச்சாரங்களில், “பஞ்சபூதம்“ தத்துவங்கள் அடிப்படையில், அக்கிரகம், “தீக்கோள்” எனக் குறிப்பிடப்படுகிறது.

    வேதங்களில், அக்கிரகம், பூமியின் மகன் என்று கூறப்பட்டுள்ளது. அது, ரோமன் நாட்டின் போர் மற்றும் கொலைக் கடவுள் ஆகும். அதற்கு, அடையாளமாக ஈட்டி மற்றும் கேடயம் உள்ளது. அக்கிரகத்தின் மண் மற்றும் மனித இரத்தத்தின் ஹீமோகுளோபின் இரண்டும் இரும்பு செறிந்தவை. இதன் காரணமாக, அவை தனித்துவமான ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கின்றன. சோதிடவியலில், சிவப்பு கிரகமான செவ்வாய், மங்கள், அங்காரகன், இரக்த வர்ணன் (இரத்த போன்ற சிவப்பு நிறத்தில் இருப்பது) மற்றும் பூமா(பூமி மகன்) என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேலும் அது, போர்க்கடவுள் என்றும், பிரம்மச்சாரி என்றும் கூறப்பட்டுள்ளது. அது, பிருத்வி, பூமி எனப்படும் பூமாதேவியின் மகன் என்றும், பூமாதேவியினால் வளர்க்கப்பட்டது என்றும் கருதப்படுகிறது. இராசி மண்டலத்தின், 12 இராசிகளில், ஒவ்வொரு இராசியிலும் 57.25 நாட்கள் இருக்கும் செவ்வாயானது, சூரியனைச் சுற்றிவர 687 நாட்கள் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆர்பிட்டர்கள், லேண்டர்கள், ரோவர்கள் உடைய ஆளில்லா விண்கலங்களைச் செவ்வாய்க்கு அனுப்பியுள்ளன. தற்பொழுது, ஏழு செயற்கைக் கோள்கள், அதாவது, மார்ஸ் ஒடிசி, மார்ஸ் எக்ஸ்பிரஸ், மார்ஸ் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர், மாவன் மற்றும் செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன் என்ற ஐந்தும் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையிலும், மார்ஸ் எக்ஸ்புளோரேசன் ரோவர் எனப்படும் ஆப்பர்சூனிட்டி மற்றும் செவ்வாய் அறிவியல் ஆய்வுக் கூடம் எனப்படும் க்யூரியாசிட்டி என்ற இரண்டும் செவ்வாயின் மேற்பரப்பிலும் சுற்றி வருகின்றன. இவற்றின் மூலம், செவ்வாய் பற்றிய வானியல் ஆய்வு எளிதில் சாத்தியமாகிறது.

    உலகின் சிறந்த கண்டுபிடிப்புகளுள் ஒன்றாக, சமீபத்தில், டைம்ஸ் பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்ட, செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன் (MOM) திட்டம், “மங்கள்யான்” என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது (சமஸ்கிருதத்தில் “மங்களா” என்பது “செவ்வாய்” என்றும், “யானா” என்பது “வாகனம்” என்றும் பொருளாகும்). சதீஷ் தவான் விண்வெளி மையம் (ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திர பிரதேசம்) இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தால் (ISRO), பிஎஸ்எல்வி (PSLV) ராக்கெட் மூலம், 28 அக்டோபர் 2013-இல் ஏவப்படுவதாக இருந்த மங்கள்யான் வானிலை சரியில்லாததால் 5 நவம்பர் 2013 அன்று, விண்ணில் செலுத்தப்பட்டது. அது, 298 நாட்களில், 780,000,000 கி.மீ.(480,000,000 மைல்) தூரம் பயணம் செய்த பிறகு, செவ்வாய் கிரகத்தில் இருந்து சுமார் 1300 மைல் உயரத்தில், 24 செப்டம்பர் 2014 முதல், செவ்வாயைச் சுற்றி வருகிறது. மேலும், திட்டமிட்ட நேரத்திற்கு 41 மணி நேரம் முன்னதாகவே, அது, செவ்வாயைச் சுற்றுவது குறிப்பிடத்தக்கது. அதன், ஆறு மாத ஆயுட்காலத்திற்கு, குறைந்தபட்சம் 20 கிலோ எரிபொருள் அவசியம். ஆனால், 40 கிலோ எரிபொருள் மீதம் இருப்பதால், ஆறு முதல் பத்து மாதங்கள் வரை அது செவ்வாயைச் சுற்றிவரும் என்று எதிர்பார்க்கலாம். எரிபொருள் சேமிக்க உதவும் “ஹோஹ்மான் ட்ரான்ஸ்ஃபர் ஆர்பிட்” என்ற கொள்கை மங்கள்யான் ஏவும் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    மங்கள்யானின் மொத்த நிறை 1,350 கிகி. அதில் திரவ எரிபொருள்கள் நிறைந்த எஞ்சின் மட்டும் 852 கிகி நிறை ஆகும். இரு திரவ எரிபொருள்கள் கலவையான, மோனோமீத்தைல்ஹைட்ரஸின் மற்றும் டைநைட்ரஜன் டெட்ராக்சைடு என்பவை, பூமியில் இருந்து வெளியேறுவதற்குத் தேவையான உந்துதல் வேகத்தை அடைய உதவுகின்றன (11.2 கிமீ / வினாடி). அதிகபட்சம் 840 வாட் வரை, மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பேனல்கள் மற்றும் லித்தியம் அயன் பேட்டரிகள் மங்கள்யானில் பொருத்தப்பட்டுள்ளதால், தேவையான மின்சாரம் உருவாக்கப்பட்டு, மீதமுள்ளது சேமிக்கப்படுகிறது. மேலும், மங்கள்யானின் இலக்குகள் மற்றும் செவ்வாய் பற்றிய ஆய்வுக்கு உதவும் 15 கிகி நிறையுள்ள, 5 கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.

    நிலாவிற்கு, 2008ஆம் ஆண்டு, சந்திரயான்-1 செயற்கைக்கோள் ஏவப்பட்ட பிறகு, அதனுடைய வெற்றி, மங்கள்யானின் தோற்றத்திற்கு அடித்தளமிட்டது. மிக மிகக் குறைந்த செலவில் உருவான, இத்திட்டத்தின் மொத்த செலவு ரூ.454 கோடி (US $ 74 மில்லியன்) ஆகும். மங்கள்யான், கிரகங்களுக்கிடையில் செயல்படுத்தப்பட்ட, இந்தியாவின் முதல் திட்டமாகும். மேலும், அது இந்தியாவை, முதல் முயற்சியிலேயே, செவ்வாயின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்த உலகின் முதல் (ஆசிய) நாடு என்று பெருமைப்பட வைத்திருக்கிறது. சோவியத் விண்வெளித் திட்டம், நாசா, மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிக்குப் பிறகு, செவ்வாயை அடைந்த நான்காவது விண்வெளி நிறுவனம் என்ற பெயரை இஸ்ரோ பெற்றுள்ளது.

    கிரகங்களுக்கிடையில் ஏவப்படும் விண்கலங்கள் / செயற்கைக்கோள்களுக்கான தொழில்நுட்பத்தை வடிவமைத்தல், திட்டமிடுதல், மேற்பார்வையிடுதல், இயக்குதல் போன்றவற்றை விரிவாக “எடுத்துச் சொல்லும் தொழில்நுட்பம்” ஒன்றை உருவாக்குவதுதான், இத்திட்டத்தின் அடிப்படைக் கொள்கை. ராக்கெட் ஏவுதல், விண்கலங்கள் / செயற்கைக்கோள்கள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளுதல், அவற்றை இயக்குதல் மற்றும் அவற்றில் பயன்படுத்தப்படும் தானியங்கிச் சாதனங்களைத் தேவைப்படும் சூழல்களில் இயக்குதல் போன்றவற்றை இந்தியா செய்ய இயலும் என்பதை எடுத்துக் காட்டுவது, இத்திட்டத்தின் முக்கியக் கொள்கை. இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு, செவ்வாய் கிரகத்தின் அமைப்பு, மேற்பரப்பு, கனிம வளங்கள் மற்றும் தட்ப வெப்பச் சூழ்நிலை / வானிலைகளை ஆராய்தல், இரண்டாவது கொள்கையாகும்.

    மங்கள்யான் தற்போது, இந்தியன் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் (IDSN) உதவியுடன், பெங்களூரில் உள்ள இஸ்ரோ தொலைப்பதிவு, கண்காணிப்பு மற்றும் ஆணை வலையமைப்பின் (ISTRAC) விண்கலக் கட்டுப்பாடு மையத்திலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன் தகவல் தொடர்புகள், பெருக்கிகள் மற்றும் ஒத்திசைவு டிரான்ஸ்பாண்டர்கள் மூலம் கையாளப்படுகின்றன. மேலும், அதிலுள்ள குறைந்த, நடுத்தர மற்றும் உயர் சக்திவாய்ந்த ஆண்டெனாக்கள் IDSN-லிருந்து தொலைப்பதிவுகள், கண்காணிப்புகள் மற்றும் புள்ளிவிவரங்கள் தொடர்பான கட்டளைகள் பெறவும், செலுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

    சூரியன், சந்திரன், மற்ற பிற கிரகங்களின் இயக்கங்களைக் கண்காணிக்கவும் கணிக்கவும் டில்லியிலுள்ள ஜந்தர் மந்தர் கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மகரசங்கராந்தி தினத்தன்று, பெங்களூரின் கவிகங்காதரேஸ்வரர் கோவிலுள்ள நந்தியின் கொம்புகள் இடையே ஒரு மணிநேரம் மட்டும் செல்லும் சூரியக் கதிர்கள், சிவலிங்கம் மீது விழுந்து ஒளிர்கிறது. கன்னியாகுமரியின் காந்தி மண்டபத்தில், மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதியன்று, அங்குள்ள அஸ்திக்கலசம் (சாம்பல்) மீது சூரியக் கதிர்கள் விழும்படி உருவாக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் (தமிழ்நாடு) யோகநந்தீஸ்வரர் கோயிலில் உள்ள லிங்கத்தின் மீது, சித்திரை மாதம் 1, 2, மற்றும் 3 தேதிகளில் மட்டும் (ஏப்ரல் மாதம்) சூரியக் கதிர்கள் ஒளிரும்படி அமைத்துள்ளனர். இவை, பழங்காலத்தில், நமது முன்னோர்கள், வானியல் அறிவியல் வல்லுனர்களாகத் திகழ்ந்தார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.

    மேலும் இவை, “ஹோஹ்மான் ட்ரான்ஸ்ஃபர் ஆர்பிட்” கொள்கைக்கு இணையானவையாக உள்ளன. ஆனாலும், அக்கொள்கைக்கு, பல வருடங்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. எரிபொருள் சேமிப்பில் உதவும், இக்கொள்கையின் அடிப்படையில், செவ்வாய்க்கு விண்கலங்கள் ஏவும் சந்தர்ப்பங்கள், ஒவ்வொரு 26 மாதங்களுக்கு ஒருமுறை ஏற்படுகிறது. மங்கள்யான் ஏவுதலில், இக்கொள்கை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின், அந்த வெற்றிகரமான மங்கள்யான் ஏவுதலுக்குப் பிறகு, 28/9/2014-இல் பிரபல பத்திரிகையான, நியூயார்க் டைம்ஸ், பசு மாட்டுடன் ஒரு இந்திய விவசாயி, “எலைட் விண்வெளி கிளப்”-இல் கதவைத் தட்டுவது போன்ற கார்ட்டூன் வெளியிட்டு விமர்சித்து இருந்தது. பண்டைய இந்திய வானியல் அறிவுத் திறமைகள் பற்றி, அப்பத்திரிக்கை சரிவர அறிந்திருந்தால், அவ்வாறு விமர்சனம் செய்திருக்க வாய்ப்பில்லை.

    மங்கள்யானைத் தொடர்ந்து, 2017-2020-இல், செவ்வாய்க்கு, விண்கலங்கள் அனுப்ப, இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.  செவ்வாய் டிரேஸ் வாயு மிஷன் என்ற விண்கலம், அங்குள்ள மீத்தேன் மற்றும் சிதைவுப் பொருட்களான, ஃபார்மால்டிஹைடு, மெத்தனால் போன்றவற்றை ஆய்வு செய்ய, 2016-இல் அனுப்பப்படவுள்ளது. 30 செப்டம்பர் 2014-ல், நடந்த ஒரு கூட்டத்தின் போது, நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் செவ்வாய் பற்றி இணைந்து ஆராய்வதற்கு, ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    எதிர்காலத்தில், செவ்வாய்க்குப் பயணம் செய்வதற்காக, நானோ தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு ரோபோட்கள் மற்றும் விண்வெளி லிஃப்ட் போன்றவை பயன்படுத்தப்படும். நானோ-எரிபொருள்கள் மற்றும் கடினத் தன்மை மிகுந்தவையும், குறைந்த எடையும் கொண்ட கார்பன் நானோ குழாய்கள், கிராபின் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி விண்கலம் தயாரிக்கப்படும் சாத்தியங்கள் இருப்பதால், விண்கலங்களின் எடை குறையும், சக்தி அதிகரிக்கும்.

    ரோபோட் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள், யதார்த்தமான மனித உருவில் செயல்படும் ரோபோட்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. ஆண்ட்ராய்டு ரோபோட்கள் என்பவை, அவ்வாறு மனிதனைப் போல் செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்ட, செயற்கை உயிரின ரோபோட்கள் ஆகும். அவை, விண்கலங்களில் ஏற்படும் தவறுகளையும், பழுதுகளையும் சீர்செய்யப் பயன்படுத்தப்படலாம்.

    விண்வெளி லிஃப்ட் என்பது, பூமியில் ஒரு இடத்திலிருந்து, விண்வெளியை நோக்கி உயர்த்திக் கட்டப்பட்ட கேபிள் மூலம் பயணம் செய்து, விண்வெளியை அடையும் முறை ஆகும். இந்த முறையில், விண்கலங்கள் இல்லாமல், கேபிள் மூலம், விண்வெளிக்கு பொருள்கள் எடுத்துச் செல்லவும், கீழே கொண்டு வரவும் இயலும். வலுவான, குறைந்த எடையுள்ள, கெவ்லர் போன்றவை அத்தகைய லிஃப்ட் உருவாக்குவதில் உதவுகிறது. பூமியை விட, குறைந்த ஈர்ப்புச் சக்தி கொண்ட அனைத்துக் கிரகங்களுக்கும் (நிலா, செவ்வாய் போன்ற), விண்வெளி லிஃப்ட் உருவாக்கலாம். ஒபயாசி என்ற ஜப்பான் கட்டுமான நிறுவனம், 2050 ஆம் ஆண்டுக்குள், 60,000 மைல் உயரத்திற்கு, விண்வெளி லிஃப்ட், செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதுபோன்ற லிஃப்ட்கள் நடைமுறைக்கு வந்தால், விண்கலங்கள் உருவாக்குவதற்கான செலவுகள் பெருமளவு குறையும்.

    விண்கலங்கள் மற்றும் செயற்கைக்கோள்களை, மிகச் சிறிய துகள்களாகச் செய்து, அவற்றை ரேடியோ அலைகள் மூலம் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பி மீண்டும் அவற்றைச் செவ்வாய்க் கிரகத்தில் வைத்து, அதன் உண்மையான உருவிற்கு மாற்றும் முறைதான், மேற்கூறிய, அனைத்தையும் விடச் சிறந்த தொழில்நுட்பம் (தற்பொழுது, செவ்வாய்க் கிரகத்திற்கு கட்டளைகளையும், புகைப்படங்களையும் அனுப்புவது மற்றும் பெறுவது போன்ற முறையில்). இந்தத் தொழில்நுட்பம், எதிர்காலத்தில் வெற்றியுடன் உருவாக்கப்படுமா என்பதைக் காலம்தான் சொல்லும். காத்திருப்போம்!

    References / Sources: Mars Orbiter Mission – Wikipedia. 2018. Mars Orbiter Mission – Wikipedia. [ONLINE] Available at: https://en.wikipedia.org/wiki/Mars_Orbiter_Mission [Accessed 03 Sep 2018]

    ==========================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    கட்டுரை ஆசிரியர், செவ்வாய்க் கோள் பற்றி இதுவரை உலக வானியல் விஞ்ஞானிகள், பொறி நுணுக்க நிபுணர்கள் கண்டுபிடித்த, யூகித்த தகவலை, முற்காலச் சீன, இந்திய வல்லுநர் எழுதி வைத்த தகவலோடு ஒப்பிட்டுக் கட்டுரை வடிக்கிறார்.

    வண்ணத்தில் குறிப்பிட்ட மூன்று கூற்றுகள் [நீர் இருப்பு, இந்திய வல்லுநர் வானியல் விஞ்ஞான அறிவு, முப்பக்க அண்ட மின்தொடர்பு (3D objects Electronic transmission)] தர்க்கத்துக்கு உரியவை. நீர்வள இருப்பு, உயிர் மூலவி இருப்பு இன்னும் உறுதியாக்கப்படவில்லை.

    ஆயினும் செவ்வாய்க் கோள் பயணம் பற்றிக் கடந்த கால, எதிர்காலத் தகவல்கள் பலவற்றைச் சேகரித்து உருவான இக்கட்டுரை, வல்லமையில் வெளியிடத் தகுதியுடையது.

    ==========================================

    Share
  • இஸ்ரேல் தேர்தலில் நேத்தன்யாஹு வெற்றி பெற்றுவிட்டார்; இது என்ன வெற்றி!?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இஸ்ரேல் தேர்தலில் நேத்தன்யாஹு வெற்றிபெற்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. இது என்ன வெற்றி? 120 அங்கத்தினர்கள் உள்ள பாராளுமன்றத்தில் 35 இடங்களே பெற்றிருக்கிறார். இது ஓட்டு வங்கியில் 34 சதவிகிதம்தான். இன்னொரு தேர்தலைத் தவிர்ப்பதற்காகப் பல கட்சிகள் ஒன்று சேர்ந்து ஐம்பது சதவிகிதத்திற்கு மேல் இடங்கள் பெற்றுவிட்டால் அந்தக் கூட்டுக் கட்சி அரசு அமைக்க முடியும். (இந்தியாவில் கர்நாடகாவில் 2018-ஆகஸ்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 38 இடங்களே பெற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்ததுபோல்தான். 104 இடங்கள் வாங்கிய பிஜேபி 78 இடங்கள் வாங்கிய காங்கிரஸோடு சேர்ந்து ஆட்சி அமைக்க விரும்பாததால் ஜனதா தளத்திற்கு அதிர்ஷ்டம் அடித்தது.)

    மற்றக் குட்டிக் கட்சிகள் வெள்ளை-நீலம் கட்சியின் தலைவர் கேன்ட்ஸோடு (இந்தக் கட்சிக்கும் 35 சீட்டுகள் கிடைத்திருக்கின்றன) சேர விரும்பாததால் நேத்தன்யாஹுவோடு சேர முடிவு எடுக்கும் வாய்ப்பு அதிகம். அதனால் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் நேத்தன்யாஹுவுக்கு அரசு அமைக்கும் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

    நேத்தன்யாஹு வன்மம் படைத்தவர்; தனக்கு வேண்டாதவர்களைப் பழிவாங்குவதில் கில்லாடி; ஊழல் புரிந்தவர்; பாலஸ்தீனர்களின் உரிமைகள் என்று வரும்போது அவர்களை அறவே ஒழிக்க வேண்டும் என்பவர். இவருக்கு ஐந்தாவது முறையாக – இஸ்ரேலின் ஸ்தாபகர் பென்-குரியனுக்குக் கிடைத்ததைவிட அதிக முறை – ஆட்சி அமைக்கும் வாய்ப்புக் கிடைக்கப் போகிறது. ஊழல்கள் புரிந்திருக்கிறார் என்று இவர்மேல் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் பிரதம மந்திரியாகிவிட்டால் பிரதம மந்திரிக்குத் தண்டனை வழங்க முடியாது என்று சட்டம் இயற்றிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.

    இது இஸ்ரேலுக்கு சோதனையான சமயம் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறுகிறது. அவர் பிரதம மந்திரியாகப் பதவி ஏற்கப் போவதால் பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடு அமைக்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது, இஸ்ரேலின் ஜனநாயகத் தன்மைக்கு அபாயம் ஏற்படும் வாய்ப்பு வந்திருக்கிறது, அமெரிக்க யூதர்களுக்கும் இஸ்ரேலின் வலதுசாரி அரசுக்கும் இடையிலான உறவு முறிந்துபோகும் அபாயம் இருக்கிறது என்றும் கூறுகிறது.

    நேத்தன்யாஹு காலத்தில் இஸ்ரேல் நிறையச் சாதனைகள் படைத்திருக்கிறது என்பது உண்மைதான். இவையெல்லாம் அமெரிக்காவின் உதவியால்தான் என்பதை மறுக்க முடியாது. இஸ்ரேல் தோன்றிய நாளிலிருந்தே அமெரிக்காவும் அமெரிக்க யூதர்களும் இஸ்ரேலுக்கு நிறையப் பண உதவியும் தொழில்நுட்ப உதவியும் செய்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது ட்ரம்ப் உதவியும் நிறைய அளவில் கிடைத்திருக்கிறது. இரண்டு crooks-களும் ஒன்று
    சேர்ந்திருக்கிறார்கள். இது உலகுக்கே நல்லதல்ல.

    இதுவரை அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாக உலகுக்குக் காட்டிக்கொண்டாவது இருந்தது. இப்போது அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு எந்த அமெரிக்க ஜனாதிபதியும் செய்யாத சில காரியங்களை
    ட்ரம்ப் செய்திருக்கிறார். அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றினார். போரில் சிரியாவிடமிருந்து கைப்பற்றிய, இதுவரை ஆக்கிரமித்திருந்த கோலன் ஹைட்ஸை இஸ்ரேலின் இறையாண்மைக்கு நேத்தன்யாஹு உள்ளாக்கிக்கொண்டபோது நேத்தன்யாஹுவின் வேண்டுகோளுக்கு இணங்க ட்ரம்ப்பும் அதை அங்கீகரித்தார். கிழக்கு ஜெருசலேமிலிருந்த அமெரிக்கத் துணைத் தூதரகத்தை மூடிவிட்டார்.

    தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாட்களில் நேத்தன்யாஹு ஓட்டுகளைப் பெற, பாலஸ்தீனர்களுக்குரிய இடமான வெஸ்ட் பேங்கில் இஸ்ரேல் கட்டியிருக்கும் குடியிருப்புகளை இஸ்ரேலின் ஆளுகைக்குக் கொண்டுவரப் போவதாக வாக்குறுதி அளித்தார். பாலஸ்தீனர்களுக்கு ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட வெஸ்ட் பேங்கை இஸ்ரேல் போரில் பிடித்துக்கொண்டது முதல் தவறு. அதில் யூதர்களுக்காகக் குடியிருப்புகள் கட்டியது இரண்டாவது தவறு. இப்போது அதை இஸ்ரேலின் வசமாக்கிக்கொள்ள நினைப்பது அதைவிடப் பெரிய தவறு. இது சர்வதேசச் சட்டத்திற்கே விரோதமானது. இப்படிச் செய்தால் பாலஸ்தீனம் என்ற ஒரு நாடு உருவாகும் சாத்தியமே இல்லை.

    இஸ்ரேல் உருவானதிலிருந்து செய்த அட்டகாசங்களையெல்லாம் கண்டித்து ஐ.நா. பொதுச்சபை கொண்டுவந்த எந்தத் தீர்மானத்தையும் இஸ்ரேல் மதிக்கவில்லை; அது அப்படி நடந்துகொள்வதற்கு அமெரிக்கா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை உபயோகித்து அந்தத் தீர்மானங்களை முறியடித்துவிடுவதுதான் காரணம். இஸ்ரேலும் பாலஸ்தீனர்களும் கூடிப் பேசி இஸ்ரேல் – பாலஸ்தீன எல்லைகளை முடிவெடுக்க வேண்டும், இஸ்ரேலால் பாலஸ்தீனத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட  பாலஸ்தீனர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்புவது பற்றி முடிவெடுக்க வேண்டும், ஜெருசலேமின் எதிர்காலம் பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று 1995-இல் ஏற்பட்ட ஆஸ்லோ ஒப்பந்தம் போட்ட எந்த ஷரத்தையும் இஸ்ரேலின் பிரதம மந்திரியாக 1996-இல் பதவியேற்ற நேத்தன்யாஹு நிறைவேற்றவில்லை.

    ஆஸ்லோ ஒப்பந்தம் நிறைவேறாமல் போனதற்கு நேத்தன்யாஹுதான் காரணம். நேத்தன்யாஹு பிரதம மந்திரியாகப் பதவியேற்ற பிறகு ஒரு காலத்தில் தென் ஆப்பிரிக்கா இருந்தது போல் இஸ்ரேலும் ஒரு இன ஒதுக்கல் நாடாக மாறிவிடும்; அதில் பாலஸ்தீனர்களுக்கு யூதர்களோடு சம உரிமைகள் இருக்காது. எல்லாப் பாலஸ்தீனர்களையும் பாலஸ்தீனத்தை விட்டே விரட்டிவிட்டு, இஸ்ரேல் யூதர்கள் மட்டுமே வாழும் ஒரு ஜனநாயக நாடாக விளங்க வேண்டும் என்ற நேத்தன்யாஹுவின் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை.

    Share
  • கொங்கு நாட்டில் பறையர் ஆற்றிய கோயில் திருப்பணிகள்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    கொங்கு நாட்டில் பறையர் ஆற்றிய கோயில் திருப்பணிகள் 

    கொங்கு நாடு கன்னியாகுமரி போலவே தனக்கெனத் தனிவரலாறு கொண்டிருந்ததானது அங்கத்து கல்வெட்டுகளால் அறிய முடிகின்றது. கொங்கு, சோழர் காலத்தில் இங்கு கோயில் இயக்கம் தொடங்கியது முதல் அவர் உத்தாரம் (support) பெற்று நல்ல முறையில் கோயில் இயக்கம் எடுத்துச் செல்லப்பட்டதைக் கல்வெட்டுகளில் காண முடிகின்றது. இவற்றில் வெள்ளாளர் குழுக்களாக, கூட்டமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதிகாரப் பொறுப்பில் இருந்த வெள்ளாளரிடம் பறையர் காவற் பணியில் இருந்ததைக் கல்வெட்டுகளால் அறிய முடிகின்றது. இப்பறையர்கள் இங்கத்து கோயில்கள் சிலவற்றில் விளக்கேற்றித் திருத்தொண்டு புரிந்தது பதிவாகி உள்ளது. இது இவர்கள் கோயிலுட் சென்று கருவறை மூலவரை எதிர் வணங்கினமைக்குச் சான்றாகின்றது.

    இதை ஏன் இங்கே சிறப்பாகக் குறிக்க வேண்டி உள்ளது என்றால் புராணங்கள், மனுதர்மம் ஆகியவற்றின்படி இவர்கள் கோயிலில் நுழைய அனுமதி இல்லாத தீண்டத் தகாதோராக நடத்தப்பட்டனர் என்ற தப்பான, பிழையான கருத்தே மக்கள் பெரும்பாலார் நெஞ்சங்களில் குடிகொண்டு உள்ளது. இப்பிழையான கருத்தை முறியடிக்கும் ஆயுதமாகச் சில கல்வெட்டுகள், கொங்கில் காணக் கிடைக்கின்றன.

    ஏன் இங்கே மட்டும் கிடைக்கின்றன? மற்ற இடங்களிள் இவ்வாறான கல்வெட்டுகள் இல்லையா? என்ற கேள்விக்கு முதலாவதாக இங்கே தமிழகத்தின் பிற பகுதிகள் போல் அல்லாமல் பெரிய கோயில்கள் மிகக் குறைவு அதனால் கல்வெட்டுகளும் குறைவு. ஆதலால் இங்கத்துச் சாதி உணர்வுள்ளவரில் தனியார் சிலர், தம் சொந்தச் செலவில் இங்கத்துக் கோயில் கல்வெட்டுகளைப் படியெடுத்தும், படித்தும் அச்சில் ஏற்றி, நூலாக வெளியிட்டு உள்ளனர். இப்படி மற்ற இடத்தில் பெரிதாக எவரும் செய்யாததால் பறையர் பற்றிய செய்திகள் பிற இடங்களில் அதிகம் வெளியாகவில்லை.

    வெளியான அளவிற்கு இவை பறையர் சமூக சமநீதிப் போராட்டத்திற்கான சிறந்த ஆயுதங்களாக உள்ளன. இதை உணர்ந்தால் இவர்களுக்கு நன்மை உண்டாகும். அப்படி அல்லாமல் மீண்டும் மீண்டும் புராணத்தையும் மனுதர்மத்தையும் காட்டி சைவ, வைணவ மதங்களைச் சாடி, பிராமணரைப் பழிப்பார்களானால் இக்கல்வெட்டுகள், பிடியில்லாக் கத்தியாக இவர்களைத்தான் காயப்படுத்தும். கொங்கு கல்வெட்டு போல பிற இடத்துக் கல்வெட்டுகள், கோயில் வாரியாக நூலாக வெளியாவதற்கு நடுவண் தொல்லியல் துறைக்கு அழுத்தம் தர வேண்டும். இனி, சில கல்வெட்டுகளைக் காண்போம்.

    கோயம்புத்தூர் மாவட்டம் சங்கமேசுவரர் கோயில் தெற்கு ஜகதி உள்ள 3 வரிக் கல்வெட்டு.    

    1. ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரம சோழ தேவற்கு யாண்டு பதினேழாவது எதிர் எதிர் பேரூர் நாட்டு கோவன்புத்தூர் உடையார் சங்கீசுரமுடையார் கோயில் பக்கல் வடபரிசார நாட்டி
    2. லிருக்கும் வெள்ளாழன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக் காமுண்டனேன் வைத்த சந்தியா தீபமொன்றுக்கு மிக்கோயிலிற் காணியுடைய சிவப்பிராமணனுக்கு ஓரச்சு குடுத்தே _ _ _ _
    3. சந்திராதித்தவரை செல்வதாகவு மிக்கோயிற் குடமுங் குச்சியுங் கொடு புக்கானிவனொருவன் செலுத்தக் கடவேனாகவும் கல்வெட்டுவித்தேநிது பன்மாஹேஸ்வர ரக்ஷை.

    பக்கல் – for, ஆக; நாட்டுக் காமுண்டன் – ஊர் காவலன்; காணியுடைய பிராமணன் – official priest ; அச்சு – காசு; புக்கான் இவன் ஒருவன்- கருவறையில் புகும் உரிமையுள்ள பிராமணன்; பன்மாகேசுவரர் – சிவனடியார்; ரக்ஷை – காக்கவேண்டும்.

    விளக்கம்: கொங்கு சோழர் மூன்றாம் விக்கிரம சோழனுக்கு 17+1+1 = 19 ஆம் ஆண்டு ஆட்சியில் (கி.பி. 1292 ) கோயம்புத்தூர் தெற்கு சங்கமேசுவரர் கோயிலில் வடபாரிச நாட்டில் வாழ்கின்றவனும் புல்லிகூட்டத்து வெள்ளாளனிடம் பணியில் உள்ளவனுமான பறையனான பறையன் என்பான், ஊர்க் காவல் செய்து வந்தான். அவன் இக்கோயில் காணியுடைய சிவப் பிராமணனிடம் காசு ஒரு அச்சு கொடுத்து சந்தியா விளக்கு ஒன்று எரிக்கச் செய்தான். இது சந்திர சூரியர் காலம் வரை ஏற்று நடத்தப்படும் என்று குடமும் குச்சியும் கொண்டு கருவறையில் நுழையும் அனுமதி பெற்ற பிராமணன் அப்படியே செய்வதாகக் கல்வெட்டி, அதைச் சிவனடியார் காக்க வேண்டும் என்கிறான்.

    இக்கல்வெட்டில் பயிலும் காணியுடைய பிராமணன், புக்கான் இவன் ஒருவன் என்ற சொல்லாட்சிகள் கருவறை பிராமணரைப் பிற கோயில் பிராமணரிடம் இருந்து வேறுபடுத்தி உயர்வாகக் காட்டுகின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அக்காலத்தே கோயில் சாராத (unofficial) ஆனால் அகவை முதிர்ந்த கோயில் சார்ந்த பிராமணருக்கு சார்பாக (substitute) அவர்களது உறவினரும் கோயில் பூசையில் ஈடுபட்டிருந்தனர். இத்தகையோருக்கு அந்த முதிர்ந்த பிராமணர் தான் தன் உரிமையில் இருந்து ஒரு பங்கைச் சம்பளமாக வழங்குவார்.  இது தான் அந்த வேறுபாடு.

    பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக். 153 மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

    கோயம்பூத்தூர் வடக்கில் அமைந்த இடிகரை ஊரில் உள்ள வில்லீஸ்வரர் கோயில் கருவறைச் சுவர் 15 வரிக் கல்வட்டு

    ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டிய / தேவற்கு யாண்டு 8 வது வ / டபரிசார நாட்டுக் கொற்ற / மங்கலத்திலிருக்கும் வெள் / ளாழன் பையரில் பறைய / ன் பறையனேன் ஆளுடை / யார் வில்லீஸ்வரமுடையா / ற்கு வைத்த / சந்தியா தீபவிளக்கு / ஒன்றுக்கு ஒடுக்கின வராகன் பணம் 10 இ / ப் பணம் பத்துங் கைக் கொண்டேன் இக் / கோயிற் காணியுடைய சிவ பிராமணன் / காசிவ கோத்திரத்துத் திருநட்டன் அகத்திஸ்வர / முடையானான சித்தரமேழி பட்டனேன் கு / டங் கொடு கோயில் புகுவார் சந்திராதித்த / வரை செல்வதாக பன்மாஹேஸ்வர ரக்ஷை.

    பையர் – கூட்டம், கீழ்ப்படிந்த வீரன், மகன், subordinate warrior; ஆளுடையார் – இறைவர்; ஒடுக்கின – கொடுத்த; வராகன் – ஒரு வகை காசு; சந்தி தீபம் – மாலை விளக்கு.

    விளக்கம்: இது 14 ஆம் நூற்றாண்டு கொங்கு பாண்டியனான வீர பாண்டியனின் 8 ஆம் ஆட்சி ஆண்டில் கொற்ற மங்கலத்தில் இருக்கும் பையர் கூட்டத்தை சேர்ந்த வெள்ளாளனிடம் பணியாற்றும் பறையன் பறையன் என்பான் வில்வீஸ்வரமுடையாருக்கு சந்தி விளக்கு ஒன்றிற்காக 10 வராகன் பணம் கொடுக்கின்றான். இதை பெற்றுக்கொண்ட கோயில் காணியுடைய சிவபிராமணன் காசிபகோத்திரத்தில் பிறந்த திருநட்டன் அகத்தீசுவரன் என்ற சித்திரமேழி பட்டன் அதைச் சந்திர சூரியர் உள்ள காலம் வரை நடத்திச் செல்வதாக உறுதி கூறுகின்றான்.  விளக்கேற்றியவர் கோயிலில் சென்று வழிபடுவது இயல்பு. இதாவது, பறையன் பறையன் உள்ளே சென்று வழிபட்டுள்ளான். இது அவன் தீண்டாமைக்கு ஆட்படவில்லை என்பதற்கு சான்று.

    பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக். 179, மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

    ஈரோடு பெருந்துறை வட்டம், ஆதியூர் கண் அமைந்த ஆதீசுவரர் கோவிலில் உள்ள கல்வெட்டு

    ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலஞ் சிறக்க திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்குத் திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற திருநல்லியாண்டு நாலாவது குழப்பு நாட்டு ஆதவூரில் வெள்ளாளன் வண்ணக்கரில் பிள்ளையாழ்வான் கரும்பறையனேன் நாயனார் ஆதீஸ்வரமுடையார் திருக்கோயில் திருநிலைகால் இரண்டு படி இரண்டும் என் தர்மமாகச் செய்வித்தேன் கரும்பறையனேன்.

    திருவெழுத்திட்டு – முடிசூட்டி; திருநல்லியாண்டு – ஆட்சி ஆண்டு; பிள்ளையாழ்வான் – கீழ்படிந்த பணியாள்; திருநிலைக்கால் – கதவு நிலை.

    விளக்கம்: மதுரை வேந்தன் வீரபாண்டியனின் நான்காம் ஆட்சி ஆண்டான 1269 இல் குழப்பு நாட்டில் அடங்கிய ஆதவூர் வண்ணக்கர் கூட்டத்து வெள்ளாளனின் பணியாளான கரும்பறையன் என்பான் ஆதிசுரமுடைய ஈசன் கோயிலில் இரண்டு திருநிலைக் கதவும் இரண்டு படியும் செய்வித்து கொடுத்து திருத்தொண்டு புரிந்தான்.

    பார்வை நூல்: கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப் பாடலும், பக். 143

    கோயம்புத்தூர் உடுமலைப்பேட்டை வட்டம், கடத்தூரில் உள்ள மருதீசர் கோயில் கோபுர வாசல் இடது நிலைக்காலில் வெட்டப் பட்ட 11 வரி கல்வெட்டு.

    ஸ்வஸ்திஸ்ரீ வீ / ராஜேந்திர தேவற்கு / யாண்டு பத்தாவ / து கடற்றூர் வெ / ள்ளாந் கள்ளந் ப / றையந் நரவீரகே / ரழச் சிலை செட்டி / இட்ட திருநிலை வாய் / முகவணை உ / த்தரமும் திருக்க / தவும் இட்டேந்.

    திருநிலைவாய் – கோபுரத்தோடு கூடிய வாயில்; முகவணை – வாயிலை ஒட்டிய கற்சுவர்.

    விளக்கம்: கொங்குச் சோழன் வீர ராஜேந்திரனின் 10ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1217) கடத்தூரில் வாழும் வெள்ளாளனுக்குப் பணியாற்றும் கள்ளன் பறையன் என்பான் நரவீரகேரளச் சிலைச் செட்டி சார்பாக இக்கோயில் திருநிலை வாயிலுக்கு முகவணை, உத்தரம், திருக்கதவு ஆகியன செய்து இட்டான். இதை வீரகேரளச்செட்டி நேரில் நின்று கவனிக்க முடியாததால் கள்ளன் பறையன் இத் திருப்பணியை அவன் சார்பில் மேற்பார்வை செய்து இட்டான் என்று கொள்வதே முறையானது. அந்த வகையில் கோயிலில் வழிபாடும் நடத்தி இருக்கின்றான்.

    பார்வை நூல்: கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொல்லியல் துறை, பக் 190.

    கோயம்புத்தூர் வடக்கில் இடிகரை ஊரில் அமைந்த வல்லீஸ்வரர் கோயில் கருவறைச் சுவரில் பொறித்த 4 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு யாண்டு 12 வது வடபரிசார நாட்டு இடிகரையி லிருக்கும் வெள்ளாழன் பைய்யரில் ச
    2. டையன் நேரியான் பறையனேன்ஆளுடையார் வில்லீஸ்வர முடையாற்கு வைத்த சந்தியா தீபவிளக்கு ஒன்றுக்கு ஒடுக்கின வ
    3. ராகன் பணம் 10. இப்பணம் பத்துங்கைக் கொண்டேன் இக்கோயிற் காணியுடைய சிவபிராமணன் காசிவ கோத்திரத்து திருநட்ட அகத்தீ
    4. ஸ்வரமுடையானான சித்திரமேழிப் பட்டனேன் குடங்கொடு கோயில் புகுவார் சந்திராதித்த வரை செல்வதாக இத்தன்மம். பன்மீயேசுவர ரக்ஷை.

    விளக்கம்: 14 ஆம் நூற்றாண்டு கொங்கு பாண்டியரில் வீரபாண்டியனுக்கு 12 ஆவது ஆட்சி ஆண்டில் இடிகரையில் வாழும் பையர் கூட்டத்து வெள்ளாளனின் பணியாள் நேரியான் பறையன் வில்லீசுவரமுடைய இறைவர்க்கு மாலை விளக்கு ஏற்ற 10 வராகன் பணம் கொடுத்தான். இதைக் கோயில் அலுவல பிராமணன் சித்திர மேழிப் பட்டன் பெற்றுக் கொண்டு சந்திர சூரியர் உள்ள வரை நடத்துவதாக உறுதி தந்தான்.

    இதே கோவிலில் 8ஆம் ஆட்சி ஆண்டின் இதே போல ஒரு கல்வெட்டு மேலே இடம்பெற்றுள்ளது.

    பார்வை நூல்: கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொல்லியல் துறை, பக். 342

    கோயம்புத்தூர் அவிநாசி வட்டம் சேவூரில் உள்ள கபாலீசர் கோயியில் முன்மண்டப தெற்கு குமுதத்தில் உள்ள 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ வீரராசேந்திர தேவற்கு யாண்டு இருபத்து நாலாவது _ _ _
    2. பாக்குடியில் இருக்குஞ் சாமந்தரில் குன்றன் _ _ _ _
    3. உடைய பாரசிவரில் வீற்றிருந்த வறியான் _ _ _
    4. இடங்கை நாயகந் நித்தப் பரையன்உள்ளிட்டாரும் வடுக _ _ _
    5. யாரும் இவர் _ _ _ _ பிடாரியாற்கு சந்தியா தீபத்துக்கு _ _ _
    6. இதுபன்மாயேசுவர ரக்ஷை.

    பாரசிவர் – அம்மன் கோயில் பூசகர்; சாமந்தன் – அமைச்சன் அல்லது படைத்தலைவன்;  பிடாரி – துர்கை.

    விளக்கம்: கொங்கு சோழரில் வீர ராஜேந்திரனுக்கு 24 நாலாவது ஆட்சிஆண்டில் (கி.பி.1230) பாக்குடியில வாழும் சாமந்தன் குன்றன், கோயில் பூசகரான பாரசிவர் வீற்றிருந்த வறியான், இடங்கைப் பிரிவுத் தலைவன் நித்தப் பரையன் உள்ளிட்டோர் ஆன இவர்கள் பிடாரிக்கு மாலை விளக்கு எரிக்க ஆவன செய்துள்ளனர்.

    பார்வை நூல்: கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொல்லியல் துறை, பக். 270

    திருப்பூர் காங்கேயம் வட்டம் பட்டாலியில் உள்ள பால்வண்ணீசுவரர் கோயில் தெற்கு சுவர் கல்வெட்டு.

    1.   ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரமசோழ தேவர்க்கு யாண்டு இருபதாவது பட்டாலி காவலன் குறும்பிள்ளரில்

    2.    செயங்கொண்ட வேளானும் செயங் கொண்ட வேளாந் மகந் பறையநும் இவ்விருவரும் பட்டாலியிற் பால் 

    3.   வெண்ணீஸ்வரமுடையாற்குச் சந்தியா தீபம் இரண்டுக்கும் குடுத்த பொந் இருகழஞ்சும் இக்கோயி

    4.   ல் காணி உடைய சிவப்பிராமணந் கூத்தந் கூத்தனும் திருமழபாடியுடையாநான கடைக்கிறிச்சியும் இருவோம் இப்

    5.   பொந் இருகழஞ்சுங் கொண்டு நித்தப்படி சந்திராதிச்சம் செலுத்துவோமாக  இச்சந்தியாதீபம் கு

    6.   டமுங் குச்சியும் கொண்டு மிக்கோயில் புக்காந் இவ்விளக்கிடுவாநா வந் _ _ _ _  

    வேளான் – அரசன், அரசமரபினன், ஆட்சியாளன்; மகன் – கீழ்படிந்த வீரன்.

    விளக்கம்: கொங்கு சோழரில் மூன்றாம் விக்கிரம சோழனின் 20 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1293) வெட்டப்பட்ட கல்வெட்டு. வேட்டுவ மரபினரான குறும்பிள்ளர் மரபில் வந்த செயங் கொண்டன், அவனுக்கு கீழ்படிந்த வீரன் பறையன் இருவருமாகச் சேர்ந்து காங்கேயம் பட்டாலியில் உள்ள பால்வண்ண ஈசுவரர் கோவில் இறைவருக்கு இரண்டு சந்தியா விளக்கு எரிக்க அக் கோவிலின் காணி பெற்ற சிவப்பிராமணர்கள் கூத்தன் கூத்தன் மற்றும் கடைக்குறிச்சி ஆகிய இருவரிடம் அதற்காக இருகழஞ்சு கொடுத்தனர். சிவப்பிராமணர் ஞாயிறும் நிலவும் உள்ள வரை சந்தி விளக்கு ஏற்ற உறுதிஉரைத்தனர்.

    பார்வை நூல்: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள், பக். 11, 2012,  த.நா.அ. தொல்லியல்துறை.

    Share
  • திணை பாயாசமும் திரு.வி.க குருகுலமும் (3)

    இன்னம்பூரான்

    சான்றோர்கள் வரலாறு படைக்கிறார்கள். நிகழ்வுகளும் அவர்களது


    வாழ்க்கையின் படிநிலைகளாக அமைந்து விடுகின்றன. திரு.வி.க. அவர்கள் காந்தி மஹானை முதல் தடவை சந்தித்து தேசபக்தர் சேலம் விஜயராகவாச்சாரியர் அவர்களின் அன்பினால் கிடைத்த அறிமுகம். காந்திஜி சென்னைக்கு வரும் ரயிலில், அரக்கோணமோ, ஜோலார்பேட்டையா என்பது நினைவில் இல்லை. அந்த ஜங்க்ஷனில், சேலம் விஜயராகவாச்சாரியார் கொடுத்தக் கடிதத்துடன், ரயில் வண்டியில் ஏறி, தயக்கத்துடன் காந்திஜியை சந்தித்து அதை கொடுக்கிறார். தன் சொற்பொழிவுகளை தமிழில் உடனுக்குடன் மொழிபெயர்த்து அளிப்பதற்கு ஆள் தேடிக்கொண்டு இருக்கிறார். அதற்குத்தான் இந்த சிபாரிசு. காந்திஜி நேராக, சுற்றி வளைக்காமல், விஷயத்துக்கு வருபவர். அவருடைய வினாக்களுக்கு திரு.வி.க. விடையளித்தது என் தாத்தாவை எனக்கு நினைவூட்டுகிறது. தாது வருட பஞ்சத்தில் அடிப்பட்டு, தரிசாக போய்விட்ட அரந்தாங்கியை விட்டு, பிழைப்பு தேடி, செட்டி நாடு வந்த அவரை வேலைக்கு வைக்கப்போகும் செட்டியாரிடம், அவர் ‘ எனக்கு இங்கிலீஷ் தெரியாது; தமிழ் தான் நன்றாகத்தெரியும். உங்கள் வேலைகளை தரமான முறையில் செய்வேன்.’ என்றாராம். செட்டியாருக்கு இவர் வேலை செய்யும் தோரணையும், திட்டமிடுதலும், பிடித்துப்போய்விட்டதாம். கதவுகளில் வெள்ளித்தகடு அடித்த தன் சொந்தக் காரை தான் இவருக்கு அனுப்புவாராம். ஏதோ பழங்கதை. இதே மாதிரி தான், எஸ்.எஸ்.எல்.சி பாஸ் செய்யாததை முன் வைத்து, காந்திஜியின் உரைகளை உடனுக்குடன், தமிழாக்கம் செய்து அளிக்க முடியும் என்று தீர்மானமாக சொல்லி விடுகிறார். அவரும் ஏற்றுக்கொள்கிறார். பிறகு சென்னையில் அந்த ஊழியமும் காந்திஜிக்கு திருப்தி அளிக்கும் வகையில் அமைகிறது. 

    இவரும் தமிழ் காந்தியாகி வருகிறார். அந்த உருக்கமான தொடர் நிகழ்வை எழுத ஒரு தனி புத்தகம் தேவை. இது நிற்க.

    இன்று ஏப்ரல் 8, 2019. நூறு ஆண்டுகளுக்கு முன் அதே தேதியில்

    [ஏப்ரல் 8, 1919] நடந்ததை கவனிப்போம். அண்ணல் காந்தி நிறுவிய சத்யாக்ரஹா கமிட்டி தற்பொழுது, பத்திரிகை, படைப்புகள் ஆகியவற்றில் தனக்கு சாதகமாக இல்லாததை மட்டுறுத்துவது என்ற விதியை மட்டும் மீறப்போவதாக தீர்மானிக்கிறது. காந்திஜி எழுதிய ஹிண்ட் ஸ்வராஜ்யா இதழ்கள்,சர்வோதயா இதழ்கள், யுனிவெர்ஸல் உதயம், சத்யாக்ரஹியின் கதை, துருக்கி சீர்திருத்தவாதியும், சர்வாதிகாரியும் ஆன முஸ்தாஃபா கெமால் பாஷா அவர்களின் வாழ்க்கை, உரைகள் அடங்கிய நூல் ஆகியவை, தடை செய்யப்பட்டிருந்த்தாலும், அதை மீறி சட்ட விரோதமாக விற்கப்படுகின்றன. அதில் ஈடுபடும் தியாகிகளில், காந்திஜி, சரோஜினி நாயுடு, திரு.சோபானி, திரு லக்ஷ்மிதாஸ் டைஶ்ரீ ஆகியோர் பிரபலம், அவர்கள் துணிவுடன் தன் கையொப்பமிட்டே அவற்றையும், பல சிறிய புத்தகங்கள், போஸ்டர்களை விற்றனர். இந்த செயலை நாம் இன்று உற்று நோக்கும்போது, கருத்துத்தடை இன்றும் செயல்படுகிறது என்று புலப்படுகிறது. அதனால் தான் நான் எழுதிய திரு.வி.க. சரிதம் பிரசுரம் செய்ய முடியவில்லை. அதில் ‘இன்று திரு.வி.க. இருந்தால்’ என்று ஒரு அத்தியாயம் தலைப்புடன் மட்டும் நிற்கிறது.

     

    Share