இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (293)

2

சக்தி சக்திதாசன்

அன்புள்ளம் கொண்டவர்களே !

அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைக்கிறேன். இதோ 2019ஆம் ஆண்டு சித்திரைத் திருநாள் வந்துவிட்டது.  தமிழ்ப் புத்தாண்டு பிறந்துவிட்டது என்று குதூகலமாக வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்பவர்கள் ஒரு புறமும், இது தமிழர்களின் புத்தாண்டேயல்ல. தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாளே. வேண்டுமானால் இதைச் சித்திரைத் திருநாள் என்று கொண்டாடுங்கள். ஆனால் இது தமிழர்களின் புத்தாண்டு அல்ல என்று வாதிடுவோர் ஒருபுறமாகவும் நின்று வாதாடும் ஒரு காலக் கட்டத்தில் நாம் இந்த நாளைக் கடந்து செல்கிறோம்.

நான் எனது பால்ய பருவத்தைப் பின்னோக்கிப் பார்க்கிறேன். அப்போது நான் ஈழத்தின் வடபகுதியில் வாழ்ந்த காலம். அன்றைய காலக்கட்டங்களில் இத்தகைய விவாதங்கள் இத்துணை காரசாரமாக விவாதிக்கப்பட்டதா? என்பது பற்றி எனக்குச் சரியான தெளிவில்லை. ஆனால் இத்தனை அளவிற்கு ஓங்கி ஒலிக்கவில்லை என்பது எனது கருத்து. அன்று எனது பால்யப் பருவமாதலால் நிகழ்ந்த அந்த விவாதங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எனது அறிவு வளர்ந்திருக்கவில்லையா?  இல்லையானால் உண்மையாகவே இப்படியான தர்க்கங்களின் அளவு அந்நாட்களில் குறைவாக இருந்தனவா? இது இன்று என்னை நானே கேட்கும் கேள்விகள்.

விவாதம் என்பது அறிவு வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்பதனை யாரும் மறுத்து விட முடியாது. ஆனால் அவ்விவாதங்களின் முறை அவற்றின் ஆக்கிரோஷம் எவ்வகையில் இருக்க வேண்டும்? இன்று சில சமூக வலைத்தளங்களின் குழுக்களில் நடக்கும் விவாதங்களைப் பார்க்கும் போது இத்தகைய விவாதங்கள் நடக்கக்கூடிய வகையில் அவற்றில் யாரும் கலந்து கொள்ளக்கூடிய வசதி இருக்கும் நிலையைக் கண்டு ஒருபுறம் உள்ளம் மகிழ்ந்தாலும் அங்கே இடம்பெறும் விவாதங்களின் தன்மை அதன் கருத்தினின்றும் விலகிச் செல்வதைப் பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது. கருத்துப் பேதத்தினால் ஆரம்பிக்கும் விவாதம் தனிநபர் தாக்குதல் எனும் அளவுக்கு விரிவாக்கம் பெற்று விடுகிறது. இது ஆரோக்கியமானது அல்ல .

சமய, கலாச்சாரங்களின் அடிப்படையில் அனுசரிக்கப்படும் சடங்குகள்,  சம்பிரதாயங்கள் என்பன விஞ்ஞான நிரூபணங்களுக்கு அப்பாற்பட்டவை.  அவற்றிற்கான ஆதாரங்களைத் தேட முயல்வது தவறல்ல. ஆனால் ஆதாரத்தைத் தேடுகிறோம் எனும் நோக்கில் செயற்படும்போது தமது வாழ்க்கையின் அடித்தளமாக அச்சமய, கலாச்சார அடையாளங்களை நம்பியிருப்போரின் வாழ்வின் அத்திவாரங்களையே அசைக்க முற்படுகிறோம் என்பதை மறந்து விடலாகாது.  நம்பிக்கை என்பது ஒவ்வொருவரது தனிப்பட்ட உரிமையாகும். அந்நம்பிக்கை அவர்களைச் சமுதாய ஒற்றுமைக்கும், சமூக முன்னேற்றத்துக்குமுரிய பாதையில் இட்டுச் செல்லுமானால் அது அற்புதமானது. ஆனால் அனைத்து வேளைகளிலும் அப்படி நடப்பதல்ல தாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை அடுத்தவர் மேல் திணிப்பதோ அன்றி எமக்கு நம்பிக்கையற்ற காரணத்தினால் நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கையை உடைக்க முற்படுவதோ சமூக வளர்ச்சிக்கான முன்னேற்றப் பாதையில் நம்மை இட்டுச் செல்லாது. ஆத்திகத்தின் இருப்பை நாத்திகம் எந்த அளவிற்கு உறுதிப் படுத்துகிறதோ நாத்திகத்தின் இருப்பை ஆத்திகமும் அந்த அளவிற்கு உறுதிப்படுத்துகிறது .

