– நிர்மலா ராகவன்

(நலம், நலமறிய ஆவல் – 155)     

ஒவ்வொரு குடும்பத்திலும் செய்யக்கூடியவை, கூடாதவை என்று எழுதப்படாத சில விதிமுறைகள் இருக்கும். தாய், தந்தை இருவருமே அவைகளை ஏற்காதபோது குழப்பம் வருகிறது.

கதை

வனமாலா விளையாட்டுகளில் விருப்பமும் திறமையும் கொண்டவள். அவளுடைய தந்தையோ, மகளின் நேரம் அதனால் விரயமாகிறது, அந்த ஆர்வத்தையும், பொழுதையும் படிப்பில் செலுத்தினால் வாழ்வில் நன்றாக முன்னேறலாமே என்று எண்ணினார். அதன் விளைவாக, பள்ளிக்கூடத்தில் அவள் எந்த விளையாட்டுப்போட்டியிலும் கலந்துகொள்ளக்கூடாது என்று தடை விதித்தார். அவளோ பள்ளியின் பிரதிநிதி!

மகளுடைய மனம் தாய்க்குப் புரிந்தது. அவள் சிறுமியாக இருந்தபோது எத்தனை இடர்களைச் சமாளிக்கமுடியாது திணறியிருப்பாள்!

“நீ சேர்ந்துகொள்! அப்பாவிடம் நான் சொல்லிக்கொள்கிறேன்!” என்று மகளுக்கு பச்சைக்கொடி காட்டினாள்.

அவர்கள் எதிர்பார்த்தபடி தந்தை அதை யதார்த்தமாக எடுத்துக்கொள்ளவில்லை. தன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தன்னையே எதிர்த்து ஒரு காரியம் செய்வதாவது!

“உனக்கு நான் சொல்வதற்கு நேர்மாறாக ஏதாவது செய்தாகவேண்டும்!” என்று அவர் கத்த, “யாராவது மகிழ்ச்சியாக இருந்தால் உங்களுக்குப் பிடிக்காதே!” என்று பதிலுக்கு அவளும் குற்றம் சாட்டினாள்.

கணவனுக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் முற்றியது.

“நீ சொல்வதுதான் சரியென்று சாதிக்கிறாயே! அதுமட்டும் ஏன் சரியாக இருக்கவேண்டும்?”

வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்திருக்கும் பெற்றோர் ஒத்துப்போகாது, தமது விருப்பு வெறுப்பை குழந்தைகள்மீது திணித்தால் அனைவருக்குமே சிரமம்தான்.

நன்கு படித்து, நிறைய பட்டங்கள் வாங்கினால் பெரிய உத்தியோகத்திற்குப் போகலாம் என்று நம்பினார் வனமாலாவின் தந்தை. அதனால் தானும் பெருமைப்பட்டுக்கொள்ள முடியுமே!

நல்லதாகவே இருந்தாலும், பிடித்ததைச் செய்யக்கூடாது என்று தடை விதித்தால் வருத்தமும் மனக்குழப்பமும் உண்டாகும் என்று தாய்க்குப் புரிந்திருந்தது. அதனால், `அப்பா சொல்வதைக் கேட்டு நட!’ என்று தன் பொறுப்பைத் தட்டிக்கழித்து, மகளுக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை.

வனமாலாவின் பாடுதான் திண்டாட்டமாக ஆயிற்று. இறுதியில், அப்பாவை எதிர்க்கலாம், அம்மா தனக்கு உறுதுணையாக இருப்பாள் என்று தோன்றிப்போயிற்று.

தாய் ரகசியமாக மகளிடம் சொன்னாள்: “விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி, படிப்பில் கோட்டைவிட்டுவிடாதே! அப்புறம் நான்தான் அப்பாவுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்!”

மகளுக்குப் பொறுப்பு வந்தது.

விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்றாள். ஆனால், தன் மகிழ்ச்சியைத் தந்தையுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றவில்லை. அவர் ஊக்குவித்தாரா, என்ன!

“என்னிடம் யாரும், எதுவும் சொல்வதில்லை!” என்று முணுமுணுப்பாக வருந்தத்தான் முடிந்தது தந்தைக்கு.

இந்த மனக்கசப்பை எப்படித் தவிர்த்திருக்கலாம்?

கணவன் மனைவி இருவரும் தனித்திருக்கும்போது, தம் குழந்தைகளை எப்படி வளர்க்கலாம் என்று கலந்துபேசி, ஒரு முடிவுக்கு வருவது நல்லது. குழந்தைகளின் எதிரில் அவர்கள் வாக்குவாதம் செய்தால், தமக்கு ஏற்ற ஒருவர்புறம் சாய்ந்து, மற்றவரை அலட்சியப்படுத்தத் துணிவார்கள் குழந்தைகள். ஒரு கட்சி ஓங்கியிருக்கும்.

எதற்காக வளர்ப்பது?

குழந்தைகளை வளர்ப்பது என்பது அவர்கள் பெரியவர்களானதும் நிறையச் சம்பாதித்து, வயது முதிர்ந்த காலத்தில் நம்மையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்கல்ல. பிறருடன் நன்கு பழகி, தமக்கும் பிறருக்கும் உபயோகமாக இருக்க அவர்களைப் பழக்கவேண்டும்.

`நீ செய்யும் தவறுகளுக்கு நீதான் பொறுப்பு!’ என்று இரண்டு வயதிலிருந்தே பழக்க இயலும்.

வயதுக்கேற்ற பொறுப்பு

குழந்தை காகிதக்குப்பையை குப்பைத்தொட்டிக்குள் போடாமல், அலட்சியமாக எடுத்து வீசுகிறதா?

“எடுத்து, சரியா உள்ளே போடு!”

இது அதிகாரமில்லை. எதையும் சரியாகச் செய்யவேண்டும் என்ற பொறுப்புணர்வைக் குழந்தைக்குக் கற்றுக்கொடுப்பது.

வீட்டில் அழ அழச் சொல்லிக்கொடுத்தால், பிறகு நான்கு பேர் அவனைப் பார்த்துச் சிரிக்க மாட்டார்கள். பாராட்டைப் பெறுவான்.

குழந்தைகளோ, பெற்றோரால் தடை செய்யப்பட்டவைகளை எப்படி மீறலாம் என்பதில்தான் குறியாக இருப்பார்கள்.

என் மகளுக்கு மூன்று வயதாக இருந்தபோது, எதற்கோ கோபித்தேன்.

உடனே, “சுபீரா இப்படிச் செஞ்சா பக்கத்தாத்து ஆன்ட்டி திட்டமாட்டா!” என்று எகிறினாள்.

சுபீராவின் தாயுடைய எதிர்பார்ப்பு வேறு விதமாக இருந்திருக்கலாம்.

அலட்டிக்கொள்ளாது ,“அப்போ, நீ அங்கேயே போயிடேன்!” என்றேன்.

பயந்துவிட்டாள். “சும்மா ஜோக் பண்ணினேன்!”

“ஏன் சும்மாச் சும்மா திட்டறே? ஒனக்கு என்னைப் பிடிக்காது?” இது நான்கு வயதில்.

“தப்பு பண்ணினா திட்டணும். (அதாவது, கண்டிக்க வேண்டும்). இல்லேன்னா, நீ அசடாப் போயிடுவே!” என்று விளக்கினேன்.

ஒரு முறை, உறவினர் வீட்டில் சில தினங்கள் கழித்துவிட்டு, “என்னை இனிமே அங்கே அனுப்பாதே. அசடாப்போயிடுவேன். தப்பு பண்ணினா திட்ட மாட்டேங்கறா!” என்றாள்!

இதுதான் மனித குணம். தவறு செய்கிறோம் என்று தெரிந்தே செய்துவிட்டு, மாட்டிக்கொண்டால் முழிப்பது!

ஆத்திரமும் குற்ற உணர்ச்சியும்

என்னுடன் வேலைபார்த்த மஞ்சித் கௌர், “நேற்று எனக்கு ஒரே ஆத்திரம். Go to hell! என்று என் மகளைப் பார்த்துக் கத்திவிட்டேன்!” என்று தெரிவித்தாள்.

உற்றவரைப் பார்த்து, `நரகத்துக்குப் போ!’ என்று ஆத்திரத்தில் கத்தும்போது, உண்மையில் அப்படி நடந்தால் எப்படித் துடித்துப்போய்விடுவோம் என்று யாரும் நினைத்துப்பார்ப்பதில்லை.

குற்ற உணர்ச்சி மெதுவாக வருகிறது.

இதை தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது. பொறுமையை இழக்காமலேயே இருக்க முனிவர்களாலேயே முடியவில்லையே, நாமெல்லாம் எம்மாத்திரம்!

சற்று நிதானம் பிறந்ததும், `நான் களைப்பாக இருக்கும்போது தொந்தரவு செய்தாய். அதான் அப்படிப் பேசிவிட்டேன்!’ என்று மன்னிப்பு கேட்கும் தோரணையில் பேசினால், நிம்மதியுடன் புன்னகைப்பாள் மகள்.

மன்னிப்பு கேட்கும் நல்ல பழக்கத்தை இப்படித்தான், நம்மையறியாது, புகுத்திவிட முடிகிறது.

குழந்தைகளின் எதிர்ப்பு

தம் மனக்குழப்பத்தை பெற்றோர்தாம் குழந்தைகளிடம் ஏதோ வழியில் காட்டுவார்கள் என்பதில்லை.

கதை

தகுந்த பணிப்பெண்கள் கிடைக்காததால், என் மகன் சசி இரண்டு வயதிலேயே பாலர் பள்ளிக்குப் போனான்.

ஒரு நாள், என்னை முறைத்தபடி, “You so proud!” என்றான். விம்மலில் பிஞ்சு உதடுகள் துடித்தன.

அதன் அர்த்தம் அவனுக்குத் தெரியுமா என்பதே சந்தேகம். யாரோ அவன் மனதை நோகடித்திருக்கிறார்கள். அதை இப்படி வெளிப்படுத்துகிறான்!

நான் என் குழந்தைகளை நிறையப் புகழ்ந்து, அதன்மூலம் தன்னம்பிக்கையுடன் செயல்படுமாறு வளர்த்திருந்தேன்.

அவன்மேல் எந்தத் தவறும் இல்லை என்று எப்படி விளக்குவது?

“சசியை டீச்சர் நான்சி அப்படிச் சொன்னாளா? டீச்சர் Stupid!“ என்றேன், உறுதியான குரலில். தன் பொறுப்பில் இருக்கும் சிறு குழந்தையின் போக்கைப் புரிந்துகொள்ளாதிருந்த ஆசிரியை முட்டாள்தான்.

(ஆனால், ஏழு வயதான என் குழந்தைகள் தம் ஆசிரியையை தரக்குறைவாகப் பேசினால் கண்டிப்பேன்: `அம்மாவை யாராவது அப்படிப் பேசினால், ஒங்களுக்கு எப்படி இருக்கும்?’)

வித்தியாசமான வளர்ப்புமுறை

சீனர்களின் வளர்ப்புமுறை வித்தியாசமானது. குழந்தைகளை ஓயாது மட்டம் தட்டினால்தான் அடக்கம் வரும் என்று கருதி, திட்டியும், காரணமின்றி பிரம்பால் அடித்தும் வளர்ப்பார்கள்.

சீனப்பெண் ஆலிஸிடம் அவளுடைய தாய் கேலியாகக் கூறினது: `உன் வகுப்பில் நீ முதலாவதாக வந்தாயா! மற்ற மாணவிகள் எவ்வளவு முட்டாளாக இருக்கவேண்டும்!’

பெண்ணுக்கு அடக்கம் வரவில்லை. தாயின்மீது வெறுப்புதான் பிறந்தது. பாராட்டவேண்டிய தருணத்தில் குத்தலாகப் பேசினால்?

`எனக்குக் குழந்தைகளே வேண்டாம். நானும் என் அம்மாவைப்போல்தானே இருப்பேன்!’ என்று உறுதியுடன் இருக்கிறாள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *