இன்னம்பூரான்

திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [4]

திரு.வி.க. அவர்களின் தன்னடக்கம், புலனடக்கம், ஒழுங்கு, சிந்தனை ஒழுக்கம், வாய்மை, நாட்டுப்பற்று, திறந்த மனம், சமுதாய சீர்திருத்த மனப்பான்மை, பெண்மைக்கு மதிப்பு ஆகிய நற்பண்புகளின் மேன்மை அவருடைய படைப்புகளிலும் சொற்பொழிவுகளிலும் புலப்படுகிறது. 

தற்காலம் எல்லாம் தேர்தல் மயம். கொள்கை, கோட்பாடு, கருத்து அடிக்களம் ஆகியவை தகர்க்கப்பட்டு, சுய முன்னேற்றம், ‘கெலித்தால் காசு; இல்லாவிடின் நீயே தூசு’ என்ற பேராசை, வாரிசு வரிசை கட்ட, கட்சி கேலிக் காட்சியானாலும்’ என்ற உள்குத்து, துட்டு விநியோகம், கூடா நட்பு ஆகியவை பொது மக்களை வாட்டும் தருணத்தில்,  ‘இன்று திரு.வி.க. இருந்தால்?’ என்ற ஆதங்கம் வருவது இயல்பே.

துறையூரில் ஆகஸ்ட் 6, 1932 அன்று தமிழ் மாணாக்கர் மகாநாட்டில் அவரது சொற்பொழிவு அருமையாக, பொருத்தமாக  அமைந்து இருந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. 

சோழநாடு, உடலோம்பல், கல்வி, தமிழர் யார்?, சீர்திருத்தம் ஆகியவற்றை பற்றி அவர் அங்கு பகர்ந்த சிந்தனைகள் தற்கால சங்கடமான நிலைமையில் நாட்டுப்பற்று உள்ளவர்களின் மனத்தைத் தொடும். ஒருகால் அவர்கள் வாக்களிக்கும்போது அவரது நற்பண்புகள் கண் முன் தோன்றி, மனசாட்சிப்படி வாக்களிக்கத் தூண்டலாம். அவரது உரை நீண்டது. பொது மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து, சில சிந்தனைத் துளிர்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். உடனுக்குடன், தற்கால அவல நிலை பற்றி அவருடைய சிந்தனை எவ்வாறு அமையும் என்பதையும் எண்ணிப் பார்ப்போமாக.

சோழநாடு: “…சோழ நாடு தொன்மை வாய்ந்தது. மாண்புடையது. நாகரிகத்தில் முதிர்ந்தது…சோழ நாட்டுப் பழம்பெரும் கோயில்கள் ஓவியக் காட்சிகள் வழங்குதல் வெள்ளிடை மலை…”. 

– நாம் அன்றாடம் கோயில் கொள்ளைகளைப் பற்றிப் படிக்கிறோம். அயல்நாட்டுக்கு நமது புராதன கலைப் பொருட்கள் திருட்டுத்தனமாக அனுப்பப்படுகின்றன. ஒரு காலகட்டத்தில் திரு. உத்தாண்டராமபிள்ளை அவர்கள் கோயில் துறைத் தலைவராக இருந்தார். அவர் ஆத்திகர். இசகு பிசகாகக்கூட தவறுகள் நடக்காது. நாத்திகப் பிரசாரம் செய்து கொண்டு மறைவில் ஆத்திக வாழ்க்கை நடந்தி வந்தவர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, நாத்திகர்கள் கோயில் அறங்காவலர்களாக ஆன பின், கோயில் சொத்துகள் சூறையாடப்பட்டன. கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது. சிலைகள் திருடப்பட்டன. இந்த இழிசெயலில் ஆத்திக வேடம் போட்டவர்களும் ஈடுபட்டனர். சோழநாட்டு நாகரிகம் அழிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தான் திரு.வி.க. அவர்களின் வ்யாகூலம் அமையலாம்.

உடலோம்பல்: “…உடல் நலன் வேண்டற்பாலது. கிளர் ஈரலும், தடைபடாக் குருதியோட்டமும், எஃகு நரம்பும், ஏக்கழுத்தும், பீடு நடையும் உடையவர்களாக மாணவர்கள் திகழ்தல் வேண்டும்…மாணாக்கர் பார்வைக்கு இனியவராயிருத்தல் வேண்டும்.

– தற்காலம், அதுவும் கல்வித் தந்தைகள், திரை கடல் ஓடாமலே. திரவியம் தேடியதாலும், அரசுப் பள்ளிகள் பட்ஜெட் போதாமலும், அக்கறையின்மையாலும் தவிப்பதாலும், மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் கூட கிடைப்பதில்லை. உடலோம்பல் எட்டாக் கனியாகவிடும் என்ற தோற்றம் எங்கும் தென்படுகிறது.

கல்வி: “…‘இளமையில் கல்’… எம்மொழியிலும் கல்வி பயிலவேண்டும்… முதல்முதல் தாய்மொழி வாயிலாகவே கல்வி பயிலவேண்டும்… கலைகள் யாவும் தாய்மொழி வழி அறிவுறுத்தப் பெறுங்காலமே, தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறுங்காலமாகும்…”.

தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறுவதற்குப் பல்லாண்டுகள் பிடிக்கலாம். மற்றொரு தொடரில் [கஷ்டோபனிஷத்] தமிழ் படும்பாட்டைச் சான்றுகளுடன் எழுதியிருக்கிறேன். கலோனிய அரசுக்குப் பிறகு தமிழுக்கு இறங்குமுகம் தான். ஐயா முன்சீப் வேதநாயகம் பிள்ளை அவர்களின் கச்சேரியில் தமிழ் வலம் வந்தது. கலெக்டருக்குத் தாசில்தார் தமிழில்தான் கடுதாசி எழுதினார். ஐ.சி.எஸ். அதிகாரிகள் தமிழின் தொன்மை குறித்து ஆராய்ச்சி செய்தார்கள். திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு மதிப்பு இருந்தது. பள்ளி நிலை தமிழ்ப் பாடப் புத்தகங்கள், தற்கால முதுநிலைப் பாடம் அளவுக்கு உயர் நிலை. தற்காலம் எங்கும் ஆங்கிலம் தான் பீடுநடை போடுகிறது. திராவிடக் கட்சிகள் தமிழின் வளர்ச்சியின் பொருட்டு இட்ட சட்டங்கள், கட்டத்திற்குள் உறங்குகின்றன. எல்லாம் உதட்டளவு தமிழன்பு. அவ்வளவு தான்.

இது கண்டு திரு.வி.க. அவர்களின் மனம் வெம்பி இருந்திருக்கும். 

தமிழர் யார்?: “…தமிழர் தொன்மை வாய்ந்தவர்… பழந்தூய தமிழர் வழி வந்த தமிழரும், இடையே குடி புகுந்து சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும். கலப்பு என்பது இயற்கை… கலப்பால் வளர்ச்சியே உண்டு… இவருள் சைவரிருக்கலாம். வைணவரிருக்கலாம். அருகரிருக்கலாம். புத்தரிருக்கலாம். கிறிஸ்தவரிருக்கலாம். இஸ்லாமியரிருக்கலாம். ஆத்திகரிருக்கலாம். நாத்திகரிருக்கலாம். இவரனைவரும் தமிழர் என்பதை மறக்கலாகாது… தூய ஆரியராதல், தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்… பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப் பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது… வடமொழி பாரத நாட்டுக்குரிய பொது மொழி.. தமிழ்நாட்டிலுள்ள பார்ப்பனர் தமிழைப் பயிலாமலும், தமிழ்த்தாய்க்கு சேவை செய்யாமலும் இருக்கின்றாரில்லை. முன்னாள்தொட்டு அவரும் தமிழ்த்தாயின் சேய்களாக நின்றே தமிழ்த்தொண்டாற்றி வருகிறார்… தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் தமிழராகப் பார்க்கும் நெஞ்சம் மாணாக்கர்கள் பால் அரும்பி மலர்வதாக.”

= இதை படிக்கும்போதே மனம் கலங்குகிறது. நெஞ்சம் பதைபதைக்கிறது. காங்கிரஸ் அரசும் சரி, திராவிடக் கட்சிகளும் சரி, மற்ற சாதிக் கட்சிகளும் சரி, அரசும் சரி, தேர்தலுக்குச் சாதி மத பேதம் அடித்தளம். பிரசாரத்தில் சாதி ஒழிப்போம் என்று சொல்லும்போதே, சாதிப் பேயின் உலா அதில் உள்ளடங்கி இருக்கிறது. எறும்பை நசுக்கப் பாறாங்கல் எடுப்பது போல், சிறுபான்மையாராகிய பிராமணர் மீது எய்யப்பட்ட துவேஷத்தில், வன்முறையும் தீய செயல்களும் வளர்ந்தன, ஒற்றுமை குலைந்தது. கல்வி அளிப்பதில் ஆற்றலுக்கு இடமில்லை. ‘வாலும் போச்சு; கத்தியும் வரவில்லை..‘ என்ற படி தமிழ் தள்ளுபடி; இந்தி ஒழிக; ஆங்கிலம் அண்டலாகாது என்றால், அடி வாங்குவது மாணாக்கர்கள்தாம்; அவர்களின் பெற்றோர்களும்தாம். ஒரு வேண்டுகோள் எல்லாரும் திரு.வி.க. அவர்களின் ஆழ்ந்த சிந்தனையைப் புரிந்துகொள்ள முயலுங்கள். நல்லது பிறக்கலாம்.

சீர்திருத்தம்: “…அஃறிணை உலகம் பெரிதும் சீர்திருத்தத்தை விரும்புவதில்லை… தீண்டாமை மனத்தைத் துறந்து வாழ்வு நடாத்துங்கள்…தியானம் வேண்டற்பாலது…”.

என்னத்தைச் சொல்ல? திரு.வி.க. அவர்களின் பொன்வாக்கு [1932] ஒன்று” 

“ ‘ஒழுங்கு ஊராகும் என்பது பழமொழி. ஐரோப்போயரது வாழ்வில் ஒழுங்கு என்பது ஊடுருவிப் பாய்ந்து நிற்கிறது. அவர்தம் ஒழுங்கு ஊரையும் ஆள்கிறது. உலகத்தையும் ஆள்கிறது.”

பின்குறிப்பு 1: திரு.வி.க., சிந்தனை மனிதருள் ஒருவர். அவரின் சொந்த வாழ்வின் அடித்தளத்தில் உள்ள ஆழ்மனத்தைப் புரிந்துகொண்ட ஒரே மனிதர், திரு. ஈ.வே.ரா. அவர்கள். அந்த உருக்கமான நிகழ்வு உரிய காலத்தில் பகிர்ந்து கொள்ளப்படும்.

பின்குறிப்பு 2: மற்றவற்றை பார்க்கும் முன், அடுத்த பதிவில் அந்த 

“பேய்ப்பழம்” பழுத்த அட்டூழியத்தையும் பார்த்து விடுவோம்.

                                              (தொடரும்…….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.