முனைவர் மீனாட்சி பாலகணேஷ்  

குழவி மருங்கினும் கிழவதாகும்- 8.1

(அம்மானைப் பருவம்)

வரிசைப்படுத்தப்பட்ட பிள்ளைத் தமிழின் பருவங்களின்படி, பெண்பால் பிள்ளைத் தமிழில் அம்மானைப் பருவம் எட்டவதாகச் சுட்டப்பட்டுள்ளது. இனி இத்தொடரில் நாம் காணப் போகும் அடுத்த சில பருவங்கள் பெண்மக்கள் அல்லது ஆண்மக்களுக்கே உரித்தானவையாகும். நயம்படப் பாடப்பட்ட இனிமையான பல பிள்ளைப் பருவங்களைக் காணப் போகிறோம்.

மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் உரையாசிரியர், ‘பிள்ளையை நோக்கி மாதர்கள் முத்தம்மானை முதலிய அம்மானையை எடுத்தாடிட வேண்டும் எனக் கூறும் பருவமிது என அமைத்தனர்’ என்பார்.

பெண்குழந்தைகளின் அம்மானை விளையாட்டென்பது ஒரு சிறப்பான விளையாட்டு. இது அவர்களுடைய நுண்ணறிவு எனும் புத்தி சாதுரியத்தினையும், வாக்கு வன்மையையும், பாடல்களைப் புனைந்து, இசையோடு பாடும் ஆற்றலையும், விரைந்து நொடிப்பொழுதினில் கண், கைகள், உடலசைவு ஆகியன ஒருமித்துச் செயல்படுதலையும் வளர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது என அறியலாம்.

விறுவிறுப்பான அம்மானை விளையாட்டு, ‘துறு துறு’வென மூளைக்கும் வேலை கொடுப்பது! தமிழுக்கும் ஓர் அழகான இலக்கியம்!! மூன்று பெண்கள் அமர்ந்து பாடி, மூன்று அம்மானைகளைக் கொண்டு ஆடுவதால் இந்த விளையாட்டு ‘மூவர் அம்மானை’ எனவும் பெயர் பெற்றது. மூன்று பெண்கள் ஏதேனும் ஒரு செய்தியை அல்லது இறைவன்/ அரசன் பற்றிய கதையை அல்லது அவன் புகழை, வினா- விடையாக, அங்கதமாக, தூற்றுமறைத் துதியாக அல்லது விடுகதை போலப் பாடல்கள் புனைந்து பாடியவாறு அம்மானைக் காய்களை உயர வீசிப் பிடித்து விளையாடும் விளையாட்டே அம்மானை ஆகும்.

பல சந்தர்ப்பங்களில் அம்மானை எனும் விளையாட்டினை விளையாடிய பெண்களால் புனைந்து பாடப்பட்டு வந்த பாடல்கள், ‘மூவர் அம்மானை’ எனும் பெயரில் தொகுக்கப்பட்டு 1861ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட ஒரு நூலில் காணப்படுகின்றன. இவை பெண்கள் அம்மானை ஆடுவதாகக் கருதியோ, அம்மானை ஆடுவதற்காகவோ புலவர்களால் புனையப்பட்டனவாகவும் இருக்கலாம்.

பண்டைக் காலம் தொட்டு, மனிதர்கள் வாழ்க்கையை ஒழுங்கான நாகரிகமான நெறியாகக் கடைப்பிடித்து வாழத் துவங்கிய காலத்திலிருந்து, உயர்ந்த சிந்தனைகளும் அதன் தொடர்பான சீரிய எண்ணங்களும் தோன்றி வளர்ந்தன. தமிழ்நாட்டில் ஒரு காலக்கட்டத்தில் சைவ, வைணவ சமயங்கள் வேகம் பெற்று வளர்ந்து உயர்ந்து உன்னத நிலையை அடைந்தபோது மாந்தர்களின் வாழ்வில்  பிறப்பு, இறப்பு, ஆடல், பாடல், விளையாடல், கல்வி, கேள்வி என்ற எல்லா நிகழ்வுகளிலும் இறைவனின் புகழ் ஒரு அங்கமாகவே இசைக்கப்பட்டது.  அங்கதமாக, விடுகதையாக, புராணங்களாக, பக்தி இலக்கியங்களாக இவை தழைத்து வளர்ந்து தனிச் சிறப்புப் பெற்றன. சிறப்பாக, மகளிர் தம்முடைய தினசரி நடவடிக்கைகளான நீராடல், பலவிதமான விளையாட்டுகளைப் பொழுது போக்காக விளையாடுதல் ஆகிய எல்லாவற்றிலும் இறைவன் தொடர்பான பாடல்களைப் பலவிதமாகப் பாடி மகிழ்ந்தனர்.

இவற்றுள்  பாவை நோன்பு, அம்மானை ஆகிய பெண்களின் விளையாட்டுகள் தொடர்பான நயம் மிகுந்த வாய்மொழி இலக்கியங்கள் என்னும் பாடல்கள் பின்பு சமய இலக்கியங்களிலும் இடம் பெற்றன. அவற்றுள் ஒன்று தான் அம்மானை எனப்படுவது.

அம்மானை என்பது சிறு பெண்கள் முதல் எல்லா வயதுப் பெண்களும் விரும்பி ஆடும் ஒரு விளையாட்டாகும். இதற்காகவே செல்வந்தர் வீடுகளில் அம்மானைக் காய்கள், பெருமுத்துக்கள், பவளம், மரகதம் முதலியவற்றாலும், பொன்னாலும் செய்யப்படும். மற்றபடி, வழுவழுப்பான மர உருண்டைகளும், உலர்ந்த உருண்டைக் காய்களும் இன்ன பிறவும் கூடப் பயன்படுத்தப்பட்டன.

பாடலைப் பாடி ஆடுவதனால் இதுவொரு அழகான இலக்கியமாகவும், உலா, கலம்பகம், பிள்ளைத் தமிழ் ஆகிய இலக்கியங்களில் ஓர் உறுப்பாகவும் அமைந்துள்ளது. மணிவாசகப் பெருந்தகையும் அம்மானைப் பாடல்களைப் பாடியாடும் பெண்கள் ஈசன் புகழை அழகுறப் பாடுவதாகப் பாடல்களை அமைத்துள்ளார்.

அழகான, பொருள் நிறைந்த, இத்தகைய மூவர் அம்மானைப் பாடல்கள், கலம்பகம் எனும் நூல்களின் ஒரு அங்கமாக விளங்குகின்றன.  கலம்பகம் என்பதற்குக் கதம்பம் என்று பொருள் என்பார் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர். பலவகைப் பாக்களால் இயற்றப் பெறுவதும் பலவகைப் பொருள்களைக் கொண்டதுமான ஒருவகைச் சிற்றிலக்கியமே கலம்பகம் எனப்படும். கலம்பகம் என்னும் சொல்லில் கலம் என்பது பன்னிரண்டையும் பகம் என்பது அதில் பாதியான ஆறினையும் குறிக்கும். ஆகவே பதினெட்டு உறுப்புகள் அமையப் பாடப் படுவது கலம்பகம் எனப்படும். அம்மானை என்பதும் இதில் ஒரு உறுப்பாக இடம் பெறும்.

மூன்று பெண்களில் முதலாமவள் ஒரு பாட்டுடைத் தலைவனை மனத்தில் கொண்டு அவன் பற்றிய பொதுவான ஒரு செய்தியைக் கூறி அம்மானைக் காயை உயர வீசி ‘அம்மானை’ என்பாள்; இரண்டாவது பெண் அந்தச் செய்தியுடன் பொருந்திய ஒரு கேள்வியைக் கேட்டுக் காயை வீசி ‘அம்மானை’ என்பாள்; மூன்றாமவள் அதற்கு இரு பொருள் படும்படியான ஒரு சாமர்த்தியமான விடையைக் கூறிக் கொண்டே அம்மானையை வீசிப் பிடித்து ‘அம்மானை’ என்பாள். இதுவே அம்மானை விளையாடும் முறையாகும். காலம் செல்லச் செல்ல சில வேறுபாடுகளும் கொண்டு அம்மானை விளையாட்டு காணப்படுகிறது.