எம்மைப் போலவே அடுத்தவரும் எனும் நினைப்பு உண்மையாக எப்போது எம்முள்ளத்தில் நிலை கொள்ளத் தொடங்குகிறதோ அப்போதுதான் மற்றவர்கள் உரிமையை மதிக்கும் தன்மை உண்மையாக உள்ளத்தில் ஏற்படும். இன்றைய உலகிற்கும் அன்றைய உலகிற்கும் வேறுபாடுகள் அதிகம். எதோ ஒரு நாட்டில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் ஒரு நிகழ்வு மற்ற ஒரு நாட்டினைச் சென்றடைவதற்கு எத்தனையோ வருடங்கள் எடுக்கலாம். ஆனால் இப்போதோ ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போதே சமூக வலைத்தளங்களினூடே உடனடியாகச் சர்வதேச அளவில் அந்நிகழ்வு விளம்பரப்படுத்தப் படுகிறது. அன்று வாழ்வின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக முழுமூச்சுடன் உலகனைத்தும் உழைத்துக் கொண்டிருந்தது. இன்று உலகின் ஒரு பாகம் அனைத்து வசதிகளுடனும், மற்றொரு பாகம் வறுமையின் அடித்தளத்திலும் உழன்று கொண்டிருக்கிறது.

மதம், கலாச்சாரம் என்பன பொழுது போக்கு அம்சங்களாக மக்களை அலங்கரிக்கும் அலங்காரங்களாக ஒருபுறமும், இவற்றின் அடிப்படையின்றி அடுத்தவேளை உணவு கூட இன்றி அல்லல்படும் சமுதாயாமக மற்றொரு புறமும் உலகம் பிரிந்து கிடக்கிறது. இருப்பவர்கள் தம்மிடம் இருப்பவற்றைக் காப்பாற்றிக் கொள்ளும் கவசமாக இச்சமுதாய அடையாளங்களை உபயோகிப்பதையும், இல்லாதவர்கள் தம்மைக் காத்துக் கொள்ளும் ஆயுதங்களாக இவற்றை உபயோகிப்பதையும் காண்கிறோம். இன்றைய உலக அரங்கில் உலகளாவிய பரந்து பட்ட பார்வை குறுகிக் கொண்டே போகிறது. செல்வம் கொழிக்கும் நாடுகள் முன்னேற்றம் அடைந்துவரும் நாடுகளுக்குத் தாம் செய்து வரும் உதவிகளை நோக்கிக் கேள்விக்கணைகளைத் தொடுக்கும் காலமாகி விட்டது. உதவி எனும் பெயரில் தமது நாட்டு வளங்கள் சூறையாடப்படுக்கிறது எனும் அரசியல் வாதத்தை முன்வைக்கும் தேசியவாத அரசியல்வாதிகள் பல மேலைத்தேச நாடுகளில் பிரபலமடைந்து வருவதைக் காண்கிறோம்.

இன்றைய பொருளாதார முன்னேற்றம் கண்ட நாடுகள் வெளிநாட்டவரின் வருகையினைக் கட்டுப்படுத்துவதையே தமது முதலாவது அரசியல் கொள்கையாகப் பிரகடனப்படுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகிறார்கள். இந்த வேளையிலே தான் மதம், கலாச்சாரம் என்பவற்றின் மீது தொடுக்கப்படும் தாக்கங்களின் தாத்பரியங்களைப் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். ஒரு மனிதனின் அடிப்படை நம்பிக்கை சிதைக்கப்படும் போது அவன் வாழ்க்கையின் கட்டமைப்பைச் சமூகக் கோட்பாடுகளின் விதிகளை மீறுவதற்கு முயற்சிப்பது இயற்கை. ஒரு சில மூர்க்கத்தனமானவர்களினால் நிகழ்த்தப்படும் மிலேச்சத் தனங்களை வைத்து ஒரு மொத்த சமூகத்தினரை கேவலப்படுத்துவது என்பது என்றுமே நியாயமாகாது.

மனிதர்கள் பலவகைப்பட்டவர்கள். மலர்களில் எத்தனையோ நிறங்கள் இருப்பது எப்படி இயற்கையோ அதேபோல மனிதர்களிலும் பலவகையினர், பல குணாம்சங்களோடு இருப்பதும் இயற்கையே . மனிதனை, மனிதன் நிறம், இனம், மதம் எனும் எல்லைகளுக்கப்பால் மனிதனாகப் பார்ப்பது ஒன்றே இன்றைய உலகத்தின் அநியாயமான போர்களையும், உயிரிழப்புகளையும் தவிர்க்கும் என்பது உண்மை. ஒரு மனிதன் எந்த மதத்தைச் சேர்ந்தவனாகவோ, அன்றி எந்த மொழி பேசுபவனாகவோ அன்றி எந்த நிறத்தவனாகவோ இருந்தாலும் மனிதனுக்குரிய அடிப்படி உரிமைகளுடன் வாழ்வதற்கு உரிமையுடையவன். இழக்கும் தமது உரிமை களுக்காகப் போராடுவது என்றுமே தவறாகது. ஆனால் அப்போராட்டம் அடுத்தொருவனின் உரிமையைப் பறிப்பதாக அமைவதே தவறானது .

தமிழர்களின் புத்தாண்டு தைத்திருநாளா? அன்றி சித்திரைத் திருநாளா? என்று நடக்கும் சர்ச்சைகளைக் கண்ணுற்றதன் விளவே என் மனத்தின் இந்த அலசல். யார் எதை எதற்காகக் கொண்டாடுகிறோம்? கொண்டாட்டம் என்பது உள்ளத்தின் மகிழ்விற்கேயன்றி அக்கொண்டாட்டத்தை உரிமை கோருவதற்கல்ல.  கொண்டாடுவோரின் கொண்டாட்டத்தில் பங்கு கொள்வோம் அல்லது ஓரமாக ஒதுங்கிக் கொள்வோம். ஒருவர் மனத்தை ஒருவர் நோகடிக்கும் செயல்களைத் தவிர்த்துக்கொள்வோம்.

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (293)

  1. சொந்த நாட்டிலிருந்து அகதியாக புலம்பெயர்ந்து,
    எமது குடும்ப வழமைகள்,பாரம்பரியங்கள்,சமயம்,
    மொழி அனைத்துமே சிறுகச்சிறுக பறிக்கப்படும் அல்லது
    மறக்கப்படும் ஒருசூழலில் வாழ்கிறோம் . இந்த வேதனை
    போதாதென, சிலர் எல்லாவற்றையும் விவாதப்பொருளாக்கி
    வந்த புண்ணில் வேல்பாச்சும் நிலையில், இந்த கடிதம் பெரும்
    ஆறுதலை தருகிறது.. மிக்க நன்றி.

  2. http://puthu.thinnai.com/?p=38632

    தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தைத் திங்கள் முதலா ?
    சி. ஜெயபாரதன், கனடா
    Spread the love

    [படம் – தமிழ் இந்து. காம் – நன்றி ]சி. ஜெயபாரதன், கனடா

    +++++++++++++

    தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ?
    தைத் திங்கள் முதலா ?
    ஓயாத சொற்போர் நேரும்
    தமிழகத்தில் !
    இதற்கோர் தீர்வு ?
    ஒரு கல்லடியில் வீழ்ந்தன
    இருமாங் கனிகள் !
    தைத் திங்கள் தமிழாண்டு
    தப்புத் தாளம் ஆனது !
    சித்திரை மாதத் தமிழாண்டு
    புத்துயிர் பெற்றது !
    ஆண்டு தோறும்
    நேரும் குருச்சேத்திரப்
    போரும்
    எப்போது ஓயும் ?

    ++++++++++

    தமிழரின் தமிழாண்டு பிறப்பு சித்திரை முதலா, அல்லது தைத் திங்கள் முதலா என்னும் ஆயிரங்காலக் குருச்சேத்திரப் போர், திராவிட அரசியல் ஆளும் கட்சிகளுக்குள் ஆண்டு தோறும் வந்து போகும் தலைவலிக் காய்ச்சலாய் ஆகிவிட்டது. தி.மு.க தைத் திங்கள்தான் தமிழாண்டு துவக்கம் என்று முரசொலி முழக்குகிறது. இல்லை சித்திரை முதல் தேதிதான் தமிழாண்டு துவக்கம் என்று அ.தி.மு.க அலையோசை அடிக்கிறது. அந்த இரண்டு கட்சிகளில் ஒன்று ஆட்சி மேடையில் அமர்ந்ததும் சித்திரை மாதத் தமிழாண்டு மாற்றப்படும் ! அல்லது தைத் திங்கள் தமிழாண்டுக் கொடி ஏற்றப்படும் ! இந்த தீராப் பிரச்சனையை நீக்க ஏதாவது வழி இருக்கிறதா ? இரண்டு வழிகள் உள்ளன. சித்திரை முதல் நாள் துவங்கும் 60 ஆண்டு மீள்சுழற்சித் தமிழாண்டுக்குப் பெயர்கள் இடுவதற்கு தமிழர் வரலாற்று நினைவாக முக்கிய நிகழ்ச்சி / மேதைகள் பெயர்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன். தற்காலத் தமிழர், பிற்காலத் தமிழர் 60 ஆண்டு மீள்சுழற்சிக் காலத்தைக் கடக்கும் போது தமிழரது / தமிழ்நாட்டின் வரலாற்று நிகழ்ச்சிகள் அவருக்கு ஒருமுறை நினைவூட்டப் படுகின்றன. இப்பெயர்கள் அட்டவணை ஒர் ஆலோசனைதான். இவற்றில் புதிதாய்ச் சேர்க்கலாம் , நீக்கலாம், இவற்றை மாற்றலாம்; விருத்தி செய்யலாம். சீர்ப்படுத்தலாம், செப்பணிடலாம், நிராகரிக்கலாம். தேவையில்லை என்று குப்பையில் வீசி விடலாம். தமிழக நாட்காட்டிகள், 60 ஆண்டு மீள்சுழற்சி நிரலில் [தமிழ்ப் பஞ்சாங்க முறையில்] அல்லது நீடித்த ஒருபோக்கு முறையில் திருவள்ளுவர் ஆண்டு போல் அல்லது ஆங்கிலக் கிறித்துவ ஆண்டு போல் தமிழர் விருப்பப்படி இருக்கலாம். தமிழ்ப்பஞ்சாங்க முறை நாட்காட்டியைச் சுமார் 60% – 70% தமிழர் பயன் படுத்துகிறார் [என் ஊகிப்பு]. திருவள்ளுவர் ஆண்டைச் சுமார் 10% -15% தமிழர் பின்பற்றலாம். [என் ஊகிப்பு].

    இந்த தமிழர் அறுபதாண்டு நாட்காட்டி, தமிழருள் ஒருமைப்பாட்டை நிலைநாட்டும். இந்த அட்டவணைப் பற்றி தமிழ் நண்பர் தமது கருத்துகளைக் கூறலாம்.யூகித்த திருவள்ளுவர் ஆண்டின் நீடிப்பு சித்திரை முதல் தேதி ஆரம்பம் என்று பெரும்பான்மைத் தமிழர் ஏற்றுக் கொண்டிருந்தால் திமுக / அதிமுக மாற்றி மாற்றி எறிந்து, பந்தாடாமல் ஒரே திருவள்ளுவர் ஆண்டு நீடித்து நிலையாய் இருந்திருக்கலாம். 60 ஆண்டுகள், பெயர்கள் தேவையின்றி எளியதாக்கி இருக்கலாம். எல்லாம் பருவகால முரணான தைத் திங்கள் தமிழாண்டு இடைச்சொருகால் வந்த வேற்றுமைப் பிரச்சனை.

    கனிவுடன்,

    சி. ஜெயபாரதன், கனடா

    ++++++++++++++++

    தகவல் :

    1. https://134804.activeboard.com/t64371605/topic-64371605/

    2. https://groups.google.com/forum/#!topic/vallamai/Dm42Gr7Nh7U

    3. https://en.wikipedia.org/wiki/Tropical_year

    4. https://en.wikipedia.org/wiki/Indian_astronomy

    5. http://koodal1.blogspot.ca/2008/01/blog-post_26.html

    6. https://en.wikipedia.org/wiki/Puthandu

    7. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

    +++++++++++++++

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *