Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • சேக்கிழார்   பா நயம் – 13  

    திருச்சி புலவர்.இராமமூர்த்தி

    ========================

    அடுத்து, திருவாரூரில் ஆண்ட மனுநீதிச் சோழனின் சிறப்பு கூறப்படுகிறது! திருவாரூர் நகர்ச் சிறப்பு  பெரியபுராணத்துக்கு எவ்வாறு துணை புரிகிறது என்பதைச் சில அகச்சான்றுகளால் விளங்கிக்  கொள்ளலாம்!  திருவாரூரின்  பெருமைக்கு   முதற்காரணம். அந்நகருக்குத்  திருமகளே வந்து சிவபெருமானை வழிபாடு செய்தருளினாள்  என்பதாம். அதற்கு ஆதாரம் திருவாரூரில் பெரிய திருக்கோயிலின்  பெயரே கமலாலயம் என்பதாம்!  இதனைச் சேக்கிழார்,

    ‘’சொன்ன நாட்டிடைத்  தொன்மையின்  மிக்கது

    மன்னு  மாமல  ராள்வழி  பட்டது ‘’

    என்று பாடுகிறார்!  மேலும் தியாகேசப் பெருமான் பலகாலம்  பாற்கடலில் மகாவிஷ்ணுவின் இதயத்திலும், பின்னர் பலகாலம் தேவருலகிலும், பின்னர் திருவாரூரிலும்  எழுந்தருளிய சிறப்புடையது.  மேலும் அந்த நகரில்தான், கைலாயத்தில் சுந்தரரை விரும்பிய இருசேடியருள் ஒருத்தியாகிய கமலினி, பரவை நாச்சியாராக வந்துஅவதாரம் செய்த மாளிகை உள்ளது! தொண்டர்கள் தேடும் சிவபிரான், தாமே சுந்தரரைத்  தேடிப்போய்,  சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம்  இருமுறை தூதுவராக நடந்தருளிய பாதத் தாமரையின் நறுமணம் கமழும் திருவீதி உடையது. இதனைச் சேக்கிழார்,

    “இடந்த  ஏனமும்  அன்னமும்  தேடுவார்

    தொடர்ந்து கொண்டவன்  தொண்டர்க்குத்  தூதுபோய்

    நடந்த  செந்தா  மறையடி  நாறுமால் ‘’

    எனப்பாடுகிறார்! இவ்வூரில்தான், சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தடுத்தாட்கொண்ட சிவபெருமான், ‘’தில்லை வாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்’’ என்று அடி எடுத்துக் கொடுத்தார். அவ்வகையில் உருவான திருத்தொண்டர் புராணத்துக்குப்  பொருளாகிய அடியார் திருக்கூட்டமும் எழுந்தருளிய ஊர்  திருவாரூராகும். இத்தனைச் சிறப்புக்களும் அமைந்த ஊர் திருவாரூராகும். இவ்வூரில்   சோழர்களின் மரபு வழியில், சேக்கிழாரை ஆதரித்த அநபாயச்  சோழன் மரபின் முன்னோனாகிய  மனுநீதிச் சோழன் ஆட்சி புரிந்தான்! அவன் அறநெறி தவறாமல் ஆட்சி செய்ததோடு, வேள்விகள் பல புரிந்து , திருக்கோயி லுக்கான நிபந்தங்களையும் வழங்கினான். அவனுக்கு உலகோர் போற்றத்தக்க முறையில் அருமையான ஆண்மகவு பிறந்தது! அந்த ஆண்மகன் வளரும்போதே  போர்க்கலை ஆட்சிக்கலை, ஆன்மிகம் ஆகியவற்றைப் பயின்றான்

    ஒருநாள்  அவன் இளவரசர் பலரும், நாள் வகைப் படையினரும்  நாற்புறமும் சூழ்ந்து வர, அரசவீதியில் மணிகள் ஒலிக்கும் தேரில் ஏறிச்  சென்றான். அப்போது எவரும் அறிந்து கொள்ளாத நிலையில் ஓர்  இளைய ஆன் கன்று இளவரசன் சென்ற தேரின் சக்கரங்களுக்கிடையில் சிக்கி மாண்டது! உடனே இளவரசன், தான் செய்த  பிழையை நீக்கிக் கொள்ளும் கழுவாயை,   தம் நாட்டு மன்னனாகிய தந்தை அதனை அறியும் முன்னரே அந்தணர்களிடம் சென்று  கேட்டான்!  இந்தச் செய்தி பரவியது. அப்போதே தன் அருமைக்  கன்றை இழந்த தாய்ப்பசு, அரண்மனை வாசலில் இருந்த ஆராய்ச்சி மணியைக்  கொம்பால்  முட்டி அசைத்து ஒலிக்கச் செய்தது! அந்த மணியோசை அரசன் செவியில் ஒலித்தது. இதுவரை ஆராய்ச்சி மணியோசையைக் கேட்டறியாத அரசன் விரைந்து வெளியே வந்தான். காவலர்கள் ஒரு பசுமாடு மணியை அசைத்தது. என்று கூறினார். அரசன் அமைச்சர்களைப் பார்த்தான். அவர்களுள் அறிவால் மிக்க ஓர் அமைச்சர், அரசனின் பாதங்களை வணங்கிப் பேசலானார்.

    ‘’சோழ மன்னனே!  நீங்கள் பெற்ற  புதல்வனாகிய இளவரசன், பலவகை மணிகள் பெரிதாய் ஒலிக்கும் , மிகவுயர்ந்த தேரின்  மேலேஉள்ள தேர்த்தட்டில்  ஏறி,எண்ணிக்கையற்ற தேர்கள் சூழ்ந்துவர, அரசர்கள் மட்டுமே சென்று பழகும் பெரிய வீதியில் நகர் வளம் செய்யும்போது, மிகவும் இளைய பசுங்கன்று ஓன்று எங்கிருந்தோ யாரும் அறிந்து கொள்ள இயலாத வகையில் தானாகச் சென்று, மிகவும் கீழேயுள்ள தேர்ச்  சக்கரங்களின் இடையே எப்படியோ புகுந்து இறந்தது. அதனால் மனத்தளர்ச்சியுற்ற தாய்ப்பசு, மணியோசையை உண்டாக்கியது!” என்றார்.

    இப்பாடலில் புலப்படும்  அமைச்சரின் நுண்ணறிவு நம்மை வியப்புக்கு ஆளாக்குகிறது. முதலில்  ‘வளவ!’ என்று மன்னனை அழைக்கிறார்! குழப்பத்துடன்  இருந்த மன்னன் மனத்தில் அவன்  நாட்டை ஆளும் மிகப்பெரிய சோழர்  பரம்பரையினன் என்பதை  ‘வளவன்’  என்ற சொல்லால்  விளக்குகிறார்!

    அடுத்து, அத்தகைய பெருமைமிக்க அரசனாகிய ‘நின்’ புதல்வன் என்கிறார்! ஆதலால் பெருமை மிக்க நின் மகன்  சிறுமை  செய்பவனல்லன்  என்கிறார்! புதல்வன் என்ற சொல்லாட்சி அவன்   குலத்துக்கே  நீத்தார் கடன் புரிவதற்குரிய ஒரே புதல்வன் என்பதைக் குறிக்கிறது. ‘’அங்கு ஓர் மணி நெடுந்தேரில் ஏறி’’ என்று கூறுகிறார். ஆங்கு என்ற சொல், அவனுக்கே உரிய இடத்தில் என்ற பொருளை உடையது. ‘ஓர்’ என்பது ஒப்பற்ற என்ற பொருளில் உடன் வரும் பல தேர்களுள்  இத்தேர் சிறப்பு வாய்ந்தது என்பதைப் புலப்படுத்துகிறது.அதனால் இளவரசன் பற்பல தேர்களின் இடையே தனித்த சிற்ப்புடைய தேரில் ஏறி வருகிறான் என்பதைக் குறிக்கிறது. அதனால் பசுங்கன்று இவற்றைத் தாண்டி உள்ளே நுழைந்தது நடவாத செயல் என்ற ஐயத்தை உருவாக்குகிறது!  ‘மணி’ என்ற சொல் அத்தேரில் ஆரவாரத்துடன் ஒலித்த மணிகளின் ஓசையைக் குறிக்கிறது.அந்த ஆரவார ஓசை இளங்கன்றை அச்சுறுத்தி விலகியோடச் செய்திருக்குமே, என்று கருத வைக்கிறது. ‘’நெடுந்தேரில்’’ என்ற தொடர் மிகவுயர்ந்த தேர் அது, என்பதைக் காட்டுகிறது.அவ்வாறு உயர்ந்த தேரிலிருந்து சக்கர பகுதி கண்ணில் புலப்படாது என்ற கருத்தைப் புலப்படுத்துகிறது. ‘ஏறி’ என்ற சொல் தேர்த்தட்டின் உயரத்தைக் குறிக்கிறது. அவ்வாறு ஏறி வருபவன் பார்வை வழியைப் பார்த்துச் செலுத்தும் வாய்ப்பில்லாமையைக் காட்டுகிறது.   ‘அளவில் தேர்த்  தானை சூழ ‘ என்ற தொடர் எண்ணிக்கை அளவைக் கடந்த தேர்களுக்கிடையில் இளவரசன் ஏறிவந்த நெடுந்தேர் சென்றது என்பதைப் புலப்படுத்தி எல்லாவற்றுக்கும் இடையில் வரும் இளவரசன் தேரை யாராலும் நெருங்க வியலாது என்ற நுணுக்கமான விளக்கத்தால் ஆன்கன்று இந்தத்    தேரின் கீழே செல்லும் வாய்ப்பே  இல்லை என்று வலியுறுத்துகிறது. அவன் தேரேறிச் செல்லும் தெரு, அரசகுடும்பத்தினர் மட்டுமே செல்வதற்குரிய மேன்மை மிக்க தெரு என்பதை விளக்குகிறது. அங்கே எளிய மனிதரோ, விலங்கோ செல்வது அரச நிந்தனை என்ற குற்றத்துக்கு உரிய செயல் என்பதை நிலைநாட்டுகிறது. ‘போங்கால்’ இளவரசன் எந்த நோக்கமும் இல்லாமல் மகிழ்ச்சி உலாவை மேற்கொண்டு  சென்றான் என்பதைப் புலப்படுத்தி, அவனுக்கு அந்த ஆன்கன்றைக்  கொல்லும் நோக்கமில்லை என்பதையும் குறிக்கிறது. அடுத்து  ‘இளைய ஆன்கன்று ‘ என்று அமைச்சர் கூறுகிறார்.மிகவும் இளையது அக்கன்று, ஆதலால் தானாக அக்கன்று தேரின் கீழே செல்லாது என்பதையும், ‘இளங்கன்று பயமறியாது!’ என்ற பழமொழிக்கேற்ப அக்கன்று  அறிவும் அச்சமும் அற்றது என்பதையும் அத்தொடர் குறிக்கிறது. அடுத்து ‘’தேர்க்கால் இடைப்புகுந்து ‘’ என்கிறார் அமைச்சர். முன்சக்கரத்தில் புகுந்தால் அது தேரை ஓட்டுபவனின் கவனமின்மையைக் குறிக்கும். ஆனால் பல சக்கரங்களை உடைய பெருந்தேரின்  இடையில் புகுந்தது என்பதால், இளவரசன் அதனை நேரில்  காணாத நிலையை அனுமானிக்க வைக்கிறது. அனுமானம் குற்றத்தை நிரூபிக்காது. கன்று இறந்ததை யாரும் அறிந்து கொள்வதற்குள், அதனை ஒரு பசு அறிந்து கொண்டது என்பது நடவாத செயல். அப்பசுவின் தளர்ச்சியால் எவ்வாறு  அறிவுடன் ஆராய்ச்சி மணியை அசைத்தது என்பதைப்  புரிந்துகொள்வது? என்ற ஐயமும் தோன்றுகிறது!

    இந்தக்  கொலைவழக்கு விசாரணைக்கு  வந்தால், குற்றத்தின் பின்னணி, குற்றச்செயலின் தன்மை ,குற்றம்  நடந்த சூழ்நிலை, கொலை நோக்கம்,  கொலை செய்யப்பட்ட கன்றின் அறிவு, இவை அனைத்தும் இக்கால இந்தியக் குடியாட்சியின் குற்றவியல், தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளில் எந்த வகை யினுள்ளும்   அடங்காது. ஆகையால் அக்கால முடியாட்சிச் சட்டங்கள் பற்றி நாம் எந்த முடிவுக்கும் வருதல் இயலாது. சட்டமும் நீதியும், எல்லாக் காலத்துக்கும்  உரியனவே! என்பதையும், இந்தக் குற்றத்தை அன்றைய அமைச்சர் அணுகிய விதம் எக்காலச் சட்டத்துக்கும் இசைவாகவே உள்ளது என்பதையும் நாம் சிந்தித்தால் சேக்கிழார் பெருந்தகையின் சட்ட நுணுக்க அறிவும் , அவர் அக்காலத்திலேயே சோழமன்னனின்  முதலமைச்சராக விளங்கிய பெருமையும் ஒருங்கே புலப்படுகின்றன! கொலைக்குற்றம் சாட்டப் பட்டவரின் சார்பில் வைக்கப்படும் வாதங்கள் எவ்வாறிருக்க வேண்டும் என்பதை இப்பாடல் விளக்குகிறது. இனி நாம் பாடல் முழுவதையும் படித்து இப்பாடலின்  சொல்லாட்சிச் சிறப்பைப் புரிந்து கொள்வோம்!

    “வளவ! நின் புதல்வன் ஆங்கோர் மணி நெடுந் தேர்மேல் ஏறி
    அளவில் தேர்த்தானை சூழ அரசுலாந் தெருவில் போங்கால்
    இளையஆன் கன்று தேர்க்கால் இடைப் புகுந்து இறந்ததாகத்
    தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை” என்றான்”

    இந்த வழக்கின் பின்புலத்தை மிகவும் நுட்பமாக விளக்கும் வகையிலும், பின்நிகழ்ச்சியை முன்னதாகவே உணர்த்தும் உத்தியாகவும், திருவாரூர் பற்றிய அறிமுகப் பாடலில்,

    “பல்லி  யங்கள் பரந்த வொலியுடன்

     செல்வ  வீதிச்  செழுமணித்  தேரொலி

     மல்லல் யானை  ஒலியுடன்  மாவொலி

     எல்லை  இன்றி  எழுந்துள  எங்கணும்” 

    என்று சேக்கிழார் பாடி வைத்த நுட்பம், எண்ணி யெண்ணி மகிழ்தற்குரியது!

    ============================================================

     

     

     

    Share
  • திருவாதிரைச் சீரும் கொங்குச் செட்டியார் சடங்குமுறைகளும்

    -மா.தமிழ்மலர்

    தமிழகத்தில் திருவாதிரை கும்பிடும் முறை – சிவன் ஆலயங்களில் திருவாதிரை, ஆருத்ரா தரிசனம் வழிபாட்டு முறை – சேந்தனார் வரலாறு – திருவாதிரைச் சிறப்பு – கொங்குநாட்டில் திருவாதிரை நோன்பு கும்பிடும் முறை – கொங்குச் செட்டியார் செய்யும் திருவாதிரைச் சடங்கு – திருவாதிரைச் சடங்கின் சிறப்பு – கும்பிடும் முறை – கும்பிடும் பெண்கள் – சடங்கிற்குரிய உணவுப் பொருள்கள் – இதன் பலன்.

    சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரம் திருவாதிரையாகும்.  மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரம் வந்தாலும், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு மிகவும் சிறப்பானதாகும்.  திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாள் தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மிகப் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது.  சிதம்பரம் நடராசப் பெருமானின் ஆலயத்தில் இந்தத் தினத்தன்று நடராசருக்கு அபிடேகமும், நடராசர் சிவகாமி திருக்கல்யாண உற்சவமும், தேர்த்திருவிழாவும் நடைபெறும்.

    சிதம்பரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துச் சிவாலயங்களிலும் நடராசப் பெருமானுக்கு அபிடேகமும், நடராசர் சிவகாமி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகின்றது.  இவ்விழாவில் நடராசப் பெருமானுக்கு பிரதான உணவாகக் களி படைக்கப்படுகின்றது.  மேலும், திருக்கல்யாண முடிவில், சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் சரடு வழங்கப்படுகின்றது.  தம் கணவரின் ஆயுள் பெருக சுமங்கலிப்பெண்கள் இந்த மஞ்சள் சரட்டினை வாங்கிக் கட்டிக் கொள்கின்றனர்.  இவ்விழா  தமிழகம் முழுவதும் இவ்வாறு நடைபெற்றாலும், கொங்கு நாட்டில் திருவாதிரை நோன்பு தமிழகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து சிறிது வேறுபட்டு, நாட்டார் சடங்குகளுடன் சேர்த்துச் செய்யப்படுகின்றது.  மேலும், இங்கு வாழும் அனைத்து மக்களும் இந்நோன்பினை கடைப்பிடிப்பதில்லை.  குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் இந்த நோன்பினை கடைபிடிக்கின்றனர்.  உட்கழுத்துச் சரடு கட்டிக் கொள்ளும் சமூகத்தவர் மட்டும் இந்நோன்பினை கடைபிடிக்கின்றனர்.  அவரவர் குல வழக்கப்படி, இந்நோன்பிலும், சில சடங்கு முறைகளைச் செய்கின்றனர்.  குறிப்பாகக் கொங்கு நாட்டில் வாழும் கொங்குச் செட்டியார் இனத்தைச் சார்ந்தவர்கள் திருவாதிரைப் பண்டிகையினை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.  தாயம்பாளையம் பகுதியைச் சார்ந்த கொங்குச் செட்டியார் இனத்தைச் சார்ந்தவர்கள் பூப்படையும் வயதில் இருக்கும் தங்கள் குலப் பெண்களுக்கு திருவாதிரை தினத்தன்று திருவாதிரைச் சீர் செய்கின்றனர்.  இந்த திருவாதிரைச் சீர் குறித்தும், திருவாதிரை நோன்பு குறித்தும் இந்த ஆய்வுக் கட்டுரையில் காணலாம்.

    மார்கழி மாதம் தட்சிணாயனத்தின் இறுதி மாதமாகும்.  மார்கழி மாதத்தில் தில்லையில் குடி கொண்டுள்ள நடராசப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்று கூடுவதாக ஐதீகம் உண்டு.  தேவர்களுக்கு மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதாகும்.  வைகறையில் இறைவனைத் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகின்றது.  சிதம்பரம் பஞ்ச பூதத் தலங்களில் ஆகாயத் தலமாகும்.  மார்கழி மாதத்தில் திருவாதிரை தினத்தன்று அபிடேகங்கள் நடைபெறும்.  நடராசப்பெருமான் அடுத்த நாள் அதிகாலை நேரில் வீதிவலம் வருவார்.  அதனை ஆருத்ரா தரிசனம் என்பர்.  ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல்.

    ஐதீகக் கதை:

    தாருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர்.  சிவனார் பிச்சாடனர் வேடம் ஏற்று முனிவரின் இல்லங்களுக்குப் பிச்சை எடுக்கச் சென்றார்.  முனிபத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனரின் பின் சென்றனர்.  இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித் தீயில் மதயானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு போன்றவற்றை தோற்றுவித்து சிவன்பால் ஏவினர்.  சிவனார் மதயானையைக் கொன்று அதன் தோலை அணிந்தார்.  மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலை தூக்கி நடனமாடி முனிவர்களுக்கு உண்மை உணர்த்தினார்.  இதுவே ஆருத்ரா தரிசனம் என்றும் சொல்லப்படுகின்றது.

    சேந்தனார்:

    சைவ சமய அடியவர்களில் சேந்தனாரைப் பற்றி இருவேறு கதைகள் வழங்கப்படுகின்றன.  ஒருவர் பட்டினத்து அடிகளின் கணக்குப் பிள்ளையாக இருந்து பின்பு இறைவனின் திருவடியை அடைந்தவர்.  இன்னொருவர் சிதம்பரத்திற்கு அருகே உள்ள ஒரு ஊரில் விறகு வெட்டியாக வாழ்ந்து வந்தார்.  மிகச் சிறந்த சிவபக்தர்.  நாள்தோறும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின்பு தான் அவர் உணவருந்துவார்.

    ஒரு நாள் மழை அதிகமாகப் பெய்தமையால் விறகுகள் ஈரமாயின.  அதனால் அன்று சேந்தனாரால் விறகு விற்க இயலவில்லை.  அரிசி வாங்குவதற்கு அன்றைய தினம் அவரிடம் காசு இல்லாத காரணத்தால் கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்து இருந்தார்.  ஆனால் யாரும் தென்படவில்லை.  சிவனடியார் வேடத்தில் சிவபெருமான் வந்தார்.  களியை மிகவும் விருப்பமுடன் உண்டார்.  மேலும், அந்தக் களியை அடுத்த வேளை உணவிற்கு தருமாறு வாங்கிச் சென்றார்.  மறுநாள் காலையில் சிதம்பரம் நடராசப் பெருமான் ஆலயத்திற்குச் சென்ற அந்தணர்கள் இறைவனைச் சுற்றி களி சிதறல்களைக் கண்டனர்.  சோழ அரசனிடம் இறைவனார் கனவில் சேந்தனார் வீட்டிற்குச் சென்று களியுண்ட நிகழ்வைத் தெரிவித்து இருந்தார்.  இதனால் அரசர் அமைச்சரிடம் சேந்தனாரை அழைத்துவரச் சொல்லி விட்டு தில்லையம்பல நடராசனை தரிசனம் செய்வதற்காக ஆலயம் வந்தார்.  இந்நிலையில் தேரில் நடராசப் பெருமான் வீதியுலா வந்துக் கொண்டிருந்தார்.  ஆனால் தேர் திடீரென்று நின்று விட்டது.  இதனால் அரசர் முதல் அனைவரும் திகைத்து நின்றுக் கொண்டிருந்தனர்.  இந்நிலையில் சேந்தனாரும் இறைவனை தரிசிக்க வந்து கொண்டிருந்தார்.  தேர் நிற்பதைப் பார்த்து செய்வது அறியாது திகைத்தார்.  அப்பொழுது சேந்தா பல்லாண்டு பாடு என்று வானிலிருந்து அசரீரி கேட்டது. “மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் போயகல” என்று தொடங்கி பல்லாண்டு கூறுதுமே என்று முடித்து பதின்மூன்றுப் பாடல்கள் பாடினார்.  தேர் நகர்ந்தது. அரசர் அவர்தான் சேந்தனார் என்பதை உணர்ந்து அவரிடம் தம் கனவினைக் கூறினார்.  அப்பொழுதுதான் சேந்தனார் தம் இல்லத்திற்கு வந்தது சிவபெருமான் என்பதனை உணர்ந்து பெருமகிழ்ச்சி அடைந்தார்.  இந்த நிகழ்வின்       விளைவாகத் திருவாதிரை அன்று நடராசப் பொமானுக்கு “களி” உணவாகப் படைக்கப்படுகின்றது.  சேந்தனார் பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் உள்ளன.

    திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி என்று சொலவடையாக வழங்கப்படுகின்றது.  கேரளத்தில் திருவாதிரைக்களி நடனம் என்ற பெயரில் பெண்கள் நடனமாடுகின்றனர்.  சங்கர சங்கீதை என்ற நூலில் இந்நோன்பின் மகிமை கூறப்பட்டுள்ளது.  சம்பந்தர் “பூம்பாவை உயிர்பிழைக்கும் பொருட்டு பாடிய தேவாரப் பதிகத்தில்,

          “வளர்திரை வேலையுலாவும் உயிர்மயிலைக்
          கூர்தரு வேவ்வல்லார் கொற்ற கொள் சேரிதனிய
          கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
          ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவை”

    என்று திருவாதிரை தினத்தைச் சிறப்பிக்கின்றார்.  நாவுக்கரசுப் பெருமானும் ஆதிரை தினம் குறித்துப் பாடியுள்ளார்.  இதனால் திருவாதிரை நோன்பு தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதை அறியலாம்.

    கொங்குநாட்டில் திருவாதிரை நோன்பு ஆருத்ரா தரிசனம்

    மார்கழி மாதம் முழுவதும் கொங்கு நாட்டில் சிவாலயங்களிலும், பெருமாள்; கோவில்களிலும் மிகவும் சிறப்பாக வழிபாடும், பூசைகளும் நடத்தப்படுகின்றன. மார்கழி மாதம் பத்தாவது நாளில் நிறைமதியோடு கூடிய திருவாதிரை தினத்தன்று இந்நோன்பு கடைப்பிடிக்கப்படுகின்றது.

    அனைத்துச் சிவாலயங்களிலும் நடராசப் பெருமானுக்கு அபிடேகம் நடத்தப்பட்டு, விடியற்காலையில் இறைவன் வீதியுலா நிகழ்த்தப்படுகின்றது.  பின்பு நடராசர்-சிவகாமி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகின்றது.  இறைவனுக்குக் களி உணவாகப் படைக்கப்பட்டு, பக்தர்களுக்குக் களி பிரசாதமாக வழங்கப்படுகின்றது.  பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம், பவானி, திருச்செங்கோடு தலங்களிலும் இவ்விழா நடைபெறுகின்றது.

    கொங்குச் செட்டியார் செய்யும் திருவாதிரை சீர்

    கொங்கு நாட்டில் வாழும் வணிகர் இனத்தைச் சார்ந்தவர்கள் கொங்குச் செட்டியார் என்றழைக்கப்படுகின்றனர்.  கொங்கு வேளாளர் இனத்தைப் போன்று இவர்களிடத்தும் குலப்பிரிவுகள் உண்டு.  கொங்கு வேளாளர் குலப்பிரிவுகள் இவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.  பெரிய குலம், காரையூரான் கூட்டம், ஒதாளர் குலம் போன்ற குலப்பிரிவுகள் இவர்களிடத்தும் உண்டு.  இவர்களில் தாயம்பாளையம் கொங்குச் செட்டியார் பெரிய குலத்தைச் சார்ந்தவர்களும் இவர்களின் பிற குலப்பிரிவினரும் திருவாதிரைச் சீரைச் செய்கின்றனர்.

    கொங்கு வேளாளர் இனத்தைச் சார்ந்தவர்களில் பெரிய குலத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு திருவாதிரைச் சீர் செய்து சங்கரண்டாம்பாளையம் இரத்தினமூர்த்தி ஆண்டவர் கோவிலில் பொன்னூஞ்சல் ஆட்டுவது மரபாகும்.

    இதனைப் போன்று தாயம்பாளையம் கொங்குச்செட்டியார் இனத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் குலத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்குத் திருவாதிரைச் சீர் செய்கின்றனர்.

    திருவாதிரைச் சீர் செய்யும் முறை:

    பெண் குழந்தைகள் பூப்பு அடைவதற்கு முன் இச்சீரினைச் செய்ய வேண்டும்.  9,10,11 என்ற ஒற்றைப் படை வயதிற்குள் செய்ய வேண்டும்.  திருவாதிரைச் சீரைச் செய்ய இருக்கும் பெண்குழந்தையின் பெற்றோர் கார்த்திகை மாதத்திலிருந்து இச்சீர் செய்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.  உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும்.  தாய்மாமனையும், அத்தையையும் அழைத்து இச்சீரினை முறைப்படி செய்துக் கொடுக்கச் சொல்ல வேண்டும்.

    கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் முடிந்து 21-வது நாளில் சதுர்த்தி திதியில் பிள்ளையார் நோன்பு கும்பிட வேண்டும்.  முதல் நாள் இரவு பெண் குழந்தையின் தாய்மாமாவும், அத்தையும், பெண் குழந்தையின் வீட்டிற்கு வந்துவிடுவர்.

    நோன்பு கும்பிடுவதற்கு முதல் நாள் வீட்டினைத் தூய்மை செய்தல் வேண்டும்.  விடியற்காலையில் எழுந்து அத்தை நோன்பு கும்பிடுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.  பொங்கல் வைத்த பிறகு பணியாரத்திற்கு அரிசி வெந்தயம் இவற்றை நீரில் ஊற வைக்க வேண்டும்.  பின்பு பெண் குழந்தையை அழைத்து ஊரில் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று நெய் அரப்பு தேய்த்து குளித்து விட்டு புத்தாடை அணிவிப்பர்.  பின்பு வீட்டிற்கு வந்து ஆட்டுரலில் அரிசி வெந்தயத்தை ஆட்டி எடுத்துக் கொள்வர்.  குடலை பருப்பை வேகவைத்துக் கொள்ள வேண்டும்.  பின்பு வெல்லத்தினைப் பாகு காய்ச்சி இம்மாவில் கலக்க வேண்டும்.  பின்பு வேகவைத்த கடலை பருப்பினையும் சேர்த்து பணியாரமாக சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இதற்குப் பின்பு மஞ்சள் தேங்காய் பழம், 21 பணியாரம், வெற்றிலை பாக்கு, கற்பூரம், தீபம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, சீர் செய்ய இருக்கும் பெண், அத்தை, பெண்ணின் தாயார், உறவினர்கள் அனைவரும் பிள்ளையார் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.  அங்கு தீபம் ஏற்றிப் பிள்ளையாரை வணங்கி நோன்பை நல்லபடியாக முடித்துத் தரச் சொல்லி வேண்ட வேண்டும்.  பூசை முடிந்த பிறகு வீட்டிற்கு வந்து குழந்தைகளுக்கு பணியாரம் கொடுக்க வேண்டும்.  தாய்மாமா, அத்தைக்கு மதியம் வடை பாயாசத்துடன் விருந்து போட வேண்டும்.

    பிள்ளையார் நோன்பைச் செய்து முடித்த பிறகு சீர் செய்ய இருக்கும் பெண்ணும், பெண்ணின் தாயும், அசைவம் சாப்பிடக்கூடாது.  காப்புக் கட்டிக் கொள்ளும் பெண் மாலை நேரங்களில் வெளியே செல்லக் கூடாது.  துக்க நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளக் கூடாது.

    பிறகு அவரவர் வசதிக்கேற்ப திருவாதிரை தினத்தன்று உறவினர்களை அழைப்பர்.  முன்பு பெண் குழந்தையின் வீட்டில் இந்தச் சீர் நடைபெறும்.  தற்சமயம் திருமண மண்டபங்களில் இச்சீரினை நடத்துகின்றனர்.  அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்படுகின்றது.

    திருவாதிரை தினத்தன்று அதிகாலையில் பெண்ணை எழுப்பிவிடுவர்.  இரவு சாதம் செய்து கடலை பருப்பு கூட்டும் செய்து வைத்து விடுவர். திருவாதிரைக்கு முந்தைய நாள் வீட்டினை மெழுகிச் சுத்தம் செய்ய வேண்டும்.  இரவு சாதமும் கடலைப் பருப்புக் கூட்டும் செய்து வைக்க வேண்டும்.  அதிகாலை சீர் செய்துக் கொள்ளும் பெண், அத்தை, அத்தை பெண், பெண்ணின் தாயார் ஆகிய அனைவரும் பல் தேய்த்து முகம் கழுவி சுவாமி கும்பிடுவர்.  பின்பு சாதம், நாட்டுச்சர்க்கரை பழம் சேர்த்து சாப்பிட்டு விட்டு கூட்டினையும் சாதத்தினையும் கலந்து சாப்பிட்டு முடித்து விடுவர்.  பின்பு நாள் முழுவதும் பட்டினி இருப்பர்.  பெண்ணிற்கு பசித்தால் பால், பழம் அவல் கொடுப்பர்.  உப்புக் கலந்து எந்தப் பொருளும் உண்பதற்குக் கொடுக்க மாட்டார்கள்.  பின்பு, வண்ணார் இனத்தைச் சார்ந்த பெண் குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வாள்.  ஆற்றங்கரை இருந்தால் ஆற்றிற்கு அழைத்துச் சென்று குளிக்க வைப்பர்.  ஆறு இல்லை என்றால் வீட்டில் குளிப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.  முக்காலி அரப்பு, நெய் தணல், மஞ்சள், சோறு வேப்பிலை ஆகியவை குளிப்பதற்காக பெண்ணிற்குத் தேவைப்படும் பொருட்களாகும்.  பெண் குளிப்பதற்கு முன் பெண்ணின் அத்தை பெண்ணின் தலையில் நெய் தேய்த்து விடுவாள்.  பின்பு அரப்பு தேய்த்துக் குளித்து விடுவாள்.  வண்ணார் இனத்தைச் சார்ந்த பெண் பந்தம் பிடித்துக் கொண்டு நிற்பாள்.  இதற்குப் பின்பு பெண்ணிற்கு புத்தாடை அணிவிப்பர்.  பெண்ணிற்குரிய அலங்காரங்களை செய்து முடிப்பர்.  ஆண்டாள் கொண்டை போட்டு விடுவர்.  ஆண்டாள் மாலையும் அணிவிப்பர்.  கிளி ஒன்றையும் பெண்ணின் தோளில் வைத்து விடுவர்.  இதற்கிடையில் மாமன் மனைவி குளித்துவிட்டு சாமிக்கு சூடம் ஏற்றி விட்டு கும்பிடுவார்.  பின்பு பொங்கல் வைத்துவிட்டு, தினை அடை, கம்பு அடை, போன்றவற்றைச் செய்து முடிப்பார்.  அதன்பின்பு படைப்புக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சமைக்க வேண்டும்.  பாசிப்பருப்பு, வெண்டைக்காய் புளிக்குழம்பு, ஏழுவகைப் பொறியல் திருவாதிரைக் களி சாதம் ஆகியவற்றை சமைக்க வேண்டும்.

    திருவாதிரை நட்சத்திரம் வந்த பிறகு சாமி கும்பிட அனைவரும் தயாராகுவர்.  சாமி கும்பிடும் இடத்தில் மெழுகி கோலமிட வேண்டும்.  இறைவனுடைய படங்களை வைத்த பிறகு குத்துவிளக்கு, கற்பூரத்தட்டு, பூசைமணி, சாம்பிராணிப் புகை போடும் கரண்டி ஆகியவற்றைக் கொண்டு வந்து வைக்க வேண்டும்.  பின்பு மஞ்சள் பிள்ளையாரையும் சாணிப் பிள்ளையாரையும் பிடித்து வைப்பர்.  பிள்ளையார் மேல் பூச்சூடி வைப்பர்.  அதன்பின்பு தலைவாழை இலையை விரித்து படைப்புப் போட்டு வைப்பர்.  அப்படைப்பில் பொங்கல் சாதத்தை ஏழு உருண்டைகளாகப் பிடித்து வைப்பர்.  அதன் மேல் சர்க்கரையையும் நெய்யையும் கலந்து வைப்பர்.  பின்பு ஏழுவகை பொரியல் சாதம், ஏழு அடை பாயசம் ஆகியவற்றினையும் இலையில் படைப்பர்.  சாதம் வெண்டைக்காய்ப் புளிக்குழம்பு, பா. பருப்பு, இவற்றையும் இலையில் வைப்பர்.  திருவாதிரைக் களியையும் இலையில் வைப்பர்.  சாமி கும்பிடும் இடத்தில் கரும்பு, மஞ்சள் கொத்து போன்றவற்றையும் வைப்பர்.  பின்பு, மஞ்சள் சரடு, பூசணிக்காய் ஆகியவற்றையும் மஞ்சள் பிள்ளையாரையும் சுற்றி வைப்பர்.  தேங்காயை உடைத்து வைப்பர்.  பழம் வெற்றிலை பாக்கு சூடம் ஆகிய பொருட்களும் சாமிக்கு அருகில் வைப்பர்.

    குத்து விளக்கில் நெய் ஊற்றித் திரிபோட்டுத் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.  பின்பு பெண்ணை சாமி கும்பிடும் இடத்திற்கு அழைத்து வர வேண்டும்.  அலங்காரம் செய்து கொண்ட பெண்ணின் தலை மேல் சும்மாடு வைத்து அதன் மேல் பேழை முடியை வைப்பர்.  அந்தப் பேழை முடியில் இரண்டு தேங்காய், பழம் ஒரு சீப்பு, வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் இருக்கும்.  பெண்ணிற்கு முன்னால் பெண்ணின் அத்தை செம்பில் புதுத்  தண்ணீரை எடுத்து வருவார்.  வண்ணார் இனத்தைச் சார்ந்த பெண் அந்த இடத்தில் தீப்பந்தம் பிடித்து நிற்க வேண்டும்.  பின்பு பெண்ணின் சேலையில் ஒரு தேங்காய், பழம் ஒரு சீப்பு, வெற்றிலை பாக்கு ஆகியவற்றை மடியில் கட்ட வேண்டும்.  இன்னொரு தேங்காயை எடுத்து உடைத்துவிட்டு தேங்காய், வெற்றிலை பாக்கு இவற்றை சாமியின் கிழக்குப் பக்கம் வைப்பர்.  பின்பு பெண்ணைப் பேழை முடியில் நிற்க வைப்பர்.  கிழக்குத் திசையில் பெண்ணை நிற்க வைப்பர்.  பெண்ணிற்கு அருகில் அத்தை துணையாக நிற்பார். இந்நிலையில் பெண்ணின் மாமா சாமிக்கு அருகே அமர்ந்து திருவெம்பாவை பாடல்கள் இருபதையும் பாடுவார்.  திருப்பள்ளி எழுச்சி பாடல் ஒன்றையும் சேர்த்து 21 பாடலையும் பாடுவார்.  ஒவ்வொரு பாடல் முடிந்தவுடன் மணி அடித்து இன்னொரு மாமா சூடம் ஏற்றி இறைவனை வழிபாடு செய்வார்.  மேலும் திருச்சிற்றம்பலம் என்றும் மாமா சொல்லி முடிப்பார்.  இவ்வாறு 21 பாடல்களையும்  பாடி முடித்து திருச்சிற்றம்பலம் என்று கூறிப் பூசையினை முடிக்க வேண்டும்  பூசை முடிந்த பிறகு பேழை முடியை மறுபடியும் பெண்ணின் தலையில் வைத்து மணவறையை சுற்றி வர வேண்டும்.  அத்தை கையில் செம்புடனும், பெண் பேழை முடியுடனும் உள்ளே சென்று விடுவர்.  பின்பு சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் சரடு வழங்கப்படும்.  அவர்கள் கணவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு தங்கள் கழுத்தில் மஞ்சள் கயிற்றினைக் கட்டிக் கொள்வர்.  பின்பு பெண் சீருக்கு வந்துள்ள அனைவரின் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார்.  பின்பு நோன்பு முடித்து பெண், அத்தை, உறவினர்கள் அனைவரும் சாப்பிடுவர்.  இதன் பின்பு சிறிது நேரம் கழித்து பெண்ணிற்கு நெய் தேய்த்து அரப்பு வைத்து குளிக்க வைப்பர்.  வண்ணார் இனத்தைச் சார்ந்த பெண் தீப்பந்தம் பிடித்துக் கொண்டு நிற்பர்.  பின்பு நாட்டுச் சர்க்கரையினை மூன்று உருண்டைகளாக கையில் நாம்பிப் பிடித்து பெண்ணின் தலையில் மூன்று முறை சுற்றி விட்டு மூன்று பக்கங்களிலும் போடுவர்.  அதன்பின் சாதத்தை மூன்று உருண்டைகளாகப் பிடித்து அதனையும் தலையில் சுற்றிப் போடுவர். சுற்றிப் போட்டபிறகு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வருவர்.   மறுநாள் விடியற்காலை எழுந்து நடராசர் சிவகாமி வீதியுலா வருவதற்கு முன்பு இறைவனைப் பெண்ணும், அத்தையும் வழிபாடு செய்வர்.  மதியம் பெண்ணின் பெற்றோர் பெண்ணின் தாய் மாமா- அத்தைக்கு க. பருப்புட்டுடன் வடை பாயசம் வைத்து விருந்து போடுவர்.  பின்பு அத்தை மாமாவும் தங்கள் இல்லம் திரும்புவர்.  சீர் நிகழ்வுகள் இத்துடன் முடியும்.  ஆண்டுதோறும் பெண்ணும் தாயும் பிள்ளையார் நோன்பையும், திருவாதிரை நோன்பையும் கடைப்பிடிக்க வேண்டும்.

    திருவாதிரை நோன்பு

    சுமங்கலிப் பெண்களும் திருவாதிரை நோன்பை மிகவும் சிறப்புடன் கடைப்பிடிப்பர்.  திருமணமான முதல் ஆண்டில் வரும் திருவாதிரை நோன்பிலிருந்து தங்கள் நோன்பை கடைப்பிடிக்க ஆரம்பிப்பர்.   கணவன் வீட்டில் தான் இவ்விரதத்தை பெண்கள் கடைப்பிடிப்பர்.  பெண்ணின் பெற்றோர் திருவாதிரைக்கு ஒருவாரம் முன்பே பெண்ணிற்கும் அவள் கணவனுக்கும் புத்தாடை, காய்கறிகள், அரிசி பருப்பு போன்றவற்றை பெண்ணிற்குச் சீதனமாகக் கொடுப்பர்.  கணவன் வீட்டார் பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் அனைவரையும் அழைத்து விமர்சையாக இந்த நோன்பினைக் கடைப்பிடிப்பர்.  திருமணமான முதல் ஆண்டு பெண்ணும் அவள் கணவனும் விரதம் இருப்பர்.  முதல் நாள் இரவு சாதம், கடலை பருப்புக் கூட்டு, இவற்றை செய்து வைத்து விடுவர்.  விடியற்காலையில் குளிப்பதற்கு முன் கணவன், மனைவி இருவரும் பல் தேய்த்து சுவாமி முன்பு விளக்கேற்றி வழிபட்டுச் சாதம், பழம், நாட்டுச் சர்க்கரை போட்டு சாப்பிட்ட பிறகு கூட்டினையும் சாப்பிட்டு முடிப்பர்.  பின்பு இருவரும் விரதம் இருப்பர்.  திருவாதிரை நட்சத்திரம் வந்த பிறகு, திருவாதிரை நோன்பிற்கு வேண்டிய அத்தனை உணவு வகைகளையும் பெண்ணும், பெண்ணின் உறவினர்களும் சமைப்பர்.  சாதம், ஏழுவகை பொரியல், புளிக்குழம்பு, அடை, பாசிப் பருப்பு, திருவாதிரைக்களி, வடை, பாயாசம் அனைத்தையும் சமைப்பர்.  மஞ்சள் பிள்ளையார், சாணிப்பிள்ளையார், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குத்து விளக்கு, மஞ்சள் சரடு, குத்து விளக்கு கற்பூரம், படியுல் நிறைய நெல், தக்கிலி ஆகியவற்றை பூசை அறiயில் வைப்பர்.  சுமங்கலிப் பெண்களின் எண்ணிக்கைக்கேற்ப தலை வாழை இலையில் படைப்புப் போடவர்.  பௌர்ணமி (நிலவு) வந்த பிறகு சாமி கும்பிட ஆரம்பிப்பர்.  தேங்காய் உடைத்து, குத்து விளக்கு ஏற்றி வைத்துச் சாமி கும்பிடுவர்.  கற்பூரம் ஏற்றி இறைவனை வழிபாடு செய்தவுடன் மஞ்சள் சரட்டினை பெண்கள் கையில் கொடுப்பர்.  சரட்டினைப் பெற்றுக் கொண்ட பெண்கள் கணவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிப் பின்பு கயிற்றினைக் கட்டிக் கொள்வர்.  பின்பு நிலாவினைப் பார்ப்பர், அதன் பின் புதுமணத் தம்பதியர் அனைவரின் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவர்.  மறுநாள் விடியற்காலையில் பேரூர் சென்று பட்டீசுவரப் பெருமானையும், பச்சை நாயகி அம்மனையும், நடராஜர்-சிவகாமி திருமண உற்சவத்தையும் பார்ப்பர்.  பேரூர் செல்ல இயலாவிடில் உள்ளூர் சிவாலயத்தில் நடராசர்-சிவகாமியினைத் தரிசித்து வருவது வழக்கமாக உள்ளது. 

    திருவாதிரை சீர், திருவாதிரை நோன்பின் சிறப்புகள்

    திருவாதிரை என்ற சொல்லோடு தொடர்புபடுத்தி சிவபெருமானை ஆதிரையான் என்று அழைக்கின்றனர்.  திருவாதிரை குறித்து சம்பந்தரும், திருநாவுக்கரசுப் பெருமானும் தம் தேவாரத்தில் குறிப்பிடுகின்றனர். “மார்கழி மாதத்தின் திருவாதிரை நாள் சிவபெருமானுக்கு உரியதாகக் கருதப்படுகிறது.  அந்நாளில் உளுந்துமாவினால் செய்த களி வீட்டு உணவில் சிறப்பிடம் பெறுகிறது”.  “திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி” என்பது தென் மாவட்டங்களில் வழங்கும் சொலவடை என்று தொ. பரமசிவன் அவர்கள் தன் பண்பாட்டு அசைவுகள் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.  இவற்றிலிருந்து தமிழக முழுவதும் திருவாதிரை நோன்பு மிகவும் சிறப்பாக மக்களாலும், சிவாலயங்களிலும் கடைபிடிக்கப்பட்டது புலனாகும்.

    ஆய்வின் மூலம் கிடைத்த முடிவுகள்

    1.தமிழரிடையே தைந்நீராடல் என்ற வழக்கம் இருந்ததாகத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  மார்கழி நீராடல் என்ற குறிப்பு இல்லை.  இருப்பினும் மார்கழியிலும் நீராடல் இருந்திருக்க வேண்டும். “ஆண்டாள் தனது திருப்பாவையில்” மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் நீராடப் போதுவீர்” என்று பாடுகின்றார்.  மார்கழி மாதம் பௌர்ணமி நிலவில் தன் பாவை நோன்பினைத் தொடங்குகின்றார் ஆண்டாள்.  மார்கழி மாத பௌர்ணமி நாள் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளாகும்.  எனவே, திருவாதிரை நோன்பும், பழங்காலத்தின் பாவை நோன்பின் எச்சமாக இருக்கலாம்.  பாவை நோன்பு நல்ல கணவன் கிடைப்பதற்கு நோற்ற நோன்பாகும்.  இதன் அடிப்படையில் தான் பூப்பு அடைவதற்கு முன் பெண்களுக்குத் திருவாதிரைச் சீர் செய்யப்படுகின்றது.

    2.தமிழகம் முழுக்கத் திருவாதிரை நோன்பு கொண்டாடப்பட்டாலும், கொங்கு நாட்டைத் தவிர பிற இடங்களில் சிவாலயங்களில் கொண்டாடப்படும் நோன்பாகவும், ஆருத்ரா தரிசனமாகவும் இப்பண்டிகை விளங்குகின்றது.  ஆனால், கொங்கு நாட்டில் மட்டும் சுமங்கலிப் பெண்களால் கொண்டாடப்படும் திருவாதிரை நோன்பாகவும், கணவனின் ஆயுள் பெருக இறைவனை வழிபடும் சடங்காகவும் உள்ளது.  கொங்கு நாட்டில் வாழும் அனைத்து இனங்களும் இந்நோன்பினைச் செய்வதில்லை, உட்கழுத்துச் சரடு கட்டிக் கொள்ளும் பெண்களே இந்நோன்பினை மேற்கொள்கின்றனர்.  இந்நோன்பு மங்கிலிய நோன்பு என்றழைக்கப்படுகின்றது.

    3.கொங்கு வேளாளர், கொங்குச் செட்டியார் என்ற இரு இனத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே பத்து வயதிற்கு உட்பட்ட பெண்களுக்குத் திருவாதிரைச் சீர் செய்கின்றனர்.  கொங்கு வேளாளர் இனத்தில் சங்கரண்டம்பாளையம் இரத்தின மூர்த்தியை குலதெய்வமாக வழிபடும் பெரிய குலத்தைச் சார்ந்தவர் மட்டுமே செய்கின்றனர்.  கொங்கு வேளாளர் பெரிய குலப் பெண்களுக்கு பொன் ஊஞ்சல் ஆட்டும் பழக்கமும் உள்ளது.  கொங்குச் செட்டியார் பெரிய குலத்தைச் சார்ந்தவர்கள் திருவாதிரைச் சீர் செய்தாலும் பொன்னூஞ்சல் ஆட்டும் பழக்கம் இல்லை.

    4.சிலம்பு கழிநோன்பு பற்றிக் குறிப்பு வேண்டுமானால் சங்க இலக்கியத்தில் செய்தி உள்ளது.  திருவாதிரை நோன்பு குறித்த செய்திகள் இல்லை.

    5.“நாட்டார் சடங்காக இருந்த பாவை நோன்பு பிற்காலத்தில் வைதீகத் தொடர்பு ஏற்பட்டு ஏற்கலாம், திருவாதிரை நோன்பாக மாற்றியிருக்கலாம்”.

    6.சேந்தனார் காலத்திற்குப் பிறகு நோன்பில் இறைவனுக்குரிய வழிபாட்டுப் பிரசாதமாகக் களி மாறியிருக்கலாம்.

    7.திருமணத்திற்கு முன்பு நல்ல கணவன் கிடைப்பதற்கு இறைவனை வழிபாடு செய்வது தமிழர் மரபு.

    8.தன்னுடைய கணவன் இறைவன் அடியாராக இருக்க வேண்டும் என்பதுவும், நல்லவனாக இருக்க வேண்டும் என்பதும் பாவை நோன்பின் குறிக்கோளாக அமைகின்றது.

    9.மார்கழி மாதத்தில் முழு நிலவு நாளில் திருவாதிரை நட்சத்திரத்தில் இறைவனை வழிபடுவதால் கணவனுக்கு நல்ல ஆயுள் கிடைக்கும் என்ற நம்பிக்கை திருவாதிரை நோன்பின் குறிக்கோளாக அமைகின்றது.

    10.திருவாதிரைச் சீரும் சைவ வைணவ சமயங்களின் ஒற்றுமைக்குச் சான்றாக இருக்கின்றது.  இது வளமைச் சடங்காகவும் திகழ்கின்றது.  பெண் குழந்தை பூப்படைந்து திருமணமாகி மக்கட் செல்வத்தைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோளாக அமைகின்றது.  திருவெம்பாவை பாடல்கள் சைவ சமயத்திற்கும், ஆண்டாள் கொண்டை, மாலை போன்றவை வைணவ சமயத்திற்கும் சான்றாக விளங்குகின்றது.  மார்கழி மாதங்களில் எட்டாம் நூற்றாண்டு முதல் நாட்டார் சடங்குகளிலும் திருவெம்பாவைப் பாடல்களும், திருப்பாவைப் பாடல்களும் சான்றாக அமைகின்றன.

    11.இலையில் படைக்கப்பட்ட தினை அடை, கம்பு அடை போன்றவை கொங்கு நாட்டு உணவு வகைகளைக் குறிக்கின்றது.  இவை நாட்டார் உணவு வகைகளாகும்.  ஏழு அடை, ஏழு பொரியல், ஏழு பொங்கல் போன்றவை ஏழு கன்னிமாரை குறிப்பிடுகின்றன.  இலையில் வைக்கப்பட்ட ஏழு பொங்கல் உருண்டைகளும் ஏழு கன்னிமாரைக் குறிப்பிடுவதாகும்.  எனவே, இவ்வழிபாட்டில் கன்னிமார் வழிபாடும் இடம் பெறுகின்றது.

    12.கன்னிமார் வழிபாடு கொங்கு நாட்டில் பிரதான வழிபாடாகும்.  பெண்களின் திருமணம், குழந்தைப் பேற்றிற்காகக் கன்னிமாரை வழிபட்டு பொங்கல் வைப்பது கொங்கு நாட்டின் வழக்கமாகும்.

    13.பேழை மூடி கொங்கு நாட்டிலுள்ள புழங்குப் பொருளாகும்.  எனவே, இவ்வழிபாட்டில் பேழை மூடி, தக்கிலி, மைகோதி போன்ற கொங்கு நாட்டிலுள்ள புழங்கு பொருட்களும் பயன்படுகின்றன.

    14.சோறு சுற்றிப் போடுதல், நாட்டுச் சர்க்கரை சுற்றிப் போடுதல் போன்றவை கொங்கு நாட்டில் கண்ணேறு கழிப்பதற்காக செய்யப்படும் பழக்கங்களாகும்.  சோற்று உருண்டை மேல் தணல் வைத்து நெய் சாற்றுதல் போன்ற கண்ணேறு சடங்கின் மூலம் தமிழரின் தொன்மையான பழக்கங்களை மீட்டெடுக்க முடிகின்றது.

    15.பேழை மூடியில் பெண்ணை நிற்க வைக்கும் பழக்கமும் புதியதொன்றாகும்.  இவையும் கொங்கு நாட்டு தமிழரின் தொன்மையான சடங்குகளையும், தமிழரின் பழமையான புழங்குப் பொருட்களை மீட்டெடுக்க உதவுகின்றன.

    16.கொங்கு நாட்டில் வண்ணார், நாவிதர் இல்லாமல் எந்த சீரும் நடப்பதில்லை.  அந்த வகையில் பந்தம் பிடிப்பதற்கும், மாற்றுத் துணி விரிப்பதற்கும், சுற்றிப் போடுவதற்கும் இந்த வண்ணார் இனத்தைச் சார்ந்த பெண்கள் பயன்படுகின்றனர்.

    17.தமிழனின் பண்டைய பண்பாடான தாய்மாமன் உறவினையும் இந்தச் சடங்கு நிலைநிறுத்துகின்றது.

    18.எந்தச் செயலையும் செய்யத் தொடங்குவதற்கு முன்பு பிள்ளையாரை வணங்குவது தமிழரின் மரபு.  அவ்வகையில் இச்சடங்கிலும் பிள்ளையார் நோன்பில் தொடங்குகிறது.  கார்த்திகை தீபம் முடிந்து ஆரம்பிக்கும் இச்சடங்கு மார்கழி மாதப் பௌர்ணமியில் முடிகின்றது.

    19.பொதுவாக எந்தச் சடங்காக இருந்தாலும், ஒரு நாள் இரண்டு நாளில் முடிந்து விடும். ஆனால், இந்தச் சடங்கு 21 நாள் நீடிக்கின்றது. அது மட்டுமல்லாது ஆண்டு தோறும் தொடர்ந்து நடக்கும் மங்கல நிகழ்வாகவும் இருக்கின்றது.

    20.கொங்கு வேளாளர், கொங்குச் செட்டியார் தொடர்பு, தாயம்பாளையம் கொங்குச் செட்டியார் மரபுகளை அறிந்து கொள்ள இச்சடங்கு வாயிலாக அமைகின்றது.

    21.கொங்கு நாட்டின் தொன்மையான உணவு வகைகளை அறிய முடிகின்றது.

    ஆய்விற்கு துணை நின்ற நூல்களும், முதன்மை ஆதாரங்களும்

    1. பண்பாட்டு அசைவுகள் – தொ. பரமசிவன்
    2. சம்பந்தர் தேவாரப் பாடல்கள்
    3. சேந்தனார் திருப்பல்லாண்டுப் பாடல்கள்
    4. கள ஆய்வுச் செய்திகள்
    5. சேந்தனார் வரலாறு குறித்த செவிவழிச் செய்திகள்.

    *****

    கட்டுரையாசிரியர் – இணைப் பேராசிரியர், துறைத் தலைவர்,
    எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரி,
    திருப்பூர்.

     

    Share
  • நலம் ..நலமறிய ஆவல் – 135

    தலைவரும், அதிகாரியும்

    நிறுவனமோ, குடும்பமோ, எந்த தலைவருக்கும் ஒரே நியதிதான். பிறர் சொல்வதைக் காதுகொடுத்து கேட்டுவிட்டு, சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி வேலையைப் பகிர்ந்தளித்துவிட்டு ஒதுங்கிவிட்டால் எந்தக் காரியமும் சிறப்பாக முடியும்.

    நானே வல்லவன்!

    பல பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களின் பொதுக்கூட்டம் நடைபெறும்போது, ஒரே குரல்தான் ஒலிக்கும் – தலைமை ஆசிரியரது. `பதவி கிடைத்துவிட்டது. இனி நான் கற்க வேண்டியது எதுவுமில்லை!’ என்ற அகங்காரம்! பாதிக்கப்படுபவர்கள் என்னவோ மாணவர்கள்தாம்.

    தலையை நிமிர்த்திக்கொண்டு எல்லாரையும் விரட்டிக்கொண்டே இருக்கவேண்டும், அப்போதுதான் தம் பேச்சுக்கு மறுபேச்சே இருக்காது, தாம் நினைத்தபடி நடப்பார்கள் என்று எண்ணிய தலைவர்கள் நிலைப்பது கிடையாது. இவர்களுக்குத் தம் குறை நிறைகள் புரிவதில்லை.

    எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் அடுத்த வகுப்பிற்கான மணி அடித்ததுமே ஆசிரியர்கள் அறைக்கு வெளியே நின்றுகொண்டு, சுழலும் கதவைப் பிடித்து நிற்பார். “Teachers! Go to class!” என்று ஆசிரியர்களை தத்தம் வகுப்பிற்குப் போகப் பணிப்பார்.

    `நான் ஒரு பெரிய அதிகாரி!’ என்ற பெருமிதம் அவரை அப்படி நடக்க வைத்திருக்கலாம். ஆனால், ஒரு நல்ல தலைவர் இப்படி நடக்கமாட்டார். எல்லா அதிகாரிகளையும் `தலைவர்’ என்று ஏற்க இயலாது.

    ஒவ்வொரு முறையும் இப்படியே அதிகாரம் செய்ய, எங்களுக்கு எரிச்சல் மூண்டது. நாங்கள் என்ன மிருகங்களா, ஓயாமல் ஒருவர் விரட்ட?

    “நமக்காக கதவைத் திறந்துவிடுகிறாரே! அவர் கையில் ஆளுக்குப் பத்து காசு வைத்துவிட்டுப் போகலாமா?” என்று ஒரு ஆசிரியை கேட்க, அனைவரும் பெரிதாகச் சிரித்தோம். இயலாமையைத் தணித்துக்கொள்ள கேலி பேசுவதும் ஒரு வழி.

    குறைகளைப் பெரிது பண்ணுகிற அதிகாரி

    ஒரு தலைவரானவர் தன் கீழ் இருக்கும் ஒவ்வொருவரின் குணாதிசயத்தையும், குறை, நிறைகளையும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். குறைகளையே பெரிதுபடுத்திக்கொண்டிருந்தால், யாருக்குத்தான் கடமை உணர்வுடன் செயலாற்றப் பிடிக்கும்! பிறரிடம் நல்லவிதமாக நடந்துகொண்டால்தானே நல்லெண்ணம் நீடித்திருக்கும்?

    கதை

    தலைமைப் பொறுப்பிலிருக்கும் ஒருவர் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவள் மஹானி.

    எதிர்பாராத அல்லது நடக்கக்கூடாத சம்பவங்கள் நடந்துவிட்டால் அவைகளை எப்படிச் சமாளிப்பது என்று அமைதி குலையாது யோசிக்கும் திறமை அமைந்திருக்கவில்லை அவளுக்கு. சிபாரிசுதான் மஹானியை தலைமை ஆசிரியையாக உயர்த்தி இருந்தது. அதனால் பதவிக்கு ஏற்ற மனத்துணிவு இருக்கவில்லை.

    ஒரு முறை, மாணவர்கள் புகை பிடிக்கக்கூடாது என்ற பள்ளி விதிமுறையை மீறிய மாணவர்களைத் திட்டப்போனாள் மஹானி. அவர்களோ, `அந்த ஆசிரியர், இந்த ஆசிரியர்,’ என்று சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டுவிட்டு, `அவர்கள் மட்டும் சிகரெட்டு பிடிக்கிறார்களே!’ என்று அவளையே திருப்பிக்கேட்டார்கள், திமிருடன்.

    மஹானி தன் நிதானத்தை இழந்தாள். தனக்குக் கீழே வேலை பார்ப்பவர்களின் மரியாதையைக் காப்பது தன் கடமை என்று உணரத் தவறினாள்.

    விளைவு?

    பள்ளியெங்கும், ஏன், ஒவ்வொரு வகுப்பறையிலும், அவள் கத்தியது கேட்கும்படி ஒலிபெருக்கியில், மாணவர்கள் கூறியதைப் பரப்பினாள் – அந்த ஆசிரியர்களின் பெயர்களையும் மறவாது குறிப்பிட்டு! அதன்பின், பரிதாபத்துக்கு உரிய அந்த ஆசிரியர்கள் எந்த முகத்துடன் மாணவர்களை நிமிர்ந்து பார்ப்பார்கள்?

    `தன்னையே பிறர் தட்டிக்கேட்கும்படி வைத்துவிட்டார்களே இந்த ஆசிரியர்கள்!’ என்ற பதட்டம்தான் ஏற்பட்டது.

    `ஆசிரியர்கள் இங்கு மாணவர்கள் இல்லை. அவர்களும் உங்களைப்போல் இருக்க வேண்டிய அவசியமில்லை!’ என்று அடித்துச்சொல்லும் தைரியம் மஹானிக்கு இருக்கவில்லை.

    முட்டாள்தனமாக தன் கீழ் வேலை பார்த்த ஆசிரியர்களைத் தாக்கி, அவர்களுடைய மரியாதையையும் இழந்தாள்.

    நல்ல தலைவர் எந்நிலையிலும் நிதானம் தவறாது இருக்க முயலவேண்டாமா?

    சொந்தக் கதை

    மாணவர்கள் சட்டைக்காலர்வரை நீண்ட தலைமுடி வளர்த்துக்கொள்ளக்கூடாது என்ற விதி மலேசியப் பள்ளிகளில் உண்டு. அதை மீறிய ஒரு மாணவனை நான் கண்டித்தபோது, “நீங்கள் மட்டும் முடியை நீளமாக வளர்த்துக்கொண்டிருக்கிறீர்களே!” என்று சாடினான்

    நான் நிதானமாக, “நான் ஆணுமில்லை, இங்கு படிக்க வந்த மாணவனுமில்லை,” என்று பதிலளித்தேன்.

    என்னைக் கேவலப்படுத்துவதாக நினைத்து அவன் கூறியது அவனுக்கே அவமானத்தை விளைவித்தது. முகம் சிறுக்க அப்பால் போனான்.

    மாற்றவேண்டியதை மாற்று!

    ஒரே நிலையில் இருப்பது ஒருவருக்குப் பாதுகாப்பான உணர்வை அளிக்கலாம். ஆனால், `மாறுதல்’ என்பது பல சமயங்களில் நன்மை விளைவிக்கும். மாறும் காலத்திற்கேற்ப நாமும் மாறத் தயாராக இருக்கவேண்டும்.

    எந்த மாறுதலையும் ஏற்கத் துணிவற்ற தலைவர்கள் பிறர் சொல்வதைக் கேட்பதில்லை. தம் சொற்படி கேட்காதவர்களுக்குத் தண்டனை அளிக்கவும் தயங்குவதில்லை. இப்போக்கினால் அவர்களுக்கும் நிம்மதி கிடையாது, அவர்கள் சொற்படி நடப்பவர்களுக்கும், ஏன், எதிர்ப்பவர்களுக்கும்கூட நிம்மதி பறிபோய்விடும்.

    குறுக்கீடு எதற்கு?

    எந்தக் காரியமும் செய்ய ஆரம்பிப்பதற்குமுன் அதன் நெளிவு சுளிவுகளைப்பற்றித் தெளிவாகச் சொல்லிவிட்டால் குழப்பம் வராது.

    வேலையைப் பிறருக்குப் பகிர்ந்தளித்தபின் அடிக்கடி குறுக்கிடும் தலைவர்களைப்பற்றி என்ன சொல்ல! இப்போக்கினால் வேலையும் தாமதமாகும், செய்பவருக்கும் எரிச்சல் மூளும்.

    தகுதி இருக்கிறதா என்று முதலிலேயே பார்த்துத்தானே வேலையை அளித்திருப்பார்கள்? பின் எதற்காக குறுக்கிடுவது?

    மாறாக, அவர்களுடன் இணைந்து செய்தால் உறவு பலப்படும். விறைப்பாக நடந்துகொள்வதற்குப் பதில் தட்டிக்கொடுத்து வேலை வாங்கினால், இரு தரப்பினருக்கும் நிறைவாக இருக்குமே!

    பிழைகளே பாடம்

    ஒரு வேலையில் புதிதாக நியமனம் ஆனவுடன் தவறுகள் புரிவது இயற்கை. அதனால் மேலதிகாரி கண்டபடி தாக்கினால், முன்னேறுவது எப்படி? அறியாமல் செய்யும் பிழைகளைப் பாடமாக எடுத்துக்கொள்ளும் சுதந்திரம் இருந்தால், பொறுப்புகள் அதிகரிக்கும்போது மன உளைச்சலும் அதிகமாகாது தடுக்கலாம்.

    அப்படியே ஒருவர் பிழை புரிந்தாலும், தலைவர் பலபேர் முன்னிலையில் அவரை அவமானப்படுத்தாது, தனியாக அழைத்துச் சொல்லலாமே!

    ஒரு குடும்பத்தலைவியிடமிருந்து கற்ற பாடம்

    “உன் தாய் உன்னை ஓயாமல் திட்டிக்கொண்டே இருக்கிறாளா! உன்னால் எப்படி பொறுக்க முடிகிறது?” ஒரு பெண் தன் தோழியைக் கேட்டாள், அதிசயத்துடன்.

    “நான் சரியாக நடந்துகொள்ளாததால் திட்டுகிறாள். அதோடு, தனியாக அழைத்துத்தானே செய்கிறாள்!” என்ற பதில் வந்தது.

    அந்த தாய் மகளைத் திருத்தும் நோக்கத்துடன் கடுமையாகப் பேசியிருக்கலாம். பிரச்னை என்று வந்தால், அதை எப்படி மாற்றுவது என்றும் வழி காட்டியிருக்கலாம். ஆனால், மகளுடைய நிலையில் தன்னை வைத்துப் பார்த்து, அவளுடைய தன்னம்பிக்கைக்குப் பங்கம் வராதபடி நடந்துகொண்டாள். அதனால் வருத்தம் உண்டானாலும், தாய்மீது கோபம் எழவில்லை மகளுக்கு.

    ஒரு தலைவர் முறைகேடாக நடந்தால், பிறரும் அவ்வழியைத்தான் பின்பற்றுவார்கள். (`தலைவரே அடிக்கிறார், நாம் செய்தால் என்ன?’ – இது லஞ்ச ஊழல் பெருகியிருக்கும் நாட்டில் ஒருவர் தன்கீழ் வேலை பார்த்தவர்களுக்குக் கூறிய அறிவுரை!))

    `நகத்தைக் கடிக்காதே!’ என்று ஓயாமல் மகளைக் கண்டிக்கும் தாய்க்கே அப்பழக்கம் இருந்தால், மகள் எப்படித் திருந்துவாள்?

    பிறரிடம் தாம் எதிர்பார்ப்பதன்படி தாமும் நடப்பவர்களே சிறப்பான வழிகாட்டிகளாக அமைகிறார்கள்.

    தொடருவோம்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 44

    க. பாலசுப்பிரமணியன்

    தோல்விகள் தொடர்கதையானால் ..

    “சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்; நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்” – தொலைக்காட்சியில் இந்தப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. கவியரசு கண்ணதாசனின் இந்தப்பாடலின் ஆழமான கருத்து மனோதத்துவ அடிப்படையில் அலசிப்பார்க்கும் பொழுது ஒரு மனதின் பல பரிமாணங்களையும் உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் துயரங்களையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. வெற்றி – தோல்வி, மகிழ்ச்சி – துயரம், உயர்வு -தாழ்வு, வளமை -வறுமை  ஆகிய அனைத்தும் பிணைந்ததுதான் வாழ்க்கை என்பதை எல்லோரும் அறிகின்றோம். ஆனாலும் தோல்விகளையும் துயரங்களையும் தாங்குகின்ற பக்குவம் நமது மனதிற்கு ஏற்படுவதில்லை.

    “நீங்கள் சொல்வது சரிதான் அய்யா. தோல்விகளைத் தாங்குகின்ற பக்குவத்தை அடைய முயற்சிக்கின்றேன். ஆனால் துயரங்களும் தோல்விகளும் திரும்பத்திரும்ப வரும்பொழுது எப்படி சம்மாளிப்பது?. தோல்விகளின் தொடர்ச்சியில் மனம் துவண்டு விடுகின்றதே – என்ற கூற்று காதில் விழத்தான் செய்கின்றது. “பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும் “என்ற பழமொழி நினைவுக்கு வருகின்றதே !

    ஆங்கிலத்தின் மிகப்பெரிய கவிஞர் செகப்பிரியர் (Shakespeare)  ஓர் நாடகத்தில் கூறுகின்றார் : “துயரங்கள் வரும்பொழுது தனித்து வருவதில்லை. அணி அணியாக வருகின்றன” (When Sorrows come, they come not in a single spies, but in battalions) பலரும் அனுபவிக்கும் உண்மை இது! இதற்கு வழி என்ன? மன உறுதிதான் !

    அமெரிக்காவின் மிகச் சிறந்த தலைவராக விளங்கிய ஆப்ரகாம் லிங்கன் ஒரு சாதாரண தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்து எத்தனையெத்தனை சோதனைகளைச் சந்தித்தார். எத்தனை தோல்விகள் அவரைப் பின்தொடர்ந்தன ! தளர்ந்தாரா அவர்? ஒவ்வொரு தோல்வியையும் ஒரு பாடமாக ஏற்றுக்கொண்டு அவற்றை தன் முன்னேற்றத்திற்கான அடிக்கல்லாக மாற்றிக்கொண்டாரே! மற்றவர்களைக் கவரும் வசீகரமும் உடல்வாகும் இல்லாதவராக இருந்தாலும் தன் திறன்களால், தன் தொண்டால், தன் முயற்சிகளால் எல்லோரையும் ஈர்க்கும் காந்த சக்தி படைத்த மனிதராக மாறினாரே !  தோல்விகள் அனைவருக்கும் வரும். ஆனால் தொடர்ந்த தோல்விகள் அனைவருக்கும் வருவதில்லை. அப்படி வரும்பொழுது துவண்டுவிடாமல் எழுந்து ஒரு சிங்கத்தைப் போல சீறு நடை போடுகின்ற தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ளலாமே!

    ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் கதைகள் அவருடைய ஆரம்பக்காலத்தில் எத்தனை முறை திருப்பியனுப்பப்பட்டது. அவர் முயற்சியைக் கைவிடவில்லையே ! உலகம் தன்னை ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராகப் போற்றும் வரையில் அவர் தளரவில்லை! உலகின் பல முன்னோடிகள் பெர்னார்ட் ஷாவோடு பேசவும் கருத்து பரிமாறவும் துடித்தார்களே!

    சர் ஐசாக் நியூட்டன் என்ன சொன்னார் “ஆயிரமாவது தடவை நான் ஒரு  பல்பை கண்டுபிடித்த போது  எவ்வாறு அதை 999 வழிகளில் செய்யக்கூடாது எனக் கற்றுக்கொண்டேன்”

    சரித்திரம் என்ன சொல்கின்றது?  – கீழே விழுந்தவர்கள் எழுந்து நின்றார்கள்; தடுக்கி விழுந்தவர்கள்- மீண்டும் எழுந்து நடக்க முயன்றார்கள்; தோல்வி அடைந்தவர்கள் – மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி அடைந்தார்கள். சாதனை படைத்தார்கள் ! இப்படி சரித்திரம் படைத்தவர்கள் ஒன்றல்ல-இரண்டல்ல-ஆயிரமாயிரம்பேர்கள் ! இவர்கள் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டாமா?

    பல நேரங்களில் நமது தவறான முடிவுகளால் நாம் தோல்வியைச் சந்திக்கிறோம். அந்த நேரங்களில் நமது முடிவுகள் தவறு எனது தெரிந்துவிட்டால் அதை ஏற்று மாற்றிக்கொள்ள துணியவேண்டும். தொடர்ந்து நமது தவறான முடிவுகளோட வாழ நினைத்தாலோ அல்லது நம்முடைய அகந்தை ,தற்பெருமை காரணமாகவோ நமது முடிவுகளைத் தொடர்ந்து போற்றிவந்தாலோ எப்படி வெற்றிப்படிகள் மீது ஏற முடியும்?

    அறிவியல் ஆராய்ச்சிகளில் “பிழை பகுப்பாய்வு” (Error Analysis) என்ற ஒரு முறை பல இடங்களில் நடத்தப்படுகின்றது. அதன் பொருள் என்ன? நமது கண்டுபிடிப்புக்கள் ஆராய்ச்சிகள் ஆகியவற்றில் பிழைகள் ஏற்படுவதும், பிழைகள் கண்டுபிடிக்கப்படுவதும் ஒரு சாதாரண நடப்பு. ஆனால் அந்தப் பிழைகள் ஏன் ஏற்பட்டன? அதற்கான மூல காரணங்கள் என்ன? அந்தப் பிழைகளை எப்படி சரி செய்யலாம்? என்ற ஆய்வு நடத்தப்படுகின்றது. இது தவறுகளை மறுமுறை வராமல் இருப்பதற்கான கற்றலையும் திறன்களையும் நமக்கு அளிக்கும். இந்தப் பழக்கத்தை நாம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திக் கொள்ளவேண்டும். தோல்விகளை அலசி ஆராய்ந்து தவறுகளை ஏற்று அதற்கான மாற்று வழிகளை கண்டுபிடித்து மாற்றத்தைக் கொணருதல் வெற்றிக்கான அறிகுறிகளை நமக்கு காட்டும்.

    மூளை-நரம்பியல் வல்லுநர்கள் தவறுகள் ஏற்படுவதற்கான காரணங்களிப் பற்றி செய்த ஆராய்ச்சியில் கவனக்குறைவுகளைத் தவிர மூளையில் ஒரு முறை ஏற்பட்ட கற்றலின் தாக்கங்கள் தொடர்வதாகவும் அவைகளுக்கான நியூரான்களின் வலைப்பின்னல்கள் வலுப்பட்டதால் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தாமதிப்பதாகவும் அதனால் தொடர் தவறுகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையை மாற்றுவதற்கான சூழ்நிலைகளை புதிய கற்றல்களே உருவாக்கும். எனவே, தவறைத் தவறு என்று அறிந்து கொள்ளாத வரையில் தொடர் தவறுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்க வாய்ப்புக்கள் உண்டு.

    இந்த மாதிரியான தொடர் தவறுகளால் ஏற்பட்ட தோல்விகளால் மூடப்பட்ட நிறுவனங்களும் உண்டு. பல்லாண்டு காலங்கள் மிகச் சிறந்ததாக இருந்த நிறுவனங்கள் தங்களுடைய மூளைகளைச் சலவை செய்து புதிய கற்றலுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்த வில்லை  ஒரு தனி மனிதனுக்கோ அல்லது ஒரு நிறுவனத்துக்கோ பல காலங்கள் சிறப்பான உயர்நிலை சமூக அந்தஸ்து கிடைத்ததாலும் எவ்வளவு நாட்கள் அவை தொடரும் என்பதற்கான எந்த உத்திரவாதமும் இல்லை. ஒரு காலத்தில் மிகச் சிறப்பான காமெராக்களை கண்டுபிடித்த கோலோச்சிய கோடக் என்னும் நிறுவனம் வருகின்ற மாற்றங்களைக் கண்டுபிடித்து அதற்கான  தயாரிப்புகளில் ஈடுபடாததால் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

    இந்த நிலைக்கு வந்த பல நிறுவனங்களின் வழக்கு ஆய்வுகள் ஒன்றை மட்டும் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றன. தோல்விகள் பெரும்பாலும் ஒரு கணத்தில் வருவதில்லை. அவை வருவதற்கான பல அறிகுறிகள் நமக்கு முன்னமே கிடைத்து விடுகின்றன. நாம் விழிப்புடன் இருத்தல் மிக்க அவசியம்.

    நண்பர்களே ! தோல்வியையும் தொடர் தோல்விகளையும் கண்டு அஞ்சவேண்டியதில்லை… அவைகள் நமக்கு பின்னால் வரும் வெற்றிக்கு நிச்சயமான வழிக்காட்டல்களைக் கொடுக்கும்.

    துணிந்து முயற்சிக்கலாமே!!.. இன்றைய தோல்விகளை நாளைய வெற்றிகளாக மாற்றலாமே!!

    (தொடரும்)

    Share
  • இரட்டைக் காப்பியங்கள் காட்டும் கனவுகளும் நம்பிக்கைகளும்

      -த.அமுதஜோதி                           

     மனித வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளைக் கற்பனை கலந்த சுவையோடு கூறுபவை காப்பியங்கள். இக்காப்பியங்களில் வரும் கனவுகளும் நம்பிக்கைகளும் மக்கள் சமுதாயத்தில் காலங்காலமாக நடைபெற்று வரும் வழக்கமாக உள்ளது. இவை அவர்களது வாழ்வியலின் பிரதிபலிப்பாக விளங்குகின்றன. இத்தகைய கனவு மற்றும் நம்பிக்கைகள் இன்றும் மக்களின் வாழ்வில் இடம்பெறும் பாங்கினை காண்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

     கனவுகள்

    உடல் துயின்றாலும் உள்ளம் துயில்வதில்லை. ஆழ்ந்த  உறக்கமில்லாத நிலையில் மனத்திரையில் தோன்றும் காட்சி தான் கனவு. மானிட வாழ்க்கையில் கனவு காணாத மனிதர்களே இல்லை எனலாம். மனிதனின் எண்ணத்தில் உயிர்த்தெழும் கனவுகள், உள்ள உணர்வுகளைப் பிரதிபலித்துக் காட்டுகின்றன. எதிர்கால விழைவுகளையும் தொடர்புபடுத்திக் காட்டுகின்றன.

    கனவு சிலருக்குப் பித்த நோயாலும், உண்ட உணவு செரிக்காமையாலும் வரக் கூடும். இது விழிப்பு நிலைக்கும் உறக்க நிலைக்கும் இடையில் உணர்வு தோய்கிறபோது உண்டாகும். அடிமனத்தில் தோய்ந்த எண்ணங்களும் எண்ணங்களின் விளைவுகளும் இடைவிடாத நினைவுகளும்  கனவுகளாக வரும் என்பர் ச.தண்டபாணி தேசிகர்.

    கனவுகளை நல்லகனவு, கெட்ட கனவு எனவும் பகற் கனவு, இரவுக்கனவு எனவும் பிரிப்பர். மக்களுக்கு நன்மையோ, தீமையோ வருவது கனவு மூலம் தெரிந்துவிடும். என்று நம்புகின்றனர்.

    கனவு-விளக்கம்

    கனவு என்ற சொல்லின் வேர்ச்சொல் கனாகாணுதல் என்பதாகும். கனவு பற்றித் தொல்காப்பியர்,

    கனவும் உரித்தால் அவ்விடத்தான                      (தொல்,பொருள்,நூ-195)

    நாணல் துஞ்ச லரற்றுக் கனவெனாஅ   (தொல், பொருள்,நூ-256)

    கண்துயில் மறுத்தல் கனவொடு மயங்கல்    (தொல்,பொருள்,நூ-266)

    எனும் நூற்பாக்களில் கூறியுள்ளார். இதன் மூலம் தொல்காப்பியர் காலம் தொட்டு  கனவு பற்றிய சிந்தனை இருந்தமையை உணர முடிகின்றது.

    சிலம்பில் கனவுகள்

    சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் கனவு, கோவலனின் கனவு, பாண்டிமாதேவியின் கனவு  என மூன்று வகை கனவுகள் கூறப்பட்டுள்ளன. இக்கனவுகள் பின்வரும் நிகழ்வுகளை முன்  உணர்த்திய  உளவியல் விருப்பங்கள் மற்றும் நிமித்தங்கள் ஆகும். பழங்காலப் புராணங்களிலும்  காவியங்களிலும் சரித்திர நாயகர்களின் கனவுகளைப் பற்றியும் அவற்றால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியும் எழுதியுள்ளனர். பெரும்பாலும் கனவுகள் எதிர்காலத்தைப் பற்றியே வருவதுண்டு. கனவானது நல்ல செய்திகளைக் கூறுவதை விட எதிர்காலத்தில் நடக்க கூடிய தீமையை உணர்த்துகின்றது. இதைப்போன்ற கனவுகள் எச்சரிக்கை ஊட்டுவதாக அமைகின்றன.

    கண்ணகியின் கனவு

    சிலம்பில் கண்ணகியின் கனவு எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கூறுவதாக அமைகின்றது. ஆகையால் இக்கனவை எச்சரிக்கைக் கனவாகவும் ஏதோ ஒரு குறியீட்டை  மையமாக வைத்து அமைந்ததாகவும் கூறலாம். கண்ணகி தோழி தேவந்தியிடம் தான் கண்ட கனவினைப்  பற்றிக் கூறும்பொழுது

    கடுக்கும்  என்நெஞ்சம் கனவினால்  (சிலம்பு,9-4)

    என்று அச்சத்துடனே  ஆரம்பிக்கின்றாள். இதன் மூலம் கனவு  அச்சத்தை ஏற்படுத்தும் என்ற உளவியல் கருத்து இங்கு கூறப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. கோவலனுக்கு எதிர்காலத்தில் தீங்கு வரப்போகிறது என்றும் புகாரை விட்டு வேறு ஊருக்குச் சென்று  அங்கு அரசன் முன் வழக்குரைப்பதாகவும் கனவு கண்டதாக கூறுவதனை ,

    …..  இடுதேள் இட்டு  என்தன்  மேல்
    கோவலற்கு உற்றது ஓர்தீங்கு என்று  அதுகேட்டுக்
    காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன்     (சிலம்பு,9-48-50)

    எனும் பாடலடிகள் மூலம் அறியமுடிகின்றது.

    கோவலனுக்குப் பின்னர் நிகழப் போகிற நிகழ்வை முன்கூட்டியே கனவின் மூலம் உணர்ந்து தன் தோழியிடம் கூறுகின்றாள்.  கண்ணகியின் கனவு நிகழ்ந்த பிறகு தேவந்தி, வாழ்த்துக் காதையில்,

    செய்தவம் இல்லாதேன்
    தீக்கனாக் கேட்டநாள் எய்த உணராதிருந்தேன் (சிலம்பு ,29-5)

    என்று கூறிப் புலம்புகிறாள். இதன் மூலம்  காணும் கனவுகள் பலிக்கும் என்ற உண்மையை இளங்கோவடிகள் எடுத்தியம்பியுள்ளார். எனும் உண்மையை அறிய இயல்கின்றது.

    கோவலன் கனவு

    கோவலன் கனவைக் குறியீட்டுக் கனவாகவும், பின் வரக்கூடியதை முன்பே கூறுவதாகவும் கொள்ளலாம். கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்து வந்த சமயத்தில்  தான் கண்ட கனவு பற்றி மாடல மறையோனிடம்,

    மாமலர் வாளிவறு நிலத்து எறிந்து
    காமக் கடவுள் கையற்று ஏங்க    (சிலம்பு,15  101-102)

    என்று கூறுகின்றான். இக்கனவு மூலம் கோவலன் மாதவியை  விட்டுப் பிரிந்து வந்தமையால் காமக்கடவுள் கையற்று ஏங்கி அழுவதாகவும்  தன் வாழ்வின் வீழ்வுக்கு காமமே காரணம் என்றும் கருதுவதாக அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. கோவலன் மாதவியோடு ஊடல் கொண்டதும், மதுரைக்குப் புறப்பட்டதும் புகாரில் துன்பம் நேரும் என்ற பயத்தின் காரணமாகவே என்பதைப் புலியூர்க் கேசிகன் தரும் உரை விளக்கத்தால் அறியலாம்.

    கோவலனுக்கு எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியை முன்கூட்டியே கனவில் உணர்த்துவதாக அமைந்திருப்பதனை,

    கூறைக் கோள் பட்டுக் கோட்டுமா ஊரவும்
    அணித்தகு புரிகுழை ஆயிழை தன்னொடும்
    பிணிப்பு அறுத்தோர்  தம் பெற்றி எய்தவும்  (சிலம்பு,15.98-100)

    எனும் பாடலடிகள் வாயிலாக உணர முடிகின்றது. கோவலன் ஆடை பிறரால் பறிக்கப்பட்ட நிகழ்ச்சியின் மூலம்  அவன் மீது பொய்க்குற்றம் சுமத்தப்படும் என்பதையும், எருமைக் கடாவின் மீது ஊர்ந்து செல்வதின் மூலம் எமனின் வாகனம் எருமை என்பதையும், கோவலன் அவமானப்பட்டு இறக்கப் போகிறான்  என்பதையும்  இக்கனவு நிகழ்ச்சி எடுத்தியம்புகின்றது. மேலும் “கோட்டுமா ஊரவும்” என்று கனவில் கொம்பு வைத்த பன்றி வந்ததாகவும் கூறுகின்றான்.

    இவ்வாறு கனவில் பன்றி வந்தால் அரசனால் ஆபத்து உண்டாகும் என்று கனா நூல் கூறுகின்றது. அதேபோல்  பாண்டிய மன்னனால் கோவலனுக்கு ஆபத்து உண்டாகின்றது. இக்கனவு நிகழ்வைப் பெரிதுபடுத்தாமல் மதரைக்குச் சென்ற கோவலன்  கொலையுண்டான். இதன் மூலம்  கனவில் நிகழும் நிகழ்வுகள் எதிர் காலம் பற்றிய பயத்தை மக்கள் மனதில் விதைத்துள்ளது  என்பது தெரியவருகின்றது.

    கோப்பெருந்தேவியின் கனவு

    கோவலன் கொலையுண்ட அடுத்த நாள் பல தீய சகுனங்கள் நடப்பது போல ஒரு தீக்கனவு காண்கிறாள் கோப்பெருந்தேவி. வெண்கொற்றக்குடை கீழே விழுதல், கடைமணியானது இடைவிடாது ஒலி எழுப்புதல், திசைகள் எங்கும் அதிர்ச்சி,  ஞாயிற்றை இருள் விழுங்குதல் போன்ற பல்வேறு சகுனங்கள் நடைபெறுவதாகத் தோழியிடம்  அரசி கூறுகிறாள்.

