திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

சேக்கிழார்  பா நயம் – 33 (அயலோர்)

சேக்கிழார்  அருளிய திருத்தொண்டர் புராணத்தைக்  கற்போருக்கு  ஐயங்கள் ஓரிரண்டு தோன்றலாம். அவ்வையங்கள் எல்லாருக்கும் தோன்றுவனவே! கயிலையிலிருந்து  தென்திசையில்  தோன்றி வளர்ந்த சுந்தரரும், அங்கு  மலர்த்தொண்டு புரிந்த  கமலினியாரும்  அநிந்ததையாரும், தமிழகத்தில் பரவையாரும்  சங்கிலியாருமாய்த் தோன்றி, சிவத்தொண்டு  புரிந்து மீண்டும் சிவலோகம்   எய்தினர்.   இறைவனால்  தடுத்தாட்கொள்ளப்பெற்ற சுந்தரரோ, சடங்கவியார் மகளை விட்டு  நீங்கித்  தலந்தோறும்    பதிகப்  பாடல்கள் பாடியவாறே  சென்றார்! ‘‘அந்தச்   சுந்தரர் வாழ்க்கையின்  இடையில், அவரைத் திருமணம்  புரிந்து கொள்ளவிருந்த  சடங்கவி சிவாச்சாரியார் திருமகள் வாழ்க்கை  என்னவாயிற்று?’’  என்ற ஐயம் எல்லாருக்கும் உண்டாகும்!

அவ்வாறு  கதைப்போக்கில் ஐயம் நிகழும்போது, உடனுக்குடன்  அதனைத் தீர்த்து வைத்து, நூலை  எழுதிச் செல்வது சிறந்த அறிஞர் பெருமக்களுக்கே  உரிய இலக்கியக் கடமை ஆகும். அவ்வகையில்  தமிழ் இலக்கியங்களில் நம்முன்  தோன்றிப் பின் மறைந்த கதை மாந்தர்கள் சிலரைப்  பற்றி விரிவாகவே எழுதலாம். அத்தகைய  கதை மாந்தர்களின்  நிலையை வேறெங்கேனும்  தேடிக் கண்டு பிடிக்கலாம்.

இங்கே சுந்தரர், சடங்கவி பேதையைத் திருமணம் புரிந்துகொள்ள வந்த சிறப்பை அருகில்  நின்ற மகளிர்  புகழ்ந்தார்கள்.  வலிமை  மிக்க காளையைப் போன்று  விளங்கிய சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அழகைப்  புகழ்ந்த போது, ‘’கண்கள் எண்ணிலாத வேண்டும்  காளையைக் காண!’’ என்றனர். மேலும் “பெண்களில்   உயர  நோன்றாள் சடங்கவி  பேதை’’ என்றனர். “சிவவேதியர்   குலப் பெண்களுள்  இவளே, பெரிதும்  உயர்வைப் பெறத்  தவம்  செய்தாள்!’’ என்று சற்று வேறுபட்ட வகையில் புகழ்ந்தனர்.

இங்கே சுந்தரரின்  அழகும், ஒப்பனையும் மிக விரிவாகக் கூறப்பட்டன.   ஆனால், சடங்கவி சிவாச்சாரியாரின் மகள், பேதை என்பன  தவிர வேறு  வர்ணனைகள்  இல்லை. அவர் நோற்றார் என்பதே அவரது  சிறப்பாகக் கூறப்பெறுகிறது. அவள் சுந்தரரை அடைய  நோன்பு செய்திருக்கிறார். சிறந்த  சிவனடியாரை அடைதல்  மட்டுமே சைவப்  பெண்டிரின் நோக்கம் என்பதை,

“எம்கொங்கை  நின்  அன்பர் அல்லார் தோள்  சேரற்க
 கங்குல் பகல்  எம்கண்   மற்றொன்றும்  காணற்க
 இங்கு இப்பரிசே  எமக்கு  எங்கோன்  நல்குதியேல்
 எங்கு எழின்  எஞ்ஞாயிறு  எமக்கு”

என்று மணிவாசகர் கூறுகிறார்.  எந்தச் சூரியன் எந்தத் திசையில் உதித்தாலும் எமக்கு அதில் நாட்டமில்லை. அதாவது அடியார் உறவே சிவலோகம், மற்ற நிகழ்ச்சிகள் எம் தியானத்தைக் கலைக்க மாட்டா என்பது அதன் பொருள்.   அந்தப் பெருவாழ்வை  அடைவதையே, ‘பெண்களில் உயர’ என்ற தொடர் குறிக்கிறது. சுந்தரரைத் தம் வாழ்முதலாக  ஏற்றுக்கொண்ட சடங்கவி பேதை,  அவரைப் புறத்தார் பார்வையிலும், தம் அகத்திலும்  என்றும் நீங்காத நிலையைப்  பெற்றாள். திருமண நாளிலேயே , அதற்குரிய  சடங்குகள் நிகழாத  நிலை.  ‘‘சடங்கு அவி’’ நிலை. இதனையே சிவ வேதியன் மகளும் அடைந்தாள். அதனால்  உலகில் சிவநெறியை  உயர்த்தும் நாவலூரரை, தம் தனி நாதனாக ஏற்றுக்கொண்ட அவர், உள்ளும் புறமும் அவரையே நீங்காது நினைந்து, இணைந்து உணரும்  நெறியிலிருந்து வழுவாது  வாழ்ந்தார். இதனைச் சேக்கிழார்,

“அன்றே  மணம்  அழியும் 
 செயலால்  நிகழ் புத்தூர் வரும்   சிவவேதியன்  மகளும்     
 உயர் நாவலர்  தனி நாதனை  ஒழியாது  உணர்  வழியில்
 பெயராது”

எனப் பாடினார். ஆகவே சுந்தரர் வாக்குப் படியும்,

“இம்மையே தரும்சோறும்கூறையும் ஏத்தலாம் இடர்  கெடலும்ஆம்
 அம்மையே  சிவ லோகம் ஆள்வதற்கு யாதும்  ஐயுறவு  இல்லையே!’’

என்ற நிலையில் ’’உயர்சிவலோகமும் எளிதாம்வகை பெற்றாள்’’ என்று சேக்கிழார் பாடியதன் பொருளை நாம்  புரிந்துகொள்ளலாம். மற்றையோர் திருமணத் தடையோ, வாழ்க்கையில்  இடையூறோ  அடைந்தால் வெவ்வேறு வகையில் நோன்பு நோற்றுச்  சுவர்க்கம்    புகுவர்.   இதனைச்  சேக்கிழார்,

“அயலார்  தவம்  முயல்வார்’’ என்று  குறிக்கிறார்.  ஆகவே சிவவேதியன் மகளான  சடங்கவி பேதை, பெண்களில்  உயர நோற்றாள்;  அதனால்  சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள் என்ற சேக்கிழாரின்  வாக்கு, நமக்கு மனநிறைவு  அளிக்கிறது.  இனி முழுப் பாடலையும்  பயில்வோம்.

“அயலார்தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும்
  செயலால் நிகழ் புத்தூர் வரு சிவவேதியன் மகளும்
  உயர்நாவலர்  தனிநாதனை  ஒழியாதுஉணர் வழியில்
  பொறாது உயர் சிவலோகமும் எளிதாம்வகை பெற்றார்”

‘இப்பாடலால் ஆசிரியர் இவ்வம்மையாரது பிற்சரிதங் கூறி முடித்துக் கொண்டதுமன்றி, ஏனையோரைப் போல, இவ்வம்மையார் தம் நாயகனை உடம்பு நாயகனாகக் கொள்ளாது தியானப் பொருளாகிய உயிர்நாதனாகக் கொண்டு ஒழுகினமையால் அவரையும் பிரியாது, பெறற்கரிய சிவலோக வழியும் பெற்றார் என்று இவரது வாழ்க்கையின் உயர்வையும் காட்டினார். இவ்வாழ்வு பெற உபகரித்து நின்றமையால் அம்மையாரை விட்டு நீங்கினார் என்ற சொல், நம்பிஆரூராரிடத்துச் சாராமையுங் காட்டியவாறு. திலகவதியம்மையார் சரிதமும் இங்கு வைத்து உணர்தற்பாலதாம். இவ்வுண்மைகளை உணராது, ஒரு கணவனிறப்பவும், அல்லது இருக்கவும், ஒன்றன்பின் ஒன்றாகப் பல மணங்களையும் நிகழ்த்தலாம் என்று கூவும் நவீன உணர்ச்சிக்காரர்கள் இச்சரிதங்களை உய்த்து ஓர்ந்து ஒழுகுவார்களாக.’

என்ற  சிவக்கவிமணியார்  உரையையும்  இங்கே நாம் சிந்திப்போம். இவ்வகையில்  நம் மனத்துள் எழும் ஐயத்தை நீக்கி உரிய விளக்கத்தையும் அளித்த  சேக்கிழார் பெருமானின்  பா நயம்  போற்றுதற்கு  உரியது.

============= சே. பா ந. 33 === ========

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *