அடித்தால்தான் ஆசிரியை!
நிர்மலா ராகவன்
(நலம், நலமறிய ஆவல் – 154)
ஆண்கள் மட்டும் பயிலும் பள்ளிக்கூடத்தில் அவ்வருடம்தான் புதிதாகச் சேர்ந்திருந்தேன்.
`ஐயோ! அந்தப் பள்ளிக்கூடமா?’ என்று என்னைப் பார்த்துப் பிறர் பரிதாபப்பட்டது ஏனென்று பிறகுதான் புரியத் தொடங்கியது.
“டீச்சர் எங்களை அடிப்பதே கிடையாது. நாங்கள் எதற்கு நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்?” பதினான்கு வயதான அந்த மாணவர்கள் என்னிடம் சவால் விட்டார்கள்.
வேறு வழியின்றி, மளிகைக் கடையில் ஒரு பிரம்பை வாங்கிக்கொண்டு போனேன்.
“உங்களுக்கு அடிதானே வேண்டும்? இதோ பாருங்கள்!” என்று பிரம்பை மேலும் கீழும் ஆட்டியபடி, நிமிர்ந்த நடையுடன். (ஆங்கிலப் படம் ஒன்றில், குண்டர் கும்பல் தலைவன் செய்ததைப் பார்த்துத்தான்!)
“வாவ்! டீச்சர் terror, lah! (பயங்கரமானவள்!)” என்ற பாராட்டும்(?) பெற்றேன்!
எவராலும் அவர்களை அடக்கவே முடியாதிருந்தது. வகுப்பில் கண்டபடி ஓடுவார்கள், கூச்சலிடுவார்கள்.
யாராவது ஒருவன் தப்பித் தவறி, “ஏய்! டீச்சர் பேசுவது காதில் விழவில்லை. வாயை மூடுங்கள்!” என்று கண்டிக்கப் பார்த்தாலும், “டீச்சர் உரக்கப் பேசட்டுமே! சம்பளம் வாங்கறாங்க, இல்லே?” என்று பதில் வரும்.
இவர்களைப் பொறுக்க முடியாது, மற்ற ஆசிரியைகள் அந்த வகுப்பிற்குப் போகுமுன் என் பிரம்பை கடன் வாங்கிக்கொண்டு போவது வழக்கமாயிற்று.
அவர்களைப் புரிந்துகொள்ள, “உங்களுக்கு எந்த ஆசிரியையிடமாவது பயமா?” என்று கேட்டேன். பெரிய குரலுடன் எப்போதும் கத்தும், குண்டாக இருந்த ஒருத்தியைக் குறிப்பிட்டார்கள்.
அடித்தாலும், கண்டபடி வைதாலும்தான் சொன்னால் கேட்பார்களா? குண்டாக இருந்தால் என்ன, அவர்களை அப்படியே நசுக்கிவிடுவாளா?
(இப்படிப்பட்ட மாணவர்கள் உணர்ச்சி ரீதியில் குறைபாடு உள்ளவர்கள். சில நாடுகளில் பள்ளிக்கூடத்திலேயே உளவியலாளர்கள், இவர்களுக்கு அனுதினமும் மாத்திரையோ, ஊசிமூலம் மருந்தோ கொடுத்தால்தான் இவர்களை அமைதியாக ஒரே இடத்தில் உட்கார வைக்க முடியும் என்று சில கால ஆராய்ச்சிக்குப் பிறகு அறிந்தேன்).
எங்கள் பள்ளியின் எதிரிலேயே இருந்த பெண்கள் பள்ளியில் பயின்ற மாணவிகள் – இவர்களின் சகோதரிகள் – அம்மாதிரி இருக்கவில்லை. பையன்கள் மட்டும் ஏன் இப்படி ஆனார்கள் என்ற கேள்வி எழுந்தது. அவர்களிடமே கேட்டேன்.
கதை
பேச்சோ, அன்போ எதுவுமில்லாது, வாரம் ஒருமுறை ஒரு பெரிய தடியை எடுத்துக்கொண்டு வீடு முழுவதிலும் மகனைத் துரத்துவாராம் ஒரு தந்தை. சிரித்தபடி இதைப் பகிர்ந்துகொண்டான் ஒரு மாணவன்.
“அப்பா என்ற ஸ்தானத்தால், அவருக்குத்தான் என்னைவிட அதிக அதிகாரம் இருக்கிறது என்று காட்டுகிறாராம்!” என்றவன் குரலில் ஏளனம்.
“நீ என்னடா செய்வே?” என்று அதிர்ச்சியுடன் அவன் நண்பர்கள் கேட்க, “கழிப்பறையில் போய் ஒளிந்துகொள்வேன். அரை மணி நேரம் கழித்து வெளியே வரும்போது, அப்பா என்னை மறந்திருப்பார்!” என்று மேலும் சிரித்தான்.
இளவயதினர் அதிகமாக உணர்ச்சிவசப்படுவர். அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பெற்றோரும் ஆசிரியர்களும் அவர்களைப் போலவே நடந்தால் எப்படி! நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும்.
(அடக்கவே முடியாத மாணவர்களுடன் பழக நேரிடும்போது, நம் குழந்தைகளும் எங்கே அப்படிக் கெட்டுவிடுவார்களோ என்று ஆசிரியப் பெருமக்கள், தம் செல்வங்களிடம் சற்று அளவுக்கு மீறியே கண்டிப்பைக் காட்டுவார்கள். உரிய காலம் வந்தபின், அதைத் தளர்த்திக்கொண்டால் உறவு பலப்படும்).
முன்பெல்லாம், வீட்டுக்கு வந்து பயிற்சி அளித்த ஆசிரியர்கூட கையில் பிரம்பை எடுத்து வருவார். பெற்றோரும் மகிழ்வார்கள், மகன் உருப்பட்டுவிடுவான் என்ற தவறான நம்பிக்கையில்.
கதை
தாய்வழிப் பாட்டி வீட்டில் சிறு பிராயத்தைக் கழித்திருந்த மகனுக்குச் செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டார்கள் என்று கருதி, அதற்கு நேர்மாறான வளர்ப்பு முறையைக் கையாண்டார் தந்தை. பலரும் கூடியிருக்கையில், இடுப்பு பெல்டைக் கழற்றி, அந்த பத்து வயதுப் பையன் கதறக் கதற அடிப்பார்.
நன்கு படித்து, அயல்நாட்டுக்குப் போன மகன், தாய்நாட்டுக்குத் திரும்ப வரவேயில்லை. அப்பா அடித்தபோது அம்மா தடுக்காததால், அவள் மீதும் வெறுப்பு!
வசதியான குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும், `பிறர் அன்பு செலுத்த தகுதி இல்லாதவன் நான்!’ என்ற எண்ணம் மனத்தில் படிந்துவிட, அவனுக்கு எவரையும் நம்பி உறவுகொள்ள முடியாது போயிற்று.
“மரியாதையின்றி பழகவும், பொய்யுரைக்கவும், முறையாகக் கல்வி பயிலாதிருக்கவும் சிறு வயதிலிருந்தே தண்டிக்க வேண்டும்!” என்று வேடிக்கையாகக் கூறுகிறார் ஒருவர்.
அதிகார வர்க்கத்தினர் சொல்வதெல்லாம் சரியல்ல என்று தோன்றினால் என்ன செய்வது? தட்டிக் கேட்டால், `எதிர்த்துப் பேசாதே!’ என்று இன்னும் திட்டு விழுமே!
சில சமயம் மரண தண்டனைகூட உண்டு.
கதை
இரண்டாம் உலகப் போரின்போது வார்ஸா சிறையில் (Warsaw ghetto) அடைக்கப்பட்டிருந்தாள் ஹெலன். அவளைப் போன்ற பெண்கள் நாள் முழுவதும் தையல் வேலையில்தான் ஈடுபட வேண்டும் என்பது சட்டம். ஏதாவது புத்தகத்தை கையில் எடுத்தால் உடனே மரண தண்டனை!
ஹெலனுக்கு Gone with the Wind என்ற புத்தகம் எப்படியோ கிடைத்தது. சரித்திரமும் காதலும் கலந்த அருமையான நவீனம். தூங்கும் நேரத்தில் மூன்று, நான்கு மணியைச் செலவழித்து அதைப் படித்தாள் ஹெலன்.
மறுநாள், தையல் வேலையில் ஈடுபட்டபடி ஓரிரு மணிக்குள் அக்கதையை சிநேகிதிகளிடம் சொல்வாள். அவ்வளவு சுவாரசியமாக இருக்கும்.
பிடிபட்டிருந்தால், அனைவருக்குமே மரண தண்டனை! அக்கதையை முழுவதும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவா அந்த அச்சத்தையும் மீறியிருந்தது.
`ஏதாவது புத்தகம் படித்தீர்களா?’ என்று சிறையில் அடைபட்டிருந்த அப்பெண்களைக் கேட்டால், மறுத்திருப்பார்கள். எப்போது உண்மை பேசினாலும் நம்பாதபோது பொய் சொல்வதே மேல் என்று தோன்றிப் போகிறது.
அடிப்பது அலுப்பைத் தரும்
“புத்தகத்திலே போட்டிருக்கிற மாதிரியெல்லாம் வளக்கணும்னு பாத்தா முடியுமா?” என்று என்னைக் கேட்டாள், என் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள நான் அமர்த்தியிருந்த பணிப்பெண். “எத்தனை சொன்னாலும் பிள்ளைங்களை அடிக்க மாட்டறீங்க!”
இப்போது என் மகள் கேட்கிறாள்: “நீ ஏம்மா எங்களை அடிக்கவே மாட்டே?”
பள்ளிக்கூடத்தில் ஆசிரியைகள் அடித்தார்கள், வீட்டில் பணிப்பெண்கள் அடித்தார்கள், அம்மா மட்டும் ஏன் அடிக்கவில்லை என்ற குழப்பம், வளர்ந்த பின்னரும்!
“அடிக்கிறது சுலபம். ஆனா, அதுக்கப்புறம் அழற குழந்தையைச் சமாதானப்படுத்தறது கஷ்டம். அதைக் கட்டியணைத்துக்கொண்டு, `எனக்கு உன்னைப் பிடிக்கும். தெரியாம அடிச்சுட்டேன்!’ என்றெல்லாம் ஆயிரம் சமாதானம் சொல்ல வேண்டும். போர்! எனக்கு அலுப்பான விஷயம் அது!”
அதிகாரத்தால் பெறும் மரியாதை
அதிகாரம் செலுத்திப் பிறரைப் பணிய வைக்கலாம். ஆனால், அப்படிப் பெறும் மரியாதை நிலைக்காது.
சிறு வயதினரைத் தண்டித்தாலும், `ஏன் அப்படிச் செய்யக் கூடாது?’ என்று அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.
`நான் படுத்தினேன். அதான் அம்மா திட்டறா!’ என்னும் மூன்று வயதுக் குழந்தைக்கு `படுத்தல்’ என்றால் என்னவென்று புரியுமா?
`சும்மா படுத்தாதே!’ என்று எரிந்து விழுவதற்குப் பதில், `நான் வேலையாக இருக்கும்போது தொணதொணக்காதே! போய் விளையாடு! சமர்த்து!’ என்று நிதானம் தவறாது பேசினால் உடனே கேட்பான்.
அதற்கான பொறுமை இல்லாமல் போகும்போது, எரிச்சலும் கோபமும் எழுகிறது. அதைக் குழந்தையிடம் திருப்புகிறார்கள்.
பல வருடங்களுக்குமுன் கணவரிடம் அடியும் உதையும் வாங்கியிருந்த ஒரு முதியவள், தான் வளர்த்த பேரனிடம் அப்படியே நடந்துகொண்டாள். கண்டபடி அடிப்பதற்குக் காரணமே வேண்டியிருக்கவில்லை.
“அவனை அடிச்சுட்டு, நானும் அழுவேன்!” என்பாள்.
அநாவசியமாகத் திட்டியோ, அடித்தோ செய்துவிட்டு, குற்ற உணர்ச்சியால் மேலும் அவதிப்படுவானேன்!