    இக்கனவின் மூலம் பாண்டியனுக்கும் மதுரை நகரத்திற்கும் ஏதோ தீங்கு நடைப்பெறப் போகிறது என்பதை இளங்கோவடிகள் குறிப்பால் உணர்த்தியுள்ளமையை உணரமுடிகிறது. பாண்டிமாதேவியின் கனவு இயற்கைக்கு மறுதலையான நிகழ்ச்சிகளால் தீய நிமித்தங்களாகக் காட்டப்பட்டுள்ளன.

    வெண்கொற்றக் குடையோடு கோல்விழுந்து கடைமணி ஓசை எழுப்புவது- பாண்டிய மன்னனின் அரசாட்சிக்கு வருகின்ற தீமையை முன்கூட்டியே உணர்த்துவதாக அமைந்துள்ளது. கதிரை இருள் விழுங்கல் என்பது-பாண்டிமாதேவியின் நிலையை உணர்த்துவதாகக் கொள்ளலாம். திசை அதிர்தல், பகலில் விண்மீன் விழல், வானவில் இரவில் தெரிதல் ஆகியவை இயற்கையின் மாற்றங்களாகி நாட்டிற்கு வரும் துயரையும், நகருக்கு வரும் அழிவையும் சுட்டுவனவாகக் கருதப்படுகிறது.

    இக்கனவை இளங்கோவடிகள் கருப்பம் என்று கூறி மறுபடியும் தந்திருப்பதால், முழுக்க முழுக்க தீயநிமித்ததைக் குறிப்பதாகும். அரசு உடனடியாக விழப்போகிறது என்பதை இந்நிமித்தங்கள் வழியாக உணர்த்தியுள்ளார்.

    இவ்வாறு மூன்று கனவுகளும் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை விளக்கிக் காட்டுவனவாக  அமைந்துள்ளன. இன்றும் கனவுகள் பற்றிய நம்பிக்கை  மக்களிடையே வழக்கத்தில் உள்ளன. கனவில் நல்லவை நிகழக் கண்டால் தீங்கு நிகழும் எனவும், தீயவைக் கண்டால் நல்லது நடக்கும் எனவும் கூறிவருகின்றனர்.

    நம்பிக்கைகள்

     மக்கள் சமுதாயத்தில் ஒவ்வொரு இனமும் தனக்கெனச் சில பழக்க வழக்கங்களையும்,  நம்பிக்கைகளையும் கொண்டுள்ளன. இன்றைய அறிவியல் உலகில், பழந்தமிழ் மக்களின் நம்பிக்கைகள் அறிவுக்குப்  பொருந்தாதனவாகத் தோன்றலாம். எனினும் ஒரு நாட்டின் வரலாற்றில் இத்தகைய நம்பிக்கைகள் பல அவர்களின் வாழ்வோடு இரண்டறப் பின்னிப்பிணைந்து  கிடக்கின்றன  எனும் உண்மையை  மறுக்க இயலாது.

    நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் பண்பாட்டு வளர்ச்சியின்  படிக்கற்கள் எனப்படுகின்றன. அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே  நம்பிக்கைகள் என்பர்.

    இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களை  உணராத பொழுதும், மனித வாழ்வில் ஏற்படும் சில நிகழ்ச்சிகளுக்குக் காரணம் கற்பிக்க இயலாத பொழுதும் மனித மனமானது சிலவற்றைப் படைத்துக் காரணம் கற்பித்துக் கொள்கிறது. அவைகளே நம்பிக்கைகளாக  உருவாகின்றன.

    நம்பிக்கைகள்  காலம் காலமாக ஒரு தலைமுறையினடமிருந்து மற்றொரு தலைமுறையினருக்குப் பரவி வருகின்றன. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரைப் பலவிதமான நம்பிக்கைகளைக் கொண்டுள்ளன. நம்பிக்கைகளே மனித வாழ்வினை  இயக்குகின்றன. என்ற வகையில் காப்பியங்களில்  இந்நம்பிக்கைகள் இடம் பெற்றுள்ளன.

    தொல்காப்பியர் காலம் முதல் நல்ல சகுனம் பார்த்தல் நல்லச் சொற்களைக்  கேட்டபின்பு  போருக்குச் செல்லுதல் ஆகிய நம்பிக்கைகள் வழக்கில்  இருந்தன என்பதை,

    படையியங்கு அரவம் பாக்கத்து விரிச்சி  (தொல்,பொருள்,-61)

    எனும் நூற்பா வழிஅறியலாம்.  போருக்குச் செல்வதற்கு வீரர்கள் வெட்சி மாலையை அணிந்து கொண்டு தயராகும் போது காரி எனும் பறவை ஒலி எழுப்பினால் அது நல்ல சகுனமாகக் கருதப்பட்டது என்பதை,

    வெட்சி மலைய விரவார் மணிநிரைக்
    கட்சியுள் காரி யெழும்          (புறப்.வெட்சி-3)

    எனும் பாடலடிகளால் அறியலாம். பண்டைக்  காலத்தில்  காட்டிடையே மக்கள்  செல்லும்பொழுது ஆறலை கள்வர் மிகுந்த தொல்லை கொடுத்துக் கொண்டேயிருப்பர். ஆறலை  கள்வர்  நடமாட்டத்தைக் “கணத்துள்” என்ற பறவை  சத்தம் எழுப்பி மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த  செய்தியை  சங்க இலக்கியத்தில்

    ஆற்றயலிருந்த இருந்தோட் டஞ்சிறை
    நெடுங்காற்  கணத்துள் ஆளறி வுறீஇ
    ஆறு செல் வம்பலர்  படைதலை பெயர்த்து  (குறுந்,-350)

    எனும் குறுந்தொகைப் பாடலடிகள்  மூலம் அறியலாம்.

    கூகை அலறினால் சாவு வரும்  என்ற நம்பிக்கை பண்டைத் தமிழரிடையேயும்  இன்றும் தமிழகத்தில் நிலவி வருவதனை அறியலாம். இதனைப் புறநானூறு                அஞ்சுவரு குராஅல் குரலுந் தூற்றும் (புறம்-280)

    எனும் பாடலடி மூலம் எடுத்தியம்புகின்றது. காகம் கத்தினால் விருந்தினர் வருவார் என்பது அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழரிடையே நிலவி  வரும் நம்பிக்கையாகும். இதனை,

    மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
    அன்புடை  மரபின் கிளையோ டார   (குறுந்-250)

    எனும் குறுந்தொகைப் பாடலடிகள் மூலம் அறிய முடிகின்றது. இவ்வாறு பழந்தமிழர்களின்  நம்பிக்கைகளைத்  தொல்காப்பியர் காலம் முதல் சங்க இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது. இரட்டைக்காப்பியங்களிலும் பல நம்பிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அந்நம்பிக்கைகளை  இன்றும் மக்கள்  கடைப்பிடித்து வருகின்றனர்.

    தெய்வம் உறுதல்

    தெய்வம் உறுதல் என்பது  குலதெய்வத்திற்கு படையலிட்டுப் பூசை  செய்யும் பொழுது ஏதேனும் செய்ய வேண்டிய முறைகளை மறந்து விட்டால் அக்குலத்தில் உள்ள வயதில் மூத்தப் பெண்ணின் மீது தெய்வம் வந்து  அக்குறையை தீர்க்கும் பொருட்டு தெய்வமுற்று கூறுதல் ஆகும். இதனை அருள் கூறுதல் என்றும் சாமியாடுதல் என்றும் கூறுவர். அவ்வகையில் சிலப்பதிகார வேட்டுவவரியில் மறவர் குலத்தில் பிறந்தப் பெண், அக்குலத்தின் நேர்த்திக் கடனை  தீர்க்கும் பொருட்டு தெய்வம்  உற்றனள்.

    அவள் உடம்பின் மயிர்கள் குத்திட்டு நின்றன. கைகளை அகல எடுத்து மேலே உயர்த்தினாள். கானவர் வியந்து நின்றனர். அவ்வூர் நடுவிலே, அவர்கள் கூட்டுணவு உண்ணும் ஊர்மன்றம் இருக்கும். அம்மன்றத்தில் அவள் அடிபெயர்த்து வைத்து தெய்வம் உற்றவளாகி வெறியாடினாள் . பகைவர்களின் ஊர் ஆரவாரம் மிகுந்துள்ளது. ஆநிரைகள் திரண்டுள்ளன. வலிய வில்லினை உடைய இம்மன்றமோ பாழ்பட்டு விட்டது. மறக்குடியில் வழிப்பறியால் வளம் ஏதும் வரவில்லை. அறக்குடியினரைப் போல் யாவரும்  உணவு மறந்து செயலிழந்து அடங்கினர்.

    கலையமர் செல்வி கடன்உணின் அல்லது
    சிலையமர் வென்றி கொடுப்போர் அல்லாள்
    மட்டுஉண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின்
    கட்டுஉண் மாக்கள் கடந்தரும்     (சிலம்பு,12,  16-19)

    என்று தெய்வமுற்றப் பெண் முழங்கினாள். இதன் மூலம் கொற்றவைக்குத் தரவேண்டிய நேர்த்திக் கடனை முறைப்படி தாருங்கள்  என்று கூறியதை  அறிய முடிகின்றது. இன்றும் இவ்வழக்கம் நடைமுறையில் உள்ளது. குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யும் பொழுது இவ்வாறு  சாமியாடுவதைக் காணமுடிகின்றது. மக்கள் காலங்காலமாக உணர்வாலும் செயலாலும் ஒன்றுபட்டுள்ளனர் என்பதை உணர இயல்கின்றது.

    கண்துடித்தல்

    கண்துடித்தல், பல்லி கத்துதல் போன்றவைகளின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதை இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. உடம்பிலுள்ள ஒரு பகுதி  துடிப்பது கொண்டு எதிர்காலத்தைக் கணிப்பது உண்டு. பெண்களுக்கு வலக் கண் துடிப்பது நல்லது  என எட்கர் தெர்ஸ்டன் கூறுவதும்  இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்திர விழாவின் போது கண்ணகியின் கருங் கண்ணும்  மாதவியின் செங்கண்ணும் தத்தம் உள்ளத்தின் நினைவை மறைத்துத் தத்தம் எண்ணத்தை உள் ஒளிக்க முயன்று நீர் வடித்தன.  கண்ணகிக்கு கோவலனை பிரிந்த துயரால் இடக் கண் துடித்தது. மாதவிக்கு ஆனந்தம் மிகுதியால்  வலக் கண் துடித்தது. என்பதை

                                கண்ணகி கருங்கண்ணும் ,மாதவி செங்கணும்
                                உள்நிறை கரந்து ,அகத்து ஒளித்து, நீர் உகுத்தன
                                எண்ணுமுறை,இடத்தினும் வலத்தினும் துடித்தன
                                விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்து  (சிலம்பு,5. 236-240)

    எனும் பாடலடிகள் மூலம் அறிய முடிகின்றது. இவ்வாறே சீவகனின் தாய் விசயை, விடியற்காலையில் கனவொன்று கண்டேன். என் வலக்கண்ணும் துடிக்கின்றது.  பல்லியும் நல்ல இடத்தில் கத்துகின்றது .என் மகன் வருவானோ என்று எண்ணும் போதே சீவகன் சென்று நின்றான். என்று கூறப்பட்டிருப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கைகளை அறிய முடிகின்றது.

    பேய் நம்பிக்கை

    குழந்தை பெற்ற பெண்கள், ஈன்ற பத்தாவது நாளில் பெண்கள் சூழச் சென்று, இரவிலே ஈன்ற துன்பம் தீரக் குளத்து நீரில் நீராடுவது மரபு. அப்போது அவர்களை பேய்தீண்டாதிருக்க வேப்பிலையையும் வெண்சிறுகடுகையும் தடவிக்கொண்டு  செல்வர் என்பதை,

                                அரவாய்க்  கடிப்பகை, ஐயவிக் கடிப்பகை
                                விரவிய மகளிர் ஏந்திய தூமத்துப்
                                புதல்வரைப் பயந்த புனிறுதீர் கயக்கம்
                                தீர்வினை மகளிர் குளனாடு அரவமும்   (மணி,7:  73-79)

    எனும் பாடலடிகள் வழி அறிய முடிகின்றது.

    இதன்மூலம் குழந்தை பெற்ற பெண்களைப் பேய் தாக்கும்  என்ற உண்மையை  உணரமுடிகின்றது. இன்றும்  குழந்தைபெற்ற  மகளிர் மற்றும் பூப்படைந்த  பெண்குழந்தைகள் வெளியில் செல்லும்  பொழுது கையில் வேப்பிலையைக்  கொண்டு செல்வதை நாம் காணலாம்; இச்செய்திகளின் மூலம்  பேய் பற்றிய நம்பிக்கை காலங்காலமாக இருந்து வருவதனைக்  காணமுடிகின்றது.

    தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரை இக்கனவுகளும் நம்பிக்கைகளும் மக்கள் வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருப்பதனைக்  காண முடிகின்றது. நாம் நினைக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிவருகின்றன. ஆகவே எதிர்மறையான எண்ணங்களை எண்ண வேண்டாம். நல்ல எண்ணங்களையே எண்ண வேண்டும் எனும் சிந்தனையை மக்களிடம் விதைத்துள்ளது காப்பியங்கள். குழந்தைபெற்ற மகளிரையும் பூப்படைந்த பெண் குழந்தைகளையும் தொற்று நோய்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள கிருமிநாசினியாக வெண்சிறு கடுகையும் வேப்பிலையையும் நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்ற அறிவியல் உண்மையை அறியமுடிகின்றது.

    துணைநூற் பட்டியல்

    1. சிலப்பதிகாரம் – புலியூர்க்கேசிகன்
    2. மணிமேகலை – புலியூர்க்கேசிகன்
    3. தொல்காப்பியம் – இளம்பூரணர்
    4. திருக்குறள் உரை வளம் காமத்துப்பால் – ச. தண்டபாணிதேசிகர்
    5. குறுந்தொகை – புலியூர்க்கேசிகன்
    6. புறநானூறு – புலியூர்க்கேசிகன்

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,   தஞ்சாவூர்.

     

     

    Share
  • கல்வியை  நவிலும் அறவிலக்கியங்கள்

      -முனைவர் இரா. இராமகுமார்                              

    அறிமுகம்

                “ மாற்றம் பெறச்செய்யும் விடையாய்
    ஏமாற்றம்
    இல்லாத கொடையாய்
    காலமறிந்து
    பயிர்செய்யின் உயிராய்
    காலனையும்
    உய்த்து உணர்வாய்
                 கண்ணிமைக்குள் கல்வி காதலியானால்
    காதலிப்பதும்
    முப்பொழுதும் சுகமே
    காலமெல்லாம்
    எப்பொழுதுமில்லை சோகமே……..! ”

    மனிதன்  வாழ்க்கை முழுவதும்கற்றல் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. படிப்புக் கல்வி முதல் பட்டறிவுக் கல்வி வரை மானுட குலத்தின்  சமூகக் கற்றல் தொடர்கின்றது.  பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாது கற்றாலும் ஒருவனால் கல்வியில் முழுமையினை அடைய முடியாது. எனவேதான் ‘கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு’ என்னும் தொடர் மக்களிடையே நிலவுகிறது. நம்மிடம் இருக்கும் அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்குவதில் கல்விக்குத் தனிப்பங்குண்டு. நம்மிடம் இருந்த அறியாமை விலகி அறிவு விரிவாகும் போது கல்வியில் இன்பம் தோன்றுகிறது. இன்றைய உலகில் கல்வி இன்றியமையாத ஒன்றாகத் திகழ்கிறது என்பதினை மறுப்பாரிலர். எந்தவொரு சமூகத்தினரும் கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது இன்றைய நவீன உலகில் மிகவும் அரிதாக காணப்படுகிறது. ஏனெனில் கல்வியின் சிறப்பை அனைத்துச் சமூகங்களும் புரிந்துள்ளன. கல்வி கற்றவன் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப்படுகின்றான். இதற்குக் காரணம் அவன் கற்ற கல்வியே ஆகும். கல்வி கற்றவன் ஒருவன் தான் மரணிக்கும் வரை கல்வி கற்காமல் இருந்து தனது காலத்தை கழிப்பது என்பது மிகவும் சிரமமானதாகும். பண்டைய அறவிலக்கியங்கள் கல்வியின் மேன்மையினைச் சிறப்பாக எடுத்தியம்பியுள்ளன.

    அறவிலக்கியங்கள்

    சங்க காலத்திற்குப் பின்னர் சங்கம் மருவிய காலம் சமணசமயச் செல்வாக்கு மிக்கிருந்த காலமாக இருந்துள்ளது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்  இந்தக் காலப் பகுதியில் பாடப்பட்டுள்ளன. தொல்காப்பியர் இவ்வகை அறநூல்களை எண்வகை வனப்புகளில் ஒன்றான அம்மை என்பதாக வரையறை செய்துள்ளார்.

               “சின்மென் மொழியால் தாய பனுவலோடு
    அம்மை
    தானே அடிநிமிர்பின்றே” ( தொல்.செய்யுளியல். 235)

    தொல்காப்பியம் மற்றும் உரையாசிரியர்களின் விளக்கங்களினை முதன்மையாக வைத்துப் பிற்கால இலக்கண நூலார்,

                “அடிநிமிர் பில்லாச் செய்யுட் தொகுதி
    அறம்
    பொருள் இன்பம் அடுக்கி யவ்வகைத்
                  திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும்  (பன்னிரு பாட்டியல் 542)

    என்று இலக்கணம் வகுத்தனர். சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவைகளைப் பதினெண் மேல்கணக்கு என்றும், பின்னர்த் தோன்றிய  பதினெட்டு நூல்களையும் பதினெண் கீழ்க்கணக்கு என்றும் குறிப்பிடும் மரபு இலக்கிய வரலாற்றில் உண்டு. சங்க காலத்திற்குப் பிறகு கி.பி.மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை அறத்தினை  வலியுறுத்தும் வகையில் நீதி நூல்கள் பல்கிப் பெருகின.  தமிழ் இலக்கிய வரலாற்றில் களப்பிரர் காலம்  இருண்ட காலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்தில் சங்க காலத்தில் போற்றப்பட்டக் காதலும் வீரமும் பின் தள்ளப்பட்டு அறமும், நீதியும் பெரிதும் போற்றப்பட்டன.

                                 ” நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்
                                   பால் கடுகம் கோவை பழமொழி மா மூலம்
                                   இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே
                                   கைந்நிலையும் ஆம்கீழ்க் கணக்கு.”

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டில் நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, திருக்குறள் , திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம்,  முதுமொழிக் காஞ்சி, ஏலாதி,   ஆகிய பதினொரு அற நூல்களிலும் கல்வியின் சிறப்புத் தன்மைகள்  எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

    நாலடியார்

    உள்ளத்தால் நல்லவர்களால் வாழும் வாழ்க்கை வழி நெறி தவறாத வழிச் செலுத்தும் கல்வியே ஒருவருக்குச் சிறந்த அழகு சேர்க்கும் அணிகலனாகும். உடல், கூந்தல், ஆடை, ஒப்பனை, அணிகலன் போன்றவை ஒருவருக்கு உண்மையில் அழகு தருவன ஆகாது. கல்வியே அழகு தரும் என்பதனை நாலடியார் நவின்றுள்ளது.

                               “ குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
                                  மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
                                 நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
                                 கல்வி அழகே அழகு”  (நாலடி – 131)

       நான்மணிக் கடிகை

    ஒருவன் கற்க வேண்டிய நூல்களைக் கசடறக் கற்றால் அவன் அறியாமையானது குறையும், அறியாமை குறைந்தால் புல்லறிவு நீங்கி இவ்வுலக இயற்கையை அறிவான். இவ்வாறு அறிந்தால் மெய்ந்நெறியாகிய ஞானநெறியில் செல்வதற்குரிய நிலைபெறுவான். அவ்வாறு செல்லின் இவ்வுலகில் பெற வேண்டிய புகழை நிலைநிறுத்தி மறுமையில் வீட்டுலகம் புகுவான் என்று நான்மணிக் கடிகை விளம்பியுள்ளது.

                     “கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்
    புற்கந்தீர்ந்து
    இவ்வுலகின் கோளுணரும்
    கோளுணர்ந்தால்
    தத்துவ
    மான நெறிபடரும் அந்நெறி
    இப்பால்
    உலகின் இசைநிறீஇ – உப்பால்
    உயர்ந்த
    உலகம் புகும்.” (கடிகை. 30 )

    இன்னா நாற்பது

    1.கற்றவர் சொல்லுக்கும் செயலுக்கும் தனி மதிப்பு உண்டு. கல்லாதவர் எத்துணைப் பெரிய செல்வராயிருந்தாலும் அவர்கள் கூறும் செயல்கள் நன்மை தராது. 2.நற்குடியிற் பிறந்தவன் கல்லாமல் இருப்பது துன்பம் தரும். 3.கல்வியால் நிறைந்து அடங்கிய பெரியோர் நடுவே அறிவில்லாதவன் துன்பம் படுவான். 4.அடக்கம் கல்வியுடையோரிடம் இருக்க வேண்டும் என்றும் அப்படி இல்லையென்றால் அவர்கள் துன்பம் அடைவார்கள் என்பதினை   இன்னா நாற்பது எடுத்துரைத்துள்ளன.

          “கல்லார் உரைக்கும் கருமப்பொருள் இன்னா” (இன். நாற். – 15)
    “
    குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா”  (இன்.நா.20:1)
    ”
    ஆன்றவிந்த சான்றோட் பேதை புகலின்னா”  (இன்.நா.18:1)
    “
    ஆங்கின்னா அடக்க அடக்காதார் சொல்(இன்.நா.41)

    இன்னியவை நாற்பது

    1.பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. 2.குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிதாகும். 3.சான்றோர்கள் சபையில் அஞ்சாதவனுடைய கல்வி இனிது. 4.கற்றவர்களின் முன் தான் பெற்ற கல்வியை உணர்த்துதல் இனிது. 5.அறிவுடையாருடைய வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது. 6. பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப்போல இனிதான செயல் வேறு ஒன்று இல்லை என்று கல்வியின் மேன்மையினை இன்னியவை நாற்பது புலப்படுத்தியுள்ளன.

     “பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே” (இனி. நா. 1)
    “
    நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே“ (இனி. நா.3)
    “
    கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே; “(இனி. நா.12)
    “
    கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே“( இனி. நா.16)
    “
    புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே“( இனி. நா. 20)
    “
    கற்றலின் காழ் இனியது இல்“( இனி. நா.40)


    திருக்குறள்

    குறள் நவிலும் கல்வி அதிகாரத்தில்  ஒருவருக்குத் தம் வாழ் நாளில் கல்வியானது எவ்வகையினில் எல்லாம் பெருமையினைத் தரும் என்பதினை வள்ளுவர் பத்துக் குறட்பாக்களில் நயம்படத் தெரிவித்துள்ளார். பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.எனவே எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.

                 “கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க
    அதற்குத் தக” (குறள் 391)

                  “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்ணென்ப
    வாழும் உயிர்க்கு” (குறள் 392)

    என்கிறார். கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும். ஆகவேகல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர்.

                   “கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையர்
    கல்லா தவர்“(குறள் 393)

                  “உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
    கடையரே
    கல்லா தவர்“(குறள் 395)

    மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவினில் சிறந்தோர் செயலாகும். தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிடவே விரும்புவார்கள். கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாகும்; எல்லா ஊரும் சொந்த ஊராகும். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன் என்னும் வினா சமுதாயத்தில் புரையோடி கிடந்த அறியாமை கருத்தில் கொண்டு தொடுக்கப்பட்டதாக உள்ளது.

                  “உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
    அனைத்தே
    புலவர் தொழில்.(குறள் 394)

                   “தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
    காமுறுவர்
    கற்றறிந் தார்“(குறள் 399)

                  “யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
    சாந்துணையுங்
    கல்லாத வாறு“(குறள் 397)

    கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை என்பதால் ,மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும் என்பதோடு,ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையப் பெற்றுவிடும்; இது தெய்வப்புலவரின் தெய்வீக வாக்காக உள்ளது.

                  ”கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
    மாடல்ல
    மற்றை யவை“(குறள் 400)

                 “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத்
    தூறும் அறிவு“(குறள் 396)

                  “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும்
    ஏமாப் புடைத்து” (குறள் 398)

    திரிகடுகம்

    விளக்கில் எரியும் திரி எப்படி வெளிச்சத்தைத் தருகிறதோ அதேபோல் மனித வாழ்க்கைக்குக் கல்வி வெளிச்சம் தரும். கல்விக் கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊரில் வாழ்தல் கூடாது என்பதினையும்,

        “கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்“( திரி.10)

    நூல்களை ஆராய்ந்து நுட்பமான பொருள்களைக் கொள்ளுதலும், நூல்களுக்கு ஒவ்வாத சொற்களை பலர் விரும்பினாலும் சொல்லாதிருத்தலும், நல்ல சொற்களைக் கீழ்க்குலம் ஆகாதவரிடத்துச் சொல்லுதலும் ஆகிய இம்மூன்றும் கற்றறிந்தார் மேற்கொள்ள வேண்டிய செயல்களாகும் என்பதினை,

              “நுண்மொழி நோக்கிப் பொருள் கொளலும், நூற்கு ஏலா
                              வெண் மொழி வேண்டினும் சொல்லாமை, நல்
    மொழியைச்
                              சிற்றினம் அல்லார்கண் சொல்லலும் – இம்
    மூன்றும்
                              கற்றறிந்தார் பூண்ட கடன். ”  ( திரி.32)

    என்னும் பாடல் விளக்கியுள்ளது.

    ஆசாரக்கோவை

    ஆசிரியர்க்குக் காணிக்கையைத் தருதல், யாகம் செய்தல், தவம் இயற்றல், கல்வி கற்றல் என்ற நான்கினையும் மனம், மொழி, மெய் என்ற மூன்றும் மாறுபடாது விளங்குமாறு பாதுகாத்துச் செய்தல் வெண்டும். இல்லாவிடில் மாறுபட்டு விளங்கின எக்காலத்திலும் எவ்வுலகத்திலும் இவை  தனக்குப் பயன்படாமல் போகும் என்கிறது  ஆசாரக்கோவை.

             “ தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும்
                                      முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க
    உய்யாக்கால்
                                       எப்பாலும் ஆகா கெடும்.  ”(  ஆசா. 3 )

    பழமொழி

    கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு உண்டு. அறிவுடையவரின் புகழ் நான்கு திசைகளிலும் சென்று பரவும். எனவே அறிவுடையவர்க்கு எந்த நாடும் அயல்நாடாகாது. அவர் சொந்த நாடேயாகும். தன் சொந்த ஊரில் இருப்பது போல இருக்க முடியும். ஆதலால் வழியில் உண்பதற்கு உணவு கொண்டு செல்ல வேண்டியதில்லை.

        “ஆற்றுணா வேண்டுவது இல்“( பழ. 4)

    பல நூல்களைக் கற்றுணர்ந்தவர்கள் அடக்கம் உடையவராய் இருப்பர். தம்மைப் புகழ்ந்து பேசமாட்டார்கள்.

          “நிறைகுடம் நீர்தளும்பல் இல் “(பழ.9)

    அறிவாகிய பெருமை ஒருவனுக்கு ஆடை போன்றது. அறிவாகிய பெருமை இல்லாதவன் செல்வத்தைப் பெற்றதனால் பெருமை அடையமாட்டான்.

          “அணியெல்லாம் ஆடையின் பின் “(பழ. 26)

    என்பன கல்வியைச் சிறப்பிக்க வந்த பழமொழிகளாகும்.

    சிறுபஞ்சமூலம்

    அறிவுடைய நூல்களைக் கற்றவர்கள் தேவர்களுக்கு ஒப்பாவர்கள் அத்தகைய நூல்களைக் கற்காதவர்கள் பூத பிசாசுகளுக்கு ஒப்பாவர்.

            “தேவரே கற்றவர் கல்லாதார் தேருங்கால்(சிறு.மூ. 20)

    எல்லாவற்றையும் அறிந்தவனும் யாதொன்றும் அழியாதவனும் நற்குணமே இல்லாதவனும், குற்றமே இல்லாதவனும், எல்லா நூல் தொகுதிகளையும் முழுமையாகக் கற்றவர் இவ்வுலகில் இல்லை என்கிறது   சிறுபஞ்சமூலம்

       “ சத்தமெய்ஞ் ஞானம் தருக்கம் சமயமே”  (சிறு.மூ. 86 )

    இலக்கண நூல், அறிவுநூல், அளவை நூல், சமய நூல், அறிவின் மிக்கோர் இயற்றிய வீடுபேறு பற்றிய நூல் என்ற இவ்வைந்தையும் அறிபவன் மக்களுன் மேலானவனாவான்.

          “குணனடங்கக் குற்றமில் லானாம் ஒருவன்”  (சிறு.மூ. 31 )

    முதுமொழிக்காஞ்சி

    “கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று” – சிறந்த பத்து

    “கற்றது உடைமை காட்சியின் அறிய” – அறிவுப் பத்து

    ”நேராமல் கற்றது கல்வி யன்று” – அல்ல பத்து

    அரிய உண்மைகளைக் கற்றலை விடக் கற்றறிந்த பெரியோரைப் போற்றியொழுதுதல் மேலானது. கற்ற கல்வியுடைமையை அறிவினால் அளந்தறிவர். கற்பிக்கும் ஆசிரியனுக்கு ஒன்றையும் கொடாமல் கற்பது கல்வியாகாது. ஆகலின் ஆசிரியனுக்கு உற்றுழி உதவவேண்டும் என்பதுமுதுமொழிக்காஞ்சி எடுத்துரைக்கும் அறக் கல்வியாக உள்ளது .

     ஏலாதி

    எண்ணும் எழுத்துமாகிய  நூல்களை மாண்போடு கேட்டு எழுதி, படித்து, வாழ்வாருக்கு உணவு ,உடை,எழுத்தாணி, புத்தகம், புத்தகம் வைக்கும் பெட்டி ஆகியவற்றை இப்பிறவியில் கொடுத்து நூல்களை எழுதவைத்து வாழ்வாங்கு வாழும் சான்றோர் விரிந்த புகழினைப் பெறுவர்.

                  “ஊணொடு கூறை யெழுத்தாணி புத்தகம்
    பேணொடு
    மெண்ணு மெழுத்திவை – மாணொடு
    கேட்டெழுதி
    யோதிவாழ் வார்க்கீய்ந்தா ரிம்மையான்
    வேட்டெழுத
    வாழ்வார் விரிந்து.”( ஏலா. 63 )

    நிறைவுரை

                         “முயற்சி செய்து பார்
    பயிற்சி
    பெற முயல்க
    தளர்ச்சியை
    நீக்கிப் பார்
    தாழ்வுமனப்பான்மையை
    ஒதுக்குக
    உன்னால்
    விடியல் மலரும்
    கல்வியால்
    மட்டுமே முடியும்……”

    கல்விக் கற்றவர்கள், தாம் கற்றவற்றை வாழ்வில் பயன்படுத்த வேண்டும். கல்வியின் வாயிலாகத் தாம் கற்ற அறநெறிகளை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் மட்டுமே கற்ற கல்வியால் பயன் உண்டு. கற்றதன்படி அறநெறிகளைப் பின்பற்றி வாழாதவர் பிறருக்கு அறநெறிகளை எடுத்துக் கூறும் தகுதியினை இழந்து விடுவர். ஆக்கல் மிகுந்த கல்வியில் அழிக்க முயல்வது அறிவியல் கண்டுபிடிப்புகள் அழிவினை நோக்கிச் செல்வதற்கு ஒப்பானதாகும். மறம் செல்வாக்குடன் திகழ்ந்த காலத்தில் அறம் உரைக்க வேண்டிய தேவை எழுந்ததன் விளைவு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் மிகுதியாகத் தோற்றம் பெற்றுள்ளன. அக்காலம் முதல் இன்று வரை கல்வியின் மேன்மைத்தன்மைகளை எடுத்துரைக்கவும்,  வலியுறுத்தவும் அற நூல்கள் துணைபுரிந்துள்ளன. காகிதமாய்க் கல்வி கானகம் செல்லாமல் காவியமாய் கல்வி எந்நாளும் நல்லறமாகிடுதல் வேண்டும்.

    துணைநின்ற நூல்கள்

    1. அறவாணன், க.ப; (2008), ” அற இலக்கியக் களஞ்சியம் ” , தமிழ்க்கோட்டம், சென்னை- 29.
    2. சுப்பிரமணியன், ச.வே; (2008), தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும்” மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 108.
    3. சிற்பி பால சுப்பிரமணியம், நீலபத்மநாபன்;( 2013), சாகித்திய அகாதெமி, புது தில்லி – 1

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர் & நெறியாளர்,
    தமிழ் உயராய்வு மையம், விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம்,   கன்னியாகுமரி மாவட்டம் – 629 701

     

    Share
  • குருவை நிந்தித்த இந்திரனின் துயரம்

    -முனைவர் த. ராதிகா லட்சுமி     

    பழங்காலத்தில் மாணவர்கள் குருவின் இல்லத்தில் தங்கி குருவிற்குப் பணிவிடை செய்து கல்வியை, வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தனர். தற்கால மாணவர்கள் குருவைக் கடமையைச் செய்பவராக கருதி கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாகச் செயல்படுபவராக விளங்குகின்றனர்.

    ‘பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு:’

    என்ற வள்ளுவத்தின்படி பணிவின்மையால் குருவை நிந்தித்த இந்திரன் உயர்ந்த பதவியை இழந்து பிரமக்கொலை, பிரமகத்தி தோஷம் அடைந்து துன்புற்று ஓடி ஒளிந்தான். தேவருலகத் தலைவன் இந்திரன் தன் குருவான வியாழபகவானைப் பொருட்படுத்தாததன் விளைவைத் திருவிளையாடற்புராணத்தின் வழி அறியலாம்.

    அலட்சியப்போக்கு:

    முன்னர் கிருத யுகத்தில் தேவேந்திரன் தேவமகளிரின் அமுதம் போன்ற பாடலிலும், ஆடலிலும் மனம் திளைத்து மகிழ்ச்சி எனும் மதுக்கடலில் மூழ்கி இருந்தான். அப்போது இந்திரன் தன் குருவான சிவனையொத்த வியாழபகவானின் வருகையை உணராது, வழிபாடற்று வாளா இருந்தான். மகளிரின் மயக்கத்தில் வீழ்ந்தவர்களுக்கு நல்வாழ்வும் சாத்தியமோ? இதனை நன்குணர்ந்த  வியாழபகவான் அவ்விடம் விட்டு நீங்க, இந்திரனின் செல்வம் பொலிவில்லாமல் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது. இது குருத்துரோகத்தால் ஏற்பட்ட கேடு என்பதைத் தெளிந்துணர்ந்த இந்திரன் தன் குருவைத் தேடிச் சென்றான். எங்குத் தேடியும் காணாதவனாய் அச்சத்துடன் நான்முகனை அடைந்து நடந்த நிகழ்வை எடுத்துரைத்தான். குருவை மதிக்காமல் நிந்தித்ததால் பாவம் கொழுந்துவிட்டு எரிவதையறிந்த நான்முகன் சூழ்ச்சியுடன் ‘உன் பழைய குருவைக் காணும் வரையில் துவட்டாவின் மகன் மூன்று தலைகளையுடைய அசுரர் குலத் தோன்றல் விச்சுவ உருவனைக் குருவாக கொள்க’ எனக் கூற  இந்திரனும் உடன்பட்டான்.

     இந்திரன் தேவர்களுக்கு நன்மை உண்டாக வேள்வி செய்யுமாறு புதிய குருவிடம் உரைக்க, விச்சுவனோ அசுரர்களுக்கு நன்மை புரியும்வகையில் வேள்வியைத் தொடங்கினான். இந்திரன் தன் ஞான திருஷ்டியால் விச்சுவனின் செயலில் வேறுபாட்டை அறிந்து வச்சிராயுதப் படையால் மோதி மூன்று தலைகளையும் தனித்தனியே பிளந்தான். அவை காடை, ஊர்க்குருவி, கிச்சிலியாக மாறிப் பறந்தன. அதன் ஊனுடன் கூடிய குருதியைப் பேய்களின் வாயில் புகட்ட இந்திரனுக்குப்  பிரமக்கொலை பாவம் வந்து சேர்ந்தது.

    பிரமக்கொலைப் பாவம்:

    தேவர்கள் இப்பாவத்தை நீர், மண், பெண்டிர், மரம் போன்றவற்றின் மேல் கூறு செய்து சுமத்தினார்கள். அவர்கள் இப்பாவம் நீங்க வழி யாது? என வினவினர். அதற்கு ‘நீரில் நுரையாகியும், நிலத்தில் உவர்ப்பாகியும், பெண்ணில் பூப்பாகியும், மரத்தில் பிசினாகியும் நீங்குக’ என்றுரைத்தனர். அதற்குப் பின்னும் ‘இப்பழி சுமந்ததற்கு உண்டான பயன் யாது?’ என வினவினர். நீர் இறைக்குந்தோறும் சுரந்து பொலிவடையும், மண்தோண்டிய குழியும் மண்ணினாலேயே வடுவொழிந்து நிரம்பும், சூலுற்ற பெண் கருவுயிர்க்கும் வரை கணவனுடன் வாழ்வர், மரம் வெட்டப்படினும் மீண்டும் தழைக்கும் என நீங்காத பலனை அளித்தார்கள். இதனால் இந்திரன் பிரமக்கொலை பாவத்தினின்று நீங்கினான். ஆனால் துவட்டா தன் மகன் விச்சுவனைக் கொன்ற இந்திரனைப் பழிவாங்குவதற்காக கொடும் வேள்வியினைச் செய்தான். இவ்வேள்விக் குண்டத்தினின்று ஆலகால விஷம் போன்ற தோற்றத்தைக் கொண்ட கையில் வெற்றிமிக்க வாட்படையினையுடைய விருத்திராசுரன் தோன்றினான். துவட்டா ‘தேவேந்திரனின் உயிரைப் போர் செய்து வாங்கி வா’ என  விருத்திராசுரனிடம் ஆணையிட்டான்.

    வலுவிழந்த வச்சிரப்படை:

    அறமும், பாவமும் போர் செய்தலைப் போன்ற யுத்தத்தில் இந்திரன் விருத்திராசுரனின் மேல் வச்சிரப்படையை வீசினான். விருத்திராசுரன் இரும்பு உலக்கையை எடுத்து இந்திரனின் புயத்தில் அடிக்க மூர்ச்சையுற்றான். சிறிதுநேரத்தில் தெளிந்த இந்திரன் ‘இப்பகைவனுக்கு எதிர்நின்று யான் போர்புரியும் வலிமைபெற்றவன் அல்லேன்’ எனக் கருதியவனாய் நான்முகனை அடைந்தான். பின்பு நான்முகனோடு சென்று திருமாலை வணங்க அவர் விருத்திராசுரனை அழிக்கும் வழியை எடுத்துரைத்தார். ‘உன் வச்சிரப்படை மிகவும் பழையதாகியதால் பகைவரின் உயிரை உண்ணும் வலிமையை இழந்துவிட்டது. அதனால் வேறு புதிய படைவேண்டும். நான் பாற்கடலைக் கடையும் நேரத்தில் அசுரர்களும், தேவர்களும் கொடிய படைக்கலன்கனோடு வருவது குற்றமென உரைத்து அவ்வாயுதங்களை ததீசி முனிவரிடம் சேர்ப்பித்தோம். பலவாண்டுகளாகியும் அசுரர்களும், தேவர்களும் ஆயுதங்களைக் கேட்காததால் ததீசி முனிவர் அவற்றை விழுங்கி விட்டார். அப்படைக்கலன்கள் அனைத்தும் திரண்டு முதுகெலும்பாய் பொருந்தி வச்சிரப்படையாயிற்று. நீ ததீசி முனிவரைக்கேட்டால் கருணைவடிவமான அவர் அதனை உனக்குத் தருவார் என்று கூறினார். ததீசி முனிவரிடம் சென்ற இந்திரன் நிகழ்ந்தவற்றைக் உரைத்து தேவர்களைக் காக்கவல்ல பொருள் நும் உடலில் உள்ள வச்சிரப்படையே’ என்று பகர்ந்தான்.

    என் உடலை வழங்கி அறமும், புகழும் பெறுவேன் எனில் இவ்வுடம்பினால் பெறும் பயனும் வேறுண்டோ? என்ற ததீசி முனிவர் சிவயோக சமாதியில் நின்று கபாலத்தைக் கிழித்து சிவவுலகை அடைந்தார். தேவதச்சன் அவ்வள்ளலின் முதுகெலும்பை வலிமைமிக்க வச்சிரப்படையாக்கி இந்திரனின் கையில் வழங்கப் போர் தொடங்கியது.

    பிரமகத்தி தோஷம்:

    தேவர், அசுரர்களுக்கிடையிலான இப்போரில் பூமியை மூடிய பிணக்குவியல் மலை போன்ற அண்டத்தைச் சிதைவுப்படுத்தியது.  இந்திரனின் கணைகளுக்கு எதிர்க் கணையை விடுக்கவியலாத விருத்திராசுரன் அஞ்சிக் கடலினுள் சென்று மறைந்தான். சினத்துடன் கடலினுள் சென்ற இந்திரனால் அசுரனைத் தேடிப்பிடிக்க இயலவில்லை. இந்திரன் மீண்டும் நான்முகனை நாட அவர் விந்தியமலையை அடக்கிய அகத்தியரைச் சென்று கண்டால் உபாயம் கிடைக்கும் என்று வழிப்படுத்தினார். அகத்தியரும் இந்திரனின் துயர் துடைக்க சிவனைத் தியானித்து விருத்திராசுரன் மறைந்திருந்த கடலை உளுந்தின் அளவாகக் குறுக்கி அதனைக் குடித்தார். நீரற்ற கடலில் தவம் புரியும் அசுரனைக் கண்ட இந்திரன் அவன் தலையை வெட்டியெறிந்தான். இந்திரனைப் பிரமகத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. இதனால் அச்சமுற்ற இந்திரன் ஒரு குளத்தில் இருந்த தாமரைத் தண்டின் நூலுள் மறைந்தான்.

    பெண்வேட்கை:

    தலைவன் இல்லாத இந்திரலோகம் பொலிவிழக்க தேவர்கள் அசுவமேதயாகம் புரிந்த நகுடனைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டனர். இந்திரப்பதவியேற்ற நகுடன் இந்திராணியை அழைத்து வருமாறு பணிக்க அவள் வியாழபகவானைப் பணிந்தாள். இந்திரனை விடுத்து வேறொருவனைத் துணையாகக் கொள்ளுதல் அறமோ? என வினவினாள்.  வியாழபகவானும், ‘அகத்தியன் முதலான ஏழுமுனிவரும் தாங்க மாமணிச் சிவிகையில் வருபவனே தேவர்களைக் காக்கும் தலைவன். அவனே உன் கணவன்’  என உரைக்க இந்திராணியும் உடன்பட்டாள். இந்திராணியின் தூதை அறிந்த நகுடன் பெண்வேட்கையால் பின்வரும் இடரினை நினையாது, சிவிகையைச்  சுமந்து வரும் முனிவர்களின் பெருமையை அறியாது விரைந்து செல்லுங்கள் எனும் பொருள் கொண்ட ‘சர்ப்ப’ என்று கூறினான். அகத்தியரும் அவன் சர்ப்பம் என்று கூறியதால் ‘சர்ப்பமாகவே மாறக் கடவாய்’ என சாபமிட்டார்.

    ஆற்றுப்படுத்திய குரு:

     பின்பு தேவர்கள் தங்கள் குருவான வியாழ பகவானைப் பணிந்து ‘மன்னன் இல்லாத இடரினைத் தீர்க்க வல்லீர்’ என வேண்டினார். குருவும் குளத்தில் மறைந்திருந்து இந்திரனை அழைத்து வந்தார். கொடிய பெரும்பாவத்தில் மூழ்கிய இந்திரன் வியாழபகவானைப் பணிந்து வணங்கி, ‘குருவே! என் பாவம் நீங்கும் வழி யாது?’ என வினவினான். வியாழபகவானும் கடம்பவன சிவனை வணங்கி பிரமகத்தி தோஷம் நீங்கும் வழியை தன் மாணவனுக்கு எடுத்துரைத்தார்.

    இறைவனுக்குச் செய்த குற்றத்தை ஆசிரியரே ஆராய்ந்து தீர்க்கவல்லவர். ஆனால் ஆசிரியருக்குச் செய்த குற்றத்தை அவ்வாசிரியரே நீக்குதலின்றி வேறு எவராலும் நீக்கிடமுடியாது.

    ‘ ஈசனுக் கிழைத்த குற்றந் தேசிகன் எண்ணித் தீர்க்குந்
    தேசிகற் கிழைத்த குற்றங் குரவனே தீர்ப்பதன்றிப்
    பேசுவ தெவனோ தன்பாற் பிழைத்த காரணத்தால் வந்த
    வாசவன் பழியைத் தீர்ப்பான் குரவனே வழியுங் கூற ‘

    தன்னிடம் தவறு செய்தமையால் வந்த பழியை இந்திரன் தீர்ப்பதற்கு வியாழபகவானாகிய அக்குரவனே வழியையும் வகுத்துரைத்தான்.

    குருவிடம் செய்த தவற்றினால் இந்திரன் விச்சுவனை அழித்து துவட்டாவின் பகையை ஈட்டினான். துவட்டாவினால் விருத்திராசுரனுக்கு அஞ்சும் நிலை ஏற்பட்டது. ததீசி முனிவர், அகத்திய முனிவர்களின் உதவியால் விருத்திராசுரனை அழித்த நிலையிலும் நிம்மதி கிட்டாமல் பிரமகத்தி தோஷமே பிடித்தது. இப்பாவத்திற்கு அஞ்சிய இந்திரன் தாமரையில் ஒளிய  இந்திராணியை நகுடன் கைக்கொள்ள நினைக்கிறான். இவ்வாறு இந்திரன் பல்வேறு துன்பங்களை அடைய குருவான வியாழபகவானே பிரமகத்தி தோஷம் நீங்கும் வழியை வகுத்துரைக்கிறார். இப்புராணத்தின் வாயிலாகக் குருவை நிந்திப்பவன் துன்பம் அடைவது உறுதி என்பது புலனாகின்றது.

    குறிப்புகள்

    1. திருவிளையாடற்புராணம்; (இந்திரன் பழி தீர்த்த படலம்) – உரையாசிரியர் பி.ரா.நடராஐன்
    2. தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் – ராஜ்கௌதமன்
    3. குறள்நெறி அறம் – புலவர் கே.ஏ.ராஜீ

    *****

      கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை,
    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
    பொள்ளாச்சி.

     

    Share
  • சேக்கிழார்  பாநயம் – 12

     

    =======================

    திருச்சி  புலவர் இரா.இராமமூர்த்தி

    ———————————————————–

     

    ஓரூரின் சிறப்பு அவ்வூர் மக்களின் நல்வாழ்வைப் பொறுத்தே அமையும்! ஒவ்வோர் ஊரிலும் அந்த ஊரில்  நெடுங்காலம் வாழ்வோரின் வரலாறு, எல்லா வகையிலும்  வெளிப்படும். தமிழ் நாட்டின் பழங்காலத்து நகரங்கள் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களின் வரலாற்றைப் புலப்படுத்தும்! பூம்புகார் சோழ நாட்டின் பழங்காலத்  துறைமுக நகரம்! அந்த நகரின் சிறப்பினைப் பற்றி சிலப்பதிகாரத்தின் தொடக்கத்திலேயே இளங்கோவடிகள் கூறுகிறார்!

    ‘’பொதியிலாயினும்  இமயமாயினும்

      பதியெழுவறியாப்  பழங்குடி  கெழீஇய

     பொதுவறு  சிறப்பின் புகாரே  யாயினும்

     நடுக்கின்றி  நிலைஇய என்பதல்லதை

     ஒடுக்கம் கூறார்  உயர்ந்தோர் உண்மையின் ‘’

    என்று பாடுகிறது. பொதியில், இமயம், புகார் என்ற மூன்று இடங்களையும்  கல்வியிற் சிறந்த பெரியோர் ‘’எக்குறையும் இல்லாமல் நிலைத்த  சிறப்பின, என்பார்களே அல்லாமல் எந்தக்  குறையையும் கூற மாட்டார்கள்! அதற்குக்  காரணம்  அங்கெல்லாம்  நீண்டகாலம்  உயர்ந்தோர் வாழ்வதே!’’ என்று புகழ்வர்!

    பொதியில் அகத்தியர் முதலான முனிவர்களும், இமயத்தில் சிவபிரானும், புகாரில் , எக்காரணத்தைக் கொண்டும் ஊரைவிட்டுச் செல்லாத சோழ நாட்டுப் பழங்குடிகள் நிறைந்து வாழ்வதாலும் , அவ்வாறு புகழ்வர்.  அவ்வகையில் ஓரூரின் சிறப்பு அங்கு நீண்டகாலம் வாழும் மக்களால் விளங்கும்!

    தமிழகத்தின் சிறந்த நகரங்களில் ஒன்றாகிய திருவாரூரின் சிறப்பைச்  சேக்கிழார் சுவாமிகள் பற்பலபாடல்களில் புகழ்கிறார்! ஓரூரின் சிறப்பு அங்குள்ள சிறந்த சான்றோர்களாலும் , அங்குள்ள நீர்வளம், நிலவளம், தொழில் வளம், கோயில் முதலானவற்றாலும் புலப்படும் என்பதைச் சிலம்பு கூறுவதை மேலே கண்டோம்! அவ்வகையில் ‘’திருவாரூர்  அங்குள்ள பறவைகளின் ஒலிகளால்,  சிறந்த ஊர் என்பதை அறிந்து கொள்ளலாம்! ‘’ என்கிறார் புலவர்.

    சங்க இலக்கியமாகிய பெரும்பாணாற்றுப் படையில் , பாணர்களை அந்தணர் வாழும் இல்லத்துக்குச்சென்றால், அங்கு எவ்வகை உணவைப் பெறலாம் என்பதைக் கூறி ஆற்றுப்படுத்துகிறார்கள். அப்போது, ‘’அந்தணர் இல்லத்தில் பசுமாட்டின் கன்றைக் கட்டிவைத்த பந்தலின் உள்ளே,பசுஞ்சாணத்தை இட்டு  மெழுகிய யாகசாலை உடைய வீட்டில், கோழியும்,அதனை விரட்டும்  ஆடும் உள்ளே நுழைய மாட்டா! அங்கே வளைந்த வாயினை உடைய கிளிகள்   வேளைதோறும் இடைவிடாது அந்தணர்கள் கூறும் அறிய வேதங்களைக் கேட்டு, மீண்டும் சொல்லிப்  பயிலும் ‘’  என்பதை,

    ‘’செழுங்கன்று  யாத்த  சிறுதாள் பந்தல்

     பைஞ்சேறு  மெழுகிய படிவ நன்னகர்

     மனையுறை  கோழி, அடு ஞமலி துன்னாது

     வளைவாய்க்  கிள்ளை  மறைவிளி  பயிற்றும்

     மறைகாப்பாளர்  உறைபதி’’

    என்று பாடுகிறது.  வேதங்களைக் கிளிகள் பயிலும் அடையாளம் சிறந்த வேதியர் வாழும் இடத்தைக் குறிக்கிறது!திருவெண்காடு சிறந்த சிவத்தலம்! அங்கே வாழும் அந்தணர்கள் ஸ்ரீருத்திரம் போன்ற வேத மந்திரங்களை வேளைதோறும் விடாமல் ஒதுகின்றனர்! அதைக்கேட்ட அவ்வூரில் உள்ள  கிளிகள் அவ்வேத மந்திரங்களைக்   கொண்டே  பேசப்   பழகுகின்றனவாம்! இதனைத் திருஞானசம்பந்தர் ,

    “நாதன்  நமையாள்வான்   என்று  நவின்றேத்தி

     பாதம்  பன்னாள்  பணியும் அடியார்கள் தங்கள்மேல்

     ஏதம்தீர   இருந்தான்   வாழும்    ஊர்போலும்

    வேதத்து  ஒலியால்  கிளிசொல்  பயிலும்  வெண்காடே!’’ என்று பாடுகிறார்!

     மேலும் அவர் ‘’திருவீழி மிழலை என்ற திருத்தலத்தில், இடமகன்ற திருமடங்களில்  அந்தணச் சிறுவர்கள் ‘பதம்’ என்ற வகையில்   படித்த நால்வேதங்களைக் கேட்டு, மகிழ்ந்து இருந்த பசுங்கிளிகள் , அவ்வாறே ஓதக்கேட்டு , அத்திருக்கோயில் வாயிலில் படுத்துக் கிடந்த பசுக்குலங்கள்,வேத ஒலியைத் தாமும் பயின்று முழங்குகின்றன. இத்தலத்தின் இறைவனின்  திருவைந்தெழுத்தை  நாமும் ஓதினால் நம் வினைகள் கெடும்!’’ என்கிறார்! அவர் பாடல்,

    ‘’அஞ்செழுத்துரைக்க அருளினன்   தடமிகு  நெடுவாள்

    படித்த  நான்மறைகேட்    டிருந்த பைங்கிளிகள்  பதம்ஓத, பாடுஇருந்த

    விடைக்குலம்  பயிற்றும்  விரிபொழில்வீழி  மிழலையான்  எனவினை  கெடுமே!’’

    என்று பாடுகிறார்.  மேலும் விடமுண்ட கண்டராகிய சிவபிரான் என்றும் வாழும் நகராகிய  சீர்காழியை, ‘’மிகவும் நல்லவர்களாகிய வேதியர் கற்றுப்  பயில்கின்ற வேதங்களைக் கேட்டு, அவ்வூர்ச் சோலைகளில் பறந்து திரியும் கிளிகள், தாமே அப்பதங்களைச்  சொல்லி மகிழும் திருப்புகலி!’’ என்று பாடுகிறார்! இதனைத் திருமுறை,

    “ சால  நல்லார் பயிலும்  மறைகேட்டுப் பதங்களை

     சோலை மேவும் கிளித்தான்  சொல்பயிலும் புகலியே!’’    

    என்று பாடுகின்றது!

    இவையனைத்தையும்  பயின்ற   சேக்கிழார்   பெருந்தகை,   திருவாரூரில் உள்ள  இல்லங்களில், சிறந்த திருமுறைகளை  அனைவரும் வேளைதொறும் பயில்வர்! அதனை அங்கே  வாழும் கிளிகள் கேட்டு மீண்டும் கூறுமாம். அதனை நாகணவாய்ப் பறவைகளும் கேட்டு மகிழும் என்று பாடுகிறார்.

    ‘’உள்ளம்  ஆர் உரு  காதவர்?  ஊர்விடை

     வள்ள   லார்திரு  வாரூர்  மருங்கெலாம் 

     தெள்ளும்  ஓசைத்  திருப்பதி  கங்கள் பைங்

     கிள்ளை  பாடுவ  கேட்பன  பூவைகள்!’’

    என்பது அவர் அருளிய திருப்பாடல். இப்பாடலில் வேதப்  பதங்களைக் கிளிகளும், பசுக்களும் பயிலும் என்று, சங்க இலக்கியமும், சம்பந்தர் தேவாரமும் கூறியதைச் சற்றே மாற்றம் செய்து பாடுகிறார்! திருவாரூரில் இல்லங்களிலும் , வீதிகளிலும், திருக்கோயிலிலும் , புறநகர்ப் பகுதிகளிலும் அடியார்கள் இடைவிடாமல்  சைவத்  திருமுறைப் பதிகங்களைப்    பயில்கிறார்கள், என்று மாற்றி, வேதமும்  திருமுறையும் ஒன்றே என்ற கருத்தை நிலை நாட்டுகிறார்!

    மேலும் ‘வள்ளலார்’ என்று திருவாரூர்த் தியாகேசரைக் குறிப்பது, அவர் தம்மையே தமர்க்கு நல்கும் தியாகத்தைச் செய்தருளுபவர் என்பதை நமக்குத் புலப்படுத்தும். அவ்வூரில் தம்மைக் காதல் தூதுவராக்கிக் கொண்டு இரண்டு முறை திருவாரூர் வீதியிகள் நடந்தருளியவர்! அவர் திருவருட் சிறப்பைப் பாடும் பாடல்கள் நால்வரும், காரைக்காலம்மையாரும்  நல்கிய பத்துப் பத்துப் பாடல்களால் ஆகிய பதிகங்களே, என்கிறார்! முன்னோர் மொழிந்த  கருத்துக்களைக்  காலத்துக்கும்  இடத்துக்கும் ஏற்பச்  சற்றே  மாற்றிப்  பாடிய சேக்கிழாரின் திருமுறைப் பற்றினை இப்பாடல் குறிக்கின்றது!

    =====================================================================13

    ——— சே.பா.ந. – 12 —- sent  on   15/11/’18.

    Share
  • மலையாளம் தமிழ் அகராதி

         தமிழோடு நெருங்கிய தொடர்பு கொண்ட திராவிட மொழிகளில் ஒன்றே மலையாளம்.  இன்று இலக்கியச் செல்வங்களுடன் புதுப் பொலிவு பெற்றுத் திகழும் மலையாள மொழி பண்டைய தமிழ் நாட்டின் மேற்குப் பகுதியான சேர நாட்டில் பேசப்பட்டு வருகிறது.  இதற்குப் பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் போன்ற நூற்களே சான்றாகும்.  மலையாள மொழியின் தொடக்க காலத்தில் தோன்றிய இலக்கியங்களிலும் தமிழின் ஆதிக்கமே மிகுந்துள்ளது.  இம்மொழி தனித்தனியாகப் பிரிந்தாலும் இன்றும் அம்மொழி பேசுவோர் இலக்கணமோ அகராதியோ இன்றி தமிழர் மலையாளத்தையும் மலையாளி தமிழையும் புரிந்துகொள்ளத்தான் செய்கின்றனர்.   இருப்பினும் மொழியின் உள்ளமைப்பில் ஏற்படுகின்ற மாற்றங்களும் பிறதொடர்புகளும் வேறுபடுவதால் செப்பமாக மொழியைப்பயில்வதற்கு இலக்கண நூல்களும் அகராதிகளும் ஏழவேண்டிய தேவை எழுகிறது.  இத்தேவையை நிறைவு செய்யும் வகையில் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மலையாளம் தமிழ் அகராதி ஒன்றை உருவாக்கி 2016 – ஆம் ஆண்டில் வெளியிட்டது.

          மலையாளம் தமிழ் அகராதி உருவாக்கத்திற்கு வித்திட்டவர்கள் இத்துறையின் மேனாள் பேராசிரியர் பெருமக்களாவார்.  அவர்கள் இத்துறையில் பணியாற்றிய காலத்தில் ஆய்வு மாணவர்களைக்கொண்டு சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரையிலான அனைத்து இலக்கியதங்களுக்கும் சொல்லடைவு உருவாக்கி அகராதி தொகுப்பிற்கு வித்திட்டனர்.  அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பேரா. மா . இளையபெருமாள் ஆவார்.  அவர் மலையாள இலக்கண நூல்களைத் தமிழுக்கும்  தமிழ் இலக்கண நூல்களை மலையாளத்திற்கும் மொழிபெயர்த்துள்ளார். மேலும் அவர் மலையாளம் –  தமிழ் , தமிழ் – மலையாளம் அகராதியையும் தயாரித்து வைத்திருந்தார். அது அச்சில் வராமல் போனது. அவரைத் தொடந்து தற்போது பணியாற்றும் பேரா. ப. . ஜெயகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் நான் உள்ளிட்ட துறையின் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் போன்றொரின்  அரிய முயற்சியால் உருவானதே இவ்வகராதி. இதனை கேரளப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை வெளியிட்டுள்ளது.

    அகராதி அமைப்பு

          மலையாளம் – தமிழ் அகராதி வரலாற்றில் இது முதன்மையானது.  மலையாளம் தலைச்சொல்லாக அமைகிறது.  தொடர்ந்து அச்சொல்லுக்காண இலக்கண விளக்கம் , ஆங்கில ஒலிபெயர்ப்பு , தமிழ் விளக்கம் என்ற அமைப்பில் இவ்வகராதி அமைந்துள்ளது. தலைச்சொல் மலையாள சொல்லாக இருப்பதால் மலையாளம் அறியாத அனைவரும் எளிதில் வாசிக்கும் வகையில் ஆங்கில் ஒலிபெயர்ப்பு ( Translitration)  கொடுக்கப்பட்டுள்ளது. பின்வரும் நிலையில் இவ்வகராதி அமைந்துள்ளது.

    இவ்வகராதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைச்சொற்கள் தற்கால மொழிப்பயன்பாட்டிற்கு ஏற்ற முறையிலான இருபதாயிரம் மலையாளச் சொற்கள் தேர்வுசெய்யப்பட்டன. இச்சொற்கள் சப்ததாராவலியில் இருந்தும், மலையளப்பேரகராதியில் இருந்தும் மலையாளச் சொல்தரவகத்திலிருந்தும் எடுக்கப்பட்டவையாகும்.

    இருமொழி அகராதி உருவாக்கச் சிக்கல்களும் தீர்வுகளும்

         ஒருமொழி அகராதி உருவாக்குவதை விட பணிச்சுமையும் குழப்பங்களும் கொண்டதே இருமொழி அகராதி உருவாக்கம்.  இருமொழி அகராதியின் தலையாய நோக்கம் ஒருமொழியிலுள்ள சொற்களைப் பிரிதொரு மொழிச்சொல்லோடு ஒப்புமைப்படுத்திக்க காட்டுவதாகும்.தமிழும் மலையாளமும் ஒரு மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் என்றாலும் அம்மொழிகள் பேசுவோர் இருவேறு சமூகத்தைச் சார்ந்தவர் ஆவர்.  அவர்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், மொழிக்கூறுகள், போன்றவை பல நேரங்களில் சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றன.    உலகமொழிகள் அனைத்திலும் அவ்வவ் மொழிக்குரிய தனித்தன்மைகள் காணப்படத்தான் செய்கின்றன.  பிஞ்சு, காய் போன்ற சொற்கள் ஆங்கிலத்தில் இல்லாதது போல கணினி, பேருந்து போன்ற சொற்கள் மலையாளத்தில் இல்லை. எனினும் மலையாலத்திற்கே உரிய  தனிப்பட்ட சொற்கள் அம்மொழியில் காணப்படத்தான் செய்கின்றன.  சான்றாக,

         மாப்பு சாக்ஷி – என்ற சொல்லிற்கு இணையான  தமிழ் சொல் இல்லை. அதற்கு அகராதியில் ஒரு தொடராகத்தான் விளக்கம் கொடுக்க முடிந்தது. அதாவது ”குற்றங்களைச் செய்து விட்டு கூட இருப்பவரைக் காட்டிக்கொடுத்து சாட்சி கூறுபவன்”. எனபொருள் விளக்கம் கொடுக்கப்பட்டது.

         கேரளப் பண்பாட்டோடு தொடர்புடைய சில பண்பாட்டுச் சொற்களுக்கு விளக்கம் தரும்போதும் சிக்கல்கள் ஏற்பட்டது.  சான்றாக,

    கை நீட்டம் – என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் இல்லை. அதற்கு “ விசுப்பண்டிகையின் போது கொடுக்கப்படும் பரிசுப்பொருள் ‘ என் விரிவான முறையில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

    அஞ்சாம்புரை – நம்பூதிரிப் பெண்ணை விசாரணைக்காக வைக்கப்படும் அறை

    படிப்புர-  வெளிப்புறக் கதவுள்ள வீடு.  இச்சொற்கள் கேரளப் பண்பாட்டோடு தொடர்புடைய சொற்களாகும்.

         மலையாளம் தமிழ் அகராதி உருவாக்கத்தின்போது தமிழ் மலையாள ஒலியொற்றுமையுடைய சொற்களுக்கு பொருள் எழுதும்போதும் சிக்கல்கள் தோன்றின.

    கழி- மலையாளத்தில் சாப்பிடுதல் என்னும் பொருளில் வரும். தமிழில் வெளியேற்றுதல், மலம் கழித்தல் என்னும் பொருளில் வரும். அதேபோன்று  அவசரம்- என்ற சொல் மலையாளத்தில் சந்தர்ப்பம் வாய்ப்பு என்ற பொருளில் வருகிறது. தமிழில் சீக்கிரம் என்ற பொருளில் வருவதைக்காணலாம்.

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

    சான்றோன் எனக்கேட்ட தாய்  – என்ற குறளுக்கேற்ப

         மலையாளம் தமிழ் அகராதி உருவாக்கத்தின் போது பல்வேறு சிக்கல்கள் தோன்றினும் இன்று இருமொழியாளர்களுக்கும் பயன்படும் விதத்தில் அமைந்திருப்பது மகிழ்ச்சியே.

    ஆசிரியர்:-

    முனைவர் ஹெப்சி ரோஸ் மேரி. அ

    உதவிப்பேராசிரியர், கேரளப் பல்கலைக்கழகம்

    Share
  • முடுகா மொழியின் பெயர்ச் சொற்களில் பழந்தமிழ் வழக்காறுகள்

    -முனைவர். த. கவிதா

    உலக நாகரிகங்களுள் பழைமை மிக்க நாகரிகமாக விளங்குவது  திராவிட நாகரிகம். அந்நாகரிகத்திற்குரிய  மக்கட் தொகுதியினர்  ஒரு காலத்தில் பாரதம் முழுக்கப் பரந்து வாழ்ந்திருந்தனர்  என்பது அறிஞர்களின் கணிப்பு. உலக மொழிக்குடும்பங்களில் ஒன்றாக விளங்கும் திராவிடமொழிக் குடும்பத்தில் தலைமை சான்ற மொழியாகத் திகழ்வது தமிழ் மொழியே. அத்தமிழ் மொழியிலிருந்து பல கிளை மொழிகளும் தனிமொழிகளும் உருவாகியிருக்கின்றன. தமிழின் கிளை மொழிகளில் பல பழங்குடியினரின் மொழிகளும் அடக்கம். சில பழங்குடியினரின் மொழிகள் தனித்தகுதி பெறும் அளவுக்கு மாறியிருக்கின்றன. எனினும் அவற்றில் பழந்தமிழ்ச் சொற்கள் சில அவ்வாறே வழங்கப் படல் உண்டு. பல சொற்களோ சிற்சில நிலைகளில் மருவி வழங்கும் சூழலில் வழக்கிலுள்ளன. இத்தகு நிலையில் கேரள மாநிலத்தின்  பாலக்காடு மாவட்டத்திலுள்ள  அட்டப்பாடி மலைப் பகுதிகளில்  வாழ்ந்து கொண்டிருக்கும் முடுகர் இன மக்களின்  பேச்சு மொழியிலும் பல பழந்தமிழ்வழக்காறுகள் இன்றும் நிலவி வருவதைப் பார்க்கின்றோம்.

    பழந்தமிழகத்தின் ஒரு பகுதியாக விளங்கிய கேரளத்தில் உள்ள மலைப்பகுதிகளில்  முடுகர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  பிற மொழிக் கலப்பிற்கும் பிற நாகரிகக் கலப்பிற்கும் அதிகமாக இடம் தராமல்  அவர்கள்  வாழ்ந்து கொண்டிருப்பது சிறப்பு. எனவே  தங்களுக்கான தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் இனமாக அவர்களை அடையாளம் காண முடிகின்றது. அம்மக்கள் பேசும் மொழியானது பழந்தமிழோடு மிக நெருங்கிய தொடர்புள்ள மொழியாக விளங்குவதை அறிய முடிகின்றது.  சான்றுக்குச் சில பெயர்ச் சொற்கள் மட்டும்  கீழே தரப்படுகின்றன.

    தமிழ் மொழி
    முடுகா மொழி

    உயர்திணைப் பெயர்கள்

    தாய்                                                                      அவ்வ, அவ்வெ, அப்ப(abba)

    தந்தை                                                                   அம்ம, அம்மெ

    என்தந்தை                                                               தந்தெ

    குழந்தை                                                                   பிள்ளெ

    கணவன்                                                                   ஆளெ(ன்)

    மனைவி                                                                    பெண்டு

    ஆண்குழந்தைகள்                                               ஆம்பிள மக்கா

    பெண்குழந்தைகள்                                               பொம்பிள மக்கா

    அஃறிணைப் பெயர்கள்

    மான்                                                                             மா

    அணில்                                                                       அணாலு

    மலையணில்                                                           பெளிலு (beLilu)

    கறையான்                                                                 சிதாலு

    முயல்                                                                             முசாலு

    காற்று                                                                            காத்து, காலு

    மேகம்                                                                            மஞ்சு

    வீடு                                                                                 கூரெ

    ஊர்                                                                                 ஊரு

    மலை                                                                              மலெ, வரெ

    குகை                                                                               அளெ

    கீரை                                                                               அடா

    நகம்                                                                                ஒயிறு, நகா

    உரல்                                                                                உராலு

    உலக்கை                                                                      உலாக்கெ

    சோறு                                                                             சோறு, அன்னம்

    தேன்                                                                               தேனு

    மலைத்தேன்                                                              பெருந்தேன்

    வானம்                                                                           வானு

    உனக்கு                                                                           நினக்கு

    கிழங்கு                                                                          கிகாங்கு

    முதலான சில முடுகா மொழிப் பெயர்ச்சொற்களை நாம் கண்ணுறும்போது  அவை பழந்தமிழின்  பல சொற்களையும் சில வடிவ மாற்றத்தோடு வழங்கி வருவனவாகக் காணப்படுகின்றன. அதனால் பழந்தமிழின் ஒரு வட்டார வழக்கு மொழியாக இம்மொழியினை இனங்காண வழியுண்டு.

    முடுகா மொழியில் “தாய்” என்ற உறவு முறைச் சொல் “அவ்வ”  அல்லது “ அப்ப” (abba)  என்று இடம் பெறுகின்றது. இச்சொல் செவ்விலக்கியங்களில் ஒன்றாகிய மணிமேகலையில் பதிவாகியுள்ளது.

    “அவ்வையர் ஆயினீர்: நும்அடி தொழுதேன். (மணி–பாத்திரம் பெற்ற காதை – 137)

    என்று மணிமேகலை கூறுகின்ற கூற்றில் ”தாய்” என்னும் பொருளமைந்த “அவ்வை” என்ற சொல் இடம் பெறுவதைப் பார்க்கின்றோம்.  இச்சொல் முடுகர் நாவில் ஒலிக்கப்படும்  பொழுது  சிற்சில சமயங்களில் “அப்ப” (abba) என்றும் மாறுகின்றது. இங்கு வகரம் ஒலிப்பு ஒலியாகிய பகரமாக (ba) மாறியொலிக்கின்றது. உச்சரிப்பு எளிமை கருதி இத்தகைய மாற்றத்தினைப் பெறுகின்றது. கீழிதழையும் மேற்பல்லையும் பொருத்தி உச்சரிப்பதைவிட இரு இதழ்களையும்  பொருத்தி உச்சரிக்கும் செயல்  எளிமையாக அமைந்து விடுகின்றது. எனவே பல வகரச் சொற்களும் இம்மொழியில் இத்தகைய மாற்றத்தினை அடைவது இயல்பாகி விடுகின்றது.

     முடுகர் இன மக்கள் தந்தையை விளிக்கும் போது ”அம்ம” என்கின்றனர். ஆனால் பிறரிடம் தந்தையைப் பற்றிப் பேசும் போது “என்னு தந்தெ” என்று கூறுவதுண்டு. இச்சொல் வழக்காறும்  சங்ககாலத்திற்குரியதே.

    “குறுக வாரல் தந்தை” (அகநா – 195) என்ற அகநானூற்று  அடியினில்  அச்சொல் இடம்பெறுவதுண்டு.

    பறவைகளின்  குஞ்சுகளை தொல்காப்பியம்  “பிள்ளை” என்று குறிப்பதுண்டு.

    “அவற்றுள் பார்ப்பும் பிள்ளையும்  பறப்பவற் றிளமை”(தொல் 1503)

    என்பது நூற்பா. ஆனால் முடுகர் மொழியில் அச்சொல் உயர்திணையில் குழந்தையினைச் சுட்ட வரும்  சொல்லாக அமைகின்றது. குழந்தையை அம்மக்கள் “பிள்ளெ” என்பார்கள். மட்டுமின்றி பன்மை நிலையில் குழந்தைகளைப் பற்றிப் பேசும்போது “மக்கள்”, “மக்களு”  என்ற சொல் முடுகரிடையே புழக்கத்திலுள்ளது.

       ”…………..வடமொழிப் பெயர் பெற்ற
        முகத்தவன் மக்களுள்  முதியவன் புணர்ப்பினால்” (கலித் – 25 – 2)

    என்னும் கலித்தொடரில்  பன்மையில் குழந்தைகளைச் சுட்டுவதற்கு  ”மக்கள்” என்ற சொல் இடம்பெறுவதைப் பார்க்கின்றோம்.

    முடுகர்கள் கணவனை “ஆளெ(ன்) என்றும் மனைவியை “பெண்டு” என்றும் கூறுவர். இச்சொற்கள்  சங்க இலக்கியங்களில்  காணப்படுவது கண்கூடு. திருமுருகாற்றுப் படையில்  முருகனைச் சிறப்பித்துப் பேசும் நக்கீரர்  “இசைபேர் ஆள”(திருமுரு – 270) என்று விளிப்பதுண்டு. இங்கு ”உரியவன்”, ”ஆள்பவன் ” என்ற பொருள்களில்  “ஆளன்” என்ற சொல் இடம்பெறுகின்றது. ஆகவே ‘இல்லத்தை ஆள்பவன்’, ’மனைவிக்கு உரியவன்’ என்ற பொருள்களில் முடுகர்கள் கணவனை  ‘ஆளெ(ன்)’ என்ற சொல்லால் புலப்படுத்துகின்றார்கள் என்று  கருதலாம்.  சங்கத் தமிழர் அரசனின் மனைவியைக் குறிப்பதற்கு “பெருங்கோப்பெண்டு” என்று மொழிந்திருக்கின்றார்கள் என்பதை நாம் அறிவோம். எனவே முடுகர்களும் மனைவியை ”பெண்டு”  என்ற சொல்லால்  வழங்குவது கவனிக்கத்தக்கது. .

    மான் என்னும் உயிரினம் சங்ககாலத்தில்  “மா” என்றழைக்கப் பட்டதுண்டு. முடுகர்கள்  இன்றளவும்  மானைச் சுட்டுவதற்கு “மா” என்பதனையே  வழக்கத்தில் வைத்திருக்கின்றார்கள். “மாப்பிணை” (புறநா – 2) என்றவாறு அமையும் புறநானூற்றுச் சொல் மான்பிணையைச் சுட்டுவதற்கு வந்ததாக அமைகின்றது. ”அணில்” என்னும் சிறுபிராணி முடுகர்களால் “அணாலு” என்று கூறப்படுகின்றது. மலையணிலைக் குறிக்கும்போது “பெளிலு” (beLilu) என்பர்.

    “அணிலாடு முன்றில்” (குறுந் – 41)

    ”கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை” (அகநா – 12)

    என்ற  பழந்தமிழிலக்கியத்  தொடர்களில்  அணில், வெளில் என்ற சொற்கள் இடம்பெறுவதைப் பார்க்கின்றோம். இச்சொற்கள்

    அணில் – அணிலு – அணலு –  அணாலு என்றும்

    வெளில் – வெளிலு – பெளிலு (beLilu) என்றும் மருவி முடுகர்களால் வழங்கப்படுகின்றன. இங்கு  முயற்சி எளிமை கருதி பல்லிதழ் ஒலியாகிய வகரத்தை ஒலிப்பில் ஒலியாகிய பகரமாக(ba)  மாற்றிவிடுகின்றார்கள். இத்தகு நிலையினை மன்னான், இரவாளர், இருளர் போன்ற இதர பழங்குடியினரின்  மொழிகளிலும் காணலாம்.

    “கறையான்” எனும் சிறு உயிரினத்தை முடுகர் இன மக்கள் “சிதாலு” என்பர். இச்சொல் வழக்காற்றினை  “முது  சுவர்க் கணச்சிதல் அரித்த” (சிறுபாண் – 133) என்றவாறு சிறுபாணாற்றுப் படையில் காண்கின்றோம். இங்கு  சிதல் – சிதலு – சிதாலு என்று முயற்சி எளிமையின் பொருட்டு மொழியிடை அகரம் ஆகாரமாக நீண்டொலிக்கின்றது. ”முயல்” என்ற பெயர்ச் சொல்லும் இத்தகு மாற்றத்திற்கு உள்ளாவது உண்டு.    “முயல் சுட்ட வாயினும் தருகுவோம்” (புறநா – 319) என்னும் தொடரில் இடம்பெறும் ”முயல்”  என்ற சொல் முடுகா மொழியில் “முசாலு” என்று மாற்றமடைகின்றது. தமிழைப் பொறுத்த வரையில் பேச்சு வழக்கில் மொழியிடை யகரம் சகரமாக மாற்றம் பெறுதலுண்டு. பங்கயம் – பங்கசம் என்று ஒலிக்கப் பெறுதலைக் காணலாம். அவ்வாறே இங்கு   முயல் – முசல் – முசால் – முசாலு என்று மாற்றமடைவதைப் பார்க்கின்றோம். முடுகர்கள் வீட்டினை “கூரெ” என்று சுட்டுவர். இச்சொல் பழந்தமிழிலக்கியங்களில் இடம் பெறுவதுண்டு. ”குறுங் கூரைக் குடிநாப்பண்” (பட்டினப் – 81)  என்பார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.  மலையினை சங்ககால மக்கள் “வரை” என்றும் வழங்குவர்.  “பனிபடு நெடு வரை” (புறநா – 6) என்னும் தொடரே அதற்குச் சான்று. அச்சொல்லினை முடுகர் இன மக்கள் “வரெ” என்று கூறுவர்.

    காற்றினைக் “காத்து”, “காலு” என்ற இருநிலைகளில் கூறுவது முடுகர் இன மக்களின் வழக்கமாகும். அவ்வாறெ “மேகம்” என்பதனை “மஞ்சு” என்ற  சொல்லால் அம்மக்கள் கூறியமைவதுண்டு. “குகை” என்பதோ “அளெ” என்ற சொல்லால்  குறிக்கப்படும்.

            “காற்று என்னக் கடிது” (மதுரைக் 52)

    “கால் உணவாக” (புறநா – 43)

    “அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன” (அகநா – 71)

    “அளைச் செறி உழுவை” (புறநா – 78)

    போன்ற சங்கத் தொடர்களில் காற்று, கால், மஞ்சு, அளை முதலான சொற்கள் இடம் பெறுகின்றன. அச்சொற்களே சிறு அளவிலான மாற்றங்களுடன் முடுகா மொழியில்  வழங்கப்படுகின்றன. அங்ஙனமே

              “உரற்கால் யானை” (குறுந் – 232)

    “பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை” (குறுந் – 238)

    என்ற சங்கத் தொடர்களில் காணலாகும்  “உரல்”, ”உலக்கை”  என்பன முறையே “உராலு”, ”உலாக்கெ” என்ற நிலையில் முடுகர் மொழியில்  சற்று நீண்டு ஒலிக்கப் படும் சொற்களாக மாற்றமடைகின்றன.

    குறுந்தொகைத் தலைவி மலைத் தேனைப் பற்றிக் கூறும்போது “பெருந்தேன்” என்று சிறப்பித்துக் கூறுவாள்.  “பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே” (குறுந் – 3) என்பது  குறுந்தொகைத் தலைவியின் கூற்று. முடுகர் மொழியிலும் மலைத்தேனைக் குறிப்பதற்கு ”பெருந்தேனு” என்ற சொல்லே  பயன்பாட்டில் உள்ளது.

    “நகம்” என்னும் சொல் முடுகர் மொழியில் “ஒயிரு” , நகா” என்ற சொற்களால் வழங்கப்படுகின்றது.  ”உகிர்” என்ற சங்ககாலச்சொல் உகிர் – ஒகிர் – ஒகிரு – ஒயிரு என்று முடுகர் மொழியில் மருவியிருக்க வேண்டும். ”வள் உகிர்க் குறைத்த” (சிறுபாண் – 136) என்ற பத்துப்பாட்டுத் தொடரில்  ”உகிர்”  என்ற சொல்  நகத்தைக்  குறிப்பதாக  அமைகின்றது. அவ்வாறே “கீரை”  என்ற சொல்லின் வேறு வடிவமான “அடகு” என்னும் சங்கச் சொல் முடுகர் மொழியில் “அடா”  என்ற நிலையில் காணப்படுகின்றது.  இங்கு ஈறு மறைந்து  ஈற்றயல்  நீண்டு அமைந்த சொல்லாக மாறி விடுவதை உணரலாம். ”படப்பை கொய்த அடகு” (புறநா – 140)  என்று புறநானூற்றில்  அச்சொல் இடம்பெறுவதுண்டு.

    ”சோறு” என்ற சொல் சங்க காலத்தில் உணவைக் குறித்த சொல்லாக  வழங்கப்பட்டது. முடுகர்களும்  உணவினைக் குறிப்பதற்கு  “சோறு” என்ற வழக்காற்றினையே பயன்படுத்துகின்றனர். ”சோறு வாக்கிய கொழுங்கஞ்சி” (பட்டினப் – 44) என்பது பட்டினப்பாலைத் தொடராகும்.

    ”வானம்” என்பது சங்ககாலத்தில்  “வான்” என்றும் குறிக்கப்பட்டது.  “வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய” (அகநா – 10) என்னும் அகநானூற்றுத் தொடரில் அச்சொல் இடம்பெறுதல் உண்டு. அச்சொல் முடுகர்களால் “வானு” என்றவாறு  ஈற்று மெய்யின் மீது உகரம் ஏறிய நிலையில்  வழங்கப்படுகின்றது.  “உனக்கு” என்னும் தற்காலத் தமிழ் வடிவம் முடுகர் மொழியில் “நினக்கு” என்று சுட்டப்படுகின்றது. இச்சொல் வழக்காறு சங்ககாலத்திற்குரியதாகும்.

    “நினக்கே அன்றுஅஃது  எமக்குமார் இனிதே” (ஐங்குறு – 46)

    என்னும் சங்க இலக்கியத் தொடரில்  அச்சொல் இடம்பெறுவதைக் காணலாம். ”கிழங்கு” என்னும் தமிழ்ச்சொல் முடுகா மொழியில் “கிகாங்கு” என்று சற்று மருவிய நிலையில் காணப்படுகின்றது.  உச்சரிப்பு எளிமை காரணமாக ழகரத்தைத் தவிர்க்கும் பொருட்டு இவ்வாறு மருவியிருக்கின்றது என்பது புலனாகின்றது. இம்மொழியில்  ழகர ஒலி வழக்கிலில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    “கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி” (புறநா – 168) என்னும் தொடரில் ”கிழங்கு” என்னும் சொல் இடம்பெறுவதைக் காணலாம்.

    மேற்கண்ட சான்றுகளால் முடுகாமொழியின் பெயர்ச்சொற்கள் பழந்தமிழின் பெயர்ச் சொற்களோடு நெருங்கிய உறவு கொண்ட சொற்களாக உள்ளன  என்று உறுதியாக மொழியலாம்.  முடுகா மொழியின் வினைச்சொற்களும் இத்தகைய நிலையினவே என்பது இதனால் பெறப்படும். அதனால் பழந்தமிழின் வட்டார வழக்கு  மொழிகள்  இன்னும் மறைந்து விடவில்லை என்பது தெளிவாகின்றது. எனவே இத்தகு பழங்குடியினர் மொழிகளை ஆய்ந்துணர்ந்து பழந்தமிழின் இயல்பினை உணர்ந்தறிவது மொழியறிஞர்களின் கடமையாகின்றது.

    *****

    துணை நின்ற நூல்கள்:

    1. அகத்தியலிங்கம். ச , திராவிட மொழிகள் , மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை -08.
    2. கருணாகரன். கி , சமுதாய மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், புதுத்தெரு, சிதம்பரம் – 1.
    3. சண்முகம் பிள்ளை.மு. (ப. ஆ), தொல்காப்பியம் –பொருள்- இளம்பூரணம், முல்லை நிலையம், மண்ணடி, சென்னை – 1.

    4..தண்டபாணி. துரை (உ.ஆ).  2010. மணிமேகலை  உமா பதிப்பகம்                                                                            மண்ணடி, சென்னை-1.

    1. பாலசுப்பிரமணியன்.கு(த.ப.ஆ), எட்டுத்தொகை& பத்துப்பாட்டு நூல்கள் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2004.

    *****

    கட்டுரையாளர் பணியாற்றுவது –  தமிழ்த்துறை மற்றும் ஆய்வு மையம்,
    அரசுக்கல்லூரி சித்தூர், பாலக்காடு, 678104.                                         அலைபேசி: 9846741558

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 134

    நிர்மலா ராகவன்

     

    எப்படியெல்லாம் கையாளுகிறார்கள்!

    `பெண் என்றால் ஆணுக்கு அடங்கி இருக்கவேண்டும்!’

    பெண்கள் கல்வியறிவு பெறுவதே தகாத காரியம் என்றிருந்த காலத்தில் எவரெவரோ எழுதி வைத்துவிட்டுப்போனது. ஆணாதிக்கத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் தற்காலத்திலும் நம்புவது – தமக்குச் சாதகமாக இருப்பதால்.

    இன்று பெண்களும் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். உத்தியோகம் வகித்து, சொந்தக்காலில் நிற்கவும் முடிகிறது. அவர்களை இப்போது நேரிடையாக எதிர்த்தால், ஆத்திரம்கொண்டு எதிர்ப்பார்களே! அதனால், அவர்களே உணராதபடி கையாள்வது வழக்கமாக ஆகிவிட்டது.

    பிறரைக் கையாள்வதற்கு எத்தனை எத்தனையோ வழிமுறைகள்!

    1   போலியான புகழ்ச்சிமூலம்.

    எந்தப் பெண்ணும், `நீ எவ்வளவு அழகு!’ `உன்னைமாதிரி வெகுளித்தனமாக சிரிப்பவர்களை இப்போது எங்கே பார்க்க முடிகிறது!’ என்றெல்லாம் பலவாறாகப் பாராட்டினால், உடனே மயங்கிவிடுவாள்.

    2   வேறு எந்த கவனமும் இல்லாததுபோல் அவளையே கூர்ந்து கவனிப்பது. (பல நாட்டுப் பெண்களும் இதற்குத்தான் மயங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்).

    3   போலியான கரிசனத்தால்.

    `இந்த இளம் வயதில் உனக்கு இவ்வளவு பொறுப்புகளா!’

    `நீ வயதுக்குமீறிய  புத்திசாலி. அதனாலேயே உன்னை ஒருவருமே புரிந்துகொள்வது கிடையாது, இல்லையா?’

    4   இனிமையான பேச்சு.

    ஒரு பெண்ணுக்கு எந்த விஷயத்தில் ஆர்வம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அதைப்பற்றியே பேசி, அவள் நம்பிக்கையையும், நட்பையும் பெறுவதற்கு ஒரு நல்ல வழி இது.

    5   ஒருவரது மனதைப் புண்படுத்திவிட்டு, அளவுக்கு மீறி, திரும்பத் திரும்ப மன்னிப்பு கோருவது.

    6   ஒரு பெண் வேடிக்கை என்றெண்ணி எதையாவது ரசித்துக் கூறுகையில், பெரிதாகச் சிரிப்பது.

    7   பரிசுகள் வழங்குவது.

    (இவற்றில் சில வழிகளைப் பெண்களும் கையாளக்கூடும்).

    `நான் சொன்னதைக் கேட்க யார் இருக்கிறார்கள்!’ என்று கழிவிரக்கத்துடன் பேசி, பச்சாதாபத்தை உண்டுபண்ணுவது.

    8   கத்துவது. இம்முறை பலிக்காதுபோனால், அழுவது. (சிறு குழந்தைகளுக்கு இத்தன்மை இயற்கையாகவே அமைந்திருக்கிறது).

    வாழ்க்கைத்துணையோ, நண்பர்களோ, ஒருவரின் நம்பிக்கையைப் பெற்றபின், தமக்குச் சாதகமானதை சூழ்ச்சி செய்தாவது படியவைக்கிறார்கள் பலரும். இலக்கானவர்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயல் புரிய வைக்கிறார்கள்.

    கதை

    சிவானி பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, உயர்கல்வி படித்தபோது காதலனாக அமைந்தவன் ராஜா. காதல் மயக்கத்தில், அவனுக்குப் போதைப்பழக்கம் இருந்தது அப்போது அவளுக்குத் தெரியவில்லை.

    சில மாதங்கள் உல்லாசமாகக் கழிந்தன.

    `உனக்கு உண்மையில் என்மேல் காதல் இருந்தால், நான் சொன்னதைக் கேட்பாய்,’ என்று ராஜா வற்புறுத்த ஆரம்பித்தான். முதலில் மறுத்த சிவானி, அவன் பேச்சில் மயங்கி, ஓரிரு முறை அவனுடன் சேர்ந்து போதை மருந்தை உடலில் செலுத்திக்கொண்டாள். விரைவிலேயே அப்பழக்கத்திலிருந்து விடுபட முடியாது போயிற்று.

    பணத்திற்கு என்ன செய்வது?

    அதற்கும் ஒரு வழி காட்டினான் காதலன்.

    போதை மருந்தை விற்பனை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாள் சிவானி.

    `புத்தி கெட்டுப்போய் அவனோட சேர்ந்து, என் வாழ்க்கையையே பாழடிச்சுக்கிட்டேன்!’ என்று கதறினாள் சிவானி. (மலேசிய தொலைகாட்சியில் பார்த்தது).

    பிறரைத் தம் வசப்படுத்த விரும்புகிறவர்கள்  தாமே சிறந்தோங்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் பிறரை ஏளனம் செய்தும், அச்சமுறுத்தியும் அவர்களுக்குத் தம்மேலேயே சந்தேகம் எழச் செய்துவிடுவார்கள்.

    `எனக்குத் தெரிந்துவிட்டது. உனக்கு யாரோ காதலன் இருந்திருக்கிறான்!’ என்று மிரட்டி மனைவியின் பணிவைப் பெற முயற்சிப்பார்கள் சிலர். பழி உண்மையாக இல்லாவிட்டாலும், பெண்ணுக்கு அச்சமும் துக்கமும் எழும்.

    பொறுக்க முடியாது அவள் எதிர்த்தால், சாமான்களைத் தூக்கிப்போட்டு உடைத்தல். `விவாகரத்துதான் ஒரே வழி!’ என்று மிரட்டுவான்.

    குடும்ப அமைதி கெடுமே, குழந்தைகள் அஞ்சுவார்களே என்று பணிந்துவிடுகிறாள் பெண்.

    `நீங்கள் ஓயாமல் என்னைக் கட்டுப்படுத்துகிறீர்கள்!’ என்ற எதிர்ப்பு எழுந்தால், அந்தக் குற்றச்சாட்டை மறுப்பதும் ஒரு கலைதான்

    லாவகமாக பேச்சை மாற்றக்கூடும்.

    `நான் சிறு வயதில், உன்னைப்போல் மகிழ்ச்சியாக இருக்கவில்லை!’ (அந்தஸ்து வித்தியாசத்தில் மணம் புரிந்துகொள்பவர்கள் கையாளும் முறை).

    வலிய வரவழைத்துக்கொண்ட அலுப்பு: `உனக்கு என்னை ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்!’

    கதை

    “உனக்குக் கடையில் இருப்பதை எல்லாம் வாங்கிவிட வேண்டும்!”

    பாஸ்கரன் கத்தியது எல்லாருக்கும் கேட்கும்படி அமைந்தது. அவன் தன் மனைவியைத்தான் வார்த்தைகளால் தாக்கினான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கவில்லை.

    “எனக்கென்று வாய்த்தாயே! அடிமுட்டாள்!” என்ற சீறல் வேறு!

    முகம் சிறுக்க, தாரா சுற்றுமுற்றும் பார்த்தாள். அனைவரும் எதுவும் காதில் விழாததுபோல் தத்தம் காரியத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் அந்தப் பேரங்காடியில்.

    வீட்டுக்கு வந்ததும், அழுகையுடன், ஒரு பொது இடத்தில் கணவன் தன்னை அவமானகரமாக நடத்தியதை பதின்ம வயது மகளிடம் முறையிட்டாள் தாரா.

    “ஒன்றைப் பத்தாக்குவதே இவள் வேலை! சும்மா சொல்கிறாள்,” என்று சமாளித்தான் பாஸ்கரன்.

    மனைவியிடம், “நீயே ஏதேதோ கற்பனை செய்துகொள்கிறாய்! நான் எங்கே அப்படிச் சொன்னேன்!” என்று அப்பாவித்தனமாகக் கூற, அவளுக்குக் குழப்பம் உண்டாகியது.

    பல முறை அப்படியே நடக்க, தாராவின் பொறுமை மீறியது. “இன்னொரு முறை நீங்கள் அப்படி நடந்தால், நானும் அங்கேயே பதிலுக்குக் கத்துவேன்!” என்று மிரட்டினாள்.

    அடுத்த முறை, அவள் ஒவ்வொரு சாமானைக் கையில் எடுக்கும்போதும், `இது எதற்கு? அநாவசியம்!’ என்று பாஸ்கரன் ஆட்சேபிக்க, அவள் வாங்கவில்லை. (அவர்களுக்குப் பணப்பிரச்னை கிடையாது. அதிகாரம் செய்பவன்தான் ஆண் என்ற மனப்பான்மை கொண்ட மனிதர்களுள் ஒருவன் பாஸ்கரன்).

    “சாப்பிட நொறுக்குத்தீனி ஒன்றுமே இல்லையே1” என்று குறைப்பட்டபோது, “எதுவுமே வாங்காதே என்று நீங்கள்தானே சொன்னீர்கள்? எப்படிப் பண்ணுவது?” என்று தாக்கினாள் மனைவி.

    பயம், மரியாதை, கலாசாரம் என்று ஒரேயடியாக விட்டுக்கொடுத்துவிட்டால், நம்மையே நம்மால் மதிக்க முடியாது போகலாம். அல்லது, நம் அதிர்ஷ்டத்தைக் குறை கூறிக்கொண்டே இருப்போம்.

    முடிவெடுப்பது உன் கையில்தான்!

    சில சமயம், நண்பர்களோ, உறவினர்களோ, `நீ இதுதான் செய்யவேண்டும், இப்படித்தான் செய்யவேண்டும்!’ என்று வற்புறுத்துவார்கள். சாப்பாட்டு சமாசாரமோ, உடை வாங்குவதோ எல்லாவற்றிலும் அவர்களின் குறுக்கீடு இருக்கும்.

    நம் உணர்வுகளைவிட அவர்களது உணர்வுக்கு எதற்காக அதிக மதிப்புக் கொடுத்து நடக்கவேண்டும்?

    (விருந்தோம்பல் என்ற பெயரில் நம்மை அளவுக்குமீறி சாப்பிட வைத்து, மறுநாள் வயிற்றுக்கோளாறால் அவதிப்பட வைப்பவர்கள் சிந்திப்பார்களா?!)

    Share
  • கம்பனின் படைப்பில் கைகேயியின் மனம்

    -முனைவர் த. மகாலெட்சுமி

    கம்பராமாயணத்தில் தசரதன் என்ற அரசன் அயோத்தியை ஆண்டு வந்தான். அவனுக்கு கோசலை, கைகேயி, சுமத்திரை என்ற மூன்று மனைவியர்கள் இருந்தனர். எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அதனால் தசரதன் பெரிதும் வருந்தினான். யாகங்கள் பல செய்தான். யாகங்களின்  பயனாக அவன் மனைவியர் மூவரும் கருவுற்றனர். தசரத‌னி‌ன் முதல் மனைவி கோசலைக்கு திருமால் இராமராகப் பிறந்தார். இரண்டாம் மனைவி கைகேயிக்கு பரதன் பிறந்தான். மூன்றாம் மனைவி சுமத்திரைக்கு இலக்குவன், சத்துருக்கன் என்ற இருவரும் பிறந்தனர். தசரதன் தம் மக்கள் நால்வரையும் குலகுருவாகிய வசிட்டரிடம் கல்வி கற்கச் செய்தான். அவர்கள் நால்வரும் கல்வி கேள்விகளிலும், போர்ப்பயிற்சிகளிலும் சிறந்து விளங்கினர். கைகேயி ஒருமுறை போரில் தசரத மன்னனின் உயிரைக் காப்பாற்றினாள். அதற்குப் பரிசாக தசரத மன்னர் கைகேயி விரும்பும் வரங்களை அளிப்பதாக வாக்களித்தார். இந்த வரங்களின் துணையோடு, இராமன் பட்டம் சூடும் வேளையில் கைகேயி, கூனியின் தூண்டுதலால் ஆட்சிப் பொறுப்பை தன் மகன் பரதனுக்கும், பதினான்கு ஆண்டு வனவாசத்தை இராமனுக்கும் பெற்றுத் தந்தாள். இத்தகைய பாத்திரமேற்றிருக்கும் கைகேயி பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.

    கைகேயியின் பிறப்பு

    கைகேயியைப் பற்றிப் பலரும் பல்வேறு விதமாகப் பேசுகின்றனர். இவளை ஏசுபவர்களும் உண்டு. உத்தமமான கைகேயியைப் பற்றிய உண்மையான தகவல் இதுதான்! துருபதன் மகள் திரௌபதி. சனகன் மகள் சானகி. பாஞ்சாலன் மகள் பாஞ்சாலி என்பதைப் போல, கேகய மன்னன் மகள் என்பதால் கைகேயி என்று பெயரே தவிர, கைகேயிக்குப் பெற்றோர் வைத்த பெயர் அதுவல்ல. கேகய தேசத்தின் மன்னர் அச்வபதி. தலைசிறந்த தர்மவான். எல்லாக் கலைகளிலும் மிகுந்த அனுபவசாலி. வைச்வானர என்பது வித்தைகளில் மிகவும் தேர்ந்த வித்தை. அதில் அவர் தேர்ச்சி பெற்றவர். அத்துடன் சரசுவதி தேவியை உபாசிக்கும் பக்தர். ஒரு நாள் பூஜையை முடித்து எழுந்தார் மன்னர் அச்வபதி. எதிர்பாராத விதமாகக் கையில் வீணையுடன் பால வடிவத்தில் சரசுவதிதேவி தரிசனம் தந்தாள். ஆனந்தத்தின் எல்லையை அடைந்த மன்னர், அம்பிகையை வலம் வந்து துதித்தார். தன் உள்ளத்தில் இருந்ததை வெளிப்படுத்தினார். அம்மா! உனக்குச் சமமான குழந்தையை எனக்குத் தந்தருள வேண்டும். இதுவே நான் கேட்கும் வரம்! என வேண்டினார்.

    சரசுவதி சிரித்தவாறு, எனக்குச் சமமாகவா.. சரிதான்! நானேதான் உனக்குப் பெண்ணாக அவதரிக்க வேண்டும். நீ ஒன்று செய். ஐப்பசி மாதப் பவுர்ணமி அன்று சாரசுவத இஷ்டீ என்ற யாகம் செய். நான் அந்த யாகத் தீயில் தோன்றி, உனது வீட்டில் உன் குழந்தையாகவே வளர்வேன்! என்று சொல்லிவிட்டு மறைந்தாள் சரசுவதி. ஐப்பசி மாத பவுர்ணமியில் சரசுவதி சொன்ன சாரசுவத இஷ்டீ யாகத்தை முறைப்படி செய்தார் அச்வபதி. கௌதம முனிவர், முனிவர்களுக்குத் தலைவராக இருந்து யாகத்தை நடத்தினார். மாலை நேரம். யாக அக்னியில் இருந்து சரசுவதிதேவி வெளிப்பட்டாள். தங்க மயமான பாத்திரத்தில் நிறைந்திருந்த அவிர்பாகத்தை (யாகத்தீயில் தேவர்களுக்காகப் போடப்படும் சாதம்) சுட்டிக் காட்டியபடி, அச்வபதி மன்னா! உனது அபரிமிதமான அன்பின் காரணமாக இந்த அவிர்பாகம் மிகவும் இனிமையாக உள்ளது. இதை நான் மட்டும் ஏற்றால் சரியாகாது. இதோ, இங்குள்ள தேவர்கள் அனைவருக்கும் இந்த அவிர்பாகத்தைப் பங்கிட்டுக் கொடு! அப்போதுதான் எனக்கு திருப்தி உண்டாகும்! என்றாள். அவிர்பாகம் அங்கிருந்த தேவர்களுக்கெல்லாம் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது.

    தங்களுக்குக் கிடைத்த அவிர்பாகத்தை (சாதத்தை) சிவபெருமானுக்கு சமர்ப்பணம் செய்தார்கள் தேவர்கள். இது ஏன்? சிவபெருமானுக்கு அவிர்பாகம் தராமல் அவரை விலக்கிவிட்டு யாகம் செய்த தட்சனும், அதில் கலந்து கொண்ட தேவர்களும் அவமானப்பட்டு, சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட நேரம் அது. எனவே, தட்ச யாகத்தில் கலந்து கொண்ட பாவம் தீர்வதற்கு அச்வபதி மன்னர் தங்களுக்குத் தந்த அவிர்பாகத்தை சிவபெருமானுக்குச் சமர்ப்பித்தார்கள்.

    ஐப்பசி மாதத்தில் சிவ பெருமானுக்கு நாம் செய்யும் அன்னாபிசேகத்துக்கு இதுவே மூலாதாரமாக அமைந்துள்ளது. யாகத்தில் அச்வபதி மன்னருக்கு தரிசனம் தந்த தேவி, அவரது பிரார்த்தனைக்கு இணங்கி ஒரு மானிடப் பெண்ணாக, கேகய ராஜனான அச்வபதிக்கு மகளாக அவரிடம் வந்தாள். இவளே கைகேயி. இவளுக்குப் பெற்றோர் வைத்த பெயர் சரசுவதி. நாளடைவில், தன் தந்தை பார்த்து வந்த வேலையை தானே பார்க்க ஆரம்பித்தாள் சரசுவதி. அது என்ன வேலை? அச்வபதி மன்னர் வேதத்திலும் கலைகளிலும் மிகுந்த திறமைசாலி என்பதால், போன ஜென்மத்தின் பலாபலன்களைக் கண்டறியும் சக்தி அவருக்கு உண்டு. பிரச்சனை என்று தன்னை நாடி வருபவர்களுக்கு, அவரவர் பூர்வ ஜென்மத்தையும், அதனால் ஏற்படும் சுக துக்கங்களையும் உணர்ந்து இன்னது செய்யலாம், இன்னது செய்யக் கூடாது என்று சொல்லி நல்வழி காட்டுவார். இதுதான் வைச்வானர வித்தை. அதனால் அரசர்கள் பலர் வந்து தங்கள் அல்லல்களைத் தீர்த்துக் கொண்டு போவார்கள்.

    இத்தகைய வேலையைத்தான் சரசுவதியும் செய்ய ஆரம்பித்தாள். அடுத்தவர் குறை தீர்க்கும் பணியை சரசுவதி செய்யட்டும். அவளைத் தேடி அயோத்தி மன்னர் வரப் போகிறார். நாம் அவரிடம் போகலாம். அயோத்தி மன்னர் தசரதருக்குக் குழந்தை இல்லை, இதற்கு என்ன செய்யலாம்? சரி! நாமும் கேகய மன்னர் அச்வபதியிடம் போய் வழி கேட்க வேண்டியதுதான்! என்று தீர்மானித்த தசரதர், கேகய நாட்டுக்குக் கிளம்பினார். தசரதரை வரவேற்றாள் சரசுவதி. மன்னா! என்ன காரியமாக வந்தீர்கள்? என்றாள். பெண்ணே! மழலைச் செல்வம் இல்லாத மனக்குறைதான் எனக்கு. அதற்காக அச்வபதியைப் பார்க்க வந்தேன் என்றார் தசரதர்.

    சரசுவதி வழி சொன்னாள். அதில் தசரதரின் பூர்வ ஜென்ம வரலாறே இருந்தது. தசரதர் திகைத்தார். மன்னா! போன பிறவியில் நீங்கள், உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரிய பகவானாக இருந்தீர்கள். காயத்ரி, சாவித்ரி, சரசுவதி என மூன்று மனைவிகள் இருந்தார்கள். நீங்கள் இந்தப் பிறவியில் தசரதராகப் பிறந்திருக்கிறீர்கள். உங்கள் மூன்று மனைவியரும் இந்தப் பிறவியிலும் உங்களை மணந்து கொள்வதற்காக அரசிகளாகப் பிறந்திருக்கிறார்கள். அதில் காயத்ரிதான் உங்கள் முதல் மனைவி கௌசல்யாதேவி. சாவித்ரி. சுமித்ராதேவி. நான் சரசுவதி. நீங்கள் என்னையும் மணம் செய்து கொண்டால், உங்கள் தோசங்கள் நீங்கும். மேலும், சாட்சாத் மகாவிஷ்ணுவே உங்கள் பரம்பரை பூசா விக்கிரமாக ஸ்ரீரங்கநாதர் என்ற பெயரில் விளங்கி வருகிறார். அவரை பூசை செய்யுங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். திருமணம் குறித்து  என் தந்தையிடம் பேசுங்கள்! என்றாள். மனக் கவலை தீர மருந்தைத் தெரிந்து கொண்ட தசரதர், அச்வபதி மன்னரைச் சந்தித்தார். நடந்ததை விவரித்தார். அச்வபதியும் ஒப்புக் கொண்டார். சரசுவதிக்கும் தசரதருக்கும் திருமணம் நடந்தது. இந்த சரசுவதி, கேகய இளவரசி என்பதால் கைகேயி என அழைக்கப்பட்டாள்.

    கைகேயிக்கும் இராமனுக்கும் உள்ள உறவு நிலை                                                     

    கைகேயியிக்கும் இராமனுக்கும் இடையே இருந்த உறவு மிகவும் ஆழமானது. அவன் தாயான கோசலையிடம் அவன் வளரவில்லை. அவன் கைகேயிடமே வளர்ந்தவன். இராமனுக்கு முடிசூட்ட தீர்மானம் ஆனவுடனேயே எல்லோரையும் விட அதிகமாய் மகிழ்ந்தவள் கைகேயி. இராமனைப் போன்ற மகன் இருக்கையில் எனக்கு என்ன குறை என்று பெருமிதப்பட்டு மகிழ்ந்தாள். முதலில் கூனி தன் சதிவலையைப் பின்ன ஆரம்பித்த போது அவளுக்கு உண்டான கோபம் சிறிதல்ல. கடுமையான வார்த்தைகளால்  அவளை ஏசுதலாய் பேசி விமர்சிக்கிறாள்.

    “எனக்கு நன்மை செய்பவளும் அல்ல நீ, என் மகன் பரதனுக்கு நன்மை செய்பவளும் அல்ல நீ. தர்மப்படி பார்த்தால் உனக்கே நீ நன்மை செய்பவள் அல்ல” (இராமனைப் போன்ற ஒரு உயரிய குணம் படைத்த ஒருவனுக்குக் கெடுதல் நினைப்பதால் நீ பெரிய பாவத்தை சம்பாதிப்பதால் உனக்கே நீ கெடுதல் செய்து கொள்கிறாய் என்று மறைமுகமாய் சொல்கிறாள்) என்றெல்லாம் கைகேயி கூனியை ஏசிப்பேசுகிறாள்.

    எனக்கு நல்லையும் அல்லை நீ! என் மகன் பரதன்
    தனக்கு நல்லையும் அல்லை நீ! தருமமே நோக்கின்
    உனக்கு நல்லையும் அல்லை! வந்(து) ஊழ்வினை தூண்ட
    மனக்கு நல்லன சொல்லினை; மதியிலா மனத்தோய்!
    (கம்ப.1471)

    என்று சொல்லக் கேட்டதும், இராமனைப் பற்றி கெடுதலாகச் சொல்வது அவன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் இவளிடம் எடுபடாது என்று அறிந்தாள் கூனி. ‘கோசலைக்கு அதிகாரம் கூடும், நீயும் உன் மகனும் ஓரம் கட்டப்படுவீர்கள்’ என்ற வாதத்தை திறம்பட கைகேயி முன் வைக்கிறாள். கடைசியில் கைகேயி மனம் மாறுகிறது.

    கைகேயியின் சூழ்வினை

    நல்லவளாக இருந்த கைகேயி, மந்தரையின் சூழ்ச்சியால் மனமாற்றம் ஏற்பட்டு இராமனைக் காடு புகப் பணித்தாள். ஆயினும் நல் அரசனாய் வருவதற்குத் தவம் மேற்கொண்டு, புண்ணியத் துறைகள் நீராடி 14 ஆண்டுகள் கழித்து வா என்றும். 14 ஆண்டுகள் என்பதை ஏழு-இரண்டு ஆண்டுகள் என்று சுருக்கிக் கூறியும், ‘வா’ என்றும் கூறினாள். மேலும் ‘இயம்பினன் அரசன்’ என்பதால் அரசு ஆணை இது மீறுதற்கு அரிது என்பதைச் சுட்டினாள். ‘பரதனே’ என்பதில் அவளின் புத்திர பாசம் மேலோங்கியது.

    ஆழி சூழ் உலகம் எல்லாம்
    பரதனே ஆள, நீ போய்த்
    தாழ் இரும் சடைகள் தாங்கித்,
    தாங்க அரும் தவம் மேற் கொண்டு,
    பூழி வெம் கானம் நண்ணிப்,
    புண்ணியத் துறைகள் ஆடி,
    ஏழ் இரண்டு ஆண்டின் வா ‘என்று
    இயம்பினன் அரசன்‘‘ என்றாள்.
    (அயோத்தி – கைகேயி  சூழ்வினை.1601)

    தசரதனிடம் பரதன் நாடாள வேண்டும் என்றும், இராமன் 14 வருடங்கள் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும் வரம் கேட்கிறாள்.

    கைகேயி இராமனை 14 ஆண்டுகள் வனவாசம் அனுப்பக் காரணம்

    யுகங்கள் 4 வகைப்படும். அவை கிருத, திரேதா, துவாபர, கலி யுகங்கள். இந்த கலியுகத்தில் தந்தையும், மகனும் 12 ஆண்டுகள் பிரிந்திருந்தால் (ஒருவரை ஒருவர் சந்திக்காமல்) 12 ஆண்டுகள் கழிந்தபின்பு தந்தை, மகன் என்கிற உறவு முறிந்து விடும், என்கிறது இந்துமத சாத்திரம். இந்த கருத்து துவாபர யுகத்தில் 13 ஆண்டுகள், திரேதாயுகத்தில் 14 ஆண்டுகள், கிருத யுகத்தில் 15 ஆண்டுகள். இராமாயணம் நடந்த காலம் திரேதா யுகம். இதில் தசரதனும், இராமனும் 14 ஆண்டுகள் சந்திக்காமல் இருந்தால் தந்தை, மகன் உறவு இல்லாமல் போய்விடும். எனவே இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் கழித்து வந்தால் இராமனுக்கு பட்டம் கிடைக்காது, பரதனே அரசாள்வான் என்பது கைகேயியின் கணக்கீடாகும்.

    தசரதன் துக்கப் பெருங்கடலில் மூழ்குகிறான். முதலில் கைகேயிடம் புலம்புகிறான். பின், இராமனை காட்டுக்கு அனுப்பிவிட்டு அவனை நினைத்து புலம்புகிறான். இராமன்மேல் கொண்ட பாசம் ஒருபுறம், இராசநீதி தவறிவிடக் கூடாதே என்ற ஆதங்கம் மறுபுறம், கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமே என்ற கவலை இன்னொரு புறம்… தசரதன் தவிக்கிறான்…. அந்தத் தவிப்பை கம்பன் இங்கே படம் பிடிக்கிறான்.

    “என் கண்களைக் கேள். என் உயிரைக் கேள், இந்த நாட்டையே எடுத்துக் கொள். உன் மகன் ஆளட்டும். இரண்டாவது வரத்தை மட்டும் திரும்ப வாங்கிக் கொள். இராமனை இங்கேயே இருக்க விடு” என்று கதறுகிறான்.

    கண்ணே வேண்டும் எனினும் ஈயக்கடவேன்; என்
    உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ?
    பெண்ணே! வண்மைக் கேகயன் மானே! பெறுவாயேல்
    மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற’ என்றான்  (கம்ப.1611)

    கைகேயி இரண்டு வரங்களை கேட்டுவிட்டாள். ஒன்று பரதன் நாடாளவும், மற்றது இராமன் காடாளவும். என் கண்ணை வேண்டுமானாலும் தருகிறேன், என் உயிரை வேண்டுமானாலும் தருகிறேன், முதல் வரத்தை பெற்றுக் கொள், இரண்டாவது வரத்தை மற என்று கெஞ்சுகிறான்.

    கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேன் = என் கண்கள் வேண்டும் என்றாலும் நான் தருகிறேன்.

    என் உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ? = என் உயிர் வேண்டுமா, அது உனது, எடுத்துக் கொள்.

    பெண்ணே! நீ பெண் அல்லவா (கொஞ்சம் பெண்மையின் இரக்கம் இருக்காதா என்று சொல்லிப் பார்க்கிறான்)

    வண்மைக் கைகேயன் மானே!  இப்படிச் சொல்லியும் அவள் அசைந்த பாடு இல்லை… கைகேயன் குலத்துப் பிறந்த மானே

    பெறுவாயேல் = வேண்டும் என்றால்

    நீ மற்றையது ஒன்றும் மற = அந்த இன்னொரு வரத்தை மறந்து விடு (கேட்காதே என்று சொல்லவில்லை, மற என்கிறான் )

    நின்மகன் ஆள்வான்; நீ இனிது ஆள்வாய்; நிலம் எல்லாம்
    உன் வயம் ஆமே! ஆளுதி தந்தேன்; உரை குன்றேன்;
    என் மகன், என் கண், என் உயிர் எல்லா உயிர்கட்கும்
    நன்மகன் இந்த நாடிறவாமை நய’ என்றான். (கம்ப.1526)

    கைகேயி மனம் இரங்கவில்லை. இராமனுக்கு சொல்லி அனுப்புகிறாள். இராமன் கைகேயி மாளிகையை நோக்கிச் செல்வதைப் பார்த்த அயோத்தி மக்கள் சொல்வது கைகேயி-இராமன் நட்பை அழகாய் விளக்குகிறது. “இராமன் தாயிடம் வளர்ந்தவனல்ல. அவனை வளர்க்கும் பாக்கியத்தை தவமிருந்து கைகேயியே பெற்றிருக்கிறாள். அப்படிப்பட்டவளுக்கு அயோத்தி மன்னனாக இராமன் முடிசூடுவதில் இருக்கும் பேரானந்தத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

    தாய்கையில் வளர்ந்திலன்; வளர்த்தது தவத்தால்
    கேகயன் மடந்தை; கிளர்ஞாலம் இவன் ஆள
    ஈகையில் உவந்தவள், இயற்கை இதென்றால்
    தோகை அவள் பேருவகை சொல்லல் அரிது என்பார். (கம்ப.1591)

    இராமனைக் கண்டு அந்தக் கொடிய கட்டளையைச் சொல்ல தசரதன் நாக்கு எழவில்லை. கைகேயியே அந்தக் கட்டளையை மன்னன் சொன்னதாகச் சொல்கிறாள். அந்த இடத்தில் இராமன் கைகேயியிடம் முகமலர்ச்சி (இராமனின் முகம் வரைந்த செந்தாமரை போல் மாறாமல் இருந்ததென்று கூறுகிறார் கம்பர்) குறையாமல் சொல்கின்ற சொற்கள் மிக அழகானவை. “மன்னன் சொல்லா விட்டால் என்ன நீங்கள் சொன்னால் நான் மறுக்கவா போகிறேன். என் தம்பிக்குக் கிடைத்த செல்வம் எனக்கே கிடைத்தது போல் அல்லவா? நான் இப்போதே போகிறேன். விடை கொடுங்கள்.”

    மன்னவன் பணி அன்றாகில் நும்பணி மறுப்பனோ? என்
    பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ
    என் இனி உறுதி அப்பால்; இப்பணி தலை மேல் கொண்டேன்
    மின் ஒளிர்க் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன் (கம்ப.1604)

    தசரதன் மூர்ச்சையாகி மயங்கி விழுகிறான். பின் “நீ என் மனைவியும் அல்ல. பரதன் என் மகனுமல்ல” என்று தசரதன் மனம் வெறுத்துக் கைகேயியை ஒதுக்குகிறான். கைகேயியிடம் ஒளிவு மறைவு கிடையாது. குலகுரு வசிட்டர் தசரதனுக்கு என்ன ஆயிற்று என்று கேட்ட போதும் சரி, பின் பரதன் வந்து கேட்ட போதும் சரி தன் வரங்களைப் பற்றியும் அதனால் தசரதனுக்கு ஏற்பட்ட நிலையையும் ஒளிக்காமல் அப்படியே சொல்கிறாள். அவர்கள் இருவரிடமும் வசவுகளையும் வாங்கிக் கொள்கிறாள். பரதன் கோபப்பட்டு “நீ என் தாயே அல்ல” என்று சொல்லிவிட்டுப் போனபின் கைகேயி இராமாயணத்தில் பேச்சிழக்கிறாள். பின் அவள் இராமாயணத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசியதாய் தகவல் இல்லை.

    எந்த மகனுக்காக அவள் அரச பதவியை வரமாக வாங்கினாளோ அந்த மகன் தன் அண்ணனின் செருப்பைக் கொண்டு வந்து சிம்மாசனத்தில் வைத்து ஒரு துறவியைப்போல் வாழ ஆரம்பித்தபோது அவள் மனம் துடித்திருக்க வேண்டும். தன் வரங்கள் தனக்கு சாபமாக மாறியதை உணர்ந்து மீளாத்துயரில் ஆழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அதை நம் கற்பனைக்கே விட்டு விடுகிறார்கள் வால்மீகியும், கம்பனும். இராமனைக் காண காட்டுக்கு மற்றவர்கள் போன போது அவளும் கோசலையுடனும், சுமத்திரையுடனும் சென்றாள் என்று மட்டும் அவர்கள் சொல்கிறார்கள். அந்த ஒரு செய்கையில் தன் தவற்றை உணர்ந்து விட்டதாக அவள் அறிவிக்கிறாள் என்றே சொல்ல வேண்டும்.

    இராமன் அயோத்தியில் காட்டிய அதே பாசத்தைக் காட்டிலும் காட்டுகிறான். தாயர் மூவரையும் ஒரு போலவே தொழுது எழுகிறான். அவன் மனத்தில் கைகேயியிடம் சிறிதும் வருத்தமில்லை. அவன் அவள்மீது வைத்திருக்கும் பாசத்தில் சிறிதும் குறைவில்லை. கடைசியில் வானுலகில் இருந்து இராமனைக் காண வரும் தசரதனிடம் கேட்கும் வரம் ஒப்புயர்வில்லாததாக அமைகிறது.

    தசரதன் எப்போது கைகேயியைத் தன் மனைவியல்ல, பரதன் மகனுமல்ல என்று துறந்து விட்டானோ அப்போது முதல் இராமன் கைகேயியைத் தாய் என்று அழைப்பது தந்தை சொல்லை மீறிய செயலாக உள்ளது. ஆனால் இராமன் கைகேயிமீது வைத்துள்ள பாசம் அளப்பரியது. அவளுடைய ஒரு செய்கையை வைத்து அவள் முன்பெல்லாம் காட்டிய பாசத்தை மறக்க அவன் தயாரில்லை என்பதை உணர்த்துகிறது. அதனால் தசரதனிடம் “தீயவள் என்று நீங்கள் துறந்த என் தெய்வத்தையும், அவள் மகனையும் மீண்டும் என் தாயும், தம்பியுமாக அனுமதி வேண்டும்” என்று அனுமதி கேட்கிறான். அப்போது கூட அவளைத் தாயென்று அவனால் அழைக்க முடியவில்லை. குறைத்துச் சொல்லவோ மனம் ஒப்பவில்லை. எனவே தாயான கைகேயியை ‘தெய்வம்’ என்று உயர்த்துகிற பண்பைக் காணலாம்.

    தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்
    தாயும் தம்பியும் ஆம் வரம் தருகெனத் தாழ்ந்தான். (கம்ப.10079)

    இதைக் கேட்டு உலகமே அவனைத் தொழுதது என்கிறார் கம்பர். இதனால் இராமன் கடைசி வரை கைகேயியின் மீது தாய்ப்பாசம் குறையாமல் இருந்தான் என்பது புலப்படுகிறது.

    இராமன் காடு சென்றதால் கைகேயிக்கு என்ன நன்மை என்றால் எதுவுமே இல்லை. மாறாகத் தன் கணவனான தசரதனை இழந்து விதவையாகிப் போனமை; தன்மகன் பரதனின் வெறுப்புக்கு ஆளாகியமை; சிற்றன்னையாக இருந்தபோதிலும் தன் தாய் போல கைகேயிக்கு மதிப்பளித்த இராமனை காட்டிற்கு அனுப்பியமை; இதனால் அயோத்தி மக்களின் ஆத்திரத்திற்கு ஆட்பட்டமை எனப் பல வழிகளிலும் கைகேயி துன்பப்பட்டாள். அதேநேரம் கூனியாகிய மந்தரை இராமனைக் காட்டிற்கு அனுப்பியதன் மூலம் தனது சதித்திட்டத்தை நிறைவேற்றிக் களிப்புற்றாள்.

    தன் கணவனுடைய இன்னொரு மனைவிக்குப் பிறந்தவனாக இருந்தாலும் இராமனை தன் மகன் போல் பாவித்தவள். இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டால் இன்று சித்தியரால் முதல் மனைவி பிள்ளைகளுக்கு வரும் கடினம் வராது. இரண்டாவது பாதி கைகேயி படி நடக்கக்கூடாது என்பதற்காக ஒரு நேர்மறையான பாத்திரம். கூடவே இருந்தவர்கள் என்றாலும் அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டால் ஆபத்து தான் என்பதை உணர்த்திய பாத்திரம்.

    இக்கட்டுரை வழி கைகேயியின் பிறப்பு நிலை மற்றும் மண வாழ்க்கை நிலை வெளிப்பட்டு இருப்பினும் இராமனைத் தன் மகனாகவே பாவித்து வளர்த்த பாங்கு சிறப்பிற்குரியது. எனினும் சூழ்ச்சிக்காரி மந்தரை(கூனி)யின் சூனியப் பேச்சைக் கேட்டு மனமாற்றம் அடைந்து தன் மகன் பரதனை அரியணையில் அமர்த்த நினைப்பது மற்றும் இராமனைப் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்கு அனுப்புவது கதைக்கு வேண்டுமானால் சிறப்பாக இருக்கலாம் ஆனால் உண்மையில் கைகேயி கேட்பார் பேச்சைக் கேட்பவளாகவே காட்டப்படுகிறாள் என்பது நன்கு விளங்கும். 

    துணை நூற்கள்

    1. கம்பராமாயணம் – ஆரண்ய காண்டம் உரையுடன், கம்பன் அறநிலை, கோவை-37
    2. ஸ்ரீமத் கம்பராமாயணம், புலவர் சி. திருநாவுக்கரசு, நர்மதா பதிப்பகம், தி.நகர், சென்னை-17
    3. கம்பர், மூதறிஞர் வ.சுப. மாணிக்கம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்-1
    4. கம்பன் புதிய பார்வை, அ.ச. ஞானசம்பந்தன், கங்கை புத்தக நிலையம், தி.நகர், சென்னை-17
    5. கம்பன் கற்பனை, முனைவர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்-1

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.)
    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 113

     

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம் 100 : தொகுப்பு : காவிரிமைந்தன்

    சாமான்ய மனிதர்களின் கட்டுரைகள் : சுப்ரபாரதிமணீயன்

     

    எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை ஒட்டி இந்த 288 பக்க நூலில் எம்.ஜி.ஆர் பற்றிய பல சாமான்ய மனிதர்களின் கட்டுரைகளைத்தொகுத்திருக்கிறார் காவிரிமைந்தன். இதில் எழுதியுள்ளவர்களில் எம்.ஜி.ஆர் மீது பேரன்பு கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களின் மனதினை எம்.ஜி.ஆர் பல விதங்களில் பாதித்திருக்கிறார். அந்த பாதிப்புகளை எண்ணங்களின் வடிவில் வடித்திருக்கிறார் காவிரிமைந்தன் . எம்.ஜி.ஆர் பற்றி விதவிதமான அனுபவங்கள்.. செய்திகள்… கட்சியின் தலைவராக இருந்த அனுபவங்கள், ஏழைப்பங்காளியாக இருந்து அவர் செய்த வள்ளல் தன்மை, பதவிகளை அவர் பயன்படுத்திக்கொண்டு ஏழைகளுக்குச் செய்த சேவைகள் , திரைப்படத்துறையில் நடந்த பல சுவையான சம்பவங்கள் என்று வகை வகையாய் இருக்கின்றன இக்கட்டுரைகள். எதிர்மறையான விசயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன

    ஒரு தொகுப்பாளரின் பொறுப்பும் கடமையும் கொண்டு இதை அவர் வெளியிட்டிருக்கிறார்.. ஒரு நேர் பேச்சில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லாததை வைத்து ஒரு வாசகி எழுதிய கட்டுரையை அவர் நிராகரித்தது பற்றிச் சொன்னது ஆச்சர்யம் தந்தது. அக்கட்டுரையின் முடிவில் அவரின் அபிராயத்தையும் சேர்த்து வெளியிட்டிருக்கலாம. ஆனால் அது நிச்சயிக்கப்படாத விசயம் என்பதால் அதை வெளியிட அவர் மறுத்தது அவரின் பொறுப்புணர்வைக்காட்டியது. இந்தப்பொறுப்புணர்வை இத்தொகுப்பின் எல்லாப் பக்கங்களிலும் காண முடிவது இத்தொகுப்பின் வெற்றி. எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர ரசிகனாக இருப்பதன் பயனாய் இன்றுவரை நேர்மறை எண்ணங்களுடன்.. ஏதோ ஒரு வகையில் சமுதாயத்திற்கும் பயனுள்ள மனிதனாக என்னை நானே செப்பனிட்டுக் கொண்டு வருகிறேன் என்பதில் மகிழ்ச்சியே என்பதை இத்தொகுப்பிலும் கண்டிருக்கிறார்.

    வல்லமை.காம் மின் இதழ் சேகரித்துத் தந்தக் கட்டுரைகளின் தொகுப்பு என்பது இன்னொரு விசேடம்

    எம்.ஜி.ஆர் பற்றிய நினைவுகளின் சுரங்கமாக இத்தொகுப்பு விளங்குகிறது.

    ( வெளியீடு : தமிழ் நதிப்பதிப்பகம், சென்னை ரூ 150 )

    Share
  • எல்லோருக்குமான உலகத்தை நோக்கி….

    எஸ் வி வேணுகோபாலன்

     

    குழந்தைகள் நம்மைப் பரவசம் கொள்ள வைப்பவர்கள். சிரிக்காத உதடுகளையும் கீறி அதில் புன்னகை பூக்கவைக்கும் மந்திரம் குழந்தைகளுக்கு வாய்த்திருக்கிறது. கனத்த இதயத்தை இலேசாக்கிவிடும் வித்தை அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல்’, நமது நெஞ்சம் கடுத்தது காட்டும் கண்ணாடி அவர்களது கண்கள்! குழந்தைகள் தினத்தில் மட்டுமல்ல, எப்போதுமே குழந்தைகளைக் கொண்டாடுவோம்!

    எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான சமூக, பொருளாதார பின்னணியில் பிறப்பதில்லை. அவர்களது எதிர்காலத்தை அவரவர் வாழ்விடமும், சூழலும் தீர்மானிக்கின்றன. அதுவும் பெண் குழந்தைகள் எனில், பிறக்க அனுமதிக்கப்படுவதே சாதனை. அதன்பிறகும் தொடரும் கொடுமைகள் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை.

    செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்
    பொன்வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி
    கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டுக்
    கலயங்கள் ஆடுது சோறின்றி
    இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி ….

    என்று ‘துலாபாரம்’ எனும் திரைப்படத்திற்கான பாடல் ஒன்றில் எழுதினார் கவிஞர் கண்ணதாசன்.

    ஆண்டுதோறும் 6 லட்சம் குழந்தைகள், பிறந்த 28 நாட்களுக்குள் கண்ணை மூடிவிடுகின்றன என்கிறது யூனிசெஃப் நிறுவனத்தின் அறிக்கை. தப்பி வளரும் குழந்தைகளில் உடல் வலுவோடு இருப்போர் எண்ணிக்கையும் சுவாரசியம் அற்றது. 20 சதவீத குழந்தைகள் மிக மிக உடல்வலு குறைவான – ஊட்டச்சத்து போதாத எண்ணிக்கையில் இருக்கின்றனர். நாம்தான் உலக பட்டினி நாடுகள் வரிசையில் 103வது இடத்தில் இருப்பவர்கள் ஆயிற்றே!

    51 சதவீத பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது. அதிலும், கர்ப்பிணிப் பெண்களில் 65 முதல் 80 சதவீதம் வரை இந்த பிரச்சனையால் பாதிப்புற்று இருப்பவர்கள். இவர்கள் சுமக்கும் பிள்ளைகள் எப்படி வலுவாகப் பிறந்து உடல் நலத்தோடு வளர முடியும்? பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறி வாழும் மனிதருக்கெல்லாம்.. முதலில் வயிற்றுக்குச் சோறிட வேண்டும்.

     

    குழந்தைகளைக் கொண்டாட வேண்டும் எனில், அவர்களது இளமைக்காலம் துடிப்புடன் இருக்க வேண்டும். கல்வி பெறும் வயதில் பாடசாலை போகவேண்டும் பாப்பா எழுந்திரு என்று பாட்டுப்பாடி அனுப்ப வேண்டும். ‘தலைவாரி பூச்சூட்டி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை…’ என்று பாவேந்தர் இனிமையாகச் சொல்வதுபோல் ஆசை தீர அனுப்பிவைக்க வேண்டும். ஆனால், நிலைமை என்ன?

    கிட்டத்தட்ட ஒரு கோடி குழந்தைகள் பள்ளிக்கூட வாசல் மிதிப்பதில்லை. மகிழ்ச்சிக்கான குறியீட்டு வரிசையில் நமது எண் 133. ‘ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்த மானிடர்கள்’ நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் தேசம் இந்தியா. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், 2009 -17 ஆண்டுகளில் மூன்று பங்கு அதிகரித்திருப்பதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கூறுகிறது. 90 ஆயிரத்திற்கும் அதிகமான கொடுமைகள், வன்முறைகள், கடத்தல், பாலியல் அத்துமீறல்கள், அராஜக தாக்குதல்கள் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்றன.காஷ்மீர் மாநிலத்தில் கதுவா சிறுமி, எட்டு வயதில் எதிர்கொண்ட அதிர்ச்சிக் கொடுமையை நினைத்துப் பார்த்தால், குழந்தைகள் தினத்தை நினைவூட்டும் தகுதி கூட நமக்கு உண்டா என்று கலங்குகிறது நெஞ்சம். குழந்தை திருமணங்கள் இன்னும் நிற்காத நாடு.

    குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் எங்கோ உறங்கிக்கொண்டிருக்க, நாடு முழுவதும் சிறுவர், சிறுமியர் கணக்கற்றோர் அன்றாடம் சுரண்டப்படுகின்றனர். குழந்தைகள் இப்படி அலைமோதுவதை எழுத்தாளர் சுஜாதா தமது கவிதை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்:

    கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
    கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
    பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
    பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்
    சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய் ……..***

    (முழு கவிதை கீழே தரப்பட்டுள்ளது)

    என்று நீளும் அந்தக் கவிதை, சம காலத்திலும் தொடரும் குழந்தைத் தொழிலாளர் அவலத்தை எண்ணி சமூகத்தை வெட்கமுறச் செய்யும்.

    Ural Rahul, 15, works on a car at a repair garage in Dimapur, India’s northeastern state of Nagaland, on June 12, 2013, the World Day Against Child Labour. The day, first observed in 2002 and sanctioned by the International Labour Organization (ILO), aims to highlight the plight of children engaged in work that deprives them of adequate education, health, leisure and basic freedoms, violating their rights. AFP PHOTO/CAISII MAO (Photo credit should read Caisii Mao/AFP/Getty Images)

    இப்படிப்பட்ட சூழலில்தான், குழந்தைகள் தினத்தை நாம் கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. குழந்தைகள் தினம் என்பது, ஆரோக்கியமான தலைமுறையை அன்போடு வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பை சமூகத்திற்கு நினைவூட்டுகிறது. ஆண், பெண் வேறுபாடின்றி குழந்தைகளை சமமாக பாவிக்க வற்புறுத்துகிறது. வீட்டு வேலைகள் செய்யப்பழக்குவதிலிருந்து விரும்பிய கல்வி பெறச் செய்வது உள்ளிட்டு இரு பாலரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கும் உணர்வை ஊட்டுகிறது.

    பாலியல் சீண்டல், பாலியல் வக்கிரம் மற்றும் பலவிதமான பாலியல் கொடுமைகளுக்கு சிறார்கள் அதிகம் உள்ளாகும் செய்திகள் நம்மை உலுக்கி எடுக்கின்றன. பிள்ளைகளுக்கு இவை குறித்து எளிய முறையில் அறிவுறுத்தி, எக்குத்தப்பாக யாரும் நடந்து கொள்வதை சகிக்காத துணிவும், அப்படி நடக்க எத்தனிப்போர் குறித்து உடனே தாயிடம் பகிர்ந்து கொள்ளும் நேர்த்தியும் பழக்க வேண்டியது நம் கடமை.

    கற்பனையும், கைவண்ணமும், கனவுகளும் சிறகடிக்கும் பருவம் குழந்தைப் பருவம். குழந்தைகள் உலகம் குதூகலமிக்கது. குழந்தைகள் உள்ளம் பரந்துவிரிந்தது. குழந்தைகள் எளிதில் கோபமுறவும், மிக எளிதில் குளிர்ந்து புன்னகைக்கவும் வரம் பெற்றவர்கள். பாட புத்தகங்களுக்கு வெளியே உற்சாகமான வாசிப்புக்குக் காத்திருக்கும் நூல்கள் குழந்தைகள் கைபடக் காத்திருக்கின்றன. கண்களை அகலமாக விரித்து அவர்கள் மேற்கொள்ளும் வாசிப்பு அனுபவம் கவித்துவமானது. முன்னேற்றமான மாற்றங்களுக்கான நம்பிக்கையின் வேரில் குழந்தைகள் மிக அழகாகத் தண்ணீர் ஊற்ற முடியும். குழந்தைகள் தினம் அதைத்தான் கோருகிறது.

    குழந்தைகள் தினம், வளர்ந்த மனிதருக்குள்ளும் குழந்தைத் தன்மை மலர்வதை .வண்ணமுறக் கொண்டாடி வருகிறது. எல்லோருக்குமான உலகத்தை சமைக்கும் பாதையில் குழந்தைகள் தினம் கூடுதல் மகிழ்ச்சியை வீடெங்கும் நிரப்பிக் கொடுக்க வருகிறது. குழந்தைகள் தினம் வாழ்க!.

    நன்றி: மகளிர் சிந்தனை (நவம்பர் 2018)

    சர்வதேசக்குழந்தைகள் ஆண்டை முன்னிட்டு, இந்தியக் குழந்தைகள்பற்றி சுஜாதா எழுதிய கவிதையை அப்போதே குமுதம் இதழில் வாசித்திருக்கிறேன்… பெரும்பாலான வரிகள் நினைவில் உண்டு. இப்போது இணையத்தில் தேடிப்பார்த்தேன்.. எழுத்துப் பிழையோடும் சில தளங்களில் கண்டேன்… குமுதம் கவிதையைக் கண்ணில் பாராமல் இதை ஏற்றுக் கொள்ள மனம் தயாராக இல்லை. எனினும் கிடைத்தை நீங்களும் வாசிக்கலாம்: (இன்னின்ன வேலைகளையெல்லாம் செய்வாய் என்று குழந்தையிடம் மனம் வெதும்பி உரையாடுவதுபோல் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதையின் கடைசி வரி, அவன் பிச்சையும் எடுக்க வைக்கப்படுகிறான் என்பதைக் கண்ணில் நீர் வரச் சொல்லி முடிகிறது)

    கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்

    கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்

    பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்

    பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்

    சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்

    சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்

    காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்

    கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்

    மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்

    மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்

    கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வாய்

    கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்

    ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்

    ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்

    திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்

    தீவிரமாய் உன் நிலைமை உயர்த்துவதுபற்றி

    வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து

    வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்

    குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு

    கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்

    சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்

    சில்லறையாய் இல்லை, போய்விட்டு அப்புறம் வா ..

    *****************************

    Share
  • சேக்கிழார் பா  நயம் – 11 

    =======================

    (திருச்சி புலவர் இராமமூர்த்தி)

    —————————————————

     

    திருவாரூர்  நகரத்தின் தோற்றம் இங்கே சிறப்பாகக் கூறப் பெறுகிறது. இப்பாடலில் உள்ள தொடர்கள் அடுத்தடுத்து வெவ்வேறு  பொருள்களைப்  புலப் படுத்துகின்றன. ஒரே தொடர் மீண்டும் வந்து , பொருள் நோக்கிப் பிரிந்து வெவ்வேறாகப் பொருள்தரப்   பாடுவது இரட்டுற மொழிதல் என்ற அணி என்பர். இந்த அணி இருவகைப் படும் , அவை செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச்  சிலேடை என்பனவாம்.

    சேக்கிழார் பெருந்தகை , திருவாரூரில் உள்ள மாளிகைகளின் சூழல் பற்றிக் கூறுகிறார்! மாளிகைகள் கட்டப்பெற்ற இடங்களுக்குப் புறம்பே உள்ள சோலைகளில் அந்நாட்டு மக்களால் வளர்க்கப் பெறும் யானைக் கன்றுகள் திரிகின்றன. அந்தச்   சோலைகளில் , வண்டுகள் பறந்து சென்று தேனுண்ணும் மலர்கள் எங்கெங்கும் பூத்துள்ளன!

    அடுத்து அங்கே  மகளிர்  விளையாடும் பொழுது  பாடும்   அம்மானைப் பாடல்கள்  எங்கெங்கும்  ஒலிக்கின்றன! அவர்கள் வாழும் அழகிய பெருமனைகள்  எங்கெங்கும் உள்ளன.

    அங்குள்ள இல்லங்களின்மேல் ஏற்றிவைத்த கொடிகள் படபடக்கின்றன. அந்த இல்லங்களுக்குள்  பெரும் செல்வங்களின் வைப்புப்  பெட்டகங்கள் உள்ளன.

    பூக்களால் தொடுக்கப் பெற்ற  மாலைகள் எங்கெங்கும் உள்ளன. அந்த மாலைகளை அழகாக அணிந்து கொண்டு இன்புறும் ஆடவரும் பெண்டிரும் எங்கும் உள்ளனர்.

    இப்பாடலில் போதகங்கள்  என்ற சொல், யானைக் கன்றுகளைக் குறித்தது; மாடு என்ற அடைமொழி ஊரின் பக்கத்தில் என்று பொருள்தந்து, அங்கே  சோலையில் திரியும் யானைக்கன்றுகளைக் குறித்தது.  அதே சொல் அடுத்து,   வண்டு போது  அகங்கள் என்று பிரிந்து , மலரிதழின் உட்பாகங்கள் என்று பொருள் தருகிறது. அதற்கு அதன் அடைமொழியாக உள்ள வண்டு  என்ற சொல் போதகம் என்ற யானையை நீக்கி, போது , அகங்கள் அதாவது வண்டுகள் தேனுண்ணக்  கிண்டுவதால் ,  விரியும் போது காணப்படும் அகவிதழ்கள் என்று,   பொருள் தருகிறது. இங்கே போதகங்கள் என்ற சொல் இருவகையாகப் பொருள் தருவதே சேக்கிழாரின் இலக்கிய ஆளுமையைக் காட்டுகிறது.

    அடுத்த அடியில், பாடும் அம்மனை என்பதில் உள்ள அடை மொழி, பாடுகின்ற அம்மனை என்ற கருத்தைத் தருகிறது. அம்மனை என்பது அம்மானை என்ற விளையாட்டுப் பாடலைக் குறிக்கும்! ஆதலால் அங்குள்ள வீடுகளில் எங்கெங்கும்  பெண்கள் அம்மானைப் பாடல்களைப் பாடி விளையாடுகின்றனர் என்பது புலனாகின்றது.  அடுத்து  அம்மனைகள் என்பது  பயிலும் அம்  மனைகள் எங்கும் என்ற தொடராகப் பிரிந்து அழகிய வளமனைகள்  எங்கெங்கும் அமைந்துள்ளன என்பதைக் கூறுகின்றது.

    அங்குள்ள மாளிகைகளில்  நெடிதுயர்ந்து  நீற்று அசையும் கொடிகள் எங்கெங்கும்  விண்ணில் பறக்கின்றன! இதனைச் சேக்கிழார் ‘’நீடு கேதனங்கள்’’ என்று பாடுகிறார்.  அடுத்து நிதி நிகேதனங்கள் எங்கும் என்கிறார். ‘’அம் மாளிகைகளுக்குள் செல்வத்தின் வளத்தை எடுத்துக் காட்டும் பொற்கூடங்கள் எங்கெங்கும் உள்ளன ‘’ என்பது இதன் பொருள். இங்கு கேதனங்கள் என்ற சொல் இருவகைப் பொருளாக தருகிறது.

    பூவிதழ்களால் கட்டப் பெற்ற மலர் மாலைகள் எங்கெங்கும் உள்ளன! இதனைச் சேக்கிழார் , ‘’தோடு சூழ் மாலை எங்கும் ‘’ என்று பாடுகிறார். அடுத்து, கணவன் மனைவியர் இணைந்து மாலையணிந்து மகிழும் இடங்கள் எங்கும் உள்ளன! என்பதை, ‘’ துணைவர் சூழ்  மாலை எங்கும் ‘’ என்கிறார். இங்கு மாலை என்ற சொல்  அடுத்தடுத்து  வந்துள்ளது.

    இனி முழுப்பாடலையும் பார்ப்போம்.

    ‘’மாடு போதகங்கள் எங்கும் வண்டு போதகங்கள் எங்கும்
     பாடும் அம்மனைகள் எங்கும் பயிலும் அம்மனைகள் எங்கும்
     நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும்
     தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும்.”

    இப்பாடலில் அலையும் யானைக் கன்றுகள், சோலையில் பூக்கும் மலர்கள், அம்மானைப் பாடல் பாடுவோர், வளமனைகளில் வாழ்வோர்,கொடியசையும் மாளிகை மக்கள், பெருஞ் செல்வம் பெற்றோர், மலர்ச்சோலை வைத்தோர், மாலை சூடி மகிழ்வோர் ஆகியோரின் சிறப்பை இரட்டுற மொழிதல் என்ற அணி நயத்துடன் சேக்கிழார் பாடியுள்ளார். இதன் வழியே திருவாரூரின்  இயற்கை வளம், செல்வச்சிறப்பு, செல்வவளம் ஆகியவற்றை உணரலாம்.

    Share