திருப்பேரூர்க் கலம்பகத்தில் காணும் ஒரு அழகிய பாடல்:

முதல் பெண் அம்மானை ஆட்டத்தை ஆரம்பித்து வைக்கிறாள்: புதிர் போடுவது போல ஒரு சேதியைக் கூறுகிறாள்: “பட்டிநாதன் எனப்படும் பேரூர் ஈசன், காட்டில் வேடனாக அலைகின்றவன்; கடலில் வலைவீசி மீன்பிடிப்பவன்; வயலில் பள்ளனாக இறங்கி வேலையும் செய்பவன், பார்த்தாயோ அம்மானே!” என அவனது திருவிளையாடல்களை (!) செய்தியாகக் கூறுகிறாள். தாள லயத்துடன் அம்மானையையும் உயரே வீசிப் பிடிக்கிறாள்.

            ‘காட்டிலே வேட்டுவன்பைங் கடலில் வலைவாணன்

            நாட்டிற்பள் ளன்பட்டி நாதன்கா ணம்மானை’

அடுத்தவள் வேண்டுமென்றே குதர்க்கமாக, “அப்படியென்றால்  வேதம் ஓதும் அந்தணர்கள் அவனைத்  தம்வீட்டில் சேர்த்துக்கொள்ளும் பெருமை எப்படி ஆயிற்றோ அம்மா?” என வினவுகிறாள்.

            ‘நாட்டிலே பள்ளனெனில் நான்மறையோர் ஈங்கிவனை

          வீட்டிலே சேர்த்துகின்ற மேன்மையென்ன அம்மானை’

அதற்கு மூன்றாமவள், “அந்தப் பெருமான் உலகியலுக்கு அப்பாற்பட்டவனடி அம்மானே! வீட்டுக்கும் உரியவனானவன் பார்!” என சாமர்த்தியமாக விடை கூறுகிறாள். “ஆமாம்! வீட்டின் உரிமையாளனைச் சேர்க்காமல் இருக்க இயலுமா?”எனும் பொருள் மறைந்து நிற்கிறதல்லவா?

            ‘வீட்டுக் குரிய விகிர்தன்கா ணம்மானை.’

‘பேரூரின் பட்டிநாதன் ஆகிய சிவபிரான் வேட்டுவனாகவும் (அருச்சுனனுக்கு வரமருளக் கொண்ட வேடம்), வலைவாணனாகவும் (திருவிளையாடல்), பள்ளனாகவும் (பேரூர்ப் புராணம்) எல்லாம் வந்தாலும், அவர்களிலிருந்து வேறுபட்டு வீடுபேற்றை (முத்தியை) அளிக்கவல்லவனாகவும் அல்லவோ திகழ்கிறான்,’ என்பது உட்பொருள்! பேரூர் முத்தித்தலம் ஆகும்! அப்பொருள் இதில் தொக்கிநிற்பது மிகுந்த அழகாக உள்ளது!

‘மானே! அம்மானே!’ எனும் பாடலுக்கேற்ற விளி அடுத்தடுத்த வரிகளில் வருவதனால் இவ்விளையாட்டு அம்மானை எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்று எண்ணவும் இடமுள்ளது.

பழங்காலந்தொட்டு வாய்மொழி இலக்கியமாகவே இருந்த இந்தப் பழமையான அம்மானை விளையாட்டை கி. பி. 2ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக எழுத்தில்- சிலப்பதிகாரத்தில் பதிவு செய்தவர் இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்தின் வாழ்த்துக் காதையில் இளங்கோவடிகள் ‘அம்மானை வரி’ என நான்கு பாடல்களைப் பாடியுள்ளார். இவை சோழ வம்சாவளி வழிவந்த மன்னர்களின் பெருமையை விளக்கிக் கூறி, அத்தகையதொரு சோழ மன்னனை அடைய விழையும் பெண்களின்  விருப்பமாகப் பாடப்படுகின்றன.

இவற்றை இங்கு விளக்கியதன் காரணம், ஒரு மிகத் தொன்மையான தமிழ் மகளிர் விளையாட்டு, இலக்கியத்தின் மூலமாக எவ்வாறு பழந்தமிழர் வரலாற்றுச் செய்திகளையும், புராணங்களின் சிறப்பையும், அவற்றின் கவிதை நயத்தையும் படம் பிடித்துக் காட்டுகின்றது எனப் புரிந்து கொண்டு ரசிப்பதற்காகத்தான்!

இவையும் மூவர் அம்மானை வகையைச் சேர்ந்தவை: மூன்று பெண்கள் கூடிப் புராணங்கள் புகழும் சோழ மன்னர்களின் பெருமையைப் பாடி வாழ்த்துகின்றனர்.

முதல் பெண்: “மிக்க நீரைக் கொண்ட கடலால் சூழப்பட்ட இவ்வுலகினை ஆட்சி செய்து  விண்ணவர் கோனாகிய இந்திரனின் உயர்ந்த அரணைக் காத்தவன் யார் சொல்? அம்மானை!”

            வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்

           ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை!

இரண்டாமவள்: “இந்திரனின் உயர்ந்த மதிலினைக் காத்த வலியோன், விண்ணில் அசைந்து கொண்டிருந்த மூன்று ஊர்களையும் அழித்த சோழ மன்னன் பாரடி, அம்மானை!”

            ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில்

           தூங்கு எயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை!

மூன்றாமவள் முத்தாய்ப்பாகக் கூறுகிறாள்: “அவ்வாறாயின், நாம் அந்தச் சோழனின் புகார் நகரத்தின் பெருமையைப் பாடுவோம் அம்மானை!”

            சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை!

           (வாழ்த்துக்காதை- வஞ்சிக் காண்டம்-16)

இவர்கள் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியனையும், மனுநீதிச் சோழனையும், சிபிச் சக்கரவர்த்தியையும், கரிகால் சோழனையும்,  வடவரை மேல் வேங்கைக் கொடியினைப் பொறித்த  சோழ மன்னனையும் பாடி, இவ்வாறெல்லாம் மங்கையர் அம்மானையைக் கையிலெடுத்துப் பாடுவதும் ஆடுவதும், அந்த ஆத்திமாலை சூடிய வேந்தனைத் தழுவிக் கூடிக் கொள்ளத்தான் எனக் கூறி மகிழ்கின்றனர்.

இது தமிழ் மன்னர் புகழ் கூறும் அம்மானை!

அம்மானை ஆடுவதுடன் அதற்கியைய இறைவன் பெருமையைப் பாடுவதையும் விரும்புகின்றனர் மாணிக்கவாசகர் காலத்துப் பெண்டிர்! தத்துவப் பொருள் செறிந்த இப்பாடல்கள், இறையனுபவத்தை உணர்ந்து விளக்கிக் களிக்கும் தொண்டர் கூற்றாக அமைகின்றன. இருபது இனிமையான பாடல்கள் உள்ளன- மூவர் அம்மானை எனக் கருத இயலவில்லை; மூன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளையாட இடமுண்டு எனப் பாடல்களைப் பயின்றாலே புரிந்து விடும். அம்மானை விளையாடும் பெண்களில் ஒவ்வொருத்தியும், ‘இவ்வாறு எனக்கு ஈசன் அருள் புரிந்தான்,’ எனக் கூறி அம்மானையை வீசி ஆடுகின்றாளாம். பக்தி ரசம் கசிந்துருகும் அமுதப் பாடல்கள்.

அம்மானையாடும்போது காய்களை மேலே வீசி எறிந்து, ஒரு கையால் விரைந்து பிடித்து ஆட வேண்டும்; அப்பொழுது கையில் அணிந்துள்ள அழகிய வளையல்கள் ‘கல கல’ என ஒலி செய்கின்றனவாம்; பெண்களின் கண்களும் அம்மானை போகும் போக்கில் சென்று நோக்க வேண்டும் அல்லவோ? அப்போது தலையை உயர்த்துவதும் தாழ்த்துவதுமாய் இருப்பதால் காதில் அணிந்துள்ள மகரக் குழைகள் தாமும் சேர்ந்தாடுகின்றனவாம். இத்தனை வேகத்தில் தலை அசைவதால் மையை ஒத்த கருங்குழல் அவிழ்ந்து தோளிலும் கழுத்திலும் புரளுகின்றதாம்; கூந்தலில் சூடிய மலர்களில் இருந்து தேன் வழிந்து ஓடுகின்றது; அதனை உண்ண வரும் வண்டுகள் ரீங்காரமிட்டு ஒலிக்கின்றன.

            ‘கையார் வளைசிலம்பக் காதார் குழையாட

            மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்ப’

இவ்வாறெல்லாம் ஆகும்படி தன்னை மறந்து இவள் யாரைப் பாடி ஆடுகிறாள்? எதனில் ஆழ்ந்து தன் நிலை மறந்தாள்?

சிவந்த நிறத்து அண்ணல் அவன்- செய்யான்! வெண்மையான திருநீறு அணிந்தவன்; எல்லாத் தேவர்களும் அவனை வந்து கைகுவித்து (சேர்த்து) வணங்க, அவன் மட்டும் கைகளைக் குவிக்காமல் விரித்து, அபய வரத முத்திரை காட்டி அவர்களை அரவணைக்கிறான். ஆகவே சேர்ந்தறியாக் கையான்! எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன்; அன்பர்கட்கு மெய்ப்பொருளாய் இருப்பவன்; அவன்பால் அன்பு கொள்ளாதவர்களுக்கு இருந்தும் இல்லாதவனாக இருக்கும் அறிவுப் பொருளை அவள் பாடுகிறாள்; மெய்மறக்கிறாள். ஆடுகிறாள்; தன் நிலையையும் மறந்தாள். அவன் தாளில் தலைப்பட்டாள்!

            ‘செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக்

            கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு

            மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை’

அவன் யார்? எங்கு உள்ளான்? அவன் திரு ஐயாறு எனும் தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமான்; நாம் அவனைப் பாடி அம்மானை ஆடுதும்; அவனைப் பாடி ஆடுவோம் காணாய் பெண்ணே!

            ‘ஐயாறு அமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்!‘ (திரு அம்மானை-13)

இறைவனிடத்தில் உள்ளம் சென்று விட்டதால் தன் நிலை, சுற்றுப்புறம் எல்லாம் மறந்து விடும் நிலையை அம்மானை ஆடும் பெண்ணின் கூற்றின் மூலம் நயம்பட உரைக்கிறார் மணிவாசகப் பெருந்தகை!

இது நம்மை இறைவனோடு இணைக்கும் அம்மானை!

            _______________________________

பிள்ளைத் தமிழின் அம்மானைப் பருவப் பாடல்களைக் காணலாம்.

முதலாக, அம்மானை விளையாட்டைப் பெண்குழந்தை விளையாடுவதனை ஒரு பருவமாக்கிப் பாடியது எதனால் எனச் சிந்திக்கலாம். எவ்வாறு இது விளையாடப்படுகிறது என மேலே கண்டோம். ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில் இவ்விளையாட்டுகள் அதன் உடலையும் உள்ளத்தையும் வலுப்படுத்தி, பொறிகளை ஒருமுகப்படுத்தச் செய்விக்கின்றன. ஆகவே அம்மானை, கழங்கு, பந்தாடுதல் ஆகிய விளையாட்டுகள் சிறுமியரின் வளர்ச்சிக்கு இன்றியமையாதனவாகும்.

பிள்ளைத்தமிழ் எனும் சிற்றிலக்கியத்தில் இவை வகிக்கும் பங்கு இன்னும் அதிகப்படியான ஒரு பரிமாணம் கொண்டதாகும். அன்னை தெய்வமான பராசக்தி மீதே வெகுவான பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடப்பட்டுள்ளன. அவளோ அகிலாண்ட கோடியீன்று அன்னையாகிப் பின்னும் கன்னியென மறைபேசும் ஆனந்தரூப மயிலாவாள். அவளுடைய பெருமைகளை எல்லாம் பகர்ந்திட இது இன்னுமொரு பரிசாகும். அவற்றில் சிலவற்றைக் காணலாம்.

அரசிளங்குமரி தடாதகை, தோழியருடன் அரண்மனை நந்தவனத்தில் அம்மானை ஆடிக்கொண்டிருக்கிறாள். விறுவிறுப்பாக உடனாடும் தோழியர் அவள் கையால் பிடித்து ஆடுகின்ற  முத்தம்மானையைப் பற்றிப் பிடித்துத் திரும்ப வீசி இடமும் வலமுமாக அலைந்து நிமிர்வதற்குள் மீனாட்சியோ ஓராயிரம் அம்மானைகளை எடுத்து வீசுகிறாள். அவை வரிசைப்பட வானில் அணிவகுத்து நிற்கின்றனவாம். இதனை நாம் ‘காட்சி உறைந்துள்ளது’ (Frozen picture) எனக் கூறுவோம் அல்லவா? அதுபோன்று அவை நிற்பது எவ்வாறு உள்ளதெனக் குமரகுருபரனார் கற்பனை செய்கின்றார்: ‘அன்னையே! நீ பெற்றெடுத்த எல்லா அண்டங்களையும் எடுத்து வரிசையாக வானில் நிறுத்திவைத்து உலகத்தோருக்குக் காண்பிப்பது போல உள்ளது,’ என்கிறார். மேலும் மீனாட்சி ‘விறுவிறு’வென்று அம்மானை ஆடியபோழ்தில் நந்தவனத்து மலர்களில் மதுவுண்ணும் வண்டுகள் அலைபட்டு ஆர்த்து எழுகின்றன; அவ்வமயம்  பசிய மகரந்தப் பொடியானது பெரும் தூசியாகப் பரந்து உலகை இருளடையச் செய்கின்றது. அதனைக் கண்டு அமராவதியில் வாழும் தேவர்களும் அளகாபுரியில் வாழும் கின்னரர்களும் அம்மையின் சேனை திரும்பவும் ஒரு போருக்குப் புறப்பட்டு விட்டதோ என்று கலக்கம் கொள்கின்றனராம். இவ்வாறு அவர்களைக் கலக்கம் கொள்ளச் செய்யும் மதுராபுரித் தலைவியே! அம்மானை ஆடியருளுக! என வேண்டுபவர் அருமையான ஒரு கருத்தை அனாயாசமாகக் கூறிப் பாடலை நிறைவும் செய்துள்ளார்.

மனமொத்த தம்பதியரை ‘ஈருடல் ஓருயிர்’ என்பார்கள். இங்கு அம்மை ஒருத்தியே ‘ஓருடல், ஓருயிர்’ ஆகிய புகழ் பெற்றவள். அத்தனின் உடலிலும் சரிபாதியை அவள் பெற்றதனால் அவளை ‘ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண்’ என்று சித்தரிக்கிறார் குமரகுருபரனார்.

               தமரான நின்துணைச் சேடியரில் ஒருசிலர்

                             தடக்கையின் எடுத்தாடுநின்

              தரளஅம்மனைபிடித்து எதிர்வீசிவீசி இட

                             சாரிவல சாரிதிரியா

          நிமிராமுன் அம்மனையொர்ஆயிரம் எடுத்தெறிய

                             நிரைநிரைய வாய்க்ககனமேல்

              நிற்கின்றது அம்மைநீ பெற்ற அகிலாண்டமும்

                             நிரைத்துவைத் ததுகடுப்ப

          இமிரா வரிச்சுரும்பு ஆர்த்தெழப்பொழிலூடு

                             எழுந்தபைந் தாதுலகெலாம்

              இருள்செயச் செய்துநின்சேனாபராக மெனும்

                             ஏக்கமள காபுரிக்கும்

          அமரா வதிக்கும்செய் மதுராபுரித்தலைவி

                             அம்மானை ஆடியருளே

              ஆகம் கலந்தொருவர் பாகம்பகிர்ந்தபெண்

                             அம்மானை ஆடியருளே!

முத்து, பவளம், மாணிக்கக் கற்களால் செய்த அம்மானைகளைக் கொண்டு அம்மை விளையாடுவது எப்படிப்பட்ட திருக்காட்சியாக உள்ளது! முத்தால் செய்த அம்மானையானது அம்மையின் தாமரை மலர் போன்ற கையில் பிடிக்கப்பட்டதால், அம்மலர்க்கையின் இனிய நறுமணத்தைக் கொண்டுள்ளது. செறிந்த கூந்தலில் சூடியுள்ள மலர்களை நாடும் வண்டுகள், அவளுடைய மைதீட்டப் பெற்ற கண்களாகிய வண்டுகளுடன் கூடி முயங்கி மயங்குகின்றன. தடாதகைப் பிராட்டி அம்மானையை மேல் வீசி எறிந்து பிடித்து ஆடும்போது மலர்களின் நறுமணம் கமழும் அவளுடைய கூந்தலில் அமர்ந்துள்ள வண்டுகளும் உடன் எழும்பிச் சென்று அந்த அம்மானையின் மேல் கருத்தாகச் சென்று மீளும் அவளுடைய விழிகளாகிய கருவண்டுகளுடன் கூடி முயங்கி மயங்குகின்றனவாம்!

கொத்தான மாணிக்கத் திரளினால் செய்யப்பட்ட அம்மானையானது குயிலினது குரல் போன்றதும், குழலின் இனிய இசை போன்றதுமான அவளது குரலினிமைக்கு உருகி, குளிர்ச்சி பொருந்திய சிறிய துளிகளைச் சிந்துகின்றன.

அம்மானையாடும் பெண்மக்கள், பாடலையும் பாடியவண்ணம் ஆடுவர் என்பதனைக் கண்டோம் அல்லவா? மீனாட்சியும் அதற்கு விதிவிலக்கல்ல; தனது குயிலைப் பழிக்கும் குரலில் பாடியபடி அம்மானையாடுகிறாள். அக்குரலின் இனிமைக்குருகி மாணிக்கத்தாலாகிய அந்த அம்மானைக் காய்கள் குளிர்ச்சி பொருந்திய பனித்துளிகளைச் சிந்துகின்றனவாம்.

            முத்தம் அழுத்திய அம்மனை கைம்மலர்

                             முளரி மணங்கமழ

                   மொய்குழல் வண்டுநின் மைவிழி வண்டின்

                             முயங்கி மயங்கியிடக்

          கொத்து மணித்திரளிற் செயும் அம்மனை

                             குயிலின் மிழற்றியநின்

                   குழலினிசைக் குருகிப் பனி தூங்கு

                             குறுந்துளி சிந்தியிட……..

பவளத்தாற் செய்யப்பட்ட அம்மானைகளோ, அவள் கையிலெடுத்து ஆடுவதால், அவளுடைய விரல்களாகிய பவளத் தளிரில் உருவாகின்ற சிறந்த செந்நிற ஒளியைக் கவர்ந்து வரப் போவதும் வருவதுமாகத் திரிகின்றனவாம்.

            வித்துரு மத்தில் இழைத்தவி நின்கை

                             விரற்பவ ளத்தளிரின்

                   விளைதரும் ஒள்ளொளி திருடப் போவதும்

                             மீள்வது மாய்த்திரிய….

அன்னையின் அம்மானையாடலை மனக்கண்ணில் கண்டு இன்புற்றதனால் எழுந்த அரிய கருத்துகள் செறிந்த பாடல்கள் இவை எனலாம்.

              ___________________________________________________________

பார்வை நூல்கள்: 

  1. திருப்பேரூர்க் கலம்பகம்-  கவியரசு கு. நடேச கவுண்டர்
  2. சிலப்பதிகாரம்- இளங்கோவடிகள்
  3. திருவம்மானை- மாணிக்கவாசகர்
  4. மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *