திருவாதிரைச் சீரும் கொங்குச் செட்டியார் சடங்குமுறைகளும்

-மா.தமிழ்மலர்

தமிழகத்தில் திருவாதிரை கும்பிடும் முறை – சிவன் ஆலயங்களில் திருவாதிரை, ஆருத்ரா தரிசனம் வழிபாட்டு முறை – சேந்தனார் வரலாறு – திருவாதிரைச் சிறப்பு – கொங்குநாட்டில் திருவாதிரை நோன்பு கும்பிடும் முறை – கொங்குச் செட்டியார் செய்யும் திருவாதிரைச் சடங்கு – திருவாதிரைச் சடங்கின் சிறப்பு – கும்பிடும் முறை – கும்பிடும் பெண்கள் – சடங்கிற்குரிய உணவுப் பொருள்கள் – இதன் பலன்.

சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரம் திருவாதிரையாகும்.  மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரம் வந்தாலும், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு மிகவும் சிறப்பானதாகும்.  திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாள் தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மிகப் பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது.  சிதம்பரம் நடராசப் பெருமானின் ஆலயத்தில் இந்தத் தினத்தன்று நடராசருக்கு அபிடேகமும், நடராசர் சிவகாமி திருக்கல்யாண உற்சவமும், தேர்த்திருவிழாவும் நடைபெறும்.

சிதம்பரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துச் சிவாலயங்களிலும் நடராசப் பெருமானுக்கு அபிடேகமும், நடராசர் சிவகாமி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகின்றது.  இவ்விழாவில் நடராசப் பெருமானுக்கு பிரதான உணவாகக் களி படைக்கப்படுகின்றது.  மேலும், திருக்கல்யாண முடிவில், சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் சரடு வழங்கப்படுகின்றது.  தம் கணவரின் ஆயுள் பெருக சுமங்கலிப்பெண்கள் இந்த மஞ்சள் சரட்டினை வாங்கிக் கட்டிக் கொள்கின்றனர்.  இவ்விழா  தமிழகம் முழுவதும் இவ்வாறு நடைபெற்றாலும், கொங்கு நாட்டில் திருவாதிரை நோன்பு தமிழகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து சிறிது வேறுபட்டு, நாட்டார் சடங்குகளுடன் சேர்த்துச் செய்யப்படுகின்றது.  மேலும், இங்கு வாழும் அனைத்து மக்களும் இந்நோன்பினை கடைப்பிடிப்பதில்லை.  குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் இந்த நோன்பினை கடைபிடிக்கின்றனர்.  உட்கழுத்துச் சரடு கட்டிக் கொள்ளும் சமூகத்தவர் மட்டும் இந்நோன்பினை கடைபிடிக்கின்றனர்.  அவரவர் குல வழக்கப்படி, இந்நோன்பிலும், சில சடங்கு முறைகளைச் செய்கின்றனர்.  குறிப்பாகக் கொங்கு நாட்டில் வாழும் கொங்குச் செட்டியார் இனத்தைச் சார்ந்தவர்கள் திருவாதிரைப் பண்டிகையினை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.  தாயம்பாளையம் பகுதியைச் சார்ந்த கொங்குச் செட்டியார் இனத்தைச் சார்ந்தவர்கள் பூப்படையும் வயதில் இருக்கும் தங்கள் குலப் பெண்களுக்கு திருவாதிரை தினத்தன்று திருவாதிரைச் சீர் செய்கின்றனர்.  இந்த திருவாதிரைச் சீர் குறித்தும், திருவாதிரை நோன்பு குறித்தும் இந்த ஆய்வுக் கட்டுரையில் காணலாம்.

மார்கழி மாதம் தட்சிணாயனத்தின் இறுதி மாதமாகும்.  மார்கழி மாதத்தில் தில்லையில் குடி கொண்டுள்ள நடராசப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்று கூடுவதாக ஐதீகம் உண்டு.  தேவர்களுக்கு மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதாகும்.  வைகறையில் இறைவனைத் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகின்றது.  சிதம்பரம் பஞ்ச பூதத் தலங்களில் ஆகாயத் தலமாகும்.  மார்கழி மாதத்தில் திருவாதிரை தினத்தன்று அபிடேகங்கள் நடைபெறும்.  நடராசப்பெருமான் அடுத்த நாள் அதிகாலை நேரில் வீதிவலம் வருவார்.  அதனை ஆருத்ரா தரிசனம் என்பர்.  ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல்.

ஐதீகக் கதை:

தாருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர்.  சிவனார் பிச்சாடனர் வேடம் ஏற்று முனிவரின் இல்லங்களுக்குப் பிச்சை எடுக்கச் சென்றார்.  முனிபத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனரின் பின் சென்றனர்.  இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித் தீயில் மதயானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு போன்றவற்றை தோற்றுவித்து சிவன்பால் ஏவினர்.  சிவனார் மதயானையைக் கொன்று அதன் தோலை அணிந்தார்.  மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலை தூக்கி நடனமாடி முனிவர்களுக்கு உண்மை உணர்த்தினார்.  இதுவே ஆருத்ரா தரிசனம் என்றும் சொல்லப்படுகின்றது.

சேந்தனார்:

சைவ சமய அடியவர்களில் சேந்தனாரைப் பற்றி இருவேறு கதைகள் வழங்கப்படுகின்றன.  ஒருவர் பட்டினத்து அடிகளின் கணக்குப் பிள்ளையாக இருந்து பின்பு இறைவனின் திருவடியை அடைந்தவர்.  இன்னொருவர் சிதம்பரத்திற்கு அருகே உள்ள ஒரு ஊரில் விறகு வெட்டியாக வாழ்ந்து வந்தார்.  மிகச் சிறந்த சிவபக்தர்.  நாள்தோறும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின்பு தான் அவர் உணவருந்துவார்.

ஒரு நாள் மழை அதிகமாகப் பெய்தமையால் விறகுகள் ஈரமாயின.  அதனால் அன்று சேந்தனாரால் விறகு விற்க இயலவில்லை.  அரிசி வாங்குவதற்கு அன்றைய தினம் அவரிடம் காசு இல்லாத காரணத்தால் கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்து இருந்தார்.  ஆனால் யாரும் தென்படவில்லை.  சிவனடியார் வேடத்தில் சிவபெருமான் வந்தார்.  களியை மிகவும் விருப்பமுடன் உண்டார்.  மேலும், அந்தக் களியை அடுத்த வேளை உணவிற்கு தருமாறு வாங்கிச் சென்றார்.  மறுநாள் காலையில் சிதம்பரம் நடராசப் பெருமான் ஆலயத்திற்குச் சென்ற அந்தணர்கள் இறைவனைச் சுற்றி களி சிதறல்களைக் கண்டனர்.  சோழ அரசனிடம் இறைவனார் கனவில் சேந்தனார் வீட்டிற்குச் சென்று களியுண்ட நிகழ்வைத் தெரிவித்து இருந்தார்.  இதனால் அரசர் அமைச்சரிடம் சேந்தனாரை அழைத்துவரச் சொல்லி விட்டு தில்லையம்பல நடராசனை தரிசனம் செய்வதற்காக ஆலயம் வந்தார்.  இந்நிலையில் தேரில் நடராசப் பெருமான் வீதியுலா வந்துக் கொண்டிருந்தார்.  ஆனால் தேர் திடீரென்று நின்று விட்டது.  இதனால் அரசர் முதல் அனைவரும் திகைத்து நின்றுக் கொண்டிருந்தனர்.  இந்நிலையில் சேந்தனாரும் இறைவனை தரிசிக்க வந்து கொண்டிருந்தார்.  தேர் நிற்பதைப் பார்த்து செய்வது அறியாது திகைத்தார்.  அப்பொழுது சேந்தா பல்லாண்டு பாடு என்று வானிலிருந்து அசரீரி கேட்டது. “மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் போயகல” என்று தொடங்கி பல்லாண்டு கூறுதுமே என்று முடித்து பதின்மூன்றுப் பாடல்கள் பாடினார்.  தேர் நகர்ந்தது. அரசர் அவர்தான் சேந்தனார் என்பதை உணர்ந்து அவரிடம் தம் கனவினைக் கூறினார்.  அப்பொழுதுதான் சேந்தனார் தம் இல்லத்திற்கு வந்தது சிவபெருமான் என்பதனை உணர்ந்து பெருமகிழ்ச்சி அடைந்தார்.  இந்த நிகழ்வின்       விளைவாகத் திருவாதிரை அன்று நடராசப் பொமானுக்கு “களி” உணவாகப் படைக்கப்படுகின்றது.  சேந்தனார் பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் உள்ளன.

திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி என்று சொலவடையாக வழங்கப்படுகின்றது.  கேரளத்தில் திருவாதிரைக்களி நடனம் என்ற பெயரில் பெண்கள் நடனமாடுகின்றனர்.  சங்கர சங்கீதை என்ற நூலில் இந்நோன்பின் மகிமை கூறப்பட்டுள்ளது.  சம்பந்தர் “பூம்பாவை உயிர்பிழைக்கும் பொருட்டு பாடிய தேவாரப் பதிகத்தில்,

      “வளர்திரை வேலையுலாவும் உயிர்மயிலைக்
      கூர்தரு வேவ்வல்லார் கொற்ற கொள் சேரிதனிய
      கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
      ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவை

என்று திருவாதிரை தினத்தைச் சிறப்பிக்கின்றார்.  நாவுக்கரசுப் பெருமானும் ஆதிரை தினம் குறித்துப் பாடியுள்ளார்.  இதனால் திருவாதிரை நோன்பு தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதை அறியலாம்.

கொங்குநாட்டில் திருவாதிரை நோன்பு ஆருத்ரா தரிசனம்

மார்கழி மாதம் முழுவதும் கொங்கு நாட்டில் சிவாலயங்களிலும், பெருமாள்; கோவில்களிலும் மிகவும் சிறப்பாக வழிபாடும், பூசைகளும் நடத்தப்படுகின்றன. மார்கழி மாதம் பத்தாவது நாளில் நிறைமதியோடு கூடிய திருவாதிரை தினத்தன்று இந்நோன்பு கடைப்பிடிக்கப்படுகின்றது.

அனைத்துச் சிவாலயங்களிலும் நடராசப் பெருமானுக்கு அபிடேகம் நடத்தப்பட்டு, விடியற்காலையில் இறைவன் வீதியுலா நிகழ்த்தப்படுகின்றது.  பின்பு நடராசர்-சிவகாமி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகின்றது.  இறைவனுக்குக் களி உணவாகப் படைக்கப்பட்டு, பக்தர்களுக்குக் களி பிரசாதமாக வழங்கப்படுகின்றது.  பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம், பவானி, திருச்செங்கோடு தலங்களிலும் இவ்விழா நடைபெறுகின்றது.

கொங்குச் செட்டியார் செய்யும் திருவாதிரை சீர்

கொங்கு நாட்டில் வாழும் வணிகர் இனத்தைச் சார்ந்தவர்கள் கொங்குச் செட்டியார் என்றழைக்கப்படுகின்றனர்.  கொங்கு வேளாளர் இனத்தைப் போன்று இவர்களிடத்தும் குலப்பிரிவுகள் உண்டு.  கொங்கு வேளாளர் குலப்பிரிவுகள் இவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.  பெரிய குலம், காரையூரான் கூட்டம், ஒதாளர் குலம் போன்ற குலப்பிரிவுகள் இவர்களிடத்தும் உண்டு.  இவர்களில் தாயம்பாளையம் கொங்குச் செட்டியார் பெரிய குலத்தைச் சார்ந்தவர்களும் இவர்களின் பிற குலப்பிரிவினரும் திருவாதிரைச் சீரைச் செய்கின்றனர்.

கொங்கு வேளாளர் இனத்தைச் சார்ந்தவர்களில் பெரிய குலத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு திருவாதிரைச் சீர் செய்து சங்கரண்டாம்பாளையம் இரத்தினமூர்த்தி ஆண்டவர் கோவிலில் பொன்னூஞ்சல் ஆட்டுவது மரபாகும்.

இதனைப் போன்று தாயம்பாளையம் கொங்குச்செட்டியார் இனத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் குலத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்குத் திருவாதிரைச் சீர் செய்கின்றனர்.

திருவாதிரைச் சீர் செய்யும் முறை:

பெண் குழந்தைகள் பூப்பு அடைவதற்கு முன் இச்சீரினைச் செய்ய வேண்டும்.  9,10,11 என்ற ஒற்றைப் படை வயதிற்குள் செய்ய வேண்டும்.  திருவாதிரைச் சீரைச் செய்ய இருக்கும் பெண்குழந்தையின் பெற்றோர் கார்த்திகை மாதத்திலிருந்து இச்சீர் செய்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.  உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும்.  தாய்மாமனையும், அத்தையையும் அழைத்து இச்சீரினை முறைப்படி செய்துக் கொடுக்கச் சொல்ல வேண்டும்.

கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் முடிந்து 21-வது நாளில் சதுர்த்தி திதியில் பிள்ளையார் நோன்பு கும்பிட வேண்டும்.  முதல் நாள் இரவு பெண் குழந்தையின் தாய்மாமாவும், அத்தையும், பெண் குழந்தையின் வீட்டிற்கு வந்துவிடுவர்.

நோன்பு கும்பிடுவதற்கு முதல் நாள் வீட்டினைத் தூய்மை செய்தல் வேண்டும்.  விடியற்காலையில் எழுந்து அத்தை நோன்பு கும்பிடுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.  பொங்கல் வைத்த பிறகு பணியாரத்திற்கு அரிசி வெந்தயம் இவற்றை நீரில் ஊற வைக்க வேண்டும்.  பின்பு பெண் குழந்தையை அழைத்து ஊரில் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று நெய் அரப்பு தேய்த்து குளித்து விட்டு புத்தாடை அணிவிப்பர்.  பின்பு வீட்டிற்கு வந்து ஆட்டுரலில் அரிசி வெந்தயத்தை ஆட்டி எடுத்துக் கொள்வர்.  குடலை பருப்பை வேகவைத்துக் கொள்ள வேண்டும்.  பின்பு வெல்லத்தினைப் பாகு காய்ச்சி இம்மாவில் கலக்க வேண்டும்.  பின்பு வேகவைத்த கடலை பருப்பினையும் சேர்த்து பணியாரமாக சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதற்குப் பின்பு மஞ்சள் தேங்காய் பழம், 21 பணியாரம், வெற்றிலை பாக்கு, கற்பூரம், தீபம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, சீர் செய்ய இருக்கும் பெண், அத்தை, பெண்ணின் தாயார், உறவினர்கள் அனைவரும் பிள்ளையார் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.  அங்கு தீபம் ஏற்றிப் பிள்ளையாரை வணங்கி நோன்பை நல்லபடியாக முடித்துத் தரச் சொல்லி வேண்ட வேண்டும்.  பூசை முடிந்த பிறகு வீட்டிற்கு வந்து குழந்தைகளுக்கு பணியாரம் கொடுக்க வேண்டும்.  தாய்மாமா, அத்தைக்கு மதியம் வடை பாயாசத்துடன் விருந்து போட வேண்டும்.

பிள்ளையார் நோன்பைச் செய்து முடித்த பிறகு சீர் செய்ய இருக்கும் பெண்ணும், பெண்ணின் தாயும், அசைவம் சாப்பிடக்கூடாது.  காப்புக் கட்டிக் கொள்ளும் பெண் மாலை நேரங்களில் வெளியே செல்லக் கூடாது.  துக்க நிகழ்வுகளில் கலந்துக் கொள்ளக் கூடாது.

பிறகு அவரவர் வசதிக்கேற்ப திருவாதிரை தினத்தன்று உறவினர்களை அழைப்பர்.  முன்பு பெண் குழந்தையின் வீட்டில் இந்தச் சீர் நடைபெறும்.  தற்சமயம் திருமண மண்டபங்களில் இச்சீரினை நடத்துகின்றனர்.  அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்படுகின்றது.

திருவாதிரை தினத்தன்று அதிகாலையில் பெண்ணை எழுப்பிவிடுவர்.  இரவு சாதம் செய்து கடலை பருப்பு கூட்டும் செய்து வைத்து விடுவர். திருவாதிரைக்கு முந்தைய நாள் வீட்டினை மெழுகிச் சுத்தம் செய்ய வேண்டும்.  இரவு சாதமும் கடலைப் பருப்புக் கூட்டும் செய்து வைக்க வேண்டும்.  அதிகாலை சீர் செய்துக் கொள்ளும் பெண், அத்தை, அத்தை பெண், பெண்ணின் தாயார் ஆகிய அனைவரும் பல் தேய்த்து முகம் கழுவி சுவாமி கும்பிடுவர்.  பின்பு சாதம், நாட்டுச்சர்க்கரை பழம் சேர்த்து சாப்பிட்டு விட்டு கூட்டினையும் சாதத்தினையும் கலந்து சாப்பிட்டு முடித்து விடுவர்.  பின்பு நாள் முழுவதும் பட்டினி இருப்பர்.  பெண்ணிற்கு பசித்தால் பால், பழம் அவல் கொடுப்பர்.  உப்புக் கலந்து எந்தப் பொருளும் உண்பதற்குக் கொடுக்க மாட்டார்கள்.  பின்பு, வண்ணார் இனத்தைச் சார்ந்த பெண் குளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வாள்.  ஆற்றங்கரை இருந்தால் ஆற்றிற்கு அழைத்துச் சென்று குளிக்க வைப்பர்.  ஆறு இல்லை என்றால் வீட்டில் குளிப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.  முக்காலி அரப்பு, நெய் தணல், மஞ்சள், சோறு வேப்பிலை ஆகியவை குளிப்பதற்காக பெண்ணிற்குத் தேவைப்படும் பொருட்களாகும்.  பெண் குளிப்பதற்கு முன் பெண்ணின் அத்தை பெண்ணின் தலையில் நெய் தேய்த்து விடுவாள்.  பின்பு அரப்பு தேய்த்துக் குளித்து விடுவாள்.  வண்ணார் இனத்தைச் சார்ந்த பெண் பந்தம் பிடித்துக் கொண்டு நிற்பாள்.  இதற்குப் பின்பு பெண்ணிற்கு புத்தாடை அணிவிப்பர்.  பெண்ணிற்குரிய அலங்காரங்களை செய்து முடிப்பர்.  ஆண்டாள் கொண்டை போட்டு விடுவர்.  ஆண்டாள் மாலையும் அணிவிப்பர்.  கிளி ஒன்றையும் பெண்ணின் தோளில் வைத்து விடுவர்.  இதற்கிடையில் மாமன் மனைவி குளித்துவிட்டு சாமிக்கு சூடம் ஏற்றி விட்டு கும்பிடுவார்.  பின்பு பொங்கல் வைத்துவிட்டு, தினை அடை, கம்பு அடை, போன்றவற்றைச் செய்து முடிப்பார்.  அதன்பின்பு படைப்புக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சமைக்க வேண்டும்.  பாசிப்பருப்பு, வெண்டைக்காய் புளிக்குழம்பு, ஏழுவகைப் பொறியல் திருவாதிரைக் களி சாதம் ஆகியவற்றை சமைக்க வேண்டும்.

திருவாதிரை நட்சத்திரம் வந்த பிறகு சாமி கும்பிட அனைவரும் தயாராகுவர்.  சாமி கும்பிடும் இடத்தில் மெழுகி கோலமிட வேண்டும்.  இறைவனுடைய படங்களை வைத்த பிறகு குத்துவிளக்கு, கற்பூரத்தட்டு, பூசைமணி, சாம்பிராணிப் புகை போடும் கரண்டி ஆகியவற்றைக் கொண்டு வந்து வைக்க வேண்டும்.  பின்பு மஞ்சள் பிள்ளையாரையும் சாணிப் பிள்ளையாரையும் பிடித்து வைப்பர்.  பிள்ளையார் மேல் பூச்சூடி வைப்பர்.  அதன்பின்பு தலைவாழை இலையை விரித்து படைப்புப் போட்டு வைப்பர்.  அப்படைப்பில் பொங்கல் சாதத்தை ஏழு உருண்டைகளாகப் பிடித்து வைப்பர்.  அதன் மேல் சர்க்கரையையும் நெய்யையும் கலந்து வைப்பர்.  பின்பு ஏழுவகை பொரியல் சாதம், ஏழு அடை பாயசம் ஆகியவற்றினையும் இலையில் படைப்பர்.  சாதம் வெண்டைக்காய்ப் புளிக்குழம்பு, பா. பருப்பு, இவற்றையும் இலையில் வைப்பர்.  திருவாதிரைக் களியையும் இலையில் வைப்பர்.  சாமி கும்பிடும் இடத்தில் கரும்பு, மஞ்சள் கொத்து போன்றவற்றையும் வைப்பர்.  பின்பு, மஞ்சள் சரடு, பூசணிக்காய் ஆகியவற்றையும் மஞ்சள் பிள்ளையாரையும் சுற்றி வைப்பர்.  தேங்காயை உடைத்து வைப்பர்.  பழம் வெற்றிலை பாக்கு சூடம் ஆகிய பொருட்களும் சாமிக்கு அருகில் வைப்பர்.

குத்து விளக்கில் நெய் ஊற்றித் திரிபோட்டுத் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.  பின்பு பெண்ணை சாமி கும்பிடும் இடத்திற்கு அழைத்து வர வேண்டும்.  அலங்காரம் செய்து கொண்ட பெண்ணின் தலை மேல் சும்மாடு வைத்து அதன் மேல் பேழை முடியை வைப்பர்.  அந்தப் பேழை முடியில் இரண்டு தேங்காய், பழம் ஒரு சீப்பு, வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் இருக்கும்.  பெண்ணிற்கு முன்னால் பெண்ணின் அத்தை செம்பில் புதுத்  தண்ணீரை எடுத்து வருவார்.  வண்ணார் இனத்தைச் சார்ந்த பெண் அந்த இடத்தில் தீப்பந்தம் பிடித்து நிற்க வேண்டும்.  பின்பு பெண்ணின் சேலையில் ஒரு தேங்காய், பழம் ஒரு சீப்பு, வெற்றிலை பாக்கு ஆகியவற்றை மடியில் கட்ட வேண்டும்.  இன்னொரு தேங்காயை எடுத்து உடைத்துவிட்டு தேங்காய், வெற்றிலை பாக்கு இவற்றை சாமியின் கிழக்குப் பக்கம் வைப்பர்.  பின்பு பெண்ணைப் பேழை முடியில் நிற்க வைப்பர்.  கிழக்குத் திசையில் பெண்ணை நிற்க வைப்பர்.  பெண்ணிற்கு அருகில் அத்தை துணையாக நிற்பார். இந்நிலையில் பெண்ணின் மாமா சாமிக்கு அருகே அமர்ந்து திருவெம்பாவை பாடல்கள் இருபதையும் பாடுவார்.  திருப்பள்ளி எழுச்சி பாடல் ஒன்றையும் சேர்த்து 21 பாடலையும் பாடுவார்.  ஒவ்வொரு பாடல் முடிந்தவுடன் மணி அடித்து இன்னொரு மாமா சூடம் ஏற்றி இறைவனை வழிபாடு செய்வார்.  மேலும் திருச்சிற்றம்பலம் என்றும் மாமா சொல்லி முடிப்பார்.  இவ்வாறு 21 பாடல்களையும்  பாடி முடித்து திருச்சிற்றம்பலம் என்று கூறிப் பூசையினை முடிக்க வேண்டும்  பூசை முடிந்த பிறகு பேழை முடியை மறுபடியும் பெண்ணின் தலையில் வைத்து மணவறையை சுற்றி வர வேண்டும்.  அத்தை கையில் செம்புடனும், பெண் பேழை முடியுடனும் உள்ளே சென்று விடுவர்.  பின்பு சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் சரடு வழங்கப்படும்.  அவர்கள் கணவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு தங்கள் கழுத்தில் மஞ்சள் கயிற்றினைக் கட்டிக் கொள்வர்.  பின்பு பெண் சீருக்கு வந்துள்ள அனைவரின் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார்.  பின்பு நோன்பு முடித்து பெண், அத்தை, உறவினர்கள் அனைவரும் சாப்பிடுவர்.  இதன் பின்பு சிறிது நேரம் கழித்து பெண்ணிற்கு நெய் தேய்த்து அரப்பு வைத்து குளிக்க வைப்பர்.  வண்ணார் இனத்தைச் சார்ந்த பெண் தீப்பந்தம் பிடித்துக் கொண்டு நிற்பர்.  பின்பு நாட்டுச் சர்க்கரையினை மூன்று உருண்டைகளாக கையில் நாம்பிப் பிடித்து பெண்ணின் தலையில் மூன்று முறை சுற்றி விட்டு மூன்று பக்கங்களிலும் போடுவர்.  அதன்பின் சாதத்தை மூன்று உருண்டைகளாகப் பிடித்து அதனையும் தலையில் சுற்றிப் போடுவர். சுற்றிப் போட்டபிறகு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வருவர்.   மறுநாள் விடியற்காலை எழுந்து நடராசர் சிவகாமி வீதியுலா வருவதற்கு முன்பு இறைவனைப் பெண்ணும், அத்தையும் வழிபாடு செய்வர்.  மதியம் பெண்ணின் பெற்றோர் பெண்ணின் தாய் மாமா- அத்தைக்கு க. பருப்புட்டுடன் வடை பாயசம் வைத்து விருந்து போடுவர்.  பின்பு அத்தை மாமாவும் தங்கள் இல்லம் திரும்புவர்.  சீர் நிகழ்வுகள் இத்துடன் முடியும்.  ஆண்டுதோறும் பெண்ணும் தாயும் பிள்ளையார் நோன்பையும், திருவாதிரை நோன்பையும் கடைப்பிடிக்க வேண்டும்.

திருவாதிரை நோன்பு

சுமங்கலிப் பெண்களும் திருவாதிரை நோன்பை மிகவும் சிறப்புடன் கடைப்பிடிப்பர்.  திருமணமான முதல் ஆண்டில் வரும் திருவாதிரை நோன்பிலிருந்து தங்கள் நோன்பை கடைப்பிடிக்க ஆரம்பிப்பர்.   கணவன் வீட்டில் தான் இவ்விரதத்தை பெண்கள் கடைப்பிடிப்பர்.  பெண்ணின் பெற்றோர் திருவாதிரைக்கு ஒருவாரம் முன்பே பெண்ணிற்கும் அவள் கணவனுக்கும் புத்தாடை, காய்கறிகள், அரிசி பருப்பு போன்றவற்றை பெண்ணிற்குச் சீதனமாகக் கொடுப்பர்.  கணவன் வீட்டார் பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் அனைவரையும் அழைத்து விமர்சையாக இந்த நோன்பினைக் கடைப்பிடிப்பர்.  திருமணமான முதல் ஆண்டு பெண்ணும் அவள் கணவனும் விரதம் இருப்பர்.  முதல் நாள் இரவு சாதம், கடலை பருப்புக் கூட்டு, இவற்றை செய்து வைத்து விடுவர்.  விடியற்காலையில் குளிப்பதற்கு முன் கணவன், மனைவி இருவரும் பல் தேய்த்து சுவாமி முன்பு விளக்கேற்றி வழிபட்டுச் சாதம், பழம், நாட்டுச் சர்க்கரை போட்டு சாப்பிட்ட பிறகு கூட்டினையும் சாப்பிட்டு முடிப்பர்.  பின்பு இருவரும் விரதம் இருப்பர்.  திருவாதிரை நட்சத்திரம் வந்த பிறகு, திருவாதிரை நோன்பிற்கு வேண்டிய அத்தனை உணவு வகைகளையும் பெண்ணும், பெண்ணின் உறவினர்களும் சமைப்பர்.  சாதம், ஏழுவகை பொரியல், புளிக்குழம்பு, அடை, பாசிப் பருப்பு, திருவாதிரைக்களி, வடை, பாயாசம் அனைத்தையும் சமைப்பர்.  மஞ்சள் பிள்ளையார், சாணிப்பிள்ளையார், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குத்து விளக்கு, மஞ்சள் சரடு, குத்து விளக்கு கற்பூரம், படியுல் நிறைய நெல், தக்கிலி ஆகியவற்றை பூசை அறiயில் வைப்பர்.  சுமங்கலிப் பெண்களின் எண்ணிக்கைக்கேற்ப தலை வாழை இலையில் படைப்புப் போடவர்.  பௌர்ணமி (நிலவு) வந்த பிறகு சாமி கும்பிட ஆரம்பிப்பர்.  தேங்காய் உடைத்து, குத்து விளக்கு ஏற்றி வைத்துச் சாமி கும்பிடுவர்.  கற்பூரம் ஏற்றி இறைவனை வழிபாடு செய்தவுடன் மஞ்சள் சரட்டினை பெண்கள் கையில் கொடுப்பர்.  சரட்டினைப் பெற்றுக் கொண்ட பெண்கள் கணவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிப் பின்பு கயிற்றினைக் கட்டிக் கொள்வர்.  பின்பு நிலாவினைப் பார்ப்பர், அதன் பின் புதுமணத் தம்பதியர் அனைவரின் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவர்.  மறுநாள் விடியற்காலையில் பேரூர் சென்று பட்டீசுவரப் பெருமானையும், பச்சை நாயகி அம்மனையும், நடராஜர்-சிவகாமி திருமண உற்சவத்தையும் பார்ப்பர்.  பேரூர் செல்ல இயலாவிடில் உள்ளூர் சிவாலயத்தில் நடராசர்-சிவகாமியினைத் தரிசித்து வருவது வழக்கமாக உள்ளது. 

திருவாதிரை சீர், திருவாதிரை நோன்பின் சிறப்புகள்

திருவாதிரை என்ற சொல்லோடு தொடர்புபடுத்தி சிவபெருமானை ஆதிரையான் என்று அழைக்கின்றனர்.  திருவாதிரை குறித்து சம்பந்தரும், திருநாவுக்கரசுப் பெருமானும் தம் தேவாரத்தில் குறிப்பிடுகின்றனர். “மார்கழி மாதத்தின் திருவாதிரை நாள் சிவபெருமானுக்கு உரியதாகக் கருதப்படுகிறது.  அந்நாளில் உளுந்துமாவினால் செய்த களி வீட்டு உணவில் சிறப்பிடம் பெறுகிறது”.  “திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி” என்பது தென் மாவட்டங்களில் வழங்கும் சொலவடை என்று தொ. பரமசிவன் அவர்கள் தன் பண்பாட்டு அசைவுகள் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.  இவற்றிலிருந்து தமிழக முழுவதும் திருவாதிரை நோன்பு மிகவும் சிறப்பாக மக்களாலும், சிவாலயங்களிலும் கடைபிடிக்கப்பட்டது புலனாகும்.

ஆய்வின் மூலம் கிடைத்த முடிவுகள்

1.தமிழரிடையே தைந்நீராடல் என்ற வழக்கம் இருந்ததாகத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  மார்கழி நீராடல் என்ற குறிப்பு இல்லை.  இருப்பினும் மார்கழியிலும் நீராடல் இருந்திருக்க வேண்டும். “ஆண்டாள் தனது திருப்பாவையில்” மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் நீராடப் போதுவீர்” என்று பாடுகின்றார்.  மார்கழி மாதம் பௌர்ணமி நிலவில் தன் பாவை நோன்பினைத் தொடங்குகின்றார் ஆண்டாள்.  மார்கழி மாத பௌர்ணமி நாள் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளாகும்.  எனவே, திருவாதிரை நோன்பும், பழங்காலத்தின் பாவை நோன்பின் எச்சமாக இருக்கலாம்.  பாவை நோன்பு நல்ல கணவன் கிடைப்பதற்கு நோற்ற நோன்பாகும்.  இதன் அடிப்படையில் தான் பூப்பு அடைவதற்கு முன் பெண்களுக்குத் திருவாதிரைச் சீர் செய்யப்படுகின்றது.

2.தமிழகம் முழுக்கத் திருவாதிரை நோன்பு கொண்டாடப்பட்டாலும், கொங்கு நாட்டைத் தவிர பிற இடங்களில் சிவாலயங்களில் கொண்டாடப்படும் நோன்பாகவும், ஆருத்ரா தரிசனமாகவும் இப்பண்டிகை விளங்குகின்றது.  ஆனால், கொங்கு நாட்டில் மட்டும் சுமங்கலிப் பெண்களால் கொண்டாடப்படும் திருவாதிரை நோன்பாகவும், கணவனின் ஆயுள் பெருக இறைவனை வழிபடும் சடங்காகவும் உள்ளது.  கொங்கு நாட்டில் வாழும் அனைத்து இனங்களும் இந்நோன்பினைச் செய்வதில்லை, உட்கழுத்துச் சரடு கட்டிக் கொள்ளும் பெண்களே இந்நோன்பினை மேற்கொள்கின்றனர்.  இந்நோன்பு மங்கிலிய நோன்பு என்றழைக்கப்படுகின்றது.

3.கொங்கு வேளாளர், கொங்குச் செட்டியார் என்ற இரு இனத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே பத்து வயதிற்கு உட்பட்ட பெண்களுக்குத் திருவாதிரைச் சீர் செய்கின்றனர்.  கொங்கு வேளாளர் இனத்தில் சங்கரண்டம்பாளையம் இரத்தின மூர்த்தியை குலதெய்வமாக வழிபடும் பெரிய குலத்தைச் சார்ந்தவர் மட்டுமே செய்கின்றனர்.  கொங்கு வேளாளர் பெரிய குலப் பெண்களுக்கு பொன் ஊஞ்சல் ஆட்டும் பழக்கமும் உள்ளது.  கொங்குச் செட்டியார் பெரிய குலத்தைச் சார்ந்தவர்கள் திருவாதிரைச் சீர் செய்தாலும் பொன்னூஞ்சல் ஆட்டும் பழக்கம் இல்லை.

4.சிலம்பு கழிநோன்பு பற்றிக் குறிப்பு வேண்டுமானால் சங்க இலக்கியத்தில் செய்தி உள்ளது.  திருவாதிரை நோன்பு குறித்த செய்திகள் இல்லை.

5.“நாட்டார் சடங்காக இருந்த பாவை நோன்பு பிற்காலத்தில் வைதீகத் தொடர்பு ஏற்பட்டு ஏற்கலாம், திருவாதிரை நோன்பாக மாற்றியிருக்கலாம்”.

6.சேந்தனார் காலத்திற்குப் பிறகு நோன்பில் இறைவனுக்குரிய வழிபாட்டுப் பிரசாதமாகக் களி மாறியிருக்கலாம்.

7.திருமணத்திற்கு முன்பு நல்ல கணவன் கிடைப்பதற்கு இறைவனை வழிபாடு செய்வது தமிழர் மரபு.

8.தன்னுடைய கணவன் இறைவன் அடியாராக இருக்க வேண்டும் என்பதுவும், நல்லவனாக இருக்க வேண்டும் என்பதும் பாவை நோன்பின் குறிக்கோளாக அமைகின்றது.

9.மார்கழி மாதத்தில் முழு நிலவு நாளில் திருவாதிரை நட்சத்திரத்தில் இறைவனை வழிபடுவதால் கணவனுக்கு நல்ல ஆயுள் கிடைக்கும் என்ற நம்பிக்கை திருவாதிரை நோன்பின் குறிக்கோளாக அமைகின்றது.

10.திருவாதிரைச் சீரும் சைவ வைணவ சமயங்களின் ஒற்றுமைக்குச் சான்றாக இருக்கின்றது.  இது வளமைச் சடங்காகவும் திகழ்கின்றது.  பெண் குழந்தை பூப்படைந்து திருமணமாகி மக்கட் செல்வத்தைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோளாக அமைகின்றது.  திருவெம்பாவை பாடல்கள் சைவ சமயத்திற்கும், ஆண்டாள் கொண்டை, மாலை போன்றவை வைணவ சமயத்திற்கும் சான்றாக விளங்குகின்றது.  மார்கழி மாதங்களில் எட்டாம் நூற்றாண்டு முதல் நாட்டார் சடங்குகளிலும் திருவெம்பாவைப் பாடல்களும், திருப்பாவைப் பாடல்களும் சான்றாக அமைகின்றன.

11.இலையில் படைக்கப்பட்ட தினை அடை, கம்பு அடை போன்றவை கொங்கு நாட்டு உணவு வகைகளைக் குறிக்கின்றது.  இவை நாட்டார் உணவு வகைகளாகும்.  ஏழு அடை, ஏழு பொரியல், ஏழு பொங்கல் போன்றவை ஏழு கன்னிமாரை குறிப்பிடுகின்றன.  இலையில் வைக்கப்பட்ட ஏழு பொங்கல் உருண்டைகளும் ஏழு கன்னிமாரைக் குறிப்பிடுவதாகும்.  எனவே, இவ்வழிபாட்டில் கன்னிமார் வழிபாடும் இடம் பெறுகின்றது.

12.கன்னிமார் வழிபாடு கொங்கு நாட்டில் பிரதான வழிபாடாகும்.  பெண்களின் திருமணம், குழந்தைப் பேற்றிற்காகக் கன்னிமாரை வழிபட்டு பொங்கல் வைப்பது கொங்கு நாட்டின் வழக்கமாகும்.

13.பேழை மூடி கொங்கு நாட்டிலுள்ள புழங்குப் பொருளாகும்.  எனவே, இவ்வழிபாட்டில் பேழை மூடி, தக்கிலி, மைகோதி போன்ற கொங்கு நாட்டிலுள்ள புழங்கு பொருட்களும் பயன்படுகின்றன.

14.சோறு சுற்றிப் போடுதல், நாட்டுச் சர்க்கரை சுற்றிப் போடுதல் போன்றவை கொங்கு நாட்டில் கண்ணேறு கழிப்பதற்காக செய்யப்படும் பழக்கங்களாகும்.  சோற்று உருண்டை மேல் தணல் வைத்து நெய் சாற்றுதல் போன்ற கண்ணேறு சடங்கின் மூலம் தமிழரின் தொன்மையான பழக்கங்களை மீட்டெடுக்க முடிகின்றது.

15.பேழை மூடியில் பெண்ணை நிற்க வைக்கும் பழக்கமும் புதியதொன்றாகும்.  இவையும் கொங்கு நாட்டு தமிழரின் தொன்மையான சடங்குகளையும், தமிழரின் பழமையான புழங்குப் பொருட்களை மீட்டெடுக்க உதவுகின்றன.

16.கொங்கு நாட்டில் வண்ணார், நாவிதர் இல்லாமல் எந்த சீரும் நடப்பதில்லை.  அந்த வகையில் பந்தம் பிடிப்பதற்கும், மாற்றுத் துணி விரிப்பதற்கும், சுற்றிப் போடுவதற்கும் இந்த வண்ணார் இனத்தைச் சார்ந்த பெண்கள் பயன்படுகின்றனர்.

17.தமிழனின் பண்டைய பண்பாடான தாய்மாமன் உறவினையும் இந்தச் சடங்கு நிலைநிறுத்துகின்றது.

18.எந்தச் செயலையும் செய்யத் தொடங்குவதற்கு முன்பு பிள்ளையாரை வணங்குவது தமிழரின் மரபு.  அவ்வகையில் இச்சடங்கிலும் பிள்ளையார் நோன்பில் தொடங்குகிறது.  கார்த்திகை தீபம் முடிந்து ஆரம்பிக்கும் இச்சடங்கு மார்கழி மாதப் பௌர்ணமியில் முடிகின்றது.

19.பொதுவாக எந்தச் சடங்காக இருந்தாலும், ஒரு நாள் இரண்டு நாளில் முடிந்து விடும். ஆனால், இந்தச் சடங்கு 21 நாள் நீடிக்கின்றது. அது மட்டுமல்லாது ஆண்டு தோறும் தொடர்ந்து நடக்கும் மங்கல நிகழ்வாகவும் இருக்கின்றது.

20.கொங்கு வேளாளர், கொங்குச் செட்டியார் தொடர்பு, தாயம்பாளையம் கொங்குச் செட்டியார் மரபுகளை அறிந்து கொள்ள இச்சடங்கு வாயிலாக அமைகின்றது.

21.கொங்கு நாட்டின் தொன்மையான உணவு வகைகளை அறிய முடிகின்றது.

ஆய்விற்கு துணை நின்ற நூல்களும், முதன்மை ஆதாரங்களும்

  1. பண்பாட்டு அசைவுகள் – தொ. பரமசிவன்
  2. சம்பந்தர் தேவாரப் பாடல்கள்
  3. சேந்தனார் திருப்பல்லாண்டுப் பாடல்கள்
  4. கள ஆய்வுச் செய்திகள்
  5. சேந்தனார் வரலாறு குறித்த செவிவழிச் செய்திகள்.

*****

கட்டுரையாசிரியர் – இணைப் பேராசிரியர், துறைத் தலைவர்,
எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரி,
திருப்பூர்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *